வெள்ளி, 2 மே, 2014

சிங்கப்பூரில் தமிழ் - 3சிங்கப்பூர்த் தமிழ்  இலக்கியத்தில் 


‘‘ நா. கோ ’’வின் பங்கு.


சிங்கை இலக்கியம் பற்றிய சிந்தனை -


      சிங்கப்பூர் இலக்கியம் என்பது சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்களால், சிங்கப்பூர்ச் சூழலை முற்றும் அறிந்தவர்களால் சிங்கப்பூர்ச் சமூகம்  பற்றிச் சிங்கப்பூர் மண்ணின் மணம் கமழ்வதாக இருக்க வேண்டும் என்பது நா,கோவின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.  சிங்கப்பூர் இலக்கியம்  பற்றித் திறனாய்வு செய்யவோ, பேசவோ கூடச் சிங்கப்பூரருக்கே மிகுதியான தகுதி உண்டு என்பதிலும் நம்பிக்கை உடையவர் நாகோ.


படைப்பாளராக -


      நாகோ சிறுகதை, குறுநாவல், நாடகம் ஆகிய மூன்று இலக்கியத் துறைகளில் 1965 முதல் எழுதி வந்தாலும் அவரின் படைப்பிலக்கியங்கள் 1990 ஆம் ஆண்டு முதலே நூல்களாக வந்தன.  இவரது ‘‘உள்ளொளியைத் தேடி’’ என்னும் சிறுகதைத் தொகுப்பு, ‘‘வேள்வி, ‘தேடி’’  முதலிய நாவல் நூல்களில்  படைப்பிலக்கியங்களைப் படிப்பவர்கள் இவருக்கு இருந்த சமுதாய அக்கறையை நன்கு உணர்வர்.  இவரது படைப்புகளில் கலை அழகோ, உவமைகளின் சிறப்போ,; மொழிநடை எழிலோ முக்கியத்துவம் பெறவில்லை.  தமிழ்ச் சமூகத்தின் அவல நிலையை எடுத்துக் காட்டிச் சிங்கப்பூர்  இலக்கியம் பற்றிய தம் சிந்தனைக்கு ஏற்ப இலக்கியம் படைத்தவர் நாகோ எனக் கூறலாம்.


பகுப்பாய்வாளராக -


      இலக்கிய வளர்ச்சிக்குத் திறனாய்வு இன்றியமையாதது என்னும் கருத்தில்; தமிழ் நேசனில் வெளிவந்த மலேசிய சிங்கப்பூர்  எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் திறனாய்வு செய்யும் நோக்குடன் பல தமிழக இலக்கியப் பேராசிரியர்கள், அறிஞர்கள் ஆகியோரைத் திறனாய்வு செய்யச் சொல்லி அவர்தம் கருத்துகளுடன் ‘‘இலக்கியக் களம்’’ என்னும் நூல் 1977இல் நாகோ வெளியிட்ட முயற்சி பாராட்டத் தக்கது.


      சிங்கப்பூர் யீசூன் தொடக்கக் கல்லூரியில் முதன் முதலாக மாணவர்களுக்காக 15.3.88 இல் ஏற்பாடு செய்யப் பட்டட இலக்கியக் கருத்தரங்கில் மாணவர்ககுப் பாடநூலாக இருந்த சிறுகதைத் தொகுப்பு நூல் ஒன்றை நாகோ திறனாய்வு செய்த முறை பிற்காலத்; திறனாய்வாளர்க்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது.  ஒரு சிறுகதையை நுவல் பொருள், பாடு பொருள், பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும், கலைவடிவம் எனப் பல கூறுகளில் பகுத்தாயும் முறையை நாகோ அறிமுகப் படுத்திய முறை சிங்கப்பூரில் சிறுகதைத் திறனாய்வுக்கு ஒரு சிறந்த முறையைத் தமிழாசிரியர்களுக்குக் காட்டிக் கொடுத்தது எனக் கூறலாம்.  இம்முறையையே இவர் நடத்திய சிறுகதைப் பயிலரங்குகளிலும் பயிற்றுவித்தார்.


பதிப்பாசிரியராக -


      சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியப் படைப்புகளைத் தொகுத்து மற்ற நாட்டினர்க்கும் மற்ற இனத்தினர்க்கும் அறிமுகப் படுத்தும் பணியிலும் நாகோ ஈடுபட்டுள்ளார்.  திரு இளங்கோவனுடன் இணைந்து நாகோ 1977 இல் சிங்கப்பூர்ச் சிறுகதைகள் என்னும் தொகுப்பு நூல் வெளியிட்டார்.  இதில் 17 சிங்கப்பூர்ச் சிறுகதைகள் உள்ளன. மேலும், சிங்கப்பூர்ச் சிறுகதையின் தோற்றம், வளர்ச்சி தொடர்பாக நாகோ இந்நூலில் எழுதியுள்ள முன்னுரையும் போற்றத் தக்கதாக உள்ளது. பேராசிரியர் எட்வின் தம்பு அவர்களுடன் இணைந்து வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு 3 (1990)என்னும் கவிதைத் தொகுதியும் , ராபர்ட் இயோவடன் சேர்ந்து (1991) என்னும் நாடகத் தொகுப்பும் தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்புடன் அமைந்திருந்த காரணத்தால் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியப் படைப்புகளைப் பற்றிப் பலர் அறிய முடிந்தது.  இவற்றிலும் இவர் எழுதிய முன்னுரைகள் இருமொழியிலும் வந்தன. இவ்வாறு சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியப் பரப்பினைப் பெரிதாக்கிய பணி நாகோவுக்கு உரியது.


பதிப்பு உரிமையாளராக -


      தமிழகத்திலும் பதிப்பகம் ஒன்று தொடங்கிப் புதுமைதாசன், இளங்கண்ணன் நூ;ல்கள் வெளிவரச் செய்தார் நாகோ. மேலும் அகிலன், அவர் மகன் கண்ணன் ஆகியோர்; தொடர்பும் நட்பும்  நாகோவிற்கு இலக்கியப் பணி செய்யப் பலவழிகளில் உதவின. சிஙகப்பூர் எழுத்தாளர்களையும் இலக்கியப் படைப்புகளையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப் படுத்துவதில் நாகோ மிகுந்த ஆர்வத்துடன் விளங்கினார்.


பயிற்சி ஆசிரியராக -


      சிங்கப்பூர்க் கல்விக் கழகத்தில் அவர் 1981 முதல் பயிற்சி ஆசிரியராய்ப் பணியாற்றினார்.  அவர் தம் இறுதிக்காலம் வரை இப்பணி தொடர்ந்தது.  இப்பணியின்போது இக்காலத் தமிழ் இலக்கியம், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஆகியவற்றைத்; தமிழாசிரியர் பயிற்சி; பெறுவோர்க்குக் கற்பித்து வந்தார். சிங்கப்பூர் எழுத்ததாளர்கள், அவர் தம்படைப்புகள் பற்றித் தமிழ் ஆசிரியர்கள் நன்கு அறிய வழி வகுத்தார்.  மேலும், அவர்களுக்கு ஒப்படைப்புகளில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பற்றித் திறனாய்வு செய்ய வழிகாட்டி உதவினார்.  மேலும், தமிழாசிரியர்களுக்குப்  பணியிடைப் பயிற்சி வகுப்பான உயர்கல்விச் சான்றிதழ், பட்டய வகுப்பு ஆகியவற்றில் பயின்ற ஆசிரியர்களுக்கும் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பாடமாக நடத்தி ஒப்படைப்புகளில்  ஆய்வுசெய்ய வைத்தவர் நாகோ.  தமிழகம், மலேசிய, இலங்கையிலிருந்து சிங்கை வருகைதரும் எழுத்தாளர்களைக் கல்விக் கழகத்திற்கு வந்து சொற்பொழிவாற்றவும் நாகோ உறுதுணையாக இருந்தார்.


பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வாளராக -


      சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகத்தமிழ் மாநாடுகள் முதலியவற்றில் நாகோ படைத்த ஆய்வுக் கட்டுரைகள் சிங்கப்பூர் இலக்கியத் துறையில் பெரும்பங்காற்றின.  தேசியப்பல்கலைக்கழகக் கருத்தரங்கில் 1970 இல் அவர் படைத்த சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஒரு சமூகக் கண்ணோட்டம் என்னும் கட்டுரை சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாற்றினையும் சிறப்பியல்புகளையும் படம் பிடித்துக் காட்டும் பண்புடையது.


      இக்கட்டுரைதான் இன்றுவரை சிங்கப்பூர் இலக்கியம் பற்றிய ஆய்வு செய்வார்க்குச் சிறந்ததோர் கலங்கரை விளக்கமாகத்; திகழ்கிறது.  1989 ஆம் ஆண்டு மொரீஷியஸில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் மகுதூம் சாயுபு எழுதிய வினோத சம்பாஷணைதான் முதல் தமிழ்ச் சிறுகதை  என்னும் கருத்தை நாகோ வெளியிட்டுக் கட்டுரை படைத்தார்.  அது இன்றும் பலரது சிந்தனைக்குரியதாக உள்ளது.  மலேசியாவிலும் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டிலும் சிங்கப்பூர் இலக்கியம் பற்றிக் கட்டுரை படைத்தார்.  தமிழகப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், வானொலிகள், தொலைக் காட்சிப் பேட்டிகளிலும் சிஙகப்பூர் இலக்கியத்தை அறிமுகம் செய்யும் பணியில் சிறப்பிடம் பெற்றவர் நாகோ.


பரிசுக்குழு உறுப்பினராக -


      சிங்கப்பூரில் பல அமைப்புகள் நடத்தும் இலக்கியப் போட்டிகள், அரசாங்க அமைப்புகள் நடத்தும் விருதுகள் ஆகியவற்றிற்கு நடுவர்கள் குழு உறுப்பினராக இருந்து நற்பணியாற்றிவர் நாகோ. தென்கிழக்காசிய இலக்கிய விருது, புத்தக மேம்பாட்டுக் கழகப் பரிசு போன்றவற்றையும் குறிப்பிடலாம்.


பயிலரங்க நடத்துநராக -


      சிங்கப்பூர் இலக்கியம் குறிப்பாகச் சிறுகதைத் தொடர்பான பயிலரங்குகள், தமிழ் எழுத்தாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும், மாணவர்களுக்கும் அவ்வப்போது நடத்தி, வெற்றி கண்டவர் நாகோ.


பன்னாட்டு இணையத்தில் -


      நாகோ அவர்களைத் தமிழ் இணைய உலகத்தின் தந்தை எனக் கணிணி உலகம் போற்றுகிறது.  சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர்டான் டின் வீஉடன் இணைந்து தமிழ் இலக்கியத்தின் வடிவாக்கத்தைக் காண நாகோவுக்கு அடிப்படையாக இருந்தது அவரது சிங்கைத் தமிழ் ஆவர்வமே ஆகும்.  சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைகளை நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்னும் முயற்சியின் விளைவே நாகோவைத் தமிழ்  இணையத் தந்தையாக ஆக்கியது என்பதைச் சிங்கையிலுள்ளோர் நன்கு அறிவார்கள். பிறகு அவர்; தொடங்கிய இணைய இல்லப் பக்கத்தில் சிங்கப்பூர் இலக்கியத்திற்குச் சிறப்பிடம் கொடுத்திருந்தார்.  அவர் ஆய்வுக்கட்டுரைகளை அதன்வழி வெளியிட்டு அனைத்துலகும் சிங்கப்பூர் இலக்கியம் பற்றி அறியச் செய்தார்.


பழமை வரலாற்று நோக்கினர் -


      சிங்கப்பூர் முன்னோடி இலக்கியமான சிங்கை நகர் அந்தாதி, சித்திர கவிகள் என்னும் நூல்களை இலண்டன் நூலகத்திலிருந்து வருவித்துச் சிங்கப்பூர் தண்டாயதபாணி கோயில் குடமுழுக்கு விழா மலரில் (1983) வெளியிட நாகோ உதவினார்.  மேலும்,அதன் தொடர்பாக ஆய்வு செய்ய எனக்கும் உதவினார். மேலும் , குதிரைப் பந்தய லாவணி என்னும் நூல் பற்றி எனக்கு அறிமுகம் செய்து ஆய்வு செய்ய வைத்தார். சிங்கப்பூர்  இலக்கிய வரலாறு எழுதுவதற்கு அவர்தம் ஆய்வுக் கட்டுரைகள், முன்னுரைகள் எனக்குப் பேருதவியாக இருந்தன. முனைவர் சிவகுமார் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும்போது அவருக்கு வேண்டிய உதவிகளும் நாகோ செய்தார். எனவே சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் மலேய,  மலேசியத் தமிழ் இலக்கியத்தின் கூறு என்பதில் நாகோவுக்கு நம்பிக்கை இல்லை.  தொடக்கம் முதல் சிங்கப்பூர், தனித்த நிலையில் தனிநாடாகத் தமிழ் இலக்கியம் தோற்றுவித்தது என்பது நாகோவின் கருத்தாகும். சிங்கப்பூர் அ.சி. சுப்பையாதான் தமிழ் எழுத்துச் சீர்திதருத்தத்திற்குப் பெரியாருக்கு வழிகாட்டியாக விளங்கியவர் என்னும் செய்தியையும் அவர்குடியரசுஇதழில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி எழுதியகட்டுரைகளையும் படியெடுத்து வைத்துக் காட்டிய பெருமை நாகோவையே சாரும். 


      இவ்வாறு சிங்கப்பூர் பழமை வரலாற்றுப் பண்பினை எடுத்து உலகுக்கு உரைத்தவர் நாகோ ஆவார்.


பல அமைப்புகள் வாயிலாகப் பணி செய்தவர்


      சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளராகப் பணியாற்றி எழுத்தாளர் விவரங்களை எடுத்துத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் .  தேசியக் கலைகள் மன்றத்தின் உறுப்பினராக இருந்து எழுத்தாளர் வாரம் சிறப்புற நடக்க நாகோ உதவினார்.  மேலும், கூத்துப்பட்டறை, கதகளி,, நாடகம் போன்றவை சிங்கையில் நடக்க நாகோ உதவினார்.  புத்தக வெளியீடு செய்வதில் ஒரு புதிய போக்கினைக் கையாண்டவர் நாகோ.  தம் புத்தகங்கள் வெளியிடும்போது உரிய விலைக்கு மேல் யாரும் கொடுத்து வாங்கக் கூடாது  என்பதில் கண்டிப்பாக இருந்தவர்.  எழுத்தாளர்கள் எப்போதும் தன்மானத்துடன் விளங்க வேண்டும் என்பது அவர் கருத்தாகும்.


படைப்பாளர்களை இனங்கண்டு ஊக்கமூட்டியவர் _


      சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம், சிறுகதை, படைப்பவர்களுக்கு இயன்ற வரையில் ஊக்கமும் ஆக்கமும் ஊட்டுபவர் நாகோ.  இந்தவகையில் எழுத்தாளர்களைப் புத்தகம் வெளியிடச் செய்தவர் நாகோ தான்.  உதுமான்கனி பி. கிருஷ்ணன் ஆகியோர் புத்தகம் வெளியிடக் காரணமாக இருந்தவரும் நாகோ தான்.  இப்படிப் பலருக்கு எழுத்துலகில் ஊக்கமும் ஆக்கமும்  ஊட்டியவர் நாகோ.


படிப்பவர்களை ஊக்கப்படுத்துபவர் -


      படைப்பாளர்கள் மட்டுமல்லர், படைப்பாளர்கள் உருவாகப் படிப்பாளர்கள் தேவை. எனவே, நல்ல இலக்கியப் படைப்புகளை காலச்சுவடு, கணையாழி முதலிய இலக்கிய இதழ்களைப் படிக்கும் ஆர்வத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்த ‘‘வாசகர் வட்டம்’’ என்னும் அமைப்பினை நடத்தினார் நாகோ.  அதன் வாயிலாக ரெ. பாண்டியன் போன்றோரின் ஈடுபாட்டினை எடுத்துக் காட்டாகச் சொல்லி, வாசிப்புத்  திறன் கற்பித்தலில் புதிய முறையைக் கல்வி உலகில் புகுத்தியவர் நாகோ எனலாம்.


பலநாட்டு இலக்கியப் பாலம் அமைத்தவர் -


      இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர் கா. சிவதம்பி, மலேசியப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய இரா.தண்டாயுதம், மதுரைப்பல்கலைக் கழகப் பேராசிரியர் வேங்கடராமன் முதலிய பலருடன் நட்புக் கொண்டு அவர்களை வரவழைத்துச் சிங்கப்பூருக்கும் ஏனைய தமிழ் கூறும் உலகத்திற்கும் பாலமாக இருக்கவும் பாடுபட்டவர்.


      பொதுவாகச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியப் பரப்பைக் காலத்தாலும் இடத்தாலும் பெரிதாக்கிக் காட்டியர் நாகோ எனக் கூறலாம். பல இன மக்கள், பலநாட்டு மக்களிடையே சிங்கப்பூர் இலக்கியத்தை விரிவு படுத்தியதில் அவருக்குப் பங்குண்டு என்பதில் ஐயமில்லை.


(நா. கோவிந்தசாமி (நாகோ) எனும் படைப்பாளி எனும் தலைப்பில் 15.11.2009  அன்று தேசிய நூலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய பேச்சின் சுருக்கக் குறிப்புகள்.)


                           Thinnappan SP  Contribution of Na Govindasamy to Tamil Literature in Singapore Paper presented to the Seminar on Na Govindasamy: A Creator organized by the National Library Board, Singapore on 15th November 2009.In the Proceedings of the above seminar edited by Pushpalatha Naidu and others, Singapore, National Library Board, 2011 pp123-128


 
  நாகூர் நாயகரைப் பாடும் கீர்த்தனைத் திரட்டு (1896) - ஒரு சிறு அறிமுகம்.


       சிங்கப்பூர் முன்னோடித் தமிழ் இலக்கியங்களில் ஒன்று நா.மு.அப்துல்காதிர் புலவர் பாடிய கீர்த்தனைத் ;திரட்டு.  இதற்கு முன் தோன்றிய நூல்கள் யாழ்ப்பாணம் சி.. சதாசிவ பண்டிதர் இயற்றிய சிங்கை நகர் அந்தாதி சித்திரகவிகள் அடங்கிய நூலும், (1887),இரங்கசாமிதாசன் இயற்றிய குதிரைப் பந்தய லாவணி (1893) நூலும் ஆகும். இவற்றுள் முன்னது புலவர் இலக்கியம். பின்னது பொதுமக்கள் இலக்கியம். நா. மு.அப்துல்காதிர் புலவர் பாடிய கீர்த்தனத் திரட்டோ (1896) ஓர் இசைத் தமிழ் இலக்கியம். இதில் புலவர்க்குரிய புலமைக் கூறும், பொதுமக்கள் பாடுவதற்கேற்ற இசைமைக் கூறும் இணைந்துள்ளன.  சதாசிவ பண்டிதர் சைவ (இந்து) சயமச் சார்புடையவர். ரங்கசாமிதாசன் இந்து சமயச் சார்படையர். அப்துல் காதிர் புலவர் இசுலாமிய நெறியைச் சார்ந்தவர்.  இவர் சிங்கப்பூரில தோன்றிய முன்னோடி இசுலாமியப் புலவரில் ஒருவர் எனக் கூறுவதில் தவறில்லை.  இவருக்கு முன் வாழ்ந்தவர் மகுதூம் சாயபு. (1887) அவரும் ஒர் இசுலாமியர். பண்டிதர். சிங்கப்பூர் டேங் ரோடு முருகனைப் பாடுகிறார். குதிரைப்பந்தய லாவணி ஒரு பயண இலக்கியம். கீர்த்தனைத் திரட்டு ஆசிரியரோ இசுலாமிய நன்னெறிச் சான்றோர்களைப் பற்றிப் பாடுகிறார்.


      கீர்த்தனத் திரட்டு என்றால் கீர்த்தனைகளின் தொகுப்பு என்பது பொருளாகும். கீர்த்தனம் என்பது கீர்த்தனை என்பதன் மாற்று வடிவமாகும்.  கீர்த்தனை என்பது கருநாடக இசையிலுள்ள பலவகை உருப்படிகளில் ஒன்றாகும். கீர்த்தனைகளே அதிகமாக இயற்றப் பட்டுள்ள வகையாகும்.  சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்புதான் இவை தோற்றம் கண்டன.  கீர்த்தனையில் பல்லவி ( எடுப்பு) அனுபல்லவி(தொகுப்பு) சரணம் (முடிப்பு) என மூன்று உறுப்புகள் உண்டு. சிலவற்றில் பத்து அல்லது பதினைந்து சரணங்களும் உள்ளன.  சரணங்கள் யாவும் ஒரே வர்ணமெட்டை உடையவை.  கீர்த்தனைகளில் இசையைவிட சாகித்தியமே; அதிக முக்கியமானது.  ஒவ்வொரு கீர்த்தனைக்கும் இராகம், தாளம் உண்டு.  தமிழ்க் கீர்;த்தனைகளை இயற்றியவர்களில் அருணாசலக் கவிராயர், ;கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத் தாண்டவர் மூவரும் முக்கியமானவர்கள்.  இவர்களைத் தான் தமிழிசை வளர்த்த மும்மூர்த்திகள் எனப் போற்றுகிறோம்.  இவர்களைப் பின்பற்றிச் சிங்கப்பூரில் நா. மு. அப்துல்காதிர் புலவர் இயற்றிய நூலே கீர்த்தனைத் திரட்டு என்னும் நூலாகும்.


இந்நூலில் பின்வரும் சான்றோர்கள் பேரில் பாடிய பாடல்கள் உள்ளன.


1.  நபியுல்லா  13


2.  குத்தூபு முகையத்தீனாண்டவர்கள்  5


3.  சாகுல் கமீது ஒலியுல்லா  12


4.  முத்துப்பேட்டை சாம்பானோடையில் அடங்கிய செய்கு தாவூது ஒலியுல்லா


5.  தரங்கம்பாடி மஷாயிரு சாகிபொலி  1


6.  திருமலைராயன் பட்டணம் அப்துற்றகுமான் சாகிபொலி


7.  திருமங்கலக்குடி மவுலா அபுபக்கர் சாயபொலி  2


8.  பறங்கிப்பேட்டையில் அடங்கிய சாலிக்கண்டு சாகிபொலி  2


9.  கூத்தானல்லூர் அப்துல் முகம்மது சாயபொலி 2


10  ஏலங்குடி கரைப்பாக்கம் மலங்கு சாயபொலி  1


11.  திட்டசசேரி; மன்சூர் ஒலி  1


12.  பாசைப்பட்டடம் நயினா முகம்மது ஒலி  2


13.  சிங்கப்பூர் பெரிய பள்ளிவாயலில் அடங்கிய சாலிம் சாயபு


14.  மேற்படியூர் தஞ்சம்பாகரில் அடங்கிய செய்யிது நூகொலியுல்லா  1


15.  மேற்படியூர் கொடிமலையில் அடங்கிய சிக்கந்தர் சாகிபொலி


16.  கூத்தானல்லூர் அப்துல் முகம்மது சாயபொலி பேரில் சிந்து  1
மொத்தம் 53 பாடல்கள்.


      இவை தவிர மேற்கண்ட சான்றோர்கள் பற்றிய கீர்த்தனை தொடங்கு முன் இன்னிசைப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.  ஒரு வெண்பாவும ;உள்ளது.  ஒரு கீர்த்தனையில் மிகுதியான மலாய் மொழிச் சொற்கள் உள்ளன.


      மேற்கண்ட சான்றோர்களில் மூவர் (13 . 14, 15) சிங்கப்பூரில் அடங்கியவர்கள்.  ஏனையோர் தமிழகத்தில் அடங்கியவர்கள்.


      அப்துல்காதிர் புலவர் பற்றிய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் ஆராயப்பட வேண்டியவை.  இந்த நூலை நோக்கும்போது அவர் ஓர் இசுலாமிய நெறிப் பற்றாளர் என்பதும், இயற்றமிழ்ப் புலமையும் இசைத்தமிழ் அறிவும் மிக்கவர் என்பதும், தமிழோடு மலாய் மொழியும் தெரிந்தவர் என்பதும் தெரிய வருகின்றன.  ஒவ்வோர் கீர்த்தனைக்கும் ராகமும் தாளமும் குறிப்பிடப் பட்டுள்ளன.  இவையெல்லாம் எதிரகால ஆய்வுக்குரியவை.  இவர் நூல் 58 பக்கங்கள் கொண்ட ஒன்றாகும். 


      சிங்கப்பூர் தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் உள்ள நாகூர் தர்கா தமிழக நாகூரில் அடக்கமாகியிருக்கும் இறைநேசர் ஷாகுல் ஹமீது நாயகர் நினைவாகக் கட்டப் பட்டது. அவர் பற்றிக்கீர்த்தனத்; திரட்டில் 12 பாடல்கள் உள்ளன.  தொடக்கத்தில் ஓர் இன்னிசைப்;பாடலும் இடையில் ஒரு நேரிசை வெண்பாவும் மேற்கண்ட 12 கீர்த்தனைகளுடன் இடம் பெற்றுள்ள்ன. (பக் 17-27) தொடக்க இன்னிசைப் பாடலில் அப்துல்காதிர் ‘‘நெஞ்சமே நொந்து உழன்று நிலை தடுமாறினேன் ஏழை தஞ்சமே உங்கள் சரண் சாகுல் கமீது  ஒலியே’’ என்று ஷாகுல் ஹமீது ஒலியிடம் சரணடைகிறார்.


      நேரிசை வெண்பாவைப் பாருங்கள் -


            ‘‘உலையின் மெழுகதுபோல் உள்ளம் உருகி


             நிலையிழந்து வாடுகிறேன் , நீதா - தலையறியேன்


             கோருங் கவிக்கிரங்கி குன்றா(து) அருள்கொடுக்க


             வாரும்வா ரும்க மிதே’’


உலையில் (தீயில்) பட்ட மெழுகுபோல் உள்ளம் உருகுதல் ஒரு நல்ல உவமை.


      பல்லவிகளைப் பார்ப்போம். கீர்த்தனையில் பல்லவிகள்தான் திரும்பத் திரும்ப வருவன.  இவை கீர்த்தனையின் சாரத்தைக் கூறுவன.


1.  தஞ்சமே உங்கள் கஞ்சமாம் மலரடி


   சாகுல்  கமீது ஒலியே


   (தஞ்சம் - அடைக்கலம் சரண்


    கஞ்சம் - தாமரை மலர் அடி - மலர்போன்ற அடி)


     


2.  தருணம் ஈது ஐயா - சாகமிதே


   தருணம் ஈது ஐயா.
3.  வாரும் வாரும்  இவ்வேளையே


   தாரும் தாரும்  பொற்றாளையே


                     (பொற்றாள் - பொன் (தங்கம்) போன்ற திருவடி)
4. சந்ததம் - புகழ்மலி சரணாம்புயம் உதவும்


  சாகுல் கமீது என்பீரே


    சந்ததம் - நாளும்  மலி - நிறைந்த


    அம்புயம் - தாமரை போன்ற திருவடி.
5.  இந்த அவகாசம் ஒலிக்கு ஆர் பரைப்பாரடி


   எனக்கு ஆர்கதி இனி;வேறு அடி.
6.  கருணைக் கடைக்கண் பாரும் ஐயா என்றன்


   கவலை தீரும் ஐயா.
7.  சாதாக் சற்குரு பேரர்அடி அப்துல்


   காதிர் என்னும் அதிவய நாமர் அடி


   (நாமம் - பெயர் கொண்டவர்)
8.  தருதிர் இருபதம், தந்து அருள் செயும் ஐயா


   தாசன் உடல்பிணி அகல மா மெய்யா.


                           (மெய்யா - உண்மையானவரே)


9.  துயர் மிஞ்சியே மனம் வாடுதே


   சொலஆர் உளர் உமை அல்லாதே.
10. சாகிபேகஞ்ச சவாயிகாதிறொலி


   சருதாரே ஓட்டும்  என்கலி.
11. இக்கதி; ஆச்சே முன்  தீர்மானம்


   இதுவா      அவமானம்.


இந்தப் பல்லவி ;வரிகள் அப்துல்காதிர் இறைநேசர் ஷாகுல்    மீது அவர்களின் அடியை அருளை அடைய வேண்டும் வேட்கையை உணர்த்துகின்றன. ஷாகுல் ஹமீது மீது கொண்டிருந்த ஆசிரியரின் பக்தி உணர்வும் புலப்படுகின்றது. 


      இறுதியாக ஒருபாடல்.


            கண்டித்து எனை  வாட்டுதே;  பொல்லாக்  கலிகலி


            வண்டினம்  பாடும்  நன்னாகை  வாழும்  ஒலிஒலி


            பெண்டு  தாய்  சுற்றத்ததார்  வசைபேசச்  சொலி சொலி


            கண்டும்  கேட்டும்  தானேனே காப்பீர் ஒலிஒலி


            பாடி நாடிக் கூவப் கூவப்  பார்ப்பார்  இலிஇலி


            வாடிடும்  பயிர்க்கு  மழை மானும்  ஒலிஒலி


            ஆண் பெண்டு  பிள்ளை பொன் பூ ஆ உயிர் கொலி கொலி


            மானம்  ஓங்கும் புகழோய்  மதித்தான்  - ஒலி ஒலி


            ஈகை  யசன்குத்தூசு  ஈன்ற  இணையில் அலி அலி


            நாகையான்  துயர்  அகல நாடும் ஒலி ஒலி.


                  (அசன் குத்தூசு - சாகுல் ஹமீது தந்தையார்)


‘‘நாகையான்’’ என்பது அப்துல் காதிர் நாகபட்டிணத்தார் என்பதைக் குறிக்கிறது.  இன்னோரிடத்தில்  ஷாகுல் ஹமீது அவர்களைநாகையான் இன்பத் தமிழுக்கு அன்பரடி’’ என்று (பக்.25) பாராட்டுகிறார்.  இன்னோரிடத்தில் ‘‘நாகையான் தமிழைத் தாகமாய்க் கொள்வோரேஎன்றும் கூறிப் போற்றுகின்றார். ஒரு கீர்த்தனையில் ‘‘சிங்கை நகர் மீதே தொண்டன்  மொழி  தள்ளாதே’’(பக் -22) என்றும் கூறுவதால் புலவரின் சிங்கப்பூர் வாழ்வு பற்றி உணர்கிறோம்.


      அனுபல்லவி, சரணங்களில் அப்துல் காதீர், நாகூர் நாயகராகிய ஷாகுல் ஹமீது ஒலி அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நிகழ்ந்த அற்புதச் செயல்கள், அவர் பெற்றோர் பெருமை ஆகியவற்றைப் பாடி இவரது கவலை, பிணி தீர்க்க வேண்டுகோளை முன் வைக்கிறார்.


      நாகூர் நாயகர் புகழ்பாடும் இந்தக் கீர்த்தனத் திரட்டு என்னும் நூலை இஸ்லாமிய அறிஞர்கள் எடுத்து ஆய்வு செய்ய வேண்டுகிறேன்.  சிங்கையில் அடங்கிய இறை சீலர்களைப் பற்றியம் இந்நூல் கூறும் கருத்துகளை ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதலாம். கிரந்த எழுத்துகளைத் த்விர்த்துத் தமிழெழுத்துக்களைக் கொண்டே எழுதும் இவர் முயற்சி பாராட்டத் தக்கது.  எனவே மொழியியல் நோக்கிலும் இந்நூலை ஆராயலாம். தமிழிசை, (கர்நாடக இசை) மலாய் இசை, மேற்கத்திய ஆங்கில இசையிலும் கீர்த்தனைகள் அமைந்துள்ளன.  எனவே  இசை நோக்கிலும் இந்நூலை ஆராய இடம் உண்டு


நாகூர் தர்கா மரபுடைமை வளாகம் சிறப்புமலர்


3.12.2006.


Thinnappan SP, An Introduction to Kiirthanai Thirattu (1896),


               a pioneer Muslim work in Singapore in Nagore Dargah


               Heritage  Centre Souvenir Magazine. 3-12-2006, pp45-48.


முனாஜாத்துத் திரட்டு


சிங்கையில் வாழ்ந்து தம் சொந்த ஊரான நாகூருக்குச் சென்ற திரு ஜாபர் மொஹைத்தீன்  என்பவரிடமிருந்து கிடைக்கப் பெற்ற, 1872இல் அச்சிடப்பட்ட முனாஜாத்துத் திரட்டு என்ற கவிதை நூலே பழமையான நூலாக இப்போது கருதப்படுகிறது.  இதனை இயற்றியவர் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவர். முனாஜாத்து என்பது முஸ்லிம்கள் தமிழுக்குத் தந்த புதிய இலக்கிய வடிவங்களில் ஒன்று. இந்த அரபுச் சொல்லுக்குஇரசியமாய்ச் சொல்லுதல் என்பது பொருள். இறையருள் வேட்டல் என்னும் கருத்தும் உண்டு. இது தமிழ் நாட்டிலும், சிங்கப்பூரிலும் வாழ்ந்து மறைந்த இஸ்லாமிய இறைத்தூதர்களைப் பற்றிய தொகுப்பாகும். மேலும் சில இறைத்தூதர்கள், மதகுருமார்கள் பற்றிய கவிதைகளையும் சேர்த்து நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரே 1896ஆம் ஆண்டில் கீர்த்தனத் திரட்டு என்னும் பெயரில் மறு பதிப்பாக வெளியிட்டுள்ளார். இந்நூல் பற்றிய ஓர் அறிமுகக் கட்டுரையைச் சுப திண்ணப்பன் இங்கு வெளியிட்டுள்ளார்.
முற்றும்


சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில்  முதல் இசைப்பாடல் *
டாக்டர் சுப.திண்ணப்பன்


சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம்
கவிஞர் முரசு நெடுமாறன் அவர்களைத் தலைமைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு தொகுக்கப் பெற்று அண்மையில்(1997) வெளியிடப்பட்ட மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்னும் நூலில் நாராயணசாமி நாயகன் வெ என்னும் தலைப்பில் ஒரு குறிப்பும் (பக் 820), அவர் இயற்றிய ஙூஇருந்தும் பலன் என்ன?ஙூ என்னும் தலைப்பிலான இசைப்பாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளன(பாடல் எண் 399, பக் 581-82). இக்குறிப்பின்வழி நாராயணசாமி நாயகர் 1866-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் வாழ்ந்தவர் என்றும், அப்போது வ இராசகோபால் என்பவரை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளிவந்த ஙூதத்துவபோதினிஙூ என்னும் மாத இதழில் இசைப்பாடல்களும் கவிதைகளும் எழுதியுள்ளார் என்றும், இவர் பெயருக்கு முன்னால் ஙூஙூசிங்கப்பூர்ச் சித்திர கவி வல்லஙூஙூ என்னும், அடைமொழி சேர்க்கப்பெற்றுள்ளது என்றும் உணர முடிகிறது. இதற்கு மேலாக இத்தொகுப்பு நூலில் இடம்பெற்ற பாடல்களில் நாராயணசாமி நாயகர் பாடலே காலத்தால் முந்தியதாகும் என்னும் குறிப்பும் உள்ளது. எனவே மலேசிய, சிங்கப்பூர்த் தமிழ்க் கவிஞர்களில் நாராயணசாமி நாயகரே மூத்த கவிஞர் என இப்போது உணர முடிகிறது.  இவர் இயற்றிய பாடலே   முதல் இசைத் தமிழ்ப் பாடல் எனக் கருத வேண்டிய நிலை உள்ளது.
மேலும் இவர் சித்திரக்கவி பாடுவதிலும் சிறந்த புலமை பெற்றவர் எனவும் அறிகிறோம்.     சித்திர கவிகள் பற்றி விரிவாக ஆராய்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடாக வே இரா மாதவன் என்பவர் 1983-இல் வெளியிட்ட நூலில் சித்திரக்கவிகள் பாடியுள்ள புலவர்களைப் பட்டியலிட்டுப் பின் இணைப்பாகத் தந்துள்ளார். (பக்கம் 415-16). இப்பட்டியலில் நாராயணசாமி நாயகர் (சிங்கப்பூர்ச் சித்திரக்கவி நாவலர் என்ற பெயர்(வரிசை எண் 49) இடம்பெற்றிருக்கக் காணலாம். இவர் வாழ்ந்த காலம் குறிப்பிடப் பெறாமல் உள்ளது. நூலினுள்ளேயும்(பக் 45) சித்திரக்கவி பாடும் வல்லமை கருதிச் சிறப்புப் பட்டம் பெற்றவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது மாதவன் சிங்கப்பூர்ச் சித்திரக்கவி நாயகர் சி வே நாராயணசாமி நாயகர் என்று எடுத்துக்காட்டுத் தந்துள்ளார்.


   


      இவர் பாடிய ஙூஙூஇருந்தும் பலனென்ன?ஙூஙூ என்னும் தலைப்புள்ள இசைப்பாடல் 28.5.1866 தத்துவ போதினி இதழில் வெளியிடப்பட்டது. ஆனந்தபைரவி இராகத்தில் ஆதி தாளத்தில் பாடுதற்குரியது என்னும் குறிப்பும் தலைப்பில் உள்ளது. எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்னும் மூன்று பகுதிகளுடன் அமைந்துள்ளது. ஙூஙூஇருந்தும் பலனென்ன? ஐயையோ இறந்தும் பலனென்ன?ஙூஙூ என்னும் எடுப்புடன் தொடங்கி  பரந் திருவடியைப் பணியாமல் இருந்தும் பலனென்ன? இறந்தும் பலனென்ன? என்ற கேள்விகளைத் தொடுத்துப் பாதகங்கள் புரிந்து படிப்பறிவற்று மூடநம்பிக்கைகளுடன் வாழ்ந்து மதிகெட்டுப் பெண் மோகம் கொண்டு மேன்மை பெறாது இருக்கும் தமிழர்களை எண்ணி வருந்திப் பாடுகின்றார், நாயகர். மேலும் பரமனைக் கும்பிடாமல் செல்வமுடன் இருந்தும் பலன் என்ன? இறந்தும் பலன் என்ன? என்று கேட்டுப் பாடலை முடிக்கின்றார் இவர். ஙூஙூஓரறிவு போலே கிடந்து தீதுறும் கல்லும் கட்டையால் செய்த பல சொருபங்களைக் காதலாய்ப் பணிந்தெ ழுவர்  கர்த்தன் கழலை மறந்தேஙூஙூ என்னும் பாடலில் உள்ள வரிகள் அக்காலத்தில் மலேசிய சிங்கையில் வாழ்ந்த மக்கள் பலவகை உருவ வழிபாட்டில் மூழ்கி இருந்ததைக் காட்டுகின்றன. இப்பாடல்வழி நாராயணசாமி நாயகர் பயனுடைய வாழ்வு பரமனடி பணியும் வாழ்வே என்னும் கருத்தினர் என்பதை உணர முடிகிறது. போலிப் பக்தர்களையும், காமுகர்களையும், மூட நம்பிக்கையாளர்களையும் நாயகர் இப்பாடலில் சாடி நிற்பதையும் காண முடிகிறது.


  நாராயணசாமி நாயகர்மொழிப் புலமையும் இசைப்புலமையும் மிக்கவர் எனவும் அறிய முடிகிறது. இருப்பினும் இவர் பாடிய சித்திரகவிகள் எதுவும் நமக்கு இன்று கிடைக்கவில்லை. இவர்க்குரிய பட்டப்பெயர் வழியாகவே இவர் சித்திரக்கவி இயற்றியவர் என்று தெரிந்து கொள்கிறோம்.
இவர் பாடிய  இசைத்தமிழ்ப் பாடல் வருமாறு:


இருந்தும் பலனென்ன?
இராகம் : ஆனந்த பைரவி


தாளம் : ஆதி
எடுப்பு


இருந்தும்பலன் என்ன? ஐயையோ


இறந்தும்பலன் என்ன?
தொடுப்பு
இருந்தும்பலன் என்ன? இறந்தும்பலன் என்ன?


பரன்திரு வடிதன்னைச் சிரமொத்துப் பணியாமல்      (இருந்தும்)
முடிப்பு
பாதகம் ஐந்தும் புரிந்து-பொல்லாப்


      படுகுழிக்கு ஆளாய்ச் சிறந்து


ஓது கலைஉண்மை கடந்து- ஐயையோ


      ஓரறிவு போலே கிடந்து,


தீதுறும் கல்லுங் கட்டையால், செய்த பல சொருபங்களைக்


காதலாய்ப் பணிந்து எழுவர், கர்த்தன் கழலை மறந்தே    (இருந்தும்)
சதிகள் மிகவும் செய்தே- அரிய


      தாசர் போல் தன்னைப் பாவித்துக்,


கதி கூறுவோரைப் பகைத்து- ஐயையோ


      காலனுக்கு உயிர் வளர்த்து
மதிகெட்டு மண் விண் தன்னில், மேன்மை ஒன்று இல்லா


அதிவல்ல நாயன் கழல் அகத்தில் பணியாது என்றும்      (இருந்தும்)
மாதைக் கோவிலாட்டி வைத்து- அவளின்


      மதுர மொழியை யாசித்து,


காதை அஞ்ஞானம் படித்தே- அதனில்


      கண்டதை மெய்என்ற பித்து,


பேதையுற்ற மாந்தர்களைப் பின்னும் பவத்தில் ஆட்டிக்


கோதையுற்ற பரமனைக் கும்பிடாமல் செல்வமுடன்       (இருந்தும்)


துணை நூல்கள்
முரசு நெடுமாறன்  மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், கிள்ளான்,


      அருள் பதிப்பகம், 1997.


மாதவன், வே.இரா. சித்திரக்கவிகள் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி   


    நிறுவனம் 1983.
*சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக வெள்ளி விழா ஆய்வரங்கம் 22-7-2001 கவிதை பற்றிய அமர்வுத் தலைமை உரை
உமறுப் புலவர் யார்?  
     17ஆம் நூற்றாண்டில் தென் இந்தியாவில் உள்ள கீழக்கரையில் வாழ்ந்த
ஓர் இஸ்லமியத் தமிழ்ப் புலவர்.  நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக்
கூறும் சீறாப் புராணம் என்னும் காவியத்தை இயற்றியவர். சீதக்காதி என்னும்
வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர். இவர் சமாதி இன்றும் எட்டய புரத்தில் உள்ளது.
      தென்கிழக்கு ஆசியாவில் தமிழ்வழிக் கல்வி கற்பித்த ஒரே உயர்நிலைப்


பள்ளியாகச் சிங்கப்பூரில் ( 1960-1987)  விளங்கிய   உமறுப் புலவர் உயர்நிலைப்


பள்ளி நினைவாக இந்தத்தமிழ் நிலையம் உமறுப் புலவர் பெயரைக் கொண்டு


விளங்குகிறது.
சிங்கைத் தமிழர் வரலாற்றிலக்கிய வளம்


டாக்டர் சுப திண்ணப்பன்


           நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்.
இன்றைய நிகழ்ச்சி நாளைய வரலாறு. அதுபோல நேற்றைய நிகழ்ச்சி இன்றைய வரலாறு. வரலாறு என்பது மனிதனின் கடந்தகால நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டது. நேற்றைய வரலாற்றை இன்று நாம் அறிவதால் நாளைய வாழ்க்கையை நாம் செப்பனிட்டுக் கொள்ள முடியும். ``எதிர் காலத்தைப் பற்றி ஆராய்வதற்கு முன் எப்படி இங்கே நீ வந்தாய் என்பதை எண்ணிப்பார்`` என்று இதனை நம் மூத்த அமைச்சர் லீ குவான் யூ அவர்களும் வலியுறுத்துகின்றார். இலக்கியம் என்பதோ இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலங்களையும் காட்டும் ஒரு காலக் கண்ணாடி. நம் வாழ்வுக்கு வேண்டிய குறிக்கோள்களை -  இலட்சியங்களை எடுத்துக்கூறுவது இலக்கியம்.  தான் எழுந்த காலத்தைப் படம் பிடித்துக் காட்டும் பண்புடையது. வரலாறு என்னும் தமிழ்ச் சொற்றொடரின் பொருள் வருகை பற்றிய வழி என்பதாகும். அந்த அடிப்படையில் சிங்கப்பூருக்குத் தமிழர்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்த வழியை விளக்கிச் சுவைபடச் சொல்கிறது ஓர் இலக்கியம். அந்த இலக்கியத்தின் பெயர் அதி விநோதக் குதிரைப் பந்தய லாவணி. அதன் ஆசிரியர் பெயர் நா.வ.இரங்கசாமி தாசன். அந்த நூல் எழுந்த காலம் 1893 ஏப்பிரல். இந்த நூல் காட்டும் வரலாற்றிலக்கிய வளத்தை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
சிங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றை நோக்கும்போது சிங்கைத் தமிழ் இலக்கியத்தில் இரண்டு நெறிகள் இருப்பதை நாம் உணர முடியும். ஒன்று புலவர் இலக்கிய நெறி; மற்றொன்று பொதுமக்கள் இலக்கிய நெறி. புலவர் இலக்கிய நெறி என்பது கற்றோரால் கற்றோருக்கென்று உருவாக்கப்பட்ட இலக்கியங்களை உடையது. இலக்கண மரபு குன்றாது இருப்பது, தொன்மை இலக்கியச் செல்வாக்குக்கு உட்பட்டது. பொதுமக்கள் நெறி என்பது ஓரளவு கற்றோரால் உருவாக்கப்பட்ட இலக்கியங்களாய் இருப்பினும் நாட்டுப்புற இலக்கியச் செல்வாக்குக்கு ஆட்பட்ட போக்குடையது. படிப்பறிவு இல்லாத பாமர மக்களும் கேட்டுச் சுவைப்பதற்குரிய ஒன்று. பெரும்பாலும் வாய்மொழி இலக்கியப் பண்புடையது. ஏட்டில் எழுதா இலக்கிய இயல்புடையது. சிங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் புலவர் இலக்கிய நெறியைத் தோற்றுவித்தவர் இலங்கைச் சதாசிவ பண்டிதர். அவர் 1887இல் இயற்றி வெளியிட்ட சிங்கை நகர் அந்தாதியும் சித்திரகவியுமே புலவர் நெறி இலக்கியத் தொடக்கங்கள் ஆகவுள்ளன. அதுபோலப் பொதுமக்கள் இலக்கிய நெறியைத் தோற்றுவித்தவர் தமிழகத்தைச் சார்ந்த இரங்கசாமி தாசன். இவர் 1893 இல் இயற்றிய அதிவினோதக் குதிரைப் பந்தய லாவணி என்னும் நூலே பொதுமக்கள் இலக்கிய நெறிக்குரிய தொடக்க நூலாகும். சிங்கை நகர் அந்தாதி சித்திரகவி நூல்களும், குதிரைப் பந்தய லாவணியும் சிங்கப்பூர் தீனோதய வேந்திர சாலையில் அச்சிடப் பெற்றவை. இந்த அச்சகம் மக்தூம் சாயபுக்குரியது. இவர் சிங்கையில் முதன்முதல் சிங்கை நேசன் என்னும் தமிழ் இதழை நடத்தியவர். நல்ல எழுத்தாளர். ஏனைய எழுத்தாளர்களை ஊக்குவித்து நூல் வெளியிடச் செய்தவர். இந்த இருவகை நெறி இலக்கியங்களில் சிங்கை நகர் அந்தாதியும் சித்திரகவியும் சிங்கப்பூர் தேங் ரோடு முருகனைப் பற்றிப் பாடப் பெற்றவை. அதாவது இறைவனைப் பாடிடும் பக்தி நூல். ஆனால் குதிரைப் பந்தய லாவணியோ மனிதனை மையமாக வைத்துச்- சிங்கப்பூருக்குத் தஞ்சைப் பகுதியிலிருந்து ஒரு கணவனும் மனைவியும் குதிரைப் பந்தயம் காணவந்ததை மையமாக வைத்துப்- பாடப்பட்ட இன்பச் சுவை நூலாகும். சிங்கை நகர் அந்தாதியிலும் சித்திரக் கவியிலும் சிங்கை வரலாற்றுக் கூறுகள் மிகுதியாக இடம்பெற வாய்ப்பில்லை. லாவணியில் வரலாற்றுக் கூறுகள் குறிப்பாகத் தமிழர்கள் வந்த பயண வழி விளக்கம் பெற்றுள்ளது. தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு கணவனும் மனைவியும் நாகப்பட்டினம் வந்து கப்பலேறிப் பினாங்கு மலாக்கா வழியாகச் சிங்கை வந்து இறங்கிச் சில நகர்ப்புறப் பகுதிகளைப் பார்த்துக் குதிரைப் பந்தயத்தையும் கண்டுகளித்து இறுதியில் இச்சிங்கையில் மகிழ்ச்சியுடன் இருப்பதாக இலாவணி சித்திரிக்கின்றது.
முன்னோடி ஆய்வுக் குறிப்புகள்
குதிரைப் பந்தய லாவணி பற்றிய குறிப்புகளை -  சில சிறப்பியல்புகளைத் திருவாளர்கள் நா.கோவிந்த சாமியும் (1979)வை.திருநாவுக்கரசும் (1985) தத்தம் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளனர். கிடைத்துள்ள தொடக்க கால நூல்களில் சிங்கப்பூர்ப்பின்னணியை மையமாகக் கொண்ட முதல் தமிழ்ப் படைப்பிலக்கியம் குதிரைப் பந்தய லாவணி என்பது அவர்கள் கருத்து. இந்நூல் எழுந்த காலத்தில் இருந்த (1893ல்) சிங்கப்பூர் நகரின் தோற்றம், சாலைக் காட்சிகள், சமூக அமைப்பு, பொழுது போக்கு ஆகியவற்றை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகின்றது என்றும், அன்றைய சிங்கப்பூரில் தமிழர் பேச்சில் வழங்கிய மலாய்ச் சொற்களையும் எடுத்தாளுகின்றது என்றும் அவர்கள் குறித்துள்ளனர். சிங்கை நகர் அந்தாதியுடன் இந்நூலை ஒப்பிட்டு முதல் நூலைப் போல இலக்கிய நடையையும் கடினமான சொற்களையும் பயன்படுத்தாமல் அன்றைய சிங்கப்பூரில் வழங்கிய தமிழ்ச் சொற்றொடர்களையும் மலாய்ச் சொற்களையும் கொண்டு இந்நூல் விளங்குவதைத் திருநாவுக்கரசு குறிப்பிடுகிறார். இலக்கிய நயத்திலும் இலக்கண அமைதியாலும் மேம்பட்ட நூலாக இதனைக் கருத முடியாது என்பதும் அவர் கருத்து. மன்னர்களையும் தெய்வங்களையும் சிறப்பித்துப் பாடிய ஒரு காலக்கட்டத்தில் ஒரு சாதாரணத் தமிழ்க் குடியேறியின் வாழ்க்கையை லாவணியில் பாடக்கூடிய ஒரு துணிவு இரங்கசாமி தாசனுக்கு மட்டுமே இருந்தது என்று கோவிந்தசாமி இந்நூலாசிரியரைப் பாராட்டுகிறார். சிங்கப்பூர்க் கவிதைத் தொகுப்பில் தமிழ்க்கவிதைகளைத் தொகுத்த திருநாவுக்கரசு பிரிட்டிஷ் அரும்பொருளகத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய இந்நூலின் தெளிவற்ற படியினின்று பாக்களின் சொற்கள் அனைத்தையும் முழுதாகப் படிக்க முடியவில்லை. எனவே லாவணியின் சுவையான ஒரு பகுதி மட்டுமே இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது`` என்று சுட்டுகிறார். எனவே இந்நூலைப் பற்றிய தனி ஆய்வு இதுவரை செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. அம்முயற்சியை இக்கட்டுரை மேற்கொண்டது. இக்கட்டுரைக்கு முதன்மைச் சான்றாக விளங்குவது அண்மையில் சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தில் அதிவினோதக் குதிரைப் பந்தய லாவணி என்னும் நூலின் படியே (At the Races (Tamil) RBS 894.8111 REN No. 184. BO 3040212A) இந்நூல் அட்டைப் படம் உட்பட 9 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. துணைச் சான்றுகளாகச் சிங்கப்பூர் வரலாறு, கட்டிடங்கள் தொடர்பான ஆங்கில நூல்களும் இப்போது சிங்கையில் வாழும் முதியோர்கள் சிலரிடம் பெற்ற தகவல்களும்


அமைகின்றன.


பெயர்:
தேசிய நூலகத்தில் கிடைத்த நூலின் முகப்பு அட்டையில் அதிவினோதக் குதிரைப் பந்தய லாவணி என்னும் பெயர் உள்ளது. நூலின் தொடக்கத்திலோ குதிரைப் பந்தய லாவணி என்று உள்ளது. அதிவினோத என்னும் அடைமொழி இல்லை. முகப்பு அட்டையில் நூலாசிரியர்  அவையடக்கப்பகுதியில் ``இந்தக் குதிரைப் பந்தய லாவணி`` என்னும் சொற்றொடரையே கையாள்கிறார். ஒவ்வொரு பக்கத்திலும் இப்பெயரே தலைப்பாக உள்ளது. மேலும் இந்நூலாசிரியர் முகப்பு அட்டைப் பகுதியின் இறுதியில் ``காரிகை நன்னூல் இலக்கியங் கற்ற கனவான்கள் இச்சிங்காரத்தில் அநேக பிழை இருந்தாலும் பொருத்தருள்க`` என்று குறிப்பிடுவதால் சிங்காரம் என்னும் பெயராலும் ஆசிரியர் இந்நூலை அழைத்துள்ளார் எனத் தெரிகிறது. நூலின் இறுதிப் பாடலிலும் (21) ``ரெங்கசாமி யான் பூபாலன் இயற்றினேன் சிங்காரம் அரிந்து கொள்`` எனக் கூறுவதால் இது மேலும் உறுதிப்படுகிறது. எனவே இந்நூல் அதிவினோதக் குதிரைப் பந்தய லாவணி, குதிரைப் பந்தய லாவணி, சிங்காரம்  என்னும் மூன்று பெயர்களைக் கொண்டுள்ளது எனலாம்.இவற்றுள் குதிரைப் பந்தய லாவணி என்பதே பெருவழக்கினது. இவற்றின் விளக்கம் பற்றிக் காண்போம்.
லாவணி என்னும் சொல்லுக்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி புராணக் கதையை ஆதாரமாக் கொண்டு இருவர் விவாதம் செய்வதுபோல் பாடல்களைப் பாடி நடத்தும் கலை நிகழ்ச்சி a performance in which songs are sung debating an issue usually on a mytholigical subject (பக் 889)என்று கூறுகிறது.சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதியோ (லெக்சிகன்) லாவணி என்பது மகாராட்டிர மொழியிலுள்ள இசைப் பாடல்வகை (பக் 3440) என லாவணியின் மூலத்தைப் பற்றிக் கூறுகிறது. லாவணி என்பது மகாராட்டிரப் பகுதியிலிருந்து தமிழகத்திற்கு வந்த ஒரு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி. வடார்க்காடு, தென்னார்க்காடு, தஞ்சை, திருச்சி மாவட்ட பகுதிகளில் கோடைக் காலமாகிய சித்திரை மாதத்தில் மழையை வரவழைக்கும் பொருட்டு நடத்தப்படுகிறது. மராத்திமொழியில் லாவணி என்னும் சொல் இசைப்பாடல் வகை ஒன்றைக் குறிக்கும். தமிழகத்தில் தம்பு, தம்பட்டம், தம்பை, தண்டிமா, தப்பளாக்கட்டை முதலிய இசைக் கருவிகளுடன் இந்நிகழ்ச்சி நடத்தப்படும். காதற்கடவுளாகிய மன்மதனுக்குரிய விழாவான காமன் பண்டிகை -  காமண்டை விழாவின்போது லாவணி நிழ்ச்சி நடத்தப்படும். இமயமலையில் ஒரு காலத்தில் கடுந்தவம் புரிந்த சிவபெருமானின் தவத்தைக் கலைக்குமாறு மன்மதனிடம் தேவர்கள் வேண்டினர். இமவான் மகளாகிய பார்வதியைச் சிவன் திருமணம் செய்து கொள்வதற்காகத் தேவர்கள் வேண்டினர். அதற்கேற்ப மன்மதன் சிவபெருமான்மீது மலரம்பினை எய்தான். சிவன் நெற்றிக் கண் விழித்துச் சினந்து நோக்கி அவனைச் சாம்பலாகுமாறு எரித்துவிட்டார். மன்மதன் மனைவி ரதி அழுது புலம்பிச் சிவனிடம் கணவனை மீட்டுத் தருமாறு கேட்க அவளுக்கு இரங்கிச் சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து எழச் செய்தார். ஆனால் மன்மதன் உருவம் ரதிக்கு மட்டுமே தெரியுமாறு செய்தார். இக்கதையை மையமாக வைத்தே லாவணியில் இரு கட்சியினர் எதிர்ப்பாட்டு எழுப்பிப் பாடுவர். ஒரு கட்சி மனமதன் எரிந்துவிட்டான் என உரைக்கும். இதற்கு எரிந்த கட்சி என்று பெயர். இன்னொரு கட்சி மன்மதன் எரியவில்லை என்று மறுத்து வாதாடும். இதற்கு எரியாத கட்சி என்று பெயர். இவர்கள் வாதிடும் முறை கேலி கிண்டலுடன் புராணக்கதைக் குறிப்புகளை விளக்கும் வகையில் பொதுமக்களுக்குச் சுவையாக இருக்கும். இந்த நிழ்ச்சி இரவு வேளைகளில் காமன் பண்டிகையில் வைக்கோலால் செய்யப்பட்ட காமன் உருவத்தை எரித்த பிறகு நடக்கும். இரவு 10 மணி அளவில் தொடங்கி விடியும் வரை கூட நீடிக்கும். இந்நிகழ்ச்சி நடத்தும் இசைக் குழுவினர் தமிழகத்தில் உள்ளனர். (Encyclopeadia of Tamil Literature Vol 1). இந்த அடிப்படையில் பார்த்தால் குதிரைப் பந்தய லாவணி ஆசிரியர் இந்நூலட்டையில் கூறியதற்கேற்ப இது சிவன் கண்ணால் தகித்த -  எரித்த காமனை அந்தக் காமன் எரியலை என்று உரைக்கிறது. பிறகு ஆசிரியரே ``கனவான்கள் இப்போது இந்தக் குதிரைப் பந்தய லாவணியை எரிந்த கஷியில் புகலும்படி கேட்டுக் கொண்டதால் யானாகிய எளியேன்`` எடுத்துரைப்பதாக் கூறுகிறார் (அட்டைப்பகுதி). எனினும் இக்கதை தொடர்பாக இந்நூல் மிகுதியாக ஒன்றும் கூறவில்லை.இந்நூலில்  மன்மதன் பற்றிய செய்திகள் ஒரு சில இடங்களில் இடம்பெற்றுள்ளன. 
அதிவினோத என்னும் அடைமொழியில் அதி என்னும் சொல் மிகுதியான என்னும் பொருள் உடையது. வழக்கமானதாகவோ இயற்கையானதாகவோ இல்லாமல் வியப்பைத் தோற்றுவிப்பதாக -  புதுமையானதாக அமைவது -  அதாவது லாவணி வழக்கமாக மன்மதன் எரிந்த கட்சி, எரியாத கட்சி பற்றித்தான் அமையும். ஆனால் ரங்கசாமி தாசனோ இவ்வழக்கத்திற்கு மாறாகக் குதிரைப் பந்தயத்தையும் சிங்கைப் பயணத்தையும் பற்றிப் பாடுவதால் இந்த அதிவினோத அடைமொழி பெற்றது. எனவே இது ஒரு புதிய படைப்பு இலக்கியம். சிங்கையில் குதிரைப் பந்தயத்தைப் பார்க்க வருவதையே மையமாகக் கொண்ட கருவைப் பெற்றிருப்பதால் இது குதிரைப் பந்தய லாவணி ஆயிற்று.
சிங்காரம் என்னும் சொல் சிருங்காரம் என்னும் சமஸ்கிருதச் சொல்லின் அடிப்படையில் தோன்றியது என்றும், நவரசத்துள் ஒன்றாகிய இன்பச் சுவை, அலங்காரம் அழகு என்னும் பொருட்களை உடையது என்றும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது. இந்நூல் பாடல்களின் இடையிடையே கணவன் மனைவி கலவி இன்பம் பற்றிப் பேசுவதையும், குதிரைப் பந்தயப் போட்டியில் கலவியையே பணயமாக வைத்துப் பேசுவதையும் நோக்க இந்நூல் கணவன் மனைவி உறவு இன்பமாகிய இன்பச் சுவை பற்றியதாகையால் இது சிங்காரம் எனப்பட்டது எனலாம். இந்நூல் படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் பொழுது போக்காக இன்பம் தரும் இயல்பினதால் இது சிங்காரமாயிற்று என்றும் கூறலாம். சிங்கைப் பயணத்தைப் பாடல் வரழிச் சுவைப்பட சொல்லும் அழகுடையதாகலின் அலங்காரத்துடன் இருப்பதால் இதனைச் சிங்காரம் என்று அழைத்தார் எனலாம்.
அழகுணர்ச்சியும் இன்பப் பயனும் புதுமை நாட்டமும் கொண்ட ஓர் இலக்கியப் படைப்பு அதிவினோதக் குதிரைப் பந்தய லாவணி என்பதை அதன் பெயர்களே நன்கு உணர்த்துகின்றன.
ஆசிரியர்:
குதிரைப் பந்தய லாவணி முகப்பு அட்டையின்படி இந்நூல் `` மகா-ள-ள-ஸ்ரீ, குருங்குளம் கருப்பண்ண உபாத்தியாயரின் மாணாக்கன், மகா-ள-ள-ஸ்ரீ, ஆதி திருக்குடந்தை சரபக்கொடி நா.வ.இரங்கசாமி தாசனால் இயற்றியது`` என்று அறிய முடிகிறது. அட்டையின் முகப்பிலுள்ள அவையடக்கப் பகுதியின் இறுதியில் கை இலட்சினையுடன் (முத்திரையுடன்) நா.வ.கி.தாசன் என்று உள்ளது. நூலில் உள்ள கடவுள் வாழ்த்தாக அமையும் சிங்கை நகர் சுப்பிரமணியர் பேரில் பதம் என்னும் இசைப் பாடல் இரண்டின் இறுதிப் பகுதியிலும் ``இரங்கசாமி பாடி இங்கு வந்தேன்`` (பாடல் 1:4) என்றும் ``அந்த முடைய ரங்கசாமி யான்`` (பாடல் 2:4)என்றும் கூறுகிறார். நூலின் இறுதிப் பாடலிலும் ஆசிரியர் தாசன் தம்மைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார். ``எங்கும் சிறந்த ரெங்கசாமியான் பூபாலன் இயற்றினேன் இச்சிங்காரம் அரிந்துக்கொள்`` என்று கூறியிருப்பதால் இந்நூலாசிரியர் இரங்கசாமி தாசன் என்றிருந்தாலும் ஆசிரியர் தம்மை இரங்கசாமி, ரெங்கசாமி என்றே அழைத்துக் கொண்டார் எனத் தெரிகிறது. இரங்கசாமி என்பது ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்திலுள்ள அரங்கநாதனுக்குரிய பெயர்களுள்  ஒன்று. அவனுக்குத் தாசன் என்றால் அவனுக்கு அடிமை என்று பொருள்படும். எனினும் இவர் தம்மைச் சிவதாசன் என்றும் இறுதிப்பாடலில் (21) அழைத்துக் கொள்கிறார்.
இரங்கசாமி தாசன் தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த குடந்தை எனப்படும் கும்பகோணத்தைச் சார்ந்தவர். இந்நூலின் இறுதிப் பகுதியில் உள்ள ``திருக்குடந்தை வாசன்`` (21)என்னும் சொற்றொடரும் இதனை உறுதிப்படுத்துகிறது. ஆதி திருக்குடந்தை என அட்டையில் குறிப்பிட்டிருப்பதால் கும்பகோணத்திலுள்ள ஆதிகும்பேசுரர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.
சரபக்கொடி என்னும் அடைமொழி -  விருது இவர்க்குண்டு. சரபம் என்றால் சிங்கத்தைச் கொல்லும் வலிமை கொண்ட எட்டுக்கால் பறவை. இதனை வாகனமாகக் கொண்ட சிவமூர்த்தம் ஒன்று உண்டு. இந்தப் பறவையின் சின்னத்தைக் கொடியில் கொண்டிருப்பது சரபக்கொடி எனலாம். ``சந்ததம் புகழ்ந்திட ஜெயசரபக் கொடியைத் தானே வெற்றியடைந்து நாட்டினேன் தேர்`` என்னும் நூலின் 14வது பாடலில் ஒரு குறிப்பு வருகிறது. மேலும் இப்பாடலில் ``செந்தமிழ்ப் பாவலரை ஜெயித்துக் கொடியை ஏற்றி`` (14)என்றும் வருகிறது. ``சாதுக்கள் புகழ்ந்திடும் சரபக்கொடி உல்லாசன்`` (21) என்று இறுதிப் பாடல் கூறுகிறது. எனவே இரங்கசாமி தாசன் தாம் வாழ்ந்த காலத்தில் இருந்த தமிழ்ப்புலவர் பலரைப் பாடல் பாடி வென்று வாகை சூடியவர் என உணர முடிகிறது.
இவர் ஆசிரியர் பெயர் குருங்குளம் கருப்பண்ண வாத்தியார். இவரின் மாணாக்கர் என்று தன்னை அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்டவர் இரங்கசாமி தாசன். இவரிடத்து எப்போதும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர் எனத் தெரிகிறது. ``புவனமதில் அறிந்த கருப்பண்ண வாத்தியார் பொற்பாதம் துதி செய்ய ஊருக்குப் போயிருக்கிறார் மொனமாய் எந்தனுக்குப் பாடிடச் சொல்லி வைத்தார்`` என்னும் நூலின் 19வது பாடல் குறிப்பு கருப்பண்ண வாத்தியாரும் சிங்கைக்கு வந்து போகிறவர் என்பதையும், அவர் பலர்க்கும் அறிமுகமானவர் என்பதையும், அவர்தான் மெளனமாகத்மு தாசனுக்குப் பாடிட -லாவணி முதலிய பாடல்களைப் பாடக்கற்பித்தார் என்றும் கூறுகிறது.


நூலின் இறுதிப்பாடல் முழுதும் இந்நூல் இயற்றிய ஆசிரியன் எனக் குறிப்பிடும் வகையில் தம்மைப் பற்றிப் பல செய்திகளைத் தாசன் குறிப்பிடுகிறார். அவை வருமாறு:
1.  மங்காத கீர்த்தி புகழ் பெற்று எங்கும் பிரபல்யமானவர்


2.  சரபக் கொடி ஏற்றியவர்


3.  சங்கத்தோர் புகழ மறை நூல் கூறுபவர்


4.  பலரால் புகழப்படும் மதியாற்றல் பெற்றவர்


5.  சிவதாசர்


6.  குங்கும புயமுடைய கொங்கை மடவார் மகளிரை ஈர்க்கும் இனிய குணமுடையவர்


7.  கவியோகன்


8.  அத்வீதமரை -  வேதாந்த வழி நிற்பவர்


9.  கவிமழை பொழிந்திடும் நேசன்


10.  சாதுக்கள் புகழ்ந்திடும் உல்லாசன்


11.  எங்கும் சிறந்த ரெங்கசாமி பூபாலன்
தற்புகழ்ச்சி போல மேற்கண்ட செய்திகள் இருந்தாலும் ஆசிரியர் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் இருந்தமையாலும் இவ்வாறு பாடியுள்ளார் எனலாம். மேலும் அவையடக்கமாக அட்டைமுகப்பில் தம்மை எளியேன் என்றே கூறிக் கொள்கிறார்.
மேலும் நூலின் உட்பகுதியிலும் இவருடைய நண்பர்கள் சிலரைப் பற்றிய செய்தியை அறிய முடிகிறது.
தமிழகத்தை விட்டுப் புறப்படும் போது தாசன் தம் மனைவியிடம் பொய்யூர் நகரில்  வையகம் புகழ்ந்திட அனந்தநாராயணசாமி வாத்தியார் வீடு என்ற ஒன்றைக் காட்டி அவர் பாதம் பணிந்து வருமாறு அழைக்கிறார் (1).
சிங்கையில் பால்கம்பம் கந்தசாமியய்யா அனுமதி கொடுக்கத் தாம் ஜய சரபக் கொடி நாட்டியதாகக் குறிப்பிடுகிறார் (14). தலமை பொருந்தும் தம்பியய்யா என்பவர் தமக்கு வெகுமதிகள் அளித்ததாகவும் சொல்கிறார் (14).
தம்முடைய சீடன், நெருங்கிய நண்பர் என அப்பாசாமி என்பவரைக் குறிப்பிடும் போது அப்பாசாமி மிகுதியான பொருள்படைத்தவர், கவாத் உடற்பயிற்சி செய்வதில் வல்லவர், விசுவாசர், பேதா (CID) உளவு வேலைக்காரர். (போலீஸ்) காவலர்க்கு விருப்பமிக்கவர் என்று கூறி அவரைப்போல நாட்டிலே கண்டதில்லை எனப் பாராட்டுகிறார் தாசன். அப்பாசாமி பிள்ளையின் மனைவி மக்களுடன் தங்கி இளைப்பாறும்படி தம்மனைவிக்குச் சொல்கிறார். எனவே அப்பாசாமி குடும்பத்தினர் சிராங்கூன் ரோட்டிற்கு அருகில் இருந்ததாகத் தெரிகிறது.
அப்பாசாமி முதலி(19) ராமசாமிப்பத்தர்(19)என்பவர் பற்றியும் பெயர்க் குறிப்புகள் உள்ளன.
துவிபாஷ் (மொழிபெயர்ப்பாளர்) வேலை பார்த்து வந்த சுப்பையா என்பவரைப் பற்றியும் குறிப்பும் உள்ளது(20) டோப்பிக்கம்பம் சந்தில் இருந்தவர். வழக்குமாறாதவர். தீராத வழக்கெல்லாம் தீர்த்து வைக்கும் தீரர்.  அவர் பாதம் பணிந்து சபையில் வணங்குமாறு மனைவியிடம் கூறி நூலை முடிக்கிறார்.
இரங்கசாமி தாசன் கீர்த்தனைகள் பல்லவி, அநுபல்லவி, சரணம் எனப் பகுத்துப் பாடுவதில் வல்லவர் என்பதை நூலின் முகப்பிலுள்ள சிங்கைநகர் சுப்பிரமணியர் பேரில் பதம் என்னும் பகுதி நன்கு விளக்குகிறது.
உ.கடவுள் துணை எனப்போட்டு அட்டைப் பட முகப்பில் முன்பகுதி உள்ளது. பிறகு சிங்கைநகர் சுப்பிரமணியர் பதம் பாடி முருகனைப் போற்றுகிறார். பிறகு நூலைத் தொடங்கும்போது பரம கருணாநிதியே துணை என்று எழுதியுள்ளார். நூலினுள்ளேயும் கணபதி, மாரியம்மன், கிருஷ்ணன், சிவன் முதலியவரைப் போற்றிச் செல்லும் போக்குத் தெரிகிறது. இருந்தாலும் நாகூர் பள்ளிவாசலையும், சிங்கையில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களையும் பற்றிப் பெருமதிப்புடனும் பணிவுடனும் குறித்துச் செல்கிறார். இவர் இந்து சமயத்தினர் என்பது உறுதி, எனினும் மற்ற சமயத்தை மதிக்கும் மாண்பினர்.
திருக்குறளின் முதற் குறளை அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்பதை நூலுக்கு முன் எழுதியே முதல் பாடலைத் தொடங்கி உள்ளார். இதனால் திருக்குறளின்பால் இவருக்கு இருந்த மதிப்பும் பற்றும் தெரிகின்றன. ஆனால் இக்குறளில் பகவன் என்பதற்குப் பவகன் என உள்ளது. இது அச்சுப் பிழையா அல்லது ஆசிரியர் விருப்பமா எனத் தெரிய இல்லை. இக்குறளுக்குப் பவகன் என்று பாடவேறுபாடு இருப்பதாகவும் தெரியவில்லை.
நூல் முழுதும் றகர ரகர வேறுபாடு இன்மை மிகுதியாக உள்ளது. நடையோ பேச்சுத் தமிழில் அமைந்துள்ளது. இலக்கணப் பிழைகளும் மொழிப்பிழைகளும் நூலில் உள்ளதை நோக்கும் போது இவர் இசைப்பாடல் இயற்றும் புலமையில் மட்டும் வல்லவர் என்பது புலப்படுகிறது.
தாசன் சிங்கைக்கு வந்து சென்றவர் என்பதை நூல் போக்கு நன்கு உணர்த்துகிறது.
காலம்:
குதிரைப் பந்தய லாவணி 1893ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வெளியிடப்பட்டது என்னும் குறிப்பு நூலின் முகப்பு அட்டையில் உள்ளது. இது சிங்கப்பூர் தீனோதய இயந்திர சாலையில் அச்சிட்டது என்றும் குறிப்பு உள்ளது. அந்த அச்சகமே சிங்கைநகர் அந்தாதியையும் 1887 இல் அச்சிட்டது. நூலில் நாகப்பட்டிணத்தில் இங்கிலீஷ் கொடி பறந்தது பற்றிய செய்தியும் உள்ளது. இந்நூல் எழுந்த காலம் ராபிள்ஸ் சிங்கப்பூரை 1819இல் கண்டு உருவாக்கிய காலத்திற்குப்பின்னர் - அதாவது 74 ஆண்டுகளுக்குப் பிறகுள்ள காலப்பகுதி. அதாவது 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி.
நூல் அமைப்பு:
குதிரைப் பந்தய லாவணி என்னும் நூலின் அமைப்பை மூன்று பகுதிகளாகப் பகுத்துப் பார்க்கலாம். முகப்பு அட்டை, சிங்கை நகர் சுப்பிரமணியர் பேரில் பதம், லாவணிப் பகுதி என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டு இந்நூல் விளங்குகிறது. முகப்பு அட்டையில் நூலின் பெயர், நூலின் நோக்கம், ஆசிரியர் பெயர், அவையடக்கம், வெளியிட்ட ஆண்டு, அச்சகத்தின் பெயர் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவ்வட்டையில் அவையடக்கத்திற்குக் கீழ் முதற்பாகம் என்று போடப்பட்டுள்ளது. இன்னும் விநோத புஸ்தகம் வருகிறது என்னும் குறிப்பும் உள்ளது. ஆனால் நூலினுள்ளே அடுத்த பாகம் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. குதிரைப் பந்தய லாவணி முற்றிற்று என்று நூலின் இறுதியில் உள்ளது. அடுத்த பாகமோ புஸ்தகமோ இது தொடர்பாக வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.
சிங்கைநகர் சுப்பிரமணியர் பேரில் பதம் என்னும் தலைப்பில் இரண்டு கீர்த்தனைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பல்லவி, அநுபல்லவி, நான்கு சரணங்கள் உள்ளன.
லாவணிப் பகுதியில் 21 பாடல்கள உள்ளன. தாசனும் அவர் மனைவியும் பொய்யூரை விட்டுப் புறப்பட்டு, நாகப்பட்டினம் வந்து, கப்பலேறிக் கடற் பயணம் செய்து, பினாங்கில் சிறிது காலம் தங்கிப், பின் கப்பலில் புறப்பட்டு, மலாக்கா வழியாகச் சிங்கை வந்து, தஞ்சம்பக்கார் டோக்கில் இறங்கிச், செளத்பிரிட்ஜ் ரோடு வழியாக மாரியம்மன் கோவில், பள்ளிவாசல் முதலிய பகுதிகளைக் கண்டு, பீச் ரோடு வந்து, சிராங்கூன் ரோட்டுக்கருகில் குதிரைப் பந்தயம் கண்டு, பிறகு கவர்னர் மாளிகை பார்த்துச், சிவன் சன்னதியை வணங்கிப் பால் கம்பத்தில் இருத்தல் கூறப்படுகிறது. இறுதிப்பாடல் 21வது பாடல் முடிவுரையாக உள்ளது. எனவே தமிழகத்திலிருந்து புறப்பாடு 1-4 (4 பாடல்கள்), கப்பற்பயணம் 5-11 (7 பாடல்கள்), சிங்கைக் காட்சி 12-20 (7 பாடல்கள்). 21வது பாடல் நிறைவுரை  பாடலாக அமைந்துள்ளது. நிறைவுரைப் பாடலில் ஆசிரியர் பற்றிய செய்திகளே உள்ளன.
நோக்கம்:
முகப்பு அட்டையில் உ கடவுள் துணை என எழுதியுள்ளது எல்லாச் சமயத்திற்கும் ஏற்ற வகையில் பொதுவாகக் கடவுள் துணை என எழுதியிருப்பது ஆசிரியரின் பொதுமை நோக்கினைப் புலப்படுத்துகிறது. இதன்பின் நூற்பெயர், நூலின் நோக்கம், ஆசிரியர் பெயர், அவையடக்கம், காலம், வெளியீட்டகம் பற்றிய செய்திகள் உள்ளன. இவற்றில் நூற் பெயர், ஆசிரியர் பெயர், காலம் முன்னரே விளக்கப்பட்முடுள்ளன. எனவே எஞ்சிய நோக்கம், அவையடக்கம் பற்றிய செய்திகளைப் பார்ப்போம். நூலாசிரியராகிய தாசன் நூலின் தலைப்புப் பெயர் கூறிய பிறகு அட்டையில் இந்நூலின் நோக்கங்களாக இஃது 1. சிவன் கண்ணால் தகித்த காமனை அந்தக் காமன் எரியலை என்றுரைக்கும். 2. சரியை, சிரியை யோகம், ஞானம் அத்வீத மறைவழி ஆயும் 3. வண்டு மொய்க்கும் மலர் மாலை அணிந்த புலவோர்கட்கும் கந்த மிகுந்த கமிவுணிந்த காமன் எரியாக் கட்சிக் காரருக்கும் உரைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் முதல் நோக்கம் லாவணிப் பாடலின் கருவாக அமையும் காமன் எரிந்த கட்சி, எரியாக் கட்சிப் போட்டியில் எரியாக்கட்சியின் சார்பாக இந்நூல் உரைப்பதாகக் கூறுகிறது. மூன்றாவது நோக்கத்தில் எரியாக் கட்சிக்காரருக்கு உரைக்கும் என்னும் தொடரும் இதனை உறுதிப்படுத்துகிறது. ஆனால் அவையடக்கப் பகுதியில் உள்ள செய்தி ``மற்றும் கனவான்கள் இப்போது இந்தக் குதிரைப் பந்தய லாவணியை எரிந்த கட்சியில் புகலும்படி கேட்டுக் கொண்டபடியால் யானாகிய எளியேன் எடுத்துரைத்தமையால்`` எனத் தொடங்குகிறது. இது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. நு¡லினுள்ளே சென்று பார்த்தால் இந்த இரு கட்சிகளைப் பற்றிய செய்திகள் ஒன்றும் நேரடியாக இல்லை. கணவனை மனைவி மன்மதனே என அழைப்பதும் (10) மனைவியை ரதியே என்று அழைப்பதுமே (1,2,17,21) உள்ளன.
மன்மதனைக் கரும்பு வில் உடையவன் (5) என்றும் ஆசிரியர் அழைக்கிறார். சேரடி என்னைச் சித்தசன் கணையினால் சித்தங் கலங்குது என ஒரு பாடலில் (11) மன்மதனை சித்தசன் என அழைக்கிறார். நூலின் இறுதி அடிகளாக (21) ``செங்கை வேள் மன்மதன் கணை மீருதடி சீக்கிரம் வந்து என்னைச் சேர்ந்து சுகங்கொடுத்து சித்தம் வைத்து ஆளவா ரதியேடி`` என்று வரும் அடிகளிலும் மன்மதன் அம்பினால் கலவி இன்பவேட்கை அதிகரித்துள்ள செய்தியே குறிப்பிடப்படுகிறது. இவையே இந்நூலில் காமனாகிய மன்மதனைப் பற்றி வரும் குறிப்புகள். இவற்றை நோக்கும்போது மன்மதன் கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும் காமவேட்கையைத் தன் அம்புகளால் தூண்டூம்போது அவன் எரியாது இருப்பதையே நாம் உணர முடிகிறது. எனவே அவன் எரியலை என்பதையே இந்த நூல் புலப்படுத்துகிறது எனலாம்.


இரண்டாவது நோக்கத்தில் இடம் பெறும் சரியை, கிரியை யோகம் ஞானம் என்பன தமிழர்கள் கண்ட சைவ சித்தாந்த தத்துவத்தில் கடவுளை அடைந்து மோட்சம் பெறுதற்குரிய வழிகள். சரியை என்பது உடலால் கடவுளுக்குச் செய்யும் வழிபாடு. கிரியை என்பது உடலாலும் உள்ளத்தாலும் செய்யும் வழிபாடு. யோகம் என்பது உள்ளத்தால் கடவுளை நினைத்து ஒன்றுபடும் வழிபாடு. ஞானம் என்பது அறிவால் கடவுளை நினைத்துத் தீரா அன்பு செலுத்தும் வழிபாடு. இச்சொற்கள் இந்நூலில் எங்கும் இடம் பெறவில்லை. இவற்றை அத்வீத மறை வழி ஆயும் என்றால் வேதாந்தத்திற்குரிய வேதமூலம் ஆராயும் என்பது பொருள். அப்படியொரு ஆராய்ச்சியும் இந்நூலில் இடம் பெற இல்லை. `அத்வீத வழி மரையாகன்` என்று இறுதிப் பாட்டில் தாசன் தம்மை அழைத்துக் கொள்கிறார் (21. ஆனால் சிங்கைநகர் சுப்பிரமணியர் பதம் என்னும் பகுதியில் இடம்பெறும் இரண்டுகீர்த்தனை வடிவங்களில் சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றிய குறிப்புகள் உள்ளன.


மூன்றாவது நோக்கம் இந்நூல் கற்ற அறிஞர்க்கும் மற்றவர்க்கும் விருந்தாக அமைவது என்பதைக் கூறுகிறது. கற்றவர்களைக் குறிப்பிடும் போது ``வண்டு மொய்க்கும் மலர்மாலை அணிந்த புலவர்`` என அழைக்கும் ஆசிரியர் ஏனையோரைக் குறிக்கும் போது ``கந்த மிகுந்த கமிஷணிந்த காமன் எரியாக் கட்சிக்காரர்`` என அழைக்கிறார். முன்னையோர் மரபுவழி வந்தவர்கள் என்பதை புதுமலர் மாலை அணிந்த புலவர் என்னும் தொடர் காட்டுகிறது. ஆங்கில நாகரீகம் மிகுந்தவர்கள் மற்றவர்கள் என்பதை நறுமணமிக்க `செண்ட்` வாசனையுள்ள முழுக்கைச் சட்டை (கமிஷ்) அணிந்தவர்கள் என்றும் தொடர் உணர்த்துகிறது. நூலின் மொழிநடையும் போக்கும் கற்றோர்க்கும் மற்றோர்க்கும் புரியும் வகையிலே உள்ளன. எனினும சுப்பிரமணியர் பேரில் பதம் பகுதியில் இடம்பெறும் கருத்துகளும் வடசொல்லாட்சியும் லாவணிப் பகுதியில் இடம்பெறும் மன்மதன் பற்றிய குற்¢ப்புகளும் கற்றோர்க்கு மட்டுமே புரியும் இயல்பின.


நூலைப் படிப்போர் சுப்பிரமணியர் பதம் நூலின் கடவுள் வாழ்த்தாக நிற்கும் புறப்பகுதி என்பதையும், லாவணியே நூலின் மையப் பகுதி என்பதையும் எளிதில் உணர முடியும். அவ்வாறு பார்த்தால் சிங்கை நகர் சென்று குதிரைப் பந்தயம் பார்த்து வருதலே இங்கு வரும் கணவர் மனைவியர் நோக்கம் என உணர முடிகிறது. இதன் வாயிலாக ஆசிரியர் நாகையிலிருந்து புறப்பட்டுக் கப்பல் வழியே சிங்கை நகர் வந்து அங்கிருக்கும் காட்சிகளையும் குதிரைப் பந்தயத்தையும் பற்றிப் பேசுவதே தம் நோக்கமாகக் கொள்டுள்ளார் எனக் கூறலாம். சிங்கையில் குதிரைப்பநதயம் 1843இல் தொடங்கப்பெற்று ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வந்தது. லாவணி எழுந்த காலத்தில் குதிரைப்பந்தயம் தொடங்கி ஐம்பதாவது ஆண்டுவிழா சிறப்பாக


நடைபெற்றிருக்கலாம். அதனைக் காணும் லேட்கையால் ஆசிரியர் தம் மனைலியுடன் புறப்பிட்டு வந்திருக்கலாம். 


அவையடக்கம்:


அவையடக்கமாக ஆசிரியர் ``கனவான்கள் இ¢ப்போது இந்தக் குதிரைப் பந்தய லாவணியை எரிந்த கட்சியில் புகலும்படி கேட்டுக் கொண்டதால் யானாகிய எளியேன் எடுத்துரைத்தமையால் தத்துவம் கடந்து காரிகை நன்னூல் இலக்கியம் கற்ற கனவான்கள் இச்சிங்காரத்தில் அநேக பிழையிருந்தாலும் பொருத்தருள்க`` என்று கூறியுள்ளார். இங்கு எளியேன் என்னும் தொடர் ஆசிரியரின் பணிவையும் அடக்கத்தையும் காட்டுகிறது. இந்நூலில் தத்துவம், இலக்கணம், இலக்கியப் பிழை இருந்தாலும் பொருத்தருள்க என்னும் வேண்டுகோளில் உண்மை இல்லாமல் இல்லை. இந்நூலில் அளவுக்கு மீறிய றகர ரகரப் பிழைகள், எழுத்து விடுதல் பிழைகள், வாக்கியப் பிழைகள், பிறமொழிச் சொல்லாட்சி, கொச்சை வழக்கு மிகுதியாக உள்ளன. இப்போது என்பது யிப்போது என்றே எழுதப்பெறும். இ,யி பிழைகள் பல உள்ளன. மேற்கண்ட தொடரில் பொருத்தருள்க என்பதில் று வல்லினத்துக்குப் பதில் இடையினமே உள்ளது. வாக்கியப் பிழைக்கு நூலின் நோக்கம் கூறும் முதல் வாக்கியமே சான்று ``புலவோர்கட்கும் . . . . . . கட்சிக் காரருக்கு உரைக்கும்`` இணைப்பு இடைச்சொல்லாகிய உம் இடம்பெற இல்லை. இப்படி எத்தனையோ பிழைகள் உள்ளன. தத்துவக் குறிப்பிலும் பிழை உண்டு. சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றி அத்வீத மறை ஒன்றும் கூறவில்லை. இப்படி இருக்க அத்வீத மறை வழி ஆராய்தல் எப்படி? இந்நூல் இலக்கிய நயத்தாலும் இலக்கண அமைதியாலும் மேம்பட்ட நூலாக இதனைக் கருத முடியாது என்னும் திரு. வை.திருநாவுக்கரசு கூற்று ஏற்புடையதே. எனினும் இக்குறைகளைப் பொதுமக்கள் இலக்கிமாகிய நாட்டுப்புற இலக்கியத்தில் காணப்படும் பொதுக் கூறுகளாகவே கருத வேண்டும். இவை வாய்வழி வந்த இலக்கியங்களே என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.சுப்பிரமணியர் பதம்:

சிங்கை நகர் சுப்பிரமணியர் பேரில் பதம் என்னும் தலைப்பில் ``ஆறுமுகனே ஆள இது சமயம் வா`` என்னும் பல்லவியுடன் ஒன்றும் ``என்னைக் கா(ர்) வடிவேலனே ஜெகதீசன் அருவிழியால் வரும் முருகேசனே`` என்னும் பல்லவியுடன் ஒன்றும் ஆக இரு இசைப்பாடல்கள் (கீர்த்தனைகள்) உள்ளன. முதல் பாடலில் பல்லவியுடன் ``பாரியான் கடைத்தேற பல தமிழ்கள் கூற, பட்சம் வைத்து வந்து ஆளும் சமயம் முருகா`` என்னும் அனுபல்லவியும் மூன்றடிச் சரணங்கள் நான்கும் உள்ளன. இரண்டாவது பாடலில் அனுபல்லவி இல்லை. நான்கடிச் சரணங்கள் நான்கு உள்ளன.


சிங்கை நகர் சுப்பிரமணியர் என்பது சிங்கப்பூரில் தேங் ரோட்டில் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் எழுப்பியுள்ள கோயிலின் கருவறை நாயகனாகிய சுப்பிரமணியனை உணர்த்தும். இக்கோவில் 4.4.1859இல் எழுப்பப்பட்டதாகும். இந்த இறைவனைப் பற்றிய குறிப்பு இப்பாடல்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சுட்டப்பெற இல்லை. எனினும் இந்நூலுக்கு முன் சிங்கையில் இயற்றப்பட்ட யாழ்ப்பாணம் சதாசிவபண்டிதரின் சிங்கை நகர் அந்தாதி சித்திரகவி (1887இல்)என்னும் நூலும், யாழ்ப்பாணம் வேலுப்பிள்ளை இயற்றிய சிங்கை முருகேசர் பேரில் பதிகம் (1893 ஜனவரி) என்னும் நூலும் முருகளைப் பற்றியே -  தேங் ரோடு முருகனைப் பற்றியே பாடுகின்றன. அம்மரபினைப் பின்பற்றியே தாசனும் இங்கு தாம்  பாடும் லாவணிக்குக் கடவுள் வாழ்த்தாகப் பாடியுள்ளார் எனக் கூறலாம். இந்த இரண்டு நூல்களும் சிங்கப்பூர் தீனோதய யேந்திர சாலையில் அச்சடிக்கப்பட்டவை என்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டும்.


முதல் பாடலில் `` ஆறுமுகனே . . .  முருகா . . . தத்துவம் கடந்த சாமியே,  மெய்ப்பொருளே, சரசவள்ளி லோலா, சண்முகா, உமைப்பாலா, துரையே, மாதவ சிங்காரா மகிழுமயில் வீரா, சுவாமி, பச்சைமயில் மீதில் வரும் முருகா ஏழைப்பங்காளா`` என முருகனை அழைத்து ``எங்கும் உன்னைத் தேடி இரங்கசாமி பாடி வந்தேன், பலதமிழ்கள் கூறப் பட்சம் (அன்பு)வைத்து ஆளும், என் மீதில் கோபம வேண்டாம். வேதனைச் சிறையிலிருந்து மீட்க வேண்டும், ஆதாரம் உனையன்றி வேறில்லை, பாலன் நான் உன்னைப் பணிந்தேன், பல வினைகள் தீரும் பரமபதம் (மோட்சம்) தாரும், என்னைக் காரும் (காத்தருள்க)`` என்று தாசன் வேண்டுகிறார்.

இரண்டாவது பாடலில் வாசவன் மகள் (மால் மகளாகிய தெய்வயானை) புயம் மருவிய தோளா, வனசமலர் (தாமரைமலர்) உதை மகிழ் மலர்த்தாளா, தோகை மயில் மிசை நடமிடும் வீரா, சுந்தரம் எங்கடம் மணி மலர்த் தீரா, ஏகனே, அடிதொழுபவர்க்கு உபகாரா, கந்தனே , உமையவள் அருளிய பாலா, குணசீலா`` என முருகனை அழைத்து ``அந்தமுடைய ரெங்கசாமியான் . . அடியேன் வினை அகற்றிடு. அடியவர்கள் வினையைத் தூளாக்கி நிமிஷத்தில் எனை வந்து ஆட்கொள்ள வேண்டும். என் மனம் பலவழியிலும் போய் அலையாமலும், நான் பாவிகள் மேற் கவி பாடாமலும், சித்தம் வைத்து என்னை ஆள வேண்டும். காக்க இது சமயம், வா`` என்று தாசன் வேண்டுகிறார்.

முதற் பாடலில் வள்ளி மணாளனாகவும், இரண்டாவது பாடலில் தெய்வயானை கணவனாகவும் முருகனைக் காண்கின்றார் தாசன். இப்பாடல்களில் ``எங்கும் உன்னைத் தேடி இரங்கசாமி பாடி இங்கு வந்தேன், பணிந்தேன் உன்னை`` என்னும் தொடர்கள் சரியை வழிபாட்டினைக் குறிக்கும். ``பாடி இங்கு வந்தேன்``, ``பாவிகள் மேற் கவி பாடாமல் அடி தொழுபவர்க்கு உபகாரா`` என்னும் தொடர்கள் கிரியை பற்றிப் பேசும். ``பல வழியிலும் மனம் போய் அலையாதே`` என்னும் தொடர் யோக நெறியைப் புலப்படுத்தும். ``தத்துவம் கடந்த சாமி, மெய்ப்பொருளே . . . ஆதாரம் உனை அன்றி இல்லை, ஏகனே`` என்னும் தொடர்களும், வினை தீர்த்துப் பரமபதம்தர வேண்டுதலும் ஞான நெறியைக் கூறும்.

இப்பாடல்களில் முருகனைப் பற்றிய வருணனைகள் உள்ளன. சூரனை வதைத்த செயல் பற்றிய குறிப்பு இல்லை. சுப்பிரமணியர் என்னும் தலைப்புப் பெயர் பாடலில் இடம்பெற இல்லை. மாறாக ஆறுமுகன், முருகன், சண்முகன், வடிவேலன், முருகேசன், கந்தன், வடிவேலன் என்பன இடம்பெற்றுள்ளன. மேலும் வள்ளி தெய்வயானை மணாளன், உமை மைந்தன் என்னும் குறிப்புகள் உள்ளன.

பக்திச் சுவை மிகுந்த இப்பாடல்களில் தத்துவக் கருத்துகளும் உள்ளன. முருகன் ஏகனாகி நின்று, இறைபணி செய்பவர்க்கு இன்னருள் புரிந்து காத்து நின்று, வினைகளை நீக்கி வீடுபேறு தந்தருளும் தலைவன் என்னும் கருத்து இரு பாடல்களிலும் மேலோங்கி நிற்கிறது.


கடைத்தேறப் பார்த்தருள வேண்டும் என்றும், பல தமிழ்கள் கூற அன்பு செய்ய வேண்டும் என்றும் அநுபல்லவித் தொடரில் வரும் வேண்டுகோள்கள் முருகப் பெருமான் தமிழ்க்கடவுளாதலின் பொருத்தமுடையவையாகத் தோன்றுகின்றன. இப்பாடல்கள் கீர்த்தனை வடிவில் அமைந்திருந்தாலும் திருப்புகழ்ச் சந்தத்தை நினைவுபடுத்தும் போக்கில் உள்ளன. முதல் பாடலில் மோனை நயம் மிகுதியாக உள்ளது. இரண்டாவது பாடலில் எதுகை நயம் மிகுதியாக உள்ளது. இசைப் பாடலுக்கேற்ற வடிவத்துடன் இலங்குகின்றன.


லாவணி: உள்ளடக்கம்

இப்பகுதியில் 21 பாடல்கள் உள்ளன. 21வது பாடல் இறுதி நிறைவுரைப் பாடல். இது இந்நூல் இயற்றிய தாசனைப் பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கூறுகிறது. எனவே எஞ்சிய 20 பாடல்கள் தாசனும் அவர் மனைவியும் தமிழகத்திலிருந்து புறப்பட்டுக் கப்பலில் சிங்கை வந்து காட்சிகளைக் காணுதல் பற்றிக் கூறுகிறது. நூலின் தொடக்கத்தில் பரமகருணா நிதியே துணை என்னும் தொடரும் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்னும குறளும் உள்ளன.


தமிழகத்திலிருந்து புறப்பாடு

முதல் நான்கு பாடல்கள் தாசனும் அவர் மனைவியும் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் நாகபட்டினத்திற்கு அருகே உள்ள பொய்யூர் என்னும் ஊரை விட்டு நாகபட்டினம் வந்து கப்பலில் ஏறும் சேய்தி வரை கூறுகிறது. பொய்யூரை விட்டு நாகபட்டினம் அடைந்து சிங்கை நகரில் பூவுலகம் புகழும் குதிரைப் பந்தயம் பார்த்து வருவோம் என மனைவியை அழைத்துக் கொண்டு புறப்படுகிறார் தாசன். வழியில் அனந்த நாராயணசாமி வாத்தியார் வீட்டில் சென்று அவர் பாதம் பணிந்து வருகிறார்கள். இது ஆசிரியரின் குருபக்தியைக் காட்டுகிறது. விநாயகர் திருவடியை வணங்கிப் பலவித பட்சணங்கள் விற்கும் கடைக்குச் சென்று மிட்டாய்கடை ஒன்றில் நுழைந்து பலவித சாமான்களை வாங்கிக் கொண்டு வருகின்றனர் (1). நாகப்பட்டினத்தில் புத்தூர் சத்திரத்திற்கு வந்து தஞ்சை மில்ட்டேரி கிளப்பு, யீரோஜிராவ் கடை காட்டிக்  கடைத்தெரு வழியாகத் தம் மனைவியை அழைத்து வருகிறார் தாசன். அங்கு ஒழுங்குள்ள பலவகை லண்டன் சாமான்களின் சிறப்பினைக் காட்டி மார்க்கட்டு, புஷ்பக்கடை ஆகியவற்றையும் பார்க்குமாறு சொல்கிறார் (2). பிறகு கடற்கரை ஓரம் வந்து அங்குள்ள கிட்டங்கு (கிடங்கு), இங்கிலீஷ் கொடி பறக்கும் அழகு, விளக்குக் கூட்டின் ஔ¢ ஆகியவற்றைக் காட்டி நிற்கிறார். பிறகு கணபதியா பிள்ளை (இவர் முத்து ரத்தினம் செட்டியாரின் முதலாளி) என்பவரின் ஆபீசுக்கு வந்து ஆடர் வாங்கி வருகிறார். அதுவரை மனைவியை மரத்தடி நிழலில் நிற்கச் சொல்கிறார். தொகைப் பணம் கொடுத்துச் சீட்டுகள் வாங்கி வருகிறார் (3). அந்தக் காலத்தில் பாஸ்போர்ட், விசா முதலியன இல்லை. ஆடர், சீட்டு என இரண்டு இருப்பதை உணர முடிகிறது. ஒன்று அனுமதி, மற்றொன்று பயணச்சீட்டு. பிறகு இருவரும் படகுக்காக அரை நாழி (12 நிமிடம்) சிறிது நேரம் காத்து நின்று `சவுக்கண்டி` என்னும் பகுதிக்குள் புகுகின்றனர். அங்கு போலீஸ் கமிஷனர் துகைக் கணக்காய் எண்ணி உள்ளே அனுப்புகிறார். பல சரக்கு மூட்டை, கட்டுசாத மூட்டை ஆகியவற்றுடன் படபடப்பின்றி மனைவியின் கையைப் பிடித்துப் படகில் குதித்து ஏறி வருகின்றார் தாசர்.


கப்பற் பயணம்

ஐந்தாவது பாடல் முதல் 11வது பாடல்வரையுள்ள 7 பாடல்கள் கடற்பயணம் பற்றிப் பேசுகின்றன. ஐந்தாறு பேர் கூடிப் படகைத் தள்ளக் கடலில் பேரதிர்ச்சி கொண்ட அலை ஒன்று வரப் படகுப் பயணம் புறப்படுகிறது. படகில் வரும்போது நாகூர் தருகா மினரா தெரிய, அங்கு சமாதி அடைந்திருக்கும் மீறா சாகிபினை மனதில் நினைத்து வணங்குமாறு தம் மனைவிக்குக் கூறுகிறார். படகு மேலும் கீழும் ஆடுவதால் பலர்க்குப் பித்தவாந்தி ஏற்படுகின்றது. சிறிது தூரம் கடலில் வந்ததும் கப்பலில் ஏற `சீடிப்படி` வைக்கப்படும் காட்சி தெரிகின்றது. தாசன் முன்னர் ஏறித் தம் மனைவியின் கையைப் பிடித்துக் கப்பலுக்குள் வருகின்றார்(5). நாகையில் படகில் ஏறுவதும், படகிலிருந்து கப்பலில் ஏறுவதும் சிறிது சிரமமாக இருக்கும் என்று அப்போது பயணமேற்கொண்டவர்கள் சொல்கின்றனர். கப்பலில் ஏறியதும் மேல் தளத்தில் இடம் பிடித்துப் பாயை விரித்துப் போட்டுவைத்துத் தம் மனைவியையும் உட்காரவைத்துப் பாலும் பழமும் கொடுத்து இளைப்பாறச் சொல்கிறார். கப்பலில் சாதமளக்கும் நிலையைக் கூறிச் சாப்பிட்டுத் தாம்பூலம் புசிக்குமாறு சொல்கிறார். இந்நிலையில் அந்திசந்தியுடன் ஒரு நாளாகிறது (6). பிறகு காலையில் எட்டு மணியளவில் எழுந்து சமைத்து உண்டு இளைப்பாறிய பிறகு கப்பலின் அதிசயத்தைக் கூறுகிறார் தாசன். பாய்மர வேடிக்கை, கடல்நீரின் காட்சி, மழுப் போல இருக்கும் நங்கூரச் சங்கிலி, கொடிமரம், வடக்கயர், கடலில் உள்ள கொடிய மீன்கள், கப்பலில் கட்டியுள்ள மணி ஆகியவற்றைக் காட்டூகிறார் (7).


பிறகு கப்பலில் மனைவி மூக்குத்தி கழன்று விழ மெள்ள எடுத்துக் கொடுக்கிறார். பாக்குகள் மிக்க பினாங்கு நகரைப் பற்றிக் கூறிய நிலையில் அச்சக்கரை என்னும் ஓர் இடத்தைக் காட்டுகிறார். இது சுமத்ரா தீவின் முனையிலுள்ள Bandar Aceh என்னும் ஊராகும். கிட்டாமலை, குருவிப்பீர்மலை ஆகியவற்றைக் கடந்து கோலப்பினாங்கு துறைமுகத்தை அணுகுகின்றனர். பினாங்குக் கோட்டை முனையைப் பற்றிக் கூறிய பின்னர் நங்கூரம் இறக்கப்படுவதையும் சீடிப்படி வைக்கப்படுவதையும் காட்டிப் பினாங்கில் இறங்கிச் சாப்பிட்டு இளைப்பாறும் நோக்கத்தில் செல்கின்றனர் (8). பட்டாளம் நிறைந்திட்ட கோட்டை முனை இறங்கிப் பலகாரம் விற்கும் மாடத்தைப் பார்த்து, கோப்பிக் கடை சென்று அப்பம் பசியாறிய பிறகு, தண்ணீர்ப்பீலியில் ஸ்நானம் செய்து (குளித்து)க் கிருஷ்ணன்கோயில் சென்று வணங்கி, கிளப்பில் சோறு சாப்பிட்டு, மாரியம்மன் கோயிலில் வணங்கிவிட்டுப், பட்டுப்பட்டா வளிகள் மிக்க கடைகளைப் பார்த்துவிட்டு வெற்றிலை களிப்பாக்கு வாங்கிக்கொண்டூ கப்பலில் வந்து ஏறுகின்றனர் (9). நம்ம ஊர் காரிமுகம்மது ஓடுவான் வெகுசீரு என்பதால் காரிமுகம்மது என்பது கப்பலின் பெயராக இருக்கலாம். ஒற்றைப் படகில் ஏறி ஒரு காட்டுக்கப்பித்தான் (Captain)வரும் காட்சியை மனைவி காட்டித் தாகம் எடுத்த செய்தி சொல்லக் கப்பல் மலாக்கா வந்து சேர்கிறது. இருவரும் கதைகள் சொல்லிக் கொண்டு வருகின்றனர். பிறகு சிங்கப்பூர் மலையில் கொடியசையக் கண்டு உடல் சிலிர்ப்பதாகக் கூறும் தாசன் இடதுகைப் பக்கமுள்ள பொறமலையினைக் காட்டிச் சுத்துப்பீரங்கி மருந்துக் குண்டு போட்டு எதிரி கப்பல்களைக் கண்காணிக்க ராணுவம் இருப்பதைக் காட்டுகிறார் (10). பொறமலை என்பது புறமலை என்பதன் திரிபு. இப்போது St. John`s Island என்பதைத்தான் தமிழர்கள் பொறமலை என்றனர். கப்பலில் வருபவர்களை முதலில் இங்கு இறக்கிச் சில நாட்கள் தங்க வைத்துச் சுகாதாரப் பரிசோதனை செய்து அனுப்புவது அக்காலத்து வழக்கமாம். பிறகு வானோர் சபைக்கு இணையான தஞ்சோங் பக்கார் டோக்கிற்குக் கப்பல் வருகின்றது. அதனையும் அதனை ஒட்டி இருக்கும் கல்லுடைக்கும் இடமாகிய கோரியையும் அங்குக் கல்லுடைக்கும் எஞ்சினின் திறமையையும் மனைவிக்குக் காட்டிச் சற்றுக் களைப்பு நீக்கிப் போகலாம் எனக் கூறுகிறார் தாசன். பிறகு டோக்கினைப் பழுது வந்திடாமல் காக்கும் போலீஸ் நிலையமாகிய டாணாவைக் காட்டுகிறார் (11).

சிங்கைக் காட்சி

11வது பாடல் முதல் 20வது பாடல் வரையிலுள்ள பத்துப்பாடல்களும் சிங்கைக்  காட்சிகளைப் பற்றிப் பேசுகின்றன. தாசனும் அவர் மனைவியும் குதிரைக் காடியில் ஏறி யின்சிங் (Ann Siang Hill Road) ரோட்டுக்காப்பாலே உள்ள சப்ர்ஜி ரோட்டிலுள்ள (South Bridge Road) மாரியம்மன் கோவிலில் மாரியம்மனை வணங்கி, அருகிலுள்ள பள்ளிவாசலையும் (Chulia Mosque) கண்டு, பிறகு பெரிய போலீஸ் நிலையத்தைப் பார்த்து நூற் கிண்ணா ரோட்டின் (North Canal Road) வழியே வருகின்றனர். அங்கு பரமலோகன் கட்டடமாகிய சார்ட்டர் பேங்கு (Chartered Bank Building), டல்லிகிராப் கட்டிடம் (Telegraph), ஜெயின் பாதமேன், கத்திரிஸ் காட் (Guthre`s Court / Scott), அங்கொன் செங்காய் பேங்கு (Hongkong Chenghai Bank) ஆகியவற்றைக் கடந்து குதிரைக் காடி வருவதைப் பார்க்கிறோம் (12). பின்பு போஸ்டாபீஸ் (Post Office) கடந்து இரும்புவிசைப் பாலம் (Cavenagh Bridge) வழியாக பெரிய கோட்டு (Supreme Court) தாண்டி, யீரோப்பா ஹோட்டல் (Present City Hall) கடந்து, இஷ்டமுடனே வருஷத்திற்கொரு திறம் வெள்ளைக்காரர் இன்பமடைய ஏற்படுத்திய ஜனவரித்திடல் (Padong) பார்த்து, கிர்ச்சாகோர் என்னும் கிரிக்கட் கோட்டையும் காணுகின்றனர். அங்கிருந்து பீச் ரோடு வழியாக பாசார் பார்த்து, நார்த் பிரிட்ஜ் ரோட்டில் கன்னி மக்காக் காரிகள், கன்னத்தில் புட்டாவிட்டு விளங்கும் ஜப்பான்காரிகள் ஆகிய சோரங்கி ஸ்திரிகளையும் கண்டூ வருகின்றனர்(13). பால்கம்பம் கந்தசாமி அய்யா அனுமதியால் தேர்ந்து, தம்பியய்யா என்பவரிடம் வெகுமதிகள் பெற்று, விக்டோரியா கூத்துமேடையைத் தூற்றி, ரூமா பாஞ்சாங் கொடியைப் போற்றி (Rochard Road), டோப்பிக் கம்பத்துக்கப்பால் உள்ள இரும்புப் பாலத்தைப் பார்க்கிறார்கள் (14). மாட்டுக் கடையைக் கடந்து, சீடர் பேதா வேலைக்காரராகிய அப்பாசாமியின் சமுகாரம் பிள்ளையோடு சற்று நேரம் இருந்து தம் மனைவியை இளைப்பாறச் சொல்கிறார்(15). பிறகு டாணா எனப்படும் போலீஸ் ஸ்டேஷனைத் தாண்டி (தேக்கா பஸ் நிறுத்துமிடத்தில் இருந்தது) சிறாங்(கூன்) ரோடு, பப்ளி ரோடு (Buffalo Road) ஆகியவற்றையும் பலவித மருந்துகள் இருக்கும் ஆசிபத்திரியையும் பார்த்துக் குதிரைப் பந்தயத் திடலுக்குத் தாசனும் மனைவியும் செல்கிறார்கள் (15).


குதிரைப் பந்தயத் திடலை அடையும் முன்னர் தான் (மாட்டுக்கூடம்) இருக்குமிடம் பற்றிய குறிப்பு ஒன்றுள்ளது. வேதியர் சூழும் இந்தக் குதிரைப் பந்தயத் திடல் விவரத்தை என்னால் சொல்ல முடியாதா என்று தொடங்கிக் குதிரைப் பந்தயம் பார்க்க வந்திருக்கும் அநேகப் பிரஜைகள் வாடியைச் சுற்றி இருப்பதையும், மன்னவர் துதித்திட பக்கிட் சாரட் சோடிகள் வகைவகையாய் இருக்கும் அழகையும் தாசன் காட்டிட இருவரும் வாடிக்குள் நுழைகின்றனர். அள்ளூரைத் தாண்டி சனங்களைப் பார்த்து அதிசயப்பட்டு நிற்கும்போது குதிரைகள் பந்தயம் தொடங்கத் தயாராயின (16). அச்சமில்லாமல் மெக்ரீஷன் அவசரமாக வர அடுத்தாற்போல் டாலனவன் ஒற்றைக் குதிரையில் ஏறி வருகிறான். பின்பு இபுறான் வருகிறான். குதிரைகள் ஓட இருக்கும் நிலையில் தாசன் தன் மனைவியை நோக்கிப் பந்தயம் கட்டச் சொல்கிறார். நீ தோற்றுவிட்டால் என்னைச் சேர வேண்டும் என்று சொல்லி ஜெயிக்கும் குதிரையுடையவன் யார் எனக் கேட்கிறார் (17). அதற்கு அவள் டாலன் தான் வருவான் எனக் கூறுகிறாள். ஆனால் இபுரான் ஜெயித்துவிடுகிறான். ``என் பந்தயம் கெலித்துவிட்டது என்று கூறி என்னைச் சீக்கிரம் சேர வேண்டும்`` என்கிறார் தாசன். ``கூத்துப் பார்த்த இடத்திலே பேய் பிடித்தது போலே சொக்குத் தூளைக் கண்ணிலே போட்டுவிட்டீர்களோ. களைத்துப் போய்விட்டது எந்தன் பந்தயம்`` என்று மனைவி கூறி `அருகிலுள்ள மலை பேர் என்ன ஐயா` என்று கேட்டு மற்றவர்களைப் பிரிந்து வருமாறு சொல்கிறாள் (18). அடுத்துக் கெவுனர் மலையில் ஏறி, அதன் தோட்டக் காட்சிகளையும் கண்டு, தங்களின் பாசார் பார்த்து, மேட்டில் ஏறிச் செல்கின்றனர். அங்குக் கருப்பண்ண வாத்தியார் பாதம் பணிய நினைப்பதாகவும், அவர் ஊருக்குப் போயிருப்பதாகவும், மெளனமாகத் தம்மைப் பாடச் சொல்லி வைத்ததாகவும் தாசன் குறிப்பிடுகிறார். பின்னர் ராமசாமி பத்தரவரையும் பார்த்து, சிவன் கோவில் சன்னதியைத் தேடி வருகின்றனர் (19). பிறகு அதனைக் கடந்து வெங்கோல் கம்பம் Kampong Bencoolen) பார்த்துவிட்டு வேலைக் கண்காட்சி (Museum), செளரகர்கள் வாழுமிடம் (Jews / Barbars), புதுப்பள்ளி வாசல் (Mosque) ஆகியவற்றைப் பார்த்துப் பலவித ஒயின் சாராயம் விற்கும் கடையைப் பாழாகத் தள்ளிவிட்டு இருவரும் வருகின்றனர். டோப்பிக் கம்பம் (Dhoby Ghat)சந்தினுள்ளே வந்து துப்பாஸ் வேலை செய்யும் சுப்பையாவைச் சபைமீது வணங்கி நிற்கின்றனர். பிறகு மாறனவரைக் கண்டு நாமெழுந்து மங்களமாக இனிப்பாற் கம்பம் தன்னிலே வாகாய் எப்போதும் இருப்போம் உகந்து என்று மனைவியிடம் கூறி லாவணியை முடிக்கிறார் தாசன் (20).


நிறைவுரை

இறுதிப் பாடலில் தாசன் தம் சிறப்புகளை எல்லாம் ஒரு சேரத் தொகுத்துக் கூறி, இயற்றினேன் சிங்காரம் என்று முடிக்கிறார். ``மன்மதன் கணை மீறிச் செல்கிறது சீக்கிரம் என்னைச் சேர்ந்து சுகம் கொடுத்துச் சித்தம் வைத்து ஆளவா ரதியேடி`` (21) என்று நிகழ்ச்சியையும் நிறைவு செய்கிறார் தாசன்.

இதுவே லாவணியின் உள்ளடக்கச் செய்தியாகும்.


உருவம்:

சிந்து இலக்கியம்


குதிரைப் பந்தய லாவணியின் லாவணிப் பகுதியிலுள்ள 21 பாடல்களும் நாட்டுப்புறப் பாடல் வகையைச் சார்ந்த சிந்துப் பாடல் வகையின. ``தொல்காப்பியர் காலத்தில் அடி வகையில் இருந்த சிந்து, பின்னர் சிந்து ஓசையாக வளர்ந்து, ஆழ்வார் பாடல்களில் சிந்துப் பாவாக மலர்ந்து -  வள்ளற்பெருமான் பாரதி போன்றோரின் கவி வண்ணத்தில் மணம் வீசிப் பெருமை பெற்றது. சிந்துப்பா பின்னர் தனி நூலாக வடிவெடுத்தது அண்ணாமலை ரெட்டியார் காலம்தான் (1861-1890). சிந்துப் பாடல்கள் 12ஆம் நூற்றாண்டில் பிறக்கச் சிந்து நூல்கள் 19ஆம் நூற்றாண்டில் வடிவமாக வந்தன`` என்பார் சிந்து நூல்கள் பற்றி ஆராய்ந்த பழ.முத்தப்பன். சிந்துப் பாடல்களுக்குரிய இலக்கணத்தைப் பழந்தமிழ் யாப்பு நூல்களிலோ பாட்டியல் நூல்களிலோ காண முடியவில்லை. 1981இல் த.சரவணத்தமிழன் என்பார் யாப்பு நூல் என்னும் ஓர் இலக்கண நூல் எழுதியுள்ளார். அந்நூலில் அவர் சிந்துப் பாடலுக்கு இலக்கணம் கூறியுள்ளார். முதலடியிலேயே தனிச் சொல்பெற்று வருவது சிந்து. இது சமனிலைச் சிந்து, வியனிலைச் சிந்து என இருவகைப்படும். முதலடியும் அடுத்த அடியும் சீரின் எண்ணிக்கையால் ஒத்திருப்பின் அது சமனிலைச் சிந்து, வேறுபட்டிருப்பின் வியனிலைச் சிந்து என்பது சரவணப்பெருமாள் கருத்து. குதிரைப் பந்தய லாவணியில் இருவகைச் சிந்தும் விரவி வருவதைக் காண்கிறோம். மேலும் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து அடிப்படையில் சரவணப்பெருமாள் ``அசை இயை ஒப்பன காவடிச் சிந்தே`` என்று காவடிச் சிந்திற்கு இலக்கணம் கூறுகிறார். அதாவது அசைகள் ஒத்து இயைபுத்தொடை பெற்ற அடிகளைக் கொண்டு விளங்குவது காவடிச் சிந்தாகும். இந்த அமைப்பில்தான் குதிரைப் பந்தய லாவணிப் பாடல்கள் இறுதிச் சீர் ஓசை நயம் பெற்று விளங்குகின்றன. காவடிச் சிந்துச் சந்தத்திலேயே லாவணிப் பாடல்கள் உள்ளன. லாவணிப் பாடல்களை ஒரு குறிப்பிட்ட பாவகையில் அடக்க முடியவில்லை. ஓசைக்கேற்ற சந்தச் சொற்களைக் கோவையாக்கிக் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்ப் பாடுவதே சிந்து யாப்பு என்னும் பழ முத்தப்பனின் கூற்றுக்கியையவே இந்த லாவணிப் பாடல்கள் உள்ளன.


சிந்து நூல்களில் வேறுபட்ட ஓசைப் பாக்களே மலிந்திருப்பினும் அவை குளகச் செய்யுள் அமைப்பிலேயே காணப்படுகின்றன. குளகச் செய்யுள் என்பது பல பாடல்களைக் கொண்டு விளங்கி ஒரு பொருளையே நிலை நாட்டுவதாகும். (பழ. முத்தப்பன்). இந்தக் குளகச் செய்யுள் அமைப்பிலேயே லாவணி உள்ளது.


ஒவ்வொரு பாடல் முடிந்ததும் முதல்பாடல் பல்லவியாக வருவதையும் இந்நூலின் பதிப்பு முறை எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் ஒவ்வொரு பாடல் இறுதியிலும் முதற் பாடலின் முதற் சீராகிய பொய்யூர் என்பது அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளது. அண்ணாமலை ரெட்டியார் காலத்தில் பல்லவி, அனுபல்லவி முறை இல்லை என்றாலும் பிற்காலச் சிந்து நூல்களில் பல்லவி, அனுபல்லவி செய்யும் கீர்த்தனை முறை இருப்பதாகச் சொல்வர். அதற்கேற்ப இசைப்பாடல் வடிவில் இந்த லாவணிப் பாடல்களும் உள்ளன.


ஒவ்வொரு பாடலிலும் கண்ணி அமைப்பே காணப்படுகிறது. பல சீர்களைக் கொண்ட இரண்டடிக் கண்ணி முதலிலும், சில சீர்களைக் கொண்ட இரண்டடிக் கண்ணி இடையிலும், பிறகு இன்னும் குறைந்த சீர்களைக் கொண்ட கண்ணி இறுதியிலும் வரப் பாடல் அமைந்துள்ள போக்கைப் பார்க்கிறோம்.


சிந்து நூல்களின் பொது அமைப்பு முதலில் கடவுள் வணக்கம், இடையில் நூற்செய்தி, இறுதியில் ஆசிரியன் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ளுதல் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டிருப்பது ஆகும் (பழ. முத்தப்பன்). இதற்கேற்பவே குதிரைப் பந்தய லாவணியும் அமைந்துள்ளது. சிங்கை நகர் சுப்பிரமணியர் பேரில் பதம் நூலின் பொதுக் கடவுள் வாழ்த்தாகக் கொண்டாலும் லாவணியின் தொடக்கத்திலுள்ள அகர முதல எழுத்தெல்லாம் என்னும் குறளும் கடவுள் வாழ்த்தாகக் கொள்ளுதல் வேண்டும். நூலாசிரியர் எல்லாச் சமயத்தினர்க்கும் ஏற்ற திருக்குறள் கடவுள் வாழ்த்தினைக் கூறித் தொடங்கியது போற்றுதற்குரியது.


``சிந்துப் படைப்பாளிகள் பொதுவாகப் பெரும்புலமை கொண்ட புலமை வித்தகர் அல்லர். சிந்தனை என்னும் தேரேறிச் சந்தமெனும் குதிரை பூட்டிக் கவியுலகில் உலாவரும் சிறப்புடையவர்கள். காரிகை கற்றுக் கவி பாடியவர் இல்லை. கற்றறிந்த சான்றோரும் அல்லர்; கவியனுபவம் இல்லாத கற்பனையாளரும் அல்லர்`` என்னும் பழ. முத்தப்பனின் கூற்றுக்கு ஏற்ற சான்றாகக் குதிரைப் பந்தய லாவணி ஆசிரியர் தாசன் விளங்குகிறார்.


சிந்து இலக்கியங்களை அவற்றின் பாடுபொருளுக்கேற்பக் காவடிச் சிந்து, வரலாற்றுச் சிந்து, வழிநடைச் சிந்து, நொண்டிச் சிந்து, கதைச் சிந்து, விபத்துச் சிந்து, நீதிச் சிந்து என்று பலவகைப்படுத்தி ஆராய்வார்கள் (பழ.முத்தப்பன்). அவ்வகையில் பார்க்கும்போது குதிரைப் பந்தய லாவணி வழிநடைச் சிந்து வகையைச் சாரும். காவடிச் சிந்து நாளடைவில் காவடியே இல்லாது ஊர் விட்டு ஊர் செல்லும்போது அவ்வழியில் காணும் இயற்கை வளங்களையோ -  செயற்கைக் கட்டிடங்களையோ வருணனை செய்து பாடப்பெறும் றிலையைப் பெற்றது. அதுதான் வழிநடைச் சிந்து என்பார் முத்தப்பன். கடலூர் கிருஷ்ணப்பசெட்டியார் என்பவர் 1887இல் பதிப்பித்து வெளியிட்ட பீபிள்ஸ் பார்க் வழிநடைச் சிந்து என்பதைப் பற்றிப் பேசும் முத்தப்பன் ``மயிலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழாவைக் காணச் சென்ற ஒருவர் தம் மனைவியை அழைத்துக் கொண்டு சென்னையைச் சுற்றி வந்த வழிநடையைக் கூறுவதாகும். இச்சிந்தில் சென்னை நகரம் முழுமையாக வருணனை செய்யப்பட்டிருக்கிறது`` என்று கூறுகிறார். பொதுவாக வழிநடைச் சிந்தின் போக்கு நூலாசிரியர் தன்னுடன் வரும் பெண்ணிடத்து (அவள்-மனைவியாக இருக்க வேண்டும்) வழியிலுள்ள நகர வகைகளைக் குறிப்பதாகும் என்று தெரிகிறது. அதற்கேற்பவே குதிரைப் பந்தய லாவணி ஆசிரியரும் தம் மனைவியை அழைத்துக் கொண்டு சென்று வழி நடையிலுள்ள காட்சிகளையும் இடங்களையும் காட்டிச் செல்கிறார்.


நடை: 


தமிழ் ஓர் இரட்டை வழக்கு மொழி. பேச்சுத் தமிழ், எழுத்தத் தமிழ் என்னும் இரட்டை வழக்கில் குதிரைப் பந்தய லாவணியில் பேச்சுத் தமிழ் சொற்கள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. சில எடுத்துக்காட்டுகள்.


பெயர்ச்சொற்கள்


படவு (4), சேதி (1)(6), கயர் (7), மிச்சம் (8), நீனே (11), அள்ளூரை (16), வாது (20)


வினைச்சொற்கள்

வாடி (1), தோன்றுது (1), தோணும் (1), பறக்குது (3), பாரு (3), வாறேன் (3), எழுந்தறடி (3), வாரார் (4), துடர்ந்து (4), எண்ணுறார் (4), பாரு (5), கோரு (5), எடுக்குறார் (5), வாறேன் (5), குந்தி (6), குந்தடி (6), நாளாச்சு (6), பதைக்குதே (7), கட்டியிருக்கு (7), விழுவுதடி (8), கேழ்க்குடி (8), முந்தி (8), இறக்குறான் (8), வாறான் (10,17), போரும் (10), சிலிர்க்குதடி (10), வந்தமடி (14), நேறடி (14), வேணும் (17), பிந்துது (18), கெலித்தது (18), களைத்துப்போச்சுது ().

அடைமொழிகள்

சாதுவா (4), மி¢ன்னாலே (8), மேவாலே (13), பின்னாட்டை (15), தோதா (16), அடுத்தாப்போல் (17), கச்சிதம் (17), மவுசாக (19), வாகா (20), வெகு (3)

லாவணி ஆசிரியர்கள் தாங்களே பாடி மக்களின் மனதில் உணர்வு ஏற்பட வைக்க வேண்டும் என்னும் நிலையில் அகராதிச் சொற்களாக அமைக்காது எளிய நடையில் பேச்சு வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி உள்ளனர். நாட்டுப்புற இலக்கியக் கூறுகளில் ஒன்று பேச்சு வழக்குச் சொற்களைப் பயன்படுத்தும் போக்கு ஆகும். அந்த அடிப்படையில் குதிரைப் பந்தய லாவணியிலும் ஆசிரியர் பேச்சு வழக்கச் சொற்களைக் கையாண்டு எளிய நடையை உருவாக்கி உள்ளார் எனலாம். படபடப்பாய் வாராமல் (4) தடதடப்பாய் வாராமல் (4) ஆகிய இரட்டைக் கிளவித் தொடர்களும் இடம்பெற்றுள்ளன.பிறமொழிக் கலப்பு

இலக்கியச் செறிவைக் காட்டிலும் கேட்போராகிய நாட்டுப்புற மக்களையோ பொதுமக்களையோ மனதில் கொண்டு யாக்கப்பெற்ற காரணத்தால் இந்நூல்களில் பிறமொழிச் சொற்களின் கலப்பு அதிகமாகக் காணப்பெறுகிறது (முத்தப்பன்). இதற்குக் குதிரைப் பந்தய லாவணி விதிவிலக்கன்று. லாவணியில் வடமொழிச் சொற்கள், ஆங்கிலச் சொற்கள், மலாய்மொழிச் சொற்கள் கலப்பு உள்ளது.


வடமொழி

கஷமுணம் (), சந்தோஷம் (5), சாதம் (6), அந்திசந்தி (6), தாம்பூலம (6), அவஸ்தை (6), உவர்ஜலம் (7), துஷ்டக்கடல் (7), கஷ்ம் (7), பலகாரம் (9), திட்டமாய் (9), ஸ்நானம் (9), வருஷம் (13), பட்சம் (13), சூகஷமுமாய். உல்லாசர் (15), புஜம் (15), விசுவாசர் (15), வாசர் (15), சீஷன் (15), சமுசாரம் (15), கவாத் (15), பிரஜைகள் (16), வாடி (16), அசுவங்கள் (16), கியாதி (17), மொனமாய் (19), மங்களாமாக (20), சோரங்கிஸ்திரிகள் ().


ஆங்கிலம்


இங்கிலீஸ் (3), ஆபீஸ் (3), மார்க்கட்டு (2), ஆடர் (3,4), போலீஸ் கமிஷன் (4), சீடி (8), ஜீடி (5), கிளப்கடை (9), காட்டுக்கப்பித்தான் (10), பீரங்கி (10), இஞ்சின் (11), டோக்கு (11), நம்பர் (15), பக்கிட்சாரட் (16).

மலாய்

கோப்பி (9), சினாட்டு (10), காடி (12), பாசார் (13), அள்ளூர் (16).


உருது

ஜல்தி (3), சல்தி (8), சாக்கிறதை (1), டாணா (11), பேதா (15), சோடி (16), பாறா (16).

சவுக்கண்டி (4)(தெரியவில்லை), பீலி (9) (தெரியவில்லை)

வட்டார வழக்கு.


கப்பற் பயணத்தில் நாகையை விட்டுப் பினாங்கு வந்து  இறங்கியதும் ஆசிரியர் தம் மனைவியிடம் மலேசிய வட்டார வழக்குச் சொற்களாகிய  கோப்பிக்கடை, அப்பம், பசியாற நாம் சேர்வோம் (9) ஆகியவற்றைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார். இதனால் லாவணி மண்ணின் மணம் கமழும் இலக்கியமாகிறது. மலாக்கா வந்ததும் காட்டுக் கப்பித்தான் என்னும் சொல்லைக் கையாளுகிறார். ஆசியாக்காரர்களுக்கு மலாக்காவை ஆண்ட போர்த்துகீசியர்களால் கொடுக்கப்பட்ட பட்டமே கப்பித்தான். (பெ.நா.மு.பழ.1938)சிங்கை வந்ததும் கோரி, இஞ்சின் முதலிய ஆங்கிலச் ,சொற்களையும், காடி, பாசார், அள்ளூர் முதலிய மலாய்ச் சொற்களையும் கையாளுகிறார். இவ்வாறு லாவணி வட்டார மணம் கமழும் இலக்கியமாகிறது,
சொல்லாட்சி


இடங்கள், சாலைகளின் பெயர்களைக் குறிப்பிடும்போது தமிழர்கள் பேச்சில் இருந்த நிலையில் வழங்கப்பட்ட நிலையைக் காணமுடிகிறது.
தஞ்சை மில்ட்டேரி கிளப்பு (2), மார்க்கட்டு (Market)(2), புஷ்பக்கடை (3), கிட்டங்கு (Godown)(3), தஞ்சம்பக்கார் டோக்கு (11), சாட்டர் பேங்க் (Chartered Bank)(12), டல்லிகிறாப் (Telegraph)(12),ஜெயின்பாதமேன்(12), கத்திரி ஸ்காட் (Guthrie Scot)(12), அங்கோன் செங்காய் பேங் (Hongkong Shengai Bank) (12), போஸ்டாபீஸ (Post Office)மு, பெரிய கோட்டு (Supreme Court)(13), யீரோப்பா ஓட்டல் (13), ஜனவரித்திடல் (Padang)(13), கிர்ச்சா கோர் (Cricket Court)(13), பால்க்கம்பம் (Kampong Susu / Upper Cross Street)(14), விக்டோரியா கூத்துமேடை (Victoria Street / Lane Theatre) (14), ரூமாபாஞ்சாங் (Ruma Panjang)(14), டோப்பிக்கம்பம் (Doby Ghat)(14), ஆசுபத்திரி (Hospital)(15), கெவுனர் மலை (Governor Hill)(19), கேட்டு வாசல்(19), தங்ளின் பாசார் (Tanglin Pasar)(19), வெங்கோல் கம்பம் (Bencoolen Street)(20), வேலைக்கண்காகஷி (Museum)(20), ஷெளரகர்கள் (Jews)(20), ஒயின் சாறாயம் (20), டோப்பிக்கம்பம் (Doby Ghat)(20), பாற்கம்பம்(20), தாருகா (Dharga) (5), மணவறா (Minaret)(3), பள்ளி (Mosque)(12).
சாலைகள்:
யின்சிங் றோடு (Ann Siang Hill Road)(12), சர்ப்ஜி றோடு (South Bridge Road)(12), நூற்கிண்ணா றோடு (North Canal Road)(12), பீச் றோட் (Beach Road)(13), நார்த் பிரிகஷமு றோடு (North Bridge Road)(13), சிறாங் றோடு (Serangoon Road)(15), பப்ளி றோடு (Buffalo Road)(15)
ஊர்கள்
நாகை(1), நாகப்பட்டணம்(1,2)சிங்கை(1,6), சிங்கை நகர்(1), சிங்கப்பூர் (10), பூர்(12), பொய்யூர்(1), லண்டன்(London)(2), அச்சக்கரை (Bandan Aceh)(8), கிட்டாமலை(8), குருவிப்பீர் மலை(8), கோலப்பினாங்கு(8), மிலாக்கா(Malakka)(10), பொறமலை (St. John`s Hills)(10).
ஆள் பேர்கள்:
மெக்ரீஷன்(17), டாலன் (17), இபுறான்(17), டாலன் துரை (18), ஜப்பொன்காரி (13), கன்னிமக்காக் காரி (13), மீறா சாய்பு(5), அப்துல் காதர் மரைக்கார்(6).


ஒலி / இலக்கணப்பிழைகள்


சொல்லாட்சியைத் தவிர்த்து றகர ரகர வேறுபாடின்மை லாவணிப் பாடல்களில் மிகுதியாக உள்ளது. இது பேச்சுத் தமிழ்க் கூறுகளில் ஒன்று என்பது அறிஞர்கள் கருத்து.எடுத்துக்காட்டுகள்:


ர் for ற்


அரிவாலே(2), அரிந்து (2,13), ஐந்தாரு(5), ஏரி(5), இளப்பாரி (7,8), அரிந்திட (7), நிரந்திட்ட(9), ஏரு(9), பொருத்து(11), அரிய(13), மீருதடி(21).ற் for ர்


றதி(1,2), பாறாயே(3), மறத்தடி(3), பாய்மறம்(7), நங்கூறம்(7), மாறடி(7), மறம்(7), பறமன்(7), சேறடியே(11), பாறாய்(21).


இகர யிகர வேறுபாடின்மையும் லாவணிப் பகுதியில் காணும் ஒலிக்கூறாக உள்ளது.


எடுத்துக்காட்டுகள்:


யெரியலை -  எரியலை (முன் அட்டை), யெரிந்த -  எரிந்த (முன் அட்டை), யிச்சிங்காரத்தில் -  இச்சிங்காரத்தில் (முன் அட்டை), யிப்பால் -  இப்பால்(1), யென்னால் -  என்னால் (1), யிதோ -  இதோ (3), யேறடி -   ஏறடி(8).

வாக்கியப் பிழைகளும் இந்நூலில் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு ஒரு சான்று. முன் அட்டையில் இந்நூலின் நோக்கம் பற்றிக் கூறும் ஒரு வாக்கியம் இதோ. இஃது . . . . . வண்டு மொய்க்கும்  மலர் மாலை அணிந்த புலவோர்கட்கும் கந்தமிகுந்த கமிஷணிந்த காமன் எரியாக் கஷிக்காரருக்கு உரைக்கும்.`` இவ்வாக்கியத்தில் புலவோர்கட்கும் . . . . . . . கஷ¢க்காரருக்கும் என இரண்டு இடத்தும் உம் இடைச்சொல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அகர முதல எழுத்தெல்லாம் என்னும் குறளினை மேற்கோள் காட்டியதிலும் பகவன் என்பதற்குப் பதில் பவகன் என வந்துள்ளது. இது அச்சுப்பிழையா ஆசிரியர் பழையா என்பது தெரியவில்லை.

உத்தி


உவமை, உணர்ச்சி, கற்பனை, உரையாடல், உருவகம், வருணனை முதலிய இலக்கிய உத்திகளும் குதிரைப் பந்தய லாவணியில் உள்ளன. அவற்றைப் பார்க்க முயல்வோம்.


உவமை:


அணிகளுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது உவமை. தெரிந்ததைக் கொண்டு தெரியாததை விளக்குவதும் அழகுணர்ச்சி ஊட்டுவதும் உவமையின் பயன்களாகும். அந்த நோக்கில் இலக்கியத்துக்கு அழகூட்டும் உவமை அணி குதிரைப் பந்தய லாவணியில் மிகுதியாக இடம் பெறாவிட்டாலும் ஆங்காங்கே உவமை வராமல் இல்லை. இலக்கிய மரபு உவமைகளாக பல்லரும்பாளே (3) சேல்விழியாளே (4) என்னும் உவமைத் தொகைத் தொடர்களும், மானே (1) தேனே (1) மயிலே (2) குயிலே (17) தங்கமே (3,4) அன்னமே (5) ரத்தினமே (5) முதலிய உவமை ஆகுபெயர்களும், காரிழையே (12) பாகமொழியினாளே (10) ஏந்திழையே (13) முதலிய இலக்கியத் தொடர்களும் குதிரைப் பந்தய லாவணியில் இடம் பெற்றுள்ளன. அங்கம் பூ பாவையரே (6) காரணியே (11) ஆரணப் பேதையரே (11) முதலிய தொடர்கள் தாசன் தம் மனைவியை அழைக்கும் விளித் தொடர்களாக உள்ளன.

கப்பலிலுள்ள நங்கூரம், சுக்கான் ஆகியவற்றைப் பற்றிய வருணனையில் மழுவுப் போல இருக்கும் நங்கூரச் சங்கிலி பார் (7), பாணங்களை எரிந்தாற்போல் சுக்கான் திருப்பிப் பாறைதனில் நெருக்கி வாரானே (11) என்ற உவமைத் தொடர்கள் வருகின்றன. இங்கு கோடரி -  மழுப் போன்ற நங்கூரம் என்பது வடிவ உவமை. பாணங்களை -  அம்புகளை எரிந்தாற்போலச் சுக்கான் திருப்புதல் என்பது வினை -  தொழில் உவமை. குதிரைப் பந்தய ஓட்டியின் வருகையை காற்றுப் போல் வாறான் (18) என்பது பயன் உவமம். வேகத்தைக் காட்ட வந்த ஒன்று. கூத்துப் பார்த்த இடத்தில் பேய் பிடித்தது போலே கூடிய சொக்குத் தூளைப் போட்டீர்களே கண்ணிலே என்று (18) மனைவி தாசனிடம் கேட்கும் உரையில் உள்ள உவமை நாட்டுப் புறங்களில் நடமாடும் தொடர் உவமையாகும். தஞ்சம்பக்கார் டோக்கிற்கு வானோர் சபை -  இந்திர சபை தான் இணை (11) என்று ஓர் உவமை வருகின்றது.


வருணனை

இலக்கியங்களில் இடம் பெறும் வருணனைத் திறன் குதிரைப் பந்தய லாவணியிலும் இடம் பெற்றுள்ளது. வருணனையைத் தாசன் அதிசயம், விவரம் என்று அழைக்கிறார் (1). நாகப்பட்டணம் அதிசயம், கப்பல் அதிசயம் (2) குதிரைப் பந்தயத் திடல் விபரம் (16)முதலிய வருணனைகள் சுவைப்பதற்குரியன. இடங்களையும் காட்சிகளையும் வருணிக்கும்போது இன்றியமையாத சிறப்புக்குரிய செய்திகளை எடுத்து வருணிக்கும் இயல்பினைத் தாசனிடம் காண்கிறோம். எடுத்துக்காட்டாக நாகப்பட்டணம் கடைத்தெரு வருணனையில் லண்டன் சாமான்களின் ஒழுங்குள்ள பலவகைகளையும் அவற்றின் ஔ¢ வீசும் தன்மையையும் குறிப்பிடுகிறார். புல்லர் புசிக்கும் மார்க்கட்டு, புஷ்பக்கடை முதலியவற்றையும் பற்றிப் பேசுகிறார். கடற்கரையில் உள்ள கிட்டங்கு, இங்கிலீஷ் கொடி, விளக்குக் கூட்டொளி முதலியவை வருணனையில் இடம்பெறும் இயல்பினைப் பார்க்கிறோம். கப்பல் வருணனையில் நங்கூரம், மாரடி அளவிற்கு மேல் இருக்கும் கொடி மரம், தேர்வடம் போன்ற கயிறுகள் துஷ்டக்கடலில் காணும் மீன்கள் முதலியன இடம்பெறுகின்றன.

குதிரைப் பந்தயத் திடல் வருணனையும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. ``வேதியர் சூழுமிந்தக் குதிரைப் பந்தயத் தெடல் விபரத்தைச் சொல்ல என்னால் முடியாதா`` (16) என்று கூறி வாடி, பக்கிட் சாரட் சோடி, முதலியவற்றை ஆசிரியர் நன்கு வருணிக்கிறார். பூவுலகம் புகழும் குதிரைப் பந்தயம் (1) காவர்புகழ் சிங்கைக் குதிரைப் பந்தயம் (1) சாதுக்கள் புகழ்ந்திடும் குதிரைப் பந்தயம் (3). அன்பர்கள் புகழ் சிங்கைக் குதிரைப் பந்தயம் (6) தேடும் குதிரைப் பந்தயம் (15) ஆகிய தொடர்கள் குதிரைப் பந்தயத்தின் சிறப்பினைக் குறிக்க வருகின்றன. பினாங்கில் இறங்கி மேற்கொண்ட செயல்கள் முறையான வருணனைப் பாங்கில் உள்ளன. இவ்வாறே சிங்கையில் பார்த்து வந்த இடங்கள், கட்டிடங்கள் எல்லாம் வரிசை முறை மாறாமல் உள்ளன. வழிநடைப் பயண வழிகாட்டி போல -  குதிரைப் பந்தய லாவணியிலுள்ள வருணனைகள் அமைந்துள்ளன என சுருக்கமாகச் சொல்லலாம். ``தென்னகத்தோர் புகழும் தருகா மணவறா சாயலில் தெரியுது`` (5), பட்டாளம் நிறைந்திட்ட கோட்டை முனை (9) அஷ்டதிசையும் புகழ் போஸ்டாப்பீஸ் (13) புதிய அலங்காரம் கூர்மிக்க ஜெயின் பாதமேன் (12) முதலிய இடங்களின் சிறப்பியல்புகளை எடுத்துக்காட்டும் வருணனைகளைக் காணலாம்.தாசன் தம் மனைவியை விளிக்கும் இடங்களில் வருணனைத் தொடர்கள் சில வந்துள்ளதை உவமை பற்றிப் பேசும்போது பார்த்தோம். பூரண மதியுள்ள பெண்ணே (11)சித்தினிப் பெண்ணே (2) சர்க்கரைப் பெண்ணே (8)ஆரணப் பேதையரே (11) அந்த மிகுந்த பெண்ணே (14) என்றெல்லாம் தாசன் தம் மனைவியை வருணித்து அழைக்கின்றார். பூரண மதியுள்ள பெண்ணே என்னும் வருணனை தொடரில் இரு பொருள் நயம் இருப்பதைக் காண முடிகிறது. முழு மதி -  சந்திரனைத் தன் முகமாகக் கொண்ட பெண்ணே என்பது ஒரு பொருள். நிறைந்த அறிவுள்ள பெண்ணே என்பது மற்றொரு பொருள். மனைவியார் கணவனை மன்னவரே (10) கவிச் சிங்கமே (10) மன்மதனே (10) சுவாமி (10, 18) ஐயா (18 ) என அழைப்பதையே பார்க்கிறோம். மன்மதனைப் பற்றிய வருணனையான கன்னல்வில் மதன் (5) செங்கைவேள் மன்மதன் (21) எனவும் வருகின்ற நிலையைக் காணலாம்.

உணர்ச்சி:

இலக்கியத்தின் உயிர்நாடி உணர்ச்சி அதனை மெய்ப்பாடு என்று தொல்காப்பியர் அழைக்கின்றார். உவகை, அழுகை, பெருமிதம், வெகுளி, நகைச் சுவை, வியப்பு, எள்ளல், அச்சம் ஆகிய எட்டுச் சுவைகளே மெய்ப்பாடாகும். இதனோடு சாந்தம் என்பதையும் சேர்த்து நவரசமாகக் காண்பர் வடமொழியாளர். பிற்காலத்தில் பக்தி என்பதும் சுவையாகக் கருதப்பட்டது. இத்தகைய பல சுவைகள் குதிரைப் பந்தயத்தில் காணப்பட்டாலும் சிருங்காரம் என்னும் இன்பச் சுவையே இதன் மையச் சுவையாக அமைந்துள்ளது. எனவேதான் இந்நூலுக்குச் சிங்காரம் என்னும் பெயரை ஆசிரியர் கொடுக்கிறார். குதிரைப் பந்தயம் காணச் செல்லும் நிலையில் தம் மனைவியைப் பார்த்துக் கப்பலில் முந்தி என்கொரு முத்தம் கொடுக்க வாடி (6) என்று ஆசிரியர் கூறுவதைக் காண்கிறோம்.  சிங்கை வந்து துறைமுகத்தில் இறங்கும்போது ``சேரடியே என்னை சித்தசன் (மன்மதன்) கணையினால் சித்தம் கலங்குது பார் மடமானே`` என்று ஆசிரியர் தம் கலவி வேட்கையினைப் புலப்படுத்துகிறார். குதிரைப் பந்தயத்தில் பணயமாக ``உண்மை நீ தோற்றுவிட்டால் உகந்து என்னைச சேர நீதி`` (17) என்று கலவியையே ஆசிரியர் பணயமாக வைப்பதைக் காண்கிறோம். தலைவி தோற்றுவிட்டதும் ``தோற்றுவிட்டாயடி காமி. சிறப்புள்ள மங்கையையே! என் பந்தயம் கெலித்தது, சீக்கிரத்தில் என்னைச் சேரடி நேமி`` என்று ஆசிரியர் தம் மனைவியைப் பார்த்து அழைக்கின்றார். இறுதியாக ``செங்கைவேள் மதன்கணை மீரூதடி சீக்கிரம் வந்து என்னைச் சேர்ந்து சுகம் கொடுத்து சித்தம் வைத்து ஆளா வா ரதியேடி`` என்று ஆசிரியர் முடிக்கின்றார். எனவே இந்நூலில் காதல் இன்பச் சுவையே மேலோங்கி நிற்பதைக் காண்கிறோம்.

``அந்திசந்தி ஒரு நாளாச்சு அன்பர்கள் புகழ் சிங்கை குதிரைப் பந்தயம் பார்க்க அவஸ்தை உன்னாலே யான் படலாச்சு`` என்று ஆசிரியர் தம் மனைவியைப் பார்த்துக் கூறும்போது துன்பம் கலந்த நகைச்சுவை இழை ஓடுகிறது. பக்தியில் குரு பக்தி (1),(19) இறைபக்தி (1), (5), (9), (12) என்னும் இருவகைப் பக்தியும் இலங்கக் காண்கிறோம். சுப்பிரமணியர் பேரில் உள்ள பதம் முழுதும் பக்திச்சுவை மேலோங்கி இருக்கப் பார்க்கலாம். ``அலை ஒன்று வருகிறது அதிர்ச்சியைப் பாரடி`` (5) என்னும் இடத்தில் அச்சச் சுவையும் ``கலங்கிப் புலம்ப வேண்டாம் காரிகையாளே`` (5) என்னும் இடத்தில் அழுகைச்சுவையும் உள்ளன. கப்பல் அதிசயம், சிங்கைக் கட்டிட அதிசயங்கள் பற்றிய வருணனையில் வியப்பு மேலிட்டு விளங்குகிறது. இவ்வாறே ஏனைய சுவைகளுக்கும் எடுத்துக்காட்டுகள் காண முடியும். 


கற்பனை:


இலக்கியம் ஏற்றம் பெற உதவும் கூறுகளில் ஒன்று கற்பனை. குதிரைப் பந்தய லாவணி வழியிடைப் பயணத்தையும் காட்சியையும் விளக்கிச் செல்வதால் கற்பனை மிகுதியாக இடம்பெற வாய்ப்பு இல்லை. எனினும் தம் மனைவியை வருணிக்கும் ஒரு சில இடங்களில் கற்பனைக் கூறு இருப்பதைப் பார்க்கிறோம். ``அங்கம் பூ பாவையரே`` (6) என்னும் தொடரில் பெண்ணின் ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொரு பூவிற்கு உரியது என்று கற்பனை செய்து பேசுகிறார் கவிஞர். சர்க்கரைப் பெண்ணே (8) என அழைத்து அவளிடம் பெறும் இனிமையைக் கற்பனையாக்குகிறார். கப்பலில் தம் மனைவிக்கு ``பாலும் பழமும் கூட்டித் தேனும் சீனியும் ஊட்டி உடனிளப்பாறப் பாகந் துல்லு`` (6) என்பதிலும் இனிப்பு மிகுதியாகக் காட்டும் கற்பனையைப் பார்க்கிறோம். சாட்டர்டு பேங்கு கட்டிடத்தைப் பரமலோகன் கட்டிடமாகக் கற்பனை செய்து பார்க்கிறார் கவிஞர் (12). வழிநடைப் பயணத்தைக் கருவாகக் கொண்ட சிந்துப்பாடல்களில்-  எரிந்தகட்சி எரியாதகட்சி பற்றிய கருவைக் கொண்ட லாவணிப் பாட்டில் கடற் பயணத்தையும் குதிரைப் பந்தயத்தையும் சிங்கைக் காட்சிகளையும் மையமாக -  கருவாக வைத்து இலக்கியம் செய்ய நினைத்ததே தாசனின் கற்பனைக்குத் தக்க சான்றாக அமைகிறது. ``வேதியர் சூழுமிந்தக் குதிரைப் பந்தயத் திடல்`` (16) என்னும் இடத்தில் வேதியர் என்பது வெள்ளைக்காரரைக் குறிக்கிறது.

உரையாடல்:

குதிரைப் பந்தய லாவணி முழுதும் ஆசிரியர் அவர் தம் மனைவியுடன் உரையாடிப் பேசும் போக்கிலேயே அமைந்துள்ளது. இது செய்யுள் வடிவில் இருந்தாலும் கணவர் -  மனைவி இருவரிடையே நடந்த உரையாடல் அமைப்பிலேயே உள்ளது. கணவர் தம் மனைவியைப் பெண்ணே (1), ரதியே(2), சகியே (11), சர்க்கரைப் பெண்ணே (8), பாங்கியே (7), புல்ல (8), மாதே (8), ராஜாத்தி (9), கன்னியே (9), அத்தியாளே (2) முதலிய சொற்களால் அழைத்துக் காட்சிகளைக் காணுமாறு சொல்கிறார். இச் சொற்களில் கவிஞர் தம் மனைவியிடம் பாசத்தையும் நேசத்தையும் காதலையும் பொழிவதைக் காண முடிகிறது. ஒவ்வொரு பாடலிலும் அழைப்புச் சொற்கள் பெரும்பாலும் இடம்பெறுகின்றன. சில இடங்களில் ஆறுதல் மொழிகளும் அக்கரை கொள்ளும் தொடர்களும் இடம் பெறுகின்றன. மிகுதியான பாடல்களில் கவிஞர் கூற்றே இடம் பெறுகின்றது. எனினும் மூன்று இடங்களில் (10, 18, 19 ) மனைவி கூற்றும் இடம் பெறுகின்றது. அப்போது அவள் கணவரை மன்னவரே (10) கவிச் சிங்கமே (10) மன்மதனே (10) சுவாமி (10, 18) ஐயா (18 ) என அழைப்பதைப் பார்க்கிறோம். உரையும் கவிச் சிங்கமே, தங்கம் யான் சின்ன கதை சொன்னது போரும், சுவாமி தானே நீர் சொல்லி வந்தால் கேழ்ப்பேனே (10) என்று கப்பலில் தலைவி கூற்று ஒரு முறை வருகின்றது. குதிரைப் பந்தயத்தில் எந்தக் குதிரை ஜெயிக்கும் என்று கணவன் கேட்க அதற்குப் பதில் உரைக்குமுகமாக ``பார்த்தால் தெரியுதய்யா டாலன் துரையுமவன் பண்புடன் முந்தி வாறான் என் சுவாமி பகர்ந்திட மருநான்கு குதிரையும் பிந்துறது பாரும் உன் சொல்லை நீர் மிக நேமி`` (18) என்று மனைவி கூறுகிறாள். அந்தக் குதிரை தோற்றதைக் கணவன் சொல்ல அறிந்ததும் மனைவி கூற்றாகக் ``கூத்துப் பார்த்த இடத்திலே பேய் பிடித்ததுபோலே, கூடிய சொக்குத் தூளைப் போட்டீர்களோ கண்ணிலே, காற்றுப் போல வாறானையா பாருங்கள் எதிராலே களைத்துப் போச்சுது எந்தன் பந்தயம் வீணாலே (18) என்று கூறியபின் ``வளர்ந்திட்ட இம்மலைப் பேர் என்ன ஐயா வகையுடன் வளவுக்குச் சென்றிடலாம் வாரும்`` (18) என்று சொல்கிறாள் மனைவி. கணவன் கூற்றுக்களில் எல்லாம் பெரும்பாலும் வாடி, புல்வேனடிந வந்ததடி (16) என்று அடி போட்டு அழைப்பதே மிகுதியாக உள்ளது.


புராணக் குறிப்புகள்:


குதிரைப் பந்தய லாவணியின் முற்பகுதியில் இடம்பெறும் சுப்பிரமணியர் பேரில் பதம் என்னும் பகுதியில் கந்தபுராணக் குறிப்புகள் சில இடம்பெற்றுள்ளன. ஆறுமுகனே, சரசவள்ளி லோலா, எழில் வள்ளி லோலா, வாசவன் மகள் (தெய்வயானை) மருவிய தோளா, கந்தனே, உமையவள் அருளிய பாலா, ஜெகதீசன் அருவிழியால் வரு முருகேசனே என்னும் குறிப்புகள் கந்த புராணத் தொடர்புடையவை.

லாவணிப் பகுதியில் மன்மதன், ரதி பற்றிய செய்திகளில் புராணக் குறிப்புகள் உள்ளன. கன்னல்வில் மதன் (5) என்பது கரும்பு வில்லைக் கொண்ட மன்மதனைக் குறிக்கும் ஒரு தொடர். செங்கைவேள் மன்மதன் (21) என்னும் தொடரில் மன்மதனை வேள் - தலைவனாகக் கூறும் குறிப்பு உள்ளது. சித்தசன் (11) என்னும் பெயரில் மன்மதன் மனதில் தோன்றுபவள் என்னும் குறிப்பு உள்ளது. றதி (1)(2)பாவை றதி (2) பெண் றதி (2)(17) என்று ரதியைப் பற்றிய செய்தி உள்ளது. தம் மனைவியை அழைப்பதற்குரிய தொடர்பாகவே ரதியை ஆசிரியர் பயன்படுத்துகிறார்.


சமயப் பொதுமை:

தாசன் இந்து சமயத்தைச் தார்ந்தவர். நூலைத் தொடங்குவகற்குரிய முற்பகுதியாகச் சிங்கை நகர் சுப்பிரமணியர் பேரில் பதம் பாடியுள்ளார். முருகனை நோக்கிப் பார் யான் கடைத் தேற, பலதமிழ்கள் கூறப் பகஷம் வைத்து வந்தாளும் சமயம் முருகா`` ``என்னைக் கார் வடிவேலனே`` என்று பாடுகிறார். மேலும் ``எங்கும் உன்னைத் தேடி இரங்கசாமி பாடி இங்கு வந்தேன் என்னைக் காரும் முருகா`` அந்தமுடைய இரங்கசாமி யான் பாலா. அடியேன் வினையகற்றிடு குணசீலா`` என்று இப்பாடலாசிரியர் முடிக்கிறார். பொய்யூர் நகரை விட்டுப் புறப்படும்போது ``பய்யவே, கரிமுகன் தாளடியைப் பணிந்து`` செல்லுமாறு மனைவியிடம் சொல்கிறார் (1). இது இடையூறு நீக்கும் விநாயக வணக்கமாக அமைகிறது. பினாங்கில் ஒரு நாள் இறங்கி இருக்கும் வேளையில் கிருஷ்ணசாமி, மாரியம்மன் ஆகியோரை வணங்கிச் செல்வதைக் காணுகிறோம். பிறகு சிங்கப்பூரில் செளத்பிரிட்ஜ் ரோட்டில் மாரியம்மனை வணங்கிச் செல்வதையும் பார்க்கிறோம். இறுதியில் ஆர்ச்சட் ரோட்டில் இருந்த சிவன் சன்னதியைப் பற்றிய செய்தியாக மாதவங்கள் புரியும் சிவன் சன்னதியைத் தேடி அன்புடன் சரணங்கள் செய்யக் கோறடி (19) என்று வருகின்றது. இவ்வாறு முருகன், விநாயகர், மாரியம்மன், கிருஷ்ணன், சிவன் ஆகியோரை வணங்கினாலும் பொதுமைத் தெய்வமாக ஒரே கடவுளாகக் கூறும் நோக்கினையும் தாசனிடம் காண்கிறோம். நூலின் தொடக்கத்தில் உள்ள கடவுள் துணை என்னும் தொடரும் லாவணிப் பகுதியின் தொடக்கத்தில் உள்ள பரம கருணாநிதியே துணை என்னும் தொடரும் அகர முதல எழுத்தெல்லாம் என்னும் குறளும் இதற்குச் சான்றாக உள்ளன. மேலும் தாசன் தம்மை அத்வீத வழி மரையாகன் (21) என்று சொல்லிக் கொள்கிறார். வேதாந்த உணர்வு மிக்கவர் என்பது தெரிகிறது. மேலும் ஏனைய சமயங்களை மதித்துப் போற்றும் சமயப் பொதுமையும் தாசனிடம் மேலோங்கி நிற்கிறது. நாகபட்டினத்திலிந்து புறப்படும் போது கடலில் படகுக் காட்சியாகத் தெரியும் தர்காவைத் ``தன்னகத்தோர் புகழும் தருகா மணவறா சாயலில் தெரியுது நீபாரு, சந்தோஷத்துடன் மீறா சாய்பே அன்புடன் சரணங்கள் செய்திட மனதில் கோரு`` என்று மனைவியிடம் தாசன் கூறுகிறார் (5). பிறகு சிங்கையில் செளவ்த்பிரிட்ஜ் ரோட்டில் மாரியம்மன் கோயிலை அடுத்துள்ள பள்ளிவாசலைப் ``புகழுவேன் பள்ளியை யான் கண்டாலே, போதனெறிகள் தவறாமல் நடத்திவரும்``(12) என்று குறிப்பிடுகிறார். பென்கூலர் பகுதியிலுள்ள புதுப்பள்ளி, செளறகர்கள் (Jews) பற்றிய குறிப்புகளும் நூலில் உள்ளன. ஆனால் கிறிஸ்துவ சமய வழிபாட்டுத் தலங்களாகிய தேவாலயங்களைப் பற்றிய குறிப்பு இல்லாதது வியப்புக்குரியதாக இருக்கிறது.தொடக்கமும் முடிவும்:லாவணி ஒரு கலை நிகழ்ச்சியாதலினால் கடவுள் வணக்கத்துடன் தொடங்கி மங்களத்துடன் முடிகின்ற நிலையைக் காண முடிகிறது. சுப்பிரமணியர் பேரில் பதம், அகர முதல எழுத்தெல்லாம் ஆகியவை கடவுள் வணக்கப்பாடல்கள் இறுதியிலுள்ள 20ஆம் பாட்டில் மங்களமாக இருப்போம் உகந்து என்ற மங்களம் என்னும் சொல் வருகிறது.சமூகம்:


குதிரைப் பந்தய லாவணி தான் எழுந்த காலத்துச் சிங்கைச் சமுதாயத்தை நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றது. சமுதாயப் பெரியவர்களாகப் பால்கம்பம் கந்தசாமி அய்யா (14) தம்பியய்யா (14) அப்பாசாமி பேதா (15) அப்பாசாமி முதலி (19) கருப்பண்ண வாத்தியார் (19) ராமசாமிப் பத்தர் (19) சுப்பையா (துப்பாஸ்) (20) ஆகியோரை லாவணி குறிப்பிடுகின்றது. இவர்களின் பெயரை ஒட்டிய சாதிப் பிரிவுகள், தொழிற் .

பயர்கள், மரியாதைப் பெயர்கள் ஆகியவை சமுதாய நிலையை ஓரளவு சுட்டிக் காட்டுகின்றன. நார்த் பிரிட்ஜ் ரோட்டில் கன்னி மக்காக்காரிகள் (13) இருப்பதையும், துஷ்டர்கள் புகழ்ந்திட ஜப்பொன்காரிகள் கன்னத்தில் புட்டா விட்டு (மேக்கப் செய்து கொண்டு) பலர் அறிய சூகஷ்மாய் (13) இருப்பதையும் தாசன் கூறி அவர்களை சோரங்கிஸ்திரிகள் என்று அழைக்கிறார். எனவே பரத்தையர் தொழிலும் சிங்கையில் இருந்த நிலையைக் காணமுடிகிறது. பிறகு பலவித ``ஒயின் சாறாயம் விற்கும் கடையைப் பாழாகத் தள்ளி வா`` (20)என்று வரும் குறிப்பால் மதுக்கடைகள் இருந்த செய்தியும் தெரிகிறது. இந்து, முஸ்லீம், யூத மதங்கள் இருந்த குறிப்பும் தெரிகிறது.


பாவிகம்


பாவிகம் என்பது காப்பியப் பண்பே என்பது தண்டியலங்காரம். அதாவது ஒரு கதை கூறும் இலக்கியத்தின் உட்குறிப்பே பாவிகம். அந்த அடிப்படையில் பார்த்தால் குதிரைப் பந்தய லாவணியின் உட்குறிப்பு என்ன என்ற கேள்வி எழும். தமிழகத்திலிருந்து சிங்கைக்குக் குடியேறுபவர்கள் குடும்பத்துடன் வர வேண்டும், மனைவியை விட்டுத் தனியே வருதல் தகாது என்னும் கருத்தும், வாழ்க்கையே ஒரு குதிரைப் பந்தயம் போன்றதுதான், போட்டி மிக்க சமுதாயத்தில் போட்டியிட்டுத்தான் வரவேண்டும் என்ற கருத்தும், எப்போதும் இருப்போம் உகந்து என்று கூறுவதால் குடியேறிய நாடுகளிலேயே மகிழ்ச்சியாகக் குடும்பத்துடன் தங்குவதே சிறந்தது என்னும் கருத்தும் இந்நூலின் உட்கருத்துகளாக அமைந்துள்ளன எனக் கூறலாம்.

முடிவுரை:

சிங்கைக்குத் தமிழர்கள் வந்த வரலாற்றினை -  வழியைக் குதிரைப் பந்தய லாவணி தெளிவாக விளக்குகிறது. மேலும் அந்நூலின் உள்ளடக்கம், உத்தி, உருவம் பற்றிய செய்திகளையும் இக்கட்டுரையில் கண்டோம். சிங்கப்பூரில் அன்றிருந்த கட்டிடங்கள், சாலைகள், சமூகம் பற்றிய செய்திகளையும் அறிந்தோம். உருவம் என்பதில் யாப்பு, மொழிநடை ஆகியனபற்றியும் தெரிந்துகொண்டோம். குதிரைப் பந்தய லாவணியே சிங்கப்பூர் மண்ணின் மணம் கமழத் தமிழர் வந்த வரலாற்றை நன்கு விளக்கும் முதல் படைப்பு இலக்கியமாக விளங்குகிறது.


துணை நூற்பட்டியல்

தமிழ்
1.  க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, க்ரியா. சென்னை 1992

2.  சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி

3.   கோவிந்தசாமி, நா. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி ஒரு சமூகவியற் கண்ணோட்டம் சிங்கப்பூரில் தமிழும் தமிழ் இலக்கியமும் 2 சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 1979 பக் 25-39

4.  சரவணத் தமிழன் யாப்புநூல் திருவாரூர் இயற்றமிழ்ப் பயிற்றகம் 1981

5.  திருநாவுக்கரசு,வை. சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதை முன்னுரை
The Poetry of Singapore, The ASEAN Committee on Culture and Information Singapore 1985  பக் 130 -140

5.     முத்தப்பன் பழ. சிந்து இலக்கியம்  சென்னை
            உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1983

6.     முத்துப் பழநியப்ப செட்டியார்      பெ.நா.மு., மலாயாவின் தோற்றம்        பினாங்கு. மெர்முக்கெண்டைல் அச்சியந்திர சாலை 1938


English

1.   Tyers, Ray, Singapore: Then and Now 2 Volumes University of Education Press,1986
2.   Siddique, Sharon and Nirmala Puru Sotham, Singapore`s Little India, Past, Present and Future, Institute of Southeast Asian Studies, Singapore 1982

3.   Donald and Joanna Moore, The First 150 years of Singapore. Donald Moore Press Ltd, Singapore 1969


4.   Dhorai Singam S. Samuel, Singapore`s Heritage Through Places of Historical Interest, Elixir Consultantcy Service, Singapore 1991

5.   Encyclopeadia of Tamil Literature Vol 1. Madras, Institute of Asian Studies 1990

6.   Tan Sri Datuk Mubin Sheppard (Ed.) 150th Anniversary of the Founding of Singapore, Singapore, Times Printers Sdn Bhd. M.B.R.A.S 1973


7.   Tan K.E. (Ed) Framework and Foundation. A History of the Public Works Department. Singapore Public Works Department 1992.... தொடரும் ....
Dr S.P. Thinnappan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக