வெள்ளி, 2 மே, 2014

சமயம் - வைஷ்ணவம் - 2


4 ஆழ்வார்கள்  -  ஓர் அறிமுகம்.

1.  முதலாழ்வார் மூவர்

                தமிழ் நாட்டில் பல்லவர் காலத்தில் (கி.பி. 600 -  800) தோன்றி, திருமால் நெறி எனப்படும் வைணவ சமயத்தை வாழ்விக்க வந்த சான்றோர்களே ஆழ்வார்கள்.  இறைவனாகிய திருமாலின் (விஷ்ணுவின்) குணங்களிலும் வடிவழகிலும் ஈடுபட்டுப் பக்தியில் அழுந்தியவர்கள் - ஆழ்ந்து மூழ்கியவர்கள் ஆழ்வார்கள் என அழைக்கப் பட்டனர். சைவ சமய நாயன்மார்களைப் போன்று ஆழ்வார்களும் பக்தி இயக்கத்தில் ஈடுபட்டு வைணவ நெறியை வளர்த்தனர்.  ஊர்தோறும் சென்று பாடல்கள் பாடித் திருமாலின் பெருமையை விளக்கினர்.  இவர்கள் பாடிய பக்திப் பாடல்களின் தொகுப்பே நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் எனப்படும் அருளிச் செயல் நூலாகும். இப்பாடல்களைத் தொகுத்து நாலாயிரமாகத் தந்தவர் நாதமுனி என்பவர் ஆவார்.  வைணவர்கள் பாடிய வைணவத் தலங்கள் 108 ஆகும்.  இவர்கள் கண்ட தத்துவம்  விசிஷ்டாத்வைதம் என அழைக்கப் படுகிறது.  இதனைப் பரப்பியவர் ராமானுஜர்.

                ஆழ்வார்கள் பன்னிருவர் என்பதே பெருவழக்கு.  பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் என்போரே  அப்பன்னிருவர்.  இவர்களில் ஆண்டாள்  பெண், ஏனையவர்கள் ஆடவர்கள்.  இவர்களின் வரலாற்றைக் கூறும் நூல்கள் பல உள்ளன. அவற்றுள் காலத்தால் முற்பட்டவை இரண்டு.  ஒன்று கருடவாகன பண்டிதர் கவிதையில் இயற்றிய திவ்விய சூரி சரிதை.  பின்பழகிய பெருமாள் ஜீயர் மணிப்பிரவாள நடையில் சமஸ்கிருதமும் தமிழும் கலந்த உரைநடையில் இயற்றிய குருபரம்பரை என்பது மற்றொன்று.  ஆழ்வார்களின் திருவுருவச் சிலைகளை நம் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயிலில் பெருமாள சந்நிதி மகாமண்டபத்தின் மேல் சுற்றுச் சுவர்களில் காணலாம்.

                பன்னிரண்டு ஆழ்வார்களில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் காலத்தால் மூத்தவர்கள். எனவே அவர்கள் முதலாழ்வார்கள் என அழைக்கப் பட்டனர்.  இவர்கள் மூவரும் சம காலத்தினர்.  கிபி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்.  திருமாலின் பாஞ்ச சன்யம் எனப்படும் சங்கின் அவதாரமாகக் கருதப் படுபவர் பொய்கையாழ்வார்.  இவர் காஞ்சிபுரத்தில் ஒரு பொய்கை (குளத்து) மலரில்  தோன்றியதாகக் கூறுவர்.  பொய்கையாழ்வார் பிறந்த நாளுக்கு அடுத்த நாளில் கடல் மல்லையில் மாமல்லபுரத்தில் தோன்றியவர் பூதத்தாழ்வார். பேயாழ்வார் சென்னை மயிலாப்பூரில் தோன்றியவர்.  பூதம் என்ற சொல் பாடல்களில் வருமாறு பாடியதால் பூதத்தாழ்வார் என்னும் பெயர் வந்தது.  பக்திப் பரவசத்தால் நெஞ்சம் சோர்ந்து கண் சுழன்று அழுது சிரித்து ஆடிப்பாடிப் பேய் பிடித்தாற்போல் இறைவனைத் தொழுது மகிழ்ந்ததாலே பேயாழ்வார் என்று அழைத்தனர்.

                இவர்கள் மூவரும் பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதி என்னும் பெயரில் உள்ளன.  அந்தாதி என்பது ஒரு பாட்டின் இறுதியிலுள்ள சொல்லோ எழுத்தோ அடுத்த பாட்டிற்கு முதலாக வரும்படி 100 பாடல்களை அமைக்கும் ஓர் இலக்கிய வகை. முதலாழ்வார்கள் பாடிய முந்நூறு பாடல்களும் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன.  பொய்கையாழ்வார் தம் பாடலைச் சொல்மாலைஎன்கிறார்.

                முதலாழ்வார் மூவரையும் ஒன்று சேர்த்துத் திருமால் ஆட்கொண்ட வரலாறு வியப்பிற்குரியது.  பொய்கையாழ்வார் ஒருமுறை திருக்கோவலூரில் ஒரு வீட்டின் முற்றத்தில் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்.  இப்பொழுது பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் ஒருவர் பின்னர் ஒருவராக அங்கு வந்தனர்.  அதனைக் கண்ட பொய்கையார் இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்என்று சொல்லி நிற்க இடம் கொடுத்தார்.  இச்சமயம் நான்காவதாகவும் ஒருவர் தம்மிடையே புகுந்து நெருக்குவதை மூவரும் உணர்ந்தனராம்.  பின்பு அவர்தான் திருமால் என உணர்ந்து மூவரும் அவர்மீது திருவந்தாதி பாடியதாகக் கூறுவர்.  இந்நிகழ்ச்சியின் போது இவர்கள் பாடிய பாடல்களைப் பார்ப்போம்.

                                வையம் தகளியா, வார்கடலே நெய்யாக,

                                 வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய

                                 சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

                                 இடராழி நீங்குகவே என்று

என்பது பொய்கையாழ்வார் பாடிய பாட்டு.  நிலவுலகம் (பூமி) என்னும் அகலில், நெடுங்கடல் என்னும் நெய்யை ஊற்றிச் சூரியன் என்னும் சுடர் கொண்டு ஒரு விளக்கேற்றி இப்பாடலில் பொய்கையாழ்வார் திருமாலை வழிபடுகிறார்.  எப்படி? பூமாலை கொண்டன்று. பாமாலை கொண்டு வழிபடுகிறார். ஏன்? துன்பக் கடல் நீங்கி இன்பம் பெற வேண்டும் என்று. 

                இவரைப் போன்றே பூதத்தாழ்வாரும் இன்னொரு வகையான விளக்கேற்றி விஷ்ணுவை வழிபடுகிறார்.   அதனைப் பார்ப்போம்.

                                அன்பே தகளியா , ஆர்வமே நெய்யாக

                                 இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி

                                 ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

                                 ஞானத் தமிழ் புரிந்த நான்

என்பதே பூதத்தாழ்வார் பாட்டு.  இவர் ஏற்றும் விளக்கிற்கு அன்பே அகல் (ஆதாரம்) விருப்பமே நெய், பக்தியால் உருகும் உள்ளமே திரி, இறையுணர்வாகிய மெய்ஞ்ஞானமே சுடர்.  இந்த விளக்கினைக் கொண்டு நாராயணனாகிய திருமாலுக்கு ஞானத் தமிழ்மாலை பாடி வழிபடுகிறார் பூதத்தாழ்வார்.


                வழிபாட்டு நெறியில் பொய்கையாழ்வார் ஏற்றிய விளக்கு புறவிளக்கு (அண்டத்திலுள்ளது) என்றும் பூதத்தாழ்வார் ஏற்றிய விளக்கு அகவிளக்கு (பிண்டத்திலுள்ளது) என்றும் கூறுவர். பக்திக்கு ஒரு விளக்கமாக இவர்கள் பாடல்கள் அமைந்துள்ளன. அஞ்ஞானமாகிய  இருள்நீங்கி இறைவன் தரிசனமாகிய பக்தி என்று பேசுகின்றன இப்பாடல்கள்.

                பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் இயற்றிய விளக்கில் இறைவனைக் கண்டதாகப் பேயாழ்வார் பாடும் பாடலைப் பார்ப்போம்.

                                திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்

                                 அருக்கன் அணிநிறமும் கண்டேன் செருக்கிளரும்

                                 பொன்னாழி கண்டேன்  புரிசங்கம் கைக்கண்டேன்

                                 என் ஆழி வண்ணன்பால் இன்று

திருமாலின் கோலத்தை-- வடிவழகைக் கண்டு களித்துப் பேயாழ்வார் இப்பாடலில் படம் பிடித்துக் காட்டுகின்றார்.  திருமாலின் மார்பில் திகழும்) இலக்குமியையும் பொன் நிற உடல் அழகையும் சூரியன் போன்ற பேரொளியையும் கைகளில் சங்கு சக்கரத்தையும் திருமாலிடம் கண்டதாக இவர் கூறுகின்றார்.


                முதலாழ்வார்கள் மூவரும் பக்தி விளக்கேற்றிப் பரந்தாமனாகிய திருமாலைக் கண்டு வழிபட்டு அவன் அருளைப் பெற்றவர்கள்.  நாமும் அவன் அருளைப் பெற வழிகாட்டிய பெருமக்கள்.  அவர்கள் காட்டிய வழியில் திருமால் பெருமையை உணர்ந்து அவன் அருளைப் பெற நாம் முயல்வோமாக.

                                     (சிங்கப்பூர் இந்து 12:3 ஜூலை-ஆக்ஸ்டு 2000 பக் 10-11)

31                                Thinnappan, SP, Aalvaarkal oor aRimukam, Muthal aalvaar  Muuvar

                        (An Introduction to Vaishnava Saints, Greatness of  First 3 aalvaars)

Singapore Hindu Singapore (2000)    Vol 12:3 PP 10-11 (Tamil)

                                               


               

2 பெரியாழ்வார் பெருமை

                ஆழ்வார்கள் பன்னிருவருள் தந்தையும் மகளுமாகத் திகழ்ந்தவரகள் பெரியாழ்வாரும் ஆண்டாளும் ஆவார்கள்.  இவர்கள் தமிழகத்தின் தென் பகுதியைச் சார்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றியவர்கள். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள.  பெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணுசித்தர்.  இவர் அந்தணர் குலத்தவர்.  இவர்தந்தையார் முகுந்த பட்டர்.  தாயார் பெயர் பதுமவல்லி.  இவர் பிறந்த திருநட்சத்திரம் ஆனி மாதச் சுவாதி.  பெரியாழ்வார், பட்டர்பிரான், புதுவை மன்னன், வேயர் தங்குலத்து உதித்த விஷ்ணுசித்தன்  என்னும் பெயர்களாலும் குறிப்பிடப் பெறுகிறார்.

                பெரியாழ்வார் தம் ஊரில் நந்தவனம் அமைத்து அதில் கிடைத்த மலர்களை மாலையாக்கி அவ்வூரில் கோயில் கொண்டிருந்த வடபெருங் கோயிலுடையானுக்கே (திருமாலுக்கே) சாத்தும் திருப்பணியை மேற்கொண்டவர்.  இவர் மதுரை சென்று திருமாலின் சிறப்பை உணர்த்தி வாதம் செய்து வென்று ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டிய மன்னனிடத்தில் பொற்கிழி(பொன்) பெற்றவர்.  பெரியாழ்வாரின் ஞானத்தையும் பேராற்றலையும் கண்டு அவருக்குப் பட்டர்பிரான் என்னும் சிறப்புப் பெயரினைச் சூட்டி அவரை யானைமேல் ஏற்றி நகர்வலம் வரச் செய்தான் அந்தப் பாண்டிய மன்னன்.  அந்தக் காட்சியைக் காணத் திருமால் பிராட்டியுடன் கருடன் மீது அமர்ந்து வான் வெளியில் தோன்றிப் பெரியாழ்வாருக்குக் காட்சி அளித்தார்.

                அப்போது அவர் திருமாலின் பேரழகில் ஈடுபட்டுப் பொங்கி வரும் பேரன்பினால் திருமாலின் உன்னத நிலையையும் மறந்து அவனுக்குப் பல்லாண்டு பாடி வாழ்த்தினார். இதற்குத் திருப்பல்லாண்டு என்;று பெயர். திருப்பல்லாணடில் 12 பாசுரங்கள் உள்ளன.  ஒவ்வொரு பாசுரத்திலும் பல்லாண்டு பல்லாண்டுஎன்று கூறி இறைவனுக்கு நன்மையை வேண்டிக் காப்பிட்டு இருப்பதனால் இதற்குப் பல்லாண்டு என்று பெயர் வந்தது.  இப்பல்லாண்டு தமிழ் வேதமாகிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதலாவதாக வைக்கப் பட்ட சிறப்பைக் கொண்டது.  வைணவத் திருக்கோயில்களில் நாள்தோறும் திருப்பல்லாண்டு ஓதப் பெறும்.  இப்பாடலை அறியாத வைணவர்களைப் பார்க்க முடியாது.

                திருப்பல்லாண்டு தவிரப் பெரியாழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்புக்குப் பெரியாழ்வார் திருமொழி என்று பெயர்.  இத்தொகுப்பில் 461 பாசுரங்கள் உள்ளன. இத்தொகுப்பும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் திருப்பல்லாண்டை அடுத்துத் தரப் பெற்றுள்ளது.  பெரியாழ்வார் கண்ணனைச் சிறுகுழந்தையாகக் கருதி அவன் பிறப்புத்; தொடங்கி அவன் செய்யும் பிள்ளை விளையாட்டுக்கள் அனைத்ததையும் விளக்கிப் பாடிய பாடல் தொகுப் பெரியாழ்வார் திருமொழி.

                சிறு குழந்தையை நீராட்ழச் சிறு மஞ்சளால் நாக்கு வழித்தல், தொட்டிலிட்டுத் தாலாட்டல், சிறு குழந்தைகளுக்கு ஐம்படைத் தாலி அணிவித்தல் முதலிய பிள்ளைப் பருவ நிகழ்ச்சிகளைப் பெரியாழ்வார் தம் திருமொழியில் பாடியுள்ளார். இப்பாடல்களே பிற்காலத்தில் தமிழில் பிள்ளைத் தமிழ் என்னும் இலக்கிய வகை பிறக்க வழி செய்தன. குழந்தை கண்ணனின் குறும்புச் செய்கையால் அன்னை யசோதா படும் அல்லலைப் பின்வரும்பாடல் கூறுகிறது.

                                கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்    

                                  எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்

                                 ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்

                                 மிடுக்கிலா மையால் நான் மெலிந்தேன் நங்காய்

தொட்டிலில் போட்டால் தொட்டில் கிழிய உதைக்கின்றான். இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டால் இடுப்பு வலிக்குமாறு செய்கிறான்.  மார்பில் அணைத்துக் கொண்டால் வயிற்றில் பாய்கிறான்.  இவனை வளர்த்தெடுப்பதில் வழி தெரியாது தவிக்கிறேன்என்று யசோதை கண்ணனின் குழந்தைத் தனத்தைத் தன்  தோழியிடம் கூறுவதாகப் பெரியாழ்வார் பாடுகிறார்.

                பெரியாழ்வார் விஷணு சித்தர் என்னும் பெயருக்கு ஏற்பத் திருமாலாகிய விஷ்ணுவைத் தம் சித்தத்தில் (உள்ளத்தில் ) என்றும் வைத்து ;வாழ்ந்தவர் என்பது மார்வமே கோயில், மாதவனே தெய்வம், அவனிடத்துக் கொள்ளும் ஆர்வமே; பூஎன்னும் அவரது தொடரில் அறியலாம். இறைவனாகிய திருமாலின் கோயிலில் வாழ்ந்து திருத்தொண்டு செய்தலே பெரு வலிமை என்று கருதியவர் பெரியாழ்வார்.  வன்மையானது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் எனும் வன்மை கண்டாயே என்று பாடுகிறார் அவர்.

                பெரியாழ்வார் தம் நந்தவனத் திருப்பணியின் போது ஒரு நாள் பெண் குழந்தை ஒன்றைக் கண்டெடுத்து அவளைத் தம் சொந்த மகளைப் போல வளர்த்து வந்தார்.  அம்மகளே ஆண்டாள்.  அவர் ஆழ்வார்களில் ஒரே பெண்மணியாக விளங்கியவர்.  ஆண்டாள் மூலம் திருப்பாவை, நாச்சியார் ;திருமொழி ஆகிய பாசுரத் தொகுப்பகுள் தோன்றக் காரணமாக இருந்தவர்  பெரியாழ்வார் ;  ஆண்டாள் திருவரங்கநாதன் மேல் காதல் கொண்டு அவனையே மணக்க விரும்பிய நிலையில் ஆண்டாளை அரங்கனுக்கு மணம் செய்து கொடுத்ததால் திருமாலுக்கு மாமனாராகும் பெருமையும்  பெரியாழ்வார்க்குக் கிடைத்தது.

                ஒருமகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்,செங்கண்மால் தான் கொண்டு போனான், பெருமகனாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை மருமகனைக் கண்டு மணாட்டுப் புறம் செய்யும் என்று ஆண்டாளின் திருமணத்தின் போது வருந்தும் தாயுள்ளத்தைப் பெரியாழ்வாரின் இப்பாடல் பேசுகிறது.

                பல்லாண்டு பாடி இறைவனை வாழ்த்திய காரணத்தாலும், கண்ணனைக் குழந்தையாகக் கருதித் தாயுள்ளத்துடன் பாடிய காரணத்தாலும் திருமாலுக்கே தம் மகளாகிய ஆண்டாளைத் திருமணம் செய்வித்து மாமனார் ஆகிய காரணத்தாலும் ஆழ்வார்களில் பெரியாழ்வார் என்னும் பெயர் பெற்றார் விஷ்ணுசித்தர்;.  பால் நினைந்தூட்டும் தாயாக, அம்மையாக இறைவனை நினைக்கும் மரபுதான் பக்தி நெறியில் உண்டு. இப்போது மரபுக்கு மாறாகப் பக்தன் தன்னைப் பரிவுடைய தாயாகவும், இறைவனைத் தன் அன்பினால் வார்ததெடுக்கும் சேயாகவும் காணும் புதுமையைச் செய்தவர் பெரியாழ்வார்.

              (சிங்கப்பூர் இந்து, 12:4 அக்டோபர்-டிசம்பர் 2000 பக் 20-21)

31                Thinnappan, SP, Aalvaarkal oor aRimukam, Periyaalvaar perumai

                        (An Introduction to Vaishnava Saints, Greatness of  Periyaalvaar)

Singapore Hindu Singapore (2000)    Vol 12:4 PP 20-21 (Tamil)

                                                                               


3  ஆண்டாள் தமிழை ஆண்டாள்.                                                            

                ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர்களில் பெண்குலத்தைச் சேர்ந்த பெருமாட்டியே ஆண்டாள்.  பெரியாழ்வார்  ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் துளசிக் காட்டில் கண்டெடுத்துக் கோதை என்று பெயரிட்டு வளர்த்த பெண்ணே ஆண்டாள்.  எனவே ஆண்டாளுக்கு ஆழ்வார் திருமகளார்என்னும் பெயரும் உண்டு. ஆண்டாள் பெரியாழ்வார் காலத்தில் - எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவள்.

                பெரியாழ்வார் நந்தவனம் அமைத்து நாள்தோறும் மலர்களைக் கொய்து மாலையாக்கி அதை ஸ்ரீவில்லிபுத்தூர்ப் பெருமாளுக்குக் கொடுத்து வழிபட்டு வந்தார்.  அம்மாலையை ஆண்டாள் தான் அணிந்து அழகு பார்ததுப் பின் கொடுத்தனுப்புவாள்.  இச்செய்தி பெரியாழ்வாருக்குத் தெரியாது.  ஒருநாள், ஒரு கூந்தல் இழை மாலையில் இருப்பதைக் கண்ட பெரியாழ்வார் ஆண்டாளை வினவி உண்மையை அறிந்தார்.  ஆண்டவனுக்குக் கொடுக்க வேண்டிய மாலையை இப்படிச் செய்வது அபசாரம்என்று கருதிப் புதிய மாலை கட்டிப் பெருமாளுக்கு அணவித்தார்.  திருமால், பெரியாழ்வார் கனவில்வந்து, ஆண்டாள் சூடிய மாலையே தமக்கு மகிழ்ச்சி தருவது என்று கூறினார்.  அதனால் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடிஎன்று அழைக்கப் படுகிறாள்.

                இளமையிலேயே எல்லாக் கலைகளும் கற்றுத் தேர்ந்த ஆண்டாள் திருவரங்க நாதனிடத்துத் தீராக் காதல் கொண்டு அவனைத் தவிர வேறொரு மானிடவர்க்கென்று பேச்சுப்படில்; வாழ மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாள்.  இவளது உறுதியான காதலை உணர்ந்த இறைவன் திருவரங்கத்திற்கு  அழைத்து வருமாறு பெரியாழ்வார்ககு ஆணையிட்டான்.  அதற்கேற்ப ஆண்டாளை மணக்கோலஞ் செய்து பெரியாழ்வார் திருவரங்கத்துக்கு அழைத்துச் சென்றார்.  ஆண்டாளும் திருவரங்கநாதனுடன் இரண்டறக் கலந்தாள்.  இறைவனைத் தன் உறுதியான காதலால் ஆண்டு கொண்டவளே ஆண்டாள்.  அவள் வேறு ஒருவனை வேண்டாள்.

                நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடிய பகுதிகள் திருப்பாவை, நாக்சியார் திருமொழி எனப் பெயர் பெறும்.  திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டது.  நாச்சியார் திருமொழியில் 143 செய்யுட்கள் உள்ளன.  திருப்பாவை மார்கழி மாதந்தோறும் வைணவப் பெருமக்களால் ஓதப் பெறும் பெருமை பெற்றது.  கன்னிப் பெண்கள் அதிகாலையில் ஒருவரை ஒருவர் எழுப்பிச் சென்று நீராடிப் பாவை நோன்பு நோற்று நெய்யுண்ணாது பாலுண்ணாது விரதமிருந்து இற்றைக்கும் .ஏழேழ் பிறவிக்கும்  உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உமக்கே ஆட் செய்வோம். “ என்று வேண்டுவதையே கருப்பொருள் ஆகக் கொண்டது திருப்பாவை.  இதனை உபநிடதசாரம்என்பர். இந்தச் சங்கத்; தமிழ் மாலை முப்பதும் தப்பாமே பாடி வேண்டுவார் திருமால் திருவருள் பெற்று இன்புறுவர். 

                திருவரங்க நாதனிடத்து ஆண்டாள் கொண்ட அளவு கடந்த காதலின்பல்வேறு நிலையை வெளிப்படுத்துவதே  நாச்சியார் திருமொழி.

                                கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

                                 திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ

                                 மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச் சவையும்  நாற்றமும்

            விருப்புற்றுக் கேட்கிறேன் சொல் ஆழி வெண்சங்கே

என்று சங்கு சக்கரத்திடம் திருமாலின் நறுமணம் பற்றிக் கேட்கிறாள் ஆண்டாள்.  திருமால் மணப்பதாகக் கனவு கண்டு ஆண்டாள் பாடிய பாடல் வாரணம் ஆயிரம்என்று தொடங்கும் பாடல்.

                                மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத

                                 முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ்

                                 மைத்துனன்  நம்பி மதிசூதன் வந்து என்னைக்

                                 கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழிநான்

என்னும் பாடல் அப்பகுதியில் வருகிறது.  இப்பாடல்களை இன்றும் வைணவர்கள் தத்தம் திருமண நிகழ்ச்சியில் ஓதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

                ஆண்டாள் பாடிய இந்தத் தமிழ்ப் பாடல்கள் பாதகங்கள் தீர்க்கும்.  பரமனடி காட்டும்; வேதம் அனைத்துக்கும் வித்தாகும். இலக்கிய உணர்வுடையார்க்கு இன்ப ஊற்றாகும்.  இத்தகைய பாடல்களால் உலக மக்களை உய்வித்து அடிமை கொண்டவளாகக் கருதப் படுவதால் இவள் ஆண்டாள் என அழைக்கப் பட்டாள்.  இவளே தமிழை ஆண்டாள்.

(சிங்கப்பூர் இந்து 13:1 ஜனவரி-மார்ச்சு 2001, பக் 21)        


34                  Thinnappan, SP, Aalvaarkal oor aRimukam, AandaL Tamilai aandaaL

                        (An Introduction to Vaishnava Saints, Greatness of   Andaal)

                                    Singapore Hindu Singapore (2001)    Vol 13:1 P 21 (Tamil)



4 குருவும்  சீடரும்

                ஆழ்வார்கள் பன்னிருவருள் குருவும் சீடருமாகத் திகழ்பவர்கள் நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும் ஆவர்.  ஆழ்வார்களுள் நம்மாழ்வார் உடல் எனவும் , ஏனைய ஆழ்வார்கள் உறுப்புகள் என்றும் உரைப்பர். நம்மாழ்வார் ஆழ்வார்களின் காலவரிசையில்  ஐந்தாமவர்; முக்கியத்தில் முதலாமவர் அவரை வைஷ்ணவ குலபதி என்று போற்றுகிறது வைணவ உலகம்.

                நம்மாழ்வார் மாறன் காரிக்கும் உடைய நங்கைக்கும் மகவாகத் தமிழகத்தில் திருக்குருகூர்  எனப்படும் ஆழ்வார் திருநகரில் பிறந்தார். பிறப்பு முதலே யோகத்தில் ஆழ்ந்து பதினாறு ஆண்டுகள்  ஒரு புளிய மரத்தடியில் இருந்தார்.  இவரது சீடராக வந்த மதுரகவியாழ்வார் அந்தணர் குலத்தில் தமிழகத்திலுள்ள திருக்கோவலூரில் பிறந்தவர். வடநாட்டுத் தலத்திலிருந்தபோது நம்மாழ்வாரின் சிறப்பைக் கேள்வியுற்றுத் திருக்குருகூர் வந்து உணவின்றி நீரின்றிப் புளிய மரத்தடியில் யோக நிலையில் கிடந்த நம்மாழ்வாரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாராம்.  செத்ததின் வயிற்றிலே சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்என்பதே அந்தக் கேள்வி. அதற்கு அத்தைத் தின்று அங்கே கிடக்கும்என்று பதில் அளித்தாராம் நம்மாழ்வார்.  இதுவே அவர் பதினாறு ஆண்டுகளில் வாய்திறந்து பேசிய முதல் பேச்சு.  இதன் பின்னர் அங்கே இருந்தபடியே  திருமாலின் பெருமைகளைப் பாடல்களாகப் பாடினார்.  நம்மாழ்வாருக்குச் சடகோபன், காரிமாறன், பராங்குசன், வகுளாபரணன் என்னும் பெயர்கள் உள்ளன.  இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு.  இவரது சீடர் மதுரகவி காலமும் இதுவே.  நம்மாழ்வார் 35 ஆண்டுகள் வாழ்ந்தவர் என்பர். 

                நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ளன.  இவை திருவாய்மொழி, திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய ;திருவந்தாதி என்பன.  இவற்றை முறையே சாமவேதம், யஜூர் வேதம், ரிக்கு வேதம், அதர்வண வேதம் ஆகியவற்றின் சாரம் என்பர்.  இவற்றில் திரு என்பது தெய்வத்; தன்மை வாய்ந்தவை என்பதைக் குறிக்கும்.  ஆசிரியம், விருத்தம் என்பன பாவகை.  அந்தாதி என்பது ஒரு பாடலின் இறுதிச் சொல், எழுத்து, சீர் , அடுத்த அடிக்கு  முதலாக வருவது. இது வெண்பா அமைப்பில் உள்ளது.  திருவாய்மொழி நம்மாழ்வாரின் வாய்மொழி.  வாய்மை மொழி எனப் பொருள்படும்.  திருவிருத்தத்தில் 100 பாசுரங்கள் உள்ளன.

                திருவாசிரியத்தில் 71 அடிகள் உள்ளன.  பெரிய திருவந்தாதியில் 77 வெண்பாக்கள் உள்ளன. திருவாய் மொழியில் 1102 பாசுரங்கள் உள்ளன.  4 வரிப்பாடல் பலவகையான விருத்தப் பாக்கள்.  நம்மாழ்வாரின் பாடல்களில் திருவாய்மொழியே முதன்மை பெற்றுள்ளது.  இதனைத் தமிழ் வேதக்கடல்எனப் போற்றுகிறார் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைத்; தொகுத்த நாதமுனிகள்.  வேதாந்த தேசிகர் திருவாய் மொழியைத் தமிழ் உபநிடதம்  எனப் பாராட்டுகிறார்.  திருவாய்மொழி 100 பத்துக்கள் ஆக வகுக்கப் பட்டுள்ளது.  ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப்பத்துப் பாடல்களைப் பாடுவதால் வரும் பலனைக் குறிப்பிடுகின்றார் நம்மாழ்வார்.  திருவாய் மொழிக்குப் பல பேருரைகள், விளக்கங்கள் வெளிவந்துள்ளன.

               

             வைணவத் திருத்தலங்களுக்கும் வழிகாட்டும் ஒளி விளக்குகளாக நம்மாழ்வார் திருவாய் மொழிச் செய்யுள்கள் விளங்குகின்றன.  வைணவ நெறியில் அர்த்த பஞ்சகம்எனப் போற்றப்படும் இறைநிலை, உயிர் நிலை, உய்யும் நிலை, எதிர்நிலை, இலக்குநிலை என்னும் ஐவகை உண்மைகளும் நம்மாழ்வார் பாடல்களில் விளக்கம் பெற்றுள்ளன.  திருமாலே முழுமுதற் கடவுள் என்பதை உணர்த்தும்.  தனக்கொரு பாரமின்றி அவனையே நம்பிச் சரணாகதி அடைதலாகிய பிரபத்தி மார்க்கமே நம்மாழ்வார் காட்டும் நன்னெறி.  திருமாலைத் தலைவராகவும் உயிர்களைத் தலைவியாகவும் கொண்டு காதல் கொள்ளும் கருத்தமைந்த கடவுட் காதல் பாடல்களாகவே இவர் பாடிய பல பாடல்கள் உள்ளன.

                தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றைஎன்று நம்மாழ்வார் திருமாலிடம் கொண்ட ஈடுபாட்டினைக் காட்டுகிறார்.  அற்றது பற்றெனில் உற்றது வீடுஎன்று அறுதியிட்டுரைக்கும் ஆழ்வார் கண்ணன் கழலினை -  நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் - திண்ணம் ;நாரணமேஎன்று திருமால் ;அருள்பெற நமக்கு வழிகாட்டுகிறார்.  ஆழ்வார்களில் முதன்மை பெற்றவராதலின் நம்ஆழ்வார் என அழைக்கப் பெற்றார்.

                நம்மாழ்வாரையே இறைவனாகக் கருதி வேறு தெய்வம் வணங்காது அவர் பாடல்களின் இன்னிசை பாடித் திரிந்து அவர் புகழ்; பரப்பியவர் மதுரகவியாழ்வார்.  இவர் பாடிய 10 பாடல்கள் கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாய என்னப்பன் இல், நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால், அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே”.  திருமாலைப் பாடாது நம்மாழ்வாரைப் பாடியவரே மதுரகவியாழ்வார்.  அவர் புகழ் பாடிக் குருவும் சீடருமாக வாழ்ந்து வழி காட்டிய ஆழ்வார்களைப் போற்றி வணங்குவோம்.

(சிங்கப்பூர் இந்து 13:3 ஜூலை-செப்டம்பர் 2001 பக் 20-21)                                           

                                                                                               

34                  Thinnappan, SP, Aalvaarkal oor aRimukam, kuruvum ciidarum

                        (An Introduction to Vaishnava Saints,

                         Greatness of  Nammaalvaar  and Mathurakavi aalvaar)

                                     Singapore Hindu    Singapore (2001)                 Vol 13:3 PP 20-21 (Tamil)



5 தொண்டர் குலமே தொழுகுலம்

                                திருமாலையும் திருமால் அடியார்களையும்  இரு கண்களாகக் கருதி வழிபடுவது வைணவ மரபு.  திருமால் தொண்டு பகவத் கைங்கர்யம் என்றும், திருமாலடியார் தொண்டு பாகவத கைங்கர்யம் என்றும் பெயர் பெறும்.  திருமாலடியார்கள் சாதிகுலம் கடந்த சான்றோர்கள்.  ஒருவரை ஒருவர் தெய்வாம்சமாகக் கருதி வழிபட்டு வந்தவர்கள்.  இவர்களை இணைப்பதில் திருமால் பெரும் பங்காற்றியுள்ளார் என்பதற்கு ஒரு சான்று; திருப்பாணாழ்வார்.

                திருச்சிராப் பள்ளிக்கு அருகில் உறையூரில் அவதரித்தவர் திருப்பாணாழ்வார்.  இவர் பாடும் தொழிலைக் கொண்ட பாணர் குலத்தில் தோன்றியவர்.  இவர் கையிலே யாழினை ஏந்தித் திருமால் புகழைப் பாடி வந்தார்.  தான் தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர் என்பதால் திருவரங்கத் தலத்தை மிதிக்க அஞ்சிக் காவேரியாற்றின் தென்கரையில் நின்று பாடினார்.  அப்போது திருவரங்கப் பெருமாளுக்கு அபிஷேக நீர் கொணர வந்த லோகசாரங்கர் என்னும் பிராமணர் தலைவர் இவரைப் பார்த்து எட்டச் செல்என்று கூறினார்.  அவரோடு வந்தவர்கள் திருப்பாணாழ்வார் மீது கல்லெறிந்து துன்புறுத்தினர்.  அதனால் திருக்கோயில் பெருமாள் நெற்றியில் இரத்தம் பெருக்கெடுத்தது.  மேலும் திருப்பாணாழ்வாரைத் தோளிலே சுமந்து கொண்டு வருமாறு பெருமாள் ஏவ, லோகசாரங்க முனிவர் இவரைத் தோளிலே ;சுமந்துவந்து பெருமாள் முன் சேர்த்தார்.  திருவரங்க நாதனை வணங்கி அவன் அழகிலே ;ஈடுபட்டு அமலனாதிப் பிரான் முதலிய பத்துப் பாடல்களைப் பாடியருளினார்.  அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவேஎன்ற இவரின் பாடல் அடிகள் திருமால் மீது இவர் கொண்ட ஈடுபாட்டினைத் தெளிவுறுத்தும்.  இவர் காலம் 8ஆம் நூற்றாண்டு.

                தொண்டர் பெருமையைப் போற்றும் இன்னொரு ஆழ்வார் விப்ரநாராயணர் என்னும் பெயர் கொண்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார்.  இவரும் காவேரியாற்றங் கரையிலுள்ள திருமண்டங்குடி என்னும் ஊரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர். எட்டாம் நூற்றாண்டினர். இவரும் பெரியாழ்வாரைப் போல மலர்மாலை கட்டித் திருமாலை வழிபட்டவர். ; திருவரங்கத்தில் வாழ்ந்தவர்.  தேவதேவி என்னும் தாசியின் அழகில் ஈடுபட்டு அவள் வலையில் சிக்கி மயங்கிக் கிடந்த விப்ரநாராயணரைத் தடுத்து ஆட்கொள்ள எண்ணிய திருமால், கோயிலின் பொற்கிண்ணம் ஒன்றை அந்தணர் வடிவில் எடுத்துச் ;சென்று தேவதேவியிடம் விப்ரநாராயணர் அளித்ததாகக் கொடுத்து வி;ட்டு வந்தார்.  பொற்கிண்ணத்தைத் தேடியவர்கள் அதனைத் தேவதேவி; இல்லத்தில் கண்டு விப்ரநாராயணரைத் திருட்டுக் குற்றம் சாட்டிச் சிறை செய்தனர்.  திருமால் அரசனின் கனவில் தோன்றி உண்மையை உரைக்க அதனால் விடுதலை பெற்றுத் திருமால் பெருமையை உணர்ந்து வழிபட்டார்.  இவர் பாடிய பிரபந்தங்கள் திருமாலை, திருப்பள்ளி எழுச்சி என்பன  பச்சை மா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா ;அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே என்னும் பாடல் இவரது திருமால் பக்தியைக் காட்டும்.  ஆறுபோல் வரும் கண்ணீர் கொண்டு அரங்கன் கோயில் ;திருமுற்றம், சேறுசெய் தொண்டர் சேவடி செழுஞ்சேறு என்சென்னிக்கு அணிவனே என்று இவர் கூறுவதால் திருமாலடியார்களாகிய தொண்டர்களின் காலடிப் புழுதியைத் தன் தலைமேல் வைத்துப் போற்றும் தன்மையராக இவர் விளங்கினார் என்று அறியலாம்.  எனவேதான் இவர் தொண்டரடிப் பொடியாழ்வார் என்;று பெயர் பெற்றார்.  தொண்டரடிப்பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய்என்று இவர் பாடுவதால் இவரைத் திருமால் தடுத்தாட் கொண்ட தன்மை விளங்கும்.  திருமாலைத் துயில எழுப்பும் திருப்பள்ளி எழுச்சி பாடியவர் இந்த ஆழ்வார்.

                காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருமழிசை என்னும் ஊரில் தோன்றிய திருமழிசை ஆழ்வார் பார்க்கவ முனிவரின் மகன்.  இவரைப் பக்திசாரர் என்று அழைப்பார்கள்.  இவர் கி.பி ஆறாம் நூற்றாண்டினர்.  இவர் சமய வாதம் செய்து பிற சமயத்தவர்களை வென்று திருமால் பெருமையை நிலை நாட்டியவர்.  நாலாயிரத் திவ்ய பிரபந்தத்திலுள்ள திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி ஆகிய பகுதிகளை இயற்றியுள்ளார். திருமழிசை ஆழ்வாரின் சீடன் கணிகண்ணன் என்னும் புலவன் வேண்டுகோளுக்கு இணங்கக் காஞ்சிபுரத்துப் பெருமான் காஞ்சியிலிருந்து  ஒரு முறை வெளியேறித் திரும்பவும் அவன் வேண்டக் காஞ்சிக்கு எழுந்தருளினார் என்னும் வரலாறும் உண்டு.  எனவே அங்குள்ள பெருமாள் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்று அழைக்கப் பட்டார். 

                ஆழ்வார்களுக்காகவும் அவரின் சீடர்களுக்காகவும், அன்பர்களுக்காகவும்  அடிபணிந்து ஏவல் கேட்டு அருள் செய்த திருமால் பெருமையை என்னென்பது? பக்தி நாட்டமா? பைந்தமிழ்ச் சுவை விரும்பும் பண்பா? எப்படி இருப்பினும் இந்த ஆழ்வார்களை வணங்கித் திருமால் அருள் பெறுவோம்.               

   (சிங்கப்பூர் இந்து 13:4 அக்டோபர்-டிசம்பர் 2001, பக் 28-29)

34                  Thinnappan, SP, Aalvaarkal oor aRimukam, Thondar kulamee tholukulam

                         (An Introduction to Vaishnava Saints,

                         Greatness of  Thiruppaanaalvaar , Thondaradippodi aalvaar)

                                    And Thirumalisai aalvaar,Singapore Hindu

                                   Singapore (2001)               Vol 13:4 PP 28-29 (Tamil)




6   பெருநில மன்னரும் குறுநில மன்னரும்

                ஆழ்வார்கள் பன்னிருவருள் மூவேந்தர்களில் ஒருவரான சேர மரபினைச் சேர்ந்தவர் குலசேகர ஆழ்வார். இவர் தம் பாடல்களில் தம்மைக் கொல்லி காவலன், கூடல் நாயகன், கோழிக்கோன் என்று கூறிக் கொள்வதால் சேரநாட்டினைச் சேர்ந்த கொல்லம், கோழிக்கோடு என்னும் பகுதிகளையும் பாண்டிய நாட்டின் தலைநகரமாகிய மதுரைப் பகுதியையும் தம் ஆட்சிக்குள் அடக்கி ஆண்ட பெருநில மன்னன் ஆவார். திருமங்கை ஆழ்வார் என்னும் திருமங்கை மன்னன் என்பவர் கள்ளர் மரபில் தோன்றிச் சோழ நாட்டின் படைத்தலைவராக இருந்து திருவாலி நாட்டினையும் திருமங்கை குறையல் என்ற நகரங்களையும் ஆண்ட ஒரு சிற்றரசராக வாழ்ந்தவர். எனவே இவர் ஒரு குறுநில மன்னர். இந்த இரண்டு ஆழ்வார்களும் எட்டாம் நூற்றாண்டில் இருந்தவர்கள். இவர்கள் இருவரைப் பற்றியும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

                திருமால் அவதாரமாகிய இராமாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் குலசேகரர். ஒருமுறை இராமாயணக் கதையை இவர் கேட்டுக்  கொண்டிருக்கும்போது "கரதூடணராகிய பகைவர்கள் பதினாயிரக்கணக்கான அரக்கர்கள் இராமபிரானைச் சூழ்ந்து கொண்டனர்' என்று சொற்பொழிவாளர் கூறக் கேட்டதும், துடித்தெழுந்து இராமபிரானுககுத் துணையாகத் தம் படைகளை எல்லாம் திரட்டிப் புறப்பட்டாராம். பின்பு "இராமன் பகைவர்களை வென்றான்' என்று அவர் கூறக்கேட்ட பிறகே கோபம் தணிந்தாராம். இத்தகைய ஈடுபாடு இராமபிரானாகிய பெருமானிடத்து இவர்க்கு இருந்ததால் இவரையே பெருமாள் குலசேகரப் பெருமாள் என்று பக்தர்கள் அழைத்தனர். எனவே நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இவர் பாடிய பாடல் பகுதிக்குப் பெருமாள் திருமொழி என்று பெயர் வந்தது.  இப்பகுதியில் 105 பாடல்கள் உள்ளன. திருமாலிடத்தும் திருமால் அடியார்களிடத்தும் இவருக்கிருந்த பக்தியை இந்தப் பாடல்கள் வாயிலாக அறியலாம்.

                ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ

                வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்

                தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்

                மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே

என்னும் பாடல் குலசேகரர் செல்வமிக்க இன்பந்தரும் அரச வாழ்வைத் துறந்து திருப்பதி மலையிலுள்ள நீர்ச்சுனையில் மீனாகப் பிறக்க விரும்பும் பக்தியை உணர்த்துகிறது. இவ்வாறே இவர் திருமாலிடம் கோயிலிலுள்ள வாயிற்படியாய்க் கிடக்க வரம் வேண்டுகிறார். இவ்வாறு கிடப்பதால் திருமாலடியார்கள் பாதம் தம் மேல் படும் பேறு கிடைக்குமே என்று அவர் எண்ணுகிறார். எனவே விஷ்ணு ஆலயங்களின் உள்வாயிற்படி "குலசேகரன்படி' என்றழைக்கப்படும். இவர் கோசலையாகிய தாயின் நிலையில் நின்று இராமபிரானுக்குப் பாடிய தாலாட்டுப் பாடல்கள் தமிழ்ச்சுவை மிக்கவை ஆகும். இவர் "முகுந்தமாலை' என்னும் சமஸ்கிருத நூலையும் இயற்றியுள்ளார்.

                திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் நீலன் ஆவிநாடன் அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், மங்கை வேந்தன், கொற்றவேல் பரகாலன், கலியன் என்று இவர் தம் பாடல்களில் தம்மைப் பாடிக்கொள்கின்றார். எனவே மேற்கண்ட பெயர்களும் இவர்க்கு உண்டு. இவர் மனைவியார் பெயர் குமுதவல்லி. இவர் விருப்பத்திற்கேற்பத் திருமால் அடியார்களுக்கு அமுது படைத்தார். அதனால் வறுமை அடைந்தார். சோழப் பேரரசனுக்குக் கப்பம் செலுத்த இயலவில்லை. சிரமப்பட்டார். திருமால் அருளால் செல்வம் பெற்றுக் கப்பம் செலுத்தினார். பின்பும் திருமால் பணியைத் தொடர்ந்து  செல்வமனைத்தும் இழந்தார். இப்பணிக்காக வழிப்பறி செய்யத் தொடங்கினார். அப்போது ஒருநாள் திருமால் தம் தேவியுடன் வந்து மணமக்கள் கோலத்தில் நின்றார். திருமங்கை மன்னன் அவர்களிடத்தும் வழிப்பறி செய்து அவர்கள் அணிந்திருந்த ஆடை அணிகலன்களை மூட்டையாகக் கட்டித் தூக்க முற்பட்டார். முடியவில்லை. "தூக்க முடியாமல் செய்ய என்ன மநதிரம் செய்தீர்' என்று மணமகன் கோலத்தில் இருந்த திருமாலைக் கேட்டார் ஆழ்வார். அப்போது திருமால் திருமங்கை ஆழ்வாருக்கு "நாராயண மந்திரத்தை ஓதிச் செந்தமிழ்ப் பாடல்கள் இயற்றும் பக்தராக்கி மறைந்தார். அன்று முதல் திருமால் தலங்கள் பலவற்றிற்கும் சென்று வழிபாட்டுப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார். திருவரங்கம் பெரிய கோயில் சுற்று மதிலை எழுப்பியவர் இவரே என்பர். இந்த ஆழ்வார் 105 ஆண்டுகள் வாழ்ந்தவர் என்பர்.

                திருமங்கை ஆழ்வார் பாடிய 1137 பாடல்கள் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடும் தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், என்னும் ஆறு பகுதிகளாக உள்ளன. "பெரிய வள்ளன்மை, புலவர் போற்றும் புகழ், பொய்ம்மொழி ஒன்றில்லாத மெய்ம்மைத் திறம், வாட்போர் வன்மை, யானைகளை அடக்கும் ஆற்றல்' போன்றவற்றை இவர் பாடல்களில் காணலாம். இவருக்கு "நாற்கவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு. இவர் புதுவகை இலக்கியங்களைத் தமிழுக்குப் படைத்துத் தந்தவர். இவரது ஆறு நூல்களும் தமிழ்மறை நான்குக்கும் ஆறு அங்கம் என்பார்கள். இவர் நாராயண மந்திரத்தின் பெருமையைப் பற்றிப் பாடிய பாடல் இதோ!

                குலம் தரும், செல்வம் தந்திடும், அடியார், படுதுயராயின எல்லாம்

                நிலம்தரம் செய்யும், நீள்விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்

                வலம்தரும் மற்றும் தந்திடும், பெற்ற தாயினும் ஆயின செய்யும்

                நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்

                                                நாராயணா என்னும் நாமம்

(சிங்கப்பூர் இந்து 13:2 ஏப்பிரல்-ஜூன் 2001, பக் 20-21)

34                  Thinnappan, SP, Aalvaarkal oor aRimukam, Peru nila mannarum

                        kuru nila mannarum    (An Introduction to Vaishnava Saints,

                         Greatness of   Kulasekaraalvaar and Thirumankai aalvaar)

                                    Singapore Hindu Singapore (2001)    Vol 13:2 PP 20-21 (Tamil)

 ---- முற்றும்----


Dr S.P. Thinnappan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக