வெள்ளி, 2 மே, 2014

மொழி


SPT articles 5 Mozhi (Language and  Linguistics)

1  தமிழ் - ஓர் உயர்தனிச் செம்மொழி.

 2 தமிழரல்லாதார்க்குத் தமிழ் பயிற்றுவதில் எழும் சிலசிக்கல்களும்  தீர்வுகளும்..

3 மலேசியத் தமிழ்

 -----------------------------------------------------------------------------------------------

1 தமிழ் - ஓர் உயர்தனிச் செம்மொழி.

      உயர்தனிச் செம்மொழி என்னும் தொடரில் மூன்று அடைமொழிகள் உள்ளன. உயர், தனி, ;செம் என்பனவே அந்த அடை ;மொழிகள். உயர்ந்தமொழி, தனித்த மொழி, செம்மையான மொழி எதுவோ அதுவே உயர்தனிச் செம்மொழியாகும். உயர்வுத் தன்மை, தனித்தன்மை, செம்மைத் தன்மை ஆகிய மூன்று தன்மைகளையும்  கொண்ட மொழியாக நம் தாய்மொழி தமிழ் இருப்பதை இங்கே பார்ப்போம்.

சொல் வளம் -

      ஒரு மொழிக்கு உயர்வு அம்மொழியிலுள்ள சொல்வளத்தைப் பொறுத்தே அமையும்.  கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் கருவியே மொழி. கருத்துகளைச் சொற்றொடர்கள் வழியாகவே உணர்த்துகிறோம். சொற்றொடர்களே சொற்களால்தான் உருவாகின்றன.  எனவே மொழிக்கு அடிப்படையாக அமைவன சொற்களே. , , வா ,போ முதலிய ஒரெழுத்துச் சொற்கள் தமிழில் 50க்கு மேல் உள்ளன.  ஒரெழுத்து முதல் ஈரெழுத்து வரையில் ஆன தமிழ்ச் சொற்கள் ஏறத்தாழ நூறாயிரத்திற்கு மேல் உள்ளன.  இவை எழுத்தின் சுருக்கத்தையும் சொல்லின் பெருக்கத்தையும் மொழியின் வளத்தையும் காட்டும் இயல்புடையவை.

      தமிழில் ஒரு பொருள் என்னும் நிலை மட்டுமல்லாது பல் பொருள் உணர்த்தும் ஒருசொல் நிலை பல உண்டு.  மா என்னும் சொல்லுக்குப் பெரிய, மாவு, மாமரம், குதிரை, விலங்கு, இலக்குமி எனப் பல பொருள் உண்டு.  இவ்வாறே ஒருபொருள் உணர்த்தும் பல சொற்கள் இருப்பதைப் பார்க்கலாம். கூறினான், சொன்னான், பேசினான், செப்பினான், உணர்த்தினான், உரைத்தான், மொழிந்தான், கழறினான் முதலான சொற்கள் கூறுதல் என்னும் ஒரு பொருள் குறித்து வழங்குபவை.  இவ்வாறே வினைச்சொல், பெயர்ச் சொல், என இரண்டிற்கும் பொதுவான சொற்கள் அதாவது பூ, மலர், அடி, தழை, மலை போன்ற சொற்கள் பல தமிழில் உள்ளன.

      தமிழ்ச் சொற்கள் நுட்பமாகப் பொருள் வேறுபாட்டினை உணர்த்தும் தன்மையைக் காணலாம். வாயினால்; பொய் சொல்லாதிருப்பதது வாய்மை, உள்ளத்தால் பொய்யாது எண்ணுவது உண்மை.  உடலால் பொய்யாது செயலாற்றுவது மெய்ம்மை. இவை எடுத்துக் காட்டுகள்.  ஒரு பொருளின் பல்வேறு நிலைகளை உணர்த்தும் சொற்களும் தமிழில் உண்டு.  பூ என்பது தமிழர்களின் பண்பாட்டு பெயர்க் கூறுபாடுகளில் ஒன்று.  பூவின் அரும்பும் நிலை அரும்பு என்றும், மொக்கு விடும் நிலை மொட்டு என்றும், முகிழ்க்கும் நிலை முகை என்றும், மலரும் நிலை மலர் என்றும், மலர்ந்த நிலை அலர் என்றும், வாடும் நிலை வீ என்றும் செம்மல் என்றும் அழைக்கப்படும்.  பூவின் பல்வேறு நிலைகளைக் கண்ட தமிழர், இலையிலும் இவ்வாறு நுட்பமாக நோக்கிக் கொழுந்து, தளிர், இலை, பழுப்பு, சருகு என அதன் பல்வேறு நிலைகளைக் காட்டும் சொற்களும் தமிழில் உள்ளன.

      கணினி, பேருந்து முதலிய புதுச் சொற்களை அறிவியல் வளர்ச்சிக்கேற்ப அவ்வப்போது உருவாக்கவும் தமிழில் முடியும்.  இத்தகைய சொல்வளம் மிக்க மொழியை உயர்ந்த மொழி எனக் கூறுதல் தவறு ஆகுமா?  எனவேதான்  பாரதியார் சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்று கூறியுள்ளார். 

தனித்தியங்கும் தமிழ் _

      தனித்தன்மை என்பது ஒரு மொழி மற்ற மொழிகளின் செல்வாக்கு இன்றித் தனித்து இயங்கும் தன்மையைக் குறிக்கும்.  தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய 23 மொழிகளைத் திராவிட மொழிகள் எனக் கூறுவர்.  இம்மொழிகளில் தமிழ் ஒன்றில் தான் சமஸ்கிருத மொழியின் செல்வாக்கு மிகக் குறைவு.  ஏனைய மொழிகள்  சமஸ்கிருத இலக்கண முறையைத் தழுவியும், சமஸ்கிருதச் சொற்கள் உதவியுடனும் இயங்கும் தன்மையன.  ஆனால் தமிழ் மொழியோ வேறு எம்மொழியின் உதவியும் இல்லாமல் தனித்துப் பேசுவதற்குரிய தன்மை பெற்றது. பிற மொழிச் சொற்கலப்பு இல்லாமல் தூய தமிழில் பேசவும் எழுதவும் முடியம். ஆனால் உலகில் உள்ள பல மொழிகள் இப்படி அமையவில்லை.  எனவேதான் தமிழைத் தனித்தியங்கும் மொழி என்று கூறினர்.  கடந்த நூற்றாண்டில் இதற்கெனத் தனித்தமிழ் இயக்கம் கண்டு வெற்றி; பெற்றார் மறைமலை அடிகள்.

இலக்கணச் செம்மை -

      ஒரு மொழிக்குச் செம்மைத் தன்மை என்பது அம்மொழியிலுள்ள இலக்கணக் கட்டுக்கோப்பால் கிடைப்பதாகும்.  இலக்கணம் என்பது ஒரு மொழியைப் பிழையறப் பேசவும், எழுதவும் உதவும் விதிகளைத் தருவது.  மொழியின் செம்மைத் தன்மை குறையாமல் சுட்டிக் காப்பது இலக்கணமே ஆகும்.  இத்தகைய இலக்கண நூல்கள் தமிழில் பல உண்டு.  இவற்றுள் காலத்தால் பழமையானது தொல்காப்பியம்.  இது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்;டது.  இந்நூலாசிரியர் தொல்காப்பியர்.  இவர் ;தமிழ் மொழியில் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு இவ்விரண்டையும் ஆராய்ந்து இலக்கண விதிகள் உருவாக்கி நூலாகத் தந்துள்ளார்.  இவர் தமிழ் மொழிக்குரிய எழுத்து, சொல், ;தொடர், சந்தி ஆகியவற்றின் இலக்கணத்தை மட்டும் தராமல் இலக்கியத்திற்குரிய உள்ளடக்கம், உருவம், உத்தி ஆகியவற்றுக்கும் இலக்கணம் இயற்றியுள்ளார்.  இதுவே இந்நூலின் சிறப்பு. வேறு எம்மொழியிலும் இல்லாத இந்தப் பெருமை தமிழுக்கு மட்டும் உண்டு.  மேலும் தொல்காப்பியத்திற்கு முன்னரே பல இலக்கண இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை அவர் நூல் நன்கு விளக்குகிறது.  இது தமிழ் மொழியின் பழமையை உணர்த்துகிறது.  தமிழில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என இலக்கணம் ஐந்து வகையாக அமைந்துள்ளது.  தொல்காப்பியத்திற்குப் பிறகு இடைக்காலத்தில் நன்னூல் என்னும் இலக்கண நூல் தோன்றியது. இக்காலத்திலும் பல இலக்கண நூல்கள் எழுந்துள்ளன..

இலக்கியப் பெருமை -

      ஒரு மொழியை உயர்தனிச் செம்மொழியாக ஆக்க உறுதுணையாக இருப்பவை அம்மொழியின் இலக்கியங்களே.  அந்த வகையில் நோக்கினால் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணீமேகலை, சீவக சிந்தாமணி, பெரிய புராணம், கம்ப இராமாயணம்  எனப் பல்வேறு இலக்கியங்கள் தமிழின் பெருமையைப் பறைசாற்றும்.

செவ்வியல் மொழி -

      உலகில் தனிச் செம்மொழிகளாகச் செவ்வியல் மொழிகளாக கிரேக்கம், ஹீப்ரு, இலத்தின், சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளைக் குறிப்பிடுவர்.  இம்மொழிகளின் பழைய நூல்களில் தமிழ்ச் சொற்கள் உள்ளன.  எனவே இம் மொழிகளைப் போலத் தமிழும்  பழமையான மொழி.  அப்படியானால் தமிழை ஏன் செவ்வியல் மொழிப் பட்டியலில் சேர்க்கவில்லை எனக் கேட்கலாம். சீன மொழிக்கும் இந்நிலைதான்.  ஏன்எனில் கிரேக்கம், ஹீப்ரு, இலத்தின், சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகள் ஏட்டு வழக்கில் மட்டுமே உள்ளன.ஆனால் தமிழும் சீனமும் வழக்கில் மட்டுமல்லாது மக்கள் நாவில் நடமாடும் பேச்சு மொழியாகவும் உள்ளன. அதனால் தான் இவற்றைப் இப்பட்டியலில் சேர்க்கவில்லை. பழமைக்குப் பழமையாகவும், புதுமைக்குப் புதுமையாகவும் இருக்கும் தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி தானே.

            எனவே சொல் வளத்தாலும், இலக்கிய இலக்கணச் சிறப்பினாலும் தனித்தியங்கும் தன்மையாலும் தமிழ்; ஒர் உயர்தனிச் ;செம்மொழியாக விளங்குவதுடன் இன்றும் வாழும் மொழியாகவும் இயங்குகிறது.  இதனைப் போற்றிப் பேணுவது தமிழர்தம் தலையாய  கடமை அல்லவா?

 

 

Thinnappan, SP. Cemmozhi (Tamil as a Classical Language) in Singapore                  Hindu 16, 1, pp20-21, Singapore, (Tamil) 2005


3 தமிழரல்லாதார்க்குத் தமிழ் பயிற்றுவதில் எழும் சில

சிக்கல்களும்  தீர்வுகளும்.

      தமிழ் கற்பித்தலை முதல் மொழிநிலை, இரண்டாம் மொழிநிலை. அயல்மொழி நிலை என்று மூன்று வகையாகப் பகுத்துக் காண்பர் இக்கால மொழியியலார். தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்குத் தமிழ் கற்பித்தல் முதல் மொழி நிலையெனக் கருதப்படும்.  தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற மொழியாளர்க்குத்  தமிழ் புழங்கும் புறச்சூழலில் தமிழ் கற்பித்தல் இரண்டாம் மொழிநிலை என எண்ணப்படும்.  தமிழ் புழங்கும் புறச்சூழல் அற்ற இடத்தில்  பிறமொழியாளர்ககுத் தமிழ் கற்பித்தல் அயல்மொழி நிலை என வழங்கப்படும்.

      மலாயப் பல்கலைக் கழகம் (1969 - 72) சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகம் (1997 -98), சிங்கப்பூர்த் தேசியக் கல்விக் கழகம் ( 1955 - 99) சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகம்,(1999- 2001) ஆகியவற்றில் சீன, மலாய் மொழி பேசும் தமிழரல்லாத மாணவர்க்கு இரண்டாம் மொழி நிலையில் தமிழ்  கற்பிக்கும் பணியில் ஈடுபட்டபோது எழுந்த சில சிக்கல்களைச் சுட்டிக்காட்டி அவற்றுக்கான தீர்வுகள் சிலவற்றையம் எடுத்துக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.  முன்பு முதன் மொழி நிலையில் இருந்து இப்போது படிப்படியாக இரண்டாம் மொழி நிலையில் தமிழ் பயிலும் நிலையை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள தமிழ்க் கல்விச் சூழலுக்கும் இக்கட்டுரையில் கூறப்படும் கருத்துகள் பொருந்திவரும் இயல்பின என்று கூறலாம்.

      மேலே கூறப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுள் சீன மாணவர்கள் ஆங்கிலம் வழியாகவும், மலாய் மாணவர்கள் ஆங்கிலம் மலாய்மொழி வாயிலாகவும் சிந்தித்துத் தமிழ் கற்கும்போது ஆங்கிலமே பயிற்று மொழியாகப் பயன்படுத்தப்பட்டது.  தொடக்கநிலைப் பாடம்  இவர்களுக்கு ரோமன் வரிவடிவத்தில் கற்பிக்கப்பட்டது.  பிறகுதான் தமிழ் வரிவடிவம் சொல்லிக் கொடுக்கப்பட்டது.  இவர்களுக்கு ஒரு பருவத்துக்கு (12 வாரங்கள்,) 24 மணி நேரம் விரிவுரையும் 10 மணி நேரத் துணைவகுப்புகளும் நடத்தப்பட்டன.

இரட்டை வழக்கு -

      தமிழ் - எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என இரட்டை வழக்கு மொழியாக உள்ளது.  இந்த இயல்பு இன்று நேற்றுத் தோன்றியதன்று.  ஏறத்தாழ இரண்டாயிரம்  ஆண்டுகளாக இருந்து வரும் இயல்பு என்பதைத் தொல்காப்பியப் பாயிரத் தொடர் (செய்யுளும் வழக்கும் நாடி) புலப்படுத்தும் .  எழுதுவது போல் பேசுவது இல்லை.  அவ்வாறு பேசுவது செயற்கைத் தன்மை உடையதாகக் கருதப் படுகிறது.  பேசுவதுபோல் எழுதினால் கொச்சைத் தன்மையுடையதாக நினைக்கப் படுகிறது.  மேலும் எழுத்துத் தமிழுக்கும், பேச்சுத் தமிழுக்கும்  இடையே உள்ள வேறுபாட்டினை இக்கால மொழியியல் அறிஞர்கள் பலர் விளக்கியுள்ளனர். எனவே தழிழரல்லாதார்ககுத் தமிழ் கற்பிக்கும்போது எழுத்துத் தமிழ் கற்பிப்பதா? பேச்சுத்தமிழ் கற்பிப்பதா? என முதலில் முடிவு செய்துகொள்ள வேண்டியது இன்றியமையாத ஒன்று.  எழுத்துத் தமிழ் கற்பிக்கும்போது அதற்கென ஒரு வரையறையான இலக்கணம் இருப்பதால் எளிதாகிறது.  ஆனால், பேச்சுத் தமிழுக்கு அத்தகைய இலக்கணம் இல்லாதது ஒரு குறையாகவே தோன்றுகிறது.

      மேலும், பேச்சுத் தமிழ் பலவகைக் கிளைமொழிகளாக இருப்பதால் எந்தக் கிளை மொழியைக் கற்பிப்பது என்பது ஒரு கேள்வி. பொதுநிலையான பேச்சு மொழியைக் கற்பிக்கலாம் என முடிவு செய்து கொண்டு கற்பித்தல் வேண்டும்.  ஹிரால்டு  ஷிப்மென் எழுதிய   A REFERENCE GRAMMER OF SPOKEN TAMIL” (1999) ஒரளவு உதவும்.  அது மொழியியல் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.  எனவே, கற்பித்தல் நோக்கத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.  எழுத்து வழக்கினை விரிவுரை வகுப்பிலும், பேச்சு வழக்கினைத் துணை வகுப்பிலும் கற்பித்துப் பார்த்ததில் மாணவர்கள் ;அதிகக் குழப்பம் அடைய நேரிட்டது.  எனவே. இருவகை வழக்கினையும் ஒருசேரக் கற்பிப்பது என்பது கடினமான செயல்.  ஆகையால், முதலில் பேச்சு வழக்கினைக் கற்பித்த பின்னர் அடுத்த நிலையில் எழுத்து வழக்கினைக் கற்பிக்;கலாம்.  பேச்சு வழக்கினைக் கற்பிக்கும்; போது வாழ்க்கைச் சூழல்கள் பலவற்றை மய்யமாகக் கொண்டு கற்பிப்பதே சிறந்த முறையாகத் தோன்றுகிறது.  இலக்கணத்தை மய்யமாகக் கொண்டு கற்பிக்கும் போது மாணவர்களின் ஈடுபாடு மிகுதியாக இல்லை.

எழுதுதலும் பேசுதலும் -

      மொழி கற்றல் கற்பித்தலில் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய நான்கு திறன்களும் இன்றியமையாத இடம் பெறுகின்றன.  இவற்றில் கேட்டலும் படித்தலும் கொள்திறன்களாகவும், பேசுதலும் எழுதுதலும் ஆக்கத் திறன்களாகவும் கருதப்படும்.  கொள் திறன்களை உணர் திறன்களாகவும், ஆக்கத் திறன்களை உணர்த்தும் திறன்களாகவும் கொள்ளலாம்.  கருத்துணர்த்தலும் உணர்தலும் தானே மொழியின் அடிப்படைப் பயன்பாடு தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலை என மூன்று நிலைகளில் 108 மணி நேரம் படித்தாலும், பேச்சுத் திறனில் மாணவர்கள் பின்தங்கியே இருக்கின்றனர்.  அதே நேரத்தில்  எழுத்துத் திறனில் ஓரளவு சரியாகச் செய்து விடுகின்றனர்.  காரணம் எழுதும்போது சிந்தித்துக் கருத்துணர்த்தவும் அகராதி; போன்ற துணை நூல்களை நோக்கி எழுதவும் பேசவும் வாய்ப்பும் உண்டு.  ஆனால் பேசும்போது உடனடியாகக் கருத்து வெளிப்படுத்த வேண்டிய நிலை இருப்பதால் அவர்கள் தயங்குகிறார்கள்.  பயமும் சொற்கோவைப் பற்றாக் குறையும் ஏனைய காரணங்களாகும்.  ;அவர்கள் தயக்கத்தைப் ;போக்க அதிகமான பேச்சுப் பயிற்சி தரப்படுதல் ;வேண்டும்.  சொற்கோவைப் பற்றாக் குறையை நீக்க முதலில் ஆங்கில மொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களுக்குப் பதிலாகத் தாராளமாகப் பயன்படுத்த அனுமதித்தல் வேண்டும்.  பெயர்ச் சொற்கள் அளவில் மட்டும் இதனை வைத்துக் கொள்ளலாம்.  பிறகு இச்சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொற்களைக் கற்பிக்கலாம்.  மேலும் இம் மாணவர்களுக்குத் தங்கள் வகுப்பறையில் கற்றதைப் பயன்படுத்தப் போதுமான சூழல் இல்லை.  பல்கலைக் கழகத்தில் ;தமிழ் நண்பர்கள் இருந்தால் அவர்கள் பேச்சாற்றல் கூடுதற்கு வழி ஏற்படும்.  இல்லாவிடில் கடினம்தான்.  எனவே,; இதற்கேற்ற சூழ்நிலைகளை ஆசிரியர்கள் அமைத்துக் கொடுக்க முன்வருதல் வேண்டும்.  தமிழ் பேசும் குடும்பங்களில் இந்த மாணவர்களை ஓரிரு நாள்கள் தங்கச் செய்யலாம்.  மேலும் தமிழ் பேசும் இடங்களுக்கும், கடைத் ;தொகுதிகளுக்கம் அழைத்துச் சென்று ;பேச வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம்.  இதனால், தமிழரல்லாத  மாணவர்கள் தமிழர் உணவுகளைச் சுவைக்கவும், பண்பாடு பற்றி அறியவும் முடியும்.

 

எழுத்துப் பெயர்ப்பு-

      தமிழரல்லாதார்க்குத் தொடக்க நிலையில் ரோமன் வரிவடிவத்தில் கறிற்பிக்க முற்படும்போது எத்தகைய எழுத்துப் பெயர்ப்பினை (    TRANSLITERATION) என்பது ஒரு சிக்கல்.  சென்னைப்  பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி ( LEXICAN) எழுத்துப் பெயர்ப்பா? அல்லது அனைத்துலக ஒலியியற் கழக நெடுங்கணக்கு (    IPA) முறையா? என்பதுதான் அந்தச் சிக்கல்.  இப்போது வெளி வந்துள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான எழுத்துப் பெயர்ப்பினைப் பின்பற்றியுள்ளன. எடுத்துக் காட்டுக்கு என்னும் எழுத்துக்கு a; aa.a: என மூன்று வகைக் குறியீடுகள் தருவதைக் குறிப்பிடலாம்.  மேலும் எழுத்துப் பெயர்ப்பு என்னும்போது தட்டெழுத்து விசைப் பலகை வசதி, அச்சு வசதி, கணினி எழுத்துரு வசதி  ஆகியவற்றையும் நோக்க வேண்டிய நிலை உள்ளது .மலாயாப் பல்கலைக் கழகத்தில் கற்பிக்கும் போது  IPA வடிவத்தைப் பயன்படுத்திப் பார்த்ததில் வெற்றி பெற முடியவில்லை.  எனவே, பேரகராதி முறையைப் பின்பற்றியே பாடங்கள் கற்பிக்கலாம்.  இந்நிலையில் மாணவர்கள் மேற்கோடு, கீழ்க்கோடு, புள்ளி முதலிய குறியீடுகளை எழுதுவதில் மிகுதியாக இடர்ப்பாடு காண்கிறார்கள்.  பயிற்சி செய்யும்போது அவற்றைக் கணினி வழித் தர இயலவில்லையே என்று வருந்துகிறார்கள்.  இதற்கென ஓர் எழுத்துரு (    font) அமைக்க நேரிட்டது.  எனவே, ஆசிரியர் பயிற்சித்தாள், வினாத்தாள் தயாரிக்க வசதியாக இருந்தது.  குறியீடுகள் இல்லா விட்டால் ஏற்படும் பொருள் மாற்றங்களைக்  கூறி (kal, kaal, manam , maanam, palam,paalam,val,vaal,kari,kaari     ) குறியீடுகளின் தேவையை வலியுறுத்துதல்  வேண்டும்.  மேலும் பேரகராதி முறையைப் பின்பற்றினால்தான் ரோமன் வரிவடிவத்திலிருந்து தமிழ் வரி வடிவத்துக்கு மாற்றம் செய்யும் பணி எளிதாக அமைகிறது.  வல்லின எழுத்து வடிவத்தில் பலவகை உச்சரிப்பு இயல்புகளைக் கற்றல் சிறிது கடினமாக இருந்தாலும் தமிழ் வரிவடிவ மாற்றப் பணியை எண்ணும்போது பேரகராதி எழுத்துப் பெயர்ப்பே சிறந்தது எனத் தோன்றுகிறது.  மலாய் மொழி ரோமன் வரிவடிவத்தில் எழுதப்படுவதால் மலாய் மாணவர்கள் ரோமன் வரிவடிவத்தில் தமிழ் கற்கும்போது எளிமையை உணர்கின்றனர்.

உச்சரிப்பு-

      தமிழ் உயிர் எழுத்துக்களில் குறில், நெடில் வேறுபாடும் வல்லின ;மெய் எழுத்துகளில் ஒலிப்புடை ஒலிகள் (g,j,d,dh,d,b), ஒலிப்பிலா ஒலிகள் (k,c,t,t,p) வேறுபாடும், மெல்லினமெய் எழுத்துகளில் ஐவகை மூக்கொலிகள்( ங்,ஞ்,ண், ந்,ன்) வேறுபாடும், இடையின மெய் எழுத்துகளில் மூவகை மருங்கொலி (  ல், ழ், ள்) வேறுபாடும், அண்பல் வருடொலி, ஆடொலி (ர், ற்) வேறுபாடும், பல்லொலி,  வளைநா ஒலி (த், ட்) வேறுபாடும் தமிழரல்லாத மாணவர்களுக்கு உச்சரிப்பு நிலையில் இடர் தருகின்றன.  (தமிழ் மாணவர்களுக்கும் இவை தடுமாற்றம் தருவனவே)  இவற்றைக் கற்பிக்கும் போது ஆசிரியர் மிகுதியாகக்  கவனம் செலுத்துதல் வேண்டும்.  பொருள் வேறுபாடு தரும் இணைச் சொற்களை (minimal pairs) எடுத்துக் காட்டி இவற்றின் உச்சரிப்பினை விளக்குதல் வேண்டும்.  பிறகு ஒலியுறுப்புகளின்; படங்களைக் காட்டி உச்சரிப்பினை விளக்குதல் வேண்டும்.  இவற்றுக்கு நிகரான எழுத்துகள் ஆங்கிலத்திலோ, மலாய் மொழியிலோ இருக்குமானால் எளிதில் விளங்கிக் கொள்வர்.  ஆங்கிலச் சொற்களின் வழியாக ஏற்ற உச்சரிப்புகளைக் கூறுவது கட்டாயம் தேவை.

      மலாய் மொழியில் இருக்குமானால் அவற்றைக் காட்டிக் கற்பிக்கும் போது எளிதில் புரிந்து கொள்கின்றனர்.  இதற்கு ஆசிரியர்க்கு மலாய் மொழி தெரிந்திருப்பது அவசியம்.  தமிழில் உள்ள ங், ஞ்.,ந், ன் என்பதற்குக்கேற்ற மலாய் மொழி எழுத்துகள் இவை எனக் கூறிச் சொற்களையும் கூறல் வேண்டும்.  வல்லின எழுத்துகளில் ஒலிப்புடை ஒலிகள், ;ஒலிப்பிலா ;ஒலிகள் வருமிடம் பற்றிய விதிகளைக் கூறி உச்சரிப்பை விளக்குதல்; வேண்டும்.  சீன மாணவர்கள் ர்ஒலிப்பதே இல்லை.  மேலும் ற்இரட்டிக்கும் இடங்களில் உச்சரிப்பதிலும் எல்லா மாணவர்களும் தடுமாறுகிறார்கள் (காற்று - கார்ரு) மாணவர்களுக்கு ஒலிநாடா வாயிலாகவும் இந்த எழுத்துகளின் உச்சரிப்பைக் கற்பிக்கலாம்.  இந்த எழுத்துகளைச் சொற்களில் எழுதும் போது சொல்லெழுத்துப் பிழையும் (  spelling errors) செய்கிறார்கள்.  இவற்றைப் போக்கச் சொல்லுக்கு முதலில், இறுதியில் இடையில் வரும் விதிகளைப் பற்றி விளக்கி ஓரளவு சொல்லெழுத்துப் பிழைகளைத் தவிர்க்கலாம்.

சொல்லியல் -

      சொற் பாகுபாடு என்று வரும்போது பெயர், வினை, பெயரடை, வினையடை, ;இடைச்சொற்கள் என ஐவகைப் பயன்பாட்டினையே தமழரல்லாத மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தல் வேண்டும். பெயர்ச் சொற்களில் மூவிடப் பெயர்களைக் கற்கும்போது மாணவர்கள் தடுமாறுகிறார்கள்.  நாம், நாங்கள், பொருள் வேறுபாடு மரியாதை உணர்த்தும் நீங்கள், மூவிடப் பெயர்களின் எழுவாய் வடிவம், வேற்றுமை ஏற்கும் வடிவம் வேறுபாடு ஆகியவற்றைக் கற்கும்போது மாணவர்கள் இடர்ப்படுகிறார்கள்.  இந்நிலையில் சமுதாய மரபினை விளக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

      பெயர்ச் சொற்கள் வேற்றுமை உருபேற்கும்போது ஏற்படும் சிக்கல்கள் பல உண்டு.  செயப்படு பொருள்  உருபாகிய அஃறிணைப் பெயர்களுடன் சேர்த்தும் எழுதலாம், சேர்க்காமலும் எழுதலாம்.  ஆனால் உயர்திணைப் பெயர்களுடன் கட்டாயம் சேர்த்தல் வேண்டும.  இதனை உணராது உயர்திணைப் பெயர்களுடன் சேர்க்காமல் எழுதும் போக்கு மாணவர்களிடம் மிகுதியாகக் காணப்படுகின்றது.  (.டு) ‘‘ஆசிரியர் அப்பா பார்த்தார்இந்நிலையில் ஏற்படும் கருத்துப் பரிமாற்றக் குழப்பத்தைக் கூறித் தவிர்க்கச் செய்தல் வேண்டும்.

      மூன்றாம் வேற்றுமை உருபு ஆகிய ஆல், ஒடு (உடன்) ஆகியவை முறையே கருவிப் பொருளும் உடனிகழ்ச்சிப் பொருளும் உணர்த்துபவை.  இவற்றுக்கு நேராக ஆங்கிலத்தில்  ‘with‘ என்று ஒரே சொல்தான் உரியது.  எனவே மாணவர்கள் அவன் கரண்டியோடு சாப்பிட்டான்’, ‘அவள் பேனாவோடு எழுதினாள்எனத் தவறாக எழுதுகின்றனர்.  மேலும் அப்பா அம்மாவுடன் வந்தார்என்பதற்குப் பதிலாகஅப்பா அம்மாவால் வந்தார்என எழுதுகின்றனர்.  இது பற்றிப் பேராசிரியர் ச.அகத்தியலிஙக்ம (1965) ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளார்.  இந்நிலையில் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினைக் கூறி விளக்குதல் வேண்டும்.

      வினைச் சொல்லில் காலமேற்கும் வினைத் திரிபு விளக்கத்தில் (conjugation system) மாணவர்களுக்கு ஏற்படும் தடுமாற்றத்திற்கும், இடர்ப்பாட்டிற்கும் அளவே இல்லை. காலமேற்கும் தன்மைக்கேற்ப வினையடிச் சொற்களைப் பகுப்பதில் எண்ணி;க்கை மிகுதியாக (12 அல்லது 13) இருந்தால் மாணவர்களால் நினைவு வைத்துக் கொள்ள முடியவில்லை.  பாகுபாட்டினைக் குறைவாகக் கொண்டு கற்பிப்பதே சிறந்தது.  வளர், கலை என்னும் வினையடிச் சொற்கள்தன்வினை, பிறவினைஇயல்புக்கேற்ப, ‘வளர்ந்தான் வளர்த்தான், கலைந்தது, கலைத்தது என அமையும் வினைத்திரிபு விளக்கத்தைக் கற்பதில் மாணவர்கள் இடர்ப்படுகின்றனர்.

      பெயரடை மொழிகள் மலாய் மொழியில் பெயர்ச் சொல்லுக்குப் பின்னே வரும். எனினும் ஆங்கிலத்தில் முன்னே வருவதாலும் தமிழிலும் இத்தன்மையே இருப்பதாலும் இங்கு இடர்ப்பாடில்லை.  ஆனால், வினையடை மொழிகளை ஆங்கிலம்போலவே மாணவர்கள் மொழிக்குப் பின்னே சேர்க்க முற்படுகின்றனர். ‘அவன் ஓடினான் வேகமாகஎன்று எழுதுகிறார்கள். இதனை நீக்க வினைமுற்று, தமிழ் வாக்கியத்தின் இறுதியில்தான் வரவேண்டும் என்னும் விதியை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.  எண்ணுப் பெயர்கள் பெயரடைகளாகவும் தமிழில் வரும்.  ஒன்றுஎன்பது மட்டும் பெயராக வரும்போது ஒன்று என்றும், பெயரடையாக வரும்போது ஒரு, ஓர் எனவும் வருதல் வேண்டும். இதனை மாணவர்கள் அடிக்கடி மறந்து விடுவார்கள்.  ஒன்று புத்தகம், ஒன்று பையன்என எழுதுகிறார்கள். ‘one book, one boy’ என ஆங்கிலத்தில் வருவதால் இந்தப் பிழையை மாணவர்கள் செய்கிறார்கள்.

      அது,அந்தஎன்னும் இரு சொற்களுக்கும் பொருள் சொல்லிக் கற்பிக்கிறோம்.’’அது ஒரு புத்தகம் என்பதை    It is a book  என்றும், That is a book என்றும் மொழிபெயர்த்துச் சொல்லலாம்.  எனவே, மாணவர்கள்       He read that book என்பதற்கு அவன் அது புத்தகம் படித்தான்என்று எழுதி விடுகின்றனர். எனவே. ‘அது , அந்தவேறுபாடு மாணவர்களுக்குப் புரியவில்லை.  அதுஎன்பது பெயர்.  அந்தஎன்பதோ பெயரடை. ஆங்கிலத்தில் that என்பது இருவகை நிலையிலும் வரும். It என்பது பெயராக மட்டும் வரும். எனவே that என்பதற்கு it  என்று பதிலீடு செய்ய முடியுமானால் அதுஎன்பது வரும் என்றும்,  it  என்று பதிலீடு  செய்ய முடியாத நிலையில் அந்தஎன்பது வரும் என்றும் விளக்கிக் கற்பிக்கலாம்.

தொடரியல் -

      ஆங்கில வாக்கியம் எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் (SOP) வரிசையில் வரத் தமிழ் வாக்கியமோ எழுவாய், செயப்படு பொருள், பயனிலை (SPO) என்று வருதல் வேண்டும் என்பதை மாணவர்களுக்குத் தொடக்கம் முதல் இறுதிவரை பலமுறை வலியுறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.  மாணவர்கள் ஆங்கிலத்திலேயே சிந்தித்துத் தமிழில் தர முற்படுவதே இதற்குக் காரணம்.  இது வெளிநாட்டுச் சூழலில் தவிர்க்க முடியாத ஒன்று.  மேலும்ஆங்கில வாக்கிய அமைப்பிலேயே மாணவர்கள் தமிழில் தர முயல்கின்றனர். He came to eat அவன் வந்தான் சாப்பிட என்றே எழுதுகின்றனர்.  இங்கும் வினைமுற்று வாக்கிய இறுதியில் வரும் என்பதைச் சொல்லிக கற்பித்தல் வேண்டும்.

      வாக்கிய அமைப்புகளைப் பெயர்ப் பயனிலை வாக்கியம், வினைப் பயனிலை வாக்கியம்என இரண்டு வகையாகப் பகுத்து இவற்றுக்கு முறையே, major sentence, minor sentence   எனப் பெயரிட்டுக் கற்பிப்பது பெரும் பயன் தரும்.         Minor sentence இல் N3, N1N3 , minor sentenceஇல் V, NIN2V, N1N2AV, N1N2VV எனப் பலவகை வாக்கிய அமைப்பும் இருப்பதாகக் கூறிக் கற்பிப்பதால் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்கின்றனர். (  N1- பெயர் எழுவாய், N2-பெயர்ச் செயப்படு பொருள்,  N3-பெயர்ப் பயனிலை,   V- VERB (FINITE) வினைமுற்று,V= வினையெச்சம்,(NON FINITE VERB),A-வேற்றுமை உருபேற்ற பெயர்)  மாணவர்கள் இவ்வாய்பாட்டினை நினைவு கொண்டு நன்றாக எழுதுகிறார்கள்.

      எழுவாய், பயனிலை இயைபு (திணை, பால், எண், இட இயைபு) கற்பதில் மாணவர்கள் அல்லல் படுகிறார்கள். இவற்றை நினைவு வைத்துக் கொள்வதைப் பெருஞ்சுமையாகக் கருதுகிறார்கள்.  எனவே, தொடக்கதிலேயே கற்பிக்கப்பட வேண்டிய கூறாக இது உள்ளது.  மீள் வலியுறுத்தலும் மிகுதியாகத் தேவைப்படுகிறது.  மேலும் குடும்பம், அரசாங்கம், குழு, வகுப்பு முதலியவற்றை உயர் திணையாகவே கருதி உயர் திணைப் பயனிலை முடிவுகளை வாக்கியத்தில் தருகின்றனர்.  என் குடும்பம் கடையில் சாப்பிட்டார்கள்என எழுதுகிறார்கள்.

        He has a book ‘அவனிடம் ஒரு புத்தகம் இருக்கிறது’ ,’அவன் ஒரு புத்தகம் வைத்திருக்கிறான்என்பதற்கு ஏற்ப He Has a son    என்பதையும், ’அவனிடம் ஒரு மகன் இருக்கிறான்’, ’அவன் மகன் வைத்திருக்கிறான்என எழுதுகின்றனர். Has/Have          தொடர்கள் வரும்போது மாணவர்களிடம் குழப்பம் வருகின்றது.  இங்குள்ள அஃறிணை, உயர்திணை வேறுபாட்டினைக் கூறி விளக்குதல் வேண்டும்.

      குறை வினைகளாகிய முடியும்- முடியாது, வேண்டும் - வேண்டா, தெரியும் - தெரியாது, பிடிக்கும் - பிடிக்காது, ‘ஆகியவற்றிற்கு ஆங்கிலத்தில் இருப்பது போல் தான்- தாங்கள், நீ - நீங்கள், அவன் - அவள் - அவர் - அவர்கள் - அது - அவைஎனும் சொற்களை எழுவாயாக எழுதி வாக்கியம் தருகிறார்கள் (.டு) ‘நான் தெரியும், நீ பிடிக்கும், அவன் முடியும்இங்கு ஆங்கிலம், தமிழ் வாக்கிய ;அமைப்பு வேறுபாட்டினைத் தெளிவு படுத்திக் கற்பித்தல் வேண்டும்.

      ‘‘and” என்பது இணைப்புப் பெயர்கள் பலவற்றில் ஈற்றயல் பெயருடன் மட்டும் ஆங்கிலத்தில் சேர்க்கப்படும்.  ஆனால் , தமிழில் இணைப்புப் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் உம்சேர்த்தல் வேண்டும். இதனையும் மாணவர்கள ;மறந்து விடுகிறார்கள்.  இறுதிப் பெயருடன் மட்டும் சேரக்கிறார்கள். ‘கண்ணன் இராமன் பாலுவும் வந்தார்கள்என எழுதுகிறார்கள்.  இப்போக்கு தமிழ் மாணவர்களிடமும் இருக்கக் காணலாம்.

சந்தி -

      வேற்றுமை உருபுகளைப் பெயர்களுடன் சேர்க்கும் போது ஏற்படும் மாற்றங்களை விளக்கச் சில முக்கிய சந்தி விதிகள் கற்பிக்கப் படுதல்; வேண்டும். ;உடம்படு மெய் தோன்றல், குற்றியலுகரம் கெடுதல், நெடிற்கீழ் ட், ற்ஒற்று இரட்டித்தல், தனிக்குறில் முன் ஒற்றிரட்டுதல், ‘ம்ஈற்றுச் சொற்கள் ம்கெட்டு த்பெறுதல் முதலிய சில முக்கிய விதிகள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதுமானது.  இவற்றை நினைவு வைத்துக் கொள்ள அதிகப் பயிற்சிகள் தருதல் வேண்டும்.

எழுத்து வரிவடிவம் -

      எழுத்து வரிவடிவம் கற்பிப்பதில் உகர, ஊகார, உயிர்மெய் வரிசையில் சீர்மையின்மை இருப்பதால் மாணவர்கள் தொல்லைப்படுகிறார்கள். எனவே, இந்த வரிசை எழுத அதிகப் பயிற்சி தேவைப்படுகிறது. அகர நெடுங்கணக்கு வரிசையை விட ,,வரிசையில் கற்பிப்பதே சிறந்தது.

பயிற்றுக் கருவிகள் -

      தமிழரல்லாதார்க்குத் தமிழ் பயிற்றுவதற்கேற்ற பயிற்றுக் கருவிகள்; மிகுதியாக இல்லை.  அண்ணாமலைப் பல்கலைக் கழகம், இந்திய மொழி மய்ய நிறுவனம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், இலண்டன் கீழ்த்திசை ஆப்பிரிக்கக் கல்விப் பள்ளி, ;அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் முதலியவை உருவாக்கியுள்ளன.  எனினும் சிங்கப்பூர்ச் சூழலுக்கு ஏற்பச் சில கருவிகள் உருவாக்குதல் வேண்டிய நிலைதான் உள்ளது.  மேலும் கணினி வட்டு, பல்லூடக வட்டு வழியாகப் பல பயிற்றுக் கருவிகள் உருவாக்க வேண்டியது அவசியம்.

முடிவுரை -

      சிங்கப்பூர், மலேசியா சூழலில் தமிழரல்லாதார்க்குத்  தமிழ் கற்பிப்பதில் எழும் சில சிக்கல்களை இக்கட்டுரை இரட்டை வழக்கு, எழுத்துப் பெயர்ப்பு, எழுதுதலும் பேசுதலும், உச்சரிப்பு, சொல்லியல், தொடரியல், சந்தி வரிவடிவம், பயிற்று கருவிகள் என்னும் தலைப்புகளில் பட்டியலிட்டுக் காட்ட முயன்றுள்ளது.  சில சிக்கல்களுக்குக் கடடுரையாளரின் அனுபவம் கொண்டு தீர்வுகளும் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன. இங்கு இச்சூழலில் ஆசிரியர் எதிர்நோக்கும் சிக்கல்கள் அனைத்தும ;பட்டியலிடப்படவில்லை.  தீர்வுகளும் எல்லாச் சிக்கல்களுக்கும் தரப்படவில்லை.  இவற்றை எதிரகால ஆய்வுலகம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

 

                                                உலகத் தமிழாசிரியர் மாநாடு

                                                6-8, செப்டம்பர். 2001

                  Thinnappan,SP     Some Problems and their solutions in Teaching Tamil

                             to Non-Tamils in The Proceedings of 5th International 

                             Tamil Teachers’ conference  ,Singapore Tamil Teachers’ Union,

                             6-8,September 2001. PP 68-72.

 

3 மலேசியத் தமிழ்

 

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் என்று தமிழ் வழங்கும் நாட்டின் எல்லையைப் பனம்பாரனார் என்னும் பழந்தமிழ்ப் புலவர் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கூறிச் சென்றார். ஆனால் இன்று அந்த எல்லை பன்மடங்கு விரிந்து நிற்கிறது. இந்தியாவைத் தவிர இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனேசியா, வியட்நாம், தெற்கு ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ் கயனா, பீஜி, மொரீசியஸ், மடகாஸ்கர் தீவுகள் ஆகிய உலகின் பல பாகங்களிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். உலகநாடுகள் பலவற்றிலும் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை நான்கு அல்லது ஐந்து மில்லியன் ஆகும். காலமறிந்து இடமறிந்து வாழும் கருத்துடைய தமிழர்கள், தாங்கள் வாழும் நாட்டின் சூழலுக்கேற்ப நாகரிகம் பண்பாடு நடை உடை பாவனை ஆகியவற்றிற்குப் பொருந்தத் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர். அதனால் அவர்கள் வாழ்வுக்கேற்ப அவர்கள் வழங்கும் மொழியும் அமைகின்றது. வாழ்வில் அமையும் மாற்றம் வழங்கும் மொழியிலும் தென்படுவது இயல்பே. இத்தகைய மாற்றங்களை ஆராய்வதைக் கிளைமொழியியல் (Dialechlogu) என்று மொழியியலார் கூறுவர். இந்த ஆய்வு அடிப்படையில் நம் தமிழையும் ஆராய்ந்து மலேசியத் தமிழ், சிங்கப்பூர்த் தமிழ், இலங்கைத் தமிழ், ஆப்பிரிக்கத் தமிழ், பர்மாத் தமிழ் முதலிய பலதிறத்தனவாகக் கண்டு அவற்றிடையே உள்ள வேற்றுமையில் ஒற்றுமையை அறிந்து பாராட்டலாம். இவ்வாறு ஆராய்வது தமிழின் கிளை மொழியியல் ஆய்வுக்கும் பரந்த நில அடிப்படைக் கண்ணோட்டத்தில் பெரும் பயனைத் தரும். அந்த வகையில் மலேசியத் தமிழின் சிறப்பியல்புகள் சிலவற்றை இங்கே காண்போம்.

மலேசியாவுக்கும் தமிழர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அந்தத் தொடர்பு கடாரம் கொண்ட இராஜேந்திரன் காலம் முதல் வந்த காரணத்தால் பழைமை வாய்ந்தது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கேற்பக் கடல் கடந்து தமிழர்கள் இங்கே வந்து குடியேறியவர்கள் பலர் இன்று இந்நாட்டின் விசுவாசமிக்க குடிமக்களாக விளங்குகின்றனர். இவர்களில் தோட்டத் தொழிலாளர் பலர், வாணிகம் நடத்தி வளமுடையோர் சிலர். அரசாங்க அலுவலர் அநேகர். இவர்களில் இலங்கையரும் உண்டு. இந்தியரும் உண்டு. தாய்த்தமிழின் சேய் மொழியாம் மலையாளம் பேசுவோரும் உளர். எனவே மலேசியத் தமிழில் இலங்கைத் தமிழும் இலங்கைத் தமிழில் இந்தியத் தமிழும் இணைந்திருப்பதைப் பார்க்கலாம். மலேசியாவில் தமிழர்கள் மலாய்க்காரர்களோடும் சீனர்களுடனும் நெருங்கிய நட்புறவு கொண்டு வாழ்கின்றனர். மலேசிய நாட்டின் தேசிய மொழி மலாய் மொழியாகும். இங்கு வாழ்கின்ற தமிழர்களில் பலர் பொதுவாக எல்லா இடங்களிலும் மற்ற இனத்தவருடன் மலாய் மொழியிலேயே பேசுகின்றனர். அதனால் மலாய் மொழிக் கலப்பு இங்குள்ள தமிழர்கள் பேச்சில் இருக்கக் காணலாம். படித்தவர்கள் பேச்சில் சொற்றொடர் அமைப்பில் ஆங்கிலச் செல்வாக்கும் உண்டு. செய்தித்தாள்கள், வானொலிகளில் நற்றமிழ் முழக்கம் நாள் தோறும் உண்டு.

மலேசியாவில் வாழும் தமிழர்கள் மலேசியாவில் உள்ள ஊர்ப் பெயர்களையும் இடப்பெயர்களையும் பெரும்பாலும் மாற்றாமல் அப்படி அப்படியே வழங்கினாலும் அவற்றுள் சிலவற்றைத் தமிழாக்கிப் பேசுவது நம் சிந்தையைக் கவரும் ஒன்றாகும். Nibong Tebal, Balik Pulau, Bukit Mertajam, Trolok என்ற ஊர்கள் முறையே ரத்தப்பாய்ஞ்சான், வாலப்பூர், சுங்குரும்பை, திருவிழா என்று பெயர் பெறுகின்றன. இவற்றின் மலாய் மொழிப் பெயர் பெறுகின்றன. இவற்றின் மலாய் மொழிப் பெயர்களுக்கும் தமிழ்ப் பெயர்க்கும் பொருளால் ஒன்றும் தொடர்பு இருப்பதாகத் தோன்றவில்லை. முருகன் கோயில்கள் இருக்கின்ற இடங்களான Batu Caves (கோலாலம்பூர்) Water Falls Garden (பினாங்கு) செங் (மலாக்கா) என்பன முறையே வத்துமலை, தண்ணீர்மலை, சந்நியாசிமலை சன்னாசிமலை என்று கூறப்படுகின்றன. முருகனுக்கும் மலைக்கும் உள்ள தொடர்பால் - இங்குள்ள முருகன் சிறு குன்றுகளில் கோயில் கொண்டிருப்பதால் இந்த ஊர்கள் மலை என்னும் சொல்லிறுதியைப் பெற்றன போலும். இங்கு பெரிய ஊர்களில் உள்ள சிறுபூங்காக்கள் ஆங்கிலத்தில்  Lake Garden என்று வழங்கப் பெறும். ஆனால் தமிழர்கள் இவற்றைப் பூமலை என்று தமிழாக்கம் செய்துள்ளனர்.

ங், ட் என்ற ஒலிகள் தமிழ்ச் சொற்களின் இறுதியில் வருவதில்லை. ஆனால் மலாய் மொழிச் சொற்களில் இவை இறுதியில் இடம் பெறும். அதனால் Klang, Rawang என்று ங் என்ற ஒலியில் முடியும் ஊர்ப் பெயர்கள் தமிழர்கள் பேச்சில் கிள்ளான், ரவான் என்று அமைகின்றன, ஆனால் Penang என்பது பினாங்கு என்று பெயர் பெறும். இது போன்றே தங்க நகைக்குப் பெயர் போன (Batu Bahat)) பத்துப் பஹாட் என்பதைத் தமிழர்கள் வத்துப்பார் என்று கூறுவார்கள்.

பேரா என்பது ஒரு மாநிலத்தின் பெயர். தெலுக்கான்சன் அம்மாநிலத்தின் வருங்காலச் சுல்தானான இளவரசர் வாழும் நகர். தெலுக்கான்சனையே பேரா என்று சிலர் குறிப்பிடுவதும் உண்டு. இதுபோன்றே கிட்டா மாநிலத்தின் தலைநகரான அலோர்ஸ்டாரைச் சிலர் கிட்டா என்றே வழங்குகின்றனர்.

பெரிய நகரங்களுக்கு அருகில் முக்கியமான நெடுஞ்சாலைகளில் இருக்கும் பகுதிகளை அவை இருக்கும் தொலைவின் அடிப்படையில் - மைல்களின் அடிப்படையில் பெயரிட்டு வழங்குவது மலேசியாவில் காணும் ஒரு மரபு ஆகும். அதனால் இங்குள்ள தமிழர் ஒருவரைத் தங்கள் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டால் ஈப்போ ரோடு நாலாங் கட்டையில் இருக்கிறது என்று கூறுவார். நாலாங் கட்டை, நாலாங்கல், நாலாவது மைல் என்பன எல்லாம் ஒரே பொருள் உடையவை. அவர் வாழும் பகுதி ஈப்போ ரோட்டில் கோலாம்பூரிலிருந்து நாலாவது மைலில் உள்ளது என்பது பொருள். இவ்வாறு வழங்கும் மரபு மலாய் மொழி மரபை ஒட்டி எழுந்த ஒன்று. மக்கள் வாழும் சிற்றூர்கள் (கிராமங்கள்) மலாய்மொழிச் சொல்லான Kampong என்பதன் திரிபான கம்பம் என்ற சொல்லால் வழங்கப் பெறும்.

மலேசியாவின் வளத்திற்குக் காரணம் இரப்பர் மரங்கள், இரப்பர் மரங்கள் இருக்கும் பகுதி இரப்பர் எஸ்டேட் என்று ஆங்கிலத்தில் பெயர் பெறும். ஆனால் எஸ்டேட் என்பதற்கு மலேசியத் தமிழர்கள் அழகாகத் தோட்டம் என்று தமிழாக்கம் செய்துள்ளனர். எஸ்டேட் தொழிலாளர் தோட்டத் தொழிலாளர் என்று கூறுப்படுவர். ஆனால் இந்தியத் தமிழில் தோட்டம் என்றால் வீட்டுத் தோட்டத்தைத் தான் குறிக்கும்! இந்தியத் தமிழர்கள் ஆங்கிலச் சொல்லான எஸ்டேட் என்பதை இழக்க இன்னும் மனமில்லாமல் இருக்கின்றனர். ஒவ்வொரு எஸ்டேட்டிற்கும் (தோட்டத்திற்கும்) ஒவ்வொரு தனித்தனிப் பெயர் உண்டு. அப்பெயர்களில் சில தமிழர்கள் பேச்சில் தமிழாக்கம் பெற்ற தன்மையைப் பாருங்கள். Coll Fields என்பது கரிமலை ஆயிற்று River Side பசுமலை ஆயிற்று. Midland Estate மஞ்சத் தோட்டம் என்று வழங்கப்படுகிறது.

தெருக்களின் சந்திப்பை முச்சந்தி, நாற்சந்தி, முக்கு என்று தமிழகத்தில் கூறுவர். இங்கு தொங்கல் என்று அழைக்கப் பெறும். விமானநிலையத்தை சிலர் பிளைன் திடல் என்று குறிப்பிடக் கேட்டிருக்கிறேன்.

சிறுவர் பெறும் சிறப்பு

     மலேசியத் தமிழர்கள் பேச்சில் மிகச் சிறிய பையன்களும் மரியாதையாக அழைக்கப்படும் மாண்பைக் காணலாம். என் ஆறு வயதுச் சிறுவனை இங்குள்ள தமிழ்ப்பள்ளி ஒன்றில் சேர்க்க அழைத்துச் சென்றேன். பள்ளிக்குச் சென்றதும் என் பையனை பார்த்துத் தலைமை ஆசிரியர் இவர் பெயர் என்ன ? இவர் ஊரில் என்ன படித்தார். இங்கே எப்போது வந்தார் என்று மிக மரியாதையுடன் ஆர் விகுதி போட்டுப் பேசுவதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தேன். பின்னர் என் வீட்டுக்கு வந்த மலேசிய நண்பர் சிலர் என் பையனைப் பார்த்து இவர் என்ன படிக்கிறார் நல்லவராக இருக்கிறாரே என்று பேசுவதையும் பார்த்தேன். ஆனால் இந்நாட்டில் சிறுவன் பெறும் சிறப்பைப் போலச் சிறுமி பெறுவதில்லை. காரணம் என்னவோ ? சிறுவர்களை அடிக்கப் பயன்படும் பிரம்பு ரோத்தான் என்று இந்நாட்டில் பெயர் பெறும்.

 

 

தண்ணி வேண்டுமா ?

     மலேசிய மக்கள் விருந்தோம்பும் பண்பு மிக்கவர்கள். இங்கு ஒருவர் மற்றவர் இல்லத்திற்குச் சென்றதும் வீட்டுக்காரர் அவரை வரவேற்றவுடனே என்ன தண்ணீ(ர்) சாப்பிடுகிறீர்கள் ? என்று கேட்பார். மலேசியத் தமிழில் தண்ணீ(ர்) என்பது பானத்தைக் (Drink) குறிப்பதாகும். இது குளிர்ந்த பானமாகவோ சூடான பானமாகவோ இருக்கலாம். அல்லது போதை தருவதாகவும் இருக்கலாம். நான் இந்நாட்டிற்கு வந்ததும் எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. நான் ஒரு நாள் கடைத்தெருவில் என் ஊர் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் என்னை கண்டதும் அன்புடன் அளவளாவிவிட்டு அருகிலிருந்த சீனர் சிற்றுண்டிச் சாலை ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். என்ன சாப்பிடுறீங்கள் ? கோப்பி, கோப்பி ஒ, கோப்பி சீ, தே சீ இவற்றில் என்ன வேண்டும் என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. காப்பியைக் கோப்பி என்றும் (லாரியை லோரி என்றும்) கூறவதைக் கவனித்துள்ளேன். ஆனால் மற்றவை பற்றி ஒன்றும் விளங்கவில்லை, என் நண்பரிடம் விளக்கம் கேட்டேன். அவர் கோப்பி ஓ என்றால் சீனி, பாலில்லாத காப்பி (வரக் காப்பி) என்றும் கோப்பி சீ என்றால் சீனியில்லாத தண்ணிப்பால் காப்பி என்றும் கோப்பி என்றால் சீனி, டின்பால், உள்ள காப்பி என்றும் தேசீ என்றால் தண்ணிப்பாலில் கலந்த டீ என்றும் விளக்கம் தந்தார். இந்நாட்டில் சென்டோல் என்ற ஒரு குளிர்ந்த பானம் உண்டு. பெரும்பாலும் அதனைத் தமிழர்கள் தான் தயார் செய்து தள்ளுவண்டிகளில் விற்கிறார்கள்.

பசியாறியாச்சா ?

     காலை உணவு நாஸ்தா என்று சென்னைப் பேச்சில் கூறப் பெறும். மலேசியாவில் தமிழர்கள் காலை உணவு சாப்பிட்டாயிற்றா ? என்பதற்கு பதில் பசியாறியாச்சா ? என்று கேட்பார்கள், பசியாறுதல் Break Fast என்பதைக் குறிப்பிடும் வினைச் சொல்லாகும். காலையில் பெரும்பாலோர் சாப்பிடுவது (Bread)) பிரட் தான். இதை ரொட்டி என்றும் வறுத்தவற்றை (Biscuits) பிஸ்கட் என்றும் கூறுகிறார்கள். இவை தமிழகத்தில் முறையே பன் என்றும் ரொட்டி என்றும் வழங்கப் பெறும். இடியாப்பத்திற்கு மலேசியாத் தமிழர் தந்த பெயர் என்ன தெரியுமா ? புட்டு மாயம். கடலையை கச்சான் என்றே இங்குள்ள தமிழர்கள் கூறுவார்கள். கச்சானில் பலவகை உண்டு. அவற்றை ஆங்காங்கே விற்பவர்கள் பெரும்பாலும் தமிழர்களே. மீ, மீகூன், மீகோரிங், குப்மீ, ரோஜா, குவைத்யூ, கொக்கோய் முதலியன இங்குள்ள தமிழர்கள் விரும்பி உண்ணும் இந்நாட்டு உணவுப் பொருள்களின் பெயர்கள் ஆகும்.

பசாருக்குப் போகிறாயா ?

     மலேசியத் தமிழர்கள் பேச்சில் மார்க்கெட் அல்லது சந்தை பசார் (Pasar) என்றே கூறப்படுகிறது. பசாருக்குப் போகிறாயா ? பசாருக்குப் போக வேண்டும் ? என்ற சொற்றொடர்கள் சாதாரணமாகப் பேசப்படுவதைக் காணலாம். மார்க்கெட் என்பதற்கு ஏற்ற தமிழ்ச்சொல் பசார் எனறே மாணவர்கள் பலர் எண்ணும் அளவுக்கு இது பேச்சில் இடம் பெற்றுள்ளது. பசாரில் காய்கறி நிறுவைகளில் கட்டி என்பது ஒன்று. வெண்டைக்காய் கட்டி என்ன விலை ? என்று கேட்பது தான் வழக்கம். பயிற்றைமுளை, சீஸன் பாகற்காய் முதலிய காய்கறிகளும் கங்கூன் கீரை, கடுகுக் கீரை, லட்டுஸ் கீரை முதலிய கீரை வகைகளும், டுரியான் ரம்புத்தான், சிக்கு, டொக்கு, லய்ச்சி முதலிய பழங்களும் மலேசியாவுக்கு உரியவை. இவை தமிழர்கள் பேச்சில் அப்படியே இடம் பெறுகின்றன. மாத்தா கூச்சிங், ரம்புத்தான் என்று மலாய் மொழியில் வழங்கும் பழப் பெயர்களை பூனைக்கண்ணுப் பழம், மயிர் முடிச்சான் பழம் என்றும் மொழி பெயர்த்துக் கூறுவதும் உண்டு. தண்ணீர் விட்டான் கிழங்கு என்று ஒரு கிழங்கு இங்குண்டு. தண்ணீர் தாகத்தைத் தீர்க்கக் கூடியது. பயிற்ற மாவினால் செய்யப்படும் ஒரு பொருள் தவ்வு என்பது. மலாய் மொழியில் பொதுவாக காய்கறியை குறிக்கும் சாயோர் (Sayor)  என்பது தமிழர்கள் பேச்சில் ஒருவகைக் கீரையை மட்டுமே உணர்த்துவதாக உள்ளது. இறைச்சி வகையில் தமிழகத்தில் உள்ள வெள்ளாட்டுக் கறியை இங்குள்ள தமிழர்கள் நாட்டாட்டுக் கறி என்று கூறி இங்கு அதிகமாகச் செலவழியும் ஆஸ்திரேலியா ஆட்டுக்கறியினின்று வேறுபடுத்துகின்றனர். தமிழகத்தில் இறால், ராலு, ராட்டு என்று கூறப்படும் மீன் (Prawns) இங்கு ஊடான் என்று பெயர் பெறுகிறது.

சொந்தக் காடியா ? சேவாக் காடியா ?

     மலேசியத் தமிழர் பேச்சில் சர்வ சாதாரணமாக அடிபடும் சொல் காடி என்பது. இது காரைக் (Car) குறிக்கும் ! இங்கு தமிழர்கள் யாரும் கார் என்று சொல்வதில்லை, காடி என்றே சொல்கிறார்கள். ஏன், மாணவர்கள் சிலர் மொழி பெயர்ப்பில் கார் என்பதற்குக் காடி என்றே எழுதினர். டாக்சிக் கார் சேவாக்காடி என்று வழங்கப் பெறும், சேவா என்றால் வாடகை என்று பொருள். இந்த வீட்டிற்குச் சேவா 100 வெள்ளி என்று பேசும் தொடரில் இப்பொருள் நன்கு விளங்கும். சொந்த வீடு, சொந்தக் காடி, சேவா வீடு, சேவாக் காடி என்ற சொற்களையும் கேட்கலாம். உங்கள் காடி எவ்வளவு மைல் கொடுக்குது ? என்று கேட்டால் உங்கள் கார் ஒரு காலன் பெட்ரோலுக்கு எத்தனை மைல் போகிறது என்று பொருளாகும். இங்கு பெட்ரோல் என்பதைப் பேச்சில் எண்ணெய் என்று வழங்குகின்றனர். பயன்படுத்தலைப் பாவித்தல் என்று சொல்கிறார்கள். இந்தக் காடியை எவ்வளவு நாள் பாவித்தீர்கள் ? என்ற தொடரில் இதன் பொருள் விளங்கும்.

அல்லூறும் அத்தாப்பும்

     வீட்டின் மேற்கூரை தமிழகத்தில் தென்னை ஒலையால் வேயப்படும், அல்லது பனை ஒலையால் மூடப்படும். ஆனால், இங்கு அத்தாப்பு என்று கூறப்படும் செடி வகையால் முடையப்படுகிறது. அதனால் இங்கு தென்னங்கீற்றுக்குப் பதில் அத்தாப்பு என்ற ஒன்றாலேயே கூரைகளை வேய்கின்றனர். கொட்டகை கட்டுகின்றனர். கக்கூசைக் சாமான்கூடு என்றும், சாக்கடையை அல்லூறு என்றும் கூறுவதை இங்கு தான் நாம் கேட்க முடியும். சுக்கை என்பது வரிக்குரிய பெயர். சுக்கை பிந்து என்றால் வீட்டுவரி, வீடு மெழுக வேண்டும் என்பதை இங்குள்ள பெண்கள் வீடு துடைக்க வேண்டும் என்றே சொல்கிறார்கள். வீட்டுச் சாமான்களில் குவாலி என்பது இரும்புச் சட்டியையும் மங்கு என்பது கிண்ணத்தையும் வக்குன் (பக்குள்) என்பது கூடையையும் குறிக்கும்.

வெள்ளியும் காசும் வேண்டுமா ?

     மலேசியாவின் நாணயத்தின் பெயர் ஆங்கிலத்தில் டாலர், மலாய் மொழியில் றிங்கி(ட்), தமிழில் வெள்ளி, 100 சென் கொண்டது ஒரு வெள்ளி, சென், காசு என்று வழங்கப் பெறுகிறது. எனவே, மலேசியத் தமிழர் வாக்கில் வெள்ளியும் காசும் வேண்டுமளவுக்கு நிறையப் புழங்குகின்றன. ரூபாய் என்பதற்கு ரூ. என்று சுருக்கமாக எழுதுவது போலச் சிலர் றிங்கி என்பதற்கு றீ என்று சுருக்கமாக எழுதுகின்றனர்.

என் நண்பர் ஒருவர் என்னிடம் வந்து நான் இன்று பாசாக் கடைக்குப் போய்விட்டு வங்சாக் கடைக்குப் போகவேண்டும் கூட வருகிறீர்களா ? என்று கேட்டார். இவர் சொல்லும் கடைகள் புதுக்கடைகளாக இருக்கின்றனவே! போய்ப் பார்ப்போமே ? என்று எண்ணிக் கொண்டு அங்கு விற்கும் சாமான்களை வாங்கும் ஆசையோடு பத்துவெள்ளி எடுத்து வரட்டுமா ? என்றேன். ஏன் என்றார். அங்கு விற்கும் சாமான்களை வாங்கத்தான் என்றேன். சாமான்கள் வாங்கவா ? என்று கேட்டுவிட்டு என்னுடன் வந்தார். இருவரும் ஒரு கடைக்கு முதலில் சென்றோம். அங்கு அவர் தன் மனைவியின் நகை ஒன்றை அடகு வைத்துப் பணம் வாங்கினார். வாங்கிய பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு மளிகைக் கடைக்குச் சென்றோம். கடைக்காரரிடம் கொடுத்துலிட்டு என் இல்லம் செல்லும் பாதையை நோக்கித் திரும்பினோம். அவர் ஏதோ நினைவு வந்தவர் போலத் தாங்கள் சாமான் ஒன்றும் வாங்கவில்லையே என்று கேட்டார். மளிகைக் கடையில் எனக்கு ஒன்றும் வாங்க வேண்டியதில்லை என்று சொன்னேன். வீட்டில் வாங்க வேண்டும் என்று சொல்லிப் பணம் எடுத்து வந்தீர்களே என்று திரும்பவும் கேட்டார். நான் பாசாக் கடையிலும் வங்சாக் கடையிலும் தான் வாங்க வேண்டும். வாருங்கள் அங்கு போவோம் என்றேன். உடனே அவர் சிரித்துக் கொண்டு நாம் அந்த இரண்டு கடைகளுக்கும் போய் வந்து விட்டோம் என்றார், பின்னர் தான் இங்குள்ள தமிழர் பேச்சில் பாசாக்கடை, வங்சாக் கடை என்பன நகை அடகு பிடிக்கும் கடை, மளிகைக் கடை ஆகியவற்றை உணர்த்தும் சொற்கள் என்பதை அறிந்து கோண்டேன். பொதுவாகக் கடையில் பொட்டலம் கட்டிக் கொடு என்று கேட்பதற்குப் பதில் பொங்சு பண்ணிக் கொடு என்று சொல்வார்கள். பொங்சு என்றால் பொட்டலம் என்பது இவர்கள் பேச்சில் உள்ள பொருள். இங்குள்ள முகத்தலளவைச் சொற்கள், சிப்பு, கந்தம் என்பன. நீட்டளவையில் கெஜம் என்பது ஏலா என்று பெயர் பெறும். துணிக்கடைகளில் ஏலா அடிப்படையில் தான் துணிகளை அளந்து வெட்டித் தருவார்கள். பொட்டலங்களைக் கட்டுவதற்கு இங்கு சணல் கயிறு பயன்படுத்தப் பெறுவதில்லை, Rubber Band தான் உபயோகிப்பார்கள். அதனைத் தமிழர்கள் கித்தா என்று கூறுவர். கித்தா என்றால் பொதுவாக மலாய் மொழியில் ரப்பரைக் குறிக்கும். கித்தாக்காடு என்று ரப்பர் தோட்டத்தைச் சிலர் சுட்டுவதும் உண்டு.

துக்கானும் கிராணியும் தொழிலாளர்கள்

     மலாய் மொழிச் சொல்லான துக்கான் (Tukang) என்பது தொழில் வல்லாரை உணர்த்தும் தமிழர்கள் இந்தப் பொதுச் சொல்லைத் துக்கான் எனத் திரித்து தச்சரைக் குறிப்பிடப் பயன்படுத்துகின்றனர். தங்க நகை செய்யும் சீனரைத் தங்கத் துக்கான் என்று அழைப்பார்கள். குமாஸ்தா (கிளார்க்) என்பவரை இங்குள்ளவர்கள் கிராணி என்றே அழைக்கின்றார்கள். ஏங்ஹக் இப்ங்ழ்ந் தலைமைக் கிராணி என்று சொல்லப் பெறுவார். மரியாதைக்காக ஆர் விகுதி சேர்த்துக் கிராணியார் என்றும் வழங்குவர். வீடு அல்லது வணிக நிலையங்களைக் காவல் செய்யும் காவலாளி (Watch-Man)............ தமிழர் பேச்சில் ஜாகா என்றே பெயர் பெறுவார்.

ஈய லம்பம் செல்கிறீர்களா ?

மலேசியாவின் மற்றொரு முக்கியமான மூலப் பொருள் ஈயம் (Tin) ஆகும். இந்நாட்டில் ஈயச் சுரங்கங்கள் பல உள்ளன. ஈயச் சுரங்கத்தை ஈய லம்பம் என்றும் ஈயச்சுரங்க உரிமையாளரை லம்பத்துக்காரன் என்றும் கூறுவார்கள். ஈயம் எடுக்கப் பயன்படும் கருவியான Dredge என்பது ஈயக் கப்பல் என்று வழங்கப் பெறும். ஈயம் எடுப்பதை தோண்டுவதைக் குறிப்பிட அந்த மைனிங் (சுரங்கம்) ஆடாமல் இருக்கிறது' என்று சொல்வார்கள். எண்ணெய் ஆட்டப்படுவது போல இங்கு ஈயம் ஆட்டப்படுமா? அல்லது ஆடுமா? என்று தெரியவில்லை.

சூராவும் கிராண்டும்

இரசீது, கடிதம், சர்டிபிகேட் ஆகியவற்றைக் குறிப்பிட மலாய் மொழிச் சொல்லான சூரா (Surat)  என்பது தான் இங்குள்ள தமிழர்கள் பேச்சில் மிகுதியாக ஆளப் பெறுகின்றது. அர்ச்சனைக்குச் சூரா வாங்க வேண்டும் ?' என்று கோயிலில் கூறினால்  அர்ச்சனைச் சீட்டு என்று பொருள். பாங்கில் பணம் கட்டினேன். சூரா தரவில்லை' என்றால் ரசீது என்று பொருள். பிரஜா உரிமை எடுக்க வேண்டும் பிறந்த சூரா வேண்டுமே' என்றால் பர்த் சர்டிபிகேட் என்று பொருள். இன்று எனக்குச் சூரா எதுவும் வரவில்லை என்று சொன்னால் கடிதம் என்று பொருள் இவ்வாறு சூரா சூழலுக்கேற்றவாறு பல பொருள் கொடுக்கும் ஒரு சொல்லாகும். வீடு, நிலம், தோட்டம் முதலிய சொத்துக்களின் விற்பனை உரிமை பற்றிய ஒன்றைப் பத்திரம் (Records) என்று தமிழகத்தில் கூறுவார்கள். அதனை இங்கே கிராண்ட்' என்று தான் சொல்வார்கள். கிராண்ட்' இருந்தால் கடன் தருகிறேன், என்ற தொடரில் கிராண்ட் பத்திரத்தை உணர்த்தும்.

 

பால் வெட்டும் பழ வெட்டும்

மலேசியாவின் வருங்காலப் பொருளாதார வளத்திற்கு அடிப்படையாக அமையப் போவது ஞண்ப் டஹப்ம் ஆகும். இம்மரங்களைத் தமிழர்கள் அழகாகச் செம்பனை என்று வழங்குகிறார்கள். ஈச்சமரம் போன்றது இது. இதன் பழக்குலை ஈச்சங் குலையைப் போலவே இருக்கும், இப்பழங்களிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். ரப்பர் மரத்திலிருந்து பால் எடுப்பதை பால்வெட்டு (Tapping) என்று சொல்வார்கள்.

அந்த அடிப்படையிலேயே செம்பனையிலிருந்து பழக்குலைகளை வெட்டியெடுத்து வருவதைப் பழவெட்டு' என்று சொல்கிறார்கள். தோட்டத் தொழிலாளர் பேசும் பேச்சில் மட்டுமே எத்தனையோ புதிய புதிய சொற்களையும் ஒலியமைப்பையும் சொற்றொடர் மாற்றங்களையும் காண முடியும். அது தனிப்பட ஆராய வேண்டிய ஒன்றாகும். இருப்பினும் அவர்கள் பேச்சில் வழங்கும் சில சொற்களைக் கீழே கொடுத்துள்ளேன். அவற்றின் பொருள் அடைப்பானில் தரப்பட்டுள்ளது. பாஜு (சட்டை) சம்பான் (படகு) சிலுவாரு (கால்சட்டை) பாராங் (கத்தி, அரிவாள்) கீலா (பைத்தியம்)

கிட்டங்கித் தமிழ் கேட்கிறீர்களா ?

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வட்டித் தொழில் செய்து கொண்டு வாழும் வீடுகள் கிட்டங்கி என்று பெயர் பெறும். கிடங்கு Godown என்பனவற்றுடன் தொடர்புடையது இச்சொல் என்பர் அறிஞர். மலேசியாவில் உள்ள பெரு நகரங்கள் ஒவ்வொன்றிலும் இந்தக் கிட்டங்கிகள் பெரும்பாலும் ஒரே தெருவில் இருக்கும். ஒவ்வொரு கிட்டங்கியிலும் பலர் தனித் தனிப் பெட்டிகளை வைத்துக் கொண்டு சேர்ந்திருந்து தொழில் செய்யும் சிறப்பை நாம் இங்கு காணலாம். கிட்டங்கிகளில் பெட்டிகள் இருக்கும் இடம் பெட்டியடி ஆகும். ஒரு கடையைப் பொறுப்புடன் கவனிக்கும் நபர் மேலாள் (ஏஜண்டு) என்று பெயர் பெறுவார். அவர்கட்கு அடுத்த நிலையில் இருப்பவர் அடுத்தாள்' ஆவார். ஒரு கிட்டங்கியிலுள்ள அனைவருக்குமுரிய பொதுவான அலுவல்களைப் பார்க்க ஒரு வேலையாள் இருப்பார். அவருக்குக் கூட்டு முறை என்று பெயர். கிட்டங்கியைக் கூட்டிச் சுத்தம் செய்வதும் அவர் அலுவல்களில் ஒன்று. கிட்டங்கியிலுள்ள அனைவரும் கூட்டாகச் சேர்ந்து அவருக்கு ஊதியம் கொடுப்பது வழக்கம். வட்டியைப் பூஙா என்றும் வங்கியில் பணம் செலுத்துவதை (Remittance)சமால் போடுதல் (பாங்கியில் சமால் போட்டுவா) என்றும் கூறுவார்கள். மேலும் இவர்கள் இங்குள்ள மெர்க்கண்டைல் பாங்க் (Mercantile Bank) என்பதை மார்க்கண்டன் வங்கி என்றும், , Hongkong & Shanghai Bank என்பதை உங்கம் செங்காய் வங்கி என்றும் (விளையாட்டாக உங்க எங்க பாங்க்) என்றும் கணக்குகளில் எழுதுவது உண்டு. கடைகளில் போனஸ் பெறுவதைச் சாமானுக்காகக் கொடுக்கும் பணம் என்று சொல்கிறார்கள். செருப்பை நடையன் என்று இவர்கள் சொல்வதும் உண்டு.

ஆள் மத்தியாதலும் கோஸா எடுத்தலும்

ஒரு நாள் என் நண்பர் ஒருவர் என்னிடம் விரைந்து வந்து ஜாலான் பங்சாரில் (பங்சார் ரோடு) ஒரு பெரிய காடி விபத்து இரண்டு ஆள் மத்தி. ஓர் ஆளுக்குக் காயம்' என்று பதட்டமுடன் கூறினார். மத்தி என்றால் என்ன ? என்று நான் அமைதியாக கேட்டேன். மத்தி என்றால் சாவு, இறப்பு என்று அவர் சொன்னதும் தான் அந்த நிகழ்ச்சியின் துன்பத்தை உணர முடிந்தது. அவன் மத்தியாயிட்டான் என்று பலர் கூறப் பின்னர் கேட்டேன். ஒருவர் இறந்த பின்னர் அவருக்குரிய சொத்துவரிகளைக் கட்டி விட்டு வாரிசு சர்டிபிகேட் எடுக்க வேண்டும் என்பதை இங்கு கோஸா எடுத்தல்' என்று கூறுவார்கள்.

வீடு கோஸமா ?

வீடு கோஸமா இருக்கிறதா?' என்று கேட்டால் வீடு காலியாக இருக்கிறதா என்று பொருளாகும். கோஸம் என்பது பொதுவாக காலி (உம்ல்ற்ஹ்) என்பதைக் குறிக்கும். காடி நிறுத்த இடம் கோஸமாக இல்லை என்பதிலும் அதே பொருளே, ஆனால் பூஜ்யத்தைக் குறிக்கவும் வழங்குவதைப் பார்க்கலாம். கோஸம் என்பது மலாய்ச் சொல்லாகும். இது போன்றே மலாய் மொழிச் சொற்களான சாலா, பஹுஸ் என்பன முறையே தவறு, மிக நன்றாக இருக்கிறது என்னும் பொருளில் ஆளப்படுகின்றன.

உபகாரம் வேண்டுமா ?

மலேசியத் தமிழர்கள் நன்றி உணர்வு மிகுதியாக உடையவர்கள். எந்த உதவியைப் பெற்றாலும் மறக்காமல் உதவி செய்தவரை நோக்கி ரொம்ப உபகாரம்' என்று கூறுவார்கள். (Thank You) என்பது இங்கு உபகாரமாகின்றது. இது யாழ்ப்பாணத் தமிழின் செல்வாக்கு என்று கூறலாம்.

 

 

படமேடையில் விளையாடும் படம்

சினிமாத் தியேட்டரைப் படமேடை' என்ற பழகு தமிழ்ச் சொல்லால் வழங்கும் பண்பு மலேசியத் தமிழுக்குரிய ஒன்று, இந்தியத் தமிழர் அந்தத் தியேட்டரில் இன்று என்னபடம் நடக்கிறது ? அல்லது ஓடுகிறது' என்று கேட்பார். ஆனால் மலேசியத் தமிழரோ அந்தப் படமேடையில் இன்று என்ன படம் விளையாடுகிறது ?' என்று வினவுவார். ஆங்கிலத்தில் நாடகம் ஒரு Play ஆகும். மலேசியருக்குத் திரைப்படமும் ஒரு (Play) விளையாட்டாகிறது.

பிள்ளைகளை எடுத்து வர வேண்டும்

என்னுடன் பணியாற்றும் தமிழறிஞர் ஒருவர் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது நாள்தோறும் நான் தான் காடியில் பள்ளிக்குச் சென்று என் பிள்ளைகளை எடுத்து வர வேண்டும்' என்று குறிப்பிட்டார். பிள்ளைகளைக் கூட்டி வர வேண்டும் அல்லது அழைத்து வர வேண்டும் என்ற தொடரைக் கேட்டுப் பழகிப் போன எனக்கு அவர் சொன்ன தொடர் வியப்பை அளித்தது. பின்னர் I have to take my children என்பதன் மொழி பெயர்ப்பு அது என்பதை உணர்ந்தேன்.

காடியை வெட்டுங்கள்

ஒரு நாள் என்னுடன் என் நண்பர் காரில் வந்தார். புதுப்பழக்கமாக இருந்த காரணத்தால் நான் காரை மெதுவாக ஓட்டிக் கொண்டு சென்றேன். அவர் முன்னே சென்ற காரைக் காட்டி நீங்கள் அந்தக் காடியை வெட்டுங்கள்என்று சொன்னார். ‘என்னிடம் கத்தி இல்லையே காடியை வெட்டஎன்றேன். அவர் சிரித்து விட்டார். அந்தக் காரை முந்திக்கொண்டு (Overtake) செல்லுங்கள் என்று சொன்னேன் என்றார். மேலும் உங்கள் சம்பளத்தில் காடிக்காக மாதம் எவ்வளவு வெட்டுகிறான்?' என்று கேட்கும் தொடரில் வெட்டுதல் என்பது பிடித்தம் செய்தல் (Deduction) என்ற பொருள் தருகிறது.

 

ஆள் வெளியாயிட்டார்

அருகில் உள்ள ஊரில் வாழும் என் நண்பனைக் காண ஒருநாள் சென்றேன். வீட்டு வாசற்படியில் அவர் மனைவியார் நின்றார். அந்த அம்மையாரைப் பார்த்து அவர் இருக்கிறாரா என்று கேட்டேன். உடனே அந்த அம்மையார் அவர் வெளியாயிட்டாரு’ (வெளிக்கிட்டாரு) என்று சொன்னார். என்னுடன் வந்த இவ்வூர் அன்பர் ஒருவர் He is out என்பதன் நேரடித் தமிழாக்கத்தின் விளைவு என்று விளக்கினார்.

என்னென்ன பாடம் செய்கிறீர்கள் ?

என்னிடம் சென்ற ஆண்டு பயின்ற மாணவர் ஒருவர் தனக்கு வேலை கிடைத்த செய்தியைச் சொல்ல வந்தார். அவர் என்னிடம் இந்த ஆண்டு நீங்கள் என்னென்ன பாடம் செய்கிறீர்கள் ? என்று கேட்டார். What are the units (subjects) you are doing this year ? என்ற தொடரின் செல்வாக்கு அவர் வினாவில் இருப்பதை உணரலாம்.

தேர்வு எழுதிய மாணவர் ஒருவனைப் பார்த்து பரீட்சை நன்றாகச் செய்திருக்கிறாயா ?' என்று வினவுவதும் Have you done the exam well என்பதன் மொழி பெயர்ப்புத் தான்.

செய்தித் தாளில் செந்தமிழ்

மலைநாட்டு இலக்கியங்களை வளர்க்கும் எழில்மிகுப் பண்ணைகளாக இருப்பவை செய்தித்தாள்களும் வானொலியும் தான். இந்த இலக்கியத் தமிழில் இருக்கும் சிறப்பியல்புகளை ஆராய்வதும் இன்பம் பயக்கும் முயற்சியே ஆகும். மேலும் மலேசிய வானொலிச் செய்தி அறிக்கைகள், செய்தித்தாள்கள் ஆங்கிலச் சொற்களுக்கேற்ற செந்தமிழ்ச் சொற்களைக் கையாளுகின்றன.

இதோ சில எடுத்துக்காட்டுகள் :

Parliament - நாடாளுமன்றம்

Consumers - பயனீட்டாளர்கள்

Representatives Delegates - பேராளர்கள்

Understanding - புரிந்துணர்வு

Discussion - கலந்துரையாடல்

Fragmentation - துண்டாடல்

Space Travel என்பதை பரவெளிப் பயணம் என்றும் நல்ஹஸ்ரீங் இழ்ஹச்ற் என்பதைப் பரவெளிக் கப்பல் என்றும் Spacemen என்பதைப் பரவெளி வீரர்கள் அல்லது பரவெளியர்கள் அல்லது அண்டசாரதிகள் என்றும் மொழிபெயர்ப்புச் செய்து நாள்தோறும் நாளிதழ்களில்/வானொலியில் எடுத்தாளுகின்றனர். தொடரமைப்பிலும் இங்கு சில மாற்றங்கள் உண்டு. விழாவைத் தொடக்கி வைத்தார் என்பதைச் சுருக்கமாக விழாவைத் தொடக்கினார் என்றே எழுதுகின்றனர். இந்தியச் செய்தித்தாள்களில் முடிவு செய்யப்பட்டது அல்லது தீர்மானிக்கப் பெற்றது என்று அமையும் தொடர்களை இந்நாட்டுச் செய்தித்தாள் முடிவு எடுக்கப்பட்டது. (The decision was taken) என்றே எழுதுகின்றன.

கொள்வினையும் கொடுப்பனையும்

மலாய் மொழிச் சொற்கள் பல மலேசியத் தமிழர் பேச்சில் எங்ஙனம் இரண்டறக் கலந்து ஊடாடி விளங்குகின்றன என்ற செய்தி இதுவரை கண்ட பகுதிகளால் இனிது விளங்கும். இது போலவே மலாய் மொழியில் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் கலந்து விளங்குவதையும் காண முடியும். அப்பா, அம்மா, அக்கா, கட்டில், கடை, கழுதை, கஞ்சி, காடு, கரி, கோயில், கொத்துமல்லி, சதை, சுருட்டு, சூரை, செருப்பு, வடை, வாடை, வெண்டி, வெடி என்று அவற்றை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வாறு தமிழன்னை மலேசியாவில் கொள்வினையும் கொடுப்பனையும் சிறிது வீச அழகுடன் கொலுவீற்றிருக்கிறாள். இதுவே மலேசியத் தமிழின் மாண்பு !

 

1 கருத்து:

  1. பதிவுக்கு நன்றி..
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷ தசபந

    பதிலளிநீக்கு