ஞாயிறு, 18 மே, 2014

நகரத்தார் - 2


 5 சிங்கப்பூர்  நகரத்தார் கோயில்கள்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் சின்னஞ்சிறிய தீவு. எனினும் இன்று சிறப்பான பொருளாதார வளமிக்க நாடாகத் திகழ்கிறது.  1919 இல்தான் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ஸர் ஸ்டாம்பொர்டு ராபிள்ஸ் சிங்கப்பூருக்கு வந்து ஆங்கிலேயர் ஆட்சியை நிறுவிச் சிங்கப்பூர் வளர்ச்சிக்கு வித்திட்டார்.  மலேயாவின் தோற்றம் என்னும் வரலாற்று நூலைத் தமிழில் எழுதிய சுங்குரும்பை பெ. நா. மு. முத்துப்பழநியப்ப செட்டியார் அவர்களின் கருத்துப்படி 1838க்கு முன் சிங்கப்பூருக்கு நகரத்தார்கள் வந்ததாக அறியமுடிகிறது.  நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு என்னும் நூலை  எழுதிய அ. இராமநாதன் செட்டியார் நகரத்தார்கள் பாய்மரக் கப்பலில் 1824 ஆம் ஆண்டு பினாங்குக்கும் சிங்கப்பூருக்கும் வர்த்தகம் செய்ய வந்ததாகக் குறிப்பிடுகிறார். நகரத்தார்கள் தங்களுக்குரிய கொடுத்து வாங்கும் தொழிலை மார்க்கெட் ஸ்திரீட்டில் மிகச்சிறப்பாக நடத்திவந்தனர்.  அங்குப் பல கிட்டங்கிகள் இருந்தன. நகரச் சீரமைப்புக் காரணமாக இப்போது கிட்டங்கிகள் டாங்க் ரோட்டில் மட்டுமே உள்ளன.  டாங்க் ரோட்டில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வர்த்தக சங்கம் 1928 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது.  இப்போது சிங்கப்பூரில் நகரத்தார்கள் வங்கித் தொழிலில் மட்டுமின்றி ஏனைய தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர்.   மேலும் பலர் வங்கிகளிலும அரசாங்க அலுவலகங்களிலும தனியார் தொழில் நிறுவனங்களிலும் கல்வி நிலையங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். ஏறத்தாழ 300 குடும்பங்கள் சிங்கப்பூரில் உள்ளன.  சிங்கப்பூரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு நகரத்தார்கள் ஒரு வகையில் உறுதுணையாக உள்ளவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ்வாறே சைவமும் தமிழும் சிங்கப்பூரில் தழைத்து வளர்ச்சி அடையவும் நகரத்தார்கள் பெரும் பங்காற்றியுள்ளனர் என்பதையும் யாரும் மறைக்க முடியாது.

     சிங்கப்பூர் நகரத்தார் மேற்பார்வையில் இன்று இரண்டு கோயில்கள் உள்ளன.  ஒன்று டாங்க் ரோட்டில் உள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில்.  மற்றொன்று சீனா டவுனிலுள்ள லயன் சித்தி விநாயகர் கோயில்.  இவற்றின் தோற்றத்தையும் வரலாற்றையும் சிறிது பார்ப்போம்

தெண்டாயுதபாணி கோயில்

     அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் 4-4-1859 இல் கட்டப்பட்டதாக அதன் கல்வெட்டுக் கூறுகின்றது.   முருகப்பெருமானாகிய தெண்டாயுதபாணியே மூலவராக இருக்கிறார்.  கருவறையின் நுழைவு வாயிலில் ஜம்பு விநாயகர் திருவுருவம் ஒரு பக்கமும் இடும்பன் இன்னொரு பக்கமும் வைத்து வழிபடப்பெற்று வருகின்றன.  ‘‘ கோயில் நுழைவு வாயிலின் முன்பக்கம் இரண்டு திண்ணைகள். பின்பு செட்டிநாடு வீடுகளிலுள்ளதைப் போன்ற அலங்கார மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை’’ என்ற அமைப்பில் முன்பு கோயில் இருந்தது.  கார்த்திகைக் கட்டு என்று ஓர் கட்டிட அமைப்பும் கார்த்திகை போன்ற நாட்களில் அன்னதானம் செய்வதற்காக 1859 முதல்1981 வரை இருந்தது.

 

  பிறகு சிங்கப்பூர் நகரத்தார்கள் சிவபெருமானையும் ஆலயத்தில் வைத்து வணங்க எண்ணினார்கள். 1878 ஆம் ஆண்டில் சிவபெருமானின் அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கத்தையும் அவரது சக்தியாகிய உமையம்மையையும் வைத்துத் தனியே ஒரே கோயிலாகத் தெண்டாயுதபாணி கோயிலை ஒட்டியே கட்டி வழிபடத் தலைப்பட்டனர்.  சிவபெருமானுக்குச் சொக்கலிங்கம் சுந்தரரேஸ்வர் என்றும் அம்மைக்கு மீனாட்சி என்றும் பெயர் சூட்டி வணங்கினார்கள்.  நகரத்தார்கள் பாண்டி நாட்டினராதலின் மதுரையிலுள்ள இறைவன் இறைவி பெயரையே தாங்கள் எழுப்பும் கோயில்களில் உள்ள இறைவன் இறைவியருக்கு இட்டு வழங்குவதை மரபாகக் கொண்டுள்ளனர். சிவன், அம்பிகையுடன் விநாயகர், தெண்டாயுதபாணி, நந்தி, தெட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை, சண்டேசுவரர், நடராசர்- சிவகாமி அம்பிகை, வயிரவர், நவகிரகங்கள் ஆகிய திருவுருவங்களை முறைப்படி சிவாச்சாரியார்கள் பூசை செய்கின்றனர்.  தெண்டாயுதபாணிக்குப் பண்டாரங்கள் பூசை செய்கின்றனர்.

  இப்போதுள்ள தெண்டாயுதபாணி கோயில் (சிவன் கோயில் உள்ளிட்டது) அமைப்பு அண்மையில் (1983) உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.  பழைய கோயில் கார்த்திகைக் கட்டு ஆகியவற்றை முற்றிலும் மாற்றிச் செய்யப்பட்ட ஒன்றாகும்.  தெண்டாயுதபாணி கோயிலுக்கு இராஜகோபுரம் எழுப்பப்பட்டது.  கார்த்திகைக் கட்டு இருந்த இடத்தில் ஈரடுக்குத் திருமணமண்டபம் 4.1.1981ல் கால்கோள் இட்டு 19.1.1983 ல் கட்டி முடிக்கப்பட்டது. ஒரு பக்கம் கோயிற் பணியாளர் தங்குவதற்கு ஈரடுக்கு கட்டிடம் உள்ளது.  முன்பக்கம் பெரிய அலங்கார மண்டபம், அலுவலகம், நூலகம் என்று அமைப்பும் உள்ளது.  கார் நிறுத்துவதற்குரிய வசதியும் சுற்றுப் பிரகாரமும் உள்ளன. ஏறத்தாழ 35 லெட்சம் வெள்ளி செலவில் செய்யப்பட்ட இத்திருப்பணி முற்றுப்பெற்று 24-11-1983 ல் குட முழுக்கு விழா மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டது.

    1859ஆம் ஆண்டுக்கும் 1983ஆம் ஆண்டுக்கும் இடையே கோயில் திருப்பணி-பழுதுபார்ப்புப் பணிகள் செய்யப்பெற்று ஓரிரு முறை குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றிருக்க வேண்டும்.  இவற்றிற்காண கால கட்டங்கள் தெரியவில்லை. நகரத்தார்கள் கோயிலில் நாள் தோறும் குறித்த நேரத்தில் பூசைகள் செவ்வனே நடைபெற்று வருவதை அனைவரும் நன்கு அறிவர்.

    தைப்பூசம், நவராத்திரி , கந்தர் சஷ்டி இலட்சார்ச்சனை ஆகியவை முக்கிய விழாக்களாகும் . தைப்பூசக் கொண்டாட்டத்தில் முதல் நாள் காலையில் சுவாமி வெள்ளி இரதத்தில் தேங்ரோடு கோயிலிலிருந்து நகரத்தார் பிள்ளையார் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்து மாலை அங்கிருந்து நகரத்தார் காவடிகளுடன் மார்க்கெட் ஸ்திரீட் வழியாக  தேங்ரோடு கோயிலுக்கு இரவு திரும்பும். பூசத்தன்று அதிகாலை 12.00 மணி முதல் காவடிகள் , பால்குடங்கள் , சிராங்கூன் ரோட்டிலுள்ள சீனிவாசப்பெருமாள் கோயிலிலிருந்து வரத் தொடங்கும் .  இரவு 12.00 மணி வரை நீடிக்கும்.  சீனர்கள் உள்ளிட்ட இந்துப் பக்தர்கள் பலர் அலகுக் காவடிகளுடன் வருவர். ஆண்டுக்கு ஆண்டு ஆயிரக் கணக்கில் காவடிகளின் எண்ணிக்கை பெருகிவருகிறது.  மதியம் 12.00 மணி முதல் இரவு மணி வரை   ஓயாது அன்னதானம் நடைபெறும்.  முன்பு தைப்பூச விழா மூன்று நாட்கள் நடைபெற்றதாகவும் மூன்றாம் நாள் சுவாமி எழுந்தருளிக் கடற்கரை ஓரத்துக்குச் சென்று பீச் ரோட்டில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

 

நகரத்தார் தண்டாயுதபாணி கோயிலில் நடைபெறும் . சிறப்பு விழாக்களில் ஒன்று நவராத்திரி. ஒன்பது நாட்களிலும் சுவாமிக்கு வெவ்வேறு வகையான அலங்காரங்கள் செய்யப்பெறும் .  கலை நிகழ்ச்சிகளும் நடக்கும் .  10 வது நாள் சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போட்டு வீதி சுற்றுவரும்.

    ஓவ்வொரு மாதமும் கார்த்திகை அன்று இரவு திருக்கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு உண்டு. மதியத்தில் அன்னதானம் செய்யப்படும். நால்வர் குருபூசை நடைபெறுகிறது. சேக்கிழார் கோவிலூர் ஆண்டவர் ஆகியோர் குருபூசையும் உண்டு. அன்று  குருபூசைக்குரியவர்கள் படங்களுக்கு முன்னர் அவர்கள் வரலாறு படிக்கப்பெற்று வழிபட்டுப் பின்னர் மகேசுவர பூசை நடக்கும்.  வருடப்பிறப்பு , சித்திரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆவணி மூலம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இரவு கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு உண்டு.  ஆனி, மார்கழித் தெரிசனமும்  நடராசருக்கு உண்டு.  சிவராத்திரி வழிபாடும் சிறப்பாக இருக்கும்.  பிரதோஷம் வழிபாடும் செய்யப்படுகிறது.  ஒதுவார் வைத்து நாள்தோறும் திருமுறை ஒரு மணி நேரம் மாலையில் ஓதும் பணியும் செய்து வருகிறார்கள்.

சித்தி விநாயகர் கோயில்

   சிங்கப்பூர் நகரத்தார் மேற்பார்வையிலுள்ள மற்றொரு கோயில் சைனா டவுனில் மையமாக விளங்கும் கியோங்சியோக் ரோடு, கிரேத்தா  ஆயர் ரோடு சந்திப்பிலுள்ள லயன் சித்தி விநாயகர் கோயில் . 1925 ஆம் ஆண்டு கட்டப்பெற்ற இக்கோயிலுக்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. இக்கோயில் மூர்த்தி பற்றியும் தோற்றம் பற்றியும் முத்து பழநியப்ப செட்டியார் தம் புத்தகத்தில் எழுதியுள்ள செய்தியை முதலில் பார்ப்போம்.  சிதம்பரத்தில் சிவாநுபூதி பெற்ற திரு பொன்னம்பல சுவாமிகளால் (இப்போது சிதம்பரத்தில் பொன்னம்பல சாமி மடம் ஒன்று உள்ளது. அது கோவிலூர் மட நிர்வாகத்திலுள்ளது.  இம்மடம் இருக்கும் தெருவிற்குப் பெயர் பொன்னம்பல சாமி மடத் தெரு) இங்குள்ள சித்தி விநாயகர் உருவம் நிறுவப்பெற்றது.  சுவாமிகள் இல்வாழ்க்கையில் இருந்தவர். பட்டாளத்தைச் சேர்ந்தவர் .சிங்கப்பூருக்கு வந்த இந்தியப் பட்டாளத்தில் இவரும் ஒருவராக வந்தார்.  அப்போது ஓர் விநாயகரை வைத்து வணங்கினார்.  அவர் உத்தியோக மாறுதலில் இந்தியா செல்ல நேர்ந்தது.  விநாயகர் உருவத்தை எடுத்துச் செல்ல எண்ணவில்லை.  ஆகவே தான் வழிபட்ட விநாயகரை நகரத்தார்களிடம் ஒப்படைத்துச் செல்ல விரும்பினார்.  சுவாமிகளின் வேண்டுகோளை மறுக்க இயலாத நிலையில் இந்தத் திருவுருவமுள்ள கோயிலை நகரத்தார்கள் ஏற்றுக் கோயில் கட்டினார்கள்.

இந்தக் கோயிலின் தோற்றத்தையும் வரலாற்றையும் பற்றித் திரு. . பழநியப்பன் சிங்கப்பூர் இந்துவில் (தொகுதி1 இதழ் 5 1994 ஜனவரிமார்ச்சு) ஆங்கிலத்திலும் தமிழிலும் விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவர் கருத்துக்கள் வருமாறு : ‘‘இக்கோயில் மரத்தடிப்பிள்ளையாராகப் பொது மருத்துவமனையின் புதிய பிணக்கொட்டகைக்கு அருகில் தொடங்கப்பட்டது.  கோவிலை அடையச்சிப்பாய் லைனிலிருந்து ஒரு நடைபாதை உருவாக்கப்பட்டது. முதலாம் உலகப் போரின் இறுதியில் அத்தாப்புக் கூரையுடன் அமைந்திருந்த கோயிலில் விநாயகரின் திருவுருவச்சிலையும் நாகர்களும் இடம் பெற்றிருந்தன. இக்கோயிலுக்கு வருகையளித்தோர் மருத்துவமனை ஊழியர்களும் அவுட்ராம் சாலையிலிருந்து சிறைச்சாலை ஊழியர்களுமாவர்.  அங்கு அன்றாடப் பூசை செய்து வந்த தமிழர் சன்னியாசி தமிழகம் செல்லும்போது கோவிலை நகரத்தார்களிடம் ஒப்படைக்க அணுகினார்.  முதலில்  இந்து அறக்கட்டளை ஆர்வம் காட்டாததாலும் சன்னியாசி விடாப்பிடியாக இருந்தாலும் கோவிலை நகரத்தார்கள் ஏற்று அங்குப் பூசை நடத்த ஒரு பண்டாரத்தை நியமித்தனர்.  1920களின் தொடக்ககாலத்தில் மருத்துவமனை விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் தேவைப்பட்டதால் அரசாங்கம் இக்கோயில் நிலத்தை எடுத்துக்கொண்டு ஒரு சிறுதொகை கொடுத்தது .  நகரத்தார்கள்  இப்போதைய இடத்தில் நிலத்தை வாங்கிக் கோயிலை பெரும் பொருட் செலவில் கட்டிமுடித்தனர்.

கோவில் கட்டத் தொடங்கியதும் மருத்துவமனை நிலத்தில் இருந்த கோவிலில் உள்ள விநாயகரின் திருவுருவம் வேலைப்பாட்டுடன் அமைந்திருந்தாலும் அது உருவம் சிதைந்து காணப்பட்டது.  குறையுள்ள சிலையைக் கருவறையில் வைப்பது ஆகமத்திற்கு ஏற்புடையதல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.  ஆகவே முறையாகக் கருங்கல்லில் செய்த விநாயகர் சிலையை இந்தியாவிலிருந்து கொண்டு வர அவர்கள் ஏற்பாடு செய்தனர்.  இருப்பினும் 1-6-1925 ல் நடைபெற்ற திருக்குட நீராட்டுக்கு முன்னர், ஆகமத்தில் கூறியதைப்போலப் பழைய சிலையைக் கடலில் இடக்கூடாது என சிலர் கருத்துரைத்தனர்.  அவ்வாறு செய்தால் சன்னியாசிக்குக் கொடுத்த வாக்கை மீறுவதாக அமையும் என அவர்கள் கருதினர்.

புதிய சிலையை மூலவராகப் பிரதிஷ்டை செய்யும் அதே வேளையில் , அதற்கு முன்னால் கர்ப்பகிரகததில் பழைய சிலையை வைத்து வழிபடுவது எனஒரு சமரச முடிவு காணப்பட்டது

அதுமட்டுமல்ல, கோவிலின் பழைய இடத்தில் இருந்த நாகமும் ‘‘ராமநாமமும்கருவறைக்குள்ளேயே வைக்கப்பட்டன.  முருகப்பெருமானைக் குறிக்கும் வகையில், ஒரு வேலும் அதனுடன் வைக்கப்பட்டது.   சிப்பாய் லைன்சில் கோவில் அமைந்திருந்ததால் அதனை லைன் சித்தி விநாயகர் என்று அழைத்து வரலாயினர்.

புதிய விநாயகர்கோயில் கட்டிமுடிந்ததும் செட்டியார்கள் தைப்பூசத்திற்கு முன்தினம் தங்களின் வெள்ளி ரதத்தை லைன் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு கொண்டுவரும் பழக்கத்தைத் தொடங்கினர். டாங்கு ரோட்டில் தொடங்கி இரதம் செட்டியார்கள் ஒரு சமயம் செழிப்பாக வட்டித் தொழிலை நடத்திய மார்க்கெட் தெரு வழியாகச் சென்று லைன் சித்தி விநாயகர்கோவிலை அடைந்தது.

‘‘கிட்டங்கிகள்’’ எனும் தொழில் மனைகளில் வட்டித்தொழிலை நடத்திய செட்டியார்களில் சிலர் தாயகத்திலிருந்து கொண்டு வந்த சுவாமிகளின் சிறு சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர்.  அவ்வாறு செய்தவர்களில் பிச்சப்ப செட்டியார் என்பவர் குறிப்பிடத்தக்கவர்.  தமது சமுதாயத்தில் செல்வாக்குடன் விளங்கிய இவர் டாங்கு ரோடு தெண்டாயுதபாணி கோவில் அறங்காவலாராக சில காலம் பணியாற்றியும் உள்ளார்.  மார்க்கெட் தெரு கிட்டங்கிகளை அரசாங்கம் பற்றுமானம் செய்த போது தன்னிடமுள்ள விநாயகர் சிலையைக் கோவிலுக்கு நன்கொடையாக அவர் கொடுத்துவிட்டார். அச்சிலை மூன்றாவது பிள்ளையாராக கருவறையில் வைக்கப்பட்டது.

      கோவிலில் கடைசியாக நடைபெற்ற இரு குடமுழுக்கு விழாக்கள் முறையே 1973 ஆம் ஆண்டிலும் 1989 ஆம் ஆண்டிலும் இடம் பெற்றன. சைனா டவுனில் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் மிக்க சூழ்நிலையில் லயன் சித்தி விநாயகர் கோவில் அமைந்திருந்தாலும் அதன் உள் பிரகாரத்தில் நிலவும் அமைதியான சூழ்நிலை கோவிலைத் தியானத்திற்கும் தெய்வீக சிந்தனைக்கும் ஏற்ற இடமாக உருவாக்கியுள்ளது.

     இன்று இக்கோயில் மூன்று விநாயகர் மூர்த்தங்களைத் தாங்கி வழிபட வருவோர்க்கு பேரருள் சுரந்து நிற்கிறது.விநாயக சதுர்த்தியும் பிள்ளையார் நோன்பும் இக்கோவிலில் நடைபெறும் சிறப்பு விழாக்கள். இங்குள்ள வேல்தான் தைப்பூச நாளன்று ஆயிரக்கணக்கான பாற்குட நீராட்டுக்குரியதாக விளங்கும் தன்மையுடையது.தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு, தீபாவளி , திருக்கார்த்திகை , பொங்கல் போன்ற சிறப்பு நாட்களில் இங்கு வழிபாடு நடத்திய பின்னரே தென்டாயுதபாணி கோவிலுக்கு வழிபாடு நடக்கும் . ஞாயிறு , வெள்ளி நாட்களில் இக்கோவிலுக்கு 108 பிரகாரம் வருவோர் எண்ணிக்கையும் மிகுதி .  பிள்ளையார் நோன்பு நாளன்று நகரத்தார்கள் பலர் குடும்பத்துடன் இங்கு வந்து இழை எடுத்துக்கொள்வர்.  மூர்த்திக்கு வெள்ளியங்கிகள் ஆபரணங்கள் உண்டு

 

---பினாங்கு நகரத்தார் சிவன்கோயில் திருக்குட நன்னீராட்டு விழா மலர் 26—1-1996

பக்162-66

    Thinnappan, SP. Cinkappur Nakarattar Koyilkal Varalaru (The History of

                   Chettiars' Temples in Singapore) In: Penang Sivan Temple 

                           Consecration Souvenir Magazine, Ed: Ray Ramasamy, Sivan

                           Temple, Penang, Malaysia (1996) pp 162-166 (Tamil)

 

 

6 சிங்கப்பூர் நகரத்தார் செந்தமிழ்ப்பணி

.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல்' என்று உரைத்தார் திருவள்ளுவர். தமிழ்மறையாம் திருக்குறளைத் தரணிக்குத் தந்து வான்புகழ் கொண்ட வள்ளுவப் பெருந்தகையார் இட்ட கட்டளையைத் தலைமேற் கொண்டு நகரத்தார் பெருமக்கள் தாங்கள் திரைகடல் ஓடித் திரவியம் தேடிய நாடுகளில் எல்லாம் பலவகையான அறச்செயல்களைச் செய்தது மட்டுமன்றிச் சிவநெறியையும் பரப்பினர்; செந்தமிழ்ப் பணிகளும் செய்து சிறப்புற்று விளங்குகின்றனர். இந்த வகையில் நகரத்தார்கள் சிங்கப்பூரில் செய்த நற்றமிழ்ப்பணி பற்றிக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தென்கிழக்காசிய நாடுகளில் சிங்கப்பூர் சின்னஞ்சிறிய தீவு. இயற்கை வளத்தை நம்பி இராது, மக்கள் வளத்தை மட்டுமே நம்பி முன்னேறி இருக்கும் நாடு. பல மொழியினர், பல இனத்தவர், பல சமயத்தினர் வாழும் நாடு. இந்நாட்டின் மக்கள் தொகை 4.2 மில்லியன். இவர்களில் சீனர் 77.7 விழுக்காட்டினர்; மலாய்க்காரர் 14.1 விழுக்காட்டினர்; இந்தியர் 7.1 விழக்காட்டினர், இந்தியர்களில் பெரும்பான்மையோர் தமிழரே ஆவர் சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளாகச் சீனம், மலாய், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் விளங்குகின்றன. சிங்கப்பூரில் தேசிய மொழி மலாய் மொழி, அரசின் நிர்வாக மொழியாக ஆங்கிலம் அமைந்துள்ளது.

1819இல் தான் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சார்ந்த ஸர் ஸ்டாம் போர்டு ராபிள்ஸ் சிங்கப்பூருக்கு வந்து ஆங்கிலேயர் ஆட்சியை நிறுவிச் சிங்கப்பூர் வளர்ச்சிக்கு வித்திட்டார். மலேயாவின் தோற்றம் என்னும் வரலாற்று நூலைத் தமிழில் எழுதிய சுங்குரும்பை பெ.நா.மு. முத்துப்பழநியப்ப செட்டியார் அவர்களின் கருத்துப்படி, சிங்கப்பூருக்கு நகரத்தார்கள் 1838இல் குடியேறியதாக அறிய முடிகிறது. நகரத்தார்கள் தங்களுக்குரிய வங்கித் தொழிலைக் கொடுத்து வாங்கும் தொழிலை மார்க்கெட் ஸ்திரிட்டில் மிகச் சிறப்பாக நடத்தி வந்தனர். டாங்க் (பஹய்ந்) ரோட்டிலுள்ள தண்டாயுதபாணி கோயிலை நகரத்தார்கள் 1859இல் கட்டியுள்ளதாக அதன் கல்வெட்டுக் கூறுகிறது. நகரத்தார்கள் சித்தி விநாயகர் கோயில் ஒன்றும் கட்டி உள்ளனர். தைப்பூச விழாவை இவர்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். தண்டாயுதபாணி கோயிலில் சிவன் கோயிலும் தனியே உள்ளது. இதற்கு ஆகம நெறிப்படி பூசைகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் (1983) தண்டாயுதபாணி கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டிக் குடமுழுக்குச் செய்தனர். செட்டியார்கள் திருமண மண்டபம் ஒன்றும் தனியே உள்ளது. இப்போது சிங்கப்பூரில் நகரத்தார்கள் வங்கித் தொழில் மட்டுமன்றி ஏனைய தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் பலர் வங்கிகளிலும் அரசாங்க அலுவலகங்களிலும் தனியார் தொழில் நிறுவனங்களிலும் கல்வி நிலையங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். ஏறத்தாழ 300 குடும்பத்தினர்கள் இப்போது சிங்கப்பூரில் இருக்கின்றனர் என்று கூறுலாம். 1928 முதல் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வர்த்தக சங்கம் டாங்க் ரோட்டில் இயங்கி வருகின்றது. சிங்கப்பூரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு நகரத்தார்கள் ஒருவகையில் உறுதுணையாக இருந்தவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிங்கப்பூரில் சைவமும் தமிழும் தழைத்து வளர்ச்சி அடைந்ததற்கும் நகரத்தார்கள் பலவகையில் பங்காற்றியுள்ளார்கள் என்பதையும் யாரும் மறைக்க முடியாது.

கோயில் வழி

நகரத்தார்கள் கோயில் வழிக் குடியினர் என்று பாராட்டுவார் குன்றக்குடி அடிகளார். சிங்கப்பூரில் நகரத்தார்கள் தாங்கள் எழுப்பிய தண்டாயுதபாணி திருக்கோயில் வழிப் பலவகைத் தமிழ்ப்பணி செய்து வருகின்றனர். மலேசியா சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்கு முன்னோடி நூலாக முதன் நூலாகத் திகழ்வது யாழ்ப்பாணம் சதாசிவ பண்டிதர் என்பவர் 1887இல் இயற்றி வெளியிட்ட சிங்கை நகர் அந்தாதி என்பதாம். இந்த நூல் சிங்கப்பூர் டாங் ரோட்டில் கோயில் கொண்டிருக்கும் தண்டாயுதபாணியைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூலாகும் என்றால் நகரத்தார் கண்ட முருகன் பெருமையைக் கூற வேண்டுமா என்ன ? இப்பெருமான் தான் மலேசிய மண்ணில் தமிழ் இலக்கிய விதை ஊன்றுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறான். இந்நூலில் ரதபந்தம், நாகபந்தம் முதலிய சொல்லலங்காரக் கவிகளும் உள்ளன. இந்நூல் முழுவதையும் சிங்கப்பூர் நகரத்தார்கள் 1983இல் வெளியிட்ட தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா மலரில் வெளியிட்டுள்ளனர். அம்மலர் சித்தாந்த வித்தகர் முரு.பழ. இரத்தினம் செட்டியார், மெ. சிதம்பரனார், வச்சிரவேல் முதலியார் ஆகிய தமிழ் அறிஞர் பெருமக்களின் கட்டுரைகளைத் தாங்கி வந்தது.

சிங்கைக்கு வருகின்ற தமிழறிஞர் பெருமக்களைக் கோயிலுக்கு வரச்செய்து அவர்களுக்கு நல்விருந்தோம்பிச் சிறப்புச் செய்வதை நகரத்தார்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அவர்களைக் கொண்டு கோயிலில் சமயச் சொற்பொழிவுகளும் இலக்கியச் சொற்பொழிவுகளும் அவ்வப்போது நடத்திச் சிங்கைத் தமிழ் மக்கள் செந்தமிழ் நலம் நுகருமாறு செய்வதில் நகரத்தார்கள் பெருமகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். 1965இல் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வருகை அளித்த தமிழ் அறிஞர்களை வரவேற்று விருந்தோம்பி மகிழ்ந்தனர். மேலும் அந்த ஆராய்ச்சி மாநாட்டிற்கு நன்கொடையாக ஒரு கணிசமான தொகையைச் சிங்கப்பூர் நகரத்தார்கள் வழங்கினர். 1983இல் நடைபெற்ற குடமுழுக்கு விழாவினை ஒட்டிச் சித்தாந்த வித்தகர் முரு.பழ. இரத்தினம் செட்டியார், டாக்டர் சரசுவதி இராமநாதன், செஞ்சொற் கொண்டல் கீரன், திருக்குறள் முனுசாமி ஆகியோர்களின் சமய இலக்கியத் தொடர் சொற்பொழிவுகள் நடைபெற ஏற்பாடு செய்தனர். வில்லிபாரதம், கம்பராமாயணம், திருக்குறள், கந்தபுராணம் ஆகிய இலக்கிய இன்பம் நுகரவழி செய்தனர். உள்ளூர்க் கவிஞர்களைக் கொண்டு ஒரு கவியரங்கம் நடத்தினர்.

நகரத்தார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இலட்சார்ச்சனை, தைப்பூசம் ஆகிய விழாக்களை ஒட்டி இறைவழிபாட்டுப் பாடல்கள் தொகுப்பு அடங்கிய இலவச நூல்கள் வெளியிடப்படுகின்றன. காரைக்குடி நகர சபைத் தலைவராக இருந்த அருணாசலம் செட்டியார் பெரியபுராணப் பேரமுதம் என்னும் நூல் இலவச வெளியீடு செய்துள்ளார்.

சிங்கப்பூரில் தமிழருச்சனையைத் தொடங்கி வைத்த பெருமை நகரத்தார்களையே சாரும். தண்டாயுதபாணி கோயிலில் நாள்தோறும் நடைபெறும் பூசைகளிலும், கார்த்திகை, முதலிய சிறப்பு வழிபாட்டு நாட்களிலும் தமிழ் அருச்சனை 1983 முதல் நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் செளத்பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோயில், டெப்போ ரோடு உருத்திர காளியம்மன் கோயில் ஆகிய இடங்களிலும் தமிழருச்சனை நடைபெற்று வருகின்றது.

திருமுறை வழி

பக்தி இலக்கியமாகிய திருமுறைகளைப் பரப்பும் பணியில் நகரத்தார்கள் செய்து வரும் பணி பாராட்டுக்குரியது. நகரத்தார்களுக்குரிய தண்டாயுதபாணி கோயிலில் திருமுறைகளை நாள்தோறும் ஓதுவதற்காகக் காரைக்குடி முத்து அரு.சா.அரு. காவேரி ஆச்சி பெயரால் ஓர் அறக்கட்டளை உள்ளது. இதன்வழிச் சென்ற 60 ஆண்டுகளாக நல்ல திருமுறை இசைவாணர்களாகிய ஓதுவார் பெருமக்களைக் கொண்டு மாலையில் ஒருமணி நேரம் திருமுறைப்பாடல்கள் பாடும்பணி - முருகப் பெருமான் திருமுன்னர் ஓதும்பணி - நடைபெற்று வருகின்றது. இப்போது இங்கு தேவார வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. மார்கழி மாதத்தில் திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை, திருப்பாவைப் பாராயணமும் கூட்டுப் பிரார்த்தனையாகக் காலையில் ஓதப் பெறுகின்றது. பண்சுமந்த பைந்தமிழ்த் திருமுறைப் பாடல்களைப் பரப்பும் பணியிலும் சிங்கை நகரத்தார்கள் முன்னோடிகளாகத் திகழ்ந்துள்ளனர். இப்பணி இந்து அறநிலைய வாரியத்தைச் சார்ந்த கோயில்களிலும் வீரமா காளியம்மன் கோயில், வடபத்திர காளியம்மன் கோயில் ஆகியவற்றிலும் இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்து அறநிலைய வாரியத்தைச் சேர்ந்த ஆர்ச்சர்டு ரோடு சிவன் கோயிலில் மேலாண்மைக் குழுத்தலைவராகப் பணியாற்றிய திரு. . தெய்வநாயகம் அவர்கள் சிங்கப்பூர்ச் சைவப் பெருமக்கள் வழிபாட்டின் போது பஞ்சபுராணம் பாடுவதற்குதவும் வகையில் பஞ்சபுராணப் பாடல்களைக் கையடக்கப் பதிப்பாக வெளியிட வழி செய்தார்கள். மேலும் திருமுறைப் பாடல்களை ஓர் ஒலிப்பதிவு நாடா வழி வெளியிட்டு விற்க ஆவன செய்தார்கள். இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்னும் அப்பரடிகளின் திருவாக்கைக் கோயிலின் இலட்சிய முழக்கமாக ஆக்கினார்கள். ருத்திர காளியம்மன் கோயில் மேலாண்மைக் குழுத் தலைவராகப் பணியாற்றிடும் பேராசிரியர் டாக்டர் ராம. கருணாநிதி அவர்கள் தங்கள் கோயில் பூசை நேரங்களில் தாமே பஞ்ச புராணம் பாடும் பழக்கமுடையவர்கள். அவர்கள் சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் திருமுறை மாநாட்டிற்குச் செய்துவரும் உதவிகள் பல. சிங்கப்பூரில் இதுவரை 12 திருமுறை மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திருமுறை மாநாட்டுப் பணிகளிலும் நகரத்தார்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இக்கட்டுரையாளர் அதன் ஆலோசகராகவும் நூல்கள் கையேடுகள், ஒலி நாடாக்கள் வெளியீட்டுக் குழுத் தலைவராகவும் தொடக்க முதல் இருந்து வருகிறார். சிங்கையில் பல இடங்களில் சமயச் சொற்பொழிவுகளும் இலக்கியச் சொற்பொழிவுகளும் செய்து வருகிறார். திருமுறைகளைப் பரப்பும் பணியில் ஆர்வத்துடன் முன்னிற்பவர் திருவாளர் மு. சங்கரலிங்கம். திருமுறை மாநாட்டின் துணைத்தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றி மாணவர்களுக்குத் திருமுறை ஓதும் போட்டி, பேச்சுப் போட்டி நடத்தி வருகின்றார். திருமுறை மாநாடு தொடர்ந்து சிங்கையில் இடையறாது நடைபெற வைப்பு நிதியை 5000 வெள்ளி நன்கொடையாக அளித்துத் தொடங்கி வைத்த பெருமை திரு. . அருணாசலம் அவர்களையே சாரும். டாக்டர் கருணாநிதி அவர்களும் 5000 வெள்ளி இந்நிதிக்குக் நன்கொடை அளித்துள்ளார்கள். மற்ற நகரத்தார்களும் இந்த நிதிக்குக் கணிசமான நன்கொடை அளித்துள்ளார்கள். திருமுறை மாநாடு சிறப்பாக மூன்று நாட்கள் நடக்கத் தங்கள் திருமண மண்டபத்தைக் கொடுத்துதவி வருகின்றனர் தண்டாயுதபாணி கோயில் நிருவாகத்தினர்.

      திருமுறை ஆசிரியர்களாகிய நால்வர் பெருமக்கள், சேக்கிழார் ஆகியோர்களின் குருபூசை விழாக்களும் தண்டாயுதபாணி கோயிலில் நடைபெறுகின்றன. இவ்விழாக்களின் போது அடியார்களின் வாழ்க்கை வரலாற்றையும் திருவருட் பாடல்களையும் ஓதுவார்களைக் கொண்டு படிக்கச் செய்வது மரபாக இருந்து வருகின்றது. மேலும் இப்போது இராமாயணம் முழுதும் படிக்கும் நிகழ்ச்சி கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசியில் நடைபெறுகின்றது.

திருமுறையின் சாரமாகத் திகழும் சைவ சித்தாந்தத்துறை ஒன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தும் பணிக்கு நகரத்தார்கள் நன்கொடை வழங்கியுள்ளனர்.

வணிகநிலைய வழி

வங்கித் தொழில் நிலையிலிருந்து கொண்டு தமிழ்ப்பணி புரிந்த நகரத்தார் பெருமக்களில் தலைமையானவர்கள் இருவர். ஒருவர் அருள்நெறிச் செல்வர் வயி. சண்முகம் செட்டியார் ஜெ.பி. அவர்கள், மற்றவர் காரைக்குடி இராம. பெரியகருப்பனார் அவர்கள். வயி. சண்முகனார் அவர்கள் சிங்கைக்கு வருகை தந்த தமிழறிஞர்களை எல்லாம் விருந்தோம்பிய பெருந்தகையாளர். தமிழுக்கு ஊறு நேர்ந்த போதெல்லாம் தமிழ்முரசு ஆசிரியர் தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களுடன் தோளோடு தோள் நின்று தமிழ்ப்பணிக்கு உறுதுணையாக இருந்த பெருமகனார். இவர் அருள்நெறிப் பணிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் ஊட்டியவர்.

இராம.பெரி. அவர்கள் காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியை நிறுவிய செந்தமிழ்ச் செல்வர். சிங்கை வந்த தமிழறிஞர்களை நல்விருந்தோம்பிச் சிறப்பளித்து மகிழ்ந்த செம்மல். சிங்கப்பூரில் தமிழ் நலம், தமிழர் நலம் என்றால் எல்லாருடைய எண்ணத்திலும் முன் நிற்பவர்; முதலிடம் பெறுபவர் இவர் என்பர் சோம.லெ.

வயி.., இராம.பெரி. ஆகிய இருவரையும் செந்தமிழ்ப் பணி செய்வதில் இரட்டையராக விளங்கிய பெருமக்கள் என்று பாராட்டுகிறார் சோமலெ. சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம், சிங்கப்பூர்த் தமிழர் சீர்திருத்தச் சங்கம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இவர்கள் செய்த தமிழ்ப்பணி நீள நினைந்து போற்றுதற்குரியது. இவர்களின் பெருமுயற்சியால் மலாயப்பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை நிறுவுவதற்குப் பெருந்தொகையைச் சிங்கை நகரத்தார்கள் வழங்கினர்.

 

தமிழ்க்கல்வி வழி

தமிழ்க்கல்வி என்னும் தொடரைத் தமிழ் மொழிக்கல்வி, தமிழ்வழிக்கல்வி, தமிழ்பற்றிய கல்வி என மூவகையாக நோக்கலாம். இம்மூவகை நிலையிலும் தமிழ்ப் பணியாற்றியவர்கள் சிங்கை வாழ் நகரத்தார்கள். தமிழ் மொழிக்கல்வி என்பது தமிழ்மொழியைப் பயிற்றுகின்ற கல்வியாகும். சிங்கப்பூர் அரசின் இருமொழிக் கொள்கையினால் இப்போது சிங்கப்பூரில் தொடக்கநிலையில் சுமார் 8 ஆயிரம் மாணவர்களும், உயர்நிலையில் சுமார் 6 ஆயிரம் மாணவர்களும், புகுமுக வகுப்பு நிலையில் சுமார், ஆயிரம் மாணவர்களும் தமிழ் பயில்கின்றனர். இவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் தொகை சுமார் 560. இந்த ஆசிரியர்களை உருவாக்கும் பணி சிங்கையில் தொடக்கத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குரியதாக இருந்தது. பிறகு கல்விக் கழகத்திற்குரியதாயிற்று. இப்போது 1991 முதல் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த தேசியக் கல்விக்கழகத்திற்கு உரியதாகவுள்ளது.

இந்நிறுவனங்களின் தமிழ்த்துறை விரிவுரையாளர்களாக நகரத்தார் அறிஞர்கள் பணியாற்றியுள்ளார்கள். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கல்விக்கழகம் ஆகியவற்றின் தமிழ்த்துறைத் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய திரு. . தெய்வநாயகம் அவர்கள் சிங்கையில் தமிழாசிரியர்கள் பலரை உருவாக்கிய பெருமகனார் ஆவார். பணிக்கு முந்திய பயிற்சி, பணியிடைப் பயிற்சி அகியவற்றின் வாயிலாகப் பலருக்கு ஆசிரியப் பயிற்சி அளித்தவர் இப்போது சிங்கையில் தமிழாசிரியராகப் பணியாற்றுபவர்களில் மிகுதியானவர்கள் இவரால் உருவாக்கப்பட்டவர்களே. இவர் 1971-ஆம் ஆண்டில் தமிழ்கற்றல் - கற்பித்தல் தொடர்பாகக் கருத்தரங்கு ஒன்றினைக் கல்வி அமைச்சுடன் சேர்ந்து நடத்தினார். 1972-ஆம் ஆண்டில் இலக்கியக்கலை பற்றிய கருத்தரங்கு ஒன்று நடத்தினார். மேலும் தமிழ் இலக்கியக் கலாசார மன்றம் என ஒன்றை நிறுவி அதன் வழித் தமிழாசிரியராக வருவோர் இலக்கிய நலம் பாராட்டவும், படைப்பாற்றலைப் பெருக்கிக் கொள்ளவும் வகை செய்தார். இவர் பணியைப் பாராட்டிச் சிங்கப்பூர் அரசு இவருக்கு விருது அளித்துப் பாராட்டியுள்ளது.

கல்விக் கழகத்தில் 1982 முதல் இக்கட்டுரையாளர் பணியாற்றத் தொடங்கினார். 1987இல் திரு. . தெய்வநாயகம் அவர்கள் ஓய்வு பெற்றபின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றத் தலைப்பட்டார். இப்போது தேசியக் கல்விக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். சிங்கையில் தமிழ் மாணவர்களின் உச்சரிப்புத் திறனை மேம்படுத்துவதற்காகச் செந்தமிழும் நாப்பழக்கம் என்னும் நூல்களும், ஆசிரியர் கையேடும், ஒலிநாடாக்களும், ஒளி ஊடுருவித் தாள்களும் உருவாக்கினார். திருவாளர்கள் ச. தெய்வநாயகம், நா. கோவிந்தசாமி ஆகியோருடன் சேர்ந்து தமிழ் வரிவடிவப் பயிற்சிக் கையேடு ஒன்று வெளியிட்டார்; தமிழாசிரியர் தரத்தை மேம்படுத்தும் பயிற்சி வகுப்புகள் உருவாக்கிடும் பணியில் உதவினார். சிங்கப்பூர்ப் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகத்தின் பாடநூலாக்கக் குழுக்கள், பயிற்று கருவிகள் உருவாக்கக் குழுக்களுக்கு மதியுரைஞராகப் பணியாற்றினார். தமிழ் கற்றல், கற்பித்தல் ஆய்வு தழைக்கவும் உறுதுணையாக இருந்தார். தமிழில் மேனிலைப் பட்டங்கள் பெற வழிகாட்டியாகப் பணியாற்றியுள்ளார். இவரின் தூண்டுதலாலும் வழிகாட்டுதலினாலும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் அனைத்துலகக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் படித்தனர். மேலும் அண்மையில் நடைபெற்ற முதல் உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் மதியுரைஞராகவும் இவர் பணியாற்றினார். தமிழ்க்கல்வியில் சிங்கை அடைந்த முன்னேற்றத்தை அமெரிக்கா, இங்கிலாந்து, தமிழகம், மொரிசியஸ், மலேசியா முதலிய நாடுகளில் பரப்பியவர். அண்மையில் டாக்டர். இலக்குமி மீனாட்சிசுந்தரம் தேசியக்கல்விக் கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

தமிழ்ப்பாட நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் திருவாளர்கள் மு. சங்கரலிங்கமும் திரு. நா. கருப்பையாவும் பெரும் பங்காற்றினர்.

சிங்கைத் தமிழ்க்கல்வி உலகில் சிறப்பிடம் பெறுபவர்களில் ஒருவர் காலஞ் சென்ற நா. கருப்பையா இவர் 1957 முதல் 1980 வரை 23 ஆண்டுகள் சிங்கப்பூர்க் கல்வி அமைச்சின் தலைமைச் செயலகத்தில் தமிழ்ப்பள்ளிகளின் மேலாய்வாளராகவும், தமிழ்க் கல்வி வளர்ச்சி அதிகாரியாகவும் தமிழ்ப்பாடத் திட்ட மேம்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர்ச் சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி. நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1972இல் ஜப்பான் சென்று வந்தார். தமிழில் தொடக்க நிலைப் பள்ளிகளுக்கான, சிங்கையின் வரலாறு, வாழ்க்கை நலக்கல்வி ஆகிய பாட நூல்களின் தொடர் வெளியாவதற்குப் பொறுப்பாக இருந்தார். பாடத்திட்டம் உருவாவதற்கும் தமிழாசிரியர்கள் ஏனைய ஆசிரியர்களைப் போலச் சமநிலை ஊதியம் பெறுவதற்கும் வழி செய்தார்.

சிங்கையில் தமிழ் ஆசிரியர் பயிற்சி தொடங்குவதற்கும் ஆங்கிலப்பள்ளிகளிலும் தொடக்கக் கல்லூரிகளிலும் தமிழ் மொழி கற்பிப்பதற்கும் வலுவான அடித்தளம் அமைத்தவர் இவரே. (சோம லெ : 1984) இவரது தமிழ்ச்சேவையைப் பாராட்டிச் சிங்கப்பூர் அரசாங்கம் இவருக்கு விருது வழங்கியுள்ளது.

தமிழ்ப்பாடத்திட்ட உருவாக்கப் பணியில் மேற்கண்டோருடன் மெ.திரு. அரசு டாக்டர் ராம. கருணாநிதி ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர். தமிழ்மொழி பயிற்றும் ஆசிரியர்களாக நா. சிதம்பரம், மு. சங்கரலிங்கம், சீனி நாகம்மை, நாரா. கல்யாணி, செ. மங்கையர்க்கரசி, மீனாள் தேவராசன் ஆகியோர் பணியாற்றுகின்றனர். சிங்கப்பூரில் மலயாப் பல்கலைக் கழகத் தமிழ்த்தறையின் செயலாளராகத் திரு. . அருணாசலம் பணியாற்றினார்.

இந்து அறநிலை வாரியம் நடத்தும் சரஸ்வதி பாலர் பள்ளிக்குப் பொறுப்பாளராக திரு. . கண்ணப்பன், பணியாற்றுகிறார். சிங்கப்பூரில் தமிழ் கற்பிக்கும் ஒரே பாலர் பள்ளி இப்பள்ளி ஆகும்.

தமிழ் பற்றிய கல்வி தமிழ் இலக்கியம், பண்பாடு, கலை ஆகியவற்றைப் பரப்பும் பணியாகும். இப்பணியில் மேற் குறிப்பிடப்பட்ட பலரும் பணி செய்துள்ளனர்.

கணினி வழித்தமிழ் கற்பிக்கும் பணிக்குதவியவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் இக்கட்டுரையாளர், பேராசிரியர் ரகுபதி, சுப்பிரமணியம், அரு. சுப்பையா ஆகியோர்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை வழித் தமிழ்மொழி இலக்கியம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தவும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் உதவியவர்கள் திரு. கா. சண்முகம் (இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்) பழ. சுந்தரராசு முதலியோர்.

திருக்குறள் விழா ஏற்பாட்டுக் குழுவில் இடம் பெற்றுத் திருக்குறள் சிறப்பைப் பரப்பியவர்களில் திருவாளர்கள் முத்துப் பழநியப்பன், டநட. சண்முகம், வழக்கறிஞர் சித. பெரியகருப்பன் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

இலக்கிய வட்டம் என ஒன்றைத் தொடங்கி மாதந்தோறும் இலக்கிய நலன் நுகர்வுக்கு வழி வகுக்கும் முயற்சியிலும் நகரத்தார்கள் ஈடுபட்டுள்ளனர்.

புலவர் ராமசாமி கவிதைகள் எழுதுபவர், சிற்றிலக்கியப் புலமை மிக்கவர். புதுக்கவிதை எழுதுபவர்களும் சிலர் உள்ளனர். மரபுக் கவிதை எழுதும் பெண்களும் உள்ளனர். மீனா சேது நாராயணன் இவர்களுள் ஒருவர். மேலைச்சிவபுரிச் செந்தமிழ்க் கல்லூரிக் கட்டிட நிதிக்குக் கணிசமான நன்கொடை சிங்கை நகரத்தார்கள் வழங்கி உள்ளனர்.

மொழி பெயர்ப்பு வழி

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் தமிழுக்கு ஆக்கமூட்டும் பணி. இப்பணி வழிச் சிங்கையில் தமிழ் சிறக்கப் பாடுபட்டவர்களில் நாடாளுமன்ற மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றிய எஸ். நாராயணன், வானொலியில் பணியாற்றிய மெ.திரு. அரசு, மு. சங்கரலிங்கனார். இப்போது பணியாற்றும் மா. கண்ணப்பன், தமிழ் முரசின் துணையாசிரியராகப் பணியாற்றிய மெ. சிதம்பரனார், வங்கித் துறையில் பணியாற்றும் மு. முத்துப்பழநியப்பன் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். மேடைச் சொற்பொழிவுகளை உடனுக்குடன் மொழி பெயர்ப்பதில் மேன்மை கண்டு விளங்குபவர் நா. சுப்பிரமணியம். இவர்கள் முயற்சியால் நல்ல கலைச்சொல் உருவாக்கம் நடைபெற்றுள்ளது. கலைச்சொல் உருவாக்கக் குழுக்களில் பணிபுரிகின்ற நகரத்தார்களும் உள்ளனர்.

 

அறிவியல் தமிழ் வழி

அண்மையில் அறிவியல் தமிழ் என ஒன்று உருவாகி வருவதை நாம் அறிவோம். இதனை வளர்க்கும் பணியிலும் நகரத்தார்களுக்குப் பங்குண்டு. வானொலியில் அறிவியல் உலகம் நிகழ்ச்சிப்பகுதிகளில் அறிவியல் குறிப்புகளைத் தமிழாக்கித் தருபவர்கள் திரு. சங்கரலிங்கனார், தியாகராசன், தே. மீனாள் ஆகியோர். டாக்டர் இளஞ்சேரன், டாக்டர். வெள்ளையப்பன் ஆகியோர் மருத்துவ ஆலோசனைக் குறிப்புகளை வானொலி வாயிலாக நல்ல தமிழில் வழங்கி வருகின்றனர். பொறியியலாளர் நாரா. நாராயணன் பொறியியல் கருத்துகளை வானொலி, தொலைக்காட்சிப் பேட்டிகளில் தருவார்.

வானொலி தொலைக்காட்சி வழி

சிங்கையில் தமிழ் வளர்க்கும் பணியில் சிறந்து நிற்பது வானொலியும் தமிழ் முரசு நாளிதழுமே. வானொலி வாயிலாகத் தமிழ் பரப்பும் பணியில் ஈடுபட்டவர்களில் தலையாயவர் மெ.திரு. அரசு. இவர் எம்.. பட்டம் பெற்றவர். இவர் நாள்தோறும் ஒரு குறள் கூறித் தொடங்கும் பணியை வானொலியில் அறிமுகப்படுத்தினார். திருக்குறள் விளக்கக் கட்டுரைகள் பல தமிழ் நேசனில் எழுதினார். இலக்கிய விருந்து, இலக்கிய நாடகங்கள் பலவற்றை எழுதி ஒலிபரப்பினார். சிங்கப்பூர்ச் சிறுகதைகள் பற்றித் திறனாய்வு செய்துள்ளார். மலேயாவில் வடமொழித்துறை தொடங்கப் பரிந்துரைக்கப்பட்ட போது அதனை எதிர்த்துத் தமிழ்த்துறை தொடங்குவதற்கு முதற் குரல் எழுப்பித் தமிழர்களைக் கிளர்ந்தெழச் செய்தார் (சோம. லெ). சைவமும் தமிழும் தழைக்கப் பாடுபட்டார். இவர் தமிழ்ப் பணியைப் பாராட்டித் தமிழகப் புலவர்குழு பதக்கமும் பாராட்டுதலும் வழங்கிற்று.

செய்திப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய திரு. சங்கரலிங்கம், நடப்பு விவகாரப் பிரிவில் பணியாற்றும் மா. கண்ணப்பன் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சோம. நாராயணன், தொலைக்காட்சியில் நிகழ்ச்சி உருவாக்கப் பணியாற்றும் மீனாமுத்து, கிருஷ்ணன் ஆகியோர் தமிழ்ப்பணியும் பாராட்டுக்குரியது. நகரத்தார் இளைஞர்கள் சிலர். பகுதி நேர நிகழ்ச்சி அறிவிப்பாளராகப் பணியாற்றுகின்றனர். வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றிய நகரத்தார் மரபு முதற் பெண்மணி அருண் நாச்சம்மை ஆச்சி ஆவார். இக்கட்டுரையாளரின் எல்லோருக்கும் ஏற்ற தமிழ் எளிய தமிழ் என்னும் மூன்று ஆண்டு, ஐந்து ஆண்டுத் தொடர் நிகழ்ச்சிகள் தமிழ்மொழியறிவைச் சிங்கைத் தமிழர்க்கு ஊட்ட உதவின. திரு. . தெய்வநாயகம் அக்காலத்தில் வானொலியில் இலக்கிய நாடகங்கள் எழுதினார்.

செய்தித்தாள் வழி

சிங்கையில் தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களினால் தொடங்கப் பெற்ற தமிழ் முரசு நாளிதழ், சிங்கையில் தமிழ் பரப்புப் பணியில் தலையாயதாய்த் திகழ்வது. இதன் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர் மெ. சிதம்பரனார். சிங்கப்பூரில் வாழ்ந்த சிறந்த தமிழ் அறிஞர், ஆய்வாளர்; இலக்கணப் பெரும்புலவர்; நல்ல மொழி பெயர்ப்பாளர்; பல தமிழ்ச் சொற்களை உருவாக்கியவர். உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் கட்டுரைகள் படைத்தவர். தமிழ்முரசின் துணையாசிரியராக 1954 முதல் 1962 வரை முருகு சுப்பிரமணியன் பணியாற்றினார். நல்ல தமிழ் நடையை உருவாக்கியவர்; சிங்கப்பூரில் பல படைப்பிலக்கிய வாதிகள் உருவாக வழிவகுத்தவர்; கதைப் போட்டி, கவிதைப் போட்டிகளை நடத்தியவர். மேலும் வானொலி வாயிலாக இலக்கிய உரைகளை நிகழ்த்தியவர். அண்மையில் மீனாள் தேவராசன் தமிழ்முரசில் சிறிது காலம் பணியாற்றினார்.

அரசியல் வழி

அரசியல் சார்ந்து நின்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்றச் செயலாளராகவும் பணியாற்றியவர் காலஞ் சென்ற செல்லப்பா ராமசாமி. இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் திரு. கா. சண்முகம். இவர்கள் நாடாளுமன்றத்தில் தமிழ்மொழி ஒலிக்கக் காரணமாக இருந்தவர்கள் ; சில வேளைகளில் தம் உரைகளைத் தமிழில் நிகழ்த்தியவர்கள். 1963இல் பொத்தோங் பாசிர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய திரு. செல்லப்பா ராமசாமி அவர்களின் பரிந்துரையினால் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் கல்வி அமைச்சோடு தமிழாசிரியர் சம்பளம், தொழில் நிலைமை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. கல்வி அமைச்சரோடு பேச்சு வார்த்தை நடத்திய குழுவுக்கு உறுதுணையாகச் செல்லப்பா ராமசாமியும் சென்றார். இதனால் உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் தேறிய பயிற்சிபெற்ற ஆசிரியர்களுக்கு நார்மல் பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பளத்திட்டமும் செகண்ட்ரி கிரேட் ஆசிரியர்களுக்குப் புதிய சம்பளத்திட்டமும் கல்வி அமைச்சால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. புதிய சம்பளத்திட்டத்தின் பயனை அடையும் பொருட்டு 1964-65 ஆகிய ஆண்டுகளில் உயர்நிலை நான்கு வகுப்புத் தேர்வுக்கு ஆசிரியர்களைத் தயார் செய்வதற்குத் தமிழாசிரியர் சங்கம் வகுப்பு நடத்தியது. இவ்வகுப்பில் ஆசிரியர்களாகத் திருவாளர் மு. சங்கரலிங்கம், தியாகராசன் முதலியோர் பணியாற்றினர்.

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் மதியுரைஞராகத் திரு. செல்லப்பா இராமசாமி 1964 ஒட்டிய காலப்பகுதியில் பணியாற்றித் தமிழாசிரியர்கள் சம்பள உயர்வு, நிரந்தரச் சேவை பெறப் பெரிதும் பாடுபட்டார். (வீராசாமி : 1992)

சமூக அமைப்புகள் வழி

தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம், தமிழர் பேரவை, சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் முதலிய சமூக அமைப்புகளின் வழிச் சார்ந்து நின்று தமிழ்ப்பணியாற்றும் நகரத்தார்கள் சிலர் உள்ளனர். திரு. கண. கண்ணப்பன் இந்து அறநிலைய வாரியத்தின் வழிநின்று கல்விக் குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறார். சரஸ்வதி பாலர்பள்ளி வாயிலாகத் தமிழ் பரவுவதற்குப் பல வழிவகைகளைச் செய்து வருகிறார். இவரும் கட்டுரையாளரும் சிங்கப்பூர் உயர்நிலைக் கல்வி இந்து சமய நூல்கள் உருவாக்கும் பணிக்கு உதவினர். சிங்கப்பூர் போதை புழங்கிகளின் புனர் வாழ்வுச் சங்கத்தில் திரு. ராம. கருணாநிதி, திரு. நாரா நாராயணன் தலைவர்களாகப் பணியாற்றி அதன் வழித்தமிழ் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துதவினர்.

 

 

கலை நிகழ்ச்சி வழி

கலை நிகழ்ச்சிகள் வழிக் கன்னித் தமிழ் வளர்க்கும் பணியிலும் நகரத்தார்கள் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன் அருண் மகிழ்நன் முன்னின்று இந்தியக்கலை விழா நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். மக்கள் சமூக இந்தியர் நற்பணிக் குழுக்களின் சார்பில் இன்னும் பலர் கலை நிகழ்ச்சி வழித் தமிழ் வளர்க்கின்றனர். இவர்களில் நாரா. நாராயணன், கரு. பழநியப்பன் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். நகரத்தார் இளையர்கள் ஆண்டுதோறும் கலை நிகழ்ச்சி நடத்துவர். உமா கண்ணப்பன் பரத நாட்டிய வழிச் சிங்கையில் தமிழ்க்கலை பரப்பும் நங்கையாவார். இசை, துணைக்கருவி, பேச்சுப் போட்டி, கவிதை எழுதுதல் வாயிலாக இளையர்கள் பலர் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளனர்.

சிங்கையில் நகரத்தார்கள் கோவில் வழியும் திருமுறை வழியும், வணிக நிலைய வழியும், தமிழ்க்கல்வி வழியும், மொழி பெயர்ப்பு வழியும், அறிவியல் தமிழ் வழியும், வானொலி தொலைக்காட்சி வழியும், செய்தித்தாள் வழியும், அரசியல் வழியும், சமூக அமைப்பின் வழியும், கலைநிகழ்ச்சிகள் வழியும் தமிழ்ப் பணியாற்றி வரும் தகைமையை இக்கட்டுரையில் கண்டோம்.

வாழ்க, வளர்க சிங்கை நகரத்தார் தமிழ்ப்பணி !

துணை நூல்கள்

1.     சோமலெ. செட்டிநாடும் தமிழும் சென்னை : வானதி பதிப்பகம் 1984.

2.     பெ.மு.மு. முத்துப்பழநியப்ப செட்டியார், மலேயாவின் தோற்றம், பினாங்கு, 
மெர்க்கண்டைல் அச்சியந்திரசாலை 1938.

3.     வீராசாமி சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் நடந்துவந்த பாதை முதல்
உலகத் தமிழாசிரியர் மாநாட்டு மலர், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் 1992.

7 சிங்கப்பூர் நகரத்தார் பற்றிய சில செய்திகள்

டாக்டர் சுப.திண்ணப்பன்

 

  • சிங்கப்பூருக்கு நகரத்தார்கள் 1824வாக்கில் பாய்மரக்கப்பலில்  வந்து குடியேறினார்கள். முதலில்மார்க்கெட் ஸ்ட்ரீட்டில் தான் கொடுக்கல் வாங்கல்  ( Money Lending) கடைகள் வைத்து நடத்தினார்கள்.
     
  • அவர்கள் தங்கித் தொழில் நடத்திய மூன்று அடுக்கு வீடுகள் கிட்டங்கிகள்என்று அழைக்கப்பட்டன. கிட்டங்கி என்பது கிடங்கு
         ( godown)  என்னும்ஆங்கிலச் சொல்லிலிருந்து தோன்றியது.
     
  • நகரத்தார்களில் கொடுக்கல் வாங்கல் தொழிலுடன் கண்ணப்பா கம்பெனி, தேனப்பா கம்பனி லிமிடெட் என்னும் பெயரில் வியாபார நிலையங்களும்,மர ஆலைத் தொழிலும் நடத்தியவர்களும் உண்டு.
     
  • நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வர்த்தக சங்கம் 1928இல் தோன்றியது.இதற்கு மூல காரணமாய் இருந்தவர் அரு, அண்ணாமலை செட்டியார் (இராமச்சந்திரபுரம்). இளமையிலேயே ஆங்கிலத்தேர்ச்சி பெற்றவர், பல அறிஞர்களின் நண்பர். இவர் பெயரில் புக்கிட் தீமா ரோட்டில் (பழைய குதிரைப்பந்தயப் பகுதிக்கு) எதிரே அண்ணாமலை ரோடு என்ற ஒன்றுள்ளது.
     
  • பொத்தொங் பாசிர் ( மணல் வெட்டுப் பகுதி) கல்லுப்பட்டியைச் சேர்ந்தமெய்யப்ப செட்டியாருக்குரியது. எனவேதான் அவர் பெயரால் அங்கு ஒரு ரோடு உள்ளது.
     
  • சித்தி விநாயகர் கோயிலிலுள்ள விநாயகர்  உருவச்சிலை சிதம்பரத்தில் சமாதி அடைந்த பொன்னம்பல சுவாமிகளால் நிறுவப்பெற்றது. சிங்கப்பூருக்கு வந்த இந்தியப் பட்டாளத்தில் இவரும் ஒருவராக வந்தார் அப்போது அவர் ஒரு விநாயகரை வைத்து வணங்கினார். உத்தியோக மாறுதலால் தாயகம் செல்லும்போது அந்த விநாயகரை அனபர்கள் சிலரிடம் கொடுத்துச்சென்றார். இந்த விநாயகருக்கு நகரத்தாரகள் கோயில் அமைத்தார்கள்.ஆங்கிலேயரின் படைகள் தங்கியிருந்த சிப்பாய் லயனில் இக்கோயில்இருந்ததால் லயன் சித்தி விநாயகர் கோயில் எனப்பெயர்பெற்றது இக்கோயில் தற்போதுள்ள சிங்கப்பூர் பொதுமருத்துவ மனையின்சவக்கிடங்கு இருக்கும் இடத்தின்அருகில்இருந்தது.பொதுமருத்துவமனைவிரிவுபடுத்தப்பட்டபோது அரசினரிடம்  நகரத்தார்கள் இந்த இடத்தைக் கொடுத்துவிட்டு கியோங் சியாக் ரோட்டில் இடம் வாங்கிக் கோயில் கட்டி1-6-1925இல் குடமுழுக்கு நடத்தினர் ¢மறுபடியும் புதுப்பிக்கப்பெற்று10-11-1989இல ¢குடமுழுக்கு நடத்தப்பட்டது. சிதம்பரத்தில உள்ளபொன்னம்பல சுவாமி மடம் இப்போது கோயிலூர் ஆதினத்தின்நிர்வாகத்தில் உள்ளது.
     
  • தேங்க் ரோடு தண்டாயுதபாணி கோயில் 1859இல் கட்டப்பட்டு
       4-4-1859இல்குடமுழுக்கு செய்யப்பட்டது. இதன் சிறப்புகள் பற்றிக்                                         குடமுழுக்கு விழாமலரில்(1996) நான் எழுதிய கட்டுரையைப ¢பார்க்க.
     
  • தைப்பூசம் 1888ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு
       வருவதாகத்தெரிகிறது. முதலில் தைப்பூசம் மூன்று நாள்கள் நடந்தது.
          மூன்றாம் நாள் முருகனை வெள்ளிக் கேடகத்தில் வைத்து ஆர்ச்சர்
          ரோடு வழியாக கடற்கரை ஓரத்தில் பீச்ரோட்டுக்குக் கொண்டுவந்து
          இரவு மணி எட்டுக்கு வாண வேடிக்கை நடத்தித் திரும்பினர். 1937
          வரை இது நடந்தது. 1938 ஆண்டினை ஒட்டிய காலப் பகுதியில்
          டிராம் பஸ்கள் பல தெருக்களில் ஓடியதால் அவற்றை இயக்கிய
          மின்சாரக்கம்பிகளைப் பல இடங்களில் தூக்க வேண்டிய தொல்லை
          கருதித்தைப்பூசத்தின் போது முருகன் வெள்ளிரதத்தில்
          பவனி  வராமல் இருந்தார்.வெள்ளிக் கேடகத்தில் மு¢ருகன்
          பவனி நடைபெற்றது.
     

  • 1938 வாக்கில் சிங்கப்பூரில் நகரத்தார்கள் ஒரு கலாசாலை (பள்ளி) நடத்த முன்வந்தார்கள். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்தேவகோட்டை எ.செ.செல்லப்ப செட்டியார ஒருவர். இவர் 1920இல சிங்கை வந்து இங்கு ஆங்கிலப்பள்ளியில் படித்தவர். இம்முயற்சி கைகூடவில்லை.ஆர்ச்சர் ரோட்டில் பள்ளிக்கூடத்தை ஒருவரிடம் வாங்கி ஆதரவு கொடுத்துநடத்தினார்கள். செட்டியார்களின் பள்ளிக்கூடம் ( Chettiars Premier Institution) என்பது அதன் பெயர்
     
  • சிங்கப்பூர் நகரத்தார்கள் பற்றி  The Chettiars of Singapore: A Study
                            of an Indian Minority Community in Southeast Asia
                என்னும் தலைப்பில் ஜெயராணி பாவாடைராயன்
                என்பவர  ஜர்மனி   Bielefeldபல்கலைக்கழகத்தில்
                ஆய்வுசெய்து டாக்டர்  பட்டம்  பெற்றுள்ளார். ( June 1986)
     

நம் நகரத்தார் ஆச்சிமார்களின் ஆற்றல், ஆளுமைத்திறன் பற்றி
            அண்மையில் (1998) ஒரு ஜப்பானியப் பெண்மணி டாக்டர்
            Yuka Nishimura என்பவர்  Gender, Kinship & Property Rights-       
                        Nagarattar Womanhood in South India என்னும் தலைப்பில்
            ஓர் ஆய்வு நூல் வெளியிட்டுள்ளார்.
 
உதவின நூல்:
பெ.நா.மு. முத்துப் பழனியப்ப செட்டியார் எழுதிய மலயாவின்
தோற்றம் 1938   
8 அருள்மிகு லயன் சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு
மலர்க் குழுவினர் உரை
 
அருள்மிகு லயன் சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவினை ஒட்டி முதன்முதலாக வெளியிடப்படும் மலர் இது. இப்பொறுப்பினை எங்களிடம் கொடுத்துதவிய சிங்கப்பூர் செட்டியார் கோயில்கள் குழும மேலாண்மைக் குழுவினர்க்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
இம்மலர் வாழ்த்துச் செய்திகள், கட்டுரைகவிதைகள், விளம்பரங்கள், நன்றிமலர்கள் என நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. வாழ்த்துச் செய்திகளில் நம்குடியரசின் அதிபர் மாண்புமிகு எஸ்.ஆர். நாதன், துணைப் பிரதமர்
பேராசிரியர் ஜெயகுமார், வணிகத் துறைத் துணை அமைச்சரும் சிறப்பு விருந்தினருமான திரு ஈஸ்வரன் முதலிய பிரமுகர்களின் வாழ்த்துகள் உள்ளன. வாழ்த்துச் செய்திகள் வழங்கியவர்களுக்கு எங்கள் நன்றி.
 
கட்டுரை கவிதைகள் அனைத்தும்  இக்கோயிலையும் விநாயகப் பெருமானையும் கருப்பொருளாகக் கொண்டே அமைந்துள்ளன. இவற்றைத் தமிழ்நாடு, மலேசியா, சிங்கை, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் கவிஞர்களும் எழுதியுள்ளனர். கட்டுரைகள் பல தமிழிலும், சில ஆங்கிலத்திலும். ஒன்று சீன மொழியிலும் தரப்பட்டுள்ளன. முதலில் லயன் சித்தி விநாயகர் கோயிலின் தோற்றம் வரலாறு முதலிய பலவகைச் சிறப்புகளை விளக்கும் கட்டுரைகள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோயிலில் இப்போது எழுப்பியுள்ள இராஜகோபுரச் சிற்பச்  சிறப்பினை அதன் ஸ்தபதி  நாகராஜன் ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளார். இக்கோயில் மூலவரான விநாயகர் தொடர்பான தத்துவம், சைவ சமயத் தோத்திரம் சாத்திரம் ஆகியவற்றில் அவருக்குரிய இடம், சைவ சித்தாந்த நோக்கில் விநாயகர், விநாயகரை வழிபடும் முறை, விநாயகர் வேள்வி, விநாயகரின் வேறுபட்ட வடிவங்கள், நகரத்தாருக்கும் விநாயகருக்குமுள்ள பிணைப்பு, பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர் கோயில் அற்புதம், சிங்கை, மலேசியா விநாயகர் கோயில்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விநாயகர் வழிபாடு எனப் பல கட்டுரைகள் விநாயகர் பற்றிய பலப்பல தகவல் தரும் களஞ்சியங்களாக உள்ளன. மேலும் இக்கோயில் வழிபாட்டில் இடம்பெற்றுள்ள நாகர், இராம நாமம் தொடர்பான
கட்டுரைகளூம் உள்ளன. இறுதியில் சைவ சமயத்தின் அடிப்படைக் கூறுகளை விளக்கும்  பேராசிரியர் கனகசுந்தரம் அவர்களின் ஆங்கிலக் கட்டுரை ஒன்றும், சீனர்கள் இக்கோயில் வழிபாட்டில் ஈடுபடும் சிறப்பினைப் பற்றிய சீன ஆங்கில மொழிக் கட்டுரைகளும் உள்ளன. இவை தமிழரல்லாதார் சைவ சமயம் பற்றியும் இக்கோயில் பற்றியும் அறியத் துணைபுரியும்.
 
 
 
கவிதைப் பகுதியில் சிங்கப்பூரின் மூத்த கவிஞர் முருகடியான் திருப்பள்ளிஎழுச்சி பாடிச் சித்தி விநாயகரை எழுப்புகிறார். சித்திரக் கவியில் அவரை இரதபந்தத்தில் ஏற்றி வைத்து வணங்குகிறார் வெண்பாச் சிற்பி இக்குவனம். அவருக்கு மும்மணிக்கோவை அணிவிக்கிறார் சோம இராமசாமி. கீர்த்தனை பாடி இசையால் வழிபடுகிறார் பாத்தூரல் முத்துமாணிக்கம். சீர்மல்கும் சித்தி விநாயகர் அருளை அள்ளித் தர வேண்டுகின்றனர் இரண்டு இளைய கவிஞர்கள்.
வாரம் முழுதும் வழிபட்டு இன்பமே அளிக்க அவரிடம் இறைஞ்சுகின்றனர் இரு பெண் கவிஞர்கள். வேலைப் பாடுவதே என் வேலை என்கிறார் தமிழகக் கவிஞர் அரசி.
 
விளம்பரங்கள் இம்மலர் வெளிவர உறுதுணையானவை. இவை பல பக்கங்களில் இடையிடையே விரவித் தரப்பட்டுள்ளன. இவற்றைத் தந்துதவிய வணிகப் பெருமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் எங்கள் நன்றி. இறுதியில் மேலாண்மைக் குழுத்தலைவர் குடமுழுக்கு விழா சிறப்புற நடைபெற உதவியவர்களுக்குத் தெரிவித்த நன்றிமலர்கள் இடம் பெற்றுள்ளன.
 
கோயில்தொடர்பான வண்ணப்படங்கள் மலரில் ஆங்காங்கே இடம் பெற்று எழில்கூட்டுகின்றன எங்கள் வேண்டுகோளுக்கிணங்கிக் கட்டுரைகள், கவிதைகள் தந்து மலருக்கு மணமூட்டிய அறிஞர்கள், கவிஞர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இம்மலரை அழகுற உருவாக்கித் தந்த  நிறுவனத்தாருக்கும் எங்கள் நன்றி.
 
மலர்க்குழுவினர்.

...தொடரும்.....

Dr S.P. Thinnappan









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக