வெள்ளி, 2 மே, 2014

சமயம் - சங்கரர் கண்ட சண்மதம் - 1


SPT articles 2 Sankarar Kanda Shanmatam

  1 முன்னுரை

  2  சௌரம் -- சூரிய வழிபாடு

  3 கா(க)ணாபத்தியம். – விநாயகர் வழிபாடு

  4 கௌமாரம்.  முருக வழிபாடு

  5 சைவம். சிவ வழிபாடு

  6 வைணவம். – திருமால் வழிபாடு

                                                    7  சாக்தம்— சக்தி வழிபாடு


சங்கரர்  கண்ட  சண்மதம்

1 முன்னுரை

                சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் என்னும் ஆறு சமயங்களையும் சண்மதம் என்னும் பெயரால் அழைத்தனர்.  மேலும் கபிலர், கணாதர், பதஞ்சலி, அட்சபாதர், வியாசர், ஜைமினி ஆகிய ஆறு மெய்ஞ்ஞானிகள் (முனிவர்கள்) கண்ட மெய்யுணர்வுக் காட்சிகளையும் - தரிசனங்களையும் சண்மதம் என்று பெயரிட்டுக் கூறியுள்ளனர். இந்தத் தொடர் கட்டுரையில் சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் ஆகிய ஆறு சமயங்களைக் குறிக்கும் சண்மதக் கோட்பாட்டினைச் சுருக்கமாக விளக்கும் முயற்சியே  மேற்கொள்ளப்படுகின்றது.

                சைவம் என்பது சிவபெருமானை முதன்மைக் கடவுளாகக் கருதி வழிபடுகின்ற சமயம்.  வைணவம் என்பது திருமாலை (விஷ்ணுவை)த் தலைமைக் கடவுளாகக் கொண்டு வணங்கும் சமயம். சாக்தம் என்பது சக்தி வழிபாட்டிற்கு முதன்மை தருவது.  அதாவது சக்தியை முழுமுதற் கடவுளாக முன்னிறுத்தி வழிபடும் சமயம். காணபத்தியம் என்பது விநாயகரை - கணபதியைத் தலைமைக் கடவுளாக - பரம்பொருளாகக் கருதி வழிபடும் சமயம், கௌமாரம் என்பதோ முருகப் பெருமானை முதன்மைக் கடவுளாகக் கருதி வழிபடும் சமயம், சௌரம் என்பது சூரியனைத் தலைமைக் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம்.  இந்த ஆறுவகைச் சமய வழிபாட்டினை  இந்து சமயத்தில் வகுத்துத் தந்தவர் ஆதிசங்கரர்.

                எட்டாம் நூற்றாண்டில் (கி.பி.788-870) வாழ்ந்த ஆதி சங்கரர் நம் இந்து சமயத்தில் பலவகைச் சீர்திருத்தங்களைச் செய்து இந்தியாவில் பல இடங்களில் மடங்களை நிறுவிப் பரப்பிய சான்றோர். இவர் தென்னிந்திய கேரள மாநிலத்தைச் சார்ந்த காலடி என்னும் சிற்றூரில் நம்பூதிரி மரபில் தோன்றியவர்.

                இளமையிலேயே துறவு பூண்டு அத்வைத தத்துவம் என்னும் வேதாந்த நெறியைக் கண்டறிந்து, பிரம்ம சூத்திரப் பேருரை முதலிய பல நூல் வாயிலாக இந்து சமயத்தின் தத்துவச் சிறப்பையும், தனித்தன்மையையம் நிலைநாட்டிய பெருந் தகையாகிய ஆதிசங்கரர் தம் காலத்தில் ஆங்காங்கே வழங்கிவந்த ஆலய, தெய்வ வழிபாட்டினைச் சீர்திருத்தம் செய்து ஒழுங்கு படுத்தினார்.  அவர் காலத்தில் இந்து சமயத்தில் இருந்த வழிபாடுகளைச் செம்மைப்படுத்திச்  சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் ஆகிய சமய நெறிகளாக ஆக்கினார்.

                எனவே ஆதிசங்கரருக்கு ஷட்மத ஸ்தாபனாசாரியார்அதாவது ஆறு சமயங்களை நிறுவியர்என்னும் பெயரும் உண்டு.  சங்கரர் கண்ட இந்த ஆறு சமயங்களையும் முறையே  சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, சக்தி வழிபாடு, விநாயகர் வழிபாடு, முருக வழிபாடு, சூரிய வழிபாடு என அழைக்கலாம்.  இந்த ஆறுவகைச் சமய நெறிகளின் உள்ளடக்கமே இந்துமதம் ஆகும்.  இங்கு அறுவகைக் கடவுளரின் வழிபாடுகள் தனித் தனியே சமயங்களாகக் கருதப்பட்டாலும் கடவுள் ஒருவரேஎன்ற கோட்பாட்டில் இந்து சமயம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளது. 

                இந்து மதத்தின் ஆணி வேராகக் கருதப்படும் வேதங்களும் உபநிடதங்கும் கடவுள் ஒருவரே என்னும் கருத்தை வலியுறுத்துகின்றன. மேலும் திருமூலரின் திருமந்திரம்  என்னும் தெய்வத் தமிழ் நூல் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லைஎன்று பறை சாற்றுகின்றது. ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாத பரம்பொருள் - கடவுள் - உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவனாகிய  இறைவன் நாம் வழிபாடு செய்வதற்காக வேறு வேறு வடிவங்களைத் தாங்கிச் சிவனாகவும், திருமாலாகவும், சக்தியாகவும், விநாயகராகவும், முருகனாகவும், சூரியனாகவும் வருகின்றான் என்று இந்து சமய நூல்கள் எடுத்தியம்புகின்றன.

                உருவ வழிபாட்டில் முழு நம்பிக்கை கொண்டது இந்து சமயம்.  கடவுளரின் திருவுருவங்களுக்கு ஏற்ப வழபாட்டு நெறிமுறைகளைச் செம்மைப்படுத்திய ஆதிசங்கரர் மேற்கண்ட ஆறுவகைச் சமயங்களை நிறுவி அவற்றிற்குத் தனித்தனிப் பெயரிட்டு அழைத்தார். 

                ஆதிசங்கரர் கண்ட ஆறுவகைச் சமயங்களையும் ஒரு பேரூர்க்குச் செல்லும் ஆறு வழிகள் போலவே நாம் கருத வேண்டும்.  இவற்றுள் ஒன்று சிறந்தது. மற்றது தாழ்ந்தது எனக் கருதி வாதிட்டுக் கொள்வது அறியாமையாகும். இதனைத்

  திருமூலர்                       ஒன்றது பேரூர், வழியாறு அதற்குள்,

                                                 என்றது போல இருமுச் சமயமும்

                                                 நன்றிது  தீதிது என்றுரை யாளர்கள்

                                                 குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே

என்னும் திருமந்திரப் பாடலில் தெளிவுபடுத்துகிறார்.  இவ்வாறே உலகிலுள்ள எல்லாச் சமயங்களும் கடவுள் என்னும் கடலில் கலக்கின்ற நதிகளாக - ஆறுகளாகக் கருதத் தக்கவை என்பதைக் கம்பர் , தாயுமானவர், இராமகிருஷ்ணர், இராமலிங்கர் முதலிய சான்றோர் பெருமக்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.  வேறுபடு சமயங்களெல்லாம் நின்விளை யாட்டல்லால் மாறுபடும் பொருள் ஒன்றில்லைஎன்பது தாயுமானவர் வாக்கு.

                ஆதிசங்கரர் கண்ட இந்த ஆறு சமயங்களும் இந்து மதம் என்னும் பெருமரத்தின் கிளைகள் போன்றவை.  வேதநெறி என்னும் நீர் நிலைக்குரிய துறைகள் போன்றவை, ஒரு குடும்பத்தின் பல்வேறு பிரிவுகளைப் போன்றவை.  இவற்றிடையே இணைப்பையும் ஒற்றுமையையும் காண்பதற்கு நம் புராணக் கதைகள் முயன்றிருக்கின்றன.

                திருமாலின் தங்கை சக்தி என்றும், சக்தியைச் சிவன் மணந்தார் என்றும், விநாயகர் , சிவனுக்கும் சக்திக்கும் மூத்த புதல்வர் என்றும், இவர்களுக்கு இளையமகன் முருகன் என்றும், முருகன் திருமால் மருகன் என்றும் குடும்ப உறவுகளை இந்த ஆறுவகைச் சமய கடவுளரிடம் காட்டி நம் புராணங்கள் பேசுவது இச் சமயங்களிடையே ஒற்றுமையையும், இணைப்பையும் ஏற்படுத்துவதற்கே ஆகும்.  சைவ வைணவ சமரச நிலைக்குச் சங்கர நாராயணர் ஹரிஹர புத்திரராகிய  ஐயப்பன் கதைகளும் உள்ளன.

                இவ்வாறு சைவ, சாக்த சமயங்களை இணைக்க அர்த்த நாரீஸ்வர வடிவம் (பாதி சிவன், பாதி சக்தி) கண்டனர்.  சூரியனையும் திருமாலோடு இணைத்துச் சூரிய நாராயணராகக் கண்டு இருக்கின்றனர்.

                சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம்ஆகிய ஆறு சமயங்களையும் சைவம், வைணவம் என்னும் இரு பிரிவுகளில் அடக்கலாம்.  சாக்தம், கௌமாரம், காணபத்தியம் ஆகியவை சைவ சமயத்தின் சாயல்களே.  சௌரம் வைணவத்தின் ஒரு பிரிவாகவே கருதப் படுகிறது.  சைவம், வைணவம் ஆகிய இரு சமயங்களும் இந்தியா முழுதும் மிகதியாகப் பரவிய சமயங்களாக இருந்தாலும் தென்னாட்டுச் சமயங்களாகவே கருதத் தக்கன.

                தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றிஎன்னும்  திருவாசகத் தொடர் இதற்குச் சான்றாகும்  வைணவமும் இவ்வாறே. முருக வழிபாடு (கௌமாரம்) தமிழர்க்கே உரிய தனிச் சிறப்புடையது.  சங்கப் பாடலான நக்கீரரின் திருமுருகாற்றுப்படை இதற்குச் சான்றாகும்.

                காணபத்தியம் மகாராஷ்டிரத்திலும் (மும்பய்), சாக்தம்  வங்காளத்திலும் (கல்கத்தா பகுதி) இன்று பெருவழக்கில் உள்ளன.  சூரிய வழிபாடு  ஒரிசாவில் உள்ளது. இயற்கை வழிபாட்டின் அறிகுறியாகவும் இது இருக்கிறது.

                நம் சிங்கையில் விநாயகர் , முருகன், சிவன், திருமால், சக்தி ஆகிய கடவுளரை முதன்மையாகக் கொண்டு விளங்கும் கோயில் பல இருப்பதை அறிவோம்.  இக் கோயில்களிலுள்ள நவக்கிரகங்களில்  சூரியன் நடுநாயகமாக இருப்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.   எனவே. நம் சிங்கைக் குடியரசில் ஆதி சங்கரர் கண்ட ஆறுவகைச்சமய - சண்மத - வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன என்று கூறலாம். இவற்றைப் பற்றித் தனித் தனியாக இனிப் பார்க்க முயல்வோம்.                           

      ( சிங்கப்பூர் இந்து,      அக்டோபர்- டிசம்பர்1997 பக்கம் 12-13)

Thinnappan, SP. Cankarar kanda Shanmatham-Arimugam

(Sankara’s philosophy of Six Systems- Introduction) Singapore Hindu, Singapore (1997) Vol 8:4 pp12-13 (2 pages) (Tamil)





சங்கரர் கண்ட சண்மதம்

2  சௌரம் -- சூரிய வழிபாடு

                சங்கரர் கண்ட அறுவகை மதங்களில் சௌரம் என்பது சூரிய வழிபாட்டினைக் குறிக்கும்.  இவ்வுலகில் பேரொளிப் பிழம்பாக விளங்கி உலகப் பொருள்களை எல்லாம் உயிர்களுக்கு விளக்கிக் காட்டும் பெருவிளக்காக இருப்பவன் சூரியன். சூரியன் இல்லாவிடில் உயிர்கள் கண்ணிருந்தும் குருடாகவே காட்சி அளிக்கும்.  இரவில் ஒளி தரும் சந்திரனுக்கும் ஏனைய கோள்களுக்கும்  கூட ஒளி தருபவன் சூரியனே. உலகத்தில் சூரியன் இல்லாவிட்டால் வெளிச்சம் இல்லை, இருளே சூழ்ந்திருக்கும்.  வெப்பத்தை வழங்குபவனும் சூரியனே.  கடல் நீர் மேகமாக மாறி மழை பொழியக் காரணமாக இருப்பவனும் சூரியனே. மழையின்றி மாநிலத்தார் வாழ முடியாது.  விசும்பிலிருந்து மழைத்துளி விழாவிட்டால் பசும்புல் தலை எடுக்க முடியுமா?  சூரியனே நமக்குக் கிடைக்கும் சக்திகளுக்கெல்லலாம் மூல காரணம்.  மக்களுக்கு வேண்டிய ஒளி, உணவு, நீர், வெப்பம் முதலிய உயிர்ப் பொருள்களைத் தந்துதவும் சூரியனைக் கடவுளாகக் கருதிப் போற்றி வணங்குவதே சூரிய வழிபாடு.

                இவ்வழிபாடு பொதுவாக உலகநாடுகள் பலவற்றில் மிகப் பழங்காலந் தொட்டே இருந்து வந்திருக்கிறது.  பழங்கால எகிப்தியர்கள் ரா அல்லது ஆதன் என்னும் பெயரால் ஆதவனாகிய சூரியனை வணங்கினர்.  கிரீஸ் நாட்டில் அப்பலோ என்னும் பெயரில் வணங்கினர்.  மெக்சிகோ, பழங்குடிகளான மாயர்கள் உதய சூரியனுக்கு நரபலியிட்டு வழிபட்டனர்.

                இந்தியர்களின் சூரிய வழிபாடு பற்றிச் சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களும், இதிகாசங்களும், புராணங்களும் விரிவாகப் பேசுகின்றன.  வேதங்களில் பழமையான ரிக் வேதத்திலேயே சூரிய வழிபாடு பற்றிய குறிப்புள்ளது.  இராமன் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவன்.  அவன் இராவணனை வெல்வதற்கு வேண்டிய மனோபலத்தை ஆதித்ய இருதயம் என்னும் தோத்திரத்தைக் கூறிச் சூரியனை வழிபட்டுப் பெற்றதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது. மகாபாரதத்தில் வரும் தருமன் சூரியனை வணங்கி அட்சய பாத்திரம் பெற்றான்.  பகவத் கீதையில் கண்ணன் பன்னிரு ஆதித்யர்களில் நானே சிறந்தவன். நானே சூரியன் என்கிறான். ஆதித்யன் என்பது சூரியனுக்குரிய பெயர்களில் ஒன்று.  பாகவதம், மார்க்கண்டேய புராணம், பிரம்ம புராணம் முதலிய நூல்களும் சூரியன்  பெருமையைப் பேசுகின்றன.  சூரியனுக்குரியது காயத்ரி மந்திரம்.

                சூரிய வழிபாடு பற்றிப் பழந்தமிழ் இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை , புறநானூறு, சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் வாயிலாக அறியலாம்.  திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரர் உலகம் உவப்பப் பலர்புகழ் ஞாயிறு என்று கூறித் தம் நூலைத் தொடங்குகிறார்.  சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்று நூலின் தொடக்கத்திலேயே சூரியனை வாழ்த்துகின்றார். மேலும் சோழர் தலைநகரமாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம் அதாவது சூரியனுக்குரிய கோயில் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.  இருபதாம் நூற்றாண்டுப் பெருங் கவிஞரான பாரதியார் சூரியனை நோக்கி நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கு, நீ காட்சி, மின்னல், ரத்தினம், கனல், தீக்கொழுந்து என்று பாடுகிறார்.

                சூரியனுக்கு இந்தியாவில் நான்கு திசைகளிலும் கோயில்கள் உள்ளன.  தெற்கே சூரியனார் கோயில் (தமிழ்நாடு), வடக்கே காஷ்மீர் மார்த்தாண்டர் கோயில், பரோடா ஜோதிபுரி ஒசியா, சிராநோ, உதயபுரி, மேற்கே குஜராத்தில் மோறேரா, கிழக்கே ஒரிஸாவிலுள்ள கோனாரக் ஆகிய இடங்களில் உள்ளன.  சிவன் கோயில்களில் சூரியனுக்கென்று தனிச் சன்னதிகளும் உள்ளன.

                நவக்கிரகங்களாகிய ஒன்பது கோள்களில் நடுநாயகமாகத் திகழ்பவன் சூரியன். சூரியனைச் சுற்றித் தானே ஏனைய கோள்கள் இயங்குகின்றன.  இதனை விளக்கவே சூரியனை நவக்கிரகத்தில் நடுவில் வைத்துள்ளனர்.  இராசேந்திர சோழன் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் ஏழு குதிரைகளால் இழுக்கபபட்ட ரதத்தின் அருகில் அருணன் தேரோட்டத் தாமரை வடிவில் அமைந்துள்ள ஒரே வட்டக் கல்லில் சூரியனைச் சுற்றிலும் எட்டுக் கிரகங்கள் கொண்ட சிற்பம் ஒன்றுள்ளது. ஏழு குதிரைகள் என்பது சூரியனின் கதிரில் கலந்து காணப்படும் ஏழு வண்ணத்திற்குரிய வடிவமாகக் கருதலாம் அல்லவா?

                ஆக்கல், காத்தல், அழித்தல் என்கிற முப்பெருந் தொழிலைச் செய்யும் முழுமுதற் பேரருளாக இவ்வழிபாட்டினர் சூரியனைக் கருதுகின்றனர். சூரியன்  முன் சூரியகாந்தக்கல் நெருப்பை உண்டாக்குகிறது. இது படைத்தல் தொழிலைக் குறிக்கிறது.  சூரியனைக் கண்டு தாமரை மலர்கிறது.  இது காத்தல் தொழில். நீரிலிருந்து தாமரைச் செடியைப் பிடுங்கி எறிந்தால் அதுதன்னை மலர்வித்த சூரியனாலேயே எரிக்கப் படுகிறது. இது அழித்தல்.

                சூரியனை மையமாக வைத்துக் காலக்கணக்கும் செய்யப் படுகிறது.  சோதிடக் கலைக்கு மையமாக இருப்பவனும் சூரியனே.  சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும்போது மாதம் பிறக்கிறது.  தை மாதத்தில் சூரியன் திசை மாறும்போது பொங்கலிட்டுத் தமிழர்கள் சூரியனை வழிபாடு செய்கிறார்கள்.  இவ்வழிபாட்டில்  தமிழர்கள் தங்கள் வாழ்வுக்கு வழி வகுத்த சூரியனுக்குப் படையலிட்டு நன்றிக்கடன் செலுத்துகின்றனர்.

                கதிரவனின் ஒளிக் கதிரில் பலவித சக்திகள் உள்ளன, என்று விஞ்ஞானம் உரைக்கும்.  இந்த உண்மையை விளக்கப் பல புராணக் கதைகள் உள்ளன.  காஞ்சியில் மயூரன்  என்னும் கவிஞன் சூரியனை வழிபட்டுக் கண்பார்வை பெற்றுச் சூரிய சதகம் பாடினான் என்பது ஒரு வரலாறு.  சாம்பவன் என்பவன் சூரியன் அருளால் குட்ட நோய் நீங்கினான்.  பிருகு மகரிஷியின் மைந்தன் சூரியன் அருளால் இளமைக் கோலம் பெற்றான். இவை புராணச் செய்திகள்.

                சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான திகழும்போது சிவசூரியனாகவும், விஷ்ணு திகழும்போது சூரிய நாராயணனாகவும் அழைக்கப் படுகிறான்.  இக்கருத்து சூரிய வழிபாட்டினைச் சைவ வைணவச் சமயங்களுடன் இணைத்துப் போற்றுவதைக் காட்டுகிறது.

                                                                                                                               

( சிங்கப்பூர் இந்து, 10:2           ஏப்பிரல்-ஜூன்1999 பக்கம் 8-9)

Thinnappan, SP. Cankarar kanda Shanmatham-Sauram

(Sankara’s philosophy of Six Systems-Worship of Sun) Singapore Hindu, Singapore (1999) Vol 10:2 pp8-9 (2 pages) (Tamil)



      சங்கரர் கண்ட  சண்மதம்

3  கா(க)ணாபத்தியம். – விநாயகர் வழிபாடு

                சங்கரர் கண்ட சண்மதங்களில் விநாயகர் எனப்படும் கணபதியை முதன்மைக் கடவுளாகக் கருதி வழிபடும் மதமே கா(க)ணாபத்தியம்.  விநாயகர் எனும் சொல் தனக்கு மேல் தலைவர் இல்லாதவர் எனவும், கணபதி என்னும் சொல் வேத பூத கூட்டங்களுக்கெல்லாம் தலைவர் எனவும் பொருள் தரும்:,  வேதங்களில் மிகப் பழமையான ரிக் வேதத்தில் கணபதியைப் பற்றிய குறிப்புள்ளது.  எனவே கணபதி வழிபாடு காலத்தால் தொன்மையானது.

                கணபதி வழிபாடு பற்றிச் சமஸ்கிருதத்தில்  கணபதி உபநிடதம், ஹேரம்ப உபநிடதம், கணேச புராணம், கணேச கீதை முதலிய நூல்களும், தமிழில் விநாயக புராணமும் பேசுகின்றன.  ஆதி சங்கரர் கணேச புஜங்கம், கணேச பஞ்சரத்தினம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.  சைவ  சமயத் திருமுறைகளிலும் விநாயகர் பற்றிய செய்திகள் உள்ளன. மகாபாரதத்தை எழுதியவரும், திருமுறைத் தொகுப்புக்குக் காரணமாக இருந்தவரும் விநாயகர் எனக் கருதுவர்.

                கணபதி வழிபாடு இந்தியாவில் மட்டுமன்றி நேபாளம், திபெத்து, பர்மா, சயாம், இந்தோ சீனா, ஜாவா, பாலி, போர்னியோ, ஜப்பான், கொரியா முதலிய நாடுகளிலும் விளங்குகிறது. இந்தியாவில் மஹாராட்டிர மாநிலத்தில் முதன்மை பெற்று விள்ங்குகிறது.  இந்துக்கள் மட்டுமன்றிச் சமண, பௌத்த மதத்தினரும் விநாயகரைப் போற்றுகின்றனர்.

                காணாபத்திய நெறியினர் காண்பதர் என அழைக்கப் படுவர்.  இவர்கள் கணபதி மூலாதார சக்தி வடிவினர் என்றும், பிரணவம் என்கிற ஓங்கார வடிவினர்  என்றும் கூறுவர். கணபதி என்னும் பெயருக்கும் அவருடைய உறுப்புகளுக்கும் தத்துவ விளக்கம் தருவர்.  கணபதி எனும் சொல்லில் உள்ள என்பது மனம், வாக்கு என்றும்,  என்பது அவற்றைக் கடந்தவர் என்றும் பொருள் கூறி, அவ்விரண்டுக்கும் ஈசனே கணேசன் என்பர்.  சிலர் என்பது அறிவு,  என்பது முக்தி என்று கொண்டு கணேசன் அறிவுக்கும் முக்திக்குமுரிய தெய்வம் என்பர்.  அறிவு - ஞான வழிபாடே கணேச வழிபாடு. விநாயகரின் பெருவயிறு அறிவுக்குப் புலனாகும் பிரபஞ்ச முழுவதையும் அவர் அடக்கி இருக்கும் நிலையைக் காட்டும்.  அவரின் வாகனமாகிய பெருச்சாளி நமக்குள் இருக்கும் உலகப பற்று என்றும், அவர் உண்ணும் மோதகம் இன்பத்தைத் தரும் ஞானம் என்றும் விளக்குவர்.  விநாயகரின் பாசக்கயிறு ஏந்திய கை படைத்தலையும், அங்குசம் ஏந்திய கை அழித்தலையும், ஒற்றைக் கொம்பேந்திய கை காத்தலையம், துதிக்கை மறைத்தலையும் , மோதகம் வைத்துள்ள கை அருளுதலையும் குறிக்கும்,  ஆண், பெண், உயர்திணை, அஃறிணை, தேவர், பூதர், விலங்கு என்று பல்வேறாகப் பிரித்துக் கூறும் பொருள்கள் எல்லாமாக இருப்பவர் விநாயகர்.  அவர் கயமுகாசுரனை அழித்ததாகக் கூறுவர்.

                கணபதி பிரமசாரி என்று பொதுவாகக் கூறிடினும்  அவர் மடிமேல் சக்தியை வைத்துக் கொண்டு வல்லப கணபதியாக இருக்கிறார் எனக் கருதுவதே காணாபத்திய நெறி. அறிவும் ஆற்றலும் ஒருவருக்குத் தேவை என்பதை உணர்த்துவதே வல்லப கணபதி வழிபாடாகும்.  இடையூறு நீக்கும்  இறைவனாகவும் எண்ணி இந்துக்கள் முதலில் விநாயகரை வணங்குகின்றனர்.  ஆவணி மாதத்தில் விநாயக சதுரத்தி விழாக் கொண்டாடப்படும்.

                விநாயகர் சிவன் சக்தியின் மூத்த மகன்.  முருகனின் அண்ணன், திருமால் மருகன் எனக்கூறி ஏனைய சண்மதங்களுடன் கணபதி வழிபாட்டினை இணைத்துக் காண்பர்.  எனினும் இன்று காணாபத்தியம் சைவ சமயச் சார்படைய மதமாகவே விளங்குகிறது.  சிங்கப்பூரில் எல்லாக் கோயில்களிலும் விநாயக வழிபாடு உள்ளது.  எனினும் காத்தோங் செண்பக விநாயகர் கோயிலும் சைனா டவுன் லைன் சித்தி விநாயகர் கோயிலும் கணபதி வழிபாட்டிற்கு முதன்மை தரும் கோயில்களாகும்.



                                                கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

                                                 கணபதி என்றிடக் காலனும்  கைதொழும்

                                                 கணபதி என்றிடக் கருமம் ஆதலால்                                              

                                                 கணபதி என்றிடக் கவலை தீருமே


( சிங்கப்பூர் இந்து,)

Thinnappan, SP. Cankarar kanda Shanmatham-Ganapathyam
(Sankara’s philosophy of Six Systems-Worship of Ganapathy) Singapore Hindu, Singapore (1999) Vol 10:3 pp 8 (1 pages) (Tamil)



.... தொடரும் .... 

Dr S.P. Thinnappan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக