ஞாயிறு, 18 மே, 2014

இரங்கல் உரை


SPT 10 Irangal urai

 

. வி . சிங்கன்

எங்கள் தமிழ்ச் சிங்கன்

இரங்கல் உரை

24-5-2011

 

 

 

காலஞ்சென்ற ஈ. வி சிங்கன் அவர்களை நான் சென்ற நாற்பது ஆண்டுகளாக நன்கு அறிவேன். தன்னிகரற்ற தமிழ்ப் பற்று உடையவர். தமிழ் நூல்களைத் தரணி முழுதும் சென்று பரப்புவதில் தளரா முயற்சி மேற்கொண்டவர்.  கதைகள், படங்கள், மொழிபெயர்ப்புகள்,நூல்கள் வாயிலாகத் திருக்குறளைப் பலரும் கற்கப் புதிய உத்திகளைப் புகுத்தி வகுப்புகள் நடத்த வழி கண்டவர். குவலயம்  எங்கும் குறள் பரப்பும் பணியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வந்தவர்.  சைவவழிபாட்டு முறைகள்  திருமுறைப்பாடல்கள் நூல்கள் பரவ ஒல்லும் வகையான் எல்லாம் ஓயாது பாடுபட்டவர்.  தமிழ் நூல்கள் வெளியீட்டு விற்பனைத் துறையில் சிங்கையின் முன்னோடியாக இருந்தவர்.  எளிய முறையில் தமிழ் கற்பதற்கு ஏற்ற துணைக் கருவிகளை உருவாக்கியவர்.  அவர் மறைவு தமிழுக்கு ஒரு பேரிழப்பு.  அவர் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

 

 

 

தெய்வானை ஆச்சி

 

உயர்திரு

டான் சிரி மு. சோமசுந்தரம் அவர்களுக்கு

கோலாலம்பூர்

 

பேரன்புமிக்க அண்ணன் அவர்களுக்கு

 

வணக்கம். தெய்வானை ஆச்சி அவர்களின் இறப்புச் செய்தி அறிந்து ஆறாத் துயருற்றோம். வள்ளுவன் வகுத்த வாழ்க்கைத் துணைநலம்

இலக்கணத்திற்கு இலக்கியமாய் வாழ்ந்த ஆச்சி அவர்களின் இழப்புத் தங்களுக்குப் பேரிழப்பே ஆகும்.

 

ஆச்சி அவர்கள் கற்பில் கண்ணகியாய், கலையுள்ளத்தில் மாதவியாய், தொண்டுசெய்வதில் மணிமேகலையாய், அருள்நெறி தழைக்கச் செய்வதில் மங்கையர்க்கரசியாய், பக்தியில் காரைக்கால் அம்மையாராய், பலரை நன்னெறிப்படுத்துவதில் தூண்டுதவ விளக்கினராய திலகவதியாராய், துயர் தாங்குவதில் சீதையாய்,பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய், பாரதம் போற்றும் பண்பில் அன்னை கஸ்தூரிபாயாய், தியாக உணர்வில் அன்னை திரசாவாய்த்

திகழ்ந்தவர்கள். இத்தனை பண்புகள் இணைந்திருந்தும் அடக்கத்தின் உருவமாய் அமைந்தவர்கள். பெண்மைக் குணங்கள் எல்லாம் நிறைந்த பெட்டகமாய், மனைத்தக்க மாண்புடையராய்க் குடும்ப விளக்காய் வாழ்ந்தவர்கள். சைவப் பெரியாரின் மகளாய், சைவ சித்தாந்தக் கலா நிதியின் மனைவியாய், நன்மக்களைப் பெற்ற தாயாய், பெருமை மிக்க பேரக் குழந்தைகளைப் பெற்ற பாட்டியாய், நட்பிற்கு இலக்கணமாகும் தோழியாய், நல்வழி காட்டும் தமக்கையாய், பலருக்கும் பரிவும் பாசமும் காட்டும் உடன்பிறப்பாய், எல்லாருக்கும் இனியவை கற்பிக்கும் ஆசிரியையாய், வாழ்ந்தார்கள். வாழ்வாங்கு வாழ்ந்த பெருமாட்டி. தங்கள் பெருமைக்கெல்லாம் பின்புலமாக இருந்தவர்கள்.

 

எங்கள் குடும்பத்தின்பால் அன்பும் பாசமும் பொழிந்தவர்கள். விருந்தோம்புதலில் நிகரற்று விளங்கியவர்கள்.

 

இக்கால மகளிர்க்கெல்லாம்  ஓர் இலட்சியமாக வாழ்ந்து காட்டிய ஆச்சி அவர்களின் ஆன்மா  இறைவன் இணையடி நீழல் எய்திட இறைஞ்சுகிறேன். குடும்பத் தலைவியைப் பிரிந்து வருந்தும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

                  தங்கள் அன்புள்ள

          சுப. திண்ணப்பன்   தி. இந்திராள்

            சிங்கப்பூர் 12-1-2008

 

 


சிவமயம்

 

 

திருமதி கண்மணி அம்பலவாணர்.

 

 

 

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதுஇலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

 

என்னும் வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்பத் திருமதி கண்மணி அம்பலவாணன் அவர்கள் அம்பலவாணரைக் கரம்பிடித்த நாள்முதல் தம் வாழ்நாள் முழுவதும் சைவத்திற்குத் தொண்டாற்றிச் சிங்கையில் புகழ் அடைந்தார் என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்றால் திரு க அம்பலவாணர் அவர்களின் வெற்றிக்குப் பின்னால் இருந்தவர் கண்மணி அம்மையார் அவர்கள்தான்.

 

நம் நாயான்மார்களில் ஒருவர் சிவனைக் குறிப்பிடுகையில் கண்ணின் மணியாடு பாவாய் என்கிறார். திரு க அம்பலவாணர் தீ விபத்தில் தமது இரு கண்களையும் இழந்த பின்பு அவருக்குக் கண்களாக மட்டும் அல்லாமல் கண்ணின் மணியாக விளங்கியவர் திருமதி கண்மணி அம்மையார் அவர்கள். தம் வாழ்க்கையில் ஒரு தியாக சொரூபமாக இருந்து தமது கணவர்க்குப் பணிவிடைகள் செய்ததோடு அவரின் சைவப் பணிகளுக்கு முதுகெலும்பாய் அமைந்து சிங்கையில் சைவம் வளர நாளும் பாடுபட்டவர் கண்மணி அம்மையார் அவர்கள். திருமுறை மாநாட்டினைத் தம் சொந்த வீட்டு விழாவாகக் கருதி அதன் ஒவ்வொரு செயலிலும் சிறப்புக் கவனம் செலுத்தி மாநாட்டிற்குத் தூணாக நின்று அதனைத் தாங்கியவர். மாநாட்டு உறுப்பினர்களது வளர்ச்சியிலும் தனிக் கவனம் செலுத்தி அவர்களை ஊக்குவித்தவர். திருமுறை மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக இருந்து அனைவரையும் ஒருங்கிணைத்துச் சிறந்த தொண்டு ஆற்றியவர் அம்மையார் அவர்கள்.

 

செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் என்பது போல அம்மையார் அவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களின் வாழ்வில் மிக அக்கறை கொண்டு சகோதரிகளைக் கண்ணும் கருத்துமாகக் காத்து வளர்த்தார். அவரின் பெற்றோரின் இறப்பிற்குப் பின்பு கடைசி மூன்று தங்கைமார்களுக்கும் ஒரு தாயாக இருந்து கல்வியும் மற்ற உதவிகளையும் அளித்தவர். அதிலும் திருமணம் ஆகாத தம் இரு சகோதரிகளைத் தமது நேரடிப் பார்வையிலேயே வைத்துப் பாதுகாத்து வந்தவர். அதுமட்டும் அல்லாது நலிந்தவர் யாராக இருந்தாலும் அவர்களது வாழ்க்கையைச் செம்மைப்படுத்த கைப்பொருளை வழங்கி ஆதரவு நல்கியவர்.

 

சாதாரண ஆங்கில ஆசிரியராகத் தம் வேலையைத் தொடங்கிய கண்மணி அம்மையார்  மூத்த ஆசிரியராக ஓய்வுபெற்றார். தன் வாழ்க்கையில் ஏழை எளியவர்களுக்குச் சாதிமத பேதம் இன்றிக் கல்வியை வழங்கினார். ஓர் ஆசிரியர் செய்யும் செய்லகளுக்கு அப்பால் சென்று ஏழை எளிய மாணவர்களுக்குப் பொருள் உதவி செய்து கல்வி பயில உதவிசெய்தார். பின்தங்கிய மாணவர்களையும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களையும் தம் வீட்டிற்கு அழைத்துவந்து தனிப்பாடம் (Tuition) சொல்லிக்கொடுத்தார். அன்னசத்திரம் ஆயிரம் வைப்பதைக்காட்டிலும் ஒரு ஏழைக்குக் கல்வியை வழங்குதல் சிறப்பு என்னும் கருத்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார்.

 

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத்த வர்க்கு

 

என்னும் திருக்குறளுக்கு ஒப்பாக விருந்தோம்பலைப்  போற்றியவர் அம்மையார் அவர்கள். தங்கள் வீடு நாடி வந்தவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இன்சுவை உணவு பரிமாறுவதில் அவருக்கு நிகர் அவரே ஆவார். அதுமட்டும் அல்லாமல் விருந்தினர் உணவு உண்டு வீட்டிற்குச் செல்லும்போது விருந்தினரின் வீட்டில் உள்ளவர்களுக்கும் உணவையும் அன்பளிப்பையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பும் விசாலமான உள்ளம் படைத்தவர். ஆன்மீக அடியார்களை உபசரிக்கும் போது பெரியோர்களின் உள்ளம் அறிந்து அவர்களது மனம் நிறைவு கொள்ளும் வண்ணம் கவனித்து  விருந்தோம்பும் பண்பு கொண்டவர்கள் அம்மையார் அவர்கள். விருந்தோம்பும் பண்பைத் தலையாயப் பண்பாகக் கொண்டு வாழ்ந்தவர்கள்.

 

சிங்கையில் இருந்தபடியே இந்தியா, இலங்கை முதலிய நாடுகளில் உள்ள பல அமைப்புகளுக்கும் நிதி உதவி அளித்தும் மானசீகமுறையில் ஆதரவு நல்கியும் பல நற்செயல்களைச் செய்தவர். வலது கரம் செய்வதை இடது கரம் அறியாது விளம்பரத்திற்கு வெளிச்சம் காட்டாது தமது பணிகளை நாளும் செய்த கண்மணி அம்மையார் சிங்கப்பூர் மங்கையர்க்கரசியாக, மங்கையருள் மாணிக்கமாக விளங்கினார் என்றால் அது மிகையாகாது.

 

 

 

 

திருமதி கண்மணி அம்பலவாணன் வாழ்க்கைக் குறிப்பு

 

பிறந்த தேதி        : 26-4-1932


பிறந்த இடம்       : ஜொகூர் பாரு


கல்விச் சான்றிதழ்   :“O” Level (English)
 

வேலை            :தொடக்கப்பள்ளி ஆசிரியர்


வகித்த பதவி       : Senior Teacher


வேலை செய்த ஆண்டுகள் : சுமார் 35 ஆண்டுகள்


கற்பித்த பள்ளிகள் :  1. May North Primary School

                   2. Bendemeer Primary School

                   3. Pei Hwa Primary School


திருமண நாள் : 9 4 1962


உடன் பிறப்புகள் : ஆறு சகோதரிகள்


மறைவு : 22 7 2002


தொண்டுகள்: ஒருங்கிணைப்பாளர் சிங்கப்பூர் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக்குழு

            பெற்றோரின் மறைவுக்குப் பின்னர் அன்னையின் வேண்டுகோளுக்கு இணங்கி 
            இறக்கும் வரை தைப்பூசத் திருநாளில் தண்ணீர்ப் பந்தல் வைத்து நடத்தியது.

 

தமிழகத்திற்குக் செல்லும்போதெல்லாம் வடலூரில் உள்ள இராமலிங்க அடிகளின் பெயரில் அன்னதானம், துணிமணிகள் தானம் கொடுப்பது.

 

ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை அன்று உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின்  பெயருக்கு ஆத்ம சாந்தி பூசை செய்தல்

 

திருமுறை மாநாட்டிற்கு அவரது செலவில் அனைவருக்கும் தன் கைப்பட முகவரி எழுதி அழைப்பிதழ் அனுப்புதல்

 

ஆண்டுதோறும திருமுறை மாநாட்டிற்கு நன்கொடை கொடுத்தவர்களுக்கும் மற்றும் மாநாட்டோடு தொடர்பு உடையவர்களுக்கும் தீபாவளி வாழ்த்து அனுப்புதல்

 

உதவி நாடி வந்தவர்களுக்கு மனம் கோணாமல் உதவுதல்.

 

வலது கரம் கொடுப்பதை இடம் கரம் அறியாது தொண்டுகள் செய்தல். விளம்பரத்தை விரும்பாது தன் கடன் பணிசெய்து கிடப்பதுவே என்று எண்ணுதல்.

 
.... முற்றும்....
Dr S.P. Thinnappan

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக