வியாழன், 1 மே, 2014

அணிந்துரை - 3


மா. அன்பழகன்

கவித்தொகை

2012


இன்று தமிழில் கிடைக்கும் நூல்களில் தொன்மையானது தொல்காப்பியம். கி. மு. மூன்றாம் நூற்றாண்டினை ஒட்ழ எழுதப்பட்ட நூல் என்பது ஆய்வாளர் பலரது கருத்தாகும். இந்நூல் ஓர் இலக்கண நூல். ஓர் இலக்கணம் உருவாக வேண்டுமானால் அதற்கு முன் அம்மொழியில் பலப்பல இலக்கியங்கள் இருந்திருக்கவேண்டும். எனவே தொல்காப்பியம் தமிழ் இலக்கியத்தின் தொன்மையைக் காட்டும் சான்று நூலாகவும் திகழ்கிறது. இந்திய மொழிகளுள் எல்லாவற்றிலும் காணப்படும் தொன்மையான இலக்கண நூல்கள் யாவும் சமஸ்கிருதச் சாயலுடன் திகழத் தமிழ்த் தொல்காப்பியம் மட்டும் தனித்ததோர் இலக்கண மரபுடையதாகத் திகழ்கிறது. இது தமிழ் மொழியின் இலக்கண மரபினையும் இலக்கணக் கோட்பாட்டினையும் வெளிப்படுத்துகிறது. தொல்காப்பியத்தில் 200க்கு மேற்பட்ட நூற்பாக்கள் பண்டைய இலக்கணச் செய்திகளை மேற்கோள்களாகக் காட்டியிருப்பது இதனை மெய்ப்பிக்கும். உலகிலுள்ள மொழிகளில் இலக்கணம் என்பது எழுத்து, சொல், தொடர் அமைப்புகளை மட்டுமே குறிக்கும். ஆனால் தொல்காப்பியமோ இவற்றுடன் இலக்கியத்தின் உள்ளடக்கம். உருவம், உணர்த்தும்முறை ஆகியவற்றை உரைக்கும் பொருள் இலக்கணத்தையும் புகலும் சிறப்புடையது.


அந்தப் பொருள் இலக்கணம் கூறும் பகுதியில் தொல்க்காப்பியம் யாப்பு அடிப்படையில்அமைந்த அக்காலத் தமிழ் இலக்கியத்தை ஏழுவகையாகப் பகுத்துப் பேசுகிறது. பாட்டு, உரை, நூல்,வாய்மொழி (மந்திரம்) பிசி,அங்கதம், முதுசொல் (பழமொழி) ஆகிய ஏழும்


வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

நாற்பேர் எல்லை அகத்தவர் வழங்கும்

யாப்பின் வழியது என்மனார் புலவர்-(1338)


என்பது தொல்காப்பிய நூற்பா. இந்த ஏழு வகை இலக்கியத்தில் பாட்டு(கவிதை) என்பது அடி வரையறைக்குட்பட்டது. ஏனைய ஆறும் அடி வரையறைக்கு உட்படாதவை . இவற்றுள் பிசி என்பதற்கு


நொடியொடு புணர்ந்த பிசி (1421) என்றும்


நொடியொடு புணர்ந்த உவமத் தானும்

தோன்றுவது கிளந்த துணிவினானும்

என்று இருவகைத்தே பிசிவகை நிலை(1432)


என்றும் தொல்காப்பியம் வரையறை வழங்குகிறது.


இந்த நூற்பாக்களுக்குப் பின்வருமாறு பேராசிரியர் தமிழண்ணல் உரை கூறுகிறார்.


‘‘பிசி என்பது விடுகதை இதற்குக் கற்பனைத்திறன் மிகுதியாக வேண்டும். ஒப்போடு புணர்ந்த உவமை கூறிப் புதிர் போடலாம். அதை விடுவிக்க வேண்டுமெனில் ஒப்புமைத்தன்மை தெரியவேண்டும். தோன்றுவது கிளந்த துணிவு- ஒன்றைச் சொன்ன அளவில் அதனொடு தொடர்புடையது தோன்ற வேண்டும்.’’


கத்திபோல் இலை இருக்கும்

கவரிமான் பூப்பூக்கும்

என்றது வேப்பிலை


இது ஒப்பொடு புணர்ந்த உவமை. அதன் தொடர்ச்சியாகத்


தின்னப்பழம் பழுக்கும்

தின்னாத காய் காய்க்கும்.


இது வேப்பம்பழம். தோன்றுவது கிளந்ததுணிவு. இதில் உவமை இல்லை.


விடுகதை நாட்டுப்புற மக்கள் இலக்கியம் . இதில் புதிர் போடவும் விடுவிடுக்கவும் இலக்கியக் கற்பனைத் திறன். அதற்கு அடித்தளமான உலக அனுபவம் . பட்டறிவு, கூர்மை,உடனே நுனித்தறியும் துடிப்பு எல்லாம் வேண்டும்.”


இத்தகைய புதிர்க் கவிதைகளைப் புதுமைத் தேனீ அன்பழகன் இயற்றிக் கவித்தொகை என்று தலைப்பிட்டுத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடும் முயற்சி பாராட்டுக்குரியது.


சென்றவர்களைத் திருப்பியனுப்பாத வீடு

அதை நோக்கியே எல்லாருடைய பயணங்களும்

சிலர் வேகமாகவும், சிலர் மெதுவாகவும். .

மரணம்(4)


கோட்டைக்குள் ஒரு கோட்டை! அதற்குள்

வெள்ளிமலைப் பனிச்சருக்கு

விளையாட ஒரு நீச்சல் குளம்

இளநீர்!(31)


என்னும் கவிதைகள் ஒப்பொடு புணர்ந்த உவமை கூறி அமைத்த புதிர்க்கவிதைகள்.


என்வரவை வாழ்த்தி

மண்ணோர் புகழ்பாடுவர்!

வண்ணார் வசை பாடுவர்!

மழை!(16)


என்னும் கவிதை தோன்றுவது கிளந்த துணிவுக்கோர் எடுத்துக்காட்டு.


பச்சை சிவப்பாகும், பாவையர் கைவடிவாகும்

இட்டசில நாழிகையில் சுட்டவடு போலாகும்

சின்னாளே ஆயுளாம் செவ்வந்திக் கோலத்துக்கு

மருதாணி!(100)


என்னும் கவிதையில்ஒப்பொடு புணர்ந்த உவமையும் தோன்றுவது கிளந்த துணிவும்இணைந்திருக்கக் காணலாம்.


குறுகிய வடிவம், நறுக்குத்தெறித்த சொல்லாட்சி, நல்ல கற்பனை , சிந்தனையைத் தூண்டும் சிறப்பு, விடைகாண உதவும் தலைப்பு என்னும் சிறப்பியல்புகளைக் கொண்ட 133 கவிதைகளை வள்ளுவர் குறளை நினைவூட்டும் வகையில் கவித்தொகையாக அமைத்து வெளியிட்டுள்ள புதுமைத்தேனீ அன்பழகனைப் பாராட்டி மகிழ்கிறேன். அவர் இன்னும் பல புதுமை சார்ந்த நூல்களைப் படைத்துத் தமிழுக்கு அணி சேர்க்க வாழ்த்துகிறேன்.


கி.கோவிந்தராசு


களமாடிய சொற்கள்.

28/11/12.


களமாடிய சொற்கள் என்னும் தலைப்பில் கவிஞர் கி.கோவிந்தராசு எழுதி வெளியாகும் கவிதைத் தொகுப்பு நூலைப் படித்து மகிழ்ந்தேன். களம் என்னும் சொல் தமிழில் பலபொருள் உணர்த்தும் ஒன்றாகும். இடம், நெற்களம், சபை, போர்க்களம், வேள்விச் சாலை, களர் நிலம், உள்ளம், திட்டு முதலிய பல பொருள்கள் களம் என்னும் சொல்லுக்குண்டு எனத் தமிழகராதி சொல்கிறது. களத்தை ஏர்க்களம், போர்க்களம் எனப் பகுப்பதும் தமிழ் மரபாகும். ஏர்க்களம் கண்டாடிய சொற்கள் கவிதையான நூல் தான் கம்பன் பாடிய ஏரெழுபதாகும். போர்க்களம் கண்டாடிய சொற்கள் கவிதைகளாக உள்ளதைச் சங்க இலக்கியமாகிய புறநானூறு வழி பார்க்கலாம்.ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய’ (புறம்-2) எனப் புறநானூறு பாரதப் போர்க்களத்தைப் பேசுகிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய களவழி நாற்பதும், சிற்றிலக்கியங்களில் சிறப்பிடம் பெறும் கலிங்கத்துப் பரணியும் போர்க்களத்துதித்த சொல்லோவியங்களே. போர்க்களம் ஏர்க்களம் போன்றவற்றில் செயலாற்றுவதைக் காட்டிலும் கற்றோர் கூடிய அவைக்களத்தில் அஞ்சாது நின்று சொல்லாற்றலால் செயலாற்றுபவர் சிறப்பைத் திருவள்ளுவர் அவையஞ்சாமை என்னும் அதிகாரத்தில் பேசுகிறார்.


      பகையகத்துச் சாவார் எளியர், அரியர்

அவையகத்து அஞ்சா தவர் ” – (குறள் 723)

    

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

      சொல்ஏர் உழவர் பகை.” – (குறள் - 872)


என்னும் குறள்கள் வழி இதனை உணரலாம். மேலும் இறுதிக் குறளில்

      

     உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

     கற்ற செலச்சொல்லா தார்.” – (குறள் – 730)


என்னும் குறளில் களம் கண்டாடிய சொல்லாற்றல் இல்லாதார் உயிருடன் இருந்தும் ஒரு பயனும் இல்லாதார் எனக் கூறுகிறார்.இலக்கண நூல்களும் சிறப்புப் பாயிரம் பற்றிப் பேசும்போது களம் என்பது நூல் அரங்கேறும் சபையைச் சுட்டிக் காட்டுகின்றன . (நன்னூல் –48).


நூலுக்குப் பஞ்சு போலக் கவிதைக்குச் சொற்களே முதற்காரணமாக உள்ளன. சொல்விளையாட்டே கவிதை.சொற்கள் நடந்து வந்தால் உரைநடை, சொற்கள் நடனமாடினால் கவிதை”. தகுந்த இடத்தில், தகுந்த வரிசையில் தகுந்த பொருளில் சொற்களைத்தருவதே கவிதை. கவிதை என்னும் சொல்லுக்குள்ளே தான் அதற்குரிய விடைதரும் கவி, தை, விதை, கதை என்னும் சொற்கள் ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சிகாட்டுவதைக் காணலாம்.செவ்விய கூரிய தீஞ்சொல்எனக் கவிதையைப் பற்றிக் கூறும் கம்பன் தன் காப்பிய நாயகியாகிய , சீதையை அறிமுகப் படுத்தும் போது செஞ்சொற் கவி இன்பம்எனச் சுட்டுவதிலிருந்தே கவிக்கும் சொல்லுக்குமுள்ள தொடர்பைக் கணிக்கலாம். காப்பிய நாயகனாகிய இராமனின் கூரிய அம்புக்கும் செஞ்சொல் தான் கம்பனுக்கு உவமையாக வருகிறது.


சொற்கள் நடனமாடும் கவிதைக்குரிய களங்களாக ஆடுஅரங்குகளாகச் சிங்கப்பூரில் பல தளங்கள் உள்ளன. கவிமாலை, கவிச்சோலை முதலிய தளங்கள் திங்கள்தோறும் கவிதையை வளர்க்க உதவுகின்றன. தமிழ் முரசு, வானொலி முதலிய ஊடகங்களும் கவிதை வளர்ச்சிக்கு உரமூட்டி உதவுகின்றன. அமைப்புகள் அவ்வப்போது நடத்தும் கவியரங்கங்கள் போன்ற நிகழ்ச்சிகளும் கவிதை வளர்ப்புக்கு ஊக்கமும், ஆக்கமும் ஊட்டும் களங்களாக உள்ளன. இத்தகைய களங்களில் நடனமாடிய சொற்களால் உருவான கவிதைகளைத் திரு.கி.கோவிந்தராசு களமாடிய சொற்கள்என்னும் தலைப்பில் தொகுத்து நூலாக்கித் தந்துள்ளார்.


இந்நூலிலுள்ள கவிதைகள் அனைத்தும் மரபுக் கவிதைகளாக இருப்பதைக் கண்டு மகிழ்வு மிகக்கொண்டேன். வெண்பா, ஆசிரியப்பா, விருத்தம், சிந்து, வண்ணம் முதலிய மரபுக் கவிதைகள் இந்நூலில் உள்ளன.மேலும் மரபுக்கு மதிப்பளிஎன்னும் தலைப்பில் இந்நூலில் கவிஞர் எழுதியுள்ள கவிதைவழி அவருக்கு மரபுவழிக் கவிதை இயற்றுவதில் உள்ள அழுத்தமும், பிடிப்பும் புலப்படுகின்றன.


கண்ணிருந்தும் இல்லார்போல் வாழலாமா?

கனித்தமிழின் இலக்கணத்தை மீறலாமா?

தன்மையான தமிழ்மரபை மறந்துவிட்டுத்

தறிகெட்டுத் தாறுமாறாய் எழுதலாமா?”


எனக்கேள்விகளைக் கேட்டுவிட்டு


அழுத்தமுடன் நான்சொல்வேன் அழகுடைய

அருந்தமிழ்க் கவிதைக்கு மரபழகு


எனக் கூறுகிறார் கவிஞர் கோவிந்தராசு. யாப்பிலக்கணம் படிப்பது கடினம் என்று கருதிப் புதுக்கவிதைக்குத் தாவும் இக்கால இளையர்களிடையே இவரின் போக்கு போற்றுதற்குரியது. இடத்தையும்,காலத்தையும் கடந்துவாழும் இயல்பு மரபுக் கவிதைக்குரிய இயற்கைப் பண்புகளில் ஒன்றல்லவா?


கவியரங்கத் தளம் கண்ட கவிதைகளில் வள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் தொடர்பான கவிதைகளும் தீபாவளி, பொங்கல் முதலிய விழாக்கள் பற்றிய கவிதைகளும் தமிழ்மொழிச் சிறப்புப் பற்றிய கவிதைகளும் உள்ளன. இவை


பண்பாட்டில் மட்டுமா பழைமையுடையோர் நாம், கவிப்

பண் பாட்டிலும் அந்தப் பழமரபு காத்திடுவோம்


என்பதைப் புலப்படுத்துகின்றன.தமிழ்தான் தமிழர்க்கு முகவரி என்பதைக் கவிஞர் கூறி,


முகவரியைத் தொலைத்துவிட்டு, முகாரி பாடாதே

முகவரி இல்லாப் பயணம் முடிவுக்கு வந்ததாகச்

சான்றுகளில்லை


என்றுவிடுக்கும் எச்சரிக்கை பாராட்டத்தக்கது.


இப்பகுதியில் இடம்பெற்றுள்ள இயற்கை என்னும் தலைப்பில் இடம்பெற்ற கவிதையில் நல்ல கற்பனை நயமும், ஓசை நயமும்உள்ளதைக் காணலாம்.


காலையிலே கையசைத்துக் கதிரவனும்வருவான்

சோலைமலர்க் காதலியர் செவ்விதழ்கள் திறப்பான்

நீர்கொண்ட வெண்மேகம் நீல்கருப்பாய் மாறும்

கார்கண்டு ககனத்தில் கானமயில் ஆடும்


என்னும்வரிகளை எடுத்துக்காட்டாய்க் கூறலாம்.

கண்ணதாசனின்வீரம் என்னும் தலைப்பில்


     வெட்டுவதும் முட்டுவதும் வீரம் இல்லை

     வெற்றிஒன்றே வீரமெனில் வாழ்க்கை இல்லை

     எட்டும்வரை எதிர்நீச்சல் வாழ்வில் போட்டு

     இறுதிவரை முயல்வதே வீரம் என்றார்


என்னும் கவிதை வரிகளின் கருத்துக்கள் போற்றத்தக்கன. உண்மையான வீரம் மன உறுதியே வினைத்திட்பம் என்பது மனத்திட்பமேஎன்பது இக்கால மக்களுக்குத் தேவையான கருத்தாகும்.


அடுத்துக் கவிமாலைத் தளத்தில் இமயம் பெரிதோ இயம்புஎன்னும் ஈற்றடி வெண்பாவுக்குரிய பகுதியில் தொடக்க வெண்பாவும் இறுதி வெண்பாவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.


திசையெட்டும் வாழ்த்துமழை தென்னவனாம் ரஹ்மான்

இசையால் இருவிருதை ஏற்றான் மிசையில்

தமதுஇனத் தன்மானம் தற்காத் தவன்முன்

இமயம் பெரிதோ இயம்பு.


எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று தமிழ்ச்

சொல்லால் விழாவில் சுடர்விட்டான் எல்லா

வளமும் வசதியும் பெற்றவன் நன்றாய்

நலமுடன் வாழ்கநெடு நாள்.


பயணம் என்னும் தலைப்பில் உள்ள பாடல்:


நீரின் பயணம் நதியாகும்

நிலவின் பயணம் ஒளியாகும்

காரின் பயணம் மழையாகும்

காற்றின் பயணம் இசையாகும்

வேரின் பயணம் மண்ணோடு

விழுதின் பயணம் வெளியோடு

பாரில் யாவும் பயணிக்கும்

பயணம் என்றும் முடியாதே.


இப்பாடலில் நல்ல சொல்லாட்சியும் உவமையும் உள்ளன.இவ்வாறே எதிரி என்னும் தலைப்பில் உள்ள பாடலில்


நீருக்கு எதிரி நெருப்பு என்றால்

நிலவுக்கு எதிரி பகல் என்றால்

கீரிக்கு எதிரி பாம்பு என்றால்

கீழோர் மேலோர்க்கு எதிரியாமோ?

மீனுக்கு எதிரி குருகு என்றால்

மேற்கும் கிழக்கும் எதிர் என்றால்

மானுக்கு எதிரி புலி என்றால்

மனிதர்க்கு எதிரி யாரோசொல்? ,


என்று கேட்டு இறுதியில் மனிதனுக்கு எதிரி மனிதனே என்று முடித்திருக்கும் பாங்கு சிறப்பாக உள்ளது. இங்கே


கேணி மேட்டில் நின்று சிங்கம்

கிணற்றுள் முறைத்த கதைபோல

காணீர் கண்ணாடியின் முன்னே

காட்சி கொடுப்பான் உம்எதிரி


என்னும் அடிகளில் ஒரு சிறுகதையை ஓரடியில் கூறியிருப்பதும் அதற்கேற்ற கருத்தைச் சுட்டிக்காட்டுவதும் அருமை!


குற்றவாளி என்னும் தலைப்பில் பலரை இனம்காட்டும் பாங்கும் பாராட்டத்தக்கது.


ஆழமாய்க் கற்றவன் அறிவாளி

ஆசையால் வீழ்பவன் ஏமாளி

நாளையை உணர்ந்தவன் புத்திசாலி

நகைச்சுவை தருபவன் கோமாளி

நூல்பல கற்றவன் படிப்பாளி

நுட்பம் அறிந்தவன் படைப்பாளி

வாழ்வினில் அகிம்சையைக் கல்லாமல்

வன்செயல் புரிபவன் குற்றவாளி.


கவிச்சோலைக் களத்தில் பாடிய கவிதைப்பகுதியில் திறவுகோல் என்னும் தலைப்பில்


எண்ணும் எழுத்தும் கண்ணாகும்

இல்லாதார் கண் புண்ணாகும்

பண்ணும் இசையும் ஒன்றாகும்

பயின்றவர் உள்ளம் உயர்வாகும்

பொன்னும் பொருளும் வரும்போகும்

புரிந்தால் வாழ்க்கை நலமாகும்

எண்ணம் என்பது பூட்டாகும்

இலக்கியம் திறவு கோலாகும்


என இடம்பெறும் கவிதையும் இனிமை பயக்கிறது.


உள்ளிய தெல்லாம் உடன்எய்தும்உள்ளத்தில்

உள்ளான் வெகுளி எனின்” (குறள் 309)


என்று வள்ளுவர், ‘சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லியைப் பற்றிப் பேசுகிறார். இதற்கேற்பக் கவிஞர் கோவிந்தராசும்சினம் விடுஎன்னும் தலைப்பில் ஒரு கவிதை இயற்றியுள்ளார். இவ்வாறே கவிமாலைப் பகுதியில் செருக்கடையாமை என்னும் தலைப்பில் பத்துக் குறள் வெண்பாக்கள் உள்ளன. இவை


யான்எனது என்னும் செருக்குஅறுப்பான்வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்” (குறள்346)


என்னும் திருக்குறளை நினைவூட்டுகின்றன.


இவ்வாறு மரபுக்கவிதைவழி மக்களுக்குத் தேவையான கருத்துகளைச் சுவைபடச் சொல்லும் கோவிந்தராசுவின் முயற்சி பாராட்டத்தக்கது.இவர் ஒரு வளரும் கவிஞர். எனவே இவரது கவிதைப்பயண முயற்சியில் இவர் வெற்றிபெற நிறையக் கவிதை நூல்களைப் படிக்க வேண்டும். அப்போது சொல்வளமும் கற்பனை நயமும் உவமைச் சிறப்பும் ஓசை நயமும் இவரது கவிதைகளில் இன்னும் மிகுதியாக இடம்பெற வாய்ப்புண்டு.இவரது கவிதைப் பயணம் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.



28/11/12.




இராம. வயிரவன்

கவியரங்கக் கவிதைகள்


30.11.2012



     கவியரங்கம் என்னும் சொற்றொடர் கவி, அரங்கம் என்னும் இரண்டு சொற்களால் உருவான ஒன்று. கவி என்பதுகவிச்சக்கரவர்த்திஎன்னும் தொடரில் கவிஞனையும், ‘கவிமாலைஎன்னும் தொடரில் கவிதையையும் குறிக்கும். கவி என்னும் சொல்லுக்கு மேலும் ஒரு சிறப்புண்டு. அது கவிதல், கவித்தல் என்னும்போது வினைச்சொல்லாகவும், கவி என்னும் போது பெயர்ச் சொல்லாகவும் அமையும் இயல்பையும் பார்க்கலாம். கவி எப்படி இருக்கவேண்டும்?


உள்ளத்தைத் தொடுவது கவிதை - உள்மன

     உணர்வினைக் கவர்வது கவிதை

பள்ளத்தை இதுவெனக் காட்டி - நல்ல

     பாதையில் விடுப்பது கவிதை


கருத்தொடு மிளிர்வது கவிதை - உயர்

     கற்பனை உள்ளது கவிதை

விருப்புடன் கற்பது கவிதை - பலர்க்கும்

     விளங்கிட இருப்பது கவிதை


செஞ்சொலால் அமைவது கவிதை - ஓசைச்

     சிறப்புக்கும் உரியது கவிதை

எஞ்சலில் இன்பத்தை ஈந்து - செய்யுள்

     இலக்கணம் கொண்டது கவிதை



வெற்றுச்சொல் அடுக்குகள் இன்றி - அரிய

     விருந்தினை அளிப்பது கவிதை

கற்பார் நெஞ்சினில் வற்றா ஊற்றாய்க்

     கலைக்கிடமாவதும் கவிதை

- .கி. பரந்தாமனார்.


     அரங்கம் என்னும் சொல் அரங்கு என்பதன் அடிப்படையாக வந்த ஒன்று. நாடகமாடும் மேடை, கற்றோர் கூடியிருக்கும் சபை, ஆற்றிடைக்குறை, சூதாடுகளம் முதலிய பொருள்களை உடையது. அரங்கேற்றுகாதை, அரங்கேற்றம், திருவரங்கம், அரங்கின்றி வட்டாடியற்றே முதலிய இலக்கியத் தொடர்கள்வழி இதனை உணரலாம்.

    

     எனவே கவியரங்கம் என்பது கவிஞன் தன் கவியாற்றலைக் காட்டும் வகையில் புனைந்த கவிதையைக் கற்றோர் கூடியிருக்கும் அவையில் முதன்முதலாகப் பாடி அரங்கேற்றுவது, மேடையேற்றுவது ஆகும். புலவர்கள் தாங்கள் இயற்றிய நூலை ஏனைய புலவர்கள் பலர் கூடியுள்ள அவைமுன் அரங்கேற்றம் செய்தது தொடர்பான செய்திகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் உள்ளன. சங்கப் புலவர் முன் திருக்குறள் அரங்கேற்றம் பற்றிய செய்தியும், காஞ்சியில் கந்தபுராணம் அரங்கேற்றம் பற்றிய செய்தியும், திருவரங்கத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றம் பற்றிய செய்தியும் சான்றுகளாக உள்ளன. தமிழ் நூல்களில் உள்ள அவையடக்கம் பற்றிய பகுதியும் இதற்கு அரணாக அமையும்.

    

     கவியரங்கம் என்னும் தொடர் தமிழில் இறையனார் களவியல் உரையில்அவருள் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர் என்ப ” (இறை, உரை) எனத்தமிழில் முதன்முதலில் இடம்பெறுகிறது. இது புலவனாகக் கற்றறிந்தோரால் ஏற்றுக்கொள்ளப்படுவதை -அங்கீகாரம் பெறுவதைச் சுட்டுகிறது.


     கவியரங்கத்தை ஒரு வகையில் செவியரங்கம் என்றே சொல்லலாம். கவிதையைச்செவிநுகர் கனிகள்எனச் சித்திரிக்கிறான் கம்பன். கவிதையைப் பாவெனக்கூறி வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா என வகைப்படுத்தும் யாப்பிலக்கணம். ‘பாஎன்னும் சொல்லுக்குப் பரந்துபட்ட ஓசை எனப் பொருள் பகரும். கவிதையில் ஓசைதான் இன்பந்தரும் கூறாகும். ‘ஓசைதரும் இன்பம், உவமையிலா இன்பம் என்பது பாரதியின் கூற்று.


     எனவே கவியரங்கத்தில் படிக்கும் கவிதையில் ஓசை, சொற்கள், பொருள், படிக்கும் முறை ஆகியவை சிறந்து அமைய வேண்டும். எனவே கவிஞர்கள் தம் கவிதைகளை எடுத்தல், படுத்தல், நலிதல் எனும் வகையில் படித்தலும், சிறந்த அடிகளைத் திரும்ப ஒருமுறை படித்தலும், தெளிவாக விளங்குமாறு படித்தலும், உவமைகள், சிலேடைகள், அங்கதம், நகைச்சுவை ஆகியவற்றை இணைத்து அவற்றின் பொருள் விளங்குமாறு படித்தலும் கட்டாயத் தேவைகளாகக் கவியரங்கத்தில் கருதப்பெறும். கவிதையில் வரும் சிறந்த அடிகளைச் செவிமடுப்போர் கைதட்டல்வழிப் பாராட்டுவர். அப்போது கவிஞர் அவற்றைத் திரும்ப ஒருமுறை படித்துக் காட்டலாம். மரபுக்கவிதைகளே தொடக்க காலத்தில் பாடப்பட்டன. இப்போது புதுக்கவிதைகளும் இடம் பெறுகின்றன.


     இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய விடிவெள்ளியாகத் திகழ்ந்த பாரதியார் தம் கவிதையைப் பலர் முன்னிலையில் கூட்டத்திடையே எழுந்து பாடியதாக அறிகிறோம். இவரைப் பின்பற்றி இக்காலக் கவிஞர்களிடையே இப்பழக்கம் பரவியது. பிறகு மேடைகளில், அரங்குகளில், வானொலியில் கவியரங்க நிகழ்ச்சிகள் தோன்றிப்பெருகின. கம்பன் விழா, திருக்குறள் விழா முதலிய இலக்கிய விழாக்களில் கவியரங்கம் இன்றியமையாத இடம் பெற்று ஏற்றம் கண்டது.


     இந்தி, உருது மொழிகளில் சிறு கூட்டத்தினரிடையே கவிபாடும் மரபுண்டு. மேனாட்டுப் பல்கலைக் கழகங்களில் கவிஞர்கள் தாம் எழுதிய கவிதைகளை வாசித்துக்காட்டும் பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.


     கவியரங்கத்தில் பின்பற்றப்படும் மரபுகள் சில உண்டு. கவியரங்கத்தில் தலைவர் ஒருவர் கட்டாயம் இடம்பெறுவார். அவரைச்சுற்றி அங்கே பாடும் கவிஞர்கள் இடம்பெறுவர். முதலில் தலைவர் கவிதையில் தம் தலைமை உரையை நிகழ்த்துவார். பிறகு கவிஞர்களையும், அவர்பாடும் தலைப்பையும் கவிதை வாயிலாக அறிமுகப்படுத்துவார், தலைவராக இருப்பவர் விரைந்து கவிபாடும் பெருங்கவிஞராக இருப்பதே வழக்கமாகும்.


     பொருள் பற்றிப்பாடும் கவிஞர்கள் பொதுவாக முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, கவியரங்கத் தலைவரைச் சிறப்பித்து வணக்கம் கூறுதல், அவையடக்கம் பாடுதல், அவையினரை விளித்தல் ஆகியவை தொடர்பான கவிதைகளைப் பாடிய/படித்த பின்னர் தங்கள் தலைப்பைப் பற்றிப்பாடி முடிப்பர். பிறகு தலைவர் அந்தக்கவிஞர் பாடியது பற்றித் தம் கருத்தைக் கவிதையில் கூறி அடுத்த கவிஞரை அறிமுகப்படுத்துவார். பிறகு எல்லாக் கவிஞர்களும் பாடிமுடித்தபின் தலைவர் முடியுரைக் கவிதை பாடிக் கவியரங்கத்தை நிறைவேற்றுவதே கவியரங்க மரபாகும்.


     இத்தகைய கவியரங்கங்களில் தாம் பாடிய கவிதைகளைத் தொகுத்து ஒரு நூலாக்கிச் சிங்கப்பூர்க் கவிஞர் இராம. வயிரவன் வெளியிட்டுள்ளார். இந்நூல் அவரது மூன்றாவது படைப்பு நூலாகும். இதற்கு முன் புன்னகைக்கும் இயந்திரங்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும், கவிதைக் குழந்தைகள் என்னும் கவிதைத் தொகுப்பு ஒன்றும் அவர் வெளியிட்ட நூல்களாகும். இவற்றுள் புன்னகை இயந்திரங்கள் என்னும் நூலிலுள்ள கதைகள் தமிழ் முரசு இதழிலும், விழா மலர்களிலும் வெளிவந்தவை. மேலும் தங்கமுனைப் பேனா விருது பெறப் போட்டியில் பரிசுபெறத் தகுதி பெற்ற ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதையும் பல போட்டிகளில் பரிசு பெற்ற கதைகளும் இந்நூலில் அடங்கும். அவரதுகவிதைக் குழந்தைகள்என்னும் நூலுக்குச் சிங்கப்பூர் அரசைச் சார்ந்த தேசியக் கலைகள் மன்றம், புத்தக மேம்பாட்டுக்கழகம் இணைந்து வழங்கும் சிங்கப்பூர் இலக்கியம் 2012 என்னும் சிறப்புமிக்க பத்தாயிரம் வெள்ளியுடன் கூடிய பரிசு கிடைத்தது.


     இந்நூலில் இராம. வயிரவன் 2008 முதல் 2012 வரை நான்கு ஆண்டுகளில் சிங்கப்பூரின் பல அமைப்புகள் ஏற்பாடு செய்த 12 கவியரங்கங்களில் படைத்த பல்வேறு தலைப்புகள் தொடர்பான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. காலக் கணக்கில் இயங்கும் 12 ராசிகளைப் போலவும் 12 மாதங்களைப் போலவும் இவை அமைந்துள்ளன. சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம், மாதவி இலக்கிய மன்றம், இலக்கியக் களம், நகரத்தார் சங்கம், பூன் லே சமூக மன்றம், இலக்கிய ஆர்வலர் மன்றம் முதலிய சிங்கப்பூர் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கவியரங்கங்கள் இவை. பாடுபொருளைப் பொறுத்த வரையில் வள்ளுவர், பாரதி, பாரதிதாசன், தமிழ்மொழி, சிங்கப்பூர், மகளிர், முதலிய பல தலைப்புகள் பற்றி அமைந்துள்ளன எனினும் எத்தலைப்பில் இருந்தாலும் சிங்கப்பூர் மணம் இருப்பது கவியரங்கக் கவிதைகளின் சிறப்பாகும். நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், மனிதநேயமும், இக்கவிதைகளில் நடுநாயகமாக நடனமிடுகின்றன.


     சிங்கப்பூரை நங்கையாகக் காணும் கவிஞரின் உருவகக் காட்சி இதோ.


சிறப்புமிகு சிங்கை - அவள் என்

சிந்தைகவர் நங்கை

எப்படி?

மனித வளத்தை அவள் கண்கள் என்பேன்

முத்துப்பல் திட்டங்கள்

தொடர் முன்னேற்றம் அவள் நீள்கூந்தல்,

கட்டடங்கள் அவள் கட்டழகு - உள்

கட்டமைப்பு அவள் உடல் அழகு

தீர்க்கமான தொலை நோக்கு - அவள்

கூர் மூக்கு! அவள்

நான்மொழிகள் பேசுகின்ற தேன்மொழியாள் - அவள்

செவ்விதழ்கள் சிந்தும் புன்சிரிப்போ

விருந்தினரை வரவேற்கும் உபசரிப்பு


     இக்கவிதையில் உருவகத்தால் சிங்கையின் உருவத்தையும் உள்ளத்தையும் கவிஞர் ஓவியம் தீட்டிக்காட்டியுள்ளார்.


     எழுத்தாளர் பார்வையில் சிங்கப்பூரில் அனுபவத்துக்குப் பஞ்சமாச்சு என்று ஒரே மாதிரி வாழ்க்கை என்பதையும் உரைத்து


மின்தூக்கி நின்றதில்லை

மின்சாரத்தடை இருந்ததில்லை

கூவம் ஆறு ஓடவில்லை

குளம் குட்டை எங்குமில்லை ஆனாலும்

தண்ணீருக்கு அலைஞ்சதில்லை

தடியடி தகராறு பார்த்ததில்லை


     என்று எதிர்மறை வாக்கியங்களினால் சிங்கப்பூரின் சிறப்பினைப் பேசுவதும் நன்றாக உள்ளது.


     நாட்டுக்குழைத்திடுவோம் நாம்என்னும் பொதுத் தலைப்பில் வணிகனாக வரும் வயிரவன் பண்டமாற்றுக்கடை, அழகு நிலையம், புதுமைச்சுற்றுலா ஆகிய மூன்று கடைகளைத் திறந்து அவற்றின் வழி வாழ்க்கைக்கு வேண்டிய நெறிமுறைகளை மிகச்சுவையாகவும், கற்பனை நயத்துடனும் சொல்லும் பாங்கு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. பண்டமாற்றில்


வெறுப்பு என்கிற பொருளைக் கொடுத்து விட்டு

அன்பு என்கிற பொருளை எடுத்துச் செல்லலாம்என்கிறார். இலவசமும் தருகிறார். பண்டமாற்று பண்புமாற்றும் கடையாகப் பளிச்சிடுகின்றன. பண்புகளின் மொத்த வியாபாரி திருவள்ளுவர் எனக் கூறுவதும் அருமை. அழகு நிலையத்தில் அழகு எது என்று பட்டியலிடுவதும் அருமை.


உதட்டுச்சாயம் இடுவதிலா?

கவர்ச்சி உடை அணிவதிலா?

கள்ளம் கபடம் களைவதிலா?

முகத்தில் புருவம் வரைவதிலா?

மூத்தோர் மதித்து நடப்பதிலா?’


எனக்கேட்டு அழகு எது எனத் தெரிந்து கொண்டால் அழகாய் இருப்பது எளிது என்கிறார். சுற்றுலாக் கடையில் புறச்சுற்றுலாவைப் புறந்தள்ளி அகச்சுற்றுலா (தியானம்) பற்றிக் கவிஞர் விளக்குகிறார்.


     தமிழ் தடுமாறுகிறதுஎன்னும் தலைப்பில் மாணவர்கள் செய்யும் பிழைகளை எடுத்துக்காட்டிக் கவிதையில் நகைச்சுவை இழையோடச் செய்திருக்கிறார் கவிஞர். கால்வாங்க மறந்து மாணாக்கர் எழுதும் பிழைகளைச் சொல்லிகால் இல்லாவிட்டால் தமிழ் தடுமாறும் தானே?’ என்று கேட்கிறார். கலையரசி என்னும் தம் மனைவியின் பெயரை மகள் காலையரசி என்று எழுதுவதைப் பார்த்துமாலையிலும் உன் அம்மாதான் அரசிஎன்பதை நான் நன்கு ரசித்தேன். நாமுக்கும் நானுக்கும் வித்தியாசம் தெரியாது தடுமாறும் மாணவர்கள் சிங்கையில் இருப்பது உண்மை. இதனைக் கணினிப் பொறியாளராக இருக்கும் கவிஞர் எப்படிக்கண்டறிந்தார் எனத்தெரியவில்லை.


     கவிதை எனக்குள்ளே கருவாகும் போதெல்லாம் நானும் தாய்க்குலந்தான்சிந்தனைக் கணவனுக்கும், கவிஞன் எனும் தாய்க்கும் பிறந்த குழந்தையே கவிதை என்னும் கருத்தும் நன்றாக உள்ளது.


     பாரதி பற்றி மூன்று கவியரங்கக் கவிதைகள் உள்ளன. பாரதி இன்றிருந்தால் எனும் பொதுத் தலைப்பில்ரௌத்திரம் பழகு’, ‘போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்து போனதுவே’, ‘சேவகனாக நின்றாய்என்னும் தலைப்புகளில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் பாரதியுடன் கவிஞர் நடத்தும் உரையாடல்கள் கருத்தாழமும் கற்பனை நயமும் மிக்கவையாக உள்ளன.


     பாரதிதாசன்பார்வையில் குடும்பம்’, ‘சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும் சிறிய கதைஎன்னும் கவிதைகளில் கவிஞரின் ஒப்பு நோக்குத்திறன் வெளிப்படுகிறது. இக்காலக் குடும்பங்கள் பற்றிய தகவலில் எள்ளல் தென்படுகிறது.


தாசன் காப்பியத்தைப் படித்துப் படித்துச் சுவைத்தேன்

சுவைத்துச் சுவைத்துக் குடித்தேன்

குடித்துக் குடித்து மலைத்தேன்

உண்மையாய் அது மலைத்தேன்

உவமை அழகில் உள்ளம் களித்தேன்

மறுபடி மறுபடி படித்தேன்

அதனை மதுக்கடையாய் நினைத்தேன்


தேன் ஒழுகச் செய்யும் கவிதை இது.


     கவியரங்குகளில் தமிழகத்தின் சிறந்த கவிஞர்களான பொற்கிழிக்கவிஞர் சொ. சொ. மீ. சுந்தரம், கவிஞர் இறையரசனார், புதுமைக்கவிஞர் பொன்னடியான், வாணியம்பாடிப் பேராசிரியர் அப்துல்காதர், ஆகியோரும் சிங்கைக் கவிஞர்களான பாத்தேறல் இளமாறன், கவிஞரேறு அமலதாசன், சொல்லின் செல்வர் இரத்தின வேங்கடேசன், கவிதைநதி ந. வீ. விசயபாரதி, பேராசிரியர் சுப. திண்ணப்பன் ஆகியோர் தலைமை வகிக்கக் கவிஞர் வயிரவன் அவர்களுக்கு வணக்கம் சொல்லும் பாடல்களும் அதன்வழி இவரது அவையடக்கப் பண்பு வெளிப்படும் வரிகளும் படித்துப்படித்து இன்புறத் தக்கன. அறுசுவைக் கவிதை படைக்கும் கவிஞராய் சொ. சொ. மீ. சுந்தரத்தை அழைத்துத் தான் ஒரு கறிவேப்பிலை எனக்கூறும் தன்மை நன்றாக அமைந்துள்ளது. பாத்தேறல் இளமாறனின் சமையல் நிபுணத்துவத்தைப் பாராட்டிவிட்டுத் தவறுகள் கண்டால் என்னைத் தாளித்து விடாதீர் எனக்கூறுவதில் சொல்லாட்சியைப் பார்க்கலாம். இறையரசனாரை நாலுக்கும் இரண்டுக்கும் பாவிலே உரைவடித்த பாவலரே என அழைப்பதும், கவிதைநதி விசயபாரதியைக் கவிதைக்காட்டாறு என்று விளிப்பதும், அமலதாசனிடம்கருத்துச்சுடர் வீசும் கறுப்புச்சுடரே! நெருப்புக்கொடு பற்றிக்கொள்கிறேன் நான்என்று கேட்பதும், பொன்னடியானிடம்கண்டுபேசிக் கவிபாட வந்திருக்கிறேன். துண்டு துண்டாய்க் கவிபாடும் துக்கடாக்கவிஞன் நான்என்று கூறுவதும், இரத்தின வேங்கடேசனைச்சிங்கையில் புதிதாய் மதுக்கடை திறந்திருக்கும் புதுவைப் புலவரேஎன அழைப்பதும், அப்துல் காதரைகாதர் ஐயா, கானமயில் நீங்கள், கணினி மெயில் நான்எனக் கூறுவதும் படித்து இன்புறத் தக்கன.


     வயிரவனின் கவியரங்கக் கவிதைகளில் நகைச்சுவை நடமாடுகிறது. சொல்லாட்சி சுவை கூட்டுகிறது. கற்பனை களிநடம் புரிகிறது. ஓசை உவமையிலா இன்பம் ஊட்டுகிறது. கணினித் தொழில் நுட்பம் காட்சி அளிக்கிறது. கருத்தாழம் சிந்தனையைத் தூண்டுகிறது. மனிதநேயம் மாண்புடன் மிளிர்கிறது. தமிழுணர்வு தாண்டவமாடுகிறது. சிங்கப்பூர் மண்ணின் மணம் கமழ்கிறது. புதிய பார்வை தென்படுகிறது. உவமை ஒரு பக்கம், உருவகம் மறுபக்கம் உயிர் கொடுக்கிறது. உருவத்தில் எளிமை எழில் கூட்டுகிறது.


     இத்தகைய கவிதைகள் எழுதித் தமிழ்த்தாய்க்கு அணிசேர்க்கும் கவிஞர் வயிரவனைப் பாராட்டி வாழ்த்துகிறேன். தொடர்ந்து பல கவிதை நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டாற்ற வேண்டுகிறேன்.


M.K ஜமால் முஹம்மது

கொடுமளூர்ப் பதிகம் நூல்

s3-6-2013


பதிகம் என்பது 96 வகைப் பிரபந்தங்களில் (சிற்றிலக்கியங்களில்) ஒன்றாகும். ஒரு பொருள் பற்றிப் பத்துப் பாடல்களைக் கொண்டு அமைவது இதன் உருவமாகும். பதி என்பது சேனாதிபதி, அதிபதி என்னும் சொற்களில் தலைவனைக் குறிக்கும். சைவ சித்தாந்தம் உணர்த்தும் முப்பொருள்களாகிய பதி, பாசு, பாசம் என்னும்போது, இறைவனைக் குறிக்கும். தனக்குவமை இல்லாத் தலைவன் இறைவன் ஒருவன் தானே? மேலும், பதி என்பது இறைவன் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள ஊர்களையும் அதாவது திருத்தலங்களையும் குறிக்கும். எனவே பதிகம் என்பது இறைவன் கோயில் கொண்டுள்ள ஊர்களையும், இறைவனையும் உள்ளடக்கமாகக் கொண்டு இலங்குவதாகும். இயற்கை வருணனை, இசை(பண்) முதலியவை பதிகத்தின் உத்தி (உணர்த்தும் முறை) ஆகும். ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், நான்கடி முதல் எட்டடிகாறும் வரும் வெண்பா ஆகிய யாப்பு வடிவங்களைக் கொண்டமைவது பதிகம் எனப் பன்னிரு பாட்டியல் பகரும்.

காரைக்காலம்மையார் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் பாடிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகமே தமிழில் தோன்றிய தொன்மையான பதிகமாகும். இவர் நகரத்தார் மரபினர்; தாயும் தந்தையும் இல்லாது தான் தோன்றியாய் விளங்கும் சிவபெருமானால்அம்மையேஎன்று அழைக்கப் பெற்ற பெருமை உடையவர். இவர் பாடிய பதிகத்தைப் பின்பற்றியே பின்னே வந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் பதிகங்களைப் பாடிப் பல்லவர் காலப் பக்தி இயக்கத்தை வளர்த்தனர். இவர்களுக்குப் பின்னர் வந்த புலவர்களும் பலவகைப் பதிக நூல்ளை இயற்றித் தமிழுக்குப் பெருமை சேர்த்தனர்.

இந்த வாழையடி வாழையென வந்த மரபில் தோன்றிய மஹான் சேதுகவி ஜவாதுப் புலவர் (கி.பி.1745-1808) அவர்கள் கொடுமளூர் முருகன் மீது பதிகம் பாடியுள்ளார். இவரின் இயற்பெயர் முஹம்மது மீர் ஜவாதுப் புலவர். இவர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அருகில் உள்ள எமனேஸ்வரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். தமிழை முறையாகப் பயின்றவர். வட மொழியிலும் வல்லமை பெற்றவர். ஏழு வயதிலேயே கவி இயற்றத் தொடங்கிய இவருக்கு அட்டாவதானம் செய்யும் ஆற்றலும் இருந்தது. இசுலாமிய நெறியைச் சார்ந்த இவர் தமிழ் இலக்கண இலக்கிய அறிவுடன் சைவ சித்தாந்தத் தத்துவப் புலமையும் கொண்டு விளங்கினார். மக்களும் மன்னரும் அஞ்சி மரியாதை செலுத்தும் மாண்பினைப் பெற்ற ஜவாதுப் புலவர், வாது செய்யும் புலவர் பலரின் வாயடக்கி மகிழ்ந்தவர். இவர் முஹ்யத்தீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத் தந்தாதி, ராஜ ராஜேஸ்வரி பஞ்ச ரத்ன மாலை, மற்றும் வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள், சித்திரக் கவிகள், மாலை மாற்றுகள், தனிப்பாடல்கள் ஆகியவற்றை இயற்றியுள்ளார். மேலும் இறையருள் மிகக் கொண்டு, ”அறன்களும் பாடியுள்ளார்.


சரபம் கவிச்சக்ரவர்த்தி ஜவாதின் மேல் ஆணையென்றால்

அரவம் கடித்திடவும் அஞ்சுமே

என்றும்

            வெண்டா மரைஅணங்கு வேற்றுருக்கொண் டுற்றனளோ

            தண்டா மரைஅனந்தன் தானிவனோவண்டமிழின்

            எண்ணோ டெழுத்தோ இசையோ இயற்புலவர்

            கண்ணோ ஜவாதுக் கவி!”

என்றும் முத்து வேலாயுதக் கவிராயர் போற்றிய ஜவாதுப் புலவர், சேதுபதி தந்த சிங்கமுகப் பல்லக்கில் பவனி வந்த பாவலராக விளங்கினார். இவர் இறையருளால் பல அற்புதச் செயல்களை நிகழ்த்தியவர் என்பது இவர் வாழ்க்கை வரலாறு உணர்த்தும் செய்தியாகும். சுவத்தன் என்னும் கிராம மக்கள் தரிசிக்க முருகன் தோன்றுமாறு இவர் செய்தார் என்பது அவற்றுள் ஒரு நிகழ்ச்சியாகும்.

அருட்கவியாக விளங்கிய மஹான் சேதுகவி ஜவாதுப் புலவர் பெருமானாரிடம் தேவ கோட்டை திண்ணப்பச் செட்டியார் பேரன் பழநியப்பன் செட்டியார் குழந்தை பாக்கியம் வேண்டிக் கேட்டுக் கொண்டபோது, அவர் பாடிய பதிகமே கொடுமளூர் முருகன் பதிகம் என்பதை இப்பதிகத்தின் பத்தாவது பாடலின்

கயிலாச நாதர்நித் தியகலி யாணிதம் கருணா கடாட்ச முண்டாம்

கல்வாச னாட்டினசை மேவுபெரு மருதூர் கதிக்குநக ரப்ரதாபன்.

செயலாளி திண்ணப்ப வணிகன் அருளால்வந்து சென்மித்த வெள்ளையப்பன்

            செம்மைசேர் தருராம நாதமதி யூகிதரு செல்வவான் பழனியப்பன்

தயைமேவு சுப்பிர மணியா வென்று கூப்பிடச் சந்தான பாக்கிய நல்கிச்

சத்தாங்க முங்கெடுத்து எத்தேச காலமும் தற்காத்த தெய்வம் நீயே

குயில்கூவு சோலை மலைசெந்தூர் திருப்பரங் குன்றிலுறை யுங்க டம்பா

கோகனக வாவிபுடை சூழ்கொடு மளூர் மேவு குமரகுரு பரமுருகனே.

என்னும் வரிகள் எடுத்துக்காட்டும்.

கொடுமளூர் என்னும் ஊர் மானாமதுரை - பார்த்திபனூர் வழியில் ஒரு விலக்குப் பாதை வழி பரமக்குடி அருகில் ரயில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். அங்கே முருகப் பெருமான் வேடர் கோலத்தில் -வேல் தாங்கி நின்ற கோலத்தில்- எழுந்தருளியுள்ளார். இந்தத் தலத்தை - பதியைஇப்பதிகத்தின் பத்துப் பாடல்களிலும் ஈற்றடியாககோகன வாவிபுடை சூழ்கொடு மளூர் மேவு குமரகுரு பரமுருகனேஎன்று வைத்துப் புலவர் பாடியுள்ளார். இந்த அரையடி ஒன்றே இறைவனையும் இறைவன் எழுந்தருளியுள்ள ஊரையும் பாடும் பதிக இலக்கண மரபினைச் சுட்டிக் காட்டப் போதுமானதாகும்; ஜவாதுப் புலவரின் புலமைத் திறத்தைப் புகலும் சான்றாகவும் திகழ்கிறது.

கொடுமகளூர் முருகன் பதிகம் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பதினொரு பாடல்களைக் கொண்டு விளங்குகிறது. பதினோராவது பாடல் வாழ்த்துப் பாடலாக உள்ளது.

முதலாவது பாடல் ஆறுமுகப் பெருமானின் அழகிய தோற்றத்தைக் காட்சிப் பொருளாகக் காட்டி நிற்கிறது. இரண்டாவது பாடல் முருகன் எழுந்தருளியுள்ள திருத்தலங்களைப் பட்டியலிட்டு, “ அற்புதத் தலமேவு நாயக தற்சமயம் அன்பு வைத்து எனை ஆளுவாய்என வேண்டுகிறது. மூன்றாவது பாடல் முருகப் பெருமானின் திருப்பெயர்களைத் திருமந்திரங்களாகக் கருதி ஓதுமாறு கூறுகிறது. நாலாவது பாடல் முருகப் பெருமானின் கோவில் தலவிருட்சங்களை முறையாக வரிசைப்படுத்தி, அவற்றின் நிழலில் அவன் விளையாடும் வகையை விளக்குகிறது. ஐந்தாம் பாடல் முருகப் பெருமான் சூரர் படைவென்ற சூட்சுமத்தைச் சுட்டி நிற்கிறது. ஆறாம் பாடல் அட்டமா சித்தி பல பெற்றாலும் முருகன் அருள் பெறுவதற்கு ஈடாகுமா என்று கேட்கிறது. ஏழாம் பாடல் முருகன் பிரமனைச் சிறையிட்டது, நக்கீரனைச் சிறை மீட்டது, ஞான சம்பந்தராய்ச் சமணரைக் கழுவேற்றியது, அருணகிரியாருக்குச் செந்தமிழ் உகந்தருளியதுத முதலிய முருகனின் திருவிளையாடல்களை மொழிகிறது. எட்டாம் பாட்டு முருகனை வணங்கிடும் அடியவர் பெறும் இம்மைச் செல்வங்களை அடுக்கிப் பேசுகிறது. ஒன்பதாம் பாடலும் முருகனின் அடியார்களைப் பில்லி சூன்யம் கண்ணேறு , பாவம் முதலியவை தொடராது என்று உரைக்கிறது. பத்தாவது பாடல்தான் பதிகம் எழுந்த சூழலை விளக்குகிறது என முன்னர்ப் பார்த்தோம். பதினோராம் பாடல் பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான தேவர்கள், பல்வகை மக்கள் எல்லாரையும் வாழ்த்துகிறது. இதில்தருவனைய திண்ணப்ப வணிகனருள் ராமநாதன் கிளை தழைத்து வாழிஎன வருவதையும் குறிப்பிட வேண்டும்.

பொருட்சிறப்பும், சொல்லழகும் ஓசை நயமும் பொலிந்து நிற்கும் இப்பதிகம்இசுலாமியக் கவிஞரான ஜவாதுப் புலவர் இயற்றிய இப்பதிகம்- சமய நல்லிணக்கத்துக்கோர் சரியான சான்றாகும். ஜவாதுப் புலவர் போன்ற ஞானியர்களுக்கு எம்மதமும் சம்மதமே என்ற கருத்தையும் இது விளக்குகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க இப்பதிகத்தை உரையுடன் அச்சிட்டு வழங்கும் ஜவாதுப் புலவர் வழி வந்த மெய்ஞ்ஞானச் செல்வர் ஈரோடு M.K ஜமால் முஹம்மது அவர்கள்சொல்லம்பு மகான் ஜவாதுப் புலவர்என்னும் பெயரில் ஜவாதுப் புலவரின் வாழ்க்கை ஒரு நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். இந்நூலைப் படிப்போர் ஜவாதுப் புலவரின் ஆற்றலை அறிந்து போற்றுவார்களென ஐயமின்றிக் கூறலாம். மேலும் இவர் ஒரு கவிஞர். இசுலாமிய இலக்கிய நூல்கள் பல வெளியிட்டுள்ளார்கள். பழகுதற்கினிய பண்பு மிக்க இவர் மனிதம் போற்றும் மாண்பினர். இவர்மஹான் ஜவாதுப் புலவர் வாழ்த்தினைப் பெற்றதினாவகை வமிசம் தழைத்து இன்று 450 குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர். இப்பதிகம் அருட்கவி ஆதலால் இதனைப் படிப்போர் யாவரும் பயன் பெறுவர்என்று இப்பதிக வெளியீட்டின் முத்தாய்ப்பாகக் கூறுகிறார்.

இவர் கூறும் தினா வகையைச் சேர்ந்தவன் என்னும் முறையில் இவருக்கு நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவர் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
சுப. திண்ணப்பன்
சிங்கப்பூர்,
09-05-2013

..... தொடரும் ..... 
Dr. S.P. Thinnappan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக