ஞாயிறு, 18 மே, 2014

வாழ்த்துரை



கவிஞர் ரெ.இராமசாமி


பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!


                அலோர் ஸ்டார் கவிஞர் ரெ.இராமசாமி அண்ணன் அவர்களை நான் சென்ற பத்து ஆண்டுகளாக நன்கு அறிவேன். மலேசிய நாட்டில் தமிழும், சமயமும் தழைக்கத் தன் பாட்டுத்திறத்தால் பாடுபட்ட மாண்பு இவர்களுக்கு உண்டு. அலோர் ஸ்டார் தெய்வீக வாழ்க்கைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு சமயப் பணிபுரிந்து வரும் இவர்கள் மலேசியத் தமிழ் மறுமலர்ச்சிக்கு ஆற்றியுள்ள பணி போற்றுதற்குரிய ஒன்றாகும்.


                தமிழுக்குக் "க&தி'யாவார் இருவர். "க' கம்பனையும்' "தி' திருவள்ளுவரையும் குறிக்கும் என்பர் அறிஞர். கம்பராமாயணத்திலும் திருக்குறளிலும் ஆழ்ந்த புலமைமிக்க இவர்கள் இருபெரும் புலவரையும் ஒப்பிட்டு எழுதிய கட்டுரைகள் பல இருபது ஆண்டுகளுக்கு முன்னரே "தமிழ் நேசனில்' இடம்பெற்றன. மேலும் கம்பராமாயணத்தைச் சிறு சிறு இலக்கிய நாடகங்களாக எழுதி மலேசிய வானொலி வாயிலாக ஒலியேற்றிய பெருமையும் இவர்களுக்கு உண்டு. மரபுநிலை பிறழாது இக்கவிஞர் யாத்த கவிதைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும். இவற்றுள் நூலுருவம் பெற்றவை சில. அலோர் ஸ்டார் அருள்மிகு தண்டபாணி இருபா இருபது அந்தாதி, இலக்கிய நாயகி சீதை, சுவாமி சிவானந்தர் மலர் வழிபாடு ஆகிய நூல்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். மலேசியாவில் உள்ள மரபுவழிக் கவிஞர்களில் சிறந்த ஒருவராகத் திகழும் இவர்களின் கவிதைத் தூண்டுதலால் கவிஞரானவர்கள் பலர் உள்ளனர்.


                திருவாசகத்தில் ஈடுபாடு கொண்ட இவர்கள், "எம்பாவை எழில்' என்ற தலைப்பில் திருவெம்பாவைக்கு ஓர் தெளிவான எளிய விளக்கவுரை எழுதியுள்ளார்கள். விநாயகர், முருகன் பற்றிய பக்திப் பாடல்களைத் தொகுத்துக் குறிப்புரை எழுதிச் "சிவச் செல்வர் பாமாலை' என்று ஓர் நூல் வெளியிட்டுள்ளார்கள். இருபதாம் நூற்றாண்டுப் பெருங்கவிஞரான பாரதியின் பாவன்மையில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்து இவர் தென்னார் தமிழில் எழுதிய திறனாய்வுக் கட்டுரைகள் "பாரதியின் காதலி' என்ற தலைப்பில் நூலாக்கம் பெற்றுள்ளன.


                கட்டுரை & கவிதை & கடவுள் பக்தி, நாடகம், உரை, திறனாய்வு என்ற பல்வேறு துறையிலும் இலக்கியப்பணி ஆற்றியுள்ள இவர்களுக்குக் கவிஞர் கண்ணதாசன் முத்தமிழ்ச் செல்வர் என்ற விருது வழங்கிச் சிறப்பித்தது பொருத்தம் தானே! எழுத்துத் திறத்தால் மட்டுமின்றித் தம் பேச்சுத் திறத்தாலும் இறைபணியுடன் கூடிய இனிய செயலாற்றலாலும் சென்ற கால்நூற்றாண்டுக் காலமாக இங்கு முத்தமிழ்ப்பணி செய்துள்ள கவிஞர் ரெ.இராமசாமி அவர்களுக்கு மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஓர் தனியிடம் உண்டு. இவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாச் செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இவர்கள் தம் மனைவியாருடன் நல்ல உடல்நலம்பெற்று எல்லாச் செல்வமும் எய்திப் "பல்லாண்டு பல்லாண்டு' இன்புற வாழ்ந்து இன்னும் நற்றமிழ்ப்பணி இனிதாற்றிட இறைவனை வேண்டுகின்றேன்.





ஏ.எம்.பிள்ளை


(தென் ஆப்பிரிக்கத் தமிழாசிரியர் கழகத் தொடக்கம்)


23.12.1998


 


பேரன்புடையீர்,


                வணக்கம். தாங்கள் தென் ஆப்பிரிக்கத் தமிழாசிரியர் கழகம் என்னும் ஓர் அமைப்பினைத் தொடங்க இருப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடை' இருந்த தமிழ் மொழியின் எல்லை இன்று உலகளாவிய நிலையில் பரந்தும் விரிந்தும் காணப்படுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழர்கள் தென் ஆப்பிரிக்காவிற்குக் குடியேறிய செய்தியும் இந்திய நாட்டின் விடுதலை எழுச்சிக்குரிய அடிப்படை அங்கு காந்தி அடிகளால் வித்திடப்பட்ட செய்தியும் உலகறிந்தவை. இங்குள்ள தமிழர்கள் தங்கள் பண்பாட்டினையும் கலையையும் அறநெறிகளையும் பேணிக் கட்டிக் காக்கவும், தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளவும் தாய்மொழியாகிய தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயத் தேவையாகும். இதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் தமிழாசிரியர்கள். இவர்களின் முன்னேற்றம் தமிழின் முன்னேற்றம், தமிழரின் முன்னேற்றம் என்பதை ஒருபோதும் மறத்தல் கூடாது.


                தமிழாசிரியர் முன்னேற்றம் என்பது அவர்களின் தமிழ்மொழி இலக்கிய அறிவினைப் பெருக்குதல், தமிழ்மொழித் திறனை வளர்த்தல், தமிழ் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்துதல், தமிழ்ப் பாடத்திட்டம், பயிற்று கருவிகள் உருவாக்குதல், மதிப்பீட்டுப் பணி செய்தல் முதலிய தொழில் சார்ந்த நடவடிக்கைகளிலும், தமிழ்க்கலை,  பண்பாடு, இலக்கியம் முதலிய விழாக்களை நடத்துதலாகிய கலை சார்ந்த நடவடிக்கைகளிலும், தமிழரிடையே தமிழ்மொழிப் புழக்கத்தையும் பற்றினையும் ஆர்வத்தையும் பெருக்குதலாகிய சமூகம் சார்ந்த நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய ஒன்றாகும். இந்நடவடிக்கைகளை நடத்த இன்றியமையாத் தேவை ஒற்றுமையும் குழு உணர்வும் ஆகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழாசிரியர் முன்னேற்றம் அடையத் தக்க பணிகள் செய்யவும் கழகம் வளர்ச்சி பல கண்டு புகழுடன் திகழவும் இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்.


"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு'.




***


வேரித்தாஸ் வானொலி நிலையம்


7.6.2001


 


                பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வேரித்தாஸ் வானொலி நிலையம் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் தொடங்கி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு எய்தியதன் தொடர்பாக மலர் வெளியிட இருப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.


                வேரித்தாஸ் என்றால் இலத்தின் மொழியில் உண்மை என்று பொருள். உள்ளத்தால் பொய்யாதிருப்பது உண்மை என்றும், வாயால் பொய்யாதிருப்பது வாய்மை என்றும், உடம்பால் (மெய்யால்) பொய்யாதிருப்பது மெய்மை என்றும் பகுத்துக் காணும் பண்பாட்டுச் சிறப்பு தமிழுக்கு உண்டு. எனவே எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் உண்மையைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக்காட்டாகக் கொண்டு பணியாற்றும் வேரித்தாஸ் வானொலி நிலையத்தின் தமிழ்ப்பணியைப் பாராட்டுகிறேன்.


                உள்ளத்தால்  பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் என்னும் வள்ளுவர் வாக்கு தனிமனிதர்க்கு மட்டுமின்றி நிறுவனங்களுக்கும் பொருந்தும். எனவே உலகத் தமிழர்களை ஒன்று சேர்க்கும் பணியிலும் இவ்வானொலி நிலையம் உயர்ந்து விளங்குகிறது.


                தமிழ்மொழி வழியாகப் பண்பாட்டையும், ஒற்றுமையையும் தரணி எங்கும் பரப்பும் வேரித்தாஸ் வானொலி நிலையம் ஒல்லும் வகையான் எல்லாம் ஓயாது தொடர்ந்து பல்லாண்டு பணியாற்ற வாழ்த்துகிறேன்.




***


 


17.10.2002 அன்று


தேவகோட்டையில்


பிறை ஆயிரம் கண்ட பெருவிழாக் கொண்டாடும்


சிவநெறிச் சீலர் சித்தாந்த கலாநிதி டான் ஸ்ரீ


எம்.எஸ்.சுந்தரம் செட்டியார் அவர்களுக்கும்


சிவநெறிச்செல்வி புவான்ஸ்ரீ தெய்வானை ஆச்சி அவர்களுக்கும்


அளித்த


வாழ்த்துமடல்


 


 


எண்பது       ஆண்டுகள்    கண்ட இளைஞர்


எண்குணன்   இணையடி    மறவா இயல்பினர்


பண்பின்      உச்சி;    பணிவின்     உயரம்


நண்பின்      சின்னம்      நன்மைகள்   வாழிடம்


அன்பர்க்குப்   புகலிடம்      அடக்கத்தின்  உருவம்


உண்மையின் உறைவிடம்   உள்ளத்தில்   தெளிவிடம்


நல்ல  குடும்பம்     பல்கலைக்    கழகம்


அல்லல் போக்கும்  அரவணைப்பின்  அடையாளம்


அருள்நெறி   அன்பர் பொருள்நெறி  அறிவினர்


மருள்நெறிப்  பகைஞர்      மாண்புறு     நெஞ்சர்


தோத்திரத்தில் தோய்ந்தவர்   தோற்றத்தில்  ஆய்ந்தவர்


சாத்திரத்தில்  சரித்திரம்     படைத்த      சான்றோர்


இம்மை      வருவாயும்   மறுமை      வருவாயும்


செம்மையாச்  செய்த செம்மல்      இன்று


ஆயிரம்       பிறைகண்ட   அண்ணலார்   சுந்தரனர்


தாயினும்     அன்புமிக்க    தகைமையார் தரணியில்


ஆயிரம்       ஆண்டுகள்    தெய்வானை  ஆச்சியுடன்


மாயிரு       ஞாலத்து     வாழ்க மகிழ்ந்தே!




 ***


 


ஐயா உயர்திரு பெரி.எ.மா.ந.அருணாசலம் செட்டியார் அவர்களுக்கு


அப்பத்தாள் திருமதி பஞ்சகல்யாணி ஆச்சி உடனிருக்கச்


சுபானு ஆண்டு ஆவணித்திங்கள் 26ஆம் (12.9.2003) நாளன்று


தேவகோட்டையில் நடைபெற்ற


அறுபதாம் ஆண்டு நிறைவு மணிவிழாவின்போது


அருமைப்பேரன் அருண்ரவி அளித்த


வணக்கமடல்


அன்புள்ள ஐயா


                அருமைமிகு அப்பத்தா


இன்றுங்கள் மணிவிழாவில்


                இருகைகூப்பி வணங்குகிறேன்


 


பாட்டி இலக்குமியார்


                பாட்டய்யா நடேசனார்


காட்டிய பக்தியால்


                கடைக்குட்டியாய் வந்த ஐயா


 


அருணாசலப் பேருடையார்


                அடக்கம் மிக்கவர்


தருமங்கள் பல செய்வார்


                தவறாமல் நாளிதழ் படிப்பார்


 


மருந்துக் கடை வைத்தவர்


                மதிப்பாய் வாழ்பவர்


விருந்து வைப்பதில்


                வெற்றி மிகப் பெற்றவர்


 


வட்டிக் கடை வைத்து


                வருமானம் பெருக்கியவர்


கொட்டிய பாசம்கொண்டு


                கொடுப்பதில் வல்லவர்


 


உறவினர் பலர்க்கும்


                உதவிகள் செய்பவர்


அறநெறி மாறாத


                அரிய நெஞ்சினர்


 


நேர்மை மிக்கவர்


                நேரிய பண்பினர்


சீர்மை சிறுவனால்


                செப்ப முடியுமா?


 


அருணாசல ஐயாவின்


                அஞ்சாவது திருமகள்


தருமாம்பாள் பாட்டியின்


                தவப்புதல்வியாய் வந்தவர்


 


பாசமிகு அப்பத்தாள்


                பஞ்ச கல்யாணி


நேசமிகு பண்பினர்


                நேர்த்தியாய்ச் சமைப்பவர்


அத்தை மீனாவையும்


                அப்பா ரவியையும்


சொத்தெனக் கருதுபவர்


                சொந்தக்காரரின் சொந்தக்காரர்


அழகு அம்மாவிடம்


                அன்னைபோல் அன்புகொண்டு


பழகும் அருமையைப்


                பாலகனால் பகர முடியுமா?


எண்பதாம் ஆண்டுவிழா


                இனிய நூற்றாண்டு விழா


கண்டுநீங்கள் களித்திடக்


                கடவுளை வணங்குகிறேன்


 


மணிவிழாக் காணும் நீங்கள்


                மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்ந்திட


அணிபெறு சொக்கர் மீனாட்சி


                அடியினை வணங்குவேன் நானே.


பேரன்


அருண்ரவி


 


 


திரு.எஸ்.வெள்ளையப்பன் & திருமதி கீதா இருபத்தைந்தாவது திருமண நன்னாள் வாழ்த்து


3.5.2006


                வள்ளி மணாளனை வாழ்த்துகிறோம் நன்மண


                வெள்ளிவிழாக் கண்டிடும் வெள்ளையப் பர்கீதா


                பொன்விழாக் கண்டுபலர் போற்றிட இவ்வுலகில்


                இன்புற்று வாழ்க இணைந்து




 


***


 


நா.ஆண்டியப்பன்


(சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்


30ஆம் ஆண்டு நிறைவு விழா)


1.6.2006


பேரன்புடையீர்,


                வணக்கம். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் முப்பதாம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட இருப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். விழா சிறப்புற நிகழ என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


                தமிழில் எழுத்தாளர் என்னும் சொல் எழுத்து, ஆளர் என்னும் இரு சொற்களின் சேர்க்கையால் உருவான ஒன்று. இந்த இரு சொற்களில் முதன்மை நிலையிலுள்ள எழுத்து என்பது தொன்மையும்  பொருளாழமும் கொண்ட ஒன்றாகும். எழுத்து என்பதற்கு எழு என்பதை அடிச்சொல்லாகக் கொண்டால் எழுத்தின் ஒலிவடிவம் உணர்த்தப்படும். எழுது என்பதை அடிச்சொல்லாகக் கொண்டால் எழுத்தின் வரிவடிவம் உணர்த்தப்படும். எனவே ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டினையும் உணர்த்தும் சிறப்பு இருப்பதால் தான் தமிழ் இலக்கணத் தொல்லாசான் தொல்காப்பியர் தம் நூலைத் தொடங்கும்போதே இச்சொல்லைக் கையாள்கிறார். "எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃதென்ப' என்பது தொல்காப்பிய முதல் நூற்பாவின் தொடக்கமாகும். இந்நூலே இன்று நமக்குக் கிடைக்கும் நூல்களில் மிகத் தொன்மையானது. தமிழர்கள் தரணிக்கு வழங்கிய இலக்கியமாகிய திருக்குறளைத் தந்த திருவள்ளுவரும் தம் முதற்குறளில் "அகரமுதல எழுத்து எல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு' என எழுத்து என்னும் சொல்லைக் கையாள்கிறார். மேலும் அவர் "எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு' என்னும் குறளில் எழுத்து என்பதை இலக்கணம், இலக்கியம் முதலியவற்றைக் குறிக்கவும் பயன்படுத்துகிறார். இங்கு அறிவியலுக்கு அடிப்படை கணிதம், கலைக்கு அடிப்படை எழுத்து என விளக்கம் தருவாரும் உண்டு. எழுத்தாற்றல், எழுத்துத்திறன் என்னும் தொடர்களில் எழுத்து என்பது படைப்பிலக்கியத்தைச் சுட்டி நிற்பதைப் பார்க்கிறோம். "மொழிமுதற்காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து' என்று நன்னூல் எழுத்துக்கு வரையறை கூறுகிறது. அதாவது "மொழிக்கு அடிப்படையே எழுத்து; அது செவிக்குப்புலனாகும் அணுக்கூட்டம்' என்பது இதன் பொருளாகும். இத்தகைய சிறப்பினை உடைய எழுத்தினை ஆள்பவர்களே எழுத்தாளர்கள்.


                எழுத்தாளன் என்னும் சொல் புலவன் என்னும் பொருளில் சங்க இலக்கியமாகிய குறுந்தொகையில் ஒரு புலவனுக்கு அடைமொழியாக வருகின்றது. குறுந்தொகையின் 90ஆவது பாடலை இயற்றிய சேந்தம்பூதனார் என்னும் புலவர்க்கு மதுரை எழுத்தாளன் என்னும் அடைமொழி  இருப்பதாக ஒரு குறிப்புள்ளது (தமிழ்ப் பேரகராதி, தொகுதி 1, ப. 541). எழுத்தாளர் கழகம் என்பதும் தமிழர்க்குப் புதியதன்று. இன்று நேற்றுத் தோன்றியதன்று. மூவாயிரம் ஆண்டுக்கு முன்னரே சங்கம் வைத்துத் தமிழை வளர்த்தவர்கள் தமிழர்கள். சங்கம் என்பது எழுத்தாளர் கழகமே.


                எழுத்தாளர் கழகம் தொடர்பான இந்தச் செய்தியை நம் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியில் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


நன்றி.




***





என்.ஆர்.கோவிந்தன்


1.6.2006


 


 


பேரன்புடையீர்,


                சிங்கப்பூரில் தமிழ்மொழி. தமிழ்க்கலைகள், தமிழர் நலம் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காகச் சென்ற இருபத்தாறு ஆண்டுகளாகச் சிறப்பான பணிகள் செய்து வரும் தமிழ் நெஞ்சர் என்.ஆர்.கோவிந்தன் அவர்களின் பொதுப்பணிகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடும் முயற்சி பற்றி அறிந்தேன். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.


                தமிழர் திருநாள் என்பது சிங்கப்பூர்த் தமிழர்கள் வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற ஒன்றாகும். தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் சமயத்தால், இனத்தால், சாதியால், வட்டாரத்தால், நாட்டால் வேறுபட்டிருந்த தமிழர்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும், அவர்களிடையே தமிழ்ப் பற்றினை ஊட்டவும், தமிழர்களிடையே மறைந்து கிடக்கும் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், தமிழ்ப் பண்பாட்டினையும் கலாசாரத்தையும் மற்ற இனத்தவர்க்கு உணர்த்தவும் எடுத்த விழாவே தமிழர் திருநாளாளும். இடையில் தடைப்பட்டிருந்த இவ்விழாவைத் தமிழ்நெஞ்சர் என்.ஆர்.கோவிந்தன் அவர்கள் மீண்டும் தலைதூக்கச் செய்து இருபத்தாறு ஆண்டுகள் சிறப்பாகக் கொண்டாடியது பாராட்டுக்குரியது. அவர் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழர் திருநாள் எனக்கு "வெள்ளம்போல் தமிழர் கூட்டம், வீரம்கொள் கூட்டம், அன்னார் உள்ளத்தால் ஒருவரே. மற்று உடலினால் பலராய்க் காண்பார்' என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அடிகளை நினைவுபடுத்தும். "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே' என்னும் பாரதியின் கருத்தினை தமிழர்க்கு நினைவுறுத்தும் வகையில் தமிழர் திருநாளைத் தமிழ் நெஞ்சர் தொடர்ந்து நடத்த வேண்டுகிறேன். அவரது தொண்டறம் சிறக்க வாழ்த்துகிறேன்.




 ***


 


 


 


 


 


 


 


டத்தோ டாக்டர் வி.கதிரேசன் டத்தின் கமலாம்பாள் மணிவிழாவில் பேரன் பேர்த்தியர் அளித்த


வணக்க மடல்


14.3.2007


ஐயா ஐயா எங்கள் ஐயா


                அன்புள்ள ஐயா


ஆயா ஆயா எங்கள் ஆயா


                ஆர்வம் ஊட்டும் ஆயா


 


சட்டம் தந்த மருத்துவர்


                சமூக சேவைகள் ஆற்றியவர்


பட்டம் பலப்பல பெற்றவர்


                பக்தி மிக்கவர் ஐயா


 


உருவத்தால் சிறியவர் ஐயா


                உள்ளத்தால் பெரியவர் ஐயா


தருவதில் தயக்கம் காட்டாதவர்


                தணியாத பாசம் மிக்கவர்


 


மருத்துவத் துறையில் மகத்தான சேவை செய்தவர்


                மலக்கா மன்னரால் டத்தோ பட்டம் பெற்றவர்


அருமையான பணிகள் ஆற்றிய சிறப்பால்


                அகிலம் புகழும் அறிஞர் எங்கள் ஐயா


 


அருள்நெறி தந்த ஐயாவின் பேத்தி


                அடக்கத்தின் உருவாம் பாட்டியின் மகள்


பொருள்நெறி மேதை சிவஞானத் தமிழ்


                போதிக்கும் டான்ஸ்ரீ ஐயா மகள் ஆயா


 


கதிரேசனார் எங்கள் ஐயா


                கமலாம்பாள் எங்கள் ஆயா


மதிசூடும் மகேசன் அருளால்


                மணிவிழாக் கண்டு மகிழவே


 


மலரடி வணங்கும்


பேரன் விக்ரம் காசி கண்ணப்பன்


பேர்த்தி வித்யா சரஸ்வதி கண்ணப்பன்


–***




சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கத்தினர்


14.2.2007


 


                தமிழர்கள் தங்கள்  தாய்மொழியாகிய தமிழையும் கலையையும் இணைத்துக் கண்ட பெருமை உடையவர்கள். எனவேதான் அவர்கள் தமிழை இயல், இசை, நாடகம் என முத்தமிழாகப் பகுத்துக் காண முற்பட்டனர். இவற்றுள் இயற்றமிழ் கற்றார்க்குக் களிப்பூட்டுவது, இசைத்தமிழ் கற்றார், கல்லார் இருவருக்கும் இன்பம் தருவது. நாடகத் தமிழோ இவ்விரண்டினையும்  இணைத்து நாட்டிலுள்ள நல்லார்க்கும் பொல்லார்க்கும் ஏன் எல்லார்க்கும் நனிபேர் உவகை நல்குவது ஆகும்.


                மேலும் தமிழில் நாடகம் என்னும் சொல் பழமையும் பண்பட்ட பொருளாழமும் உடைய ஒன்றாகும். தமிழில் இன்று கிடைக்கும் நூல்களில் தொன்மையானதாகக் கருதப்படும் தொல்காப்பியத்திலேயே "நாடக வழக்கு' (999) என்னும் சொல் காணப்படுகிறது. நாடு + அகம் எனப் பிரித்து இச்சொல்லைப் பார்க்கும்போது நாட்டை அகத்தே கொண்டது என்றும், அகத்தில் நாடுதல் அதாவது உள்ளத்தே உணர்ச்சியையும் சிந்தனைகளையும் தூண்டுவது என்றும் இருவகைப் பொருள் இருப்பதைக்  காணலாம்.


                ""நாம் ஒரே இடத்தில் இருந்து கொண்டு காடு, மலை, நாடு, நகர், ஆறு, அரண்மனை அனைத்தையும் ஒரே இடத்தில் பார்த்தும், பலவகையான வேடங்களைத் தாங்கும் பல்வேறு மக்களின் போக்கு, பேச்சு, குணம், செயல் அனைத்தையும் ஒரே நேரத்தில் கண்டும், கேட்டும், உணர்ச்சி பெறுகிற ஒரே கலைக்கூடம் நாடகமே ஆகும்'' என்று நாடகக் கலையின் சிறப்பைப் பற்றி முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் கூறுகிறார்.


                இத்தகைய நாடகக் கலையைச் சிங்கப்பூரில் வளர்ப்பதிலும், வரலாற்றைப் பதிவு செய்வதிலும், சிறந்த நூல்களை வெளியிடுவதிலும், கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கமும் ஆக்கமும் ஊட்டுவதிலும் சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கத்தினர் சென்ற பல ஆண்டுகளாகச் சிறந்த சேவையாற்றி வருகின்றனர். இவர்களின் சேவையைப் பாராட்டி மகிழ்கிறேன். நம் சிங்கைக் குடியரசில் நாடகக்கலை தழைத்தோங்கத் தக்க பணிகளாற்றிச் சிறக்க வாழ்த்துகிறேன்.




 ***




முத்தையாவுக்கு முத்துவிழா


 


                தமிழ் என்னும் அமுதக் கடலில் மூழ்கித் திளைத்துக் கவிதை, திரைப்படப்பாடல், காவியம், கதை, புதினம், சிறுகதை, கட்டுரை, வரலாறு, தன் வரலாறு, ஆன்மீக ஆக்கங்கள் முதலிய பல படைப்பிலக்கிய முத்துக்களைத் தந்து தமிழிலக்கியத் துறைக்குப் பெரும்பங்காற்றியவர் கண்ணதாசன். இதழியல் துறையிலும் புதிய தடம் பதித்தவர் அவர். மேலும் கவிதையில் உரைநடையின் எளிமையையும், உரைநடையில் கவிதையின் இனிமையையும் சேர்த்துத் தமிழுக்குப் புதுமை சேர்த்தவரும் அவரே. தமிழுக்கு அவர் முத்தையா (முத்து ஐயா). கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. அவருக்கே முத்து விழாக் கொண்டாடும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தார் கழகத்துக்கு என் பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஒரு மலர் வெளியிடும் உங்கள் முயற்சியும் போற்றுதற்குரிய ஒன்றே ஆகும்.


–***




பட்டுக்கோட்டையார் மலருக்கு


வாழ்த்துச் செய்தி


 


                மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்க்குச் சிங்கப்பூரில் தமிழவேள் நற்பணி மன்றத்தினர் விழா எடுக்கும் செய்தியும், அதன் தொடர்பாக ஒரு சிறப்பு மலர் வெளியிடும் செய்தியும் அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். புதுமைக் கவிஞர் பாரதியார் தாம் இயற்றிய பாஞ்சாலி சபதம் என்னும் காவியத்திற்கு எழுதிய முகவுரையில் "எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லாருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்' என்று கூறுகிறார். இதற்கேற்ப எல்லார்க்கும் புரியும் எளிய தமிழில் இனிய பாடல்கள் பல இயற்றித் திரைப்படத்தில் உலவவிட்டுக் கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளிக்  கன்னித் தமிழுக்குப் புத்துயிர் ஊட்டிய கவிஞர், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் ஆவார். அவரது பாடல்களில் அமைந்திருக்கும் கற்பனை, கருத்தாழம், உணர்ச்சி, சமுதாயச்சிந்தனை ஆகியவற்றைச் சிங்கை மக்கள் அறிந்து போற்ற இவ்விழாவும் மலரும் உதவும் என்று நம்புகிறேன். விழாவும் மலரும் சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்.




–***


 


வாழ்த்தும் நெஞ்சங்கள்


(தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகம் 50வது நிகழ்ச்சி)


செப்டம்பர் 2010


 


                சிங்கப்பூரின் சிறந்த கவிஞர்களில் ஒருவரும் சிறுகதை எழுத்தாளருமாகிய பேராசிரியர் யூசுப் ராவுத்தர் ரஜித் தலைமையில் இயங்கும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகம் தன் ஐம்பதாம் பட்டிமன்ற நிகழ்ச்சி நிறைவு விழாவைக் கொண்டாடவிருக்கும் செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.


                பட்டிமன்றம் தமிழர்களுக்குப் புதியதன்று. மகர நாட்டரசன் சோழ அரசனுக்குப் "பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்' பற்றிய குறிப்பு இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையில் இடம்பெறுகிறது. இங்கு பட்டிமண்டபம் என்பது அரசர் கொலுவீற்றிருக்கும் திருவோலக்க மண்டபத்தைக் குறிக்கும். "ஒட்டிய சமயத்துறு பொருள்வாதிகள், பட்டிமண்டபத்துப் பாங்கறித்து ஏறுமின்' என்னும் மணிமேகலைக் காப்பியத் தொடர் பட்டிமண்டபம் என்பது சமயவாதிகள் தத்தம் கொள்கைகளைக் கொண்டு வாதம் செய்கின்ற இடம் என்பதைச் சுட்டுகிறது. "எட்டினோடு இரண்டும் அறியாத என்னைப் பட்டிமண்டபம் ஏற்றினை' என்னும் திருவாசகத் தொடரும் இக்கருத்தை வழிமொழிகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர்தான் "பன்னருங் கலைதெரி பட்டிமண்டபம்' என்று பட்டிமன்றத்தைக் கலைக்கழகமாகக் காண்கிறார்.


                இத்தகைய பட்டிமன்றத்தில் சொற்போர் சுவைதரும் கலையாக அமைகின்றது. அதுமட்டுமின்றிச் சிந்தனைக்கு விருந்தாகவும் இருக்கிறது. தமிழைப் பொறுத்தவரையில் சா.கணேசன், குன்றக்குடி அடிகளார் ஆகியோர் முன்னின்று நடத்திய பட்டிமன்றங்களின் பாங்கு இத்தன்மையதாக முன்னாளில் இருந்தது. இப்போதோ சிந்தனைக்கு இடமின்றிச் சிரித்துப் பொழுது போக்கும் காட்சிக்கூடமாகப் போய்க் கொண்டிருக்கும் நிலையைக் காண்கிறோம். இவ்வாறில்லாமல் சிங்கப்பூரில் இலக்கியம், கலை, மொழி, பண்பாடு, சமூகம், அரசியல் முதலிய பலதரப்பட்ட தலைப்புகளில் சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகம் தன் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவது பாராட்டிற்குரியது. இப்பணி தொடரவும், இதன் வாயிலாகச் சிங்கையில் தமிழ் வளர்ச்சி செழிக்கவும் என் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


–***




 


மணிவிழாக்காணும் மங்கை நல்லார் வாழ்க


(கல்யாணி அம்மையார்)


 


அணிபெற அம்மையின் கோயில் அமைத்து


மணிவிழாக் கண்டிடும் மங்கையார் கல்யாணி


நல்லார் நலமெலாம் பெற்றென்றும் வாழ்கவே


பல்லாண்(டு) இறையைப் பணிந்து.


 


மாரி கோயிலை மாண்புறச் செய்திடும்


காரிகையார் கல்யாணி அம்மை கணவருடன்


எல்லா வளமும்பெற்(று) இன்பமுடன் வாழ்கவே


பல்லாண்(டு) இறையைப் பணிந்து.


 


சிங்கை நகரில் சிறப்புறும் கோயிலென


மங்கையர் ஆட்சியின் மாட்சியை நாட்டுமக்கள்


எல்லாரும் ஏத்துபுகழ்க் கல்யாணி வாழ்கவே


பல்லாண்(டு) இறையைப் பணிந்து.




 


 


–***







தமிழ்ப் பாடநூல் மேம்பாட்டிற்காகத்


தமிழகக் கல்வி அமைச்சர் மாண்புமிகு பேரா.க.அன்பழகன் அவர்களுக்கு எழுதிய கடிதம்


11.3.1997


 


பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு,


                வணக்கம். சிங்கப்பூர்ப் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகம் வெளியிடும் தமிழ்மொழிப் பாடநூலாக்கக் குழுவின் மதியுரைஞர் பணி அனுபவ அடிப்படையில் நம் தமிழ்மொழிப் பாடநூலாக்கப்பணி சிறக்கச் சில கருத்துக்களைத் தங்கள் முன் வைக்க விழைகிறேன்.


1.             நம் தமிழ்மொழிப் பாடநூல்கள் பயன்பாட்டு நோக்கிலும் பண்பாட்டு நோக்கிலும் அமைய வேண்டும். தொடக்க நிலையில் பயன்பாட்டு நோக்கிற்கு அதிக அழுத்தமும், உயர்நிலையில் பண்பாட்டு நோக்கிற்கு அதிக அழுத்தமும் கொடுத்தமைத்தல் நல்லது. அப்போதுதான் தமிழை நடைமுறைப் புழக்கத்திற்குப் பயன்படுத்த மாணவர்களுக்கு நல்வாய்ப்புக் கிடைக்கும்.


2.             பாடநூல்களின் உள்ளடக்கம் சுவையுடையதாக இருக்க வேண்டும். வேண்டாத இலக்கணம், மிகுதியான இலக்கியம் ஆகியவற்றை அதிகமாகப் புகுத்திச் சுமையுடையதாக ஆக்குதல் கூடாது.


3.             இலக்கணமும்கூடப் பயன்பாட்டுக்கு & இக்காலத்தமிழ் நிலைக்கு ஏற்றவை மட்டும் போதும். யாப்பு, பொருள் முதலிய இலக்கணப் பகுதிகள் எல்லா மாணவர்க்கும் தேவையா என எண்ணிப் பார்க்க வேண்டும்.


4.             இலக்கியப்பகுதிகள் மாணவர்கள் ஆர்வத்தைத் தூண்டித் தமிழ்மொழி மீது பற்று ஏற்படுத்துவனவாக இருக்க வேண்டும்.


5.             மொழிப்பாடப்பகுதி, இலக்கியப்பாடப்பகுதி என இரு பகுதிகளாகப் பிரித்து மொழிப்பாடப்பகுதி அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என ஆக்கி, இலக்கியப்பாடப்பகுதியை விருப்பப்பாடமாகக்கூட ஆக்கலாம்.


6.             கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல், சிந்தித்தல் ஆகிய திறன்கள் அடிப்படையில் அவற்றை ஒருகிணைத்துப் பாடங்களை உருவாக்க வேண்டும்.


7.             கருத்துப் பரிமாற்ற அணுகுமுறை (communicative approach)யில் பாடங்களை அமைக்க வேண்டும். அதாவது வழுவிலாத்தன்மை (accuracy), சரளம் (fluency), பொருத்தமுடைமை (appropriacy) மூன்றும் இணைய அமைவதே கருத்துப்பரிமாற்ற அணுகுமுறையாகும்.


8.             மொழி, கலை, பண்பாடு, சமூகம், நாடு, அறிவியல், தொழில்நுட்பம், இயற்கை, மனித உறவுகள், உலகம், சுகாதாரம், உடல்நலம், கற்பனை முதலிய பல திறப்பட்ட கருப்பொருள்களைச் சார்ந்த அணுகுமுறையில் பாடங்களை அமைக்க வேண்டும்.


9.             பாட வடிவங்கள் உரையாடல், கட்டுரை, கதை, எளிய பாடல் எனப் பலதிறப்பட்ட வடிவங்களில் அமைய வேண்டும்.


10.           நடை எளிய தமிழில் நல்ல தமிழில் இருக்க வேண்டும், பயன்பாட்டிலுள்ள நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தலாம்.


11.           பாடநூல்கள் நல்ல தாளில், நல்ல அச்சில், வண்ணப்படங்களுடன் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.


12.           உச்சரிப்பு, தெளிவான வரிவடிவம் ஆகியவை மேம்படப் பல வகைப்பயிற்று கருவிகள் உருவாக்க வேண்டும்.


13.           பாடநூல்கள், பயிற்சி நூல்கள், பெரிய புத்தகங்கள், ஒலிப்பேழை, ஒளிப்பேழை முதலிய பலவகைப் பயிற்று கருவிகள் உருவாக்க வேண்டும்.


14.           மொழி விளையாட்டுப் புத்தகங்கள் பல தயாரிக்க வேண்டும்.


15.           படக்கதை நூல்கள் பல உருவாக்கலாம்.




 


–***


 ...... முற்றும்......
Dr S.P. Thinnappan


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக