வெள்ளி, 2 மே, 2014

இலக்கியம் - 3


 

சிலப்பதிகாரத்தில் சிவகிருஷ்ணர்

 

சிலப்பதிகாரம் செந்தமிழில் தோன்றிய முதல் காப்பியம்.  இளங்கோவடிகளால் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப் பெற்ற நூல்.  ஐம்பெருங்காப்பியங்களில் முதலாவதாக வைத்துப் போற்றப்படும் சிறப்புடையது.  பூம்புகாரில் தோன்றிய கோவலன், கண்ணகி வாழ்க்கை வரலாற்றைப் பாடுபொருளாகக் கொண்டது.  அறத்தின் வலிமை, ஊழின் ஆற்றல், கற்பின் பெருமை ஆகியவற்றை வலியுறுத்துவதே இந்நூலின் நோக்கமாகும்.  குடிமக்கள் காப்பியம், தமிழ்நாட்டின் தேசிய காப்பியம், வரலாற்றுக் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், பெண்ணின் பெருமை பேசும் காப்பியம், சமயப் பொறையைக் கூறும் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படும் இந்நூலைப் பாரதியார் "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்னும் மணியாரம் படைத்த தமிழ்நாடு" என்று பாராட்டிப் பாடுகிறார்.  இந்நூலில் இடம்பெறும் சிவகிருஷ்ணரைப் பற்றிச் சிறிது விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

பெரியோனும் நெடியோனும்

 

சிவன்/சிவம் என்பது தமிழர் கண்ட இருபெருஞ் சமய நெறிகளில் ஒன்றாகிய சைவ சமயம் போற்றும் முழுமுதற் கடவுளின் பெயர்.  "சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்" என்று சைவ அடியார் திருநாவுக்கரசர் இதனைக் கூறுவார்.  கிருஷ்ணர் என்பதோ தமிழரின் மற்றொரு சமய நெறியாகிய வைஷ்ணவ சமயம் போற்றும் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகும்.  சிலப்பதிகாரம், பூம்புகார் நகரக் கோயில்களை இந்திரவிழாக் கொண்டாடும் சூழ்நிலையில் பட்டியலிடுகிறது.  அப்போது

            "பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்

            வால்வளை மேனி வாலியோன் கோயிலும்

            நீலமேனி நெடியோன் கோயிலும்

            மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்" (இந்திரவிழா 169-17)

எனக் கூறுகிறது.  இங்கு பிறவா யாக்கைப் பெரியோன் என்பது உயிரியல்பாகிய, பிறப்பு இறப்பு இல்லாத சிவனை - தாய் வயிற்றிற் பிறவாத உடலை உடைய சிவனைக் குறிப்பிடுகிறது.  இது சைவநெறி கூறும் சிவனின் சிறப்புத் தன்மையை - அதாவது "தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன்" என்று திருவாசகம் கூறும் கூற்றை - பிறவா இறவாத் தன்மையைப் புலப்படுத்துகிறது.  அறுமுகச் செவ்வேள் கோயில் முருகன் கோயில்.  அடுத்து வால்வளை மேனி வாலியோன் என்பது வெண்சங்கு போன்ற நிறத்தை உடைய பலதேவன் கோயிலைக் குறிக்கிறது.  பலதேவன் என்பவர் கிருஷ்ணனின் தமையனான பலராமன்.  இதுவும் திருமால் அவதாரங்களில் ஒன்று.  அடுத்து வரும் "நீலமேனி நெடியோன் கோயில்" என்பது நீலமணி போலும் நிறத்தையுடைய நெடியமால் கோயில் என்பதைக் குறிக்கும்.  எனினும் இங்கு பலராமன் கோயிலை அடுத்துக் குறிப்பிடுவதால் இந்தக் கோயிலைக் கிருஷ்ணன் / கண்ணன் கோயில் எனவும் கருதலாம்.  எனவே சிலப்பதிகார காலத்தில் பலராமன், கண்ணன் போன்ற அவதார மூர்த்திகளுக்கும் கோயில்கள் இருந்ததை அறிய முடிகிறது.  மேலும் திருமால், அறம் தாழ்ந்து மறம் ஓங்கி நிற்கும்போது அவ்வப்போது அறம் தழைக்க அவதாரம் எடுக்கும் எளிவந்த இயல்பினையும் இது காட்டுகிறது எனக் கூறலாம்.

 

ஆடலில்

 

இந்திரவிழாவின் இறுதியில் கோவலன் காதற்கிழத்தியாகிய மாதவி என்னும் நாட்டிய நங்கை ஆடிய பதினோராடல்களில் சிவபெருமான் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம் ஆகிய இரண்டும், கிருஷ்ணன் ஆடிய ஓராடலும் சிலப்பதிகாரத்தில் கடலாடுகாதையில் குறிக்கப்பெற்றுள்ளன.  இந்த ஆடல்களை ஆடுமுன் மாதவி மாயோன் பாணியாகிய திருமால் பாடல் ஒன்றினைப் பாடியதாகவும் கூறப்படுகிறது.  சிவபெருமான் ஆடிய ஆடல் குறிப்பு இதோ!

            "பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்

            திரிபுரம் எரியத் தேவர் வேண்ட

            எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப

            இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடல்" (கடலாடு காதை 39-43).

பைரவி ஆடிய சுடுகாட்டில் திரிபுரமாகிய மூன்று கோட்டைகளை எரித்திடுமாறு தேவர்கள் சிவபெருமானை வேண்ட, வடவைப் பெருந்தீயாகிய அம்பு அவன் கட்டளையை நிறைவேற்ற, உமை அம்மை ஒருபக்கமாக நிற்க, தேவர் யாவரிலும் உயர்ந்த சிவபெருமான் ஆடிய கொடுமை மிகு நடனமே கொடுகொட்டியாகும்.  இங்கு மூன்று கோட்டை என்பது உயிர் (ஆன்மா), வீடு பெறத் தடையாக உள்ள ஆணவம், கன்மம், மாயை என்பனவற்றைக் குறிப்பிடுவதாகத் திருமூலர் கூறுவார்.  சிவபெருமான் திரிபுரம் எரித்த கதையே சிவபெருமான் தேர் ஊர்வலமாகும்.  சிவபெருமான் தேரில் வரும்போது நான்கு வேதங்களாகிய குதிரைகளை ஓட்டும் ஓட்டுநராகப் பிரமன் - நான்முகன் காணும்படி சிவபெருமான் ஆடிய ஆடலே பாண்டரங்கமாகும்.  இதனைச் சிலப்பதிகாரம்

            "தேர்முன் நின்ற திசைமுகன் காணப்

            பாரதி ஆடிய வியன் பாண்டரங்கம்" (கடலாடு காதை 44-45)

எனக் குறிப்பிடுகிறது.  பாரதி என்பது பாரதி வடிவாய - சக்தி வடிவாய சிவனைக் குறிப்பிடுகிறது.

 

கிருஷ்ணன் ஆடிய கூத்து அல்லியம் என்பது.  இதனைக்

            "கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக

            அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்

            அல்லியத் தொகுதியும்"           (கடலாடு காதை 47-49).

எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது.  தன் மாமனாகிய கம்சனின் வஞ்சகத்தை வெல்வதற்காக மை நிறத்தானாகிய கண்ணன் ஆடிய ஆடலே அல்லியம் ஆகும்.  கிருஷ்ணாவதார நோக்கமே கம்சனைக் கொல்வதுதானே! எனவே இந்தக் கூத்து கிருஷ்ணன் கம்சன் செய்த பல சூழ்ச்சிகளைப் பற்றிய ஒன்றாக அமைந்திருக்கும்.  எனவே சிலப்பதிகாரம் கிருஷ்ணனின் வெற்றிகளைப் பற்றிப் பேசும் ஆடலைப் போற்றிய மக்கள் இருந்ததைக் கூறுகிறது அல்லவா?

 

 

 

மந்திரத்தில்

 

மதுரைக்குச் செல்லும் கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரையும் சந்திக்கும் மாங்காட்டு மறையோன் என்பவன் திருவரங்கத்தில் திருமால் கிடந்த வண்ணத்தையும், திருப்பதியில் நின்ற வண்ணத்தையும் பாரட்டிப் பேசும் பேச்சினையும் சிலப்பதிகாரத்தில் கேட்க முடிகிறது.  அவனே சிவபெருமானின் சூலத்தைப் "பிறைமுடிக்கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலம்" எனக் கூறுவதாகச் சிலப்பதிகாரம் செப்புதலையும் அறிய முடிகிறது.  பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமானை இங்கே காண முடிகிறது.  மேலும் அவன் பேச்சில் "அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்" எனச் சைவ சமயத்தினர் போற்றும் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம் பற்றிய செய்தியும், வைணவ சமயத்தினர் போற்றும் நாராயணாய நம என்னும் எட்டெழுத்து மந்திரம் பற்றிய செய்தியும் இடம் பெறக் காணலாம். 

 

கொற்றவை வடிவில்

 

கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் செல்லும் காட்டு வழியில் வேடர்கள் பாடிய வேட்டுவ வரிப்பாடலில் கொற்றவையைத் தொழுது பாடும்போது சிவன் பற்றிய குறிப்புகள் சில சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன.  கொற்றவையைக் "கண்ணுதல் பாகம் ஆளுடையாள்" (சிவபெருமானின் இடப்பாகத்தினள்) என்றும், "திருமாற்கிளையோள்" (திருமாலின் தங்கை) என்றும், சங்கு சக்கரம் திருமால் ஆயுதம் எனவும், கங்கையை முடிமேல் அணிந்த சிவன் என்றும் குறிப்புகள் உள்ளன.

 

கோயிலில்

 

மதுரை வந்தடைந்த கோவலன் காலைப் பொழுதில் நெற்றிக்கண் கொண்ட சிவபெருமான் கோயிலையும், கருடச் சேவலைக் கொடியாகக் கொண்ட திருமால் கோயிலையும், கலப்பைப் படை ஏந்திய பலதேவன் கோயிலையும், முருகன் கோயிலையும் கண்டு சென்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

 

கோவலன் கண்ணகி கோலத்தில்

 

கோவலன் மாதரி என்னும் இடைக்குல மடந்தையின் அடைக்கலமாகக் கண்ணகியுடன் இருந்தபோது கண்ணகி சமைத்த உணவைக் கோவலன் உண்ணும் காட்சியைக் கண்ட மாதரியும் அவள் மகள் ஐயை என்பவளும் அவர்களை முறையே அதாவது கோவலனைக் கண்ணனாகவும் கண்ணகியை நப்பின்னையாகவும் கண்டதாக இளங்கோ பாடும்போது கிருஷ்ண நப்பின்னையைப் பார்க்க முடிகிறது.

            "ஆயர்பாடியின் அசோதை பெற்றெடுத்த

            பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ

            நல்லமுது உண்ணும் நம்பி ஈங்கும்

            பல்வளைத் தோளியும் பண்டு நம்குலத்துத்

            தொழுனையாற்றினுள் தூமணி வண்ணனை

            விழுமம் தீர்த்த விளக்குக் கொல்லென

            ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி"   (கொலைக்களக் காதை 46 - 52).

ஆயர்களாகிய இடையர்களின் சேரியில் அசோதை என்பாள் பெற்றெடுத்த காயாம்பூ மலர் போன்ற நிறத்தை உடைய கிருஷ்ணன் (கண்ணன்) போன்று கோவலன் காட்சி அளிக்கிறான்.  கண்ணகியோ கிருஷ்ணாவதாரத்தில் காளிந்தியாற்றில் துயரம் நீக்கிய நப்பின்னையைப் போலக் காட்சி அளிக்கிறாள்.  இங்கு கிருஷ்ணன் பற்றிய குறிப்பு நன்கு சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பெறுவதைக் காணலாம்.

 

ஆய்ச்சியர் குரவையில்

 

கோவலன் கொலையுண்டதால் விளைந்த தீநிமித்தங்களைக் கண்ட ஆய்ச்சியர் திருமாலை வேண்டிக் குரவைக் கூத்து ஆடுகின்றனர்.  இப்பகுதியில் கிருஷ்ணனைப் பற்றிய பல செய்திகள் (சிலப்பதிகாரத்தில்) இடம் பெற்றுள்ளன.  ஆய்ச்சியர் குரவை என்பது ஆயர்பாடியில் எருமன்றத்தில் கிருஷ்ணன் தன் தமையன் பலராமனுடன் விளையாடிய பாலசரித நாடகம் ஆகும்.             

"கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்" என வஞ்சத்தால் வந்து நின்ற பசுவின் கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு வஞ்சக விளவின் பழத்தை உதிர்த்த கண்ணனின் செயல் இங்கு பேசப்படுகிறது.  குருந்த மரத்தை ஒடித்த கண்ணனின் பெருஞ்செயலும் இங்கு பேசப் படுகிறது. 

            "இறுமென் சாயல் நுடங்க நுடங்கி

            அறுவை ஒளித்தான் வடிவு என்கோயாம்

            அறுவை ஒளித்தான் அயர அயரும்

            நறுமென் சாயல் முகம் என்கோயாம்"

என்று வரும் பாடலில் கோபிகாஸ்திரிகளின் - கன்னியரின் ஆடையை மறைத்து விளையாடிய கண்ணனின் அழகைப் பாடி மகிழும் பெண்களைப் பார்க்க முடிகிறது.

பின்னர் வரும் இரண்டு பாடல்களில் "சூரியனைச் சக்கரத்தால் மறைத்த கடல் நிறத்தவனாகிய கண்ணன் - மயில் கழுத்து போன்ற நிறத்தனாகிய கண்ணன் - தன் அன்ணனாகிய பலதேவனோடும், காதலியாகிய நப்பின்னையோடும் காட்சி அளிப்பதையும், அங்கு நாரதர் வீணை இசைப்பதையும் அசோதை தொழுதேத்துவதையும் குறிப்பிடக் காண்கிறோம்.  பின்னர் மூவேந்தரையும் வாழ்த்திப் பாடும் பாடலில் பாண்டியனைப் பற்றிப் பேசும் பகுதியில் "செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்து ஒசித்தான் என்பரால்" எனப்படுகிறது.  இங்கு வளமிக்க துவாரகை நகரில் பசுக்கூட்டத்தை மேய்த்துக் குருந்த மரத்தை முறித்த கிருஷ்ணனைப் பார்க்க முடிகிறது.

 

அடுத்து வரும் மூன்று பாடல்களிலும் (முன்னிலைத் துதியாக உல்ளன) கிருஷ்ணாவதாரக் குறிப்புகள் உள்ளன.

            வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்

            கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே

            கலக்கியகை யசோதையார் கடைகயிற்றால் கட்டுண்கை

            மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

           

            அறுபொருள் இவனென்றே அமரர்களும் தொழுதேத்த

            உறுபசிஒன்றின்றியே உலகடைய உண்டனையே

            உண்டவாய் களவினால் உறிவெண்ணெய் உண்டவாய்

            வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

 

            திரண்டமரர் தொழுதேத்த திருமால் நின் செங்கமல

            இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே

            நடந்த அடி பஞ்சவர்க்கு தூதாக நடந்த அடி

            மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே     (ஆய்ச்சியர் குரவை).

முதற்பாடலில் மந்தரமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பினை கயிற்றாகவும், கொண்டு பாற்கடலின் நடுவிடத்தைக் கலக்கியவன் கடல் நிறத்தவனாகிய கண்ணன் என்றும், அவன் கை அசோதையார் கயிற்றால் கட்டுண்ட கை என்றும், தாமரை மலர் போலும் உந்தியை உடையவன் கண்ணன் என்றும் கூறப்படும் செய்திகள் கண்ணனின் அருமையையும் பெருமையையும் ஒருங்கே உணர்த்துகின்றன.

 

இரண்டாவது பாடலில் வளமிக்க துளசி மாலையணிந்த கண்ணனை விளித்து அறுவகைச் சமயத்தாலும் அறுதியிட்டுத் துணிந்த பொருள் கண்ணனே என்று தேவர்கள் போற்றுவதாகக் கூறி, பசி ஒன்றுமில்லாத சூழலில் ஏழுலகையும் கண்ணன் உண்டதாகவும் பேசி, அவ்வாறு உண்டவாய் உறியிலுள்ள வெண்ணெய் திருடி உண்ட வாயன்றோ என்று வியக்கும் நிலையைக் காண்கிறோம்.

 

மூன்றாம் பாடலில் திருமால் வாமனாவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தி கொடுத்த மூவுலகையும் இரண்டு அடிகளால் அளந்த திருவடிகள் மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்காகத் துரியோதனனிடம் தூது சென்றபோது நடந்த திருவடிகள் அல்லவா? எனக் கூறுகிறது.

இம்மூன்று பாடல்களிலும், கண்ணனின் கை, வாய், அடி ஆகியன செய்த அருமையான செயல்களின் பெருமையும் அதே நேரத்தில் கிருஷ்ணாவதாரத்தில் அவற்றின் எளிவந்த நிலையும் (சௌலப்பியம்) பேசப்படக் காணலாம்.

 

ஆய்ச்சியர் குரவையின் இறுதிப்பகுதியாகிய படர்க்கைப் பரவலில் அதாவது சேய்மை நிலையில் வைத்துப் போற்றும் பாடலின் இறுதிப்பாடலில் கிருஷ்ணாவதாரத்தை இளங்கோவடிகள் மிக உயர்ந்த நிலையில் போற்றுகின்றார்.  அப்பாடல் வருமாறு:

            மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

            கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்

            படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது

            நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே

            நாரயணா என்னா நாவென்ன நாவே

"அறியாமை மிக்க உள்ளம் கொண்ட கம்சனின் வஞ்சகச் செயல்களை வென்றவன் கண்ணன்; நான்கு திசைகளும் போற்றவும் வேதங்கள் முழங்கி வழிபடவும் பாண்டவர்களுக்காகத் துரியோதனன் முதலிய நூறு பேரிடம் தூது சென்றவன் கண்ணன்; இவனைப் போற்றிப் பாடாத நாக்கு பயனற்ற நாக்காகும்.  நாராயணா என்று கூறாத நாக்கு என்ன நாக்கு?" என்று இப்பாடல் கேட்கிறது.  இங்கே கண்ணனின் மறச்செயல் கம்சனை வென்றது.  அறச்செயல் பாரதத்தில் தூது சென்றது.  இவ்விரண்டையும் போற்றிப் புகழும் வண்ணம் "நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?" என்று இளங்கோவடிகள் முடித்திருக்கும் திறன் நீள நினைந்து போற்றுதற்குரிய ஒன்றாகும்.  திருவாய்மொழியில் நம்மாழ்வார்

            "கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்!

            எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே!"

என்று கூறுவதையும் இங்கு ஒப்பு நோக்கி மகிழலாம்.

 

குன்றக் குரவையில்

 

கொலயுண்ட கோவலன் திருச்செங்கோடு என்னும் குன்றத்தில் தேவனாய் மீண்டும் வந்து அங்கு நின்ற கண்ணகியை விமானத்தில் ஏற்றிச் சென்ற காட்சியைக் கண்ட குன்றக்குறவர்கள் குரவை பாடி முருகனை வழிபடுகின்றனர்.  அப்போது முருகனை ஆலமரத்தில் அமர்ந்த சிவபெருமான் மகன் என்றும் கயிலை மலைவாழ் கடவுள் ஆகிய சிவபெருமான் என்றும் கூறுகின்றனர்.  இங்கே சிவபெருமான் "ஆலமர்செல்வன்" என்றும் "கயிலை நன்மலை இறை" என்றும் புகழப்படுகிறான்.  முன்னது தட்சிணாமூர்த்திக் கோலம் பற்றியது.

 

சமரச நோக்கில்

 

இறுதியாகக் கண்ணகிக்கு கல்லெடுக்க இமயம் நோக்கிச் செல்லும் சேரன் செங்குட்டுவன் தமிழரைப் பழித்த கனகவிசயர் மீது படைகொண்டு புறப்படுகிறான்.  அப்போது திருவனந்தபுரமாகிய ஆடகமாடத்தில் பள்ளிகொண்ட திருமாலின் பிரசாதம் (மலர்மாலை முதலியன) கொணர்ந்து சேரன் செங்குட்டுவன் முன் சிலர் நிற்கின்றனர்.  கங்கையைச் சடையில் அணிந்த செஞ்சடைக் கடவுளாகிய சிவபெருமானின் சேவடிப்பிரசாதத்தைச் செங்குட்டுவன் தன் தலையில் வைத்திருந்ததால் திருமாலின் மாலையை வாங்கித் தன் மார்பில் தாங்கிக் கொண்டான்.  இவ்வாறு இளங்கோவடிகள் கால்கோட்காதையில் குறிப்பிடுகிறார்.  சிவபெருமானின் மாலை சேரன் செங்குட்டுவன் தலையிலும், திருமாலின் மாலை அவன் மார்பிலும் அணியப்பட்ட காட்சி நாம் கடைப்பிடிக்க வேண்டிய சைவ வைணவ சமரச நோக்கினைப் புலப்படுத்துகிறது அல்லவா?  தலையில் மூளை இருந்து அறிவாட்சி செய்கிறது.  மார்பில் இதயம் இருந்து உணர்வாட்சி செலுத்துகிறது.  மூளையும் இதயமும் போன்றவை அன்றோ சைவமும் வைணவமும்!

 

முடிவுரை

இவ்வாறு சிலப்பதிகாரம் சிவனையும் கிருஷ்ணனாகிய கண்ணனையும் தனித்தும் இணைத்தும் பேசும் செய்திகளை இக்கட்டுரையில் கண்டோம்.  சிவன் பிறவாயாக்கைப் பெரியோன். எனவே கடவுளின் அருமை - அனைத்தும் கடந்த நிலை உணர்த்தப்படுகிறது.  கிருஷ்ணன் திருமாலின் அவதார நிலை.  எல்லார்க்கும் இறங்கி வந்து எளிவந்த நிலை.  உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவனாக இருக்கும் இறைவன் பக்தர்களுக்காகத் தூது செல்வதும் திருவிளையாடல்கள் புரிவதும் அவனது எளிமையைக் காட்டுகின்றன.  அருமையில் எளிமையும் எளிமையில் அருமையும் கொண்டதே சிவகிருஷ்ணர் வழிபாடு என்பதைச் சிலப்பதிகாரம் நமக்கு உணர்த்தும் செய்தியாகக் கொல்ளலாம்..

 

  

 

        

சங்க இலக்கியம் காட்டும் மனித அளவுகோல்

டாக்டர் சுப.திண்ணப்பன்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம்

 

பொருள்களை அளத்தலை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என நால்வகைப் படுத்துவர் இலக்கணவியலார். (நன்னூல் 290). கற்றலைக் காண்டல், கருதல், உரை என மூவகைப் படுத்துவர் தருக்கவியலார். இக்காலத்தில் அறிவியலார் நில நடுக்கம், கடல்கோள்(சுனாமி), புயல் ஆகியவற்றையும் அளந்து காண்பதில் நாட்டம் செலுத்துகின்றனர். அளவின் தேவையைத் திருவள்ளுவரும் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்’ (குறள் 479) என்று கூறுவர். இந்த நிலையில் மனிதத்தை அளந்தறிவது எப்படி? அதற்குச் சங்க இலக்கியங்கள் எத்தகைய அளவுகோலைக் காட்டுகின்றன என்பதைக் கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

 

மனிதம் என்பது மக்கட் பண்பினை உணர்த்தும். மனிதனின் எடையை நிறுத்தல் அளவைக் கொன்டும், உயரத்தையும் அகலத்தையும் நீட்டல் அளவைக்  கொண்டும் அளக்கலாம். எடை, உயரம், அகலம் எல்லாம் மனிதனுக்கு மட்டும் உரியவை அல்ல. மற்ற உயிரினங்களுக்கும் இவை உண்டு. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றமென்னும் ஐம்புல உணர்வுகளிலும் மனிதனுடன் ஒத்த மற்ற உயிரினங்களும் உள்ளன. மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்த உதவுவன அவனது மனமும் ஆறவது அறிவாகிய பகுத்தறிவுமே ஆகும். ஆறறிவதுவே அவற்றொடு மனனே’ (தொல்காப்பியம் 1526) என்றும், ‘மக்கள்தாமே ஆறறிவுயிரே’ (தொல் 1532) என்றும் தொல்காப்பியர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இதனை வலியுறுத்தியுள்ளார். மனம் உடையவனே மனிதன். மனிதனை இயக்கிக்கொண்டிருப்பது மனமே. எனவேதான் மனத்தானாம் மாந்தர்க்குணர்ச்சி’ (குறள் 453) எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார். மேலும் மனத்தை மையமாகவைத்தே அவர் அறத்தை வரையறுக்கிறார்.

 

மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்’(குறள் 34).

உணர்தல், உள்ளுதல், நினத்தல், எண்ணுதல், சிந்தித்தல் எல்லாவற்றிற்கும் அடிப்படை மனமே. பகுத்தறிவு என்பது நல்லதன் நலனும், தீயதன் தீமையும் கண்டறிவதே ஆகும். சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு’(குறள் 422) எனவும் பகுத்தறிவுக்குத் திருவள்ளுவர் விளக்கம் தருகிறார். மனத்தை மையமாக வைத்தே மனிதனை அளக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு  (குறள் 595)’ ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ (குறள் 596)’ உரமொருவற்கு உள்ள வெறுக்கை அ;தில்லார் மரம் மக்களாதலே வேறு  (குறள் 600) என்னும் குறள்களும் ஊக்கத்தின் உறைவிடமாம் உள்ளத்தின் உயர்வை உணர்த்தும்.

 

 

 

 

     மனிதப்பண்புகள் சிலவற்றைக் கலித்தொகை கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டு வரையறைப்படுத்துகிறது. (நெய்தற்கலி16)

ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல்ø

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பெணப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பெனப்படுவது தன்கிளை செறாஅமை

அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவெனப்படுவது கூறியது மறாஅமை

நிறையெனப்படுவது மறைபிறர் அறியாமை

முறையெனப்படுவது கண்ணோடாது உயிர் வெளவல்

பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்’’

 

இவை அனைத்தம் மனித நேயத்தை - மனிதப் பண்பை மையமாக வைத்து அமைந்துள்ளன. இவற்றை மனிதத்தை அளக்கும் அளவுகோல்களாகவும் கொள்ளலாம்.

 

பெரியோரும் சிறியோரும்

 

  மக்களைப் பெரியோர், சிறியோர் என வயது அடிப்படையில் பகுப்பது ஒருவகை. பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’’ என்று கணியன் பூங்குன்றனார் பேசும் பாடல் வரிகள் பெரியோர், சிறியோர் பகுப்புணர்வை நமக்குப் புலப்படுத்துகிறது.

 

செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர் செயற்கரிய செய்யாதார்’’ (குறள் 26) என்னும் குறள் செயற்கரிய சாதனை படைப்போர் பெரியர் என்றும் அவ்வாறு சாதனை செய்யாதார் சிறியர் எனவும் சாதனை அடிப்படையில் மக்களைப் பெரியர், சிறியர் எனப் பகுத்துக் காண்கிறது. மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற் பெரியோர்’’  (471- 472) எனக் கூறுகிறார். இதன்வழி அறநெறி பிழையார் தன்மையும், அன்பு நெஞ்சமுமே பெரியார்க்குரிய இருபெரும் இன்றியமையாப் பண்புகளாகக் கொள்ளலாம். இவை இரண்டுமே பெரியாரை இனம் காட்டும் பண்புகளாகும். பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே’’ (நற்றிணை 32) எனக் கபிலர் நட்பாராய்தலைப் பெரியோர் பண்பாகக் கூறுவர். தீமை கண்டோர் திறத்தும் பெரியோர், தாமறிந்து உண்க என்பஎனக் கந்தாத்தனார் (நற்றிணை116: 1-2) பெரியோரின் அன்பு நெஞ்சத்தைப் போற்றுவர்.

     சிறுமை உடையவர் சிறியர். இல்லென மறுக்கும் சிறுமை என மதுரைக்குமரனார் (புறம் 180- 2) எனக் கொடை அடிப்படையில் சிறுமையைக் குறிப்பிடுகிறார்.

உயர்வும் இழிவும்  (தாழ்வும்)

 

ஈயென இரத்தல் இழிந்தன்று, அதனெதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று

கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர்

கொள்ளென் என்றல் அதனினும் உயர்ந்தன்று’’  (புறம் 204) என்று கழைதின் யானையார் கூறும் பாடலில் உயர்வுக்கு இரு தரநிலையும், இழிவுக்கு இரு தரநிலையும் அளவுகோலாகக் குறிக்கப்பெறுகின்றன. இழிவு பிறரிடம் சென்று யாசிப்பது. இது ஒர தரநிலை. இதனைவிட இழிவானது யாசிப்பார்க்கு இல்லை என்பதாகும். அதுபோல குறிப்பறிந்து கொடுக்கும் கொடை உயர்ந்தது. இது ஒர தரநிலை. அதனைவிட மேலானது - உயர்ந்தது கொடுத்த கொடையை வேண்டாமென மறுப்பது. இவ்வரிகளின் விளக்கமாக வருபவை திருக்குறளில் வரும் இரவு, இரவச்சம் என்னும் இரண்டு அதிகாரங்கள் ஆகும். இந்த அதிகாரங்களின் முதற் குறள்களே சான்றாகும். அவை இரக்க இரத்தக்கார்க் காணிற் தரப்பின் அவர்பழி தம்பழி அன்று  (குறள் 1051). “காவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்” (குறள் 1061). மேலும் புறநானுற்றின் இறுதி வரிக்கு விளக்கமாக வரும் குறள் வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை, யாண்டும் அஃதொப்பது இல்” (குறள் 363). இங்கே உயர்வு, தாழ்வு என்பனவற்றை அளக்கும் அளவுகோல்களாக ஈதலும் இரத்தலும் வருகின்றன. இவை இரண்டும் கொடையை மையமாகக் கொண்டு இயங்குபவை.

 

 

 

 

சான்றோரும் கயவரும்

 

   திருக்குறளில் வரும் சான்றாண்மை அதிகாரம் (99) மனித அளவுகோலின் உச்சநிலையையும் (Benchmark) கயமை அதிகாரம் (108) மனித அளவுகோலின் மிகத்தாழ்ந்த நிலையையும் (Bottom)  காட்டுவன. மக்கட்பண்புகளால் நிறைந்தவர் சான்றோர், மக்கட்பண்பற்றோர் கயவர். கயவரைத் திருவள்ளுவர் கீழ்’ ‘கீழ்கள்எனக் குறிப்பர். பிசிராந்தையார் தமக்கு நரை தோன்றாமைக்குரிய காரணங்களில் ஒன்றாக ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் வாழும் ஊரையும் (புறம்191) குறிப்பிடுகிறார். குணங்களால் நிறைந்து ஐம்புலன் ஒடுக்கம் கொண்டு குறிக்கோள் மிக்கவரே சான்றோர் என்பது போதகுகிறது. சான்றோர் என்பது சான்றோர் மெய்ம்மறைஎனப் பதிற்றுப்பத்திலும், சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே (புறம் ) என்னும் தொடரிலும் வீரனைக் குறிப்பிட்டாலும் பல இடங்களில் பணிவு மிக்கோரையே குறிப்பிடுகிறது. நன்று அறிஉள்ளத்துச் சான்றோர்” (பதிற் 72: 6) என வரும் அரிசில்கிழார் கூற்றும், “சான்றோர் பழியொடு வரூஉம் வெஃகார்” (அகம் 112: 11-12) என வரும் ஆயுர் மூலங்கிழார் கூற்றும், “சான்றோர் புகழும்  முன்னர்  நாணுப் பழியாங்கு ஒல்பரிவர் காணுங்காலே   (குறுந் 252: 6- 8) என வரும் கிடங்கிற் குலபதி நக்கண்ணன் கூற்றும், “சான்றோர் கடன்நிலை குன்றலும் இலர் என்று உடன்அமர்ந்து உலகம் கூறுவது உண்டு” (நற் 327: 4- 5) என வரும் அம்மூவனார் கூற்றும், “பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்  (கலி 139, 1- 3) என வரும் நல்லந்துவனார் கூற்றும் சான்றோர் இயல்பினை விளக்கும் சான்றுகளாகும்.

 

     சான்றோர்க்கு எதிராகச் சாலார் என்ற சொல்லைப் பிசிராந்தையார் ஆள்கிறார். சான்றோர் சான்றோர் பாலராப, சாலார் சாலார் பாலராகுபவே” (புறம் 218) கயவர் என்னும் சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. எனினும் இழிகுணத்தார் பற்றிய செய்திகள் உள்ளன. நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர் பயனின்மையின் பற்றுவிட்டு ஒரூஉம் நயனில் மாக்கள்” (அகம் 71: 1-3) என அந்தி இளங்கீரனார் என்னும் புலவர் செல்வம் வரும்பொழுது சேர்ந்து வாழ்ந்து செல்வம் குறைந்த நிலையில் பயனில்லை எனக் கருதி விலகும் மக்களை நயனில் மாக்கள்எனக்குறிப்பிடுவதைக் காணலாம்.

 

ஆடவரும் பெண்டிரும்

 

     மனிதர் ஆடவர் பெண்டிர் என இருபாலார். இவர்களை அளக்கும் கோலாக வினையே ஆடவர்க்கு உயிரே. மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென நமக்குரைத்தோரும் தாமே” (குறுந் 135:1- 2) என்ற பெருங்கடுக்கோ புலவரின் கூற்று வினை செய்பவரே ஆடவர் எனவும் மனையுறை மகளிர்க்குக் கணவனை உயிராகக் கருதும் பண்பே சிறந்தன- உயிர் போன்றன என்னும் கருத்தை நினைக்க வேண்டும்.

 

எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே

 

 

செய்வினை முடியாது எவ்வந் செய்தல்

எய்யாமையோடு இளிவு தலைத்தரும்” (நற் 284, 5- 6) என வரும் தேய்புரிப் பழங்கயிற்றினார் பாடல் எடுத்த செயலை நிறைவேற்றாதிருப்பது இளிவு என்பது காட்டும். பெண்டிர்க்குக் கற்பு சிறப்பென்பதைப் பல பாடல்கள் காட்டும்.

 

அறிவு

 

   சங்ககாலச் சமுதாயம் அறிவுக்கு முதன்மை கொடுத்து மனிதனை மதிக்கும் அளவுகோலாக அதனைக் கருதி உள்ளது என்பதை

ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னா தவருள்

அறிவுடையோர் ஆறு அரசுஞ் செல்லும்’ (புறம் 183: 5-7) என்னும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடல் வாயிலாக அறிய முடிகிறது. வயதுக்கு மதிப்பளிப்பதை விட அறிவுக்கு மதிப்பு தருவதையே  இங்குக் காண முடிகிறது.

 

 

 

 

கல்வி

 

   சங்கச் சான்றோர் கல்விக்கும் முதன்மை கொடுத்து மனிதனைப் போற்றினர் என்பதை,

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே” (புறம்183: 8-10)  என வரும் பாண்டிய நெடுஞ்செழியக் பாடல்கள் புலப்படுத்துகின்றன. பிறப்பால் தாழ்ந்த குலத்தினனாலும் கல்வியினால் மேற்குடி மக்களின் போற்றுதலுக்கு உரியவனாவான் என்பது தெரிந்தது. மேலும் ஒரு வயிற்றிற் பிறந்த உடன்பிறப்புகளுள் கல்வி கற்றோனைப் பெற்ற தாயும் மதிப்பாள் என்ற கருத்தும் பிறப்போரன்ன உடன் வயிற்று¡ர்க்கு

சிறப்பின் பாலாற் றாயும்  மனந்திரியும் (புறம்183: 3-4)   என்ற வரிகளின் வாயிலாக உணரமுடிகிறது.

 

புகழ்

 

புகழ் என ஒன்றும் மனிதனை உயர்த்தும் அளவுகோலாகச் சங்க இலக்கியம் காட்டுகிறது.பொய்யறியா வாய்மொழியால் புகழ் நிறைந்த நன்மாந்தர் (மதுரைக்காஞ்சி 19- 20) என்னும் மாங்குடி மருதனார் பாடலும், புகழெனின் உயிரும் கொடுக்கும் (புறம் ) என்னும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் பாடலும், “மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிற்கித் தாம் மாய்ந்தனரே” (புறம்165: 1- 2)  என்னும் பெருந்தலைச்சாத்தனார் பாடலும், “ஆண்டும் நீ பெயர்ந்த பின்னும் ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே”  (புறம் 359: 17- 18) என்னும் காவட்டனார் பாடலும் இதனை வலியுறுத்தும். அந்தப்புகழும் ஈதலின்  வாயிலாக வருதல் வேண்டும்.

 

வாணன் வைத்த விழுந்தி பெறினும்

பழி நமக்கெழுக என்னாய் விழுந்தி

ஈதல் உள்ளமொடு இசை வேட்குவை” (மதுரைக்காஞ்சி 203- 205) என வரும் மாங்குடி மருதனாரின் கூற்று இதனை வலியுறுத்தும். எனவே

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” (குறள் 231) என்பதையும் எடுத்துரைக்கும்.

 

செல்வம்

 

செல்வத்தை வைத்து மனிதரை மதிப்பது இயல்பு. ஆனால் சங்க இலக்கியம் செல்வம் என்பதற்குப் புது விளக்கம் தருவதைப் பார்க்கிறோம்.

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்று, செய்வினைப் பயனே

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின்

மென்கலர் செல்வம் செல்வம் என்பதுவே” (நற்றிணை 210)

எனச் செல்வம் என்பது மனிதநேயத்துடன் துன்புறுவோர் துயர் துடைத்தலே என இப்பாடலில் மிளைகிளான் நல்வேட்டனார் விளக்குகிறார். உறவினர்கள் நெஞ்சு வருந்த அமையும் செல்வம் தேயும் (கலி 149: 89) என்பதும், “இசைபட வாழ்வார் செல்வம் காண்டொறும் பொழியும்” (நற்றிணை 217: 1- 2)

என்பதும் சங்ககால நம்பிக்கைகளாக உள்ளன. மேலும் நக்கீரர் செல்வத்துப்பயனே ஈதல்,துய்ப்பேம் உள்ளே தப்புந பலவே” (புறம்189: 7- 8) என விளக்குகிறார்.

“....................................... யோஅம் இரப்பவை

பொருளும் பொன்னும் போகமும் அல்ல, நின்பால்

அருளும் அன்பும் அறனும் மூன்றும்

உருள்இணர்க் கடம்பின் ஒலிதாரோயே

 

இறைவனிடத்தில் வேண்டும் பொருள்களாகச் சங்கச் சான்றோர் செல்வத்தைப் போற்றவில்லை என்பதைப் பரிபாடல் (5: 78- 81) கூறுகிறது.

 

 

மகட்பேறு

 

  பெறுபவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற” (குறள்) என்பார் வள்ளுவர். சங்க இலக்கியம்

படைப்புப்பல படைத்து பலரோடு உண்ணம்

உடைப்பெறுஞ் செல்வர் ஆயினும் .............

மயக்குறு மக்களை இல்லோர்க்கு

பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே” (புறம் 188) மக்கட்பேற்றின் மதிப்பைப் பேசுகிறது. இதனை,

 

இம்மையுலகத்து இசையொடும் விளங்கி

மறுமைப் பயனும் மறுவின் றெய்துப

செறுநரும் விழையும் செந்நீர்க் காட்சிச்

சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்

பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்

வாயே ஆடுதல் வாய்ந்தனம் தோழி” (அகம் 66) என்ற பாடல்வரிகள் பழமொழியாகவே கூறி வலியுறுத்துகிறது.

 

வீரம்

 

   சங்ககாலத் தமிழகத்தில் மறவர், எயினர், மழவர், மல்லர் என்னும் மறக்கிளையினர் இருந்தனர். இக்குடியினர் வீரத்தைப் பாராட்டுவதே குடிநிலை, மூதின்முல்லை முதலிய துறைகளின் நோக்கமாகும். இக்குடிப் பெண்டிரும் வீரமிக்கோராவர். களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” (புறம் 312) என்பது பொன்முடியார் வாக்கு. இச்செய்தி கேட்ட தாயர் ஈன்ற நாளினும் பெரிது உவந்தனர்.(புறம் 277) மகன் புறங்கொடுத்தான் எனக் கேட்ட தாய் அவன் உண்ட மார்பை அறுத்தெறியச் சுளுரைக்கிறாள். (புறம் 2  ) கணவனையும் அண்ணனையும் இழந்த பெண் தம் இளைய வயது மகனையும் போருக்கு அனுப்புகிறாள். (புறம் 279) வேறுவகையாக இறந்தவர் உடலை வாளாற் கீறிப் புதைக்கும் அளவுக்கு மறவுணர்வு போற்றப்பட்டது. (புறம் 93) இறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டுத் தெய்வமாக வணங்கியதை

 

நல்லமர் கடந்த நாÏடை மறவர்

பெயரும் பீடும் உழுதி அதர்தொறும்

பீலி சுட்டிய பிறங்குநிலை நடுகல்” (அகம் 67)

நல்லிசை நிறுத்த நாÏடை மறவர்

நிரைநிலை நடுகல்” (அகம் 387) ஆகிய பாடல்கள் உணர்த்தும். டூதனை விளக்கப் புறநானு¡ற்றி¢ல்  பல செய்திகள் உள்ளன. (புறம் 260, 261, 264, 265, 289, 232).

 

இச்சான்றுகளால் வீரமும் மனிதனை அளக்கும் அளவுகோலுள் ஒன்றாக இருப்பதை நாம் காண முடிகிறது.

 

நாகரிகம்

 

முந்தை இருந்து நட்பினார் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்” (நற்றிணை 355: 6-7)

என்னும் பாடலும்  இதனை ஒட்டி

பெயக்காட்டும் சஞ்சுனோடு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்” (குறள் 580)  என எழுந்த குறளும் நாகரிக அளவுகோலாக அமைந்ததைக் காட்டுகின்றன.

 

மனிதப் பண்புகள்

 

இறுதியாக

 

நல்லது செய்தல் ஆற்றுநீராயினும்

அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான்

எல்லாரும் உவப்பது, அன்றியும்

நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே” (புறம் 195) என்னும் பாடல்வழி மக்கள் விரும்புவது எப்பண்பு எது என்பதையும், நன்னெறி எது என்பதையும் உணரமுடிகிறது.

 

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்

மனிதர்க்கு மாய்வது மண்எனத் திருவள்ளுவர் கூறுகிறார். எனவே பண்புடையார் யார் எனக் கடலுள் பாய்ந்த இளம்பெருவழுதியின் பாடல் விளக்குகிறது.

 

 

உண்டால் அம்மஇவ் உலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே, முன்பு இலர்,

துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிரும் கொடுக்குவர், பழிஎனின்

உலகுடன் பெறினும் கொள்ளார், அயர்வினர்,

அன்னமாட்சி அனையர் ஆகித்

தமக்குஎன முயலா நோன்தாள்

பிறர்க்குஎன முயலுநர் உண்மையானே” (புறம் 182)

 

இப்பாடல் சங்க இலக்கியம் காட்டும் மனித அளவுகோல்களைத் தொகுத்துக் கூறுகிறது எனலாம்.

 

 பலவகை நோக்கினர் பாராட்டும் மனிதப் பண்பு

 

பலவகை நோக்கினர் பாராட்டும் மனிதப் பண்புகளைச் சிறுபாணாற்றுப் படை (207-216) பின்வருமாறு பேசுகிறது.

 

செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்

இன்முகம் உடைமையும், இனியன் ஆதலும்,

செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த

 

அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ்சினம் இன்மையும்,

ஆணணி புகுதலும், அழிபடை தாங்கலும்,

வாள்மீக் கூற்றத்து வயவர் ஏத்தக்

 

கருதியது முடித்தலும், காமுறப் படுதலும்,

ஒருவழிப் படாமையும், ஓடியது உணர்தலும்,

அரிஏர் உண்கண் அரிவையர் ஏத்த,

 

அறிவுமடம் படுதலும், அறிவுநன்கு உடைமையும்,

வரிசை அறிதலும், வரையாது கொடுத்தலும்

பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த

 

ஓய்மாநாட்டு நல்லியக்கோடன் வீற்றிருந்ததாக ஆசிரியர் நத்தத்தனார் பாடுகிறார்.சான்றோர் பாராட்டும் பண்புகளாகச் செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும், இன்முகம் உடைமையும், இனியன் ஆதலும் கூறப்பெறுகின்றன. மறவர் ஏத்தும் மாண்புகளாக அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ்சினம் இன்மையும், ஆணணி புகுதலும், அழிபடை தாங்கலும் அமைந்துள்ளன. பெண்கள் விரும்பும் பண்புகளாகக் கருதியது முடித்தலும், காமுறப் படுதலும், ஒருவழிப் படாமையும், ஓடியது உணர்தலும் பேசப்பட்டுள்ளன. இறுதியாகப் பரிசிலர்

போற்றும் பண்புகளாக அறிவுமடம் படுதலும், அறிவுநன்கு உடைமையும், வரிசை அறிதலும், வரையாது கொடுத்தலும் கூறப்பெறுகின்றன. இவை இங்கு அரசர்க்குரியவனவாகச் சொல்லப் பெற்றிருந்தாலும் இவற்றை மனித அளவுகோல்களாகக் கருதுவதில் தவறில்லை. முதல் நான்கும் பொதுவாக எல்லா மனிதர்க்கும் உரிய அளவுகோல் பண்புகள். இரண்டாவதாக உள்ளவை சிறப்பாக வீரர்க்கும், மூன்றாவதாக உள்ளவை சிறப்பாக  ஆடவர்க்கும், நான்காவதாக உள்ளவை சிறப்பாக  வண்மையோர்க்கும் உரிய அளவுகோல் பண்புகள் ஆகும்.

முடிவுரை

 

நிலத்தினும் பெரிதாகவும், வானினும் உயர்ந்ததாகவும், நீரினும் ஆழமுடையதாகவும் காதலையும், வீரத்தையும்-அகத்தையும் புறத்தையும்- பாடுபொருளாகக் கொண்டு சங்க இலக்கியம் விளங்கினாலும் மனித நேயத்தை-மனிதப் பண்பை- மறவாது போற்றி முதன்மை கொடுத்து நிற்கும் போக்கைக் காண முடிகிறது. மனிதனை அளக்கும் அளவுகோலாகப் பிறப்பு, வயது, செல்வம் முதலியவற்றைக் கொள்ளாமல் அறிவு, கல்வி, அருள், கொடை, பழியிலாப் புகழ், தன்னலமினமை, செய்ந்நன்றி அறிதல், சிற்றினம் சேராமை, சினவாது சிரித்த முகத்துடன் இனியவை கூறுதல், பிறர்க்குதவும் பெருங்குணம் முதலியவற்றையே அளவுகோல்களாகச் சங்க இலக்கியம் காட்டுவதாக அறிகிறோம்.

 
-------------------------




தமிழர் இலக்கிய மரபுடைமை

சுப.திண்ணப்பன்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் 

 

சிறந்த இலக்கிய வளம், செம்மாந்த இலக்கண அரண்,மரபுகள், மாண்புமிக்க எண்ணங்களைப் பிரதிபலிக்கும் சொல்வளம், நல்லஒரு பாரம்பரியம்,, சாகாவரம் பெற்றிருக்கும் சாசுவதப் பண்பு, இளமைத்திறம் போன்ற இன்னோரன்ன பண்புகளைக் கொண்டு கால வெள்ளத்தாலும் பிற மொழித்தாக்கங்களாலும் அழியாத, அழிக்க முடியாத  துடிதுடிப்பைத் தன்னகத்தே கொண்டு வாழ்வது தமிழ் மொழி என்பார் மொழியியல் அறிஞர் ச. அகத்தியலிங்கனார்.

இத்தகைய தமிழ் மொழியைப் பேசுகின்ற தமிழரின் இலக்கிய மரபுடைமையின் மாண்புகளைப் பட்டியலிட்டுக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

 

இலக்கியம் என்னும் சொற்பொருள் தரும் மரபு

 

தமிழில் இலக்கியம் என்னும் சொல் பொருளாழமிக்க ஒன்றாகும். இலக்கியம் என்னும் சொல் இலக்கு, இயம் என்னும் இரண்டு சொற்களின் இணைப்பால் உருவான ஒரு சொல்லாகும். இதன் பொருளை மூன்று வகையாக விளக்கலாம்.

 

1.   இலக்கு என்றால் நோக்கம், குறிக்கோள் என்பது பொருளாகும். இயம் என்றால் இயம்புவது, கூறுவது, ஒலிப்பது எனப் பொருளாகும். எனவே இலக்கியம் என்பது குறிக்ககோளைக் கூறுவது என்பது முதல் வகை விளக்கமாகும். எனவேதான் தமிழ் இலக்கண ஆசிரியர்கள் அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே என்று கூறுகிறார்கள். 2. கலங்கு – கலக்கு என்னும் வினைச் சொற்களைப் போல இலங்கு – இலக்கு என்னும் சொற்களும் அமையும். இலங்கு, இலக்கு என்பன முறையே விளங்கு – விளக்கு எனப் பொருள்படும். இலக்கு இயம் என்னும் போது படிப்பவரை விளங்கச் செய்வது என்று பொருள்படும். படிப்பவரைப் பண்பாட்டால் மேலோங்கச் செய்வதுதான் இலக்கியம். ஒரு நூலை ஒரு முறை படித்தபின் படித்தவர் தாம் முன்பு இருந்ததைவிடப் பண்பாட்டில் உயர்ந்து விளங்கி இருப்பதாக உணர்வாரேயானால் அந்த நூல்தான் சிறந்த இலக்கியம் எனக் கருதப்பெறும். இலக்கியம் என்பது பண்பாட்டுக் கருவூலம் என்பார் தாமஸ் ஆர்னால்டு. 3. இலக்கு என்பது விளக்கம் எனப் பொருள்படும். எல்லே இலக்கம் என்னும் தொல்காப்பிய நூற்பா இதற்குச் சான்றாக அமையும். வாழ்க்கையின் விளக்கமாக இயம்புவது – கூறுவது தான் இலக்கியம் எனப் பொருள் கொள்ளலாம். வாழ்க்கையின் திறனாய்வு தான் இலக்கியம் என்பதுதான் இலக்கியத் திறனாய்வாளர்களின் கோட்பாடு.

 

      இலக்கியம் என்பது ஒரு கலை. கலை கலைக்காகவே, கலை வாழ்க்கைக்காகவே என்னும் இரு கோட்பாடுகளில் கலை வாழ்க்கைக்காகவே என்னும் கோட்பாட்டினைக் கொண்டது தமிழரின் இலக்கிய மரபு. வாழ்க்கையிலிருந்து முகிழ்ந்து வாழ்க்கையைச் செம்மையாக்க உதவும் குறிக்கோளைத் தருவதுதான் இலக்கியம் எனத் தமிழர் மரபு வலியுறுத்துகிறது, இலக்கிய வடிவம், பொருள் பற்றிக் கூறும் தொல்காப்பியம் ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலிப்பாவால் அமைவது இலக்கியம் என்றும், அது அறம், பொருள், இன்பம் என்ற மூன்று உறுதிப் பொருள்களை மனித இனத்தின் வளர்ச்சி கருதிப் படைத்தலுக்கு உரியது என்றும் கூறுகிறது. (சூ 1362, 1363)

மரபு போற்றும் மரபு

 

      மரபு என்னும் சொல்லுக்குச் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி முறைமை, சான்றோர் சொல் வழக்கு முறை, பழமை, வமிசம், பாரம்பரியம், இயல்பு, இலக்கணம், நல்லொழுக்கம், பெருமை, மேம்பாடு, நியாயம், வழிபாடு, பருவம் எனப் பதிநான்கு பொருளைத் தருகின்றது. தொன்றுதொட்டு வழங்கப்பட்டுவரும் முறைமையே மரபு எனக் கூறலாம். எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே என்று இலக்கணமும் மரபுக்கு வரையறை தரும். (நன்னூல் 388)

 

      தமிழர்தம் தொன்னூலாகிய தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தில் இடம்பெறும் நூன்மரபு. மொழிமரபு, தொகைமரபு ஆகிய இயல்களும், சொல்லதிகாரத்தில் இடம்பெறும் விளிமரபு என்னும் இயலும் தொல்காப்பியனார் மரபுக்குத் தரும் இன்றியமையாமை எடுத்தியம்பும். தொல்காப்பியத்தின் தொடக்க இயல் நூன்மரபு, இறுதி இயல் மரபியல். இவ்வமைப்பு முறையும் மரபின் தேவையை வலியுறுத்தும்.

 

      இலக்கண உலகில் யாப்பிலக்கண மரபு நமக்கு இன்று நேற்றுத் தோன்றியதன்று. தொல்காப்பியர் காலத்துக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒன்று என்பதைத் தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியலில் வரும் நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென, வல்லிதிற் கூறி வகுத்துரைத்தனரே (1), யாப்பென மொழிப யாப்பறி புலவர்(77), வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின், நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர்(78) என்னும் தொடர்கள் காட்டும்.   

 

செய்யுளின் உறுப்புகளைக் கூறவந்த தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகள் முப்பத்திரண்டனுள் மரபு என ஒன்றையும் கூறியுள்ளார். இது செய்யுள் என அக்காலத்து வழங்கப்பெற்ற படைப்பு இலக்கியத்துக்கு மரபின் தேவையைப் பற்றிப் பேசுகிறைது.

மரபே தானும் நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று (சூ 79)

என்று மரபுக்குத் தொல்காப்பியம் விளக்கம் தருகின்றது.. எல்லாத் தமிழர்க்கும் இயல்பாக விளங்கும்  இயற்சொல், கற்றோர்க்கு மட்டுமே விளங்கும் திரி.சொல்,  வட்டார வழக்குச் சொல்லாகிய திசைச்சொல், சமஸ்கிருதமாகிய வடசொல் என நால்வகைச் சொற்களால் உருவாக்கப்பட்டு யாப்பொடு பொருந்தியதைச் செய்யுள் (இலக்கிய) மரபு (literary convention) எனத் தொல்காப்பியம் கூறுகிறது.

 

இக்கட்டுரையில் மரபுடைமை என்பது இலக்கிய பாரம்பரியம், பெருமை என்னும் பொருளையே குறிக்கிறது.

 

தொன்மைச் சிறப்பு

 

தமிழர் கண்ட இலக்கிய மரபு காலத்தால் மிகப் பழமை வாய்ந்த ஒன்றாகும். இன்று நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம். இது ஓர் இலக்கண நூல்.

இலக்கணம் தோன்றவேண்டுமானால் அதற்கு முன்னர் பல இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும். மேலும்  தொல்காப்பியம் செய்யுளும் வழக்கும் நாடி- அதாவது இலக்கிய மொழியையும், பேச்சு மொழியையும் ஆராய்ந்து இலக்கணம் செய்ததாகப் பாயிரம்

பாடிய பனம்பாரனார் குறிப்பிடுகிறார். எனவே தொல்காப்பியத்துக்குத் தரவாகப் பல இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். மேலும் தொல்காப்பியர் என்ப, என்மனார் புலவர், யாப்பென மொழிப யாப்பறி புலவர் என இருநூறுக்கு மேற்பட்ட நூற்பாக்களில்

தமக்கு முன்னிருந்த நூல்களை மேற்கோளிட்டுக் கூறுவது தொல்காப்பியர்க்கு முன்னர் பல நூல்கள் இருந்ததை வலியுறுத்தும். தொல்காப்பியர் காலமோ கி,மு, மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தியது என்பது பல அறிஞர்கள் கருத்து. எனவே தமிழர் கண்ட இலக்கிய

மரபு ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையுடையது

எனத் துணிந்து கூறலாம்.

 

   இந்தியாவிலுள்ள இலக்கிய  மரபுகள் இரண்டு. ஒன்று சமஸ்கிருத இலக்கிய மரபு. மற்றொன்று தமிழ் இலக்கிய மரபு. சமஸ்கிருத இலக்கிய மரபுக்கு எத்தகைய தொன்மையுண்டோ அத்தகைய தொன்மை தமிழ் இலக்கிய மரபுக்கும் உண்டு என்பது அறிஞர்களின் கருத்தாகும். டிசமஸ்கிருத மொழியிலுள்ள பழைய நூலாகிய ரிக்வேதத்திலேயே தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று எமனோ, பர்ரோ ஆகிய மொழியியல் அறிஞர்கள் கூறியுள்ளனர். சங்கம் இருந்த கபாடபுரத்தை வடமொழிக்  காப்பிய ஆசிரியர்களான வால்மீகியும் வியாசரும் குறிப்பிடுகின்றனர். கபாடபுரத்தைப் பற்றி அர்த்த சாஸ்திரம் இயற்றிய சாணக்கியரும் குறிப்பிடுகிறார். எனவே தமிழர் இலக்கிய மரபுடைமை சமஸ்கிருத மரபுடைமை போன்ற பழமைமிக்க இந்திய மரபுடைமை எனக் கூறலாம்.

 

    கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், ஹீபுரு ஆகிய செவ்வியல் மொழிகளின் இலக்கியங்களுடன் தமிழர் இலக்கியத்தை ஒப்பிட்டு நோக்குவர் அறிஞர். டாக்டர் வின்ஸ்லோ தமிழ்மொழியின் கவிதைகளைக் காணும்போது அது கிரேக்க மொழியைவிடவும் ஆழமானது, அழுத்தமானது, துல்லியமானது, துடிதுடிப்பானது, வளமானது, பொருத்தமானது, சக்திவாய்ந்தது என்று கூறுகிறார். மேலும் எகிப்தியன், அக்கேடியன், ஆர்மேக் பொனீசியன், சுமேரியன், அரேபியன், சீனம் போன்ற மொழி இலக்கியங்களுடன் ஒப்பவைத்து எண்ணப்பட வேண்டிய இலக்கியம் தமிழ் இலக்கியம் என்பது அகத்தியலிங்கனார் கருத்து.

 

வளமைச் சிறப்பு

 

    கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், ஹீபுரு முதலிய செவ்வியல் மொழிகள் இன்று வழக்கில் இல்லை. ஆனால் தமிழ் மொழியோ இன்று எழுத்து வழக்கில் மட்டுமன்றிப் பேச்சு வழக்கிலும் இருந்து வரும் வாழும் மொழிகளில் ஒன்றாகும். எனவே தமிழர் கண்ட இலக்கியத்தை ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இரஷ்யன், இந்தி, இத்தாலியம் போன்ற வாழும் மொழி இலக்கியங்களுடனும் ஒப்ப வைத்து எண்ணலாம் என்பது மொழியியல் அறிஞர்களின் துணிபாகும். எனவே தமிழர் கண்ட இலக்கிய மரபு பழமைக்குப் பழமையாகவும் புதுமைக்குப் புகுமையாகவும் இருக்கும் பண்புடையது. இடையறாது தொடர்ந்து வரும் தமிழ் இலக்கிய மரபு வாழையடி வாழையென வந்த மரபாகும். இத்தகைய வளமை ஒரு சில மொழிகளுக்கே உண்டு. அவற்றில் தமிழும் ஒன்று.

 

 

 

 

 

தனிமைச் சிறப்பு

 

    இந்திய இலக்கிய வளர்ச்சியில் தமிழ் இலக்கியத்திற்கு என இரண்டு தனித்தன்மைகள் உண்டு என்பார் கமில் சுவலெபில். தமிழர்கண்ட இலக்கிய மரபு, தோற்றத்தில் ஆரிய மரபுக்கு அதுவும் குறிப்பாக சமஸ்கிருத மரபுக்கு மாறுபட்ட ஒன்று. ஏனைய இந்திய மொழி இலக்கிய மரபுகள் அனைத்தும் சமஸ்கிருத சார்புடையனவாகத் திகழத், தமிழ் இலக்கிய மரபு மட்டும் தனித்து நிற்கிறது என அவர் கூறுகிறார். இந்திய இலக்கியங்களில் தமிழ் இலக்கியம் மட்டுமே முன்னைப் பழமைக்கும் பழமையாய் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் இலங்குகிறது என்று அவர் கூறுகிறார். செவ்வியல் தன்மையும் செழுமையான நவீனத் தன்மையும் கொண்டு விளங்கும் சிறப்புத் தன்மை தமிழர் இலக்கிய மரபுக்கு உண்டு. செவ்வியல் தன்மையில் சமஸ்கிருதத்துடன் ஒத்து நின்றாலும் நவீனத்தன்மையில் தமிழ் தனித் தன்மையுடன் விளங்குகிறது என்பது அவர் கருத்தாகும்.

 

இலக்கணம் கண்ட மரபு

 

   இலக்கியம் இலக்கணம் என்னும் இரண்டு சொற்களும் இலக்கு என்னும் ஒரே அடிச் சொல்லிலிருந்து உருவாகியுள்ள சிறப்பு தமிழில் உள்ளது. இலக்கணம் என்பது இயல்பு, அழகு. இலக்கணம் கொண்டது அதாவது இயல்பும் அழகும் கொண்டது இலக்கியம். இலக்கணம் என்னும் சொல் தொல்காப்பியத்திலே இடம்பெற்ற ஒன்றாகும். இலக்கியம் என்னும் சொல் பழைய நூல்களில் இடம்பெறவில்லை. எனினும் செய்யுள், நூல், பனுவல், கணக்கு எனப் பல சொற்களால் வழங்கப்பட்டது. செய்யுள் என்பதைப் படைக்கப்பட்டது அதாவது படைப்பிலக்கலியம் எனக் குறிப்பார் தமிழண்ணல். மொழியின் அமைப்பினை - இயல்பினை விளக்குவது இலக்கணம். மொழியின் அழகினை விளக்குவது இலக்கியம். இலக்கணம் இலக்கியத்திற்குரிய விதிகைளத் தருகிறது என்றும், இலக்கியம் இல்லாமல் இலக்கணம் இல்லை என்றும் தமிழர் இலக்கிய மரபு கருதுகிறது. இலக்கியம் தாய், இலக்கணம் சேய். இலக்கியம் தேமாங்கனி, இலக்கணம் தீஞ்சுவை சாறு. இலக்கியம் பெருவிளக்கு, இலக்கணம் அதன் ஒளி. இலக்கியம் எள், இலக்கணம் எண்ணெய் என்ற கருத்து தமிழர்களிடையே இருந்தது என்பற்குப் பின்வரும் பாடல் சான்று.

 

இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே

எள்ளின்றாகில் எண்ணெயும் இன்றே

எள்ளினுள் எண்ணெய் எடுப்பதுபோல்

இலக்கியத்தினின்று எடுபடும் இலக்கணம்

 

இப்பாடலை அகத்¢தியர் சூத்திரமாகக் கருதுவாரும் உளர்.

 

இந்தியமொழிகளிலுள்ள தொன்மை இலக்கணங்களெல்லாம் சமஸ்கிருத இலக்கண மரபினை முன்னோடியாகக் கொண்டிருக்கத்  தமிழ் இலக்கண மரபு மட்டும் அதனைச் சாராது தனித்து இயங்கும் தன்மை கொண்டு விளங்குகிறது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று பிரிவில் இலக்கண விதிகள் கூறப்பட்டுள்ளன. உலகில் உள்ள ஏனைய மொழிகளில் எழுத்து, சொல் பற்றிய இலக்கணங்கள் இருக்கின்றன ஆனால் பொருள் பற்றிய  இலக்கணம் தமிழில் மட்டுமே உண்டு. இலக்கியத்தின் பாடுபொருள், வடிவம்(யாப்பு), சுவை(மெய்ப்பாடு) உவமை அழகு, மரபு ஆகியவற்றை விளக்கும் பகுதியே பொருள் இலக்கணமாகும். இது தமிழர்¢ கண்ட இலக்கிய மரபுடைமைக் கோட்பாடுகளை விளக்குகிறது.. தொல்காப்பியர் கண்ட பொருள் இலக்கணம் பொருள், யாப்பு, அணி எனப் பிற்காலத்தில் விரிந்து, எழுத்து, சொல் பிரிவுடன் இணைந்து ஐந்திலக்கணப் பாகுபாடு தோன்றியது. இந்நிலையிலும் ஐந்தில் மூன்று இலக்கியம் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு பொருள், அகம் புறம் என இரண்டாகி ஆறிலக்கணப் பிரிவு தோன்றியது. பிறகு பாட்டியல் என்னும் ஓர் இலக்கணப் பிரிவும் பிறந்தது. இதுவும் இலக்கியம் பற்றியது. இவ்வாறு இலக்கியம் பற்றிய இலக்கணப்பிரிவுகளின் தோற்றம், வளர்ச்சி, விரிவு அனைத்தும் தமிழர் கண்ட இலக்கிய மரபுடைமையின் பெருக்கத்தையும் பரப்பையும் வெளிப்படுத்தும் ஆழத்தையும், அகலத்தையும், நுட்பத்தையும் விளக்கும்.

 

சங்கம் கண்ட சால்பு

 

   தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னரே தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் வளர்க்க மூன்று சங்கங்கள் நிறுவிய பெருமையுடையவர்கள். பண்டைக் காலத்திலிருந்து தமிழகத்தில் பரம்பரை பரம்பரையாகப் பயின்று வரும் பழங்கதைகளும், பைந்தமிழ் இலக்கியச் சான்றுகளும், உரையாசிரியர் கூற்றுகளும், சின்னமனூர் செப்பேடும் மதுரையில் பாண்டிய மன்னர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததை உறுதிப்படுத்துகின்றன. 13ஆம் லுயீ என்ற பிரஞ்சுப் பேரரசன் தன் மொழியைப் பேணிப் பாதுகாக்க 1525ஆம் ஆண்டு பிரஞ்சு கலைக் கழகத்தை நிறுவினான். தமிழர்களோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தங்கள் மொழியையும் இலக்கிய மரபுடைமையையும் பேணிப் பாதுகாக்க மூன்று சங்கங்களை - தலை, இடை, கடைச் சங்கங்களை நிறுவியுள்ளனர். இன்று கிடைத்துள்ள நூல்களில் பழமையான தொல்காப்பியம் இடைச் சங்க நூல் என்றும், எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் கடைச்சங்க இலக்கிய நூல்கள் என்றும் கருதப்டுகின்றன. பாண்டிய நாட்டுடனும் பாண்டிய மன்னரோடும் மதுரையோடும் தமிழை இணைத்துப் பேசும் மரபு தொன்றுதொட்டு வழங்கும் மரபாகும். தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின் மதுரை, தென்தமிழ் நாட்டு தீதுதீர் மதுரை, தமிழ் வையைத்  தண்ணம் புனல்  ஆகிய சங்க இலக்கியத் தொடர்கள் இதற்குச் சான்றாகும். சங்கத் தமிழ் என்று இடைக்கால, பிற்கால இலக்கியங்களில் பயின்று வரும் சொற்றொடரும் தமிழர் இலக்கிய மரபுடைமைக்கும் சங்கத்திற்கும் இருந்த தொடர்பினை வலியுறுத்தும். 

 

மூவகை நெறி

 

   தமிழர் இலக்கிய மரபைப் புலவர் நெறி, பொதுமக்கள் நெறி, சித்தர் நெறி என மூவகைப் படுத்திப் பார்க்கலாம்.

 

புலவர் நெறி இலக்கிய மரபு

 

   கற்றறிந்த அறிஞர்களால் உருவாக்கப்பட்டுச் செம்மையான மொழிநடை, திட்டமிட்ட இலக்கிய அமைப்பு, தெளிவான நோக்கம், சுவைமிகுந்த இலக்கியப் பாஙகு மரபு பேணும் மாண்பு, இலக்கண மரபு மாறாமை, பழைய இலக்கண இலக்கிய மேற்கோள் முதலிய பண்புகளுடன் திகழ்வதுதான் புலவர் இலக்கியப் போக்காகும். நமக்குக்¢ கிடைத்த இலக்கிய நூல்களில் மிகுதியானவை புலவர் இலக்கிய நெறியைச் சார்ந்தவை. சங்க இலக்கியமாகிய எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள் முதலிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம் முதலிய ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், உரைநடைகள் முதலியவை புலவர் நெறி இலக்கியங்களே ஆகும். தொல்காப்பியம் புலவர் நெறி இலக்கியங்களில் இன்று கிடைத்திருக்கும் நூல்களில் மிகப் பழமையான இலக்கண நூலாகும்.

 

சித்தர் நெறி இலக்கிய மரபு

 

   சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர்கள், பேறு பெற்றவர்கள், வீட்டின்பம் அடைந்தவர்கள் என்று பொருளாகும். கடவுளைக் காண முயல்கின்றவர்கள் பக்தர்கள். கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் எனத் தேவாரம் கூறும். இவர்கள் யோக நெறி நின்றவர்கள், அனுபூதி ஞானம் பெற்றவர்கள்  Mystics    என ஆங்கிலத்தில் அழைக்கப் பெறுவர். தமிழில் சித்தர் இலக்கிய மரபினைத் தோற்றுவித்தவர் திருமூலர். (5ஆம் நூற்றாண்டு) இவர் இயற்றிய திருமந்திரம் தோத்திரமும் சாத்திரமும் கலந்த நூல். பத்தாம் திருமுறையாக வைத்து எண்ணப்படுகிறது. சித்தர் இலக்கிய மரபில், பாடுபொருள் எளிய வாழ்க்கைத் தத்துவம், யோகம், மருத்துவம் முதலியன பற்றி அமையும். உருவம் எளிய சொற்களால் அமைந்த பாடலக்ளாக இருக்கும். உத்தியில் குறியீட்டுச் சொற்கள் மிகுதியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கும். சமயச் சடங்குகளைச் சாடும் போக்கும், எளிய வழிபாட்டு நெறியும், சீர்திருத்த நோக்கும் சித்தர் பாடல்களில் உண்டு. போகர், குதம்பைச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர் முதலானோர் பாடல்கள் புகழ்பெற்றவை. தாயுமானவர் இராமலிங்கர் போன்றவர்களையும் சித்தர்களாகக் கருதுவர். சித்தர்கள் கண்ட மருத்துவம் சித்த மருத்திவம் எனப் போற்றப்படுகிறது. இஸ்லாம் மதத்தையும் இந்து மதத்தையும்  சமரசப்படுத்தும் நோக்கில் சித்தர் நெறியில் நின்று குணங்குடி மஸ்தான் போன்ற புலவர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர். சித்தர் பாடல்களில் வல்நடை, மெல்நடை என இருவகை நடை உண்டென்றும்,வல்நடைப் பாடல்கள் எளிதில் விளங்காத முறையில் குறியீட்டுச் சொற்களைக் கொண்டிருக்கும் என்றும், மெல்நடைப் பாடல்கள் கேளப்பா, நீளப்பா என்று பாடுவன என்றும் தெ. பொ மீனாட்சி சுந்தரனார் கூறுகிறார்.

 

பொது மக்கள் நெறி இலக்கிய மரபு

 

   தோற்றத்தால் பொதுமக்கள் நெறியாகிய நாட்டுப்புற இல்க்கியப் போக்கே மற்ற இருவகை இலக்கிய நெறிகளுக்கும் முந்தியது. நாட்டுப்புற இலக்கியங்கள் மக்கள் வாழ்வுடன் நெருங்கிய தொடர்புடையவை. ஏடுகளில் எழுதிவைக்கப்படாத நிலையில் வாய் வழியாக வாழ்ந்துவரும் இயல்பின. எழுதியவர்கள் யார் என்று தெரியாத நிலையும் உள்ளது. எளிமை, இனிமை, எள்ளல், இசைமை. வாழ்க்கைத் தொழில் அனுபவம் முதலிய பண்புகளே மக்கள் நெறி இலக்கிய மாண்புகளாகும். பழமொழிகள், பிசி என்னும் விடுகதைகள் பற்றிய நாட்டுப்புற இலக்கிய வகைள் தொடர்பான குறிப்பு தொல்காப்பியத்திலேயே உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் இன்றியமையாத கூறுகளிலும் தொழில் நிலைகளிலும் நாட்டுப்புறப்பாடல்கள் இடம்பெறுகின்றன. தாலாட்டு குழந்தையைத் தூங்க வைக்கப் பாடுவது, இறந்தவரின் பிரிவுத்துன்பத்தை எடுத்து இயம்புவது ஒப்பாரி. ஏற்றப் பாடல், நடவுப்பாடல் முதலியவை தொழிலுடன் தொடர்புடையவை. கும்மி, கோலாட்டம், கழங்கு முதலியவை விளையாட்டுடன் தொடர்புடையவை. இப்பாடல்கள் சிலப்பதிகாரம், திருவாசகம், முதலிய புலவர் இலக்கிய நெறியிலும் புகுந்துள்ள போக்கும் தமிழர் இலக்கிய மரபில் உண்டு. நாட்டுப்புறக் கதைகள் பல வாழ்வியல் உண்மைகளை உணர்த்தவும் மகிழ்ச்சியூட்டவும் பயன்படுகின்றன.

 

தொல்காப்பியம் தரும் இலக்கிய மரபு

 

தொல்காப்பியர் தமக்கு முன்னிருந்த இலக்கியங்களையும்¢, இலக்கணங்களையும் ஆராய்ந்து

பொருளதிகாரத்தில் தமிழர் கண்ட இலக்கிய மரபுடைமைக் கோட்பாடுகளை விரிவாக

விளக்கியுள்ளார். இலக்கியமரபுகளை அவர் புலனெறி வழக்கம் என அழைப்பர். புலவர் கையாளும் படைப்பு மரபுநெறியே புலனெறி. இலக்கியத்தின் பாடுபொருளை

அவர் அகம், புறம் எனப் பாகுபடுத்துகிறார், இப்பாகுபாடு தமிழுக்கே உரிய ஓன்று.

அகம் என்பது உள்ளத்தளவில் உணரப்படுவதாகிய காதல் பற்றியது. காதல் அல்லாத

வீரம், கொடை முதலியன பற்றியது புறம். இது புறத்தார்க்குப் புலனாவது. அகம்

வீடு பற்றியது, புறம் நாடு பற்றியது. காதல் பற்றிய பாடல்களிலும், காதலர் இன்னார்

என்று அறியமுடியாதவாறு இயற்பெயரோ இனப்பெயர் முதலியனவோ இல்லாமல் அமைந்த பாடல்களே அகம் என்றும், அவ்வாறு  பொதுவாக அமையாத காதல் பாடல்கள புறம் என்றும் கருதப்பட்டன..அகம் புறம் முறையே அகத்திணை புறத்திணை எனப் பெயர் பெறும். அகத்திணை கைக்கிளை (காதல் தொடக்க நிலை). அகன் ஐந்திணை( காதல் வளர்நிலை) பெருந்திணை  ( காதல் முதிர்நிலை)என எழு வகைப்படும். அகன் ஐந்திணை காதலரின் மனநிலையையும் வாழ்வையும் ஒட்டிக் கூடல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஐவகையாக அமைந்தது, இவற்றை உரிப்பொருள் என்பர். இவை முறையே நிலத்தின் அடிப்படையில் குறிஞ்சி (மலை). பாலை, முல்லை,(காடு) நெய்தல்(கடல்), மருதம் (வயல்) எனப் பெயர் பெறும். உரிப்பொருளாகிய நிகழ்¢ச்சி நடைபெறும் இடமே நிலம். அது நடக்கும் காலமே பொழுது, நிலமும் பொழுதும் முதற்பொருள் ஆகும். உரிப்பொருளுக்குப் பின்னணியாக விளங்கும் இயற்கைச்சூழல், உணவு, கலைகள், மக்கள் தொழில் போல்வன கருப்பொருள் எனப்படும். இத்தகைய அமைப்பில்  தலைவன், தலைவி, தோழி முதலியோர் கூற்றாக வரும் நாடகத்தனி நிலைப் பாடல்களே அகப் பாடல்கள்.திருமணத்துக்கு முந்திய நிகழ்ச்சிகளைக் களவு என்றும், பிந்திய நிகழ்ச்சிகளைக் கற்பு என்றும், தொல்காப்பியம் பேசும்

புறத் திணையும்  வெட்சி,  காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண்

ஆகிய எழு வகைப்படும்.  இவை அனைத்தும் பழங்கால அரசர்களின் போர் தொடர்பான நிகழ்ச்சிகளைக் குறிக்கும். அகம் புறம் பற்றிய தொல்காப்பியர் தம கோடபாடுகள் மிக விரிவானவை. தனித்துவம் மிக்கவை. தமிழ் இலக்கியத்திறகே தனிச்சிறப்புரிமை உபையவை. என்பார் தமிழண்ணல்.

 

தொல்காப்பியர் இலக்கியத்தின் வடிவம், வகை பற்றிச் செய்யுளியலிலும்.  சுவை பற்றி

மெயப்பாட்டியலிலும், வெளிப்பாடு பற்றி உவமவியலிலும், மரபு பற்றி மரபியலிலும்

விளக்குகிறார்.

 

 

சங்க இலக்கிய மரபு

 

   பாட்டும் தொகையுமாகிய பழந்தமிழ் இலக்கியமே சங்க இலக்கியமாகும். தமிழனின் தொன்மைக்கும் தோலாப் பெருமைக்கும் சான்றாக நிற்கும் பட்டயங்களே சங்கப் பாடல்கள் என்பர் அறிஞர். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று பாடினார் நாமக்கல் கவிஞர். தமிழனை தலை நிமிர்ந்து நிற்குமாறு செய்வதே சங்கம் இலக்கியம் தான் என்பது இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் கருத்தாகும். இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கையை கற்பனைக்  கலப்பின்றிப் படம்பிடித்துக் காட்டும் அற்புதக் கண்ணாடி சங்க இலக்கியம். எட்டுத் தொகைப் பாடல்கள் தனித்தன்மையும் பொருள் ஆழம் உடையவை என்றும்  உள்ளதை உள்ளவாறு உரைக்கும் இயல்பினை என்றும் பழைய கிரேக்கப் பாடல்களோடு ஒப்பவைத்து எண்ணத்தக்க கலைநுட்பத்தோடு இயற்றப்பெற்றவை என்றும் கமில் சுலபில் பாராட்டுகிறார்.

 

    தமிழின் தனித்துவமான சில பாரம்பரியங்கள் வார்த்தெடுக்கப்பட்டது சங்க காலத்தில் தான். திணை மரபு உணர்த்தும் வாழ்க்கை முறைமைகள், அந்த வாழ்க்கை முறைகளுக்கேற்ற பண்பாட்டு நிலைகள், அந்தப் பண்பாட்டுப் பின்னணிக்கேறற இலக்கிய உருவாக்கம் இக்காலத்தில் நிகழ்கின்றது. குடியிருப்புக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த லாழ்க்கை வேறுபாடுகள் அகம் புறம் என இரு கிளைப்படுத்தப்பட்டுப் பின்னர் இலக்கிய மரபாகிறத்.

இந்த அகத்தின் இலக்கிய மரபு தமிழின தனிச் சிறப்பாகிறது. ஆரிய அரசன

பிரகத்தனுக்குத் தமிழ் கற்பிப்பான் பொருட்டுக் கபிலர் பாடியதாக் கூறப்படுவது குறிஞ்சிப்பாட்டு.- அகத்திணைக்கொத்து. தமிழ் என்பது அகத்திணை தான் என்கிறது. பின்னர் களவியல் உரைகாரரும் களவியல் கூறியதை தமிழ் நுதலிற்று என்பர். அகமரபு தமிழ் மரபு என்பது மாத்திரமல்ல முக்கியம் தமிழ் தனது இலக்கிய வெளிப்பாட்டுக்குச சமஸ்கிருத இலக்கிய மரபை உதாரணமாகக் கொண்டிருக்கவில்லை என்பதும் முக்கியம் தமிழின் இலக்கியத் தனித்துவம் வற்புறுத்தப்படுகிறது என்பார் கா. சிவதம்பி.

 

   சங்க இலக்கியம் உணர்த்தும் அகம் புறம் கோட்பாடு உலக இலக்கிய கோட்பாட்டுக்குத் தமிழர்கள் வழங்கிய நன்ககொடைகள் என்று கூறலாம். சங்க இலக்கியத்தைத் திணை இலக்கியம் என்பார் தமிழண்ணல். சங்க இலக்கியப் பாடல்கள் 2381. அதனுள் அகம் பற்றியவை 1862. சங்கப் புலவர் தொகை 473. அதனுள் அகம் பாடினோர் 378. இதன் வழி

சங்க இலக்கிய மரபு அகத்தையே அதிகம் போற்றியதெனலாம். இதன் சிறப்பை

 டாக்டர் வ சுப மாணிக்கம் அவர்களின் தமிழ்க் காதல் என்னும் ஆய்வேடு நன்கு மெய்ப்பிக்கும். சங்க அகப்பாடல்கள் அனைத்தும் உளவியல் நுட்பம வாய்நதவை.

அகப் பாடல் இயற்றுதற்கு நிலத்தின் காலத்தின இயற்கை அறிவு வேண்டும்.  ¢தமிழ்ச் சான்றோர் காதற்காமத்தை ஒரு தனிப்பொருளாகப் போற்றி ஒரு தனி இலக்கிய வகையைப் படைத்ததன் நோக்கம் காதற் பருவம் புகும் இரு பாலார்க்கும் ஒழுக்கமுடைய காமக்கலையைக் கறபிப்பதுவே என்பார் வ,சுப.மாணிக்கனார்.

 

  சங்கப் புலவர்கள் இயற்கையை இயற்கைக்காகப் பாடுவதில்லை. உரிப் பொருளுக்கேற்ற

பின்னணியாகப் பாடும் இயல்பினர் என்பது மு. வரதராசனார், தனிநாயக அடிமளார் முடிபு.

 

   யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் ஓருலகச் சிந்தனையும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தான் கலந்தெனவே என்னும் கருத்தாழமிக்க உவமையும் இலக்கிய உலகில் என்றும் நின்று நிலவும் கருத்துக்களாகும். எ கே இராமானுஜம் ஜியார்ஜ் ஹார்ட் ஆகியோரின் ஆங்கில நூல்கள் தமிழர்களின் சிந்தனை ஆற்றலை உலகிற்கு நன்கு வெளிப்படுத்தும்.

 

  புறப் பொருள் பற்றிய பாடல்களில் ஆற்றுப்படை என்னும் ஓர் இலக்கிய வகை சிறப்பிடம் பெற்றுள்ளது. பத்துப் பாட்டில் செம்பாதியும், புறநானூறு, பதிற்றுப்பத்து

ஆகியவற்றில் சில பாடல்களும் இவ்வகையின. வளம் பெற்ற கலைஞர் வறுமையால் வாடிய

கலைஞர்க்கு வழிகாட்டி வள்ளல் ஒருவனிடம் அனுப்புவதாகப் பாடும் பாட்டே ஆற்றுப்படை எனப்படும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் உயர்ந்த நோக்கத்தால்

உருவானதே இவ்வகை இலக்கிய மரபு.

 

திருக்குறள் இலக்கிய மரபு

 

   தமிழர்கள் தரணிக்கு வழங்கிய நன்கொடைகளில் தலையாயது திருக்குறளேயாகும். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாரதியார் இதனை எடுத்து இயம்பியுள்ளார். உலகமொழிகள் பலவற்றுள் பைபிள், குரான் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் திருக்குறளேயாகும். கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறளின் திறத்தைப் பாராட்டாத அறிஞர்களே இல்லை எனலாம். கன்பூசியஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், சினிகா போன்ற உலகப் பேரறிஞர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க பெருமகனார் திருவள்ளுவர் என்பது தனிநாயக அடிகள் போன்ற பல அறிஞர்களின் கருத்தாகும். உலக இலக்கியங்களில் திருக்குறளைப் போலச் சிறந்த அறம் உரைக்கும் நூல் வேறு இல்லை என்பது டாக்டர் ஆல்பர்ட் ஸ்சுவைசர் கருத்தாகும்.

 

வள்ளுவர் எத்தனையோ அறநெறிச் சிந்தனைகளை, அரசியல் கருத்துக்களை உலகிற்கு வழங்கியுள்ளார். அவற்றில் ஒன்று அவர் அறத்திற்குத் தரும் விளக்கம் எனலாம். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனத்து அறன் ஆகுல நீல பிற(34) என்பதாகும். மனிதன் மனமுடையவன், மனத்தூய்மையே மாண்பான அறம் என்று வள்ளுவம் கூறுகிறது. மனம் தூய்மையானால் எண்ணம் தூய்மையாகும் எண்ணம் தூய்மையானால் சொல் தூய்மையாகும், சொல் தூய்மையானால் செயல் தூய்மையாகும். எனவே எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றன் தூய்மையே அறம் எனக் காலம் இடம் கடந்து நிற்கும் அறத்தை வள்ளுவர் விளக்குகிறார். உலக மனித சமுதாயம் அனைத்தும் ஒப்ப முடிந்த ஒரு கருத்து இது என்பதை அனைவரும் உணர்வர்.

 

திருவள்ளுவர் தமக்கு முன்னிருந்த பாடுபொருள் பாகுபாடாகிய அகம், புறம் என்பதை

அறம், பொருள், காமம்(இன்பம்) என மூன்றாகக் கண்டு தம் கருத்துகளை விளக்க முறபடுகிறார், இம் மரபுக்கான வித்து தொலகாப்பியம், சங்க இலக்கியம் ஆகியவற்றில்

உள்ளது. இப்பாகுபாட்டைப் பின்வந்த நாலடியார் முதலிய நூல்கள் பினபற்றியுள்ளன.

 

சமண. பெளத்த சமயச் செல்வாக்கு மிகுந்த காலத்தில் திருக்குறள் தோன்றினாலும்

அது வாழ்க்கை வாழப்பட வேண்டும் என்னும் கருத்தினை வலியுறுத்துகிறது. அதில் வாழ்க்கை ஒரு சுமை அல்ல, ஒரு சமுக முன்னேற்றத்துக்கான ஒரு பொறுப்பு,

திருக்குறளின் இந்த நிலைப்பாடு அகில இந்திய அறநூல்களுக்குள்ளே திருக்குறளுக்கு-

அதன் வழியாகத் தமிழுக்கு- ஒரு தனித்துவத்தைத் தரும் முறைமையை ஆல்பர்ட்

சுவைசர் எடுத்துக் கூறுகிறார். அறனெனப் பட்டதே இலவாழ்க்கை (49), அறத்தாற்றின்

இலவாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப பெறுவ தெவன் (46), வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் (50) என்னும் குறள்கள்

இதற்குச் சான்று பகரும்.குறள் வெண்பா வடிவத்தையும் தமிழ் இலக்கிய மரபில் தோற்றுவித்தவரும் திருவள்ளுவரே ஆவார்.

 

சிலப்பதிகார மரபு

 

    1800 ஆண்டுகளுக்கு முன் தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.

காப்பியம் எனபதைத் தொடர்நிலைச் செய்யுள் என்பர். நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்னும் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்று இதனைப் பாராட்டுகிறார். பாரதியார். மனித நேயத்தைக் காட்டுக் துன்பியல் சார்ந்த கதையாலும், விழுப்பமிகு சிறப்பாலும், அழகாலும், ஆற்றல் மிக்க கவித்திறத்தாலும் உலகக் காப்பியங்களில் ஒன்றாக உயர்ந்த நிற்பது சிலப்பதிகாரம் என்று போற்றுகிறார் கமில் சுலபில்.

 

    உலக மொழிகள் பலவற்றிலும் உள்ள முதல் காப்பியங்கள் அரசனை அல்லது ஆண்டவனைத் தலைவனாக அமைத்துப் பாடப்பட்டவை. சமஸ்கிருத்திலுள்ள ஆதிகாவி யமான வால்மீகி இராமாயணம் திருமாலின் அவதாரமான இராமனைத் தலைவனாகக் கொண்டது. கிரேக்கர்களின் பழங்காப்பியமான ஹோமரின் இலியட், இலத்தின் மொழியின் பழங்காப்பியமான வர்ஜிலின் ஈனியட் ஆகியவையும் முடிமன்னர்களையே தலைவர்களாகக் கொண்டுள்ளன. ஆனால் இளங்கோவின் சிலப்பதிகாரமோ குடிமக்களின் ஒருவனாகிய கோவலனைத் தலைவனாகக் கொண்டது. எனவே இதனைக் குடிமக்கள் காப்பியம் என்று போற்றுகிறார் பன்மொழிப் புலவர் தெ. பொ மீனாட்சி சுந்தரனார். கண்ணகியின் பெருமை பேசுவதால் பெண்ணின் பெருமை போற்றும் முதல் காப்பியம் எனவும் இதனைப் பாராட்டலாம். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்னும் மூன்று நீதிகளை உலகுக்கு உணர்த்திய நூல் சிலப்பதிகாரம் ஆகும். தமிழர்கள் போற்றுக் கற்புக் கோட்பாட்டினை இது காவியமாக எடுத்து இயம்புகிறது.

உயிரினும் சிறந்தனறு நாணே.

நாணினும் செயிர்தீர்க் காட்சி கற்புச் சிறந்தன்று என்பது தொல்காப்பியம்.

சிலப்பதிகாரம் கதைக் கருவுக்கு உயிராய் விளங்கும் அணிகலனாகிய சிலம்பால்

பெயர் பெற்றது. இம் மரபைத் தொடர்ந்து பின் வந்த காப்பியங்களான மணிமேகலை,

சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சூளாமணி, முதலியனவும் அணிகலன்களின்

பெயர்களையே பெற்றன. சிலப்பதிகாரக் கதையின் நாயகி கண்ணகி வழிபாடு பத்தினித்

தெய்யோ வழிபாடாக இலங்கையில் பரவி இருப்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

 

பக்தி இலக்கிய மரபு

 

   பல்லவர் காலத்தில் (கி.பி.600-800) நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஆண்டவனைத் தலைவனாகக் கொண்டு அவன் அருள் பெற்றுப் பக்தியுடன் பாடிய பண்சுமந்த பாடல்களைப் பக்தி இலக்கியம் என்கின்றோம். சைவ சமயப் பாடல்களைத் திருமுறைகள் என்றும் வைணவப் பாடல்களை நாலாயிர திவ்வியப்பிரபந்தம் என்றும் தொகுப்பாகக் காண்கின்றோம். இப்பாடல்கள் தமிழின் தனித்தன்மைக்குரியவை என்பதை விளக்கும் தனிநாயக அடிகளார் ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றால், பிரஞ்சு தூதின் மொழி என்றால், இத்தாலியம் காதலின் மொழி என்றால். ஜர்மன் தத்துவத்தின் மொழி என்றால், இலத்தின் சட்டத்தின் மொழி என்றால், தமிழ் பக்தியின் மொழி என்று கூறுகிறார். ஜி யு போப் திருவாசகத்தை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து அளித்துள்ளார். தமிழிலுள்ள அளவுக்குப் பக்திப் பாடல்கள் வேறு எந்த மொழியிலும் இல்லை எனலாம்.

 

   தமிழர்கள் கண்ட பக்தி என்பது உணர்ச்சி வெள்ளம் அன்று. வெறும் வரட்டுத் தத்துவம் அன்று, குருட்டு நம்பிக்கையும் அன்று. உணர்ச்சி, அறிவு(தத்துவம்), நம்பிக்கை ஆகிய மூன்றும் இணைந்த ஒன்று என்பதனையும் நாம் நன்கு உணரவேண்டும். அமெரிக்காவிலுள்ள சிக்காகோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நார்மன் கட்லர் என்பவர் தமிழர்கள் கண்ட பக்தி இலக்கியத்தின் தனித் தன்மையைத் தம் டாக்டர் பட்டம் ஆய்வேட்டின்வழி நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

 

  விறகில் தீயினனாகவும், பாலி¢ல் படுநெய் போலவும், மாமணியில் சோதி போலவும் மறைந்து நிற்கும் இறையைத் தாய், தந்தை, நண்பன், ஆண்டான்,ஆசிரியன்,தலைவன்,

காதலன், முதலிய பலமனித உறவுநிலைகளில் வைத்துப் பாடி நாயன்மார்களும் ஆழ்வார்களும் வழிபட்டனர், இத்தகைய உறவுநிலையைப் பாரதியார் சேவகன், காதலி எனப் பல நிலைகளில் நீட்டிக் கண்ணன் பாட்டில் பாடுகிறார். இந்த உறவுநிலை தமிழ்ப் பகதி இலக்கியத்தின் தனிக் கூறாகக் கருதப்படுகிறது. இது இசுலாம், கிறித்துவம் ஆகிய சமயங்களுக்கும் சென்றதாகக்   கூறுவர்.

 

  இந்தியாவின் இடைக்கால வரலாற்றில் பக்தி இயக்கம் உயிர்நிலையாக விளங்குகிறது. அந்த இயக்கம் காவிரிக் கரையிலும், தாமிரபரணிக் கரையிலும் நாயன்மார்கள் பாடல்களாகவும் ஆழ்வார்கள் பாடல்களாகவும்   தோன்றி இராமனுஜர் வழியே இந்தியா முழுவதும் பாய்ந்து நாட்டின் உயிரைச் செழிக்கச் செயதது எனலாம். பெரிய புராணக்கதையினைக் கர்நாடகத்திலும தெலுங்கு நாட்டிலும் வாழ்ந்த வீரசைவப்பெருமக்கள் பழம்பெரும் சைவர்கள் வரலாறு எனப் பாராட்டிப் பலவகை இலக்கியமாகப் பாடி அவ்வந்நாட்டு மக்களை மகிழ்வித்தனர். தாய்லாந்தில் தேசியத் திருவிழாவாக முன்பெல்லாம் கொண்டாடப்பெற்று வந்த விழாவின் பெயர் திருப்பா த்ரிவெம்பா. இது தமிழரது திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவற்றைச்சுட்டுகிறது. தமிழகத்தில் போரிடும் சைவமும் வைணவமும் நாடு கடந்து சென்றபோது ஒன்றாக இணைந்து பெளத்தத்தோடும் பிணைந்து நிற்பதைப் பாரக்கிறோம. ( தெ.பொ.மீ)

 

  தமிழரின் பக்தி இலக்கிய மரபு மெய்கண்டாரின் சைவ சித்தாந்தத் தத்துவத்தையும்,

இராமனுஜரின் விசிஷ்டாதவைத தத்துவத்தையும் தோற்றுவித்தது, சைவ சித்தாந்தம் திராவிடர்களின் கூரத்த மதியின் தேர்ந்த விளைவு என்பார் ஜி யூ போப்.

 

 கம்பராமாயண மரபு

 

   இந்நூல் கி பி 12ஆம் நூற்றாண்டில் கம்பனால் வால்மீகி இராமயணத்தைத்  தழுவி எழுதப்பட்ட நூல். எனினும் கம்பனின் கவிவளத்தைக் காட்டும் பத்தாயிரம் பாடல்களை உள்ளடக்கிய ஒன்றாகும். கம்பனைக் கவிச்சக்கரவர்த்தி எனத் தமிழ் அறிஞர்கள் போற்றுவர்.. கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழக்¢ கம்பன் பிறந்த தமிழ்நாடு எனப் போற்றுகிறார் பாரதியார். கம்பராமாயணமானது ஹோமர் எழுதிய இலியட்,டையும், வெர்ஜில் எழுதிய இனியட்டையும், மில்டன் எழுதிய சுவர்க்க நீக்கத்தையும், வியாச பாரதத்தையும், தனக்கே முதல் நூலாக உள்ள வால்மீகி இராமாயணத்தையும்கூட பெருங்காப்பிய இலட்சண அம்சங்களுள் அநேகமாய் எல்லாவற்றையும் வென்றுவிட்டது என்று கூறுகிறார் வ. வே. சு. ஐயர். தமிழிலுள்ள நூல்களில் கவிச்சுவையில் கம்பனை வெல்ல ஆளில்லை. கம்பனின்

இலக்கியப் பெருமையை ஜார்ஜ் ஹார்ட் ஆரணிய காண்டத்தைக் கவிதையாக மொழிபெயர்த்¢து வெளியிட்டுக் காட்டியுள்ளார்.

 

கம்பன் மானுடத்தின் வெற்றியைக் காட்டியுள்ளான். மேலும் அறம் வெல்லும் பாவம் தொற்கும் என்பதைத் தன் காவியத்தின் பாவிகப் பொருளாகப் பாடியுள்ளான். தமிழ்ப் பணபாட்டிற் கேற்ப மூலக் கதையிலிருந்து பல மாறுதல்களைச் செய்து வழிநூல் செய்வதற்குரிய வழிகாட்டியாகும் ஓர் இலக்கிய மரபைக் காட்டினான் கம்பன்.

 

கம்பர் பாடிய இராமாயணம் கேரளத்திலும், கர்நாடகத்திலும் பரவியதோடன்றி நாடு முழுவதும்

சுற்றி வந்த துளசிதாசர் போன்றவர்கள் வழியே வடநாட்டிலும் பரவியது. சீதையும் இராமனும் தமிழ் மரபான ஐந்திணை அன்பின் வழியே திருமணம் ஆவதற்கு முன்னரே ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டு நின்று, பின் வில் வளைத்ததால் எல்லோரும் அறியத்

திருமணம் செய்து கொண்டனர் என்ற கம்பன் கதை துளசிதாசர் இராமசரித மானசிலும்

அமைந்துள்ளது, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கம்பராமாயணச் செல்வாக்கு

இருப்பதைப் பேரா. சிங்காரவேலு விளக்கியுள்ளார்.

 

சிற்றிலக்கிய மரபுகள்

 

   ஒரு பாட்டின் கடைசி எழுத்து, சொல், சீர், அசை அடுத்த பாட்டின் தொடக்கமாகஅமையப் பாடப் பெறும் அந்தாதி, அரசனையோ கடவுளரையோ குழந்தையாகக் கருதி குழந்தைக்குரிய பத்துப்பருவங்களை அடிப்படையாகக் கொண்டு பாடப்பெற்ற பிள்ளத்தமிழ், அரசன் அல்லது ஆண்டவன் உலா வரும்போது அவனைக் கண்டு காதல் கொள்ளும் ஏழு பருவ மகளிர் இயல்பைப் பாடும் உலா, போரில் ஆயிரம் யானையைக் கொன்ற வீரனைத் தலைவனாக வைத்துப் பாடப்பெறும் பரணி, காதல் நிறைவேறாத நிலையில் காளை ஒருவன் தன் காதலை ஊரார்க்கு  வெளிப்படுத்த உதவும் மடல், இறைவனைத் துயில் எழுப்பும் வகையில் அமைந்த திருப்பள்ளியெழுச்சி, காதல் துறைகளை ஒருங்கிணைத்துப் பாடும் கோவை,பலவகை யாப்பு கொண்ட பாடல்களைக் கொண்டு ஒரு பொருள் பற்றிப் பாடும் மாலை, பல வகை யாப்பும் பொருளும் கொண்ட பாடல்கள் ஒருங்கமைந்த கலம்பகம், பிற்காலத்தில் சமுதாயத்தின் அடித்தளத்தில் அமைந்த மக்களை மையமாக் கொண்ட குறவஞ்சி பள்ளு முதலிய இலக்கிய வகை மரபுகள் தமிழர்கள் கண்ட சிற்றிலக்கிய மரபுடைமைகளில் சிறந்தனவாகக் கருதப்படும் தகுதி வாய்ந்தவை எனலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

முடிவுரை  

 

வட வேங்கடம் தென் குமரி ஆயிடை இருந்த தமிழர் இலக்கிய மரபு வட திசை நோக்கி இமயம் வரை சென்றது. கீழ்த் திசை நோக்கித் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் போனது. இன்று மேற்குத் திசை நோக்கி ஐரோப்பா, அமெரிக்கா,

கனடா  தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் காலடி எடுத்து வைத்துள்ளது,  ஆஸ்திரேலியா வரை பரவியுள்ளது. இலங்கை, மலேசியா. சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வேரூன்றித் தழைத்திருப்பது போல் ஏனைய நாடுகளிலும் தமிழர்

கண்ட இலக்கிய மரபு தழைக்க ஆவன செயவோமாக. அனைத்துலக அரங்கில்

தமிழ் செழிக்க முனைந்து ஒற்றுமையுடன் செயற்படுவோமாக.

 

 

 

 

 

துணைநூல்கள்

 

அகத்தியலிங்கம் ச, தமிழ் இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்ளே, சிதம்பரம்,

                மணிவாசகர் நூலகம், 2000.

தமிழண்ணல், தொல்காப்பியர், சாகித்திய அக்காதெமி, புது தில்லி, 1998

மீனாட்சிசுந்தரனார், தெ.பொ. உலக நாகரிகத்தில தமிழரின் பங்கு, மதுரை,

                சர்வோதய இலக்கியப் பண்ணை, 1982

மாணிக்கம் வ.சுப. தமிழ்க்காதல¢, சென்னை,பாரி நிலையம், 1962.

வரதராசனார மு இலக்கிய மரபு, சென்னை, பாரி நிலையம், 1997

அழகப்பா இராம் மோகன் (பதி) திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு

                சிகாகோ, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை,2000

 

Kamil Zvelebil, The Smile of Murugan on Tamil Litersture of South India,

                                   Leiden, E,J, Brill, 1973.

Kamil Zvelebil, A History of Indian Literature Tamil Literature, Wiesbaden, 

                                   Otto       Harrassowitz, 1974.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக