வியாழன், 1 மே, 2014

அணிந்துரை - 5


இராம. வயிரவன்

புன்னகைக்கும் இயந்திரங்கள்


9-10-2008


இலக்கியத்திற்கு வடிவம் இரண்டு; ஒன்று கவிதை; மற்றொன்று உரைநடை. இருவகை வடிவத்திலும் இலக்கியம் படைத்து வரும் இளைஞர் திரு. இராம. வயிரவன். கவிதையில் மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டும் இயற்றும் இயல்பினர் இவர். உரைநடையில் சிறுகதைகள் படைத்துச் சிங்கைத்தமிழ்முரசுநாளிதல்களிலும்அமைப்புகள் நடத்தும் போட்டிகளிலும் உலவவிடுவதை நான் நன்கு அறிவேன். இவருடைய கவிதைகளும், சிறுகதைகளும் சிங்கையில் பல பரிசுகளுக்குத்தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.


     இராம. வயிரவன் படைத்த சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றினைபுன்னகைக்கும் இயந்திரங்கள்என்னும் தலைப்பிட்டு ஒரு நூலாக வெளியிடும் செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இத்தொகுப்பில் 14 கதைகள் இடம் பெற்றுள்ளன. ‘புன்னகைக்கும் இயந்திரங்கள்என்ற இத்தலைப்புப் பொருளாழமிக்க ஒன்றாகவும் திகழ்கிறது. மனிதர்கள் இக்காலத்தில் இயந்திரங்களாக மாறிக் குடும்ப வாழ்க்கை, நிம்மதி ஆகியவற்றைக் கெடுத்துக் கொண்டு வாழ்வதையும் இந்தத் தலைப்பு சுட்டி நிற்கும். மேலும் அறிவியலின் அற்புதத்தால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திர மனிதக்கருவிகளாக இயங்கும் ரோபோட்களையும் இத்தொடர் குறிக்கும். ‘ரோபோக்களின் ஆசீர்வாதம்என்பது இத்தொகுப்பின் இறுதிக்கதை. உள்ளத்தில் அன்பின்றி உதட்டில் புன்னகை சிந்தும் மனிதர்களை உண்மையில் அன்புடன் வாழும் மனிதர்களாக்கும் முயற்சி மேற்கொள்ளும் ஆய்வினை - அறிவியல் நோக்கில் விளக்கும்புன்னகைக்கும்இயந்திரங்கள்என்னும் கதையும் இத்தொகுப்பில் இடையில் இடம் பெற்றுள்ளது. இந்நூலிலுள்ள எல்லாக் கதைகளும்மனிதன் இயந்திரம் சார்ந்து வாழ்தல் படிப்படியாகக் குறைந்து மனிதன் சார்ந்து வாழ்தல் வேண்டும்என்னும் மையக்கருத்தினையே கொண்டுள்ளன. இதனையும் இத்தலைப்பு இயம்புகிறது எனக் கொள்ளலாம்.


     இத்தொகுப்பிலுள்ளகதைகள் சிங்கப்பூரிலுள்ள இந்தியக்குடும்பங்களில் இருக்கும் இயந்திரமயமான வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவற்றைக் கருப்பொருள்களாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. சிங்கை மண்ணின் மணம் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதையும் பார்க்கலாம். கணவன் மணைவி இருவரும் வேலைக்குப் போவதால் எழும் பிரச்சினை, வயது முதிர்ந்த பெற்றோர்களை மனத்தளவிலும், உடலளவிலும் பிரித்து வைத்து வாழும் இளம் தம்பதியர் நிலை, இல்லத்தில் பணிப்பெண்கள் வைத்துக் கொள்வதால் வரும் சிக்கல்கள், கிராமத்துப் பெண்களை மனைவிமார்களாக ஏற்றுக்கொண்டு படித்த நாகரீகப் பெண்ணைக் காதலிக்க ஏங்கும் இளைய ஆடவர்களின் இன்னல், இளையர்-முதியோர் தலைமுறை இடைவெளியினால் வரும் இடர்ப்பாடு, இங்கு வேலைக்கு வரும் வெளிநாட்டு இளையர்கள் மனப்போக்கால் எதிர்நோக்கும் இடையூறுகள், பணம் தேடும் வேகத்தில் பலவற்றை இழக்கும் மனிதைகளின் நிலை, பிறந்த ஊரைப்பற்றி நிற்கும் சிறந்த நினைவுகள், இல்லற வாழ்வின்றித்தனித்து வாழ்வதால் ஏற்படும் வெறுமை, பிள்ளைகள் பெற்றோருக்குச் சொல்லும் அறிவுரை, தைப்பூச விரதத்தை மேற்கொள்ளும் தமிழர்களின் தனித்தன்மை, கணினித்திறனாளர்கள்வேலை செய்யும் காட்சி, புத்தகப் பொதிசுமக்கும் சிறுவர்களின் போக்கு, அருமை நண்பன் வந்தபோது இல்லத்திற்கு அழைத்து விருந்து செய்ய இயலாத வருத்த நிலை, தொலை தூரத்துக்கப்பால் நடைபெறும் திருமணக்காட்சியை ஓரிடத்தில் இருந்து கண்டு வாழ்த்தும் - விஞ்ஞான விளைவால் ஏற்படும் வியத்தகு நிலை - இப்படிப்பலவற்றைஇத்தொகுப்பிலுள்ள கதைகள் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. இவற்றின் உயிரோட்டமாகஅன்பின் வழியது உயிர்நிலைஎன்பதும்மனிதநேயத்துடன் வாழவேண்டும் என்பதும் அமைந்துள்ளன. இஅயந்திரமயமானவாழ்க்கையை விட்டு இல்லறத்தில் இன்பம் காண வேண்டும் என்பது இங்குள்ள கதைகளின் அடிநாதம் ஆகும்.


இத்தொகுப்பிலுள்ள கதைகள் சில எழுத்துத்தமிழ் நடையில் உள்ளன; சில பேச்சுத்தமிழ் நடையில் முழுதும் அமைந்திருக்கக் காணலாம். சில இரண்டும் இணைந்து இயங்கக் காணலாம். பேச்சுத்தமிழ் நடையில் அமையும் போது பிறமொழிச்சொற்கள் - குறிப்பாக ஆங்கிலச் சொற்கள் வருவதைப் பாத்திரப் பண்பு கருதியும், எதார்த்தம் கருதியும் தவிர்க்க இயலாது என்பதையும் உணர முடிகிறது. உரையாடல்களாகக்கொண்டு செல்வதில் நல்ல உத்திகளை ஆசிரியர் கையாண்டுள்ளார். இந்நூலிலுள்ள கதைகளில் வருணனைத் திறன் சிறப்பாக உள்ளது. அறிவியல் சிறுகதைகள் எழுதும் சோதனை முயற்சியிலும் ஏடுபட்டு ஆசிரியர் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார். ஒருசில கதைகள் அளவால் நீண்டிருப்பதாலும், கதை முழுதும் ஒரே பேச்சுத்தமிழ் நடை இருப்பதாலும் படிப்பவர்க்குச் சலிப்பை ஊட்டுகின்றன. கதை மாந்தர்கள் நாம் காணும் நனவுலக மக்களாகவே பெரும்பாலும் உள்ளனர். அறிவியல் கதைகளில் இயந்திரங்கள் பாத்திரங்களாக வருகின்றன. ஆசிரியரே கதை நடத்துவதுடன், பாத்திரங்கள் பேசும் போக்கிலும் கதையைக் கொண்டு செல்லும் இயல்பினையும் காண முடிகிறது.


     இயந்திரமயமான வாழ்வினால் மனிதர்கள் இடர்ப்பட்டுக் குடும்ப வாழ்வினைக் கெடுத்துக் கொள்கிறார்களே என்னும் ஆசிரியரின் ஆதங்கம் கதைகளில் பளிச்சிடக் காணலாம். இதற்காண தீர்வுகளையும் ஆசிரியர் ஆங்காங்கே சுட்டிக் காட்டுகிறார். இவரது இந்த நூலை வாங்கிப் படித்துத் தமிழ் கூறும் நல்லுலகம் இவருக்கு ஊக்கமும் ஆக்கமும் ஊட்ட வேண்டுகிறேன். இவர் இன்னும் பல இலக்கியப் படைப்புக்களை எழுதி வெளியிட வாழ்த்துகிறேன்.



என் எஸ் நாராயணன்

பொன்விளையும் மண்மகள்

7-11-2004



                        சித்திரம், ஓவியம், படம், கிளவி, எழுத்து என்பன தமிழில் ஒரு பொருள் உணர்த்தும் பல

சொற்கள். தமிழர் சித்திரக் கலையில் பண்டைக் காலம் தொட்டுச் சிறந்து விளங்கினர்

என்பதற்குச் சங்க நூல்களான மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை. பரிபாடல், புறநானூறு

                        முதலிய இலக்கிய நூல்களில் இடம்பெறும் சித்திரமாடம் பற்றிய செய்திகளே சான்றாகும்.

சித்திரகூடம் என்னும் பெயரில் மண்டபங்கள் திருச்சியை அடுத்த திருவெறும்பூர், தில்லை

                        என்னும் சிதம்பரம் ஆகிய இடங்களில் இருந்தன என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள்

                        உள்ளன. கி.பி.600-630இல் காஞ்சிபுரத்தில் இருந்து அரசாண்ட பல்லவ மன்னன்

                        மகேந்திரவர்மனுக்குச் சித்திரகாரப் புலி என்னும் பட்டப் பெயருண்டு என்பது வரலாற்றுச் செய்தி.

                        தஞ்சைப் பெரிய கோயில் உட்புறச் சுவரில் ஓவிய வடிவத்தில் சைவ நாயன்மார் கதைகள்

உண்டு.கோயில் சுவர்களிலும், அரண்மனைச் சுவர்களிலும் மகாபாரதம், இராமாயணம்,

                        பெரியபுராணம், திருவிளையாடல் ஆகிய நூற்கதைகள் வண்ண ஓவியத் தொடர்களாகத்

தீட்டப்பெற்றிருப்பதை இன்றும் நாம் காணலாம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில்

                        புத்தர் கோயில் சுவர்களில் அவர் வாழ்க்கை வரலாறு வண்ண ஓவியத்தொடர் கதைகளாக

வரையப்பட்டுள்ளன. இத்தகைய வண்ண ஓவியக்கதைத்தொடர்கள் கல்லார்க்கும்

                        கற்றார்க்கும் களிப்பருளும் இயல்பின.


சித்திரம் எழுதுவோர் தங்கள் சித்திரங்களின் வாயிலாகக் கருத்துக்களைப் பார்ப்போர்

கண்ணில் பதிப்பிக்கும் ஆற்றலுடையோர் ஆதலின் கண்ணுள் வினைஞர் என

அழைக்கப்பட்டனர். ஓவியனைக் கிளவி வல்லோன் என நற்றிணை என்னும் பழந்தமிழ் நூல்

                        குறிப்பிடுகிறது. ஓவியம் கருத்தினை எளிதில் விளக்கும் சொற்றொடராக (கிளவியாக)

அமைதலால் ஓவியன் இப்பெயர் பெற்றான். மேலும் ஓவியம் எழுத்துநிலை என்றும்,

                        சித்திர மாடங்கள் எழுத்துநிலை மண்டபம் எனவும் அழைக்கப்பட்டன. மொழியில் எழுத்து

தோன்றுவதற்கு முன்பு சித்திரமே எழுத்தாக அமைந்தது என அறிய முடிகிறது.எழுத்து

வரலாற்றில் உருவ எழுத்து (pictograph) முந்தியது. பின்னர்தான் கருத்தெழுத்து

(ideograph) தோன்றியது. இது மொழியியல் உண்மையாகும். ஓவியச் செந்நூல் கற்றறிந்தவள்

மாதவி என்று மணிமேகலை கூறுவதால் ஓவியக்கலை பற்றிய நூல்கள் பழங்காலத்தில்

இருந்தன என்பதை உணரமுடிகிறது. சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையை ஒத்த முகம்

என்று இராமன் முகத்தைக் கவிச் சக்கரவர்த்தி கம்பன் அழைக்கிறான். இத்தகைய

சிறப்பு மிக்க சித்திரத்தை மையமாகக் கொண்டு சித்திரகதைத் தொடர் நூல் ஒன்றைப்

பொன் விளையும் மண்மகள்என்னும் பெயரில் திரு என் எஸ் நாராயணன் எழுதிவெளியிட

இருப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.







திரு என் எஸ் நாராயணன் வங்கித் துறையிலிருந்து வானொலித் துறைக்கு வந்து

நிகழ்ச்சி அறிவிப்பாளர், தயாரிப்பாளர், படைப்பாளர், தகவல் தொகுப்பாளர் முதலிய

பல நிலைகளில் பணியாற்றியவர். பிறகு தமிழ் முரசு நாளிதழிலும் செய்தியாளர்,

விளம்பரப் பிரிவு நிர்வாகி எனப் பல நிலைகளில் பணியாற்றினார். அப்போது

செய்தியாளர் என்னும் நிலையில் அரசியல் தலைவர்களுடன் வெளிநாடுகளுக்குச்

சென்று அந்நாடுகள் பற்றிய அரிய தகவலகளைக் கட்டுரைகளாக அவ்வப்போது

எழுதி வெளியிட்டார். பல சிறுகதைகளும் தமிழ் முரசு இதழில் எழுதியுள்ளார்.

ஏறத்தாழ இருபத்தோர் ஆண்டுகள் மக்கள் தொடர்புத் தகவல் சாதனத் துறையில்

பணியாற்றியதன் விளைவாகப் பேச்சு வன்மையும் எழுத்தாற்றலும் மிக்கவராக விளங்குகிறார்..

சிங்கப்பூரில் நடைபெற்ற சிறப்பு மிக்க பல கலை நிகழ்ச்சிகளுக்கு நிகழ்ச்சி நெறியாளராகப்

பணியாற்றிப் புகழ்பெற்றவர் இவர் என்பதை அனைவரும் அறிவர்.


இவர் எழுதிய பொன்விளையும் மண்மகள் என்னும் இந்தச் சித்திரக் கதைத் தொடர்நூல்

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வேலை நாடிவரும் ஒரு தமிழ் இளைஞனின் கதையைக்

கருவாகக் கொண்டிலங்குகிறது. அவன் சிங்கைக்கு வருவதற்கான சூழல்களையும் வந்தபின்

அவன் பெற்ற அனுபவங்களையும் ஆசிரியர் நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார்.இதன்வழி

இத்தகைய இளைஞர்கள் இந்தியாவில் வேலைசெய்யாமல் ஏன் சிங்கை வருகிறார்கள் என்று

சிங்கப்பூர் மக்களிடையே குறிப்பாக மாணவர்களிடையே எழும் வினாவுக்கு விடை அளிக்க

முயல்கிறார். கதைக் கரு தமிழகத்தையும் சிங்கையும் இணைக்கும் பாலமாகவும் அமைகிறது.

கிராமத்தில் நேரம் நொண்டி அடிக்கிறது. சிங்கையில் அது பஞ்சாய்ப் பறக்கிறது என்று முதலில்

கருதும் கதைத் தலைவன் நடேச மணி சோம்பலுடன் இருந்தால் நேரமும் சோம்பேறித்

தனமாகத்தான் நகரும்என்னும் உண்மையை உணர்வதாக ஆசிரியர் கூறுவது பாராட்டுக்குரியது.

தமிழரின் விழாக்களில் தலைசிறந்த பொங்கல் திருநாளின் சிறப்பையும் கதையினுள் நுழைத்து

ஆசிரியர் விளக்கியுள்ள திறன் படிப்போர் தமிழ்ப் பண்பாட்டினை உணர வழிவகுக்கும்.கூட்டுக்கு

வெளியே வந்தால் தானே கற்றுக்கொள்ள முடியும்? என்ற கேள்வி வாயிலாகப் படிப்போரைப்

பலவகையில் சிந்திக்க வைக்கிறார் ஆசிரியர். விடுதலை பெற்றால்தானே உண்மையை உணரமுடியும்.


ஆசிரியரின் மொழிநடை பழமையும் புதுமையும் தழுவியதாக உள்ளது. இதற்கு இந்நூலில் எடுத்தாளப் பெற்றுள்ள தை பிறந்தால் வழிபிறக்கும்” “தெரியாத தேவதையைவிடத் தெரிந்த பிசாசே மேல்முதலிய பழமொழிகளையும், “இருதலைக் கொள்ளி எறும்பு போல”, “அளவு சரியில்லாத சட்டை அணிந்திருப்பது போல” “ஓட்டுக்குள்ளிருந்து ஆமை தலை நீட்டுவது போல” “முள்ளங்கிக் கொத்துப் போலமுதலிய உவமைத் தொடர்களையும் சான்றுகளாகக் கூறலாம். மேலும் இந்நூலாசிரியர் விமானப் பயணம் தொடர்பாக இருக்கை வார்கள், பேழைக் காப்பகம், பயணிகள் கூடம், ஓடுதடம். நகரும் மின்தடம்,

கடப்பிதழ், குடி நுழைவு நடைமுறை, சுழலும் பயணப்பெட்டிகள் மேடை, வேலை அனுமதிப் பத்திரம்

முதலிய நல்ல தமிழாக்கச் சொற்களைப் பயன்படுத்தியது கண்டு அகமகிழ்ச்சி மிகக் கொண்டேன்.

கைவந்த கலை, கொடுக்குப்பிடித்தல் முதலிய மரபுத் தொடர்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.







பொன் விளையும் மண்மகள் என்னும் இந்நூலின் தலைப்பு ஒருவருக்குப் பொன் விளைவிக்கும்

பூமியே மற்றவருக்கு மண் விளைவிக்கும் தன்மையதாக மாறவும் கூடும். என்பதைப் புலப்படுத்து

வதாகவும் அமைந்துள்ளது. இந்நூலில் இடம் பெற்றுள்ள வண்ண ஓவியங்கள் கண்ணைக் கவரும்

வகையில் அமைந்து எழுத்தின் எண்ணத்திற்கு மெருகூட்டுகின்றன. எழுத்தின் எண்ணமும் ஓவியத்தின்

வண்ணமும் ஒருங்கிணைந்து செல்லும் போக்கு படிப்பார்க்குக் கருத்து வழியும் கண்வழியும்

கதையைக் கொண்டுசெல்ல உதவுகின்றன.


கருவாலும், கதைசொல்லும் உத்தியாலும், மொழிநடையாலும் சிறந்து விளங்கும் இந்தச் சித்திரக்

கதைத் தொடர் நூலை எழுதி வெளிக் கொணர்ந்த திரு என் எஸ் நாராயணனைப் பாராட்டுகிறேன்.

வாழ்த்துகிறேன். இந்நூலைத் தமிழ் கூறும் நல்லுலகம் குறிப்பாகத் தமிழ் மாணவர் உலகம் வாங்கிப்

படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.

                         

சக்திகுமார் பெற்றோர் மணிவிழா மலர

1-6-2006

தேவகோட்டை உயர்திரு கதி. பழனியப்ப செட்டியார் அவர்களின் மகன் திரு பழ. உடனிருக்க லெட்சுமணன் அவர்களுக்கு திருமதி மீனாட்சி ஆச்சி 1-6-2005 அன்று

நடைபெற இருக்கும் மணிவிழாச் செய்தி அறிந்து அகமகிழ்ச்சி மிக அடைந்தேன்.

திரு லெட்சுமணன், நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் பணியாற்றியபோது என்னிடம் படித்த மாணவர். திருமதி மீனாட்சியோ சிதம்பரத்தில் நான் தங்கியிருந்த வீட்டுக்கருகில் வாழ்ந்த சிவநெறிச் செல்வர் மாங்குடி முத்தையா செட்டியார் அவர்களின் திருமகள். எனவே இளமைக் காலம் முதல் அறிந்த இருவரின் மணிவிழாச் செய்தி மகிழ்ச்சி தருவது இயல்புதானே.இவ்விழாத் தொடர்பாக மணிவிழா மலர் ஒன்று வெளியிட இருப்பதும் நன்றே.


திரு லெட்சுமணன் எல்லாரிடமும் எளிமையாகப் பழகும் இயல்பினர். பாண்ட்ஸ் இந்தியா கம்பனியில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். அதனால் பாண்ட்ஸ் லெனா என்று பலராலும் அழைக்கப்பட்டவர்.அன்பும் அறனும் உடைய இல்வாழ்வைப் பண்பும் பயனுமுற நடத்தித் தவஞ் செய்வார் தம் கருமம் செய்வார்என்பதற்கேற்ப வாழ்ந்தவர். கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவைஎன்பதை நன்குணர்ந்து, வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது கொடுக்கத்தான் குறையாது விளங்கும் கல்வியைத் தம் மக்களுக்குக் குறையிலாது நல்கி அவர்களை நன்றாகப் படிக்கவைத்து இன்று சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய வெளிநாடுகளில் அவையத்து முந்தியிருக்கச் செய்து பார்த்து அகமகிழும் பண்பினர்.அவர்தம் மக்களும் இவன் தந்தை என் நோற்றான்கொல்என்பதற்கேற்பத் தம் துறைப் பணியாலும் பொதுத்தொண்டாலும் சிறப்புறச் செயலாற்றுவதை நான் அறிவேன்.திருமதி மீனாட்சியும் மனைத்தக்க மாண்புகள் பல கொண்டவர். செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் பண்பினர். ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே என்பதற்குஎடுத்துக்காட்டாக இலங்குபவர். திரு லெட்சுமணன் திருமதி மீனாட்சி குடும்பம் ஒரு நல்ல குடும்பம், ஒரு பல்கலைக் கழகம் என்றும் கூறலாம். திரு லெட்சுமணன் தம் பெற்றோர் இருவரும் இருந்து வாழ்த்த மணிவிழாக் காண்பது பெரும்பேறாகும்.


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்என்னும் வள்ளுவனாரின் வாக்கிற்கேற்பத் திரு லெட்சுமணன் சென்னையிலிருந்து திருத்தணிக்குப் பங்குனி உத்திரப்பெருவிழாவின்போது பாத யாத்திரையைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து

மேற்கொண்டு, புள்ளி மயிலேறும் வள்ளி மணாளனாகிய திருத்தணி முருகன்பால் தீராக் காதலுடன் பக்தி செலுத்தி வருகின்றார். மேலும் பலரையும் அந் நெறியில் ஆற்றுப் படுத்தியுள்ளார். பாத யாத்திரை என்பது பழந்தமிழர் கண்ட பழைய வழிபாட்டு நெறி என்பதைத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பெருமான் எய்யா நல்லிசைச் செவ்வேல் சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும்

செலவு நீ நயந்தனை ஆயின் நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே பெறுதி

நீ முன்னிய வினையேஎன்று கூறுவதால் உணரலாம். மேலும் பாத யாத்திரை என்பது அடியார்கள் தம் பாதத்தால் நடந்து செல்லும் யாத்திரையைக் குறிப்பதுடன் ஆண்டவனின் பாதத்தை நோக்கிச் செல்லும் யாத்திரையையும் சுட்டும் ஓர் அருமையான தொடராகும்.

இறைவனின் திருவடி(பாதம்) வழிபாட்டினால் மனக் கவலை நீங்கும், துன்பம் தொலையும், பிறவிப்பிணி போகும் என்பது குறள் நெறி அல்லவா?“நாதா எவவும் நக்காஎனவும் நம்பா எனவும் பாதம் தொழுவார் பாவம் களைவார் பழனநகராரேஎன்னும் திருஞான சம்பந்தரின் திருமுறை வாக்கும் இதனை வலியுறுத்தும். விழிக்குத் துணை திரு மென்மலர்ப்பாதங்கள், மெய்மை குன்றா மொழிக்குத் துணைமுருகா எனும் நாமங்கள், முன்பு செய்தபழிக்குத்துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனிவழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமேஎன்னும் அருணகிரி நாதர் மொழியும் மெய்ம்மொழி அன்றோ? இத்தகைய பாதயாத்திரைப் பக்தி நெறியைப் பரப்பும் திரு லெட்சுமணன் அவர்களின் பணி பாராட்டிற்குரியது. இப்பணி தொடர வாழ்த்துகிறேன்.


மணிவிழா மலரில் நகரத்தார் குடும்ப விழாக்கள் பற்றிய செய்திகளும் வழிபாட்டிற்குரிய

திருமுறைப் பாடல்களும், ஏனைய பக்திப் பாடல்களும் இடம் பெறுவது அறிந்து உவகை

அடைந்தேன். விழாக்கள் ஓரினத்தின் பண்பாட்டுச்சின்னங்கள் ஆகும். நகரத்தார்கள் கோயில் வழிக் குடியினர். எனவே அவர்கள் பண்பாடு பேணுவதையும் பக்தி செலுத்துவதையும் தம் தலையாய நோக்கங்களாகக்கொண்டு வாழ்பவர்கள். இந்நோக்கங்கள் இடையறாது என்றும் நின்று நிலவ இம்மலர் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.


சுற்றமும் துணையும் சூழத் திருமுறை முழங்க மணி£விழாக் கண்டு மகிழும் திரு லெட்சுமணன் திருமதி மீனாட்சி ஆகிய இருவரும் நல்ல உடல் நலத்துடன் எல்லாச் செல்வமும் பெற்றுப் பல்லாண்டுகள் வாழ்ந்து பவழ விழா, முத்து விழா, வைர விழா முதலிய விழாக்களையும் கண்டின்புறத் தில்லைக் கூத்தனை வணங்கி வாழ்த்துகிறேன்.




மு.தங்கராசன்

தமிழ்எங்கள் உயிர்

இன்பத்தமிழ்

23-3-2005


சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களில் ஒரு சிலரே கவிதை, சிறுகதை, புதினம், நாடகம் முதலியவற்றை இயற்றும் படைப்பிலக்கிய ஆசிரியர்களாக விளங்குகிறார்கள். அவர்களுள் சிறந்து நிற்பவர் மூத்த தமிழாசிரியர் திரு மு.தங்கராசன் அவர்கள். இவர் இங்கு நூற்றுக் கணக்கான மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்துத் தடம் பதித்தவர். இவர் மாணவர்கள் பலர் சிங்கையில் தமிழாசிரியர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். ஏன்? இவர் மக்கள் மூவர் தமிழ்க் கல்வித் துறையில் பணியாற்றி உயர் பதவி வகித்து வருகிறார்கள். திரு மு.தங்கராசன் உயர்நிலை மாணவர்க்கேற்ற பாட நூல் உருவாக்கப் பணியிலும் ஈடுபட்டு உழைத்தவர். கல்விப் பணியுடன் கடவுட்பணி, சமுகப் பணி ஆகியவற்றிலும் பல்லாண்டுகளாகப் பங்கேற்றுப் பாடுபட்டவர். நண்பர்களுக்கு ஒல்லும் வகையான் எல்லாம் உதவும் நல் உள்ளத்தர்.


திரு மு.தங்கராசன் இதுவரை எட்டுக் கவிதைத் தொகுப்பும், ஏழு சிறுகதைத் தொகுப்பும் ஆகப் பதினைந்து நூல்கள் வெளியிட்டுள்ளார். பதினைந்தாவது நூல் வெளியீட்டு விழாவின்போது வாழ்த்திப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது இவர் பதினாறாவது நூல் வெளியிட்டுப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு கண்டவராகத் திகழ வேண்டும் என வாழ்த்தினேன். அதற்கேற்ப அவர் இப்போது தம் கட்டுரைகளைத் தமிழ் எங்கள் உயிர், இன்பத் தமிழ் என்னும் பெயர்களில் இரண்டு நூல்களாகத் தொகுத்து வெளியிடுகிறார். இவை முறையே சிங்கப்பூரில் உயர்நிலை ஒன்று, இரண்டு வகுப்புகளிலும், மூன்று, நான்கு வகுப்புகளிலும் பயிலும் மாணவர்களுக்கு உரியவை.எனினும் பெரியவர்களும் படித்துப் பயன் பெறத்தக்கவை எனலாம்.


கட்டுரை என்னும் சொல் தமிழில் வினைச் சொல்லாகவும் பெயர்ச் சொல்லாகவும்

இருக்கும் பெற்றியது. வினைச் சொல் நிலையில் உறுதியாகச் சொல்லுதல், தெளிவாகச் சொல்லுதல் என்னும் பொருள் தரும். பெயர்ச் சொல் நிலையில் பொருள் பொதிந்த சொல், பழமொழி, புனைந்துரை, வியாசம்(Essay) என்னும் பல பொருள் உணர்த்தும். கட்டுரை என்னும் சொல்லைக் கோப்புரை என்னும் பொருளில் முதன்முதலில் கையாண்டவர் மறைமலை அடிகளே ஆவார். ஒரு பொருளைப் பற்றிப் பல கருத்துகளைத் தொகுத்தும் பகுத்தும் கோவைப்பட வரையும் உரை அல்லது எழுத்து வடிவமே கட்டுரையாகும்.



சிறந்த கட்டுரையின் கூறுகளாக ஒருமைப்பாடு(Unity),பொருட் பொலிவு, ஒழுங்கு(Order), பாகிஅமைப்பு(Paragraph structure), நன்னடை(Good Style), தெளிவும் துப்புரவும்(Legiblity and Neatness), பொருத்த வீதம்(Proportion),அளவு மிகாமை, முடிவு(Conclusion or Personal Touch), கட்டுரைப் பொருள் வன்மை பெறும் வகை என்னும் பத்துக் கூறுகளைப் பட்டியலிட்டுள்ளார் தேவ நேயப்பாவாணர்.கட்டுரை எழுதுவது என்பதே ஒரு தனிக்கலை. அது எளிதன்று. மொழியறிவும் பொருளறிவும் இருந்தாலன்றி ஒருவர் கட்டுரை எழுதுவது கடினம். கட்டுரை எழுதுவதற்கு மிகுந்த பயிற்சியும் வேண்டும்; ஓரளவு மொழி நடையும் வேண்டும். இலக்கண அறிவு இல்லாதவர்கள் கட்டுரை எழுதினால் அது மதிப்பற்ற வெற்றுரை ஆகும்என்று கூறுகிறார் அ. கி. பரந்தாமனார்.


பல்லாண்டு தமிழ் பயிற்றுவித்த பட்டறிவும், பல நூல்களைப் படித்த படிப்பறிவும், கவிதை சிறுகதை முதலியவற்றைப் படைத்த எழுத்தாற்றலும்.தங்கராசனாரின் கட்டுரை நூல்களுக்குக் கவினூட்டுகின்றன. இந் நூல்களின் தலைப்புகளே இதற்கு எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. தமிழ் எங்கள் உயிர் என்பது படிப்பவர்க்குத் தமிழ் உணர்வை ஊட்டவல்லது, இன்பத் தமிழ் என்பது தமிழறிவையும் அதன் அளப்பரும் ஆற்றலையும் உரைக்கும் இயல்பினது. அதே சமயத்தில் இவை இரண்டும் பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் தமிழ் பற்றிப் பாடிய பாடல் வரிகளை நினைவூட்டும் தன்மையனவாகவும் உள்ளன. மேலும் இன்பத்தமிழ் எங்கள் உயிர்

என்பதை ஒவ்வொரு தமிழனும் தன் இலக்காகக் கொண்டு வாழ வேண்டும் என்பதையும்

எடுத்துரைக்கின்றன.


இந்தக் கட்டுரை நூல்கள் இரண்டிலும் நாடு, மொழி, கல்வி, சமுதாயம், உண்மைகள், உணர்வுகள் என்னும் பல பிரிவுகளில் கட்டுரைகள் பகுத்துத் தரப்பட்டுள்ளன. தேசிய கல்வி, தமிழ்மொழியின் தேவை, சமுதாயப் பணி, இலக்கியத் தொடர்களின் பொருளாழம், கல்வியின் கட்டாயம், வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் பல கட்டுரைகள் உள்ளன. இக் கட்டுரைத் தலைப்புகளும், இடையிடையே இணைத்துள்ள இலக்கிய மேற்கோளகளும் நூலாசிரியரின் பரந்த பன்னூற்புலமையைப் பறைசாற்றுகின்றன. ஆங்காங்கே கட்டுரைக் கருத்துகளைச் சுருக்கிக் கவிதைகளாகவும் ஆசிரியர் தந்துள்ளார். கட்டுரைகளின் மொழிநடையும் எழில் கூட்டும் இயல்பினதாகவுள்ளது. படிப்பவரின் மொழிவளத்தைப் பெருக்கும் பண்பினையும் கொண்டு விளங்குகிறது. ஆங்கில மொழிபெயப்பு ஆங்கிலம் வழிச் சிந்தித்துச் செயல்படுவார்க்குப் பெருந்துணையாக இருக்கும்.


இத்தகைய சிறப்புடைய கட்டுரை நூல்களை இயற்றி எழிலுற அச்சிட்டு வெளியிடும் மு. தங்கராசனாரின் தமிழ்ப் பணியைப் பாராட்டி வாழ்த்துகிறேன். அவர் எழுதிய நாடகங்களையும் தொகுத்து நூலாக வெளியிட வேண்டுகிறேன். இக் கட்டுரை நூல்கள் இரண்டையும் மாணவர்களும் மற்றவர்களும் வாங்கிப் படித்து இன்புறுவதுடன் ஆசிரியரின் தமிழ்ப்பணி தொடர ஊக்கமும் ஆக்கமும் ஊட்ட வேண்டுகிறேன்.



சிங்கப்பூர் சுப. திண்ணப்பன்

23-3-2005


டாக்டர் ஊர்மிளா பாபு


அணிந்துரை


டாக்டர் ஊர்மிளா பாபு மருத்துவத் துறையில் ஒரு மகப்பேறு மருத்துவர்.

ஆனால் எழுத்துத் துறையிலோ ஓர் அகப்பேறு மருத்துவர். இங்கு அகம்

என்றால் உள்ளம், இல்லம் எனப் பொருள்படும். இல்லம் சிறக்க உள்ளம்

சிறக்க வேண்டும்.உள்ளம் சிறக்க உயர்ந்த எண்ணங்கள் வேண்டும்.

மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு.என்பது வள்ளுவம். அத்தகைய உயர்ந்த எண்ணங்களைத் தம் ஆழ்ந்தகன்ற அறிவாலும் அனுபவத்தாலும்

பெற்று இந்த நாட்குறிப்பேட்டில் நாம் ஒவ்வொரு நாளும் படித்துணர

டாக்டர் ஊர்மிளா பாபு தந்துள்ளார். இந்த நூற்கருத்துகளைக் கற்க;

கற்றபின் அதற்குத் தக நிற்க. அது வையத்து வாழ்வாங்கு வாழ வழி

வகுக்கும். தொடர்க அவர்தம் தொண்டு.


டாக்டர் சுப.திண்ணப்பன்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம்


ச. வரதன் சா.ஹாமிட்

சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு 1935-2006

7-11-2007


இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்ப் பாகுபாடு தமிழ்ப் பண்பாட்டின் தலையாய கூறுகளில் ஒன்றாகும்.

இயல் என்பது மனத்தின் விளைவாகிய எண்ணம்; இசை என்பது எண்ணம் (மனம்) , சொல்(வாய்) ஆகிய இரண்டும் இணைந்தது; மனத்தாலும் வாயாலும் உருவாவது; நாடகம் என்பது மனம், வாய், மெய் ஆகிய மூன்றின் விளைவாகிய எண்ணம், மொழி, செயல் ஆகிய மூன்றினால் அமைவது.முத்தமிழில் இயற்றமிழ் என்பது பலாப் பழத்தைச் சுவைப்பது போன்றது. பலாப்பழத்தின் கடினமான தோலை நீக்கிச் சக்கையை அகற்றிக் கொட்டையை நீக்கிச் சுளையை எடுத்துச் சாப்பிட வேண்டும். இது போன்று இலக்கிய இலக்கணத்தின் பொருளறிந்து இயற்றமிழைச் சுவைக்க வேண்டும். இசைத்தமிழ் அவ்வளவு கடினமானதன்று. மாம்பழத்தைச் சுவைப்பது போன்றது. இராகத்தோடும் தாளத்தோடும் இணைந்துள்ள இசையைச் சுவைப்பது மாம்பழத்தின் தோலை நீக்கிக் கொட்டையை அகற்றிச் சாப்பிடுவது போன்றதாகும். நாடகத்தமிழைச் சுவைப்பது வாழைப்பழத்தைச் சுவைப்பது போன்றது. வாழைப்பழத்தின் தோலை நீக்கியவுடன் சாப்பிட்டு விடுகிறோம். அதுபோல நாடகத்தைப் பார்த்ததும் சுவைக்கலாம். தமிழர்கள் கண்ட முக்கனிக்கும் முத்தமிழுக்கும் இடையேயுள்ள தொடர்பை இப்படி விளக்குகிறார் முத்தமிழ்க் காவலர் கி.ஆ. பெ. விசுவநாதம். நாடகக் கலை கற்றார்க்குல் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பாகும்.


நாடகம் என்பதை நாடு அகம் எனப் பிரித்து நாட்டை அகத்தில் கொண்டு விளங்குவது என்றும், உள்ளத்தை நாடுவது தேடுவது என்றும் விளக்குவர். உள்ளத்தே உணர்ச்சியைத் தூண்டிச் செயற்பட வைப்பது நாடகம்.நாடகம் என்னும் சொல் இன்று நமக்குக் கிடைக்கும் நூல்களில் மிகப் பழமையான தொல்காபியத்திலேயே காணக் கிடைக்கிறது. நாடகத்தைக் கதை தழுவிய கூத்து என்று பண்டைத் தமிழர் அழைத்தனர்.மேலும் இதனை அரசர்க்கு ஆடுகின்ற கூத்து என்றும் பொதுமக்களுக்கு ஆடுகின்ற ஆடுகின்ற கூத்து என்றும் வகைப்படுத்தி நாடகக் கலையை வளர்த்தனர். தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரத்தில் நாடகக் கலை பற்றியும், மேடை அமைப்புப் பற்றியும் பல குறிப்புகள் உள்ளன.இடைக் காலத்தில் இராஜராஜ சோழனும், அண்மைக் காலத்தில் பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாச சுவாமிகள், டி.கே. சண்முகம் ஆகியோரும் மேடை நாடகக் கலையை வளர்த்தனர்.


இத்தகைய மேடை நாடகம் சிங்கப்பூரில் தோன்றி வளர்ந்த வரலாற்றைப் பதிவு செய்யும் நோக்கத்தோடு திருவாளர்கள் ச. வரதன் சா.ஹாமிட் ஆகிய இருவரும் எழுதிய சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு 1935-2006 என்னும் நூலைப் படித்துப் பார்த்து மகிழ்ந்தேன். இவர்கள் சிங்கப்பூரில் மேடை நாடக வளர்ச்சிக்கு வித்தாகவும், வேராகவும், நீராகவும் விழுதாகவும், வேலியாகவும் இருந்து பணியாற்றியவர்கள். இவர்களில் திரு ச. வரதன் நாடக வளர்ச்சிக்குச் செய்த பணியைப் பாராட்டிச் சிங்கப்பூர் அரசாங்கம் அவருக்குக் கலாசார விருது அளித்துச் சிறப்பித்துள்ளது.


இந்நூலாசிரியர்கள் சிங்கப்பூரில் மேடை நாடக வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அமைப்புகளின் தோற்றம், வளர்ச்சி, தொண்டு ஆகியவற்றை அரிய முயற்சியால் தேடித் தொகுத்துத் தந்துள்ளார்கள். இவ்வமைப்புகள் பல இடர்ப்பாடுகளுக்கும் இன்னல்களுக்கும் இடையில் உருவாக்கி மேடை ஏற்றிய நாடகங்கள் பற்றிய தகவல்களையும் நன்கு பட்டியலிட்டு எழுதியுள்ளார்கள். இவற்றில் ஈடுபட்டுத் தன்னலங் கருதாது உழைத்த நாடக ஆசிரியர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் பற்றிய செய்திகளும் இந்நூலில் உள்ளன. நாடக வளர்ச்சசிக்கு ஊக்கமும் ஆக்கமும் ஊட்டிய தமிழவேள் கோ. சாரங்கபாணி போன்ற சான்றோர் பற்றிய செய்திகளும் இதில் உண்டு.அக்காலத்தில் ஒரு தமிழ் நாடகம் நடத்துவதற்கு மக்களைத் திரட்டுவதே பெருபாடாக இருந்துள்ளது. மேலும் மேடை நாடகத்தின் வழி நிதி திரட்டிப் பள்ளி நிலையிலும் பல்கலைக் கழக நிலையிலும் தமிழ்க் கல்வி சிறந்திட இந்த அமைப்புகள் பாடுபட்டதையும் இந்நூல் வாயிலாக அறியமுடிகிறது. சமுதாயச் சீர்திருத்த நாடகங்களின் வழி மக்களிடம் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளைப் போக்கச் முயன்றதையும் பார்க்க முடிகிறது. பொதுவாக இந்நூல் எதிர்காலத்தில் சிங்கப்பூரின் மேடை நாடகம் பற்றி ஆய்வு மேற்கொள்வார்க்கு உதவும் தகவல் களஞ்சியமாக அமைந்துள்ளது.


எனவே இந்நூலை எழுதிய ஆசிரியர்களாகிய திருவாளர்கள் ச. வரதன் சா.ஹாமிட் ஆகிய இருவர்க்கும் என் பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலைத் தமிழுலகம் வாங்கி ஆதரிக்கும் என்று நம்புகிறேன். இவர்கள் தொண்டு தொடரும் என எதிர்பார்க்கிறேன்.


சிங்கப்பூர்

7-11-2007



கவிஞர் மலர்விழி இளங்கோவன்

'கருவறைப் பூக்கள்'

18-11-2008


கவிஞர் மலர்விழி இளங்கோவன் கவிதைத் தொகுப்பான'கருவறைப் பூக்கள்' என்னும் நூலிலுள்ள கவிதைகளைப் படித்தேன்.கவிதைகள் படித் தேன் என இனித்தன .அவற்றைச் சுவைத் தேன் எனச் சுவைத்தேன்.பூக்களுக்கும்

பாக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு .பூக்களால் அமைவது பூமாலை,பாக்களால் அமைவது பாமாலை .பூக்கள்

தோட்டத்தில் வளரும்,பாக்கள் கவிஞர் நாட்டத்தில் தோன்றும்.பூக்களுக்கு வடிவம் இருப்பது போலப் பாக்களுக்கும் வடிவம்(யாப்பு) உண்டு.பூக்களுக்கு நிறம் இருப்பது போல பாக்களுக்கும் கற்பனை உண்டு. பூக்களுக்கு அழகு இருப்பது போலப் பாக்களுக்கும் அணி உண்டு. எனினும் பூக்களை விடப் பாக்கள் உயர்ந்தவை.ஏனெனில் பூக்களுக்கு இல்லாத ஒலிநயம் பாக்களுக்கு உண்டு .பூக்கள் வாடி அழியும்; ஆனால் பாக்களோ வாடா மலர்கள். என்றும் வாழும் இயல்புடையவை. இதனை மலர்விழியின் 'பூந்தோட்டம்' என்னும் கவிதை பின்வருமாறு உணர்த்துகிறது.


மா(ச்)சீர் எடுத்தது போல்

மலர்த் தட்டேந்தி நிற்கும்

மணக்கும் பூச்செடிகள்

காய்ச்சீர் ஏந்திச் சில மரங்கள்

கனிச்சீர் தாங்கிச் சில மரங்கள்

தட்டும் தளை ஒதுக்கி

மர(பு) வேர் தடுக்காமல்

அடி மேல் அடி எடுத்து

புதுக் காற்றின் புத்துணர்வில்

நடை பயில நுழைகின்றேன்

கவிதைத் தோட்டத்துக்குள்


இக்கவிதையில் செய்யுள் உறுப்புகளாகிய சீர் ,தளை,அடி ஆகியவை எதுகைத் தொடையுடன் அசைந்து வரக் கண்டேன்,அகமகிழ்வு கொண்டேன் .நானும் அவரது கவிதைத் தோட்டத்துக்குள் நுழைந்தேன்.


கருவறை என்பதோ கோயிலிலும் உள்ளது; தாயிடமும் உள்ளது. கோயிலிலுள்ள கருவறையில் தெய்வம் குடிகொண்டு இருக்கிறது. தாயிடமுள்ள கருவறையில் குழந்தை தோன்றி வளர்கிறது.முன்னதில் சிவனும், பின்னதில் சீவனும்

இருப்பதாகச் சைவர்கள் கூறுவர்.


"பூவினில் கந்தம் பொருந்தியவாறு போல்

சீவனுக்குள் சிவமணம் பூத்ததுவே" என்பது திருமூலர் வாக்கு. குழந்தையும் தெய்வமும் ஒன்றெனக் கருதும் கருத்தும் உண்டு. பாக்கள் தோன்றி வளரும் கருவறையே கவிஞனின் உள்ளமாகும் .எனவே தான் கவிமணி

தேசிய விநாயகம் பிள்ளை


"உள்ளத்துள்ளது கவிதை-இன்ப

உருவெடுப்பது கவிதை"


என்றுரைத்தார். கவிஞன் எனும் தாய் கரு உயிர்த்து ஈன்றெடுக்கும் குழந்தையே கவிதை. கவிஞனின் உள்ளக்

கருவறையில் சிந்தனை வித்தால் உருப்பெற்று வளர்ந்து வெளிப்படும் இன்ப உருவே(வடிமே) கவிதைக் குழந்தை எனலாம். பூ, பா, குழந்தை மூன்றையும் இணைத்து 'விதை' என்னும் தலைப்பில் மலர்விழி கூறுவதைப் பாருங்கள்.


மண்ணிலே விழுந்த விதை

மலராகிச் சிரித்தது

கருவறையில் விழுந்த விதை

கைகளிலே மழலையாக...

சிந்தையிலே விழுந்த விதை

சிரித்தது கவிதையாக


'கருவறை அன்னங்கள்' என்னும் தலைப்பில் வரும் தொடர்கள்


"கருவறையில் உருவாகட்டும்

கருணை கொண்ட

மானுடம் மங்காத

மழலைகள் மட்டுமே"


எத்தகைய கவிதைக் குழந்தைகள், கவிஞர் வேண்டும் - விரும்பும் குழந்தைகள் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

இந்நூலிலுள்ள கவிதைகள் மானுடம் - மனித நேயம் பாடும் மையக் கருத்துடையவையாக மலர்ந்துள்ளன.


மலர்விழியின் கவிதைக்குரிய விதை பல மூலங்களிலிருந்து வந்துள்ளதையும் படிப்போர் உணரலாம்.

நாளேட்டில் வரும் செய்திகள்,(எ.கா) கம்பி நீட்டி விட்டான், எண்ணெய்க்கு உணவு, இளமையில் கல்,

பாற்கடலில் நஞ்சு, வெளிநாட்டு ஊழியர்களின் தவிப்பு), தான் படித்த கவிதைத் தொடர்கள் (எ.கா. எது

பிடிக்கும்?, தேன் வந்து பாயுது), அறிந்த பெருமக்கள் (எ.கா. தமிழ்ச் சாரதி, புதுமைத் தேனீ, உதுமான் கனி),

பேசும் மொழியாகிய தமிழ்(தமிழா! தமிழில் பேசு) எனப் பலவாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

திருவாரூர்த் தேரழகு என்பார்கள். அதனை மையமாக வைத்து அங்கு பிறந்த தமிழவேள் கோ.சாரங்கபாணி

அவர்களைத் தமிழ்ச் சாரதியாகக் காட்டியுள்ளார் கவிஞர் மலர்விழி.


ஒலிம்பிக் 2008, பெங்குவின் பறவை பற்றிய கவிதைகள் புதுமைப் பொருளால் பொலிவு பெறுகின்றன.

'மனிதனும் விஞ்ஞானமும் உரையாடினால்', 'காதல் கிருமி', 'அவரோடு நீ' போன்ற கவிதைகள் இவரது

அறிவியல் நோக்கினையும், கற்பனையையும் வெளிப் படுத்துகின்றன. கவிஞர் பெண்ணாக இருப்பதால் பெண்மையின்

பல பரிமாணங்கள் கவிதையில் இடம்பெற்றுள்ளன .மகளாக,மனைவியாக,தாயாக,பாட்டியாக பல நிலைகள்

கவிதைகளில் பளிச்சிடப் பார்க்கிறோம்.


'ஒரு காலை வேளையில்' என்பது இயற்கை பற்றியது .'காதல் பயணம்" இக்காலக் காதல் இயல்பை இயம்புகிறது

.பிறந்த நாடான தமிழகம், புகுந்த நாடான சிங்கப்பூர் என்னும் இரண்டினையும் தொடர்புபடுத்திப் பாடும் கவிதையும்

இத் தொகுப்பிலுள்ளது. புலம் பெயர்தலுக்கு நல்ல விளக்கமும் தரப் பட்டுள்ளது.


'எட்ட முடியாத உயரங்கள் எல்லாம்

எட்ட முயலாத உயர்ங்களே'


என்னும் தொடர்கள் என் உள்ளம் கவர்ந்த தொடர்களாகும்.


'தமிழா தமிழில் பேசு' என்னும் மரபுக் கவிதைப் பகுதியில்


'தாய்ப்பாலை மறுதலிக்கும் மழலை உண்டோ?

தன்விழியின் ஒளிவெறுக்கும் மனித ருண்டோ?

காய்கவரக் கனிவிலக்கல் அறிவும் ஆமோ?

கனியொத்த தமிழொதுக்கல் சரியா சொல்வீர்!'


என்று கேட்டுத் தமிழ் பேசுமாறு கேட்பது சிறப்பாக உள்ளது.


இந்நூலில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூக் கவிதை எனப் பலவகை வடிவக் கவிதைகள் உள்ளன.


'மரபுக் கவிதைகள் மடிசார்ப் புடவைகள்;

அச்சு மாறாமல் கட்டுதல் வேண்டும்

புதுக் கவிதைகள் நவீன ஆடைகள்

விருப்பம்போல் இட்டுக் கொள்ளலாம்

துளிக் கவிதைகள் நீச்சல் உடைகள்

இயன்ற வரைக்கும் வெட்டுதல் வேண்டும்

அனைத்தும் அழகு தான்;அனைத்துக்குள்ளும்

பொம்மைகள் இன்றி உயிர்கள் இருப்பின்'


என்னும் புகாரியின் கவிதைக்கேற்பக் கவிஞர் மலர்விழியின் கவிதைகள் எவ்வடிவில் இருந்தாலும் அவை பொம்மைகளாக இல்லை, உயிர்த் துடிப்புடன் உள்ளவைகளாகவே உலவுகின்றன.


சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் தவிப்பினை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் மலர்விழி.


'போற எடமெல்லாம் சாமி துணை நிக்குமுன்னு

அப்பத்தா நீ சொன்னது

அப்ப எனக்குப் புரியலையே'


என்னும் தொடர் அவலத்தை மிக அழகாகப் பேசுகிறது. மலர்விழி, பாரதி காட்டும் புதுமைப் பெண்ணாகத் தோற்றம்

அளிப்பதையும், ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தம் மக்களை நல்லவர்கள்,வல்லவர்கள்,திறனாளர்கள் எனக் கேட்ட -கண்ட

தாயாகவும் தோன்றுவதை இந்நூலின் வழி காண முடிகிறது.


இந்நூலிலுள்ள கவிதைகளில் பிறையிடு சொல் உத்தியையும் காணமுடிகிறது .சில எடுத்துக்காட்டுகள்


'மா(ச்)சீர் எடுத்தது போல்'

'மர(பு)வேர் தடுக்காமல்'

'(சம்)மதம்'

'ம(¡)த விலக்கு'

'ம(னி)தம்'

'மொ(மு)த்தமாய்'


ஓரெழுத்தைப் பிறைக் கோட்டுக்குள் இடுவதால் சொல் மாற்றம் வருவதைப் பல கவிதைகளில் சுட்டிக் காட்டியிருக்கும் உத்தியையும் பார்க்க முடிகிறது.


சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகில் பெண் எழுத்தாளர்கள் குறைவாகவே உள்ளனர். மலர்விழி போன்ற கவிஞர்களின் வரவு இக்குறையை நிறைவாக்கும் என எதிர்ப்பார்க்கலாம். பொதுவாக இந்தக் கருவறைப் பூக்கள் என்னும் இத்தொகுப்பு நூலிலுள்ள கவிதைகள்-மலர்விழியின் கவிதைகள் விழிமலர்களாக விளங்குகின்றன.உவமைத் தொகை உருவ(க)மாக

உலா வரும் இயல்பை இங்கே நாம் காண்கிறோம்.அருவத்திற்கு உருவம் கொடுக்கும் அற்புத வித்தையல்லவா கவிதை!


மலர்விழியின் முதல் கவிதைத் தொகுப்பு இதுவே. இனிவரும் இவரது, பல கவிதைத் தொகுப்புகளுக்கு 'முதலா'க இருக்கட்டும். இவர் செய்யும் கவிதை வாணிகத்தால் தமிழ்த்தாய் லாபம் ஈட்டுவாள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

கவிஞர் மலர்விழிக்கு என் நல்வாழ்த்துக்கள்! வளர்க அவரது கவிதைப் பணி!

.... தொடரும் ....

Dr S.P. Thinnappan


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக