வெள்ளி, 2 மே, 2014

பண்பாடு - 1



தமிழ் அருச்சனை


இறைவழிபாடு என்பது இறைவன் திருஉருவத்தை மனத்தால் நினைத்து, வாயால் அவன் புகழ்பாடி , உடலால் அவனுக்குரிய பணிகளைச் செய்வதாகும் .  மனத்தால் நினைத்தற்கும் உடலால் செயலாற்றுவதற்கும் மொழி தேவை இல்லை.  வாயால் துதிப்பதற்குத்தான் மொழி தேவைப்படுகிறது.  வாயால் இறைவன் திருப்பெயர்களைச் சொல்வதும் அவன் புகழ்பாடும் தேவாரம், திருவாசகம் போன்ற பக்திப்பாடல்களைப் பாடுவதும் வாயினால் செய்யப்படும் வழிபாடு ஆகும்.  இதற்கென்று கட்டாயம் ஒரு மொழி தேவை.


இறைவன் திருநாமங்களையும் பெருமைகளையும் எம்மொழியிலும் கூறலாம் .  எம்மொழியில் கூறினாலும் இறைவன் உணர்ந்து கொள்வான். அவன் எல்லையற்ற அறிவுடையவன் . ஆனால் வழிபடுவோர்களாகிய நம் அறிவிற்கு ஓர் எல்லை உண்டு.  நாம் எம்மொழியினையும் புரிந்துகொள்ள இயலாது.  நமக்கெனக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள ஒரு சிலமொழிகள் உள்ளன.  நாம் இளமையிலிருந்து பழகிய சிந்தனைகளை -உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் மொழியே தாய்மொழி அல்லது முதல் மொழி ஆகும். இறைவழிபாடு என்பது உணர்வுடன் ஒன்றிய ஒன்று.  எனவே, இது தாய்மொழியில் இருப்பது தான் நல்லது. அப்போதுதான் நம் உள்ளத்தை இறைவன்பால் ஒன்றிடச் செய்ய முடியும்.  நமக்குத் தெரியாத புரியாத மொழியில் வழிபாடு செய்யும்போது நம் மனம் இறைவனிடத்து ஒன்றுபட்டு ஈடுபட இயலாது.  எனவே இறை வழிபாடு செய்வோர் அவரவர் தாய்மொழியில் செய்வதுதான் சிறந்த பயன்நல்கும்.


நம் தாய்மொழி தமிழ்.தமிழில் வழிபாடு செய்வது நம்மைப் பொறுத்தவரையில் எவ்வகையில் தவறாகும் தமிழ்பேசும் பிற சமயத்தவர்கள்


தங்கள் வழிபாடுகளையும் சடங்குகளையும் தமிழில் செய்கிறார்கள்.  தமிழ் அறிந்த இந்துக்கள் தமிழில் செய்தால் என்ன?


நம் தாய்மொழியாகிய தமிழ் வேறு எந்த மொழிக்கும் , தாழ்ந்ததன்று.  தமிழைப் பக்தி மொழி என்று பாராட்டுகிறார் தனிநாயக அழகளார். தமிழைத் தெய்வீக மொழி(திருநெறிய தமிழ்) என்று போற்றுகிறார் ஞானசம்பந்தர்.  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்என்று கூறுகிறார் பாரதியார் .  உலகமொழிகளில் உயர்தனிச் செம்மொழியாக விளங்கிய தன்மை உடையது தமிழ் என்று சொல்கிறார் பரிதிமால் கலைஞர் எனப்படும்  வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார்’’ பண்ணிடைத் தமிழொப்பாய்’’ என்று இறைவனைத் தமிழாகவே அழைக்கிறார் சுந்தரர்.  இந்நிலையில் வழிபாட்டுக்குரிய மொழியாகும் தகுதி தமிழுக்கு இல்லை என எப்படி மறுக்க முடியும்?


அருச்சனை என்பது வழிபாட்டின் ஒரு கூறு ஆகும்.  இறைவனின் திருப்பெயர்களை 108 முறை அல்லது 1008 முறை கூறிப் போற்றி இறைவன் திருவடியில் மலர் இட்டு வழிபடுவது தான் அருச்சனை .  இந்தத் திருப்பெயர்களை நமக்குப் புரியும் வண்ணம் தமிழில் சொல்வது நம் நெஞ்சத்தை நெகிழ்விக்க உதவும்   இவ்வாறு தமிழில் ‘‘போற்றி’’ கூறுவது நீண்ட நெடுங்காலமாகத் தமிழர்களிடையே இருந்து வரும் இயல்பு என்பது திருநாவுக்கரசர் தேவார அடிகளால் அறியமுடியும்.  ‘‘பூக்கையால் அட்டிப்போற்றி என்னாதவர்க்கு ஆக்கையால் பெற்ற பயன் என்ன?’’ என்று கேட்கிறார் நாவுக்கரசர் நிலைபெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே நீ இங்கே வா, நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு அலகிட்டு மெழுக்கிட்டுத் தலையாரக் கும்பிட்டுச் சங்கரா சய சய போற்றி என்று அலரா நில்லே’’ என்று அவர் நமக்கு அறிவுறுத்துகிறார்.


மேலும் தமிழர்கள் ஒவ்வொருவரும் சிவபெருமானுக்குத் தமிழில் போற்றி சொல்லி அருச்சனை செய்ய உதவும் வகையில் திருநாவுக்கரசர் போற்றித் திருத்தாண்டகம் ஐந்து பதிகங்கள் தம் தேவாரத்தில் பாடிக் கொடுத்திருக்கிறார்.  மாணிக்கவாசகப்பெருமான் தம் திருவாசகத்தில் போற்றித் திருஅகவல்என்ற பகுதியைப் பாடியுள்ளார்.  மற்ற பகுதிகளிலும் இறைவன் திருவடியையும் திருப்பெயராகிய நமச்சிவாய மந்திரத்தினையும் போற்றிப்பாடி இருக்கிறார்.  சுந்தரரைத் தடுத்தாட் கொண்டபோது வட மொழியில் வேதத்தை அருளிய சிவபெருமான் அவரிடம் ‘‘அருச்சனை பாட்டே ஆகும்.  சொற்றமிழால் எம்மைப்பாடுக’’ என்ற சொன்னதாகச் சேக்கிழார் கூறுகிறார்.  எனவே தமிழில் அர்ச்சனை செய்வது தமிழர்க்கு உகந்ததே.


தமிழில் அனைவரும் அருச்சனை செய்வதற்குரிய வகையில் ‘‘போற்றி’’ அருச்சனைப் புத்தகங்கள் வெளியாகியுள்ளன.  இவற்றுள் விநாயகர், முருகன், சிவபெருமான், அம்மை ஆகியயோர்க்குரிய தமிழ்  அருச்சனைகள் உள்ளன.  இவற்றைப் படித்து வீட்டிலும் கோயிலிலும் வழிபாடு செய்யும்போது அருச்சனை செய்ய வேண்டும். இதனால் தமிழர்கள் தங்கள் வழிபாட்டில் மனத்தை ஈடுபடுத்த முடியும் . அதே நேரத்தில்; தமிழ் மொழியையும் ஒருவகையில் வாழ வைக்க முடியும். உண்மையான வழிபாடும், உங்கள் மொழியும் உயர்ந்திட உங்களால் இயன்றதை இன்றே செய்யுங்கள்.


தமிழ் மக்கள் தமிழ் அருச்சனை செய்வதில் ஆர்வமும் அக்கறையும் கொள்ளவேண்டும்.  தங்கள் பகுதியிலுள்ள கோயில் நிருவாகத்தினரிடம் கூறித் தமிழ் அருச்சனை செய்யுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.  கோயில் நிருவாகத்தினரும் இதனை ஏற்று ஆவன செய்யவேண்டும்.  இது சிறந்த தமிழ்த் தொண்டாக அமையும் . பொதுமக்களும் கோயில்களுக்குச் சென்று தமிழ் அருச்சனை செய்யுமாறு கேட்க வேண்டும் தமிழ் அருச்சனை செய்கின்ற வாங்குமிடத்திலும் தமிழில் அருச்சனை செய்யப்படும் என்பதை எழுதி வைக்க வேண்டும் . அருச்சனைச் சீட்டு விற்பவர்களும் இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.


குருக்கள்மார்களும் பண்டாரங்களும் தமிழ் அருச்சனை என்பது வழிபாட்டின் ஒரு கூறே, பகுதியே என எண்ணி இதில் ஈடுபாடு கொண்டு செய்ய வேண்டும்.  இதனால் அவர்கள் வேலை போக வழி இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம் அவசரமாக இருந்தாலோ கூட்டமாக இருந்தாலோ விழாக் காலங்களிலோ முதல் 10 போற்றிகளும் கடைசி 8 போற்றிகளுமாக 18 ‘‘போற்றிகளை’’ மட்டும் சொல்லி அருச்சனை செய்யலாம்.  108 போற்றிகளைக் காலை  மாலைப் பூசையின் போது மட்டும் ஒரு முறை சொன்னால் போதும் என்று வைத்துக் கொள்ளலாம். எனவே குருக்கள்மாரும் பண்டாரங்களும் இந்தத் திருப்பணிக்கு-தமிழ்ப் பணிக்கு முன்வந்து நல்வழிகாட்டுவார்களென்று நம்புகிறோம். குருக்கள்மார்கள அல்லது பண்டாரங்கள் அருச்சனை செய்யும்போது வழிபடும் பக்தர் தங்கள் உள்ளத்திற்குள் அமைதியாகப் ‘‘போற்றி’’ அருச்சனையைத் தமிழில் சொல்லி விடலாம்.


 


சிங்கப்பூரில் தமிழ் அருச்சனை டேங்க் ரோடு அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலிலும் சௌத்பிரிட்ச் ரோடு மாரியம்மன் கோயிலிலும் செய்யப்படுகின்றது.  டெப்போ ரோடு உருத்திரக்காளியம்மன் கோயிலிலும் செய்கிறார்கள்.  மலேசியாவில் கோலாலம்பூர் கோர்ட்டு மலை விநாயகர் கோயில் , மாரியம்மன் கோயில், பத்துமலை முருகன் கோயில் ஆகியவற்றிலும் தமிழ் அர்ச்சனை நடைபெறுகின்றது.  இக்கோயில்களைப் பின்பற்றி ஏனைய திருக்கோயில்களிலும் தமிழ் அருச்சனை நிகழ இறைவனை வேண்டுகிறோம். தமிழ்ப்பெருமக்களையும் கோயில் நிருவாகத்தினையும் ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.


Thinnappan, SP.  Tamil Aruchchanai (Worship in Tamil)


                  Tamil Murasu, Singapore (1994) pp8 (Tamil)


கட்டுரை எண். 25


புத்தாண்டுச் சிந்தனை


இன்று தமிழ் வருடப்பிறப்பு புத்தாண்டின் தொடக்கநாள். இன்று பிறந்த வருடத்தின் பெயர்  பிரஜோத்பத்தி. சென்ற ஆண்டின் பெயர் பிரமோதூத.  அடுத்த ஆண்டின் பெயர் ஆங்கிரஸ. இப்படித் தமிழ் வருடங்கள் எனக் கூறப்பெறும் அறுபத வருடங்களின் பெயர்களையும் பார்த்தால் தமிழ்ப்பெயர்கள் என்ற சொல்ல இயலவில்லை. எல்லாமே சமஸ்கிருதம் என்று கூறப்பெறும் வடமொழி மூலங்களைக் கொண்ட பெயர்களாகவே உள்ளன. இவை எப்படித் தமிழ் ஆண்டுகளாகக் கருதப்பெற்றன என்பது தெரியவில்லை.  இவ்வாறு தமிழ் வருடங்கள் எனக் கூறப்பெறும் இந்த ஆண்டுகளைத் தமிழ் இலக்கியங்களில் புலவர்கள் போற்றிக் கையாளவில்லை என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.


   தமிழ் வருடங்கள் எனக் கூறப்பெறும் இந்த வருடங்களின் எண்ணிக்கை அறுபது. இவைதான் திரும்பத் திரும்ப வரும்.  இன்று பிறந்துள்ள பிரஜோதி பத்தி ஆண்டு அறுபதுவருடம் கழித்து மறுபடியும் வந்துள்ளது.  இதற்கு முன் இந்தப்பெயரில் எத்தனைதயோ பிரஜோத்பத்தி ஆண்டுகள் வந்திருக்க வேண்டும்.  இவ்வாறே எதிர்காலத்தில் வரும்.  எனவே அறுபது ஆண்டுக்கொருமுறை வட்டம்  போலச் சுழன்று சுழன்று வரும்  இந்தப் பிரஜோத்பத்தி  ஆண்டினை எவ்வாறு  புத்தாண்டு என்று சொல்வதில் பொருளில்லை. 


பிரஜோதிபத்தி ஆண்டில் ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்ச்சி நடப்பதாக வைத்துக்கொள்வோம்.  அறுபதாண்டுக்கு ஒரு முறை திரும்பத் திரும்ப இந்தப் பிரஜோத்பத்தி ஆண்டு வருவதால் எதிர்காலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எந்தப் பிரஜோத்பத்தி ஆண்டில் நாம் குறிப்பிட்ட வரலாற்று நிகழ்ச்சி நடந்தது என்று அறியாமல் குழம்புவதற்கு வழி ஏற்படும். எனவே தான் தொடராண்டுச் சிந்தனை தொடங்கியது.  கிறி;ஸ்துவை மையமாக வைத்துக் கிறிஸ்து பிறப்பதற்கு முன்(கி. மு) கிறிஸ்து பிறந்தபின்(கி.பி) என்று பகுத்து ஆண்டுகளைக் குறிப்பிட்டுச் சொல்லும் பழக்கம் ஏற்பட்டது.  அந்த வகையில் கி.பி. 1991 ஆம் ஆண்டு இவ்வாண்டு என்கிறார்கள்.  இவ்வகை ஆண்டுக் கணக்கில் வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும்போது குழப்பம் ஏற்பட வழி இல்லை.


இந்தத் தமிழ் வருடங்கள் அறுபது எவ்வாறு தோன்றின என்பதற்கு ஒரு புராணக் கதையை ‘‘அபிதான சிந்தாமணி’’  என்றும் முதல் தமிழ்க்கலைக் கலைஞ்சிய நூல் கூறுவதைப் பாருங்கள்.  ஒரு முறை நாரத முனிவர் சிருஷ்ண பரமாத்மாவை நோக்கி நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே. எனக்கு ஒரு கன்னிகை தரக்கூடாதாஎன்று கேட்டார். அதற்குக் கிருஷ்ணன் நான் இல்லாத வீட்டுப்பெண்ணைப்பார்த்து த் திருமணம் செய்து கொள்கஎன்றார்.  நாரத முனிவர் கிருஷ்ணன் (இறைவன்) இல்லாத வீடு ஒன்று கூட இவ்வுலகில் இல்லை என்பதை உணர்ந்தார்.  பிறகு அவரே அழகுள்ள பெண்ணாக மாறிக் கிருஷ்ணனுடன் கூடி  அறுபதாண்டுகள் இன்புற்று அறுபது குமாரனைப் பெற்றார்.  அவர்கள் பெயர்கள் பிரபவ முதல் அக்ஷ்ய இறுதியாக வரும் அறுபது தமிழ் ஆண்டுப் பெயர்கள்.  இவர்கள் வருஷமாம்  பதம் பெற்றன.  இந்தப்புராண வரலாற்றை நோக்கும்போது தமிழ் வருடங்கள்? பிறந்த கதை அவ்வளவு பெருமை உடையதாக இல்லை


 


மேலும் இந்தத் தமிழ் வருடங்களைத் தரம் பிரிக்கும் தன்மையையம் பார்க்கிறோம் பிரபவ,விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கிரச,ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர வெகுதானிய , பிரமாதி, விக்ரம, விஷா, சித்தரபானு, சுபானு, தாரண , பார்த்திப, விய இவ்விருபதும் உத்தம வருடங்கள்.  சர்வஜித்து, சர்வதாரி, விரோதி,விக்ர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி,, விஸ்வாவசு, பராபவ இவ்விருவதும் மத்திம வருடங்கள்.  பிலவக, கீலக , சௌமிய, சாரதாரண, விரோதி, கிருது, பரிதாபி, சித்தார்த்தி, ரௌத்தி, துன்மதி, துந்துபி. உருத்தேராத்காரி, இரத்தாச்ஷி , குரோதன, அட்சய இவ்விருவதும் அதமம் (தாழ்ந்து) வருடங்கள்.  முதல் , இடை, கடை என்ற தன்மையால் மூன்று வகைப்படுத்தும் இம்முறைக்கு அடிப்படை எது என்றம் தெரியவில்லை.


கம்பராமாயணம் அரங்கேற்றம் ‘‘எண்ணிய சகாப்தம் எண்ணூற்றோரில் ‘‘ நடைபெற்றதாக ஒரு பழம்பாடல் கூறும். இங்கே சாலிவாகன சகாப்தம்(ஆண்டு) குறிப்பிடப்படுகிறது. சாலிவாகனன் என்பவன் விக்கிரமாதித்தன் காலத்திலிருந்த ஓர் அரசன் இவன் பெயரால் சாலிவாகன சகாப்தம் வழங்குகிறது. இது தென்னிந்தியாவில் இருந்த வழக்கு என்பதை உணரமுடிகிறது.


இராஜராஜ சோழன் காலத்தில் எழுதப்பெற்ற கல்வெட்டுக்களில் இராஜராஜன்   ஆட்சிக்கு வந்ததை மையமாக வைத்து ஆண்டினைக் கணக்கிட்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் முறை இருந்தது.  இவ்வாறே ஏனைய சோழ மன்னர்களும் தங்கள் ஆட்சிக்கு வந்ததை மையமாக வைத்து ஆண்டினைக் கணக்கிட்டு நிகழ்ச்சிகளைக் கல்வெட்டுக்களில் சுட்டிக்காட்டினர்.


இன்று கூறப்பெறும் தமிழ் வருடங்களின் வடமொழிப்பெயர்கள் , வரலாற்றுக் குழப்பம் , தோற்றக்கதை. வகைப்பாட்டில் அடிப்படை இன்மை இவற்றை நோக்கும் போதும் .  இவற்றைக் கடைப்பிடிப்பதில் பொருள் இருப்பதாகத் தோன்றவில்லை, தமிழகத்தில் உள்ள இலக்கிய வழக்கு , கல்வெட்டு வழக்கு ஆகியவற்றை நோக்கும் போது  ஒருவரை அல்லது ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து ஆண்டுக் கணக்கிடும் முறை சிறந்தது எனத் தோன்றுகிறது.இன்று ஆங்கில ஆண்டு என அழைக்கப்பெறுவதும் இவ்வாறே தோற்றிய ஆண்டுகள்.


தமிழ்ப் பேரறிஞர்கள் சார்பாக 1935 ல் சென்னைப் பச்சையப்பன் மண்டபத்தில் பேராசிரியர் கா. நமசிவாய முதலியார் நடத்திய திருவள்ளுவர் திருநாளில் தலைமை வகித்துப் பேசிய மறைமலை அடிகளார் பல ஆய்வுரைகளைக் கூறித் திருவள்ளவர் ஆண்டு முறையைத் தொடங்கி வைத்தார். அந்த அடிப்படையில் இப்போது திருவள்ளுவர் ஆண்டு 2022 திருவள்ளுவர் கி. மு. 31ல் தோன்றியதாகக் கொண்டு இந்த ஆண்டு முறை கணக்கிடப்படுகிறது . இந்த ஆண்டின் தொடக்கம் தைமாதம் முதல் நாளன்று பொங்கல் அன்று தொடங்குகிறது.


பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 கால் நாள் ஆகும்.  இதனைத் தான் ஓராண்டு என்று கூறுகிறோம்.  தைமுதல் ஆனி ஈறாகக் கொண்ட காலம் பகல் நிலை  கொண்டது.  ஆடி முதல் மார்கழி ஈறாகக் கொண்ட காலம்  இருள்நிலை கொண்டது.  சூரியனின் பயணத்தில் தை முதல் ஆனி ஈறாகவுள்ள பகுதியை உத்தராயணம் (வடபகுதிப் பயணம்) என்றும் ஆடிமுதல் மார்கழி ஈறாக உள்ள பகுதியை தச்ஷிணாயனம் (தென்பகுதிப்பயணம்) என்றும் அழைப்பர்.  தமிழகத்தில் ஆடிக்காற்றிலும், ஐப்பசி அடை மழையிலும், மார்கழிப் பனியிலும் குளிரிலும் துன்புற்ற நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும்எனத் தமிழர்கள் நம்பினர்..  எனவே தைமாதத்தின் பிறப்பு, புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


 


சிங்கப்பூரில் தமிழர்களின் தானைத் தலைவர் தமிழவேள்கோ. சாரங்கபாணி அவர்கள் தொடங்கிய தமிழ் முரசு நாளிதழும்  திருவள்ளுவர் ஆண்டினைப் போற்றிக் கடைப்பிடித்தொழுகும் இயல்பினை ஒவ்வொரு நாளும் தமிழ் முரசில் காணலாம்.  திருவள்ளுவர் தமிழ்ப்பேரறிஞர்.  சிறந்த தத்துவச் சான்றோர்.  உலகம் போற்றும் அறநெறி வகுத்தவர்.  தமிழர்கள் உலகிற்கு வழங்கிய உயர்ந்த நன்கொடையாகிய திருக்குறளைத் தந்தவர். ‘ வள்ளுவன் தன்னை உலகினுக்கிக் தந்து வான் புகழ் கொண்டது தமிழ்நாடு’.  இத்தகைய  வள்ளுவரை மையமாக வைத்துத் தைமாத்தில் புத்தாண்டினைக் கொண்டாடி மகிழ்வது தான் தமிழர் நெறியாகும். இதனைத் தமிழ்கூறும் நல்லுலகம் பின்பற்றினால் என்ன?


 


 


கட்டுரை எண் 44


பால்குடம் - சில சிந்தனைகள்


      தைப்பூசம், தீமிதி, பங்குனி உத்திரம், சித்திரா பௌர்ணமி, வைகாசி விசாகம் முதலிய விழாக் காலங்களிலும், சிவராத்திரி, கந்தர்சஷ்டி முதலிய சிறப்பு நாள்களிலும் இந்து சமயத்தினர் இறைவனுக்குப் பால்குடத்தைத் தலையில் ஏந்திச் சென்று வழிபடுவதைப் பார்க்கிறோம். பாலால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் ஆயுள் நீட்டிக்கும் என்று அபிஷேகப் பலன்களை அறிந்தோர் கூறுவர்.  பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானைஎன்று சுந்தரர் தேவாரம் பாலாபிஷேகத்தை விரும்பி ஏற்பான் இறைவன் என்று கூறுகிறது.  பால் அபிஷேகப்பொருள் மட்டும் அன்று இறைவனுக்கு அமுதாகப் படைக்கப்படும் பொருளாகவும் உள்ளது.  பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை, நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய், துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந்தாஎன்று ஒளவை மூதாட்டி விநாயகப் பெருமானுக்குப் பாலைப் படைத்துத் தமிழைக் கேட்கிறார்.  இத்தகைய சிறப்புக் கொண்ட பால்குடம் எடுக்கும் பக்தர்கள் எண்ணிப் பார்க்க வேண்டிய சிந்தனைகள் சிலவற்றை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். 


      பால், வெள்ளை நிறம்.  அதுபோலப் பால்குடம் எடுக்கும் பக்தர்களின் உள்ளமும் கள்ளமில்லாத வெள்ளை நிறமாக இருக்க வேண்டும். அதாவது வஞ்சனை இல்லாத நெஞ்சத்தில்தான் இறைவன் வந்து தங்குவான்.  அவர்கள் வழிபாட்டைத்தான் இறைவன் அகமகிழ்ந்து ஏற்றுக் கொள்வான்.  நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்பன் பொன்னார் சடைப் புண்ணியன், பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன் அவர்தமை நாணியேஎன்று திருநாவுக்கரசர் பாடும் பாடல் இதனையே வலியுறுத்துகிறது. பொக்கம் என்றால் வஞ்சனை என்று பொருள். வஞ்சம் - அடுத்து நிற்பவர்களைக் கெடுக்கும் உள்ளம் - கொண்டவர்கள் தரும் பூவையும் அபிஷேகப் பொருள்களையும் கண்ட இறைவன் அவர்களின் ஏமாற்றும் போக்கினை எண்ணி எண்ணித், தனக்குள்ளேயே வெட்கப்பட்டுச் சிரிப்பானாம்.  மாறாக இறைவனை நினைந்து நினைந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து உணர்ந்து உணர்ந்து உருகும் உள்ளத்தில் ஓடிவந்து புகுந்து கொள்வானாம்.  எனவே கள்ளம் இல்லாத வெள்ளை உள்ளமே, கடவுள் உறையும் இடம் என்பதைப் பால்குடம் எடுக்கும் பக்தர்கள் உணர வேண்டும்.  உணர்ந்து அதற்கேற்ப வாழ முயல வேண்டும்.


      பாலின் நிறமாகிய வெள்ளை என்பது தூய்மையின் அடையாளம். பால்குடம் எடுக்கும் பக்தர்கள் உடல் மட்டும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது கூடாது.  மனமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று கருத வேண்டும். விரதம் இருப்பதே மனத்தில் உறுதி மேற்கொண்டு மனத்தைத்  தூய்மைப் படுத்துவதற்காகவே, உடம்பினைச் சுருக்கி உள்ளொளி பெருக்குவதே விரதத்தின் உண்மை நோக்கம். உடம்பினைத் தண்ணீரால் தூய்மைப் படுத்துவது போல உள்ளத்தை உண்மை என்னும் பண்பால் தூய்மைப் படுத்த வேண்டும்.  புறத்தூய்மை நீரான் அமையும், அகத்தூய்மை வாய்மையால் காணப்படும்’’ என்பது வள்ளுவர் வாக்கு. எண்ணத்தாலும், சொல்லாலும் செயலாலும் உண்மையாக வாழ்வதே மனத் தூய்மையாகும்.  மனத்திலே மாசில்லாத வாழ்க்கையே அறவாழ்க்கை.  பொறாமை, ஆசை, கோபம், கொடுஞ் சொல் ஆகிய மாசுகளை நீக்கி மனத்தூய்மையுடன் உண்மையான அறவாழ்க்கை வாழ்வதே இறைவழிபாடு சிறக்க உதவும்.  இறைவனைச் சத்திய வடிவமாகக் கண்டவர் காந்தியடிகள்.  அறக் கடவுளாகக் கண்டவர் திருவள்ளுவர்.  இதனையும் பால்குடம் எடுக்கும் போது பக்தர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


      பால் சுவையானது சத்தானது.  அதேபோல் இறைவன் பக்தி செலுத்தச் செலுத்தச் சுவையாகவும் நமக்கு வலிமை தரும் சக்தியாகவும் இருப்பவன்.  இறைவனைப் பாலாகவே கண்டு சுவைத்தவர்கள் நம் அடியார்கள்.  அப்பாலும் காய்ச்சக் காய்ச்சப் பால் சுவை குன்றாது.  அதுபோலப் பக்தி மிக மிக இறைவன் அமுதாகச் சுவைப்பான். பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது பழமொழி, ஆனால் இறைவனோ பழகப் பழகத் தித்திக்கும் பண்புடையன். பால் குடித்தால் தான் சுவையூட்டும்.  இவைனாகிய பாலோ நினைக்குந்தோறும், காணும்தோறும், பேசுந்தோறும் சுவை ஊட்டக் கூடியது. பால் மிகுதியானால் தெவிட்டும்.  இறைவனோ தெவிட்டாத தெள்ளமுது.  இதனையும் பால்குடம் எடுக்கும் பக்தர்கள் எண்ணிப் பார்த்து இறைவழிபாட்டில் இன்பம் காணவேண்டும்.


      பாலுக்குள் நெய் மநைது நிற்கிறது.  பால் தயிராகிறது.  தயிரைக் கடைய வெண்ணெய் கிடைக்கிறது.  வெண்ணெய்யை உருக்க நெய் வருகிறது.  இவ்வாறுதான் இறைவன் நமக்குள்ளும் இந்த உலகத்திற்குள்ளும் மறைந்து கிடக்கிறான். இவனை வெளிக் கொணர்வது எப்படி என்பதைப் பின்வரும் திருநாவுக்கரசர் தேவாரம் விளக்கும்.


       விறகில் தீயினன்,பாலில் படுநெய் போல்


       மறைய நின்றுளன், மாமணிச் சோதியான்,


       உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்


       முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே’’ . 


பாலுக்குள் நெய் மறைந்திருப்பது போல நமக்குள் இறைவன் மறைந்து இருக்கிறான்.  அவனுக்கும் நமக்கும் உறவினை,தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு பக்தி என்னும் கயிற்றினால் கடைய முயன்றால் அவன் நம் முன்னர் வெளிப்படுவான் என்பதே இப்பாடலின் கருத்து,  எனவே இறைவனைக் காண உதவும் பக்தி உணர்வே  வேண்டும் என்பதையும் பால்குடம் நமக்கு நினைவுபடுத்தும்.


      பாலை ஏன் குடத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும்? குடம் என்பது தாய் தன் சேய்க்குப் பாலூட்டும் உறுப்பினை - மார்பகத்தைக் காட்டும் ஓர் அடையாளச் சின்னம். “செப்பன்ன முலையார்’’ என்று தாய்மார்பகத்துக்குச் செப்புக் குடத்தை உவமையாகச் சொல்வது தமிழ் மரபு.  தாயின் மார்பகத்திலிருந்து பால் சுரந்து குழந்தையைப் பாதுகாப்பது போல இறைவன் அருள் கரந்து உயிர்களாகிய குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்கிறான்.  இறைவன்பால் நினைந்து ஊட்டும் தாயினும்  சாலப் பரிவு உடையவன் என்று மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில் பேசுகிறார்.  தாய்மார்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். குழந்தை அழுதவுடன் பால் கொடுப்பவள் இடைநிலைத் தாய், அழுதாலும் பால் கொடுக்க மறுப்பவள் கடைநிலைத் தாய், குழந்தைக்குப் பசி எடுக்குமே என்று நினைந்து நேரத்துக்கேற்பப் பால் கொடுப்பவளே முதல்நிலை - உத்தமத்தாய். இந்த உத்தமத்தாய் போன்று இறைவன் உயிர்களுக்கு உரிய தேவைகளை நினைத்துத் தானே தாயாக இருந்து தந்து உதவுகிறான்.  இறைவன் தாயுமானவன் அல்லவா? தாய் அன்பின் சிகரம்.  இறைவனோ அன்பின் வடிவம்.


                  அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்


                   அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்


                   அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்


                   அன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே’’


என்னும் திருமூலரின் திருமந்திரம் இதனை உணர்த்தும்.  அன்பெனும் வலையில் அகப்படும் மலை’’ அல்லவா ஆண்டவன்.  எனவே, வழிபாட்டிற்கு அடிப்படை அன்பே என்பதையும் பால்குடம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.


      பாலைத் தருவது பசு.  வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் ‘‘ என்று ஆண்டாள் தம் திருப்பாவையில் பாடுகிறாள். எனவே பசுவைச் செல்வமாகத் தெய்வமாகப் போற்ற வேண்டும்.  கோமாதா நம் குவமாதா’’ என்னும் தொடரும் அதனை வலியுறுத்தும்.  பலவகையில் பயன்தரும் பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாக இந்து சமயத்தினர் கருதுகின்றனர்.  ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர், காவலன் காவான் எனின்’’ என்று பசு பயன் தருவதற்கும் அரசனின் ஆட்சிக்கும் தொடர்பு இருப்பதாக வள்ளுவர் கூறுகிறார்.  யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை’’ என்று திருமந்திரம் கூறும்.  பசுவைப் பேணிக் காப்பது பால்குடம் எடுப்பார் கடன் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். 


      கன்று ஈன்ற பசுவின் இரக்கம் - கசிவு போற்றத் தக்கது.  இத்தகைய கசிவு - இரக்க உணர்வே இறைவழிபாட்டிற்கு  இன்றியமைதது என்பதை உணர்ந்து மாணிக்க வாசகர்,


                  உற்றாரை யான் வேணடேன் ஊர் வேண்டேன்


                   கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்


                   குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன்குரைகழற்கே


                   கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. ‘‘


என்று இறைவனிடம் வேண்டுவதைக் காணலாம்.  கற்றாவின் மனம் என்பது கன்று ஈன்றதாய்ப் பசுவின் மனம் என்பதை உணர்த்தும்.  கசிவு இரக்கம் - கருணையே கடவுளைக் காட்டும் திறவுகோல். அருட்பெருஞ்சோதி , தனிப்பெருங்கருணை என்பது தானே வள்ளலார் காட்டிய தாரக மந்திரம்.  இதனையும் பால்குடம் நமக்கு நினைவு ஊட்டுகிறது.


      நம் உடம்பிலும் ஐந்து பசுக்கள் உள்ளன.  அவை விருப்பம் போல் அங்கும் இங்கும் எங்கும் சுற்றித் திரிகின்றன.  அவற்றைச் சரியாக மேய்க்கும் ஆளும் இல்லை.  அந்த ஐந்து பசுக்களையும் சரியாக மேய்க்கும் ஆளிடம் பார்த்து விட்டுவிட்டால்  அவற்றின் வெறி - அதாவது திரியும் போக்கு அடங்கும்.  பிறகு அவை நன்றாகப் பாலை நிறையச் சொரியும் என்கிறது பின்வரும் திருமந்திரப் பாடல்.


            பார்ப்பான் அகத்திலே பால்பசு ஐந்துண்டு


             மேய்ப்பாரும்  இன்றி வெறித்துத் திரிவன


             மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்


             பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே’’


நம் உடலில் உள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளுமே அந்த ஐந்து பசுக்கள்.  இவற்றை அவற்றின் விருப்பத்திற்கேற்ப விட்டு விட்டால் அவை வெறித்தனமாகப் போகக் கூடாத இடத்திற்கு எல்லாம் போகும்.  எனவே அறிவு என்னும் மேய்ப்பானைக் கொண்டு அந்த ஐம்பொறிகளாகிய பசுக்களை அடக்கி நல்வழியில் செலுத்தினால் அவை நமக்கு இன்பமே தரும் என்பதே மேற்கண்ட திருமந்திரத்தின் உட்பொருள். இதனையும் பால்குடம் எடுக்கும் பக்தர்கள் எண்ணிப் பார்த்து ஐம்பொறிகளை அடக்கி நல்வழியில் செலுத்த வேண்டும்.  அப்போது தான் குறள் கூறும் (உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து) வீடுபேறு முத்தி இன்பத்தையும் பெற முடியும்.


      நாயன்மார்களில் நாயகமாய் நின்றவர் திருஞானசம்பந்தப் பெருமான்.  அவர் சீர்காழியில் தோன்றியவர்.  ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.  அவர் மூன்று வயதினராக இருக்கும்போது ஒரு நாள் அவர் தந்தையாருடன் திருக்குளத்திற்குச் சென்றார்.  தந்தையார் திருக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார்.  அப்போது தந்தையாரைக் காணாது தவித்த குழந்தையாகிய ஞானசம்பந்தர் அம்மையே என்று அழுதார்.  இதனைக் கேட்ட உமையம்மையார் சிவபெருமானுடன் வந்து திருமுலைப்பால் ஞானசம்பந்தருக்கு ஊட்டினார். பிறகு தந்தையார் வந்து விசாரிக்கும் போது அந்த ஞானக் குழந்தை தோடுடைய செவியன்எனப் பாடத் தொடங்கியது.  பால் என்பது ஞானத்தின் அடையாளம்.  இதனைத் திருஞானசம்பந்தர் வரலாற்றைப் பாடும் சேக்கிழார்,


                  சிவனையே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்


                   பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கியஞானம்


                   உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்


                   தவமுதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார் அந்நிலையில் ‘‘


என்று கூறுகிறார்.  சிவஞானம் பிறவிநோய் தீர்க்கும் முத்தி ஞானம், கலைஞானம், மெய்ஞ்ஞானம் எல்லாம் இறைவன் தந்த பாலால் சம்பந்தர்க்குக் கிடைத்தன.  அவர் ஞானசம்பந்தர் ஆனார். அந்தப் பால் ஞானப்பால் எனப் பெயர் பெற்றது.  எனவே, பால் குடத்தின் வழி இறைவனுக்கு அபிஷேகம் செய்த பாலை வாங்கி உண்பதால் இத்தகைய ஞானங்களை நாமும் பெறமுடியும் என்பதையும் பால்குடம் நமக்கு நினைவுறுத்துகின்றது.


      இத்தகைய சிந்தனைகளோடு பால் குடம் எடுக்கும் பக்தர்கள் எடுத்தால் - இத்தகைய சிந்தனைகளைப் பால் குடம் காணும் பக்தர்கள் எண்ணிப் பார்த்தால் உண்மையான இறைவழிபாடு உலகில் தழைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இ


      காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக,


       வாய்மையே தூய்மையாக மனமலர் இலிங்கமாம், 


      நேயமே நெய்யும் பாலா நிறைய நீர்,       அமைய ஆட்டிப்


      பூசனை ஈசனார்க்குப் போற்றிவிக் காட்டினோமே’’ - திருநாவுக்கரசர்.


 


(சிங்கப்பூர் இந்து 16:2 ஏப்பிரல்-ஜூன்2005 பக் 22-24)


Thinnappan,SP.   Paalkutam cila chinthanaikaL ( Some Thoughts on


            Milk pots offered to Hindu Gods) in Dharma Muneeswaran


            Temple Maha Kumbabishegam Souvenir, Dharma Muneeswaran


            Temple, Singapore. Pp 105-108            


 


 


 


கட்டுரை எண் – 45


தென்கிழக்காசிய நாடுகளில் இராமாயணம்.


      இராமாயணமும் மகாபாரதமும் இந்தியப் பெருநாட்டின் இரு பெரும் இதிகாசங்களாக இலங்குகின்றன. இவற்றுள் இராமாயணம் செப்பருங் குணத்து இராமன் கதையை இயம்புவதாகும்.  மகன் தந்தை உறவிற்கு மாண்புமிக்க எடுத்துக் காட்டாகவும், அண்ணன் தமபி உறவிற்கு அரியதோர் எடுத்துக் காட்டாகவும் கணவன் மனைவி உறவிற்குக் கவின்மிகு இலக்கியமாகவும் , மன்னன் -மக்கள் தொடர்புக்கு இனியதோர் எடுத்துக் காட்டாகவும் விளங்கியவன் இராமன்.  ஓர் இல் ஒரு வில் ஒரு சொல்’’ இவற்றிற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவன் இராமன் என்பர் இசைப் பேரறிஞர் தியாகையர்.  இத்தகைய இராமனின் வரலாறு இந்திய நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் வழங்கும் மொழிகளில் இலக்கிய வடிவத்திலும் இடம் பெற்றதோடன்றித் தென்கிழக்கு ஆசிய நாடுகளாகிய பர்மா, இந்தோசீனா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா  ஆகிய நாடுகளிலும் பரவி இருப்பதை ஏ.எல்.பாஷம்  போன்ற வரலாற்றறிஞர்கள் எடுத்துரைத்துள்ளனர்.  இராமாயணக் கதைக் கூறுகள் தென்கிழக்காசிய நாடுகளில் இடம் பெற்றுள்ள இயல்பினை இக்கட்டுரையில் சருக்கமாகக் காண்போம்.


      தென்கிழக்காசியாவில் இந்திய நாட்டினை ஒட்டி இருக்கும் நாடு பர்மா.  இங்குள்ள மக்கள் பௌத்த சமயத்தைச் சார்ந்தவர்கள்.  எனினும் இவர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கதைகளில் இராமாயணக் கதையும் ஒன்றாகும்.  இதற்குக் காரணம் தாய்லாந்து நாட்டின் பண்பாட்டுத் தாக்கம் என்பர் அறிஞர்.  மாங்ஜா என்பவர் சையாமிய மொழியிலுள்ள இராமாயண நாடகத்தை அதிலுள்ள இசைமிகு இனிய கீதங்களுடன் பர்மிய மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.  மேலும் மாங்கோ (MANGOTE) என்பார் 1751ல் இராமனைப் பற்றிப் பெருங்காப்பியம் ஒன்றைப் பர்மிய மொழியில் இயற்றியுள்ளார்.  இராமன் ஏழை எளிய மக்களிடத்தில் பேரன்பு கொண்ட பெருங்கருணையாளனாக இக்காப்பியத்தில் சித்தரிக்கப் பட்டுள்ளான்.


      ஆசியாவின் தென்கிழக்குக் கோடியிலுள்ள இந்தோசீனாவின் வியட்நாம், கம்போடியா எனப்படும் கம்பூச்சியா ஆகிய நாடுகளிலும் இராமாயணக் கதையின் செல்வாக்கு பரவியுள்ளது.  சம்பா எனப்படும் தென் வியட்நாமிலுள்ள கல்வெட்டு ஒன்று இராமன் (திருமால் ) தன்னுடைய ஆற்றலை நான்கு வடிவங்களாகத் தோன்றுமாறு பிரித்துக் கொண்டான் என்று கூறுகிறது.  மேலும் இப்பகுதியிலுள்ள மன்னர்கள் தங்களைத் திருமாலுடன் ஒப்பிட்டுக் கொண்டனர்.  கம்பூச்சியாவில் உள்ள கெமர் அரசர்களின் குருவான சோமவர்மர் என்பவர் திரிபுவன ஈசவரருக்கும் சூரியனுக்கும் கோவில் கட்டினார்.  அவர் அக்கோயிலின் விழாக் காலங்களில் இராமாயணம், பாரதம் ஆகியவற்றை விரிவுரையாற்றுவதற்குரிய அறக் கட்டளைகளை அமைத்துத் தம்மிடமிருந்த இராமாயண ஏடுகளை அக்கோயிலுக்குக் கொடுத்துதவியதாகக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.  ஆங்கோர்தோம் என்னுமிடத்தில் ஏழாம் ஜெயவர்மன் என்னும் அரசன் ஒரு கோயில் கட்டினான்.  அதற்குப் பயோன் என்பது பெயராகும்.  அந்தக் கோயிலின் உள்சுவர்களில் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.  இச்சிற்பங்களில் இராமன் மாயமானை விரட்டிக் கொண்டு போதல். வாலி சுக்ரீவன் போர், சீதை தீயினை வளர்த்து அதனுள் இறங்குதல் முதலிய இராமாயணக் காட்சிகள் இடம் பெற்றுளளன.  பண்டேய் ஸ்ரீஎன்னுமிடத்தில் கி.பி.பத்தாம் நூற்றாண்டில் ஐந்தாம் ஜெயவர்மன் எழுப்பிய கலைக் கோயிலுள்ள பக்கச் சுவர்களில் இராம கதையிலுள்ள பல்வேறு காட்சிகள் வனப்புடன் விளக்கப் பட்டுள்ளன.


      சயாம் எனப்படும் தாய்லாந்து நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் லாவாஎன்னும் இனப்பிரிவைச் சார்ந்தவர்கள்.  இவர்கள் தென் சீனாவிலிருந்து கி.பி.. 8ஆம் நூற்றாண்டில் குடியேறிப் பேங்காக்கிற்கு வடக்கே 85 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அயூத்தியாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்கள்.  கி.பி. 1763 இல் பர்மியர் படையெடுப்பால் அயூத்தியா தாக்குண்டது.  இன்று தாய்லாந்தினை ஆட்சி செலுத்தும் மன்னர்கள் சக்ரிபரம்பரையைச் சார்ந்தவர்கள். இந்தப் பரம்பரையின் முதல் அரசராகிய சக்ரிதன் பெயருடன் இராமாஎன்னும் பெயரையும் ஒரு மதிப்பு வாய்ந்த பட்டப் பெயராகச் சேர்த்துக் கொண்டார்.  அந்த முறை இன்றும் தாய்லாந்து மன்னர்களிடம் பின்பற்றப் பட்டு வருகிறது.  அயூத்தி, இராமா என்னும் பெயர்கள் இராமாயணத்துடன் தொடர்புடையன அல்லவா?


      தாய்லாந்து நாட்டின் தேசீயச் சமயம் பௌத்தம், மொழி தாய் மொழி. தாய்மொழியில் சிறப்புற்று விளங்கும் இலக்கியங்களுள் தலைசிறந்தது இராமகீயான்என்னும் பெயரில் அமைந்த காப்பியமாகும்.  இராமனின் கீர்த்தி என்னும் பெயரே தாய்மொழியில்  இராமகீயான் என்று வழங்குகிறது.  முதலாம் இராமா என்னும் அரசனால் இயற்றப் பட்ட இக்காப்பியம் ஏழு காணடங்களைக் கொண்ட ஒன்றாகும். கவிநயமும் கற்பனைச் சிறப்பும் உடையது.  இவர் வழி வந்த அரசர்களும் இராமாயணத்தைச் செய்யுளில் காப்பியமாகவும், இசைப் பாடலாகவம், நாடகமாகவும், வசனமாகவும் படைத்துள்ளனர். ஒவ்வொருவரும் புதிய புதிய நிகழ்ச்சிகளைத் தத்தம் காலத்திற்கேற்பப் புகுத்தியுள்ளனர். தாய்லாந்தில் பரவியுள்ள இராம காதையில் சீதை - இராமன் காதல் நோக்கு, கல்லான அகலிகை, இரணியன் வதை போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.  இவை தமிழிலுள்ள கம்ப இராமாயணத்தின் செல்வாக்கால் ஏற்பட்டவை என்று ஆய்வாளர்கள் கூறுவர்.  மேலும் இராவணனுடைய மகள் சீதை என்னும் கதைக் குறிப்பும், இலக்குவனின் மகளே இந்திரசித்துவின் மனைவி என்னும் கிளைக் கதைகளும்  தாய்மொழியில் இடம் பெற்றுள்ளன.இவை தெலுங்கு மொழி இராமாயணங்களின் செல்வாக்கால் ஏற்பட்டவை.  பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த லோபபுரிக் கோயில் சுவர்களில் இராமாயணச் சிற்பங்கள் மேல்தட்டிலும், கீழ்த்தட்டிலும் செதுக்கப் பட்டுள்ளன.  அவற்றுள் அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டுவந்து நாகபாசத்ததால் கட்டுண்ட இலக்குவன் முதலியோரை எழுப்பும் காட்சி - குரங்குகள் சேது அணையைக் கட்டும் காட்சி, சூர்ப்பனகையின் மூக்கு அரியப்படும் காட்சி ஆகியவை ஒப்பற்று விளங்குகின்றன. அண்மைக் காலத்தில் கட்டப்பட்ட சலவைக் கல்லாலான அரண்மனைச் சுவர்களிலும் இராமாயணச் சிற்பங்கள் உள்ளன.  அசோகவனத்தில் சீதை, அனுமன் சீதையைச் சந்தித்தல் போன்ற காட்சிகள் கவர்ச்சி மிக்கவை. லோபபுரிக்கு அருகிலுள்ள பௌத்தமடம் ஒன்றின்  சுவர்கள் அனைத்திலும் இராமாயணக் கதை நிகழ்ச்சிகள் தொடர் ஓவியங்களாகத் தீட்டப் பட்டுள்ளன.  இவை 14,15 ஆம் நூற்றாண்டுகளில் தீட்டப்பட்டவை.  புகழ் வாய்ந்த மரகதப் புத்தர்கோயில் சுவர்களிலும் இராமாயணக்கதை நிகழ்ச்சி ஓவியங்களாகத் தீட்டப் பட்டுள்ளன.  நடன, நாடக, கூத்துக் கலைகளின் கதைப் பொருள் தாய்லாந்தில் இராமாயணமாகவே இருக்கிறது.  தாய்லாந்தின் தேசீய நடனக் கலையாகப் புகழ்பெற்ற கோன் எனும் நாட்டிய நாடகம் இராமாயணக் கதை நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டுள்ளது.  முகமூடி நாடகத்திலும் வாயாங் எனும் தோற்பாவைக் கூத்திலும் இராமகாதை இடம் பெற்றிருக்கிறது.


      தென்கிழக்காசிய நாடுகளில் இந்தியர்கள் மிகுதியாக வாழ்கின்ற நாடு மலேசியா.  மலேசியாவின் தேசிய சமயம் இஸ்லாம்.  தேசிய மொழி மலாய்.  மலாய் மொழியில் வழங்கும் இராமாயணக் கதைக் கூறுகளை இலக்கியம், வாயாங் எனும் பொம்மலாட்டம் தோற்பாவைக் கூத்துகளுக்குப் பயன்படுத்தும் பாடல்கள், நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் என மூவகைப் படுத்திக் காணலாம்.  மலாய் மொழியில் உள்ள மிகப் பழமையான இராமாயண நூலுக்கு ஹிகாயட் செரி ராமாஎன்பது பெயர். ‘இதிகாச ஸ்ரீராமாயணம்என இதனைத் தமிழ்ப் படுத்தலாம். இதனைப் பதிப்பித்த அறிஞர் தமிழ்நாட்டுப் பண்டை இராமாயணக் கதையின் தழுவலாக இது இருக்கிறது என்று கூறுகிறார்.  இசுலாமிய சமயச் செல்வாக்கும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. பிற்காலக் கிளைக்கதைகளும் உள்ளன.  ஹிக்கியாட் மகாபௌமா ஹிக்கியாட் ஹங்டுவா, சிஜாக் மலேயா எனும் பெயர்களிலும் இராமாயணக் கதை வழங்குகிறது.  ஹிக்கியாட்டில் இராமன், இராவணன், வீடணன், வாலி போன்ற பெயர்கள் சிற்சில மாற்றங்களுடன் காணப்படுகின்றன. இந்த இராமாயணத்தில் கைகேயி இராமனின் உடன் பிறந்தவளாகவும், விபீடணனின் மனைவியாகவும் கருதப் படுகிறாள்.  மேலும் சீதாதேவி, இராவணனின் உருவப் படத்தை வைத்திருந்ததாகவும், அதனால் இராமன் அவளைக் காட்டுக்கு அனுப்பி விட்டதாகவம், கைகேயின் பொருட்டே அப்படத்தை வரைந்ததாகவும் கூறப்படுகிறது.  13 ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு முடிய இயற்றப் பட்ட வாய்மொழி இராமாயணக் கதைகள் யாவும் இசுலாமிய சமயக் கண்ணோட்டத்தில் விளக்கப் பட்டுள்ளன. வாய்மொழிப் பாடல்கள் பிரசங்கம் செய்பவராலும் பொம்மலாட்டக்காரர்களாலும் மாற்றம் பல பெற்றுள்ளன.  வாய்மொழிக் கதைகள் இராமனை வெறும் தேவைகளின் தலைவனாகவே சித்தரிக்கின்றன.  இராவணன் ஏழு அல்லது பன்னிரண்டு தலைகள் உடையவனாகச் சித்தரிக்கப் பட்டுள்ளான். மயில் இராவணன் கதை மலேசிய நாட்டில் பெருஞ் செல்வாக்குடன் விளங்கிற்று.  மலாக்காவிலுள்ள பழைமையான பொய்யாத விநாயகர் கோயிpலில் இராமர் சிலை உள்ளது. பத்துமலைக் கலைக் கூடத்தில் இராமபிரான் பட்டாபிஷேகக் காட்சி உள்ளது.  மலாயாப் பல்கலைக் கழக இந்தியத் துறைப் பேராசிரியர் எஸ்சிங்காரவேலு அவர்கள் தென் கிழக்காசிய நாடுகளிலுள்ள இராமாயணக்கதை வடிவங்கள் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளார்.


      தென் கிழக்காசிய நாடுகளில் தமிழுக்கு அதிகாரத்துவ மொழி நிலை அளித்துள்ள நாடு சிங்கப்பூர்.  சிங்கப்பூரில் சிராங்கூன் ரோட்டிலுள்ள வடபத்திர காளியம்மன் கோயிலில் இராமருக்கென்று தனிக் கோயில் உள்ளது.  இராமர் இலக்குவர் சீதை அனுமனுடன் உள்ள சிலைகள் உள்ளன. கருடன், அனுமனின் விசுவரூப சுதைச் சிற்பங்களும் உள்ளன.  இராமாயணச் சுதைச் சிற்பங்களும் இடம் பெற்றுளளன.  வீரமா காளியம்மன் கோயிலிலும் இராமர் கோயில் உள்ளது.  சீனிவாசப் பெருமான் கோயிலில் அனுமார் கோயில் உள்ளது.  மேலும் சிங்கப்பூரில் உயர்நிலைப் பள்ளிக்குரிய தமிழ்ப் பாட நூல்களில் இராமாயணக் கதைகள், பாடல்கள் பாடமாக இடம் பெற்றுள்ளன.  உயர்நிலைப் பள்ளிக்குரிய இந்து சமயக் கல்வியில் இராமாயணம் ஒரு முக்கியக் கதையாக இடம் பெற்றுள்ளது.  இதற்கு உறுதுணையாகச் சிங்கப்பூர்ப் பாடத் திட்ட மேம்பாட்டுக் கழகத்தினர் 20 நிமிடத்தில் பார்க்கக் கூடிய இராமாயணக் கதையைக் கொண்ட ஒளிநாடா ஒன்றும் வைத்துள்ளார்கள். சிங்கப்பூர்த் தொலைக்காட்சி, வானொலிகளிலும் இராமாயணக் கதை நிகழ்ச்சிகள் ஒளி , ஒலி நிலையில்  பரப்பப் பட்டுள்ளன.


 
.... தொடரும் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக