வெள்ளி, 2 மே, 2014

சமயம் - சைவம் - 11


மொழிக்குத் துணை

பேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பன்

(சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், சிம் பல்கலைக் கழகம், சிங்கப்பூர்)


            விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா

      மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த

      பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி

      வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே (71)


என்னும் அரணகிரிநாதரின் கந்தரலங்காரப் பாடலில் இடம்பெறும் மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் என்பது பற்றிச் சிறிது விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.


            மொழி என்றால் என்ன? மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு கருவியே ஆகும். கருத்துப் பரிமாற்றம் என்பது ஒலி வடிவத்தாலும் வரி வடிவத்தாலும் நிகழ்கிறது. மனிதனுக்கு மட்டுமே மாபெரும் உடைமையாகத் திகழ்வது மொழியே. மனிதனையும் மற்ற உயிரினத்தையும் வேறுபடுத்திக் காட்டுவதும் மொழியே. மொழி இல்லாவிட்டால் மனித நாகரிகமே இல்லை. நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற அறிவுக் கருவூலத்தை நாம் இன்று கண்டு துய்ப்பதற்கும், நாம் இன்று பெற்றுள்ள அறிவுச் செல்வத்தை நமது வழித்தோன்றல்களுக்கு வழங்குவதற்கும் மொழியே துணையாக உள்ளது. மக்கள் வாழ்வில் பிறந்து மக்களால் வளர்க்கப்பட்டு மக்களின் வாழ்வை நாகரிகமுடையதாக உயர்த்திவரும் அரிய கலையே மொழி.


            இத்தகைய மொழிகளில் நம் தாய்மொழியாம் தமிழ் மொழி பழமைக்கும் பழமையாகவும் புதுமைக்கும் புதுமையாகவும் திகழும் சிறப்புடையது. இலக்கண இலக்கிய வளம் மிக்க ஒன்றாகவும் இலங்குகிறது. திராவிட மொழிக் குடும்பத்தில் தொன்மையான மொழி தமிழ், கன்னடமும்  தெலுங்கும் கவின் மலையாளமும் கிளைத்தெழக் காரணமாக இருந்தும் சீரிளமைத் திறம் குன்றாத மொழி செம்மொழியாகிய நம் செந்தமிழ் மொழி. எனவே மெய்ம்மை குன்றா மொழி நம் மேன்மைத் தமிழே ஆகும்.


            தமிழில் மொழி என்னும் சொல் பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் இருக்கும் இயல்பினது. பெயர்ச் சொல்லாக இருந்தால் பேசும் மொழியை (Language) குறிக்கும். வினைச் சொல்லாக இருந்தால் மொழிதல் - பேசுதல் (Speaking) என்னும் பொருள் தரும். எனவே மொழி என்பது பெயர், வினைப் பாகுபாடு தோன்றுவதற்கு முன்னே தோன்றிய பழமை வாய்ந்த சொல்லாகும். இத்தகைய மொழிக்குத் துணையாக முருகா எனும் நாமங்கள் இருப்பதைப் பார்ப்போம்.


            மொழிக்கு அடிப்படை ஒலி. மொழி முதற் காரணமாம். அணுத்திரள் ஒலி எழுத்து என்று நன்னூல் இலக்கணமும் கூறுகிறது. ஒலியே மொழியாகிறது. மண்ணே குடமாவது போல  என்பது கருத்து. மொழியைப் பேச வேண்டுமானால் ஒருவர் வாயைத் திறக்க வேண்டும். வாயைத் திறந்தவுடன் வருவது அகர ஒலியே. எனவேதான் திருவள்ளுவர் கடவுள் உண்மையை அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்னும் முதற் குறள் வாயிலாகக் கூறுகிறார். உலகத்திலுள்ள எல்லா மொழிக்கும் அடிப்படை அகர ஒலியே. அருணகிரிப் பெருமான் திருப்புகழில் பழமுதிர்சோலையைப் பாடும்போது அகரமுமாகி அதிபனுமாகி முருகன் இருப்பதைக் குறிப்பிடுகிறார். மொழிக்குத் துணையாக முருகன் இருப்பதை நாம் பொது நிலையில் உணர முடிகிறது.


            ஒலிகளை உயிரொலிகள் என்றும் மெய்யொலிகள் என்றும் பாகுபடுத்திப் பார்ப்பது உலக மொழிகளுக்கெல்லாம் ஒரு பொதுமைப் பண்பாகும். அந்த அடிப்படையில் தமிழில் உயிரெழுத்துகள் 12 என்றும், மெய்யெழுத்துகள் 18 என்றும், ஆய்த எழுத்து ஒன்று என்றும் கூறுகிறோம். அந்த நோக்கில் முருகப் பெருமானின் 12 கைகளும் தமிழின் 12 உயிர் எழுத்து களாகவும் 18 கண்களும் 18 மெய் எழுத்துகளாகவும், ஆய்தம் அவனது வேலாகவும் கருதப்படுகின்றன. இந்த வகையிலும் தமிழ் மொழியின் இயக்கத்துக்கு உறுதுணையாக முருகப் பெருமான் அமைகிறான் எனலாம்.


            முருகா என்னும் சொல்லைப் பார்ப்போம். எழுத்துகள் தனித்தும் தொடர்ந்தும் பொருள் தரும்போது சொல்லாகிறது. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பியம். முதலில் முருகா என்னும் சொல்லுக்கு அடிப்படையாக உள்ள முருகு என்னும் சொல்லமைப்பைப் பாருங்கள்.


            ம்உ+ர்உ+க்உ  இந்த ஆறு எழுத்துகளின் கூட்டமைப்பே முருகு என்பது. முருகப் பெருமானின் ஆறு முகங்களையும் ஆறு படை வீடுகளையும் ஆறெழுத்து மந்திரங்களையும் இச்சொல்லமைப்பு ஆறு எழுத்துகளின் எண்ணிக்கை உணர்த்தவில்லையா?


            மேலும் தமிழில் மெய்யெழுத்தை வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பகுப்பர்.

க், ச், ட், த், ப், ற் - வல்லினம்,    ங், ஞ், ண், ந், ம், ன் - மெல்லினம்,   ய், ர், ல், வ், ழ், ள் - இடையினம். ம் என்பது மெல்லினம், ர் என்பது இடையினம், க் என்பது வல்லினம். இம்மூன்றுடன் உ என்பது சேர முருகு என்பது உருவாகியுள்ளது. ஓம் என்னும் பிரணவ மந்திரம் அஉம் என்னும் மூன்றெழுத்தின் கூட்டமைப்பு என்றும் இதிலுள்ள உ காக்கும் மொழிலைக் காட்டுவது என்றும் கிருபானந்த வாரியார் கூறுவார்.


            முருகு என்னும் சொல்லுக்குரிய பொருளைத் திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டிஎன்னும் தொடர் வழி விளக்குகிறார். அதாவது மாறா மணம், இளமைத் தன்மை, என்றும் நிற்கும் இறைமை, அழியா அழகு என்பது முருகு என்பதன் பொருள் எனத் திரு. வி. கல்யாண சுந்தரனார் முருகன் அல்லது அழகு என்னும் நூலில் விளக்குகிறார். திவாகரம், பிங்கலந்தை, நாமதீப நிகண்டு முதலியவைகளைப் புரட்டினால் முருகு என்னும் சொல்லுக்கு அழகு, பூந்தட்டு, கள், தேன், எலுமிச்சை, எழுச்சி, அகில், முருகு என்னும் வாத்தியம் எனப் பல பொருள் கிடைக்கும். கண்ணுக்கு அழகாக, காதிற்கு நாதமாக, நாவிற்கு அமுதமாக, மூக்கிற்கு மணமாக, உடலுக்கு இனிய பரிசமாக, கருத்திற்கு விருந்தாக, உயிருக்கு உணர்வாக, இப்படி எல்லாமாக இருந்து துணைபுரிபவன் முருகன் என்று அறிஞர் கூறுவர்.


            தமிழ் மொழியில் தேர்ந்த புலமை பெற்றோரைப் புலவர் என அழைத்துப் போற்றுவர். திருமுருகாற்றுப் படை முருகனைப் பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே  என்று அழைக்கிறது. முருகப் பெருமான் புலவர் தலைவனாய்ச் சங்கமிருந்து தமிழாராய்ந்ததாக இறையனார் களவியல் உரை கூறுகிறது. மேலும் இறையனார் களவியலுக்கு  உரை பகர்ந்தவன் முருகன் என்பதும் அந்நூல் கருத்து. திருமுருகாற்றுப் படையைப் புலவராற்றுப் படை என்றும் அழைப்பர். பத்துப் பாட்டிலுள்ள  நூல்களைப் பட்டியலிடும் பழைய பாட்டு திருமுருகாற்றுப் படையை முருகுஎன்றே பெயரிட்டு அழைக்கிறது.


            தமிழ் மொழியின் தொன்மை இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் ஆகும். பத்துப் பாட்டின் முதற்பாட்டு திருமுருகாற்றுப் படை. இதனை இயற்றியவர் தமிழ்ச் சங்கத் தலைவர் நக்கீரர். முருகனிடத்தில் அடியார்களைச் சென்று அருள்பெற வழிகாட்டுவதே முருகாற்றுப் படை. எட்டுத் தொகை நூலாகிய பரிபாடலில் முருகனைப் பற்றிப் பாடல்கள் உள்ளன. பரிபாடல் என்பது பண்ணுடன் பாடக் கூடிய இசைப் பாடலாகும்.


            சங்க இலக்கியத்தின் பாடுபொருளை அகம், புறம் எனப் பாகுபடுத்துவர். அகம் என்பது காதலையும் புறம் என்பது போர், வீரம், கொடை முதலியவற்றையும் பற்றிப் பேசும். அகம் புறம் பாகுபாடு தமிழின் சிறப்பு என்பர். அக நூலாகிய நற்றிணையில் முருகொடு புணர்ந்த வள்ளி போல என்னும் தொடர் வருகின்றது. புறநூலாகிய புறநானூற்றில் முருகு ஒத்தியே முன்னியது முடித்தலின் என்று கருதியதை நிறைவேற்றும் கந்தப் பெருமானின் இயல்பைப் பேசுகிறது. இவை அனைத்தும் முருகு என்னும் நாமம் தமிழ் இலக்கியத்துக்கு துணையாவதைக் காட்டும் சான்றுகளாகும்.


            முருகன் என்னும் சொல் விளி வேற்றுமைப் பொருளில் அவனை அழைக்கும் நிலையில் முருகா என வரும் சோழன் - சோழா, பாண்டியன் - பாண்டியா என்பது போல இது அமையும். இது முருகா என்று மந்திரச் சொல்லாக மாறும்.


            அஞ்சும் முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்

      வெஞ்சமரில் அஞ்சல்எனவேல்  தோன்றும் – நெஞ்சில்

      ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்

      முருகா என்று ஓதுவார் முன்


என்னும் திருமுருகாற்றுப் படையிலுள்ள வெண்பா வழி முருகா என்று காதலாகிக் கசிந்து ஓதுவார் பெறும் நன்மைகளை நாம் அறிய முடிகிறது. இது கருதியே அருணகிரிப் பெருமானும் தம் கந்தரனுபூதியில்


      முருகன் குமரன் குகன் என்று மொழிந்து

        உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்


எனக் கேட்கிறார். கந்தரலங்காரத்தில் (76) நெஞ்சமே! முருகா  என்கிலே! தஞ்சம் ஏது நமக்கு என்கிறார்.


            முருகா முருகா என்று பலமுறை கூறி உருகினால் முருகன் அருள் கிடைக்கும் என்பதைத்தான் முருகா எனும் நாமங்கள்எனும் பன்மைச் சொல் உணர்த்துகிறது. மேலும் ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ என்னும் திருவாசகத் தொடருக்கு ஏற்ப முருகப் பெருமானுக்குரிய பல திருப் பெயர்களைச் சொல்லி உருகும் செயலையும் நாமங்கள் என்னும் பன்மைச் சொல் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.


            முருகப் பெருமான் குருவாய் வந்து அருள்புரியும் தன்மையுடன் அருணகிரியார்க்கு அவன் குருவாய் வந்து சும்மா இரு எனச் சொல்லிச் சென்றான். இச்செய்தியைச் சொல்லுமிடத்தில் அருணகிரியார் முருகன் எனும் திருப்பெயரைக் குறிப்பிடுகிறார். இதற்குப் பின்வரும் கந்தரனுபூதிப் பாடல் சான்று.


                        செம்மான் மகளைத் திருடும் திருடன்

                        பெம்மான் முருகன் பிறவான் இறவான்

                        சும்மா இரு சொல் அற என்றலுமே

                        சும்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே


நம்மை இறையருள் பெறக் கடைத்தேற்றும் நிலையிலும் அவன்- முருகன் துணையாயிருப்பதை இது சுட்டுகிறது.


            மொழியைக் கடந்து நிற்பது மெளனம். அதாவது பேசா நிலை. அதற்கும் முருகா எனும் நாமம் துணையாவதைக் கீழ்வரும் கந்தரனுபூதிப் பாடலில் கூறுவதைக் காண்க:


                        தூசா மணியும் துகிலும் புனைவாள்

                        நேசா முருகா நினது அன்பு அருளால்

                        ஆசா நிகளம் துகளாயின, பின்

                        பேசா அனுபூதி பிறந்ததுவே.


            எனவே மொழிக்கும், மொழி கடந்த நிலைக்கும் முருகா எனும் நாமங்களே துணை எனக் கொண்டு அவனைத் தொழுது, அவன் அருள் பெற்றுய்வோமாக.



* * * * * *





           







இராமலிங்கேசுவரர்

டாக்டர் சுப. திண்ணப்பன்

தெற்கு ஆசிய இயல் துறை

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம்

சிங்கப்பூர்


பழந்தமிழர் கண்ட சமயங்கள் இரண்டு. ஒன்று சைவம்; மற்றொன்று வைணவம். சைவம் சிவபெருமானை வழிபடுவது; வைணவமோ திருமால் எனப்படும் விஷ்ணுவை வழிபடுவது. இவ்விரண்டின் இணைப்பாக இருப்பதே இராமலிங்கேசுவரர் வழிபாடு. இதன் சிறப்பை

இக்கட்டுரையில் காண்போம்.


இராமலிங்கேசுவரர் என்னும் தொடர் விளக்கம்


இராமலிங்கேசுவரர் என்னும் தொடர் இராமன், லிங்கம், ஈசுவரர் என்னும் மூன்று சொற்கள்

இணைந்த ஒரு தொடர். இராமன் திருமாலின் அவதாரம். அயோத்தி அரசன் தசரதனுக்கு மகனாகப் பிறந்து, ஜனகன் மகள் சீதையை மணந்து, தாய் கைகேயி விருப்பத்திற்கேற்பக் காடு சென்று, தேவர்களுக்குக் கொடுமை செய்ததுடன் தன் மனைவியையும் விரும்பிக் கவர்ந்து சென்ற இலங்கை அரசன் இராவணனைப் போரில் கொன்றவன் இராமன். இதனை விளக்குவது இராமாயணம். லிங்கம் என்பது சிவபெருமானின் அருவுருவ வடிவமாகும்.

ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லாத இறைவன் வழிபடுவோர் வசதிக்காக (கண்ணால் பார்க்கக்கூடிய)உருவமாகவும், (கண்ணால் பார்க்க முடியாத)அருவமாகவும், அருவுருவமாகவும் வருகிறான். சிவலிங்கத்தில் உருவம் என ஒன்று இருந்தாலும்அதன் வடிவத்தை ஆண் பெண் எனப் பகுக்க முடியாது. எனவே அது அருவுருவம் எனப்படுகிறது. ஈசுவரர் என்பது தலைவன், கடவுள், சிவன் ஆகியவற்றை உணர்த்தும். ஆக இராமலிங்கேசுவரர் என்னும் தொடர் திருமாலின் அவதாரம் ஆகிய இராமன் கடவுளாகக் கருதி வழிபட்ட சிவலிங்கம் என்பதைக் காட்டுகிறது. இந்தச் சிவலிங்கம்தான் இன்று தமிழகத்தில் இராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனாகும். இவர்க்கு இராமநாதர் என்னும் பெயரும் உண்டு.


இராமேச்சுரப் பெருமை


இராமேச்சுரம் மூர்த்தி தலம் தீர்த்தம் என்னும் மூவகையாலும் சிறப்புடையது. தென் நாட்டிலுள்ள இந்துக்கள் வடநாட்டிலுள்ள காசியைப் புண்ணியத் தலமாகக் கருதி வழிபடுவார்கள். அதுபோல் வட நாட்டிலுள்ள இந்துக்கள் தென் நாட்டிலுள்ள இராமேச்சுரத்தைப் புண்ணியத் தலமாகக் கருதி வழிபடுவார்கள். எனவேதான் காசி இராமேஸ்வரம் என்று இணைத்துப் பேசுவது மரபாயிற்று. காசி சிவனுடன் தொடர்புடையது.

இராமேஸ்வரம் இராமனுடன் தொடர்புடையது. இராமபிரான் இராமநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் இராமேஸ்வரம். காசியில் விசுவநாதர் என்னும் திருப்பெயருடன் கோயில்கொண்டுள்ள சிவபெருமான், அந்தத் தலத்தில் இறப்பவர்களி£ன் காதுகளில் ராமாஎன்று சொல்லி அவர்களுக்குச் சிவபதவி வழங்குவதாகக் கூறுவார்கள். காசியில் கங்கை,

இராமேஸ்வரத்தில் சேதுப் பெருங்கடல். இரண்டிலும் நீராடுவது சிறப்பு. காசியில் விசுவநாதர்,

இராமேஸ்வரத்தில் இராமநாதர். இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதி லிங்கங்களில் இவை இரண்டும் அடங்கும். ஜோதி என்பது தீப்பிழம்பு. தீப்பிழம்பின் வடிவமே சிவலிங்கம். ஆதியும் அந்தமுமில்லாத சோதியாக- நெருப்பாகச் சிவன் திரு அண்ணாமலையில் கார்த்திகை நாளன்று

தோன்றிய வடிவமே சிவலிங்கம். தீ என்பது ஒளி. அது அறிவின் அடையாளம், இறைவனை வாலறிவன் (தூய்மையான அறிவினன்) என்று தானே திருவள்ளுவர் கூறுகிறார். அவனை

அருட்பெருஞ்சோதி என்று அழைக்கிறார் வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளார். தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் இராமேஸ்வரம் வந்து இராமலிங்கேசுவரரை வழிபட்டுப் பாடல்கள் பாடியுள்ளனர். இவற்றில் சுந்தரர் பாடல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.


திருஞானசம்பந்தர் தேவாரத்தில்


திருஞானசம்பந்தர் தம் தேவாரத்தில் மூன்றாம் திருமுறையில் இரண்டு பதிகங்களில் இராமலிங்கேசுவரரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்  இராமேஸ்வரத்தில் வில்வீரனாகிய இராமபிரான்தன் தேவியாகிய சீதையை மாயம் செய்து வஞ்சனையால் வலிதின் கவர்ந்துசென்ற இலங்கை வேந்தன் பத்துத்தலை இராவணனைக் கொன்ற கொலைப் பாவமாகிய பிரமஹத்திக் குற்றம் நீங்கச் சிவலிங்கம் அமைத்து வழிபட்ட செய்தியை


  தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன்

  பூவியலும் முடிபொன்றுவித்த பழிபோயற

  ஏவியலும் சிலைவண்ணன் செய்த இராமேச்சுரம்

  மேவிய சிந்தையினார்கள் தம் மேல்வினை விடுமே


என்னும் பாடலில் கூறுகிறார். மேலும் தேவர்களுக்குக் கொடுமைகள் செய்த இராவணனைக் கொன்ற இராமனை மெய்ம்மை ஏவலனார் ( சத்தியத்தில் வழுவாதவன்)என்றும் அணையலை சூழ்கடல் அன்றுஅடைத்து வழிசெய்தவன்என்றும் போற்றிப் புகழ்கிறார்


   சனிபுதன் ஞாயிறு வெள்ளி திங்கள் பலதீயன

   முனிவது செய்து உகந்தானை வென்ற வினைமூடிட

   இனி அருள் நல்கிடு என்று அண்ணல் செய்த இராமேச்சுரம்

   பனி மதி சூடி நின்றாட வல்ல பரமேட்டியே


என்னும் ஞானசம்பந்தர் பாடலும் வலியுறுத்தும். இராமலிங்கேசுவரரை வழிபடுவோர்

 மேல்வினை நீக்கம் பெறுவர் என்றும் சான்றுடன் அவர் கூறுகிறார்.


திருநாவுக்கரசர் தேவாரத்தில்


திருநாவுக்கரசர் தேவாரத்தில் நாலாம் திருமுறையில் பாசமும் கழிக்ககில்லாஎன்று

தொடங்கும் திருநேரிசைப் பதிகம் இராமேச்சுரம் பற்றியது. கைலை மலை எடுத்த இராவணனுக்குச் சிவபெருமான் அருள்செய்த திறத்தை ஒவ்வொரு பதிகத்திலும் பாடும் இயல்பினராகிய நாவுக்கரசர்.இந்தப் பதிகப்பாடல்களில் இராவணனைக் கொன்ற பழிதீர

திருமாலின் அவதாரமாகிய இராமன் இராமேச்சுரத்தில் இராமலிங்கேஸ்வரரை அமைத்து மலரால் வழிபட்ட வரலாற்றைக் கூறுகிறார். பாடல் அடிகள் வருமாறு;


  பாசமும் கழிக்க கில்லா அரக்கரைப் படுத்துத் தக்க

  வாசமிக் கலர்கள்கொண்டு மதியினால் மால் செய்தகோயில்

  நேசமிக் கன்பினாலே நினைமின்நீர் நின்றுநாளும்

  தேசமிக்கான் இருந்த திருவிராமேச் சுரமே.


  வரைகள் ஒத்தே உயர்ந்த மணிமுடை அரக்கர் கோனை

  விரையமுற்றற ஒடுக்கி மீண்டுமால் செய்தகோயில்


மேலும் இராமலிங்கேஸ்வரரை வணங்குவோர் தவமுடையோர் எனவும், இறைவன் திருவடி நீழலில் தங்கிப் பேரின்பம் பெறுவர் எனவும், துன்பங்களும் வினைகளும் நீங்கப்பெறுவர் எனவும்

கூறுகிறார். நோக்கினால் வணங்குவார்கள் நோய்வினை நுண்ணுகுமன்றேஎன்பது அவர் கூற்று

 

சேக்கிழார் பெரிய புராணத்தில்


சேக்கிழார் பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் வரலாறுகளைக்

கூறும்போது அவர்களின் இராமேச்சுரவழிபாட்டைக் கூறத் தவறவில்லை. திருஞானசம்பந்தர்,

புராணத்தில் சேக்கிழார்


விண்ணவரைச் செற்றுகந்தான் இலங்கை செற்ற மிக்க பெரும்பாதகத்தைவேண்டித்

 திண்ணிய பொற்சிலைத் தடக்கை இராமன் செய்த திருவிராமேச்சுரத்தைச் சென்றுசேர்ந்தார்


என்று கூறுகிறார். இவ்வாறே திருநாவுக்கரசர் புராணத்தில் சேக்கிழார்


 தென்னிலங்கை இராவணன்  தன் சிரம் ஈரைந்தும் துணித்த

  மன்னவனாம் இராமனுக்கு வரும்பெரும் பாதகந்தீர்த்த

  பிஞ்ஞகனைத் தொழுவதற்கு நினைந்துபோய்ப் பெருமகிழ்ச்சி

  துன்னிமனங் கரைந்துருகத் தொழுதெழுந்தார் சொல்லரசர்

 

  தேவர்தொழும் தனிமுதலைத் திருவிராமீச் சுரத்து

  மேவிய சங்கரனை எதிர்நின்று விருப்புறு மொழியால்

  பாவுதிரு நேரிசைகள் முதலான தமிழ்பாடி

  நாவரசர் திருத்தொண்டு நலம்பெருகச்  செய்தமர்ந்தார்


என்னும் பாடல்கள்வழி விளக்குகிறார். இப்பாடல்களில் இராமன் இராவணனைக் கொன்றதால் விளைந்த பெரும்பாதகம் தீர்த்தவர் இராமலிங்கேஸ்வரர் என்பதைக் கூறி, அவரைப் பிஞ்ஞகன் என்றும் சங்கரன் என்றும் போற்றிப் பேசுகிறார் சேக்கிழார்.



பாதகம் தீர்த்த பரமன்


இராமன் இராவணனைக் கொன்றது ஏன்  பெரும் பாதகமாகக் கருதப்பட்டது? பொதுவாகக் கொல்லாமை பேரறமாகத் திருவள்ளுவரால் பேசப்படுவதை அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும்” “ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றது பின்சாரப் பொய்யாமை நன்று” “நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை

சூழும் நெறி” (குறள் 321, 323, 324) ஆகிய குறள்களால் உணரலாம். மேலும் இராவணன் சிறந்த சிவபக்தன் என்பதையும் திருமுறைகள் பரக்கப் பேசுகின்றன.எனவேதான் இராமன்

இராவணனைக் கொன்றதைப் பெரும்பாதகமாகக் கருதி இராமேச்சுரத்தில் சிவலிங்கம்

அமைத்து வழிபட்டான் எனலாம். அவரே இராமலிங்கேஸ்வரர் ஆவார். சூரபன்மனைக் கொன்ற

முருகன் திருச்செந்தூரில் சிவலிங்க வழிபாடு செய்ததையும் இங்கு ஒப்புநோக்கலாம். அறம் திறம்பிய அரக்கர்களைக் கொன்றாலும் அது குற்றம் தான்/ பாதகம்தான் என்பதை உணர்த்தவே இவ்வழிபாடுகள் என்பதையும் அறியவேண்டும். நடையில் நின்றுயர் நாயகன்

காசில்(குற்றமில்லாத) கொற்றத்து இராமன்என்பன கம்பன் வாக்குகள் அல்லவா?


கம்பனும் வால்மீகியும்


வடமொழியாகிய சமஸ்கிருதத்தில் இராமாயணம் இயற்றிய ஆதிகவியாகிய வால்மீகி முனிவர்

இராவணனுடன் நடத்திய போருக்கு முன்னாலேயே இராமபிரான் இராமேஸ்வரத்தில் சிவபூஜை

செய்ததாகக் கூறுகிறார். ஆனால் தமிழில் இராமாயணம் இயற்றிய கவிச்சக்கர்வர்த்தி கம்பனோ இராவண வதத்திற்குப் பிறகே இராமன் இராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை நிலைநாட்டியதாகக் கூறுகிறான். இந்தியில் இராமாயணம் இயற்றிய துளசிதாசரும் இவ்வாறே கூறுகிறார். இதற்குக் காரணம் கம்பனுக்கு முன்னர் இக்கருத்தே தமிழகத்தில்  நிலவி இருந்ததைத் திருமுறைகள் காட்டுகின்றன. மேலும் இராமேச்சுரம் என்பதே கடலில் மலைகளையும் பெரும்கற்களையும் இராமன் கொண்டுவந்து போட்டு அதனைத் தீவாக்கிக் (Reclamation Land) கோயில் அமைத்ததாக நாவுக்கரசர் கூறுகிறார்.


 கடலிடை மலைகள்தம்மால் அடைத்து மால் கருமமுற்றித்

 திடலிடைச் செய்த கோயில்திருவிராமேச் சுரம்


என்பது அப்பர் வாக்கு.மேலும் மீட்சிப்படலத்தில் சேதுக் கடலின் புண்ணியப் பெருமையை இராமன் சீதையிடம் சொல்வதாகவும் கம்பன் கூறுகிறான்.


அடியார் வழிபாடும் ஆண்டவன் வழிபாடும்


அடியார் வழிபாடும் ஆண்டவன் வழிபாடும் இந்துசமயத்தின் இருகண்கள். இராமலிங்கேஸ்வரர்

வழிபாட்டில் இராமனாகிய அடியாரையும் லிங்கமாகிய ஆண்டவனையும் ஒருசேர நினைக்கும்

வாய்ப்பு கிடைப்பதால் இருவழிபாடும் ஒருசேர அமைகின்றன என்று கூறலாம்.


முடிவுரை


இராமலிங்கேஸ்வரர் வழிபாடு சைவ வைணவ ஒற்றுமை, கொல்லாமை அறத்தின் பெருமை,

சிவபூசைச் சிறப்பு, அடியார் வழிபாடு,ஆண்டவன் வழிபாடு, இராமேச்சுரத்தின் ஏற்றம், சிவலிங்கத்தீன் சீர்மை, இராமபிரானின் எடுத்துக்காட்டு, திருமுறை ஆசிரியர்களீன்

தெய்வத்தமிழ் ஆகியவற்றைச் சிந்தித்துச் செயலாற்ற வழிவகுப்பதாக அமையட்டும்.


முற்றும்




அரச கேசரி சிவன் -சில சிந்தனைகள்

டாக்டர் சுப. திண்ணப்பன்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம்



அரச கேசரி சிவன் என்னும் தொடர் அரசு, கேசரி, சிவன் என்னும் மூன்று சொற்களால் உருவான ஒன்று. அரசு என்பது அரசன், அரச மரம் என்னும் இரண்டு பொருளைக் குறிக்கும். கேசரி என்பது சிங்கத்தைக் குறிக்கும். இந்த இரண்டு சொற்களும் சிவன் என்னும் சொல்லுக்கு அடைமொழிகளாக இந்தத் தொடரில் இடம் பெற்றுள்ளன. எனவே இந்தத் தொடரின் பொருளாழத்தை அரசு சிவன், கேசரி சிவன், அரச கேசரி சிவன் என்னும் மூன்று வகையாக நோக்கலாம்.


அரசு சிவன்


நாட்டை ஆளும் அரசனைக் கடவுளாகக் கருதும் மரபு தமிழில் உண்டு. எனவேதான் அரசன், கடவுள் இருவரையும் குறிக்க ஆண்டவன், இறைவன் என்ற சொற்கள் பயன்பாட்டில் இருந்தன.இவ்வாறே கோயில் என்னும் சொல்  அரசன் வாழும் அரண்மனையயும்,  கடவுள் இருக்கும் ஆலயத்தையும் குறித்தது.முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறைஎன்று வைக்கப் படும்என்னும் திருக்குறள் (388) இதற்குரிய காரணத்தைக் கூறுகிறது. அறநூலும் நீதி நூலும் சொல்லும் நெறியில் நின்று அரசன் மக்களைக் காப்பாற்றுகிறான். எனவே அவன் பிறப்பால் மனிதனே ஆனாலும் அவன் மக்களால் கடவுளாகக் கருதப்படுகிறான். இக்குறள் இடம்பெறும் இறைமாட்சி என்னும் அதிகாரத்துக்குப் பொருள் கூறும் பரிமேலழகர் அரசன் நற்குண நற்செய்கைகளால் உலகபாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின் இறை என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார். அரசச் சின்னங்கள் முடி,குடை, கொடி, கவரி, தொட்டி, முரசு, யானை, முதலியவை ஆண்டவனுக்கும் உரியனவாக உள்ளன.


திருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேனேஎன்று நம்மாழ்வார்

அரசனை விஷ்ணுவாகப் பார்க்கிறார்.இவ்வாறே சிவபெருமானையும் அரசனாகக் காணும் மரபுண்டு. உத்தரகோச மங்கைக்கு அரசேஎன்றும் உம்பர்கட்கு அரசே

என்றும் ஆடக மதுரை அரசே போற்ற ¢ என்றும், “திருப்பெருந்துறை மன்னாஎன்றும் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சிவபெருமானைஅழைக்கிறார். மேலும் திருத்தசாங்கம் என்னும் தலைப்பில்சிவபெருமானை அரசனாகக் கருதி அவனுக்குரிய பேர், நாடு, ஊர். ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, மாலை, கொடி ஆகிய பத்து உறுப்புகளை அவரே சுட்டிப் பாடுகிறார்.


திருவிளையாடல் புராணம் சிவபெருமான் அரசனாக வந்த வரலாற்றை மீனாட்சி திருமணப் படலத்தில் நன்கு விளக்குகிறது. மதுரையைத் தலைநகராகக் கொண்டு அரசுபுரிந்த மலயத்துவச பாண்டியனின் மகளாக உமாதேவியார் அவதரித்துத் தடாதகை என்னும் பெயர் தாங்கி நின்றார். கலைமுழுதும் கற்றுத் தேர்ந்தார். அரசர்க்குரிய போர்ப் பயிற்சி பெற்றார். தந்தை அவரைப் பாண்டிய நாட்டரசியாக முடி சூட்டினான். அவரை மணந்து எல்லாம் வல்ல சிவபெருமான் சோமசுந்தரப் பாண்டியனாக முடிசூடிப் பாண்டிய நாட்டை ஆளும் மன்னரானார். இதனைத் திருவிளையாடல் புராணம்


 அதிர்விடைக் கொடிஅங் கயற்கொடி யாக

   அராக்கலன் பொற்கலன் ஆக

 பொதியவிழ் கடுக்கை வேம்பலர் ஆகப்

    புலியதள் பொலந்துகில் ஆக

 மதிமுடி வைர மணிமுடி ஆக

    மறைகிடந்து அலம்புமா மதுரைப்

 பதியுறை சோம சுந்தரக் கடவுள்

    பாண்டிய னாகிவீற் றிருந்தான்


எனக் கூறுகிறது. சிவபெருமானின் இடபக் கொடி பாண்டியனின்மீன் கொடியாக் மாறியது. அவன் அணியும் பாம்புகள் பொன் அணிகலன்களாகின. அவனது கொன்றை மாலை வேம்பு மாலையாகிற்று.  புலித் தோலாடை பொன்னாடை ஆயிற்று.பிறை சூடிய சடைமுடி வைர முடியாயிற்று. இவ்வாறு மதுரை சோமசுந்தரக் கடவுள் பாண்டியனாகி அரசாட்சி செய்தார்.தேவர்கள் எல்லாரும் வடிவம் மாறிப் பணி செய்ய வந்தனர்.

பிறகு பாண்டிய மன்னர்கள் வேண்டும்போதெல்லாம் உதவிகள் பல செய்து திருவிளையாடல்கள் சிவன் நிகழ்த்தினார். உலகியல் நிறுத்துவான் வந்து ஒரு பரஞ்சுடர் வான் திங்கள் குலமணி விளக்கை வேட்டுக் கோமுடி கவித்துப் பார் ஆண்டதாக அந்தப் புராணம் பேசுகிறது.


தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் சிவலிங்க வழிபாடு ஆளும் அரசனை வணங்கும் வழிபாடாகவும் அமைந்தது. இதற்குத் தேவராஜ வழிபாடு என்று பெயர். நாட்டை ஆளும் அரசரின் ஆற்றல் சிவனிடமிருந்து சிவலிங்கத்தின் மூலமாகப் பெறப்படுவது என்றும், அந்த இலிங்கம் மலையுச்சியில் வைத்துக் காக்கப்படல் வேண்டும் என்றும் கருதப்பட்டது. கம்போடியாவில் பிற்காலத்தில் தோன்றிய சிற்பங்கள் சிவன், விஷ்ணு  முதலிய தெய்வங்களைப்

பிரதிநிதித்ததுடன் அச்சிற்பங்களை நிறுவிய அரசர்களையும் குறித்தன. அச்சிற்பங்கள் அரசர்களின் வடிவமாகவே அமைந்தன.தாய்லாந்து நாட்டில் சிவபெருமானைப் போற்றும் தேவாரப் பதிகங்களும், திருவெம்பாவைப் பாடல்களும் அரசர் முடிசூட்டுவிழாவின்போது முக்கிய அம்சமாக இன்றும் இடம்பெற்றுள்ளன. இது அரசனைச் சிவனாகக் கருதுவதைக் காட்டும். மேலும் அங்கு தை மாதத்தில் கொண்டாடப்படும் லோஜின்ஜாஎனப்படும் ஊஞ்சல் திருவிழாவின்போது சிவன் பூவுலகிற்கு வருகை தருவதைத் தாய்லாந்து அரசரே அவ்விழாவிற்கு வருகை தந்து விழாக்களத்தில் சிவனாகக் காட்சி தருவதன்மூலம் உணர்த்தினர். அப்போது பாவைப் பாடல்களைப் பாடி அரசனைச் சிவனாக மக்கள் வழிபட்டனர். அரசன் அப்போது மக்களுக்கு அளிக்கும் பரிசுகள் சிவன் தந்ததாகக் கருதப்பட்டன. அங்கு பாவைப் பாடல்கள் தெய்வபக்திப் பாடல்களாகப் பயன்பட்டதோடன்றி அரசரின் இறைத்தன்மையை உணர்த்தவும் பயன்பட்டதாகக் கொள்ளாலாம். மக்களுக்கு அரசர் தேவராஜாவாக- சிவனாகக் காட்சி அளித்ததை இது காட்டுகிறது.



அரசு என்பது அரச மரத்தைக் குறிக்கும் நிலையிலும் அது சிவனுடன் தொடர்புடையதாக இருப்பதை இனிப் பார்ப்போம். அரசு எல்லா மரங்களுக்கும் தலைமையானது.ஆகையால் தான் அரசு எனப் பட்டது. அதுபோல் எல்லாத் தெய்வங்களுக்கும் தலைமையான சிவனும் அரசு தானே? திருமணத்தின்போது அரசாணிக்கால் நடுவதும் அரசன் ஆணை முன்னர்- சிவன் ஆணை முன்னர்  நடைபெறுவது என்பதை உணர்த்தத்தானே? மேலும்  அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும்  திருமணம் செய்து வைக்கும் வழக்கம் எதனை உணர்த்துகிறது?

வேம்பு சக்தியின் வடிவம் என்றால் அரசு சிவனின் வடிவம் என்பதனைத் தானே உணர்த்துகிறது.


அரசு தல விருட்சமாகப் பல திருக்கோயில்களில் இடம்பெற்று இருப்பதையும் நாம் பார்க்கிறோம். எனவே அரச மரத்தின் அடியில் வீற்றிருந்த சிவபெருமான் அரச கேசரி ஆகிறார்.


அரச மரத்துக்குப் போதிமரம் என்றொரு பெயர் உண்டு. புத்தர் பிரான் ஞானம் பெற்ற இடம் போதிமர நிழலே. எனவே அரச மரம் ஞானத்தின் அடையாளம், அதுபோலச் சிவபெருமானும் ஞானத்தின் சொருபம். ஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார், ஊனத்திரளை நீக்கும் அதுவும் உண்மைப் பொருள் போலும்என்பது திருஞான சம்பந்தர் தேவாரம். மேலும் திருஞான சம்பந்தருக்குச் சிவபெருமானும் சிவஞானம், கலைஞானம், மெய்ஞ்ஞானம் முதலிய பலவகை ஞானங்களைப் பாலொடு ஊட்டியதை நாம் அறிவோம். ஞானம் என்பது ஈசன்பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்  என்பது சேக்கிழார் வாக்கு.


கேசரி சிவன்


சிவபெருமானைச் சிங்கமாக அதாவது  கேசரியாகத் திருநாவுக்கரசர் எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ' என்னும் தம் திருப்புகலூர்த் தேவாரப் பதிகத்தில் அழைக்கிறார். "சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவாச் சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன் திருப்புகலூர் மேவிய தேவ தேவே" என்னும் அடிகள் இப் பதிகத்தின் இரண்டாம் பாடலில் இடம்பெறுகின்றன. இப் பதிகம் திருநாவுக்கரசர் திருவடி முத்தி அடைந்தபோது பாடியது. அவர் பாடிய கடைசிப் பதிகம். எனவே திருப்புகலூரில் இவ்விழாவின்போது முன்பு சிவலிங்கத்திற்குச் சிங்க வடிவில் அலங்காரம் செய்வார்களாம்.


விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று நரசிம்மாவதாரம். அப்போது இரண்யனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தி தருக்கி அட்டகாசம் செய்யக் கண்ட பிரமன் சிவபெருமானைத் துதிக்கச் சிவன் சரப மூர்த்தி உருக்கொண்டு நரசிங்கத்தின் தோலை உரித்து உடுத்திக் கொண்டதாக ஒரு புராணச் செய்தி உண்டு. சரப மூர்த்தி உரு எட்டுக்  கால்களையும். இரு தலைகளையும் கொண்ட மிருகப் பறவை உருவம் என்றும் இதற்கு இரண்டு சிங்க முகங்களும் இரண்டு பக்கச் சிறகுகளும் உண்டு  என்றும் கூறுவர். சிங்கத்தின் உடலுடனும் எட்டுக் கால்களுடனும் கூடிய பறவை என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது..சரப மூர்த்தி உருவும் சிவனைச் சிங்கமாகக் காட்டுகிறது.


அரசகேசரி சிவன்


அரசர்களில் சிங்கம் போன்றவன் அதாவது தலைமையானவன், சிறந்தவன், இனியவன், ஏற்றம் மிக்கவன் சிவபெருமான்  என்பதை அரசகேசரி என்னும் தொடர் உணர்த்தும்.


'தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன் தன்னடைந்தார்க்கு இடை மருதனே' என்று திருநாவுக்கரசர் திருவிடைமருதூர் இறைவனைப் பாடுகிறார். முடிசூடி உலகாளும் அரசனை விடச் சிவன் அடியவர்களுக்கு இனியவனாக இருப்பதை இத்தொடர் குறிக்கிறது.


அரசன்  நில உலகின் ஒரு பகுதியை மட்டும் ஆளுகிறான். ஆனால் சிவனோ நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய அனைத்தும் கொண்ட அண்டங்களை எல்லாம் கட்டி ஆளுபவன் அல்லவா? அதனால் அவன் அரசர்களுக்கெல்லாம் அதிபதி தானே?


அரசன் குடிமக்களைக் காத்தல் தொழில் மட்டுமே செய்கிறான். ஆனால் சிவனோ அண்ட சராசரங்களையும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிற பேரருளாளன் . எனவே அவன் அரசரினும் எத்துணை பெரியவன் என்பது விளங்கும்.


திருவிளையாடல் புராணத்தில் மனிதர்க்கு அரசாகித் தெவ்வேந்தர்க்கு மடங்கலாகி, மங்கையர்க்கு மன்மதனாகி, நிலமகளுக்குத் திருமாலாகிச் சிவன் இருந்தான் என்று அந்நூலாசிரியர் பரஞ்சோதியார் திருமணப் படலத்தை முடிக்கிறார். மனிதர்க்குச் சிவபெருமான் அரசன். பகை வேந்தர்க்கு அவன் ஒரு சிங்கம் (மடங்கல் - கேசரி). எனவே சிவன் அரசகேசரி ஆகிறான்.


" விண் ஆளும் தேவர்க்கு மேல் ஆய வேதியனை,

  மண் ஆளும் மன்னவர்க்கு மாண்பு ஆகி நின்றானைத்,

  தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை,

  பெண் ஆளும் பாகனைப் பேணு பெருந்துறையில்,

  கண்ஆர் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட

  அண்ணாமலையானைப் பாடுதும் காண் அம்மானாய் "

என்னும் திருவாசகப் பாடலில் மாணிக்கவாசகர் சிவபெருமானை வான் உலகத்தை ஆளுகின்ற இந்திரன் முதலிய தேவர்களுக்கும் மேலான அறிஞனாகவும், நில உலகத்தை ஆளுகின்ற அரசர்களுக்கு எல்லாம் தலைமைப் பண்புகள் கொண்டவனாகவும் காண்கிறார்.


அரசன் என்பவன் பிரமன், இந்திரன், வாயு, இயமன், சூரியன், அக்னி, வருணன், சந்திரன், குபேரன் ஆகிய இவர்களின் கூறுகளினால் படைக்கப்பட்டவன் என்று சுக்கிர நீதி என்னும் சமஸ்கிருத நூல் கூறுகிறது. இவர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவபெருமான் அரசர்க்கெல்லாம் தலைவர் தானே? அரசகேசரி தானே?


அரசனை ஆண்டவன் பிரதிநிதியாகக் கருதுகிறோம். திருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேனேஎன்று நம்மாழ்வார் கூறுகிறார். இத்தகைய திருமாலும் காண இயலாத திருவடியைக் கொண்டவன் சிவன் எனில் சிவன் அரசர்க்கு அரச கேசரி தானே?


அரச மரம் பிர்மா, விஷ்ணு, சிவன் என்னும் திரி மூர்த்தி ஸ்வ்ரூபம் என்றும் இதனை நாள்தோறும் வலம் வருபவர் மூவரையும் வலம் வந்தவர் ஆவர். என்றும் புண்ணியம் மிக்கவர் என்றும் சொல்வர். மால் அயன் காண முடியாத அடி முடி கொண்ட சிவன் அரச கேசரி தானே?


சரப மூர்த்தி வரலாறும் சிவன் அரச கேசரி என்பதை உணர்த்துகிறது.


 அரசகேசரி என்னும் தொடர் இருவரைக் குறிப்பதாக அபிதான சிந்தாமணி என்னும் தமிழ்க் கலைக்களஞ்சியம் கூறுகிறது.1 தனதத்தன் பெருமை உணர்ந்து சிவபூசை கடைப்பிடித்து நாகபட்டினத்தில் சிவன்கோயிலைப் புதுப்பித்தவன். இங்கே தனதத்தன் என்பவன் காரைக்கால் அம்மையாரின் தந்தையாக இருக்கலாம். அல்லது விண்டுதத்தன் மகன், வாமதேவமுனிவரிடம் உபதேசம் பெற்றுச் சிவபூசை செய்து யமபுரம் சென்று மீண்டும் உயிர் பெற்று முத்தி பெற்றவனாகவும் இருக்கலாம்.


2 யாழ்ப்பாணத்து நல்லூரைச் சார்ந்த ஒருவர், பரராசகேசரி மகாராஜாவின் மருகர், பாண்டிய நாட்டு ஆழ்வார் திரு நகரியிலிருந்த அஷ்டாவதானி இராமனுஜக் கவிராயரிடம் கல்வி பயின்றவர். இவர்காலம் சற்றேறக்குறைய 3300 ஆண்டுகளுக்கு முன்புஎன்பர். இவர் வடநூல் இரகுவம்ச காவியத்தைத் தமிழில் இயற்றியவர்.சிங்கப்பூரில் யாழ்ப்பாணத்தவர் இக்கோயிலில் கொண்ட தொடர்பினால் இக்கோயில் அரச கேசரி சிவன் கோயில் எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம்.


அரச கேசரி என்னும் சொல்லுக்கு ஏற்ற மாற்று வடிவம் இராச சிங்கம் என்பது. இத்தொடராலேயே திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில் பாவநாசப் பதிகத்தில் சிவபெருமானை அழைக்கும் பாடல் வருமாறு:

எழிலார் இராசசிங்கத்தை, இராமேச்சுரத்துஎம் எழிலேற்றைக்,

குழலார் கோதை வரை மார்பின் குற்றாலத்து எம் கூத்தனை,

நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை,

அழலார் வண்ணத்து அம்மானை, அன்பில் அணைத்து 

                                                                வைத்தேனே.

                                       

இராச சிங்கமாகிய அரச கேசரிச் சிவபெருமானை வணங்கி நாம் நம் பாவங்களைப் போக்கிக் கொள்வோம்                    முற்றும்





திருமுறையில் உமை அம்மை


அறக்கருணை வடிவமே உமை அம்மை. திருமுறையில் உமை அம்மை பெறுமிடம் பற்றி ஒரு சிறிது பார்ப்போம். திருமுறையின் தொடக்கப் பாடல் தோடுடைய செவியன்எனத் தொ டங்கும் திருஞான சம்பந்தர் தேவாரம் ஆகும்.  இப்பாடல் எழுந்த சூழ்நிலையைப் பார்ப்போம். சீகாழியில் தந்தையாருடன் நீராடச்சென்ற ஞானசம்பந்தக் குழந்தை தன் தந்தை நீராடும்போது அவரைக் காணாது கலங்கிக் கோயிலைப் பார்த்துஅம்மே அப்பாஎன்று அழுதது, இதனைக் கேட்ட சிவபெருமான் உமை அம்மையோடு அங்கு எழுந்தருளி உமை அம்மையைப் பார்த்து துணைமுலைகள் பொழிகின்ற பாலடிசில்

பொன் கிண்ணத்து ஊட்டுஎனப் பணித்தருளினார். அதற்கேற்ப உமை அம்மை

எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி உண் அடிசில்எனச் சம்பந்தர்க்கு ஊட்டினார். அந்நிலையில் சம்பந்தர் சிவஞானம், கலைஞானம், மெய்ஞ்ஞானம் முதலியன உணர்ந்து ஞான சம்பந்தர் ஆனார். நீராடிவிட்டுக் கரையேறிய ஞானசம்பந்தரின் தந்தையார்யார் அளித்த பாலடிசில் உண்டது நீ

என அரட்டிக் கேட்க அதற்குப் பதில் கூறும் வகையில் எழுந்ததுதான்தோடுடைய செவியன்எனத் தொ டங்கும் பாடல். எனவே திருமுரையின் தொடக்கத்திற்கே

உமை அம்மையார்தான் காரணம் என்பதனை இதன் வழி உணரலாம்.


தோடுடைய செவியன்என்னும் தொடரில் தோடு என்பது பெண்கள் காதில் அணியும்

ஓர் அணிகலன். செவியன் என்பது ஆண்பாலை உணர்த்துவது. எனவே தோடுடைய செவியன்என்பது உமாதேவியாரைத்  த ன் உடம்பில் ஒரு பாதியாகக் கொண்ட உமையொரு பாகனை உணர்த்தும். உமை அம்மை அருளால் உருவான திருமுறை வாக்கை நினைத்துத்தான் உமையம்மையாரைக் குறிக்கத் தோடு எனத் தொடங்கிப் பாடினார் ஞானசம்பந்தர். எனவே சிவபெருமானையே பாடும் திருமுறையின் தொடக்கம்

அவனருட்சக்தியாகிய அம்மையே நோக்கியே அமைந்துள்ளது என்லாம்.


உமையம்மையாரைத் தலைவியாகக் கொண்டு பாடும் தனி நூல்களோ தனிப் பாடல்களோ

திருமுறைத் தொகுப்பில் இல்லை. எனினும் சிவபெருமானுடன் சார்த்தியே பல இடங்களில் உமை அம்மை பற்றிய செய்திகள் வந்துள்ளன. உமை அம்மையாரின் சிறப்பு தேவாரப் பாடல்களில் இலைமறை காயென ஆங்காங்கே ஓதப்பெறுகின்றது.

தோடுடைய செவியன்என உமையொரு பாகனை ஞானசம்பந்தர்.கூறியது போலவே நின்கழல்கள் காணப் பாதியோர் பெண்ணை வைத்தாய்” “உமையோடு உடனாகி இருந்தான் தன்னைஎன்று நாவுக்கரசரும் கூறுவார். இறைவனின் திருவடி திருவருள் தொழிற்படும் இடம் என்பதையும், அத்திருவடியே அடியவர்க்கு அருள்புரியும் என்பதையும், திருவடியே சக்தியாக உருவகிக்கப்பட்டுள்ளது என்பதையும் இவ்வடிகள் உணர்த்தும். மேலும் சுந்தரர் தம் தேவாரத்திலும் ஒரு பாகம் பெண்ணாவார்என்றும்,

வண்டாடும் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவனேஎன்றும் பாடுகிறார்.


சிவபெருமான் பல்வேறு நிலையில் கோயில்கொண்டு விளங்கினாலும் உமைஅம்மையோடு

எழுந்தருளியிருக்கும்போதே இன்புறுவான் என்னும் கருத்தை ஞானசம்பந்தர் சுத்தமார் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தாற்போல், அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாயாவதும் இதுவே” “ அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாயாவது இதுவேஎன்னும் பாடல் அடிகளால் குறிப்பிடுவர். இதன் விளைவாகத்தான் பிற்காலத்தில் உமையம்மையார்க்குத் தனிக் கோயில்கள் எழுப்பபட்டன.

தேவி வழிபாடு தோற்றம் கண்டது.


சிவபெருமான் பெண்ணின் நல்லாளாகிய உமை அம்மையுடன் பெருந்தகையாக வீற்றிருப்பது நாம் அனைவரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவிலை என்பதை உணர்த்தத்தான் என உரைக்கிறார் ஞானசம்பந்தர். இல்லற வாழ்வின் ஏற்றத்தையும், வையத்து வாழ்வாங்கு வாழவேண்டியதன் தேவையையும் வலியுறுத்தவே இப்பாடல் எழுந்தது  என்பதை நாம் உணர வேண்டும். இறைவன் இறைவியுடன் கூடியிருப்பது ஆண் பெண் இணைந்த இல்லற வாழ்வின் பெருமையை உலகத்தார்க்கு உணர்த்தவே ஆகும். இல்லற வாழ்வில் ஈடுபடுவது வீடு பேற்றுக்கு வழிவகுக்காது என்னும் கருத்தை மறுக்கவே இப்பாடல் எழுந்தது  என்பதையும் நாம் நோக்க வேண்டும். ஐயாறு அடைந்த நாவுக்கரசர் மாதர்பிறைக்கண்ணியானை மலையான் மகளொடும் பாடிக் கண்டறியாதன காணும் காட்சியில் இறைவனும் இறைவியுமாகத் தோன்றும் தோற்றமும் இதனை வலியுறுத்தும். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் "குவளைக்கண்ணிக் கூறன் காண்க, அவளும் தானே உடனே காண்க" என்று கூறுவதையும் நோக்கவேண்டும்.


திருவாசகத்தில் வரும் திருவெம்பாவையின் உட்கருத்து " சக்தியை வியந்தது" என்பர். கன்னிப் பெண்கள் நாடு செழிக்க மழை பெய்யவும், வீடு செழிக்க நல்ல கணவனைப் பெறவுமே திருவெம்பாவை எழுந்தது. உமாதேவியின் அருளையே மழையாக

உருவகித்துப் போற்றும் திருவெம்பாவைப் பாடல் இதோ:


 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்

 என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்

 மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

 பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்

 என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்

 தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

 முன்னியவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே

 என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.


மேகம் உமையம்மையின் நீலநிறம்போல நிறம் பெற்றுத் திகழ்கிறது; உமையம்மையின் இடை போல மின்னுகிறது; அவள் திருவடியில் இருக்கும் சிலம்பொலி போல் இடிமுழக்கம் செய்கிறது;  அவளுடைய அழகிய புருவம் போல வான வில்லுடன் திகழ்கிறது. அவளைப் பிரிந்திராத இறைவன் அன்பர்க்கு அருள்பாலிப்பதற்கு முன்னரே அவள் அருள் சுரக்கின்றாள். அந்த அருளைப் போல மழை பொழியவேண்டும்

என்பது இந்தப் பாடலின் கருத்து. உமை அம்மையின் அருளே மழை என்பது இங்கு தெளிவாக விளக்கப்படுகின்றது. உமை அம்மையை "உடையாள்" என இப்பாடல் குறிப்பதன் பொருள் எல்லாவற்றிற்கும் உடையவள்- உரிமையானவள் சக்தி என்பதையும் காட்டுகிறது. திருவெம்பாவை சக்தியை வியக்கும் வண்ணத்தை இப்பாடல் நன்கு படம் பிடிக்கிறது.





இறைவன் திருவடியே சத்தி எனச் சாத்திரங்கள் கூறும். அத்திருவடியின் ஐந்தொழில் ஆற்றலைப் போற்றித் துதிப்பதுதான் திருவெம்பாவையின் இறுதிப்பாடல். படைப்பைத் "தோற்றமாம் பொற்பாதம்" என்றும், காப்பைப் "போகமாம் பூங்கழல்கள்" என்றும், அழிப்பை "ஈறாம் இணையடிகள்" என்றும், மறைப்பை "மால் நான்முகனும் காணாத புண்டரிகம்" என்றும், அருளலை "அருளும் பொன்மலர்கள்" என்றும் இப்பாடலில் மாணிக்கவாசகர் கூறிப் போற்றுகிறார். இத்திருவடிகளே அனைத்தின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமாக இருப்பவை என்றும் கூறுகிறார். ஐந்தொழில் இல்லையென்றால் உயிர்கள் பாசம் நீங்கி வீடு பெறுமாறு இல்லை அல்லவா?


 அம்மை அப்பரின் திருக்கோலத்தைத்


 தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்

 பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்

 சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக்

 கோலமே நோக்கிக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பி


எனவும் திருவாசகம் விவரிக்கிறது.


"உடையாள் உன்றன் நடுவிருக்கும், உடையாள் நடுவுள் நீ இருத்தி, அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்" என்னும் திருவாசகப்பாடல் அம்மை அனைத்தும் உடையவள்

என்பதையும், அவள் இறைவனுடன் கலந்திருப்பாள் என்பதையும்,அந்நிலையில் அவர்கள் இருவரும் மணிவாசகர் அகத்தில் இருப்பர் என்பதையும் சுட்டுகிறது.


ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா ஒன்று 'அரிவையோர் கூறுகந்தான்' என்று அம்மையப்பரைப் போற்றுகிறது. திருப்பல்லாண்டில் ' அன்ன நடைமடவாள் உமைகோன்'

என்னும் தொடர் அம்மையின் நடை அழகைச் சுட்டுகிறது.


பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறு கூறுமிடத்துச்


" சேர்ந்திருந்தேன் சிவமங்கைதன் பங்கனை" என்றும்,

 "நேரிழையாள் நிரதிசயானந்தப்

 பேருடையாள் என் பிறப்பறுத்து ஆண்டவள்

 சீருடையாள் சிவன் ஆவடுதண்துறை

 சீருடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே"


என்றும் அம்மை தம்மை ஆண்டருளிய செய்தியைக் குறிப்பிடுகிறார். மேலும் திருமூலர்

திருமந்திரத்தில் சக்திபேதம், சக்தியின் பல்வேறு வடிவங்கள், சக்தி எந்திரம், சக்தியை

வழிபடும் எந்திர வழிபாட்டு முறை இவை பற்றி எல்லாம் விரிவாகக் கூறுகிறார். திருமூலர் கூறும் சக்தி சிவ சக்தியே ஆகும்.




"தான் எங்குளன் அங்குளள் தையல் மாதேவி" (1031)

" மணங்கமழ் பூங்குழல் மங்கையும் தானும்

புணர்ந்துடனே நிற்கும்" (1019)

"நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்

சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி "(1042)

"இருளது சத்தி, ஒளியதுஎம் அண்ணல்" (1095)


என்னும் திருமந்திரத்தொடர்கள் இதனை வலியுறுத்தும்


  திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்திலுள்ள சத்திபேதம்- திரிபுரை சக்கரம்

என்னும் பகுதியிலுள்ள முப்பது திருமந்திரப் பாடல்களும் அம்மன் பெருமையை

விரித்துரைக்கின்றன. கலைமகள் சிவசக்தி என்பதை


 ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி

 வேடம் படிகம் விரும்பும் வெண்டாமரை

 பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்

 சூடுமின் சென்னிவாய்த் தோத்திரமே (1068)


என்னும் பாடல் வாயிலாகக் கூறுகிறார் திருமூலர். மேலும் சத்தியின் வடிவம் சிவவடிவமே என்பதைச் " சூடும் இளம்பிறை, சூலி, கபாலினி" என்றும், சக்தியின் மந்திரம் சிவமந்திரமே என்பதை "நாம நமசிவ "(1189) என்றும் கூறுவர். மேலும்


 அவளை அறியா அமரரும் இல்லை

 அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை

 அவளன்றி ஐவரால் ஆவதொன்றில்லை

 அவளன்றி ஊர்புகும் ஆறு அறியேனே (1029)


என்றும் அம்மையின் பெருமையை அவர் கூறுகிறார்.


 சத்தி என்பாள் ஒருசாதகப் பெண்பிள்ளை

 முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்.


என்னும் அடிகள் முத்தி அளிக்கும் தன்மை சக்திக்கு உண்டு என்பதைக் கூறும்.

திருமுறைகளீல் திருமந்திரத்தில் தான் சிவசக்தியின் சிறப்பு பலவாறாகக் கூறப்பட்டுள்ளது.


பதினோராம் திருமுறையில் திருமுருகாற்றுப்படையில் முருகன் உமையவள் மைந்தனாகக்

குறிப்பிடப்படுகிறான்.  சேரமான் பெருமாள் நாயனார் பொன்வண்ணத்தந்தாதியில்

அம்மையப்பர் திருவுருவம் பேசப்படுகின்றது. இவரைப் பின்பற்றிப் பட்டினத்தார் திருக்கழுமல மும்மணிக்கோவையில் அம்மையப்பர் வடிவை 61 அடிகளில் விரிவாக விளக்குகிறார். இவரே கோயில் நான்மணிமாலையில் அம்மையப்பர் திருவுருவம் பற்றி



 "ஒருபால் தோடும் ஒருபால் குழையும்

 இருபாற்பட்ட மேனி எந்தை"


என்னும் அடிகளீல் சுருக்கமாகவும் குறிப்பிடுகிறார். திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில்(16)

 'வருமுலை தாங்கும் திருமார்பு வல்லி

 வையம் ஏழும் பன்முறை ஈன்ற

 ஐய திருவயிற்றம்மைப் பிராட்டி

 மறப்பருஞ் செய்கை அறப்பெருஞ் செல்வி

 எமையாளுடைய உமையாள் நங்கை

 கடவுட் கற்பின் மடவரல் கொழுந'


என்று ஏழு உலகும் ஈன்ற தாயாகவும், அறம் வளர்த்த நாயகியாகவும் உமை

அம்மையைப் பட்டினத்தார் குறிப்பிடுகிறார். மேலும் காஞ்சியில் உமையம்மையார் இறைவனைப் பூசித்தபோது, ஆற்றில் வெள்ளம் மிகுந்து வர, உமைஅம்மையார் துடித்துச் சிவலிங்கத் திருமேனியைத் தழுவ, அதில் நகில் சுவடும், வளைச் சுவடும்

பதிந்தன என்று திருவேகம்பமுடையார் திருவந்தாதியில் அவர் கூறுகிறார்.

காஞ்சியில் அம்மை 32 அறங்களை வளர்த்தது பற்றியும் பேசுகிறார்.

சக்தி வேலைத் தடக்கையில்  உடையவன் முருகன் என்னும் குறிப்பு

ந்ம்பியாண்டார் நம்பியின் பாடல் ஒன்றில் வருகிறது. காரைக்கால்

அம்மையாரும் அம்மையப்பர் திருக்கோலம் பற்றிப் பேசுகிறார்.


பன்னிரண்டாம் திருமுறையாகிய சேக்கிழாரின் பெரிய புராண்த்தில்

உமை அம்மையாரின் சிறப்பு பல இடங்களில் குறிக்கபடுகின்றது.

நாயன்மார்களாகிய அடியார்களுக்குக் காட்சி கொடுக்கும்போது

உமை அம்மையுடன் சிவபெருமான் தோன்றி அருளியதாகச் சேக்கிழார்

பல இடங்களில் சுட்டுகிறார். சிறுத்தொண்ட நாயனார்க்கு இறைவன், இறைவி, முருகனுடன் காட்சி கொடுத்ததைச் சான்றாகக் கூறலாம். தென்னாட்டின்

சிறப்பைக் கூறும் சேக்கிழார்


 எம்பிராட்டி இவ்வேழுலகு ஈன்றவள்

 தம்பிரானைத் தனித்தவத்தால் எய்திக்

 கம்பையாற்றில் வழிபடு காஞ்சி என்று

 உம்பர் போற்றும் பதியும் உடையது


என்று காஞ்சி காமாட்சி அம்மையைச் சிற்ப்பித்துப் போற்றுகிறார். இறைவனை

வழிபட்டுக் கம்பையாற்றில் வெள்ளம் வரத் தழுவிடக் குழைந்த இறைவன்

வரலாற்றைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் சேக்கிழார் விரித்துப்பாடும் திறமும் போற்றுதற்குரியது.





 "எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்

  உண்மையாவது பூசனை என உரைத்தருள

  அண்ணலார்தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்

  பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக்கொழுந்து"


என்று இறைவி சிவனைப் பூசை செய்த சிறப்பை அவர் பாடுகிறார். மேலும்


 கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பன் மேவிய உம்பர்பால்

 நிரந்த காதல் செய் உள்ளத்தளாகி நீடு நன்மைகள் யாவையும் பெருக

 வரந்தரும் பொருளாம் மலைவல்லி மாறிலாவகை மலர்ந்த பேரன்பால்

 சிரம்பணிந்து எழுபூசை நாள்தோறும் திருவுளம் கொளப்பெருகியதன்றே.


என்றும் அவர் விவரிக்கிறார். உமைஅம்மைதான் இறைவனுக்கு முதலில் பூசை

செய்தவர் என்பதை இங்கு உணர முடிகிறது.


காவிரி யாற்றின் பெருமையைக் கூறும் சேக்கிழார்


 வண்ண நீள்வரை தரவந்த மேன்மையால்

 எண்ணில் பேரறங்களும் வளர்க்கும்  ஈகையால்

 அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி

 உண்ணெகிழ்க் கருணையின் ஒழுக்கம் போன்றது


என்கிறார். காவிரியும் குடகு மலை தந்த ஆறு, உமை அம்மையும் இமவான் மலை தந்த செல்வி; காவிரியும் உமை அம்மையும் உலகில் பல அறங்கள் தழைக்க உதவும் பான்மையும் ஒப்புவமையாக வருகின்றது. அம்மை அருள் சக்தி என்பதை இறுதி அடி எடுத்து இயம்புகிறது.


சிதம்பரத்தில் நடராசப்பெருமான் சிவகாமி அம்மையை நோக்கிக் கூத்தாடும் திறத்தினை

 "மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே

 ஆதியும் முடிவும் இல்லா அற்புதக் கூத்தாடும்

 நாதனார்"

என்று திருநீலகண்ட நாயனார் புராணத்தில் சேக்கிழார் கூறுகிறார்.

எனவே தான் அது ஆனந்தக்கூத்தாக அமைந்தது போலும்.


திருநாவுக்கரசர் திருவையாற்றில் கண்ட கயிலைக் காட்சியைச் சேக்கிழார்

வெள்ளி வெற்பின்மேல் மரகதக்கொடியுடன் விளங்கும்

தெள்ளு பேரொளிப்பவளவெற்பென இடப்பாகம்

கொள்ளும் மலையாளுடன் கூட வீற்றிருந்த

வள்ளலாரை முன்கண்டனர் வாக்கின் மன்னனார்


என்று மரகதவல்லியாக உமைஅம்மையார் சிவனுடன் கயிலை மலைமேல்

இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

இதுகாறும் கூறிய செய்திகளால் அறக்கருணை வடிவாகிய உமைஅம்மையார்

திருமுறையின் தொடக்கப் பாடல் தோன்றுவதற்குத் துணையாக இருந்ததையும்,

திருமுறைப்பாடல்களில் சிவபெருமானுடன் சார்த்தியே  உமையொருபாகன் என்ற நிலையில் பல இடங்களில் கூறப்பட்டிருப்பதையும், நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழப் பெண்ணின் நல்லாராகச் சிவனுடன்கூடி இருப்பது பற்றிய குறிப்பினையும்,

திருவாசகத்தில் திருவெம்பாவை வாயிலாகச் சக்தியாய் நின்று வியக்கப்படுவது பற்றியும்,

திருமந்திரத்தில் சக்தி பேதம், சக்தியின் பல்வேறு வடிவங்கள், சக்தி எந்திரம், சக்தியை வழிபடும் எந்திர வழிபாட்டுமுறை இவை விரிவாக விளக்கம் பெற்றிருப்பதையும்,

பதினோராம், பன்னிரண்டாம் திருமுறைகளில் காஞ்சியில் சிவபூசை செய்து அறம்

வளர்த்த நாயகியாக அமைந்த வரலாறு விரிவாகக் கூறப்பட்டிருப்பதையும்

தெரிந்துகொண்டோம்

-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக