புதன், 7 மே, 2014

சிங்கப்பூரில் தமிழ் - 4


தமிழவேள் கோசா
டாக்டர் சுப. திண்ணப்பன்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம்
சிங்கப்பூர்

 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றிச் சிங்கப்பூர் மலேசியாவில் தமிழர்கள் வாழ்வு சிறக்கப் பணியாற்றிய பெருந்தகை கோ. சாரங்கபாணி (கோசா)அவர்களுக்கு 1955இல் கோலாலம்பூரில் நடந்த அருள்நெறி மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழவேள் என்னும் பட்டம் அளித்துச் சிறப்பித்தார். அந்தப் பட்டத்தின் பெயராலேயே - அதாவது தமிழவேள் என்னும் பெயராலேயே மலேசிய சிங்கப்பூர் மக்களால் கோசா இன்றும் அழைக்கப்படுகிறார். அவர் எத்தனையோ பட்டங்கள் பெற்றிருந்தாலும் தமிழவேள் என்னும் பட்டமே தலைமையாய்த் திகழ்கிறது. இந்தத் தமிழவேள் என்னும் பெயருக்குக் கோசா பல்லாற்றானும் தகுதி உடையவர்
என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

  தமிழவேள் என்னும்தொடர் தமிழ். வேள் என்னும் இரண்டு சொற்கள் இடையே அகரச் சாரியை பெற்று வந்த ஒரு தொடராகும். தமிழென் கிளவியும் அதனோரற்றேஎன்று தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் (சூ 386) இவ்வாறு தமிழ் அகரச் சாரியை பெற விதி கூறப்படுகிறது. தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை, நீர்மை, இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என மூவகையாக விளங்கும் மொழி, தமிழ் நூல், தமிழர், தமிழ்நாடு என்னும் ஆறு பொருள்களைத் தருகிறது சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி. (தொகுதி 3 பக் 1756). வேள் என்பதற்குக் கலியாணம், விருப்பம், மன்மதன், முருகன், வேளிர்குலத் தலைவன், சளுக்கவேந்தன், சிற்றரசன், சிறப்புப் பெயர், சிறந்த ஆண்மகன், மண் எனப் பத்துப் பொருள்களை அவ்வகராதி கூறினாலும் தலைவர், ஆண்தகை என்ற பொருள்களையே இத்தொடர்க்கு ஏற்றவையாகக் கொள்ள வேண்டும்.


இனிமைப் பண்பால்

 ‘இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்என்று பிங்கல நிகண்டு தமிழுக்குப் பொருள் தருகின்றது. எனவே தமிழவேள் என்னும் தொடர் முதலில் இனிமையும் பண்பும் மிக்க தலைவர் என்பதை உணர்த்தும். கோசா அவர்களை நான் 1970இல் சிங்கப்பூரில் முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போது சிங்கை வானொலித் தமிழ்ப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றிய திரு அ. முருகையன்  என்னைக் கோசா இல்லத்திற்கு அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். கோசா அவர்கள் தோற்றத்தால் நெடிய உருவமும், பாகவதர் போன்ற தலைமுடியும், புன்னகை தவழும் நன்முகமும் கொண்டவர். பணிவுடையன், இன்சொலன் என்னும் அணிகலன்களை அணிந்த பண்பாளர். நின்ற சொல்லர் நீடு தோன்றினியர்என்னும் நற்றிணை அடிக்கு எடுத்துக்காட்டாக இலங்கியவர் செல்விருந்தோம்பி நல்விருந்து பார்த்திருக்கும் செம்மல்என்பதை நான் அன்று நன்குணர்ந்தேன். இவர் எப்போதும் வெள்ளை வேட்டியும் வெள்ளை ஜிப்பாவும் அணிந்து காட்சி அளிப்பார். எனவே இவர் காட்சிக்கு எளியர். கடுஞ்சொல் கூறாத ஒரு வெள்ளுடை மன்னர். இவர்க்கு வழிகாட்டிய பெரியாரோவெ ண்தாடி வேந்தர். அவரைப் பற்றிக் கோசா பெரியார் அறிஞர்க்கு எல்லாம் தந்தை, அறியாதவர்க்கு எல்லாம் விந்தைஎன்று குறிப்பிட்டார்.

இன்றமிழ்ப் பணியால்

  ‘தமிழ் கூறும் நல்லுலகம்என்னும் தொல்காப்பியப் பாயிரத் தொடரும், ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலனும்என்னும் தொல்காப்பிய நூற்பாத் தொடரும் ( 885) ‘தமிழ் கெழு கூடல்என்னும் புறநானூற்றுத் தொடரும் ( 58:13) தமிழ் என்பது மொழியைக் குறிக்கும் என்பதை எடுத்துரைக்கும். எனவே தமிழ்மொழிக்குத் தலைவர் என்பது தமிழவேள் என்னும் தொடர் தரும் பொருளாகும். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்என்னும் பாரதியாரின் பாடலுக்கேற்பத் தமிழின் இனிமையையும் ஏற்றத்தையும் மலேசிய சிங்கைத் தமிழர்களுக்குக் கோசா தம் எழுத்தாலும் பேச்சாலும் வலியுறுத்தியதோடு தமிழர் திருநாள்என்னும் ஒரு சிறந்த நிகழ்ச்சியையும் ஆண்டுதோறும் நடத்திக் காட்டினார். அவ்விழாவிற்குத் தமிழகம், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தமிழறிஞர்களை அழைத்துப் பல ஊர்களில் சொற்பொழிவுகள் செய்ய ஏற்பாடு செய்தார். இதனால் தமிழார்வமும் தமிழறிவும் இப்பகுதியில் பலர் பெற்றுத் தமிழ்த் தொண்டாற்றிட முன்வந்தனர்.

தமிழ்க் கல்வி நாட்டத்தால்

  சிங்கப்பூரில் தமிழ் ஓர் அதிகாரத்துவ மொழியாக அமைந்ததற்குக் கோசா பெரும்பங்காற்றியுள்ளார். மேலும் அவர் காலத்திலிருந்த தமிழ்ப் பள்ளிகளை ஒருங்கிணைத்துத் தமிழ்க் கல்விக் கழகம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கித் தமிழ்க்கல்வி முன்னேற்றம் காண அவர் பாடுபட்டார். தென்கிழக்காசியாவிலேயே தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்ட ஓர் உயர்நிலைப் பள்ளி என்னும் பெயரைப் பெற்றிருந்த உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளி உருவாவதற்கு கோசா உதவி செய்தார். 1956இல் மலேயாப் பல்கலைக் கழகத்தில் தோன்றிய  இந்திய இயற்பகுதி தமிழ்த் துறையாக அமையக் காரணமாக இருந்த பெருமகன் கோசா அவர்களே என்பதை நாடறியும். வரலாற்றுப் பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாத்திரியார் இப்பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதப் பகுதி தொடங்கப் பரிந்துரை செய்தபோது அதனை எதிர்த்துத் தமிழ் எங்கள் உயிர் என்னும் பெயரில் நிதி திரட்டி மக்கள் ஆதரவையும் பெருக்கிக் கோசா செய்த போராட்டத்தின் விளைவே மலேயாப் பல்கலைக் கழகத்தில் இந்திய இயற்பகுதி தமிழ்த் துறையாக அமையக் காரணமாக
ஆயிற்று. இந்தத் துறை சிங்கப்பூரில்தான் தொடங்கப்பட்டது. கோசாவின் இந்த உதவி இப்பகுதி மக்களுக்குக் காலத்தினால் செய்த பேருதவியாகக் கருதப்படுகிறது. இதனால் தமிழில் பலர் பட்டம் பெறவும், ஆய்வுகள் நடத்தவும் வழி ஏற்பட்டது. இந்தத் துறைதான் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்த வழிகாட்டியது. அதற்கும் உறுதுணையாக இருந்தவர் கோசாதான்.

இதழியற்பணியால்

  மலேசியா சிங்கைப் பகுதியில் தமிழை வாழ்விக்கக் கோசா தமிழ் முரசு
இதழைத் தொடங்கி நடத்தினார். தமிழாற்றல் மிக்கவர்களைத் துணையாசிரியர்களாக்கினார். பயன் தரும் தலையங்கங்கள் பலவற்றை எழுதினார். இதனால் இப்பகுதியில் நல்ல தமிழ் மணம் வீசியது. தமிழர் வாழ்வில் எத்தனையோ நன்மைகள் ஏற்பட்டன. அறுபது  ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இன்று சிங்கையில் பீடுநடை போடும் ஒரேஒரு தமிழ் நாளிதழ் தமிழ் முரசு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் முன்னேற்றம்’, ‘சீர்திருத்தம்’, ‘தேச தூதன்என்ற தமிழ் இதழ்களும் Reform, Indian Daily என்ற ஆங்கில இதழ்களும் நடத்தித் தமிழ் மொழி, தமிழர் நலம் மேம்பட முயன்றார். இத்தகைய இதழியல்பணியும் கோசா செய்துள்ளார். தமிழின் பெருமையையும் தமிழர் சிறப்பையும்
தரணிக்குப் பறைசாற்றத் தலைப்பட்ட ஒருவரைத் தமிழ் மொழித் தலைவர்-தமிழவேள் எனக் கூறுவதில் தயக்கம் ஏற்பட வழி இல்லையே.

முத்தமிழ்க் காப்பால்

  இயல், இசை, நாடகம் எனத் தமிழை மூவகையாகப் பகுத்து முத்தமிழ்
எனப் பெயரிட்ட பெருமை தமிழர்களைச் சாரும். இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும். இசைத்தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச் செய்யும்.நாடகத்தமிழ் நடந்துகாட்டி மக்களை நல்வழிப்படுத்தும்என்பார் கி.ஆ.பெ.விசுவநாதம். இம் மூவகைத் தமிழும் மலேசிய சிங்கைப் பகுதிகளில் மலரக் கோசா பாடுபட்டார். தமிழர் திருநாளில் இயற்றமிழ்ப் பகுதியைச் சார்ந்த பேச்சுப்போட்டி, கதை கவிதை கட்டுரை எழுதும் போட்டிகள் நடத்திப் பலரை ஈடுபடச் செய்தார். பாட்டுப்போட்டி வாயிலாக இசைத்தமிழும், நாடகங்கள் பலவற்றைத் தமிழர் திருநாளின்போது நடத்தியதால் நாடகத்தமிழும் வளர்ச்சி கண்டன. எனவே தான் அவருக்கு 16-1-1966இல் நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்ச்சியின்போது திருமதி சௌந்தரா கைலாசம், பேராசிரியை சோ. பாகிரதி ஆகியோர் சார்பில் தவத்திரு தனிநாயக அடிகளார் அவர்களால் முத்தமிழ்க் காவலர் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

 இலக்கியப் பணியால்

  தமிழ் என்பது தமிழ் நூல், தமிழ் இலக்கியம் ஆகியவற்றையும் குறிக்கும். ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தற்குக் கபிலர் குறிஞ்சிப்பாட்டு பாடியதாகச் சங்க இலக்கியக் குறிப்பு ஒன்றுண்டு. இந்த இடத்தில் தமிழ் என்பது குறிஞ்சிப் பாட்டாகிய இலக்கிய நூலைக் குறிக்கிறது அல்லவா? இந்த வகையில் பார்த்தாலும் கோசா மலேசிய சிங்கைப் பகுதியில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தன்னாலியன்ற வகையில் எல்லாம் தளராது பாடுபட்டுள்ளார் எனலாம். அவர் தமிழ் முரசு இதழில் மாணவர் மணிமன்ற மலர் என்னும் பகுதி 1953இல் தொடங்கி அதில் இங்குள்ள தமிழ் மாணவர்களையும் இளைஞர்களையும் கதை,கட்டுரை,கவிதை முதலிய படைப்பிலக்கியங்களையும் எழுதத் தூண்டினார். வெண்பாப் போட்டி போன்றவற்றை நடத்தி ஆர்வமூட்டினார். இன்று மலேசிய சிங்கைத் தமிழ் இலக்கியப் படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர் பலர் இதனால் ஊக்கம் பெற்றவர்களே ஆவர். மலேசிய சிங்கைப் பகுதியில் தமிழ் இலக்கிய நூல்கள், இதழ்கள் உருவாக உழைத்த உத்தமரைத் தமிழ வேள் என்று உரைப்பது பொருத்தம்தானே?
தமிழர் தமிழ் பிணைப்பால்


  தமிழ் என்னும் சொல் தமிழரையும் உணர்த்தும், 'அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்' என்னும் சிலப்பதிகாரத் தொடர்(26:161) இதனை வலியுறுத்தும். தமிழும் தமிழரும் உயிரும் உடலும் போன்ற உறவுடைய சொற்கள். ஒன்றின்றி ஒன்றில்லை என்பதை நன்குணர்ந்த கோசா தமிழர் சிறந்தால்தான் தமிழ்மொழி சிறக்கும், தமிழ்மொழி வாழ்ந்தால்தான் தமிழர் வாழ முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவராய் இருந்தார். எனவேதான் எழுத்தாளர்களை எதனை எழுதினாலும் முதலில் "வாழிய செந்தமிழ்,வாழ்க நற்றமிழர்" என்னும் பாரதியின் அடிகளை முதலில் எழுதிவிட்டுத்தான் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 ஒற்றுமை கண்டதால்

  சாதியால், சமயத்தால், ஊரால் பிரிந்து வாழ்ந்த தமிழரைப் பிணைப்பதற்காகக் கோசா 1951இல் கண்ட ஓர் அமைப்பே தமிழர் பிரதிநிதித்துவ சபை எனப்படும் தமிழர் பேரவை ஆகும். "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே" என்ற பாரதி வாக்கே அவர் பணிகளுக்கெல்லாம் அடிப்படை நோக்கமாக இருந்தது. சிறுசிறு அமைப்புகளாகச் சிதறிக் கிடந்த சங்கங்களை எல்லாம் ஒன்று சேர்த்து உருவாக்கிய அமைப்பே தமிழர் பேரவையாகும். ஒற்றுமை என்னும் உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றும் மற்றொரு முயற்சியே தமிழர் திருநாளாகும். மொழியை முன்னிறுத்தி
ஒற்றுமைப்படுத்த விழைந்த வேட்கை அது. "வெள்ளம்போல் தமிழர் கூட்டம்; வீரங்கொள் கூட்டம், அன்னார் உள்ளத்தால் ஒருவரே; மற்று உடலினால் பலராய்க் காண்பார், கள்ளத்தால் நெருங்கொணாதே என வையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாள்? உள்ளம் சொக்கும் நாள் எந்தநாளோ?" என்று பாரதிதாசன் கனவு கண்ட நாளே தமிழர் திருநாளாகும்.


சீர்திருத்தச் செயலால்

 தமிழர் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்த சாதி வேற்றுமை, மூட நம்பிக்கை, மத நம்பிக்கை, பகுத்தறிவுக்குப் புறம்பான பழக்கவழக்கங்கள், குடிப்பழக்கம் முதலானவற்றைக் களையக் கோசா அயராது பாடுபட்டார். பெரியார் ஈ வெ ரா அவர்களை மலேசியா, சிங்கைக்கு இருமுறை வருமாறு செய்து இங்குள்ள தமிழ் மக்களுக்குப் பகுத்தறிவுச் சிந்தனைகளை அவர் வாயிலாக எடுத்துணர்த்துமாறு செய்தார். மேலும் தமிழர் சீர்திருத்த சங்கம் 1930இலேயே தொடங்கினார். 1939இல் அகில மலேயா தமிழர் சங்கம் என்னும் அமைப்பை உ. இராமசாமி நாடார் தலைமையில் ஆரம்பித்து வைத்தார். படிப்பகம், நூலகம் பலவற்றைத் திறக்க வழி செய்தார். 1956இல் மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றம் தொடங்க ஆவன செய்தார். இத்தகைய அமைப்புகள் வழி இவர் மேற்கொண்ட செயலாற்றலால் சாதி வேற்றுமை குறைந்தது. கலப்புத் திருமணங்கள் பெருகின. சுயமரியாதைத் திருமணங்கள் நடத்திவைக்கப்பட்டன. தமிழர்கள் தம் திருமணங்களைப் பதிவு செய்துகொள்ள வழிசெய்தார். சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்என்பது குறள். ஆனால் கோசா தாமே ஒரு சீனப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். குடி குடியைக் கெடுக்கும்என்பதை எடுத்துரைத்துத் தமிழ்ச் சமுதாயத்தை திருத்தினார். மேலும் "கேடில் விழுச் செல்வம் கல்வி" என்பதைத் தமிழ் மக்கள் உணர்ந்து பின்பற்றும்படி செய்தார். ஏழைத் தொழிலாளர் நலம்பெறவும், தமிழ்ப் பெண்கள் பல உரிமைகளைப் பெறவும் தக்கன செய்தார். பெண்கள் நாடாளு மன்ற உறுப்பினர்களாக வர வேண்டும் என்று தலையங்கங்கள் எழுதினார். இங்குள்ள கோயில்களில் உயிர்க்கொலை செய்வதைத் தடுக்க ஆவன செய்தார்.

குடியுரிமை முயற்சியால்

  எல்லாவற்றுக்கும் மேலாக 'ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒரு கால்' என்பதற்கேற்பத் தமிழகத்தில் ஒருகாலும் சிங்கப்பூரில் ஒருகாலும் வைத்துத் தடுமாறிக்கொண்டிருந்த தமிழ் மக்களைச் சிங்கைக் குடிமக்களாக ஆக்குவதற்குக் கோசா எடுத்துக்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிட வேண்டும். இம்முயற்சியின் விளைவாக இன்று சிங்கப்பூரில் செல்வச் செழிப்புடன் தமிழர்கள் வாழ்வதற்கு வழிசெய்த கோசா அவர்களைத் தமிழர் தலைவர்- தமிழவேள்-என்று கூறத் தடை ஏதேனும் உண்டா? கூறீர்.


நாட்டுப் புகழ் நாட்டியதால்

  இறுதியாகத் தமிழ் என்னும் சொல் நாட்டையும் உணர்த்தும் நிலையில் தமிழ வேளைக் காண்போம். "தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன்" என்னும் புறநானூற்றுத் தொடரில்(51:5) தமிழ் என்பது தமிழ் நாட்டைக் குறிக்கிறது. தமிழ் நாட்டின் பெருமையைத் தரணி அறியச் செய்வதற்கும் கோசா பாடுபட்டார். தமிழ் நாட்டின் பெருமையைப் பாரதியார் " வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று ஓரடியில் கூறிவிட்டார். தமிழர்கள் தரணிக்கு வழங்கிய நன்கொடைகளில் தலையாய நன்கொடையாகிய
திருக்குறளையும் அந்நூலை ஆக்கிய திருவள்ளுவரையும் தமிழர்களிடையேயும் மற்றவர்களிடையேயும் பரப்பும் நோக்கத்தில் திருக்குறள் விழா, திருவள்ளுவர் விழா ஆகியவற்றைக் கொண்டாட வழிசெய்தார். திருக்குறள் மனனப் போட்டிகள், கதைகள், வகுப்புகள், சொற்பொழிவுகள் நடக்க ஆவன செய்தார். மேலும் தமிழ் முரசில் திருவள்ளுவராண்டு இடம் பெறச் செய்தார். ஏனைய தமிழ் இலக்கியம், தமிழ்ச் சான்றோர்கள், கவிஞர்கள் பற்றிச் சிங்கை மக்கள் அறியப் பத்திரிகை, அமைப்புகள் வாயிலாகப் பல நடவடிக்கைகள் மேற்கொண்டார். பாரதிதாசனைப் பற்றித் தமிழர்கள் அறியவும் அவர்க்கு நிதி சேர்த்துதவும் முயன்றார் கோசா. இவ்வாறு தமிழ் நாட்டின் பெருமையையும் போற்ற அவர் தவறவில்லை.

முடிவுரை

 தமிழவேள் என்னும் தொடரிலுள்ள தமிழ் என்னும் சொல்லுக்கு அகராதி உணர்த்தும் இனிமை, நீர்மை, முத்தமிழ்மொழி, இலக்கியம், தமிழரினம். தமிழ்நாடு ஆகிய அறுவகைப் பொருள் நோக்கிலும் பெரும்பணி செய்து வாழ்ந்து மலேசிய சிங்கைத் தமிழர்க்கு வழிகாட்டிய ஒளிவிளக்கே தலைவர் கோசா எனப்படும் தமிழவேள் கோ சாரங்கபாணி ஆவார். அவரைத்  தமிழவேள் என்ற பெயராலேயே அழைப்பதை மறுப்பார் உண்டோ? இல்லை என்றே உறுதியாக இயம்பலாம். சாரங்கபாணி செய்த சாதனையை இனி ஆரங்கே செய்வார்? சாற்றுங்கள்.



....முற்றும் ....

Dr S.P. Thinnappan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக