ஞாயிறு, 18 மே, 2014

நகரத்தார் - 1


SPT articles 6 Nagarathar
1 நகரத்தார் பெயர்க்காரணம்
2 பிள்ளையார் நோன்பு
3 முருகனும் நகரத்தாரும்
            4     இசைபிடிமானம்
               5 சிங்கப்பூர்  நகரத்தார் கோயில்கள்
                     6 சிங்கப்பூர் நகரத்தார் செந்தமிழ்ப்பணி             
 
                        7  சிங்கப்பூர் நகரத்தார் பற்றிய சில செய்திகள்
 
                        8 அருள்மிகு லயன் சித்தி விநாயகர் கோயில்
                            குடமுழுக்கு நன்னீராட்டு
                               மலர்க் குழுவினர் உரை
                        9 சிங்கப்பூர் `லயன் சித்தி விநாயகர்` கோயில் சிறப்பு
              
                    10 Upadhesa Pudumai’
               11திருக்காளத்தியும் நகரத்தாரும்
                       12 நகரத்தார் பண்பாடு, மரபு, நன்னெறிக் கூறுகள்:
                            இவை என்றும் நிலைத்திருக்குமா?
 
 
 
 
 
 
1 நகரத்தார் -பெயர்க்காரணம்
நகரத்தார் என்ற  சொல் நகரம் என்ற சொல்லி-னடியாகப் பிறந்தது நகரம் என்ற சொல்லோ நகர் என்ற சொல்லினின்றுதோன்றியது.  எனவே நகரத்தார் என்ற சொற்பொருளையறிய நகரம் , நகர் என்ற சொற்களின் பொருளை அறிதல் நலம் பயக்கும்.
நகரம், நகர் என்ற இரண்டு சொற்களும் வட சொல்லாகிய (nagara) என்பதினின்று பிறந்தவை என்று சென்னைப்பல்கலைக் கழகத்தினர் வெளியிட்ட தமிழ் பேரகராதி(லெக்சிகன்) கூறுகிறது. அவ்வகராதியின் அழப்படையில் இவற்றின் பொருளைக்காண்போம்.
நகரம் என்ற சொல்லுக்குப் பேரூர், அரண்மனை, கோயில், வாழிடம், என்ற நான்குபொருள் உள்ளது. (பக்2125)
நகர் என்ற சொல்லுக்கு நகரம்(city) மாளிகை, கோயில். அரண்மனை , சடங்கு செய்யுமிடம், விசேடங்கள் நிகழும் மண்டபம், மனைவி, என்று ஏழுபொருள் உளது.(2124)
புகார் நகரலிருந்து குடியேறியவர்கள்
நகர் என்பது பேரூரைக் குறிக்கும். சங்க காலததில் காவிரிப்பூம்பட்டினம் என்ற பூம்புகார் பெரும் நகரமாக விளங்கியது என்பதைப் பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து அறியலாம்.  ‘‘நாக நீள் நகரொடு நாகநாடதனொடு, போகநீள் புகழ் மன்னும் புகார் நகரது தன்னில்’’ (சிலப்பதிகாரம் 1: 21-22 ) ‘‘மாநகர்க் கீந்தார் மணம்’’ (சிலப்பதிகாரம்1:44) ‘‘நகர நம்பியர் திரிதரு மறுகில்’’ (சிலம்பு 3:168) ‘‘பகர்வன திரிதரு நகரவீதியும்(சிலம்பு 5:15) என்ற சான்றுகளால் பூம்புகார் நகர், நகரம்என்ற சொற்களாற் குறிக்கப் பெற்றிருப்பதை நாம் உணர முடிகிறது.  பூம்புகார் நகரத்திலிருந்து பாண்டி நாட்டிற்குக் குடியேறியவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் என்ற செய்தியை நகரத்தார் வரலாறு உணர்த்தும் நூல்கள் நவில்கின்றன.  எனவே அவர்கள் நகரத்தார் என்றழைக்கப்படுகின்றனர்.
நகரங்களை உருவாக்கியவர்கள்
பூம்புகாரிலிருந்து புறப்பட்டு வந்த தனவணிகப் பெருமக்கள் பாண்டி நாட்ழல் முதலில் இளையாற்றக்குடியில் குடியேறினர் இளையாற்றக்குடியையும ஏனைய ஊர்களையும் அவர்கள் நகரங்களாக உருவாக்கிய காரணத்தால் நகரத்தார் என்றழைக்கப்பட்டனர். இவ்வூரிலுள்ள கோயில்களை நகரக் கோயில்கள் என்று இன்றும் வழங்கும் பழக்கம் இவ்வூர்களை நகரங்களாகவே கருதியமைக்கு ஏற்ற சான்றாகும்.  ‘‘எங்கும் புகழ் பெற இவ்வேழுநகர் உண்டாக்கிச் சிங்கக்கொடி ஏற்றித் தலைவரங்கிருந்தார்கள்’’ என்று பாடுவார் முத்தப்ப செட்டியார் நகர வாழ்த்து என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளதையும் காண்க.
கோயில் வழிவந்த குடிச்சிறப்பினர்
நகர் என்ற சொல்லக்குக் கோயில் என்ற பொருளுண்டு.  முக்கட் செல்வர் நகர்(புறம்.6) ‘மேழிவலனுயர்த்த வெள்ளை நகரமும்’ (சிலம்பு14. 9) என்ற இலக்கியச் சான்றுகளால் நகர், நகரம், என்பன  இறைவன் உறையும் கோயில்களைக் குறிக்கின்றன என்பது விளங்கும்.  பொதுவாக வைசியர்களைக் குறிக்கும் வணிக (செட்டியார்) இனத்தீனின்று நகரத்தார்களைப் பிரித்துக்காட்டுவது அவர்கள் சார்ந்திருக்கும் கோயில் பிரிவுகளே ஆகும்.  இக்கோயிற் பிரிவுகள் கொள்வினை, கொடுப்பினைகட்கும், சுவிகாரததிற்கும் அடிப்படையாக அமையும்.  பாண்டி நாட்டில் இவர்கள் ஏற்படுத்திய இந்த ஒன்பது கோயில்களையும் , அதன் உட்பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் செட்டியார்கள் ஆதலினால் நகரத்தார்கள் என்ற கூறப்பெற்றனர். நகரத்தார் என்பது கோயில் வழி நாகரிகத்தைக் குறிக்கும் சொல்லாக ஆகின்றது.
அரண்மனையனைய வீட்டினர்
நகர் என்பது  அரண்மனையனைய வீடுகளையும் உணர்த்தும் ஒரு சொல்லாகும்.  ‘‘கூடு விளங்கு வியனகர்’’ (புறம்: 148) ‘‘செழுநகர் முற்றம்’’ (பெரும்பாண்435) ‘நிதி துஞ்சுவினயனகர்’’(சிலம்பு-27-200) ‘‘பாழியன்ன கடியுடை வியநகர்’’ (அகம்.15) என்ற இலக்கிய வரிகளால் இதனை உணரலாம்.  இவ்விடங்களில் வரும் நகர் என்ற சொல்லுக்கு விளக்கம் தரும் ஒளவை துரைசாமிப்பிள்ளை ‘‘நகர்-வீடு-அமைக்கும்முறையில் ஒன்று, 2000 கொலுக்குக் குறையாத பரப்புடைய சுற்றிலும் தாழ்வாரமுமு;, சிற்றறைகளும்நடுவில் வெயில் முற்றமும் மாடியில் நிலா முற்றமும், புறவிடையும், உச்சியிற் கலசங்களும் பல்வேறு ஓவிய வேலைப்பாடுகளும் நிறைந்து குறுநில மன்னர் பெருமனை போல விளங்குவது’’ என்று கூறுகிறார்.  பெரிய வீடுகளை அமைத்திருப்பதால் நகரத்தார்கள் எனப்பட்டனர் என்பதும் அவர் கருத்தாகும்.  எனவே நாட்டுக்கோட்டை செட்டியார்கள் என்ற சொற்றொடரில் வரும் பொருளாழமும்  நகரத்தார் என்ற சொல்லில் அமைந்து இருக்கக் காணலாம்
பொருள் வளம் பெருக்கும் வணிகர்
நகரத்தார் என்பது வணிகக் குழுக்களை உணர்த்தும் ஒரு சொல்லாகச் சோழர்காலக் கல்வெட்டுகளில் வழங்கப்படுவதை நாம் உணர முடிகிறது  சதாசிவப்பண்டாரத்தார் , பிற்காலச் சோழர் சரிததிரம் என்ற நூலில் ‘‘நகரத்தார் என்பார், பெரிய நகரங்களிலிருந்து கொண்டு வாணிகத் தொழில் நடத்தி வந்த குழுவினராவார் . இவர்கள் தம் வாணிகத் தொழிலைத் திறமையாக நடத்திக் கொண்டும், நகர ஆட்சியை ஏற்று, பொதுமக்களுக்குச் சிறந்த தொண்டுகள் புரிந்து கொண்டும் நல்வாழ்வு நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  அவர்கள் செய்து வந்த வாணிகத்தால் சோழ இராச்சியத்தில் ஏற்றுமதி, இறக்குமதிப் பண்டங்கள் மிகப்பெருகின , அவ்வாணிகத்தால் கிடைத்த சுங்கவரியினால் அரசாங்கத்திற்கு வருவாயும் மிகுந்தது’’ என்று கூறுகிறார். இக்குழுக்கள் இக்காலத்துள்ள நகரத்தார் வண்கச் சங்கங்கள்  போன்றவையாகும்.  எனவே நகரத்தார் என்ற சொல் வாணிக வாழ்வு நடத்திப் பொருள் வளம் பெருக்கும் செட்டியார்களைக் குறிக்கத் தொடங்கியது.
நகர மாந்தர்
பழங்காலத்தில் அரசர்க்கு ஆட்சி செய்யும் பணியில் உறுதுணையாக இருந்து உதவுவதற்கு ஐம்பெருங்குழு , எண் பேராயம் என்ற இரு குழுக்கள் இருந்தன? எண் பேராயத்டில் உள்ள உறுப்பினர் பட்ழயலைக் குறிப்பிடும் போது முதலில் நகரமாந்ர் என்போர் குறிப்பிடப் பெறுகின்றனர். நகரத்தார்கள் மன்னர் பின்னோராதலின் இங்கு முதலிடம் பெற்றனர். இங்கு வரும் நகரமாந்தர் என்பது நகரத்தாராகிய  வணிகர்களையே குறிக்கிறது என்று மெ. சுந்தரம் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.  மேலும் அவர் நகரத்தில் இருந்த அனைவரையும் நகரத்தார் என்ற சொல் குறிக்க வில்லை . நகரத்தில் வாழும் வணிகரை மட்டுமே அது குறித்து நின்றது என்றம் கூறுவர்..
நனிநாகரிகர்
நகரத்தார் என்ற சொல் நகரகஎன்ற சமஸ்கிருத அடிச்சொல்லிலிருந்து தோன்றியதாகவும் கூறலாம்.  நகரக’ (nagaraga) என்ற சொல் நகரத்தில் வாழ்பவர், நாகரிகம் உயர்ந்த பண்பாடுடையவர் என்ற பொருளைத் தரும் நாகரிகம் மிக்கவர்களாக இருந்தமை கருதி நகரத்தார்கள் எனப்பட்டனர் என்றும் கூறலாம்.

இவ்வாறு நகரத்தார் என்ற சொல் நம் இனத்துக்குரிய வரலாற்றுச் சிறப்பையும். கோயில் வழிவந்த பண்பாட்டுச் சிறப்பையும், கோட்டை போன்று வீடுகட்டி வாழ்ந்த இயல்பினையும்  பொருள் பெருக்கும் தன வணிகத்தன்மையும், மன்னர் பின்னோராகிய மாண்பையும், சமுதாயத்தில் நாகரிக மேம்பாட்டுடன் வாழ்ந்த பெருமையையும் உணர்த்துகின்ற ஒன்றாகப்பெருவழக்கில் இருத்தலின் அதனையே நம் இனத்தைக் குறிப்பிடும் சொல்லாக நம் முன்னோர் வழங்கினர்.
 
நகரத்தார் மலர் மதுரை பக் 17-19 1965?
 
 
2 பிள்ளையார் நோன்பு
நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கென்று ஒரு தனிப்பட்ட நாகரிகமும் , பண்பாடும், பழக்க வழக்கங்களும், சடங்குகளும், நோன்புகளும் உண்டு.  நகரத்தார்கள் கொண்டாடும் நோன்புகளில் தலையாயது பிள்ளையார் நோன்பாகும்.  விநாயகப் பெருமானாகிய பிள்ளையாருக்கும், நகரத்தார் சோழ நாட்டிலிருந்தபோதே மரகத விநாயகரை  வழிபட்டு வந்ததாகவும், அங்கிருந்து அவர்கள் பாண்டி நாட்டிற்குப் புறப்பட்டு வரும்போது மரகத விநாயகரை எடுத்து வந்ததாகவும் அவர்களில் ஒரு பிரிவினர் கேரளாவிலிருந்து கோட்டாற்றுப் பகுதிக்குச் சென்றவர்கள் மரகதவிநாயகரை வைத்து வழிபடுவதாகவும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் வரலாற்று நூல்கள் கூறுகின்றன.  நகரக்கோயில்களில் ஒன்று பிள்ளையார் பட்டி என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.  கணேசன், கற்பக கணபதி என்ற பெயர்கள் நகரத்தார்களிற் பலருக்கு உண்டு.  பிள்ளையார் கோயில் இல்லாத நகரத்தார்களின் ஊர்கள் எதுவும் இல்லை.  பிள்ளையாரை வணங்காமல் நகரத்தார்கள் எந்தச் செயலிலும் ஈடுபடமாட்டார்கள்.  எதை எழுதத் தொடங்கினாலும் பிள்ளையார் சுழி போட்ட பின்பே எழுதுவார்கள்.  இவ்வாறு பிள்ளையாரிடத்திற் கொண்ட ஈடுபாட்டின் விளைவாக நகரத்தார்களிடம் மட்டும் பிள்ளையார் நோன்பு என்ற நோன்பு இருந்துவருகிறது.  பெண்களுக்குத் திருமணத்தில் சீர்கொடுக்கும் வெள்ளிச்சாமன்களில் பிள்ளையாரும்,, பிள்ளையார் நோன்பு விளக்கும் , கட்டாயம் உண்டு என்றால் நகரத்தார் மரபில் இந்நோன்புக்குரிய இடத்தை எளிதில் உணரலாம்.
    பரம்பொருளாகிய சிவ பெருமானின் திருமகனார் பிள்ளை-விநாயகர் என்பது சைவ மரபு. எனவே விநாயகரைப் பிள்ளையார் என்று வழங்கினர்.  சைவ மதத்தை வாழ வைக்கவந்த ஞானசம்பந்தப் பெருமான்  ‘‘பிடியதன் உருவுமை கொளமிகு கரியது: வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகணபதி’’ என விநாயகரைப் பாடியுள்ளார். சைவத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரை வழிபடு தெய்வமாகக்கொண்டு அவர்மீது திரு இரட்டை மணிமாலை பாடியுள்ளார்.  சொல்லப்போனால் சைவத்திருமுறைகளைத் தொகுப்பதற்கு உதவிய பெருமை விநாயகப் பெருமானையே சாரும்.  இந்து மதக் கடவுளருள் மிக்க முதன்மையும் , சிறப்பும் உடையவர் விநாயகர்.  விநாயகர் என்ற சொல்லுக்கு தலைவர்கட்கெல்லாம் மேலான தலைவர் என்பது பொருள்.  சைவரும், வைணவரும், சமணரும், சாக்தரும் , பௌத்தருமாகிய பல சமயத்தவர்களும் வணங்கும் தெய்வம் பிள்ளையார்.  விநாயகர் வழியாடு இந்திய நாட்டில் மட்டுமின்றி இலங்கை , பர்மா, சயாம், ஜாவா, பாலி, சுமத்ரா, போர்னியோ, சம்பா, கம்போடியா , இந்தோசைனா,, சைனா, நேபாளம், திபேத், துருக்கிஸ்தானம், ஆப்கானிஸ்தானம், சூடான் , மங்கோலியா, ஜப்பான், மெக்ஸிகோ, எகிப்து, கிரேக்கம், இத்தாலி முதலிய பல நாடுகளிற் பல நூற்றாண்டுகளாகப் பரவியுள்ளது.
    விநாயகருடைய திருவுருவம் பல தத்துவ நுட்பங்களைக் கொண்டதாகும்.  விநாயகரின் திருவுருவத்தில் நாபி பிரமனையும் முகம் திருமாலையும் , முக்கண் சிவபெருமானையும், இடப்பக்கம் சக்தியையும் தும்பிக்கைபிரணவ மந்திரத்தினையும் உணர்த்தும் மூன்றுகண்கள் ஞாயிறு, திங்கள், தீ  என்னும் மூன்று ஒளிப்பொருள்களையும்  குறிக்கும். வேண்டுவார் வேண்டுவதை விரைந்து தருவதற்காக அவர் நீண்ட துதிக்கையைப் பெற்றுள்ளார்.  பக்தர்களின் குறையைக் கேட்க விரிந்த பரந்த காதுகள் அவருக்குள்ளன.  அவருடைய ஐந்து திருக்கரங்கள் படைத்தல் , காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்கள் செய்வோர் என்பதைப் புலப்படுத்தும்.  திரு ஐந்தெழுத்தை உணர்த்துவதாகவும் உரைப்பர். அவர் தம் கைகளில் ஒன்றில் தம் பொருட்டு மோதகம் வைத்திருக்கின்றார்.  மற்றொரு கையில் தேவர்களைக் காப்பதற்காகத் தந்தம் தாங்கி இருக்கிறார்.  பிரிதொரு கையில் தம்முடைய பெற்றோர்களை வழிபடுவதற்காக நீர்க்கலசம் தாங்கியிருக்கிறார். ஏனைய இரண்டு கைகளில் உயிர்கள் ஆகிய நம்மை ஆணவ மலமாகிய யானை ஆட்கொள்ளாது தடுக்க அங்குசமும், பாசமும் வைத்துள்ளார்.  அவர் ஒருபுறம் கொம்புடைமையால் ஆண் எனவும்  மற்றொரு புறம் கொம்பில்லாமையால் பெண்  எனவும் இவ்வாறு இரு திறமும் விரவி நிற்றலால் அலியாகவும் விளங்குகிறார்;. விநாயகர் விலங்குத் தலையும் உடலும் தேவர்க்குரிய பாதங்களும் பெற்றுத் திகழ்கிறார். பிள்ளையாரின் பேழை வயிறு எல்லா உலகங்களையும் , உயிர்களையும் தன்னுள் அடக்கிக்கொண்ட அருளுடன் பாதுகாத்து வருவதைப் புலப்படுத்துகின்றது.  அவரது பெருச்சாளிவாகனம் அவரே எல்லாப் =பொருட்களுக்கும் தாங்கும் நிலையிலும் தாங்கப் பெறும் நிலையிலும் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.  பெருச்சாளியைப் பிள்ளையார் வாகனமாகக் கொண்டது ஆணவமாகிய அசுரனை அடக்கிய தன்மையையும் புலப்படுத்தும் .  விநாயகர் சித்தி(நற்பெறு) புத்தி(நல்லறிவு) என்னும் இருசக்திகளைத் தமக்கும் தேவிமாராகக் கொண்டு இருக்கின்றார்.  விநாயகரை வணங்குவதால் நமக்கு வாக்குண்டாம்.  நல்ல மனமுண்டாம் மாமலராளாகிய திருமகளின் நோக்குண்டாம் மேனி நுடங்காது, அவர் திருவருள் திருவாக்கும், செய்கருமம் கைகூட்டும். செஞ்சொற் பெருவாக்கும் ,பீடும் பெருக்கும் , சித்தியும் , புத்தியும் , பத்தியும் தரும், மெஞ்ஞானம் பாலிக்கும்.
      பிள்ளையார் நோன்பு மார்கழி மாதத்தில் சஷ்டி திதியும், சதய நட்சத்திரமும் , கூடுகின்ற நாளில் கொண்டாடப்படுகின்றது.  ‘‘மாதங்களில் நான் மார்கழி’’ என்று கண்ணன் கீதையில் கூறுவதால் மார்கழி மாதத்தின் பெருமை நன்கு விளங்கும்.    
மார்கழி மாதத்தில் வரும் சஷ்டியும், சதயமும் கூடும் நாளில் விநாயகர் கஜமுகா சூரனை வதம் செய்தார் என்று  புராணங்கள் கூறும்.  இந்நன்னாளைத்தான் பிள்ளையார் நோன்பு விழாவாக நகரத்தார்கள் கொண்டாடுகின்றார்கள்.  இந்த நோன்பு உண்மையில் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று தொடங்குகிறது. அன்றிலிருந்து இருபத்தொரு நாட்கள் நோன்பு நோற்று 22ஆம் நாளான மார்கழி மாதத்தில், சஷ்டியும், சதயமும் கூடும் நாளில் நிறைவேற்றப்படுகின்றது.    இந்த 21 நாட்கள் நோன்பு நோற்றதன் அறிகுறியாகப் பிள்ளையார் நோன்பு அன்று கோடி வேட்டியிலிருந்து 21 இழைகளை  எடுத்துத் திரிகள் அமைக்கின்றார்கள்.  21 இதழ்கள்கொண்ட  ஆவாரம் பூக்களைக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.  பிள்ளையார் நோன்பு அன்று நகரத்தார்கள் குடும்பங்களில் வகைவகையான சிற்றுண்டி  செய்வார்கள்.  அச்சிற்றுண்டிகளுள் கருப்பட்டிப் பணியாரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எள், நெல், சோளம் கம்பு, ஆகியவற்றைக் கொண்டு தயாரிப்பார்கள்.  அப்பமொடு, அவல் பொரி கப்பிய கரிமுகன் விநாயகன்ஆதலின் அவனுக்கு இவை இரண்டும் இன்றியமையாத பொருள்களாகக் கருதப்படுகின்றன.  பாலை நன்குக் காய்ச்சித் திரட்டுப் பாலிலிருந்தும் சிலர் இழைமா தயாரிப்பார்கள்.  பலர் இதற்குப்பதிலாகக் கருப்பட்டியையும் அரிசி மாவையும் சேர்த்து இழைமா தயாரிப்பார்கள்.  தெற்கு வட்டகையினர்  இழைமா வேகவைத்து ஆலங்காய் தயாரித்து அதில் இழை மா எடுப்பார்கள். ஆடவர்கள் காலையில் கோடி வேட்டியிலிருந்து 21 இழைகளை எடுத்து இழைமாவில் வைப்பதற்குரிய திரிகளைத் தயாரிப்பார்கள்.  ஆவிரம் பூக்களுடன் அருகம்புல் , நெற்கதிர், கண்ணுப்பூ ஆகியவற்றை எல்லாம் இணைத்து ஒரு சிறு குச்சியில் செண்டு போலக் கட்டுவார்கள்.  இப்படி இரண்டு கோல்கள் தயாரிப்பார்கள்.
    மாலையில் நடுவீட்டில் மெழுகிக் , கோலம் இட்டுக் குத்து விளக்கு ஏற்றி , பிள்ளையார் சிலையை முன்னே வைத்துச் சிற்றுண்டிகள் எல்லாம் படைப்பார்கள்.  அரைத்த மஞ்சளினாலோ, பசுவின் சாணத்தினாலோ பிள்ளையார் பிடித்து அருகம்புல் சார்த்தியும் வைப்பார்கள்.  பிள்ளையார் உருவத்திற்கு அருகில் ஒரு சிறு நெய் விளக்கும் ஏற்றி வைத்திருப்பார்கள்.  பிள்ளையார் உருவத்தின் இரு மருங்கிலும் ஆவிரம் பூக்கோல்கள் இரண்டும் இருக்கும்.  குடும்பத் தலைவர் அல்லது பெரியவர் பிள்ளையார் உருவத்திற்கு அருகில் தலைப்பா(கை) கட்டி கொண்டு, தடுக்கில் அமர்ந்து பிள்ளையார்க்குரிய வேழ முகப் பாடலைப் பாடிச் சிற்றுண்டிகளை நிவேதனம் செய்து வழிபட்டுவிட்டு இழை எடுக்கத் தொடங்குவார்.  இழைஎடுக்கும்போது மங்கலப் பொருளாகிய சங்கு ஊதப்பெறும். முன்னரே தயாரித்து வைக்கப்பட்டு இருக்கும் இழை மாவை நெய்யுடன் சேர்த்துப்பிள்ளையார் பிடிப்பது போல முக்கோண வடிவில் திரட்டி எடுத்து வைப்பார்கள்.  முன்னே தயாரித்த திரியைச் சிறுதுண்டாக வெட்டிப் பிள்ளையாருடன் அருகம் புல்லைச் சேர்ப்பது போல இந்த நூல்களைத் திரியாகப் பிடித்த  மாவுடன் சேர்ப்பார்கள்.  இதை எடுக்கும் பெரியவர் அதை நெய்யில் தோய்த்து அருகே உள்ள நெய்விளக்கில் ஏற்றி முதலில் பிள்ளையாரை வணங்கி வழிபட்டுவிட்டு இழையைப் பெரியவரிடம் ஒருவர் பின் ஒருவராக வாங்கிச் சுடருடன் வாயில் இட்டு உட்கொள்வார்கள். இறுதியில்; குடும்பப் பெரியவர் தமக்குரிய இழையையும் எடுத்துக் கொள்வார்.   கருவுயிர்த்த பெண்களுக்குத் தாய்க்கு ஒன்றும். சேய்க்கு ஒன்றுமாக இரண்டு இழைகள் கொடுப்பது வழக்கம் .  பிறகு அனைவரும் கூடிச் சிற்றுண்டி உண்டு மகிழ்வார்கள்.
      பிள்ளையார் நோன்பில் இந்த இழையை எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சிதான் இன்றியமையாத நிகழ்ச்சியாகும்.  இழையில் உள்ள மாவடிவம் பிள்ளையார் வடிவத்தையும் அதன் மேலுள்ள 21 இழைகள் கொண்ட திரி 21 நாள் நோன்பு நோற்றதின்  அறிகுறியாகவும் அதில் ஏற்றப்படும் சுடர் பேரின்பம் தரும் ஞானச் சுடராகவும் அமைகின்றன.  சுடருடன் உட்கொள்வதால் அகமும் புறமும் ஞான ஒளி பெறுகின்றது.  ‘‘சோதியே  சுடரே சூழொளி விளக்கே’’, ”மதிப்பவர் மனமணி விளக்கே’’ ‘‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதி’’ என்ற திருமுறை வாக்குகளுக்கு ஏற்ப இங்கு நெய் விளக்கு இறைவனாகக் காட்சி அளிக்கிறது.   அதிலிருந்து ஏற்றப்படும் இழை- சுடர் அருட்பெரும்சோதியாகிய ஆண்டவனின் அருளுக்கோர் ஒரு சிறு அடையாளமாகும்..  நோன்பு நோற்றதின் நோக்கம் இந்த இறையருளைப் பெறுவதற்கே என்ற கருத்தையும் இழை வலியுறுத்துகிறது.  இறை அருளைப் பெற்ற பின் பேரின்பம் தான் என்பது போல இழையுண்ட பின்னர் எல்லோரும் உண்டு மகிழ்கின்றனர்.
பிள்ளையார் நோன்பினைத் தத்தம் ஊர்களில் குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து வீடுகளில் கொண்டாடுகின்றார்கள்.  சில ஊர்களில் ஓரே  வாரிசுதார்கள் பங்காளிகள் சேர்ந்தும் செய்கின்றார்கள்.  பிள்ளையார்  நோன்பு விழாவினை வீட்டில் சிறப்புடன் செய்ய இயலாதவர்கள் வைரவன்பட்டி சென்று இங்கு நகரத்தார்கள் பொதுவாகச் செய்யும் நோன்பில் கலந்து கொண்டு இழை எடுத்துக்கொள்ளலாம்.  தவிர்க்க முடியாத காரணத்தால் அன்று பயணம் மேற்கொண்டால் வாழைப்பழத்திலாயினும் இழை எடுத்துக் கொள்ளலாம்.  தொழில் செய்யும் ஊர்களில் நகரத்தார் அனைவரும் ஒரு பொது இடத்தில் சேர்ந்தும் கொண்டாடுகின்றார்கள். இதனால் பிள்ளையார் நோன்புப் பெருவிழா நகரத்தார்களிடத்தில் தெய்வத்திருவருளை மட்டும் அல்லாமல் ஒருங்கே கூடிவாழும்  ஒற்றுமை உணர்வையும்  வளர்ப்பதற்கு உதவுகின்றது.  எனவே வெளியூரில்  வாழும் நகரத்தார்கள் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் கூடிப் பிள்ளையார் நோன்பு செய்யும் பழக்கத்தைப் பெருக்க வேண்டும். இதனால் ஓருரிலுள்ளவர்கள் அனைவரும் ஒருநாள் கலந்து கூடவும், பேசவும் வாய்ப்பு ஏற்படுகின்றது.  தனித்தனியாக வீடுகளில் செய்யும் போது ஏற்படும் செலவும் குறைகின்றது. சிக்கனம் மட்டுமின்றி ஒற்றுமைப் பண்பையும் ஒருங்கு கூடும் உறவு மனப்பான்மையையும் வளர்க்க உதவுகின்றது.  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
 
 --நெய்வேலி நகரத்தார் சங்கம்கொண்டாடிய பிள்ளையார் நோன்பு விழாவை ஒட்டி வெளியிட்ட புத்தகத்திற்காக எழுதிய கட்டுரை
 
 
3 முருகனும் நகரத்தாரும்
(டாக்டர் சுப. திண்ணப்பன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர்.)
 
முருகப் பெருமான் தமிழர்க்குரிய தனிப் பெருங்கடவுள். தமிழ் முதல் நூலாகிய தொல்காப்பியம் சேயோன் மேய மை வரை உலகமும்' என மலைப்பகுதியாகிய குறிஞ்சி நிலத்துக்குரிய தெய்வமாக முருகனைச் சுட்டுகிறது. சேயோன் என்பது செம்மை நிறத்தவன், மகன் என்னும் இருபொருளைத் தரும் முருகப் பெருமான் நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தரும், ஆற்றலுடையவன் என்பதை முருகொத்தியே முன்னியது முடித்தலின்' என்னும் புறநானூற்றுவரி புலப்படுத்தும். முருகொடு புணர்ந்த வள்ளி போல' என்று நற்றிணை முருகனையும் வள்ளியையும் இணைத்துப் பேசுகிறது. மணங்கமழ் தெய்வத்து இள நலம்' என்று நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப் படை முருகன் என்னும் சொல்லுக்கு மாறா மணம், இளமைத் தன்மை, இறைமை, அழியா அழகு என்று பொருள் கூறுகிறது. பரிபாடல் என்னும் நூலிலும் முருகனைப் பற்றிய செய்திகள் உள்ளன. இவ்வாறு பழந்தமிழ் இலக்கண இலக்கியங்கள் பாராட்டும். முருகப்பெருமானுக்கும், நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் என்னும் நகரத்தாருக்கும் இடையே இருக்கும் தொடர்பை எடுத்து இயம்புவதே இக்கட்டுரையின் நோக்கம்.
 
சிலம்பும் செவ்வேளும்
தமிழில் தோன்றிய முதற்காப்பியமாகிய சிலப்பதிகாரம் மன்னர் பின்னோராகிய நகரத்தார் மரபினைச் சார்ந்த கோவலன் கண்ணகி ஆகியோர் வாழ்க்கையைக் கூறுவது. இந்நூலாசிரியராகிய இளங்கோவடிகள் காப்பியத் தலைவனாகிய கோவலனை அறிமுகப்படுத்தும் போது பூம்புகார் நகரத்து மகளிர் கோவலன் அழகைப் பாராட்டி அவன் செவ்வேளாகிய முருகனைப் போன்று இருக்கிறான் எனத் தங்கள் தோழியர் கூட்டத்தில் கூறிக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். கோவலன் முருகனைப் போன்ற பேரழகு உடையவன் என்னும் செய்தியை இங்கே அறிகிறோம். இவ்வாறே சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவியாகிய கற்புக்கரசி கண்ணகி மதுரை சென்று வழக்குரைத்துக் கற்பினை நிலைநாட்டிய பின்னர் சேரநாடு சென்று திருச்செங்கோடு என்னும் குன்றத்தில் கோவலனுடன் வானகம் சேரக் காத்திருக்கிறாள். அப்போது அவளைக் கண்ட குன்றக் குறமகளிர் மலைவேங்கை நறுநிழலின் வள்ளி போல்வீர் நீவிர் யார் என வினவுகின்றனர். கண்ணகி வள்ளி போலக் காட்சி அளித்த நிலையை இங்கே காண்கிறோம். எனவே சிலப்பதிகாரம் நகரத்தார் மரபினராகிய கோவலனையும், கண்ணகியையும் முருகனோடும் வள்ளியோடும் ஒப்பிட்டுப் பேசும் நிலையை நாம் பார்க்கிறோம். 
                         
செட்டி முருகன்
செட்டி என்பது நகரத்தாரைக் குறிக்கும் ஒரு சொல் என்பதை மணிமேகலையில் வரும் ஆதிரை பிச்சையிட்ட காதை உணர்த்துகிறது. ஆதிரையின் கணவனாகிய சாதுவனை இப்பகுதி நன்று அறி செட்டி' என்று அழைக்கிறது. நகரத்தார்கள் தங்கள் பெயருடன் செட்டி என்ற சொல்லைச் சேர்த்தே கையொப்பமிட்டு வந்தனர். தங்கள் திருமண நிகழ்ச்சிகளில் எழுதப்படும் இசைபிடிமானம். மொய்ப்பண ஏடு, சீராட்டுச் சக்கரம் முதலியவற்றில் இம்மரபு இன்றும் பேணப்படுகிறது. செட்டி என்னும் சொல் முருகப் பெருமானைக் குறிப்பதைச் சுந்தரர் தேவாரம் சுட்டுகிறது. சிவபெருமானை காதலாற் சுடர் சூர்தடிந்திட்ட செட்டியப்பனைப் என்று சுந்தரர் அழைக்கிறார். அருணகிரியார் திருப்புகழிலும், தணிகை உலா, தணிகைப் புராணம் முதலிய நூல்களிலும் முருகப் பெருமான் செட்டி என்றே அழைக்கப்படுவதைக் காணலாம். அகராதிகளும், நிகண்டுகளும் கூடச் செட்டி என்னும் சொல்லுக்கு முருகப் பெருமான் என்னும் பொருளை உணர்த்துகின்றன. எனவே முருகப் பெருமான் பெயரையே நகரத்தார்கள் தம் மரபைக் குறிக்கவும் அழைத்தனர் போலும்.
 
செட்டிநாடும் குன்றக்குடியும்
செட்டியார்கள் வாழும் பகுதியாகிய தமிழகத்தில் உள்ள செட்டிநாட்டின் மையப்பகுதியாக அமைந்துள்ள ஊர், முருகப்பெருமான் ஆறுமுகச் செவ்வேளாக வீற்றிருக்கும் குன்றக்குடி. இதனை மையமாக வைத்து செட்டிநாட்டின் வட்டகைப்பிரிவு அமைந்துள்ளது. இவ்வூருக்குக் கிழக்கே, மேற்கே, தெற்கே உள்ள நகரத்தார்களின் ஊர்கள் முறையே கீழ வட்டகை, மேல வட்டகை, தெற்கு வட்டகை என்னும் பிரிவுக்குள் அடங்கும். செட்டிநாட்டின் இருதயமாக குன்றக்குடி விளங்குவதை இது உணர்த்தும். குன்றக்குடியில் இருக்கும் முருகப் பெருமான் பெயர் சண்முகநாதன். இப்பெயரிலேயே செட்டிநாட்டு ஊர்களில் ஒன்றாகிய ஆறாவயல் சண்முகநாதபுரம் என்று அழைக்கப்படுகிறது. குன்றக்குடி முருகன் நகரத்தார் குடும்பங்கள் பலவற்றிற்குக் குலதெய்வமாக விளங்குபவன். பிள்ளைகளுக்குப் பெயரிடல். தலைமுடி இறக்குதல் முதலியவற்றை குன்றக்குடியில் செய்வது பல குடும்பத்தினர் பின்பற்றும் மரபு. குன்றக்குடி மலையைச் சுற்றி நான்கு வீதிகளிலும் நகரத்தார் கட்டியுள்ள மடங்கள், சத்திரங்கள், விடுதிகள் பல உள்ளன. கோயிலுக்குத் திருப்பணி, குடமுழுக்கு, வாகனங்கள், திருவிழாக்கள், உபயங்கள் செய்வதிலும் நகரத்தார்களுக்கும் பெரும்பங்கு உண்டு. சிறப்பு நாட்களில் அன்னதானம் செய்வோரும் உண்டு. அன்னதான மடம் என ஒன்று மலை அடிவாரத்தில் நகரத்தார் பொறுப்பில் உள்ளது. இங்கு இரத்தின வேற்பூசை நடைபெறும். (இங்கு இரத்தினவேல் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது). தண்டாயுதபாணி கோயிலும் இம்மண்டபத்தில் உள்ளது.தைப்பூசத்திற்கு நகரத்தார்கள் தத்தம் ஊர்களிலிருந்து காவடி எடுத்துச் சென்று குன்றக்குடிக்கு வருவர். அன்னதான மடத்தில் வைத்துத் தைப்பூசத்தன்று மலைவலம் வந்து காவடி செலுத்துவர். தைப்பூசம் ஒரு முக்கியமான விழாவாக நகரத்தார்களால் குன்றக்குடியில் கொண்டாடப்படுகிறது. பழனிக்குச் செல்லும் நகரத்தார் காவடிகள் குன்றக்குடிக்கு வந்து பயணத்தைத் தொடங்குவதும் முடிப்பதும் மரபாகும்.
 
பழநியில் நகரத்தார்
முருகப் பெருமான் குடி கொண்டிருக்கும் தலங்களில் முதன்மையானது பழநி. பூம்புகாரில் நகரத்தார்கள் செய்த நவமணி வியாபாரத்தை விடுத்துப் பாண்டி நாட்டில் அரிசி, உப்பு முதலிய நவதானியங்களை விற்கத் தொடங்கிய காலத்தில் (சுமார் 400 ஆண்டுகள் முன்பு) பழநியில் தான் நகரத்தார்கள் உப்பு வாணிபத்தைத் தொடங்கினர் என்றும் அதன் வழியாகப் பழநி ஆண்டவரை வழிபட்டுப் பாதயாத்திரை தொடங்கிக் காவடி எடுத்து வந்த செய்தி பற்றியும் நகரத்தார் அறப்பட்டயங்கள் எட்டும் விளக்குகின்றன. இவற்றின் காலம் கி.பி. 1600 முதல் 1805 வரை உள்ளது.  பழனிக்குக் காவடி செலுத்தும் பாதயாத்திரை இன்று ஆயிரக்கணக்கான நகரத்தார் பெருமக்களால் நடைபெற்று வருவதை நாடறியும். இதன் தொடர்பான வழி எங்கும் நகரத்தார்கள் உணவுப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். மேலும் பழனியில் இராக்கால மடம், அன்னதான மடம் முதலிய பல மடங்கள், விடுதிகள் நகரத்தார்க்கு உண்டு. பழனி மலையில் பல திருப்பணிகள், விழாக்கள், உபயங்கள் செய்வதிலும் நகரத்தார்க்குப் பங்குண்டு. அதன் காரணமாகப் பழனி மலையில் அர்த்தசாம பூசையின் போது தீவட்டி எடுக்கும் முதல் உரிமை நகரத்தார்க்கு இருந்தது. பழனி மலையின் அடிவாரத்தில் உள்ள திருஆவினன் குடியில் கோயில் திருப்பணி செய்தவர்கள் நகரத்தார்கள். பழனியைத் தவிர்த்த ஏனைய முருகத்தலங்களில் குறிப்பாக ஆறுபடை வீடுகளாகிய திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய இடங்களிலும் நகரத்தார்கள் தெய்வப்பணி பலவற்றைச் செய்துள்ளனர். முத்துக்குமாரசுவாமி வீற்றிருக்கும் வைத்தீஸ்வரன் கோயிலுக்கும் நகரத்தார்கள் கீழச்சிவல் பட்டியில் இருந்து ஆண்டுதோறும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
பெரும்பெயர் முருகன்
ஒரு நாமம் ஓர் உருவம் இல்லா முருகனுக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அத்திருநாமங்கள் மொழிக்குத்துணை என்று அருணகிரியார் கூறுவார். முருகப் பெருமான் பெயர்களுடனும் வள்ளி தெய்வானை பெயர்களுடனும் தொடர்புடைய பெயர்களையே பெரும்பாலும் நகரத்தார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து வழங்கினர். இப்பெயர்களை இடும் போது நகரத்தார்களிடம் ஒரு தனிமரபு இருப்பதாகச் சுட்டுகிறார் தமிழண்ணல். இப்பெயர்களை இடும்போது ஒரு மரியாதையுடன் ஒரு பயபக்தியுடன் அவை இடப்படும். வேலன், பழனி, முருகன், வள்ளி எனப் பெயர் வைக்காது இவற்றுடன் அப்பன், அம்மை எனச் சேர்த்து முருகப்பன், பழனியப்பன், வேலப்பன், வள்ளியம்மை, என்றே பெயர் வைப்பர். முருகனையும், வள்ளியம்மையையும் தங்கள் தந்தையாகவும், தாயாகவும் நினைப்பது நகரத்தார் மரபாக இருக்கிறது.
 
 
கார்த்திகைப் புதுமை
முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் கார்த்திகை. ஆறுமுகப் பெருமான் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகை அவனுக்கு உகந்த நட்சத்திரமாயிற்று. கார்த்திகை விரதம் இருப்பதும் கார்த்திகை மாதம் முழுவதும் புலால் உண்ணாமல் இருப்பதும் திருக்கார்த்திகைப் பெருவிழாவைக் கொண்டாடுவதும் நகரத்தார் பழக்கம். திருக்கார்த்திகை நாளன்று நகரத்தார்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள 10 வயதைத்தாண்டிய ஆண்மக்களுக்கு அரைக்கலியாண நிகழ்ச்சியாகக் கார்த்திகைப் புதுமை என்னும் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதற்கு சூப்பிடி என்று பெயர். இந்நிகழ்ச்சியில் ஆண்மகனை மணமகன் போல அலங்கரித்துக் குதிரை மீது ஏற்றி உறவினர் புடைசூழக் கோயிலுக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம். சூள் என்னும் தீவட்டி போன்ற விளக்கினைக் குதிரைக்கு முன் ஏந்திச் செல்வதால் சூப்பிடி என்று பெயர் வந்தது என்பர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு மரணம் அடைவோரை எரிப்பதே நகரத்தார் வழக்கம். புதைப்பதில்லை. இவ்வாறு ஆண்மகனை முழுமனிதனாக்கும் ஒரு நிகழ்ச்சியாகக் கார்த்திகைப் புதுமை அமைகின்றது. ஆண்மகன் ஒருவன் இல்லத்தில் இருப்பதை ஊரார்க்கு அறிவிக்கும் ஒரு நிகழ்ச்சியாகவும் இது உள்ளது.
 
பிள்ளையார் நோன்பு
பிள்ளையார் நோன்பு நகரத்தர் மரபுக்குரிய நோன்புகளில் ஒன்று அது விநாயகரை முதன்மையாக வைத்தே கொண்டாடப்படுகிறது. இருப்பினும் இந்நோன்பில் இழை எடுத்துத் தீயில் காட்டி, எரியும் தீயோடு வாயில் இடும் வீர மரபு இளைய பிள்ளையாராகிய (சிவபெருமானை) முருகனை ஒட்டி எழுந்த நோன்பாகும், என்பது தமிழண்ணல் கருத்தாகும்.
 
தைப்பூசமும் காவடியும்
முருகப் பெருமானுக்குரிய விழாக்களுள் முக்கியமானவை தைப்பூசமும், கந்தர் சஷ்டியும், தைப்பூசத்தில் காவடி எடுத்து முருகப் பெருமானுக்குக் காணிக்கை செலுத்துவது நகரத்தார் வழக்கம். தமிழகத்தில் குன்றக்குடிக்கும், பழனிக்கும், தத்தம் ஊர்களிலிருந்து காவடி எடுத்துக் கால்நடையாகச் செல்வர். தைப்பூசத்தை மலாயா, சிங்கப்பூர், பர்மா, வியாட்நாம் முதலிய வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று கொண்டாடச் செய்த பெருமை நகரத்தார்களையே சாரும். சிங்கப்பூர், பினாங்கு, இரங்கூன், செய்கோன் முதலிய இடங்களில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் பம்பாய்க்கு அருகில் நாசிக்கிலும் நகரத்தார்கள் தைப்பூசத்தைச் சிறப்பாகக் காவடி எடுத்துக் கொண்டாடுகின்றனர். நகரத்தார் ஆடவர், மகளிர் பலர் கந்தர் சஷ்டி விரதம் மேற்கொண்டு பல ஆண்டுகள் தொடர்ந்து விரதம் இருப்பர். திருச்செந்தூர் சென்று நிறைவேற்றுவர். தேவகோட்டையில் கந்தர் சஷ்டி விழா மிகச் சிறப்பாகப் பல ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது.
 
வேற் பூசை
வேல் என்பது முருகப்பெருமான் கையில் உள்ள ஆயுதம். வெற்றி தருவது வேல். அது வீர வேல். தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட தீர வேல், செவ்வேள் திருக்கை வேல், வாரி குளித்த வேல், சூர் மார்பும் குன்றும் துளைத்த வேல் அது ஞானத்தின் அடையாளம். வேலை முருகப் பெருமானாகக் கருதி வழிபட்டவர்கள் நகரத்தார்கள். வேலை வணங்குவதே எமக்கு வேலை என்று கருதியவர்கள். நகரத்தார்கள் கொண்டு விற்கச் சென்ற இடங்களுக்கு எல்லாம் வேலை உடன் எடுத்துச் சென்று வழிபட்டு வந்தனர். தங்கள் வாணிபம் செய்யும் இடங்களில் வைத்துக் கோயில் வீடு கண்டனர். வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தாங்கள் வாழும் ஊர்களிலும் வேலுக்குப் பூசையிட்டு அன்னதானம் செய்வதை மரபாகவும், வழக்கமாகவும் கொண்டுள்ளனர். வேலுக்குப் பூசையிடும் வேள்வணிகர் என்று இவர்களுக்குப் பெயருண்டு. திரைகடலோடித் திரவியம் தேட முற்பட்டபோது நாகப்பட்டினத்திலும் அதனை ஒட்டி, எட்டுக்குடியிலும், சென்னையிலும், திருவொற்றியூரிலும் வேற்பூசை நடத்தினர். நகரத்தார் ஊர்களில் பெரும்பாலான இடங்களில் வேற்பூசை நடைபெறுகிறது. தேவகோட்டையில் மாசிமகத்தன்று சிறப்பாக வேற்பூசை நடத்துகின்றனர். வெளிநாடுகளிலும் வேற்பூசை நடைபெறுகிறது. அங்கு வேல் தான் முதலில் இருந்து, பின்பு படிப்படியாக திருவுருவம் அமைத்துக் கோயில் கட்டினர். சென்னையில் ஆறுபடை வீட்டிற்குக் கோயில் எழுப்பவும் நகரத்தார்கள் உதவியுள்ளனர். மாசிமகத்தன்று சென்னை பவளக்காரத் தெருவில் இருந்து திருவொற்றியூருக்கு இரதத்தில் முருகன் செல்வார். நகரக் கோயிலில் ஒன்றான வேலங்குடி என்பதன் பெயர் வேலனுக்குரிய குடி என்பதன் விளக்கமாக இருக்கலாம்.
 
 
தாலாட்டும் தகவல் சாதனங்களும்
செட்டிநாட்டுத் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தாலாட்டுப் பாடும்போது முருகன், வள்ளி கதையை வைத்துத் தாலாட்டி முருகபக்தியை இளவயதிலேயே பிள்ளைகளுக்கு ஊட்டுவர். நகரத்தார் நடத்திய பத்திரிக்கைகளில் குமரன் என்பதும் ஒன்று. குமரன் என்பது முருகனின் இளமைக் கோலத்தைக் குறிக்கும் பெயரல்லவா. மேலும் திரைப்படங்கள், இசைப் பாடல்கள், நாடகங்கள் வாயிலாகவும் முருக வழிபாட்டினைப் பரப்பிய பெருமையும் நகரத்தாருக்கு உண்டு. முருகனைப்பற்றிய பல பாடல்களும், கவிதைகளும் இயற்றிய கவிஞர்கள் பலர் நகரத்தார்களில் உள்னர். நூல்களும், கட்டுரைகளும் எழுதிய தமிழறிஞர்கள் பலர் உள்ளனர்.
 
முடிவுரை
முருகப்பெருமான் நகரத்தார்களின் நற்றுணையாவும் வழித்துணையாகவும் வாழ்வுத் துணையாகவும் விழித்துணையாகவும் விழுத்துணையாகவும் உயிர்த்துணையாகவும் விளங்கி அவர்கள் உயர்வுக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருக்கிறான். நகரத்தார்கள் வாழ்விலும் பழக்கவழக்கங்களிலும் பண்பாட்டிலும் முருகப் பெருமான் பெறும் பங்கு பெரும் பங்காகும்.
 
  
 
 4இசை பிடிமானம்
டாக்டர் சுப. திண்ணப்பன்,
இந்தியப் பகுதி, மலாயாப் பல்கலைக் கழகம், கோலாலம்பூர்.
நாட்டுக்கோட்டைச் செட்டியார் என்று அழைக்கப்பெறும் நகரத்தார்களின் திருமண வீடுகளில் எழுதப் பெறும் திருமண ஒப்பந்தத்திற்கு இசைபிடிமானம் என்பது பெயர். மணப்பெண்ணின் கழுத்தில் மாப்பிள்ளை தாலி பூட்டிய பின்னர், உடனே மணமகளை உள்வீட்டுக்குள் கூட்டிச் சென்று முன்னிறுத்திக் கையெழுத்து இடப்பெறும். இந்த ஒப்பந்தம் பொதுவாகப் பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதப் பெறுவது வழக்கம். ஏட்டில் எழுதுவோர் அருகிவிட்ட காரணத்தால் அண்மையில் வெள்ளைத்தாளில் எழுதத் தொடங்கியுள்ளனர். அச்சிட்டும் விற்கின்றனர். இவ்வொப்பந்தம் மணமகனின் தந்தை மணமகளின் தந்தை ஆகிய இருவருக்குமிடையே அமைவதால் இருவரும் கையெழுத்திடுகின்றனர். திருமணத்திற்கு முதல்நாள் மணமகளின் பங்காளி ஒருவரால் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பிரதியும், மணமகனின் பங்காளி ஒருவரால் மற்றொரு பிரதியுமாக இரண்டு பிரதிகள் எழுதப்பெற்றுத் திருமண நாளன்று மேற்சொல்லப்பட்டவாறு படிக்கப் பெற்றுக் கையெழுத்து இடப்பெறும். மணமக்களின் தந்தையர் கையொப்பம் இடுமுன் இப்பிரதிகளை எழுதியவர்களும் தத்தம் கோயிற் பிரிவுடன் கையொப்பமிடுவர். இந்த இரண்டு பிரதிகளும் மணமகள் வீட்டிலேயே எப்போதும் வைக்கப்பட்டிருக்கும்.
பெயர்
      இந்த ஒப்பந்தத்திற்குப் பெயர் இசைபிடிமானம் என்பதாகும். இது திருமணத்திற்கு மணமக்களின் தந்தையார் இசைந்து உடன்பட்டதற்கு ஆதாரமாக-பிடிமானமாக அமைவதால் இசைபிடிமானம் எனப்பட்டது. இசைவுக்குரிய பிடிமானம் ஆதலின் இசைவுப் பிடிமானம் என்பர். ஆனால் இந்த ஒப்பந்தத்தின் இறுதியில் இந்த ஒப்பந்தத்தை எழுதியவர் யார் என்பதைக் குறிக்க வரும் வாக்கியத்தில் இந்த இசை குடிமானம் எழுதினேன் என்று வருகிறது. இங்கு இசை குடிமானம் என்ற பெயர் அமைவதைப் பார்க்கிறோம். இங்கு மானம் என்பதை பிரமாணம் என்பதன் திரிபாகக் கருதி இசைந்த குடிக்குரிய பிரமாணம் என்று கருதுவாரும் உளர்.
அமைப்பு முறை
      முதலில் திருமணநாள் தமிழ் ஆண்டு முறைப்படி ஆண்டு மாதம், தேதி குறிக்கப் பெற்றிருக்கிறது. பிறகு ஒப்பந்தம் எழுதிக் கொள்ளும் மணமக்களின் தந்தையர் பெயர் கோயிற் பிரிவுடன் எழுதப் பெறும். பிறகு மணமகன் பெயர், மணமகள் பெயர் குறிக்கப் பெற்று இவர்களிருவரும் திருமணம் செய்து கொண்டதற்காக இருவரின் தந்தையரும் கொடுக்கும் நன்கொடைப் பொருட்கள் விவரம் தரப் பெற்றிருக்கும். இறுதியில் இசைபிடிமானம் எழுதியவரின் கோயிற் பிரிவுடன் பெயர் கொடுக்கப் பெறும். பிறகு கையெழுத்து இடப்பெறும். இசைபிடிமான வாசக அமைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (செட்டிநாடும் தமிழும் பக்கம் 223)
      ஸ்ரீ.....மீ..... ..... கல்வாச நாட்டில் இளையாற்றக்குடியான குலசேகரபுரத்தில் ஒக்கூருடையான் அருணாசலஞ் செட்டி ராமநாதரோ, கேரளசிங்க வளநாடாகிய பிரம்பூர் நாட்டில் மாற்றூரான வீரபாண்டியபுரத்தில் அரும்பாக் கூருடையான் கண்ணப்பசெட்டி நாராயணரோ இவர் மகன் சுப்பிரமணியனுக்கு இவர் மகள் வள்ளியம்மையை பாணிக்கிரகணம் பண்ணிக் கொண்டமைக்கு இவர்  பூஷணம் பூட்டும் பொன் ஒன்பது ஆறுகல்லெடை; பொன் பதிமுக்கழஞ்சு இவர் சீதனம் கொடுக்கும் பொன் இம்மாறு, இவ்வெடை பொன் ஆறுகழஞ்சு, வெள்ளி ஆறு கழஞ்சு, வெண்கலந்தராப்பலம் ஆறுபத்தொன்று, வெள்ளாட்டிக்கிப் பணம் முப்பது, சீராட்டுச் சக்கரம் ஆறுபத்தொன்று இவ்வகைப்படி செய்வோம். இவர் நன்கொடை கொடுக்கும் பொன் ஐம்பது, மோதிரம் விராகனெடை மூன்று, இவர் உகந்துடைமையாய்க் கொடுக்கும் பொன் வளையி ஏழு கழஞ்சு, இவ்வகைப்படி செய்வோம். இந்த இசைபிடிமானம் எழுதினேன் கல்வாசனாட்டில் இளையாற்றக்குடியான
குலசேகர புரத்தில் ஒக்கூருடையான்........
கையெழுத்து..............
மாப்பிள்ளை வீட்டுக்காரர் கையெழுத்து..........
பெண் வீட்டுக்காரர் கையெழுத்து..........
கோயிற் பிரிவு
      இந்த நகரத்தார்களை ஏனைய செட்டியார்களில் இருந்து இனம் பிரித்துக் காட்டுவது அவர்கள் சார்ந்துள்ள கோயிற் பிரிவுகளேயாகும். (பின் இணைப்புக் காண்க). இளையாற்றக்குடி, மாற்றூர், ஏழகப் பெருந்திரு என்ற வயிரவன் கோயில், இரணியூர், பிள்ளையார்பட்டி, நேமம், இலுப்பக்குடி, சூரைக்குடி, வேலங்குடி என்ற ஒன்பது கோயில் பிரிவுகள் உண்டு. இளையாற்றக்குடிக் கோயிலில் ஏழு உட்பிரிவுகளும் மாற்றூர்க் கோயிலில் ஏழு உட்பிரிவுகளும், வயிரவன் கோயிலில் மூன்று உட்பிரிவுகளும் உள்ளன. இவையனைத்தும் ஏனைய இனத்தினரின் கோத்திரங்களைப் போன்றவையாகும். ஒரு பிரிவைச் சார்ந்தவரிடையே திருமணம் நடைபெறுவதில்லை. நகரத்தார்களின் சாதிமுறை நியாயப்படி இரணியூர்க் கோயிலாரும், பிள்ளையார்பட்டிக் கோவிலாரும் சகோதர வமிசத்தாராதலால் தம்முள் கலியாணஞ் செய்து கொள்ளக் கூடாது. மற்றைக் கோவில்களில் செய்து கொள்ளலாம். இளையாற்றக்குடிக் கோயில் உட்பிரிவுகட்கிடையேயும் மாற்றூர்க் கோயில் உட்பிரிவுகட்கிடையேயும் திருமணம் செயது கொள்கின்ற வழக்கம், புள்ளிகள் பெருகிவிட்ட பிற்காலத்தில் தொடங்கியதாகக் கருதலாம். எப்பொழுது தொடங்கியது என்பதை அறுதியிட்டுச் சொல்ல இயலவில்லை. வயிரவன் கோவில் உட்பிரிவுகட்கிடையே திருமணம் செய்து கொள்கின்ற வழக்கம் கிடையாது. இத்துடன் இரணிக் கோயில், பிள்ளையார்பட்டி கோயிலார் சேர்ந்து இருவருக்குமிடையே விலக்கப்பட்ட திருமணத் தொடர்பையும் நீக்கினால் 249 இணைகள் தான் வரமுடியும்.
கோயிற் பிரிவுகளைக் குறிப்பிடும் போது வளநாடு, நாடு ஊர், புரம், உடையார் என்ற பகுப்பு முறை வரிசையைக் காண்கிறோம்.
வளநாடு
வளநாடு என்னும் பிரிவில் கேரள சிங்க வளநாடு என்ற ஒன்றை மட்டுமே காண்கிறோம். இளையாற்றக்குடி, இரணியூர், பிள்ளையார்பட்டி என்ற மூன்று கோயிற்கும் வளநாடு குறிக்கப் பெறவில்லை. கேரள சிங்கன் என்ற பெயர் முதலாம் இராசராசனுடைய விருதுப் பெயர்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் வளநாடு, நாடு, ஊர் என்ற பாகுபாடும் முதலாம் இராசராசன் காலத்திலேயே தோன்றியதாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுவர். வளநாடு, நாடு என்ற இப்பெயர்கள் செட்டிநாடு சுங்கமில்லாச் சோழநாட்டின் ஒரு பகுதியாக இருந்தபோது சோழ அரசர்களால் வழங்கப் பெற்றவை. சோழ மன்னர்கள் ஒவ்வொரு மண்டலத்தையும் பல வளநாடுகளாகப் பிரித்திருந்ததாகவும் ஒவ்வொரு வளநாடும் இரண்டிரண்டு பேராறுகளுக்கு இடையில் அமைந்திருந்த நிலப்பரப்பாகும் என்றும் டி.வி. சதாசிவப் பண்டாரத்தார் முதற்குலோத்துங்கன் என்னும் நூலில் கூறுவர். இதை நோக்க சிங்கவளநாடு என்பது வெள்ளாற்றுக்கும் வைகையாற்றுக்கும் இடையில் உள்ள நிலப்பரப்பைக் குறித்திருக்கக்கூடும் என்பது சோம.லெ. கருத்து (செட்டிநாடும் தமிழும் ப. 57)
 
நாடு
நாடு என்ற பாகுபாட்டில் கல்வாசநாடு, பிரம்பூர்நாடு, பாலையூர்நாடு என்ற பெயர்களைக் காண்கிறோம். வயிரவன் கோயில், நேமம், சூரைக்குடி என்ற மூன்று கோயில்கட்கும் நாடு என்ற பாகுபாடு குறிக்கப் பெறவில்லை. கல்வாசநாடு என்ற பிரிவின் கீழ் இளையாற்றக்குடி, இரணிக்கோயில், பிள்ளையார்பட்டி என்ற மூன்றும் வருகின்றன. இப்போதுள்ள பிள்ளையார்பட்டியும், இரணிக்கோயிலும் கல்வாசநாட்டில் கீழ் வாரா என்பது சா. கணேசன் கருத்து. (பிள்ளையார்பட்டித் தலவரலாறு) இசை பிடிமானத் தொடரில் இவ்விரண்டு கோயில்களையும் குறிக்க முறையே வருந் தொடர்களான, கல்வாசநாட்டில் இளையாற்றக் குடியான இரணியூர் மருதங் குடியான நாராயணபுரத்தில் இரணியூர்த் திருவேட்பூருடையார்'', கல்வாசநாட்டில் இளையாற்றக்குடியான இரணியூர் மருதங்குடியான நாராயணபுரத்தில் பிள்ளையார்பட்டியான திருவேட்பூருடையார்'' என்பதில் வரும் கல்வாசநாடு என்பதை இளையாற்றக்குடிக்கு அடைமொழியாகக் கொண்டு, ஏனைய இரண்டு கோயில்களும் இளையாற்றக்குடியிலிருந்து பிரிந்தவை என்பதைக் குலசேகரபுரத்தில் என்ற சொல்வரை அமையும் பொதுத் தொடராலும், இக்கோயில் பிரிவினர் இருவரும் உடன்பிறப்பினர் என்பதைத் திருவேட்பூருடையார் என்ற பொதுத் தொடராலும் அறியலாம்.
பிரம்பூர் என்ற நாட்டின் கீழ் மாற்றூர், இலுப்பைக்குடி என்ற இரண்டு கோயில்களும் வருகின்றன. இங்கு பிரம்பூர் என்பது வள்ளல் பாரியின் பறம்பு என்பதன் திரிபு என்று சிலர் கருதுகின்றார்கள். (செட்டிநாடும் தமிழும், பக். 23) இப்போதுள்ள பிரான்மலைப் பகுதியைப் பறம்பு மலைப் பகுதியாகக் கொண்டால் அதற்கு அண்மையில் இருக்கும் இளையாற்றக்குடியும் பிரம்பூர் நாட்டின் கீழ்தான் வரவேண்டும். அதை விடுத்து மாற்றூர், இலுப்பைக்குடி மட்டும் பிரம்பூர் நாட்டின் கீழ் வருவானேன் ? பாலையூர் நாட்டின் கீழ் வேலங்குடி என்ற பகுதி வருகிறது. பாலையூர் என்பது கண்டனூரையொட்டியிருந்ததாகப் பழைய ஊழியன் குமரன் வாயிலாக அறிய முடிகிறது. நாட்டுப் பகுதியைடுத்து, 9 கோயிற் பிரிவுகளின் பெயர்கள் வந்து ஆன என்ற சொல் வருகிறது. இந்த ஒன்பது கோயிற் பிரிவுகளில் வயிரவன் கோயிற் பெயரில் மட்டும் வயிரவன் கோயில் என்ற பெயர் குறிக்கப்படாமல் ஏழகப் பெருந்திரு என்ற பெயரே இசைபிடிமானத்தில் குறிக்கப்படுகிறது. ஏழகப் பெருந்திரு என்பது வயிரவன்பட்டியின் பழைய பெயராக இருந்திருக்க வேண்டும். இத்தொடர் ஒருபடையைக் குறிக்கும். இது கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகிறது. (முதலாம் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்தி மட்டியூரிலிருந்து வந்த ஏழகப் படையைத் தோற்கடித்து...)
புரம்
அடுத்து புரத்தில் என்ற பெயர் குறிக்கப்படுகிறது. குலசேகரபுரம், வீரபாண்டியபுரம், தேசிக நாராயணபுரம், ராஜ நாராயணபுரம் என்ற நான்கு புரங்கள் வருகின்றன. இலுப்பைக்குடிக்கு மட்டும் புகழிடங் கொடுத்த பட்டணம் என்ற தொடர் வருகிறது. புகழுக்கு இடங்கொடுத்த பட்டணம என்பது இதன் பொருளாகும். சிலர் புகலிடம் கொடுத்த பட்டணம் என்ற சொற்றொடர்தான் புகழிடங் கொடுத்த பட்டணம் என்று தவறாக எழுதப்பட்டதாகக் கருதுகிறார்கள். இலுப்பைக்குடியில் அரசர் இருவர்க்கு அடைக்கலம் கொடுத்த கதையும், அவன் அக்கோயிலுக்குக் கொடுத்த மானியமும் இதற்குச் சான்றாகும். குலசேகரபுரம் என்பது இளையாற்றக்குடிக்கும் நேமத்திற்கும் வருகின்றது. வீரபாண்டியபுரம் என்பது மாற்றூர்க்கும் ஏழகப் பெருந்திருவான வயிரவன் கோயிலுக்கும் வருகின்றது. தேசிகநாராயணபுரம் என்பது சூரைக்குடி, வேலங்குடி ஆகிய இரண்டிற்கும் வருகின்றது. ராஜ நாராயணபுரம் என்பது இரணியூர், பிள்ளையார்பட்டி ஆகியவற்றைக் குறிக்கும் மருதங்குடியைக் குறிப்பிட வருகிறது. இவற்றுள் குலசேகரன், வீரபாண்டியன் என்பன பிற்காலப் பாண்டியர்களின் பெயர்களாக இருக்கின்றன.
உடையார்
அடுத்து உடையார் என்ற சொல்லுடன் பல ஊர்ப் பெயர்கள் சேர்ந்து வருகின்றன. ஒக்கூர், பெருமருதூர், கிங்கிணிக்கூர், பேரசெந்தூர், சிறுசேத்தூர், உறையூர், அரும்பாக்கூர், மணலூர், மண்ணூர், கண்ணூர், கருப்பூர், குளத்தூர், சிறுகுளத்தூர், இரணியூர், திருவேட்பூர், கழனி நல்லூர் என்பன ஊர் என்ற சொல்லில் முடிகின்றன. இரணியூர், பிள்ளையார்பட்டி இரண்டிற்கும் பொதுவாகத் திருவேட்பூர் என்று வருகின்றது. கழனிவாசல், மகேந்திரபுரம், இளநலம், சூடாமணிபுரம், புகழ்வேண்டிய பாக்கம், கழனி வாசக்குடி என்பன ஏனைய பெயர்கள். இளையாற்றக்குடியில் அரும்பாற் கிளையாரான பட்டணசாமி பிரிவுக்கு மட்டும் உடையார் என்று சேர்க்கப்படவில்லை. மேலும் இந்த ஒரு தொடரைத் தவிர ஏனைய தொடர்களனைத்தும் ஊர்ப் பெயர்களாக வந்துள்ளன. எனவே அரும்பாற் கிளையாரான பட்டணசாமி என்ற பிரிவிற்கும் ஊர்ப்பெயர் தான் இருந்திருக்க வேண்டும் பட்டணசாமிக்கும், பட்டினத்தார்க்கும் தொடர்பு காட்டி, பட்டினத்தார் பெயருக்கு ஏற்பப் பின்னாளில் வந்ததாகவும் இருக்கலாம். இப்பொழுது இந்த ஊர்கள் எப்பகுதியில் உள்ளன என்பது ஆய்விற்குரிய ஒன்றாகும். ஒன்பது நகரக் கோயில்களைச் சுற்றி இந்த ஊர் இருப்பதாகத் தெரியவில்லை. உடையார் என்பது ஜமீந்தார் என்பது போல அந்த ஊரை உடைமையாகப் பெற்றவர்கள் என்பதைக் குறிக்கும். இவ்வூர்கள் பூம்புகார் நகரத்தையொட்டி நகரத்தார்கள் உடைமையாகப் பெற்றுக் குடியிருந்த ஊர்களாகும். ஓர் ஊரினர் வேற்றூரில் உள்ளவர்களைத் திருமணம் செய்து கொள்வதென்ற நிலையில் அப்போது இருந்திருக்கலாம்.
ஒப்பந்தத்திற்கு உரியோர்
மணமகன், மணமகள் தந்தையர் பெயர்கள் வருகின்றன. அருணசலாஞ் செட்டி ராமநாதர் என்பது, அருணாசலம் செட்டியார் மகன் ராமநாதன் என்பதைக் குறிக்கும். இது தற்காலத்தில் உஷ்ல்ஹய்க்ங்க் ஐய்ண்ற்ண்ஹப் உடன் பெயர் எழுதுவது போன்றதாகும்.
பாணிக்கிரகணம்
இவர் மகன் சுப்பிரமணியனுக்கு, இவர் மகள் வள்ளியம்மையைப் பாணிக் கிரகணம் பண்ணிக் கொண்டமைக்கு என்று வருகிறது. இங்கு பாணிக்கிரகணம் என்பது கைதொட்டுக் கொடுக்கும் திருமணத்தைக் குறிக்கும். நகரத்தார் திருமணங்களில் மணவறைமுடிவில் மணமக்களின் உள்ளங்கைகளை ஒன்றாகச் சேர்த்து மங்கலப் பொருட்களை வைத்துப் பட்டுத்துணியால் கட்டித் தீவலம் வரச் செய்வதைப் பார்க்கிறோம். கோவலன் கண்ணகி திருமணத்திலும் இவ்வாறு தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை ? (சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துப் பாடல் வரி 53) என்று குறிப்பிடப்படுகின்றது. நகரத்தார் திருமணச் சடங்குகளில் கைபிடி சோறு என்பதும் ஒன்று.
மணமக்கட்கு நன்கொடை
அடுத்து இத்திருமணத்திற்கு மணமக்களின் தந்தையர் கொடுக்கும் பட்டியல் வருகின்றது. இவர் என்ற சொல் இந்த ஒப்பந்தம் முழுவதும் கையாளப் பெறுவதால் மணமகனின் தந்தை யார் ? மணமகளின் தந்தை யார் ? என்று அறிவது சிரமமாயிருக்கும். இருந்தாலும் ஓரளவு இக்கால வழக்குகளின் அடிப்படையில் ஊகிக்க வழியுண்டு. இவ்வகைப்படி செய்வோம் என்ற தொடர் மூன்றுமுறை வருகிறது. முதலிரண்டு முறைகளிலும் இரு வீட்டாரும் கொடுக்கும் முறைகள் வருகின்றன.
மாப்பிள்ளையின் தகப்பனார் கொடுப்பவை
1.     பூவுணம் பூட்டும் பொன் ஒன்பது மாற்றுக் கல்லெடை பொன் 13 கழஞ்சு
2.     நன்கொடை (கொடுக்கும்) பொன் 50
3.     மோதிரம் விராகன் எடை 3
பெண்ணின் தகப்பனார் கொடுப்பவை
1.     () சீதனம் கொடுக்கும் பொன் இம்மாறு இவ்வெடை பொன் 6 கழஞ்சு
      () வெள்ளி 6 கழஞ்சு
2.     வெள்ளாட்டிக்குப் தராப்பலம் 61  
3.     சீராட்டுச் சக்கரம் 61
4.     உகந்துடைமை பொன் வளையி கழஞ்சு 7 தெரிசனை பொன்கழஞ்சு 13
பூவுணம் :
      மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்குப் பூஷண(நகை)த்துக்காகவும் நன்கொடையாகவும் மோதிரத்துக்காகவும் பொன் கொடுத்துள்ளார்கள். பூஷணம் என்பது இங்கு நகரத்தாரிடையே இன்றும் விளங்கும் திருமாங்கல்யமாகிய கழுத்தூரு என்ற மங்கல அணிகலனையே குறிக்கும். இன்றும் திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை வீட்டார் கழுத்தூருக்கும் பொன் கொடுக்கும் சிறப்புச் சடங்கு நிகழ்ச்சி நகரத்தாரிடையே நடைபெறுவதைக் காணலாம்.
நன்கொடை :
      நன்கொடை கொடுக்கும் பொன் என்பது மாப்பிள்ளை விட்டார் மணமக்களுக்குக் கொடுக்கும் பொன்னாகும். இது இன்றும் ஈடுபொன் என்று வழங்கப்படுகிறது. இன்று திருமண நிகழ்ச்சி முடிவில் மணமகன், மணமகள் வீட்டார் இருவரும் கணக்குப் பார்த்துக் கொள்ளும் போது மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவு ஈடு பொன்னுக்குத் தருகிறார்கள் என்று கேட்டு மணமக்கள் பணத்தில் சேர்ப்பது வழக்கமாக உள்ளது.
மோதிரம் :
      மோதிரம் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்குக் கொடுத்ததாக இசைபிடிமானம் கூறுகிறது. ஆனால் இன்று பெண் வீட்டார் தான் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் மோதிரம் போடுகின்றனர். பழங்காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் மோதிரம் போடும் பழக்கம் இருந்திருக்கலாம். அல்லது பெண்ணுக்குக் கொடுக்கும் வெள்ளிக்கால் மோதிரத்தை இது குறிக்க இடமுண்டு. வெள்ளி விராகன் எடையில் நிறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
 
சீதனம் :
      ஸ்ரீதனம் என்பது சீதனமாகிறது. பெண்ணுக்குரிய தனமாகும். பெண்ணின் தகப்பனார் பெண்ணுக்குச் சீதனமாகப் பொன்னும் வெள்ளியும் வெண்கலம் தராவும் கொடுத்துள்ளனர். பொன், வெள்ளி, வெண்கலம், தரா என்ற நான்கும் உலோகப் பொருள்களாகும். வெண்கலம், தரா என்ற இரண்டும் கலப்பு உலோகங்களாகும். வெண்கலம் என்பது செம்பும் வெள்ளீயமும் கலந்து உருக்கி உண்டாக்கப்படும் கலப்பு உலோகம். தரா என்பது எட்டுப் பாகம் செம்பும் ஐந்து பாகம் காரீயமும் கலந்த ஒரு கலப்பு உலோகம். இவற்றால் செய்யப்பட்ட பொருள்களைப் பெண்ணுக்குப் பெண் வீட்டார் வழங்கியுள்ளனர்.
வெள்ளாட்டி :
      வெள்ளாட்டிக்குப் பணம் முப்பது பெண் வீட்டார் கொடுத்துள்ளதாகக் குறிப்புள்ளது. இங்கு வெள்ளாட்டி என்ற சொல் பணிப் பெண்ணைக் குறிக்கும். வைணவ உரை நூலாகிய ஈடு என்னும் நூலிலும் இப்பொருளில் வருவதாகச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது. பேச்சு வழக்கில் வெள்ளாட்டி என்பது வைப்பாட்டியைக் குறிக்கும் என்றும் தமிழ்ப் பேரகராதி பொருள் தருகின்றது. டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் வெள்ளாட்டி என்பது நகரத்தார்கள் மணந்து கொண்ட வேளாளர் மரபுப் பெண்டிரை உணர்த்தும் ஒரு சொல்லாக (வெள்ளாளன்-வெள்ளாட்டி) ஆச்சி என்பதற்கு ஈடாக வெள்ளாட்டி என்று வழங்கியதாகக் கருதுகிறார்கள். நகரத்தார் அறப்பட்டயங்கள் என்று அவர்கள் பதிப்பித்த நூலில் உள்ள பட்டயம் ஒன்றில் இவ்வழக்கு வருகின்றது. அக்காலத்தில் ஆச்சி என்ற சொல் வழக்கில் இல்லை. எனவே வெள்ளாட்டிஎன்பது இங்கு மணமகனின் தாயாரை உணர்த்தும் ஒரு சொல்லாக அவர்கள் கருதுகிறார்கள்.
 
சீராட்டு :
      சீராட்டு என்பது செல்லம் பாராட்டுகையைக் குறிக்கும். இன்றும் சீர் வைத்தல் ஒரு சடங்காக இருக்கின்றது. சீராட்டுக் கொண்டு போதல் என்ற சடங்கும் உண்டு.
உகந் துடைமை :
            உகந்துடைமையாய் விரும்பிக் கொடுக்கும் பொருளாகப் பொன் வளையல் குறிக்கப் பெறுகின்றது.
தெரிசனை :
      இந்த நாள் இவரிடும் பொன் இவர் சொற்படி தெரிசனை பதிமுக்கழஞ்சு இவ்வகைப்படி செய்வோம்' என்று வருகிறது. தெரிசனை இடும் - தெரிசனை என்பது புனிதமான காட்சியைக் குறிக்கும். முன் சொன்ன அனைத்தும் பொருள்களாக-சாமான்களாக அமைய மணமகள் வீட்டார் மணமகன் வீட்டார் சொற்படி தங்கமாகவே நேரில் கொணர்ந்து கொடுத்ததாகத் தெரிசனை அமைந்திருக்கலாம்.
அளவுகள்
இசை பிடிமானத்தில் பொன், வெள்ளி இரண்டும் கழஞ்சு என்ற அளவாலும் வெண்கலம், தரா என்ற இரண்டும் பலம் என்ற அளவாலும் குறிக்கப் பெறுகின்றன. பணம், சக்கரம், வராகன் எடை என்ற அளவுகளும் குறிக்கப் பெறுகின்றன. பொன் நகையைப் பற்றி வருமிடத்தில் மாற்று கல்லெடையுடன் குறிக்கப் பெறுகின்றது. ஆனால் மோதிரம், விராகன் எடை என்ற அளவுடன் வருகின்றது.
கழஞ்சு
இக்காலத்தில் 1/6 அவுன்ஸ் ட்ராய் மதிப்புள்ள ஒரு எடுத்தல் அளவை என்று தமிழ்ப் பேரகராதி குறிக்கிறது. ஒன்றே கால் வீசம் வராகன் எடை இந்த எடையுள்ள பொற்காசு பல்லவர் காலத்தில் செலாவணியாக இருந்தது என்றும் இராஜ ராஜ சோழன் காலத்தில் வழங்கிய 68 தானியமணி (Grains) மதிப்புள்ள எடை ஒன்றும் எடுத்தலளவையால் மதிப்புப் கெறும், ஒரு வகை நாணயம் என்றும் செட்டி நாடும் தமிழும் (பக் 304) என்ற நூல் வாயிலாக அறிகிறோம்.
மாறுகல்லெடை
ஒன்பது மாற்றுள்ள ஆறு கல்லெடை கொண்ட பொன் நாணயம் என்பது புழக்கத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டர்டு எடையாக இருக்கலாம். மாற்று-மாறு பொன் வெள்ளியின் தரத்தை உரைத்துப் பார்த்துணர்வதாகும். இப்போது ஆசாரிகள் மச்சம் என்று சொல்கிறார்கள்.
பலம்
பலம் என்பதும் ஒரு நிறுத்தலளவை வெண்கலம், தரா என்ற உலோகங்களை நிறுக்க உதவுவது, 8 பலம் ஒரு சேர் என்று நிறுத்தலளவை வாய்பாடு. இதன் இன்றைய சரியான மதிப்பு இன்று தெரியவில்லை.
பணம்
இது ஒரு வகை நாணய அளவு. எட்டுப் பணம் கொண்டது ஒரு ரூபாய் ஆகும். 1/8 ரூபாய் ஒரு பணம். இவ்வாறு செட்டிநாட்டுப் பேச்சில் வழங்கக் கேட்டிருக்கிறேன். இன்றும் மொய்ப்பணம் எழுதும் போது பணம் எவ்வளவு எழுதுவது என்று கேட்கிறார்கள். ஆயாள் வீட்டார், (மாமா) மாமப்பணம் 1/8 முறையில் கணக்கிடுவதை இன்றும் காணலாம்.
பொன்
      பொன் என்பது நன்கொடை கொடுக்கும் பொன் ஐம்பது என்று வருகிறது. பொன் என்பது 10 பணம் என்று செட்டி நாடும் தமிழும் குறிக்கிறது. (பக் 304)
 
சக்கரம்
      சீராட்டு சக்கரம் என்ற அளவால் குறிக்கப் பெறுகிறது. சக்கரம் என்பது தென்னிந்தியாவில் பழங்காலத்தில் வழங்கிய பழைய வெள்ளி நாணயம் என்றும் 1/6 தங்கப் பகோடா மதிப்புடையது என்றும் அரையாணா மதிப்புள்ளதாக (3 நயாபைசா) மலையாளத்தில் திருவாங்கூரில் வழங்கிய நாணயம் என்றும் பேரகராதி வாயிலாக அறிகிறோம்.
வராகன் எடை
      மோதிரம் வராகன் எடை என்று அளவால் குறிக்கப் பெறுகின்றது. 5/16 ரூபாய் 54 மணி மதிப்புள்ளதென்று நிறுக்கும் நிறை வகை. செட்டி நாட்டு ஆசாரிகள் தங்கத்தை வராகன் எடையில் நிறுத்துச் சொல்வதை இன்றும் காணலாம். 2-3/16 வராகன் எடை என்பது இன்று 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் ஆகும்.
3 3-16 வராகன் எடை என்பது 11 கிராம் கொண்ட வெள்ளி வெள்ளியாகும். சோழர் காலத்தில் செட்டியார்கள் சளுக்கிய ஆட்சிக்குட்பட்ட நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்ததன் பயனாக வராகன் என்னும் நாணயம் தமிழ் நாட்டுக்கு வந்தது என்றும் அதன் மதிப்பு ஒரு வராகன் ரூ. 3-50 என்றும் சோம லெ கூறுவர். (செட்டிநாடும் தமிழும் பக். 58).
கையொப்பம் :
      இசைபிடிமானம் எழுதினவர் கோயிற் பிரிவு எழுதிக் கையொப்பமிட வேண்டும். பிறகு மணமகனின் தந்தையாரும் மணமகளின் தந்தையாரும் கையொப்பமிட வேண்டும். தந்தையார் இல்லாவிடில் அடுத்த தந்தை வழி (நெருங்கிய உரிமையாளர்) உறவினர் கையொப்பமிடலாம். கையொப்பமிடுபவர் யாராவினும் மேற்கண்ட இசைபிடிமான வாசகம் மாற்றப் பெறாது. மணமகள் வீட்டில் தான் இரண்டு பிரதிகளும் வைக்கப் பெறும். மறுமணம் செய்து கொள்ளும் உரிமை ஆணுக்குண்டு. பெண்ணுக்கு இல்லை. திருமணத்தை உறுதி செய்யும் பிடிமானம் பெண்ணுக்குத் தான் இன்றியமையாத தேவை எனக் கருதிப் பெண் வீட்டாரிடம் வைத்தனர் போலும். இசைபிடிமானம் எழுதியவர்க்கு மணமக்கள் வீட்டார் பழம், பெட்டி, சட்டி, பாக்கு அன்பளிப்பாக வழங்குவர்.
பின் இணைப்பு
   எண் வளநாடு     நாடு       ஊர்               புரம்           உடையார்
   1.               கல்வாசல்   இளையாற்றக்குடி   குலசேகரபுரம்    ஒக்கூர்
   2.               கல்வாசல்   இளையாற்றக்குடி   குலசேகரபுரம்    அரும்பாற்கிளையாரான
                                                              
பட்டணசாமி
   3.               கல்வாசல்   இளையாற்றக்குடி   குலசேகரபுரம்    பெருமருதூர்
   4.               கல்வாசல்   இளையாற்றக்குடி   குலசேகரபுரம்    கழனிவாசக்குடி
   5.               கல்வாசல்   இளையாற்றக்குடி   குலசேகரபுரம்    கிங்கிணிக்கூர்
   6.               கல்வாசல்   இளையாற்றக்குடி   குலசேகரபுரம்    பேரசெந்தூர்
   7.               கல்வாசல்   இளையாற்றக்குடி   குலசேகரபுரம்    சிறுசேத்தூர்
   8.   கேரளசிங்க  பிரம்பூர்    மாற்றூர்           வீரபாண்டிய     உறையூர்
   9.   கேரளசிங்க  பிரம்பூர்    மாற்றூர்           வீரபாண்டிய     அரும்பாக்கூர்
   10.  கேரளசிங்க  பிரம்பூர்    மாற்றூர்           வீரபாண்டிய     மணலூர்
   11.  கேரளசிங்க  பிரம்பூர்    மாற்றூர்           வீரபாண்டிய     மண்ணூர்
   12.  கேரளசிங்க  பிரம்பூர்    மாற்றூர்           வீரபாண்டிய     கண்ணூர்
   13.  கேரளசிங்க  பிரம்பூர்    மாற்றூர்           வீரபாண்டிய     கருப்பூர்
   14.  கேரளசிங்க  பிரம்பூர்    மாற்றூர்           வீரபாண்டிய     குளத்தூர்
   15.  கேரளசிங்க  -          ஏழகப்பெருந்திரு    வீரபாண்டிய     சிறுகுளத்தூர்
   16.  கேரளசிங்க  -          ஏழகப்பெருந்திரு    வீரபாண்டிய     கழனிவாசல்
   17.  கேரளசிங்க  -          ஏழகப்பெருந்திரு    வீரபாண்டிய     மருதேந்திரபுரம்
   18.  -           கல்வாசல்   இளையாற்றக்குடி   குலசேகர       திருவேட்பூர்
                              இரணியூர்மருதங்குடி ராஜநாராயண
   19.  -           கல்வாசல்   இளையாற்றக்குடி   குலசேகர
                             
இரணியூர்மருதங்குடி ராஜநாராயண   திருவேட்பூர்
                              (
பிள்ளையார்பட்டி)
   20.  கேரளசிங்க             நேமம்             குலசேகரபுரம்    இளநலம்
   21.  கேரளசிங்க  பிரம்பூர்    இலுப்பைக்குடி      புகழிடங்கொடுத்த   சூடாமணிபுரம்
                                                              
பட்டணம்
   22.  கேரளசிங்க             சூரைக்குடி         தேசிகநாராயண  புகழ்வேண்டிய                                                               பாக்கம்
   23.  கேரளசிங்க  பாலையூர்  வேலங்குடி         தேசிகநாராயண  கழனிநல்லூர்.
சித்தாந்த வித்தகர் முரு.பழ. இரத்தினம் செட்டியார் மணிவிழா மலர்
சோமலெ, செட்டிநாடும் தமிழும், சென்னை, வானதி பதிப்பகம்,
பக்547-560

...தொடரும்...
Dr S.P. Thinnappan
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக