வெள்ளி, 2 மே, 2014

சமயம் - சைவம் - 7


திருவாசகம்

திருச்சதகம்

அறிவுறுத்தல்


முன்னுரை.


     ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் திருவாசகம் சைவத் திருமுறைகளுள் எட்டாந் திருமுறை ஆகும்.  திருவாசகம் என்னும் தலைப்பு அழகிய தெய்வத் தன்மை வாய்ந்த சொற்களால் ஆகிய கவிதை நூல் என்னும் பொருளைத் தரும்.


     திருவாசகத்தை இயற்றியவர் திருவாதவூரர் எனப்படும் மணிவாசகர் ஆவார். இவர் தமிழகத்தில் மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூர் என்னும் தலத்தில் அந்தணர் குலத்தில் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து நின்ற இவரது நுண்மாண் நுழைபுலத்தைக் கண்ட பாண்டிய மன்னன் இவரைத் தன் முதலமைச்சராக்கிக் கொண்டான். மன்னன் வேண்டுகோளுக்கு இணங்கப் பெரும் பொருளுடன் குதிரைகள் வாங்கச் சென்றார்.  வழியில் திருப்பெருந்துறை (தற்போது ஆவுடையார் கோயில் என்று அழைக்கப் பெறும்) என்னும் ஊரில் இறைவன் குருந்த மரத்தடியில் குரு வடிவமாக எழுந்தருளி இவருக்கு ஞானோபதேசம் செய்தான்.  தான் கொணர்ந்த பொருள் அனைத்தையும் கொண்டு இவர் அந்த ஊரில் ஒரு சிவன் கோயில் கட்டினார்.  இதனை அறிந்த பாண்டிய அரசன் இவரை வரைவழைத்துச் சிறையில் இட்டுத் துன்புறுத்தினான்.  இதனால் இறைவன் இவருக்காக நரிகளைப் பரிகளாக்கி ( பரி - குதிரை) அரசனிடம் ஒப்புவித்து மீண்டான். அன்றிரவே பரிகள் நரிகளாயின. அது கண்டு அரசன் மறுபடியும் வாதவூர் அடிகளைத் தண்டித்தான். வைகை ஆற்றில் வெள்ளம் பெருகியது. வெள்ளத்தைத் தடுக்கக் கரை அமைக்கும் வேலையாளாக ஆண்டவன் வந்து பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டான்.  அவன் பட்ட அடி அனைத்துயிரின் மீதும் விழுந்து அரசன் வாதவூர் அடிகளின் பெருமையை உணருமாறு செய்தது.  பின்னர் வாதவூரர் அமைச்சுப் பதவியைத் துறந்து, திருஉத்திரகோசமங்கை, திருவாரூர், திருவண்ணாமலை முதலிய தலங்களில் உள்ள இறைவனை வணங்கிப் பதிகங்கள் பாடிக் கொண்டு தில்லையை அடைந்து நடராசப் பெருமானை வழிபட்டார்.  ஒருநாள் இறைவன் அந்தணர் வடிவு கொண்டு இவர் இயற்றிய திருவாசகம், திருக்கோவையார் இரண்டையும் தாமே ஓலைச்சுவடியில் எழுதி, கைச் சாத்திட்டுக் கனகசபையில் வைத்து மறைந்தான்.  இதனைக் கண்ணுற்ற தில்லைவாழ் அந்தணர்கள் வாதவூரரை அணுகி இந்த இரண்டு நூல்களுக்கும் உரை கூற வேண்டினர். ஆனால் இவர் அனைத்திற்கும் பொருள் அம்பலவாணன் திருவடிகளே என்று சொல்லி இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.  இவர் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.


     திருவாசகம் சிவபுராணம் முதலாக அச்சோப் பதிகம் ஈறாக ஐம்பத்தொரு பகுதிகளையும், அறநூற்றைம்பத்தாறு பாடல்களையும் கொண்டுள்ளது.  பல திறப்பட்ட பா வகைகளும் இந்நூலில் உள்ளன.  இந்நூல் எளிமை, இனிமை, தெளிவு முதலிய சிறப்பு இயல்புகளோடு கல்லைப் பிசைந்து கனியாக்க வல்ல உருக்கமும், நெகிழ்ச்சியும் கொண்டு ஒப்புயர்வில்லாத அன்புப் பெரு நூலாக ஒளிர்கின்றது.  எனவேதான் ‘‘திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்’’  என்ற பழமொழியும் எழுந்தது. மகளிர் விளையாட்டுகளில் ஆண்டவன் பெருமையைப் பாடும் இயல்பும் இந்நூலில் உண்டு.  மார்கழி மாதத்தில் சிவன் கோயில்களில் பாடப்படும் திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை ஆகிய இரண்டும் இந்நூலில் உள்ள பகுதிகளே ஆகும். இறைவனைத் தேடி அலைந்து முயன்று கண்டு இறையருள் பெற்ற ஓர் உயிரின் பலதிறப்பட்ட உள்ளுணர்ச்சிகளின் வளர்ச்சிப் படிநிலைகளைத் தெளிவாக வடித்துக் காட்டும் தன்மையை இந்நூலில் காண முடியும்.  சுருங்கச் சொன்னால் அன்பால் அழுது அழுது அரனடி அடைந்த மாணிக்கவாசகர் பெற்ற இறையனுபவத்தின் படிப்படியான அனுபவ வெளிப்பாடே இந்நூல் எனக் கூறலாம்.  எனவே இது இறையருள் நூலாகவும், அனுபவ நூலாகவும் இலங்குகிறது. மேலை நாட்டுப் பெரும் புலவர் போப் அவர்களின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட நூல் இது.  அவர் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.


     திருவாசகத்தில் திருச்சதகம் என்னும் பகுதியில் உள்ள அறிவுறுத்தல் என்னும் தலைப்பில் அடங்கிய பத்துப் பாடல்கள் இங்கு பாடப் பகுதியாக உள்ளன.  சதம் - நூறு, சதகம் - நூறு பாட்டுக்களை அந்தாதி முறையில் ( ஒரு பாட்டின் இறுதி அசை , சீர், சொல், எழுத்து அடுத்த பாட்டின் முதலாவதாக அமைய வருவது ) தன்னகத்தே கொண்ட ஓர் இலக்கிய வகை. திரு என்பது தெய்வத் தன்மையை உணர்த்தும் . திருவாசகத்தில் வரும் இந்தத் திருச்சகதக்தின் உட்பொருள் பத்திவைராக்கிய விசித்திரம் என்பது.  இறைவனிடத்துப் பற்றும் (பக்தி) உலகப் பொருள்களிடத்துள்ள பற்றை - ஆசையை நீக்கும் உறுதியும்( வைராக்கியம்) ஏற்படும் போது உண்டாகும் அழகு - வியப்புணர்வு ( விசித்திரம்) என்று இதனை விளக்குவர்.  இது பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்ட பத்துச் சிறு பிரிவுகளை உடையது.  இங்கு வரும் அறிவுறுத்தல் என்பது அவற்றுள் இரண்டாம் பிரிவாகும்.  இதன்கண் மாணிக்கவாசகர் இறைவனிடம் விண்ணப்பிப்பது போலவும், நேரேயும் தன் நெஞ்சிற்கு அறிவுரை கூறுவது போலப் பாடுகின்ற காரணத்தால் இது ‘‘அறிவுறுத்தல்’’ என்னும் பெயர் பெற்றது.


                                    (தமிழ்க்கவிக்கோவை HSC தமிழ்ப் பாடநூல்  மலயாப்    


பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை வெளியீடு 1971)


























                                                          தேவாரம்

                      ஐந்தாம்  திருமுறை

                          பதிகம்  90


                                    முன்னுரை.


     சைவ சமயச் சான்றோர் நால்வருள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்ற மூவரும் சிவபெருமானைப் பற்றிப் பாடிய பண் சுமந்த பக்திப் பாடல்கள் ‘‘தேவாரம்’’ என்று அழைக்கப் பெறும். சைவத் திருமுறை பன்னிரண்டில் முதல் ஏழு திருமுறைகளாக இவை வகுக்கப் பெற்றுள்ளன.  திருஞானசம்பந்தர் பாடியவை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பாடியவை அடுத்த மூன்று திருமுறைகளாகவும், சுந்தரர் பாடியவை ஏழாம் திருமுறையாகவும் தொகுக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு வகுத்துத் தொகுத்தவர் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி என்பவர் ஆவார்.


     தேவாரம் என்னும் சொல்லுக்குத் தெய்வத்துக்குரிய பாமாலை என்றும், தெய்வத்தினிடத்து அன்பை விளைவிக்கும் தன்மையடையது என்றும், தெய்வத்தை வழிபடுவதற்குரிய இசைப்பாடல் என்றும் பலவாறாகப் பொருள் கூறுவர்.  ஒவ்வொரு தேவாரத் திருமுறையும் பத்து அல்லது பதினொரு பாடல்களைக் கொண்ட பல பதிகங்களைப் பெற்றிருக்கிறது.  தேவாரப் .பதிகங்களைப் பண் அடிப்படையிலும் பாடப்பெற்ற தல அடிப்படையிலும் வரிசைப் படுத்துவார்கள்.


     சிவபெருமானை முழுமுதற் பொருளாகக் கொண்ட சைவ சமயத்திற்கு அடிப்படையாக இருப்பது தேவாரம். தேவாரப் பாடல்களைப் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் சைவர்களின் மனம் பரவசப் பட்டுப் பக்தி உணர்வு அடையும்.  சைவ சித்தாந்தம் கூறும் இறை, உயிர், தளை, இலக்கணத்திற்கு இலக்கியம் தேவாரம் எனக் கருதப் பெறுகிறது.  தேவாரப் பாடல்களை ஓதுவதாலும் கேட்பதாலும் வினை ஒழியும், துயர் நீங்கும், பிறவி அறும் எனச் சம்பந்தரும் சுந்தரரும் தங்கள் பதிகங்களின் இறுதியில் குறிப்பிடுகிறார்கள்.


     திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ‘‘சைவ சமயம் பெற்ற புண்ணியக்கண் இரண்டு) என்று போற்றப் பெறுகிறார்கள்.  அவர்களில் திருநாவுக்கரசர் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள திருவாமூரில் வேளாளர் மரபில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் புகழனார்.  தாயார் பெயர் மாதினியார். இவரது இயற்பெயர் மருள் நீக்கியார். இவர் பெற்றோரை இளமையில் இழந்தார். பின்னர், தம் தமக்கையார் திலகவதியார் ஆதரவில் இருந்தார்.  கல்வி, கேள்விகளில் சிறந்து நின்ற இவர் சமண சமயத்தில் புகுந்து தருமசேனர் என்னும் பெயர் பெற்றுத் திகழ்ந்தார்.  அது கண்ட திலகவதியார் வருந்தி ஆண்டவனிடம் முறையிட்டார்.  இறைவன் மருள்நீக்கியாருக்குச் சூலை நோயைக் கொடுத்து ஆட்கொண்டான்.  அப்போது இவர் பாடிய !”கூற்றாயினவாறு’’ என்ற பதிகத்தைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் இவருக்குத் திருநாவுக்கரசு என்ற பெயரையும் கொடுத்தான்.  இவ்வாறு சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மீண்ட திருநாவுக்கரசரைப் பல்லவப் பேரரசன் (மகேந்திரவர்மன்) சமணர் தூண்டுதலால் நீற்றறையில் இட்டும், நஞ்சூட்டியும், களிறு இடறச் செய்தும் துன்புறுத்தினான்.  இவற்றை எல்லாம் இவர் ஆண்டவன் துணைகொண்டு அஞ்சா நெஞ்சுரத்துடனும், ‘‘நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்) என்ற உறுதியுடனும் எதிர்த்து நின்றார். இறுதியில் இவரைக் கல்லில் கட்டிக் கடலில் செலுத்தினர். இவரோ அப்போதும் உறுதி குலையாது, ‘‘கற்றுணைப் பூட்டியொர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே’’ என்று பாடிக் கரையேறினார்.  இவரது அருளாற்றல் கண்டு பல்லவப் பேரரசனே சைவனானான்.  ‘‘சிந்தை இடையறா அன்பும் திருமேனி தன்னில் அசைவும் கந்தை மிகையாம் கருத்தும் கை உழவாரப் படையும்’’ கொண்டு தமிழகத்தில் உள்ள பல தலங்களுக்கும் சென்று இறைவன் கோயிற் புறத்தே உள்ள புல்லினைச் செதுக்கித் தூய்மை செய்து, அகத்தே போய் ஆண்டவனை இனிய தேவாரப் பாடல்கள் பாடி வழிபட்டார்.  இறைவனால் சூலக்குறி இடப்பக்குறி இடப் பெற்றார்.  அவன் திருவடி சூட்டப் பெற்றார்.  சீர்காழியில் திருஞானசம்பந்தரைச் சந்தித்தார்.  அப்போது இவரை அவர் ,‘‘அப்பா’’ என்று அழைத்தார்.  பிறகு அவருடன் பல தலங்களுக்குச் சென்று வணங்கினார். திருவீழிமிழலையில் இறைவன் தந்த படிக்காசு கொண்டு பஞ்சம் நீக்கியது, திருமறைக் காட்டில் கோயில் கதவு திறக்கப் பாடியது , திருக் கயிலைக் காட்சியைத் திருவையாற்றில் கண்டது, தம் பெயரையே ஓதி வந்த அப்பூதி அடிகளாரின் அரவு தீண்டிய மகனை உயிர்ப்பித்தது முதலியன இவர் வாழ்வில் நடைடிபற்ற அற்புதச் செயல்களாம். இறுதியில் தம் எண்பத்தோராவது ஆண்டில் திருப் புகலூரில் இறைவனடி சேர்ந்தார். ‘‘என் கடன் பணி செய்து கிடப்பதே, தன் கடன் அடியேனையும் தாங்குதல்’’ என்ற குறிக்கோளுடன் வாழ்வு நடாத்திய இவர் அஞ்சாமை, உறுதி, பணிவு, தொண்டுள்ளம் , ஆகியவை பண்பால் சிறந்து நின்ற பெரியார் ஆவார். இவர் காலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டு.


     திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்கள் 312 திருப்பதிகங்கள் ஆகும்.. நான்காம் திருமுறையில் திருநேரிசை, திருவிருத்தம் என்ற யாப்பும், ஐந்தாம் திருமுறையில் திருக்குறுந்தொகை என்ற யாப்பும், ஆறாந் திருமுறையில் திருத்தாண்டகம் என்ற யாப்பும் அமைந்துள்ளன.  இறைவனை ஆண்டான் ஆகவும், தன்னை அடிமையாகவும் கருதி இவர் த பாடிய பாடல்களில் இவரது பழுத்த அனுபவம், கனிவு, தம் குறையை எண்ணி எண்ணி இரங்கும் தன்மை ஆகியவை வெளிப்படும். தன்னை ஆட்கொண்ட இறைவனின் பெருங்கருணையைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். 

                    

(தமிழ்க்கவிக்கோவை HSC தமிழ்ப் பாடநூல்  மலயாப்    


பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை வெளியீடு 1971)









திருமந்திரம்

1  குரு லிங்க  சங்கமம்.

திருமந்திரம்

திருமந்திரம் தோத்திரமும் சாத்திரமும் கலந்து தமிழில் தோன்றிய முதல்நூல். திருநெறிய தமிழைத் தோற்றுவித்த பெருமையும் அதற்குண்டு.  என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்று தாம் தமிழ் மொழிக்குத் தெய்வத் தொண்டாற்றவே இறைவன் தன்னைப் படைத்ததாகத் திருமூலர் குறிப்பிடுகின்றார்.  மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ் என்றே திருமந்திர நூல் பேசப் படுகின்றது. சேக்கிழாரும் திருமந்திரத்தைத்தமிழ்மாலைஎன்றே கூறுகின்றார்.  தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்தர் நெறி என்னும் தனிநெறியைத் தோற்றுவித்த சிறப்பும் திருமந்திரத்திற்கு உண்டு.  மனிதனின் உடல், உள்ளம், உயிர் என்னும் மூன்றும் மேம்பட -மாண்புடைய வழிகண்ட பெருந்தகை திருமூலர். தமிழர் கண்ட தனிப் பெருந் தத்துவமாகிய சைவ சித்தாந்தக் கோட்பாட்டிற்கு வித்திட்ட சால்பும் திருமந்திரத்திற்கு உண்டு.  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி உலகளாவிய ஒருமைப் பாட்டிற்கும் வழிகண்ட பெருமானார் திருமூலர்.  இத்தகைய திருமந்திரத்தின் எழாம் தந்திரத்தையம் ஏனைய தந்திரங்களையும் மையமாகக் கொண்டு குருலிங்க சங்கமம் என்னும் பொருளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

2.  சொற்பொருள் விளக்கம் -

                2.1. - குரு என்றால் ஆசிரியன் என்பது பொருள்.  குரு என்பது சமஸ்திருதச் சொல். ஆசிரியன் என்பது தமிழ்ச் சொல். குரு என்னும் சொல்லில் உள்ள கு என்பது மலத்தையும் , ரு என்பது நீக்குபவர் என்பதையும் உணரத்தும்.  எனவே, குரு என்பவர் ஆணவம், கன்மம், மாயை  என்னும் மும்மலங்களை நீக்குபவர் என்னும் பொருளுடைய ஒரு சொல்.  கு - ர்- என்று பிரித்து, கு என்பது சித்தியைக் கொடுப்பவர் என்றும் ர் என்பது பாவத்தைத் தகிக்கும் தீ என்றும் என்பது சிவன் என்றும் ஆகக் குரு என்பது இம்மூன்றும் நிறைந்தவர் எனப் பொருள்படும் என்பர் சிலர்.

 ஆசிரியர் என்னும் தமிழ்ச் சொல் ஆசு- குற்றங்கள், இரியர் - ஓட்டுபவர், போக்குபவர் என்னும் பொருளைத் தரும்.  குரு, ஆசிரியர் என்னும் இரண்டு சொற்களில் குரு என்னும் சொல்லை ஆன்ம முன்னேற்றத்திற்கு வழி காட்டுகின்ற சமய உலகில் தீட்சை செய்து வழிகாட்டும் ஒளி விளக்காக இருப்பவரைக் குறிக்கத் திருமூலர் பயன்படுத்துகிறார். ஆசிரியர் என்பவர் உலகியல் அறிவை ஊட்டுபவரையே மிகுதியாகக் குறிக்கும் சொல் அல்லவா? எனவே , குரு என்பது ஒரு குறியீட்டுச் சொல்லாக - கலைச் சொல்லாக இங்கு பயன்படுத்தப் படுகிறது.

2.2. - லிங்கம் என்னும் சமஸ்கிருதச் சொல் குறி,அடையாளம் என்னும் பொருள் உடையது. காண முடியாத கடவுளைக் காண்பதற்குரிய  ஓர் அடையாளமாகத் தமிழர்கள் லிங்கம் என்னும் உருவத்தைப் படைத்தனர்.  காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாம், நீணாகம் அணிந்தார்ககு நீள் குறியாம் சிவலிங்கம் என்று சேக்கிழார் சிவலிங்கம் குறியாக இருப்பதைச் சாக்கிய நாயனார் புராணத்தில் குறிப்பிடுகிறார்.  சிவபெருமான் எடுக்கும் திருமேனிகள் மூன்று.  அருவம், உருவம், அருவுருவம்.  அருவம் என்பது வெட்டவெளி, கண்ணுக்குப் புலப்படாதது.  உருவம் சோமாஸ்கந்தர் முதலிய திருவருவங்கள், கண்ணுக்குப் புலப்படுவன.  இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையே , அருவருவத் திருமேனியே சிவலிங்கம்.  எனவேதான் இறைவனைக் குறிக்க - சிவபெருமானைச் சுட்ட, லிங்கம் என்னும் சொல்லைத் திருமூலர்  கையாள்கிறார்.  மேலும் லிங்கம் என்னும் சொல் லிம் - கம் எனப் பிரிந்து லிம் என்பது உலக முடிவில் எல்லாச் சராசரங்களும் ஒடுங்குவதற்குரிய இடம் எனவும், கம் என்பது அவ்வாறு ஒடுங்கிய பொருள்கள் அனைத்தும் தோன்றி வெளிப் படுவதற்குரிய இடம் எனவும் பொருள் உணர்த்தும் இயல்புடையது.எனவே தோற்றம் ஒடுக்கம் உணர்த்தும் தோன்றாப் பொருளைக் குறிக்க லிங்கம் என்னும் சொல்லே பொருத்தம் எனக் கருதித் திருமூலர் பயன் படுத்துகிறார்.

2. 3  - சங்கமம் என்பதற்கு இயங்கும் போருள் என்பது அர்த்தம்.  தாவர சங்கமம் என்று சொத்துடைமைகளைப் பிரிக்கும்போது இயங்கா நிலையிலுள்ள வீடு, நிலம் போன்றவற்றைத் தாவரம் என்னும் சொல்லாலும், இயங்கும் நிலையிலுள்ள கார், பணம் முதலியவற்றைச் சங்கமம் என்னும் சொல்லாலும் குறிப்பர்.  திருமந்திரத்தில் சங்கமம் என்னும் சொல்லாட்சி அடியார்களைக் குறிக்கிறது.  சங்கமம் என்னும் சொல்லும் சமஸ்கிருதச் சொல்தான்.  இருப்பினும், திருமூலர் அடியார் என்னும் சொல்லையே - தமிழ்ச் சொல்லையே அதிகம் கையாள்கிறார்.  காரணம்,அடியார் என்னும் சொல்லில் அவர் காணும் பொருளாழமே ஆகும்.  அடியார் என்னும் சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு.  இறைவனுக்கு என்றும் அடிமைப் பட்டவர்கள் என்பது ஒன்று.  அதாவது நாமார்க்கும் குடியல்லோம், இறைவனாகிய கோமாற்கே ஆட்செய்வோம் என்னும் நிலை.  இறைவனுடைய திருவடியைத் தங்கள் இதயத்தில் என்றும் தாங்கி இருப்பவர்கள் என்பது மற்றொரு பொருள்.  அதாவது இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் என்னும் நிலை.  இத்தகைய இருபொருள் உணர்த்தும் ஒரு சொல்லாக அடியார் இருப்பதால் அதனையே மிகுதியாகக் கையாள்கிறார் திருமூலர்.  இறைவனுடைய நடமாடும் கோயிலாக இருப்பவர்களே சங்கமம் எனப்படும் அடியார்கள் ஆவார்கள்.  அவர்களை மயேசுவரர்  என்றும் திருமூலர் அழைப்பார்.

3.வரையறை -             

3.1. குரு என்பவர்க்குத் திருமந்திரம் கூறும் வரையறையைப் பார்ப்போம். தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு (2011) அதாவது இறைவனது திருவடியான சிவ உணர்வைச் சீடனுக்குத் தந்தருளும் தலைமைப் பேறுடையவனே குரு.  தலைவன் என்னும் போது சீடனை விட அறிவாலும் ஆற்றலாலும் மேலோங்கி நிற்கும் இயல்பு தெரிகிறது.  அளிக்கும் என்னும் போது குருவின் பெருங்கருணைத் திறன் விளங்கும்.  பிறவா நெறி தந்த பேரருளாளன் மறவா அருள் தந்த மாதவன் (1972) என்று பிறிதோரிடத்து இதனை மூலர் வலியுறுத்துகிறார்.  தாள் தருதல் என்பது சிவபெருமான்திருவடியைக் காட்டும் தன்மை என்றும், தன் தாள் காட்டி ஆட்கொள்ளுதல் என்றும் கொள்ளலாம்.  காட்டாதன எல்லாம் காட்டித் தாள் தாமரை காட்டி என்று திருவாசகம் பேசுவதையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

                குரு என்பவர் உபதேசம் செய்கின்றவர்.  இதனை மந்திரம் ஓரெழுத்துரைத்த மாதவன் (516) , ஓரெழுத்து ஒரு பொருள் உணரக் கூறிய சீரெழுத்தாளரை (514) என்று இதனைக் கூறுவார் திருமூலர்.  மந்திரம்என்பதை உணருமாறு கூறுபவரே குரு.  அறிதல் மட்டும் போதாது. உணர வேண்டும்.

                குரு அறவாழி,அந்தணன் (1772) ஆக இருக்க வேண்டும். அறநெறி தவறாத பெருங் குணத்தாராகச் செந்தண்மை பூண்டொழுகும்  சிறப்புடையவராகக் குரு திகழ்தல் வேண்டும்.  குரு என்பவன் ஞானி’’. அதாவது அறிவோடு கூடிய அனுபவம்.  ஞான அனுபவமிக்கவராக இருத்தல் வேண்டும்.  குரு என்பவர் ஒரு வழிகாட்டி.


                                                வரும்வழி போம்வழி, மாயா வழியைக்

                                                 கருவழி  கண்டவர் காணா வழியைப்

                                                 பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்

                                                 குருவழி யேசென்று கூடலும் ஆமே ‘‘ (2018)

என்னும் திருமந்திரம் குரு நமக்குக் காட்டும் வழிகளைப் பட்டியலிடுகிறது.  மேலும் இறைவனை அடைய உதவும் வழிகளாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் சைவ சித்தாந்தம் உணர்த்தும் நெறிகளையும் காட்டுபவர் குரு.          

                                                பத்தன் சரியை கிரியை பயில்வுற்றுச்

                                                 சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்                                              

                                                 உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தால்

                                                 கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே’’

என்னும் திருமந்திரமே சான்று.

                குரு தீட்சை செய்யும் முறையையும் திருமூலர் விளக்குகிறார்.

                                                உடல் பொருள் ஆவி உலகத்தால் கொண்டு

                                                 படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து

                                                 நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கிக்

                                                 கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே.  (1747)

குரு செய்யும் தீட்சைகள் ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மானத தீட்சை, வாசகதீட்சை, மந்திர தீட்சை, யோக தீட்சை, ஒளத்திரி தீட்சை எனப் பலவகைப் படும்.  இப்பாடலில்  இந்தத் தீட்சைகள பல இடம் பெற்றுள்ளன. “உடல், பொருள், ஆவி உலகத்தால் கொள்ளுதல்’’ என்பது சீடன் ஞானம் பெறத் தடையாகவுள்ள பற்றுகளைத் தீட்சையின் போது குரு ஏற்றுக் கொள்ளுதலைக் குறிக்கும்.  அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ என்னும் திருவாசக அடிகளையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.  இந்தத் தீட்சையால் சீடன் பெறும் பயன் என்ன என்பதைப்,

                                                பொட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவேனைப்

                                                 பொட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கிப்பின்

                                                 தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்

                                                 வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே’’   (1750)

என்னும் திருமந்திரம் விளக்குகிறது.  முத்திநெறி அறியாது மூர்க்கரோடு விரும்பித் திரிகின்ற சீடனின் குற்றங்களை நீக்கித் தன்னொக்கச் செய்த தண்கருணையாளரே குரு.  இராமகிருஷ்ணர் தம் சீடராகிய விவேகானந்தரிடம் தன் அருளாற்றல் முழுவதையும் தந்த நிகழ்ச்சி இங்கு நினைக்கத் தக்கது.

                                                குரு என்பவனே வேதாகமம்  கூறும்

                                                 பர இன்பன் ஆகிச் சிவயோகம் பாவித்து

                                                 ஒரு சிந்தைஇன்றி உயர்பாசம் நீக்கி

                                                 வருதல் குசவன்பால் வைக்கலும் ஆமே’’  (2019)

                குரு என்பவர் சிவோகம் பாவித்துச் சீடனின் மலமறுத்துச் சிவத்துடன் சேர்ப்பவர் என்பதை, இப்பாடல் நமக்குக் காட்டுகிறது.  இங்கு குரு காரிய குருவாகவும், நல்குரவன் - சிவன் காரண குருவாகவும் விளங்குவர்.

                                                குருவே சிவமெனக் கூறினன் நந்தி

                                                 குருவே சிவமென்பது குறித்து ஒரார்

                                                 குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்

                                                 குருவே உரைஉணர் வற்றதோர் கோவே ‘‘(1556)

என்னும் திருமந்திரப் பாடல் குருவே சிவம்  என்னும் கோட்பாட்டினை நன்கு நினைவூட்டுகிறது.  காரணம் என்ன என்பதை,

                                                ஏறு நெறியே மலத்தை எரித்தலால்

                                                 ஈறில் உரையால் இருளை அறுத்தலால்

                                                 மாறில் பசுபாசம் வாட்டலால்  வீடுக

                                                 கூறு பரனே குருவாம் இயம்பிலே’’    (2028)

என்னும் திருமந்திரப் பாடல் பட்டியலிடுகிறது.  ஆணவம்,கன்மம், மயைiயாகிய மும்மலம் எரித்தல், முடிவற்ற மந்திர முழக்கம், அறியாமையாகிய இருள் போக்கல், பாச நீக்கம், வீடு பேறு ஆகியன தருதலால்  சிவமே குரு என்பது இதன் கருத்து.  பத்திப் பணித்து ‘ (1548) என்று தொடங்கும் திருமந்திரமும் இதனை வலியுறுத்தும்.

                எனவே குருவே குறியாகவும் நெறியாகவும் விளங்குபவர் என உணர முடிகிறது.  அவனருளாலே அவன்தாள் வணங்கும் இயல்பினை அறிய முடிகிறது.  குருவே பிறவிக் கடலைக் கடக்க உதவும் பெருந்தோணி.  நம்மை வீடுபேறு நிலைக்கு உயர்த்தும் ஒரு ஏணி என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

3.2. - லிங்க உருவில் சிவபெருமான் தோன்றிய வரலாற்றை அப்பர் பெருமான் தம் தேவாரத்தில்,

                                செங்க ணானும் பிரமனும் தம்முளே

                                                 எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்

                                                 இந்குஉற் றேன்என்று இலிங்கத்தே தோன்றினான்

                                                 பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே’’


என்று பாடுகிறார்.  திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய கதையும் , அதனால் சிவன் லிங்கமாகத் தோன்றிய நிலையும் திருமந்திரத்தில் அடிமுடி தேடல் (2ம் தந்திரம்) பகுதியில் பேசப் படுகின்றன.  சிவனைக் குறிப்பதே சிவலிங்கத் திருவுருவம்.  எரியலால் உருவம் இல்லை’, ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் நீயே’,’விண் நிறைந்து ஓர் வெவ்வழலின் உரு’,’ஆதியும் அந்தமுமில்லாத அரும் பெருஞ்சோதிமுதலிய திருமுறைத் தொடர்கள் சிவனது வடிவமாகிய அக்கினியே, மேல் நோக்கி எழும் தீக்கொழுந்தே சிவலிங்க வடிவம் என்பதைச் செப்புகின்றன. சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான் என நாவுக்கரசர் சிவன் என்னும் சொல் செம்மைத் தன்மையை, சிவப்பு நிறத்தின் பொருளை உணர்த்துவதாகக் கூறுகிறார்.  தீயின் நிறமும் சிவன் நிறந்தானே.

                கோயிலிலுள்ள கருவறையின் மேலுள்ள விமானம் தூலலிங்கம். கருவறையிலுள்ள சிவலிங்கம் சூக்கும லிங்கம், பலிபீடம் பத்திரலிங்கம் என்று திருமந்திரம் கூறுகிறது. (1689)

சிவலிங்கத்தை அமைத்ததற்குரிய சாதனங்களாக முத்து, மாணிக்கம், பவளம், மரக்கொம்பு,கல், திருநீறு, மரகதம், சிவாகமம், சாதம், அரிசி, பூ, மணல், முதலியவற்றையும் (1690) திருமூலர் குறிப்பிடுகிறார்.  கட்டித் தயிர், நெய், பால், தூய்மையான பசுஞ்சாணம்,செம்பு, அக்கினி,பாதரசம், சலம், வெந்தசெங்கல்,அழகான வில்வம், பொன் ஆகியவற்றையும் லிங்கமாகக் கொள்ளுமாறு வேண்டுகிறார் திருமூலர்.(1691) பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன், பரவிந்து, பரநாதம், சத்தி,சிவன் என ஒன்பது வடிவாகிப் பலன்களைக் கொடுப்பதே சிவலிங்கம் என்பது திருமூலர் கருத்து. (1734).  சிவலிங்கத்தின் அடிப்பாகம் பிரமபாகம், நடுப்பாகம் விஷ்ணு பாகம், மேற்பாகம் ருத்ரபாகம்.  எனவே மும்மூர்த்தியின் வடிவமாகவும் சிவலிங்கம் விளங்குகிறது.  ஓம் என்னும் மந்திரத்தின் வடிவமாகவும் சிவலிங்கத்தைக் கருதுவர்.


3.3. - சங்கமம் என்பது அடியார்களைக் குறிக்கும்.  இவர்கள் இயங்கும் இறை உருவங்களாக விளங்குபவர்கள்.  நடமாடுங் கோயில்கள் என்று திருமூலர் இவர்களை அழைப்பார். (1821) ‘ஏறுடையாய் இறைவா எம்பிரான் என்று நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள் (1826) என்று அடியார்க்கு விளக்கம் தருகிறார் திருமூலர்.  இறைவன் பெயரைச் சொல்லித் திருநீறு இடும் பக்தர்களே அடியார்.  ஏன்? அவர்கள் பூசும் நீறு போல உள்ளும் புறமும் புனிதர்கள். அதாவது தூய்மையானவர்கள்.  இவர்களுக்கு என்றும் அழிவு என்பதே இல்லை.  சித்தம் தெளிந்தவர்கள், தாழ்விலர், அருந்தவம் எப்போதும் செய்யும் இயல்பினர். (1830) தாங்கள் எடுத்த உடலிலேயே சிவனடி சேர்ந்து அருள் பெறம் சிறப்பாளர் (1832) அகண்ட அறிவினர் (1834) இயங்கும் உலகினில் ஈசன் அடியார் மயங்கா வழி செல்வர், வானுலகு ஆள்வர் (1836).  அவன்பால் அணுகியே அன்பு செய்பவர்கள் (1843).  அடியார் அருளால் அவனடி கூட, அடியான் இவன் என்று அடிமை கொண்டானே இறைவன். (2578)

                                                மந்திர மாவதும் மாமருந் தாவதும்

                                                 தந்திர மாவதும்  தானங் களாவதும்

                                                 சுந்தர  மாவதும் தூய்நெறி  யாவதும்

                                                 எந்தை பிரான்தன்  இணையடி  தானே’’ (1587)


என்று கூறி அவன் அடியினை உள்ளத்தால் தாங்கி உலவுபவர்களே உண்மை அடியார்கள்.

                                                என் தாயோடு என் அப்பன்  ஏழேழ் பிறவியும்

                                                 அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்    (1839)

என்று சிவனுக்கே என்றும் அடிமை செய்யும் இயல்பினரே அடியார்கள். சிவனை மட்டுமன்றிச் சிவனடியார்ககும் அடிமையாகும் இயல்பும் அடியார்க்கு உண்டு என்பதை.,

                                                அறியாப் பருவத்து அரனடி யாரைக்

                                                 குறியால் அறிந்து இன்பம் கொண்டது  டிமை’’   (1842)

என்னும் திருமந்திரம் விளக்கும்.  திருவடி ஞானம் சிவமாக்குவிக்கும்.  அது சிவலோகம் சேர்க்கும், அது சிறைமலம் மீட்கும், முத்தி சித்திக்கு வழி வகுக்கும் (1572) என்னும் இலக்கணத்திற்கு இலக்கியமாக இலங்குபவர்களே ஈசன்அடியார்கள்.

4.  வகை -

4.1. - குருவை இருவகைப் படுத்துகிறார் திருமூலர்.  சற்குரு, அசற்குரு என்பனவே இருவகை.  உண்மையான நன்னெறியைக் காட்டும் குரு, அவ்வாறு காட்டாத போலிக்குரு என்று இருவகையினரை விளக்கலாம்.  முதலில் அசற்குரு என்போர் யார் எனத் திருமூலர் விளக்குகிறார்.  சிவ உணர்வு இல்லாதவர், உண்மைப் பொருளாராய்தல் இல்லாதவர், ஐயந்திரிபற வேதாகம நெறி கல்லாதவர், பணிவு இல்லாதவர், மற்றவரைப் பழிப்போர், ஆன்மபோதம் உடையவர், மந்திரம் தந்திரம் யோகம், ஞானம், பந்தம், வீடு அறிந்தாரைச் சிந்தித்து உண்மை ஞானம் பெற வழி காட்டாது, வயிற்றுப் பாட்டுக்காகக் குருவாக வாழ்வோர், அறிவில்லாத மூடர், காமம் முதலிய ஆறுவகைக் குற்றங்களுக்கு ஆட்பட்டவர்கள், பாவிகளுக்குப் பொய்யை உணர்த்துபவர் ஆகியவர்கள் அசற்குரு ஆவார்கள்.  இத்தகையவர்களை நம்பிச் செல்வது குருடன் குருடனுக்கு வழி காட்டிய நிலையில் கொண்டு போய் வீழ்த்தும் (2006-2010)

                சற்குரு என்பவர் யார்? என்பதை,

                                                தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு

                                                 தாள் தந்து தன்னை அறியத் தரவல்லோன்

                                                 தாள் தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்

                                                 தாள் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே’’(2011)

என்னும் பாடல் விளக்குகிறது.  அதாவது,

                                                பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்

                                                 நேசத்து நாடி மலமற நீக்குவோர்

                                                 ஆசற்ற  சற்குரு ஆவார்’’


என்பதே சற்குருவின் அடையாளம்.  இத்தகைய சற்குருவின் காட்சியும் உபதேசமும் திருவடி தீட்சையும் மும்மலம் போக்கும் ஆற்றலும், வீடுபேறு தரும் சிறப்புக் கொண்டவை.  சற்குரு சத்து, அசத்து, சதசத்து ஆகிய முப்பொருள்களின் தன்மையைக் காட்டி மாயை நீங்கிச் சிவத்தைச் சேர அருளுபதேசம் செய்கின்றார்..  இத்தகையோர்களையே நாம் வழிகாட்டிகளாகக் கொள்ள வேண்டும்.

4.-2  - லிங்கத்தை அண்டலிங்கம்,பிண்டலிங்கம், சதாசிவலிங்கம்,ஆத்மலிங்கம், ஞானலிங்கம் என வகைப் படுத்துவார் திருமூலர்.

                                                இலிங்கமதாவது  எண்டிசை எல்லாம்

                                                 இலிங்கமதாவது எண்ணெண் (64) கலையும்

                                                 இலிங்கமாக எடுத்தது உலகே ‘‘   (1683)

என்றும், பூமியே சிவலிங்கத்தின் அடி என்றும் வானகமே முடி என்றும் (1605) அகில உலகம் அனைத்தையம் லிங்கமாகக் காண்பதே அண்டலிங்கம்.  மானிட ராக்கை வடிவு சிவலிங்கம். அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே திருக்கூத்து (1696) என்று எண்ணுவதே பிண்டலிங்கம்.  உடம்பில் கால் முதல் அரைவரையில் பிரமபீடம், உடல் பகுதி சத்தி பீடம், தலை பாணம் என்ற வகையில் உடம்பு சிவலிங்கம் ஆகிறது.  சிரசின் மேல் ஞானாகாயம் விளங்குவதால் அது சிதம்பரம் ஆகும்.  அருவும் உருவுமாகிய சதாசிவத்தை வணங்கி அறிவையும் ஆற்றலையம் பெற்ற போது மனிதன் சதாசிவம் ஆகக் கருதப் பெறுகிறான். அசைவு நிகழும் இடம் உடம்பு.  எனவே அதுவே திருக் கூத்தாகிறது. இறைவன்  இவ்வுடலைக் கோயில் கொண்டு எழுந்தருளிய காட்சியே பிண்டலிங்கம்.  அஞ்சு முகம், ஐம்மூன்று (15) கண்கள், பத்துக் கைகள், அவற்றில் பத்து வகைப் படைக் கருவிகள், இவையே சதாசிவ லிங்கத்தின் தோற்றம் (1706) ஐந்து முகமாவன ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம். ஈசானம் மேல் நோக்கியது. வித்தைகளைத் தருவது. தத்புருடம் என்பது கிழக்கு நோக்கியது.  போகம் ஊட்டுவது.  அகோரம் தெற்கு நோக்கிய, பாவங்களை அகற்றுவது.  வாமதேவம் வடக்கு நோக்கியது.  உலக இன்பங்களை அளிப்பது. சத்தியோசாதம் மேற்கு நோக்கியது, ஞானம் தருவது.  சிவலிங்கத்தின் பீடம் ஓங்காரம்.  கண்டம் மகாரம் உள்வட்டம் உகாரம், பாணம் அகரம் விந்துநாதம்.  எனவே சிவலிங்கத் திருமேனி என்பது அகர உகர மகர விந்து நாதமாகிய பிரணவ வடிவமே.  இதுவே சதாசிவ லிங்கம் (1722) ஆன்மாவே லிங்கம் எனக் காண்பதே ஆன்மலிங்கம்.  சத்தியம்  சிவமுமாகக் காட்சி அளிக்கும் லிங்கமே ஆன்மலிங்கம்.  மராமரன் மன்னி மனத்துறைந்தானே (1730) என்றும், ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே (1732) என்றும், உள்ளமே ஆன்மாவே சிவலிங்கம் எனக் காட்டுகிறார் திருமூலர். உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளை உடைய இறைவன் குருவாய் வந்து கற்பக மரம்போல அருள் சுரக்கும் நிலையே ஞானலிங்கம் ஆகும். (1733) ஞான வடிவமே ஞானலிங்கம், சிவமான ஞானம் தெளிய, சித்தியும் முத்தியும் சிவானந்தமும் கிடைக்கும். (1562)

4. 3 - குருவையும் லிங்கத்தையும் வகைப் படுத்திய திருமூலர் சங்கமமாகிய அடியார்களை வகைப் படுத்தாதது குறிப்பிடத தக்கது.  அவர்களை மகேசுரர் என அழைக்கிறார்.  அவர்கள் அளவிலாத பெருமையர். அவர்களை வகைப் படுத்துவது முறையன்று எனக் கருதினர் போலும்.

5.  வழிபாடு -

                குரு லிங்க சங்கமம் ஆகிய மூன்றையம் வழிபடுவது எப்படி என்பது பற்றிச் சிவபூசை, குருபூசை, மகேசுவர பூசை ஆகிய மூன்று பகுதிகளும் விளக்குகின்றன.

                                                உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்

                                                 வள்ளற் பிரானார்ககு வாய்கோ  புரவாசல்

                                                 தௌளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

                                                 கள்ளப் புலன்ஐந்தும் காளா  மணிவிளக்கே.’’  (1792)

என்று சிவலிங்க வழிபாட்டினை விளக்குகிறார் திருமூலர்.  அகத்தே ஆண்டவனை வேண்டி வழிபடுவதே அவசியம் என்பதனை இப்பாடல் வலியுறுத்துகிறது.  காலையும் மாலையும் சிவனுக்குப் படையல் - நிவேதனம் பாட்டே என்கிறார் திருமூலர். (1793)

                                                புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு                                        

                                                 அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும்.’’  (1797)

இங்கு நீர் என்பது பக்தி உணர்வையும் மலர் என்பது நெஞ்சத்தையம் (சுவாதிட்டானம்) குறிக்கும் அடையாளங்கள். நினைவதும் வாய்மை மொழிவதும்  சிவனைக் காணச் சிறந்த வழிகள் (1795) அன்பே சிவம் என்பது திருமந்திரத்தின் தாரக மந்திரம்.  அன்போடு உருகி அகங் குழைவார்க்கன்றி என்போன் மணியைக் காண ஒண்ணாது.  எனவே சிவபூசைக்கு உயிர்நாடி அன்பே - அதாவது அகங் குழைதலே என்பதை வலியுறுத்துகிறார் திருமூலர்.

5-2  குருபூசை என்பது குருவின் திருவடியைப் பற்றி நின்று ஆதாரமாகிய 36 தத்துவங்களையும் கடந்து ஆன்மா விளங்கும் அழகைப் போற்றி நிற்பதே ஆகும். (1813)

                                                தெளிவு குருவின்திருமேனி காண்டல்

                                                 தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

                                                 தெளிவு குருவின்திரு வார்த்தை கேட்டல்

                                                 தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே’’  (183)

என்னும் திருமந்திரப் பாடல் குருபூசையைத் தெளிவு படுத்துகிறது.  முதலில் குருவின் திருவுருவைக் கண்டு வழிபடுதல், பூசை செய்தல்.  இரண்டாவது குருவின் திருநாமம் செப்புதல்.  அப்பூதி அடிகளார், பெருமிழலைக் குறும்பர் வாழ்வியல் இதனை வலியுறுத்தும்.  குருவின் உபதேசத்தையும் அறிவுரைகளையும் கேட்பது அடுத்த நிலை. நான்காவது குருவின் திருவுருவத்தைத் தியானம் செய்தல்.  இப்பாடல் மனம் மொழி மெய்களால் குருபூசை செய்யும் மாண்பை நன்கு விளக்குகிறது.

5 - 3   சங்கம வழிபாடு என்பது மகேசுவர பூசை என்றே தலைப்பிட்டு அழைக்கப் படுகிறது. காரணம் என்ன? நடமாடும் நம்பர்களாகிய அடியார்ககு ஒன்று கொடுத்தால் அது படமாடும் பரமனுக்கு ஆகும். படமாடும் பரமனுக்குக் கொடுத்தால் அது நடமாடும் அடியார்ககு ஆகாது. (1821) மகேசுரர்களாகிய அடியார்களுக்குக் கொடுக்கும் பொருள் மும்மூர்த்திகளுக்கும் மூவேழ் சுற்றத்தார்ககும் கொடுத்ததாகும். (1823) சித்தம் தெளிந்த அடியார்களின் சேடம் பருகிடின் முத்தியாம்.


                                                அழிதகவு  இல்லா அரனடி யானைத்

                                                 தொழுதகை ஞாலத்துத் தூங்கியிருள் நீங்கும் ‘‘(1829)

கோடி அந்தணர்க்குக் கொடுப்பதை விட ஒரு பிடி அடியார்க்குக் கொடுப்பது மேல் ஆகும்.

                                                அகரம் ஆயிரம் அந்தணர்ககு ஈயில்என்?

                                                 சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என்?

                                                 பகரும் ஞானி பகலூண் பலத்துக்கு

                                                 நிகரிலை என்பது நிச்சயம் தானே’’(1824)

அதாவது அந்தணர்க்கு ஆயிரம் வீடு கட்டிக் கொடுப்பதை விட ஆயிரம்கோயில் கட்டுவதைவிட, அடியார் ஒருவர்க்கு ஒரு பகல் உணவ அளிப்பது சிறந்தது ஆகும்.  எனவே, அடியார்க்கு அமுது படைத்தலே மகேசவர பூசையாகும்.

                அறுபத்து மூன்று அடியார்களில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், அப்பூதி அடிகள் முதலானோர் குரு வழிபாடு செய்தும், கண்ணப்பர், சாக்கியர், சண்டேசுவரர் முதலானோர் லிங்க வழிபாடு செய்தும், காரைக்கால் அம்மையார், இளையான்குடிமாறர், மெய்ப்பொருள் நாயனார், முதலானோர் அடியார் வழிபாடு செய்தும் இறைவன் அருளைப் பெற்ற பெருமக்கள்.

                                ஆறுமுக நாவலர் தம் சைவ வினாவிடையில் சிவபெருமான் , புறத்தே சிவலிங்கம் முதலிய திருமேனிகளும் குருவும் சங்கமமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், ஆன்மாக்கள் செய்யம் வழிபாட்டைக் கொண்டருளுவார்.  ஆதலால் ஆன்மாக்கள் அவரை வழிபடும் இடங்கள் இவைகளே யாம்’’ என்று கூறுவதையும் நோக்க வேண்டும்.

6.  உறவு _

                குரு லிங்க சங்கமம் என்பன ஒருமுக்கோணம் போல அமைவன.  இவை ஒன்றோடொன்று உறவு உடையவை.  குருவே சிவமெனக் கூறினன் நந்தி என்பார் திருமூலர்.  சிவத்தை தாங்கிய நிலையில் குருவே சங்கமம் ஆகிறார்.  குருவருளால் சிவனருளைப் பெறுகிறோம்.  சிவனருள் பெற்ற நிலையில் சங்கமம் ஆகும் நிலை நமக்குக் கிடைக்கிறது.  குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பார் அருணகிரியார்.  இறைவனே குருவாக வந்து பக்குவமடைந்த ஆன்மாக்களுக்கு ஞானத்தை வாரி வழங்குகிறான்.  வீட்டின்பத்தைத் தருகிறான். வீட்டின்பம் பெற்ற உயிர்கள் அரனடியார்கள் தாமே. அவனருளாலே அவன்தாள் வணங்கும் அற்புதம் இது.  எனவேதான் மூர்த்தி - தலம் - தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு ஓர் வார்ததை சொலச் சற்குருவும் வாய்க்கும் என்கிறார் தாயமானவர்.  மாணிக்கவாசகரின் வாழ்க்கையும் வாக்காகிய திருவாசகமும் குருலிங்க சங்கமத் தொடர்பினைக் காட்டும் .  குருவருளால் முத்தி பெற்ற நிலையிலும் திருவருள் பெற்ற நிலையிலும் அடியார் தொடர்பு இருக்க வேண்டும் என்பதைச் சிவஞான போதத்தின் பன்னிரண்டாம் சூத்திரம் வலியுறுத்துகிறது.

                                உடையாள் உன்றன் நடுவிருக்கும்

                                                உடையான் நடுவுள் நீயிருத்தி

                                 அடியேன் நடுவுள் இருவீரும்

                                                இருப்ப தானால் அடியேன்உன்

                                 அடியார் நடுவுள் இருக்கும்

                                                அருளைப் புரியாய் பொன்னம்பலத்தெம்

                                 முடியா முதலே என்கருத்து

                                                முடியும் வண்ணம் முன்னின்றே’’

என்று பொன்னம்பலத்தானிடம் மணிவாசகர் வேண்டி நிற்பதையும் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும்.  இன்னொரு வகையில் சொல்லப் போனால் குருவருள் என்பதுநெறி,திருவருள் என்பது குறி. நிலைத்து நிற்க உதவும் நெறியே சங்கமம்

                திருவாசகத்தின் முதல் மூன்று தொடர்களும் குருலிங்க சங்கமத்தின் உறவை நிலைநாட்டும் வகையில் வந்துள்ளதைப் பார்க்கலாம்.

                                                நமசிவாய வாழ்க ,நாதன்தாள் வாழ்க,

                                                 இமைப்பொழுதும் என் நெஞ்சில்

                                                 நீங்காதான் தாள் வாழ்க’’

எனவரும் மூன்று தொடர்களையும் நுணுகி நோக்கினால் இவ்வுண்மை புலனாகும். நமசிவாய என்பது குருவழியாகப பெறும் உபதேச மந்திரம்.  வேதம் நான்கினும் மெய்ப் பொருளாகிய நாதன நாமம் .இது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஒதுவார்க்கு நன்னெறி ( வீட்டின்பம்) நல்குவது .  நாதன்தாள் என்பது இறைவன் திருவடி.  எனவே இது லிங்கத்தைக் குறிக்கும். பிறவிப் பெருங்கடல் நீந்தி நாம் சேர வேண்டிய இலக்கு இறைவனடி தானே. இறைவனடியாகிய பேரின்பம் மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும், வீங்கிள வேனிலும், மூசு வண்டறை பொய்கையும் போன்றதல்லவா? இப்பேரின்பமாகிய இறைவனடியை இதயத்தில் என்றும்  நிலை நிறுத்திய பெருமக்கள் தாமே அடியார்கள் .  இமைப் பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க  என்னும் போது சங்கமமாகிய அடியார்களைக் குறிப்பதாகிறது. எனவே இம்மூன்று தொடர்களும் குறி, நெறி, தறி ஆகியவற்றைச் சுட்டுகின்றன. 

                இவ்வாறே திருமந்திரமாகிய நூ:லும் குருலிங்க சங்கமமாகக் காட்சி அளிப்பதை ஒரு பாடல் காட்டுகிறது.

                                                திருமந்திரமே சிவகதிக்கு வித்தாம்

                                                 திருமந்திரமே சிவமானம் - அருமந்த

                                                 புந்திக்குள்ளே நினைந்து போற்றுமடியார்தமக்குச்

                                                 சந்திக்கும்  தற்பரமே தான்’’

என்னும் தனிப்பாடலைக் காண்க.  சிவகதிக்கு வித்து  என்னும் பெயரும், தொடரும் மந்திரம் என்னும் பெயரும் திருமந்திரம் குருவாக விளங்கும் நிலையை உணர்ததுகின்றன.  திருமூலரே நமக்குக் குரு,  அவர் திருவார்த்தையே திருமந்திரம்.  திருமந்திரமே சிவமாம் என்பது லிங்கமாகிய இறைவனைக் குறிக்கிறது.  என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்பதால் திருமந்திரம் என்பது சிவனை, சிவாகமத்தைத் தமிழ் வழி கண்ட வடிவம் தானே.   அதுவே ஞானலிஙகம்.  திருமந்திரத்தை நெஞ்சினுள் நினைந்து போற்றும் அடியார் தமக்கு என்னும் தொடர் சங்கமம் ஆகும்.  திருமந்திரமே குருவாகவம் லிங்கமாகவம் சங்கமமாகவம் திகழ்ந்து நமக்கு நன்னெறி காட்டுகின்றது எனலாம்.  எனவே, “திருமந்திரமாலை எனம் தெப்பத்தைப் பற்றிக் கருவேலையைக் கடப்போம் காண்’’ - சித்தாந்த தெரிசனம்.

(திருமந்திர மாநாட்டு மலர் கோலாலம்பூர்)

Thinnappan,SP. Guru, Lingam, Sangamam ( Teacher, God,Saints)

                        In Proceedings of the First Malaysian Thirumanthiram Conference

                        Malaysia Hindu Sangam, Kuala Lumpur,Malaysia. (2000) pp 79-87

                        (Tamil)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக