வியாழன், 1 மே, 2014

சமயம் - வைஷ்ணவம் - 1


SPT articles 1 Vaishnavam 

1 வைணவ நெறி

      2  சிலப்பதிகாரம் காட்டும் திருமால் பெருமை

     3 பழந்தமிழ் இலக்கியத்தில் இராமன்

                     4  ஆழ்வார்கள்  -  ஓர் அறிமுகம்.

                        அ முதலாழ்வார் மூவர்

                        ஆ பெரியாழ்வார் பெருமை

                        இ ஆண்டாள் தமிழை ஆண்டாள்

                        ஈ குருவும் சீடரும்

                        உ தொண்டர் குலமே தொழுகுலம்

                        ஊ பெருநிலமன்னரும் குறுநில மன்னரும்

                                


  1 வைணவ நெறி.

                தமிழர் கண்ட சமயங்களுள் தொன்மையானவை சைவமும் வைணவமும் ஆகும். சிவபெருமானை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபடுகின்ற சமயம் சைவ சமயமாகும்.  அதுபோலத் திருமால் எனப்படும் விஷ்ணுவை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபடும் சமய நெறியே வைணவ சமயமாகும்.  இவ்விரண்டு சமயக் கோட்பாடுகளையும் தத்துவச் செந்நெறிகளாக வகுத்துக் கண்ட பெருமையும் தமிழினத்திற்குரியது.  சைவ சமயக் கோட்பாட்டுச் சிந்தனைகள் திருமுறைகளை அடிப்படையாகக் கொண்டு மெய்கண்டார்சைவ சித்தாந்தம் என்னும் தத்துவ நெறியை வகுத்தார். அதுபோல ராமானுஜர்ஆழ்வார்களின் அருட்பாடல்களின் தொகுப்பாகிய நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை அடிப்படையாகக் கொண்டு விசிஷ்டாத்துவைதம்என்னும் தத்துவ நெறியை வகுத்தார்.

                விசிஷ்டாத்துவைதம் என்ற தொடர் விசிஷ்ட, அத்துவைத என்னும் இரு சொற்களின் இணைப்பாகும்.  அத்துவைதம் என்றால் இரண்டின்மை, உள்ளது ஒன்றே என்னும் பொருளாகும்.  விசிஷ்ட என்றால் குணங்கள் கூடியது, சிறப்பு மிக்கது என்னும் பொருளாகும்.  விசிஷ்டாத்துவைதம்  என்பதற்குச் சிறப்புமிக்க அத்துவைத நெறி என்பது பொருளாகும்.  அதாவது திருந்திய அத்துவைதம் என்றும் இதற்குப் பெயர் உண்டு.

                இந்த நன்னெறியைத் தத்துவம், ஹிதம், புருஷார்த்தம் என்ற மூன்று வகையாகக் காண்பர். தத்துவம்என்பது மெய்ப்பொருள் கோட்பாடாகும்.  ஹிதம் என்பது நற்பயன் விளைவிக்கும் மந்திரங்களைக் குறிக்கும். புருஷார்த்தம் என்பது இறுதியில் உயிர்கள் அடையும் இலக்கினைச் சுட்டும்.

                தத்துவம் என்பது சித்து(உயிர்) ,அசித்து ( உடல்) ஈஸ்வரன் ( இறை) ஆகிய மூன்றினைக் குறிக்கும்.   சித்த சித்தோடு ஈசன் என்று செப்புகின்ற மூவகைத் தத்துவத்தின் முடிவு கண்ட சதுர்மறைப் புரோகிதன்என்று வில்லிபாரதம் நம்மாழ்வாரைப் போற்றுகின்றது.  இவ்மூவகைத் தத்துவக் கூறுகளையும் தத்துவத்திரயம் என்று குறிப்பிடுவார்கள்.  உடல், உயிர், இறை இம்மூன்றும் பிரிக்க முடியாத தத்துவங்களே. 

                இறை எனப்படுவது திருமாலையே குறிக்கும். இக் கண்களால் காணக்கூடிய கடவுளே - திருமாலே எங்கும் எல்லா உருவத்திலும் நிறைந்துள்ளான்.  இவனே உண்மையிலும் உண்மையானவன்.  இவனை நாம்காணும் இடமெல்லாம் காண்பதே எல்லையற்ற இன்பம்.  விஷ்ணு என்னும் சொல்லுக்கே எங்கும் நிறைந்தவர் என்பதுதான் பொருளாகும்.  உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்ணீர் மல்கி” -  என்பது நம்மாழ்வார் கூற்று. இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.

                சித்து என்பது உயிர்களாகிய ஆன்மாவைக் குறிக்கும் . இந்த ஆன்மா உடல், இந்திriயங்கள், மனம், பிராணன், புத்தி முதலியவற்றிலிருந்து வேறுபட்டது.  மூப்பு இறப்பற்றது. தன்னொளி உடையது.  ஈஸ்வரனது ஆணைக்கு உட்பட்டது.  பக்தர், நித்யர், முக்தர் என்ற மூவகைப் பட்டது.

                பக்தர் என்பது உலகத்தோடு தொடர்புடைய இல்லறத்தாரைக் குறிக்கும்.  முக்தர் என்பது பரமபதத்தில் இறைவனுக்குத் தொண்டு செய்பவர்களைக் குறிக்கும். நித்தியர் என்பது இறைவனுடைய வடிவழகில் ஈடுபட்டுத் திளைத்திருக்கிறவர்களைக் குறிக்கும்.

                அசித்து எனப்படும் இவ் உலகத்தைக் குறிப்பும்.  பந்தபாசங்களையும் உணர்த்தும்சித் தும் அசித்தும் இந்தச் சரீரத்தில் அடங்கியுள்ளன. ஈஸ்வரன் சித் அசித்தைத் தன் குணங்களாக ஏற்றுள்ளான்.  சஞ்சலமற்ற பக்தியுடன் ஆன்மா தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டு இறைவனை அடைக்கலம் அடைந்தால் அவனுக்குத் தொண்டு செய்யும் பெரும் பேற்றினை அடையலாம் என்பது வைணவத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

                ஹிதம் என்பது உயிர் இறைவனை அடைவதற்குரிய நெறிகளாகிய பக்திக்கும் பிரபக்திக்கும் (அடைக்கல நெறி) ஆதாரமான மூவகை மந்திரங்களைச் சுட்டி நிற்கும் நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழி தானே மந்திரம் என்பஎன்று தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் மந்திரத்திற்கு வரையறை கூறுவார். மந்திரம் என்பது மறைபொருள் ஆகும்.  வல்லார் வாயால் கேட்டு உருவேற்றிச் ஜபித்தால் அது பயன் தரும்.

                வைணவ சமயத்தில் இம் மந்திரங்களை மூவகைப் படுத்துவர். அட்டாச்சரம் (எட்டெழுத்து)துவய மந்திரம் ( இருதலை மாணிக்கம் என்னும் சரணாகதி மந்திரம்) சரம ஸ்லோகம்  என்பதே அந்த மூவகையாகும்.  எட்டடெழுத்து மந்திரம் என்பது இறைவனுடைய திருப்பெயராகிய நாராயணாய நமஹ என்னும் திருப்பெயரைக் குறிக்கும். இதுவே பெரிய திருமந்திரம் எனப்படும்.  இம்மந்திரம் பேராற்றல் உடையது.

                குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயரங்களை எல்லாம்

                 நிலம் தரஞ்செய்யும் நீள்விசும்பு அருளும் அருளொடு பெரும்

                 நிலம் அளிக்கும் வலந்தரும் பெற்றதாயினும் ஆயின செய்யும்

                 நலம்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்     நாராயணாய நம

என்பது திருமங்கையாழ்வார் கூற்று.


                தேனும் பாலும் அமுதுமாய திருமால் திருநாமம்

                 நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோநாராயணமே

என்று திருமங்கையாழ்வார் கூறியுள்ளார்.

                நாராயணா வென்னா நாவென்ன நாவே

என்று இளங்கோவடிகள் நம்மை நோக்கி வினா எழுப்புகிறார். 

                துவய மந்திரம்என்பது கடவல்லி உபநிடதத்தில் இருவேறு இடங்களிலுள்ள இரு வாக்கியங்களை ஒன்றாக இணைத்து மந்திரமாக்கிப் பக்தர்கள் நற்கதி அடைய வேண்டி இறைவன் பிராட்டிக்கு அருளிய ஒன்றாகும்.  இம்மந்திரம் வழி, அடையும் பொருள் என்னும் இரண்டு பொருள்களை உடையது.  இம்மந்திரம்,

                                ஸ்ரீமத் நாராயண சரணென சரணம் பிரபத்யே

                                 ஸ்ரீமதே நாராணாய நம

என்பதாகும்.  இதற்குச் சரணாகதி மந்திரம் என்றும் பெயர்.  இருமுறை இறைவனின் திருப்பெயரைக் கூறிச் சரணாகதி செய்வது என்பது இதன் அடிப்படைக் கருத்தாகும்.

                சரமஸ்லோகம் என்பது கீதையின் இறுதிப் பாடலாகும்.  கண்ணபிரான் பக்தர்ககுத் தன்னைச் சரணடையும்படி கூறும் சிறந்த மந்திரம். சரணாகதி என்பது இறைவனின் திருப்பாத கமலங்களே கதி என்று இருப்பது ஆகும்.  இதுவே பகவத் கீதையின் சாரமாகும்.  இந்த அடைக்கல நெறியைக் காட்டிக் கொடுத்தவன் கண்ணன். இதுவே பிரபந்த நெறி எனப்படும் பக்தி நெறியே.  இதற்கு வித்தாகும். இம்மூன்று மந்திரங்களும் வைணவ சமயத்தின் உயிர் நாடியாய் விளங்குபவை.  ஆழ்வார்களும் , ஆச்சாரியர்களும் அரும் பாடுபட்டு நமக்குத் தேடித்தந்த செல்வங்களாக எண்ணிப் போற்றப் படுபவை.

                நாராயணன் எனப்படும் திருமாலே முழுமுதற் பொருளெனக் கருதி அவனுடைய மூவகை மந்திரங்களையும்  மொழிந்து வழிபட்டுப் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு சரணாகதி அடைந்து நின்றால் திருமாலுக்குப் பரமபதத்தில் தொண்டு செய்யும் பெரும் பேற்றினை அடையலாம் என்பதே வைணவம் உணர்த்தும் தத்துவ நெறியாகும். இத்தகைய பெரும் பேற்றினை அடைந்ததோடு மட்டுமின்றி அடையும் நெறியையும் வழியையும் காட்டிச் சென்ற பெருமக்கள் தான் ஆழ்வார்கள்.  அவர்கள் வழி நன்று இறைவனுக்கும் , இறைவன் அடியார்களுக்கும், (பகவானுக்கும் பாகவதர்களுக்கும்) திருத்தொண்டு செய்யும் பெரும் பேற்றினை அடைய முயலுவோமாக.

                 Thinnappan, SP.  Concept of Vaishnavism In: Kumbabisheka Malar, Ed.

A.      Palaniappan and others.  Sri Srinivasa Perumal Temple, Singapore (1992) PP 55-56.(Tamil)



                                                                               

 2சிலப்பதிகாரம் காட்டும் திருமால் பெருமை


                தமிழர்களின் இருபெருஞ் சமய நெறிகளில் ஒன்று வைணவம் எனப்படும் திருமால் நெறி. விஷ்ணுவை வழிபடும் சமயம் வைணவமாகும்.  விஷ்ணு எனும் சொல்லுக்கு எங்கும் நிறைந்திருப்பவன் என்பது பொருளாகும்.  இறைவன் என்னும் தமிழ்ச் சொல்லும் இந்தப் பொருளை உணர்த்தும் ஒன்றே.  அதற்கு எல்லா இடங்களிலும் தங்கி இருப்பவன் என்பதே பொருள்.  இறைவன் என்னும் பொருளை விளக்க எழுந்த பழமொழியே, “தூணிலும்  இருப்பான் துரும்பிலும் இருப்பான்என்பதாகும் மாயோன் மேய காடுறை உலகம்என்று தமிழின்தொன்மை நூலாகிய தொல்காப்பியம் கூறுவதால் திருமால் வழிபாடு, பழந்தமிழர் வழிபாடு என்பது விளங்கும். மாயோன் என்பது கரிய நிறமுடைய திருமாலைக் குறிக்கும்.  திருமால் வேத முதல்வன், மாநிலமே அவன் சேவடி, கடலே அவனது ஆடை, ஆகாயம் அவன் உடல், திசைகள் அவன் கைகள், சூரியனும் சந்திரனும் அவன் கண்கள், இயன்ற அனைத்தையும் உள்ளடக்கிய இயல்புடையன்எனச் சங்க இலக்கியமாகிய நற்றிணையின் கடவுள்வாழ்த்து கூறுகிறது.  இத்தகைய எங்கும் நிறைந்த திருமாலைச் செந்தமிழில் தோன்றிய முதல் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தின் வழி நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

                சிலப்பதிகாரம், கோவலன் கண்ணகி வரலாற்றைக் கவிதை வடிவில் கூறும் நூலாகும் இதனை இயற்றியவர் இளங்கோவடிகள்.  சேர வேந்தர் மரபினர். கி.பி.இரணடாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.  கற்பின் வலிமை, ஊழின் பேராற்றல், அறத்தின் வெற்றி ஆகியவற்றை வலியுறுத்தும் அந்தக் காப்பியம் ஐம்பெரும் காப்பியங்களில் முதலாவது வைத்து எண்ணப் படுவதாகும்.  இதன்வழி, திருமால் பெருமையைப் பார்ப்போம்.

நெடியோன் கொடியோன் -

                கோவலன்  தோன்றிய ஊர் பூம்புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினம்.  அந்த ஊரில் உள்ள கோயில்களைப் பட்டியலிடும்போது நீலமேனி நெடியோன் என்ற ஒன்றைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.  நீல நிறத்தை உடையவன் என்பது நீலமேனி நெடியோன்  என்பதற்குப் பொருள்.  இவ்வாறே, மதுரை நகரிலுள்ள கோயில்களைக் கோவலன் காண்பதாகச் சுட்டும் இடத்தில் ,”உவணச் சேவல் உயர்ந்தோன்எனத் திருமாலைக் கூறுகிறது. இதற்குக் கருடக் கொடி உடையவன் திருமால் என்பது பொருள். நீல நிற நெடியோனாகவும், கருடக் கொடியோனாகவும் திருமால் இங்குக் காட்டப் படுகிறார்.

திருமால் ஆடிய ஆடல் -

                கோவலனின் காதல் கிழத்தியான மாதவி, இந்திர விழாவின் போது ஆடிய பதினொரு ஆட்டங்களில், மூன்று திருமால் ஆடிய ஆடல்கள்.  அவை அல்லியம், மற்கூத்து, குடக்கூத்து எனப்படும்.  திருமால் அவதாரங்களில் ஒன்றாகிய கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் அவன் மாமனாகிய கம்சன் செய்த வஞ்சச் செயல்களை வெல்வதற்காக ஆடிய ஆடல் அல்லியத் தொகுதியாகும்.  அவுணனாகிய அசுரனைத் திருமால் மல்யுத்தம் செய்து வென்றதை விளக்கும் ஆடல் மற்கூத்தாகும்.  வாணாசுரன் என்பவன் தன் மகள் உழை காரணமாகக் காமன் மகனைச் சிறை வைத்தான்.  அவனை மீட்டும் பொருட்டு, உலோகங்களாலும் மண்ணாலும் செய்த குடங்களை வைத்து வாணனுடைய ஊரில் திருமால் ஆடிய கூத்து குடக்கூத்து எனப்படும்.  எனவே இங்கு திருமால் தொடர்பான புராணச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

கிடந்த வண்ணம் - திருவரங்கப் பெருமான் -

                கோவலன் , கண்ணகி,கவுந்தியடிகள் மூவரும் பூம்புகாரிலிருந்து புறப்பட்டு மதுரை செல்கின்றனர்.  திருச்சி அருகில் மாங்காட்டு மறையோன் என்பவனைச் சந்தித்து மதுரைக்குரிய வழி கேட்கின்றனர்.  அவன் திருவரங்கத்தில், திருமால் பள்ளிகொண்ட காட்சியையும், திருப்பதியில் திருவேங்கடத்தில் திருமால் நின்ற கோலக் காட்சியையும் விளக்குகிறான்.  அதனைப் பார்ப்போம்.

                ஆயிரம் தலையுடைய ஆதிசேசனாகிய பாம்புப் படுக்கையில் பலரும் வணங்கித் தொழத் திருவரங்கத்தில் திருமால் பள்ளி கொண்டிருக்கிறான்.  இந்தக் காட்சியானது நீலமேகம் பொன்மலையின் மீது படிந்திருப்பது  போல உள்ளது என வர்ணிக்கப் படுகிறது.

நின்ற வண்ணம் - திருப்பதிப் பெருமான் -

                அருவிகள் கொண்ட உயர்ந்த மலையாகிய திருவேங்கடம் எனும் திருப்பதியில் சூரியன் போன்ற சக்கரத்தையும் சந்திரன் போன்ற சங்கினையும் கைகளில் ஏந்திப் பகைவரை வருத்தும் ஆழிச் சக்கரத்தையும், பால் போன்ற சங்கினையும் தன் தாமரை போன்ற கையில் ஏந்தி அழகு விளங்கும் மணி ஆரத்தை மார்பிலே பூண்டு , பொன்னாலான ஆடையுடன் செங்கண் நெடியோனாகிய திருமால் நிற்கும் காட்சி, நீலமேகம் ஒன்று மின்னலாகிய ஆடையை அணிந்து கொண்டு. இந்திர வில்லாகிய (வானவில்) அணியைஅணிந்து இருப்பது போல் இருக்கிறது என இளங்கோவடிகள் வருணித்துள்ள அழகு போற்றத் தக்கது.

எட்டெழுத்து மந்திரம்  -

                வைணவர்கள் போற்றும் மந்திரம் திருமால் பெயரைக் குறிக்கும் நாராயணாய நமஎனும் எட்டெழுத்து மந்திரமாகும். இது அருமறையாகிய வேதத்தில் உள்ளது என்றும் இதனை ஒரு முறையாக உளம் கொண்டு ஓதினால் நினைத்தது எல்லாம் கிடைக்கும் எனவும் சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையவன் வாயிலாகக் கூறப் படுகிறது. “குலந்தரும், செல்வந் தந்திடும், அடியார் படுதுயராயின எல்லாம் நிலந்தரம் செய்யும் , நீள் விசும்பு அருளும், பெருநிலம் அளிக்கும், வலந்தரும், மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்என நாராயண மந்திரத்தின் பெருமையைப் பின்பு திருமங்கை ஆழ்வார் பாடுகிறார்.



கொற்றவை தமையன் -

                கோவலன் கண்ணகி மதுரை செல்லும் வழியில் காட்டில் வேடர்கள் கொற்றவையைப் பாடி வழிபாடு நிகழ்த்துகின்றனர்.  அப்போது அவளைத் திருமாற்கு இளையோள்என்று பாடிப் போற்றுகின்றனர்.  அதாவது கொற்றவை திருமாலின் தங்கை எனத் தெரிகிறது.

இராமனைப் பிரிந்த அயோத்தி

                கோவலனைப் பிரிந்த பூம்புகார் நகர் துயருற்றதை அவன் நண்பனாகிய கோசிகமாணி காட்டில் சந்தித்துக் கூறும்போது தசரதன் ஆகிய தன் தந்தையின் கட்டளையை ஏற்று அரசாட்சியைத் துச்சமெனக் கருதிக் காட்டிற்கு இராமன் சென்ற போது அயோத்தி மக்கள் துயருற்றது போல உவமைப் படுத்திக் கூறுகிறான். இங்கு திருமாலின் அவதாரமாகிய இராமன் பற்றிய செய்தியைக் காண்கிறோம்.  இராமனை நடையில் நின்றுயர் நாயகன்’,’ஒழுக்க நெறியை நடந்து காட்டிய தலைவன்எனக் கம்பர் தன் இராமகாதையில் அறிமுகப் படுத்துகிறார். 

ஆய்ச்சியர் குரவையில் -

                கோவலன் கொலையுண்ட பின்னர், மதுரை நகரில் தீய நிமித்தங்கள் தோன்ற அங்குள்ள இடையர் சேரி மகளிர் ஆயர்பாடியில் திருமால் ஆடிய பாலசரிதை நாடகத்தை மையமாக வைத்துக் குரவைக் கூத்தாடுகின்றனர்.  அப்பகுதியில் திருமால் பெருமை பேசப் படுகின்றது.  இந்த ஆய்ச்சியர் குரவை என்பது திருமாலின் அவதாரங்களுள் ஒன்றாகிய கிருஷ்ண அவதாரத்தில் கண்ணன் தன் அண்ணன் பலராமனுடன் விளையாடிய பால சரித நாடகமாகும்.

                கண்ணன் வஞ்சத்தால் வந்த பசுவின் கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு விளவின் கனியை உதிர்த்தது, மேருமலையை மத்தாகக் கொண்டு வாசுகி எனும் பாம்பினைக் கயிறாகக் கொண்டு பாற்கடல் கடைந்தது, வஞ்சகத்தால் வந்த குருந்த மரத்தை முறித்து கோபிகாஸ்திரிகளின் புடவைகளை ஒளித்தது, தொழுனையாற்றில் கன்னியர் நெஞ்சம் கவர்ந்தது, நப்பின்னையும் பலராமனும் அருகில் இருக்க நாரதனார் வீணை மீட்டியது, கோகுலத்தில் வெண்ணெய் திருடி உண்டது, அதற்காக யசோதையார் (கண்ணனின் அன்னை) கயிற்றாற் கட்டியது, உலகை வாயால் கண்ணன் உண்டது முதலிய கோகுலக் கண்ணன் விளையாட்டுகள் ஆய்ச்சியர் குரவைப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன

                மேலும் திருமால் வாமனாவதாரத்தில் மூவுலகையும்  ஈரடியால் அளந்தது, இராமாவதாரத்தில் தம்பியோடு கானகம் சென்று இலங்கையை அழித்தது, கிருஷ்ணாவதாரத்தில் கம்சனைக் கொன்றது, பஞ்சபாண்டவர்களுக்காகத் துரியோதனனிடம் தூது சென்றது முதலிய திருமாலின் செய்திகளைக் கூறி, “திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே”, “கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே, கண்ணிமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே”,”நாராயணா என்னாத நாவென்ன நாவோஎன்று திருமால் வழிபாட்டினை அழுத்தமாக வலியுறுத்துகிறது சிலப்பதிகாரம்.

முடிவுரை -

                வைணவ சமய நெறியின் முழுமுதற் பொருளாகிய திருமாலின் சிறப்பினைச் சிலப்பதிகாரம் நாராயணனாகவும், அவதாரமாகவும் காட்டி நிற்கிறது.  நாராயணன் என்பது உலகை ஆக்கலும் அழித்தலும் நிலை பெறுதலுமாகிய  உயர்ந்த நிலை .  அவதாரம் என்பது அல்லலை அழித்து நல்லவை காத்து நம்மிடையே வெளிவந்த நிலை.  இந்த இரண்டு நிலையிலும் திருமாலை வழிபட்டு அருள் பெறுவோமாக.

(சித்தியவான் அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், திருக்குட நன்னீராட்டு விழா மலர். 1.6.2008)

Thinnappan, SP Cilappathikaram kaaTTum Thirumal Perumai ( Lord Vishnu depicted in Silappathikaaram) in Sitiawan Sri Subramaniyar Temple Mahakumbabishekam    Souvenir 1-06-2008,  pp 65-67 

                                                                                                                                                                                                                                                                               







 3  பழந்தமிழ் இலக்கியத்தில் இராமன்

டாக்டர் சுப திண்ணப்பன்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம்


பழந்தமிழ் இலக்கியம் என்பது இங்கு சங்க காலத்தைச் சார்ந்த எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களையும், சங்கம் மருவிய காலத்தைச் சார்ந்த திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களையும் குறிக்கும். இவற்றில் இராமன் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. இவற்றைவிளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்,


புறநானூறு போற்றும் இராமன்


எட்டுத்தொகை நூல்களில் ஒன்று புறநானூறு. இந்நூல் காதல் அல்லாத மற்ற பொருள்கள் பற்றி அதாவது வீரம், கொடை, அறம், சமூகம், போர், முதலிய செய்திகள் பற்றி நானூற பாடல்களைக் கொண்ட நூலாகும். இந்தப் பாடல்களைப் பாடிய புலவர்களில் ஒருவர் பெயர் வான்மீகியார் (பாடல் 353). இப்பெயர் சமஸ்கிருதத்தில் இராமயணமாகிய இதிகாசத்தை இயற்றிய வால்மீகி முனிவரின் பெயரை நினைவுபடுத்துகிறது அல்லவா? எனவே வால்மீகி பற்றியும் அவர் இயற்றிய இராமயணக் கதை பற்றியும் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதை உணரலாம்.


மேலும் புறநானூற்றின் 378ஆம் பாடலில் இராமன் பற்றிய ஒரு குறிப்பு

வருகிறது. கீழே காணுங்கள்


 கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை

 வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை

 நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்

 செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாஅங்கு


இவ்வடிகளில் பேராற்றல் மிக்க இராமனை மணந்த சீதையை இராவணன் விரும்பித் தூக்கிச் சென்ற காலத்தில் நிலத்தில் விழுந்த ஒளி பொருந்திய சீதையின் அணிகளை-நகைகளைக் கண்ட சிவந்த முகத்தினையுடைய குரங்குகளின் செயல்பற்றிய குறிப்பு வருகிறது. இந்த நகைகளை எடுத்த குரங்குகள் விரலில் அணிய வேண்டிய நகைகளைக் காதுகளிலும், காதுகளில் அணிய வேண்டிய நகைகளை விரலிலும் அணிந்து பார்த்து மகிழ்ந்த செய்தியும், அவற்றை எடுத்து முடிச்சாக முடிந்து வைத்த செய்தியும் இங்குக் குறிக்கப்பட்டுள்ளன





 இதனைக் கம்பராமயணத்தில் கம்பன் கிட்கிந்தாகாண்டம் கலம்காண் படலத்தில் சுக்கிரீவன் இராமனிடம் கூறுவதாக வரும் பாடல் அடிகள்

வருமாறு:


 இவ்வழி யான் இயைந்து இருந்தது ஓர் இடை

 வெவ்வழி இராவணன் கொணர மேலை நாள்

 செவ்வழி நோக்கி நின் தேவியே கொலாம்

 கவ்வையின் அரற்றினள், கழிந்த சேண் உளாள்


மழைபொரு கண் இணை வாரியொடு தன்

இழை பொதிந்து இட்டனள், யாங்கள் ஏற்றனம்


இந்தப் புறநானூற்றுப் பாடலில் இராமயணக் கதையின் இன்றியமையாக் கூறுகள் இடம் பெற்றிருப்பதை உணரலாம். இதில் வரும் கடுந்திறல் இராமன் என்னும் தொடர் இராமனின் பேராற்றலைப் புலப்படுத்துகிறது. தாடகையைக் கொன்றது, சிவதனுசு-வில் ஒடித்தது, பரசுராமனை வென்றது, இராவணன், இந்திரசித்து, கும்பகருணன் முதலியோரை வென்றது ஆகியவை இராமனின் பேராற்றலுக்குச் சான்றுகள் ஆகும்.



அகநானூறு புகழும் இராமன்


அகநானூறு என்பதும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று இது காதல்

பற்றிய செய்திகளை நானூறு பாடல்களால் விளக்குகிறது.இந்நூலி எழுபதாவது பாடலில்


முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை

வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த

பல்வீழ் ஆலம்போல


என்னும் அடிகளில் இராமன் பற்றிய குறிப்பு வருகிறது. இங்குக் கடற்கரையில் வெற்றி மிக்க போராற்றல் கொண்ட இராமன் போர் பற்றி ஓர் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து இரகசிய ஆலோசனை செய்யும்போது ஒலி எழுப்பிய பறவைகளின் ஆரவாரத்தை அடக்கிய  செய்தி உள்ளது. இங்கு இராமன் வெல்போர் இராமன் என அழைக்கபடுகிறான் இராமன் எந்தப் போரை மேற்கொண்டாலும் அவனுக்கே வெற்றி கிடைக்கும் என்பதை இராமயணம் படிப்போர் நன்குணர்வர். அவன் அம்பு  என்றும் தோற்றுத் திரும்பியதில்லை வெற்றி வாகை பெற்றே வரும்.  இராமனின் வில்லாற்றலை

இப்பாடலும் விளக்குகிறது.






திருக்குறள் தரும் இராமன்


திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் இராமனைப் பற்றிய குறிப்பு

நேராக எதுவும் இல்லை. ஆனால் திருமாலைத் தாமரைக் கண்ணான் (1103) என்றும் அடியளந்தான்( 610) என்றும் திருவள்ளுவர் இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறார். கம்பராமாயணத்தில் பிறனில் விழையாமைதான் பேரறமாகப் போற்றப் படுகிறது. இராவணன் இராமன் மனைவியாகிய சீதையை விரும்பியதால்தானே அழிந்தான்.

திருவள்ளுவரும் பிறனில் விழையாமை என ஓர் அதிகாரமே எழுதியுள்ளார். அதில் பிறனில் - பிறன் மனைவியை-விரும்புவதால் வரும் கேடுகள் பற்றி விளக்குகிறார்.  பிறன் மனைவியை விரும்புகிறவர்களைப் பேதையர் என்றும் செத்தாரின் வேறல்லரென்றும் அழைக்கிறார். பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு என்றும் கூறுகிறார், இவ்வதிகாரத்தில் உள்ள குறள்களில் இராமன் இராவணன் பற்றிய பெயர்கள் இல்லை என்றாலும் மறைமுகமாக அவர்கள் செயல்கள் குறிக்கப் பெற்றுள்ளதாகக் கருதலாம். இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்று இராமன் சீதையைக் கைப்பிடித்தபோதே சொல்லியதாகக் கம்பன் கூறுகிறான். கம்பன் கண்ட இராமன் ஏக பத்தினி விரதம் கொண்டவன் அல்லவா?


ஈரம் ஆவதும் இற்பிறப்பு ஆவதும்

வீரம் ஆவதும் கல்வியின்மெய்ந்நெறி

வாரம் ஆவதும் மற்று ஒருவன் புணர்

தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கும் அதோ


என்று இராமன் வாலியிடம் கூறுவதையும் காண்க


சிலப்பதிகாரம் செப்பும் இராமன்


சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதற்காப்பியம்; கண்ணகி கதையைக் கூறுவது; இளங்கோ அடிகள் இயற்றியது. இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். இந்நூலில் இராமன் பற்றிய செய்திகள் மூன்று இடங்களில் வருகின்றன.கோவலன் கண்ணகியுடன் சிலம்பை விற்று மறுவாழ்வினைத்

தொடங்க மதுரை செல்கிறான். வழியில் அவனைக்   கௌசிகன் சந்திக்கிறான். அப்போது அவன் கோவலனைப் பிரிந்த புகார்

நகரத்து மக்கள் வருந்திய நிலையைக் கூறுகிறான்.


பெருமகன் ஏவல் அல்லது யாங்கணும்

அரசே தஞ்சம் என்று அருங்கான்  அடைந்த

அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்

பெரும்பெயர் மூதுர் பெரும்பேதுற்றதும்

         ( புறஞ்சேரியிறுத்த காதை 61-65)




என்று கூறுகிறான். பெருமைக்குரிய தயரதன் கட்டளையைத்

தலைமேற்கொண்டு ஏற்று அரசைத் துச்சம் எனக் கருதித் துறந்து

கொடிய காட்டுக்குச் சென்ற அரிய திறனுடைய இராமனைப் பிரிந்து அயோத்தி நகரமக்கள் வருந்தியது போலக் கோவலனைப் பிரிந்த புகார் நகரத்து மக்கள் வருந்தி மயங்கி நின்றார்களாம். இங்கு தயரதனைப் பெருமகன் என்றும் இராமனை அருந்திறல் என்றும்

இளங்கோ அடிகள் போற்றுகின்றார். அருந்திறல் என்பது அரிய பண்புமிக்க இராமனைக் குறிக்கும் இராமனிடமிருந்த அத்தகைய

அரிய பண்பு என்ன? தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் இலக்கணத்திற்கு இலக்கியமாக விளங்கியவன் இராமன். தம்பி பரதன் நாட்டை ஆளவேண்டும் நீ பதிநான்கு ஆண்டுகள் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்று தயரதன் சொன்னதாகக் கைகேயித் தாய் கூறிய போது இராமன் திருமுகச் செவ்வியைக் கம்பன் படம்பிடிக்கும் அழகைப் பாருங்கள்.


இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? யாரும்

செப்பருங்குணத்து இராமன் திருமுகச்செவ்வி நோக்கின்

ஒப்பதே முன்பு, பின்பு அவ்வாசகம் உணரக்கேட்ட

அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா


 இராமன் திருமுகம் அப்பொழுது மலர்ந்த செந்தாமரையினை வென்றது என்று கூறி அதனை விவரிக்க என்னால் இயலாது

என்கிறான் கல்வியிற் பெரிய கம்பன். மேலும் இந்தக் காட்சியை

அசோக வனத்தில் இருந்த சீதை நினைத்துச் சித்திரத்தின் மலர்ந்த செந்தாமரையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதாகவும் காட்டுகிறான். இங்கு  இராமனின் சமநிலை நோக்கு அதாவது தசரதன் அரசை ஏற்கச்

சொன்னபோதும் கைகேயி அதனைத் துறக்கச்சொன்னபோதும்

இருந்த விருப்பு வெறுப்பற்ற நோக்கு நிலை பேசப்படுகிறது. இதனைத் தான் இளங்கோ அடிகள் இராமனின் அருந்திறல் என்று போற்றுகிறார். கம்பனோ யாரும் செப்பருங்குணத்து இராமன் என்று பாராட்டுகிறான். மேலும் இளங்கோ கூறும் பெருமகன் ஏவல்என்னும் தொடருக்கேற்பக் கம்பனும் 'எந்தையே ஏவ நீரே உரை செய்வது உண்டேல்' நான் என்ன பேறு பெற்றேன் என்று இராமன் கைகேயியிடம் கூறுவதாகச் சொல்கிறான். இராமனைப் பிரிந்த அயோத்தி நிலையைக் கம்பன் சொல்வதைப் பாருங்கள்.


கிள்ளையொடு பூவை அழுத; கிளர் மாடத்து

உள் உறையும் பூசை அழுத; உரு அறியாப்

பிள்ளை அழுத; பெரியோரை என் சொல்ல?

வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால்

     ( நகர் நீங்கு படலம் 96)





 கண்ணகி கவுந்திஅடிகள் ஆகியோருடன் கோவலன் மதுரை நகர் நெருங்கியதும், கவுந்தி அடிகளிடம், தான் நன்னெறி பிறழ்ந்து, கண்ணகி பெருந்துயரம் அடைய, முன்பின் அறியாத தேசத்திற்கு வந்து வருத்தமடைய நேரிட்டதைப் பற்றிக் கூறுகிறான். அப்போது அவனுக்கு ஆறுதல் கூறும் கவுந்திஅடிகள்


 தாதை ஏவலின் மாதுடன் போகிக்

 காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்

 வேத முதல்வற் பயந்தோன் என்பது

 நீ அறிதிலையோ? நெடுமொழி அன்றோ?

  (ஊர்காண் காதை 46-49)


என்று இராமன் கதையை எடுத்துரைக்கின்றார். தந்தையின் கட்டளையால் தன் மனைவியுடன் காட்டுக்குச் சென்று அங்கு அம்மனைவி பிரிவதால் பெருந்துன்பம் அடைந்தவன் (இராமன்)

வேதத்தை அருளிய பிரமனைப் பெற்ற திருமால் என்பதை நீ

அறியவில்லையா? அது யாவரும் அறிந்த நெடுங்கதை அல்லவா?

என்று கவுந்திஅடிகள் கோவலனிடம் கூறுகிறார். இங்கு இராமன்

திருமாலின் அவதாரம் என்பதை இளங்கோ அடிகள் தெளிவாகச் சொல்கிறார். மேலும் சீதையுடன் இராமன் காட்டுக்குச் சென்றது பற்றியும் சீதையின் பிரிவால் இராமன் உற்ற பெருந்துயரம் பற்றியும்

கூறுகிறார். இத்துயரைக் கம்பன் அயோமுகிப் படலம், கலம்காண் படலம் ஆகியவற்றில் விரிவாகக் கூறுகிறான்.


கோவலன் கொலையுண்ட பின்னர் ஆய்ச்சியர் சேரியில் தீய சகுனங்கள் தென்படக் கண்ட மாதரி என்னும் இடையர் குல

மூதாட்டி, மற்ற பெண்களை அழைத்துக் கண்ணனை வேண்டும்

ஆய்ச்சியர் குரவைக் கூத்து ஆடச் சொல்கிறாள். அக்கூத்தின் ஒரு பகுதியாக வரும் பாடலில் இராமன் பற்றிய செய்தி வருகிறது.


மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத்

தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து

சோ அரணும் போர் மடியத் தொல் இலங்கை கட்டழித்த

சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே

திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே


என்பதே அந்தப் பாடல்.  மூன்று உலகங்களையும் இரண்டு அடிகளால்

திருவிக்ரம அவதாரத்தில் திருமால் தாவி அளந்தான்.  அத்தகைய அடிகள் சிவக்கும்படி இராமாவதாரத்தில் தம்பியுடன் காட்டுக்குச்

சென்று, சோ என்ற அரணையும் அதில் உள்ளோரையும் போரில்

இறக்குமாறு செய்து, பழைய இலங்கையையும் நிலைகுலையச் செய்ததை இங்கு பார்க்கிறோம். இத்தகைய இராமன் என்ற வீரனின் - சேவகனின் பெருமையைக் கேட்காத காதுகள் பயன் பெறாத

காதுகள் ஆகும். இவன் திருமாலே.  அவன் பெருமையைக் கேட்டுணராத காதுகள் என்ன காதுகள்? மண்ணாலும் மரத்தாலும் கல்லாலும் செய்யப்பட்ட காதுகளா? அல்லது மனிதக் காதுகளா?என்று இளங்கோ கேட்கிறார். இராகவன் புகழ் செவிக்குத் தேன் என்கிறான் கம்பன்.


இராமனை இளங்கோ அடிகள் இங்கு சேவகன் என்று அழைக்கிறார்.

சேவகன் என்பதற்கு வீரன் எனவும் சேவை செய்யும் தொண்டன் எனவும் பொருள் தரலாம். இராமன் அறவோர்க்கும் தன்னைச் சரண் அடைந்தோர்க்கும் தொண்டனாகவும், மறவோர்க்கு மாபெரும் வீரனாகவும் விளங்கியவன் அல்லவா? இலங்கையைக் கட்டழித்தபோது

இராவணனை வென்ற வீரன், வீடணனுக்கு அடைக்கலம் அளித்துதவிய

ஈர நெஞ்சினன் இராமன் என்பதை நாம் அறிவோம்.


முடிவுரை


கடுந்தெறல் இராமன், வெல்போர் இராமன், பிறன் மனை நோக்காப்

பேராண்மையாளன், தந்தைசொல் போற்றிய தனயன், அரசைத் துச்சமெனத் துறந்த அரிய பண்பினன், தம்பியோடும் சீதையோடும் கான் போந்து இலங்கையைக் கட்டழித்தவன், வீரனாகவும் தொண்டனாகவும் விளங்கியவன் இராமன் என்னும் செய்திகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. இச்செய்திகள் கம்பனுக்கு முன்னேயே இருந்த தகவல்கள்

என்பதையும் நாம் உணர வேண்டும். ஒரு வில், ஓர் இல், ஒரு சொல்

-இம்மூன்றுமே இராமன் என்னும் கோட்பாட்டிற்குரிய வித்துக்கும்

பழந்தமிழ் இலக்கியங்களில் இடமுண்டு என்றும் சொல்ல

வாய்ப்புள்ளது.


.... தொடரும் .... 

Dr S.P. Thinnappan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக