வெள்ளி, 2 மே, 2014

சிங்கப்பூரில் தமிழ் - 2



சிங்கப்பூர்த் தமிழ் -- சில மொழியியல் கூறுகள்


 


சிங்கப்பூர் தென் கிழக்காசியாவில் உள்ள ஒரு சிறு தீவு.  அதன் பரப்பளவு 704 சதுரக் கிலோ மீ“ட்டர்.  அதன் மக்கள் தொகை 4.48 மில்லியன்.  இவர்களில் சீனர்கள் 76%, மலாய்க்காரர்கள் 13.7%, இந்தியர்கள் 8.4%, ஏனையோர் 1.8% இந்தியர்களில் 65% தமிழர்கள்.  ஏனையோரில்  மலையாளிகள், தெலுங்கர்கள், குஜராத்திகள், பஞ்சாபியர் ஆகியோர் அடங்குவர்.  இங்கு வாழ்வோரில் பெளத்தம், தெளஹிசம் ஆகிய சமயத்தினர் 51%, இசுலாமியர் 15%; கிறித்துவர் 15%; இந்துக்கள் 4%.  சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய் மொழி.  சீனம், மலாய், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கும் அதிகாரத்துவ மொழிகள்.  இருப்பினும் ஆங்கிலமே அலுவலக மொழியாகவும், கல்வி நிலையங்களில் பயிற்றுமொழியாகவும், பல்வேறு இனத்தவரின் தொடர்பு மொழியாகவும் கோலோச்சுகிறது.  சிங்கப்பூர் ஒரு குடியரசு நாடு.


 


சிங்கப்பூரின் பழைய பெயர் சிங்கபுரம்.  இப்பெயர் சிலப்பதிகாரத்தில் கோவலனின் முற்பிறவி தொடர்பான ஓர் ஊர்ப் பெயராகக் குறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே  பெயரளவில் சிங்கப்பூருக்கும் சிங்கபுரத்துக்கும் ஒரு தொடர்புள்ளது.  நவீன சிங்கப்பூரைக் கிழக்கு இந்தியக் கம்பெனியைச் சார்ந்த சர் ஸ்டாம் போர்டு ராபிங்ஸ் என்னும் ஆங்கிலேயர் 1819இல் உருவாக்கினார்.  இவரோடு பினாங்கிலிருந்து வந்த நாராயண பிள்ளையும் ஏனைய தமிழர்களுமே  தமிழ் இந்நாட்டில் வழங்கக் காரணமானவர்.  பிறகு தமிழகத்தின் சோழ மண்டலப் பகுதியிலிருந்து தமிழர் பலர் இந்நாட்டில் பல்வேறு பணிகளைச் செய்யக் கொண்டு வரப்பட்டனர்.  இவர்கள் இங்கே தங்கி வாழ்ந்தனர்.  இவர்கள் சோழியர் எனப்பட்டனர்.  சோழிய தெரு என ஒரு தெரு இன்றும் இங்கு உள்ளது.  1824ஐ ஒட்டிய  காலகட்டத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் இங்கு வந்து கொடுக்கல் வாங்கல் தொழில் நடத்தத் தொடங்கினர். இலங்கையிலிருந்து தமிழர்கள் சிங்கப்பூருக்கு வந்து பல்வேறு அலுவலகப் பணிகளில் ஈடுபட்டனர்.


 


சிங்கப்பூரின் முதல் இந்துக் கோயிலான மாரியம்மன் கோயிலில் ஒரு தமிழ்க் கல்வெட்டு உள்ளது.  தமிழகத்திலுள்ள கடலூரைச் சார்ந்த சேஷாசலம் பிள்ளை என்பவர் இக்கோயிலிலுள்ள இராமர் திருவடிக்கு 1828இல் கொடுத்த நன்கொடை பற்றிய குறிப்பு ஒன்று இக்கல்வெட்டில் உள்ளது.  இதுவே இங்குள்ள முதல் தமிழ்க் கல்வெட்டாகும்.                                                 


 


தமிழ் வழங்கும் நாடுகளில் சிங்கப்பூருக்கெனச் சில தனித் தன்மைகள் உண்டு.


 


1.     தென்கிழக்காசிய நாடுகளில் சிங்கப்பூரில்தான் தமிழ் ஓர் அதிகாரத்துவ மொழியாக அமைந்துள்ளது.  ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகளும் சிங்கப்பூர்க் குடியரசின் அதிகாரத்துவ மொழிகளாக அரசியல் அமைப்புச் சட்டத்தால்  ஏற்றுக் கொள்ளப் பெற்றிருக்கின்றன.


2.     இந்த வாய்ப்பினால் நாடாளுமன்றத்தில் தமிழ் பேசும் வாய்ப்பினைத் தமிழ் உறுப்பினர்களுக்குச் சிங்கப்பூர் அரசாங்கம்  வழங்கியுள்ளது.  தமிழில் ஓர் உறுப்பினர் பேசும்போது அதே நேரத்தில் பிறமொழிகளில் மொழிபெயர்த்துக் கொடுப்பதற்கும் பிறமொழிகளில் மற்றவர்கள் பேசும்போது தமிழ் மட்டும் தெரிந்த உறுப்பினர்களுக்குத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து கொடுப்பதற்கும் நாடாளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர்களை அமர்த்தியுள்ளது.


3.     அரசாங்க அலுவலகங்களின் பெயர்க்ள, அறிவிப்புகள், விளம்பரங்கள் நான்கு மொழியிலும் இடம்பெற்று இலங்கும் நிலைமையைச் சிங்கப்பூரில் இன்றும் காணலாம். சென்னை செல்லும்சிங்கப்பூர் விமானத்தில் பயணிகளுக்கான அறிவிப்புகள் தமிழில் செய்யப்படுகின்றன.


4.     மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன், இந்தோனேஷியா, சிங்கப்பூர், புருனை முதலிய பத்து நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான்”  மட்டத்தில் நடைபெறும் இலக்கியப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தமிழுக்கு ஓர் இடம் தந்து அதனைக் கொண்டு நிறுத்தும் வாய்ப்பு சிங்கப்பூருக்கே உண்டு.  இதனால், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் ஆசியான் இலக்கிய விருதுகளைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றனர். சிங்கப்பூர் அரசாங்கச் சார்பு நிறுவனங்கள் ஆண்டுதோறும் நடத்தும் விருதுகள் பத்தாயிரம் வெள்ளிப் பரிசுகள் போட்டிகள் அனைத்தும் தமிழ் இலக்கியத்திற்கும் கிடைக்கின்றன


5.     கல்வி நிலையங்களில் தொடக்க நிலை முதல் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு முடியத் தமிழை ஒரு கட்டாயப் பாடமாகப் படிப்பதற்கேற்ப அரசு இருமொழிக் கொள்கையை வகுத்துள்ளது.  இதன் காரணமாக இன்று தொடக்கப் பள்ளிகளில்  ஏறத்தாழ 16, 000 மாணவர்களும் உயர்நிலைப் பள்ளிகளில் 8000 மாணவர்களும் இளையர் கல்லூரி,  புகுமுக வகுப்பு நிலையங்களில் 1000  மாணவர்களும் தமிழ்  பயின்று வருகின்றனர்.  118 தொடக்கப் பள்ளிகளிலும் 33 உயர்நிலைப் பள்ளிகளிலும் 9 உயர்கல்வி நிலையங்களிலும் 13 இளையர் கல்லூரிகளிலும் தமிழை  தாய்  மொழிப் பாடமாகக் கற்பித்து வருகின்றனர்.  இவற்றில் ஏறத்தாழ 600 தமிழாசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


6.     மாணவர்களுக்கான பாடநூல்கள், பயிற்று கருவிகள் சிங்கப்பூரிலே கல்வி அமைச்சினரால் தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  தொடக்க நிலை 1 முதல் உயர்நிலை 4 வரை இத்தகைய பாடநூல்களே இருந்து வருகின்றன. கணினி வழிப் பயிற்று கருவிகள், இணைய வழிக் கற்பித்தல் முதலியனவும் தமிழில் நடைபெறுகின்றன.  தமிழ் பயிற்றுவதற்கு உரிய பலவகைப் பயிற்றுக் கருவிகள் சிங்கப்பூரில் அதிகம் தயாரிக்கப்பட்டுள்ளன.  தமிழ் கற்பித்தல் தொடர்பான பாடத் திட்டம், பயிற்று கருவிகள் உருவாக்கம், தேர்வு முதலியவற்றைக் கவனிக்க அரசாங்கக் கல்வி அமைச்சில் தனிப் பிரிவுள்ளது.  தொடக்கப் பள்ளிகள் அறநெறிக் கல்வி என்னும் பாடம் தமிழில் பயிற்றுவிக்கப்படுகிறது.  தமிழை ஒரு பாடமாகக் கற்பிக்கும் பாலர் பள்ளிகள் சில உள்ளன.  தமிழாசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேசிய கல்விக் கழகம் என ஒன்று நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் உள்ளது.  சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தமிழல்லாதார் தமிழ் படிக்கவும், புதுமுக வகுப்பில் தமிழ் பயின்றவர்கள் தங்கள் தமிழ்மொழித் திறனை மேம்படுத்திக்கொள்ளவும் கலைப்புலத்தில் மொழி கற்பிக்கும் நிலையத்திலும் தெற்கு ஆப்பிரிக்காவிலும் வாய்ப்புகள் உள்ளன.  மேலும் சிம் பல்கலைக் கழகத்தில் தமிழ் பி.ஏ. பட்டப் படிப்புப் பகுதி நேரத்தில் பயில்வதற்கு உரிய வசதிகளும் உள்ளன


7. சிங்கப்பூரில் இப்போது வானொலி 96.8 ஒலி என்பது இருபத்து நான்கு மணி நேரத் தமிழ் ஒலிபரப்பினைச் செய்து வருகிறது.  தொலைக்காட்சியும் நாள்தோறும் கணிசமான  அளவில் தமிழ் ஒளிபரப்பினைச் செய்து வருகிறது.   இவற்றின் தமிழ்ச் செய்தி அறிக்கைகளில் நல்ல தமிழ் நடமாடும்.   இவற்றின் வாயிலாகத் தமிழ் மொழியும் இலக்கியமும் சிங்கப்பூரில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன..  மலேசியா, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிங்கை வானொலிக்குரிய பங்கு பெரிது என்பர்.  (முருகையன், : 1977:79)


 


8.     மலேசியா, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாற்றை நோக்கும்போது சிங்கப்பூரில்தான் முதல் தமிழ் இலக்கியம் உருவாயிற்று.  (தண்டாயுதம் : 1981-205) 1887ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சதாசிவப் பண்டிதர் என்பவரால் சிங்கப்பூரிலேயே அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டசிங்கை நகர் அந்தாதி’, ‘சித்திரக் கவிகள்என்ற இரு நூல்கள் தாம் சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் நூல்களாகும்.  தேங் ரேர்டூடடில் குடி கொண்டிருக்கும் அருள்மிகு சுப்பிரமணியரைப் பற்றிய அந்தாதி, சித்திர கவிகளின் தொகுப்பே இந்நூல்களாகும்.  (நா.  கோவிந்தசாமி, 1970: 24) இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் இலக்கியமாக 1893இல் ரங்கசாமி தாசன் என்பவர் குதிரைப் பந்தய லாவணி என்னும் நூலை இயற்றியுள்ளார்


சிங்கப்பூரில் கவிதை, சிறுகதை ஆகியவை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன.  சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபடுகிறது. 


9.     தமிழ் மொழியியல் அண்மையில் ஏற்பட்ட 13 எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய சிந்தனையை முதன்முதலாகத் தெரிவித்துச் சிங்கப்பூரைச் சார்ந்த ஒருவர்தான் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டார் என்னும் செய்தியும் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.  1933ஆம் ஆண்டிலேயே தமிழ் எழுத்துச் சீர்திருத்த  முயற்சிகள் சிங்கப்பூரில்  தொடங்கப்பட்டு விட்டன.  தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள் நடத்திய முன்னேற்றம் என்ற இதழில் சிங்கப்பூர்த் தமிழ் அறிஞரான திரு. .சி. சுப்பையா அவர்கள்தமிழ் வரிவடிவ ஆராய்ச்சிஎன்ற  தலைப்பில் ஆய்வுக் கட்டுரைத் தொடரை எழுதினார்.  ஆய்வுக் கட்டுரையின் முடிவில் தற்போது மாற்றத்திற்குள்ளாகியிருக்கும்.  எழுத்துச் சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டு திருத்தினால் தமிழ்மொழி கற்றலும் கற்பித்தலும் எளிமையாகவும் குழப்பமில்லாமலும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.  (தெய்வநாயகம் ச; திண்ணப்பன் சுப; கோவிந்தசாமி, நா. : 1985 : 6.)


10.    சிங்கப்பூரில் முதல் சீனமொழி நாளிதழ் 1881ஆம் ஆண்டில் தோன்றுவதற்கு முன்னரே தமிழ் மொழியில் செய்திப் பத்திரிகை இருந்தது என்று ஆய்வாளர்கள் கூறுவார்கள் (திருநாவுக்கரசு வை. 1979:72).  1887இல் சிங்கையிலிருந்து வெளிவந்த சிங்கை நேசன் என்ற வார இதழே இப்போது காணக்கிடைக்கும் முதல் தமிழ்ப் பத்திரிகை. இதன் முதல் தலையங்கம்  ஏற்கெனவே நடந்து நின்றுபோனசிங்கை வர்த்தமானி”, “தங்கை நேசன்”, “ஞான சூரியன்ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளைக் குறிப்பிடுகிறது.  ஆயினும், இவை கிடைக்கவில்லை.  இதனைத் தொடர்ந்து மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகம் பல நாளிதழ்களையும் கிழமை  திங்கள் - இதழ்களையும் கண்டுள்ளது.  (தண்டாயுதம், இரா : 1981:204). சிங்கை வர்த்தமானி 1876ஆம் ஆண்டிலும் தங்கை நேசன் 1878ஆம் ஆண்டிலும் தோன்றியிருக்க வேண்டும்.  (திருநாவுக்கரசு, வை 1979:72).


11.    இப்போது சிங்கையில் இருக்கும் ஒரே தமிழ்ப் பத்திரிகையானதமிழ் முரசுமலேசியச் சிங்கப்பூர்த் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியிருக்கும் தொண்டு அளவிடற்கரிய ஒன்று.  1932இல் தமிழவேள் கோ. சாரங்கபாணியால் துவக்கப்பட்ட இவ்விதழ் சிங்கப்பூரிலும் மலேசியாவின் இதரப் பகுதிகளிலும் நற்பணியாற்றியது.  மலேசியா சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தமிழ் முரசால் அறிமுகம் ஆனவர்களே.  கோ. சாரங்கபாணி 1932


லிருந்து தமிழ் விழாவினை ஆண்டுதோறும் நடத்தற்கும்  கலந்தாலோசித்தார்.  இவ்விழாச் சமயத்தே தமிழ்மொழி இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ் முரசு 1935-41ஆம் ஆண்டுகளில் சமய, சமூகச் சீர்திருத்தத் துறைகளில் பணியாற்றியதோடு தமிழர்களின் ஒற்றுமைக்கும் வழிவகுத்தது.  1938-60ஆம் ஆண்டுகளில் தமிழ்மொழி வளர்ச்சியில் நாட்டம் கொண்டது.  (மணி. . 1981:213).  முருகு சுப்பிரமணியன், முருகையன், . திருநாவுக்கரசு, வை.தி. செல்வகணபதி ஆகியோர் வருகைக்குத் தமிழ் முரசுதான் காரணமாக இருந்தது.


12.    தமிழ் எங்கள் உயிர்என்னும் குறிக்கோளுடன் நிதி திரட்டித் தமிழவேள், கோ. சாரங்கபாணி அவர்களின் முயற்சியால் 1956இல் சிங்கப்பூரிலிருந்து பல்கலைக் கழகத்தில்தான் இந்திய ஆய்வுத் துறை (தமிழ்மொழி இலக்கிய ஆய்வுகளுடன்) தொடங்கப்பெற்றது.  பேராசிரியர் மு. இராசக்கண்ணனார் முதல் தலைவராக இருந்து சிங்கப்பூரில்தான் பணியாற்றினார்  1959இல் கோலாலம்பூரில் மலேயாப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபின் இந்திய ஆய்வுத் துறையும்  அங்கிருந்த தமிழ் நூல்களும் கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டன. (. மணி : 1931:2:4).


13.    தென்கிழக்கு ஆசியாவிலேயே தொடக்கநிலை முதல் உயர்நிலை இறுதி வரை தமிழில் பல பாடங்களைக் கற்பித்த ஒரு பள்ளியாக ஓர் உயர்நிலைப் பள்ளியாக உமறுப்புலவர் தமிழ்ப்பள்ளி இருந்து வந்தது.  இது 1946இல்  தொடங்கப்பட்டது உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளி சிங்கப்பூரில் தமிழில் உயர்நிலைக் கல்வி வழங்கிய முதலாவது ஒரே பள்ளியாகும்.  இப்பள்ளி கட்டப்படுவதற்கு முன்னர் சிங்கப்பூரில்  தமிழில் உயர்நிலைக் கல்வி இல்லை.  உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளி, தமிழ்ப்பள்ளியில் பயின்ற அறிவுள்ள  மாணவர்கள் உயர்நிலை  நான்காம் வகுப்புவரை தங்களின் படிப்பைத் தொடர உதவியது.  தமிழ்க் கல்வியைப் ய்ம்பறுத்தவரையில் இதன் பங்கு ஒரு சிறந்த சாதனையாகவே உள்ளது.  இதில் பயின்றோர் பலர் இப்போது சிங்கப்பூரில் தமிழாசிரியர்களாக உள்ளனர் (பழனிசாமி கே. 1987:123).


14.    மலேசிய சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் சிங்கப்பூரில்தான் தோற்றம் கண்டது என்பர் (கோவிந்தசாமி, நா : 1997:26)


15.    சிங்கப்பூரின் நாணயங்களிலும் நாணயத் தாளிலும் தமிழில்சிங்கப்பூர்என்று எழுதப்பெற்றிருக்கும் தன்மையைக் காணலாம்.


16 தமிழ் மொழி வளர்ச்சி, கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கெனப் பலவகைத் தமிழ் அமைப்புகள்  உள்ளன.  ஆன்மிகத் தமிழ் வளர்ச்சிக்கெனச் சிங்கப்பூரில் ஆலயங்களும் திருமுறை மாநாட்டினரும் பாடுபடுகின்றனர்


இத்தகைய தனித்தன்மை பல இடம்பெற்றுள்ள சிங்கப்பூரில் வழங்கும் தமிழ் மொழியின் கூறுகளை எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


 


 


 


 


சிங்கப்பூரின் சூழலும் வரலாறும்


 


இந்திய மொழிகளில் தமிழ்மொழி பேசுகின்றவர்களின் எண்ணிக்கைதான் மிகுதி.  தமிழைத் தவிர மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, இந்தி, பெங்காலி மொழி பேசுகின்றவர்கள்  இருக்கிறார்கள்.  தமிழ் பேசுவோர்களில் இந்து சமயத்தைச் சார்ந்தோராகவே பெரும்


பாலும் உள்ளனர்.  இவர்களைத் தவிர இஸ்லாமியரும் கிறிஸ்துவர்களும் இருக்


கிறார்கள்.  சிங்கப்பூரில் படித்தோர் எண்ணிக்கை ஏறத்தாழ 81% ஆகும்.  நாளுக்கு நாள் ஆங்கிலம் தெரிந்தவர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது.  பொருளாதார வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், உலக வாணிபம் ஆகியவற்றுக்காக ஆங்கிலம், பண்பாடு, கலாச்சாரமும் பழக்கவழக்கங்களைப் பேணுதல் ஆகியவற்றுக்காக ஏனைய மூன்று மொழிகளுள் ஒன்றும் எல்லோருக்கும் தேவை என்னும் அடிப்படையில் அரசாங்கம் இருமொழிக் கொள்கையினை அமைத்துள்ளது.சீனர், மலாய்க்காரர், இந்தியர்  ஆகியோர்களுக்கு ஒரு காலத்தில் தொடர்புமொழியாக மலாய்  மொழி இருந்து வந்தது.  ஆனால், இப்பொது அந்நிலை படிப்படியாக மாறி ஆங்கிலம் தொடர்பு மொழியாக உள்ளது.    இருந்தாலும் படிக்காத மக்களிடையே காய்கறிச் சந்தைகளிலும், மளிகைக் கடைகளிலும் இன்னும் தொடர்புமொழியாக முதியவர்களின் அன்றாட வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்பப் பயன்படுத்தும் மொழியாகவும் மலாய் மொழி உள்ளது.


 


1965ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் ஒரு தனிக் குடியரசு நாடாகத் திகழ்ந்து வருகின்றது. அதற்கு முன்னர் மலேசியாவின் ஒரு பகுதியாகத்தான் சிங்கப்பூர் இருந்து வந்தது. இன்றும் இரு நாடுகளுக்கிடையே இடையறாது தொடர்பு இருந்து வருகிறது.  சிங்கப்பூரில் வாழ்கின்ற தமிழர்களில் பலர் மலேசியாவைச் சார்ந்தவர்கள்.  எனவே சிங்கப்பூர்த் தமிழ் என்பது மலேசியத் தமிழிலிருந்து கிளைத்து எழுந்த ஒன்றுதான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.  மலேசியத் தமிழ் , சிங்கப்பூர்த் தமிழ் இரண்டிற்கும் இடையே காணப்பெறும் பொதுக் கூறுகள் பல.  இக்கூறுகள் பிரித்துக் காட்டமுடியாத  இயல்புடையனவாகவே பெரும்பாலும் இருக்கின்றன.  இருந்தாலும் இன்றைய மலேசியத் தமிழில் மலேசிய நாட்டுத் தேசிய மொழியான மலாய் மொழிச் செல்வாக்கு மிகுதியாக உள்ளது.  ஆனால் சிங்கப்பூர்த் தமிழ்மொழியில் அந்த அளவுக்கு மலாய் மொழிச் செல்வாக்கு இல்லை.  சிங்கப்பூரில் ஆட்சி மொழியான ஆங்கிலத்தின் செல்வாக்கு சிங்கப்பூர்த் தமிழில் ஓரளவு இருந்துவருகிறது.  பிறமொழிக் கலப்பு என்னும் கண்ணோட்டத்தில் இரு நாட்டுத் தமிழையும் ஒப்பிடும்போது சிங்கப்பூர்த் தமிழில் பிற மொழிக் கலப்பு குறைவு என்று கூறலாம்.


 


எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும்


 


தமிழ் மொழியில் தொல்காப்பியர் காலம் தொட்டு இன்று வரை காணப்படும் எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்னும் இருமொழி வழக்கு நிலை சிங்கப்பூர்த் தமிழிலும் காணப்படுகின்ற ஒன்றாகும்   எழுத்துத் தமிழ், பொதுவாகப் பத்திரிகைகளிலும் பாடநூல்களிலும் அரசாங்க அறிவிப்புகளிலும் வெளியீடுகளிலும், படைப்பு இலக்கியங்களான கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் போன்றவற்றிலும், வானொலி, தொலைக்காட்சிச் செய்தி அறிக்கை, இலக்கிய நிகழ்ச்சிகள், நிகழ்ச்சி அறிவிப்பு போன்றவற்றிலும், மேடைப் பேச்சுகளிலும் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றது. பொதுவாக இல்லங்களிலும் பொதுவிடங்களில் தமிழரகள் சந்திக்கும்போது நடத்தும் உரையாடல்களிலும், தமிழர்களின் வணிக நிலையங்களிலும், சிறுகதை, புதினம் போன்றவற்றில் வரும் உரையாடல்களிலும், நாடகங்களிலும், நகைச்சுவைத் துணுக்குகளிலும், புதுக் கவிதைகளிலும், வானொலியில் வரும் வணிக விளம்பரங்களிலும் பேச்சுத் தமிழின் செல்வாக்கு மிகுதியாக உள்ளது.


தமிழ் பேசுவோர் குறிப்பிடும்போது யாழ்ப்பாணத் தமிழருக்கும் இந்தியத் தமிழருக்கும் இடையே சிறப்பான வேறுபாடுகளைக் காணலாம்.  இந்தியத் தமிழ் என்னும் நிலையிலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் தமிழ், மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டோர் தமிழ், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டோர் தமிழ் என்று முத்தரப்பினரிடையே சில வேறுபாடுகள் உண்டு.  தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இடத்தும், இல்லத்தில் ஆங்கிலம் பேசும் குடும்பத்தினருக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு.  முன்னவர் பேசும்  தமிழில் ஆங்கிலச் சிந்தனைகளும் வாக்கிய அமைப்புகளும் ஆங்கில மொழிக் கலப்பும் மிகுதி.  பின்னவர் பேசும் தமிழில் சரளமும் நடைஓட்டமும்  மிகுதியாக இருக்கும்.  ஆங்கில மொழிக் கலப்பும் குறைவாக இருக்கும்.   இவர்கள் அனைவருக்கும் எழுதும் தமிழில் வேறுபாடுகள் இல்லை.


 


எழுத்துத் தமிழின் சிறப்பியல்புகள் புதிய வரிவடிவம்


 


தமிழக அரசினர் ஏற்றுக்கொண்ட எழுத்துச் சீர்திருத்தத்தை (பதின்மூன்று எழுத்துக்கள் னா, ணா, றா, லை, ளை, னை, ணை, னொ, ணொ, ளோ, னோ, றொ, றோ) 1984ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்றுக்கொண்டு செயலாக்கப்படுத்தியது.  எனவே, இப்பொழுது சிங்கப்பூரிலுள்ள அனைத்துத் தரபபினரும் புதிய எபத்து வடிகங்களையே எபதியும் அச்சிட்டும் வருகின்றனர்.  பள்ளிகளிலும் பாடநூல்களிலும் கற்றல் கற்பித்தல் நிகழ்ச்சிகளிலும் இவ்வாறே உள்ளது தமிழ் கூறும் நல்லுலகில் இந்தியாவைத் தவிர்த்து, ஏனைய நாடுகளில் சிங்கப்பூரில்தான் இச்சீர்திருத்தம் முதன்முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது எனலாம்.


 


கிரந்த எழுத்துக்கள்


 


சிங்கப்பூரின் சூழ்நிலைக்கு ஏற்பப் பிறமொழிகளில் உள்ள மக்கள் பெயர்கள், பொருட்பெயர்கள், இடப்பெயர்கள், காலப்பெயர்கள், தொழிற்பெயர்கள், நிர்வாகத்தின் பெயர்கள், சாலைப் பெயர்கள் ஆகியவற்றைக் குறிப்பதற்குக் கிரந்த எழுத்துகளாகிய ஜ,,,,ஸ்ரீ,இ ஆகியவற்றைப் பயன்படுத்துகின்ற நிலை இருக்கின்றது.   இவ்வாறு பயன்படுத்தினால் தான் ஒலி அமைப்பு (உச்சரிப்புத் தன்மை) கெடாது இருப்பதாகச் சிங்கப்பூர்த் தமிழர்கள் நம்புகின்றனர்.


                                                     ஸ்ரீ


ஜப்பான்     பாலஸ்டிர்    ஷாண்டன் வே           ஹில் வியூ            ஸ்ரீனிவாசப்


ஜாலான்     ரோடு       ஷா ஹவுஸ்        ஹை                  பெருமாள்


பெசார்            ஈஸ்ட்கோஸ்ட் பிளாஷா            ஸ்திரிட்               கோ


ஜூரோங்    ரோடு      ஹாலண்ட்                           ஸ்ரீ கிருஷ்ண


ஜிம்போ      மாக்ஸ்வெல்        ரோடு                          பகவான்


சௌத்பிரிட்ஜ் ரோடு            


ஜாலான்     ஈனுஸ் லிங்க                                      பண்டார் ஸ்ரீ


கல்தான்                                                     பகவான்


 


ஒலியனியற் கூறுகள்


 


தமிழ் ஒலியன் இயல்புக்கு மாறான கூறுகள் சிலவற்றை எழுத்துத் தமிழில் பிறமொழிச் சொற்களைக் கையாளுகின்ற நிலையில் காண முடிகிறது  சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் இடையில் மெய்ம்மயக்க நிலையிலும் இம்மாற்றங்கள் நிகழ்வதைப் பின்வரும் எடுததுக்காட்டுகள் உரைக்கும்.


சொல் முதல் நிலை


ங் - ஙீயான் தொழில் நுட்பக் கல்லூரி


ட் - டெப்போ ரோடு


    டை மண்ட் டவர்


    டோனி டான்மக்கட் பெயர்


    டொரியான் / டுரியான் ஒரு பழ வகை


    டொக்கு / டுக்கு      ஒரு பழ வகை


ர் - ரம்புத்தான்      ஒரு பழ வகை


ல் - லீ குவான் யூமக்கட் பெயர்


சொல் இடைநிலை (மெய்ம்மயக்கம்)


சார்டின்            (ர்ட்)


செக்யூரிடடி கார்டு (க்ய்)


எவர்ட்ன் பார்க்      (ர்ட்ட்)


லோவர் டெல்டா சாலை   (ல்ட்)


சுல்தான்           (ல்த்)


ஆல்பர்ட் செண்டர்  (ல்ப்)


சொல் இறுதி நிலை


க்     புளோக்      வீடமைப்புக் கட்டிடத் தொகுதி


      பிடோக்     நகரப்பகுதி


ங்     பொத்தோங் பாசிர்  ஒரு நகரப் பகுதி


      சோத்தோங்  ஒரு உணவுப் பகுதி


      கேலாங்     ஒரு நகரப் பகுதி


      காலாங்      ஒரு நகரப் பகுதி


      புக்கிட் பாஞ்சாங்    ஒரு நகரப் பெயர்


      செம்பவாங்   ஒரு நகரப் பெயர்


ச்     பீச் ரோடு    தெருவின் பெயர்


ட்     மார்க்கெட் ஸ்திரிட்  தெருவின் பெயர்


      புக்கிட் தீமா  ஒரு நகரப் பகுதி”


      ஆர்ச்சட்     ஒரு நகரப் பகுதி”


த்     சௌத் பிரிட்ஜ் ரோடு      தெருவின் பெயர்”


ப்     மீசூப்  ஒரு வகை உணவு


      டேப்  ஒலிநாடா


      அராப் ஸ்திரீட் தெருவின் பெயர்


வ்     தவ்   ஒரு வகை உணவு


 


ஆய்த எழுத்து


இக்காலத் தமிழில் எஃகு, இஃது, அஃது, அஃறிணைபோன்ற குறிப்பிட்ட சொற்களில் மட்டும் பயன்படும் சில ஆய்த ஒலிகளை ஆங்கிலத்தில் ‘F‘ என்னும் ஒலியைக் குறிக்கப் பயன்படுத்தும் போக்கு இங்குக் காணப்படுகிறது.


ராஃபிள்ஸ்    Raffles


ஃபிளோரன்ஸ் Florence


ஃபிரான்ஸ்    France


ஃபூசுன் தொடக்கப்பள்ளி   Fuchun Primary School


வெஃபர் பிஸ்கட்     Wafer Biscuit


ஃபாக்லாந்து  Falkland


என்னும் எடுத்துக்காட்டுகளில் ஆய்த எழுத்துக்கள் இடம் பெறுவதைக் காணலாம். சொல்லுக்கு இடையில் தனிக் குற்றெழுத்துக்குப் பின்னால் வல்லின உயிர்களுக்கு முன் ஆய்தம் வரவேண்டும் என்னும் தமிழ் இலக்கண வரம்புக்குப் புறம்பாக இச்சொற்களில் ஆய்தம் வந்து இருப்பதைக் காணலாம்.


 


சமஸ்கிருதச் செல்வாக்கு


 


பொதுவாகக் கோயில் விழாக்கள், உபயங்கள், அறிவிப்புக்கள் ஆகியவற்றில் சமஸ்கிருதச் சொற்கள் அதிகம் இடம் பெறுவதைக் காணலாம். இந்து சமய நிறுவனங்களில் உள்ள பிராமணக் குருக்கள்மார், ஐயர்களின் செல்வாக்கு இதற்குக் காரணமாகும் (பட்டியல் 1 காண்க).


(-டு) ஸ்ரீகிருஷ்ணபகவான் ஆலயம்


      (வாட்டர்லு ஸ்திரீட், சிங்கை)


      புரட்டாசி சனி வார உபயம்


சிங்கப்பூர் அச்சக ஊழியர்களால் நடத்தப்படும் மகத்தான 63ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் நான்காவது சனி வார அன்னதான உபயம் சிறப்பாக நடைபெறும். 10-10-1987 சனிக்கிழமை நண்பகல் 12-30 மணிக்கு நடைபெறும் பூஜைக்கும், மாலை 6-00 மணிக்கு நடைபெறும் தூபதீப ஆராதனைக்கும் சகோதர சகோதரிகள் வருகை தந்து பகவத் கைங்கரியத்தைச் சிறப்பித்து திருவருட் பிரசாதம் பெற்றேக வேண்டுகிறோம்.


இரவு 8 30 மணிக்கு நடனம்


மலர்கள் அன்பளிப்பு ஜோதி புஷ்பக்கடை


 


இங்ஙனம்


சிங்கப்பூரில் உள்ளஅச்சக ஊழியர்கள் சார்பில்


வி.எஸ். மணியம்


 


சமய வேறுபாடுகள்


இறப்புச் செய்தி அறிவிப்புகளில் வரும் சொற்றொடர்களைக் கொண்டு இறந்தோர் சார்ந்த சமயங்களை அறிய முடிகிறது.


(.கா)


இந்து சமயம் - காலமானார்.


  இறந்து விட்டார்


  இறைவனடி சேர்ந்தார்


  சிவபதவி அடைந்தார்


  வைகுந்த பதவி அடைந்தார்.


கிறிஸ்துவ சமயம் - அமைதியாக உயிர் நீத்தார்


இஸ்லாமிய சமயம் - வபாத்து


சங்கைக்குரிய” என இஸ்லாமியாரும் மறைத்திரு” எனக் கிறிஸ்துவரும் வணக்கத்திற்குரிய”அருள்மிகு”மரியாதைக்குரிய” என மற்றவர்களும் கையாளும் போக்கினைப் பார்க்க முடிகிறது.


 


 


 


சொல்லாக்கம்


 


சிங்கப்பூர் ஒரு வளர்முக நாடு. எனவே, அன்றாடம் காணும் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்பவும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பவும் அரசியல் செய்திகளுக்கு ஏற்பவும் பல சொற்களை உருவாக்க வேண்டிய நிலை சிங்கப்பூரில் உண்டு. எடுத்துக்காட்டாக, பார்லிமன்ட் என்பதற்கு நாடாளுமன்றம் என்ற சொல் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டதாகும்.இந்தியாவில் பாராளுமன்றம் என்ற சொல் உருவாக்கப்பட்டது. பின்னர் இதன் பொருத்தமின்மையை உணர்ந்து நாடாளுமன்றம் என மாற்றப்பட்டது. கம்பூயூட்டர் என்பதற்குக் கணினி என்ற சொல்லைச் சிங்கப்பூர் மக்கள் உருவாக்கி இருக்கிறார்கள். தமிழகத்தில் கணிப்பான் கணிப்பொறி என்னும் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் ஸ்பீக்கர்” என்பதற்குச் சபா நாயகர் என்று பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூரில் நாடாளுமன்ற நாயகர் என்னும் சொல் பயனபடுத்தப்படுகிறது. லகூன் என்ற சொல் காயல் என மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.


(.கா) வீடமைப்புப் பேட்டைகள் (Housing Estates)


       குடிமக்கள் நல்லாலோசனைக்குழு (Citizens’ consultative committees)


       தாவரவியல் தோட்டம் (Botanical Garden)


       போதைப் பொருள் புழங்கியர் புனர்வாழ்வில்லம் (சானா)


       பெருவிரைவுப் போக்குவரத்து (M.R.T)


       அண்டை அயல் காவல் நிலையம் (Neighbourhood Police Station)


      தேசிய அரும் பொருளகம்ம (National Museum)


இவ்வாறு சிங்கப்பூர் தமிழ்ச் சொல்லாக்கப் பணிக்குப் பலவகையிலும் பங்காற்றி வருகிறது (பட்டியல் 2 காண்க). தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் நடைபெற்று வரும் கலைச் சொல்லாக்கப் பணியைச் சிங்கப்பூரிலும் முறைப்படி தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் மேற்கொண்டிருக்கிறது. சிறப்பாகச் சிங்கப்பூரின் தேவையைக் கருத்திற் கொண்டு இல்லாத கலைச் சொற்களை உருவாக்குவதிலும் இருக்கின்ற துறைச்சொற்களை முறைப்படுத்துவதிலும் கழகத்தின் சொல்லாக்கக் குழு ஈடுபட்டுள்ளது. (முஸ்தபா பி.எச். 1986. 17).


 


படைப்பிலக்கியங்கள்


 


ஆயிரத்துத்தொளாயிரமத்து ஐம்பதுகளில் எழுதத் தொடங்கிய கவிஞர்கள் ஒரு சிலரே; கவிதைகளும் அபூர்வமே. அறுபதுகளில் சூடுபிடித்து, எழுபதுகளில் எழுச்சி பெற்று, எண்பதுகளில் குறிப்பிடத்தக்க அளவு கவிஞர்களும் பாவலர்களும் எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள். சிங்கப்பூர்க் கவிஞர்கள் ஆறவமர எழுதத் தொடங்கி எழுச்சி பெற்ற காரணத்தால் ஓரளவுக்கு இலக்கண நுட்பங்கள் தெளிந்த மரபுக் கவிதைகளாகவே எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். மரபுக் கவிதைகள் எழுதிவரும் கவிஞர்கள் எழுத்துத் தமிழ் சொல்லாட்சித் திறன் பெற்று எழுதி வருகின்றனர். புதுக்கவிதை எழுதும் ஒரு சிலர் பேச்சுத் தமிழ் வடிவங்களையே பயன்படுத்திப் புதுக்கவிதைக்கு மெருகு படைத்து வருகின்றனர்.


(.டு)


எல்லாரும் வொக்காந்து பேசலாம்


இழுத்தாந்து போடுங்க நாக்காலியை


எதுவுமே கேட்டாக்கா


எதுவுமே வெளங்காது


என்னாத்தைக் கிழிச்சன்னு


எவனாச்சும் கேட்டுட்டா


எதாச்சும் சொல்லலாமே


யாருடாது கொறட்டை விடுறது?


டேய் தமிழன், ஓரம்போ


எக்ஸிடன்ட் ஆனா


ஆஸ்பத்திரியில் இஸ்திரி


போட்டுடுவாங்க டோய்


இது சஞ்சியில வந்த


தாத்தா போட்ட ரோடுடா


எங்க வேணும்னாலும்


நின்று பேசுவண்டா


 


-இளங்கோவன்.


மெளன வதம், பக்கம் 80


கட்டுரைகளில் பெரும்பாலும் பிறமொழிக் கலப்பற்ற தூய தமிழ் நடையே கையாளப்பட்டு வருகிறது. இருப்பினும் சமஸ்கிருதச் சொற்கள் குறைந்த அளவில் காணப்படும் போக்கும் உள்ளது. சிறுகதை, புதினம் போன்றவற்றில் வரும் பாத்திரங்களின் உரையாடல்களில் பேச்சுத் தமிழின் செல்வாக்கும் பிறமொழிக் கலப்பும் உண்டு. இருந்தாலும், தமிழகத்தில் இடம் பெறும் அளவுக்கு ஆங்கிலச் சொல் கலப்பு இங்கு இல்லை எனலாம். மீ கோரிங்” (இளங்கண்ணன்) தானாமேரா டைரி” (கண்ணபிரான்) என்னும் சில சிங்கையில் பேர் பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைத் தலைப்புகள் மண்ணின் மணம் பரப்புகின்றன. சிங்கப்பூர் சாந்தி என்னும் சிறுகதை எழுத்தாளர் நிருபினி. செயலாளினி, காரியதரிசினி, உறுப்பினி போன்ற சொற்களைத் தாமே உருவாக்கிக் கதைகளில் ஆண்டு வருகிறார். (மெ.திரு.அரசு 1977). இளங்கண்ணன் கதை மாந்தர் உரையாடல்களை அப்படியே எழுத்துருவில் வடிப்பதிலும் காணும் காட்சிகளை மனங்கவர் முறையில் எழுதுவதிலும் மனநிலைகளைச் சிறந்த முறையில் வெளிப்படுத்துவதிலும் சிறந்த விளங்குகிறார். இராம. கண்ண பிரான் ஆழ்ந்த கருத்துகளையே நல்ல பொருளார்ந்த தமிழ்ச்சொற்களை எளிதில் பொருள் விளங்குமாறு பயன்படுத்தி எழுதுவதில் சிறந்து விளங்குகிறார். இவர்தம் செந்தமிழ் நடையை இன்னும் மிகுதியாப் போற்றி எழுதிவரின் இவர் கதைகள் கருத்துகள்களோடு நடைச் சிறப்பும் மொழித் திறனும் மிக்குத் திகழ்தல் ஒருதலை (மெ.திரு. அரசு. 1977:;15). “காதல் எங்கிகள்” என்னும் தலைப்பில் சண்முகம் அவர்கள் ஒரு கதை எழுதி உள்ளார். இது இளையர்களின் அருவருக்கத்தக்க தோற்றத்தையும் நடையையும் பழக்க வழக்கங்களையும் நன்கு எடுத்துரைக்கிறது (மெ.திரு. அரசு 1977; 16) “எங்கி” நவநாகரிக உடையணிந்து திரியும் இளைஞர்களைக் குறித்த ஒன்றாகும் இப்போது யங பியூப்பிள் என்று இவர்களைக் குறிக்கின்றார்கள்.


 


வானொலி / தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்


 


செய்தித் தாள்களில் வரும் வானொலி / தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல்கள் அறிவிப்புகளைப் பார்க்கும் போது மலேசியா தொடர்பானவற்றுள் மலாய் மொழிக் கலப்பு அதிகம் இருப்பதைக் காணலாம். சிங்கப்பூர் தொடர்பானவற்றுள் அவ்வளவு மலாய் மொழிக் கலப்பு இல்லை. செலாமாட் பாகி, புலான், டிராமா மிங்கு இனி, மாக்ரீப் தொழுகை தும்புவான் மிங்கு போன்ற சொற்கள் மலேசிய வானொலித் தொலைக்காட்சி நிலையத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மணிக்குவியல், அன்றாடக் கோவை, சிறுவர் அரங்கம், கேள்வியும் பதிலும், இளையர் அரங்கம் அறிவியல் உலகம், காட்சியும் கானமும், இசை சொல்லும் கதை, மாலைப் பண் போன்ற சொற்கள் சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


திரு. பி. கிருஷ்ணன் அவர்கள் எழுதி வானொலியில் ஒலிபரப்பட்ட அடுக்கு வீட்டு அண்ணாசாமி” என்னும் நாடகம் சிங்கப்பூர்ப் பேச்சுத் தமிழினை நன்கு சித்திரிக்கும் இயல்புடைய ஒன்றாகும். வானொலிப் பேட்டிகளில் பேட்டி காண்பவர் பொதுவாகப் பிறமொழிக் கலப்பற்ற எழுத்துத் தமிழில் வினாக்கள் விடுப்பதும், இந்தியாவிலிருந்து வந்து பேட்டடி கொடுப்பவர் ஆங்கிலச் சொற்களை ஆங்காங்கே கலந்து மிகுதியாக விடையளிப்பதும் வாடிக்கையாக அமையும் கூறுகளாக இருப்பதைச் சிங்கப்பூர்த் தமிழர் நன்கு உணர்வர்.


 


 


 


 


பேச்சுத் தமிழ்


 


சிங்கப்பூரிலுள்ள பேச்சுத் தமிழை யாழ்ப்பாணத் தமிழ், தமிழகத் தமிழ் என இருவகைப் படுத்தலாம். இவ்விரு வகைத் தமிழுக்கும் இடையே ஒலிவேறுபாடு, உருபனியல் வேறுபாடு, தொடரியல் வேறுபாடு, சொற்கோவை வேறுபாடு ஆகியன மிகுதியாக உண்டு. எனவே, எளிதாக யாழ்ப்பாணத் தமிழையும் தமிழகத் கமிழையும் வேறுபடுத்திக் காண முடியும் ஆம் என்பதை யாழ்ப்பாணத்தினர். ஓம்” என ஒலிப்பர், எங்கள் தமிழ் மொழியில் எங்கள் சமயத்தில் என யாழ்ப்பான வழக்குகள் நம் தமிழ் மொழியில், நம் சமயத்தில் எனப் பொருள்படும் உவன், உவள் என்னும் வழக்குகள் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சுக்களில் இடம் பெற்றுள்ளன. இவ்விரு தமிழுக்கும் உள்ள வேறுபாடுகள் சிலவற்றைக் கீழே காண்போம்.


யாழ்ப்பாணத் தமிழ்                தமிழகத் தமிழ்


கதைக்கிறான்                   பேசுகிறான்


வடிவாக இருக்கிறதா                  அழகாக இருக்கிறதா


கெள்ச்சி                       அசைவம்


திகதி                          தேதி


எத்தனை மணித்தியாலம் காத்து கிடந்தேன்


உந்த வீடு வாங்கக் கிடைக்குமா?


செத்த வீட்டுக்குப் போயிருந்தேன்


வடக்கத்தியான் வந்திருந்தான்


பேந்து நாம் பேசிக் கொள்ளலாம்


என்னும் தொடர்களும் யாழ்ப்பாணத் தமிழை மற்றவர் தமிழிலிருந்து வேறுபடுத்திக் காட்டும்.


இந்தியர்களின் தமிழை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பேசுவோர் தமிழ் என்றும், தெலுங்கு மலையாளம ஆகியவற்றைத் தாய்மொழியாக கொண்டு பேசுவோர் தமிழ் என்றும் இருவகைப்படுத்தலாம். இல்லங்களில் தெலுங்கு மலையாளம் பேசம் தமிழர்கள் வர வரக் குறைந்து விட்டார்கள். இவர்களில் 50-60 வயதுக்குரியவர்கள் தான் தெலுங்கு மலையாளம் பேசுகிறார்கள். இருப்பினும், தெலுங்கு, மலையாளம் செல்வாக்கு இவர்கள் பேச்சில் குறிப்பாக உறவுப் பெயர்களில் இருப்பதைக் காணலாம்.


(.கா.)


மலையாளம்  தமிழ்


அச்சன்             அப்பா


சேட்டன்     அண்ணன்


சேட்டத்தி    அக்கா


சேச்சி       கொழுந்தியாள்


அணியன்     தம்பி


அனியத்தி/அனிஜத்தி    தங்கை


அம்மாவி     அத்தை


அம்மாவன்    மாமா


அப்பச்சி     அத்தை (தந்தையின் தங்கை)


வலியச்சன்   பெரியப்பன்


வலியம்மா    பெரியம்மா


செரியச்சன்  சிற்றப்பா


செரியம்மா   சின்னம்மா


முத்தச்சன்    தாயின் தந்தை


அம்மூம்மா/முத்தச்சி  தாயின் தாய்


அச்சச்சன்    தந்தையின் தந்தை


அச்சம்மா    தந்தையின் தாய்


நாத்தூன்    கணவனின் தங்கை


 


தெலுங்கு    தமிழ்


     


நாயினா     தந்தை


செல்ல      தங்கை


தம்பா       தம்பி


அவ்வா       பாட்டி


சின்னாயினா  சிற்றப்பா


பின்னி       சின்னம்மா


வதனை      தம்பி மனைவி


பெத்தம்மா   பெரியம்மா


பெத்தநாயினா      பெரியப்பா


அத்தம்மா    அத்தை


பின்னம்மா    அத்தை


பாவா        கணவர்


பாரியா       மனைவி


 


இல்லங்களில் ஆங்கிலம் பேசுவோர் தமிழ்


 


தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பேசுவோர் தமிழை. இல்லங்களில் ஆங்கிலம் பேசுவோர் தமிழ் என்றும் இல்லங்களில் தமிழ் பேசுவோர் தமிழ் என்றும் வகைப்படுத்தலாம். இல்லங்களில் ஆங்கிலம் பேசுவோர் தமிழில் ஆங்கிலச் சொற்கலப்பும் ஆங்கிலச் சிந்தனையில் அமைந்த வாக்கிய அமைப்பும் மிகுதியாக இருக்கும். இவர்கள் தமிழில் உறவுச் சொற்கள் ஆங்கிலக் கலப்பே மிகுதியாக இருக்கும் (.கா) டாடி - அப்பா, மம்மி - அம்மா, பிரதர் - அண்ணன்/தம்பி, சிஸ்டர் - அக்கா/தங்கை, ஆண்ட்டி - அத்தை, அங்கிள் - மாமா, கிரெண்ட்ஃபாதர்-தாத்தா, கிரெண்ட்மதர் - பாட்டி.


 


இல்லங்களில் தமிழ் பேசுவோர் தமிழ்


 


இல்லங்களில் தமிழ் பேசுவோர் தமிழைச் சாதி (இனம்), வட்டாரம், தொழில் அடிப்படையில் பாகுபடுத்த இயலுமா எனப்பார்ப்போம்.


 


 


 


சாதி


தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பேசுவோரின் பேச்சுத் தமிழைச் சாதிவாரியாகவோ (இனம்) வட்டாரம் வாரியாகவோ தொழில் அடிப்படையிலோ மிகுதியாகப் பிரித்து அறிய முடியவில்லை. இருந்தாலும், உறவுச் சொற்களை ஆராய்கின்ற பொழுது அவரவர்களின் சாதிகளை ஓரளவுக்கு ஊகித்து உணரமுடிகிறது. அடுத்து செட்டியார்கள் பேசும் தமிழ் பிராமணர்கள் பேசும் தமிழ், ஏனையவர்கள் பேசும் தமிழ் என்னும் வேறு பாட்டினைக் கூறுபடுத்திக் காட்டிவிட முடியும். செட்டியார்கள் பேசும் தமிழில். இந்திய நாட்டுச் செட்டியார்கள் பேசம் தமிழுக்கும் இங்குள்ள செட்டியார்கள் பேசம் தமிழுக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை. பிராமணர்கள் பேச்சிலும் இந்நிலையே உள்ளது. இஸ்லாமியத் தமிழர் பேசும் பேச்சினையும் பிரித்து வகைப்படுத்தலாம் இவர்கள் பேச்சில் அரபு மொழிச் சொற்கள் அதிகம்  இடம் பெற்றுள்ளன.


 


வட்டாரம்


சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு. சிங்கப்பூர்த் தமிழில் வட்டார அடிப்படையில் வேறுபாட்டுக் கூறுகளை இன்று காண முடியவில்லை எனினும், சில ஆண்டுகளுக்கு முன்பு வட்டார அடிப்படையில் வேறுபாடுகள் இருந்ததென ஊகிக்க முடிகிறது.


அந்தக் கால கட்டத்திலும் சிற்சில இடங்களில் சிற்சில ஊராரும், சாதியாரும் பெரும்பான்மைபெறத் தொடங்கினர். குறிப்பாக; இன்றைய ஜாலான் காயு வட்டாரம் (அன்றைய ஆர்.ஏ.எப். சிலேத்தார்) பகுதியில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தேவர்” வம்சத்தார்.முக்குலத்தோர் சங்கம்” அமைத்துச் செயல்படத்தக்க அளவு கணிசமான அளவுக்கு நிறைந்திருந்தனர். இன்றைய தஞ்சோங்பகார் ஆன்சன் தொகுதிகளில் சேலம் மாவட்த்தைச் சேர்ந்த நாமக்கல் வட்டத்தார்” நாமக்கல் தாலுகா நலன்பிவிருத்திச் சங்கம் அமைத்துச் செயல்பெறும் அளவுக்குப் பெரும்பான்மையர் வாழ்ந்து வந்தனர். இன்றை செம்பவாங வட்டாரத்தில், பல்வேறு தமிழக மானிலங்களாரே பாதிக்குப் பாதி என்ற அளவு மலையாள மொழியினரும் வாழ்ந்ததிருந்தனர். இத்தகு காலக்கட்டங்களில் அத்தகு தொகுதிகளில் கிளை மொழியியல் கூறுகள் தலை தூக்கியிருந்தன என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கதாகும்.


அவுக அப்பதே வந்துட்டுப் போயிட்டாக


வீட்டுக்கு வாரேன்னு சொன்னியளே


ஆத்தாடி... அது என்ன அதிசயமுங்க


ஊருசனம் நாம ஒண்ணுபட்டு வாழோணும்


மதுரை  வீரன் சாமிக்கு மாசமொரு பூசை -


இவை ஜாலான் காயு வட்டாரக் கிளை மொழியியல்களில் குறிப்பிடத்தக்கன. மற்றுமிதர பகுதிகளில் சிறுபான்மையராய் வசித்து வந்தோரிடமும் இந்த அன்றைய வழக்காற்று வடிவங்கள் சிதையாமல் இருந்து வந்தன.


நாமக்கல் வட்டத்தாராகியகவுண்டர்பெருமக்கள் நவில் மொழிகள் பலவும் நயத்தகு கிளைமொழியியலை நன்குணர்த்தா நின்றன.


ஆருக்கு ஆரு... அவன் போட்ட முடிச்சு


சாதிசனம் ஊருபேரு தெரியாம


வத்தி வச்ச ஒருத்தனுக்கு வந்து வாச்ச பொண்ணு


பொறந்தவளுக்கு வழிகாட்டு; பொறவு பேசலாம்


அறுத்துக் கட்டும் சாதியில்ல அழிஞ்சது தான்-


அடுத்து, நாம் செமபவாங் வட்டாரத்தில் அமைந்தொளிர்ந்த ஆதிக்கக் கிளைமொழியியலை ஆராய்ந்து பார்ப்போம். மேலே குறிப்பிட்டிருப்பது போல் பாதிக்கும் பாதி (ஏறத்தாழ ஐம்பது விழுக்காடு) என்ற அளவுக்கு மலையாளிகள் நிறைந்து வாழ்ந்திருந்த பகுதியாதலால் அப்பகுதித் தமிழில் மலையாளச் சொற்கள் கலந்திருந்தன.


செம்பவாங் வட்டாரநேவல் பேஸ்குடியிருப்பாளர்ளகளில் பலர் மலையாளிகள் குறிப்பிடத்தக்க அளவினர்குடும்பத்தோடுஇங்கு வாழ்ந்திராதகாலியாட்கள்” (பேச்சலர்) என்போராவார்கள். குறைந்த பட்ச மலையாளிகளே குடும்பத்தோடு வாழ்ந்துறைந்து வந்தனர். அவர்கள் பேச்சுக்கு ஓர் எடுத்துக்காட்டு.


வா, நமக்குச் சாயா குடிக்கப் போகாம்


உங்களு சிகிரெட்டு கத்துதா


ஓணம் வந்தா உங்களு வரணும்


முட்டைச் சாயாவும் ரொட்டி பிராட்டாவும் திந்நு


நாங்களு உங்களு வீட்டுக்கு வருது-


இதுபோலவே, இன்றைதேங்க ரோடு”, “மார்க்கெட் ஸ்த்ரீட்வட்டாரங்களில் செறிவாகவும், ஏனைய பகுதிகளில் பரவலாகவும் வாழ்ந்துறைந்தசெட்டி நாட்டார்வாழ்வியல் வழக்காற்றுச் சொற்கள் சொற்றொடர்கள் சிலவும கிளைமொழியியல் ஆதிக்கம் பெற்றன என்று குறிப்பிடலாம். அவர்கள் பேச்சுக் கோர் எடுத்துக்காட்டு.


அடி ஆத்தி............ வந்துட்டிகளா?


கிட்டங்கியில பேசிக்கிட்டாக


முருகன் கணக்குல எழுதிட்டேன்;


வேறென்ன பண்ணச் சொல்றே...


வெட்டு ஒண்னு துண்டு ரெண்டுன்னு


இழு பறிங்கிறது இருக்கக் கூடாது


தொடக்கக் காலத்தில் தனித்தனிக் குழுவினராய்ப் பிரிந்து வாழ்ந்த போக்கினைத் தமிழரிடத்தே காண்கின்றோம். இதனால் சிங்கப்பூரின் பல பகுதிகளில் பல தமிழ் நாட்டு வட்டாராங்கள் வாழ்ந்தன. இவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள். தமிழகத்திலுள்ள வட்டார வழக்கும் போக்கும் இவர்களிடையே நிலவக் காணலாம். இவர்கள் செய்யும் தொழில் அடிப்பைடயிலும் சில தனிச் சொற்களை வழங்குகின்ற இயல்பினைக் காணலாம். இதனைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம் என்று கூறுகின்றார் திரு. அஞ்சப்பன்.


      சிங்கப்பூர்          தமிழகம்                         தொழில்


1.     ஆன்சன் சாலை     தஞ்சைப் பகுதியினர்               படகுத்துறை


2.     ஜூச்சியாட்        மன்னார்குடி                      அரசாங்கக்கூலி வேலை


3.     கடையநல்லூர் ஸ்டிரிட் கூத்தாநல்லூர் தென்காசி         கடைகன்


4.     பிளாண்டேசன் அவென்யூ   திருப்பத்தூர் கூற்றம்         கார் கழுவுதல்


5.     பயாலேபார் சாலை  காசாங்காடு (தஞ்சை)            செய்தித்தாள் விற்பனையாளர்


6.     மார்க்கெட் ஸ்டீரிட்  கண்டரமாணிக்கம் காரைக்குடி    வட்டிக்கடை


                        சிறுகூடல்பட்டி


7.     செங்சான் சாலை பொங்கோல் திருப்பத்தூர் கூற்றம்   மாட்டுப் பண்ணை


8.     ஜாலான் காயு       நீடாமங்கலம் காசாங்காடு      கோழி,பன்றிவளர்ப்பு பிரிட்ஷார்                                                            படைத்தளம்


9.     பாசிர் பாஞ்சாங்     பல வட்டாராங்கள்          செங்கல் ஆலை மின்சாரநிலையம்


10.    பூலவாவ்உபின்      சிங்கம்புணரி மாவட்டம்     வெற்றிலைக் கொடிக்கால்


11.    சிராங்கூன் கார்டன் இலங்கையர்            அலுவலர் உயர் தரப் பணிகள்


12.    நேவல் பேஸ் சிலேத்தார்   கேரளத்தார்  இராணுவத்தின் சீரியல்                                                       வேலையாள் (வீரர் அல்லர்)


13.    கேலாங் சிராய் கேலாங்    மன்னார்குடி  மண் பானை வனைதல்


இன்னும் முழுமையான ஆய்வு செய்யப்படின் இடியப்பம். நகைக்கடை, பலசரக்குக்கடை, உணவுக்கடை போன்றவை சிறு சிறு குழுவினர்களாலேயே தமிழர்களிடையே நடத்திவரப்பட்டிருக்கின்றன என்பதை நம்மால் உணர முடியும். (அஞ்சப்பன் 1987)


மலேசியத் தமிழ்க் கிளைமொழிகள் பற்றி, ஆய்வு செய்த டாக்டர் ராம சுப்பையா அவர்கள் தமிழ் நாட்டு வட்டார வழக்கும் சாதி வழக்கும் மலேசியத் தமிழில் தென்படுகின்ற இயல்பினைச் சுட்டிக் காட்டி இருக்கிறார். (சுப்பையா ராம : 1966) இவ்வாறு சிங்கப்பூர்த் தமிழை ஒரு காலக் கட்டத்தில் பிரிக்க முடிந்த போதிலும், இன்று வட்டார அளவில் பிரிக்க முடியாத நிலையே உருவாகியுள்ளது. ஏனென்றால் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் விரைந்த முன்னேற்றத்தால் வட்டார அளவில் வாழ்ந்த தமிழர்கள் பிரிந்து வெவ்வேறு தொகுதிகளில் வாழும் நிலைக்கு ஆளாகி விட்டனர்.


 


தொழில்


சிங்கப்பூர்த் தமிழர்கள் இன்று அரசாங்க அலுவலங்களிலும் தனியார் நிறுவனங்களிலும், கல்வி நிலையங்களிலும் பணியாற்றி வருகின்றார்கள். வணிகர்களாகவும் இருந்து வருகின்றனர். சிராங்கூன் வட்டாரப் பகுதிகளில், வணிகப்பகுதிகள் அதிகம் இருப்பதால் குட்டி இந்தியா” என அழைக்கப்படுகிறது. எனவே தொழில் அடிப்படையில் பேச்சுத் தமிழைப் பாகுபடுத்த முடியாத ஒரு சூழல் இருக்கிறது. இருந்தாலும் இன்றுள்ள நிலையில் துறைமுகத் தொழிலாளர்கள் பேச்சில் மட்டும் காணப்படும் தமிழ்ச் சொற்கள் உள்ளன.(பின்னிணைப்புப் பட்டியல் 3 காணக) (எ.கா.)


குத்தல் வேலை     (கப்பலின் தாழ்வாரப் பகுதியில் வேலை)


ஓஞ்சி (ஓங்கி)


குமுசு (பி.எஸ்.. குடியிருப்பு வீடுகள்)


கோசா குப்பு (தலைமைப் பிரிவு)


1950ம் ஆண்டுகளுக்கு முன்னே ரப்பர்த் தோட்டத் தொழில் சிங்கப்பூரில் ஒரு சில இடங்களில் இருந்துள்ளது. ரப்பர்த் தோட்டத் தொழில் அடிப்படையில் அப்பொழுது பேசப்பட்ட சில பேச்சு மொழிக் கூறுகளைக் கீழ்க்காணும் உரையாடல் வழி நாம் உய்த்துணரலாம். இந்த உரையாடலில் மலாய்ச் சொற்களும் உள்ளன.


பெரட்டுக்கு நேரமாச்சு; புறப்படு... இந்தக் காண்டா, வாளி, உளி, குட்டிச்சாக்கு எல்லாத்தையும் எடுத்து வையி. பிள்ளைய ஆயாக்கொட்டகையில கொண்டு போய் விடணும். பால் போத்தல், தொட்டில் கட்டக் கைலி, தும்பு எல்லாத்தையும் எடுத்து வையி. அந்தத் தாவர ரொட்டியில அஞ்சாறு எடு; வரக் கோப்பி எடுத்துக்கிட்டு வா, பசியாறிட்டு பொறப்படுவியா. மசமசன்னு அலமலந்தா எப்படி? நாம, லேட்டாயிட்டா பெரிய தண்டல், தலைக்காசு போயிடுமேன்னு, கெந்தி ஆளை அனுப்பிடுவாரு. என்ன, பொறப்பட்டாச்சா; மத்தத எல்லாம் தீம்பார்ல போய்ப் பேசிக்கலாம்; பக்கம் பக்கமா நெரை கிடைக்கணும்னு பதுவுசா சாமிய நேர்ந்துக்கிட்டு காலா காலத்துல பொறப்படு.


ஏம் புள்ளே... நம்ம பெரியவன இட்டாந்திருந்தா, பீளி துடைச்சு மங்கு துடைச்சு, கித்தாப்பால், ஓட்டுப்பால், மங்குப்பால் எல்லாம் பொறுக்கிச் சேர்த்துடுவான்ல மாசக் கடைசியில் மரத்துக்குப் பொட்டு வைக்கணும்; ஒரு நாளைக்கு இஸ்கோலுக்குப் போவாக்காட்டியும் பரவாயில்லை; அவனை ஞாபகமா இட்டாந்திரு. நேத்து தான் செக்ரோல் கணக்கு எல்லாம் முடிச்சிக் கொடுத்துட்டதா சின்னக் கிராணி ஐயா சொன்னாரு. பெரிய கிராணி ஐயா பார்த்து, தொரைக்கிட்ட அனுப்புவாராம். இருபத்திரண்டாம் தேதி வாக்குல நமக்குப் பிளாஞ்சா போடுவாங்களாம். ஆங் இதக் கேட்டியா புள்ள; நமக்கிருக்கிற நல்லது கெட்டதுங்கள பத்திப் பேசறுதுக்காக ஊனியன் அமைச்சிருங்க்காங்களாம். அது கெடக்கு நமக்கு ஏன் அந்த ஊர் வம்பு? ஏய் புள்ள எனக்குன்னா பச்சைக் காட்டு ஓரமா மலையடிவாத்துல கொட்டைக்காடு வெட்டு கெடைச்சிருக்கு. போவுது, கடவுள் புண்ணியத்தால் ஒனக்குனாச்சும் ஓட்டுக் கண்ணு மரம் உள்ள நெம்புரா கெடைச்சிருக்கு மூணு மாசத்துக்கப்புரம் பெரியவனுக்குப் பன்னிரண்டு வயசு ஆயிடும். ஒடனே போயி ஜாலான் பாசு எடுத்துக்கிட்டு வந்த கையோட மவராசன் தொரைய பார்த்துப் பேசி, தவரணைக் காட்டுலியாவது இல்லாக்காட்டி வெளிக்காட்டு வேலையாவது போட்டுக் கொடுக்கச் சொல்லிக் கேக்கணும். இந்தப்பாரு பிகுளி சத்தம் கேட்டுடிச்சி; எட்டி நடை போடு, சின்ன தொரை, சின்ன கிராணி, மண்டோ எல்லாரும் இண்ணிக்கு நம்பரு சுத்திப் பார்க்க வாராங்களாம். மரத்துல காயம் படாமப்பாத்துக்க புள்ள.


 


 


 


 


பிறமொழிச் செல்வாக்கு


மலாய்


சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் பேச்சிலே பல மலாய்ச் சொற்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன (நீல உத்தமன்: 1985:54). இந்நாட்டுச் சூழலுக்கு ஏற்பத் தேவை காரணமாகப் பயன்பட்டுவருகின்றன. உணவு, உடை, இடம், காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை உணர்த்தும் பலவற்றை உள்ளடக்கிய ஒன்றாக இச்சொற்கள் உள்ளன. படித்து அறிந்து உறைவாரும் பட்டம் பெற்றாரும் பாமரரும் பயன்படுத்தும் பொதுப்படையான சில சொற்களைப் பற்றி ஆராய்வோம். எதற்கெடுத்தாலும் அல்லாமா என்று சொல்லும் ஒரு வழக்காறு இன்றைய அமைப்பில் இழைந்து வரும் ஒரு சொல்லாகும். படிப்பாளர், பாமரர் என்ற வேறுபாடு இன்றி, படிந்து வரும் ஒரு சொல் அல்லாமா என்பதாகும். தமிழ் இலக்கண மரபு வழி இதனைக் குறிப்பிடுவதென்றால், வியப்பு விசித்திரம், நகைச்சுவை, அனுதாபம், துக்கம் ஆகிய உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் எட்டாம் வேற்றுமையின் இயல்பு போன்று இஃது மலர்ந்தொளிரும்அடக்கடவுளேஎன்னும் பொருளும் இதற்கு உண்டு.


அடுத்து ஒரு சொல், இயாலா என்ற மலாய்ச் சொல்லின் மறுதலிப்புச் சொல். ஒத்த வயதுடைய ஆண், பெண் இருபாலாரும் தத்தமக்குள் உரையாடும் பொழுது; “ஆமாலா, நீ வாலா, நேரில் பேசிக்கலாமலா அ என்னாலா இப்படிச் சொல்லே வாலா நீ வர்ரேலா, அப்ப நாம் பேசிக்குவம்லாஎன்று ஒலிக்கும்லாஇன்றைய காலக்கட்டத்தில் கிளைமொழி


யியல் எதிரொலியாகும். ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகள் வரை வாமேன்,போ மேன், என்னா மேன் இப்படிச் செஞ்சிட்டே? என்று ஒத்த வயதினரோடு பேசப்பட்டுக் கொண்டு வந்தஒருமைஇலக்கணத்தின் எதிரொலியே இன்றையஇயாலாஎன்பதாகும் எனக் கொள்ளலாம்.


அடகுக் கடைப் பத்திரத்தைப் பாசாக்கடை சூறா என்பர். அழுக்கு நீர் வடிந்து வரும் வாய்க்காலை அல்லூரு என்று குறித்துக் கூறுவார்கள். வெட்டரிவாளைப் பாராங்கு என்று சொல்வார்கள். சந்தைக்குச் சென்று வருதலைப் பஸாருக்குப் போய் வந்தேன் என்று சாற்றுவார்கள். கடலை விற்பவரைக் கச்சான் பூத்தே என்றும் இடியாப்பம், புட்டு, ஆப்பம் விற்று வரும் வியாபாரியைப் புடடு மாயம என்றும் காய்கறிகள் விற்றுக் கொண்டு வருபவரைச் சையோர் என்றும்சொல்லி அழைப்பார்கள். தொந்தரவு செய்யாதே என்பதைக் கச்சோர் செய்யாதே என்றும் கூறுவர்.


 


ஆங்கிலம்


சிங்கப்பூரின் ஆட்சி மொழியாகவும் - பள்ளிகளில் பயிற்று மொழியாகவும் ஆங்கிலம் இருக்கிறது. ஆங்கிலத்தின் இன்றியமையாமை பற்றி மக்கள் நாள்தோறும் உணர்ந்து வருகின்றனர். 30 வயதுக்கும் குறைந்தோர் அதிகமாக ஆங்கிலச் சொற்களைத் தங்கள் பேச்சில் கலந்து உரைப்பது நன்கு தெரிகிறது. அதிகாலை முதல் இரவு வரை சிங்கையில், ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கும் இயல் தமிழ் ஆங்கிலத்துடன் கலந்து எப்படி ஒலிக்கின்றது என்பதை ஈண்டுக் காண்போம். (ஆங்கிலத்துடன் மலாய் சீன மொழிக் கலப்பும் உண்டு).


ஏய், சிந்தாமணி.... சின்னப்பயல டாய்லட்டுக்கு அனுப்பிச்சி கால் அலம்பி விடு. கோல்கேட்டை எங்க வச்சீங்க? என்னோட டவல் எங்கே? ஹீட்டரைத் தொறந்து விடு; சுடுதண்ணி வரட்டும். அண்டர்வையர், பனியன் எல்லாம் எடுத்துக்கிட்டு வா. பாத்ரூம்ல, சோப்பு, சாம்பு எல்லாம் எடுத்து வையி அட... இந்த ஷேவிங் செட்டைக் காணல. புதுசா பிளேடு வாங்கி வச்சிருந்தேன். அதையும் காணல. நான் காலா காலத்துல குளிச்சி முழுகிட்டு ஆபீசுக்குப் போக வேண்டாமா? முதல்ல காப்பி கொண்டு வா. பசியாற எடுத்து வச்சிட்டியா? பிள்ளைகள் ஸ்கூலுக்கு அனுப்பி வையி. ஸ்கூல் பஸ் வர நேரமாயிடிச்சி. நம்ம சின்ன மகளை கிண்டர் கார்டணுக்கு கொண்டு போய் விடு; நான் புறப்படறேன். என் ஃபிரண்ட்ஸ் காத்திருப்பாங்க. வரட்டுமா.


இன்றைக்குச் சாயங்காலம் டீக்கு மரவள்ளிக் கிழங்கு அவிச்சி சென்னாக்குன்னி போட்டு பெரட்டி வச்சிருப்பேன்னு நினைச்சேன்; நீ என்னடான்னா... பீசாங் கோரேங் கண்ணி வைச்சிருக்கே. இதுக்கு நீ ஜிம்போஜிம்போ பண்ணியிருக்கலாம். கொஞ்சம் ஜமாவா சாப்பிட்டிருக்கலாம். பரவாயில்லை; பரவாயில்ல, எடுத்துக் கிட்டு வா ஒரு பிடி பிடிப்போம்.


இங் வாம்மா... ரீசஸ்ல என்ன சாப்பிட்டே? ஓ மீகோரேங் சாப்பிட்டியா? நல்லாயிருந்துதா. ஓகோ, நீ இங்கவாய்யா. என்ன சாப்பிட்டே? ஆஹாங் மீ சூப் சாப்பிடடியா; வெரிகுட் வெரிகுட், ஆமா அது டேஸ்ட்டா இருந்திச்சா? ரைட் நாளைக்கு என்ன சாப்பிடப் போற? ஓ நாசி லெம்மா  சாப்பிடப் போறியா போய் ஐயா, நாளைக்கு என்ன சாப்பிடப் போறீங்க? ஓஹோ தவ் கோரேங் சாப்பிடப் போறியா?


உங்களுக்கெல்லாம் ஒரு குட் நியூஸ் சொல்லப் போறேன். எனக்கு வேலை இடத்துல பிரமோஷன் கிடைச்சிருக்கு; அதனால நாளைக்கு ஈவினிங் டீ என்பதற்காக ரோஜாவும் இரவு டின்னருக்கு பிரியாணியும் குருமாவும் வாங்கிக்கிட்டு வர்ரேன் ஓ மை காட்! தேங்சை நாளைக்குச் சொல்லுங்களேன்.


இன்னும் ஒரு மகிழ்ச்சிகரமான அறிவிப்பு. நாளைக்கு நம்ம அன்பார்ந்த கேர்ல் தாமரைச் செல்வியின் பேர்த்டே அல்லவா? அதற்காகப் பெரிய கேக் ஆர்டர் பண்ணியிருக்கிறேன்; அது மட்டுமல்ல; நெய்ச்சோறு, தாளிச்சா தீமோங் அச்சார் உட்பட சர்பத் மற்றும் ஐஸ்கிரீம் எல்லாம் உண்டு சந்தோஷம தானே ஜமாய்ச்சிடுவோம் தாமரைச் செல்வி பொறந்த நாளை.


பிள்ளைங்களோட பேசிக்கிட்டிருந்தா இவ் எங்கயாவது போயிடுவா... சிந்தாமணி... சிந்தாமணி, இங்கே வா ஆமா இன்னைக்கி இராத்திரி சாப்பாட்டுக்கு என்ன தான் பண்ணியிருக்கிறே? ஆஹாங், சொதிவச்சி, ஊடான் சம்பால் ஆக்கி, கடிச்சிக்க தவக்கே பெரட்டியிருக்கியா. இரண்டு மேங்கறி தானா, .கே. வெரிகுட், வெரிகுட்... நல்ல சாப்பாடு தான்.”


இந்த தொகுப்பிலிருந்து நாம் ஆங்கிலம், மலாய்ச் சொற்களின் பிரவாகம் அமைந்து ஒளிருகின்ற சிங்கப்பூரில் இலங்கிவரும் பேச்சுத் தமிழைப் பற்றி நன்கு அறியலாம்.


கடிதத்தை லெட்டர் என்றும் தபால் என்றும் காயிதம் என்றும் சொல்லிக் கொள்வார்கள். அஞ்சலகம், தபால் நிலையம் அருகில் அருகிப் போய். போஸ்டாபீஸ் என்பது மட்டும் புழக்கத்தில் இருந்து வருகின்றது. அஞ்சல் முத்திரை, தபால் தலை அடிச்சுவடற்றுப் போய் ஸ்டாம்பு மட்டும் ஸ்திரம் பெற்றுவிட்டது. முகவரி விலாசம் என்பதெல்லாம் முகமற்றுப்போய் அச்சொற்கள் இன்று அட்ரஸ் என்பதில் ஆணித்தரமாயின. பதிவுத் தபாலில் என்பதை ரிஜிஸ்டரில் என்றும் விமானத் தபால் என்பதை ஏர்மெயில் என்றும் நாணயப் பரிவர்த்தனை மாற்றங்களை ட்ராப்ட்  செக் என்றும் சொல்வார்கள். பற்றுச் சீட்டு ரசீது ஆகிவிட்டது. கட்டணச் சீட்டு டிக்கெட் என்றானது. வீடுகளில் கூடம் என்பது ஹால்; ஆங்கமைந்து ஒளிரும் சாய்வமைவுகள் ஷோபாசெட்; உணவருந்தும் மேசை நாற்காலிகள் டைனிங் டேபில்; சமையலறை கிச்சன், குசினி; குளிர்சாதனப் பேழை ஐஸ்பெட்டி, ஃபிரிட்ஜ் குளிர்ந்த நீர் ஐஸ்தண்ணி மற்றும் காப்பி, டீ, பிஸ்கட் ஆகியனவெல்லாம் ஆங்கிலச் சொற்கள் என்ற அந்தஸ்து பேதம் இழந்து தமிழ் மொழியில் கலந்தொளிருகின்றதைக் கணலாம். (பட்டியல் 4,5,6)


 


சீனம்


சிங்கப்பூரில் பெரும்பான்மையரால் பேசப்படும் மொழி சீனம். இருப்பினும் சீன மொழியின் செல்வாக்கு சிங்கப்பூர்த் தமிழரின் பேச்சில் மிகுதியாக இடம் பெறவில்லை. காரணம் அம்மொழியைக் கற்றுக் கொள்வது, பேசுவது என்பது தமிழர்களைப் பொறுத்த வரையில் சற்றுக் கடினமாகவே உள்ளது. எனவே, சீனர்களுடன் தொடர்பு கொள்ளும் போது பழைய தலை முறையினர் மலாய் மொழியினையும் இக்காலத் தலைமுறையினர் ஆங்கில மொழியையும் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், உணவுப் பொருட்கள் சாலைகளில் பெயர்கள், பள்ளிக் கூடங்களில் பெயர்கள் முதலியவற்றில் சீனச் செல்வாக்கு அதிகம் உண்டு. படிப்பறிவு குறைவாக உள்ள சில தமிழ் இளைஞர்கள் சீனர்களுடன் அதிகமாகக் கலப்பதால்அல்லாமாஎன்னும் சொல்லை விடுத்து, ஹொக்கியன் சொல்லானஉவல்லான்எனும் சொல்லைக் கையாளுகின்றனர். அல்லாமாவுக்கு என்ன பொருள் உள்ளதோ, அதே பொருள் இந்தச் சீனச் சொல்லுக்கும் பொருந்தும். மிகக் குறைந்தளவிலேயே நம் இளைஞர்களிடையே இச்சொல் வழங்குகின்றது. அதே போல், “அல்லூர்எனும் சொல் மறைந்து வருகின்றது. அதற்கு மாறாகச் சீனக் கிளை மொழியானலொங்காங்எனும் சொல்லைப் பயன்படுத்தத் தலைப்பட்டுள்ளனர். (நீல உத்தமன்: 1985:55). மூன் கேக் விழா என்பது சீனர்களின் ஒரு விழா இதனைத் தமிழர்கள் குறிப்பாக எழுத்துத் தமிழில் சந்திரப் பணியார விழா என மொழி பெயர்த்து உள்ளனர். கேக் என்பதும் பணியாரம் என்பதும் வெவ்வேறு பொருள்களாக இருக்கும்போது. இம்மொழிபெயர்ப்பு பொருத்தமற்ற நிலையில் உள்ளது (பட்டியல் 7,8 காண்க).


பொதுக்கூறு


ஆம் என்பதோடு ஆ” என்னும் வினா இடைச் சொல்லையும் சேர்த்து வழங்கும் ஒருபொதுக்கூறு சிங்கப்பூர்ப் பேச்சுத் தமிழில் உள்ளது. உன் தம்பியைக் கடையில் பார்த்தேன்” என்று சொல்லும்போது ஆமாவா” என்று பதில் கூறும் வழக்கம் உண்டு. இந்தியத் தமிழில் காப்பி, டீ, ஓவல் போன்றவற்றைத் தயாரிப்பதற்குப் போடுதல் என்னும் வினையைப் பயன்படுத்துவார்கள். (காப்பி போட்டுக் கொண்டு வரவா?) ஆனால், சிங்கப்பூர்த் தமிழில் காப்பி, டீ, ஓவல் போன்றவற்றைக் கலக்கிக் கொண்டு வரட்டுமா என்று கேட்பார்கள். இந்த மாறுபாடு இவற்றின் தயாரிப்பில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப அமைகின்றது இந்தியாவில் காப்பியும் பாலும் திரவப் பொருள்களாக இருக்கின்றன. சிங்கப்பூரில் இவை பெரும்பாலும் தூள்களாக இருக்கவே கலக்க வேண்டிய நிலை உள்ளது.


தொலைபேசியில் தொடர்பு கொள்வதைப் போன் அடிக்கிறேன் என்று சிங்கப்பூர்த் தமிழர்கள் சொல்லுவார்கள். இந்தியத் தமிழில் போனில் பேசுகிறேன் என்று சொல்லுவார்கள் சிங்கப்பூரிலுள்ள தொலைபேசிகள் பெரும்பாலும் பொத்தான் அழுத்தும் அமைப்பில் உள்ளதே இதற்குக் காரணம்.


லைட்டைப் போடு, திற, அடை, தொலைக்காட்சியைத் திற, மூடு, சாத்து, வானொலி


யைத்திற, மூடு, வீடியோவை போடு - இது போன்ற வழக்குகள் சிங்கப்பூர் தமிழில் இடம் பெற்றிருக்கின்றன.


சில சமயங்களில் வானொலியில் நோன்பு திறக்கும் நேரம் நோன்பு மூடும் நேரம் என்று அறிவிப்பது உண்டு.


மலேசியா, சிங்கப்பூர் நாணயங்கள் வெள்ளி என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் நாணயங்கள் ரூபாய் என்று அழைக்கப்படும்.


ஆங்கிலச் சொற்றொடர்கள் சிலவற்றின் நேரிடையான மொழிப் பெயர்ப்புகளும் பேச்சு வழக்கில் செல்வாக்குப் பெற்றுள்ளன. நீ என்ன பாடம் செய்கிறாய், காடியை வெட்டு, குழந்தையைப் பள்ளியிலிருந்து எடுத்துக்கிட்டு வாரேன், வெளியாகிவிட்டார் - போன்ற சொற்றொடர்கள் நேரிடையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.


மூன்னிலையாரை உடன்படுத்துகின்ற தன்மை இடம்பெயர்களான நாம், நம் என்பவற்றை உடன் படுத்தாத நிலைக்கும் வழங்கும் இயல்பைக் குறிப்பாக மாணவர்கள் பேச்சில் காணலாம். நம்ம ஆசிரியர் இன்று வரவில்லை. நம்ம தேர்வு நாளைக்க ஆரம்பம் - போன்ற வரிகளிலிருந்து அறிய முடிகிறது (இராமையா. கே 1987).


மருத்துவமனையிலிருந்து உடல்நலம் பெற்றபின் போகச் செய்தலைப் பேர் வெட்டுதல் என்று கூறும் போக்கும் உள்ளது.


பொதுவாகச் சிங்கப்பூர்ப் பேச்சுத் தமிழில் ல், ள், ழ், ன், ண் வேறுபாட்டினை உணர்ந்து உச்சரிக்கும் போக்கு அவ்வளவு இல்லை என்பார் சி.ஆர். மார்தாண்டன் (மார்த்தாண்டன் சி.ஆர். 1985:36).


 


இளந்தலைமுறையினரும் தமிழும்


 


இளந்தலைமுறையினரிடையே தமிழ்என்னும் தலைப்பில் ஆய்வு நடத்திய திரு.எம்.கே. நாராயணன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார் (1985:65-69). தமிழில் எழுதுவதும் இளைய தலைமுறையினரிடையே வெகுவாகக் குறைந்துவிட்டது. பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து வெளியேறிய பின்னர் பெற்றோர் உறவினர்களுக்குத் தமிழில் கடிதங்கள் எழுதுவதற்கும் வானொலி பத்திரிகை ஆகியவற்றுக்கு எழுதுவதற்கும் குறைந்த அளவினர் எழுத்துத் தமிழைப் பயன்படுத்துகின்றனர். பேச்சுத் தமிழை வீட்டில் பெரும்பான்மையான இளையர்கள் பயன்படுத்தி வருகின்றனர். உறவினர்களில் தத்தம் தலைமுறையினரிடத்தே ஆங்கிலத்திலும் பெற்றோர்களிடத்து ஆங்கிலம் கலந்து தமிழிலும் முதியோரிடத்துத் தமிழிலும் உரையாடுகின்ற போக்கே மிகுதியாக இருக்கிறது.


ஆண்களை விடப் பெண்கள் மிகுதியான நேரம் வீட்டில் இருப்பதாலும் வீட்டில் அவர்கள் தமிழில் உரையாடுவதாலும் அவர்களிடம் பேச்சுத் தமிழ் சற்று சரளமாக இருக்கின்றது. பொதுவாகப் பார்க்கும்போது இளம் தலைமுறையினரிடையே பேச்சுத் தமிழ் நிலவுகிறது. ஆனால், படிப்பது குறைவதாலும், எழுதுவது குறைவதாலும் பேச்சுத் தமிழ் திருத்தம் இல்லாததாகச் சிதைந்த மொழியாக மாறுகிறது. ஒரு கருத்தை எடுத்துக் கூற அவர்களுக்குப் போதுமான தமிழ்ச் சொற்கள் கிடைக்காத போது, ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அல்லது மலாய் மொழி துணை புரிகின்றது (எம்.கே. நாராயணன் 1985).


 


முடிவுரை


இவ்வாறு சிங்கப்பூர்த் தமிழில், அதாவது எழுத்துத் தமிழிலும் பேச்சுத் தமிழிலும் சில சிறப்பு இயல்புகள் தென்படுவதைக் காணலாம். இருப்பினும் தமிழகத் தமிழிலிருந்து வேறுபடுகின்ற தனித்த ஒரு கிளைமொழியாக இருக்க வேண்டிய கூறுகள் இன்னும் உருவாகவில்லை. மலேசியத் தமிழிலிருந்து பிரிந்து சிங்கப்பூர்த் தமிழ் மிகுதியான மாற்றங்களை அடைந்துவிட்டது என்று சொல்வதற்கும் இயலவில்லை. எனினும், சிங்கப்பூரின் எழுத்துத் தமிழில் இயன்ற வரையில் பிற மொழிச் செல்வாக்குக் குறைவும் ஏராளமான சொல் உருவாக்கங்களும் சிறப்பியல்புகளாக உள்ளன. பேச்சுத் தமிழிலோ மலாய் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றின் சொற் கலப்பு இருப்பதைக் காண முடிகிறது.


பொதுவாக இல்லங்களில் தமிழ் பேசும் போக்கு குறைந்து கொண்டே வருகிறது. ஆங்கிலச் செல்வாக்கின் காரணமாக எதிர் காலத்தில் இல்லங்களில் தமிழ் பேசும் இயல்பு அற்றுப் போகும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம். எழுதுவது போலப் பேசவேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தும் நிலை ஆங்காங்கே சில இடங்களில் உண்டு. கல்வி நிலையங்களில் தமிழை ஒருபாடமாகப் படித்து வரும் ஒரு நிலைமட்டுமே உருவாகிவிடும் காலத்தில் இல்லாமல் போய்விடும் நிலை ஏற்படலாம் அந்நிலையில் எழுத்துத் தமிழ் ஒன்றே எஞ்சிநிற்கும் என்றும் கூறலாம்; ஆங்கிலத்தில் சிந்தனை செய்து தமிழில் கூறுகின்ற நிலை உருவாகலாம்.


 


 சிங்கப்பூர்களின் எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் ஆகியவற்றில் சில சிறப்பு இயல்புகள் தென்பட்டாலும் இலங்கைத் தமிழ் போலத் தனிக் கிளைமொழியாகக் கருத வாய்ப்பில்லை.  பொதுவாக இல்லங்களில் தமிழ் பேசும் போக்கு குறைந்து கொண்டே வருகிறது.  ஆங்கிலத்தின் செல்வாக்கு மேலோங்கி வருகிறது.  இந்த வகையில் பேச்சுத் தமிழின் புழக்கத்தை அதிகரிக்கும் பணியே இப்போது சிங்கப்பூரில் முதன்மைப் பணியாக உள்ளது.  இப்பணியில் இப்போது பல அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.  இவை வெற்றிகாண வாழ்த்துவோம்


 


 


 


 


துணைநூல்கள்


தண்டாயுதம். இரா.  மலேசியாவில் தமிழ்உலகத்தமிழ், மதுரை, மதுரைப் பல்கலைக்கழகம் 1981.


கோவிந்தசாமி. நா.  சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி ஒரு சமூக இயல் கண்ணோட்டம்சிங்கப்பூரில் தமிழும் தமிழ் இலக்கியமும் சிங்கப்பூர் பல்கலைக் கழகம், தமிழ்ப் பேரவை, சிங்கப்பூர் 1979.


தெய்வநாயகம்.ச.திண்ணப்பன். சுப.கோவிந்தசாமி. நா.   திருத்தம் செய்யப் பெற்றுள்ள 13 தமிழ்  எழுத்துக்களைக் கற்பிப்பதற்கான கையேடு, சிங்கப்பூர், சிங்கப்பூர் கல்விக் கழகம், 1984


திருநாவுக்கரசு. வை, கடந்த நூற்றாண்டுகளில் தமிழ்ச் செய்தித்தாள்கள் - ஒரு கண்ணோட்டம்.” சிங்கப்பூரில் தமிழும் தமிழ் இலக்கியமும் சிங்கப்பூர், சிங்கப்பூர்ப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேரவை 1979.


முருகையன்,  மக்கள் தொடர்புத்துறையின் பங்கு ஒரு மதிப்பீடு”, சிங்கப்பூரில் தமிழும் தமிழ் இலக்கியமும், சிங்கப்பூர்ப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேரவை. 1977.


திண்ணப்பன்,சுப.    மலேசியத் தமிழ்தமிழ் நேசன், கோலாலம்பூர் 1971.


நீல உத்தமன் சிங்கையில் தமிழ் மொழியில் மலாய் சீனம் கலப்பு ஓர் ஆய்வுசிங்கப்பூரில் தமிழும் தமிழ் இலக்கியமும் (5) சிங்கப்பூர், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேரவை. 1986.


மார்த்தாண்டன்.சி,   சிங்கைத் தமிழின் சில ஒலிக்கூறுகள்சிங்கப்பூரில் தமிழும் தமிழ் இலக்கியமும் (5) சிங்கப்பூர், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேரவை 1986.


மணி. ,    சிங்கப்பூரில்”, உலகத்தமிழ், மதுரை, மதுரை காமராசர் பல்கலைக் கழகம் 1981.


நாராயணன்.எம். கே. இளந்தலைமுறையினரிடையே தமிழ்சிங்கப்பூரில் தமிழும் தமிழ் இலக்கியமும் (5) சிங்கப்பூர், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேரவை 1986.


பழனிசாமி. கே,     உமறுப் புலவர் தமிழ்ப் பள்ளியின் வரலாறு 1946-1982” சிங்கப்பூர், உமறுப் புலவர் கல்வி உதவி நிதி நிறுவனம் 1987.


அரசு.மெ திரு.      சிங்கப்பூரில் தமிழ்ச் சிறு கதைகள்தமிழ்ப் பேரவை, சிங்கப்பூர், சிங்கப்பூர்ப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை 1976-77.


முஸ்தபா.பி.செ.,     சொல்லாக்கம்”, தமிழ்மணி, சிங்கப்பூர், தமிழ் மொழி


          பண்பாட்டுக்     கழகம் 1987.


அஞ்சப்பன்,   கிளைமொழியியல்”, ஒப்படைப்பு, கல்விக் கழகம் சிங்கப்பூர் 1987


Subbaiya, RM., “ A Lexical Study ofTamil Dialects”, Kuala Lumpur,


      Universty of Malaya, 1966.


Ramaiah, K , Linguisic Difficuties Encountered By Sec Four Tamil Students


    In Their Tamil Composition, National University of Singapore,1987.


    (Unpublished M. Ed. Thesis)


 


 


 


 


பின்னிணைப்புப் பட்டியல்1


சமஸ்கிருதச் சொற்கள்


1.     உபயதாரர்கள்    ஆலய சிறப்பு விழாச் செலவுகளை ஏற்பவர்கள்


2.     காரியதரிசி      செயலாளர்


3.     பொக்கிஷ்தார்   பொருளாளர்


4.     நிர்வாகக் குழு        செயலவையினர்


5.     சத்தியக் காப்பி     உறுதிப் பிரமாணம்


6.     சண்முகார்ச்சனை


7.     நவராத்திரி


8.     கந்த சஷ்டி


9.     அபிஷேகம்


10.    தீபாராதனை


11.    வாகனம்


12.    ரதம்


13.    பிரகாரம்


14.    அர்ச்சனை


பின்னிணைப்பப் பட்டியல் 2


சொல்லாக்கம்


1.     வீடமைப்புப் பேட்டைகள்   Housing Estates


2.     துணைநரகங்கள்          New Towns


 


3.     குடியிருப்பாளர் சங்கம்/


      வசிப்போர் கழகம்       Residents’ committee


4.     சமூக நிலையம்         Community Centres


5.     குடிமைத் தற்காப்பு      Civil Defence


6.     கட்டாய இராணுவ சேவை  National Service


7.     குடிமக்கள் நல்லாலோசனைக் குழு Citizens’ Consultative Committee


8.     மூத்த குடிமக்கள் நல நிலையம்    Senior Citizens” Care Centre


9.     பெருவிரைவுப் போக்குவரத்து           Mass Rapid Transport


10.    அண்டை அயல் காவல் நிலையம்  Neighbourhood Police Post


11.    தேசிய தின விழா   National Day Celebration


12.    தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம்  National Book Development Council


13.    தேசிய அரும்பொருளகம்   National Museum


14.    தேசிய விளையாட்டரங்கம்  Natioanal Stadium


15.    தேசிய சம்பளப் பரிந்துரை மன்றம் National Wage Council


16.    பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகம்   Curriculum Development Institute


17.    போதைப் பொருள் புழங்கியர்


      புனர்வாழ்வில்லம்     Drug Rehabilitation Centre


18.    தொண்டூழியர் Social Servant/ Volunteer


19.    சிறப்பு விருந்தினர்   Guest of Honour


20.    பொதுமக்கள் தொடர்புத்துறை


      அலுவலர்     Public Relation Officer


21.    பொதுப் பயனீட்டுக் கழகம்  Public Utilities Board


22.    தொலைத் தொடர்பு வாரியம்      Telecommunication Board


23.    மத்திய சேம நிதி    Central Provident Fund


24.    தமிழ் மையம் Tamil Centre


25.    தாவரவியல் தோட்டம்        Botanical Garden


26.    தாய் சேய் நல நிலையம்   Child Daycare centre


27.    விலங்கியல் தோட்டம்            oological  Garden


28.    அஞ்சலகச் சேமிப்பு வங்கி  Post Office Savings Bank


29.    அறநெறிக் கல்வி   Moral Education


30.    வாழ்க்கை நலக் கல்வி Education for Living


31.    கல்விக் கழகம் Institute of Education


      (ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி) ஐணண்tடிttஞு ணிஞூ உஞீதஞிச்tடிணிண


32.    வெளிநோயாளிகள் மருந்தகம்  Out Patients’ Clinic


33.    சீனவர்த்தகச் சபை  Chinese Chamber of Commerce


34.    நடமாடும் நூலகம்   Mobile Library


35.    நகர்க் குறுக்கோட்டம்     Cross Country


36.    மெது நடையோட்டம்          Jogathan


37.    ஜுரோங் பறவைப் பூங்கா  Jurong Birds’ Park


38.    சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம் Singapore Broadcasting Corporation


39.    துறைமுக ஆணை நிறுவனம் Port of Singapore Authority


40.    கப்பற் பட்டறை     Shipyard


41.    இந்திய வணிகர் சங்கம்    Indian Chambers of Commerce


42.    இந்திய வர்த்தகச் சபை  Indian trade Centre


43.    சமூகத் தலைவர்கள்  Community Leaders


44.    உலக வர்த்தகமையம் World Trade Centre


45.    குடிமைத் தற்காப்பு  Civil Defence


46.    முழுமைத் தற்காப்பு  Total Defence


47.    (இளையர்) தொடக்கக் கல்லூரி   Junior College


48.    பல்கலைக் கழகப் புகுமுக கல்லூரி Pre University colleges


49.    வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் Housing Development Board


50.    இயந்திர மனிதக்கருவி Robot


51.    சிங்கமீன்     Merlion


52.    ஒளி ஊடுருவிக் கருவி      Overhead projector


53.    தொகுப்பேடு  Albeum


54.    கம்பி வண்டி  Cable Car


55.    மெழுகுப் பொம்மைக் காட்சியகம்  Wax Museum


56.    அறிவியல் மன்றம்    Science Centre


57.    பாரந்தூக்கி  Crane


58.    மின்தூக்கி   Lift


59.    கழிவறை     Toilet


60.    மிதி படகு    Pedaling Boat


61.    சிப்பங்கள்/பொதி    Parcel


62.    பறவைப் பூங்கா     Birds’ Park


63.    அறிவியல் பூங்கா    Science Park


64.    வாகனம் நிறுத்துமிடம்      Car Park


65.    கணினி        Computer


66.    பரிவும் பங்கும் இச்ணூஞு – Care and Share


67.    பணிவன்பு    Courtesy


68.    பேட்டை     Estate


69.    அடுக்குமாடி வீடு  Flat


70.    உள்ளதும் உருவாவதும்     Being and Becoming


71.    சீருடை இயக்கம்   Uniform Group


72.    மாணவர் தேசியப் படை    National Cadet Corps


73.    சாரணர்  படை  Scouts


74.    மாணவர் காவலர் படை  National Police Cadet Corps


 


பின்னிணைப்புப் பட்டியல் 3


கப்பல் பட்டறையில் பயன்படும் சில சொற்கள்


1.     குஞ்சு குப்பு  கப்பற்பட்டறைத் தொழிற்றுறை


2.     கோசா குப்பு தலைமைப் பிரிவு


3.     டோக்க     கப்பலின் அடிவாரப் பகுதி பழுதுபார்க்கும் கூடம்


4.     குத்தல்ல வேலை    கப்பலின் தாழ்வாரப் பகுதியில் வேலை


5.     குமுசு பி.எஸ்.ஏ குடியிருப்பு வீடுகள்


6.     ஓஞ்சி ஓங்கி


7.     குத்தல் சரக்கு இருக்கும் பகுதி


8.     ஊக்கு    அரிசி மூட்டை தூக்கி


9.     பெங்குஸ்    பொட்டலம்


10.    எடை தாங்கி சரக்குத் தாங்கும் இடம்


11.    குடாங்கு, கூடாங்   கிடங்கு


12.    சம்பான்      சிறுபடகு


13.    எங்கர் நங்கூரம்


14.    காகோ        சரக்கு


15.    ஃபோக்லிப்டு  பாரந்தூக்கு


16.    தோம்பு      drum


17.    தர்பார் கட்டில்      தர்பார் கட்டில்


18.    ஹாபர் ஃபோர்ட்    Horbour Fort


19.    மேசன் Mayson


20.    ஸ்தோர்      Store


21.    ஃபோர் மேன் Foreman


22.    பேர் போடுதல்      Attendance


23.    தாங்கி Tank


24.    லீட்மென்    Leadman


25.    சோல்டர்/பத்திரி     Solder


26.    லோட் Load


27.    அன்லோட்   unload


28.    கிரேன் Crane


29.    கண்டேனர்   Container


30.    சூப்பர்வைசர்  Superviser


 


பின்னிணைப்பப் பட்டியல் 4


மலாய்ச் சொற்கள்


1.     சிலுவார்      காற்சட்டை


2.     அத்தாப்புக் குடிசை  கூரை வீடு


3.     ரொம்பச் சின்னாங்கு மிகவும் சுலபம்


4.     லோரோங்   மிகக் குறுகிய சாலை


5.     பாடாங்      நகர சபைத்திடல்


6.     கெடாய்     கடை


7.     தாங்காப்படி  ஏணி/மாடிப்படி


8.     அல்லாமா    இறைவா (வியப்பு, விந்தை, உணர்வுகள்) ஒத்த வயதினர்


       உரிமைச் சொல்         (வாடா, போடா என்பது போல)


9.     சேவா வாடகை


10.    சூறா  கடிதம்/ரசீது


11.    பிளாஞ்சாபண்றேன்  செலவு செய்கிறேன்/விருந்து கொடுக்கிறேன்


12.    கோசம்      பூஜ்யம் / காலி


13.    கச்சோர் பண்ணாதே தொந்தரவு செய்யாதே


14.    தவ்க்கே     பயிற்றை முளை


15.    தீமோங்/ன்   வெள்ளரிக்காய்


16.    காஞ்ஊடான் இறால் குஞ்சுகளின் காய்வு


17.    ஈத்தை வாத்து


18.    சோத்தோங்  மீன்  போன்ற கடல்வாழ் உயிரினம்


19.    ஊடான்      இறால்


20.    சுக்காத்தண்ணி     புளிப்புச் சுவை தரும் திரவம்


21.    கிச்சாப்பு     உப்புச் சுவை தரும் திரவம்


22.    வங்குசாக்கடை     மளிகைக்கடை (கூல வாணிகம்)


23.    பாசாக்கடை  அடகுக்கடை


24.    பசார்/மார்க்கெட்    சந்தை


25.    பசார் மாலம்  இரவுச் சந்தை


26.    கம்பத்து வீடு கிராமப்புற வீடு


27.    ஜாகா காவலாளர்


28.    கச்சான் பூத்தே     கடலை வியாபாரி


29.    சையோர்    காய்கறி/காய்கறிவிற்பனையாளர்


30.    காராங்கோணி      பழைய பொருள்கள் வாங்கும் அங்காடிக்காரர்


31.    கிராணி      குமாஸ்தா


32.    சிராங்கு     கங்காணி/தண்டல்


33.    ஜாடு  துடைப்பம்


34.    மங்கு பீங்கான்      பாத்திரங்கள்


35.    அல்லூர்      சிறுவடிகால்/சாக்கடை


36.    பத்தாய்த் துணி     வண்ணக் கைத்தறித் துண்டு


37.    பேட்சா வண்டி      Trickshaw


38.    வக்குல்      பிரப்பங் கூடை


39.    சப்பாத்து     காலணி


40.    கைலேஞ்சு   கைத்துண்டு


41.    போத்தல்/பாட்டில்   குப்பி/புட்டி


42.    பாராங்கு     வெட்டரிவாள்


43.    காடி  உந்து வண்டி


44.    லோரி சுமைப் பேருந்து


45.    பாக்கார்     வேலி


46.    லாம்பு விளக்கு


47.    சம்சு  மதுபானம்


48.    தவக்கை     முதலாளி


 


 


பின்னிணைப்புப் பட்டியல் 5


ஆங்கிலச் சொற்கள்


1.     ஐஸ்பெட்டி   குளிர்பதனப் பேழை


2.     டோபிக் கடை      சலவைத் தொழிலகம்


3.     ஜோக்கடிக்கல்      வேடிக்கையாகப் பேசவில்ல்ல்


4.     சீரியஸா     பொருட்டாகக் கூறுகிறேன்


5.     அவன்யூ     சாலையின் ஒரு பிரிவு


6.     சத்தியக் காப்பி     உறுதிப் பிரமாணம்


7.     ஐ மீன் சொல்வது என்னவென்றால்


8.     கஸ்டம்ஸ்    சுங்கவரி


9.     இமிகிரேஷன் குடியமைவு


10.    பங்களா     அரண்மனை போல் வீடு


11.    ஃபிளேட்ஸ்   அடுக்குமாடி வீடுகள்


12.    புளோக்      வீடுகளின் வரிசையமைப்பு


13.    எஸ்டேட்     தோட்டம்/வீடமைப்புத்தொகுதி


14.    சார்டின்      பதப்படுத்தப்பட்ட மீன் குழம்பு


15.    இஸ்கூலுக்குப்போகிறேன்   பள்ளிக்குச் செல்கிறேன்


16.    ஆக்கரக்கா  ஓர் உணவு வகை


17.    கேக்  ஓர் உணவு வகை


18.    ஜெல்லி      ஓர் உணவு வகை


19.    கேண்டி      ஓர் உணவு வகை


20.    ஐஸ் தண்ணீர் குளிர்பானம்


21.    சோக்ஸ்     காலுறை


22.    எம்.சி. மருத்துவ விடுமுறை


23.    ஜோக்வாக்   மெதுநடை


24.    பி..  உடற்பயிற்சி


25.    லெட்டர்     தபால்


26.    செக்யூரிட்டிகார்டு   காவற்பணி


27.    கிளார்க்     குமாஸ்தா


28.    சிலிப்பர்      செருப்பு


29.    இஸ்கூல் பேக்      புத்தகப் பை


30.    ரூலர்  அடிக்கோல்


31.    பாக்கெட்    பொட்டலம்


32.    போக்கெட்   சட்டைப்பை


33.    ரேடியோ    வானொலி


34.    டி.வி.  தொலைக்காட்சி


35.    வீடியோ டேப் திரைப்படச்சுருள்


36.    டேப்/கெஸட் ஒலிப்பதிவு நாடாச் சுருள்


37.    ஆம்புரு      சுத்தியல்


38.    லைட்டு         விளக்கு


39.    கியாஸ்      எரிவாயு


40.    கேத்தல்     சுவை நீர்ப்பாத்திரம்(கேட்டல்)


41.    கம்   பசை


42.    கோப்பி      காப்பி


43.    நாலு நம்பர்  ஒரு வகைச் சூதாட்டம்


44.    போட்டோ   ஒரு வகைச் சூதாட்டம்


 


 


பின்னிணைப்புப் பட்டியல் 6


தமிழ்ச் சொற்கள்


1.     முறுக்கு சுட்டேன்   முறுக்கு பிழிந்தேன்


2.     தோசை சுட்டேன்   தோசை வார்த்தேன்


3.     இட்டலி சுட்டேன்   இட்டலி அவித்தேன்


4.     இறைச்சிக் கறி     கறிக்குழம்பு


5.     பச்சைத் தண்ணி    தண்ணீர்


6.     கூட்டு கட்டினேன்   சேர்ப்புத் தொகை/சேமிப்புத் தொகை


7.     சிமிந்து()   சீமைக்காரை


8.     கூட்டாளி    தோழன்/தோழி (ஆண் பெண் இருவரையும்)


9.     காலியாள்    திருமணம் ஆகாதவர்


10.    மேங்கறி     தொடுகறி/வெஞ்சனம்


11.    தாங்காப்படி()      ஏணி/மாடிப்படி


12.    தேத்தண்ணி  தேநீர்


13.    காசு கட்டீட்டேன்   பணம் செலுத்திவிட்டேன்


14.    தண்ணி


      சாப்பிடுவோம் காப்பி/குளிர்பானம் அருந்துவோம்


15.    பசியாறுங்க   காலைப் பலகாரம் சாப்பிடுங்க


16.    கடுப்பாக்காதே      கோபப்படச் செய்யாதே


17.    வெளுத்துடுவேன்    அடித்துவிடுவேன்


18.    மஞ்சள் கொடி மீன் கெண்டை மின்களின் குஞ்சு


19.    சூடாப் பொடி மீன்  செதில் நிறை மீன் குஞ்சு


20.    சென்னாகுண்ணிர்   இறாலின் குஞ்சுப் பருவக் காய்வு


21.    படக்கொட்டாய்     திரையரங்கு


22.    ஒட்டுக்கடை  பெட்டிக்கடை


23.    கூட்டுமாறு   துடைப்பம்


24.    கோடாலி    கோடாரிவி


 
.... தொடரும் ....
Dr S.P. Thinnappan
 

1 கருத்து:

  1. I would like to convey my gratitude. In my opinion, news channels hold a significant responsibility towards society as millions of people watch television and often form their opinions based on what they see. I believe that sgtamilan news channel fulfills this responsibility by exposing every societal issue with great accountability.
    Singapore News in Tamil

    பதிலளிநீக்கு