வெள்ளி, 2 மே, 2014

சமயம் - சைவம் -10


அபிராமி அந்தாதி அழகு

பேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பன்

சிங்கப்பூர்  தேசிய பல்கலைக்கழகம்

சிம் பல்கலைக்கழகம் சிங்கப்பூர்


அந்தாதி இலக்கியம் என்பது தமிழுக்கே உரிய இலக்கிய வகைகளில் ஒன்று.  பிற மொழிகளில் இவ்வகை இலக்கியம் இருப்பதாகத் தெரியவில்லை.  அந்தம் என்றால் முடிவு, இறுதி. ஆதி என்றால் முதல், தொடக்கம். அந்தாதி என்றால் ஒரு பாடலின் இறுதியிலுள்ள அடியோ, சீரோ, அசையோ, எழுத்தோ, அடுத்த பாடலுக்கு முதலாக வருமாறு அமைத்துப் பாடுவது.  ஒரு நூலின் இறுதிப்பாடலின் முடிவு முதற்பாட்டின் தொடக்கமாக அமையுமாறு மாலை போலத் தொடுத்து முடிப்பது அந்தாதி. இம்முறையால் மனப்பாடம் செய்யவும், பாடவும், நினைவில் வைத்துக்கொள்ளவும் பாடல் வரிசை மாறாமல் அமையவும். நூலை மாலை போல இணைக்கவும் முடிகின்றது.    அந்தாதி நூலாக அமையும் போது வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறை என்னும் பாவகையினால் அமைய வேண்டும்.


        அந்தாதி ஓர் இலக்கிய வகையாக வளர்ந்தது கி.பி.ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான்.  காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத்திருவந்தாதி தான் முதன் முதலில் தோன்றிய அந்தாதி நூலாகும்.  இது சிவபெருமானைப் பற்றியது.  இது பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளது.  இதனைத் தவிர அத்தொகுப்பில் சேரமான் பெருமாள் நாயனார் பாடிய பொன்வண்ணத்தந்தாதி, நக்கீரர் பாடிய கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய நூல்களும் உள்ளன.  திருத்தொண்டர் திருவந்தாதி, பெரிய புராணத்திற்கு உறுதுணையாக இருந்த நூல். இது அடியார்களைப் பற்றியது. ஏனைய இரண்டும் சிவ பெருமானைப் பற்றியது.  இவ்வாறே நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் முதலாழ்வார் மூவரும் பாடிய தனித்தனி அந்தாதிகள், திருமழிசையாழ்வார் பாடிய திருவந்தாதி முதலிய நூல்களும் உள்ளன.  இவை திருமால் பற்றியவை.  கம்பர் பாடிய சடகோபர் அந்தாதி, சரசுபதி அந்தாதி முதலிய நூல்களும் உள்ளன.  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய அந்தாதி நூல்களும் உள்ளன.  அருணகிரியார் முருகனைப் பற்றிக் கந்தரந்தாதி என்னும் நூல் இயற்றியுள்ளார்.  அபிராமி  பட்டர் திருக்கடவூர் அபிராமி அம்மையைப் பற்றி (சக்தியைப் பற்றி)எழுதிய அபிராமி அந்தாதி புகழ்மிக்க அந்தாதிகளில் ஒன்று.   அது 100 பாடல்களைக்கொண்ட நூல். முதல் பாட்டு உதிக்கின்ற செங்கதிர் என்று தொடங்குகிறது. கடைசிப்பாட்டு அம்மையின் திருவுருவ அடையாளங்கள் பட்டரின் நெஞ்சில் எப்போதும்  உதிக்கின்றன  என்று முடிகிறது. இவ்வாறு ஆதியும் அந்தமும்- பிறப்பும் இறப்பும்- இல்லாத இறைவிக்கு அந்தாதிமாலை சூட்டியவர் அபிராமிபட்டர்.


அபிராமி என்னும் சொல்லுக்குப் பேரழகு வாய்ந்தவள் என்று பொருள்..மனிதர்களாகிய நம் அழகு அழியும் அழகு. ஆனால் அம்மையின் அழகோ என்றும் அழியா அழகு. இதனை அபிராமி பட்டர் தம் அந்தாதியில் அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி (71) என்று கூறுகிறார். அழகு வண்ணத்தாலும் வடிவத்தாலும் வருவது. இதனை மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே (70) என்றும் வானந்தமான வடிவுடையாள் (11)  அதிசயமான வடிவுடையாள் அரவிந்தம்- தாமரை- எல்லாம் துதி சயவான சுந்தரவல்லி  (17) என்றும் சொல்கிறார். அணியும் அணிகளாலும் அழகு வரும். ஆனால் அம்மையின் அழகோ அழகு தரும் அணிக்கே அழகு சேர்ப்பது. இதனை பட்டர் அணியும் அணிக்கழகே”(24) என்று அம்மையை நோக்கி அழைக்கிறார்.  ஆயிரம் மின்னல்கள்  சேர்ந்தாலும் அவள் வடிவுக்கு ஈடில்லை என்கிறார். இத்தகைய பேரழகு வாய்ந்த பெருமாட்டியைக் கண்ணால் கண்டு களித்தவர் அபிராமி  பட்டர். இதனை அவரே

கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் (70)  என்று அந்தாதியில் அவரே கூறுகிறார்.மொழிக்கும்நினைவுக்கும் எட்டாதது அவள் திருவுரு என்பது பட்டர் கருத்து.  எனவே அழகு வழிபாடே அபிராமி அந்தாதி ஆகும்.


அபிராமிபட்டர் அந்த அழகியை எங்கே கண்டார்.? அவர் பிறந்த ஊராகிய திருக்கடவூரில் தான். அந்த ஊருக்குப் பல பெருமைகள் உண்டு. தேவாரம் பாடிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடியுள்ள சிறப்பு அதற்கு உண்டு. சிவபெருமான் மார்க்க்ண்டேயருக்காக் எமனை வென்ற இடம்தான் இது. அதனால்தான் அறுபதாம் ஆண்டு எண்பதாம் ஆண்டு நிறைவு விழாக் காண்போர் இந்த ஊரை நாடி வருகிறார்கள். தேவர்கள் கடைந்த அமுதக் குடம் சிவலிங்கமாக மாறிக் காட்சி அளிக்கும் ஊர். 63 நாயன்மார்களில் குங்கிலியக் கல்ய நாயனார், காரி நாயனார் பிற்ந்து வழிபட்ட ஊர். இத்தகைய ஊரில் அருள்பாலிக்கும் அம்மைதான் அபிராமி.


அபிராமிபட்டர் அந்த அழகியை எப்போது கண்டார்? அவர் தஞ்சாவூரை ஆட்சிசெய்த சரபோஜி மன்னர் காலத்தவர். அதாவது 18ஆம் நூற்றண்டை ஒட்டி வாழ்ந்தவர். ஒரு நாள் அம்மையின் பக்தியில் ஆழ்ந்திருந்த பட்டரை நோக்கி நாளை என்ன திதி என்று கேட்டான். அதற்கு அவர் பௌர்ணமி என்று சொல்லிவிட்டார். இதனைக் கேட்ட மன்னன் நாளை அமாவாசை அன்றோ? நாளை நிறை மதியைக் காட்டமுடியுமா?” என்று கேட்டான். அதற்கு பட்டர் அம்மையின் அருளால் முடியும் என்றார். உடனே அரசன் கடும்தண்டனைக்கு ஆளாக்கினான், அப்போது பட்டர் அபிராமி அந்தாதி பாடி விழிக்கே அருளுண்டு என்று தொடங்கும் 71ஆம் பாடலைப் பாடியதும் அம்மை தோன்றித் தம் தோட்டினை வானத்தில் விட்டெறிந்தார். அது முழு நிலவாகக் காட்சி அளித்தது. அரசன் அபிராமி பட்டரின் அருளாற்றலை உணர்ந்து அடிபணிந்தான்.


     

அபிராமி அந்தாதி ஒரு வித்தியா தத்துவ நூல் . பட்டார் இந்நூலில் அம்மையை மனோன்மணியாகவும் திரிபுரசுந்தரியாகவும் பார்வதியாகவும் புவனேஸ்வரியாகவும் கண்டு வருணிக்கிறார்.. படைத்தல், காத்தல், மறைத்தல் முதலிய தொழிலைச் செய்பவள் சக்தியே என்பது அவர்பார்வை.

பூத்த்தவளே புவனம் பதிநானகையும் பூத்தவண்ணம்

காத்தவளே பின் கரந்தவளே (13) என்னும் வரிகள் சான்றாகும். மனிதர், தேவர், மாயா வரம் பெற்ற முனிவர் முதலிய பலரும் வணங்கும் தெய்வம் அபிராமி என்றும் அவர் பாடுகிறார். பயிரவி, காளி, சண்டி, சூலி , வராகி முதலிய பல பேர்களைத் தாங்கி நிற்பவ்ள் அந்த அம்மை என்பதும் அவர் கருத்தாகும்.

 அபிராமி அம்மையின் கடைக் கண் பார்வையின் ஆற்றலை


தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா

மனம் தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும் ந்ல்லன் எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே (69)


என்னும் பாடல்வழி பட்டர் வெளிப்படுத்துகிறார். இப்பாட்ல்வழி நாமும் அம்மையை வழிபட்டு அவள் அருளைப் பெறுவோமாக.

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்

பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளைப் புவிஅடங்கக்

காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கருப்பு வில்லும்

சேர்த் தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே


ஓங்காரம்


                               டாக்டர் சுப. திண்ணப்பன்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம்

சிங்கப்பூர்



       இந்து சமய அடிப்படையில் இறையின் திருவருளைப் பெற உதவுவது இறை வழிபாடு. இந்த இறை வழிபாடு என்பது இறை உருவத்தை மனத்தால் நினைத்து, வாயினால் இறையின் புகழை ஓதி, உடம்பினால் இறைபணி செய்வதே ஆகும். மனத்தால் நினைப்பது பாவனை எனப்படும். வாயினால் ஓதுதற்கு உறுதுணையாக இருப்பது மந்திரம், உடலால் செய்யும் பணி கிரியையாகும். மந்திரம் என்பது மனத்தின் விளைவாகிய எண்ணத்திற்கும், உடலின் பயனாகிய செயலுக்கும் நடுவே இருப்பது. மந்திரம் என்னும் சொல்லுக்குப் பொருள் இடையூறு வராமல் காப்பது என்று கூறுவர். தமிழ் நூல்களில் தொன்மையான தொல்காப்பியம் மந்திரம் என்பதற்கு வரையறை கூறுகிறது.

                  'நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த

                  மறைமொழி தானே மந்திரம் என்ப' 

சொல்லிய சொல்லின் பயனை விளைவிக்கும் அருளாளர்கள், ஆணையிட்டுச் சொல்வது, பொருள் பல மறைந்து இருப்பது தான் மந்திரம் என்பது தான் மேலே கண்ட தொல்காப்பிய நூற்பாவின் கருத்தாகும். இத்தகைய மந்திரங்களில் தலைமையானதாகவும், அடிப்படையானதாகவும் அமைந்த ஒன்று தான் ஓங்காரம் எனப்படும் ஓம் என்பதாகும்.



       ஓங்காரம் ஆகிய இந்த மந்திரத்தைத் தாரக மந்திரம் என்றும், பிரணவ மந்திரம் என்றும் பெயரிட்டு அழைப்பார்கள். தாரகம் என்றால் தாண்டச் செய்வது என்று பொருள். அதாவது நமக்குப் பிறவிக் கடலைத் தாண்ட - கடக்க - உதவும் பெரிய தோணியாக இருப்பது ஓம் எனும் மந்திரமே. எனவே தான் இதற்குத் தாரகம் என்று பெயர் வந்தது. பிரணவம் என்னும் சொல்லில் பிர என்பது அதிகம், விசேஷம், சிறப்பு என்னும் பொருளையும், நவம் என்பது புதுமை, துதிக்கப்படுவது என்னும் பொருளையும் உணர்த்தும். சொல்லிச் சொல்லி - அனுபவிக்க அனுபவிக்க - சிறப்பான உண்மைகளை உணர்த்துவது ஓங்காரம். மேலும் வாடாமல் எப்போதும் புதுமையாக இருப்பது ஓங்காரம் எனவும் பிரணவம் என்னும் பெயரால் உணர முடிகிறது.


        ஓம் என்பது , , ம் என்னும் மூன்று ஒலிகளால் உருவான ஒன்று. உயிரொலிகளில் , , மூன்றுமே அடிப்படை ஒலிகள் என்பதையும், ஒலியின் பாதிக் கூறும் ஒலியின் பாதிக் கூறும் இணைவதால் தான் ஒலி பிறக்கும் என்பதையும் இக்கால மொழியியல் உணர்த்தும். இது ஓர் ஒலியியல் செய்தியாகும். வாயைத் திறந்தவுடன் ஒலிக்கும் ஒலி . இதுவே எல்லா ஒலிகளுக்கும் அடிப்படை ஒலி. எனவே தான் திருவள்ளுவரும் தம் முதற்குறளிலே 'அகர முதல எழுத்தெல்லாம்' என்று கூறி உலகிற்குக் கடவுளே முதன்மை என்பதை உறுதிப்படுத்துகிறார். என்பது இதழ் - உதடு குவிவதாலும் ம் என்பது இரண்டு உதடுகள் இணைவதாலும் பிறக்கும் ஒலிகளாகும். வாயைத் திறந்தும், இதழ்குவித்தும், உதடு இணைத்தும் உருவாக்கும் ஒலியே ஓம் என்பதாகும்.

    

       ஓம் என்னும் உருவாக்கத்திற்கு உதவும் , , ம் ஆகிய மூன்றும் இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் குறிக்கும் எனவும், முக்காலங்களை (இறப்பு, நிகழ்வு, எதிர்) உணர்த்தும் எனவும், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றினைக் காட்டும் எனவும் தத்துவ உலகில் பல்வேறு கருத்துகளைக் கூறுவர்.


       ஓம் என்பதை ஓரெழுத்து மந்திரம் என்றும், ஐந்தெழுத்து மந்திரம் என்றும் கூறுபவர்கள் உண்டு. ஓம் என்பதிலுள்ள ம் என்பது முழுமையான மூக்கொலி அன்று என்பதால் இதனை ஓரெழுத்தாகக் கொள்வர். ஐந்தெழுத்து என்பவர்கள் , , ஆகியவற்றுடன் விந்து நாதம் என்பதையும் சேர்த்துக் கொள்வர். , , என மூன்றாகக் காண்பதை வியஷ்டிப் பிரணவம் என்றும், , , , விந்து, நாதம் என்னும்போது சமஷ்டி பிரணவம் என்றும் பெயர் கொடுத்துப் பேசுவர். சமஷ்டி என்னும் போது இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலையும் ஓம் உணர்த்துவதாக உரைப்பர்.

  ஓங்காரமாம் ஐந்தெழுத்தால் புவனத்தை உண்டு பண்ணிப்

  பாங்காய் நடத்தும் பரம்பொருளேஎன்பார்  தாயுமானவர்.


        சிவபெருமானின் மந்திரமாகச் சைவர்கள் கருதும் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்துடன் ஓம் என்பதை ஒப்பிட்டுக் காண்பர். இதைப் போலவே வைணவ சமயத்தினரும் தங்களுக்குரிய நாராயணாய நம என்னும் எட்டு எழுத்து மந்திரத்துக்கும் ஓம் என்பதை அடிப்படையாகக் கருதுவர். முருகனை வணங்கும் கௌளமார மதத்தினரும் சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்துடன் ஓம்- இணைப்பர். சக்தியை வணங்கும் சாக்த மதத்தினரும் 'ஓம் சக்தி ஓம் சக்தி' என்று இணைத்து ஒலித்து வழிபடுவர். தமிழில் உள்ள வரிவடிவமாகிய ஓம் என்பதன் வடிவமாகவே விநாயகர் இருப்பதால் 'பிரணவ சொருபி' என்று அவருக்குப் பெயர். முருகப் பெருமானின் வாகனமாகிய - தோகைவிரித்துத் தோன்றும்- மயிலும் ஓம் எனும் நாத தத்துவத்தின் அடையாளமே. எனவே ஓம் எனும் ஓங்காரம் இந்து சமயம் கூறும் எல்லா உட்பிரிவுகளுக்கும் உயிரோட்டமாக விளங்கும்  ஒரு மந்திரமாக உள்ளது.


        இந்து சமயத்தினர் எந்த மந்திரம் சொன்னாலும் முதலிலும் முடிவிலும் ஓம் என்பதைச் சேர்த்துச் சொல்ல வேண்டும். அதனால் அதற்கு அடிப்படை - பீஜ - மந்திரம் என்று பெயர். 'தூமறைக்கெல்லாம் ஆதியும் அந்தமும் சொல்லும் ஓமெனப்படும் ஓர் எழுத்து' என்று கந்தபுராணம் வேதத்தின் முதலிலும் முடிவுமாகத் திகழ்வது 'ஓம்' - ஓங்காரமே என்கிறது. ஓம் எனும் மந்திரத்தின் உட்பொருளை அறியாத காரணத்தால் படைப்புத் தெய்வமாகிய பிரமனை முருகப் பெருமான் தண்டித்தார் என்று கந்தபுராணம் கூறும். இந்த மந்திரத்தின் உட்பொருளை - உள் ஒளி அறிவை - தேவரில் சிறந்த சிவபெருமானுக்கும், முனிவரில் சிறந்த அகத்தியருக்கும், மனிதரில் சிறந்த அருணகிரியாருக்கும் முருகன் உபதேசித்தான் என உரைப்பர். எனவே தான் பரம்பொருளை அடைய விதிக்கப்படும் உபாசனைகளில் பிரணவ உபாசனை மிகவும் முக்கியமானது என்று கூறுகிறார்கள்.


        தமிழ் வேதமாகக் கருதப்படும் திருமுறைகளில் ஓம் எனப்படும் ஓங்காரம் மிகச் சிறப்பாகப் பேசப்படுகிறது. திருமுறை தந்த பெருமக்கள் அனைவரும் கடவுளைக் கண்டு அருள் பெற்ற அருளாளர்கள் - நிறைமொழி மாந்தர்கள். அவர்கள் ஆணையில் கிளந்த - சொல்லிய மறைமொழிகளாகிய மந்திரங்களே திருமுறை வாக்குகளாகும். இந்தத் திருமுறை பன்னிரெண்டு முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் கிய மூவரும் அருளிச் செய்த பாடல்கள் இவை. எட்டாம் திருமுறை மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம். ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்பன. பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம். பதினோராம் திருமுறை காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட 11 பேர் பாடிய பாடல்கள். பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணம். இத்தொகுப்பின் முதற்பாடல் - தேவாரத்தின் முதற்பாடல் 'தோடுடைய செவியன்' என ஓகாரத்தில் தொடங்குகிறது. 12ம் திருமுறையின் கடைசிப் பாடல் 'உலகெலாம்' என்னும் சொல்லால் 'ம்' என முடிகிறது. எனவே பன்னிரு திருமுறையின் உள்ளடக்கமே ஓங்காரம் ஆகிய ஓம் எனும் மந்திரமே என உணரலாம்.


         கடவுளின் அருளைத் தம் மூன்றாம் வயதிலேயே பெற்று உமையம்மை ஊட்டிய ஞானப்பால் உண்டு தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர்  'ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான்' சிவன் என்று பாடுகிறார். 'கண்ணால் யானும் கண்டேன், காண்க' என்று கூறும் மாணிக்கவாசகர் தம் திருவாசகப் பாடலாகிய சிவபுராணத்தில்

                            'எம்பெருமான்

            மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்

            உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

            மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

            ஐயா என ஓங்கி ழ்ந்து அகன்ற நுண்ணியனே!'


என்று தாம் உய்தி பெறும் பொருட்டுத் தம் மனத்தகத்தே இறைவன் ஓங்காரமாகிய 'ஓம்' என எழுந்தருளி உண்மைப் பொருளாய் விளங்குகிறான் என்று கூறுகிறார். எனவே பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் இறைவன் திருவடி - இறைவன் ஓங்காரமாகவே உள்ளான் என்பதை உணரமுடிகிறது. 'போற்றியோ நமச்சிவாய' என்னும் திருவாசகத் தொடரில் ஓம் என்பது ஆகச் சுருங்கி ஒன்றி நிற்பதையும் நாம் காணலாம். திருவாசகத்தின் உட்பொருளாகத் திகழும் நடராசப் பெருமானின் திருவாசியே ஓங்காரம் என உண்மை விளக்கம் எனும் தத்துவ நூல் உரைக்கிறது.




        திருமுறைகளில் திருமூலர் அருளிய திருமந்திரமே ஓங்காரம் பற்றி மிகுதியாகப் பேசும் தமிழ் நூலாகும்.


       ' ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி

        ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருஅரு

        ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பலபேதம்

        ஓம் எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.' (2676)


என்னும் திருமந்திரப் பாடல் ஓங்காரமே மறைமொழி - மகாவாத்தியம் என்றும், அதுவே உருவாகவும் உருவமற்ற அருவமாகவும் திகழ்வது என்றும், அதில் மக்கள், தேவர், ஞானிகள், யோகிகள் எனப் பல்வேறுபாடான கூறுகள் உண்டு என்றும், அதுவே முத்தி தருவது என்றும் கூறுகிறது.

      

        ' ஓங்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள்

         ஓங்காரத்து உள்ளே உதித்த சராசரம்

         ஓங்கார அதீதத்து உயிர் மூன்றும் உற்றன

         ஓங்கார சீவ பரசிவ ரூபமே.'   (2677)


ஓங்காரமே நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் தோன்றக் காரணமாக இருக்கிறது என்றும், உலகிலுள்ள அசையும் பொருள், அசையாப் பொருள் அனைத்துக்கும் ஓங்காரமே மூலம் என்றும், ஒரு மலம் (ஆணவம்) உடைய உயிர்கள், இருமலம் (ஆணவம், கன்மம்) உடைய உயிர்கள், மும்மலம் உடைய (ஆணவம், கன்மம், மாயை) உடைய உயிர்கள் என மூவகை உயிர்களும் ஓங்கார வழியே வந்தன என்றும், ஓங்காரமே (சீவனாகவும்) உயிராகவும், உயிர்க்குயிராகவும் திகழும் இறையாகவும் உள்ளது என்றும், இந்தத் திருமந்திரப் பாடல் கூறுகிறது. இத்தகைய சிறப்புடைய


         'ஓங்காரத்து உள்ஒளி உள்ளே உதயமுற்று

         ஆங்கார மற்ற அனுபவம் கைகூடார்

         சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்

         நீங்கார் சமயத்து நின்று ஒழிந்தார்களே.' (1556)


என்று கூறி நமக்காக வருந்துகிறார் திருமூலர். 'ஓங்காரத்து ஆன்ம ஒளியாகவுள்ள இறைவனை ஆணவமாகிய ஆங்காரத்தை ஒழித்துக் கண்ட அனுபவம் பெறாமல் வீணே சாகிறார்களே! பிறவாமையாகிய பேரின்பத்தைக் கைவிட்டு அலைகிறார்களே' என்னும் திருமூலரின் ஏக்கத்தை - நமக்காகக் கொள்ளும் கழிவிரதத்தை இங்கே காணமுடிகிறது.


         இந்த ஓங்கார அனுபவம் சிறுவயதிலே - குழந்தைப் பருவத்திலேயே பெறத் தொடங்கப் பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே இந்து சமயத்தினர் காதணிவிழா செய்கின்றனர். தமிழ் வரிவடிவமான ஓகாரம் போலத் திகழ்கிறது நம் காது. இந்தக் காதில் துளையிடுவது, குத்துவது ம் என்னும் புள்ளியினை ஏற்படுத்துவதைக் குறிக்கும். எனவே ஓம் எனும் ஓங்கார மந்திரத்தை ஆச்சாரியன் வாயிலாகக் குழந்தையாக இருக்கும்போதே உபதேசம் செய்வதை இந்தக் காதணிவிழாச் சடங்கு காட்டுகிறது. இந்தக் குரு உபதேசம் பின்னர் நிகழும் வேத உபதேசம், வித்யா உபதேசம் (கல்வி கற்றல்) ஆகியவற்றுக்கெல்லாம் அடிப்படையாகும். மனிதனைப் புனிதமாக்க இந்த ஓம் உபதேசம் உறுதுணையாகிறது. அதனால்தான் இறந்த பச்சிளங்குழந்தைக்குக் கூடக் காது குத்திப் புதைக்கும் வழக்கம் ஏற்பட்டது. என்னும் காது வடிவில் ம் என்னும் புள்ளி குத்தப் பெறுவதால் இயக்கம் - புனிதத் தன்மை கிடைக்கிறது என்பதை உணர்த்தவே இந்தக் காது குத்தல் சடங்கு இந்து சமயத்தவரிடையே உள்ளது என்பதையும் உணரலாம்.

     

         'ஓங்காரத்தின் பெருமையைப்

         பாங்காய் அறிந்து பாரினில்

         ஆங்காரம் தவிர்த்து அகிலத்தில்

         நீங்கா இன்பம் பெறுவோமே!'          

  

---------------------------------

    





வேலை வணங்குவதே வேலை

டாக்டர் சுப. திண்ணப்பன்


    வேல் என்னும் சொல் வெல் என்னும் அடிச் சொல்லிலிருந்து தோன்றியது. வெல் என்றால் வெற்றி பெறு என்பது பொருள். எனவே வேல் என்றால் வெற்றி (Success). வாழ்க்கையில் எந்தத் துறையில் வெற்றி பெற வேண்டுமானாலும் வேலை வணங்க வேண்டும். இதனால் மனித உள்ளத்தில் தோல்வி மனப்பான்மை அகலும். உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல் என்னும் உணர்வு தோன்றும். தன்னம்பிக்கை கூடும்.


முருகன் தமிழ்க் கடவுள். சேயோன். வேலன், செவ்வேள் என அவனுக்குப் பல பெயர்கள் உண்டு. அவன் சூரபன்மன் (சூரன்) என்னும் அரக்கனை வெல்வதற்குச் சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவன் என்றும், அவன் சூரனுடன் போரிடுவதற்காகச் சிவபெருமான் ஆயுதங்களை அளிக்கும்போது எப்படைக்கும் நாயகமான வேலினைக் கொடுத்தார் என்றும் கந்தபுராணம் கூறுகிறது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் வெல்லும் ஆற்றல் வேலுக்கு உண்டு. அது பல உயிர்களையும் ஒன்றாக முடிப்பது, அரக்கர்களின் ஆற்றலை ஒடுக்குவது என்று வேலின் இயல்பைச் சிவன் விளக்குகிறார். சூரன் என்பது தீமையைக் குறிக்கும். தீமையை வென்று நன்மை மேலோங்க முருகன் கைவேலை வணங்க வேண்டும். சூரன் என்பது நம்மிடம் உள்ள ஆணவத்தை- நான் எனது என்னும் செருக்கை-(ego) குறிக்கும். ஆணவம் அகன்றால் இறையருள் கிட்டும். எனவே இறையருள் பெற்றுப் பேரின்பம் அடைய வேலை வணங்குவதே வேலை ஆகும்.


வேல் என்பது அறிவின் அடையாளம். அறிவுக்கு ஆழம், அகலம், கூர்மை ஆகிய பண்புகள் உண்டு. அது போல வேலுக்கும் அம்மூன்று பண்புகள் உண்டு. வேலின் வடிவம் தலையில் இலையும் அடிப்பாகம் நீண்ட காம்புமாக இருக்கும். இலையின் நுனி கூர்மையாக இருக்கும். இலையின் நடுப்பாகம் அகலமாக இருக்கும். அடிப்பாகம் காம்பு ஆழமாக இருக்கும். அறிவு என்பதும் எதனையும் நுணுகி நோக்கும் கூர்மை( sharpness)  கொண்டதாக இருக்க வேண்டும். அதே சமயம் பரந்த( width) தன்மை உடையதாகவும் அமைய வேண்டும், எதனையும் ஆழமாக( depth) அறியும் இயல்பும் வேண்டும். எனவே வேல் அறிவின் வடிவம். இறைவனும் அறிவின் வடிவமாக இருப்பதை வாலறிவன் என வள்ளுவரும், ஆழ்ந்தகன்ற நுண்ணியன் என மாணிக்கவசகரும் குறிப்பிடுகிறார்கள். ஆகையால் வேலை வணங்குவது அறிவு வழிபாடு ஆகும் அறிவுடையார் எல்லாம் உடையார்; அறி¢விலார் என்னுடையரேனும் இலர் என்பது குறள். எனவே பொருட்செல்வம் முதலிய எல்லாச் செல்வம் பெறுவதற்கும் அறிவுதான் முதலாகும். அம்முதலைப் பெற வேலை வணங்க வேண்டும். இவ்வழிபாடு நாம் பெற வேண்டிய அறிவின் மூன்று இயல்புகளையும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.




வேல் என்பது ஞானத்தின் அறிகுறி. ஞானம் பெறுவதே இறைவன் திருவடி பெற வழி. ஞானம் என்பது ஈசன்பால் அன்பே என்றனர் ஞானசம்பந்தர். இது சேக்கிழார் வாக்கு. ஞானசம்பந்தரோ தம் மூன்றாம் வயதில் உமை அம்மையார் பாலூட்ட சிவஞானம், கலைஞானம், மெய்ஞ்ஞானம் முதலிய எல்லா ஞானங்களையும் உணர்ந்தவர். இறைவனைக் கண்டவர். தோடுடைய செவியன் எனச் சைவத் திருமுறையைத் தொடங்குவித்தவர். இத்தகைய ஞானம் பெற வேலை வணங்குவதே முறையாகும்.


முருகனை அடைய ஞானசக்தியாகிய வேலை வணங்குவதே வழி. வள்ளி இச்சா சக்தி(விருப்பம்), தெய்வயானை கிரியா சக்தி ( செயல்). ஒரு காரியத்தில் ஈடுபட முதலில் அதில் விருப்பம் (attitude)வேண்டும். பிறகு அதைப் பற்றி அறிய(knowledge) வேண்டும். பிறகு செயலில்(action) இறங்க வேண்டும். செயலாற்றும் திறனையும் வள்ளி தெய்வயானையுடன் கூடிய வேல் வழிபாடு உணர்த்துகிறது.


வேல் என்பது சக்தியின் - ஆற்றலின் அடையாளம். மக்கள் சக்தி பெற வேலை வணங்க வேண்டும் எனவே தான் சக்திவேல் என்று அழைக்கிறார்கள். இந்த வேலைச் சக்தியாகிய உமைஅம்மை முருகப் பெருமானுக்குக் கொடுத்தார் என்ற செய்தி அபிதான சிந்தாமணி என்னும் நூலில் உள்ளது,. சூரபன்மன் மகன் பானுகோபனால் வீரபாகு முதலிய தேவர்க்கு நேர்ந்த துன்பத்தை முருகப்பெருமான் கட்டளைப்படி நீக்கியது வேல் என்று கந்தபுராணம் கூறும். அடியவர்களாகிய மக்களின் துன்பம் நீங்க- மனக்கவலை மாற்ற வேலை வணங்குவதே முதல் வேலையாக இருக்கவேண்டும். வேலுண்டு பயமில்லை, கந்தனுண்டு கவலை இல்லை. இன்ப துன்பத்துக்குக் காரணமான வினையை நீக்கும் ஆற்றலும் வேலுக்கு உண்டு. வேலுண்டு வினை இல்லை அல்லவா?


வேல் வணக்கம் இன்று நேற்றுத் தோன்றியது அன்று, முருகப் பெருமான் திருவுருவ வழிபாட்டுக்கு முன் தோன்றியது வேல்வழிபாடு. வேலை மட்டும் வைத்து வழிபடும் கோயில்கள் (வேல் கோட்டம்) பூம்புகார் நகரில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இன்றும் வேலை மட்டும் வைத்து வழிபடும் திருக்கோயில்கள் தமிழகத்திலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் உள்ளன.  சிங்கப்பூரில் தேங்க் ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி கோயில் மூலவர் முருகப் பெருமான் திருக்கை வேல் என்பது உணரத்தக்கது.


முருகன்  திருக்கை வேலின் பெருமையை நக்கீரர், இளங்கோ அடிகள், அருணகிரிநாதர் முதலியோர் கூறியுள்ளனர். நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் பார் முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்குச் சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல் என்று  (கடலில் ஒளிந்துகொண்ட சூரபன்மனை வென்ற வேல்) கூறுகிறார். மேலும் அவர்


வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட

தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்- வாரி

குளித்தவேல் கொற்றவேல் சூர்மாவும் குன்றும்

துளைத்தவேல் உண்டே துணை



குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்

அன்றுஅங்கு அமரர் இடர் தீர்த்ததுவும்- இன்று எனக்குக்

கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்

மெய்விடா வீரன்கை வேல்


என்னும் இரண்டு வெண்பாக்களில் வேலின் பெருமையை விளக்குகிறார். பூதம் நக்கீரரைச் சிறையில் அடைத்தபோது வேல் விடுவித்தது என்றும், சூரபன்மனைக் கொன்று தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்ததும் வேல்தான் என்றும், கிரவுஞ்சன் என்ற அரக்கன் மலையாய் நின்றபோது அம்மலையைப் பிளந்ததுவும் முருகன் வேல் என்றும் வெற்றி வேல், வீரவேல் என்றும் நக்கீரர் கூறுகிறார். கிரவுஞ்ச மலையைப் பிளந்தது என்பது நம் நெஞ்சமாகிய பெருங்கல்லை உருக்கும் ஆற்றல் வேலுக்கு உண்டு என்பதையே உணர்த்துகிறது. நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்துருகச் செய்பவன் முருகன் என்பது அருணகிரியார் வாக்கு.


சிலப்பதிகாரத்தில் குன்றக்குரவை என்னும் பகுதியில் குறவர்கள் முருகன் திருக்கை வேலைப் போற்றிப் பாடுவதை இளங்கோ அடிகள் குறிப்பிட்டுள்ளார்,


முருகப் பெருமான் திருவருளி£ல் திளைத்து நின்ற அருணகிரியாரோ வேல்விருத்தம், வேல்வகுப்பு என இரண்டு நூல்கள் வேலின் பெருமையை விளக்க இயற்றியுள்ளார். வேல் வகுப்பில் அவர் முருகன் கைவேல் வள்ளியின் விழிக்கு ஒப்பாகும். நக்கீரனை மலைக் குகையிலிருந்து மீட்கும். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் எல்லாருடைய துன்பங்களையும் களையும். சூரிய ஒளி, சந்திர ஒளி, வடவாக்கினி ஒளி எல்லாவற்றையும் ஒடுங்கும்படி பேரொளியுடன் வீசும். முருகன் அடியார்களுக்குக் கெடுதல் நினைப்பவர்களைப் பூண்டோடு ஒழிக்கும். திருப்புகழ் பாடுவார் பகை அறுக்கும். அறத்தை நிலைநாட்டும். எமன் வரும்போது அவனைக் காலால் உதைத்த சிவன் திருவடிக்கு ஒப்பாகும். எல்லா உயிர்களுக்கும் உணவு அளிக்கும்.என்கிறார். கந்தர் அலங்காரத்தில் பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே என்று பாடுகிறார்.


கந்த ஷஷ்டி கவசம் முழுதும் நம்மைக் காக்க முருகன் வேலை வேண்டுவதாகத் தானே உள்ளது. காக்கக் காக்க கனவேல் காக்க என்று அதில் ஓரடி உண்டு. கனக வேல் என்பது தங்க வேலைக் குறிக்கும். இப்போது முருகப் பெருமானுக்குச் சாத்தப்படும் தங்கவேலை நோக்கி நாமும் காக்கக் காக்க கனக வேல் காக்க என வேண்டித் தொழுது துன்பம் நீக்கி இன்பம் பெறுவோமாக.


--------



    

 











திருமுறைகளில் அம்மை

சுப.திண்ணப்பன்


சிவபெருமானை மூல முதல்வனாகக் கொண்டு செந்தமிழில்

பாடப்பெற்ற பக்திப் பாடல்களின் தொகுப்பே திருமுறைகளாகும். சைவ சமயத்தவர்கள் நாள்தோறும் காதலாகிக் கசிந்துருகி வேதம்போல ஓதத் தக்கவை திருமுறைகளாகும். இவை எண்ணிக்கையால் பன்னிரண்டு. இவற்றைப் பாடியவர்கள் 27 அருளாளர்கள்.திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர். சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரப்பாடல்கள் முதல் ஏழு திருமுறைகளாகும். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாகும். திருமாளிகைத்தேவர், சேந்தனார் முதலிய ஒன்பது ஆசிரியர்களால் இயற்றப்பட்ட திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவை ஒன்பதாம் திருமுறையாகும். திருமூலர் பாடிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும். காரைக்கால் அம்மையார், பட்டினத்தார், சேரமான் பெருமாள் நாயனார் முதலிய பதினோரு பேர் பாடிய பாடல்களின் தொகுப்பு பதினோராம் திருமுறையாகும். சேக்கிழார் பாடிய பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறை. இந்தத் திருமுறைகளிலுள்ள மொத்தப்  பாடல்கள் 18402. திருமுறை ஆசிரியர்கள்

இறைவன் திருவருளைப் பெற்றுப் பேரின்பம் அடைந்தார்கள். இவர்கள் தாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்னும் பெரு நோக்கத்துடன் மற்றவர்களும் இறைவன் திருவருளைப் பெற வழிகாட்டினார்கள். அவர்கள் காட்டிய வழிமுறைகளே

திருமுறைப்பாடல்களாக் மலர்ந்துள்ளன.


"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை" என்று கூறினார் திருமூலர். எனவே இறைவன் ஒருவனே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவன் ஓருருவம், ஒரு நாமம் இல்லாதவன். அவன் ஆணல்லன், பெண்ணல்லன், அலியுமல்லன். எனினும் அவனை அம்மையாகவும் அப்பனாகவும் கருதி வழிபடுதல் நம் சைவ மரபாகும்.

" அம்மை நீ அப்பன் நீ" என்றும் "ஈன்றாளுமாய் எந்தையுமாய்" என்றும் நாவுக்கரசர் பெருமான் தம் தேவாரத்தில் இறைவனை வர்ணிக்கிறார். திருவாசகமும் " அம்மையே அப்பா ஒப்பிலா மணியே" என்று இறைவனை அழைக்கிறது.


இறைவனாகிய சிவபெருமான் அன்பின் மறுவடிவம். "அன்பே சிவம்" "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்" என்பன திருமந்திர மொழிகள். இறைவியாகிய உமை அம்மையாரோ அருளின் திருவுருவம்.. " அருளது சக்தியாகும் அரன் தனக்கு" என்பது சிவஞான சித்தியார் வாக்கு. அருள் என்பது அன்புத்தாய் பெற்றெடுத்த குழந்தை என்பதை " அருளென்னும் அன்பீன் குழவி" என்னும் வள்ளுவர் வாக்கு வலியுறுத்தும்.


அருள் என்பதைக் கருணை என்றும் அழைப்பர். கருணை அறக்கருணை,

மறக்கருணை என இரு வகைப்படும். கருணையின் வடிவமாகிய அம்மை

அறக் கருணையாகவும் தோன்றுவாள். மறக் கருணையாகவும் காட்சி

அளிப்பாள். " அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே

துணை" என்னும் குறள் இக்கருத்துக்கு அரண் சேர்க்கும்.

அறத்திற்கு  ஆதரவு தருவதும் மறத்திற்கு அழிவு தருவதும் சக்தியின் -  அம்மையின் இயல்புகளாகும். அதாவது உலகில் நல்லனவற்றை வாழவைப்பதும் அல்லனவற்றை வீழவைப்பதும் அவளது செயல்களாகும். நல்லார்க்கு அருள்செய்து காப்பதும். அல்லாரை அடியோடு அழிப்பதும் அவளது பணிகளாகும் இதனை " துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலன" என்று வடமொழியாளர் கூறுவர்.அறக் கருணை வடிவமே உமை அம்மை, மறக்கருணை வடிவமே உருத்திர காளி. அம்மையின் இவ்விரு

வடிவங்களும் திருமுறைகளில் இடம்பெறும் இயல்பை இக்கட்டுரையில்

காண்போம்.


திருமுறையில் உமை அம்மை


 திருமுறையின் தொடக்கப் பாடல் தோடுடைய செவியன் எனத் தொ டங்கும் திருஞான சம்பந்தர் தேவாரம் ஆகும்.  இப்பாடல் எழுந்த சூழ்நிலையைப் பார்ப்போம். சீகாழியில் தந்தையாருடன் நீராடச்சென்ற ஞானசம்பந்தக் குழந்தை தன் தந்தை நீராடும்போது அவரைக் காணாது கலங்கிக் கோயிலைப் பார்த்துஅம்மே அப்பா என்று அழுதது, இதனைக் கேட்ட சிவபெருமான் உமை அம்மையோடு அங்கு எழுந்தருளி உமை அம்மையைப் பார்த்து துணைமுலைகள் பொழிகின்ற பாலடிசில் பொன் கிண்ணத்து ஊட்டு எனப் பணித்தருளினார். அதற்கேற்ப உமை அம்மை எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி உண் அடிசில் எனச் சம்பந்தர்க்கு ஊட்டினார். அந்நிலையில் சம்பந்தர் சிவஞானம், கலைஞானம், மெய்ஞ்ஞானம் முதலியன உணர்ந்து ஞான சம்பந்தர் ஆனார். நீராடிவிட்டுக் கரையேறிய ஞானசம்பந்தரின் தந்தையார் யார் அளித்த பாலடிசில் உண்டது நீ என அரட்டிக் கேட்க அதற்குப் பதில் கூறும் வகையில் எழுந்ததுதான்தோடுடைய செவியன் எனத் தொ டங்கும் பாடல். எனவே திருமுறையின் தொடக்கத்திற்கே உமை அம்மையார்தான் காரணம் என்பதனை இதன் வழி உணரலாம்.


தோடுடைய செவியன் என்னும் தொடரில் தோடு என்பது பெண்கள் காதில் அணியும்

ஓர் அணிகலன். செவியன் என்பது ஆண்பாலை உணர்த்துவது. எனவே தோடுடைய செவியன் என்பது உமாதேவியாரைத்  த ன் உடம்பில் ஒரு பாதியாகக் கொண்ட உமையொரு பாகனை உணர்த்தும். உமை அம்மை அருளால் உருவான திருமுறை வாக்கை நினைத்துத்தான் உமையம்மையாரைக் குறிக்கத் தோடு எனத் தொடங்கிப் பாடினார் ஞானசம்பந்தர். எனவே சிவபெருமானையே பாடும் திருமுறையின் தொடக்கம்

அவனருட்சக்தியாகிய அம்மையே நோக்கியே அமைந்துள்ளது என்லாம்.


உமையம்மையாரைத் தலைவியாகக் கொண்டு பாடும் தனி நூல்களோ தனிப் பாடல்களோ

திருமுறைத் தொகுப்பில் இல்லை. எனினும் சிவபெருமானுடன் சார்த்தியே பல இடங்களில் உமை அம்மை பற்றிய செய்திகள் வந்துள்ளன. உமை அம்மையாரின் சிறப்பு தேவாரப் பாடல்களில் இலைமறை காயென ஆங்காங்கே ஓதப்பெறுகின்றது.

தோடுடைய செவியன் என உமையொரு பாகனை ஞானசம்பந்தர்.கூறியது போலவே நின்கழல்கள் காணப் பாதியோர் பெண்ணை வைத்தாய்உமையோடு உடனாகி இருந்தான் தன்னை என்று நாவுக்கரசரும் கூறுவார். இறைவனின் திருவடி திருவருள் தொழிற்படும் இடம் என்பதையும், அத்திருவடியே அடியவர்க்கு அருள்புரியும் என்பதையும், திருவடியே சக்தியாக உருவகிக்கப்பட்டுள்ளது என்பதையும் இவ்வடிகள் உணர்த்தும். மேலும் சுந்தரர் தம் தேவாரத்திலும் ஒரு பாகம் பெண்ணாவார் என்றும்,

வண்டாடும் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவனே என்றும் பாடுகிறார்.




சிவபெருமான் பல்வேறு நிலையில் கோயில்கொண்டு விளங்கினாலும் உமைஅம்மையோடு

எழுந்தருளியிருக்கும்போதே இன்புறுவான் என்னும் கருத்தை ஞானசம்பந்தர் சுத்தமார் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தாற்போல், அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாயாவதும் இதுவேஅண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாயாவது இதுவே என்னும் பாடல் அடிகளால் குறிப்பிடுவர். இதன் விளைவாகத்தான் பிற்காலத்தில் உமையம்மையார்க்குத் தனிக் கோயில்கள் எழுப்பபட்டன.

தேவி வழிபாடு தோற்றம் கண்டது.


சிவபெருமான் பெண்ணின் நல்லாளாகிய உமை அம்மையுடன் பெருந்தகையாக வீற்றிருப்பது நாம் அனைவரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவிலை என்பதை உணர்த்தத்தான் என உரைக்கிறார் ஞானசம்பந்தர். இல்லற வாழ்வின் ஏற்றத்தையும், வையத்து வாழ்வாங்கு வாழவேண்டியதன் தேவையையும் வலியுறுத்தவே இப்பாடல் எழுந்தது  என்பதை நாம் உணர வேண்டும். இறைவன் இறைவியுடன் கூடியிருப்பது ஆண் பெண் இணைந்த இல்லற வாழ்வின் பெருமையை உலகத்தார்க்கு உணர்த்தவே ஆகும். இல்லற வாழ்வில் ஈடுபடுவது வீடு பேற்றுக்கு வழிவகுக்காது என்னும் கருத்தை மறுக்கவே இப்பாடல் எழுந்தது  என்பதையும் நாம் நோக்க வேண்டும். ஐயாறு அடைந்த நாவுக்கரசர் மாதர்பிறைக்கண்ணியானை மலையான் மகளொடும் பாடிக் கண்டறியாதன காணும் காட்சியில் இறைவனும் இறைவியுமாகத் தோன்றும் தோற்றமும் இதனை வலியுறுத்தும். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் "குவளைக்கண்ணிக் கூறன் காண்க, அவளும் தானே உடனே காண்க" என்று கூறுவதையும் நோக்கவேண்டும்.


திருவாசகத்தில் வரும் திருவெம்பாவையின் உட்கருத்து " சக்தியை வியந்தது" என்பர். கன்னிப் பெண்கள் நாடு செழிக்க மழை பெய்யவும், வீடு செழிக்க நல்ல கணவனைப் பெறவுமே திருவெம்பாவை எழுந்தது. உமாதேவியின் அருளையே மழையாக

உருவகித்துப் போற்றும் திருவெம்பாவைப் பாடல் இதோ:


 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்

 என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்

 மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

 பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்

 என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்

 தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

 முன்னியவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே

 என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.


மேகம் உமையம்மையின் நீலநிறம்போல நிறம் பெற்றுத் திகழ்கிறது; உமையம்மையின் இடை போல மின்னுகிறது; அவள் திருவடியில் இருக்கும் சிலம்பொலி போல் இடிமுழக்கம் செய்கிறது;  அவளுடைய அழகிய புருவம் போல வான வில்லுடன் திகழ்கிறது. அவளைப் பிரிந்திராத இறைவன் அன்பர்க்கு அருள்பாலிப்பதற்கு முன்னரே அவள் அருள் சுரக்கின்றாள். அந்த அருளைப் போல மழை பொழியவேண்டும்

என்பது இந்தப் பாடலின் கருத்து. உமை அம்மையின் அருளே மழை என்பது இங்கு தெளிவாக விளக்கப்படுகின்றது. உமை அம்மையை "உடையாள்" என இப்பாடல் குறிப்பதன் பொருள் எல்லாவற்றிற்கும் உடையவள்- உரிமையானவள் சக்தி என்பதையும் காட்டுகிறது. திருவெம்பாவை சக்தியை வியக்கும் வண்ணத்தை இப்பாடல் நன்கு படம் பிடிக்கிறது.


இறைவன் திருவடியே சத்தி எனச் சாத்திரங்கள் கூறும். அத்திருவடியின் ஐந்தொழில் ஆற்றலைப் போற்றித் துதிப்பதுதான் திருவெம்பாவையின் இறுதிப்பாடல். படைப்பைத் "தோற்றமாம் பொற்பாதம்" என்றும், காப்பைப் "போகமாம் பூங்கழல்கள்" என்றும், அழிப்பை "ஈறாம் இணையடிகள்" என்றும், மறைப்பை "மால் நான்முகனும் காணாத புண்டரிகம்" என்றும், அருளலை "அருளும் பொன்மலர்கள்" என்றும் இப்பாடலில் மாணிக்கவாசகர் கூறிப் போற்றுகிறார். இத்திருவடிகளே அனைத்தின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமாக இருப்பவை என்றும் கூறுகிறார். ஐந்தொழில் இல்லையென்றால் உயிர்கள் பாசம் நீங்கி வீடு பெறுமாறு இல்லை அல்லவா?


 அம்மை அப்பரின் திருக்கோலத்தைத்


 தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்

 பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்

 சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக்

 கோலமே நோக்கிக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பி


எனவும் திருவாசகம் விவரிக்கிறது.


"உடையாள் உன்றன் நடுவிருக்கும், உடையாள் நடுவுள் நீ இருத்தி, அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்" என்னும் திருவாசகப்பாடல் அம்மை அனைத்தும் உடையவள்

என்பதையும், அவள் இறைவனுடன் கலந்திருப்பாள் என்பதையும்,அந்நிலையில் அவர்கள் இருவரும் மணிவாசகர் அகத்தில் இருப்பர் என்பதையும் சுட்டுகிறது.


ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா ஒன்று 'அரிவையோர் கூறுகந்தான்' என்று அம்மையப்பரைப் போற்றுகிறது. திருப்பல்லாண்டில் ' அன்ன நடைமடவாள் உமைகோன்'

என்னும் தொடர் அம்மையின் நடை அழகைச் சுட்டுகிறது.


பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறு கூறுமிடத்துச்


" சேர்ந்திருந்தேன் சிவமங்கைதன் பங்கனை" என்றும்,

 "நேரிழையாள் நிரதிசயானந்தப்

 பேருடையாள் என் பிறப்பறுத்து ஆண்டவள்

 சீருடையாள் சிவன் ஆவடுதண்துறை

 சீருடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே"


என்றும் அம்மை தம்மை ஆண்டருளிய செய்தியைக் குறிப்பிடுகிறார். மேலும் திருமூலர்

திருமந்திரத்தில் சக்திபேதம், சக்தியின் பல்வேறு வடிவங்கள், சக்தி எந்திரம், சக்தியை

வழிபடும் எந்திர வழிபாட்டு முறை இவை பற்றி எல்லாம் விரிவாகக் கூறுகிறார். திருமூலர் கூறும் சக்தி சிவ சக்தியே ஆகும்.




"தான் எங்குளன் அங்குளள் தையல் மாதேவி" (1031)

" மணங்கமழ் பூங்குழல் மங்கையும் தானும்

புணர்ந்துடனே நிற்கும்" (1019)

"நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்

சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி "(1042)

"இருளது சத்தி, ஒளியதுஎம் அண்ணல்" (1095)


என்னும் திருமந்திரத்தொடர்கள் இதனை வலியுறுத்தும்


  திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்திலுள்ள சத்திபேதம்- திரிபுரை சக்கரம்

என்னும் பகுதியிலுள்ள முப்பது திருமந்திரப் பாடல்களும் அம்மன் பெருமையை

விரித்துரைக்கின்றன. கலைமகள் சிவசக்தி என்பதை


 ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி

 வேடம் படிகம் விரும்பும் வெண்டாமரை

 பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்

 சூடுமின் சென்னிவாய்த் தோத்திரமே (1068)


என்னும் பாடல் வாயிலாகக் கூறுகிறார் திருமூலர். மேலும் சத்தியின் வடிவம் சிவவடிவமே என்பதைச் " சூடும் இளம்பிறை, சூலி, கபாலினி" என்றும், சக்தியின் மந்திரம் சிவமந்திரமே என்பதை "நாம நமசிவ "(1189) என்றும் கூறுவர். மேலும்


 அவளை அறியா அமரரும் இல்லை

 அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை

 அவளன்றி ஐவரால் ஆவதொன்றில்லை

 அவளன்றி ஊர்புகும் ஆறு அறியேனே (1029)


என்றும் அம்மையின் பெருமையை அவர் கூறுகிறார்.


 சத்தி என்பாள் ஒருசாதகப் பெண்பிள்ளை

 முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்.


என்னும் அடிகள் முத்தி அளிக்கும் தன்மை சக்திக்கு உண்டு என்பதைக் கூறும்.

திருமுறைகளீல் திருமந்திரத்தில் தான் சிவசக்தியின் சிறப்பு பலவாறாகக் கூறப்பட்டுள்ளது.


பதினோராம் திருமுறையில் திருமுருகாற்றுப்படையில் முருகன் உமையவள் மைந்தனாகக்

குறிப்பிடப்படுகிறான்.  சேரமான் பெருமாள் நாயனார் பொன்வண்ணத்தந்தாதியில்

அம்மையப்பர் திருவுருவம் பேசப்படுகின்றது. இவரைப் பின்பற்றிப் பட்டினத்தார் திருக்கழுமல மும்மணிக்கோவையில் அம்மையப்பர் வடிவை 61 அடிகளில் விரிவாக விளக்குகிறார். இவரே கோயில் நான்மணிமாலையில் அம்மையப்பர் திருவுருவம் பற்றி


 "ஒருபால் தோடும் ஒருபால் குழையும்

 இருபாற்பட்ட மேனி எந்தை"


என்னும் அடிகளீல் சுருக்கமாகவும் குறிப்பிடுகிறார். திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில்(16)

 'வருமுலை தாங்கும் திருமார்பு வல்லி

 வையம் ஏழும் பன்முறை ஈன்ற

 ஐய திருவயிற்றம்மைப் பிராட்டி

 மறப்பருஞ் செய்கை அறப்பெருஞ் செல்வி

 எமையாளுடைய உமையாள் நங்கை

 கடவுட் கற்பின் மடவரல் கொழுந'


என்று ஏழு உலகும் ஈன்ற தாயாகவும், அறம் வளர்த்த நாயகியாகவும் உமை

அம்மையைப் பட்டினத்தார் குறிப்பிடுகிறார். மேலும் காஞ்சியில் உமையம்மையார் இறைவனைப் பூசித்தபோது, ஆற்றில் வெள்ளம் மிகுந்து வர, உமைஅம்மையார் துடித்துச் சிவலிங்கத் திருமேனியைத் தழுவ, அதில் நகில் சுவடும், வளைச் சுவடும்

பதிந்தன என்று திருவேகம்பமுடையார் திருவந்தாதியில் அவர் கூறுகிறார்.

காஞ்சியில் அம்மை 32 அறங்களை வளர்த்தது பற்றியும் பேசுகிறார்.

சக்தி வேலைத் தடக்கையில்  உடையவன் முருகன் என்னும் குறிப்பு

ந்ம்பியாண்டார் நம்பியின் பாடல் ஒன்றில் வருகிறது. காரைக்கால்

அம்மையாரும் அம்மையப்பர் திருக்கோலம் பற்றிப் பேசுகிறார்.


பன்னிரண்டாம் திருமுறையாகிய சேக்கிழாரின் பெரிய புராண்த்தில்

உமை அம்மையாரின் சிறப்பு பல இடங்களில் குறிக்கபடுகின்றது.

நாயன்மார்களாகிய அடியார்களுக்குக் காட்சி கொடுக்கும்போது

உமை அம்மையுடன் சிவபெருமான் தோன்றி அருளியதாகச் சேக்கிழார்

பல இடங்களில் சுட்டுகிறார். சிறுத்தொண்ட நாயனார்க்கு இறைவன், இறைவி, முருகனுடன் காட்சி கொடுத்ததைச் சான்றாகக் கூறலாம். தென்னாட்டின்

சிறப்பைக் கூறும் சேக்கிழார்


 எம்பிராட்டி இவ்வேழுலகு ஈன்றவள்

 தம்பிரானைத் தனித்தவத்தால் எய்திக்

 கம்பையாற்றில் வழிபடு காஞ்சி என்று

 உம்பர் போற்றும் பதியும் உடையது


என்று காஞ்சி காமாட்சி அம்மையைச் சிற்ப்பித்துப் போற்றுகிறார். இறைவனை

வழிபட்டுக் கம்பையாற்றில் வெள்ளம் வரத் தழுவிடக் குழைந்த இறைவன்

வரலாற்றைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் சேக்கிழார் விரித்துப்பாடும் திறமும் போற்றுதற்குரியது.



 "எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்

  உண்மையாவது பூசனை என உரைத்தருள

  அண்ணலார்தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்

  பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக்கொழுந்து"


என்று இறைவி சிவனைப் பூசை செய்த சிறப்பை அவர் பாடுகிறார். மேலும்



 கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பன் மேவிய உம்பர்பால்

 நிரந்த காதல் செய் உள்ளத்தளாகி நீடு நன்மைகள் யாவையும் பெருக

 வரந்தரும் பொருளாம் மலைவல்லி மாறிலாவகை மலர்ந்த பேரன்பால்

 சிரம்பணிந்து எழுபூசை நாள்தோறும் திருவுளம் கொளப்பெருகியதன்றே.


என்றும் அவர் விவரிக்கிறார். உமைஅம்மைதான் இறைவனுக்கு முதலில் பூசை

செய்தவர் என்பதை இங்கு உணர முடிகிறது.


காவிரி யாற்றின் பெருமையைக் கூறும் சேக்கிழார்


 வண்ண நீள்வரை தரவந்த மேன்மையால்

 எண்ணில் பேரறங்களும் வளர்க்கும்  ஈகையால்

 அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி

 உண்ணெகிழ்க் கருணையின் ஒழுக்கம் போன்றது


என்கிறார். காவிரியும் குடகு மலை தந்த ஆறு, உமை அம்மையும் இமவான் மலை தந்த செல்வி; காவிரியும் உமை அம்மையும் உலகில் பல அறங்கள் தழைக்க உதவும் பான்மையும் ஒப்புவமையாக வருகின்றது. அம்மை அருள் சக்தி என்பதை இறுதி அடி எடுத்து இயம்புகிறது.


சிதம்பரத்தில் நடராசப்பெருமான் சிவகாமி அம்மையை நோக்கிக் கூத்தாடும் திறத்தினை

 "மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே

 ஆதியும் முடிவும் இல்லா அற்புதக் கூத்தாடும்

 நாதனார்"

என்று திருநீலகண்ட நாயனார் புராணத்தில் சேக்கிழார் கூறுகிறார்.

எனவே தான் அது ஆனந்தக்கூத்தாக அமைந்தது போலும்.


திருநாவுக்கரசர் திருவையாற்றில் கண்ட கயிலைக் காட்சியைச் சேக்கிழார்


வெள்ளி வெற்பின்மேல் மரகதக்கொடியுடன் விளங்கும்

தெள்ளு பேரொளிப்பவளவெற்பென இடப்பாகம்

கொள்ளும் மலையாளுடன் கூட வீற்றிருந்த

வள்ளலாரை முன்கண்டனர் வாக்கின் மன்னனார்


என்று மரகதவல்லியாக உமைஅம்மையார் சிவனுடன் கயிலை மலைமேல்

இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.


 இதுகாறும் கூறிய செய்திகளால் அறக்கருணை வடிவாகிய உமைஅம்மையார்

திருமுறையின் தொடக்கப் பாடல் தோன்றுவதற்குத் துணையாக இருந்ததையும்,

திருமுறைப்பாடல்களில் சிவபெருமானுடன் சார்த்தியே  உமையொருபாகன் என்ற நிலையில் பல இடங்களில் கூறப்பட்டிருப்பதையும், நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழப் பெண்ணின் நல்லாராகச் சிவனுடன்கூடி இருப்பது பற்றிய குறிப்பினையும்,

திருவாசகத்தில் திருவெம்பாவை வாயிலாகச் சக்தியாய் நின்று வியக்கப்படுவது பற்றியும்,

திருமந்திரத்தில் சக்தி பேதம், சக்தியின் பல்வேறு வடிவங்கள், சக்தி எந்திரம், சக்தியை வழிபடும் எந்திர வழிபாட்டுமுறை இவை விரிவாக விளக்கம் பெற்றிருப்பதையும்,

பதினோராம், பன்னிரண்டாம் திருமுறைகளில் காஞ்சியில் சிவபூசை செய்து அறம்

வளர்த்த நாயகியாக அமைந்த வரலாறு விரிவாகக் கூறப்பட்டிருப்பதையும்

தெரிந்துகொண்டோம்.


திருமுறையில் உருத்திரகாளி


அம்மை உலக நன்மைக்காக நல்லோரை வாழ வைக்கும்போது உவகை கொள்ளுகிறாள். தீயோரை அழிக்கும்போது கடுஞ்சினம் கொள்ளுகிறாள்.

இவ்வாறு சினம்கொண்ட அம்மையின் கோலத்தைத்தான் நாம் உருத்திர

காளி என்கிறோம். உருத்திரம் என்றால் கோபம், சினம், வெகுளி என்று பொருள்.

காளி என்ற சொல் கருமை என்ற பொருளையுடைய காளம் என்ற சொல்லிலிருந்து

தோன்றியதாகும். கருமை நிறமுடையவள் காளி என்று அழைக்கப்பட்டாள்.


தாருகாசுரனால் துன்பமடைந்த தேவர்கள், பெண்களுருக்கொண்டு சிவபெருமானை

அடைந்து தமது குறைகளைக் கூறினர். பெண்ணாலன்றி வேறு எவராலும் இறவாத

வரம் பெற்றிருந்தான் தாருகன். அவனை வென்று வருமாறு சிவபெருமான் சக்திக்குக் கட்டளை இட்டார். அப்போது தேவியின் ஒருகலை சிவனின் விஷக்கறை படிந்து

கனற்கண்ணில் பிறந்து வெளிப்பட்டது. அவ்வுரு காளமாகிய விஷக்கறை படிந்து

வந்ததால் காளி எனப் பெயர் பெற்றது. இவ்வகையில் தோன்றிய காளி தன் கோபத் தீயால் தாருகனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக