வியாழன், 1 மே, 2014

அணிந்துரை - 2



5. தேசிய கல்விக் கழகம் சிறப்புப் பயிற்சித் திட்டம்

(தாய் மொழி) மாணவர்கள்

கதை அரும்பு

12. 6. 1999


இலக்கியக் கல்வியில் படித்தல், பாராட்டுதல், பகுத்தாராய்தல்,படைத்தல் என நான்கு படிக்கட்டுகள் உள்ளன. படிப்பவர்க்குத் தீங்கரும்பாக இருந்து இன்பம் தருவது இலக்கியம் ‘‘நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு’’ என்னும் குறள் பாராட்டுவதன் பயனை வலியுறுத்தும். ‘‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’’ என்னும் குறள் பகுத்தாராய்தலின் பண்பை உணர்த்தும். ‘‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’’ என்னும் திருமந்திர நூலின் வரிகள் படைப்பின் பரந்த நோக்கத்தைப் பகரும். இத்தகைய இலக்கியக் கல்வியின் இறுதிக் கட்டமான படைத்தலின் இன்றியமையாமையை உணர்ந்து கற்பித்ததன் பயனாக அமைந்து நம் கண்முன்னே திகழ்வது தான் சிறுகதைக் கனிகள்என்னும் இத்தொகுப்பு நூலாகும்.


சிங்கப்பூர் உயர்நிலைப்பள்ளி இறுதி வகுப்பு முடித்துத் தமிழாசிரியர் பணியை மேற்கொள்ள விரும்பி முதனிலை ஈராண்டுகளில் நம் தேசிய கல்விக் கழகத்தில் பயின்ற, பயிலும் மாணவர்களுக்கு இலக்கியப் படைப்புப் பயிற்சி கற்பிக்கப்பட்டதன் விளைவாக எழுந்த முதல் முயற்சியே இந்த நூல். தமிழாசிரிய மாணவர்கள் தம் கற்பனைத் திறம்கொண்டு எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் முயற்சி மேற்கொண்ட தமிழாசிரியர் திருவாளர் இராஜிக்கண்ணு அவர்களின் பணி பாராட்டுக்குரியது. இதனால் விளையும் பயன் இரண்டு.ஒன்று , படைப்பிலக்கியம் படைக்கத் தமிழாசிரியர்களைத் தூண்டி ஊக்கப்படுத்துவது.மற்றொன்று சிங்கப்பூர்த் தமிழ்ப் படைப்பிலக்கியத்திற்குச் சிறிதளவாவது ஆக்கம் தருவது.


படைப்ப இலக்கியத்தில் ‘‘சிறுகதை என்பது யாரும் சுலபமாகப் புரிந்து கொள்ளக்கூடிய வடிவம். அதில் சிக்கல்களும், குழப்பங்களும், இருக்க முடியாது. அதன் இலக்கு நோக்கிச் செல்வதொன்றே சிறுகதையின் இலக்கணம். சுருங்கச் சொல்லிச் சுருக்கென உணர்த்து மாட்சி சிறுகதைக்கே உரித்தான மாட்சி’’ என்கிறார். கோமகள் என்னும் சிறுகதை ஆசிரியர். எனினும் சிறுகதை எழுதுவது விளையாயட்டல்ல. சிறுகதை எழுத விரும்புவர்களுக்குப் பிரபலச் சிறுகதை எழுத்தாளர் லா. .இராமாமிர்தம் ‘‘சிறுகதையோ நெடுங்கதையோ எழுத ஆரம்பித்துவிடு. விஷயம் பிறகு தன் வெளிப்பாட்டுக்குத் தன் வழியை எப்படியேனும் பார்த்துக்கொள்ளும். தண்ணீரில் முதலில் விழுந்தால்தான் குளிப்பதோ, மூழ்கிப் போவதோ. நீச்சல் அடிப்பதோ அமையும்என்று ஆலோசனை கூறுகிறார். எனவே இவ்வாறு எழுத ஆரம்பித்தவர்களின் படைப்புகளே இந்நூலில் காணும் சிறுகதைகள் என்பதை யாரும் மறக்கக்கூடாது. எனினும் இவர்களைப் பாராட்டி ஊக்கமூட்டித் தமிழ் இலக்கியப் படைப்பு தழைக்கச் செய்வதிலும் தவறக்கூடாது. இதனைச் சிங்கைத் தமிழுலகம் செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.


இந்நூலில் சிறுகதைகள் எழுதிய தமிழாசிரிய மாணவர்கள் சிறுகதைகளைப் படைப்பதில் சிறந்து நிற்க இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதல் முயற்சியாகச் சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் பலவற்றை ஆழ்ந்து படிக்க வேண்டும். அவை தரும் சுவைகளை அறிந்து உணர்ந்து அனுபவித்துப் பாராட்டத் தெரிந்து கொள்ளவேண்டும். பிறகு அவர்களின் படைப்புகளை ஒப்பிட்டு நோக்கியும் கூறுகளைப் பகுத்துப் பார்த்தும் குறைநிறைகளைக் கண்டறியும் திறனாய்வுத் திறம் பெற வேண்டும். பிறகு படைக்க முயலும் இவர்களின் படைப்புகள் காலம் கடந்து நிற்கும் படைப்புகளாகச் சிறந்து விளங்கும்.


இன்று சிங்கப்பூர்க் கல்வித்திட்டத்தில் வலியுறுத்தப்பெறும் பகுப்பாய்வுச் சிந்தனைத் திறனும் , படைப்பாற்றல் சிந்தனைத் திறனும் மாணவர்களிடம் வளர வழிவகுக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடமே மிகுதியாகவுள்ளது. எனவே இத்தகைய சிறுகதைகளை எழுதும் ஆசிரியர்கள் இப்பொறுப்பினை நிறைவேற்ற ஓரளவு தயாராகின்றார்கள் என்றே கூறவேண்டும்.அதன் அடையாளத்தை இத்தொகுப்பு நூலில் காணலாம்.


கதை கேட்கும் ஆர்வம் குழந்தைகளிடம் அதிகம். எனவேதான் நம் பாட்டிமார்கள் கதைகளைக் கூறி நம் குழந்தைகளிடம் நற்பண்புகளை வளர்த்தார்கள். குழந்தைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் தான் கதையில் நாட்டமுடையவர்களாக உள்ளனர். எனவேதான் நம் சமயச் சான்றோர்களும் சிறுகதைகளின் வாயிலாகவே சிறந்த தத்துவங்களை விளக்க முயன்றார்கள். பஞ்சதந்திரக் கதைகள், புத்த ஜாதகக் கதைகள், பகவான் ராமகிருஷ்ணரின் கதைகள், ஏசுநாதரின் நீதி போதனைக் கதைகள் எல்லாமே கதைகளின் வாயிலாக உயர்ந்த உண்மைகளை உரைக்க உருவாக்கப்பட்டவைகளே. கல்வி கற்கவரும் குழந்தைகளிடம் கதை வாயிலாகச் சொல்லப்படும் கருத்துகள் தேனில் குழைத்த மருந்தென அமைந்து அவர்களின் அறிவுக்குத் தெம்புட்டும் . எனவே தமிழ் ஆசிரியர்களுக்குக் கதைகளைப் படைத்துக் கூறும் ஆற்றல் கைவந்த கலையாக அமைந்துவிட்டால் தமிழை எளிமையாகவும், இனிமையாகவும் கற்பிக்க வழி ஏற்படும். அதனால் மாணவர்களுக்குத் தமிழ் கற்பது சுவையாகத் தோன்றும். சுமையாக இருக்காது. இதன் விளைவாகத் தமிழ்மொழி நம் சிங்கைக் குடியரசில் என்றும் வாழும் மொழியாக நின்று இலங்கும். எனவே இத்தொகுப்பு நூலைத் தமிழ்மக்கள் வாங்கிப் படித்துத் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் ஊக்கமும் ஆக்கமும் ஊட்ட வேண்டுகிறேன்.

இத்தொகுப்பு நூலின் சிறுகதை எழுதிய தமிழ் ஆசிரிய மாணவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்



வி. ஆர். பி மாணிக்கம்

புனிதப்பயணம்

2000


பயணங்களை மேற்கொள்ளும் பண்பும், அப்பயண அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆற்றலும் மனிதனுக்கு மட்டுமே உரியவை. இத்தகைய மனிதன் மேற்கொள்ளும் பயணங்களோ பலவகை. அவற்றுள் ஒன்றே புனிதப் பயணம்.இத்தொடர் புனிதனை நோக்கிச் செல்லும் பயணம் என்றும் , புனிதப்படுத்தும் பயணம் என்றும் இருவகைப்பொருள் தரும். புனிதம் என்னும் சொல் தூய்மையை உணர்த்தும். ‘‘புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப்படும்’’ என்னும் வள்ளுவர் குறளுக்கேற்ப வாய்மையாக உண்மையாக விளங்கும்-என்றும் உள்பொருளாக இலங்கும்-பொருள் இறைவன் ஒருவனே . எனவேதான் இறைவனைப் புனிதன் என்றே அழைக்கின்றனர் நம் அடியவர்கள். இறைவனை நோக்கிச் செல்லும் பயணமே புனிதப் பயணம். அவன் அருள் என்னும் நீரே நம் அகத்தையும் புறத்தையும் ஒருங்கே தூய்மைப்படுத்தும், புனிதப்படுத்தும்.எனவே தான் தீர்த்தம் என்று அழைத்தனர். இறைவன் குறைவிலா நிறைவுடையன். ஆதலால் இப்புனிதப் பயணம் மனக்கவலை தீர்க்கும் மாமருந்து, பிறவிக் கடலைக் கடக்க உதவும் தோணி. முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் ஏணி. எனவேதான் திருநாவுக்கரசர் உலகத்தவரை நோக்கி,


மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன்

கனிதந்தால் கனி உண்ணவும் வல்லீரே

புனிதன் பொற்கழல் ஈசன்எனும் கனி

இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே’’


என்று புனிதப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைக்கிறார். புனிதனாகிய ஈசன் எனும் கனியைப் பெற நாம் மேற்கொள்ளும் பயணமே புனிதப் பயணம்.


வாழ்க்கைப் பாதையில் அலைபாயும் மனத்தால் அவதிப்படடுப் பலவகைப் பயணங்கள் மேற்கொண்டு திசை மாறிச் செல்லும் மனிதனைப் புனிதப்பயணத்தின்பால் திருப்பி ஆற்றுப்படுத்தும் ஆற்றலும் ஆண்டவனுக்கே உண்டு. இதனைத்தான்‘‘அவன் அருளாலே அவன் தாள் வணங்குதல்’’ என அழைக்கிறார் மாணிக்கவாசகர். இவ்வாறு ஆற்றுப்படுத்துதலைத் தடுத்தாட்கொள்ளுதல் என்றும் கூறுவர் ஆன்றோர்,இறைவன் மனிதனைத் தடுத்தாட்கொள்ளும் வழிகள் பல திறப்பட்டன. அவற்றிற்கு அளவில்லை என்பதைத் திருஞானசம்பந்தர் ‘‘ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான் புகில் அளவில், கிளக்க வேண்டா’’என்று கூறுகிறார்.


திருஞானசம்பந்தர்க்கு இறைவன் பாலைக் கொடுத்து ஆட்கொண்டான். திருநாவுக்கரசர்க்குச் சூலை நோயைக் கொடுத்து ஆட்கொண்டான். சுந்தரர்க்கு ஓலை காட்டித் தடுத்தாண்டான். மாணிக்கவாசகர்க்குக் காலைக் காட்ழ ஆட்கொண்டான். இந்த அடியார்களை ஆட்கொண்ட விதங்களை அவர்கள் வாக்காலேயே அறியலாம். ‘‘போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத் தாதையார் முனிவுறத் தான் எனை ஆண்டவன்’’ என்று திருஞானசம்பந்தரும், ‘‘சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே’’ என்று திருநாவுக்கரசரும், ‘‘ஓர் ஆவணத்தால் வெண்ணெய்நல்லூரில் வைத்தென்னை ஆளுங்கொண்டார்’’ என்று சுந்தரரும் ‘‘நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி’’ என்று மணிவாசகரும் தங்களைத் தடுத்தாட் கொண்ட வகை பற்றிக் கூறுவதைக் காணலாம். இவர்கள் மேற்கொண்ட பயணங்கள அனைத்தும் புனிதப் பயணங்களே. இவை ஏழாம், எட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த பயணங்கள்.


அடியார்கள் வாழ்வில் மட்டுமன்று. சாதாரண மக்கள் வாழ்விலும் இறைவன் பலரைத தடுத்தாட்கொண்டு புனிதப் பயணத்தின்பால் திருப்புவதை இன்றும் காணலாம் என்பதற்குத் திருவாளர் மாணிக்கம் எழுதிய புனிதப் பயணம் என்னும் இந்நூல் சான்று ஆகவுள்ளது.நாத்திக நெறியில் சென்ற நூலாசிரியரை இறைவன் விநாயகராக, முருகனாக , பதினெட்டாம் படிக்கருப்பராக , இராக்காச்சி அம்மனாகப் பல்வேறு வடிவங்களில் தோன்றி அற்புதங்கள் நிகழ்த்தி ,அவ்வப் போது தடுத்தாட்கொண்ட நிகழ்ச்சிகள் பல இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இடுப்பு வலியைக் கொடுத்து இறையருள் இவரைத் தன்பால் ஈர்த்தவிதம் விந்தைக்குரிய ஒன்று . இவர் வீட்டுப் பரணில் என்றோ மறைத்து வைக்கப்பட்ட இராக்காச்சியம்மன் சிலை வெளிப்பட்டு இவர் கிராமத்தில் கோயில் கொண்ட வரலாறு , இறைவனின் அற்புதங்கள் இன்றும் நிகழும் என்றும் நிகழும் என்பதை எடுத்துக்காட்டுக்கின்றன. மருத்துவரால் கைவிடப்பட்ட இவரின் முதுகுவலி இறையருளால் குணம் பெற்ற செய்தியை நாம் படிக்கும் போது மெய்சிலிர்க்கிறோம். ‘‘மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் தீரா நோய்தீர்த்தருளவல்லான்’’ இறைவன் என்னும் திருமுறை வாக்கு ஒருபோதும் பொய்க்காது என்று துணிகிறோம்.


நூலாசிரியராகிய மாணிக்கம் தம் வாழ்வில் மட்டுமன்றித் தம் மனைவி, மகள் வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் இறையருள் நடத்திய அற்புதங்களைச் சுட்டிக் காட்டியுள்ளார். இராக்காச்சி அம்மன் கோயில் திருப்பணி அலுவல்களில் இவர் ஈடுபட்டபோது இடையிடையே தோன்றிய இடையூறுகளும் அவை தீர்க்கப்பட்ட விதமும் இந்நூலில் நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் படிக்கும்போது உள்ளம் நெகிழ்கின்றது. குடமுழுக்கு விழாவிலும் அதற்குப் பின்னரும் பலப்பல அற்புதங்கள் நிகழ்ந்ததையும் ஆசிரியர் படம் பிடித்துக் காட்டுகிறார். இறுதியில் முருகப்பெருமான் அருட்காட்சியுடன் இந்நூல் முடிந்தாலும் இந்நூலின் இறுதியல் ஆசிரியர் ‘‘நான் ஆத்திக திசைக்குத் திருப்பப்பட்டேன். அதுதான் இறைவனின் சங்கல்பம் என்று எண்ணுகிறேன். ஓர் ஆத்மாவின் புனிதப்பயணம் தொடர்கிறது’’ என்று கூறி அனுபவம் அன்று. எல்லார் வாழ்விலும் ஏற்படக்கூடிய ஒன்று என்று அவரவர் வாழ்வில் ஏற்பட்ட இறையருள் நிகழ்ச்சிகளை எண்ணத் தூண்டுகிறது இந்நூல். எண்ணத்தைத் தூண்டுவது தானே நன்னூல். இந்நூல் எண்ணத்தைத் தூண்டுவதுடன் இறைவனை வேண்டவும் வைக்கிறது.


‘‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்மாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுராகி முனிவராய்த் தேவாராய்ச்

செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்’’


என்ற மாணிக்கவாசகர் கூறும் ஓர் ஆத்மாவின் புனிதப் பயணத்தை நினைவூட்ட உதவும் நல்ல நூல் ஒன்றினை எழுதிய திரு வி. ஆர். வி மாணிக்கம் அவர்களைப் பாராட்டுகிறேன். அவர் 15 ஆண்டுகளில் மேற்கொண்ட புனிதப்பயணம் அவரைப் புனிதப்படுத்தி ஆண்டவனாகிய புனிதனை நோக்கிச் செலுத்தியதைக் கண்டு போற்றி மகிழ்வோம்.புனிதப் பயணம் மேற்கொள்வதே மனிதப் பிறவியின் நோக்கம் என்பதை மிதித்து வாழ முற்படுவோம்.


மு. தங்கராசன்

இன்பத்திருநாடு

2010


நாற்பொருள் விரிக்கும் நன்னூல்


சிங்கப்பூரின் மூத்த தமிழாசிரியரும், படைப்பிலக்கியம் படைத்தவருமான திரு.மு. தங்கராசன் அவர்களின் கவிதைத் தொகுப்பான இன்பத்திருநாடு என்னும் நூலைப் படித்தேன். படித்தேன் என இனித்தது. இந்நூல் தமிழ்கூறும் நல்லுலகில் சிங்கப்பூருக்குள்ள தனித்தன்மைகளை நன்கு விளக்குகிறது.


உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு.


என்னும் வள்ளுவரின் தெள்ளுதமிழ் வாக்கிற்கேற்ப இப்வையகத்தில் இலங்கும் சிங்கப்பூரை, இன்பத் திருநாடு எனக் கவிஞர் அழைத்திருப்பது எண்ணி எண்ணி மகிழ்தற்குரியது.


இன்ப நாட்டம் என்பது உலகிலுள்ள ஓரறிவுயிர் முதல் எல்லா வுயிர்க்கும் பொதுவான ஒன்று. இதனை ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே


எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான் அமர்நது வரூஉம் மேவற்றாகும்(1168)


என்று கூறுகிறது. இன்பம் என்பது எல்லா உயிரினங்களுக்கும் தாமாக இயல்பாக விருப்பத்துடன் பொருந்தி வருவதாகும் என்பது இந்நூற்பாவின் கருத்தாகும்.


ஒரு நாட்டிற்கு அணிகலனாக அழகாக விளங்கும் ஐந்தினுள் ஒன்றாக இன்பத்தைச் சுட்டிக் காட்டுகிறார் திருவள்ளுவர்.


பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்

அணியென்ப நாட்டிற்குஇவ் வைந்து(738)


என்னும் திருக்குறளில் இடம் பெறும் ஐந்து அணிகளில் செல்வமும் இன்பமும் ஆகிய இரண்டும் இன்பத் திருநாடு என்னும் தலைப்பில் இடம் பெறக் கண்டு மகிழலாம். திரு என்பது செல்வம் தானே!


இந்தத் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர். இன்பம், விளைவு,வேள்வியும் சான்றோரும் உடைமையானும் நுகர்வன உடைமையானும் நிலம் நீர்களது தன்மையானும் வாழ்வார்க்கு உள் நிகழ்வது என்று விளக்கம் தருகிறார். இந்த விளக்கத்திற்கு எடுத்துக்காட்டு நாடாக இலங்குவது சிங்கப்பூராகும் என்பதை இந்தக் கவிதை நூல் நன்கு பேசுகிறது.திரு என்னும் சொல்லுக்குச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரகராதி,இலக்குமி, செல்வம், சிறப்பு,அழகு, காந்தி(காந்தத்தன்மை) , பொலிவு, பாக்கியம் , தெய்வத்தன்மை,நல்வினை , மாங்கலியம், பழைய தலையணை வகை, வீற்றுத் தெய்வம், சோதிடன் ஆகிய பதின்மூன்று பொருள்களைத் தருகிறது. இவற்றுள் பத்துப்பொருள்கள் சிங்கப்பூர்த் திரு நாட்டுக்குப் பொருந்தி வரும் சிறப்புகளாகும் என்பதையும் இக்கவிதை நூலைப் படிப்போர் அறியமுடியும் . எல்லாவற்றிற்கும் மேலாகப் பேராசிரியர் என்னும் உரையாசிரியர் திருக்கோவையார் என்னும் நூலுக்கு உரை எழுதும்போது, திரு என்பதற்குக் கண்டாரால் விரும்பப்படும் தெய்வத்தன்மை எனக் கூறுகிறார். வந்து பார்ப்பவர் மனதைத் தன் வனப்பாலும் வளத்தாலும் வசப்படுத்தும் பாங்கினது சிங்கப்பூர் என்பதையும் இக்கவிதைத் தொகுப்பினைப் படிப்போர் எளிதில் உணர்வர்.


அறம், பொருள்,இன்பம், வீடு அடைதல் நூற்பயனே என்பதற்கு ஏற்ப,நாற்பொருள் விரிக்கும் இயல்புடையதாக இக்கவிதைத் தொகுப்பும் நாடு,வாழ்த்துக்கள், இறைமை, உணர்வுகள் என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது. இது நம் நாடு, நீ இதன் நலம் நாடு என்று இக்கால இளையர்க்கு இதன் வரலாறு, பெருமை, சிறப்பு எல்லாவற்றையும் எடுத்துக் கூறி நாட்டுப்பற்றை வளர்க்க முயல்கிறார் கவிஞர்.


வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்

தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவன்


என நாவுக்கரசர் நவின்றதற்கேற்ப வாழ்த்துரைகள் அமைந்துள்ளன. தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வதுதானே நாடு என்பதை உணர்ந்து , நாட்டை வாழ்த்திய பின்னர் தக்கார்களாகிய தலைவர்களை அறிஞர்களை வாழ்த்துகின்ற வாழ்த்துரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கவிஞரின் வாழ்த்துப் பெறும் பேறு அடியேனாகிய எளியேனுக்கும் வாய்த்திருப்பது தமிழன்னை தந்த தவப்பேறாகும்.


வாழ்த்து என்பது தமிழில் பல்லாண்டு வாழ்க என ஆசிர்வதித்தல் என்பதையும் குறிக்கும். கடவுள் வாழ்த்து என்பதில் வணக்கம் என்பதையும் குறிக்கும். அதுபோல இக்கவிதை இந்நூலில் வாழ்த்து இறைமையை வணங்கும் நிலையில் மூன்றாவதாக இடம் பெற்றுள்ளது.


உணர்வுகளின் ஊர்வலமே கவிதை!


உள்ளத் துள்ளது கவிதை-இன்ப

உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில்-உண்மை

தெரிந்துரைப்பது கவிதை!


என்பது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதை இலக்கணத்திற்கேற்ப உணர்வுகள் பற்றிய கவிதைகள் இறுதியாக இடம் பெற்றுள்ளன. இவ்வாறு தலைப்பாலும் உள்ளடக்கத்தாலும் சிறப்புப் பெற்ற இக்கவிதை நூலை இயற்றிய கவிஞர்.மு. தங்கராசுன் அவர்கள் சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களுக்கெல்லாம் சிறந்த முன் மாதிரியாகத் திகழ்பவர். தம் மக்களை எல்லாம் தமிழாசிரியர்களாக ஆக்கித் தமிழுக்கு வளம் சேர்த்த ன்மையர். பணியுமாம் என்றும் பெருமைக்கு இலக்கணமாக இருக்கும் பண்புடையவர். கவிதை, சிறுகதை , நாடகம்,கட்டுரை எனப் பல்வகை படைப்பிலக்கியத்தை எழுதித் தமிழன்மைக்கு எழில் சேர்த்த ஏந்தல். ஏனைய எழுத்தாளர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒல்லும் வகையான் எல்லாம் ஓயாது உதவும் உயர்ந்த செயல் வீரர். என் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய கெழுதகை நண்பராகிய திரு. மு. தங்கராசன் பல நன்னூல்களைத் தமிழுக்குப் படைத்துத் தர அருளுமாறு இறைவனை வேண்டுகிறேன்.



. கவிஞர் அருண்முல்லை

நாத்திகன் வேள்வி

ஏப்ரல்2004(25-1-2004)



நாத்திகன் வேள்வி என்னும் தலைப்பில் சிங்கப்பூர்க் கவிஞர் அருண்முல்லை தம் கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட இருப்பது அறிந்து பெரு மகிழ்ச்சிஅடைந்தேன். இவர் கவிதைகளை அவ்வப்போது தமிழ் முரசு வார இதழ்களில் நான் படித்து மகிழ்வது உண்டு. கவிஞர் அருண்முல்லை நற்றமிழ்ப் பற்றாளர். நாடு , இனம் முன்னேற வேண்டும் என்னும் நல் நோக்கினர். மரபுக் கவிதை இயற்றும் மாண்பினர். எதுகை, மோனை மட்டுமன்றி எழில் நடையும் கவிதையில் மரபு மாறாமல் இடம் பெற வேண்டும் என்னும் எண்ணத்தர். பிற மொழிச் சொற்களை இயன்ற வரையில் தவிர்த்து எழுதும் பெற்றியர். இத்தகைய நோக்கும் வாக்கும் போக்கும் இந்நூலிலுள்ள கவிதைகளில் இடம் பெற்றிருக்கக் காணலாம்.


நாத்திகன் என்பவன் கடவுட் கொள்கையை மறுப்பவன், ஆத்திகனோ கடவுட் கொள்கையை ஏற்று வாழ்பவன்’.“ஆத்தம் ஆனார் அயலவர் கூடி , நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்’’ என்னும் திருவாசகத்தின் அடிகள் இதனை வலியுறுத்தும். நாத்திகன் ஆத்திகன் ஆகிய சொற்கள் வடமொழித் திரிபால் வந்தவை.


வேள்வி என்பது யாகம், ஓமகுண்டம், பூசனை ஆகியவற்றை உணர்த்தும் தமிழ்ச்சொல் . இவற்றை விரும்பாதவன். வெறுப்பவன் நாத்திகன். இந்நிலையில் இந்நூலின் தலைப்பு நாத்திகன் வேள்வி என முரண் அணியில் அமைந்துள்ளதே என எண்ணத்தோன்றும் இதற்கு விடை கூறுமுகமாக நூலாசிரியர் ‘‘எனக்குக் கடவுள் வள்ளுவனே. அவனை நோக்கிச் செய்யும் வேள்விதான் இந்த நாத்திகன் வேள்வியும். என் தெய்வம் வள்ளுவனுக்கு என் அறியாமை, ஆசை, அச்சம், வியப்பு நான்கையும் வேள்வித்தீயில் போட்டு வணங்குகிறேன். நான் செய்வதும் . கடவுள் வணக்கம் தான்’’ என்று முன்னுரையில் எழுதியுள்ளார். ‘‘அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று’’என்று வேள்வியை வெறுத்து ஒதுக்கிய வள்ளுவனுக்கே வேள்வி செய்கிறார் இக்கவிஞர் .


மேலும் வேள்வி என்பது வேள் என்னும் அடிச்சொல்லைக் கொண்டது. இது வேட்கை, விருப்பம் ஆகியவற்றால் விளைவது . எனவே நாத்திகன் விருப்பத்தால்-வேட்கையால்-விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு எனக் கருதவும் இடமுண்டு. கவிஞனது வேட்கைதானே அவன் கவிதையின் உள்ளடக்கமாக உருவெடுக்கிறது. ‘‘வினவு கேள்வியின் நெய் சொரிந்திட வேள்வி போல் மனம் தீ வளர்ப்பது. ’’ கவிதை என்பதைக் கவிஞர் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.


இந்நூலில் மொழி, இனம்,சமூகம், பகுத்தறிவு வாதம், காதல், நாடு, பொது என்னும் ஏழு பிரிவுகளில் கவிஞர் அருண்முல்லை தமது வேட்கையைத் தவழவிட்டுள்ளார். மொழியின்றி இனம் இல்லை. இனம் இன்றிச் சமுகம் இல்லை.சமுகம் இன்றி நாடில்லை. மனிதன் தனக்கரிய பகுத்தறிவைப் பயன்படுத்தி உலக மக்கள் மீதும் காதல் கொண்டு வாழ்ந்தால்தான் நாடு, இனம், சமுகம் நல்வாழ்வுபெறும் என்பதை இங்குள்ள பிரிவுகள் எடுத்து இயம்புகின்றன. இதுவே நாத்திகன் வேட்கையாக வேள்வியாக அமைகிறது.


கண்ணதாசன் கவிக்குக் காரணம் குழந்தை உள்ளம், எண்ணரும் ஞானப்பாட்டன்’’ என்று கண்ணதாசனைக் கூறும் கவிதையில் வரும் பாட்டன் என்பது தந்தையின் தந்தை என்னும் பொருளிலும், பாட்டினை உடையவன் என்னும் பொருளிலும் வந்து இருபொருள் தரும் சிலேடையாக அமைந்து கவிதைக்கு அழகு தருகிறது. பாரதியைக் கவித்தொழிற்சங்கமாகக் காண்கிறார் கவிஞர். பொங்கலைப் போற்றுவதும் தீபாவளியைத் தூற்றுவதும் நாத்திகர் மரபு என்பதையும் இக்கவிதை நூல் காட்டுகிறது.


‘‘பொன்மகள் நீ எனச் சொன்னது யார்? நீ போர்தொடுத்தால் பலர் புறமுதுகே’’தூரிகையும் எழுதுகோலும் தம்தொழிலை மாற்றிக்கொண்டு கவிதையும் ஓவியமும் தீட்டின. நான் அவளாகினேன், அவள் நானாகினாள் எனும்படி உணர்வுபெற்றோம்.’’ ‘‘துளி நஞ்சினை உன்முறுவல் தெளித்தால் துடிக்கும் இதயம் செயற்படுமோ?’’ இந்த வரிகள் காதல் என்னும் பிரிவில் வந்து களிப்பூட்டுகின்றன. கிரகணத்தைச் சூரியனும் சந்திரனும் தழுவுவதாகக் காணும் கற்பனை நன்று.


நாடு என்னும் பகுதியில் சிங்கப்பூர் மண்ணின் மணம் கமழக் காணலாம். ‘‘ஆதவன் கிழக்கின் தோற்றம் அதனெதிர் மறைவுத் தோற்றம் ஏதொரு மறைப்புமின்றி எங்களுர் காட்டும்’’ என்று சிங்கப்பூரின் இயற்கைச் சிறப்பைக் கவிஞர் போற்றுகிறார். சமுகம் என்னும் பிரிவில் திகழும் ஞாயிறும் தேக்காவும் என்னும் பரிசு பெற்ற கவிதை பாராட்டுக்குரிய ஒன்றாக விளங்குகிறது.


இத்தகைய கவிதைகள் அடங்கிய இந்நூல் கவிஞர் கோ. அருண்முல்லையின் முதல் நுல். இதுவே இனிவரும் நூல்களின் முதல் நூலாக அமைய என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். முல்லை எளிமையான மலர், இனிமையான நறுமணங்கொண்ட மலர், கற்பின் சின்னம். இதற்கேற்ப இவர் எளிமையும் இனிமையும் மிக்க கவிதைகள் பலவற்றை எழுதி எல்லாரையும் ஈர்க்க முயல்வராக இந்த நூலைத் தமிழுலகம் வாங்கிப் படித்து நாத்திகன் வேள்வி-வேட்கை விருப்பம் நிறைவேற ஆவன செய்யும் என்று நம்புகிறேன்.


கவிஞர் முத்துமாணிக்கம்

காவடிப்பாடல்கள்


உலகில் பண்டைத் தமிழர் கண்டு உணர்த்திய கடவுள் தத்துவமே முருக வழிபாடு. அவ்வழிபாட்டின் நாயகன் யார்?முருகன். முருகன் என்பவன் யார்? முருகு உடையவன் முருகன் முருகு என்றால் என்ன? அழியாத அழகு, மாறாத இளமை, என்றும் வீசும் நறுமணம் , எப்போதும் இருக்கும் கடவுட் பண்பு ஆகியவற்றின் கூட்டுக் கலப்பே முருகு.


முருகு என்னும் சொல்லாக்கத்தைப் பாருங்கள். ம்உமு ர்உரு க்உகு இவற்றில் ம் என்பது மெய்எழுத்து. ர் என்பது இடையின மெய்எழுத்து. க் என்பது வல்லின மெய்எழுத்து இவற்றை இணைத்திருப்பது உ என்னும் உயிர் எழுத்து. இதன் கருத்து யாது? உயர்,உடல், உள்ளம், உணர்வு ,உலகம் ஆகியவற்றில் ஊடுருவி நின்று வன்மையாய் மென்மையாய் இடைமையாய் இருந்து இயக்குவது தான் முருகு என்பதை இந்தச் சொல்லாக்கம் உணர்த்துகிறது.


முருகனை வழிபாடு செய்வது எப்படி? முருகா முருகா முருகா என்று காதலாகிக் கசிந்து ஓதினால் சொல்லிச் சொல்லி உருகினால் போதும். அதுவே உண்மை வழிபாடு ஆகும். இதனால் நாம் பெறும் பயன் என்ன?


அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்சமரில் அஞ்சல் எனவேல் தோன்றும்-நெஞ்சில்

ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்

முருகா என்று ஒதுவார் முன்’’


என்பார் நக்கீரர். அச்சுறுத்தும் கவலைகள் அகல வேண்டுமா? வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டுமாஃ நெஞ்சில் ஒரு கணம் அவன் வேலையும் காலையும் நினையுங்கள் . முருகனைப் பாடுங்கள்! உடனே அவன் ஓடி வருவான் என்பது இந்தப் பாட்டின் கருத்து.


முருகன் கைவேல் வெற்றியின் சின்னம். அறிவின்-ஞானத்தின் அறிகுறி. அறிவு ஆழமுடையாதாகவும், அகலமுடையதாகவும் கூர்மையான நுட்பமுடையதாகவும் அமைய வேண்டும். அதுபோல அவன் கைவேல் ஆழம்,அகலம், கூர்மை கொண்டதாக அமைந்துள்ளது. அறிவு பெற அவனை நாடுங்கள். ‘‘அறிவுடையார் எல்லாம் உடையார் ’’அல்லவா!


முருகன் எப்போதும் தமிழுக்காக ஏங்குபவன். முத்தமிழால் வைதானையும் வாழ வைப்பான் என்று போற்றுகிறார் அருணகிரியார். மேலும் அவன் தமிழ்ப்பாட்டுக்கு உருகும் தலைவன். எனவேதான் அருணகிரியார்‘‘பாடும் பணியே பணியாய் அருள்வாய்’’ என அவனிடம் வேண்டுகிறார். எனவே பக்தியுடன் காவடி எடுக்கும் அன்பர்கள் தமிழால் அவன் புகழைப் பாடிப் பாடி வழிபாடு செய்யவேண்டும். அதற்கேற்ற வகையில் சிங்கைக் கவிஞர். செந்தமிழ் அன்பர். நாளும் இன்னிசையில் இறைவனைப் பாடி வழிபாடு செய்யும் நல்லார் முத்துமாணிக்கம் எளிய தமிழில் அழகிய முறையில், இனிய இசையில் காவடிப்பாடல்களை இயற்றித்தந்துள்ளார்.


அன்பர்களே இந்நூலை வாங்கிக் காவடி எடுக்கும் போது மட்டுமன்றி காலமெல்லாம் படியுங்கள் ! முருகன் புகழ் பாடுங்கள்!அவன் திருவருளைப் பெறுங்கள்! தமிழையும் வாழச் செய்யுங்கள்! தமிழ்த் தெய்வம் அப்போது தானே அகமகிழும்!
........ தொடரும் ........
Dr S.P. Thinnappan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக