வெள்ளி, 2 மே, 2014

இலக்கியம் - 1



SPT articles 7 Literature


இவர் சான்றோர்


சான்றோர் என்னும் சொல்  தமிழ் மொழிக்கே உரிய தனிச் சிறப்புடைய ஒன்றாகும் இச்சொல்லுக்கு ஏற்ற ஓர் வேற்றுமொழிச் சொல்லைக் கண்டறிய இயலாதவாறு பொருளும வரையறையும் இலக்கணமும் தந்து இச்சொல்லைப் போற்றியுள்ள தமிழர்களின் பேரறிவுத் திறன் வியக்கத்தக்கது.  சான்றோர் என்னும் சொல் சால் என்னும் அடிச்சொல்லிலிருந்து தோன்றியது.  சாலுதல் என்றால் நிறைதல் என்ற பொருள்.  எனவே சான்றோர் என்றால் நிறைந்தவர்கள்.


சால்பு என்னும் சொல்லும் சால் என்பதிலிருந்து தோன்றிய ஒன்றே இதற்கு நிறைவுடைமை: முழுமை என்ற பொருள் . சால்புடையவர்களே சான்றோர்.


இது ஆன்றோர் எனத் திரிந்து வருதலும் உண்டு .   இங்கு சான்றோர் என்னும் சொல் முதலில் உள்ள ச்என்னும் எழுத்து கெட்டுவிடுகிறது.


இவ்வழக்கு மூலத் திராவிட மொழியிலிருந்து தமிழ் கிளைத்தெழுந்த போது இருந்த ஒரு வழக்கு என மொழியியல் அறிஞர்கள் குறிப்பிடுவர்.


எனவே சான்றோர் என்னும் சொல் தமிழின் மூல மொழியாக மூலத் திராவிட மொழிக்கே உரிய ஒன்று எனலாம்.  இதன் வழி இச்சொல்லின் பழமையை உணரலாம்.


தமிழில் இன்ற கிடைத்துள்ள பழைய நூலாகிய தொல்காப்பியத்தில் சான்றோர் என்னும் சொல் கையாளப்பட்டுள்ளது.


சங்க இலக்கியங்களிலும் இச்சொல் இடம் பெற்றுள்ளது.  பதிற்றுப் பத்து என்னும் சங்க இலக்கிய நூலில் ‘‘சான்றோர் மெய்ம்மறை’’ என்னும் தொடர் வருகின்றது.


புறநானூற்றில் ‘‘ஈன்று புறத்தருதல் என்றலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே , நன்னடை(பரிசு) நல்குதல் வேந்தற்குக் கடனே, களிறு (யானை) எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’’ என்னும் பொன்முடியார் பாட்டில் சான்றோர் என்னும் சொல் இடம் பெறுகின்றது


இங்குச் சான்றோர் என்பதற்கு வீரர் என்னும பொருள் உள்ளது என விளக்கம் தருவார் டாக்டர் வ.சுப. மாணிக்கனார்.


எனவே சான்றோர் என்னும் சொல் தொடக்கத்தில் வீரம் நிறைந்தவர்களையே குறித்தது எனலாம்.  வீரம் என்பது மன உறுதியால் விளைவது: உடலுரத்தால் ஊற்றெடுக்கும் ஓர் உணர்வு.  உள்ளத்தில் உறுதியும் உடலுரமும் மிக்கவர்களே சான்றோர்கள் என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டனர்.


சான்றோர் என்பதற்கு நற்பண்புகள் நிறைந்தவர்கள் என்னும் பொருளும் இருப்பதைச் சங்க நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.


 


சான்றோர் பழியொடு வரும் இன்பம் கொள்ளார் என்று அகநானூறும், ‘‘பகைவரிடத்தும் பிறர் குற்றம் காணாத சான்றோர்’’ பிறர் துன்பத்தையும் தம் துன்பம் போல் எண்ணும் பெருந்தகையார் சான்றோர் எனக் கலித் தொகையும்,’’சான்றோர் பழிக்கு நாணும் பண்புடையார்’’ என்று குறுந்தொகையும் கூறுகின்றன.


சான்றோர் என்பதற்கு எடுத்துக்காட்டாகப் பிசிராந்தையார் என்னும் புலவரையும் கோப்பெருஞ்சோழன் என்னும் அரசனையும் குறிப்பிடுகின்றது ஒரு புறநானூற்றுப்பாடல் .


பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் நேரில் கண்டு பழகாமலேயே கேள்விப்பட்ட நிலையிலேயே உணர்ச்சியொத்த நண்பர்களாய் இருந்தனர்.


கோப்பெருஞ்சோழன் வடக்கு நோக்கி இருந்து உயிர் நீத்தபோது தம்மைக் காணப் பிசிராந்தையார் வருவார் எனக்  கூறி அவருக்கு ஓர் இடம் ஒதுக்குமாறு வேண்டி இறந்தான்.


அவன் கூறியபடியே பிசிராந்தையார் அங்கு வந்தார் தம் நண்பனைக் காணாது அவன் நடுகல் கண்டு அவரும் உயிர் நீத்தார்.


இதனைக் கண்ட கண்ணகனார் என்னும் புலவர் ‘‘பொன்னும் மணியும் முத்தும் பவளம்; ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலைஇடங்களில் தோன்றினாலும் அவற்றை ஒன்றாகக் கோத்து மாலையாகக் கட்டும் போது அவை ஓரிடத்துத் தோன்றியவை போலக் காட்சியளிப்பது போன்று கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் இருவரும் வெவ்;வேறு இடங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒத்த உள்ளத்தினை உடைய சான்றோர்கள்.


ஆதலின் சான்றோர்கள் சான்றோர்களையே நட்புக் கொள்வார்கள்.


சால்பு அற்றவர்கள் சால்பு அற்றவர்களையே விரும்புவர்’’ எனப் பாடுகிறார். பிசிராந்தையார் பாண்டி நாட்டுப் புலவர் பாண்டியன் அறிவுடை நம்பிக்கே அறிவுரை கூறியவர். மக்களுக்கு அவன் அதிக வரி விதித்தபோது அவனிடம் சென்று அறிவுரை கூறும் ஆற்றல் அவரிடம் இருந்தது. அவர் வயதால் மூத்தவராக இருந்தாலும் நரை  முடி தோன்றாதவராக விளங்கினார்.


இதனைக் கண்ட புலவர்கள் அவரிடம் சென்று அவருக்கு நரை தோன்றாமைக்குக் காரணம் கேட்டனர்.


அப்போது அவர் நல்ல மனைவி, மக்கள், குறிப்பறிந்து நடக்கும் பணியாட்கள், நீதி தவறா அரசன், சான்றோர் பலர் வாழும் ஊர் ஆகிய இவை தமக்கு வாய்த்திருப்பதாலேயே நரை தோன்றவில்லை என்று காரணம் கூறி விளக்குகிறார்.


எனவே நரை திரை மூப்பு தோன்றாத வாழ்வுக்கு கவலையற்ற அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கும் வல்லமை சான்றோர்களுக்கு உண்டு என இதன் வழி அறிய முடிகிறது.


 


இத்தகைய சான்றோர் பலர் இருந்தால் ஒரு நாடு, ஒரு நகரம் சிறப்புறும் இன்பமும் பெறும் என எண்ணலாம்.


இங்கு எத்தகைய சான்றோர் என்பதையும் பிசிராந்தையார் குறிப்பிடுகிறார். ‘‘ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்என்னும் அவரது தொடர் மனம், வாய் கண் மூக்கு , செவி, என்னும் ஐம்பொறிகளையும் அவற்றின் விருப்பத்திற்குச் செல்லவிடாமல் அடக்கி நல்வழியில் செலுத்தும் கொள்கை உறுதியுடையவர்களே சான்றோர் என்பதைக் காட்டுகிறது.


இவர்கள் ஊரில் அல்லது நாட்டில்  வாழும் அனைவர்க்கும் முன் மாதிரியாக இருக்கத் தக்க பண்புடையவர்கள்.


இவர்களுடன் இருப்பதுதான் ஊரினர்க்கோ நாட்டினர்கோ ஏற்றம் தரும்.


எனவேதான் ஆத்திசூடியில்  ஒளவையார் ‘‘சான்றோர் இனத்திரு’’ என்று இளங்குழந்தைகளுக்கு அறிவுரை கூறுகின்றார் போலும்.


சான்றோர் என்பவர்க்கு உரிய கருத்து ஒன்றினையும் நற்றிணை சுட்டுகின்றது. அவர்கள் செல்வம் என்று எதைக் கருதுவார்கள் என ஒரு பாட்டு கூறுகின்றது. செல்வாக்கு, சிறந்த (கார் போன்ற) ஊர்திகள் யாவற்றையும் செல்வம் என்று சான்றோர்கள் கருதமாட்டார்கள்.அவர்கள் தம்மைச் சார்ந்தோர் துன்பம் துடைத்தலே சிறந்த செல்வம் எனக் கருதுவார்களாம் எனவே உள்ளத்தால் இரக்கம்கொண்டு பிறர்க்கு உதவும் பெருந்தகையாளர்களே சான்றோர் ஆவர்.                  


திருக்குறளில் வள்ளுவர் சான்றாண்மை என்று ஓர் அதிகாரமே(99) பொருட்பாலில் வகுத்துச் சான்றார் பண்புகளைத் தொகுத்துக்கூறுகிறார் அன்பு , பழி பாவங்களுக்கு அஞ்சி நடக்கும் நாணம், உலகநடை அறிந்து ஒழுகும் ஒப்புரவு, இரக்கம் எனப்படும் கண்ணோட்டம் , உண்மை ஆகிய ஐந்து பண்புகளே சான்றாண்மை என்னும் கட்டடத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் எனச் சுட்டிக்காட்டி நல்ல பண்புகளை எல்லாம் குணமாகக் கொண்டு ஒழுகுபவரே சான்றோர் என்கிறார் வள்ளுவர்.


மேலும் பிறர் தீமை சொல்லாத பெருந்தன்மையும் பணிவுடைமையும், பகைவர்க்கு அருளும் பண்பும், என்றும் மாறாக் கொள்கை உறுதியும் , துன்பம் செய்தவர்ககும் இன்பம் செய்யும்இயல்பும் உடையவர்களே சான்றோர் என்பது வள்ளுவர் தரும் விளக்கம்.  இவர்கள் பண்பு குன்றினால் நிலவுலகம் தாங்காது என்றும் சுட்டுகிறார் அவர்.


சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் நீதி நேர்மையுடன் இருப்பதே சான்றோர்க்கு அழகு என்பது வள்ளுவர் கருத்து.


தன் மகனைச் சான்றோன் எனப் பிறர் பாராட்டுவதைக் கேட்கும் தாய் அவனைப்பெற்ற பொழுதைக் காட்டிலும் பேரின்பம் அடைவாள் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.


இத்தகைய சான்றோர்களுடன் கூடிப் பழகி இருப்பது படிக்கப் படிக்கப் பல சுவைதரும் இலக்கியம் போன்றது என்பதும் வள்ளுவர் கருத்து.


நாலடியார், பழமொழி நானூறு முதலிய ஏனைய நீதி நூல்களும் சான்றோர் பற்றி விளக்கம் தருகின்றன


இசையும் எனினும் இசையாது எனினும் வசைதீர எண்ணுபவரே சான்றோர்  என்றும் வறுமையுடன் வாழ்ந்தாலும் பழிச்செயல் செய்யாதவர் சான்றோர் என்றும்: கள், திருட்டு முதலிய தீய பழக்கங்களைக் கடிந்து ஒதுக்குபவர் சான்றோர் என்றும்: தினையளவு சிறு உதவி செய்தாலும் பனையளவு பெரிதாகக் கருதிப் பாராட்டும் இயல்பினர் சான்றோர் என்றும்: பிறர் பிழை பொறுக்கும் பெற்றியர் சான்றோர் என்றும் நாலடியார் கூறுகின்றது.


சான்றோர் கடங்கொண்டும் செய்வார் கடன் சான்றவர் கையுண்டு கூறுவர் மெய் என்னும் பழமொழிகள் வழங்கியதைப் பழபொழி நானூறு என்னும் நூல் எடுத்துக் காட்டுகின்றது.


தான் பெற்ற பிள்ளையைப் பண்புமிக்க சான்றோனாக வளர்ப்பது தான் பெற்றவள் கடமை என்பபதைக் கொன்றை வேந்தனில் ‘‘சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு’’ என ஒளவையார் குறிப்பிடுகின்றார்.


இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டுக் கொதித்தெழுந்த கண்ணகி மதுரை நகரில் ‘‘சான்றோரும் உண்டு கொல், ‘‘ அதாவது  ஈன்ற குழந்தையை எடுத்து வளர்க்கும் சான்றோர்கள் இருக்கிறார்களா எனக் கேள்வி கேட்டு இகழும் நிலையைக் காண்கிறோம்.


சான்றோர்கள் இருப்பின் ஒரு நாட்டின் நீதி அழியாது என்னும் தமிழ்ச் சமுதாயத்தின் நம்பிக்கையை இங்கு உணரமுடிகிறது.


இடைக்காலததில் சான்றோர் என்னும் சொல்லைத் தமிழறிவு மிக்க சங்ககாலப் புலவர்களைக் குறிக்க உரையாசிரியர்கள் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் பாடலை எடுத்துக்காட்டுக் காட்டும்போது ‘‘சான்றோர் செய்யுளிற் காண்க’’ எனச் சுட்டிக்காட்டுகின்ற போக்கை உரையாசிரியர்களிடம் காண்கின்றோம்.


கவிச்சக்கரவர்ததி கம்பர்தன் இராமாயணத்தில் , காட்டிற்குச் சென்ற இராம இலக்குவர் கோதாவரி ஆற்றினைக் கண்டபோது, ‘‘சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்’’ எனக் கூறுகின்றார்.


சான்றோர் கவிதை அணி அழகும், பொருள், ஆழமும், அகம் புறமாகிய பிரிவுகளும் (துறைகளும்) குறிஞ்சி , முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளில் (ஐந்துநிலங்களில்) செல்லும் ஆற்றலும் கருத்துத் தெளிவும் தண் என்னும் ஒழுக்கம் உணர்த்தும் பண்பும் கொண்டது.இத்தகைய இயல்புகள் கோதாவரி ஆற்றுக்கும் உண்டு எனக் குறிப்பிடுகிறார்.


சோழ நாடு சோறுடைத்து, பாண்டி நாடு முத்துடைத்து, சேர நாடு யானையுடைத்து, இது போலத் தொண்டை நாடு சான்றோர் உடைத்து என நாட்டின் சிறப்பு கூறாகச் சான்றோரைக் கூறுவதும் தமிழ்மரபாகும்.


எனவே தமிழில் சான்றோர் என்பது வீரம் (உடலுரம்) உறுதி, உயர்ந்த பண்புகள், அறிவு,  படைப்பாற்றல் , வழி நடத்தும் ஆற்றல், இறையுணர்வு முதலியவற்றைப் பெற்ற பெரியோர்களையே குறிக்கின்றது.


தமிழ்ச் சான்றோர் என்னும தொடரில் உள்ள தமிழ் என்பது மொழியை மட்டும் குறிக்காது இலக்கியம் , பண்பாடு படைப்பாற்றல், அறிவுரை கூறும் பாங்கு செயல்திறன் ஆகியவற்றையும் சுட்டும்.


தமிழ்ச் சான்றோர் எனப்படுபவர் தமிழ்மொழி அறிவும் தமிழில் இலக்கியம் பற்றிய தெளிவும், படைப்பாற்றலும், தமிழ்ப்பண்பாடு அறிந்து ஒழுகும் தன்மையும், தமிழ் தொடர்பான அறிவுரை கூறி வழிநடத்தும் ஆற்றலும் உடையவரையே குறிக்கும் எனலாம்.


 


Thinnappan, SP. Ivar Caanroor (Concept of Elite person in Tamil Literature. Tamil Murasu Singapore (1997) p6&p6) (2 Pages) (Tamil


 


 


சிலப்பதிகாரம் ஒரு மணியாரம்


தமிழ் நாட்டின் தரணி போற்றும் பெருமைக்குக் காரணமான இலக்கியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம் என்று, ‘‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணியாரம் படைத்த தமிழ்நாடு’’ என்னும் வரிகளால் புதுமைக் கவிஞர் பாரதியார் போற்றிப் புகழ்கிறார்.  சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளை ‘‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் இளங்கோவைப்போல் வள்ளுவன் போல் பூமிதனில் யார்கணுமே கண்டதில்லை’’ என்று அவர் பாராட்டுகிறார். இரண்டினையும் இணைத்துச் ‘‘சேரன் தம்பி சிலம்பு இசைத்ததும்’’ என்றும் இயம்புகிறார் .  இத்தகைய சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதற்காப்பியம்.  கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த நூலாகும். இந்நூல் மணியாரம்ஆக இலங்குவதை எடுத்து விளக்குவதே இந்தச் சிறிய கட்டுரையின் நோக்கமாகும்.


மணியாரம் என்றால் சிதறிக் கிடக்கின்ற மணிகளைப், பல இடங்களில் தோன்றிய நவரததினங்களைப் பொற்சங்கிலியால் சேர்த்து இணைத்து ஒன்றாக மாலையாகக் கட்டி அணிகலானாக அமைப்பது என்று பொருளாகும்.  இவ்வகையில் சிலபதிகாரத்தை நோக்கினால் பின்வரும் செய்திகள் புலப்படும்.


சிலப்பதிகாரத்துக்கு முன் தோன்றிய சங்க இலக்கியங்களிலுள்ள பாடல்கள்-அதாவது எட்டுத் தொகை பத்துப் பாட்டு ஆகியவற்றிலுள்ள பாடல்கள் ஒருணர்ச்சி அல்லது ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து எழுந்த நாடகத் தனி நிலைப்பாடல்கள் ஆகும்.  ஆனால் சிலப்பதிகாரமோ கோவலன், கண்ணகி , மாதவி வாழ்க்கையைச் சித்திரிக்கும் வகையில் எழுந்த பல உணர்ச்சிகளை, நிகழ்ச்சிகளை இணைக்கும மணியாரம் எனக் கூறலாம்.  சஙக இலக்கியப் பாடல் இக்காலச் சிறுகதை போன்றது.  சிலப்பதிகாரம் புதினம் போன்றது.


 சங்க இலக்கியப்பாடல்களில் காதல் பற்றிய பாடல்கள் அகம் எனவும் மற்ற பொருள் பற்றியவை புறம் எனவும் பாகுபடுத்தப்படும் .  சிலப்பதிகாரமோ அகத்தையும் புறத்தையும் இணைக்கும் மணியாரமாகத் திகழ்கிறது. இதிலும் காதலும், போரும், செங்கோல் சிறப்பும், மக்கள் வாழ்க்கையும் உண்டு.


சங்ககால மக்கள் நிலத்தை நானிலமாக- குறிஞ்சி(மலை) , முல்லை(காடு) மருதம்(வயல்) நெய்தல்(கடல்) எனப் பாகுபடுத்திப் பார்த்தனர்.  இங்கு வாழும் மக்கள் வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டும் போக்கில் கதையைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோ நடததி அவற்றை இணைத்துக்காட்டுகிறார்.  மேலும்  முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து கதிரவன் கொடுமைக்கு ஆளாகிப் பாலை நிலம் என்ற வடிவம் பெறும் என்பதையும் இளங்கோ இயம்புகிறார்.  பாலை நில மக்கள் வாழ்வு வேட்டுவ வரியிலும், முல்லை நில மக்கள் வாழ்வு ஆய்ச்சியர் குரவையிலும், நெய்தல் நில மக்கள் வாழ்வு கானல் வரியிலும், குறிஞ்சி நிலக் குறவர் செயல் குன்றக் குரவையிலும், மருத நில மக்கள் வாழ்வு நாடுகாண் காதையிலும் சித்திரிக்கப்படுகின்றன.


சங்ககாலத்தில் தமிழகம் சோழநாடு, சேரநாடு, பாண்டியநாடு என மூன்று பிரிவுகளாகப் பிரிவுண்டு கிடந்தது.  இம்மூன்றையும் இணைத்துத் தமிழ் நாடு எனக் கண்ட பெருமை சிலப்பதிகாரத்துக்கே உண்டு.  கண்ணகி எனும் ஞாயிறு (சூரியன்) சோழநாட்டில் உதித்தது.  பாண்டிய நாட்டில் கனன்றது.  சேரநாட்ழல் மறைந்தது என்று பேராசிரியர் வரதராசனார் பேசுகிறார்.  இந்த வகையில் சிலப்பதிகாரம், தமிழ் நாட்டின் தேசிய காப்பியமாகவும் திகழ்கிறது.


சிலப்பதிகார காலத்தில் இருந்த சைவ, வைணவ, சமண , பௌத்த மதங்களை ஒருங்கிணைத்து மத நல்லிணக்கம் காட்டிய இலக்கியம் சிலப்பதிகாரம்.  பூம்புகார் நகரத்தில் இச்சமயங்களின் பல்வேறு தெய்வங்களுக்குரிய கோயில்கள் இருப்பதையும் இளங்கோ குறிப்பிடுகிறார்.   மேலும் கதை மாந்தர்களில் கோவலன் சமண சமயத்தவன் . மாதவி பௌத்தத் துறவியாகிறாள்.  கண்ணகிக்கு அடைக்கலம் தந்த மாதரி வைணவ சமயத்தவள்.  கண்ணகியைத் தெய்வமாகக் காணும் வேடர்கள் கொற்றவை வழிபாட்டினர்.  குன்றக்குரவர் முருகனை வணங்குபவர்கள்.  கோவலன் நண்பன் மாடலன் மறையோனோ வைதீக மதம் போற்றுபவன். இப்படிப் பல்வேறு சமயங்களை இணைத்துப் போற்றும் பாடல்களும் சிலம்பில் இணைக்கப்பட்டுள்ளன..


தமிழை இயல், இசை , நாடகம் என்று முத்தமிழாகப் பகுப்பர்.  இயல் எனபது இலக்கணம், இலக்கியம் என இருவகைப்படும்.  இசை என்பது வாய்ப்பாட:டு, கருவி இசை என இருவகைப்படும்.  நாடகம் என்பது கூத்து நடனம் என இருவகைப்படும். இவற்றைப்பற்றி விரிவாகப்பேசும் இலக்கியம் சிலப்பதிகாரம்.  இந்த முத்தமிழையும் இணைத்துப் பேசும் முதற் காப்பியம் சிலப்பதிகாரம்


இலக்கியத்திற்குரிய வடிவம் இரண்டு. ஒன்று செய்யுள், மற்றொன்று உரைநடை. சிலப்பதிகாரம் செய்யுள்  வடிவில்  அமைந்திருந்தாலும்  இடையிடையில் உரைநடையையும் கலந்து இணைத்துப் பேசுகிறது.  எனவே இதனை உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என பெரியோர் பாராட்டுவர்.


சோழப் பேரரசனையும் சேர வேந்தனையும் பாண்டிய அரசனையும் ஒரு சேரப் பாராட்டி அவர்களிடையே கண்ணகி வழிபாட்டில் ஒற்றுமை தோன்ற வழிவகுத்தவர் இளங்கோ.  எனவே தமிழ் நாட்டின் முடியுடை வேந்தர் மூவரின் தலைநகரங்களாகிய புகார், மதுரை, வஞ்சி என தம் முப்பெரும் காண்டங்களுக்குப் பெயரிட்டு படைத்துள்ளார் இளங்கோவடிகள் . இந்நகரங்களில் வாழும் மக்களைத் தமிழராக இணைத்துப் பேசியவரும் இளங்கோவடிகளே ஆவார்.


சிலப்பதிகாரக் காலத்தில் தமிழகப் பெண்கள் குலமகளிர் என்றும் கலைமகளிர் என்றும் இரு பிரிவுகளாக இருந்ததைக் காணமுடிகிறது. குலமகளிர்க்குக் கலையும் கலை மகளிர்ககுக் கற்பும் வலியுறுத்தப்பெறாத காலம் அது.  குலமகளிர் சார்பாகக் கண்ணகியும் கலைமகளிர் சார்பாக மாதவியும கதை மாந்தர்களாக வந்து கலை, கற்பு ஆகியவற்றின் தேவையை இணைத்துக் காட்டும் இலக்கியம் சிலப்பதிகாரம்.  கண்ணகி கலைச்சுவை அறியாத காரணத்தால் கோவலனைப் பிரிந்து வருந்த நேரிட்டது.  மாதவியோ கற்பின் பெருமையை உணர்ந்து கற்புடையவளாக வாழ்ந்து காட்டினாள். .  சேற்றில் பிறந்த செந்தாமரையாகச் சிறப்புற்று நின்றாள்.


கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் மணிமேகலை.  மாதவியின் தாய் சித்திராபதி.  அவள் பரத்தையர் ஒழுக்க நெறியில் ஊறிப்போனவள். அவள் மகள் மாதவியோ கோவலனுடன் வாழ்ந்து கற்புக்கரசியாக விளங்கியவள்.  மணிமேகலைக்கு மாதவி தன் கலைத் திறமைகளைக் கற்பித்துப் பின்னர் அவள் பரத்தமை ஒழுக்கம் கொள்ளலாகாது என விளக்கி அவளைப் பௌத்த துறவியர்கினாள் சித்தராபதி.  மாதவி, மணிமேகலை மூவரையும் ஒப்பிட்டால் சித்திராபதி சாக்கடை வாழ்வினள்.  மாதவி ஒரு பூக்கடை போலக் கற்பு மணம் வீசி நின்றவள்.  மணிமேகலையோ பசிப்பிணி களைந்து தொண்டறம் பேணிய மேக்கடை வாழ்க்கை வாழ்ந்தவள். இத்தகைய மூன்று வாhழ்க்கையை இணைத்துக் காட்டுவது சிலப்பதிகாரமே ஆகும்.


வாழ்க்கைக்கு கலையும் ஒழுக்கமும் கட்டாயத் தேவை.  இவை இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து இருக்க வேண்டியவை.  கலையில்லாத வாழ்வு சுவையில்லாத உணவு போன்றது.  ஒழுக்கம் இல்லாத வாழ்வு சத்தில்லாத உணவு போன்றது.  உணவு சிறக்கச் சுவையும் சத்தும் வேண்டும் .  உண்மையான வாழ்வு சிறக் ககலையும் ஒழுக்கமும் கட்டாயத் தேவை .  இதனைக் கதையில் இணைத்துக் காட்டுவதுதான் சிலப்பதிகாரம்.


மேற்கண்ட பலவற்றின் இணைப்பு இருப்பதால்தான் பாரதியார் சிலப்பதிகாரத்தை ‘‘மணியாரம்’’ எனச் செப்புகிறார்.


 


 


69     Thinnappan SP  Cilappathikaaram Oru Maniyaaram in Mathavi Ilakkiya Manram Golden Jublee Souvenir (1961-2011) Singapore, 2011,   pp  64-66


 


 


 


 


 


 


 


பட்டுக்கோட்டையார் காட்டும் பட்டிமன்றம்


‘‘பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சிறப்பியல்புகள் இரண்டு. ஒன்று பாட்டு.  மற்றொன்று பண்பு. இதில் தனிச்சிறப்பு மூ:ன்றைரைக் கோடி தமிழ் மக்களுக்கும் புரியும் விதத்தில் பாடும் வண்ணம் .  கல்யாணசுந்தரம் பாடினார். என்று பட்டுக்கோட்டையாரின் சிறப்பை பாராட்டுகிறார் பொதுவுடமைப் புயல் ப..ஜீவானந்தம் . பாட்டிலே புதுமைப்பண்பையும் பண்பிலே புதுமைப் பாட்டையும் காட்டி நிற்கும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிச்சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டினை இயம்புவதே  இக்கட்டுரையின் நோக்கமாகும்.


இலக்கியவுலகில் சொற்போர் செய்யும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் இ;ப்போது நாடெங்கும் நடமாடக் காண்கிறோம்.  ஆனால் தமிழுலகில் இந்நிகழ்ச்சி இன்று நேற்று தோன்றியது அன்று.


அந்தக் காலத்தில் இந்நிகழ்ச்சி நடத்தும் இடம் பட்டிமண்டபம் என்னும் பெயரால் வழங்கிற்று’ ‘‘பதைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும் என்று சிலப்பதிகாரத்திலும் ‘‘பட்டிமண்டபம் ஏற்றிணை ஏற்றிணை எட்டினோடு இரண்டும அறியனையும்’’ என திருவாசகத்திலும் வரக்காண்கிறோம்.


இச்சொற்றொடரே இன்று பட்டிமன்றம் என்று வழங்கப்படுகிறது.  ‘‘வெவ்வேறு அணிகளாகப் பிரிந்து கொடுக்கப்பட்ட தலைப்புப் பொருளை ஆதரித்தும் எதிர்த்தும் பேசும் மேடை விவாத நிகழ்ச்சி’’ என்று தமிழ் அகராதி பட்டிமன்றம் என்னும் தொடருக்குப் பொருள் கூறுகின்றது. இந்நிகழ்ச்சியை இலக்கியத் தலைப்புகளைக் கொண்டு நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தவர் குன்றக்குடி அடிகளார். பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் இரு குழுவினர் சுவைபட வாதாடிய பின்னர் இறுதியில் நடுவர் தீர்ப்பு வழங்குவார். இந்நிகழ்ச்சி இன்றும் தொலைக்காட்சியிலும், மற்ற நிகழ்ச்சிகளிலும் மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் அளவுடையதாகத் திகழ்கிறது.  ஒரு தலைப்பு வெட்டியும் ஒட்டியும் பேசப்படுவதால்அதன் நன்மைகளையும் தீமைகளையும் மக்கள் அறிந்து சிந்தித்து வழிவகுக்கும் நிகழ்ச்சிகளாக இவை முன்னே நிகழ்ந்தன.  இப்போது வெறும் நகைச்சுவை நிகழ்ச்சிகளாகவே மாறிவிடட்டன . இதனால்


‘‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்


மிகைநாடி மிக்கக்கொளல்’’


என்னும் போக்கு குறைந்துவிட்டது. இந்நிலையில் பட்டுக்கோட்டையார் இந்தப் பட்டிமன்ற உத்தியைப் பயன்படுத்திய பழைய பாடல் ஒன்றைப் பார்ப்போம். குற.


ரோஜா : ஓ மல்லியக்கா


மல்லி: ஏண்டி ரோஜா அக்கா எனத் தொடங்கும் பாடலில்


ரோஜாவும் மல்லியும்:தங்கச்சி தங்கச்சி தாமரை தங்கச்சி எங்களுக்குள்ளே எவன்தான் சிறந்தவ?


எடுத்து சொல்லடி தங்கச்சி? என்று தொடங்கிப் பட்டிமன்றச் சாயலில் தொடரும் பாடலில் நடுவர் தாமரை கூறும் தீர்ப்பாகக் கீழ்க்கண்ட வரிகள் அமைகின்றன.


 மலருவதெல்லாம் உலருவதுண்டு மறந்துட வேணாம்


மனிதரைப்போல வம்புகள் பேசி பிரிந்திட வேணாம்!


தாமரை: உலகில் சிறந்தது என்ன?


மல்லி: அன்பு உள்ளவர் செய்திடும் தானம்!


தாமரை: அந்தத் தானத்தில் சிறந்தது என்ன?


ரோஜா ;: நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்!


தாமரை: அதிலும் சிறந்தது என்ன?


மல்லி: பல அகிம்சா மூர்த்திகள் ஆராய்ந்து சொன்ன உலக சமாதானம்!


தாமரை: அதை நாம் உணர்ந்து நடக்க வேண்டும். எல்லோரும் ஒன்றாய்


         இருக்க வேண்டும் .அப்போதுதான் உலவும் சமாதானம் எங்கும்


         நிலவும் சமாதானம்


    மூவரும் : அதை நாம் உணர்ந்து நடந்திடுவோம். எல்லோரும்    


   ஒன்றாய் இருந்திடுவோம்.


என்று முடிகிறது.  இப்பாடலில் மல்லிகையும ரோஜாவும் தத்தம் பெருமைகளைக் கூறிப் போற்றியும், ஒன்றின் சிறுமையை மற்றது கூறித் தூற்றியும் சண்டையிடும் போக்கினை முற்பகுதி காட்டுகிறது. இப்பகுதியில் கவிதைக்குரிய கற்பனையும் எள்ளலும் நடை எளிமையும் இணைந்து இயம்புகின்றன. பேசாப் பொருளைப் பேச வைப்பதுதானே கற்பனை!


நீ மலரும் முன்னே வந்து கடைக்கு மலிஞ்சு போறவ!


நீ உலருமுன்னே தொட்டாக்கூட உதிர்ந்து போறவ’’


என்னும் அடிகளில் எதுகை நயமும் எள்ளல் உணர்ச்சியும் இருப்பதை படிப்பவர் உணரமுடியும். தாமரை நடுவராக வந்து பேசும் பிற்பகுதியில் கவிதை உணர்த்தும் கருத்தாழத்தைக் காண முடிகிறது.


‘‘மலருவதெல்லாம் உலருவதுண்டு


மறந்துடவேண்டாம்அக்கச்சி அக்கச்சி


மனிதனைப்போல  வம்புகள் பேசி


பிரிந்திட வேண்டாம் அக்கச்சி


என்று தாமரையின் தொடக்கப் பேச்சு ரோஜா. . . மல்லிகை ஆகியவற்றின் வாதத் தொடர்களையே எடுத்து வைத்து மல்லிகையையும் மனிதனையும் வேறுபடுத்திக் காட்டும் போக்கு அருமையிலும் அருமை.  உரையாடல் உத்தியைப் பயன்படுத்தி  உலக சமாதானத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் கவிஞனின் சமுதாய அக்கறையையும் மனித நேயத்தையும் போற்றாமல் இருக்க முடியாது. இங்குதான் கவிஞர் கல்யாண சுந்தரம் கவிஞருள் உயர்ந்து காட்சி அளிக்கிறார்.


ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று பாரதியின் கருத்தை பட்டுக்கோட்டையார் அருமையான கற்பனைச் சொற்போர் வாயிலாக பூக்களைப் பாக்கள் வழியாகப் பேச வைத்து இன்று பூவுலகிற்குத் தேவையான கருத்தைத் தந்துவிட்டுச் சென்றுள்ளார். அன்பின் வழியது உயிர்நிலை (குறள்) இதன் வழி அமைதியும் இன்னா செய்யாமையும் (அகிம்சை) இனிதே பிறக்கும் என்பதையும் கவிஞர் காட்டியுள்ளார். இவ்வாறு மேற்கூறிய பட்டுக்கோட்டையின் பாட்டில் உணர்ச்சி , கற்பனை, உரையாடல் உத்தி மிக்க கவிதைப் பட்டிமன்றம காட்சி அளிப்பதில் அவர் மாட்சி புலப்படுகிறதன்றோ!


 


*(கழனிக் கவிமலர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா மலர் மே முதல் நாள் 2009  சிங்கப்பூர் பக் 21-21)


 


 


தமிழர் கண்ட பக்தி


 


 


      வணிகத்தின் மொழி ஆங்கிலம் என்றால்,  தூதின் மொழி பிரெஞ்சு என்றால், காதலின் மொழி இத்தாலியம் என்றால், தத்துவத்தின் மொழி ஜெர்மானியம் என்றால், சட்டத்தின் மொழி    லத்தீன் என்றால், உலகில் பக்தியின் மொழி தமிழ் என்று பன்மொழி அறிந்த அறிஞர்கள் பகர்வர்.  இத்தகைய இயல்பைத் தமிழுக்கு ஏற்றிய பெருமை ஆழ்வார்களையும் நாயன்மார்களையுமே சாரும் என்பதில் ஐயமில்லை.  இவர்கள் காட்டிய பக்தி நெறி என்பது வெறும் உணர்ச்சி வெள்ளம் அன்று.   குருட்டு நம்பிக்கையுடன் ஆடுகின்ற கூத்துமன்று.  வரட்டுத் தத்துவத்தின் வெளிப்பாடுமன்று. நம்பிக்கை, உணர்ச்சி அறிவு என்ற முத்திறக் கூறுகளும் கூடி நின்று முகிழ்த்த நறுமலரே இவர்கள் காட்டிய பக்தி நன்னெறியாகும்.


 


      பக்தி என்றால் என்ன? முழு முதற்பொருளாக இருக்கின்ற இறைவனிடத்தில இடையறாத அன்பு செலுத்தி வழிபாடு செய்வதைத்தான் பக்தி என்கிறோம்.  கல்வியின் பயன் கடவுளைத் தொழுவதே என்றும், மனக்கவலை மாற்றுவதற்கும், பிறவிப் பெருங்கடல் நீந்திக் கரை சேருவதற்கும் பெருந்துணையாக இருப்பது கடவுள் வழிபாடு (குறள் - 2,7, 10) என்றும் திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார்.  இறைவழிபாட்டால் பிறவிக்குக் காரணமாய இருக்கின்ற இருள்சேர் இருவினையும் நீங்கும் என்றும், இடையறாது இன்பம் தருகின்ற வீடுபேறும் கிடைக்கும் என்றும் ஆழ்வார்களும், நாயன்மார்களும் பாடுகின்றார்கள்.  ‘‘இம்மையே தரும்  சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம்’’(7-3,1)  என்று இறைவழிபாட்டினால் வரும் இம்மைப் பயனைச் சுந்தரர் இயம்புவது போல ஆழ்வார்களும்  இயம்புகின்றனர்.  ‘‘ஏகன் ஆகி இறைபணி நிற்க மலம் மாயை தன்னோடு வல்வினை இன்றே’’  என்று இறைபணியின் - பக்தியின் பயனைச் சிவஞான போதம் என்னும் சாத்திரமும் (சூ. 10) செப்புகிறது.


 


      பக்தியை ஏற்றுக் கொள்ள இறைவன் எங்கே இருக்கிறான்? என்ற வினாவிற்கு விடை காண முயல்வோம்.  உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவனாகிய இறைவன் உலகில் வேறாகவும் ஒன்றாகவும் உடனாகவும் இருக்கிறான்.  இவ்வாறு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் உலகில் இரண்டு இடங்களில்  வெளிப்பட்டு நிற்கின்றான்.  அந்த இரண்டு இடங்கள் யாவை?  ஒன்று திருக்கோயில்களில் வீற்றிருக்கும் இறைவன் எழிற் கோலங்களைத் தெற்றெனக் காட்டும் திருவுருவங்கள். இரண்டு ‘‘இலங்கும் உயிர் உடல் அனைத்தும் ஈசன் திருக்கோயில்’’ என்று கருதி இனிய தொண்டுகளை இடையறாது செய்யும் தொண்டர்கள் அல்லது அடியார்களின் திருவுள்ளம்.  முன்னது இறைவனின் அசையாத் திருமேனி.  பின்னது இறைவனின் அசையும் திருமேனி.  இவற்றை முறையே ‘‘படமாடுங் கோயில் ’’ என்றும் ‘‘நடமாடும் கோயில்’’ என்றும் (திருமந்திரம் - 1821) திருமூலர்  கூறுகிறார்.


 


      தலங்கள் தோறும் சென்று அங்குள்ள திருக்கோயிலின் கண் வீற்றிருக்கும் தெய்வத்தைப் பாடிப் பரவிய நம் நாயன்மார்களும், ‘‘கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே’’ (அப்பர் -6 -10-6)என்றும், ‘‘தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை, கற்பகத்தை’’( நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்) என்றும் கூறுகின்றனர். திருவாசகமும் , ‘‘வேத முதல் விண்ணோரும்  மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்’’ ( திருவெம்பாவை 10) என்றும், ‘‘கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கம் எங்கள் பெருமான்’’ ( சிவபுராணம் 46-48)  என்றும் பேசுகிறது.


 


      எனவே பக்தி அல்லது இறைவழிபாடு என்பது திருக்கோயிலில் இருக்கும் தெய்வத்தையம், இறைவனை எண்ணி மன்னுயிர்க்குத் தொண்டு செய்யும் மாண்புடைய தொ்ணடர்களையும் போற்றி வழிபாடு செய்வதாகும்.  இவற்றை முறையே ஆண்டவன் வழிபாடு, அடியார் வழிபாடு  என்று சைவ சமயமும், பகவத் ்கைங்கர்யம், பாகவத கைங்கர்யம் என்று வைணவ சமயமும் பேசுகின்றன.  இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணுடையன என்றும், ஒன்றின்றி மற்றொன்று இயங்கவல்ல தனித்தன்மை வாய்ந்தது என்றும் எண்ணுதல் கூடாது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதாரமாகவும், உறுதுணையாகவும் இருக்கக் கூடியவை.  ஒன்றினால் மற்றொன்று சிறப்பு அடைகிறது. பக்தி என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்களாகவே தான் ஆண்டவன் வழிபாடும் அடியவர் வழிபாடும் அமைகின்றன.  நாணயம் செல்லுபடியாக இரண்டு பக்கமும் பழுதில்லாது நன்றாக அமைய வேண்டும் என்பது நானிலம் அறிந்த உண்மை.  எனவே பக்தி சிறப்படைய, பயன்தர இந்த இரண்டும் செம்மையாக அமைய வேண்டும்.  இந்த இரண்டும் தான் இந்து சமயங்கள் அனைத்திற்கும் அடித்தளமாக இருக்கும் வேதத்தின் உள்ளுறை என்று கருதிச் சேக்கிழார்,


 


                  ‘‘வேத உள்ளுறையாவன விரிபுனல் வேணி


                   நாதர்  தம்மையும் அவரடியாரையும் நயந்து


                   பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே


                   காதலாலவைஇரண்டுமே செய் கருத்துடையார்’’(பெ.பு்.2990


) என்று கூறுகின்றார். 


      மேலும் மக்கட் பிறப்பின மாபெரும் நோக்கமே இந்த வழிபாடுதான் என்று திருஞானசம்பந்தப் பெருமான் , பூம்பாவையை எழுப்புகின்ற போது,


 


                  ‘‘மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும்


                   அண்ணலார் அழயாரதமை அமுது செய்வித்தல்


                   கண்ணினால் அவர்நல்விழாப் பொலிவு கண்டார்தல்


                   உண்மையா  மெனில் உலகவர்முன் வருக’’( பெ. பு. 2990)


என்று உரைத்ததாகச் சேக்கிழார் பாடுகிறார்.  ஆதலால் ஆலயத்தில் ஆண்டவனைப் பாடிப் பரவி வழிபடுதலும், அனைத்துயிர்களுக்கும் தொண்டு செய்தலும் பக்தியின் பகுக்க முடியாத இரண்டு கூறுகள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு பகுதிகளையும் இணைத்து நிற்பது இதயத்தே இருக்கும் அன்புணர்ச்சிதான் என்பதை ஒருபோதும் மறத்தல் கூடாது.  இறை வழிபாட்டினால் தொண்டும், தொண்டினால் இறைவழிபாடும் சிறப்படைகின்றன.  இதனைப் பெரிய புராணத்தில் பேசப்படும் தொண்டர்களின் வாழ்வு நன்றாக உணர்த்துகின்றது.


 


( செண்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாமலர், சிங்கப்பூர் 1983 )


                              ----------------------------


 


 


நாவுக்கரசரும் பாவுக்கரசரும்


 


 


திருநாவுக்கரசர் ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தின் நடுநாட்டில் தோன்றித் தேவாரப் பாடல்கள் யாத்துச் சைவத்தையும் தமிழையும் வாழ்வித்தார்; பாவுக்கரசர் பாரதியாரோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டி நாட்டில் தோன்றிப் பைந்தமிழ்ப் பாடல்கள் பல பாடிப் பாரத சமுதாயத்தையும் தமிழையும் வாழ வைத்தார். முன்னவரின் தோற்றத்தைக் கூற வந்த சேக்கிழார் பெருமான், அலகில் கலைத்துறை தழைப்ப, அருந்தவத்தோர் நெறி வாழ உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல' மலரும் மருணீக்கியார் அவதாரம் செய்தார், என்பார் (பெ.பு. 1288). பின்னவரைப் பற்றிய பேசும் கவிமணியோ பாரதத்தாய் செய்த தவப் பயனாய் வந்த பாவலன் சுப்பிரமணிய பாரதி' என்றும் சீருயரும் தமிழ் மக்கள் செய்த தவத்தால் தென்னாடு சிறக்க வந்த செம்மல்' என்றும் குறிப்பிடுகிறார். முன்னவர் எண்பதாண்டுகள் இவ்வுலகில் சிந்தை இடையறா அன்பும், திருமேனி தன்னில் அசைவும், கந்தை மிகையாங் கருத்தும், கைஉழவாரப் படையும், வந்திழி கண்ணீர் மழையும் வடிவிற் பொலிதிருநீறும் கொண்ட' (பெ.பு. 2173) அந்தமிலாத் திரு வேடத்துடன் வாழ்ந்த அடியார்; பின்னவரோ ஏறத்தாழ நாற்பதாண்டுகள் இவ்வுலகில் இருந்து முறுக்கு மீசையும் முண்டாசுக் கட்டும் வெள்ளை உள்ளமும் வீரப் பார்வையும் ஆர்க்கும் அஞ்சாத சொல்லும் யாரிடமும் கெஞ்சாத விழிகளும் கொண்டு விளங்கியவர். இளமையிலேயே இருவரும் பெற்றோரை இழந்து நின்றாலும் முன்னவர் துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர்; பின்னவர் செல்லம்மாள் என்னும் பெண்ணை மணந்து இல்லற வாழ்வில் நின்ற பெரியார். முன்னவர் காலத்தில் தமிழகத்தின் வட பகுதி பல்லவராட்சியிலும் தென்பகுதி பாண்டியர் ஆட்சியிலும் இருந்தன. பின்னவர் வாணாளில் இந்தியா முழுதும் ஏறத்தாழ ஆங்கிலேயர் ஆட்சியில் சிக்குண்டு அடிமை நாடாக இருந்தது.


 


முன்னவர் தெய்வ பக்தியை முன்னிறுத்திப் பாடினாலும் தம் காலத்துச் சமுதாய நிலை அரசியல் முதலியவற்றை ஆங்காங்கே சுட்டிக்காட்டிச் செல்வதையும் நாம் உணரலாம். அதுபோலப் பின்னவர் தேசபக்தியை முதன்மையாகக் கருதிப் பாடினாலும் தெய்வத்தை, சமுதாயச் சீர்திருத்தத்தை, தீந்தமிழ்ப்பற்றைத் தீவிரமாகப் பாடிச் செல்லும் போக்கையும் நாம் பார்க்கிறோம். இவர்கள் இருவரும் வாழ்ந்த காலம், சூழ்நிலை, முதன்மையாகப் பாட எடுத்துக் கொண்ட பொருள்கள் வேறுபட்டாலும் இவர்களிருவரிடையே உள்ள கருத்தொற்றுமைகள் ஒரு சிலவற்றை இங்கே காண முயல்வோம்.


 


என் கடன் பணி செய்து கிடப்பதே


 


குறிக்கோள் என்பது வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று. குறிக்கோளற்ற வாழ்வு இலையும் மலரும் கனியும் அற்ற மரம் போலப் பயனற்ற ஒன்று'' என்பர் அறிஞர். எனவே தான் எவ்வினையோர்க்கும் இம்மையிற்றம்மை இன்பம் பயக்குமோர் இலக்கு வேண்டும்'' என்று பாடுகிறார் மனோன்மணிய ஆசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை. இளமையில் குறிக்கோளிலிலாது கெட்டேன்'' என்று திருநாவுக்கரசர் பாடினாலும் சலம் பூவோடு தூபம் மறந்தறியேன், தமிழோடிசை பாடல் மறந்தறியேன் : உன்னாமம் மறந்தறியேன்; (தேவாரம் 4164) என்றும் தன் கடன் அடியேனையும் தாங்குதல். என் கடன் பணி செய்து கிடப்பதே'' (தேவாரம் 5420) என்றும் தம் குறிக்கோளைக் குறிப்பிடுகின்றார். பாரதியாரோ விநாயகர் நான்மணி மாலையில் (25) நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்குழைத்தல் இமைப் பொழுதுஞ் சோராதிருத்தல் - உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான் சிந்தையே இம்மூன்றுஞ் செய்'' என்று தன் குறிக்கோளைக் கூறுகின்றார். பணி செய்வது நம் கடன்; பயன் தருவது அவன் கடன்'' என்று பகவத் கீதை கூறும் கருத்தில் இரு பெரியாரும் ஒன்றி நிற்கும் இயல்பை நாம் இங்கு பார்க்கிறோம். இறைவனை மறந்தறியா இயல்பு பற்றி நாவுக்கரசர் கூறுவதைப் போலப் பாரதியார் விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திரதேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே!' என்று சுதந்திரத் தாயை வணங்கி நிற்கிறார். செந்தமிழ்த் தாய்க்கு சோதிமிக்க நவ கவிதை; எந்நாளும் அழியாத மகா கவிதையை இசையோடு இயற்றித் தருவதை இருவரும் குறிக்கோளாகக் கொண்டு இலங்குகின்றனர். கையிற் கொண்ட உழவாரத்தால் புறத் தூய்மையையும் இதயத்தே எழுந்த இனிய தேவாரப் பாடல்களால் அகத்தூய்மையைக் காட்டித் தெய்வ நம்பிக்கையை வலியுறுத்துகின்றார் திருநாவுக்கரசர். பாரதியார் தம் பாட்டுத் திறத்தால் மொழிப் பற்று, சமுதாயச் சீர்திருத்தம், சமய ஒருமைப்பாடு ஆகியவற்றுடன் தேசபக்திக் கனலை மூட்டுகின்றார். முன்னவர் நோக்கம் வீட்டுப்பற்று! பின்னவர் நோக்கம் நாட்டுப்பற்று! எனினும் பாரதியார் தம் பக்திப் பாடல்கள் வாயிலாக வீடுபேறு பற்றிப் பேசாமலில்லை.


 


நாமார்க்குங் குடியல்லோம்


 


இறைவனின் திருவருள் துணை கொண்டு வாழும் அன்பர்கள் எதுவரினும் எதிர்த்து நிற்கும் ஆற்றலுடையவர்கள் ஆவர்' என்பது திருநாவுக்கரசர் வாழ்வு காட்டும் படிப்பினை ஆகும். சமண சமயத்திலிருந்து சைவத்திற்கு மீண்ட திருநாவுக்கரசரை அழைத்து வருமாறு பல்லவ மன்னன் தன் பணியாளர்க்கு ஆணையிட்டான். ஏவலாளர் வந்து அப்பரை அழைக்கின்றனர். அப்போது நாவுக்கரசர் நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம் நரகத்திலிடர்ப் படோம் நடலையில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம் இன்பமேயெந்நாளும் துன்பமில்லை; தாமார்க்குங் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க வெண்குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடியிணையே குறுகினோமே' (தேவாரம் 7205) என்று பாடுகிறார். பாரதியாரும் மாயையைப் பழித்தல் என்னும் தலைப்பில் யார்க்கும் குடியல்லேன் யான் என்பது ஒர்ந்தனன் மாயையே!' என்று குறிப்பிடுகின்றார். கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு' என்று தமிழ்மறை கூறும். இதனை உணர்ந்த சேக்கிழார் பெருமான் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்ற பாடலை நாவுக்கரசர் பாடிய சூழலை விளக்கும் போது அவரை நிறை தவத்தோர்' (பெ.பு.1362) என்றே அழைக்கின்றார். பாரதியாரும் கூற்றுவனை விளித்து காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் - என் காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்' என்று கூறுகின்றார். மேலும் துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம்; இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்' என்று சக்தியை வேண்டுகிறார். இறுதியில் இறைவன் ஒருவனுக்கே இவ்வுலகில் - அனைவரும் அடிமை என்பதைப் பாரதியார் இந்தப் பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்' என்று திட்டவட்டமாகச் சொல்கிறார்.


 


அச்சமில்லை அச்சமில்லை


 


திருநாவுக்கரசர் அஞ்சாமை நெஞ்சம் உடையவர். சமணர் தூண்டுதலால் பல்லவ மன்னன் அவரை நீற்றறையில் இட்டான். அதற்கு அஞ்சாது ஈண்டு வருந்துயர் உளவோ ஈசனடியார்க்கு' என்று கருதி மாசில் வீணையும் மாலை மதியமும்' என்று தொடங்கும் தேவாரப் பாடலைப் பாடி மீண்டார். பின்னர் அந்தப் பல்லவ அரசன் ஆணையால் அப்பர்க்கு நஞ்சூட்டப் பெற்றது. நஞ்சும் அமுதாம் எங்கள் நாதன் அடியார்க்கு' என்று அதனையும் அஞ்சாது அவர் உண்டார். பின்னர் அரசன் கடக்களிற்றை அவர் மீது ஏவி இடருமாறு செய்தான். அதனைக் கண்டும் அவர் கலக்கங் கொண்டார் அல்லர். இறுதியில் அவரைக் கல்லிடைக் கட்டிக் கடலிடைப் பாய்ச்சச் செய்தான் அம்மன்னவன். அந்நிலையிலும் உறுதி பிறழாத உள்ளத்துடன் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே' (தேவாரம் 4269) என்று கூறி எதிர்த்து நின்ற காட்சியை அவர் வரலாறு காட்டுகிறது. இதன் விளைவாகவே தான் அவர்,


 


 


      வானந் துளங்கிலென் மண்கம்பமாகிலென் மால்வரையும்


      தானந் துளங்கித் தலை தடுமாறிலென் தண்கடலும்


      மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலை நஞ்சுண்டு


      ஊனமொன்றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே' (தேவாரம் 5215)


 


என்னும் மண்பாதலம்புக்கு மால்கடல் மூடி மற்றேழுலகும், விண்பால் திசைகெட்டிரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே’ (தேவாரம் 5078) என்றும் பாட முடிந்தது. பாவுக்கரசர் பாரதியாரோ அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே' என்று குரலெழுப்பி பச்சையூனியைந்த வேற்படைகள் வந்தபோதினும் அச்சமில்லை என்றும் நஞ்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு போதினும் அச்சமில்லை' என்றும் உச்சி மீது வானிடிந்து வீழ்கின்ற போதினும் அச்சமில்லை' என்றும் வீர முழக்கம் செய்கின்றார். திருநாவுக்கரசர் வாழ்வின் இறுதியில் ஒரு தெய்வச் சோதனை நிகழ்கிறது. பூம்புகலூரில் உழவாரப் பணி செய்யும் போது இறைவன் புல்லுடன் பொன்னும் மணியும் நிலத்தில் உடன் விளங்குமாறு செய்தருளினான். ஆனால் அப்பர் பெருமானோ அவற்றிற்கும் புல்லுக்குமிடையே சிறிதும் வேறுபாடு கருதாது ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கும் இயல்புடன் உழவாரக் கருவியில் அவற்றை ஏந்தி எடுத்து எறிந்தார். பின்பு அங்கே இறைவனருளாலே வான நங்கையர் எழில் குலுங்க நடனமிட்டு அப்பரைக் கூடுவார் போன்றும் ஆடுவாராய்ப் பாடுவாராய் தோன்றி ஆங்கே நின்றனர். அப்போதும் அப்பர் பெருமான் அகத்தே சிறிதும் கலக்கமில்லை. இறைவனடியை மறவாத சிந்தையராய்ச் சித்தநிலை திரியாது சிறந்து' நின்றார். பாரதியார் அச்சமில்லை' என்ற தலைப்பில் முன் சொன்ன பாடல்களுடன் கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் அச்சமில்லை' என்றும் பாடுகிறார். அதனால் அச்சமில்லை அச்சமில்லை' என்ற பகுதியைப் பாரதியார் பாடும் போது அவரகத்தே அப்பரடிகளாரின் வாழ்வு அஞ்சாமைத் திறம் இலைமறைகாய் போல இலங்கி நின்றது என்று கூறலாம். மேலும் விநாயகர் நான்மணி மாலையில் மேன்மைப் படுவாய் மனமே! கேள் விண்ணின் இடி முன் விழுந்தாலும், பான்மை தவறி நடுங்காதே பயத்தால் ஏதும் பயனில்லை. யான் முன்னுரைத்தேன் கோடிமுறை இன்னும் கோடி முறை சொல்வேன். ஆன்மாவான கணபதியின் அருளுண்டு அச்சமில்லையே'' என்று (23) அவரே கூறுவது போல அஞ்சாமையைப் பல இடங்களில் வலியுறுத்திப் பேசுகிறார். அச்சந்தவிர் என்றன்றோ அவர் ஆத்திசூடி தொடங்குகிறது.


 


சாத்திரமும் கோத்திரமும்


 


திருநாவுக்கரசர் இறைவனை சிவபெருமானை- நாடோறும் நற்றமிழ்ப் பாடல்களால் பாடி நின்றாலும் சமுதாயத்தில் காணப்படும் தீமைகளைச் சாடி நிற்கும் சான்றோராகவும் திகழ்கின்றார். சாத்திரம் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர்' பாத்திரம் சிவமென்று பணி திரேல் மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே' (தேவாரம் 5832) என்று பாடும் போது சமுதாயத்திலுள்ள சீர்கேட்டைக் கண்டு குமுறும் நாவுக்கரசரின் நெஞ்சத்தைக் காணுகிறோம். இறுதியில் இந்த ஏற்றத் தாழ்வைப் போக்க அவர் கடவுள் வழிபாட்டைக் காட்டி நிற்கும் அவரது நேர்மைக் குணத்தையும் நாம் பார்க்கிறோம்.


இது போலவே நாசமாய குலநலஞ் சுற்றங்கள்' (தேவாரம் 5542) என்றும் குலங்களென் செய்வ! குற்றங்களென் செய்வ என்றும் (தேவாரம் 6004) கூறி அவர் வருந்துகிறார். கனி மனத்தொடு கண்களும் நீர்மல்கிப் புனிதனைப் பூவனூரனைப் போற்றுவார், மனிதரில் தலையாய மனிதரே' (தேவாரம் 5885) என்று அவர் கூறும் போது கடவுளுண்மையை உணர்ந்து உண்மை அன்புடன் வழிபடுவோர் மேலோர் என்று நாம் உணர முடிகிறது.


ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடையார்க் கன்பராகில்' அவரைக் கடவுளாகக் கண்டு வழிபடும் நெஞ்சமல்லவா அப்பருடையது அந்தணராகிய ஞானசம்பந்தப் பெருமானிடத்து அவர் கொண்டிருந்த மதிப்பும் பணிவும் வேறு யாருக்கு வரும்? அப்பூதி அடிகளார் திருநாவுக்கரசரைத் தெய்வமாகக் கொண்டதன் காரணமும் அதுவன்றோ? பாரதியாரோ சாதியை எதிர்த்து நிற்பதே தம் பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டு செயல்பட்டவர், சமுதாயச் சீர்திருத்தக் கவிஞராக அவரைக் காணும் எவரும் அவர் சாதியைச் சாடி நின்ற திறத்தையே முதலில் எண்ணுவர்.


 


பாரதியாரின் கவிதை நூற் பதிப்புக்களில் பெரும்பாலானவை ஜாதி மதங்களைப் பாரோம்; வேதியராயினும் ஒன்றே; வேறு குலத்தினராயினும் ஒன்றே என்று தொடங்கும் பகுதியை ஆரம்பத்திலேயே கொண்டிருக்கக் காணலாம்! பாரதியார் பக்தியைப் பாடினாலும் பாரதத்தாயைப் பாடினாலும் பாரதத்தாயைப் போற்றினாலும் இயற்கை இன்பத்தை எடுத்துரைத்தாலும் எந்த இடத்திலும் சாதிக் கொடுமையைக் கடிந்து நிற்பவராகவே இருக்கிறார்.


 


தமிழ்க் கவிஞர்களின் சாதி வேறுபாட்டைத் தாக்கி மிகுதியாகப் பாடிய பெருங் கவிஞர் பாரதியாரைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. சாத்திரம் கண்டாய் சாதியின் உயிர்த்தலம் சாத்திரமின்றேற் சாதியில்லை பொய்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள் பொய்மையாகிப் புழுவென மடிவர்' என்று சாத்திரத்தையும் சாதியையும் இணைத்துச் சாடுகிறார். பாரதியார் சாதிப் பேச்சைப் பேசுவதே பாவம் என்பது அவர் கருத்து. 'சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்று பாப்பாவுக்கு அறிவுரை பகர்கின்றார். தகரென்று கொட்டு முரசே!-பொய்மைச்சாதி வகுப்பினை எல்லாம்' என்று முரசு கொட்டுகிறார்' சாத்திரங்கள் ஒன்றுங்காணார் பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார், என்று பாடி நெஞ்சு பொறுக்காது வருந்துகிறார். சாதியிரண்டொழிய வேறில்லை' என்று தமிழ் மூதாட்டி ஔவை சொன்ன மொழிக்கு நீதிநெறியினின்று பிறர்க்குதவும் நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர், என்று விளக்கம் தருகிறார், பாரதியார் எழுத்தில் மட்டுமன்றித் தன் வாழ்விலும் சாதி வேறுபாட்டைக் களைந்து எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்' என்று வாழ்ந்து காட்டியவர் தன் சாதிக்குரிய பூணூலைக் களைந்தெறிந்தார். அதே நேரத்தில் கனகலிங்கம் என்ற ஹரிஜன இளைஞருக்குப் பூணூல் அணிவித்துப் பாராட்டினார். வக்கீல் எஸ். துரைசாமி அய்யர், வி. சக்கரைச் செட்டியார், சி.எஸ். ரகுநாதராவ், பாஸ் என்ற ஆசிரியர், டாக்டர் ஜயராம் நாயுடு முதலியோருடன் நெருங்கிப் பழகிச் சமபந்தி போஜனம் செய்தார். இது சென்னை நகரில் அக்காலத்தில் பெரும்பரபரப்பை உண்டு பண்ணியது என்று பாரதி அன்பர் ரா.. பத்மநாதன் (பாரதியின் நண்பர்கள் என்ற கட்டுரையில்) குறிப்பிடுகிறார். சுப்பிரமணிய பாரதியும் நானும் சோழனும் கம்பனுமாயிருந்தது மாறிக் கடைசியில் மாமனும் மருமகனும் ஆயினோம்' என்று கப்பலோட்டிய தமிழர் வ..சி. (நான் கண்ட பாரதி என்ற கட்டுரையில்) எழுதியதை நோக்கும் போது அவர்களிருவருக்கும் இடையே இருந்த இறுக்கமான நட்பு புலப்படுகிறது. மேலும் பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே' என்று பள்ளுப்பாடியவரல்லவா பாரதியார்! பாரதியார் இன்னும் ஒரு படிமேல் சென்று காக்கை குருவி எங்கள் சாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம். நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை. நோக்க நோக்கக் களியாட்டம்' என்றல்லவா கூறுகின்றார்.


 


அப்பன் நீ அம்மை நீ


 


இறைவனைத் திருநாவுக்கரசர் அப்பன் நீ! அம்மை நீ! ஐயனும் நீ! அன்புடைய மாமனும் மாமியும் நீ! ஒப்புடைய மாதரும் ஒண் பொருளும் நீ! ஒரு குலமும் சுற்றமும் ஓருரும் நீ! துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ! துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ; இப்பொன் நீ; இம்மணி நீ; இம்முத்தும் நீ; இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!' (தேவாரம் 7173) என்று பல உறவு முறைகளில் அழைத்துப் பாடுகின்றார். பாரதியார் இவற்றிற்கு விளக்கம் தருவார் போலக் கண்ணனைத் தாயாகவும் தந்தையாகவும், அரசனாகவும், சேவகனாகவும், குருவாகவும், சீடனாகவும், குழந்தையாகவும், தெய்வமாகவும், காதலனாகவும், காதலியாகவும் கொண்டு கண்ணன் பாட்டில் காவிய ஓவியம் தீட்டிக் காட்டுகின்றர். கண்ணனைக் காதலியாகக் காட்டியது பாரதியார் கண்ட புரட்சி என்று கூறுவார்கள் ! அந்தப் புரட்சிக் கருத்துக்குரிய வித்து அப்பர் சுவாமிகளின் ஒப்புடைய மாதரும் ஒண் பொருளும் நீ' என்ற தொடரில் அமைந்திருக்கிறது என்று சொல்வதில் தவறில்லை அன்றோ ? பாரதியாரிடம் வேலை தேடி வரும் கண்ணனாகிய சேவகன் தேவரீர் ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை' என்று சொல்கின்றான் நாவுக்கரசரும் நெக்குநெக்கு நினைப்பவர் நெஞ்சுளே, புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்; பொக்கமிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பர் அவர் தமை நாணியே' (தேவாரம் 6120) என்ற பாடலால் அன்பெனும் பிடியுள்ள அகப்படும் ஆண்டவன் இயல்பைச் சுட்டுகின்றார். நாவுக்கரசருக்கு இறைவன் விறகிற் றீயினனாக விளங்குகிறான். பாரதியாருக்கோ தீக்குள் விரலை வைத்தால் அவனைத் தீண்டும் இன்பம் தோன்றுகிறது.


 


சக்தியும் சிவனும்


 


பிள்ளையார், முருகன், கண்ணன், கலைமகள், அலைமகள், அல்லா முதலிய பல தெய்வங்களைப் பாரதியார் பாடி நின்றாலும் அவர் வாழ்க்கையில் சக்தி வழிபாடு செய்து நின்றவர். உலகனைத்தும் சக்தியின் ஆற்றலால் தான் இயங்குகின்றது என்ற கொள்கையில் நல்ல உறுதியும் பிடிப்பும் உடையவர். சக்தி தொழிலே அனைத்தும் எனிற் சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?' என்று அவர் விநாயகனை நோக்கி வினவுவார். அவர் பாடிய தோத்திரப் பாடல்களில் பெரும்பகுதி சக்தி பற்றியது என்பதனை அனைவரும் அறிவர்! அவர் காணுகின்ற பிற கடவுளரெல்லாம் அவர்க்குச் சக்தியின் பல்வேறு வடிவங்களாகவே காட்சியளிக்கின்றனர். அவர் தத்துவத்தில் வேதாந்த நெறி நின்றவர். அதனாலும் அவர் உலகினை - தேய்வத்தை - உயிரை இங்ஙனம் ஒன்றாக நோக்க முடிந்தது. ஆனால் திருநாவுக்கரசரோ சிவமெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மானைச் சிந்தையால் செயலால் - செந்தமிழ்ச் சொல்லால் வழிபட்டு நின்றவர் சிவனையே முழுமுதற் பொருளாக எண்ணும் சிந்தையால் ஆட்டுவிதத்ல் ஆரொருவர் ஆடாதாரே' என்று அவர் கூறும் போது உலகச் செயல் அனைத்தும் ஈசன் திருவிளையாடல் என்பதில் அவர்க்கிருந்த அழுத்தமான உறுதியுணர்வு நன்றாக விளங்குகிறது. மேலும் அவர் சிவனையே முழு முதற்பொருளாகக் கொண்ட சைவசித்தாந்தச் செந்நெறியைச் சார்ந்தவர். அவர் மற்ற தெய்வங்களை ஆங்காங்கே குறிப்பிட்டாலும் சிவனே பரம்பொருள் என்பதே அவர் தம் சிந்தனை. இருப்பினும் சிவனைக் காணும் போதெலாம் அவனுடனேயே அவனது அருட்சக்தியையும் கண்டு அகமகிழ்கின்றார். அவர் மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும்' பாடித் திருவையாற்றிற் கண்ட காட்சி இதனை வலியுறுத்தும். நாவுக்கரசர் சிவனைப் பாடினாலும் பாரதியார் சக்தியைப் பரவினாலும் சிவனும் சக்தியும் ஒருவரில் மற்றவர் அடக்கம் தானே! சிவனன்றிச் சக்தியேது ? சக்தியின்றிச் சிவனேது ?


 


 


ஒன்றியிருந்து நினைமின்கள்


 


திருநாவுக்கரசர் மனிதர்காள்! இங்கேவம்மின்' என்று மனித சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்து இறைவனை நீங்கள் அனைவரும் ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை' என்று கூட்டு வழிபாடு செய்யுமாறு கூறுகிறார் பாரதியார். நானில மாந்தருக்கெல்லாம் நன்று! ஒன்றி அன்பில் ஓங்குதல்' ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்குந் தாழ்வே' என்று பாடும் வரிகள் நாட்டு விடுதலைக்கு மட்டுமா பொருந்தும் ? பொதுவாக அனைவற்றிற்கும் ஏற்புடைய  ஒன்றன்றோ? முன்னவர் சிவனுக்குரிய போற்றித் திருத் தாண்டகம் செய்தது போன்று, பின்னவர் சக்திக்குரிய போற்றித் திருவகவல் செய்துள்ளார். இவை வழிபாட்டுக்குரிய இனிய பாடல்கள் ஆகும்! இருவரும் நெஞ்சை நோக்கிக் கூறும் அறிவுரைகள் பல உண்டு!


 


அன்பர் இருவர்


 


திருநாவுக்கரசர் வாணாளில் அவரிடம் அளவு கடந்த அன்பு பூண்டு பக்தியுடன் வழிபட்டவர் அப்பூதி அடிகளார். அவர்தம் அறச் செயல்கள், மாடு, மனை, சுற்றம், மக்கள் எல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசர் என்றே பெயரிட்டு வழங்கினார். ஆனால் பாரதியாரிடத்து அவர் வாணாளில் எல்லையில் அன்பு கொண்ட புரட்சிக் கவிஞர். கனகசுப்பு ரத்தினம் தன் பெயரையே பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்ட பான்மையைப் பார்க்கிறோம் ! நாவுக்கரசர், பாவுக்கரசர் இருவரது கவிதைகளில் தம் உள்ளங்களைப் பறிகொடுத்துப் பாவடித்த பாவலர்கள் பலர் பின்னாளில் விளங்கினர்; விளங்குகின்றனர்.


 


தாண்டக வேந்தும் தமிழ் வேந்தும்


திருநாவுக்கரசர் ஏழாம் நூற்றாண்டில் சைவ சமய எழுச்சிக்குப் பெரும் பணியாற்றிச் சமய மறுமலர்ச்சி ஏற்படுத்தியதால் அவர் சைவ உலகிற்குத் தந்தையாக - அப்பராக விளங்குகின்றார். பாரதியார் இருபதாம் நூற்றாண்டில் தமிழர்களிடையே ஓர் எழுச்சியையும் விழிப்புணர்வையும் உண்டாக்கி இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கிய உலகிற்குத் தந்தையாகத் திகழ்கின்றார். முன்னவர் ஆண்டான் அடிமைத் திறத்தின் வழிநின்று தாண்டகம் என்னும் வடிவத்தையும் பண்சுமந்த பக்திப் பாடல்களான தேவாரத்தையும் தமிழுக்குத் தந்த தாண்டக வேந்தராவார். பின்னவர் எத்தனையோ புத்தம் புதிய பாவடிவங்களையும் வசன, கவிதை, குழந்தை இலக்கியம் முதலிய புதிய துறைகளையும் தோற்றுவித்து தேசபக்தி, நாட்டு விடுதலை, சுதந்திரம், சமுதாயச் சீர்திருத்தம் முதலிய பொருள்களையும் பாடித் தமிழுக்குப் புதிய வேகமும் புதிய சக்தியும் ஊட்டிய தமிழ் வேந்தர் ஆவார்.


 


முன்னவரின் பாடலைக் கேட்ட பரமனார் பாவுற்றலர் செந்தமிழின் சொல்வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால், நாவுக்கரசு என்றுலகேழினும் நின்னாமம் நயப்புற மன்னுக' (பெ.புராணம் 1344) என்று பணித்தார். அதனால் மருணீக்கியார் என்ற அவர் இயற் பெயரினும் இறைவன் இட்ட பெயரே இவ்வுலகில் நின்று நிலவுகின்றது. அதுபோல சி. சுப்பிரமணியம் என்ற இயற்பெயருடைய செந்தமிழ்க் கவிஞரைப் பண்டிதரும் பாமரரும் அவர் தம் பாட்டுத் திறம் கேட்டுப் பாரதியார்' என்று அழைத்தனர் ! அப்பெயரே தமிழ் கூறும் நல்லுலகம் முழுதும் அழியாது விளங்கும் அமரத்தன்மை வாய்ந்து விளங்குகின்றது ! ஜனமொழி தெய்வமொழி அன்றோ?


 


   (தமிழ்நேசன் கோலாலம்பூர் 12-9-1971)


.... தொடரும்...
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக