வெள்ளி, 2 மே, 2014

சமயம் - சைவம் - 2


                     சேக்கிழார் கண்ட செவ்வேள்

சேக்கிழார் பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரியபுராணத்தைப் பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய அருட்கவிஞர்  ஆவார்.  பெரிய புராணம் அறுதபத்து மூன்று தனி அடியார்கள், ஒன்பது தொகை அடியார்களாகிய திருத்தொண்டர்களின் பெருமையைப் பேசுகிறது.  எனினும் அடியார்கள் உள்ளக் கமலத்தில் அகலாது வீற்றிருக்கும் ஆண்டவனாகிய சிவவெருமானின் சிறப்பையும் எடுத்துரைக்க அது தவறவில்லை. அடியார் வழிபாட்டையும் ஆண்வன் வழிபாட்டையும் வலியுறுத்தும் பெரியபுராண ஆசிரியராகிய சேக்கிழார் வழிநின்று செவ்வேளாகிய முருகப்பெருமானின் பெருமையைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சுந்தரர் வரலாற்றில்: முருகன்

பெரிய புராணம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த பெருந்தகையார் நம்பியாருராகிய சுந்தரரே ஆவார்.  அவர் பாடிய திருத்தொண்டத்தொகையே பெரிய புராணத்திற்கு அடிப்படை நூலாகும் .  சுந்தரர் அவதார நோக்கமே ‘‘தீதிலாத் திருத்தொண்டத்தொகை தருவதுதான்’’ என்பது சேக்கிழார் கருத்து.

எனவே சுந்தரரையே தம் காவிய நயாகனாக்கிச் சேக்கிழார் பெரிய புராணத்தின் முதலிலும்(தடுத்தாட்கொண்ட புராணம்) இடையிலும் (ஏயர்கோன் கலிக்காம நாயனானர், சேரமான் பெருமாள் நாயனார் புராணம்) இறுதியிலும் (வெள்ளானைச் சருக்கம்) அவர் வரலாற்றை விரித்துரைக்கின்றார். காவியத் தலைவராகிய சுந்தரர் திருவாரூர் ஆலயத்தில் பரவையாரை ‘‘நகை பொதிந்து இலங்கும் செவ்வாயும் பிற்புரை நூதலும் வேற்கண்ணும் கொண்ட நங்கையாரை’’ கண்டு

‘‘கற்பகத்தின் பூங்கொம்போ? காமன் தன் பெருவாழ்வோ?

பொற்புடையபுண்ணியத்தின் புண்ணியமோ?புயல் சுமந்த

விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ

அற்புதமோ? சிவனருளோ? அறியேன்’’ என்று அதிசயித்தார்(286)

பரவையாரைக் கண்டு காதலுற்ற சுந்தரரின் உள்ளத்தைப் படம் பிடித்த சேக்கிழார், சுந்தரரைக் கண்டு அவர் அழகில் மயங்கி அன்பு நெஞ்சங்கொண்டு நின்ற பரவையாரின் இதயத்தினையும் ஓவியமாகத் தீட்டுகிறார். பரவையார் சுந்தரைப் பார்த்ததும்

‘‘முன்னே வந்து எதிர்தோன்றும் முருகனோ? பெருகொளியால்:

தன் நேரில் மாரனோ? தார்மார்பின் விஞ்சையனோ?

மின் நேர் செஞ்சடை அண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ

என்னே? என் மனம் திரித்த இவன் யாரோ? ‘‘

என நினைந்தார்.(290)

பரவையாருக்குச் சுந்தரர் ’’முன்னே வந்து எதிர்தோன்றும் முருகனாக’’க் காட்சி அளிக்கின்றார்.  முருகன் என்னும் சொல்லுக்கே அழியா அழகுடையவன், , மாறாமணம் உடையவன், வாடா இளமை உடையவன், வணங்கத்தக்க இறைமைத் தன்மை கொண்டவன் என்பது பொருளன்றோ? ‘‘மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி’’ என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் இதனை விளக்குகிறார். இத்தகைய இயல்புகளைக் கொண்டவராகச் சுந்தரர் இருக்கின்றார்.  இதற்கு மேலும் சேக்கிழார் ஒரு படி மேலே சென்று சுந்தரர் முருகனாகத் தோன்றுவதற்குரிய காரணம் ஒன்றையும் குறிப்பிடுகிறார்.  ‘‘ பெருகொளியால்’’ என்பதுதான் அந்தக் காரணம்.  முருகப் பெருமான் வளர்ந்து வரும் ஒளி வெள்ளமாகத் தோன்றுபவன்.  இதனைத் திருமுருகாற்றுப்படையின் தொடக்க அடிகளே உணர்த்தும் உலகம்; உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிரொளி’’ என்பது  திருமுருகாற்றுப்படையின் தொடக்க அடிகள்.  உலகத்துயிர்களை உவகையில் ஆழ்த்தும் உதய சூரியனைப்போல-கடலிலிருந்து எழும் ஞாயிறு போல நீல  மயில் மீது நிற்கும் முருகப்பெருமான் இடையறாது தொலை தூரத்துக்கும் எட்டுகின்ற பேரொளியாகத் தோன்றுகிறான் என்பது இந்த அடிகளின் பொருள் .  இருளைப்போக்கும் ஞாயிறு போல , மருளைப்போக்கும் ஞான ஒளி அல்லவா முருகன்! அவனைப் போலச் சுந்தரரும் பேரொளி வீசும் பெருந்தகையார் என்பதை முதற்பாட்டில் ‘‘கண்கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி கதிர்விரிப்ப விண் கொள்ளாப் பேரொளியான்’’ எதிர்நோக்க மெல்லியலுக்கு வேட்கை -விருப்பம் வந்தது என்று சேக்கிழார் கூறுகிறார். பெரியபுராணத்தில் தொடக்கத்திலேயே சுந்தரரின் பேரொளிப்பெருமை பேசப்படுகின்றது.  திருக்கைலை மலையில் ‘‘அத்தர் தந்த அருட்பாலுண்டு சித்தமர்ந்து தெவிட்டி வளர்ந்தவராகிய’’ உபமன்னிய முனிவர் பல முனிவர்கள் யோகிகள் சூழ இருக்கும்போது அங்கு ஓர் ஒளி ஆயிரம் சூரியன் சேர்ந்து வந்;த பேரொளி போன்று வீசத் தோன்றிடக் கண்டு எல்லாரும் வியப்பில் ஆழ்ந்திருந்தனர்.  உபமன்னிய முனிவர் தென்திசை வந்த நாவலர் கோன்  வன்தொண்டன்(சுந்தரர்) எந்தையார் அருளால் இங்கு வருகிறார் என்று கூறி ‘‘நம்பி ஆருரன் நாம் தொழும் தன்மையான்’’ என்று சொல்லி வணங்குகிறார்.  இதனைக் கேட்ட மற்றவர்களும் வணங்கி ‘‘வென்ற பேரொளியார் செய்த விழுத்தவம் நன்று கேட்க விரும்பினோம்’’ என்று கூற உபமன்னிய முனிவர் ஆலால சுந்தரர் அவதார காரணத்தைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்.   எனவே பெரிய புராணம் தொடங்கும் போதேசுந்தரரின் பேரொளி ஆற்றல் பேசப்படுகின்றது.  எனவே சேக்கிழார் தம் காப்பிய நாயகனாகிய சுந்தரருக்கு முருகப்பெருமானை உவமையாகக் கூறுவதன் நுட்பம் போற்றுதற்குரியது.

சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகளும் தம் காப்பிய நாயகனாகிய கோவலனைச் செவ்வேளாகவும் நாயகியாகிய கண்ணகியை வள்ளி போல்வாள் என்றும் கூறும் மரபு அறிந்து -முதற் காப்பிய மரபு அறிந்து சேக்கிழாரும் தம் காப்பிய நாயகனாகிய சுந்தரரை முருகனாகக் காட்டுகிறார்.  போலும் .  சேக்கிழாரும் பரவையார் மனத்தில் சுந்தரரை முருகனாக நினைத்ததற்கேற்ப, சுந்தரர் மனத்தில் பரவையார் கற்பகத்தின் பூங்கொம்பாகிய தெய்வயானையைப்பொன்று திகழ்ந்தார் என்றும் கூறுவதாகக் கொள்ளலாம்.  நம்பி யாரூராகிய சுந்தரர்’’தம்பிரானைத் தம் உள்ளம் தழீஇயவர்’’ அதாவது சிவபெருமானாகிய ஆண்டவர்க்கும் தோழர் அடியாராகிய சேரமான் பெருமாள் எனப்படும் கழறிற்று அறிவார்க்கும் நண்பர்.   சேரமான் பெருமாள் நாயனாருடன் பல நாட்கள் தங்கிப் பலதலவழிபாடு செய்து நட்புறவு கொண்டு திருவாரூருக்குத் திரும்ப நினைக்கிறார் சுந்தரர்;.  அவருக்குச் சேரமான் பெருமாள் பொன்னும் மணியும் செல்வமும் கொடுத்து பிரியாவிடைதருகின்றார்.  ஆரூரர் கொணர்ந்த பொன்னையும் மணியையும் சிவபெருமான் வேடனாக வந்து கவர்கின்றான்.  பிறகு சுந்தரர் திருமுருகன் பூண்டித் திருக்கோயிலுக்குள் சென்று’’கொடுகு வெஞ்சிலை’’ என்று தொடங்கும் பதிகம் பாடிப்பொருட் குவியலை  மீண்டும் பெறுகிறார்.  இந்தப்பதிகப்பாடல் முழுதும் திருமுருகன் பூண்டியில் ‘‘ எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானாரே’’ என்று முடியும்.  சுந்தரர் வாழ்வில் இறைவன் இந்தத் திருவிளையாடலை ஏன் செய்தான் என்பதற்குக் காரணம் கூறுகிறார் சேக்கிழார்.

 தம்பிரான் தோழராகிய-தம் நண்பராகிய சுந்தரர்க்குத் தம்மைத் தவிர மற்றவர் பொன் கொடுக்க விரும்பாமையே அந்தக்காரணம் ஆகும். இந்த நிகழ்ச்சி நடந்த இடம் திருமுருகன்பூண்டி. இந்நகர்க்கு அடைமொழியாகச் சேக்கிழார் ’’சீருரும் திருமுருகன் பூண்டி’’ என்கிறார்.  சீர்-சிறப்புகள் அனைத்தும் ஊர்ந்து வரும் சிறப்புடைய திருமுருகன் பூண்டி என்னும்போது சிறப்புகள் அனைத்தும் பொருந்தியவன் திருமுருகன் என்றும் முருகனுக்கு அடையாகவும் கொள்ளலாம் அல்லவா? 

திருமுருகன் என்பதில் உள்ள திருவும் கண்டாரால் விரும்பப்படும் தெய்வத்தன்மையைக் காட்டுகிறது.  முருகன் இறையருளை உணர்த்துகிறது என்று கொள்ளவும் இடம் உண்டு.

‘‘அரும்பெறல் மரபின் பெரும் பெயர் முருகன் ‘‘ என்று நக்கீரர் முருகன் நாமத்தின் பெருமையைப் பேசுகிறார்.  அத்தகைய முருகன் பெருமையைச் சேக்கிழார் போற்றும் திறத்தை இங்கே காண்போம்.

கண்ணப்பர் வரலாற்றில் செவ்வேள்

      அன்பின் திருவுருவமாக விளங்கிய அடியார் கண்ணப்பர். ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், என்ற நால்வர் பெருமக்களாலும் போற்றப் பெற்ற அடியார்கள் கண்ணப்பரும், சண்டேசரும் ஆவர். ‘‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை’’ என்று திருவாசகம் கண்ணப்பரின் அன்பின் எல்லையைப் பாராட்டுகின்றது.   நாளாறில் கண் இடந்து அப்ப வல்லேன் அல்லேன்என்று கண்ணப்பர் பெருமையைப் பட்டினத்தார் போற்றுகின்றார். ”கலைமலிந்த சீர் நம்பிஆகிய கண்ணப்பர் இம்மண்ணுலகி்ல் திருஅவதாரம் செய்வதற்குக் காரணமாக இருந்தது முருகப்பெருமான் திருவருள் என்பது சேக்கிழார் கருத்தாகும். கண்ணப்பரின் தந்தையார் வேடர் தலைவன் நாகனுக்கும், தாயார் தத்தை என்பாருக்கும் நெடுநாள் மகப்பேறு வாய்க்கவில்லை. இவர்களுக்குப் புதல்வர்ப்பேறு வாய்ப்பது இனி மிக அரிது என்று எல்லோரும் கூறிவிட்டனர். இந்நிலையில் அவர்கள் வேறு வழி அறியாது வேடர்கள் வாழும் குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகப் பெருமானிடம் சென்று அவன் முற்றத்தில் நின்று நாளும் வழிபட்டுப் பராய்க்கடன் நெறியில் (வேண்டுதல் செய்து) நின்றனர். இதனைச் சேக்கிழார்,

      முருகுஅமர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று பரவுதல்

      செய்து நாளும் பராய்க்கடன் நெறியில் நிற்பார் (659)

என்று கூறுகிறார். மணம் பொருந்திய மாலை சூடிய செவ்வேள், முருகவேள் என்று முருகன் குறிக்கப்படுகிறான். வேள் என்பது விருப்பம் என்று பொருள் உடைய வேட்கை என்பதன் அடிச்சொல் ஆகும். விரும்புதற்குரியவன் வேள். வேள் என்பது தலைவனையும் குறிக்கும். விரும்புதற்குரிய தலைவன் முருகப் பெருமான். வேள் என்பது இலக்கியங்களில் தலைவன்எனக் குறித்து கருவேள்- கரிய வேள் என்பது மன்மதனையும் செவ்விய சிவந்தவேள் என்பது முருகனையும் குறிக்கும் தொடர்களாக அமைந்துள்ளன. செவ்வேள் என்பதில் உள்ள அடைமொழி நிறச் செம்மையை மட்டுமா முருகனுக்கு உணர்த்துகிறது. பண்புச் செம்மையையும் நேர்மைத் தன்மையையும் சுட்டி நிற்கிறது. முருகப் பெருமான் செவ்வியன் என்பதைதாமரை புரையும் காமர் சேவடி பவழத்தன்ன மேனிஎனவரும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து உணர்த்தி நிற்கிறது. சங்க இலக்கியங்களில் முருகப் பெருமானைச் செவ்வேள் என்று அழைக்கின்ற மரபு மிகுதியாக உண்டு.  பரிபாடல் பாடல் பகுப்பைக் கூறும் பழைய பாடல் ஒன்று  ‘‘ செவ்வேட்கு முப்பத்தொருபாட்டு’’ என்று செப்புகிறது. சிலப்பதிகாரம் ‘‘கண்டேத்தும் செவ்வேள்’’ என்றும், ‘‘அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்’’ என்றும், ‘‘வென்றிச் செவ்வேள் வெலன் பாணியும்’’ என்றும் கூறுகிறது ‘‘செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க’’ என்று வாழ்த்துப்பாடலும் உண்டல்லவா?

செவ்வேள், முருகவேள் என்று மட்டும் கூறாது இன்டினாரு பாடலில் (677) வென்றி வேள் என்றும் சேக்கிழார் இதே புராணத்தில் குறிப்பிடக் காணலாம்.  இம்மூன்று அடையும் செவ்-முருக-வென்றி (வெற்றி)- மன்மதனாகிய கருவேளிலிருந்து முருகனைப் பிரித்துக் காட்டும் மாண்பின எனலாம்.

நாகனும் தத்தையும் முருகப் பெருமானுக்கு.  சேவல்கள், மயில்கள் முதலியனவற்றை அவன் கோயிலில் விட்டுக் குன்றக் குரவை ஆடல் செய்து பெருவிழா  எடுக்கின்றனர்.


‘‘வாரணச் சேவலொடும் வரிமயிற் குலங்கள் விட்டுத்

தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப்

போரணி நெடுவேலோற்குப் புகழ்புரி குரவை தூங்கப்

பேரணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த  பின்னை’’(660)

என்று இதனைச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.  ‘‘போரணி நெடுவேலோன்’’ என்று முருகப்பெருமான் புகழப்படுகிறான்.  போருக்கு அணி செய்கின்றது அவன் நீண்ட வேல் என்றும், அது பிணி செய்யாது என்றும் சேக்கிழார் வற்புறுத்த விழைகிறார்.  குன்றக் குரவையாடல் முருகப்பெருமானுக்கு வேடர்கள் எடுக்கும் ஆடல் என்பதைச் சிலப்பதிகாரம் செப்புகிறது.

பெருவிழா எடுத்த பின்னர் தத்தை கருவுற்றாள் .  கண்ணப்பர் பிறந்தார். இதனைச் சேக்கிழார்.

‘‘எயிலுடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்தரான

மயிலுடைக் கொற்ற ஊர்தி, வரையுரம் கிழித்த திண்மை,

அயிலுடைத் தடக்கை, வெற்றி அண்ணலார் அருளினாலே’’ (661)

தத்தைபால் கருப்பம் நீடியது என்கிறார் இங்கே சேக்கிழார், முருகன் திரிபுரம் எரித்த சிவனார் மைந்தர் என்றும், மயிலை-வெற்றி பொருந்திய வாகனமாகக்  கொண்டவர் என்றும், கிரவுஞ்ச மலையைப்பிளந்த உரம் கொண்டவர் என்றும், அயிலாகிய வேலை உடைய கையர் என்றம், வெற்றிமிக்க தலைவர் என்;றும் முருகப்பெருமான் பெருமைகள் பலவற்றை ஒரு சேரப்பாடிப் போற்றுகிறார்.  இங்கே முருகன் பிள்ளை வரம் தரும் பெருவள்ளலாக இருக்கும் இயல்பினைப் பார்க்கிறோம். ‘‘கருவயிறு உறுகெனக்கடம்படுவோரும்’’ திருப்பரங்குன்றத்து முருகனை வழிபடும் பலரில் ஒருவராகக் குறிப்பிடுகிறது பரிபாடல் என்பதையும் ஈண்டு நினைக்க வேண்டும்     சட்டியில் (கந்த சஷ்டியில்; விரதம்) இருந்தால் தானே அகப்பையில் (கருப்பையில்) வரும் என்னும் பழமொழிக்கு ஞானியார் சுவாமிகள் தரும் விளக்கம் இப்போது புரிகிறது அல்லவா?

தத்தை கருவுற்றபின் வெறியாட்டு நடக்கிறது.வேலனுக்கு வெறியாடல் நடத்துவதும் சங்க கால  மரபு ஆகும்.  பின்பு கண்ணப்பர் தோன்றுகிறார்.  குழந்தை பிறந்ததும் ‘‘வரையுறை கடவுள் காப்புசெய்ததாகச் சேக்கிழார் சொல்கிறார்.  மலையுறை தெய்வம் முருகன் அல்லவா?

கண்ணப்பர் வளர்ந்து வில் தொழில் பயிலத் தொடங்குகிறார்.  நல்ல நாள் குறித்து விழா எடுத்து விற்கலை பயிலத் தொடங்குவது வேடர் பழக்கம்.  அந்த இடத்திலும் சேக்கிழார்

‘‘ வேடர் தம் கோமான் நாகன்

வென்றிவேள் அருளால் பெற்ற

சேடரின் மிக்க செய்கைத்

திண்ணன் வில் பிடிக்கிறான்

என்று கூறிக் கண்ணப்பர் தோற்றத்திற்கு முருகப்பெருமானே காரணம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறார்.

சிறுத்தொண்டர் வரலாற்றில் சரவணத் தனயர்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் சிறுத்தொண்டர் சிவபெருமானுக்குத் தம் ஊறிலாத தனிப்புதல்வன் தன்னை அரிந்து அங்கு அமுதாக ஊட்டியவர்.  திருச்செங்காட்டங்குடியில் ஞானசம்பந்தர் காலத்து வாழ்ந்;த பெருமகனார். பல்லவ மன்னர்க்குத் தண்டு போய்  வடபுலத்து வாதாபியை வென்ற படைத்தலைவர் அடியார்களை வழிபடும் மிகச் சிறியராய் நின்ற பணிவால் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார்.  ‘‘ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத் தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே ஏதுமின்றி அமைத்த கறி’’ அமுது ஆக்கி இறைவனுக்குப் படைத்த சிறுத்தொண்டர் பெருமையை ‘‘வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லேன்’’ என்று பட்டினத்தார் பாராட்டுகிறார்.  இவர் தொண்டின் திறங்கண்ட சிவபெருமான் உமை அம்மையாரோடும் சரவணத்துத் தனயராகிய முருகப் பெருமானோடும் காட்சி கொடுத்ததாகக் காரணம் என்ன? சிறுத் தொண்டரின் தொண்டு-பிள்ளைக்கறி சமைத்த பெருஞ்செயல்-அவர் ஒருவரால் மட்டும் நிறைவேறியதன்று.  அவர், அவர் மனைவி, சீராளனாகிய அவர் மகன் ஆகிய மூவரும் கூடி நின்று ஒருங்கே நிறைவேற்றிய பெரும்பணி ஆகும்.  எனவே மூவர்க்கும் காட்சி கொடுக்கும் முகத்தான் மூவரும் கூடிய ஒருவராக அம்மையுடனும் முருகப் பெருமானுடனும் கூடிய நிலையில் சிவனார் காட்சி கொடுத்தருளினார்.

 சோமாஸ்கந்த மூர்த்தம் சத், சித்து, ஆனந்தம் ஆகிய மூன்றையும் காட்ட வல்லது.  சத் என்பது இறைவன்: சித் என்பது சத்தி, உமை: ஆனந்தம் என்பது முருகன்.  எனவே பேரின்ப வாழ்வாக முருகப்  பெருமான் இருக்கும் பெற்றியை இது எடுத்து இயம்புகிறது.

முருகப்பெருமானைச் சேக்கிழார் இங்கு’’சரவணத்துத் தனயர்’’ என்று குறிப்பிடுகிறார்.  நாணல்புல் செறிந்து சூழ்ந்த பொய்கையில் தோன்றிய காரணம் பற்றிச் சரவணபவன் என்னும் பெயர் முருகனுக்கு உண்டாயிற்று.  ‘‘சரவணத்தின் வெறிகமழ் , கமலப் போதில் வீற்றிருந்தருளினானோ’’ என்பது கந்தபுராணம் .  மேலும் சரவணபவ என்பது முருகப் பெருமானுக்குரிய ஆறெழுத்து மந்திரம் ஆகும்.   இங்கு ச-மங்களம், -ஒளி, கொடை, -சாத்வீகம், -போர், பவன்-தோன்றியவன்.  மங்களம், ஒளி, சாத்வீகம் , வீரம் முதலிய உயர்த்த பண்புகளுடன் தோன்றியவன் முருகன் என இத்தொடர்க்குப் பொருள் உரைப்பர்.

சரவணன் என்பது சிவபெருமானையும் திருமாலையும் குறிக்கும் பெயர் என்றும், முருகன் அவ்விருவர் இயல்யையும் கொண்டவன் என்றம் திருச்செந்தூர்ப் புராணம் கூறுகிறது. (. ரா. முருகவேள்)

‘‘வென்றி நெடுவேல் மைந்தர்’’(3746) என்றும் சேக்கிழார் முருகப்பெருமானை இப்புராணத்தில் அழைக்கின்றார்.

முருக நாயனார் வரலாற்றில் அன்பன்

அறுபத்து மூன்று  நாயன்மார்களில் முருக நாயனார் முருகனின் திருப்பெயரைத் தாங்கியவர்.   திருப்புகலூரில் ஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்தவர்.  பெரும் புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி, நந்தவனம் அமைத்து மலர்கள் எடுத்துப் பலவகை மாலை கட்டிக்கொடுத்துச் சிவபெருமானுக்குச் சாத்தி வழிபாடு செய்யும் தொண்டு நெறியினர்.  அவரை அறிமுகப்படுத்தும்போது செக்கிழார்

‘‘ஞான வரம்பின் தலை நின்றார் நாகம் புனைவார் சேவடிக்கீழ்

ஊனமின்றி நிறைஅன்பால் உருகும் மனத்தார் முருகனார்’’ (1026)

என்று அறிமுகப்படுத்துகிறார் .  நிறை அன்பால உருகும் மனம் உடையவர் முருகனார்.  முருகு என்ற சொல்லிலேயே உருகு என்ற ஒலிநயத்தை நாம் உணர்கிறோம்.

குமரகுருபரதாச சுவாமிகள்(பாம்பன் சுவாமிகள்)

‘‘முருகு லாம் நறிய முருகு

முருகு கொடி என முருகு

முருகு முசுலக முருகு

முருகு றாதுமன முருகு’’

என்னும் பாடலில் முருகுக்குரிய பலபொருள்களைக் கூறுகிறார். திருவிழாவில் உலாவும் நல்ல, இளமைப் பருவம் உடைய முருகு என்னும் திருப்பெயர் உடையாய், (என்னைக்) கொள்வாயக! என்று மலர்களின் மணமும் அழகும் மொய்க்கின்ற உலகத்தில் துன்பத்தின் உருகுகின்ற பிறப்பானது இனியும் பொருந்தாமல் மனமே! உருகுவாயாக ! என்பது இந்தச் செய்யுளின் பொருள். (.ரா. முருகவேள்)

மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் அல்லவா? முருகு என்று உருகும் மனந்தான் நம்மை உய்விக்கும் என்பதைச் சேக்கிழார் அன்பால் உருகும் மனத்தார் முருகனார் என இங்கு விளக்குகிறார். முருகனார் ஆண்டவன் பெயராக மட்டுமன்றி அடியார் பெயராகவும் இருக்கும் இயல்பையும் காண்கிறோம்.

சண்டேசர் வரலாற்றில்:  சேந்தன்

 ‘‘மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க, வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டப் பெருமானுக்கு அடியேன் ‘‘ என்று சுந்தரரின் திருத்தொண்டத் தொகை சண்டேசரின் சரிதத்தைப் பேசுகிறது.  சண்டேசர் சோழ நாட்டில் திருச்சேய்ஞலூர் என்னும் ஊரில் தோன்றிய அந்தணச் சிறுவர் .  இவர் இயற்பெயர் விசாரசருமர். இவர் இளமைப்பருவத்தே மணலால் சிவலிங்கம் அமைத்துப் பசுவின் பாலால் திருமஞ்சனம் ஆட்டி வழிபாடு செய்து வந்ததைப் பலநாளும் அறிந்த இவர் தந்தையார் ஒரு நாள் நேரில் கண்டு அவரை அடித்துத் திருமஞ்சனத்துக்குரிய பாலையும் இடறிவிட்டதால் தந்தை என்றும் பாராமல் அவர் காலை வெட்டி வீழ்த்தினார்.  இறைவன் உடன் தோன்றி ‘‘நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய் அடுத்ததாதை இனி உனக்கு நாம்’’ என்று பணித்தருளினான்.  பிறகு அவருக்குக் கொன்றை மாலையைச் சூட்டித் தொண்டர்க்குத் தலைவனாக்கித் தான் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகஎன்று கூறிச் சண்டீசப்பதம் கொடுத்தருளினான்.  அது முதல் அவர் சண்டீசர் ஆனார்.  இவர் வரலாற்றை ஞானசம்பந்தர் முதலான நால்வர் பெருமக்களும் கூறியுள்ளனர். தோத்திரம் மட்டுமா?

‘‘அரசனடிக்கு அன்பர் செய்யும் பாவமும் அறமதாகும்

பரனடிக்கு அன்பிலாதார் புண்ணியம் பாவமாகும்

வரமுடைத் தக்கண் செய்த மாவேள்வி தீமையாகி

நரகினிற் பாலன் செய்த பாதகம் நன்மையாய்த்தே’’

என்று சிவஞான சித்தியார் என்னும் சாத்திரநூலும் சண்டேசர் புகழைப் பேசுகிறது.

இத்தகைய புகழ்மிக்க அடியாராகிய சண்டேசர் தோன்றிய ஊரான செய்ஞலூர் பற்றியறிமுகம் செய்யும் சேக்கிழார்.

‘‘பூந்தண் பொன்னி  எந்நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு

வாய்ந்த மண்ணித் தென்கரையில் மன்ன முன்னாள் வரை கிழிய

ஏந்தும் அயில்வேல் நிலைகாட்டி, இமையோர் இகல்வெம்பகை சேந்தன் அளித்த திருமுறையோர் மூதூர்  செல்வச் சேய்ஞலூர் கடக்கும்” (1211)

என்று பாடுகிறார்.   சேய் என்பது முருகப் பெருமானைக் குறிக்கும்.  ‘‘சேயோன் மேய மைவரை உலகம்’’ என்பது தொல்காப்பியம்.  முருகப் பெருமானாகிய சேய்-சேந்தன் அளித்த மூதூர் சேய்ஞலூர்’’சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை’’ என்று கந்தரலங்காரம் முருகப் பெருமானைச் சேந்தன் என அழைக்கிறது. இங்குச் சேக்கிழார் சேந்தன் என முருகப் பெருமானை அழைக்கிறார்.  முருகப் பெருமான் கிரவுஞ்ச மலையாக நின்ற அசுரனை அழித்துக் கூரிய வேலின் சிறப்பினைக் காட்டி தேவர்கள் துயரைப் போக்கியவன் என்பதைச் சேக்கிழார் இங்கு விளக்குகிறார்.  தாருகனை அழித்துச் சூரனை வதைக்கும் முன்னர்ச் சேய்ஞலூரை உளதாக்கிச் சிவனை முருகன், வழிபட்டதாகக் கந்தபுராணம் குமாரபுரிப்படலம் கூறுவதையும் காணலாம்.  இமையோரின்-தேவர்களின் துயரையே போக்கிய முருகப்பெருமான் இம்மையில் இருக்கும் நம் துயரைப் போக்காமலா இருப்பான்?

முருகப் பெருமான் சிவனாரின் சேய்- மைந்தன்.  அவன் அளித்த ஊர் சேய்ஞலூர். இந்த ஊரில் சிவபக்தியால் சிவனாரால் மைந்தனாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சண்டேசர் தோன்றினார் என்பதையும் சேக்கிழார் இங்குச் சொல்லாமல் சொல்கிறார் அல்லவா?


Thinnappan, SP.      Cekkilar kanda Sevvel       (Murugan in

Sekkilar’s Periyapuranam) In: Consegration Souvenir Magazine, Sri Thandayuthapani Temple, Kulalumpur, (Malaysia) (1998) pp 54-58 (Tamil)














                         சிலம்பும் செவ்வேளும்

நகரத்தார் மரபினாராகக் கருதப்படும் கோவலன் கண்ணகி ஆகிய இருவரையும் தலைவன் தலைவியராகக் கொண்டு அவர்களின் வாழ்க்கையை விளக்கும் காப்பியம் சிலப்பதிகாரம் ‘‘நெஞ்சை துள்ளும் சிலப்பதிகாரம் என்ற ஓர் மணியாரம் படைத்த தமிழ்நாடு’’ என்று பாரதியாரால் பாராட்டப்படும் இக்காப்பியம் சேரமன்னர் இளங்கோ அடிகளால் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகும். இக்காப்பியமே  தமிழில் தோன்;றிய முதற்காப்பியம் என்றும், வரலாற்றுக்காப்பியம் என்றும், குடிமக்கள் காப்பியம் என்றும், இயல், இசை , நாடகம் மூன்றையும் பேசும் முத்தமிழ்க் காப்பியம் என்றும், பெண்ணின் பெருமை பேசும் காப்பியம் என்றும் , உரையிடையிட்ட  பாட்டுடைச் செய்யுள் கொண்ட காப்பியம் என்றும், சமயப்பொறையுடைய காப்பியம் என்றும் அறிஞர்கள் பாராட்டுவார்கள். இக்காப்பியம் சோழநாட்டின் தலைநகரமாகிய பூம்புகாரில் தொடங்கி, பாண்டிய நாட்டுத் தலைநகரமாகிய மதுரையில் முக்கிய நிகழ்ச்சிகளைப் பெற்ற, சேரநாட்டின் தலைநகரமாகிய வஞ்சி நகரில் நிறைவேறுகின்றது. இத்தகைய காப்பியத்தில் நகரத்தார்களின் குலதெய்வமாக விளங்கும் முருகப்பெருமான் இடம்பெறும் இயல்பை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிலப்பதிகாரத்தின் முதல் காதையாகிய மங்கல வாழ்த்துப்பாடலில் காப்பியத் தலைவனாகிய கோவலனை இளங்கோ அடிகள் அறிமுகம் செய்கின்ற போது பூம்புகார் நகரத்துப் பெரும் செல்வ வணிகராகிய மாசத்துவான் என்பவரின் மகன் என்றும், பதினாறு ஆண்டு வயதுடையவன் என்றும் கூறிய பின்னர் அவன் முருகப்பெருமான் போன்று அழகுடையவன் என்ற புகார் நகரத்துப் பெண்களெல்லாம் பாராட்டிப் பேசுவதாகக் கூறியுள்ளார்.  அவ்வரிகள் வருமாறு:      

      மண் தேய்த்த புகழினான் மதிமுக மடவார் தம்

பண் தேய்த்த மொழியினர் ஆயத்துப் பாராட்டிக்

கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கிக் காதலால்

கொண்டு ஏத்தும் கிழமையான்: கோவலன் என்பான் மன்னோ

இவ்வரிகளில் இளங்கோஅடிகள் பூம்புகார் நகரத்து இளம் பெண்கள் தங்கள் குழுவில் கோவலனைக் கண்ணாரக் கண்டு (கண்டேத்தும்) செவ்வேள் என்று பாராட்டிக் காதலால் தம் மனத்துள் கொண்டு போற்றுகிறார்கள் என்று கூறுகிறார். இங்கு முருகப்பெருமானை ஆசிரியர் செவ்வேள் என்று குறிப்பிடுகிறார். வேள் என்றால் தலைவன் என்று பொருள் .  பழங்காலத்தில் வேள் என்பது அழகுத் தெய்வமாக விளங்கும் மன்மதனையும், ஆற்றல் மிக்க முருகனையும் குறிக்கும். இவர்களை வேறுபடுத்த கரு என்ற அடைமொழியைச் சேர்த்தக் கருவேள்(அதாவது கருப்பு நிறம் உடைய) மன்மதனைக் குறித்தனர்.  சிவப்பு நிறம் மிக்க முருகனைக் குறிக்க செம்மென்ற அடைமொழியைச் சேர்த்து செவ்வேள் என்று அழைத்தனர்.  செவ்வேள் என்ற தொடர் முருகப் பெருமானின் சிவப்பு நிறத்தையும், செம்மை ஆகிய தலைமைச் சிறப்பையும் உணர்த்தும் வகையால் கோவலனுக்கு உவமையாக வந்துள்ளது.  ‘‘தாமரை புரையும் காமர் சேவடி’’ என்று வரும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடல் முருகப் பெருமான் செந்நிறம் உடையவன் என்பதை உணர்த்தும்.  ‘‘மணங்கமிழ் தெய்வத்து இளநலம் காட்டி’’என்னும் நக்கீரரின் திருமுருகாற்றுப்படைத் தொடர் வாயிலாக அழியா அழகும், மாறா இளமையும் , இறைமைத் தன்மையும் உடையவன் முருகப்பெருமான் என்பதை நாம்  அறிகிறோம்.  இத்தகைய இயல்புகளையெல்லாம் எண்ணித்தான் காப்பியத் தலைவனாகிய கோவலனைச் செவ்வேளோடு இளங்கோ அடிகள் உவமைகாட்டிப் பேசுகிறார்.

வள்ளி

திருமனத்தின்போது கோவலனைச் செவ்வேள் என்று கூறியதற்கேற்பக் காப்பியத் தலைவியாகிய கண்ணகியை அவள் தன் கற்பின் ஆற்றலை மதுரையில் வெளிப்படுத்திவிட்டுச் சேரநாட்டுக்கு வரும் நுழைவாயிலில் உள்ள மலைப்பகுதியில் உள்ள குன்றக் குறவர்கள் பார்க்கும் போது வள்ளி போலக் காட்சியளிப்பதாக இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார் வரிகள் பின்வருமாறு.

‘‘குருவி ஓப்பியும் கிளி கடிந்தும்

குன்றத்துச் சென்று வைகி

அருவி ஆடியும் சுனை குடைந்தும்

அலவற்று வருவேம் முன்

மலை வேங்கை நறு நிழலின்

வள்ளி போலவீர்! மனம் நடுங்க,

முலை இழந்து வந்து நின்றீர்:

யாவீரோ ‘‘என

குன்றக் குறவர்கள் கண்ணகியைப்பார்த்துக் கேட்கின்றனர்.  அதற்கு வேங்கை மரத்து அடியில் நின்ற கண்ணகி அவர்மீது சினம் கொள்ளாமல் தன் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுகிறாள்.  ‘‘மதுரை நகரும் பாண்டியனும் அழியுமாறு வலிய தீவினை வந்து என் வாழ்வில் குறுக்கிட்டது.  அங்கே என் கணவனைப் பறிகொடுத்து இங்கே வந்து இப்படி நிற்கின்றேன்’’ என்று சுருக்கமாகக் கண்ணகி  அவர்களிடம் சொல்கிறாள்.  இதனைக் கேட்ட குறவர்கள் ‘‘இவள் போன்று ஒரு தெய்வம் இதுவரை நம் குலத்துக்குக் கிடையாது ‘‘ என்று கூறிக் கண்ணகியைத் தெய்வமாகக் கருதி வழிபாடு செய்கின்றனர்.  இங்கே வள்ளி ‘‘ குறவரின் குலமகள்’’ என்பது குறிப்பிடத்தக்கது.

வேலின் வெற்றி

பிறகு குறவர்களெல்லாம் கூடி அவர்களுக்குரிய குறிஞ்சித் தெய்வமாகிய முருகப்பெருமானின் வேலினைத் துதிக்கும் குரவைப்பாட்டு பாடுகின்றார்கள். இவர்கள் பாடும் பாடல்களில் முருகப்பெருமானைப் பற்றிய பல செய்திகள் இடம் பெறுகின்றன.  முதலில் கடலின் நடுவே மாமரமாகி நின்ற அசுரனைக் கொன்ற முருகப் பெருப்பெருமானின் வேலினைப்பாராட்டும் வகையில் மூன்று பாடல்கள் உள்ளன.

அவற்றுள் முதலாவது பாடல் வருமாறு:

‘‘சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்,

ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே

பாரிரும் பௌவத்தின் உள்புக்குப் கண்டொருநாள்:

சூர்மா தடித்த சுடரிலைய வெள்வேலே!’’

இப்பாடலின் கருத்து வருமாறு

சீர்கெழுமிய திருச்செந்தூர், திருச்செங்கோடு, திருவெண்குன்றம், திருவேரகம் ஆகிய தலங்களை விட்டு எந்நாளும் பிரியாதவன் முருகப்பெருமான் , பண்டொரு நாள் இப்பூமியைச் சூழ்ந்திருக்கும் கடலின் நடுவிடத்தே.  புகுந்த சூரனாகிய மாமரத்தைப் பிளந்து வீழ்த்திய ஒளியுடைய இலையுடன் விளங்கும் வெற்றிவேல்.  அவன் கையிலிருக்கின்ற இவ்வேல் தானேயன்றோ! (இங்கே  நான்கு முருகத்தலங்கள் சொல்லப்படுவதை நினைவிலிறுத்துக)

இரண்டாவது பாடல்

‘‘அணி முகங்கள் ஓர் ஆறும், ஈராறு கையும்

இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே

பிணிமுக மேற்கொண்டு அவுணர் பீடழியும் வண்ணம்

மணி விசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே:

இப்பாடலின் கருத்து வருமாறு

 அழகிய திருமுகங்கள் ஓர் ஆறும், கைகள் ஈர் ஆறும், உடையவன் அவன், தனக்கு வேறு ஒப்பின்றி , விளங்கும் அவற்றைத் தான் ஒருவனாகவே பெற்றவன் அவன் மயிலாகிய ஊர்தியிலே சென்று , அவுணரின் ஆற்றல்கள் அழியுமாறும் அழகிய வானகத்தின கோமான் போற்றுமாறும், பகைவர்களை அழித்த வெற்றிவேல், அவன் கைவேல் தானேயன்றோ!

மூன்றாவது பாடல்

‘‘சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்

திருமுலைப்பால் உண்டான் திருக்கை வேலன்றே

குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடுவேலே!

இப்பாடல் கருத்து வருமாறு:-

சரவணப் பொய்கையிலே, தாமரை மலராகிய பள்ளியறைக்கண் , தாய்மாராகிய கார்த்திகைப் பெண்டிர் அறுவரின் திருமுலைப்பாலினை உண்டு வளர்ந்தவன் அவன் , வளரும் மலையினைச் கூடிவரும் அவுணனின் மார்பினைப் பிளந்து கிரவுஞ்சத்தை அழித்த நெடுவேல், அவன் கைவேல் தானே யன்றோ!

மேற்கொண்ட மூன்று பாடல்களும் முருகப் பெருமானின் வேலின் வெற்றியைப் போற்றுபவை வேல் என்பது தீமையை வென்று நன்மையை நிலை நாட்டும் ஞானத்தின் அடையாளமாகும் ஞானம் என்னும் அறிவு ஆழம் , அகலம், கூர்மை ஆகிய முப்பெரும் பண்புகளைக் கொண்டது.  திருவாசகம் சிவபுராணத்தில் உள்ள ‘‘ஆழ்ந்தகன்ற நுண்ணியனே’’ என்றும் தொடருக்கு ஏற்ப வேலும் ஆழம், அகலம் கூர்மை ஆகியவற்றைக் கொண்டது. இத்தகைய வேலைக் கொண்ட முருகப் பெருமான் சரவணப்பொய்கையில் கார்த்திகைப் பெண்டிர் அறுவர் பாலூட்ட வளரந்தவன். ஆறுமுகமும், பன்னிரண்டு கையும் கொண்டவன். திருச்செந்தூர், திருச்செங்கோடு, திருவெண்குன்றம், திருவேரகம் ஆகிய நான்கு தலங்களிலும் நீங்காதிருப்பவன் கடலில் ஒளிந்து கொண்டு நின்ற சூரனை வென்ற வெல் அவனுடைய கைவேல்.  மலையாக நின்ற அசுரன் மார்பினைப் பிளந்ததும் அந்த வேல் இந்திரனும் போற்ற மயிலேறி அசுரரை வீழ்த்திய வேல் என்று வேலின் வெற்றியை இளங்கோ அடிகள் குன்றக் குறவர் வாயிலாகப் போற்றுகிறார்.

குன்றக் குரவையில் வரும் ஏனைய பாடல்களின் வழியாக முருகப்பெருமான் ஆலமர் செல்வனும், கைலை மலைத் தலைவனுமாகிய சிவபெருமானுக்கும், மலைமகளாகிய பார்வதிக்கும் மகனாகவும், குறவர்தம் குலமாகளாகிய வள்ளியம்மைக்குக் கணவனாகவும் விளங்கியவன் என்ற செய்தியும் தெரிய வருகின்றது.  முருகப் பெருமானுக்குரிய மாலை கடப்பம்பூ மாலை என்பதையும் இளங்கோ அடிகள் குறிப்பிடுகின்றார்.



முடிவுரை

இவ்வாறு சிலப்பதிகாரத்தில் கோவலனை அறிமுகப்படுத்தும் இடத்தில் செவ்வேள் என்ற குறிப்பும், குன்றத்தில் குறவர்காணும் தெய்வக் கண்ணகியை வள்ளியாகக் காணும் காட்சியும், குறவர் வழிபாட்டில் முருகப் பெருமானின் வேலின் வெற்றியும் அவன் உறவு நிலையும், ஊர்தியும் , ஆற்றலும் பேசப்பட்டுள்ளன.  ‘‘ சிலம்பு கண்ட செவ்வேள்’’ பற்றிய செய்திகளைப் படித்து அவன் சேவடிகளை வணங்கி அருளும், பொருளும் பெற்று வாழ்வோமாக!

74    Thinnappan, SP , Cilappthikaarattil cevveeL in Thannnirmalai Thandayuthapani Temple Mahakumbabishekam    Souvenir , ,    November 2011














திருநாவுக்கரசர் தேவாரம் தயாமூல தன்மம்

திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட

திருநாவுக்கரையன்றன் அடியார்க்கும் அடியேன்- சுந்தரர்


திருநாவுக்கரசு வளர்திருத் தொண்டின் நெறி வாழ

வருஞானத் தவ முனிவர் வாகீசர் வாய்மைதிகழ்

பெருநாமச் சீர் பரவலுறுகின்றேன் பேருலகில்

ஒருநாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன்


திருத்தொண்டின் நெறி வாழ வந்த திருநாவுக்கரசர் கி.பி. ஏழுhம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.  அவர் பாடிய பாடல்களுக்கே தேவராம் என்று பெயர்.  திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் திருக்கடைக்காப்பு எனவும், சுந்தரர் பாடிய பாடல்கள் திருப்பாட்டு எனவும் அழைக்கப் பெற்றன.  கூற்றாயினவாறு விலக்ககலீர் என்ற பதிகம் பாடியவுடன் சிவபெருமான் திருநாவுக்கரசு எனப்பெயர் கொடுத்து அழைத்தான் .  திருஞான சம்பந்தப்பெருமான் அப்பரே என்று அழைத்தார்.  எனவே ஆண்டவனாலும் அடியவராலும் பெயர்சூட்டப் பெற்ற பெருமையுடையவர் திருநாவுக்கரசர். திலகவதியார் தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயாவினால் சைவத்திற்கு மீட்டெடுக்கப்பட்டவர்.

திருநாவுக்கரசர் பாடிய பதிகங்கள் 312, பாடல்கள் 3066. அவற்றுள் பண்ணமைந்த பாடல்கள் நான்காம்  திருமுறையாகவும், திருக்குறுந்தொகைப் பாடல்கள் ஐந்தாம் திருமுறையாகவும், திருத்தாண்டகப் பாடல்கள் ஆறாம் திருமுறையாகவும் உள்ளன.  திருமுறை என்னும் சொல்லுக்குத் திருநாவுக்கரசர் தேவாரம் வழிப்பொருள் காண்போம்.  திருவே என் செல்வமேஎன்று சிவபெருமானை அழைக்கிறார் நாவுக்கரசர்.  முறை முறை நெறிகள் வைத்தார்என்றும் அவர் கூறுகிறார் .  எனவே சிவபெருமான் நம் வாழ்வியலுக்குப் பயன்படும் வகையில் அருளாளர்கள் வாயிலாக வகுத்த நெறிமுறைகளே திருமுறைகளாகும். திருமுறையே வாழ்க்கையின் நெறிமுறை என்பது தானே நம்ஆய்வரங்கின் கருப்பொருள்.

திருஞானசம்பந்தர் தாம் பாடிய பாடல்களைத் திருநெறிய தமிழ்என அழைக்கிறார்.  திருநாவுக்கரசரோ தமிழோடிசை பாடல்எனத் தாம் பாடிய பாடல்களைக் குறிப்பிடுகிறார்.  சுந்தரரோ நல்விசை ஞானசம்பந்தன் நாவினுக்கரையன் பாடிய நற்றமிழ் மாலைஎனக்  கூறுகிறார்.  நற்றமிழ் மாலையே நம் தேவாரம் திருத்தாண்டகம் திருநாவுக்கரசர் தமிழுக்களித்த நன்கொடை .  எனவேதான் திருநாவுக்கரசர் தாண்டகவேந்தர், தாண்டகச்சதுரர் எனப் புகழப் பெறுகிறார் . திருத்தாண்டகத்தில் வரும் ஒரு தொடர்தான் தயாமூலதன்மம் என்பது.


தயா மூலம் தன்மம்

தயா மூலதன்மம்  என்னும் சொற்றொடர் தயா, மூலம், தன்மம் என்னும் மூன்று சொற்களால் இணைந்த ஒரு சொற்றொடர். இம்மூன்று சொற்களும் வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியைச் சார்ந்த சொற்கள்.  முதலில் இவற்றின் பொருளைக் காண்போம்

தயா, தயை, தயவு என்னும் மூன்று சொற்களும் ஒரு பொருளுணர்த்தும் ஒத்த நிலையுடைய சொற்கள்.  இவை அருள், கருணை , அன்பு பக்தி, பரிவு இரக்கம் என்னும் பொருளை உணர்த்தும் இயல்பின.  ‘‘தாயிற் பெரிதும் தயாவுடைய தம் பெருமான்’’ (திருவாசகம் 13. 3) என்றும், ‘‘நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவன தத்துவனே ‘‘(திருவாசகம்1.61) என்றும் , திருவாசகம் தயா என்னும் சொல்லைக் கையாள்கின்றது.  ‘‘தாயிற்சிறந்த தயா’’ என்பதையும் ‘‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து’’ (திருவாசகம் பிடித்தப்பத்து) என்பதையும் ஒப்பிட்டுப் பரிவு, அன்பு, கருணை எனப் பொருள் தந்து நிற்பதைக் காணமுடிகிறது இறைவனை தாயிற் சிறந்த தயாவன தத்துவனாகக் கூறும் மணிவாசகர் தயாபரனாகவும் இறைவனை அழைக்கிறார்.  ‘‘தானேயாகிய தயாபரன் எம்மிறை’’ (திருவாசகம்2. 96) என்பதைக் காண்க. இறைவன் கருணைக்கடலாகக் காட்சி அளிப்பதை இவ்வரிகள் சுட்டுகின்றன.

மூலம் என்பது அடி, வேர், கிழங்கு, ஆதி, வழி, வாயில், பிரதானம், காரணம் என்று பல பொருள் உணர்த்தும் ஒரு சொல்லாகும்.  சிறுபஞ்சமூலம் என்று பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக விளங்கும் நூலின் பெயரில் மூலம் என்பது வேர்களைக் குறிக்க விளங்குகிறது.  ‘‘மூலவோலை மாட்சியிற் காட்ட’’ என்னும் பெரியபுராணத் தொடரில் ஆதியானது என்ற பொருள் உள்ளது.  ‘‘இது அவன்  மூலமாகக் கிடைத்ததுஎன்னும் பேச்சுவழக்குத் தொடரில் மூலம் என்பது வழி, வாயில், என்னும் பொருளுடன் விளங்குகிறது.  ‘‘மும்மை சால் உலகுக்கெல்லாம் மூலமாகிய மும்மலம்’’ என்று வரும் கம்பராமாணத் தொடரில் (வாலிவதை71)  மூலம் என்பது அடிப்படை, தலைமை என்னும் பொருளுடன் திகழ்கிறது ‘‘மூலமாகிய மும்மலம்’’ (திருவாசகம் 2.111), ‘‘மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்’’ (அப்பர் தேவாரம்845.9) என்னும் தொடர்களில் மூலம் என்பது அடிப்படை காரணம் என்னும் பொருளில் அமைந்துள்ளது.

தன்மம் என்னும் சொல் தர்மம் எனப்பொருள்படும் அறத்தைக் குறிப்பதாகும்.  புத்த மதத்தினர் போற்றம் மும்மணிகளில் ஒன்று தன்மம் என்பதை மணிமேகலை(30.3) சுட்டுகின்றது.  ‘‘புத்த, தன்ம , சங்கம் என்னும் முத்திறமணியை மும்மையின் வணங்கிஎன வருதல் காண்க.

தயா  மூல தன்மம் என்னும் சொற்றொடருக்கு அருள்வழி அமைந்த-அருளை அடிப்படையாகக் கொண்ட- அறநெறி எனப்பொருள் கூறலாம் . அருளறம் என்னும் சொற்றொடரைப் புத்த பகவானைக் குறிக்கப் பயன்படுத்தும்போது மணிமேகலை(5.75)’’இன்பச் செல்வி மன்பதை எய்த அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்’’ எனச் சுட்டுகிறது


தயா மூல தன்மம் என்னும் சொற்றொடரைத் தமிழுலகுக்கு முதன் முதலில்  அறிமுகப்படுத்திய பெருமை அப்பரடிகளாரைச் சாரும்.  அவர் தம் திருத்தாண்டகத்தில் இத்தொடரை இருமுறை கையாளுகிறார்.  திருமழபாடித் திருத்தாண்டகத்தில் ஆறாவது பாடலாக வரும் பாடல் இது.

சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்

செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்

புனந்திருந்தும் பொல்லாத பிண்டி பேணும்

பொறியிலியேன் தனைப்பொருளா ஆண்டு கொண்டு

தனந்திருத்து மவர் திறத்தை யொழியப் பாற்றித்

தயாமூல தன்மவழி எனக்கு நல்கி,

மனந்திருந்தும் மழபாடி வயிரத் தூணே

என்றென்றே நானரற்றி நைகின் றேனே

இப்பாட்டில் தயா மூல தன்ம வழியை இறைவன் தமக்குத் தந்து மனந்திருத்தினான் என்று திருநாவுக்கரசர் பெருமான் கூறுகிறார்.

திருநள்ளாறு என்னும் தலத் திருத்தாண்டகத்தின் ஆறாவது பாடலிலும் தயா மூல தன்மம் என்னும் தொடர் வருகின்றது.

குலங்கெடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக்

குலவரையன் மடப்பாவை இடப்பா லானை

மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட

மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையினானைச்

சலங்கெடுத்துத் தயாமூலதன்மம் என்னும்

தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்

நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப் பெற்றுய்ந்த வாறே

வஞ்சனை நீக்கித் தயா மூல தன்மம் என்னும் தத்துவத்தை வழங்கும் வள்ளலாக இறைவன் இருப்பான் என்பதை நாவுக்கரசர் இங்கே கூறுகிறார். இந்த இரு பாடல்களின் மூலம் நாம் உணர்வதென்ன? தயா மூல தன்மம் என்பது ஒரு நெறி-தத்துவம் -என்பதையும் , அந்நெறி ஆண்டவனால் அப்பர் பெருமானுக்கு  நல்கப்பட்ட ஒன்று என்பதையும் , அவ்வழி நின்று வணங்கியவர்களுக்கெல்லாம் சிவபெருமான் நலங்கொடுப்பார் என்பதையும் அறிந்து கொள்கிறோம்.

திருப்பனந்தாள் மடத்தின் பதிப்பான திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் (தலமுறை) என்னும் நூலில், திருமழபாடித் தாண்டகத்தின் கீழ், ‘‘தயாமூலதன்ம வழி- தருமங்களுக்கெல்லாம் மூலமாகிய அன்பு என்னும் அறம்’’ என்று அடிக்குறிப்புள்ளது.  அறங்களுக்கெல்லாம் ஆணிவேராக இருப்பது அன்பு என்பதை உணர்த்துவது தயாமூலதன்மம் என்னும் கருத்து இங்கே பெறப்படுகிறது.

தருமபுர ஆதீனத்தின் வெளியீடான திருத்தாண்டக உரையில் திரு. சொ. சிங்கார வடிவேலன் அவர்கள் ‘‘தயா மூல தன்மம் அன்பும் அன்பிற்கு அடிப்படையான அறமும், என்னும் புதிய சொற்றொடரை அடிகள் வாக்கிற் காண்கிறோம். அன்பும் அறமுமாகிய பணிவுகள் செறிந்த மெய்ம்மையைத் தயா மூல தன்மம் என்னும் நறுஞ்சொற்றொடரால் ஆண்டு விளக்குகிறார்’’ என்றும், ‘‘தயா மூல தன்ம மென்னும் தத்துவத்தின்’’ ‘‘தயா மூலதன்ம வழி’’ இவ்விடத்துச் சைவசித்தாhந்தச் செந்நெறியைக் குறிக்க இத்தயா மூல தன்மவழி என்னும் சொற்றொடரை அடிகள் கனிந்து அருளியுள்ளமை காணலாம்.  மனிதர்களாகப் பிறந்த நாம் அன்பும் அறமும் கொண்டு உயர்ந்தால் அதனினும் சீரிய வாழ்வு உண்டோ?  அவ்வாழ்வினை அடையும் நெறியே இத்தயா மூல தன்மம் என்னும் முப்பெருங்சொற்களிலே அடங்கி இருக்கிறது.   உலகு இந்நெறி நின்றால் பூசல் உண்டோ?  அமைதியன்றோ உலகிற் செழிக்கும்! அவ்வமைதி உலகை, மாந்தர் இனத்தை வாழ்விக்கும் மெய்ம்மருந்து . அதனை உலகுக்கு எடுத்துரைக்கும் தமிழ்மையை இத்திருக்கவியிற் காணலாம்’’ என்றும் கூறுகிறார்.  இவர் கருத்துப்படி அன்பும், அடிப்படையான அறமும்தான் தயா மூலதன்மம் என உணர்கிறோம்.

அன்பும் அறமும் ஆகிய பண்புகள் செறிந்த மெய்ம்மைதான் தயா மூல தன்மம் என்னும் தத்துவம் என்கிறார் இவர். மேலும் தயா மூல தத்துவம் என்பது சைவ சித்தாந்தச் செந்நெறியைக் குறிப்பது என்னும் கருத்துடையவராகவும் இவர் திகழ்கிறார்.

மேற்கண்ட பதிப்புரையில் திரு. அருணைவடிவேல் முதலியார் அவர்கள் ‘‘தயா மூல தன்மம் என்னும் தத்துவம் இரக்கமே அடிநிலை அறம் என்னும் உண்மை.  அஃது இறைவனை உணர்ந்தோர்ககே கைகூடும் என்றவாறு.  இத்தொடரைப் புத்தர் முதலியோர் வாளாவாய்ப்பறையாகச் சாற்றுதல் பயனுடைத்தாகாது என்றவாறு’’ என்று கூறி (பக் 156) ‘‘தயா மூல தன்மம் என்னும் வழி, உண்மையில் இறைவன் உண்மை உணர்ந்து அவன் வழி நிற்றலே என்க ‘‘ எனக் குறிப்பிடுறார்.  (பக்297) அப்பர் வரலாற்றாராய்ச்சியும் தேவாரத் திருமுறையும் என்னும் நூலாசிரியர் திரு. கு. நடேசக் கவுண்டர் ‘‘அட்டபுட்பங்களில் கூறப்பட்ட கொல்லாமையும் அருளுமே சைவ சமயத்தின் வேராக உள்ளவை.  ஆதலால் அவனடியார்கள் நின்ற திருத்தொண்டின் நெறியை அப்பர்; தயா மூல தன்மம் என்று அறியப்படும்’’ என்று கூறுகிறார். இதனடிப்படையில் பார்க்கும் போது தயாமூல தன்மம் என்பது சமண, புத்த சமயத்துடன் தொடர்புடைய ஒன்று என்றும் , அது இரக்கத்தையே அடிநிலையாகக் கொண்ட அறம் என்றம் அது உண்மையில் இறைவன் உண்மை உணர்ந்து அவன் வழி நிற்றலே என்றும் அதனைத் திருத்தொண்டின் நெறி என அழைக்கலாம் என்றும் அறியமுடிகின்றது.

இவற்றையெல்லாம் நோக்கும் போது தயா யுமூல தன்மம் என்பது அன்பு, அருள் (கருணை , இரக்கம்) , அறம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்று என்று சொல்ல வேண்டியிருக்கிறது.  அறத்iதை இல்லறம், துறவறம் என இரண்டாகப் பகுத்து இல்லறத்திற்கு இன்றியமையாத பண்பு அன்பு என்றும், துறவறத்திற்கு விழுத்துணையாகும் பண்பு அருள் என்றும் கூறிய வள்ளுவர் அருள் என்பது அன்புத்தாய் பெற்ற குழந்தை என்றும் தெளிவுபடுத்திக் காண்பர்.  அன்பு என்பது தொடர்புடையாரிடத்துக் கொள்ளும் காதல் என்றும் அருள் என்பது தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை என்றும் பிரித்துக் காண்பார் பரிமேலழகர்.

மக்கள் அறநெறி நின்று வாழ வேண்டும். இல்லறநெறி நின்று துறவறநெறிக்குச் செல்லுதலை வலியுறுத்துகிறது சைவம்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்,

எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை

கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

என்னும் ஞானசம்பந்தப்பெருமானின் திருமுறைப்பாடல் இதற்குச் சான்று. இல்லறநெறியில் நிற்கும்போது அன்பைக் கடைப்பிடித்தொழுகி வையத்து வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும்.  பின்பு படிப்படியாக மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிராகக் கருதும் மாண்பினதாகிய அருளை மேற்கொண்டு துறவற நெறிக்குச் செல்லுதல் வேண்டும். இத்தகைய நெறி நின்றார் பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் ஆகக் கருதப்படவார்.  நீடுவாழ்தலாகிய வீடுபேறு பெறுகின்றவராகவும் திகழ்வர்.

தயா மூல தன்மம் என்னும் தொடரில் முதன்மைச் சொல்லாக இருப்பது அருள் என்பதே ஆகும்.  ‘‘காக்கை குருவி எங்கள் சாதி’’ என்று கருதி எல்லா உயிர்களையும் ஓம்பி மேம்படுகின்ற இயல்பினதாகிய அருள் தருகின்ற செல்வம் தான் செல்வத்துட் செல்வமாகக் கருதப்படும்.  பலவழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும் அருள்தான் ஒருவனுக்கு உற்ற துணை என்பது வள்ளுவர் கண்ட முடிவு .  அருளுடையார் மருளுடைய உலகம்(நரகம்) புகார்: மன்னுயிர் ஓம்பி அருளாள்கின்றவர்களுக்குத் தன்னுயிர் அஞ்சும் தீவினைகள் இல்லை.  மேலும் அல்லல் (துன்பம்) என்பதே அருளாள்வார்க்கு இல்லை.  இதற்கு உலகம் சான்று பகரும் என்பார் திருவள்ளுவர்.  பொதுவாக, அருளாளர்கள் என்ற சொல்லும்போது இருவகைப்பொருள் சொல்லாம்.

அருள் என்னும் கருணைப் பண்பினைத் தம் வாழ்விற் கடைப்பிடித்து ஒழுகுகின்ற சான்றோர்கள் என்பது ஒரு பொருள். இறைவனின் பெருங்கருணைத் திறமாகிய அருள்-திருவருள் பெற்ற சான்றோர்கள் என்பது மற்றொரு பொருள்.

அல்லல் என் செயும் அருவினை என்செயும்,

தொல்லை வல்வினை தொந்தந்தான் என்செயும்

தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு

எல்லையில்லதோர் அடிமை பூண்டேனுக்கே

என்னும் அப்பர் பெருமானின் திருமுறைப் பாடல் அருளாளர்கள் துன்பம் போக்கி எந்நாளும் இன்பமுடன் இருக்கும் இயல்பினர் என்பதைக் கூறுகின்றது

அருளுடையார் வீடு பேறு பெறுவர்

‘‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு’’

என்னும் குறள் வாயிலாக இது வலியுறுத்தப் பெறுகின்றது. அருளில்லார்க்கு உய்தி என்பதே இல்லை.  அருளில்லாமல் செய்யப்படுகின்ற அறம் ஞானமில்லாதவன் மெய்ப்பொருள் காண்பதை ஒத்ததாகும் .  எனவே அருள்வழி என்பது அல்லவை நீக்க உதவுவது: துன்பம் போக்கி இன்பம் தருவது: வீட்டின் பத்தையும் வழங்குவது இத்தகைய அருள்நெறியே தயா மூலதன்மம் என்னும் தகைமை நெறி

சமணர்கள் , புத்தர்கள் வலியுறுத்திய தயாமூல தன்மம் என்பது இவ்வுலக உயிர்களிடத்தில் இரக்கம் கொண்ட பெருங் கருணை செலுத்துகின்ற இயல்பு- அருள் ஒன்றனையே குறிக்கும்.  ‘‘ அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்’’ என்னும் குறட் கருத்து இதனை வலியுறுத்துகிறது.  ஆனால் சைவ சமயச் சான்றோராகிய நாவுக்கரசர் கண்ட தயா மூல தன்மம் என்பது எல்லாவுயிர்களிடத்தும் கருணை செலுத்துகின்ற இயல்பு (அருள்) தோன்றுவதற்கு அடிப்பைடயான இறைவனுடைய திருவருளையும் இணைத்துப் பேசும் .  மன்னுயிரனைத்தையும் தன்னுயிராக் காண்கின்ற  மாண்புக்கு மூலமாக இருப்பது இறைவனது திருவருளே என்று கருதும் மாண்பினர் சைவசமயச் சான்றோர் .  எனவேதான் தாயுமானார்,

எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்

தெய்வ அருட்கருணை செய்யாய் பராமபரமே

என்று வேண்டுகிறார்.  வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய இராமலிங்க அடிகளாரும்’’அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை’’ எனக் கொள்கை முழக்கஞ் செய்தது இதன் விளைவினால் ஏற்பட்ட ஒன்றே ஆகும்.  இறைவனின் திருவருட் பயன்தான் எல்லா உயிர்களிடத்திலும் பெருங்கருணை செலுத்த வைக்கும் இயல்பினது என்பதை விளக்குவதுதான் தயாமூல தன்மம் என்னும் தத்துவம்.  இதனைத்தான் சிவபெருமான் நாவுக்கரசருக்கு நல்கி அருளினான்.  இவ்வழியின்றிக் கொல்லாமையை மட்டுமே கொண்டு மறைந்தொழுகி வாழுவது மனிதப் பண்பாகுமே அன்றி இறைவழி காட்டும் இனிய பண்பாகாது என்பதையும் தயா மூல தன்மம் , என்னும் கோட்பாடு வலியுறுத்துகிறது.

தயா மூல தன்மம் என்னும் தொடர் உலகத்திலுள்ள அறங்களுக்கு எல்லாம் அடிப்படை:

தயை-அருள் என்பதையும் சுட்டி நிற்கும்.  ஈதலை அறமாகக் கொண்டாலும் அதற்கு அடிப்படையாக அமைவது வறியார் மீது கொள்ளுகின்ற இரக்கம்-கருணையே ஆகும்.  அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை என்று கொண்டாலும் அதற்கு அடிப்படைப் பண்பாக இருப்பது அருட்குழவியின் தாயான அன்பு என்பதே ஆகும்.  துறவறத்தையே அறமாகக் கொண்டாலும் அதற்கு அடிப்படையாக இருப்பது மன்னுயிர் ஓம்புதலாகிய அருளே ஆகும்.  ‘‘அறஞ்செய விரும்பு’’ என்னும் சொல்லுக்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது அருள் என்னும் கருணையே அறவோர் என்பவர் யார்?


அத்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுகலான்

என்பார் வள்ளுவர்.  இங்கு அறவோர்க்குரிய இலக்கணத்திலும் அருட்குணமே முன்னிற்பதைக் காண முடிகிறது.  அரசியலிலும் கூடக் கண்ணோட்டம் என்பது ஓரறமாகக் கருதப்படுவதையும் காண்க.  எனவே அறநெறி நோக்கில் காணும்போது தயா மூல தன்மம் என்னும் சொற்றொடர் உலகிலுள்ள அறநெறிகளுக்கு எல்லாம் அடிப்படையாக அமைவது. தயாதான்-அருள்தான் என்பதையும் சுட்டி நிற்கிறது.

தயா மூலதன்மம் என்றும் தொடரில் வரும் தயா சுட்டும் அருளை -திருவருள் எனக் கொண்டால் இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல். அருளல் என்னும் ஐந்தொழில்களையும் நிகழ்த்துவதற்கு அடிப்படைக் காரணம் அவன் ஆன்மாக்கள்பால் கொண்ட பெருங்கருணை என்னும் சைவசித்தாந்தக் கோட்பாட்டையும் இத்தொடருடன் இணைத்துக் காண இயலும்.  ‘‘அருளது சக்தியாகும் ‘‘ என்னும் சிவஞானசித்தியார் தொடருடன் இணைத்துப் பார்க்கும் போது உலகத் தோற்றத்துக்கு அடிப்படையே சிவபெருமானின் தயா- அருள்தான் என்பதையும் உணரலாம்.  எனவே தன்மங்களுக்குள் மூல தன்மம் அவன் சக்திதான் என்பது வெளிப்படை.  எனவேதான் சக்திக்கு அறம் வளர்த்த நாயகி என்று ஒரு பெயர் வந்தது போலும்.

வீடுபேறு பெறுதற்குரிய அறநெறிகளில ; முதன்மையாக இருப்பது-மூலமாக இருப்பது-மூலதன்மமாக இருப்பது இறைவனது திருவருள் தான்.  ‘‘அவனருளால் அவன் தாள் வணங்குதல்’’ ‘‘அவனருளே கண்ணாகக் காணுதல் ;’’ என்னும் திருமுறைத் தொடர்கள் இதனை வலியுறுத்தும்.  எனவேதான் இறைவனுக்கு, ‘‘தயாபரன்’’ என்னும் திருப்பெயர் திகழ்கிறது.  இக்கருத்தையும் தயாமூலதன்மம் என்னும் தொடர் தருகிறது எனக் கூறலாம்.

தயாவும் (கருணையும் ) மூலதன்மமும் (அறநெறியும்)   உடையவன் இறைவன் .  அறவாழி அந்தணன் என்னும் திருக்குறள் தொடர் இறைவன் அறக்கடலாகவும் இரக்கத்தின் -அருளின் உருவமாகவும் இருக்கின்றார் என்பதை உணர்த்துகிறது.  அறமும் அருளும் இறைவனிடமுள்ள  இன்றியமையாப் பண்புகள். இறைவன் அறக்கடலாக இருப்பதால் உலக அறங்கள் எல்லாம் தோன்றுவதற்கும் அவனே காரணமாக இருக்கிறான்.  அதே போல் அருள் வடிவமாகவும் விளங்குகிறான்.  எனவே தாயமூலதன்மம் என்பது இறைவனின் பண்புகளை உணர்த்தும் ஒரு தொடர் எனவும் கருத இடமுண்டு.

‘‘அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்’’

என்பார் திருவள்ளுவர்.  இத்தகைய அறிவும் எப்போது பயன்படும் எனின் தயையுடன் கூடிய நிலையில் தான் என்பது வள்ளுவம்.


‘‘அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை’’

என்னும் குறள் வழியாக அறிவின் பயன் அருளுடன்-இரக்கத்துடன்-கருணையுடன் கூடி வாழ்வதே என்பது உணர முடிகிறது.  எனவே அறிவுடன் கூடிய வாழ்க்கை றி என்பது அருளுடன் இணைந்த ஒன்றே என்பதையும் தாயமூல தன்மம்  என்னும் தொடர் உணர்த்துகிறது.  இங்கே தன்மம் என்பது வாழ்க்கை நெறி என்பதைச் சுட்டும் இல்லற தர்மம் என்னும் தொடர் ஆட்சியையும் காண்க.

தயை ஒன்றிருந்தால் ஏனைய தர்மங்கள் எல்லாம் தாமாகவே வரும். ஆதலால் தயை என்னும் இரக்கப் பண்பினை ஏனைய அறங்களுக்கு வழிகாட்டியாகக் கொள்ளவும் இடமுண்டு. 

‘‘அறிவினை யாதெனில் கொல்லாமை

‘‘நல்லாறு எனப்படுவது யாதெனில் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி’’

என்னும் குறள்களால் எதிர்மறை முகத்தால் அறச்சொல்லுக்கு விளக்கந் தந்த வள்ளுவர்.

‘‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’’

என்னும் குறளில் உடன்பாட்டு முகத்தால் அறச்செயலை  விளக்ககின்றார்.

 கொல்லா நலத்தது நோன்மை

‘‘உற்றநோய் நோன்றல், உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு’’

என்னும் குறள்களில் தவத்திற்கு அடிப்படை அருள் என்பதை வள்ளுவர் விளக்குகிறார்  இவ்விளக்கங்களின் அடிப்படையில் காணும்போது தயா எனப்படும் அருள் எல்லா அறங்களிலும் எற்றம் தருவது: எனவே அது மூலதன்மமாகக் கருதப்படுகிறது என்று சொல்லமுடியும்.  ‘‘கொலைப்பாவம் விளைவிக்கும் துன்பம் ஏனைப்பாவங்கள் எல்லாம் கூடியும் விளைக்க மாட்டாதாம்.  கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும்’’ என்று பரிமேலழகர் தரும் விளக்கமும் இதற்கு அரண் செய்யும்.

ஆன்மாவுக்கு அறிவு, இச்சை இயல்பு.  ஒன்றில் இச்சை தோன்றுவது ஆன்மாவுக்கு அதன் மீதுள்ள தயை காரணமாகத்தான்.  எனவே ஆன்மாவுக்குள்ள இயல்புக் குணங்களில் ஒன்று தயை .  எனவே அது மூலதன்மமாக விளங்கும் இயல்பினதாக உள்ளது என்னும் கருத்தையும் தயா மூல தன்மம் என்னும் தொடர் தெரிவிக்கின்றது.

தயா மூலதன்மம் என்னும் தத்துவம் புத்த சமண சமயத்தில் ஓர் அறநெறிப்பண்பாகத் தோற்றம் கண்டது.  சைவ சமயத்தில் அஃது இறைநெறிப்பண்பாக மாற்றம் பெற்றது.  அது நம் வாழ்க்கை ஏற்றம் பெறுவதற்கு ஊற்றமாகவும் இலங்குகிறது.

Thinnappan, SP.  Daya:mu:la Dhanman (Grace is the

            Root     of all virtues)In : Malaya Arulneri Thirukkutta Coral Jubliee Celebration Souvenir,Ed. Mrs. D. Nadaraja & Others, ArulneriThirukkuttam, Kualalumpur, Malaysia (1991), 109-113 (Tamil).

-பன்னிரு திருமுறை ஆய்வரங்கம், திருமுறை மாநாட்டு வெளியீடு, வெள்ளிவிழா ஆண்டு. 2005














திருவாதிரைச்  சிறப்பு

                                                                                               

                சிவபெருமானை முழு முதற் பொருளாகக் கொண்டு வழிபடும் செந்நெறியே சைவ சமய நன்னெறியாகும்.  சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகக் கருதப் பெறுவது திருவாதிரை நட்சத்திரமாகும்.  சிவபெருமானுக்குரிய குணங்களை எட்டாகக் கூறும் திருக்குறள், ‘எண்குணத்தான்என்னும் கடவுள் வாழ்த்துக் குறள் (9) தொடருக்குப் பொருள் கூறும் பரிமேலழகர் தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பமுடைமை என இவ்வாறு சைவ சமயத்துட் கூறப்பட்டது என்று உரைப்பர்.  சிவபெருமானின் வடிவை நிலம், நீர், தீ, கற்று, விசும்பு, ஞாயிறு, திங்கள், ஆன்மா என எட்டு வகையாக, அட்ட மூர்த்தங்களாகத் திருமுறைகள் கூறும். சிவபெருமானின் வீரச் சாதனை புரிந்த தலங்களும் எட்டு. (கண்டியூர், கோவலூர், அதிகை, பறியலூர், விற்குடி, வழுவூர், குறுக்கை, கடவூர்)  எனவே சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய திருவாதிரையின் சிறப்பை மொழியியல் , அறிவியல், சோதிட இயல், இலக்கியம், சமுதாயஇயல், சமயம், பண்பாடு, தத்துவம் என்னும் எட்டுவகை நோக்கில் காண்பதே இக் கட்டுரையின் நோக்கம்.  மேலும் உலகியலில் ஒரு பொருளை அல்லது கட்டிடத்தைக் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு தென்மேற்கு ஆகிய எட்டுத் திசைகளிலிருந்து நோக்கினால் அதுதெளிவாகத் தெரியும். அது போலத் திருவாதிரையின் சிறப்பும் மேற்கண்ட எட்டுவகை நோக்கில் காணும் போது தெளிவுறும் என்பதில் ஐயமில்லை.

மொழியியல் நோக்கில் -

                திருவாதிரை என்னும் சொல்லின் அமைப்பு, பிறப்பு, பொருள் பற்றி விளக்குவது. மொழியியல் நோக்கு எனப்படும். திருவாதிரை என்னும் தொடர் திரு என்னும் அடைமொழியும் ஆதிரை என்னும் தலைச் சொல்லும் .இணைந்த ஒன்றாகும்.  ஆதிரை என்னும் சொல் ஆருத்ரா என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு என்று சென்னைப் பல்கலைக் கழகத் தமிழப் பேரகராதி கூறுகிறது.  ஆதிரை என்பது தமிழ்ச் சொல் என்று கருதுவாரும் உளர்.  திரு என்னும் அடைமொழிக்கு அழகு, தெய்வத்தன்மை, செல்வம் எனப் பல பொருள் உண்டு. ஆதிரை என்பது சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக இருப்பதால் திரு என்னும் அடைமொழி பெற்றுள்ளது எனக் கருதலாம்.  இருபத்தேழு நட்சத்திரங்களில் திரு என்னும் அடைமொழியடன் திகழ்வன இரண்டு . ஒன்று திருவாதிரை, மற்றொன்று திருவோணம்.  இவற்றுள் முன்னையது சிவனுக்கும், பின்னையது திருமாலுக்கும் உகந்தவை.  திரு என்னும் சொல்லும் ஆதிரை என்னும் சொல்லும் சேரும்போது இரண்டுக்கும் இடையே என்னும் உடம்படுமெய் எழுத்து தோன்றியுள்ளது.  இறைவனையும் உயிரைiயும் உடன்படுத்துகின்ற இணைக்கின்ற மெய் எழுத்து மெய்ப்பொருளாகிய இறையை இது குறிக்கின்றது.  அவனருளாலே அவன்தாள் வணங்குவது தானே இயல்பு.  இங்கு ஆதிரை என்பது பெயர்ச்சொல். இதனடியாக ஆதிரை நாச்சியார், ஆதிரைக்களி என்னும் தொடர்களும் அமையும். திருவாதிரை என்னும் சொல்லுக்கு 1. 27 நட்சத்திரங்களில் 6 ஆவது நட்சத்திரம், 2.  ஒரு விழா 3. நகரத்தார் மரபில் கொண்டாடப் பெறும் ஒரு சடங்கு என்று சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி பொருள் கூறும்.

அறிவியல் நோக்கில் -

                அறிவியலில் நட்சத்திரங்கள், கோள்கள் பற்றி ஆராயும் பிரிவு வானவியலாகும்.  இதனடிப்படையில் திருவாதிரை பற்றிய செய்திகைளத் தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் துணை கொண்டு பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பெயர்             . இது வானில் உச்ச ஒளியுள்ள ஓரையன் (      ) என்னும் நட்சத்திர மண்டலத்திலுள்ள பிர்காசமான நட்சத்திரங்களில் ஒன்று.  மஞ்சட் சிவப்பு நிறம் உடையது.  இதனுடனுள்ள மற்ற நட்சத்திரங்கள் வெண்ணிறம் உடையவை. எனவே இஃது எளிதில் கண்ணுக்குப் புலப்ப:டும்.  பார்ப்பதற்கு இது சில சமயம் செவ்வாய்க் கிரகம் போலத் தோன்றம்.  இது சூரியனைப் போல 1200 மடங்கு ஒளி உடையது.  சூரியனிடமிருந்து 325 ஒளி ஆண்டுத் தொலைவிலுள்ளது.  இது செண்டுக்கு 15 மைல் வீதம் சூரியனிடமிருந்து விலகிச் செல்வதாகக் கணிக்கப் பட்டுள்ளது.  இதில் சோடியம், மக்னீசியம், இரும்பு, இருப்பதாக இதன் நிறமாலை                 காட்டுகின்றது. இதனை இந்திய வானவியலார் பிரஜாபதி என்று கூறுவர்.



சோதிட நோக்கில் -

                சோதிட நோக்கில் திருவாதிரையின் பண்புகளைக் காணலாம். 27 நட்சத்திரங்களில் 6ஆவது நட்சத்திரமான திருவாதிரை மிதுன ராசிக்குரியது.  இதற்குரிய பெயர்ச் சிறப்பெழுத்துகள் கு, , , என்பன.

                திருவாதிரையில் ஜனித்தோர்கள்,

                                திறமாய்ப் பொய்யைப் பேசிடினும்

                                 மருவொன்றில்லா வாசகமாய் மதிப்பார்

                                                உலகோர், திடகாத்திர

                                 உருவாய் விளங்கிடுவோர், வறுமை

                                                உற்றே தரித்திரம்  எய்திடினும்

                                 பெருமையாளனைப் போலப் பேசிச்

                                                சமர்த்தராய்த் திரிகுவரே

என்று சோதிட அரிச்சுவடி என்னும் நூல் திருவாதிரையில் பிறந்தோர்ககுரிய இயல்புகளைக் கூறும். கீரத்தி, பொய் பேசுதல், மனோதைரியம், கோபக்குணம், இடம்பம்,சரீரபலம், சினேக பட்சம், பிடிவாதம்  முதலிய குணங்கள் இந் நட்சத்திரத்தில் பிறந்தோர்க்குண்டு என்பர்.

                பஞ்சாங்கங்களில் தீதுறு நட்சத்திரங்களில் ஒன்றாகத் திருவாதிரை கருதப் பெறுகிறது.  ஆதிரை பரணி கார்த்திகை ஆயிலியம் முப்புரம் கேட்டை, தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம் ஈறாறில், மாதனம் கொண்டார் தாரார், வழிநடை போவார் மீளார், பாயினில் படுத்தார் தேறார், பாம்பினில் வாய்த்தேரை தானேஎன்று பஞ்சாங்கங்களில் உள்ள பாடல் இதனைக் கூறும். மேலும்  திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய கோளறு பதிகத்தில் என்பொடு கொம்பொடாமைஎன்று தொடங்கும் இரண்டாவது பாடலில் குறிப்பிடப் பெறும் தீதுறு நட்சத்திரங்களில் ஒன்று திருவாதிரை என்பதும் கருதத் தக்கது.

                திருவாதிரை பற்றிய கதை ஒன்று அபிதான சிந்தாமணி என்னும் நூலில் உள்ளது. அது வருமாறு - பிரமன் சரசுவதியைப் படைத்துத் தான் புணரச் செல்லுகையில், சரசுவதி மான் உருக்கொண்டு ஓடினாள். பிரமனும் அவ்வுருக் கொண்டு தொடர்ந்தனன்.  தேவர் வேண்டுகோளால் சிவமூர்த்தி வேடுருக் கொண்டு ஆன்மானை எய்ய, அதனின்றும் ஒரு சோதி தோன்றி ஆதிரை நாளாயிற்று.  இக்கதையை ஒத்த ஒரு கதை கிரேக்கப் புராணத்திலும் இருப்பதாகக் கலைக் களஞ்சியம் கூறுகிறது.  

        ஓரையன் என்பவன் அழகும் ஆற்றலும் நிரம்பிய ஒரு வேடன். கடல் தேவனான் போசைடனின் மகன்.  ஈனோப்பியன் என்னும் அரசனுடைய மகள் மிரப்பி என்பவளை மணஞ் செய்ய விரும்பி அவளைத் தூக்கிக் கொண்டு போக முயன்றான்.  அதனால் ஓரையனை அரசன் மதுவருந்துமாறு செய்து கண்களைக் குத்திக் குருடாக்கினான்.  ஓரையன் தேவர் கம்மியனான ஹீப்பெஸ்ட்டஸ் உதவியால்  ஞாயிற்றை நோக்கிக் கண்களைப் பெற்றான். அதன்பின் அவன் வேட்டையாடி வரும் போது அப்பாலோ என்னும் தேவனுடைய தங்கை ஆர்ட்டிமிஸ்  என்பவள் ஓரையன் மீது காதல் கொண்டாள்.  இதனை அவள் அண்ணன் அறியான்.  ஓரையன் மீது அவன் அழுக்காறு கொண்டு கொல்ல முயன்றான்.  ஒருநாள் காட்டுவழியில் தங்கையுடன் செல்லும்போது ஓரையன் குளத்தில் குளிப்பதைக் கண்டு தன் தங்ககையை அவன் மீது அம்பெய்து கொல்லப் பணித்தான். அவளும் அவ்வாறு செய்து கொன்று விட்டாள். பிறகு அறிந்து பெருந்துயருற்றாள்.  காதலனை அவள் நாயுடன் வானத்தில் ஒரு நட்சத்திர மண்டலமாகச் செய்தாள்.  இதுதான் அக்கதை.

இலக்கிய நோக்கில் -

                திருவாதிரை பற்றித் தமிழ் இலக்கியங்களில் வரும் செய்திகளைத் தொகுத்துக் காண்பதே இலக்கிய நோக்காகும்.  தமிழ் இலக்கியத்தில் முதன்முதலாகப் பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்தில் திருவாதிரை  பற்றிய குறிப்பு வருகிறது. பரிபாடலின் 8ஆவது செய்யுளில் முருகப் பெருமான் உறையும் திருப்பரங்குன்றம் பற்றிப் பேசும்போது ஆதிரை முதல்வன்என்னும் ஒரு தொடர் வருகின்றது. இது திருவாதிரை நட்சத்திரத்திற்கு உகந்த தலைவனாகிய சிவபெருமானைக் குறிக்கும்.  பரிபாடலில் 11ஆவது செய்யுளில் பாவை நோன்பு பற்றிய குறிப்பு வருகின்றது. இதற்கு அப்போது அம்பா ஆடல் என்று பெயர். “வெம்பாதாக வியனில வரைப்பு”(இவ்வுலகம் வெம்மை நீங்குக) என்று வழிபடும் இந்த விழா தொடங்கப் பெற்றதைச் சுட்டும்போது மாயிருந் திங்கள் மறு நிறை ஆதிரை வரிநூல் அந்தணர் விழவு தொடங்கஎன்னும் அடிகள் வருகின்றன.  மார்கழி மாதத்தில் ஆதிரை நாளன்று இவ்விழா தொடங்கியது என்பது இதன் வழி நாம் அறியும் கருத்து.  கலித்தொகை என்பது சங்க இலக்கியங்களில் ஒன்று.  அதன் பகுதியாகிய நெய்தற்கலியில், “அரும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்தஎன்னும் தொடர் (கலி. 150-20) வருகின்றது. திருவாதிரைக் காலத்துச் சிவபெருமான் அணிகளை அணிந்திருப்பது போல அமைந்த ஒரு செண்பகமரம் பற்றிய குறிப்புப் பற்றியது இந்த தொடர்.  இங்கும் ஆதிரையான் என்பது சிவபெருமானைச் சுட்டி நிற்பதை அறியலாம்.

                மூவேந்தர்களைப் பற்றிய வெண்பா யாப்பில் பாடும் இலக்கியம் முத்தொள்ளாயிரம்.  இதன் கடவுள் வாழ்த்து வருமாறு -

                                                மன்னிய நாள்மீன்   மதிகனலி என்றிவற்றின்

                                                 முன்னம் படைத்த முதல்வனைப்   -பின்னரும்

                                                  ஆதிரையான் ஆதிரையான் என்றென்(று)  அயருமால்

                                                   ஊர்திரை நீரவேலி உலகு

நாள் , நட்சத்திரம், சந்திரன், சூரியன் முதலியவற்றைப் படைத்தவன் முதல்வனாகிய சிவபெருமான்தான். அவனை உலகம் ஆதிரையான், ஆதிரை நட்சத்திரத்துக்குகந்தவன் என்று கூறி மயங்குகிறதே ஏன்? என்று இப்பாடல் கேட்கிறது.  27 நட்சத்திரங்களையுமே படைத்தவன் சிவபெருமான் தானே.  அப்படி இருக்க அவனுக்குத் திருவாதிரை நட்சத்திரத்தை மட்டும் உரியதாக - உகந்ததாக ஆக்குவது ஏன்? இதனை எண்ணிப் பார்க்க வேண்டும்.  குணம் குறி கடந்தவன் சிவபெருமான். ஒருநாமம் ஓருருவம் இல்லாதவன்.  பிறவான் இறவானாகிய பெரியான். இது சிவபெருமானின் சொரூபநிலை.  இவன் பொருட்டுப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலையும் செய்ய உருவம் சொண்ட நாள் திரு ஆதிரை என்று கருதப்பெறுகிறது என்றும் இந்த நாளில் சிவன் கோயில்களில் பஞ்சகிருத்திய உற்சவம் நடத்துவர் என்றும் கலைக் களஞ்சியம் கூறும். நடராசப் பெருமானின் திருவுருவம் ஐந்தொழில் த்துவத்தைக் காட்டுவது என்பதை அனைவரும் அறிவர்.

                                                தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்,

                                                 சாற்றியிடும் அங்கியிலே      சங்காரம், - ஊற்றமாய்

                                                 ஊன்று மலர்ப்பதத்தே  உற்றதிரோதம் அம்முத்தி

                                                 நான்ற  மலர்ப்பதத்தே நாடு

என்று சாத்திர நூல் கூறும். எனவே நடராசப் பெருமானின் திருவுருவத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகத் திருவாதிரை கருதப் பெறுவது பொருத்தம் தானே? மேலும் தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கிய சிவபெருமான் முதன்முதல் உமை அம்மையார் காண நாட்டியம் ஆடினான்.  அம்முனிவர்கள் ஏவிய பாம்பு முதலிய பொருள்களைக் கையில் கொண்டு அவன் ஆடிய நடனம் திருவாதிரை நாளன்று நிகழ்ந்ததாகவும் கூறுவர்.  சிதம்பரத்தில் பதஞ்சலி வியாக்ரபாதருக்காக நடனக் காட்சி காட்டிய நாள் தைப்பூச நன்னாள் என்பதையும் அறிய வேண்டும்.


                மணிமேகலை என்னும் காப்பியத்தில் ஆதிரை பற்றிய குறிப்பு ஒன்றுள்ளது.  இது சைவ சமயச் சார்பு பற்றியதன்று.  மணிமேகலையில்  16 ஆவது காதை ஆதிரை பிச்சையிட்ட காதை என்பதாகும். ஆதிரை என்பது நகரத்தார் மரபைச் சாரந்த ஒரு பெண்ணின் பெயர். ஆதிரை என்பவள் பூம்புகார் நகரத்துச் சாதுவன் என்னும் நகரத்தார் வணிகன் மனைவி  தீயபழக்கம் காரணமாகப் பொருளிழந்த சாதுவன் கடல் கடந்து பொருள் தேடச் சென்ற இடத்தில் கலங்கவிழப் பெற்று நாக நாடு சென்று அங்கு அவர்களுக்கு அறிவுரை நல்கினான்.  அவன் நகர் திரும்பாததால் அவன் இறந்ததாகக் கருதி ஆதிரை தீப் புகுந்தாள்.  அவளைத் தீ சுடாமையால், கணவன் வரவைப் பற்றி அசரீரி சொல்லக் கேட்டுப் பின் கணவன் வரக் கண்டு கூடி வாழ்ந்தாள். மணிமேகலை அமுதசுரபியைப் பெற்றவுடன் அதில் யாரிடம் முதலில் பிச்சை ஏற்பது என்று எண்ணும்போது அவள் தோழி காயசண்டிகை என்பவள் சிறந்த பத்தினிப் பெண்ணாகத் திகழும் ஆதிரை நல்லாளிடம் முதலில் பிச்சை வாங்குவது சிறந்தது என்று சொன்னாள்.  அதற்கேற்ப மணிமேகலை ஆதிரையிடம் வந்து முதற்பிச்சை பெற்றாள்.  ஆதிரை, “பாரமடங்கலும் பசிப்பிணி அறுகஎன்று கூறிப் பிச்சையிட்டாள். பிறகு தான் அமுதசுரபியில் அன்னம் எடுக்க எடுக்கக் குறையாததாயிற்று.  மணிமேகலையும் மண்டிணி ஞாலத்து வாழ்வோரக்கெல்லாம் உண்டி கொடுத்து உயிர் கொடுத்தோள் ஆயினாள்.  இந்த ஆதிரையை நினைத்தே நகரத்தார் மரபினர் கன்னிப் பெண்களுக்குத் திருவாதிரை என்னும் சடங்கு - விழாக் கொண்டாடுகின்றனர். மார்கழித் திருவாதிரை நாளன்று கன்னிப் பெண்கள் கூட்டங் கூட்டமாக அண்டை வீடுகளுக்குச் சென்று கைகளில் வெள்ளிச் சட்டியுடன் சென்று மங்கல மகளிரிடம் ஆடி ஆடி வாரோம் அவரைக்காய் போடுங்கள், பாடிப் பாடி வாரோம் பாடவரங்காய் போடுங்கள் , கூடிக்கூடி வாரோம் கூட்டுக்காய் போடுங்கள்என்று பாடிக் காய்கறிகள் வாங்கி வந்து வீட்டில் கூட்டாஞ்சோறு சமைத்து ஆதிரையாள்கும்பிடுவார்கள்.  மணிமேகலைக்குப் பிச்சையிட்ட தம் மரபுப் பெருமாட்டியை இவ்வாறு இவர்கள் வழிபாடு செய்கிறார்கள். இந்தச் சடங்கு நடத்திய பெண்களே முழு மனிதர்களாகக் கருதப் பெறுவர்.  ஓரோவழி அவர்கள் இறந்தால் எரியூட்டுவர், இந்தச் சடங்குக்கு முன் இறந்தால் அவர்கள் புதைக்கப் பெறுவர்.


                திருஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பூம்பாவையை எழுப்புவதற்காகப் பாடிய பதிகத்தில் சைவசமயத் தொடர்பான பல விழாக்களைக் குறிப்பிட்டு , அவற்றைக் காணாது போதியோ பூம்பாவாய்”? எனக் கூறுகிறார். அங்கே கபாலீச்சுரம் அமiந்தான் ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்என்று ஒரு பாடலின் ஈற்றடி அமைந்துள்ளது. சைவ சமய விழாக்களில் ஒன்றாக ஆதிரைநாள் விழா, ஞானசம்பந்தர் காலத்தில் இருந்ததை நாம் உணர முடிகின்றது.


                திருநாவுக்கரசர் தேவாரத்தில் 4 ஆம் திருமுறையில் திருவாதிரைத் திருப்பதிகம் என்று ஒரு பதிகமும் (10 பாடல்கள்) உள்ளது.  அதற்குரிய பண் குறிஞ்சி. திருவாரூரில் கொண்டாடப்பட்ட திருவாதிரைத் திருவிழாவின் சிறப்பினை விரிவாக இப்பதிகம் விளக்குகிறது. இப்பதிகத்தின் ஒவ்வாரு பாடலும் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் என்னும் ஈற்றடி கொண்டது.


                                                நணியார் சேயார் நல்லார்     தீயார்  நாடோறும்

                                                 பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்

                                                 மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கடகு

                                                 அணியான் ஆரூர் ஆதிரை   நாளால் அது வண்ணம்

என்பது அந்தப் பதிகப் பாடல்களில் ஒன்று.


                திருவாசகத்தில் திருவெம்பாவையில் மார்கழி நீராடேல் ஓர் எம்பாவாய்என்று வருவதையும், திருவெம்பாவை திருவாதிரைத் திருநாளுடன் தொடர்புடைய ஒன்று என்பதையும் அனைவரும் அறிவர்.


                சேக்கிழாரின் பெரியபுராணத்தில் திருநாவுக்கரசர் புராணம் (1505), திருஞானசம்பந்தர் புராணம்(2398) ஆகிய புராணங்களில் திருவாதிரைத் திருநாள் பற்றிய குறிப்பு வருகின்றது.  திருப்புகலூரில் திருஞானசம்பந்தரைத் திருநாவுக்கரசர் திருவாரூரிலிருந்து வந்து சந்திக்கிறார். அப்போது சம்பந்தர் திருவாரூர்ச் சிறப்புப் பற்றி வினவ அதற்குத் திருநாவுக்கரசர் முன்னே குறிப்பிட்ட திருவாதிரைப் பதிகம் பாடி ஆதிரை நாள் சிறப்பைக் குறிப்பிட்டார் எனச் சேகிழார் கூறுகிறார்.

                               

                                மேவு திருவாதிரை நாள் வீதி

                                                விடங்கப் பெருமான் பவனி தன்னில்

                                தேவர்கள் முனிவர்கள் முன் சேவிக்கும்

                                                அடியார்களுடன்  சேவித்து

                                மூவுலகும் களிகூர வரும் பெருமை

                                                முறைமையெலாம் கண்டு போற்றி

                                நாவினுக்குத் தனியரசர்

                                                நயக்கும் நாள்......”


                                சித்தம் நிலாவும் தென்

                                                திரு ஆரூர் நகராளும்

                                மைத்தழை கண்டர் ஆதிரை

                                                நாளின் மகிழ் செல்வம்

                                இத்தகைமைத்து என்று

                                                என் மொழிகேன்   (1505)

என்று திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார்  இந்தப் பாடல்களில் சேக்கிழார் திருவாதிரை நாளில் திருவாரூரில் செய்யப்படும் வழிபாடுதான் உண்மையான செல்வம் என்று போற்றுகிறார்.  செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்என்றும் அருட் செல்வம் செல்வத்துட் செல்வம்என்றும் கேள்வியையும் அருளையும் திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். பக்திக் காலத்தில் செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமேஎன்று ஞானசம்பந்தர் பாடுகின்றார். வழிபாடுதான் சிறந்த செல்வமாகக் கருதப்பெற்றது. “மண்ணிற் பிறந்தார் பெறும் பயன், மதிசூடும் அண்ணலார்  அடியார்தமை அமுது செய்வித்தல், கண்ணினால் அவர் நல்விழாக் காணுதல்”. எனவே திருவாதிரை நாள் வழிபாடு சிறந்த செல்வமாக, மானிடப் பிறவியின் மாண்புறு பயனாக் கருதப்பட்ட நிலையை இங்கே காணுகிறோம்.


                திருவாதிரை நாளை ஒட்டிச் சைவ சமயச் செந்நெறிக்கு இரண்டு நூல்கள் கிடைத்துள்ளன.  ஒன்று திருப்பல்லாண்டு , மற்றொன்று கொடிக்கவி. முன்னையது தோத்திரம், பின்னையது சாத்திரம். திருப்பல்லாண்டு பாடியவர் சேந்தனார். இவர் சிதம்பரத்தில் விறகு வெட்டி விற்று வரும் லாபத்தில் நாள் தோறும் சிவனடியார்க்கு உணவிட்டுப் பின் உண்ணும் நெறியினர்.  ஒருநாள் இரவு நடராசப் பெருமானே சிவனடியாராக இவரிடம் சென்று களியுண்டு (கூழுண்டு) அந்தக் களியை மறுநாள் தம் திருமேனியில் காட்டிச் சேந்தனார் பெருமையை உலகுக்கு வெளிப்படுத்தினார். இந்த அற்புதம் அவரால் நிகழ்ந்ததோ என்று ஐயம் கொண்டவர்ககு ஐயம் நீங்கத் திருவாதிரை நாளன்று ஓடும் தம் திருத்தேரை அழுந்தச் செய்து சேந்தனார் திருப்பல்லாண்டு பாடத் திரும்பத் தேரை ஓடச் செய்தார் நடேசப் பெருமான். மன்னுயிர் அனைத்தையும் வாழ்த்தும் மாண்புடைய திருப்பல்லாண்டு - இறைவனை வாழ்த்தும் திருப்பல்லாண்டு எழுந்த நாள் திருவாதிரை நன்னாளே ஆகும். திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறையிலுள்ள பதிகம்.  எனினும் பஞ்சபுராணத்தில் ஒன்றாக வைத்துப் பாடப் பெறும் சிறப்புடையது.  திருவாதிரை நாளில் திருவாதிரைக் களி வைப்பதற்குரிய காரணமும் இப்போது விளங்கும்.

                               

                                அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை

                                 அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க        அவிழ்ந்த சடை

                                 வேந்தனார்க்கு இன்னமுத    மாயிற்றே மெய்யன்பில்

                                 சேந்தனார் செய்த செயல்” (53)

என்று திருக்களிற்றுப்படியார் சேந்தனார் பெருமையைச் செப்புகிறது.  கொடிக்கவி என்பது சைவ சித்தாந்த சாத்திரங்களில் ஒன்று. அளவால் மிகச் சிறியது. கட்டளைக் கலித்துறை ஒரு பாடலும் 3 வெண்பாக்களும் கொண்ட ஒரு சிறிய நூல். இதனை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியார். கி.பி. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தில்லைத் தீட்சிதர்களில் ஒருவர். இவர் மறைஞான சம்பந்தர் என்னும் வேளாளரைத் தம் குருவாகக் கொண்ட காரணத்தால் தில்லைத் தீட்சிதர்கள் இவரை ஒதுக்கி வைத்துவிட்டனர்.  இது பொறாது நடராசப் பெருமான் திருவாதிரைத் திருநாளில் கொடியேறாது தடைப்படுத்தித் தீட்சிதர்களிடம் அசரீரி வாயிலாக உமாபதி சிவாச்சாரியாரை அழைத்து வந்து கொடிக்கவி பாடுமாறு பணித்தனன்.  அதன்படி உமாபதியார் வந்து கொடிக்கவி பாடியதும் கொடியேறி விழா நடந்தது.  எனவே கொடிக்கவி என்னும் சாத்திர நூல் தோன்றுவதற்குத் திருவாதிரை நாள் காரணமாய் இருந்திருக்கிறது.  கொடிக்கவியில் உள்ள ஒரு பாடல் வருமாறு.

                                அஞ்சு எழுத்தும்  எட்டு  எழுத்தும்

                                                ஆறு எழுத்தும் நால் எழுத்தும்

                                 பிஞ்சு எழுத்தும் மேலைப்

                                                பெருவெழுத்தும்- நெஞ்சழுத்திப்

                                 பேசும் எழுத்துடனே பேசா

                                                எழுத்தினையும்

                                 கூசாமல் காட்டக் கொடி



சமய நோக்கில் -

                மாதங்களில் நான் மார்கழிஎன்பது கீதை வாக்கு. மார்கழி மாதம் திருவாதிரைத் திருநாளை ஒட்டிப் பத்து நாட்கள் திருவெம்பாவை கோயில்களில் ஓதப்படுகின்றன.  ஓதுவார்கள் இந்தப் பத்து நாட்களும் ஏனைய திருமுறைப் பாடல்களுக்குத் திருக் காப்பிட்டு வைத்துவிட்டுத் திருவெம்பாவை மட்டுமே ஓதுவர்.  திருவெம்பாவை என்பது பரிபாடலில் கூறப்பட்ட அம்பா ஆடலுடன் தொடர்புடையது. மார்கழியில் கன்னிப் பெண்கள் பாவை ஒன்று செய்து நாள்தோறும் காலையில் எழுந்து சென்று குளித்து விட்டு நோன்பு நோற்று வழிபடுவர்.  இந்த நோன்பின் நோக்கம் இரண்டு. ஒன்று நாடு செழிக்க நல்ல மழை பெய்ய வேண்டும், இன்னொன்று வீடு செழிக்க நல்ல கணவனை வாய்க்க வேண்டுதல் ( சிவனடியார்கள் தாம் கணவனாக வர வேண்டுதல்)

                பரிபாடலில் தைநீராடல் என்ற ஒன்று சுட்டப் பட்டுள்ளது.  அதன் வளர்ச்சியே மார்கழி நீராடல் என்று கூறுவர்.  கன்னிப் பெண்கள் காலையில் எழுந்து ஒருவரை ஒருவர் எழுப்பிச் சென்று பொய்கையில் சிவன் பெருமைபாடி நீராடுதலை இது சுட்டும். “மார்கழி நீராடேல் ஓர் எம் பாவாய்என்று திருவெம்பாவையில் இது பேசப்படுகிறது.

                திருவாதிரை சிவபெருமானுக்குகந்த விரதங்களில் ஒன்று.  மார்கழித் திருவாதிரை நாள் தொடங்கி, அடுத்த மார்கழித் திருவாதிரை வரை இருக்க வேண்டிய ஒன்று.  உபதேச காண்டத்தில் இதுபற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது.

                                செவ்வழிச் சின்மயச் சிதம்பரத் தலத்து

                                 இவ்வழி இந்த நோன்பியற்று வாரவர்

                                 வௌவழித் தன்மைய வினையின் நீங்கி மற்று

                                 உய்வழி அருங்கதி ஒடுங்குவார்களே


இவ்விரதம் இருந்து முருகன், வியாக்ரபாதர், விஜயன் சிறப்புற்றதாகக் கூறுவர்.

                திருவாதிரை அன்று தரிசனம் தரப்பெறும். தரிசனம் என்றால் திருவருட் காட்சி. நடராசப் பெருமான் தன் நடனக் காட்சியை முதலில் உமையம்மையாருக்குக் காட்டினார்.  பிறகு முப்பத்து முக்கோடி தேவர்களுக்குக் காட்டினார்.  முப்பத்து முக்கோடி தேவர்கள் பசுமாட்டில் உறைவதாக நம்புவதால்தான் தரிசனத்தன்று முதலில் பசு மாட்டிற்குக் காட்சி கொடுக்கப் படுகின்றது.  பிறகு பதஞ்சலி, வியாக்ரபாதர் வேண்டுகோளுக்காகத் தில்லையில் மண்ணுலகில் சிதம்பரத்தில் நடனக் காட்சி காட்டினார்.  பிறகு மாணிக்க வாசகப் பெருமான் அம்பலவாணர் காட்சியைக் காட்டினார். அவர் ஆன்மாக்களாகிய நமக்குக் காட்சி அளிக்குமாறு நடராசப் பெருமானை உமையம்மையாருடன் அழைத்து வந்து காட்சி கொடுக்கச் செய்கிறார்.  இதனால்தான் திருவாதிரைத் தரிசனம் என்று இவ்விழா அழைக்கப் படுகின்றது.  நடராசப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுறை அபிடேகம்  நடக்கும். திருவாதிரை நாள் அபிடேக நாட்களில் ஒன்று.

சமுதாய நோக்கில் -

                நகரத்தார் மரபினர் கன்னிப் பெண்களுக்குச் செய்யப்படும் திருவாதிரைச் சடங்கு இப்போது இரண்டு நாட்கள் மார்கழித் திருவாதிரை அன்றும், மறுநாள் அன்றும் நடத்தப் படுகின்றது.  முதல் நாள் அன்று மணிமேகலையில் கூறப்படும் ஆதிரை நல்லாளை வழிபாடு செய்து கொண்டாடப்படும். கன்னிப் பெண்கள் வீடு வீடாகச் சென்று மங்கல மகளிரிடம் காய்கறி வாங்கி வந்து கூட்டாகச் சோறு சமைத்து ஆதிரையாளைக் கும்பிட்டு வழிபடுவர்.  அடுத்த நாள் நடராசப் பெருமான் தரிசனக் காட்சியின் போது கன்னிப் பெண்கள் மணப்பெண்கள் போல அணி செய்யப் பெற்று ஊர்வலமாக வருவர்.  இது திருவெம்பாவை நோன்புடன் தொடர்புடைய ஒன்று.  நகரத்தார்கள் வழிவழிச் சைவர்கள் ஆதலினால் எங்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க, எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க”(திருவெம்பாவை 19) என இறைவனை வேண்டுவதாகும்.  கன்னிப் பெண்களுக்குச் செய்து வந்த இச்சடங்குகள் இப்போது அருகியே காணப்படுகின்றன.


                சேந்தனார்க்கு இறைவன் நடராசப் பெருமான் திருவாதிரை நாளில் களியுண்டு அருள் செயதது, திருப்பல்லாண்டு பாடச் செய்து தேரோடச் செய்தது ஆகிய நிகழ்ச்சிகள் சைவ சமயத்தில், இல்லாரும் உள்ளாரும் கீழ் நிலையிலுள்ளாரும் மேல் நிலையிலுள்ளாரும், திருவருளைப் பெறுவதற்கு எவ்விதத் தடையும் இலலை என்பதை உணர்த்துகின்றன.


                                                சாத்திரம் பல பேசும்  சழக்கர்காள்

                                                 கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்,

                                                 பாத்திரம் சிவனென்று பணிதிரேல்

                                                 மாத்திரைக்குள் அருளும் மாற் பேறரே

(திருநாவுக்கரசர் தேவாரம்)

 என்பது  திருமுறை வாக்கு.  சைவத்தில் கடையனுக்கும் கடைத்தேற்றம் உண்டு என்பதை இந்நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

                உமாபதி சிவாச்சாரியார் வாழ்வில் நடந்த கொடிக்கவி நிகழ்ச்சி குருவாகக் கொள்வதற்குக் குலத்தாழ்ச்சி உயர்ச்சி கருதுதல் பாவம் என்னும் கோட்பாட்டை வலியுறுத்துகிறது.  குருவாகக் கொள்ளத் தகுதி - அறிவும் அருளும் ஒழுக்கமும் பெற்ற தகுதிதான் பார்க்க வேண்டுமே ஒழியப் பிறப்பு வேறுபாடு கருதக் கூடாது. அப்பூதி அடிகளாகிய அந்தணர் திருநாவுக்கரசராகிய வேளாளரைக் குருவாகக் கொண்டு வழிபட்டதைப் பெரிய புராணம் காட்டவில்லையா என்ன?

தத்துவ நோக்கில் -  

தத்துவ நோக்கில் திருவாதிரை என்னும் தொடரைப் பார்ப்போம்.   இத்தொடரில்   திரு       திரை    என்னும்    மூன்று  சொற்கள் இருப்பதைக் காண முடிகிறது.  திரு என்பது சிவத்தை - இறைவனைக் குறிக்கும். “திருவே என் செல்வமேஎன்னும் திருநாவுக்கரசர் தேவாரத் தொடரை நோக்குக. திரு என்பது திருவருளையும் குறிக்கும். “சென்றடையாத திருவுடையான்i’ என்னும் திருஞானசம்பந்தர் தேவாரத் தொடரையும் கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்என்னும் பெரியபுராணத் தொடரையும் பார்க்க.    என்பது பசு,ஆன்மாக்களாகிய உயிர்களைக் குறிக்கும். திரை என்பது தடை - தளை, அதாவது ஆன்மா இறைவனை அடைய விடாது இடையில் இருக்கும் பாசம்.  எனவே திரு    திரை என்பது பதி, பசு, பாசம் என்னும் சைவ சித்தாந்தக் கோட்பாடு வலியுறுத்தும் முப்பொருள் உண்மையையும் உணர்த்துகிற்து.  நம் ஆலயங்களில் சிவலிங்கம், நந்தி, பலிபீடம் ( பதி, பசு, பாசம்) இருக்கும் வரிசை முறையும் திரு    திரை என்னும் சொற்களின் வரிசை முறையையும் உணர்த்துகிறது. எனவே திருவாதிரை என்பது நம் கோயில் தத்துவத்தின் உயிர் நாடியையும் சுட்டுவதாக உள்ளது.

                திருவெம்பாவையில் பாவை நோன்பு நோற்கும் பெண்கள் ஒருவர் எழுந்து மற்றொருவருடன் சேர்ந்து  ஒருவர் இருவர் மூவர் என்று கூட்டமாக ஒவ்வொருவர் இல்லத்திற்கும் சென்று அங்குத் துயின்று கொண்டிருக்கும் தம் தோழிமாரை எழுப்பிச் சென்று நீராடுவதைப் பார்க்கிறோம்.  அதாவது பக்குவம் பெற்ற ஆன்மா பக்குவம் பெறாத ஆன்மாவைத் தட்டி எழுப்பிக் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே, விண்ணுக்குஒரு மருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துருகுமாறு தூண்டுவதாகக் கொள்ள வேண்டும்.  இறுதியில் எல்லோரும் நீராடுவதை இறைவனின் திருவருட் பொய்கையில் திளைப்பதாகக் கருத வேண்டும்.

                திருவெம்பாவையின் தத்துவம் சக்தியை வியத்தது ஆகும்.  சக்தி என்பது திருவருளைக் குறிக்கும். பொய்கை திருவருட் சக்தியைக் குறிக்கும். மழை என்பதும் திருவருளையே சுட்டும்.  இறுதிப் பாடலில் எட்டுப் போற்றிகள் இடம் பெற்றுள்ள்ன.  முதல் இரண்டு  இறைவனின் தோற்றம், ஒடுக்கம் ஆகியவற்றை வாழ்த்துகின்றன.  அடுத்த ஐந்து போற்றிகளும் இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைப் போற்றுகின்றன.  எட்டாவது மார்கழி நீராடலை, வழிபாட்டுக்கு வழிவகுத்த மார்கழி நீராடலைப் போற்றுகிறது.  இறைவன் தொழிற்பட இயங்கும் நிலைதானே சக்தியடன் கூடிய நிலை? எனவே  இந்த நிலையை வியக்கும் போது போற்றும்போது சக்தியை வியத்ததாகின்றது.

                திருவெம்பாவைக்கு உரை எழுதிய பேராசிரியரகள் சிலர் மனேன்மணி முதலிய நவசக்திகளை எழுப்பி வழிபடுவதாகவும் திருவெம்பாவையின் முதற்பகுதிக்கு விளக்கம் தருவர்.

பண்பாட்டு நோக்கில் -

                திருவாதிரையை ஒட்டித் தோன்றிய திருவெம்பாவைத் திருவிழா தமிழகத்தைத் தாண்டிக் கடல் கடந்து தாய்லாந்து நாட்டுக்குச் சென்று கொண்டாடப் பெறும் நிலையைத் தான் பண்பாட்டு நோக்கு என்று கூறுகிறோம். “தாய்லாந்தின் திருவெம்பாவை திருப்பாவைத் திருவிழாபற்றி மலாயாப் பல்கலைக் கழகஇந்தியத் துறைப் பேராசிரியர் .சிங்காரவேலு அவர்கள் ஆய்வுகள் செய்துபல கட்டுரைகள் எழுதியுளளார்.  தாய்லாந்தில் கொண்டாடப் படும் திருவெம்பாவை திருப்பாவைத் திருவிழா அந்நாட்டு மொழியில் லோஜின்ஜாஎன்று அழைக்கப் பட்டது.  இதற்குப் பொருள் ஊஞ்சலை வலித்தல் என்பதாகும்.  இது ஊஞ்சல் திருவிழா. தைமாதத்தில் கொண்டாடப் பட்டது.  உயரமான ஊஞ்சலில் ஆடுபவர்கள் அருகே மூங்கில் கழியில் கட்டப்பட்ட பொற்கிழியைப் பல்லால் கடித்துப் பெறுவர்.  ஊஞ்சல் ஆடும் இடத்தின் அருகே சிவன், விஷ்ணு, கணேசர் கோயில்கள் உள்ளன.  ஊஞ்சல் ஆடும்போது சங்கம் ஒலிக்கப் பெறும் கோயில் சடங்குகளின்போது திருவெம்பாவை, திருப்பாவைப் பாடல்கள் அரச அந்தணரால் ஓதப்பெறும்.  இவ்விழாவின் நோக்கம் சிவன் நிலவுலகிற்கு வருகை தந்து வரம் அளிப்பதாகும்.  இதனைத் தாய்லாந்து அரசரே அவ்விழாவிற்கு வருகை தந்து சிவனாகக் காட்சி அளிப்பதன் மூலம் உணர்த்தினர். அவ்வாறு அரசர் சிவனாக வீற்றிருக்கும்போது பாவைப் பாடல்கள் ஓதப் பெற்றன.  மக்கள் மண்டியிட்டு வணங்கினர்.  அரசர்கள் அவர்களுக்குப் பரிசுகள் அளித்தனர்.  இப்பரிசளிப்பு சிவன் வரந்தருதற்கு நேராகும்.  ஊஞ்சல் விழாவிற்குப் பின் மழைத் திருவிழா நடக்கும். அப்போது ஊஞ்சலாடியவர்கள் மாட்டுக் கொம்பினைக் கையில் ஏந்தித் தண்ணீர்த் தொட்டியைச் சுற்றி நடனமாடிக் கொண்டு கொம்பில் நீரை நிரப்பி வாரி இறைப்பர்.  இந்த ஊஞ்சலாட்டமும் மழை நடனமும் திருவெம்பாவை - திருப்பாவை தொடர்படையன.  ஊஞ்சல் கிழக்கு மேற்காக ஆடுவது ஆதிரையானான சிவபெருமானைக் குறிக்கும்.  நீர்த்தொட்டியில் நீராடுவது திருவெம்பாவையில் இடம் பெறும் குடைந்து குடைந்து நீராடுதலை உணர்த்தும்.  இல்லங்கள் தோறும் எழுந்தருளுதல் என்னும் திருவெம்பாவைக் கருத்து அரசன் சிவனாக வருதலுடன் ஒத்துள்ளது.  அரசனின் இறைத் தன்மையை உணர்த்துகிறது. (சிங்காரவேலு. ) இந்த ஆய்வுக் கருத்துகள் திருவெம்பாவை தென்கிழக்கு நாடுகளில் பெற்ற செல்வாக்கை - பண்பாட்டுச் செல்வாக்கை நமக்கு நன்குணர்த்துகின்றன.

முடிவுரை-

                எண் குணத்தனாகவும் எண் வடிவினனாகவும் இலங்கும் இறைவனாகிய சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய திருவாதிரையையும் மொழியியல், அறிவியல், சோதிடம், இலக்கியம், சமயம், சமுதாயம், தத்துவம், பண்பாடு ஆகிய எண்கோணங்களில் நோக்கி ஆராயும் இக்கட்டுரை வழி திருவாதிரையின் சிறப்பு நன்கு வெளிப்படும்.  ஆதிரையின் பெருமையை அறிந்து ஆதிரையானாகிய சிவனை மனத்தால் நினைந்து, வாயால் துதித்து, மெய்யால் வழிபட்டு முன்னேறுவோமாக.


துணை நூல்கள் -

1. திருக்குறள்

2. சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி

3. தமிழ்க் கலைக் களஞ்சியம்

4. சோதிட அரிச்சுவடி

5. அபிதான சிந்தாமணி

6. பரிபாடல்

7. கலித்தொகை

8. முத்தொள்ளாயிரம்

9. திருஞானசம்பந்தர் தேவாரம்.

10. பெரியபுராணம்.

11. திருக்களிற்றுப்படியார்

12. உபதேச காண்டம்.

13. தாய்லாந்தில் திருவெம்பாவை திருப்பாவைத் திருவிழா

   பேராசிரியர் .சிங்காரவேலு.


Thinnappan, SP.  Greatness of Thiruvadhirai.  In:

                         Saivam Kandhaiya Commemoration Volume ,Malaya

                         Arulneri  Thirukkuttham, Kuala Lumpur (1994)  pp 92-99 (Tamil)



..... தொடரும்....

Dr S.P. Thinnappan

1 கருத்து: