வெள்ளி, 2 மே, 2014

இலக்கியம் - 2







சிங்கப்பூரில் டாக்டர் மு.. அவர்களின் செல்வாக்கு

 

பேராசிரியர் மு.வரதராசனார்(முவ) அவர்களின் செல்வாக்கு, சிங்கப்பூர்த் தமிழுக்கும் தமிழர்க்கும் எவ்வகையில் உதவியது என்பதைச் சுட்டிக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

வருகை

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் 1966 ஏப்பிரல் 16- 23 நாட்களில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ்நாட்டின் பேராளராகக் கலந்துகொள்ள வந்த தமிழறிஞர் குழுவினர், மாநாடு முடிந்த பின்னர் சிங்கப்பூருக்கு வருகை தந்தனர். அவர்களில் ஒருவராக வந்த மு.  அக்காலத்தில் இருந்த தேசிய அரங்கில் தமிழறிஞர்களுடன்  தமிழர்கள் பெருந்திரளாகக் கூடிய கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றியதாக அறிகிறோம்.. பிறகு மு.. உமறுப்புலவர் உயர்நிலைப்பள்ளிக்கு வருகை புரிந்து வகுப்புகளுக்குச் சென்று தமிழ் மாணவர்களுடன் உரையாடியதாவும் தமிழாசிரியர் சங்கத்தலைவர் திரு. சாமிக்கண்ணு வாயிலாக அறிந்தேன். அக்காலத்தில் தமிழ்முரசில் பணியாற்றிய ஜே. எம்.சாலி அவர்கள் மு.. அவர்களைப் பேட்டி கண்டு தமிழ்முரசில் வெளியிட்டதாகவும் தெரிகிறது. 1950 -70 களில் மு.வ நூல்களைப் படிப்பதில் முனைப்புக் காட்டியவர்கள் சிங்கப்பூரில் பலர் இருந்தனர். எனவே, மு.. அவர்களைக் கண்டும் அவர் சொற்பொழிவைக் கேட்டும் மகிழ்ந்தவர்கள் பலர் இன்று மூத்த ஓய்வு பெற்ற தமிழாசியர்களாக உள்ளனர்.

வானொலியில் நேர்காணலும் பேச்சும்

மு.. அவர்கள் சிங்கை வந்தபோது சிங்கை வானொலியில் அப்போது பணியாற்றிய திரு. P. கிருஷ்ணன், மு.. அவர்களிடம் நேர்காணலை எடுத்து ஒலிபரப்பியதாவும் வானொலியில் இலக்கியப் பேச்சுக்கள் மு.. நிகழ்த்தியதாவும் சொன்னார்.

 மு,,வின் மாணவரான சுப.திண்ணப்பன் “எல்லோருக்கும் ஏற்ற தமிழ எளிய தமிழ்என்னும் நிகழ்ச்சிகளுக்கும் சிங்கை வானொலிக்கு எழுத்துரை வழங்கியுள்ளார். இவ்வாறே, மலேயாப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய டாக்டர். மு.. மாணவரான, இரா.தண்டாயுதம் சங்க இலக்கிய அறிமுக எழுத்துரைகளைச் சிங்கை வானொலியில் ஒலிபரப்பச் செய்தார்.

 

தமிழ்முரசில் மு.வ எழுத்துப் படைப்புகள்

தமிழவேள் கோ.சாரங்கபாணி நிறுவி ஆசிரியராக இருந்து நடத்திய தமிழ்முரசு நாளிதழின் ஆண்டுமலர்களிலும் ஞாயிறு மலர்களிலும் மு..அவர்களின் சிறுகதை ஒன்றும் ஒன்பது கட்டுரைகளும் 1951-61 காலப்பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு;

 சிறுகதை;

இறந்த சிற்றப்பா’ -5-8-1951 .

மாற்றாந்தாயின் கொடுமையையும் வாய்மையே வாழ்க்கையாகக் கொண்ட ஒருவரது இயல்பையும் கருவாகக் கொண்ட கதை. மேலும் இலங்கையில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர் நிலை பற்றியும் இக்கதை பேசுகிறது.

கட்டுரைகள்

1. ஒரு சிறு காட்சி 9-8-1953 பக் 3

திருக்குறளின் மூன்றாம் பாலாகிய இன்பத்துப் பாலுக்குரிய குறள்களை அடிப்படையாக வைத்துத் திருவள்ளுவரை ஒரு நாடக ஆசிரியராகவும் படைப்புத் திறன் மிக்க பண்புடைக் கவிஞராகவும் காட்டும் முயற்சியே இக்கட்டுரை. திருக்குறளில் இப்பகுதியைக் காமத்துப் பால் என ஒதுக்காது தூய காதலைக் காட்டும் பகுதி எனப் பலரைப் படிக்கத் தூண்டும் இக்கட்டுரை.

2 .வீடும் விஞ்ஞானமும்; 11-12-1954 பக் 10

இக்கட்டுரையில். மு.. இயற்கையும் சமுதாயமும் மனிதனுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இடையூறுகள் செய்தாலும் மனிதன் தன் அறிவு வளர்ச்சியால் முன்னேறி வருகிறான் என்பதை வீடு கட்டும் முறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் வாயிலாக விளக்க முயல்கிறார், இக்கட்டுரை  வீடமைப்பு வளர்ச்சியில் முன்னேறி வரும் சிங்கப்பூர் மக்களுக்கு ஏற்ற படிப்பினையை உணர்த்துகிறது

 

 

 

3.அகத்துறை 13-1-1955 பக் 5-9

சங்க இலக்கியப் பாடுபொருள் பிரிவான அகம் பற்றிய கொள்கையை எளிமையாக விளக்கும் இயல்பை இக்கட்டுரையில் காண்கிறோம்.  இது சங்க இலக்கியம் படிக்க வழிகாட்டும்

4. நாடகத் தமிழ் 17-4-1955 பக் 9-10

. முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழ் இலக்கியம், இலக்கணம், கலை ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி, வரலாற்றை விரிவாகச் சான்று காட்டி விளக்கும் முயற்சியே ஆகும்  சீர்திருத்த நாடகங்கள் சிங்கையில் மிகுதியாக அரங்கேற இக்கட்டுரையும் தூண்டுகோலாக இருந்திருக்கலாம்.

5. காலம் கடந்து வாழும் கருத்துகள் 1-5- 1955 பக்9

1890இல்  பேராசிரியர் சுந்தரனாரால் எழுதப்பட்ட மனோன்மணீய நாடகம் இக்காலத்துக்குக்கேற்ற தாய்மொழிப்பற்று,நாட்டுப்பற்று என்பவற்றை வலியுறுத்துவதைக் இக்கட்டுரையில் ஆசிரியர் மு.. விளக்குகிறார். இக்கட்டுரை சிங்கப்பூர் தமிழருக்கும் ஏற்கும்.

6. கலைச்செல்வங்கள் 1958 தமிழ்முரசு ஆண்டுமலர் பக் 30- 32

அனுபவ வெளிப்பாடே கலை. அது ஊடகங்களுக்கேற்பப் பல வகையாக விளங்கிச் சுவைப்பவர்க்கு இன்பம் தருகிறது என்பதை இலக்கிய எடுத்துக்காட்டுகள் தந்து விளக்குகிறது இக்கட்டுரை. பொதுவாகக் கலைஞர் அனைவருக்கும் பயன் தரும் கட்டுரை,

7. தாழ்வுற்றோம் 9-7-1961 பக் 4&9

பிறந்த நாட்டிலும் தமிழன் நன்றாக வாழமுடியவில்லை. புகுந்த நாட்டிலும் நன்றாக வாழமுடியவில்லை என்று வருந்திப் ‘, ‘பழம்பெருமை பேசாது நானும் ஒரு மனிதன்என்னும் தன்னம்பிக்கையோடு உழைக்க வேண்டும் என அறிவுரை தரும் கட்டுரை.இது எக்காலத் தமிழர்க்கும் ஏற்ற கட்டுரை.

8. கலைகள் தேவை 3-6-1962

இயற்கையையும் வாழ்க்கையையும் மனிதன் நுகர்ந்து இன்புறலாமே, பிறகு கலைகள் ஏன் தேவை என்னும் வினாவை எழுப்பி அதற்கு மூன்று விடைகளைச் சான்றுகளுடன் தருகிறது, இக்கட்டுரை.

     9. புலனடக்கம் 28-4- 1963 பக் 7

இக்கட்டுரையில் பிள்ளைகள் வளர்ப்பில் முற்கால நிலை,      இக்   கால     நிலை இரண்டையும் ஒப்பிட்டு மாற்றங்களையும் விளக்கி இக்கால இளையர்கள் உள்ளம், உடல்நிலை, அறிவு ஆகியவை கெட்டு இருப்பதற்குரிய காரணம் புலனடக்கம் இன்மையே என்று புலப்படுத்தியுள்ளார் முவ

 

 மு.. எழுதியகவிதை

 

மு.வ. உரைநடைப் படைப்பாளராக உச்சநிலையில் இருந்தாலும் ஒரு சில கவிதைகளும் அவர் எழுதியுள்ளார்.  சிங்கப்பூர் உள்ளடங்கிய மலயா நாட்டுத் தமிழ்நேசன் ஆண்டு மலர் ஒன்றில் (1959) (பக் 146 -47) விழிப்பு என்னும் தலைப்பில் மு.வ அவர்கள் எழுதிய கவிதை ஒன்று வெளிவந்துள்ளது.. வெளிநாடுகளில் குடியேறிப் புலம் பெயர்ந்துறையும் தமிழர்களைத் தட்டி எழுப்பும் நோக்கோடு எழுதிய கவிதை இன்றைய நிலையிலும் பொருந்தும்.

 

கல்வி நிலையங்களில் (தமிழ்க் கல்வித் துறையில்)

தென்கிழக்காசிய உலகில் ஒரே உயர்நிலைப்பள்ளி (தமிழ் வழி கற்பிக்கும்) எனத் திகழ்ந்த உமறுப்புலவர் உயர்நிலைப்பள்ளியில் சாதாரணநிலைக்கல்வி (O Level) நிலை பயின்ற மாணவர்களுக்கு இலக்கியப் பாடமாக மு..அவர்களின் இளங்கோவடிகள்என்னும் நூல் பாடநூலாக வைக்கப்பட்டிருந்தது என்றும் 1966 இல் சிங்கப்பூருக்கு வருகை தந்த மு.. அவர்கள் உமறுப்புலவர் பள்ளிக்கு வந்து வகுப்பறையில் அப்போது மாணவராக இருந்த திரு.சாமிக்கண்ணு அவர்களிடம் அப்புத்தகம் பற்றிய கருத்து அறிய வினாவியதாகவும் அவர்வழி அறிந்தேன். 1980 -2012 ஆண்டுகளில் பல்கலை கழகப் புகுமுக வகுப்பில் தமிழ் இலக்கியம் படித்த மாணவர்களுக்குச் சிறப்பு நிலைப் பாட நூலாகப் பெற்றமனம், கள்ளோ காவியமோ, கரித்துண்டு ஆகிய நாவல்கள் பாடநூல்களாக வைக்கப்பட்டன. இதன் வழி மாணவர்கள் மு.. நாவல்களைப் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றனர். இவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் இந்நாவல்களை ஆழமாகக் கற்றனர்.

சாதாரண நிலை (O Level) த் தேர்வில் இலக்கியம் கற்ற மாணவர்களுக்கும் 1990 களில் உலகப்பேரேடுஎன்னும் மு..அவர்களின் கட்டுரைத் தொகுப்பு பாடநூலாக இருந்தது. . 2010களில் இந்நிலைக்கு மு.. அவர்களின் மூன்று நாடகங்கள்என்னும் நாடகநூல் பாடமாக உள்ளது.

UNISIM எனப்படும் சிம் பல்கலைக் கழகத்தில் B.A தமிழ்ப் பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு மு.. அவர்களின் தமிழ் இலக்கிய வரலாறு, மொழிநூல், மொழியியல் கட்டுரைகள், இலக்கியத் திறன் ஆகிய நூல்கள் பாடத் துணை நூல்களாகவும் அகல்விளக்குபுதினம் பாடநூலாவும் வைக்கப்பட்டன.

பொதுவாகப் பள்ளி நூலகங்கள் ,தேசிய நூலகங்கள், பல்கலைக் கழக நூலகங்கள், தொடக்கக் கல்லூரி நூலகங்கள் எல்லாவற்றிலும் மு.. அவர்களின் பெரும்பாலான நூல்கள் இடம் பெற்றுள்ள நிலையைக் காணலாம்.

சிங்கப்பூர்ப் பாடத்திட்ட மேம்பாட்டு நிறுவனம் 1982 இல் வெளியிட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கான தமிழ் 4 பாடநூலில் (விரைவு4 வழக்கம்/5 நிலைகளுக்கான) மூன்றாவது பாடமாக டாக்டர் மு.வரதராசனார் அவர்களைப் பற்றிய பாடம் ஒன்று அமைந்தது.. மேலும் அந்நூலில் மு.. எழுதிய நல்லநூல்என்னும் கட்டுரையும் ஒரு பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் முதன்மைத் தரம் வாய்ந்த பள்ளியாகத் திகழும் இராபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் உயர்தமிழ் பயின்ற மாணவிகளுக்கு மு.. அவர்களின் கரித்துண்டு. கள்ளோ காவியமோ, அகல் விளக்கு மண் குடிசை முதலிய நாவல்களைத் திறனாய்வு செய்து படைக்கும் பணி, பாட மதிப்பீட்டின் ஒரு கூறாக 1995 முதல் 2011 வரை இருந்தது.

 கருத்தரங்குகளில்

ஈசூன் தொடக்கக் கல்லூரியில் 1988 ஆம் ஆண்டில் தொடங்கிய கருத்தரங்கு வரிசையில் முதலாவது கருத்தரங்கில் டாக்டர். சுப.திண்ணப்பன்பெற்றமனம்நாவல்பற்றியும் (15-3-1988) இரண்டாம் கருத்தரங்கில் (11-3-1989) கள்ளோ காவியமோ என்னும் நாவல் பற்றியும் திறனாய்வுக் கட்டுரைகள் படைத்தார். இக்கட்டுரைகள் நூலாக்கம் பெற்றுள்ளன. தமிழாசிரியர் திரு. மா. இராஜிக்கண்ணு ஜூரோங் தொடக்கக் கல்லூரியில்கரித்துண்டுநாவல் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை படைத்துள்ளார். (25-6-12)

 

 

விழா நிகழ்ச்சிகளில்

சிங்கப்பூர் கல்விக் கழகத்தில் எண்பது தொண்ணூறுகளில் ஆண்டுதோறும் பாரதியார் விழாவும் மு.. விழாவும் தமிழ் மன்றத்தால் நடத்தப்பட்டன. இவ்விரு விழாக்களிலும் ஆசிரியர்கள், மாணவர்கள் எழுதும் கட்டுரைகள் கவிதைகள், விழா நாயகர்களின் வரலாறு, தமிழ்ப் பணி அடங்கிய மலர்கள் வெளியிடப்படும். மாணவர்கள் உரையாற்றுவர், நாடகம் அரங்கேற்றுவர். இவ்விழாக்களின் வாயிலாகத் தமிழாசிரியர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய முன்னோடிகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அண்மையில் 2012 ஏப்ரலில் தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளில் ஒன்றாக கவிமாலைக் குழுவினர் மு.. நூற்றாண்டு விழா நிகழ்ச்சி ஒன்றினை நடத்தினர். மு.. நூற்றாண்டு விழாவை ஒட்டிச் செம்மொழி இதழும் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகமும் இணைந்து மு..வின் நாவல்கள் பற்றிய திறனாய்வுப் போட்டியைத் தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திப் பரிசுகள் வழங்கின.

நாடகத்துறையில்

சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தினர் மு. அவர்களின்இளங்கோவடிகள்நாடகத்தை மேடை ஏற்றிச் சிறப்பாக நடித்துக் காட்டினர். இந்நாடகம் நாடக அரங்கில் ( பழைய தேசிய நூலகத்திற்குப் பின்னர் இருந்த) நடைபெற்றது.

எழுத்தாளர் உலகில்

தமிழ் எழுத்தாளர் உலகில் புகழ் பெற்று, தமிழ்முரசு முதலிய இதழ்களில் பணியாற்றிய இதழாசிரியரும், சிங்கை வானொலி தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றிய செய்தி ஆசிரியரும், சிறந்த மொழி பெயர்ப்பாளருமான திரு. ஜே.எம். சாலி அவர்கள் திரு. மு. அவர்களின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது..

இவ்வாறே, சிங்கப்பூரில் சிறந்த சிறுகதைகள் பலவற்றைப் படைத்து நூல்கள் பலவற்றை எழுதியும் திறனாய்வு செய்தும் புகழ்பெற்ற இராம. கண்ணபிரான் டாக்டர். மு. அவர்களைத் தம் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும்இலட்சிய குருவாகக் கொண்டு திகழ்பவர். மு. வின் நடுநிலைப் பண்பையும் நடையையும் பின்பற்றி எழுதும் பெற்றியர். இவரது இலக்கியப் படைப்புகளில் மு. வின் செல்வாக்கு மிகுந்திருப்பதைக் காணலாம்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வெளியீடாக வந்த (2007 ஏப்ரல் ) நூல்தமிழ் வளர்த்த சான்றோர் என்னும் நூலில், டாக்டர் மு. அவர்களின் வாழ்வையும் தமிழ்ப் பணியையும் விளக்கும் கட்டுரை ஒன்று அவர் படத்துடன் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறே சிங்கப்பூர்த் தமிழாசிரியர் VRP மாணிக்கம் வெளியிட்டபெரியோர் வாழ்விலேஎன்னும் நூலில் ( 2011 ) மு. அவர்களைமுன்னுக்கு வருகஎனத் தட்டி எழுப்பிவராகக் காட்டியுள்ளார்..

அண்மையில் 2011 நவம்பர் பாரி நிலையத்தார்  சென்னையில் நடைபெற்ற மு.வ நூற்றாண்டு விழாவை ஒட்டி வெளியிட்ட நினைவு மலரில் அவர் மாணவர்களாகிய டாக்டர் சுப. திண்ணப்பனும் ஜே.எம். சாலியும் மு.வ அவர்களுடன் தாங்கள் கொண்ட தொடர்பு நினைவுகளைக் கட்டுரையாக எழுதியுள்ளனர்.

 

தமிழ் இலக்கிய வரலாற்றில் சிங்கப்பூர்

மு.வ அவர்களின் தமிழ் இலக்கிய வரலாறு 2005 வரை 21 பதிப்புகள் கண்டுள்ளது. இந்நூலில்வெளிநாடுகள் தந்த இலக்கியம்என்னும் பகுதியில் மலேசிய சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களின் மாண்பினைப் பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும் மூன்று பக்கங்கள் 258-61  மு.வ. எழுதியுள்ளார். சிங்கை முகிலன், உலக நாதன், இரா. பெருமாள், முருகு சுப்பிரமணியன் முதலியோரைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

 மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர் பற்றி மு.வ. .

“அந்த நாடுகளின் தமிழ் இலக்கியம் 1947 –க்குப் பிறகு வளர்ச்சி பெற்றது எனலாம். இன்றுவரை ஏறக்குறைய ஐம்பது பேர் எழுத்தாளர்களாகப் பணிபுரிந்துள்ளனர். பலர் சிறுகதைகள் எழுதியுள்ளனர். சிலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். கவிதை எழுதுகின்றவர்களும் சிலர் உண்டு. ஆனால் ஒரு குறை உள்ளது. இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பல, பத்திரிக்கைகளின் அளவில் வெளிவந்து நின்றுவிட்டவை. நூல்களாக வெளிவந்தவை சிலருடைய படைப்புகளே.”

இப்பகுதி மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களிடம் முவ கொண்ட ஆர்வத்தையும் அக்கறையையும் காட்டுகிறது அல்லவா?

 

 

 

முடிவுரை

இந்த 2012 ஆம் ஆண்டில் தேசிய கலை மன்றம் ஆண்டுதோறும் நடத்தும் எழுத்தாளர் வாரத்தை ஒட்டிச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் மு.வ நூற்றாண்டு விழா நினைவாக ஒரு கருத்தரங்கத்தை நடத்துவதுடன் மலர் ஒன்றும் வெளியிடுவது பாராட்டிற்குரியது. அம்மலருக்காக எழுதப்பட்ட இந்தக் கட்டுரை 1966 இல் முவ சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்னும் பின்னும் வானொலி, தமிழ் முரசு ஆகிய ஊடகங்கள் வழியாகவும் கல்வித்துறை, கருத்தரங்குகள் வழியாகவும் மு.வ எழுத்தும் பேச்சும் சிங்கையில் ஏற்படுத்திய செல்வாக்கை ஓரளவு எடுத்து விளக்குகிறது எனலாம். இக்கட்டுரை உருவாகத் தகவல் தந்துதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றி.

 

 

 

 

 

 

 

சிங்கப்பூரில் டாக்டர் மு.. அவர்களின் செல்வாக்கு

 

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய உலகில் கவிதைக்குப் பாரதி வழிகாட்டியாகவும், உரைநடைக்குப் .பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் (மு.) ஒளி விளக்காகவும் விளங்கினார்கள். இருவரும் அரிய கருத்துகளை எளிய மொழி நடையில் தெளிவாகவும் திகட்டாதவாறும் படைப்பு இலக்கியம் வாயிலாகப் பொதுமக்களுக்கும் கல்லார்க்கும் கற்றார்க்கும் எடுத்துரைத்தனர். இலக்கியம், இலக்கணம், மொழியியல், திறனாய்வு, வரலாறு, பண்பாடு முதலிய பல துறைகளில் நூல்கள் எழுதியும் மாணவர்களுக்குக் கற்பித்தும், ஆராய்ச்சிகள் செய்தும் தமிழுக்குத் தொண்டாற்றிய பெருந்தகையாளர் பேராசிரியர் மு..அவர்களின் செல்வாக்கு, சிங்கப்பூர்த் தமிழுக்கும் தமிழர்க்கும் எவ்வகையில் உதவியது என்பதைச் சுட்டிக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

வருகை

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் 1966 ஏப்பிரல் 16- 23 நாட்களில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ்நாட்டின் பேராளராகக் கலந்துகொள்ள வந்த தமிழறிஞர் குழுவினர், மாநாடு முடிந்த பின்னர் சிங்கப்பூருக்கு வருகை தந்தனர். அவர்களில் ஒருவராக வந்த மு.வ சிங்கப்பூர் தேங் ரோடு தெண்டாயுதபாணி கோயிலுக்கு வந்து வழிபட்டதாகவும் அக்கோயிலுக்கு எதிரே அக்காலத்தில் இருந்த தேசிய அரங்கில் தமிழறிஞர்கள் மா.இராசமாணிக்கனார், கி.வா.ஜகந்நாதன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் முதலியோருடன் தமிழர்கள் பெருந்திரளாகக் கூடிய கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றியதாகவும் அறிகிறோம். குலிமார்ட் ரோட்டிலுள்ள ஓர் அரங்கில் நாவலர் இரா.நெடுஞ்செழியனுடன் மு.வ சொற்பொழிவு ஆற்றியதாகவும் தெரிகிறது. பிறகு மு.. உமறுப்புலவர் உயர்நிலைப்பள்ளிக்கு வருகை புரிந்து வகுப்புகளுக்குச் சென்று தமிழ் மாணவர்களுடன் உரையாடியதாவும் தமிழாசிரியர் சங்கத்தலைவர் திரு. சாமிக்கண்ணு வாயிலாக அறிந்தேன். அக்காலத்தில் தமிழ்முரசில் பணியாற்றிய ஜே. எம்.சாலி அவர்கள் மு.. அவர்களைப் பேட்டி கண்டு தமிழ்முரசில் வெளியிட்டதாகவும் தெரிகிறது. முதல் உலகத் தமிழ் மாநாட்டில் டாக்டர் மு..அவர்கள் தமிழ் இலக்கிய கொள்கைகள் எட்டுத்தொகை ( Literary Theories in Early Tamil – Ettutthokai) என்னும் ஆய்வுக் கட்டுரை படைத்தார். அக்கட்டுரை அம்மாநாட்டின் நிகழ்வுக் கொத்தில்(1969) (பக் 45-54) வெளியிடப்பட்டுள்ளது. 1950 -70 களில் மு.வ நூல்களைப் படிப்பதில் முனைப்புக் காட்டியவர்கள் சிங்கப்பூரில் பலர் இருந்தனர். எனவே, மு.. அவர்களைக் கண்டும் அவர் சொற்பொழிவைக் கேட்டும் மகிழ்ந்தவர்கள் பலர் இன்று மூத்த ஓய்வு பெற்ற தமிழாசியர்களாக உள்ளனர். தமிழறிஞர்களை வரவேற்று உரையாடி மகிழ்ந்தவர்களில் மெ.திருநாவுக்கரசு வை. திருநாவுக்கரசு, ,முருகையன், வயி.சண்முகம் செட்டியார், .தெய்வநாயகம் முதலியவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

வானொலியில் நேர்காணலும் பேச்சும்

மு.. அவர்கள் சிங்கை வந்தபோது சிங்கை வானொலியில் அப்போது பணியாற்றிய திரு. P. கிருஷ்ணன் மு.. அவர்களிடம் நேர்காணலை எடுத்து ஒலிபரப்பியதாவும் வானொலியில் இலக்கியப் பேச்சுக்கள் மு.. நிகழ்த்தியதாவும் சொன்னார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக மு.. பணியாற்றியபோது (1971-74) P. கிருஷ்ணன், அவரைப் போய்ச் சந்தித்துப் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதாகவும் சொன்னார். மு,,வின் மாணவரான சுப.திண்ணப்பன் எல்லோருக்கும் ஏற்ற தமிழ்என்னும் தலைப்பில் 60 வார நிகழ்ச்சிக்கும் எளிய தமிழ்என்னும் நிகழ்ச்சிக்கும் சிங்கை வானொலிக்கு எழுத்துரை வழங்கியுள்ளார். இவ்வாறே, மலேயாப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய டாக்டர். மு.. மாணவரான, இரா.தண்டாயுதம் சங்க இலக்கிய அறிமுக எழுத்துரைகளைச் சிங்கை வானொலியில் ஒலிபரப்பச் செய்தார்.

தமிழ்முரசில் மு.வ எழுத்துப் படைப்புகள்

தமிழவேள் கோ.சாரங்கபாணி நிறுவி ஆசிரியராக இருந்து நடத்திய தமிழ்முரசு நாளிதழின் ஆண்டுமலர்களிலும் ஞாயிறு மலர்களிலும் மு..அவர்களின் சிறுகதை ஒன்றும் ஒன்பது கட்டுரைகளும் 1951-61 காலப்பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு;

 சிறுகதை;

இறந்த சிற்றப்பா’ -5-8-1951 .இது 1952 + 1967களில் வெளியிடப்பட்ட ‘’குறட்டை ஒலிஎன்னும் நூலில் இடம்பெற்ற சிறுகதை. தமிழ்முரசின் ஆண்டுமலருக்காக எழுதப்பட்டுப் பின்னர் காலதாமதம் காரணமாக நாளிதழில் வெளியானதாக, மு.. ஆய்வடங்கல் நூலில் அதன் ஆசிரியர் சு.வேங்கடராமன் (சு.வே.) குறிப்பிடுகிறார்.(1976). மாற்றாந்தாயின் கொடுமையையும் வாய்மையே வாழ்க்கையாகக் கொண்ட ஒருவரது இயல்பையும் கருவாகக் கொண்ட கதை.

.கட்டுரைகள்

1. ஒரு சிறு காட்சி 9-8-1953 பக் 3

திருக்குறளின் மூன்றாம் பாலாகிய இன்பத்துப் பாலுக்குரிய குறள்களை அடிப்படையாக வைத்துத் திருவள்ளுவரை ஒரு நாடக ஆசிரியராகவும் படைப்புத் திறன் மிக்க பண்புடைக் கவிஞராகவும் காட்டும் முயற்சியே இக்கட்டுரை. இறுதியில்

’’ கண்ணும் கொளச்சேரி நெஞ்சே இவை என்னைத்

  தின்னும் அவர்க்காணல் உற்று.’’ (1244)

என்னும் குறளின் இலக்கியச் சிறப்பை மு.வ விளக்குகிறார். திருக்குறளில் இப்பகுதியைக் காமத்துப் பால் என ஒதுக்காது தூய காதலைக் காட்டும் பகுதி எனப் பலரைப் படிக்கத் தூண்டும் இக்கட்டுரை.

2 .வீடும் விஞ்ஞானமும்; 11-12-1954 பக் 10

இக்கட்டுரையில். மு.. இயற்கையும் சமுதாயமும் மனிதனுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இடையூறுகள் செய்தாலும் மனிதன் தன் அறிவு வளர்ச்சியால் முன்னேறி வருகிறான் என்பதை வீடு கட்டும் முறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் வாயிலாக விளக்க முயல்கிறார், இக்கட்டுரை  வீடமைப்பு வளர்ச்சியில் முன்னேறி வரும் சிங்கப்பூர் மக்களுக்கு ஏற்ற படிப்பினையை உணர்த்தும் என்பதில் ஐயமில்லை. இக்கட்டுரையில் Blotting Paperக்கு மை ஒற்றும் தாள் எனவும் Air Contiditionக்கு சூட்டைக் குறைத்துக் குளிர்ச்சியைப் பரப்பும் முறை எனவும் வரும் பகுதியால் மு.. அவர்களின் கலைச் சொல்லாக்கத் திறமையையும் காணமுடிகிறது.

3.அகத்துறை 13-1-1955 பக் 5-9

இக்கட்டுரையைத் திரு. நா.கோவிந்தசாமி தேசிய நூலகத்திலுள்ள தமிழ் முரசு இதழ் நுண்படச்சுருள் தொகுப்பின் களஞ்சியத்திலிருந்து படி எடுத்துத் தமக்கு அனுப்பியதாக சு.வே. கூறுகிறார். இக்கட்டுரை 1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதக் கோவை பூ.சா. கோ. கலைக் கல்லூரியில் ஆற்றிய சொற்பொழிவின் பகுதி என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சங்க இலக்கியப் பாடுபொருள் பிரிவான அகம் பற்றிய கொள்கையை எளிமையாக விளக்கும் இயல்பை இக்கட்டுரையில் காண்கிறோம். அகப்பாடல்கள் கட்டுப்பாடுகள் மிகுதியாகக் கொண்டதால் கற்பதற்குக் கடினமாக உள்ளன. என்று கூறி உள்ளத்தைப் பாடுவதே உயர்ந்த கலை என்றும் உடலைப் பாடுவது தாழ்ந்த ஒன்று என்றும் விளக்குகிறார். மு.. பின் உரிமையைக் காப்பதில் இன்பம் இல்லை; இழப்பதில்தான் உள்ளது என உணர்த்துவதே அகத்துறை என்று உறுதியாக உரைக்கிறது, இக்கட்டுரை. இது சங்க இலக்கியம் படிக்க வழிகாட்டும்

4. நாடகத் தமிழ் 17-4-1955 பக் 9-10

இக்கட்டுரையும் முன்னையதைப் போன்று கோவை. பூ.சா.கோ. கலைக் கல்லூரிச் சொற்பொழிவு வடிவம்தான். முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழ் இலக்கியம், இலக்கணம், கலை ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி, வரலாற்றை விரிவாகச் சான்று காட்டி விளக்கும் முயற்சியே ஆகும் நாடகம், கூத்து வேறுபாடு, கல்வெட்டுச் சான்றுகள், உரை விளக்கங்கள், புராண நாடகம் புகுந்த நிலை, சீர்திருத்த நாடகங்களின் தேவை முதலியவற்றை இக்கட்டுரை எடுத்துக்காட்டுவதால் படிப்பவர்கள் பெறும் பயன் அதிகம் என்றே கூறலாம். சீர்திருத்த நாடகங்கள் சிங்கையில் மிகுதியாக அரங்கேற இக்கட்டுரையும் தூண்டுகோலாக இருந்திருக்கலாம்.

5. காலம் கடந்து வாழும் கருத்துகள் 1-5- 1955 பக்9

1890 இல் தத்துவப் பேராசிரியர் சுந்தரனாரால் எழுதப்பட்ட மனோன்மணீய நாடகம் இக்காலத்துக்குக்கேற்ற தாய்மொழிப்பற்று, அக்கால நாஞ்சில் நாட்டுப் பிரிவினை என்பவற்றை வலியுறுத்துவதைக் கட்டுரை ஆசிரியர் மு.. விளக்குகிறார். ஒருவர் ஒருவரைக் கண்டால் பிறமொழியில் பேசுதலும், தாய்மொழியில் பேசினால் மதிப்புக் குறைவு என்று எண்ணுதலும், தாய்மொழியில் அறிவுக்கலைகளைக் கற்க முடியாது என்று தயங்குதலும், தாய்மொழியில் ஆட்சி நடத்துவதற்கு அஞ்சுதலும் முதலான தவறுதல்கள் இன்றும் அடியோடு நீங்காமல் உள்ள தமிழர் சமுதாயத்துக்கு மனோன்மணீய ஆசிரியர் தம் பாத்திரங்களின் வாயிலாகப் பழமை, பெருமை மிக்க தமிழ்மொழியாய் தம் தாயர் தாலாட்டுப் பாட்டுக் கேட்டு வளர்ந்த தமிழர்களில்,’ ஆற்றிலம் ஆண்மையும் உரிமையும் ஒருங்கே தோற்றனம் எனச் சொல்லத் துணிபவர் யார்?’ எனக் கதையின் ஊடே கூறியவை இன்றும் பொருந்துவனவே என விளக்குகிறார். மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் ஏற்பட வழிவகுக்கும் இக்கட்டுரை சிங்கப்பூர் தமிழருக்கும் ஏற்கும்.

6. கலைச்செல்வங்கள் 1958 தமிழ்முரசு ஆண்டுமலர் பக் 30- 32

அனுபவ வெளிப்பாடே கலை. அது கல்,மண்,வண்ணம்,சொல் ஆகிய ஊடகங்களுக்கேற்பப் பல வகையாக விளங்கிச் சுவைப்பவர்க்கு இன்பம் தருகிறது. உணர்வு, கற்பனை, உணர்த்தும் ஆர்வம் ஆகிய மூன்று பண்புகள் எல்லாக் கலைகளுக்கும் உரிய பொதுப்பண்புகள் என்று கூறிப் பின் கற்பனையின் பல வகைகளையும் இலக்கிய எடுத்துக்காட்டுகள் தந்து விளக்குகிறது, இக்கட்டுரை. லை செல்வமாகப் பயன்படுவதையும் வலியுறுத்துகிறது. பொதுவாகக் கலைஞர் அனைவருக்கும் பயன் தரும் கட்டுரை, இது. பின்னர், சி.சு. செல்லப்பாவின் எழுத்து’ 1965 இதழிலும் வந்தது.

7. தாழ்வுற்றோம் 9-7-1961 பக் 4&9

பிறந்த நாட்டிலும் தமிழன் நன்றாக வாழமுடியவில்லை. புகுந்த நாட்டிலும் நன்றாக வாழமுடியவில்லை. புகுந்த இடத்தில் பம்பாய் போன்ற இடங்களில்  தமிழர்கள் பிச்சை எடுத்தும் பன்றிக் குடிசைகளில் வாழ்வதைக்கண்டும் வருந்தி எழுதிய கட்டுரை மற்ற இனத்தவர்கள் இப்படி இல்லையே என்று வருந்திப் பழம்பெருமை நம்மை ஒருவகையில் தாழ்த்திவிடுகிறது. எனவே, ‘பழம்பெருமை பேசாது நானும் ஒரு மனிதன்என்னும் தன்னம்பிக்கையோடு உழைக்க வேண்டும் என அறிவுரை தரும் கட்டுரை. இலங்கை சென்று கள்ளத் தோணிஎனப் பெயர் எடுத்துக் கலங்கி நிற்கும் தமிழர்களைப் பற்றிக் கவன்று எழுதிய கட்டுரை. மானமிழந்து தமிழர்கள் வாழ்வதையும் அவ்வாறு வாழவைக்கும் ஆட்சி முறையையும் கண்டு அவலமுற்று எழுதிய கட்டுரை. இது. இக்காலத்துக்கும் பலவகையில் பொருந்தும் ஒன்றாக உள்ளது. சுதேசமித்திரன் தீபாவளி மலரிலும் 19-10-60 இல் வெளிவந்துள்ளது என இக்கட்டுரை பற்றிய குறிப்பும் கீழே உள்ளது.

8. கலைகள் தேவை 3-6-1962

மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை மலரில்(1959} வந்த கட்டுரையைத் தமிழ்முரசு எடுத்து 1962இல் வெளியிட்டுள்ளது. ‘இயற்கையையும் வாழ்க்கையையும் மனிதன் நுகர்ந்து இன்புறலாமே, பிறகு கலைகள் ஏன் தேவை என்னும் வினாவை எழுப்பி அதற்கு மூன்று விடைகளைச் சான்றுகளுடன் தருகிறது, இக்கட்டுரை.

1. ‘இயற்கையிலும் வாழ்க்கையிலும் உள்ள அழகின்பம் தெளிவாக இல்லாமல் கதம்பமாகக் கலந்துள்ளதைப் பிரித்துப் பொருத்தமானவற்றை மட்டும் கலை தருவதால் தேவைப்படுகிறது.

2. இயற்கை தரும் இன்பம் அடிக்கடி மாறிவரும் இயல்பினது., வேண்டும்போது கிடைப்பதில்லை, மாறாவகையில் வேண்டும்போது கலை கிடைக்கச்செய்கிறது.

3. இளமையில் துய்த்துப் பிறகு மறந்து மரத்துப்போன மனத்தை ஈர்த்து நிற்க வைக்கும் நிலை கலைக்கு உண்டு. இந்த மூன்றையும் ஏற்ற எடுத்துக்காட்டால் விளக்கும்போது நாம் கலைகளின் தேவையை நன்கு உணர்கிறோம்.

9. புலனடக்கம் 28-4- 1963 பக் 7

டாக்டர் மு.. அவர்களின் படத்தோடு வெளியிடப்பட்ட இக்கட்டுரையில் பிள்ளைகள் வளர்ப்பில் முற்கால நிலை, இக்கால நிலை இரண்டையும் ஒப்பிட்டு இல்லம், கல்விக்கூடம் இவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும் விளக்கி இக்கால இளையர்கள் உள்ளம், உடல்நிலை, அறிவு ஆகியவை கெட்டு இருப்பதைப் பற்றிப் பேசுகிறார், டாக்டர்.மு.. இக்கேட்டுக்குரிய காரணம் புலனடக்கம் இன்மையே என்று புலப்படுத்தி உள்ளத்தைக் கட்டுப்படுத்தி ஒழுக்க நெறியில் செலுத்துவதேபுலனடக்கம் என்று முடிக்கிறார். ‘புலனடக்கம் என்றது நாட்டையும், வீட்டையும் துறப்பதன்று. புலனொடுக்கம் என்பது வேறு, புலனடக்கம் என்பது வேறு. முன்னது இயற்கைக்கு முரணானது, பின்னது இயற்கையோடு இயைந்தது, உள்ளத்தைக் காப்பதற்கு மனநலத்தை வளர்ப்பதற்கு புலனடக்கம் மிகத் தேவையானது என்பதை இளைஞர் நெஞ்சம் நம்புமாறு செய்ய வேண்டும்’ - மு..

மேற்கண்ட ஒன்பது கட்டுரைகளில் மூன்று கட்டுரைகள் (அகத்துறை, நாடகத்தமிழ்,கலைகள்தேவை) தமிழகத்தில் கல்லூரிகளில் கல்வி நிலையங்களில் மு.. அவர்கள் ஆற்றிய/ எழுதியவற்றைத் தமிழ் முரசில் எடுத்து வெளியிடப்பட்டவை. ஏனைய ஆறில் (ஒரு சிறு காட்சி, வீடும் விஞ்ஞானமும், காலம் கடந்து வாழும் கருத்துகள், தாழ்வுற்றோம், புலனடக்கம்) என்னும் ஐந்து கட்டுரைகளும் தமிழமுரசுக்கென டாக்டர் மு.. அவர்களால் எழுதப்பட்டவை. கலைச்செல்வங்கள் என்பது தமிழ் முரசு ஆண்டுமலரில் (1958) வெளியிடப்பட்டது.

அகத்துறை சங்க இலக்கியம் பற்றியது. கலைச்செல்வங்கள் ,கலைகள் தேவை, நாடகத்தமிழ், காலம் கடந்து வாழும் கருத்துகள் என்பன கலைகள் பற்றியவை. ஒரு சிறு காட்சி திருக்குறள் தொடர்பானது. வீடும் விஞ்ஞானமும் தாழ்வுற்றோம் புலனடக்கம் என்பன இக்காலச் சமுதாய நிலை, முன்னேற்றம் பற்றி பேசுகின்றன.

திரு.வி... மடலில் இடம் பெற்ற வள்ளுவரும் பொதுமையும்என்னும் தலைப்பிட்ட மு.. அவர்களின் கட்டுரை ஒன்று மலாயன் இந்தியன் காங்கிரஸ் தாப்பா கிளை கலை கலாசாரப் பகுதி வெளியிட்ட தமிழர் திருநாள் மலரில் (பக் 37- 42) வெளியிடப்பட்டது. (சு.வே161) ’போர் வீரன் புதுமைப்பித்தன் என்னும் தலைப்பில் மு.வவின் கட்டுரை சிறுகதைப் பித்தன்தொகுத்து வெளியிட்ட மலயாவில் புதுமைப்பித்தன் நினைவு மலரில் (பக்கம் 4) வெளிவந்தது.

மு.. எழுதியகவிதை

மு.வ. உரைநடைப் படைப்பாளராக உச்சநிலையில் இருந்தாலும் ஒரு சில கவிதைகளும் அவர் எழுதியுள்ளார்.  சிங்கப்பூர் உள்ளடங்கிய மலயா நாட்டுத் தமிழ்நேசன் ஆண்டு மலர் ஒன்றில் (1959) (பக் 146 -47) விழிப்பு என்னும் தலைப்பில் மு.வ அவர்கள் எழுதிய கவிதை ஒன்று வெளிவந்துள்ளது.. வெளிநாடுகளில் குடியேறிப் புலம் பெயர்ந்துறையும் தமிழர்களைத் தட்டி எழுப்பும் நோக்கோடு எழுதிய கவிதை இன்றைய நிலையிலும் பொருந்தும் எனக் கருதிக் கீழே தரப்பட்டுள்ளது. இது வெளிநாட்டுத் தமிழர்கள் படும் இன்னலை எடுத்துக் கூறிப் பழம்பெருமை பேசுவது பயனற்றது என்பதை விளக்கி ஒற்றுமையுடன் வாழ விழிப்படையச் சொல்கிறது, இக்கவிதை வருமாறு:

விழிப்பு

தமிழரெலாம் வீரரெனத் தயங்காமல் முழங்கிவந்தோம்

நமதுபுகழ் பெருமையெலாம் நமக்குள்நாம் போற்றி வந்தோம்

இமியேனும் பயனொன்றும் இதனாலே விளைந்திலதே

நமதுயர்வைப் பிறநாட்டார் நன்குணரச் செய்திலமே.

 

வெளிநாட்டில் குடியேறி வேதனைகள் படுபவர்யார்?

எளியரெனக் கந்தலுடுத்(து) அங்கெல்லாம் ஏங்குபவர்யார்?

இழிசொற்கள் பிச்சைபுகல் குற்றேவல் ஏற்பவர்யார்?

களிமொழியின் தமிழர்நிலை கருதுமுளம் கருகிடுமே.

 

குறையுணர்வோம் குணம்பெருக்கி நிறைபெறுவோம் இனியேனும்

நெறியிதுவே ஒன்றுபட்டு நேர்கடமை ஆற்றிடுவோம்

அறிவொன்றே செல்வமென ஆண்மையென உணர்ந்திடுவோம்

வெறியின்றிப் பொதுமையுடன் விஞ்ஞானம் போற்றிடுவோம்.

 

பழம்பெருமை போகாது பழங்கலைகள் செழித்திட்டால்;

பழம்பெருமை  உதவாது பண்டைநிலை இழந்ததன்பின்;

பழம்பெருமை பகைசோம்பர் வளர்ந்திட்டால் பயனிலையே

பழம்பெருமை புதுவாழ்வைப் பாழாக்க விரும்புவமோ?

 

வாழ்கின்றார் பல இனத்தார் வரலாறே இல்லாமல்

தாழ்வுற்ற பலநாட்டார் தலையெடுத்தார் இந்நாளில்

வாழ்வுற்றார் அமெரிக்கர் வளம்பெருக்கி நேற்றுத்தான்

வீழ்வுற்றோம் உணர்ந்திடுவோம் விழிப்புற்றே வாழ்ந்திடுவோம்.

 

கல்வி நிலையங்களில் (தமிழ்க் கல்வித் துறையில்)

தென்கிழக்காசிய உலகில் ஒரே உயர்நிலைப்பள்ளி (தமிழ் வழி கற்பிக்கும்) எனத் திகழ்ந்த உமறுப்புலவர் உயர்நிலைப்பள்ளியில் சாதாரணநிலைக்கல்வி (O Level) நிலை பயின்ற மாணவர்களுக்கு இலக்கியப் பாடமாக மு..அவர்களின் இளங்கோவடிகள்என்னும் நூல் பாடநூலாக வைக்கப்பட்டிருந்தது என்றும் 1966 இல் சிங்கப்பூருக்கு வருகை தந்த மு.. அவர்கள் உமறுப்புலவர் பள்ளிக்கு வந்து வகுப்பறையில் அப்போது மாணவராக இருந்த திரு.சாமிக்கண்ணு அவர்களிடம் அப்புத்தகம் பற்றிய கருத்து அறிய வினாவியதாகவும் அவர்வழி அறிந்தேன். இந்நூல் இளங்கோவடிகள், தமிழர், கலைஞர், அறவோர் என்ற மூன்று தலைப்புகளில் தமிழகத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை நிறுவிய சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் மு.. ஆற்றிய பேச்சுக்களை உள்ளடக்கிய ஒன்றாகும். சிலப்பதிகாரம் பற்றிய சிறந்த திறனாய்வு நூலாகும்.

1980 -2012 ஆண்டுகளில் பல்கலை கழகப் புகுமுக வகுப்பில் தமிழ் இலக்கியம் படித்த மாணவர்களுக்குச் சிறப்பு நிலைப் பாட நூலாகப் பெற்றமனம், கள்ளோ காவியமோ, கரித்துண்டு ஆகிய நாவல்கள் பாடநூல்களாக வைக்கப்பட்டன. இதன் வழி மாணவர்கள் மு.. நாவல்களைப் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றனர். இவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் இந்நாவல்களை ஆழமாகக் கற்றனர்.

சாதாரண நிலை (O Level) த் தேர்வில் இலக்கியம் கற்ற மாணவர்களுக்கும் 1990 களில் உலகப்பேரேடுஎன்னும் மு..அவர்களின் கட்டுரைத் தொகுப்பு பாடநூலாக இருந்தது. இது நாடும் சமுதாயமும் நலம் பெறுவதற்குரிய 20 கட்டுரைகள் இதழ்கள், ஆண்டுமலரில் வெளிவந்த கட்டுரைகளின்- தொகுப்பாகும். 1959, 1962 களில் பதிப்பிடப் பெற்றவை.

. 2010களில் இந்நிலைக்கு மு.. அவர்களின் மூன்று நாடகங்கள்என்னும் நாடகநூல் பாடமாக உள்ளது. இவற்றில் முதல் நாடகம் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளின் சிறப்பைப் பேசுவது; இரண்டாம் நாடகம் திருநாவுக்கரசரின் தமக்கை திலகவதியார் பற்றியது; மூன்றாம் நாடகம் வீண்கனவு என்னும் தலைப்பில் கடாரம் என்று அழைக்கப்பட்ட மலேயா மாநிலமான கெடாவை வென்ற சோழவேந்தன் இராசேந்திரன் வாழ்வைச் சித்திரிப்பது. இவற்றுள் பாடமாகவுள்ள முன்னையதும் பின்னையதும் சிங்கப்பூர் மாணவர் அறிய வேண்டிய சமயப் பொதுமை, ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்துவன. 1959,1968களில் வெளியிடப்பட்டவை.

UNISIM எனப்படும் சிம் பல்கலைக் கழகத்தில் B.A தமிழ்ப் பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு மு.. அவர்களின் தமிழ் இலக்கிய வரலாறு, மொழிநூல், மொழியியல் கட்டுரைகள், இலக்கியத் திறன் ஆகிய நூல்கள் பாடத் துணை நூல்களாகவும் அகல்விளக்குபுதினம் பாடநூலாவும் வைக்கப்பட்டன.

பொதுவாகப் பள்ளி நூலகங்கள் ,தேசிய நூலகங்கள், பல்கலைக் கழக நூலகங்கள், தொடக்கக் கல்லூரி நூலகங்கள் எல்லாவற்றிலும் மு.. அவர்களின் பெரும்பாலான நூல்கள் இடம் பெற்றுள்ள நிலையைக் காணலாம்.

மேலும் தமிழாசிரியர்கள் தம் மாணவர்களுக்குக் கொடுக்கும் கருத்தறிதல் பயிற்சித்தாள்களில் மு.. அவர்களின் கட்டுரைப் பகுதிகளை மிகுதியாகத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பர். காரணம் அவற்றின் எளிமையும், தெளிவும், இனிமையுமே ஆகும்.

சிங்கப்பூர்ப் பாடத்திட்ட மேம்பாட்டு நிறுவனம் 1982 இல் இக்கட்டுரை ஆசிரியரை மதியுரைஞராகக் கொண்டு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கான பாடநூல், பயிற்சிநூல், ஆசிரியர் கையேடு முதலிய பயிற்று கருவிகள் தயாரிக்கும் பணிக்கு அறிவாற்றலும் அனுபவமுமிக்க ஆசிரியர்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கியது. அப்போது உயர்நிலைப் பள்ளிகளுக்கான தமிழ் 4 பாடநூலில் (விரைவு4 வழக்கம்/5 நிலைகளுக்கான) மூன்றாவது பாடமாக டாக்டர் மு.வரதராசனார் அவர்களைப் பற்றிய பாடம் ஒன்று அமைந்தது. அப்பாடத்தில் மு.. அவர்களின் படத்துடன் அவரின் வாழ்க்கை வரலாறு , எழுத்துப்பணி, வாழ்க்கை நெறி ஆகியவை 5 பக்க அளவில் தரப்பட்டுள்ளன. மேலும் அந்நூலில் மு.. எழுதிய நல்லநூல்என்னும் கட்டுரையும் ஒரு பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இது நல்ல நூல் என்பது எழுத்து சொற்பொருள்களால் ஆன ஏடுகள் அடங்கிய ஒன்றன்று, நமக்குக் காட்சி அளித்துக் கருணை பொழிய என்றும் எங்கும் நமக்காகக் காத்திருக்கின்ற பெருந்தகையின் திருவுருவம்எனபதை  வலியுறுத்தி நல்ல நூலை மாணவர்கள் இனங்காணச் செய்யும் இயல்புடைய பாடம். மு.வ அவர்களின் திருக்குறள் தெளிவுரைமாணவர் பலர் கைகளில் தவழும் நூலாகும். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளுக்கு உதவும் ஒரு நூல்.

சிங்கப்பூரில் முதன்மைத் தரம் வாய்ந்த பள்ளியாகத் திகழும் இராபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் உயர்தமிழ் பயின்ற மாணவிகளுக்கு மு.. அவர்களின் கரித்துண்டு. கள்ளோ காவியமோ, அகல் விளக்கு மண் குடிசை முதலிய நாவல்களைத் திறனாய்வு செய்து படைக்கும் பணியைப் பாட மதிப்பீட்டின் ஒரு கூறாக ஆக்கிய பெருமை அங்குத் தமிழாசிரியராகப் பணியாற்றிய கு. சந்திரமூர்த்தியைச் சாரும். இப்பணி 1995 முதல் 2011 வரை தொடர்ந்து நடைபெற்றது. கல்வித்திறன் மிகுந்த மாணவிகள் நாவலின் அமைப்பு, மாற்றம், முன்மாதிரி, பண்பாடு ஆகிய நாற்கூறுகளை ஆராய்ந்து ஆண்டுதோறும் படைத்து வந்தது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.

 

கருத்தரங்குகளில்

தமிழாசிரியர் VRP மாணிக்கம் அவர்கள் ஈசூன் தொடக்கக் கல்லூரியில் 1988 ஆம் ஆண்டில் தொடங்கிய கருத்தரங்கு வரிசையில் முதலாவது கருத்தரங்கில் டாக்டர். சுப.திண்ணப்பன்பெற்றமனம்நாவல்பற்றியும் (15-3-1988) இரண்டாம் கருத்தரங்கில் (11-3-1989) கள்ளோ காவியமோ என்னும் நாவல் பற்றியும் திறனாய்வுக் கட்டுரைகள் படைத்தார். இக்கட்டுரைகள் நூலாக்கம் பெற்றுள்ளன. தமிழாசிரியர் திரு. மா. இராஜிக்கண்ணு ஜூரோங் தொடக்கக் கல்லூரியில்கரித்துண்டுநாவல் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை படைத்துள்ளார். (25-6-12) தெம்பினிஸ் தொடக்கக் கல்லூரி, “கரித்துண்டு என்னும் கருவூலம்என்னும் தலைப்பில்  மாணவருக்கான ஒரு பயிலரங்கை நடத்திற்று. சிங்கப்பூரிலுள்ள 17 தொடக்ககல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும்  கலந்து கொண்டனர். 8 தொடக்கக் கல்லூரி மாணவர்கள் பயிலரங்கில் கட்டுரை படைத்துப் பயனடைந்தனர். பயிலரங்கை ஏற்பாடு செய்தவர் தெம்பினிஸ் தொடக்கக் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் திரு நல்லுராஜ்.  

விழா நிகழ்ச்சிகளில்

சிங்கப்பூர் கல்விக் கழகத்தில் மு..வின் அன்புக்குரிய திரு. . தெய்வநாயகம் அவர்களும் மு..வின் மாணவர் முனைவர் சுப. திண்ணப்பன் அவர்களும் தமிழ்த்துறைத் தலைவர்களாகப் பணியாற்றிய காலத்தில் (எண்பது தொண்ணூறுகளில்) ஆண்டுதோறும் பாரதியார் விழாவும் மு.. விழாவும் தமிழ் மன்றத்தால் நடத்தப்பட்டன. பட்டயப் படிப்பில் முதலாண்டு பயிலும் மாணவர்கள் பாரதியார் விழா நடத்துவர். இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் மு.. விழா நடத்துவர். இவ்விரு விழாக்களிலும் ஆசிரியர்கள், மாணவர்கள் எழுதும் கட்டுரைகள் கவிதைகள், விழா நாயகர்களின் வரலாறு, தமிழ்ப் பணி அடங்கிய மலர்கள் வெளியிடப்படும். மாணவர்கள் உரையாற்றுவர், நாடகம் அரங்கேற்றுவர். இவ்விழாக்களின் வாயிலாகத் தமிழாசிரியர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய முன்னோடிகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அண்மையில் 2012 ஏப்ரலில் தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளில் ஒன்றாக மா. அன்பழகன் தலைமையில் இயங்கும் கவிமாலைக் குழுவினர் மு.. நூற்றாண்டு விழா நிகழ்ச்சி ஒன்றினை மு. வின் மாணவரான இந்தக் கட்டுரையாளர் தலைமையில் நடத்தினர். சிறப்புச் சொற்பொழிவாளராகத் தமிழிசைக் கவிஞர் ரமணன் அவர்களை அழைத்துப் பேசச் செய்தனர். மு.. நூற்றாண்டு விழாவை ஒட்டி இலியாஸ் ஆசிரியராக இருந்து நடத்தும் செம்மொழி இதழும் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகமும் இணைந்து மு..வின் நாவல்கள் பற்றிய திறனாய்வுப் போட்டியைத் தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திப் பரிசுகள் 6-4-12இல் வழங்கின.

நாடகத்துறையில்

சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தினர் மு. அவர்களின்இளங்கோவடிகள்நாடகத்தை மேடை ஏற்றிச் சிறப்பாக நடித்துக் காட்டினர். இந்நாடகம் பேராசிரியர்.. வீரமணி தமிழ் இளையர் மன்ற மதியுரைஞராகப் பணியாற்றிய காலத்தில் நாடக அரங்கில் ( பழைய தேசிய நூலகத்திற்குப் பின்னர் இருந்த) நடைபெற்றது.

எழுத்தாளர் உலகில்

தமிழ் எழுத்தாளர் உலகில் பல விருதுகள் பெற்றவரும், இலக்கியப் படைப்புகளில் சிறுகதை, கட்டுரை, புதினம், தன் வரலாறு, வாழ்க்கை வரலாறு முதலியவற்றைப் படைத்துப் பல நூல்கள் எழுதிய பழுத்த அனுபவமிக்க எழுத்தாளரும், ஆனந்த விகடன், தமிழ்முரசு முதலிய இதழ்களில் பணியாற்றிய இதழாசிரியரும், சிங்கை வானொலி தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றிய செய்தி ஆசிரியரும், சிறந்த மொழி பெயர்ப்பாளருமான திரு. ஜே.எம். சாலி அவர்கள் திரு. மு. அவர்களின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. பச்சையப்பன் கல்லூரியில் மு. அவர்களிடம் தமிழ் முதுகலை (M.A) பயின்றவர்.

இவ்வாறே, சிங்கப்பூரில் சிறந்த சிறுகதைகள் பலவற்றைப் படைத்து நூல்கள் பலவற்றை எழுதியும் திறனாய்வு செய்தும் புகழ்பெற்ற இராம. கண்ணபிரான் தென்கிழக்காசிய இலக்கிய விருது, கலாசாரப் பதக்க விருது முதலிய பல விருதுகளைப் பெற்றவர். சிங்கப்பூர் சிறுகதைப் போட்டிகள் பலவற்றிற்கு நடுவராகப் பணியாற்றியவர். சிறுகதையின் தோற்றம் வளர்ச்சி ஆகியவற்றை ஆராய்ந்த ஆழமும் நுட்பமும் உடையவர். சிங்கப்பூர்ப் புனைகதை இலக்கிய உலகில் சிறந்து விளங்கும் இராம. கண்ணபிரான் டாக்டர். மு. அவர்களைத் தம் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும்இலட்சிய குருவாகக் கொண்டு திகழ்பவர். மு. வின் நடுநிலைப் பண்பையும் நடையையும் பின்பற்றி எழுதும் பெற்றியர். இவரது இலக்கியப் படைப்புகளில் மு. வின் செல்வாக்கு மிகுந்திருப்பதைக் காணலாம்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வெளியீடாக வந்த (2007 ஏப்ரல் ) நூல்தமிழ் வளர்த்த சான்றோர்’. மாணவர்களுக்குத் தமிழ் வளர்த்த 40 அறிஞர்களை அறிமுகம் செய்யும் நோக்கில் அதன் தலைவர் நா. ஆண்டியப்பன் எழுதிய நூலாகும். இந்நூலில், டாக்டர் மு. அவர்களின் வாழ்வையும் தமிழ்ப் பணியையும் விளக்கும் கட்டுரை ஒன்று அவர் படத்துடன் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறே சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களில் சிறந்த பணிகளை ஆற்றிப் புகழ் பெற்ற VRP மாணிக்கம்பெரியோர் வாழ்விலேஎன்னும் நூல் ஒன்றை ஜனவரி 2011 இல் மாணவர்களுக்காக வெளியிட்டார். அந்நூலிலும் டாக்டர் மு. அவர்களைமுன்னுக்கு வருகஎனத் தட்டி எழுப்பிவர் எனத் தொடங்கி அவர் எழுதிய கட்டுரை ஒன்றுள்ளது. (பக் 42 – 43) உழைப்பால் உயர்ந்த சான்றோராக மு. அவர்களை அந்நூலில் அவர் அறிமுகப்படுத்தி உள்ளார்.

அண்மையில் 2011 நவம்பர் பாரி நிலையத்தார் ஏற்பாட்டில் சென்னையில் நடைபெற்ற மு.வ நூற்றாண்டு விழாவை ஒட்டி வெளியிடப்பட்ட நினைவு மலரில் சிங்கப்பூரில் தமிழ்ப் பணியாற்றும் அவர் மாணவர்களாகிய டாக்டர் சுப. திண்ணப்பனும் ஜே.எம். சாலியும் மு.வ அவர்களுடன் தாங்கள் கொண்ட தொடர்பு நினைவுகளைக் கட்டுரையாக எழுதியுள்ளனர்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் சிங்கப்பூர்

இந்தியாவில் வடமொழியை விட்டால் மீதியுள்ள மொழிகள் எல்லாவற்றிலும் விடத்தமிழே நீண்டதோர் இலக்கிய வரலாறு படைத்த மொழியாகும். தமிழிலக்கிய வரலாற்றை எழுதும் பணியைத் தமிழ்ப் பேராசியர் டாக்டர் மு.வரதராசனாரிடம் சாகித்திய அக்கெடமி ஒப்படைத்தது. அவர் ஆழ்ந்த புலமை பெற்றவர். தமிழிலுள்ள முற்கால இடைக்காலத் தற்கால இலக்கியங்களில் ஒரு சேரத் திளைக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர் . தமக்கே உரிய ஒப்பற்ற முறையில் தமிழ் இலக்கிய வரலாற்றை விளக்கியுள்ளார். மதிப்பதற்கரிய காணிக்கையாக விளங்குகிறதுஎன்னும் பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்களின் முன்னுரையுடன் கூடிய மு.வ அவர்களின் தமிழ் இலக்கிய வரலாறு 2005 வரை 21 பதிப்புகள் கண்டுள்ளது. இந்நூலில்வெளிநாடுகள் தந்த இலக்கியம்என்னும் பகுதியில் மலேசிய சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களின் மாண்பினைப் பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும் மூன்று பக்கங்கள் 258-61 எழுதியுள்ளார். சிங்கை முகிலன், உலக நாதன், இரா. பெருமாள், முருகு சுப்பிரமணியன் முதலியோரைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். மு.வ அவர்கள் தந்த சில பகுதிகள் ;

 மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர் பற்றி மு.வ.

மலேசியாவும் சிங்கப்பூரும் நெடுங்காலமாகத் தமிழர் குடியேறி வாழுந்து வரும் நாடுகள். அந்த நாடுகளிலும் தமிழ் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். கவிதை, கதை, நாடகம், கட்டுரை. படைத்து வருவோராக ஐம்பது அறுபதுபேர் பெயர் பெற்று வருகிறார்கள், அவர்களிர் பெரும்பாலோர் கடந்த இருபது முப்பது ஆண்டுகளாகவே எழுத்துப் பணியில் ஈடுபட்டவர்கள். எழுத்துக் கலையில் இருந்த ஆர்வத்தாலேயே அவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டார்கள். எழுத்தைத் தொழிலாகக் கொள்ளாமல் பணத்திற்காக எழுதாமல், எழுத்துத் தொண்டைத் தொடங்கியவர்கள் அவர்கள். ரப்பர்த் தோட்டங்கள் மலாய் மக்களோடும் சீன மக்களோடும் சேர்ந்து உழைத்து வாழ்வதும், தமிழ் நாட்டைப்பற்றிக் கனவுகள் காண்பதும், சாதிமத வேறுபாடுகளைக் கடக்க முயல்வதும் ஆகிய புதுமைகள் அவர்களின் வாழ்வில் இருப்பதால், புதிய கதைகளுக்கும் கவிதைகளுக்கும் தேவையான கற்பனைகள் ஏராளமாக அந்த எழுத்தாளர்களுக்குக் கிடைத்து வருகின்றன. அந்த நாட்டின் சிறுபான்மையோராக வாழ்ந்துவரும் தமிழர்களுக்கிடையே இந்த எழுத்தாளர்கள் தோன்றி இலக்கியம் படைத்துவரும் முயற்சி பாராட்டத்தக்கது. அவர்களின் தமிழ் நடை பெரும்பாலும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் நடை போலவே இருந்துவருகிறது. இலங்கைத் தமிழர்கள் வேறுபடுவது போல், மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களின் தமிழ் வேறுபடவில்லை. அதற்குக் காரணம், இலங்கையில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் குடியேறி அங்கேயே தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து தமிழைத் தமிழ் நாட்டுத் தொடர்பு போற்றாமலே பேசிவந்தமை ஆகும். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் வாழும் தமிழர்களில் பெரும்பாலோர் சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் குடியேறியவர்கள். அவர்கள் குடும்ப உறவு, கல்வி முதலிய பலவகையிலும் தமிழ் நாட்டின் தொடர்பை விடாதவர்கள். ஆகையால் அவர்களின் மொழி அவ்வாறு வேறுபடவில்லை. அவர்கள் படைக்கும் நூல்களும் நடத்தும் இதழ்களும் தமிழ்நாட்டு நூல்களையும் இதழ்களையும் போலவே உள்ளன.

அந்த நாடுகளின் தமிழ் இலக்கியம் 1947 –க்குப் பிறகு வளர்ச்சி பெற்றது எனலாம். இன்றுவரை ஏறக்குறைய ஐம்பது பேர் எழுத்தாளர்களாகப் பணிபுரிந்துள்ளனர். பலர் சிறுகதைகள் எழுதியுள்ளனர். சிலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். கவிதை எழுதுகின்றவர்களும் சிலர் உண்டு. ஆனால் ஒரு குறை உள்ளது. இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பல, பத்திரிக்கைகளின் அளவில் வெளிவந்து நின்றுவிட்டவை. நூல்களாக வெளிவந்தவை சிலருடைய படைப்புகளே.

உலக நாதன் சந்தனக் கிண்ணம்என்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார். அதில் உள்ள கவிதைகளில் புத்துணர்ச்சியையும் தமிழார்வத்தையும் காணலாம். நடையின் இனிய ஓட்டத்தையும் உள்ளத்தைத் தொடும் உருக்கத்தையும் காணலாம். குப்பைத்தொட்டிஎன்ற தலைப்புள்ள கவிதையில், விதவை ஒருத்தியின் துயர், உணர்ச்சியுடன் கூறப்படுகிறது.முறையோடு பெற்றிருந்தால் தொட்டில் ,கட்டில் , முறை தவறிப் பெற்றதனால் குப்பைத் தொட்டிஎன்ற அடிகள் சமுதாயத்திற்குக் கொடுக்கப்படும் சவுக்கடியாக உள்ளன.கேட்பதும் கிடைப்பதும்;’ என்ற செய்யுளின் வடிவம் புதிது. பொருள் உணர்த்தும் முறையும் புதிது

 

 

 

முடிவுரை

இந்த 2012 ஆம் ஆண்டில் தேசிய கலை மன்றம் ஆண்டுதோறும் நடத்தும் எழுத்தாளர் வாரத்தை ஒட்டிச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் மு.வ நூற்றாண்டு விழா நினைவாக ஒரு கருத்தரங்கத்தை நடத்துவதுடன் மலர் ஒன்றும் வெளியிடுவது பாராட்டிற்குரியது. அம்மலருக்காக எழுதப்பட்ட இந்தக் கட்டுரை 1966 இல் முவ சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்னும் பின்னும் வானொலி, தமிழ் முரசு ஆகிய ஊடகங்கள் வழியாகவும் கல்வித்துறை, கருத்தரங்குகள் வழியாகவும் மு.வ எழுத்தும் பேச்சும் சிங்கையில் ஏற்படுத்திய செல்வாக்கை ஓரளவு எடுத்து விளக்குகிறது எனலாம். இக்கட்டுரை உருவாகத் தகவல் தந்துதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றி.

 

 

இக்கட்டுரை உருவாகத் தகவல் தந்தவர்கள்:

1 இராம. கண்ணபிரான் 2.இராஜிக்கண்ணு

3 .பி. கிருஷ்ணன் 4. பன்னீர் செல்வம் செ.ப

5. சாமிக்கண்ணு 6. VRP.மாணிக்கம்

7. சந்திரமூர்த்தி 8 மீனாள் தேவராஜன் (தட்டச்சு}

நூல்கள்

வேங்கடராமன் ,சு. மு.வ ஆய்வடங்கல் தமிழ்த்துறை. மதுரைப் பல்கலைக் கழகம். 1976

முத்து சண்முகன் , ,சு.வேங்கடராமன், (பதிப்பு)மு. வ நினைவு மலர், தமிழ்த்துறை மதுரைப் பல்கலைக் கழகம். 1976

இளங்கோ ச.சு. மு.வ கட்டுரைக் களஞ்சியம் தொகுதி 1&2 சென்னைப் பாரி நிலையம் 2011

இந்நூற்றொகுப்பில் தமிழ் முரசில் மு.வ எழுதிய கட்டுரைகள் மறுபதிப்பாக இடம் பெற்றுள்ளன.

1. ஒரு சிறு காட்சி பக் 438 -441

2. வீடும் விஞ்ஞானமும் பக் 1429 - 1432

3. அகத்துறை பக் 289 -307

4. நாடகத் தமிழ் பக் 1035 -1046

5. காலம் கடந்து வாழும் கருத்துகள் பக் 1047 – 1049

6. கலைச்செல்வங்கள் பக் 955 – 962

7. தாழ்வுற்றோம் பக் 1331 – 1340

8. கலைகள் தேவை பக் 1017 -1020

9. புலனடக்கம்  9Literary Theories in Early Tamil Ettuttokai பக் 1457 -1467 .

.... தொடரும் ....


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக