வியாழன், 1 மே, 2014

அணிந்துரை - 6


விஜயபாரதி

நிழலின் மடி

19-1-2005

விஜயபாரதியின் கவிதைத் தொகுப்பான நிழலின் மடி என்னும் நூலைப் படித்தேன். கவிதைகள் பல படித் தேன் எனக் கண்டுவந்தேன். விஜய பாரதி! பேராற்றல் மிக்க கவிஞர்! விஜயன், பாரதி என்ற இரண்டு சொற்களின் இணைப்புப் பெயர்! வில்லுக்கு விஜயன், சொல்லுக்குப் பாரதி என்பார்கள். வில்லையும் சொல்லையும் இணைத்துப் பார்த்த முதல் கவிஞர் வள்ளுவர் அல்லவா? “வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகைஎன்பது அவரின் குறள். கவிச் சக்கரவர்த்தி கம்பனும் இராமனின் அம்பினைச் சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்என்று சுட்டுகிறான். விஜய பாரதியும் இக்கவிதை நூலில் ஒரு சொல்லேருழவராக நின்று பல நல்ல கருத்துக்களைப் படிப்பவர் நெஞ்சில் விதைக்கின்றார்.வேகத்தால் இவரது கவிதைகள் தீயோர்க்குச் சுடுசரமாகவும் தூயோர்க்குத் தொடுகரமாகவும் விளங்குகின்றன. விஜயம் என்பது சிறப்பான வெற்றியையும், பாரதி என்பது கலைமகளையும் குறிக்கும். இதற்கேற்ப இவரது கவிதைகள் பலவேறு கலை வடிவங்களையும் கொண்டு வெற்றி நடைபோடுவதைப் படிப்போர் உணர்வர்.மேலும் இவரது கவிதைகளை இன்னொரு வகையில் சொல்லப் போனால் பாரதி விஜயம் என்றுகூடக் கூறலாம். பொதுவாக இவரது கவிதைகளில் பாரதியின் புதுமை நோக்கும் சமுகப்பார்வையும் ஆங்காங்கே தென்படக் காணலாம்.


நிழல்மடி நீயடிஎன்னும் தலைப்பில் ஒரு கவிதை இந்நூலில்இடம்பெற்றுள்ளது.இதன் முதல் தொடரே இந்நூலுக்கும் பெயராக அமைந்துள்ளது. நீ இருக்கும் இடம் பூமணக்கும்- உன்,நிழல் மடியே என் உடல் அணைக்கும்என்று தன் வீட்டுப் பகுதியில் இருக்கும் நிழல் தரும் மரத்தை நோக்கிக் கவிஞர் பாடுகிறார். இரவு என்னும் மற்றொரு தலைப்புக் கவிதையிலும் இரவை ஒளிப்பகல் தந்த ஊமைக் காயங்களுக்கு நித்திரை ஒத்தடம் தரும் நேசமிகு தாய்மடிஎன்று அழைக்கிறார். மேலும் வறுமையின் வெம்மைக்கும் வாழ்வுக்குமிடையே நிழலாய் நீண்டு, நேச விருட்சமாய் இருந்து தங்களுக்குச் சாய மடி தந்த- தரும் தாய்க்கு இந்நூலைப் படைக்கிறார். அதனால் நிழல் மடி என்பது தாயின் மடியை நினைவுறுத்தும் தொடராகவும் உள்ளது. பொதுவாகக் கவிதைகளே கவிஞரின் ஒளி அனுபவத்தால் கிடைக்கும் நிழல்கள்தானே. இவை படிப்பவர்க்குச் சுகம் தரும் தாய் மடிகள் அல்லவா? அந்த வகையிலும் விஜய பாரதியின் கவிதைத் தொகுப்பை நிழல் மடி என அழைப்பது பொருத்தம் தானே?


இந்நூலில் முதலில் தமிழ் மொழியை வாழ்த்துகிறார். அடுத்துச் சிங்கப்பூரில் தமிழைச் செழிக்க வைத்த தமிழவேள் கோ.சாரங்கபாணியை வரலாற்று நாயகன் எனப் பாராட்டிப் போற்றுகிறார். பிறகு தமிழ் வாழும் நாடான சிங்கப்பூரின் சிறப்பைப் பற்றிப் பேசுகிறார். சிங்கப்பூர் மற்ற நாடுகள் கற்றுக் கொள்வதற்கேற்ற ஞான பூமியாக- வள்ளுவரின் முப்பாலும் வாழும் தீவாக-குறிக்கோளால் வளர்கின்ற தீவாக- இருப்பதைக் கவிஞர் சுட்டிக் காட்டுகிறார். வெளி நாட்டிலிருந்து வந்து சிங்கையில் வேலை செய்யும் தொழிலாளர்கள்

ஞாயிறன்று தேக்கா பகுதியில் கூடுவதைப் பற்றியும் கவிதை உள்ளது


தேக்காவின் தெருக்களுக்குச்

சென்றுவரும்போதெல்லாம்

செல்களுக்குப் புதுரத்தம் ஊறும்! என்,

சிந்தனையின் கவலைகளும் ஆறும்


என்று அவர்கள் உணர்வதாகக் கூறுவது நன்று. ஏக்கம் என்னும் தலைப்பில் வேலை செய்யும் பெற்றோரின் அன்புக்கு ஏங்கும் குழந்தைகளின் ஏக்கத்தையும் படம்பிடிக்கிறார். கல் தமிழா கல்என்னும் தலைப்புக் கவிதை எல்லாரும் கட்டாயம் படிக்கவேண்டிய ஒன்று.


இயற்கை பற்றிய பிரிவில் மின்னல், கடல், மரம். நிலம், வானம்..ஆற்று மண் முதலிய தலைப்புப் பற்றிய கவிதைகளில் கற்பனை மேலோங்கி இருக்கிறது. திறந்து மூடுகிற வான மாளிகையின் ஜன்னல்தான் மின்னல் என்பதும், “‘முதலைஇழந்தாலும் மூழ்கிப் போகாத இயற்கை வங்கிகடல் என்பதும், “கவிஞர்களின் கற்பனைக்குத் தீனி தரும் அகண்ட அமுதசுரபிவானம் என்பதும் சில எடுத்துக் காட்டுகள்.எட்டுக் கால் பூச்சியின் கூட்டினை எச்சில் எல்லோரா என்பது மிகச்சிறப்பு.எட்டுக்கால், அல்ல அல்ல, எட்டுக் கைப்பூச்சியே உன். கூடுகள் ஒவ்வொன்றுமே, எச்சில் எல்லோராக்கள் தானேஎன்பது கவிதை.


காதல் பற்றிப் பாடாத கவிஞர் உண்டா? விஜய பாரதியும் இளமைக் காதல், முதுமைக் காதல் பற்றிப் பாடிய பின்னர் இறுதியில் மணமுறிவு என்னும் தலைப்பில் மணமுறிவு இல்லறத்தின் சிக்கலுக்கு மற்றுமொருசிக்கலன்றித் தீர்ப்பே அல்லஎன்று கூறி குணம், பண்பு, அறமென்னும் நெறிகள் காத்துக் குடும்பமெனும் ஒளிவிளக்கைச் சுடரச்செய்கின்றார்.


திருவிழாக்கள் என்னும் பிரிவில் பொங்கல், தீபாவளி, அன்பர்தினம். அன்னையர் தினம், மே தினம் பற்றிய பாடல்கள் உள்ளன. இவற்றைக் கவிஞர் பார்க்கும் பார்வையே தனிப்பார்வை. காரணம் இவ்விழாக்களை எல்லாம் அவர் மனித நேயக் கண்ணோட்டத்தில் நோக்குகிறார். உலக நாடெங்கும் இன்பம் பொங்கும் நாள் வராதோஎன்று பொங்கல் நாளைக் கண்டு ஏங்குகிறார்.அகிலமெங்கும் பெருகிவிட்ட அசுரர்களைக் காணும்போது கண்ணன் வரவேண்டிய காலம் இதுஎன்று தீபாவளியைப் பாடுகிறார். ஓரடி நூற்பா போல, உடல் இளைத்த தொழிலாளி, ஈரடி குறட்பா சொல்லும், மூன்றாம் பால் சுவைக்கும் பொன்னாள்என்று மேதினத்தைக் குறிக்கிறார். தனமாய் மகனையே தாய் கருதல் போலவே- பெற்ற தாயை மகன் காக்கும்நாள் அன்னையர் நாள்என்கிறார். அன்பர் தினத்தில் காதலை


உடல் விட்டு உயிர்போதல் சாதல்

உயிருக்குள் உயிர் பாய்தல் காதல்

கடல்தாண்டி வந்தாலும் வாழும்

கரைகளையும் மீறி அது ஆளும்

கண்ணுக்குள் கனவுப்பூ பூக்கும்

கவிஞனென எனைக்கூட ஆக்கும்

விண்ணுக்குள் சஞ்சரிக்க வைக்கும்


என்று பாடுவது சிறப்பு.அதே நேரத்தில் ஓவர் டைம்வேலை பார்க்கத் தூண்டும் கணவன் மனைவி அன்பர் தினத்தையும் இவர் காட்டத் தவறவில்லை.


மண்வாசனை என்னும் பிரிவில் தாம் பிறந்த தமிழ் நாட்டுச் செய்திகள் சிலவற்றைப் பாடுகிறார் விஜய பாரதி. கடற்கரைச் சாலையில் கண்ணகி கேட்பது நீதியல்ல, நிற்க ஒரு இடம்இது கண்ணகி சிலை சென்னைக் கடற்கரைச் சாலையில் எடுக்கப்பட்டது கண்ட கவிஞர் குமுறல். தரமான பொருளை மட்டுமே தரச்சொல்லி ஓட்டைகளோடு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமே சல்லடைநல்ல கற்பனை. நாற்காலிக்கும் பசுவுக்கும் சிலேடைக் கவிதையும் இங்குள்ளது.


அடுத்து மாறி வரும்சில பண்புகள் பற்றிய பிரிவுள்ளது.” “நான்” “நாம்ஆகும் ஞான ஆசையில் உரித்தெரியப்பட்டன ஒப்பனைப்பூக்கள்தான் துறவு என்பது நல்ல வரையறை. இவ்வாறே மொழிபெயர்ப்பு தேவையில்லாத முதல் உலகப் பொதுமொழிபுன்னகை என்பதும் ஆகும். சமயத்துக் கேற்பத் தரித்துக் கொள்ளவும் உதவாதபோது உரித்துத் தள்ளவும் யதார்த்த வாழ்க்கையில் தான் எத்தனை வேடங்கள்என்று வியந்து பாடுவதும் நன்று. வேர்கள் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளத(லை)ழை விரிகோலத்தோடு, கிளைக்கரம் நீட்டி, விழுதுத்தடியூன்றிப் பருத்த உடலைப் பரப்பி, ஆண்மையோடு நிற்கும் ஆலவிருட்சம், பூமிப் பெட்டகத்தில் பொத்திவைத்துப் பாதுகாக்கும் தன் வேர்களைஇது நல்ல உருவகத்துக்கோர் எடுத்துக்காட்டு. சுயம்ஆணாதிக்கக்

கொடுமையை அறிவிக்கிறது. கைம்மாறு கருதாது இயற்கை தரும் நன்கொடைகளைத் துய்க்கும் மனிதன் தான் மட்டும் நன்கொடை தரும்போது எதிர்நோக்கும் தன்னல மனப்பான்மையைத் தொட்டுக் காட்டுகிறது நன்கொடை என்னும் கவிதை. மௌனத்தின் சுகத்தையும் கவிஞர் நன்கு வர்ணித்துள்ளார்.



எனக்கு விஜயபாரதியை அறிமுகப்படுத்திய பகுதி படவசனம் ஒன்று..

பாவகை பலஎன்பதுதான். இளம் விதவையின் அவலம் என்னும் ஒரே கருப்பொருளைத் திரைப்பட வசனம், நாவல், புதுக்கவிதை, மரபுக்கவிதையில் கலிவிருத்தம், எண்சீர்விருத்தம். குறள்வெண்பா, சிந்தியல்வெண்பா, நேரிசைவெண்பா, இன்னிசை வெண்பா, அகவற்பா, பட்டுக்கோட்டையாரின் நாட்டுப்புறப்பாடல் என்னும் பலவகை வடிவங்களில் எழுதியி¢ருக்கும் பாங்கு பாராட்டத்தக்கது. இதனைஉள்ளடக்கம் ஒன்று உருவம் பலஎன்னும் கவிதைப் பாடத்தில் என் தமிழ் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறி விளக்கினேன்.

அவர்களும் பாராட்டினார்கள்.


இருபொருளுணர்த்தும் ஒருசொல்லாகிய மாலை பற்றிய கவிதை

அருமையாக அமைந்துள்ளது. பூக்களின் தொகுப்பான மாலை..

பொழுதின் பகுதியான மாலை.. இரண்டின் வாழ்வுமே ஈசல் வாழ்க்கைதான். அன்றன்றே மரணம்! என்றாலும் மறுநாள் இன்னொரு ஜனனம். இருவரின் உதயத்தையும் உறுதிப்படுத்துவது கதிரவனின் பொற்கிரணங்கள் தான்.மாலைப் பொழுதும் மாலையின் பூக்களும் தென்றல் காமுகன் தீண்டித்தீண்டி மகிழும் இரட்டை மனைவியர்.என்று இரு பொருளுக்கிடையிலுள்ள ஒற்றுமைகளைக் கூறிப் பின் வேற்றுமைகளையும் விளக்குவது சிந்தனைக்கு விருந்து.சொல்லை

மௌன தேசத்தின் மரபு மரபு மீறல்என்பதும் ஐந்திலக்கணங்களிலும் அதிகாரம் செய்யும் அதிகாரம்என்பதும் அழகுக்கு அழகு செய்வன. இவ்வாறே சொல்லால் உருவாகும் நூலை ஞான மூலதனத்தால் நடத்தப்படுகிற வரிகள்நிறைந்த வணிகம்என்கிறார் கவிஞர்.


நகை என்ற சொல்லின் பல்வேறு பதங்களுமே ஆண்களின் பணப்பைக்கு அபாய அறிவிப்பு தான் என முடியும் நகைக் கவிதையும் கவிஞரின் சொற்பொருளாட்சிக்கு எடுத்துக்காட்டு ஆகும். நாக்கு பற்றிய கவிதை தமிழுக்கு ஆக்கம் தரும் ஒன்றெனலாம்.என்னால் முடியாதுஎன்னும் கவிதை கவிஞரின் மொழி இன சமுகப் பற்றினைக் காட்டும் சான்றாகவுள்ளது. இறுதியில் பகலவன் தமிழர்க்குத் தரும் பாடம் ஒற்றுமையே என்னும் கவிஞரின் கூற்றை உணர்ந்து செயல்படுவோமாக.


சிதறிக் கிடந்த கவிதைகளைச் சேர்த்துக் கட்டிய மாலை இது. அவ்வப்போது எழுதி வெளியிட்ட கவிதைகளைத் தொகுக்கும் முயற்சியில் இன்னும் செம்மை சேர்க்க இடமுண்டு என்பது என் கருத்து. இந்நூலில் மரபுக் கவிதை, புதுக் கவிதை, துளிக் கவிதை(ஹைக்கூ) என மூன்று வகை வடிவக் கவிதைகளும் உள்ளன. மரபுக் கவிதைகள் மடிசார்ப் புடவைகள், அச்சு மாறாமல் கட்ட வேண்டும். புதுக் கவிதைகள் நவீன ஆடைகள், விருப்பம்போல் இட்டுக் கொள்ளலாம். துளிக் கவிதைகள் நீச்சலுடைகள், இயன்ற வரைக்கும் வெட்டுதல் வேண்டும்.அனைத்தும் அழகுதான் அனைத்துக்குள்ளும் பொம்மைகள் இன்றி உயிர்கள் இருப்பின்என்று கவிஞர் புகாரி கூறுவதற்கேற்ப விஜயபாரதியின் கவிதைகள் எந்த வடிவில் இருந்தாலும் உயிர் இருப்பதால் எழிலாக அமைந்துள்ளன. இத்தகைய கவிதைத் தொகுப்பினைத் தந்த கவிஞர் விஜயபாரதிக்கு என் பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலை வாங்கிப் படித்து இவருக்கு ஊக்கமும் ஆக்கமும் ஊட்டத் தமிழ் கூறும் நல்லுலகை வேண்டுகிறேன்.

யோகி சுந்தரம்

தெய்வீக யோகக்கலை



தெய்வீக யோகக்கலை என்னும் பெயரில் திருவாளர் யோகி சுந்தரம் எழுதிய நூலைப் படித்துப் பார்த்தேன்.பெருமகிழ்ச்சி அடைந்தேன். யோகி சுந்தரம் அவர்களை இருபது ஆண்டுகளாக நான் நன்கு அறிவேன். குடும்ப நண்பராகப் பழகியவர். சிங்கப்பூர் அரசாங்கப் பொதுப் பணித்துறையில் பணியாற்றி நீண்டநாள் சேவை விருதும் நற்சான்றிதழும் பெற்றவர். கேடில் விழுச் செல்வம் கல்விஎன்பதை நன்குணர்ந்து தம் மக்களைப் படிக்கவைத்துப் பல துறைகளிலும் பட்டதாரிகளாக்கி அவையத்து முந்தியிருக்கச் செய்தவர். நல்ல தமிழ்ப் பற்றாளர். மங்கையர்க்கரசி,

மாணிக்கவாசகம், வடிவழகன் என்று நல்ல தமிழ்ப் பெயர்களைப் புதல்வருக்குச் சூட்டியவர். மூத்த மகன் ஜெகதீசனின் திருமணத்தில் திருக்குறளும் திருமுறையும் இடம்பெறச் செய்தவர்.ஹோமியோபதி மருத்துவம் பயின்று பலருக்கு உடல்நோயைப் போக்கியவர். மோட்டார் மெக்கானிசம், நிழற்படக்கலை ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றவர்.


பலதுறை வல்லவராகிய யோகி சுந்தரம் இளம் வயது முதல் தாம் விரும்பிக் கற்ற கலை யோகாசனக் கலையாகும். இவர் இக்கலையில் பல்லாண்டுப் பயிற்சியும் பட்டறிவும் பெற்றவர். இதன் வாயிலாகத் தமக்கு வந்த நோய்களைத் தடுத்துக் கொண்டவர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்னும் திருமூலர் வாக்கிற்கேற்ப யோகக் கலையைச் சிங்கப்பூரில் பல தமிழ் அமைப்புகளின் வாயிலாகப் பலருக்குப்

பயிற்றுவிக்கும் பணியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டுள்ளார்.

இவரிடம் யோகம் பயின்று நோய் நீங்கி உடல்நலம் பெற்ற நண்பர்கள் பலரை நான் அறிவேன். இவரது பயிற்றுவிப்புப் பணி இந்தியா, இலங்கை எல்லை வரை சென்ற ஒன்றாகும்.சிங்கை வானொலி, தொலைக் காட்சி, தமிழ் முரசு ஆகிய ஊடகங்கள் வாயிலாகவும் யோகக்கலையின் பயன்களைப் பலரும் அறியச் செய்தவர் யோகி சுந்தரம். பயிற்றுநர் பலரையும் உருவாக்கிய பண்பாளர் இவர். யோகாசனப் பேராசான் (யோகா மாஸ்டர்) எனப் போற்றப் பெறும் இவரது நீண்ட கால வேட்கையின் விளைவே தெய்வீக யோகக்கலை என்னும்

இந்நூலாகும்.


இந்நூல் யோகாசனம் என்றால் என்ன என்பதில் தொடங்கி அது அனைத்து நோய்களையும் அகற்றும் அருமருந்து என்பதை விளக்கி

யோகாசனம் செய்வோர் அறியவேண்டிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது, பத்மாசனம் தொடங்கிப் பதினாறுக்கு மேற்பட்ட ஆசனங்களைப் படங்களுடன் விளக்க முற்படுகிறது. பெயர் விளக்கம், செய்யும் முறை, கால அளவு, பயன்கள் ஆகியவை எல்லார்க்கும் விளங்கும்படி ஒவ்வோர் ஆசனத்தையும் தெளிவாகவும் எளிமையாகவும்

கூறியிருப்பது பாராட்டுக்குரியது. இறுதியில் நலந்தரும் யோகம் என்னும் தலைப்பில் முடிவுரை அமைந்துள்ளது. இடையில் யோகக்கலையின்

தோற்றம், வளர்ச்சி பற்றிய செய்திகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


பொதுவாக இந்நூல் யோகம் பற்றி அறிய விழைவார்க்கும், பயில

விரும்புவார்க்கும் வழிகாட்டி உதவும் அரியதோர் கையேடு எனலாம்,

எனவே இதனை எழுதி வெளியிட்ட யோகி சுந்தரம் அவர்களுக்கு என் பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலை வாங்கிப் படித்துப் பயன்பெறுமாறு தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் பெருமக்களை வேண்டுகிறேன்.



கவிஞர் காசாங்காடு அமிர்தலிங்கம்

                 உரக்கச் சொல்வேன்


கவிஞர் காசாங்காடு அமிர்தலிங்கம் அவர்கள் இயற்றிய கவிதைத் தொகுப்பு நூலைக் கண்டேன். அகமகிழ்ச்சி மிகக் கொண்டேஉரக்கச் சொல்வேன்என்னும் தலைப்பில் கவிஞர் காசாங்காடு அமிர்தலிங்கம் ன். உரக்க என்னும் சொல்லுக்கு இறுக, வலுவாக, கொந்தளிப்பு, மிகக் கோபமாக எனப் பல பொருள்களை அகராதி சுட்டினாலும், இன்று உரக்க என்பது வாய்விட்டு குரல் எடுப்பாக மற்றவர்களுக்கு கேட்கும்படி படித்தலையோ பேசுதலையோதான் குறிக்கிறது. இவ்வாறு மௌனமாக அன்றி உரக்கப் படிப்பதற்கு உரியதே கவிதை. கவிதையை உரக்கச் சொன்னால்தான்- படித்தால்தான் அதன் ஓசை இன்பத்தை உணர்ந்து அனுபவிக்க முடியும். கவிதையின்ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பம்என்று கவியரசர் பாரதி கூறுவதையையும் காண்க. நம் இலக்கண ஆசிரியர்களும் ஓசையை அடிப்படையாக வைத்துத்தானே செய்யுளைப் பாகுபடுத்தி உள்ளனர். செப்பலோசைக்கு உரியது வெண்பா என்றும், அகவல் ஓசைக்குரியது ஆசிரியப்பா என்றும், துள்ளல் ஓசைக்குரியது கலிப்பா என்றும்,தூங்கல் ஓசைக்குரியது வஞ்சிப்பா என்றும் நம் யாப்பிலக்கணம் வகைப்படுத்துவதையும் காண்க. கவிதையில் இடம்பெறும் எதுகை,மோனை,இயைபு முதலிய தொடைகளால்

தானே செய்யுளுக்கு ஓசை அழகு கிடைக்கிறது. மேலும் மரபுக் கவிதையையும் புதுக்கவிதையையும் வேறுபடுத்திக் காட்டுவதும் ஓசை அழகுதானே! எனவே உரக்கப் படித்தாலும், படிக்க, பக்கம் நின்று கேட்டாலும்தான் கவிதை இன்பம் தரும். எனவே தான் திருவள்ளுவரும்நவில்தொறும் நூல் நயம்என்றும், கவிச்சக்கிரவர்த்தி கம்பனும் செவிநுகர் கனிகளேகவிதை என்றும் செப்புகின்றனர்.


உரக்கச் சொல்வேன்என்னும் தொடரில் சொல்வேன் என்னும் சொல் சொல்லாற்றல் மிக்கதே கவிதைஎன்பதையும் சொல்கிறது. உரக்க என்பது தீவிரமான வலுவான பயனுடைய சொற்களைச் சுருக்கமாகஇறுக அமையுமாறு இயற்றுவதே கவிதை என்பதையும் இயம்புகிறது. சொல்லால் உருவாவதே கவிதை. சொற்களாகிய பஞ்சினைக் கொண்டு கவிஞன் என்னும் கன்னி, தன் மதிநுட்பம் என்னும் தக்களியைக் கொண்டு நூற்பதே செய்யுளாகும் எனப் பவணந்தியாரும் தம் நன்னூலில் குறிப்பிடுகிறார். எனவே கவிஞர் அமிர்தலிங்கம் தம் கவிதை நூலுக்கு உரக்கச் சொல்வேன்என்னும் தலைப்பிட்டிருப்பது பொருத்தமாகவே தோன்றுகிறது. மேலும் இந்நூலின் ஊற்று என்னும் தலைப்பில் உள்ள கவிதையில் பின்வருமாறு விளக்குகிறார்.



கவிதை என்பது சொற்சித்து

காலக்கணக்கின் பொற்சொத்து

எதுகை மோனை இசையின்றேல்

எழுதியப் புலவரும் மறந்திடுவார்,

மதுவின் மயக்கம் மறப்பதுபோல்

மறுநாள் காலை மனம்நிற்கா


இக்கவிதையில் கவிதை காலம் கடந்து நிற்பதற்குக் காரணம் அதன் ஓசை அழகே எனக் கவிஞர் நன்கு சுட்டிக் காட்டியுள்ளார். கவிதை பற்றிய இக்கவிதையே கவிதைக்குரிய கூறுகள் எதுகை மோனை இயைபு சொல்லாட்சி உவமை பலவற்றைக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. உள்ளடக்கம், உருவம், உத்தி என மூன்றாலும் இந்நூல் சிறந்து இலங்குகிறது. இந்நூலில் உள்ள பல கவிதைகளுக்கு இந்த வரிகள் நல்ல எடுத்துக்காட்டு.


இந்தக் கவிதைத் தொகுப்பில் மொழி, நாடு, சமூகம் ,இயற்கை, இயற்கைப் பேரிடர், பெண்கள், சான்றோர், கவிஞர் முதலிய பலபொருள்களைப் பற்றிய கவிதைள் உள்ளன. மெஞ்ஞானம் விஞ்ஞானம் பற்றிய செய்திகளும் இடம் பெற்றிருக்கக் காணலாம். மேலும் மரபுக் கவிதையிலும் குறள் வெண்பா, இன்னிசை நேரிசை வெண்பா, ஆசிரியப்பா, விருத்தப்பா, சித்திரக் கவிகள் முதலியனவும் உள்ளன.


உத்தியைப் பொறுத்த வரையில் அந்தாதி, சிலேடை,பேச்சுத் தமிழ்நடை, எண்ணலங்காரம், மொழிபெயர்ப்பு, வினாவிடை,நாட்டுப்புறப் பாடல், செல்வாக்கு

உவமை, உருவகம் முதலியனவற்றையும் இந்நூலில் காணலாம்.


அரிசிவா என்னும் தலைப்பில் உழவுப் பயிர் செய்முறை விளக்கப் பட்டுள்ளது.


அரிசி வா என்றால் அதுவாய் வாரா

அரி சிவா எனினும் அவரும் தாரார்


என்பதும், திங்கள் தோறும் திருவிழாக் காணும் சிங்கையைப்போற்றி, விழாக்கள்நிறைந்த நாடு, விழாத நாடு, விழாக்களை நாடுகஎனும் முப்பொருள் தோன்ற அமைந்த விழா நாடு என்ற கவிதையும் சொல்லாட்சிச் சிறப்புக்குச் சான்றுகளாகும்.


கருத்துக்களே மேலோங்கி இருக்கும் இக்கவிதைத் தொகுப்பில் கவிதைக்குரிய அழகுக்கூறுகள் - கவின்கூறுகள். இடம் பெற்ற கவிதைக்கு ஓர் எடுத்துக்காட்டு. மழை என்னும் தலைப்பிட்ட கவிதையில்;

கார்முகிலாள் கூடுகிற நேரம்

கருவானம் சூடுமின்னல் ஆரம்

தோகைமயில் ஆடுகின்ற மேடை

தொட்டுவிட துடிக்குமதன் பேடைஎன்பது.

சொல்லாட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு.


செப்படி வித்தைகள்

செய்வதேன் இப்படி

செப்படி பூமிமாதே-நீ

அப்படி இப்படி

தப்படி போடுதல்

எப்படி பூமி மாதே!’

மனிதநேயத்தை பல இடங்களில் வலியுறுத்தும் உரக்கச்சொல்வேன்என்னும் கவிதைத் தொகுப்பு நூலை வெளிட்டுள்ள காசாங்காடு அமிர்தலிங்கம் அவர்களுக்கு என் பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க அவர் வளமுடன்! வளர்க அவர்தம் கவிதைப்பணி!!

                              

திருமதி அகிலமணி ஸ்ரீவித்யா

கவிதைகளால் முத்தமிழுக்கு ஒரு மாலை



திருமதி அகிலமணி ஸ்ரீவித்யா அவர்கள் கவிதைகளால் முத்தமிழுக்கு ஒரு மாலை என்னும் தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பு நூல் ஒன்று வெளியிட இருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அவர் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். இருப்பினும் தணியாத தமிழார்வத்தாலும்தமிழாசிரியரான தந்தையார் ஊட்டிய தமிழறிவாலும் பல தலைப்புகளில் அவ்வப்போது கவிதைகளை இயற்றித் தமிழ் முரசு ஞாயிறு இதழில் வெளியிட்டுள்ளார். கவிச்சோலை போன்ற பயிற்று களங்களிலும் அரங்கேற்றியுள்ளார். அவரது முயற்சிக்கு என் பாராட்டினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



சுப. திண்ணப்பன்

9 9-2-2010

         

சொ.சொ.மீ,சுந்தரம்

திருவாசக உரை

                                

ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும், இத்தாலியம் காதலின் மொழி என்றும், ஜெர்மானியம் தத்துவத்தின் மொழி என்றும், இலத்தின் சட்டத்தின் மொழி என்றும், பிரஞ்சு தூதின் மொழி என்றும் சொன்னால் தமிழ் பக்தியின் மொழி என்று கூறினார் பன்மொழி அறிந்த பேராசிரியர் தனிநாயக அடிகளார். இவ்வாறு தமிழுக்குரிய அடையாளமாகப் பக்தி என்னும் பண்பினை ஊட்டிய பாவலர்கள் நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஆவர். நாயன்மார்கள் பாடிய பக்திப் பனுவல்கள் திருமுறைகள் எனப்படும். இந்தத் திருமுறைகளில் தோத்திரம் உண்டு; சாத்திரம் உண்டு; சரித்திரம் உண்டு. சரித்திர நாயகர்களாகிய நாயன்மார்கள் சிவபெருமானைத் தோத்திரமாகவும், சாத்திரமாகவும் கண்டு தொழுதனர்.

தோத்திரமும் சாத்திரமுமானார் தாமேஎன்னும் நாவுக்கரசரின் வாக்கு இதனை வலியுறுத்தும்.


தோத்திர நூல்களில் சிறந்தது திருவாசகம். சாத்திர நூல்களில் சிறந்தது திருமந்திரம் என்பார் வள்ளலார். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பதாகிய வேதம் நான்கினும் மெய்ப்பொருளாகிய- நமச்சிவாய மந்திரத்தையே தொடக்கச் சொல்லாகக் கொண்டு திகழ்வது திருவாசகம். இறைவனையே சைவனாகவும் செந்தமிழ்ப் பாண்டி நாட்டானாகவும் கண்டு

இன்புறும் நூல் அது. தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்னும் சைவர்களின் முழக்க வாசகத்தை வழங்கி நிற்பதும் திருவாசகமே ஆகும். இலக்கிய உலகில் திருவாசகம் என்றும் தித்திக்கும் தேனை ஒத்தது, படிப்பார் உள்ளத்தை உருக்கிப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் பான்மையது. ஜி.யு. போப் போன்ற வேற்றுச் சமயத்தினரின் போற்றுதலையும் பெற்ற நூல் அது.

கண்ணால் யானும் கண்டேன், காண்கஎன நம்மவர்க்குக் கடவுளைக் கண்டு காட்டும் ஏற்றம் கொண்ட இயல்பினது திருவாசகம். அது ஓர் அன்பு நூல். எனவே தான் திருவாசகம் படிப்போர் அன்பர் ஆகுநர் அன்றி மன்பதை உலகில் மற்றையர் இலரேஎன்று பாராட்டினார் துறைமங்கலம் சிவப்பிரகாசர்.


இத்தகைய பெருமை மிக்க திருவாசகம் மாணிக்கவாசகர் சொல்லிய பாட்டாகும்.

இதன் உட்பொருளாக இலங்குபவர் தில்லை நடராசப் பெருமானாவார். இந்த உட்பொருளை உணர நாம் திருவாசகப் பாட்டின் புறப்பொருளை முதலில் அறிந்து போற்ற வேண்டும். இதனை எல்லாரும் அறியும் பொருட்டுத் திருவாசகத்திற்கு எளிய உரை எழுதித் தருமாறு சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டினர் சொல்லின் செல்வர் சொ. சொ. மீ. சுந்தரம் அவர்களை வேண்டி நின்றனர். அதன் விளைவே உங்கள் கைகளில் இன்று திகழும் இந்தத் திருவாசக எளிய உரை நூலாகும்.


உரையாசிரியர் பொற்கிழிக் கவிஞர் சொ.சொ. மீ. சுந்தரம் அவர்கள் தம் சிறுவயது

முதலே திருவாசகம் படிக்கத் தொடங்கியவர். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அதில் தோய்ந்து திளைத்தவர். ஆய்ந்து நுண்பொருள் கண்டு நுவல்பவர். தம் இல்லத்திற்கே திருவாசகம் எனப் பெயரிட்டும் ஆண்டுதோறும் திருவாசக விழாக்கள் நடத்தியும் மகிழ்பவர். பேராசிரியர் வ.சுப. மாணிக்கம், கம்பன் அடிப்பொடி சா. கணேசன், கவிஞர் கண்ணதாசன் முதலிய தமிழ் அறிஞர்களால் பாராட்டப்பட்டவர். இந்தியா. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளிலெல்லாம் திருவாசகம் பற்றிப் பல சொற்பொழிவுகளைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப நிகழ்த்தியவர். கயிலைக் காட்சியைக் கண்டு களித்து மற்றவர்களுக்கும் தம் சொல்வண்ணத்தால் தீட்டிக் காட்டும் திறத்தினர். அரிய பொருளை அனைவரும் அறியும்வண்ணம் எளிமையாகவும், எளிய பொருளை அறிஞர் பலரும் போற்றும் வகையில் அருமையாகவும் விளக்கும் இயல்பினர். இலக்கிய உலகில் இணையற்ற பட்டிமன்றப் பேச்சாளர். வணிகத்துறைப் பேராசிரியராக இருந்து சைவத்தையும் தமிழையும் வாழ வைத்துக் கொண்டிருப்பவர். இவரது ஆழ்ந்தகன்ற புலமையும் பழுத்த அனுபமும் இந்த உரையில் பளிச்சிடக் காணலாம்.


இந்த உரை, நூலாகவும் கணினி வட்டாகவும் வெளியிடப்படுகிறது. இதனைத் தமிழ்ப் பெருமக்கள் வாங்கிப் படித்தும் கேட்டும் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து இறையருள் பெற வேண்டுகிறேன். நல்லதோர் உரையை நமக்கு

நல்கிய நாவலர் சொ. சொ. மீ. சுந்தரம் அவர்கள் திருமந்திரம் முதலிய பல நூல்களுக்கு உரை எழுதி உதவிட வேண்டுகிறேன். அவரது சைவப் பணியும் இலக்கியப் பணியும் தொடர இறைவனை வணங்குகிறேன்.


6-6-2008 சுப. திண்ணப்பன்

சிங்கப்பூர்



இராம.வயிரவன்

கவிதைக் குழந்தைகள்

29-11-2009


            கவிதைக்கும் குழந்தைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைத் தமிழ் இலக்கிய மரபு தொல்காப்பியர் காலத்திலேயே அறிந்திருப்பதை நாம் உணர முடியும். குழவி மருங்கினும் கிழவதாகும்என்னும் நூற்பா தொல்காப்பியப் புறத்திணை இயலில் உள்ளது. குழந்தைகளைப் புகழ்ந்து பாடுதலும் பாடாண் திணைக்குரியதேயாம் என்று இந்நூற்பாவுக்குப் பொருளுரைப்பார் பேராசிரியர் தமிழண்ணல்.


            இம்மரபினைப் பின்பற்றிப் பாண்டியன் அறிவுடை நம்பி குழந்தையின் இயல்பைப் படம்பிடித்துக் காட்டும் புறநானூற்றுப் பாடல் இதோ:


படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்

குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,

இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே.


எத்தகைய செல்வராயினும் குழந்தைச்செல்வம் இல்லாதார் வாழ்க்கை பயனற்ற வாழ்க்கை எனப்பகர்கிறது இந்தப் புறப்பாட்டு.


            அகநானூற்றில் செல்லூர்க் கோசிகன் கண்ணனார் என்னும் புலவர்


இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

மறுமைப் பயனும் மறுவின்று எய்துப

செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்

சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்

பல்லோர் கூறிய பழமொழி..”


என்னும் பாடலில் குழந்தைகளைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவர் எனவும் குழந்தையைப் பெற்றோர் இம்மையில் புகழும் மறுமையில் இன்பமும் பெறுவர் என்று கூறும் பழமொழி உள்ளது எனவும் கூறுகிறார்.


            இவர்களைத் தொடர்ந்து திருவள்ளுவரும் தம்குறளில் மக்கட்பேறு என ஓர் அதிகாரம் வகுத்துள்ளார். இல்வாழ்க்கையின் இறுதிக் குறளில்


மங்களம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.


என்றும் அடுத்த அதிகாரமான மக்கட்பேற்றின் முதற்குறளில்


பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.


என்றும் கூறிக் குழந்தைச் செல்வத்தின் சிறப்பைச் செப்புகிறார். பக்தி இலக்கியத்தில் பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாகக் கற்பனை செய்து குழந்தையின் உறுப்பழகையும், பலவகைப் பருவ விளையாடல்களையும், நடத்தல், மழழை பேசுதல், சப்பாணி கொட்டுதல் முதலிய செயல்களையும் அழகிய பாடல்களாகப் பழகிய தமிழில் பாடியுள்ளார். ஒருபாடல் இதோ:


சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர் வந்துகாணீரே


            பெரியாழ்வாரின் பாடல்கள் கடவுளைக் குழந்தையாகக் கருதிக் குழந்தையின் பத்துப் பருவங்களைப் பாடும் பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு வழிகாட்டின.


            இதனையடுத்துச் சோழர் காலத்தில் ஒட்டக்கூத்தர் (12 ஆம் நூற்றாண்டு) இரண்டாம் குலோத்துங்கனைக் குழந்தையாக்கிக் குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ் படைத்தார். அரசனைக் குழந்தையாக்கிப்பாடிய கவிதை இலக்கியம் இது. இதுவே முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். பிறகு குமரகுருபரர் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் பாடிக் கடவுளுக்குப் பிள்ளைத்தமிழ் இலக்கியம் செய்தார். பிறகு அடியார்களுக்கும் அருந்தமிழ்ப் புலவர்க்கும், அரசியல் தலைவர்களுக்கும் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தோன்றின. இதுவரை சுமார் 150 க்கு மேற்பட்ட பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் உள்ளன.


            கிறிஸ்தவர்களும், இசுலாமியர்களும் கூடப் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் இயற்றி உள்ளனர்.


            இந்த நூற்றாண்டில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, அழ.வள்ளியப்பா முதலியோர் குழந்தைகளுக்குரிய குழந்தை இலக்கியம் படைத்துச் சிறந்தனர். கவிதைக்குரிய பாடுபொருளாகக் குழந்தை இலங்குவதைத் தமிழிலக்கிய வரலாறு நன்கு காட்டுகிறது.


            இந்நிலையில் கவிதையையே குழந்தையாக்கிக் கவிஞர் இராம.வயிரவன் கவிதைக் குழந்தைகள் என்னும் தலைப்பில் நூற்றுக்கு மேற்பட்ட தலைப்புகளில் கவிதைகள் இயற்றித் தொகுத்துத் தந்துள்ள நூலைப் படித்தேன். படித்தேன் என இனித்தது. பைந்தமிழ்த் தேனாகச் சுவைத்தது. சுவைத்தேன் எனச் சுவைத்து மகிழ்ந்தேன். அத்தனையும் சுவைத்தேன்!


            இராம.வயிரவன் தாம் எழுதிய சிறந்த சிறுகதைகள் பல அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றைபுன்னகைக்கும் இயந்திரங்கள்என்னும் பெயரில் சென்ற ஆண்டு வெளியிட்டார். இப்போது கவிதைத் தொகுப்பினை வெளியிடுகிறார். உரைநடையிலும் கவிதையிலும் தம் எழுத்துப் படைப்பினை உருவாக்கும் ஒரு சிலருள் இராம.வயிரவன் ஒருவராவார்.


            கவிதைக் குழந்தைகள்என்னும் தலைப்பில் கவிஞன் என்னும் தாய் சிந்தனை என்னும் கணவனைக் கூடிப், படித்தல், கேட்டல், கற்பனைப் பறவையாய்ப் பறத்தல் நிகழும் போது கருத்தரித்து, உண்ணும் போதும், உறங்கும் போதும் உருவு கொடுத்து, உதைக்கும் போது இன்பம் அடைந்து, பெற்றெடுப்பதே கவிதைக் குழந்தை என்று கூறுவதில் உருவக அழகு மெருகூட்டி நிற்கிறது. பத்து மாதத்திலும் பிறக்கலாம்; பத்து நொடியிலும் பிறக்கலாம் இக்குழந்தை. இந்தக் கவிதைக் குழந்தைத் தமிழ்த்தாய்க்குப் பேரன் எனக்கூறி அவள் தரும் அணிகளைப் பூட்டிக் கவிஞன் எனும் தாய் களிப்பெய்துவதும் நல்ல கற்பனை! கவிதையைப் போற்றினாலும் தூற்றினாலும் கவிஞனுக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே! என்று முடிப்பதில் கவிதைக் குழந்தை தவழ்ந்து வந்து ஓடிவந்து நம்மைக் கட்டி அணைக்கிறது.


            எது என் கவிதை?என்னும் தலைப்பிலுள்ள இறுதிக் கவிதையில் கவிஞர் பல கேள்விகளை அடுக்கி வாசகர்களிடம் கேட்டுப் பதிலை எதிர்பார்த்து முடிக்கும் போது ஓர் அழகு இருக்கிறது.


            இந்நூலின் பாடுபொருள் இயற்கை, மொழி, நாடு, சமூகம், சுற்றுச்சூழல், அறிவியல், ஆன்மா, கவிதை, மனிதநேயம், தத்துவம் எனப் பலவாறாய்ப் பரந்து விரிந்து நிற்கக் காணலாம். பழமையில் புதுமையும், புதுமையில் பழமையும் இணைந்து நிற்கின்றன.


            தலைப்புக்களை உற்று நோக்கினாலே கவிதைக் கூறுகள் பல இருப்பதைக் கவனிக்கலாம். நூல்தமிழை மறப்பதுவும் சரியா?’(1)எனத் தொடங்கிஎது என் கவிதை?’ (106) எனக் கேள்வியாகவே முடிகிறது. ‘தமிழை ஏன் படிக்க வேண்டும்?’ (2), ‘சிங்கைப் பெண்ணே! என் கேள்விக்கு என்ன பதில்?’ (9), ‘நான் சிறந்த தந்தையா?’ (23), ‘அப்பாவி மனித உயிரோ?’ (26), ‘தோல்விகள் எதனால்? எதனால்?’(50), ‘கவலைகள் சுமப்பதேன்?’ (53), ‘எது அழகு?’(55), ‘இவன் மனிதனா? மடிக்கணினியா?’ (84) இப்படிக் கேள்விக்கணைகளைக் கொண்ட தலைப்புகள் ஒருபுறம்.


            மிகுதியான தலைப்புகள் ஏவல் அல்லது கட்டளை வாக்கியங்களாக உள்ளன. சிரி(57),தேடு(61), சொல்கேள்(62), முகத்தை மாற்று(56), இதயத்தால் பார்(66), அன்பு வளர்க்கலாம் வா(32), மனத்தை விரிப்போம் வாரீர்(35), காப்பாற்றுங்கள் நம் பிள்ளைகளை (44), விழித்துக் கொள்ளுங்கள்(48) முதலிய தலைப்புக்களைச் சான்றுகளாகக் கூறலாம். இவை மற்றொரு புறம்.


            கண்ணதாசா! தமிழை மீட்டுத் தர வா (3) என்னும் தலைப்புக் கேள்வியாகவும் ஏவலாகவும் இருப்பதை உணரலாம். அக(ல்) விளக்கேற்றுங்கள் (59) இருபொருள் நயம் இருப்பதைக் காட்சியிலேயே காட்டும். உழைக்கும் வர்க்கமே(24), சும்மா இருக்கும் நல்லவனே! (48) விளித் தொடர்கள்; கவிதைக் குண்டு (5), காகித மலைகள் (17), நவீனப்பறவை (7) இவை நல்ல உருவகங்கள். என்ன தவறு செஞ்சோம் (39), மனுசனாகுங்க (41), நேரமில்லே! நேரமில்லே! (52), புது வாழ்க்கை தொடங்கப்போற பொண்ணே(64) பேச்சுத்தமிழ் செல்வாக்குப் பெற்ற தொடர்கள். ‘ஈகோ (67), அவுட் சோர்சிங் (72), பிறமொழிச் செல்வாக்குப் பெற்ற தொடர்கள். டமால் (104) உணர்ச்சி உணர்த்தும் இடைச்சொல். இப்படிப் பலவகை மொழி உத்திகளைத் தலைப்பிலேயே தந்துள்ள கவிஞரின் ஆற்றல் போற்றுதற்குரியது. மேலும் கவிதையின் முதல் தலைப்புக்களையே பிரிவுகளாகக் காட்டியிருப்பதும் சிறப்பாக உள்ளது.


            நூலின் தலைப்புக்கேற்பக் கவிதை பற்றிய கவிதைகள் தொடக்கம், நடு, இறுதியில் இடம் பெற்றுள்ளன.


            சிங்கையைப் பற்றிய கவிதையில்நான்மொழிகள் பேசுகின்ற தேன்மொழியாள்என்று சிங்கைப் பெண்ணைக் காட்டுவது எதுகையில் சிறப்புற்று நிற்கிறது.


            இயற்கையைப் பற்றிய கவிதைகள் எல்லாமே கற்பனை நயமிக்கவையாகக் காட்சி அளிக்கின்றன. மொழியில்லாத கவிதைகள் என மழையை அழைப்பதை ஓர் எடுத்துகாட்டாகக் கூறலாம்;


            மழையே! நீ மொழியில்லாமல் கவிதை ஆகிறாய்

          நாங்கள் வரியில்லாமல் உன்னை வாசித்து மகிழ்கிறோம்


            இங்கேவரி இல்லாமல்தொடரில் வரி என்பது கவிதை அடியையும், வரி (TAX) கட்டணம் என்பதையும் உணர்த்துகிறது அல்லவா? வானம், மரங்கள் பற்றிய கவிதைகளிலும் கற்பனை விஞ்சி நிற்கிறது! ‘ஐம்பூதங்களே! அழகாய் இருங்கள்என்னும் பகுதியில் ஐம்பூதங்களும் அடக்கி வாசித்தால் அழகாய் இருக்கும்! ஆட்டம் போட்டால் அழிவாய் முடியும்என்னும் கருத்தைக் கவிஞர் நன்கு விளக்கியுள்ளார். வாழ்க்கையைச் சுவாசிக்கவும் சுவைக்கவும் வாசிக்கவும் நேசிக்கவும் அறிவுரை கூறும் கவிதைகள் இந்நூலில் பல உள்ளன.


            உள்ளடக்கம், உருவம், உத்தி மூன்று வகையாலும் சிறந்து நிற்கும் புதுக் கவிதைகளால் அமைந்த இந்தக்கவிதைக் குழந்தையைத் தந்த குழந்தை உள்ளம் கொண்ட குழந்தைக் கவிஞர் இராம.வயிரவனை வாழ்த்துகிறேன். அவர் இன்னும் பல நல்ல இலக்கியப் படைப்புக்களை உருவாக்கித் தமிழன்னைக்கு அணிசேர்ப்பாராக!



யூசுப் ராவுத்தர் ரஜித்

விழிக்குள்ளேதான் வெள்ளையும்கருப்பும்

23-12-2010


பேராசிரியர் யூசுப் ராவுத்தர் ரஜித் விஞ்ஞானத் துறையில் பட்டம் பெற்றுக் கல்லூரியில் பணியாற்றியவர். எனினும் தமிழின் மீது தணியாத ஆர்வம் கொண்டு கவிதை, சிறுகதை, கட்டுரை பல எழுதிப் பல்வேறு இதழ்களில் வெளியிட்டு வருகிறார். அவர் பன்னீர்த் துளிகள் என்னும் கவிதைத் தொகுப்பு நூல் ஒன்றைச் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளார். அதிலுள்ள கவிதைகளைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். மேலும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத் தெற்கு ஆசிய பிரிவில் இவ்வாண்டு தமிழியல் பாடத்தைப் படிக்கும் மாணவர்களுக்குக் கவிதை பற்றி ஓர் உரையாற்ற அவரை அழைத்தேன். அவரும் வந்து சிறப்பாகச் செய்தார். பன்னீர்த் துளிகள் நூலைத் திறனாய்வு செய்ய ஒரு மாணவருக்குக் கொடுத்தேன். அவரும் நூல் பற்றி நன்றாக எழுதியுள்ளார்.


கவிஞர் ரஜித் இப்போது விழிக்குள்ளேதான் வெள்ளையும் கருப்பும் என்னும் தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிடும் செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். எந்தப் பொருளையும் அல்லது செயலையும் பார்க்கின்ற பார்வையில் தான் அதன் மதிப்பு உள்ளது என்பதை இந்தத் தலைப்பு அழகுற எடுத்துக் காட்டுகிறது.ஒரு பொருளை விருப்புடன் உடன்பாட்டு நோக்கில் பார்க்கும் போது அதன் உயர்வு தென்படும். அதனையே வெறுப்புடன் எதிர்மறை நோக்கில் பார்க்கும் போது குறைகளே தென்படும். மகாபாரதத்தில் தருமன் பார்வையில் மக்கள் எல்லாரும் நல்லவர்களாகவே தோன்றினார்கள் என்றும் துரியோதனன் பார்வையில் மக்கள் எல்லாரும் தீயவர்களாகவே தோன்றினார்கள் என்றும் ஒரு கதை உண்டு. இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ; ஒரு நோக்கு நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்துஎன இதனையே காதலர் நோக்கில் பேசுகிறார் வள்ளுவர்.


அழகு என்பது பொருளில் உள்ளதா? பார்ப்பவர் கண்ணில் உள்ளதா? என்பது கேள்வி. ஒரே பொருள் ஒருவர்க்கு அழகாகத் தோற்ற மளிக்கிறது. அதே பொருள் மற்றவர்க்கு அலங்கோலமாக அழகற்றதாகக் காட்சி அளிக்கிறது. காரணம் என்ன? லைலாவின் அழகு மஜ்னுவின் கண்களிலே என்பார்கள். எனவே பார்ப்பவர் கண்களில் தான் அந்த அழகு அமைகிறது என்பதையும் விழிக்குள்ளேதான் வெள்ளையும் கருப்பும் என்னும் தலைப்பு நமக்கு விளம்புகிறது. பாரதிதாசன் அழகின் சிரிப்பு என்னும் நூலில்

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்

கடற் பரப்பில் ஒளிப் புனலில் கண்டேன் ; அந்தச்

சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்

தொட்ட இடம் எல்லாம் கண்ணில்தட்டுப்பட்டாள்

மாலையிலே மேற்றிசையில் இலகுகின்ற

மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ; ஆலஞ்

சாலையிலே தினந்தோறும் கிளியின் கூட்டந்

தனில் அந்த அழகு என்பாள் கவிதை தந்தாள்

எனக் கூறும்போது அழகு என்பாள் கண்ணில் தட்டுப் படுவதைச் சுட்டுவதைக் காண முடிகிறது.


விழிக்குள்ளே வெள்ளையும் கருப்பும் இருக்கும்போது நிற வேறுபாடு கருதி நிறவெறி பிடித்து அலைவானேன்? என்று சிலரை நோக்கிக் கவிஞர் வினா எழுப்புகிறாரோ எனவும் இத்தலைப்பு நம்மை எண்ண வைக்கிறது. பாரதியும்

வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள்வீட்டில் வளருது கண்டீர்

பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை பேருக்கொரு நிறமாகும்

சாம்பல் நிற மொரு குட்டி கருஞ் சாந்து நிற மொரு குட்டி

பாம்பு நிற மொரு குட்டி வெள்ளைப் பால் நிற மொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவையாவும் ஒரே தர மன்றோ?

இந்த நிறம் சிறிதென்றும் இஃது ஏற்ற மென்றும் சொல்லலாமோ? என்று நிற வெறியை நீக்கப் பாடியதை நினைவு படுத்தவும் வைக்கிறது.


வெள்ளை என்பது கள்ளமற்ற உள்ளத்தையும், கருப்பு என்பது வஞ்சகத்தையும் காட்டும் வண்ணங்களாகத் தமிழ் இலக்கியங்கள் பேசும். அவ்வாறு கருதினாலும் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற கணியன் பூங்குன்றனாரின் அடியை நினைவு படுத்திப் பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்ற வள்ளுவரின் குறளையும் நினைக்க வைக்கிறது இந்தத் தலைப்பு. கருப்பும் வெள்ளையும் கண்ணாகிய ஒரே இடத்தில்தான் உள்ளன. நன்மையும் தீமையும் ஒருவரிடத்தில்தான் உள்ளன என்பது உண்மைதானே.


இக்கால இளையர்கள் கருப்பு நிறக் கன்னியரை வெறுப்பதும் வெள்ளை நிறப் பெண்ணை விரும்புவதும் கருதி இந்தத் தலைப்பு எழுந்ததோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. கருப்புதான் எனக்குப் பிடித்த கலரு என்னும் வைரமுத்து கவிதையில்கருப்பு நிறப் பொருள்களைப் பட்டிய லிட்டுக் காட்டி அதன் அருமையை விளக்குவதையும் இந்தத் தலைப்பு வழி நினைத்துப் பார்க்கலாம்.


கருப்பும் வெள்ளையும் முரண்பட்ட வண்ணங்கள். ஒன்றின் துணையால் மற்றொன்று சிறந்து மேம்பட்டு விளங்கும். வெண் பலகையில் கரு மையால் எழுதுவதாலும் கரும் பலகையில் வெண் சுண்ணாம்புக் கட்டியால் எழுதுவதாலும் ஒன்றுக் கொன்று சிறக்க உதவியாய் இருப்பதை நாம் எளிதில் உணரலாம். இந்த இரண்டுமே விழிக்குள்ளே இருந்து நம் பார்வையைக் கூட்டுகின்றன. எனவே வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டு வாழ்வதே சிறப்பு என்பதையும் நமக்கு இத்தலைப்பு அறிவுறுத்துகிறது.


இப்படிப் பல்வேறு எண்ணங்களுக்கு சிந்தனைகளுக்கு வித்திடும் வகையில் தலைப்பிட்டு கவிதை நூல் வெளியிடும் கவிஞர் ரஜித் அவர்களுக்கு என் பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் தமிழ்ப் படைப் பிலக்கிய முயற்சி தழைக்க இறைவனை வேண்டுகிறேன்

 
..... முற்றும் .....
Dr. S.P. Thinnappan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக