வெள்ளி, 2 மே, 2014

சமயம் - சைவம் - 6


நிறைவுப் பகுதி எண். 51       முருகா  வருக.

                                                முருகா  வருக  முதல்வா  வருக

                                                அருளே  பெறுக  அன்பே  தருக

                                                வள்ளி  மணாளா  வருக  வருக

                                                புள்ளி மயிலேறும் புனிதா  வருக                                           

                                                வெள்ளிப்  பணம்தர  விரைவில் வருக

                                                அள்ளித்  தருகவே  அடியார்க்கு  அருளை

                                                தண்ணீர்  மலைவாழ் தலைவா வருக

                                                வெண்ணீறு  அணியும்  வேலா  வருக

                                                அலோர்ஸ்டார் உறையும் ஆண்டவா வருக

                                                கூலிமில்  குடிகொண்ட  கோவே வருக

                                                தைப்பிங்கில் இருக்கும்  தண்மையே வருக

                                                ஈப்போவில்  இணங்கிய இறைவா வருக

                                                பேராவில்  பேசும்  பெருமானே  வருக

                                                ஆரா  அமுதே  அழகே  வருக

                                                பத்துமலை  விரும்பும்  பரமா  வருக

                                                சித்தி  பெறவே சீக்கிரம்  வருக

                                                கிள்ளானில்  உள்ள கிளரொளியே  வருக

                                                வள்ளால்  வருக  வருவாய்  தருக

                                                கோலாலம்பூர் கோயில்வாழ்  கோலமே வருக

                                                பாலா  வருக  பாவம்  போக்க

                                                சிரம்பான்  செல்வ  விநாயக  வருக

                                                பரம்பொருள்  முருகனுடன்  பாங்காய்  வருக

                                                மலாக்கா  வாழும்  மன்னனே  வருக

                                                பலாப்பழம்  விரும்பும்  பழனியே  வருக

                                                மூவாரில்  வளரும்  மூத்தோனே  வருக

                                                பாவுக்கு  உருகும் பாலா  வருக

                                                சிங்கைக்கும் சிறப்புச் சேர்க்கும் செல்வா

                                                தங்கத்  தமிழால்  தண்டன்  இட்டேன்

                                                இங்கேவந்து  இப்பொழுதே (இன்னல் போக்கி)  இன்பம் தருகவே.

                                                                                                                                                                                                                                                (காரைக்குடி இலக்குமணன் வேண்டஇயற்றியது)

                                                                                                                                                                                  11. - 4  - 12                                            அன்னையின் ஆற்றல்.


     பெண்மைக்குப் பெருமை சேர்ப்பது தாய்மையே.  ஏன்? தாய்மைக்குரிய குணங்களான அன்பு, பரிவு , பாசம், பொறுமை, தியாகம் ஆகிய அனைத்தும் பெரும் குணங்களாகும்.  ஒருபெண் கருவுற்றிருக்கும் போது எத்தனையோ துன்பங்களுக்கு ஆளாகின்றாள்.  பிறகு கருவுயிர்க்கும் காலத்து அவள் படும் வேதனைக்கு அளவே இல்லை.  அவ்வேதனையைத் தாங்கிக் கொள்கிறாள்.  பிறகு அந்தக் குழந்தையின் படிப்படியான வளர்ச்சிக்கு அவள் தரும் பங்கு பெரிது.  தன் இரத்தத்தையே பாலாக்கி ஊட்டுகிறாள். சேய்க்கு நோய் வந்தால் தாய் அல்லவா பத்தியம் இருந்து பாதுகாக்கிறாள். பிறகு கல்வி கற்கும் நிலையில் தலைவாரிப் பூச் சூடிப் பள்ளிக்குப் போவென்று சொல்கிறாள். அந்த அன்னை. அந்தப் பிள்ளையைச் சான்றோன் எனப் பலர் பாராட்டும்போது ஈன்ற பொழுதைவிடப் பெரிதும் மகிழ்கிறாள்.


     பிள்ளை மனம் கல்லாக இருந்தாலும் பெற்ற மனம் பி்த்தாக இருப்பதையே பார்க்கிறோம். மகன் தன்னைஅடித்தாலும் தன் வலிக்கு வருந்தாது மகனின் கைவலிக்குமே என்று வருந்துபவளே தாய்.  மேலும் மகனின் வலிமையை எண்ணி அந்த வருத்தத்திலும் அகமகிழ்ச்சி அடைபவளே தாய்.


     தாயின் பெருமையைக் கருதியே மனிதன் தான் பெசும் மொழிக்குத் தாய்மொழி என்று பெயரிட்டு அழைக்கிறான். தான் வாழும் நாட்டைத் தாய் நாடு என்று கூறுகிறான். தன் உயிர் வாழ்வுக்கு இன்றியமையாத நீர்தரும் கங்கை, காவிரி போன்ற ஆறுகளைக் கங்கைத் தாய், காவிரித்தாய் என்று அழைப்பது இந்துக்களின் மரபு. மேலும் தனக்குப் பால் தரும் பசுக்களை ‘‘கோமாதா எங்கள் குலமாதா’’ என்று கூறும் பழக்கமும் இந்துக்களிடையே உண்டு.


     தாயைக் கடவுளாகக் கருதி வழிபட்டவார்கள் தமிழர்கள்.  எனவேதான் ‘‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’ என்றும், ‘‘தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை’’ என்றும் ஔவைப் பாட்டி கூறுகிறாள்.  தாய் சொல்லைத் தட்டாதே என்பதும் ஒரு முதுமொழி. மாதா பிதா குரு தெய்வம் என்று வரிசைப் படுத்தும் போதும் தாய்மைக்கே முதலிடம் தரப்பட்டது.  காரணம் என்ன? தாய் சொல்லித்தானே தந்தையை நாம் அறிந்து கொள்கிறோம். எனவே நம் தந்தையை நமக்கு அறிமுகப்படுத்தி வைப்பவளே தாய் அல்லவா?


     கடவுளைத் தாயாக்கி வணங்கியவர்கள் இந்து சமயத்தினர்.  இறைவனை ‘‘அம்மை நீ’’ என்றும், ‘‘அம்மையே’’ என்றும் அழைத்து வணங்குகிறார்கள் அடியார்கள். முன்னொரு காலத்தில் திருச்சிராப்பள்ளியை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணுக்குக் காவிரிக் கரையில் கருவுயிர்க்கும் நேரம் வந்தபோது அவள் தனியே படும் துன்பத்தைக் கண்டு சிவபெருமான் தாயாக வந்து கருவுயிர்க்க உதவி செய்தான் என்று ஒரு புராணக் கதை உள்ளது.  எனவே அந்த ஊர் இறைவனுக்குத் தாயுமானவர் என்று பெயர் உள்ளது.


     சங்கரர் கண்ட சண்மதங்களுள் ஒன்றாகிய ‘‘சாக்தம்’’ என்னும் சக்தி வழிபாடு தாய்மையைப் பராசக்தியாக - காளியாக  துர்க்கயைாக வணங்குவதாகும்.  வீரத்தையும் வலிமையையும் வெற்றியையும் தருபவள் அன்னை பராசக்தி அல்லவா?  இறைவனின் அருளே சக்தி.  ்சிவன் இயங்கா நிலை ஆற்றல்.  சக்தி இயங்கும் நிலை ஆற்றல். உலகைப் படைத்துக் காத்து அழிக்கும் இறையாகிய ஆற்றலே பராசக்தி.  எனவேதான் ‘‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’’ என்று கூறினார்கள்.  நவராத்திரித் திருநாள மகிடாசுரனை வென்ற பராசக்தியின் துர்க்கையின் - பெருமையைத் தானே பேசுகிறது. மகிடாசுரன் - எருமை முக அரக்கன்- சோம்பலின் அடையாளம்- சோம்பலை வெல்வதற்குச் சக்தி -இயக்கம் - சுறுசுறுப்புத் தானே தேவை.  எனவே ஆற்றலின் அடையாளமே தாய் அல்லவா.


     அன்பின் அடையாளமாகவும், ஆற்றலின் அறிகுறியாகவும் , தியாகத்தின் சின்னமாகவும் திகழும் தாயைப் போற்றுவோம், தலை பணிவோம், தாய்மையின் தூய்மையைக் காப்போம், தாய்மை வாழ்க.



(சிங்கப்பூர் இந்து 13:3, ஜூலை- செப்டம்பர் 2001)


முனீஸ்வரன் கோவிலில் கலைமகள் வழிபாடு


     சிங்கப்பூர் காமன்வெல்த் ட்ரைவ் சாலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தில் கடந்த மாதம் 13.4.2001  புனித வெள்ளிக்கிழமை அன்று வருடாந்தர ‘‘சரஸ்வதி வித்யாராதனை’’ (கலைமகள் வழிபாடு) நிகழ்ச்சி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.  அதில் திரளான பக்தர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். காலை 7-30 மணி அளவில் அருள்மிகு விநாயகர் மற்றும் முனீஸ்வரரிடம் அனுக்ஞை நடைபெற்றன.  அதனைத் தொடர்ந்து மஹா சங்கல்பம், புண்யாகவாஹனம், கலசபூஜை,சூக்தாதி பாராயணம், யாக பூஜைகளைத் தொடர்ந்து புனித கலசங்கள் ஆலய வலம் வந்து துர்க்கை அம்மனுக்கு புஷ்பாஞ்சலியும் நடைபெற்றன.  டாக்டர். சுப.திண்ணப்பன் அவர்களுடைய சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.  கலந்து கொண்டவர்களுக்கு அருட்பிரசாதங்கள் அன்னதானம்  மற்றும் நினைவுப் பொருட்கள் வழங்கப் பெற்றன.

     பூஜை ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர்கள் மற்றும் மேலாண்மைக் குழுவினர்கள் செய்திருந்தனர்.

                     ----------------------------------

                    







    












சக்தி வழிபாடு்


     சக்தி என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு ஆற்றல் (energy) என்று பொருள்.  இந்த ஆற்றலை இயங்காநிலை ஆற்றல் (static energy), இயங்குநிலை ஆற்றல்(kinetic energy} என இரண்டு வகையாக அறிவியலார் பிரித்து ஆய்வார்கள்.  இயங்காநிலை ஆற்றலைச் சிவம் என்றும், இயங்கு நிலை ஆற்றலைச் சக்தி என்றும் இந்து சமயத்தினர் பெயரிட்டுள்ளனர்.  இறை சும்மா (சிவனே என) இருக்கும் நிலை சிவம்.  இயங்கும் நிலை சக்தி. சிவத்தை ஆணாகவும் சக்தியைப் பெண்ணாகவும் கருதி வழிபாடு செய்வது இந்து சமய மரபு.


     ஒவ்வொரு பொருளுக்கும் ஆற்றல் உண்டு.  எல்லாப் பொருளுக்கும் மூலமான இறைக்கும் ஆற்றல் உண்டு. அதற்கு வரம்பில் ஆற்றல் என்று பெயர்.  அந்த ஆற்றலே சக்தி. பொருளையம் அதன் ஆற்றலையும் பிரிக்க முடியாது.  எனவேதான் சிவனும் சக்தியும் சூரியனும் கதிரும் போலவும், பழமும் சுவையும் போலவும், மலரும் மணமும் போலவும் பிரிக்க முடியாதவர்கள் எனக் கருதுகிறது.  இந்து சமயம் அதனால் அர்த்தநாரீஸ்வர வடிவம் - அதாவது உமையொரு பாகன் வடிவம் கண்டு வழிபட்டது. இந்து சமயம் ஆணையும் பெண்ணயும் உலக வளர்ச்சிக்கு உயிர்நாடிகள் என்னும் உண்மையை உணர்த்தும் முயற்சியே இது.


     சக்தியை முதன்மைப்படுத்தி முழுமுதற் பொருளாகக் கருதி வழிபடும் மதத்தைச் சாக்த மதம் என்று அழைத்தனர்.  இந்து மதத்தின் அறுவகைப் பிரிவுகளில் ஒன்றாகிய இந்த சாக்த வழிபாடு இந்தியாவில் குறிப்பாக வங்காளத்திலும் கேரளத்திலும் மற்ற இடங்களிலும் காளி வழிபாடாக அமைந்துள்ளது.  மகிடாசுரனை - எருமை முக அசுரனை அழிக்கும் சக்தியே காளி.  மகிடாசுரன் என்பவன் சோம்பலின் அறிகுறி.  சோம்பலை அழித்துச் சுறுசுறுப்பாக்கிச் செயல்படுத்தும் ஆற்றலே மகிடாசுரவதம்  உணர்த்தும் காளி வழிகாட்டுத் தத்துவம் ஆகும். இராமகிருஷ்ண பரமஹம்சர் கல்கத்தாவில் காளி வழிபாடு செய்த பெரியார் ஆவார்.


     ஒன்றாய் நிற்கும் சக்தி செயல் படும்போது மூன்றாய் நிற்கும் எனச் சைவ சித்தாந்த தத்துவம் உணர்த்தும்.  ‘‘ஒன்றதாய் இச்சா ஞானக் கிரியை என்று ஒரு மூன்றாகி நின்றிடும் சக்தி’’ என்பது சிவஞான சித்தியார் என்னும் நூல் வாக்காகும்.  ஒரு செயலைச் செய்வதற்கு முதலில் அதில் ஆர்வம் - விருப்பம் - (attitude)  இருக்க வேண்டும்.  இதுவே இச்சா சக்தியாகும்.  பிறகு அந்தச் செயல் தொடர்பான அறிவு (knowledge) வேண்டும். அது பற்றிப் பலவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவே ஞான சக்தியாகும்.  பிறகுதான் நாம் செயலில் இறங்கி (action) முயற்சி செய்ய வேண்டும்.  ஆர்வம், அறிவு, செயல் ஆகிய மூன்றனையெ இச்சா, ஞான, கிரியா சக்தி எனக் கண்டு அவற்றிற்கு வள்ளி, முருகன், தெய்வயானை என முறையே வடிவம் கொடுத்து வழிபட்டது இந்து சமயம்.


     சக்தி என்பதைச் சடசக்தி, சித்சக்தி என இருவகைப் படுத்திப் பேசுவதும் உண்டு. நெருப்பு, காற்று போன்றவற்றின் சக்தி சடசக்தி.  மக்கட்குரிய அறிவு சித்சக்தி.  முதலில் நெருப்பு(அக்னி), காற்று (வருணன்). முதலியவற்றைக் கடவுளாக வழிபட்ட மக்கள் பின்பு அறிவு நிலையில் வாலறிவனாக வழிபட்டனர்.  ‘‘சக்தி தன் வடிவேது என்னில் தடையிலா ஞானமாகும்’’ என்று ஞானத்தை - அறிவை - வழிபடுவதும் சக்தி வழிபாடாகும்.


            இறையின் சக்தியை அருளாகக் கருதி வழிபடுவதும் உண்டு. ‘‘அருளது சக்தியாகும் அரன் தனக்கு’’ எனச் சைவ தத்துவ நூல்கள் கூறும்.  இந்தச் சக்தியைப் பராசக்தி எனவும், திரோதான சக்தி எனவும் பகுத்துக் காண்பர்.  இறைவன் தன் நிலையில் இருப்பது பராசக்தி. அவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில் நிலைப்படும் பொழுது திரோதான சக்தி எனப்படும்.


     படைத்தல் நிலையில் பிரமன், காத்தல் நிலையில் திருமால், அழித்தல் நிலையில் சிவன் என இறையைப் பகுத்துக் கண்டு, மேற்கண்ட மூவர்க்கும் தேவியராக முறையே சரஸ்வதி, இலக்குமி, பார்வதி எனக் கூறி வழிபடுவதும் இந்து சமய நெறியாகும்.  கல்விக்குரிய சக்தியாகச் சரஸ்வதியும், செல்வத்திற்குரிய சக்தியாக இலக்குமியும், வீரத்திற்குரிய சக்தியாகப் பார்வதியும் கருதப் பெற்றனர்.  பார்வதிக்கு மூன்று நாள்களும், இலக்குமிக்கு மூன்று நாள்களும், சரஸ்வதிக்கு மூன்று நாள்களும் ஆக 9 நாள்கள் செய்யும் வழிபாட்டு விழாவே நவராத்திரி விழாவாகும்.  ஒவ்வொரு தெய்வத்திற்கும் மூன்று நாள்கள் ஏன்? வழிபாடு என்பது மனத்தால் தியானித்து, வாயால் தேவியின் புகழ் பாடித் துதித்து உடலால் வணங்கித் தொண்டு செய்வதே ஆகும்.  எனவே மனம், மொழி, உடல் மூன்றின் வழிபாட்டிற்கு மூன்று நாள்கள் எனக் கருதலாம்.


     அருள் என்பது கருணையாகும். அறக்கருணை, மறக்கருணை என அது இரண்டு வகைப்படும்.  நல்லோரை வாழ வைத்து இன்பம் நல்குவது அறக்கருணை. அல்லோரை - அநீதி செய்வோரை அழித்து இன்பம் தருவது மறக்க்ருணை.  முன்னது ஒரு தாய் தன் பண்புடைய பிள்ளையை அரவணைத்து அன்பு காட்டுவது போன்றது. பின்னது ஒரு தாய் தன் தீய பழக்கம் உடைய குழந்தையை அடித்துச் சிறிது துன்புறுத்தி நல்வழிக்குக் கொண்டு வருவது போன்றது. முன்னது சக்தியின் சாந்த வடிவம். உமையம்மை , இராஜ இராஜேஸ்வரி போன்றவை. பின்னது சக்தியின் கோர வடிவம்.  காளி, துர்க்கை போன்றவை. எனவே சக்தி வழிபாடு தாய்மை வழிபாட்டையும் உணர்த்துகிறது. வைணவ சமயத்தினர் திருமால் தேவியைத் தாயார் என்றே அழைப்பார்கள்.


     அருளை மழையாகக் காண்பதும் உண்டு.  திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்துக்குப் பிறகு வான்சிறப்பை வைத்து மழையைப் போற்றுகின்றார்.  மழையின் மறுபெயர் மாரி. மழை தரும் சகதி வழிபாடே மாரியம்மன் வழிபாடாகும்.


     இத்தகைய சக்தி வழிபாடு தமிழரிடையே வெற்றி தரும் கொற்றவை வழிபாடாகத் தொடங்கி, காளி வழிபாடாகவும், தேவி வழிபாடாகவும் மலர்ந்தது எனலாம்.


     (சிங்கப்பூர் இந்து 15:3, ஜூலை- செப்டம்பர் 2003)


                -------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக