வெள்ளி, 2 மே, 2014

சமயம் - சங்கரர் கண்ட சண்மதம் - 2




சங்கரர் கண்ட  சண்மதம் - 


4 கௌமாரம்.  முருக வழிபாடு                                                      


                சங்கரர் கண்ட சண்மதங்களுள் கௌமாரம் என்னும் முருக வழிபாடு தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்துக்குரிய ஒன்றாகும். கௌமாரம் என்பது குமார என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றியது. குமார என்பது இளமை, மகன் என்னும் பொருளடையது. மாறா இளமை உடையவனாவும், சிவபெருமானின் மகனாகவும் கருதப் பெறுகிற முருகனை முதன்மைக் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயநெறியே கௌமாரம் ஆகும்.

                தமிழகத்தில் முருக வழிபாடு மிகப் பழங்காலத்திலேயே - அதாவது கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே இருந்தது என்பதற்குத் தமிழில் இன்று கிடைத்துள்ள நூல்களிலெல்லாம் பழைமையானதாகக் கருதப்பெறும் தொல்காப்பியத்திலேயே சான்று உள்ளது.  குறிஞ்சி நிலமாகிய மலைப் பகுதிக்குரிய தெய்வமாக முருகனைக் குறிப்பிடுகிறது அந்நூல்.  அது முருகனைச் சேயோன் ( செம்மை நிறத்தவன், மகன்) என அழைக்கிறது.  சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை என்னும் நக்கீரர் இயற்றிய நூல் முருகப் பெருமான் பெருமையைத் தனியே எடுத்துப் பேசும் முதல் சங்க நூலாகும். மேலும் பரிபாடல், நற்றிணை, குறுந்தொகை முதலிய சங்க நூல்களிலும் முருகனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

                தமிழகத்தில் முருகனுக்குரிய வழிபாட்டுத் தலங்கள் பல உள்ளன.  அவற்றுள் ஆறுபடை வீடு எனப்படும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருஆவினன்குடி(பழனி), ஏரகம் (சுவாமிமலை), குன்றுதோராடல் ( திருத்தணி), பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை.  தமிழகத்தில் தோன்றிய முருக வழிபாட்டினைத் தமிழர் தரணியெங்கும் பரப்பத் தலைப்பட்டனர்.  வட இந்திய நகரங்களில் முருகன், சுப்பிரமணியன் என்னும் பேரில் தேவர்களின் படைத் தலைவனாக (தேவ சேனாபதியாக)வழிபட்டு வந்த நிலையைக் காணமுடிகிறது.  இலங்கையில் கதிர்காமம் முதலிய முருக வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.  தென்கிழக்கு ஆசிய நாடுகளாகிய மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், பர்மா முதலிய இடங்களுக்கு முருக வழிபாட்டினைக் கொண்டு சென்ற பெருமை நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைச் சாரும்.  மொரீஷியஸ், பியுஜித்தீவுகளிலும் முருக வழிபாடு உள்ளது.  மேலும் வாஷிங்டன், சான்பிரான்ஸிஸ்கோ, லண்டன், சிட்னி, டொராண்டோ முதலிய நகரங்களிலும் முருகனுக்குரிய கோவில்கள் இன்று உள்ளன.

                முருக வழிபாட்டினை விளக்கும் நூல்கள் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் உள்ளன.  சமஸ்கிருதத்தில் உள்ள வேதமும், குமாரதந்திரம் என்ற ஆகமமும் , ஸ்கந்த புராணம், குமாரசம்பவம் முதலிய நூல்களும் முருகனின் பெருமை பேசும்.  தமிழில் திருமுருகாற்றுப்படை, பரிபாடல், அருணகிரியாரின் திருப்புகழ் முதலிய நூல்கள் , குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பா முதலிய நூல்கள் முருக வழிபாட்டின் சிறப்பைக் கூறும்.  கச்சியப்பரின் கந்தபுராணம் முருகன் சூரபன்மனை வென்ற வரலாற்றைச் சொல்லும். தண்டபாணி சுவாமிகள் இயற்றிய கௌமாரவிநோதம், கௌமாரமுறைமை, கௌமாரநூல் ஆகியவை கௌமார சமய தத்துவத்தைக் கூறும் தமிழ் நூல்களாகும்.  முருக வழிபாட்டினைக் கூறும் நூல்கள் ஆங்கிலத்திலும் இன்று வெளியாகியுள்ளன.

                முருகன் என்னும் சொல்லுக்கு மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும், நிறைந்த இறைமைத் தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் காண்பர் தமிழ் அறிஞர்.  தமிழில் உள்ள மெல்லின (ம்), இடையின (ர்), வல்லின (க்)            மெய்யெழுத்துக்களுடன் என்ற உயிர் எழுத்து இணைந்து முருகு எனபதாயிற்று என்பர் இலக்கண அறிஞர்.  செவ்வேள், சேயோன், வேலன், கந்தன், கார்த்திகேயன், குகன், குமரன், தண்டாயுதபாணி, ஆறுமுகன், சரவணபவன், சுப்பிரமணியன் எனப் பல பெயர்கள் முருகனுக்கு உண்டு.

                முருகப்பெருமான் வடிவம் ஒரு திருமுகமும் நான்கு கைகளுடனும் இருப்பதுண்டு.  ஆறுமுகமும் பன்னிரு கையும் கொண்டு விளங்கும் வடிவமும் உண்டு, கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மேல், கீழ் என்னும் திசைகளே ஆறுமுகங்கள்.  இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவன் என்பதன் அடையாளமே இது,  இறைமைக் குணங்களாகிய முற்றுணர்வு, எல்லையற்ற இன்பம், இயற்கையறிவு, தன்வயமுடைமை, பேரருள், பேராற்றல் என்பவற்றின் அறிகுறியே ஆறுமுகம் என்பாரும் உண்டு.  அகச்சமயங்கள் ஆறும்  புறச் சமயங்கள் ஆறுமே பன்னிரு கைகள்.  முருகனுக்குரிய ஆயுதம் வேல். இது பரந்து, விரிந்து, ஆழ்ந்து, அகன்று இருக்கும் ஞானத்தின் அடையாளம். முருகனுக்கு இருமனைவியர்.  தெய்வயானை, வள்ளி இவர்களில் வள்ளி ஆர்வம் (இச்சை) என்பதன் அடையாளம்.  தெய்வயானை, செயலின் (கிரியையின்) அடையாளம்.  எனவே, ஒரு செயலைச் செய்வதற்குத் தேவையான அறிவு(knowledge), ஆர்வம்( interest), செயல் ( action) என்பதன் அடையாளமே  வேல்.  வள்ளி, தெய்வயானையுடன் இருக்கும் முருகத் திருவுருவம் .முருகனுக்குரிய கொடி கோழிக்கொடி.  இது நாத தத்துவத்தைக் குறிக்கும்.  அவனது வாகனம் மயில்.  இது விந்து தத்துவத்தை விளம்பும்.  நாத விந்து கலாதி நமோ நம என்பார் அருணகிரியார்.

                முருகன் சூரபன்மனாகிய அரக்கனை அழிப்பதற்காகச் சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியதாகக் கந்தபுராணம் கூறும். எனவே முருகனைச் சிவனாகவே அறுமுகச் சிவனாகவே கருதி வழிபடுவர் சைவர்.  தேவர்க்குத் துன்பம் விளைவித்த சூரபன்மன், அவன் தம்பியராகிய சிங்கமுகன், தாரகன் ஆகிய மூவரும்  உயிர்கள், இறைவனை அடைய விடாது தடை செய்யும் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றின் அறிகுறி என்றும், இவர்களை முருகன் வென்றது இத்தடைகளை ஞானாசிரியனாகிய கடவுள் வென்றதற்கு அடையாளம் என்றும் கூறுவர் அறிஞர்.

                முருகக் கடவுளுக்குரிய மூலமந்திரமாகச் சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தைக் குறிப்பர்.  நாணற்புல் செறிந்து காடுபோல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்பது இதன் பொருள்.  நமக்குமாராய என்பதையும் , முருகா என்பதையும் அவனுக்குரிய மூலமந்திரங்களாகச் சொல்லுவதும் உண்டு.

                முருகனுக்குரிய விழாக்கள் தைப்பூசம், சித்திரா பௌர்ணமி, திருக்கார்த்திகை, கந்தர்சஷ்டி முதலியவை.  முருகனுக்கு அன்பர்கள் காவடி எடுத்துச் செல்வர். கௌமார சமயத்திற்குரிய மடமாகக் கௌமார மடாலயம் என்ற ஒரு நிறுவனம் தமிழகத்தில் கோயம்புத்தூரில் உள்ளது.                                                                                                                                     

விநாயகரை இடையூறுகளை நீக்கும் கடவுளாகக் கருதுவதுபோல் முருகக் கடவுளை மனக்குழப்பத்தை நீக்கி உணமைத் தெளிவைத் தரும்ஞானகுருவாகக் கருதுகின்றனர். முருகனை விநாயகரின் தம்பியாகவும் சிவன் சக்தியின் குழந்தையாகவும் திருமாலுக்கு மருமகனாகவும் கருதிச் சங்கரர் கண்ட  ஏனைய சமய நெறிகளுடன் கௌமாரத்தை இணைத்துப் பொதுமை காண்பதும் உண்டு.

            முருகனே செந்தில் முதல்வனே மாயோன்

            மருகனே ஈசன் மகனே—ஒருகைமுகன்

            தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

            நம்பியே கைதொழுவேன் நான்     (நக்கீரர்)

( சிங்கப்பூர் இந்து,)

Thinnappan, SP. Cankarar kanda Shanmatham-Kaumaram

(Sankara’s philosophy of Six Systems-Worship of Muruga) Singapore Hindu, Singapore (1999) Vol 10:1 pp 5-6 (2 pages) (Tamil)



                                                சங்கரர்  கண்ட  சண்மதம்  -

                                                           5 சைவம். சிவ வழிபாடு

                சங்கரர் கண்ட சண்மதங்களுள் மிகப் பழைமையான சமயம் சைவ சமயமாகும்.  சிவபெருமானை முதன்மைக் கடவுளாகக் கருதி வழிபடும் சமயமே சைவ சமயம்.  விநாயகர், முருகன், சக்தி வழிபாடுகளும் சைவ சமயச் சார்புடையனவே.  மொஹஞ்சதரோ, ஹரப்பா என்னும் சிந்து நதிக்கரையிலுள்ள நகரங்களில் புதையுண்ட சின்னங்களுள் சிவலிங்கமும் ஒன்று என்று காட்டிச் சைவ சமயம் 5000 ஆண்டுகளுக்கு முன்னே இருந்த திராவிட நாகரிகத்துடன் தொடர்புடையதாகக் கூறி அதன் தொன்மையை நிலை நாட்டுகின்றனர் அகழ்வாராய்ச்சியாளர்கள்.

                தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஎன்னும் திருவாசகத் தொடர்கள் சைவ சமயத்தின் தோற்றத்தையம் இடப்பரப்பையும் எடுத்துக் காட்டுகின்றன.  சைவ சமயம் தென்னிந்தியாவில் தோற்றம் கண்டது.  எனினும் இது இப்போது வட இந்தியாவில் காசுமீர சைவம் என்ற பெயரிலும், ஆந்திரப்பிரதேசம் கர்நாடகம் முதலிய மத்திய இந்தியப் பகுதியில் வீர சைவம், காளாமுகம், காபாலிகம், பாசுபதம் என்ற பெயரிலும் ஓங்கி வளர்ந்துள்ளது.  இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா முதலிய ஆசியநாடுகளிலும், ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய பல நாடுகளிலும் உள்ள முக்கிய நகரங்களில் சைவ சமய வழிபாட்டுக் கோயில்கள் உள்ளன.  இந்தோனேஷியா, தாய்லாந்து முதலிய சில நாடுகளில் சைவ சமயம் பரவி இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

                சைவ சமயத்திற்குரிய அடிப்படை நூல்கள் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் உள்ளன.  வேதம், ஆகமம் ஆகியவை சமஸ்கிருத நூல்கள்.  சைவ சமயத் தமிழ் நூல்களைத் தோத்திர நூல்கள், சாத்திர நூல்கள் என இருவகைப் படுத்தலாம்.  தோத்திர நூல்கள் என்பவை சிவபெருமானின் புகழையும், சிறப்பினையும் பேசகின்ற வழிபாட்டுப் பாடல்களைக் கொண்டவை.  சாத்திர நூல்கள் என்பவை சைவ சமயத் தத்துவக் கருத்துக்களைப் பற்றியவை.  சைவ சமயத் தோத்திர நூல்கள் பன்னிரண்டு திருமுறைகளாக வகுக்கப் பட்டுள்ளன.  திருமுறை என்பதற்குத் தெய்வத் தன்மை வாய்ந்த நூல்கள் என்பது பொருள். இந்தப் பன்னிரு திருமுறைகளைப் பாடிய அருளாளர்கள் 27 பேர்.  இத்திருமுறைகளில உள்ள மொத்தப் பாடல்கள் 18,402.  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர்  பாடிய தேவாரப் பாடல்கள் முதல் 7 திருமுறைகளாக உள்ளன.  மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாகும்.  திருமாளிகைத் தேவர் முதலாகிய ஒன்பது ஆசிரியர்களால் இயற்றப்பட்ட திருவிசைப்பா, திருப்பல்லாண்டுப் பாடல்கள் ஒன்பதாம் திருமுறையாகும்.  திருமூலர் பாடிய திருமந்திரம் பத்தாம் திருமுறை.  பட்டினத்தார், காரைக்கால் அம்மையார் முதலிய 11 பேர் பாடிய பாடல்களின் தொகுப்பு பதினோராம் திருமுறை. சேக்கிழார் பாடிய பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறை. திருமுறைப் பாடல்களைப் பாடிய ஆசிரியர்கள் இறைவன் திருவருளைப் பெற்றவர்கள். அத்திருவருளை மற்றவர்களும் பெறுவதற்கு உரிய வழிமுறைகளைத் தம் பாடல்களில் கூறியுள்ளார்கள்.  திருமுறைப் பாடல்களாகிய தோத்திர நூல்களிலிருந்து சாத்திரங்கள் தோன்றின.

                சைவ சமயச் சாத்திர நூல்கள் பதினான்கு.  இந்நூல்களை மெய்கண்ட சாத்திரங்கள் என அழைப்பர்.  இவற்றுள் மெய்கண்டார் எழுதிய சிவஞானபோதம் சைவ சமயத் தத்துவக் கருத்துகளைச் சுருக்கமாகவும் ஆழமாகவும் கூறுகின்ற அடிப்படை நூலாகும்.  சிவஞானபோதம் கூறும் சைவ சமயத் தத்துவ நெறிககுச் சைவ சித்தாந்தம் என்பதுபெயர்.  இது தமிழர்கள் கண்ட தனிப் பெரும் தத்துவ நெறி என்று  மேனாட்டு அறிஞரான போப் பாதிரியார் பாராட்டுகிறார்.  சித்தாந்தம் என்னும் சொற்றொடரில் உள்ள சித்என்னும் சொல் அறிவைக் குறிக்கிறது.  எனவே அறிவை மையமாக வைத்து அறிவிக்காமலே தானே அறிகின்ற பொருள் ஆண்டவன் (பதி) என்றும், அறிவித்தால் அறிந்து அறிவிக்காவிட்டால் அறிய மாட்டாத பொருள் உயிர் (பசு) என்றும், அறிவித்தாலும் அறிய முடியாத பொருள் தளை (பாசம்) என்றும் சைவ சித்தாந்தம் பொருள்களைப் பகுத்துக் காண்கிறது.  இந்தப் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களும் எப்போதும் அழியாதவை என்று இது கூறுகிறது.

                முப்பொருள்களில் முதற்பொருளாகிய பதி -இறைவன் என்பது சிவபெருமானையே குறிக்கும்.  இறைவனாகிய கடவுளுக்கு இரண்டு நிலை உண்டு. பெயர், உருவம், குணம், குறி அற்ற நிலை ஒன்று.  இதற்குச் சொரூபநிலை என்று பெயர்.  இதனைப் பரமசிவம் என்று அழைப்பர். உயிர்களின் துன்பங்களைப் போக்கி அருள் செய்வதற்காகக் கருணை கொண்டு கடவுள் இறங்கி வந்து படைத்தல், காத்தல், அழித்தல் , மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்யும் நிலை மற்றொன்று.  இதற்குப் பெயர் தடத்தநிலை.  இந்நிலையில் தான் கடவுள், நடராசர், சோமாஸ்கந்தர், முதலிய உருவத் திருமேனிகளைக் கொண்டும், சிவலிங்கமாகிய அருவுருவத் திருமேனி கொண்டும், வெட்ட வெளியாகிய அருவத் திருமேனி கொண்டும் விளங்குகிறார்.  இறையின் இயக்கமில்லாத நிலையே சிவம். இயங்கும் நிலையே சக்தி.  சிவனுக்கும் சக்திக்கும் இடையேயுள்ள உறவு சொல்லுக்கும் பொருளுக்கும் - பழத்திற்கும் சுவைக்கும் - கதிரவனுக்கும் கதிர்களுக்கும் இடையேயுள்ள உறவு போன்றது.  சைவ சமயக் கடவுளாகிய சிவபெருமான் அளவில்லாத ஆற்றல் உடையவன், ஆதியும் அந்தமும் இல்லாதவன், அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை, உண்மை, அறிவு , இன்பம் ஆகியவற்றினை வடிவமாகக் கொண்ட சச்சிதானந்தன.  நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ, சூரியன், சந்திரன், உயிர் ஆகிய எட்டு இடங்களும் இறைவனின் இருப்பிடங்களாகும்.

                முப்பொருள்களில் இரண்டாவது பொருள் பசு எனப்படும்.  ஆன்மா - உயிர் .  உயிர்களைக் கடவுளோ வேறு யாNரா படைக்கவில்லை.  அவை எண்ணில்லாதவை, என்றும் உள்ளவை.  உயிர்கள் தளைகளாகிய பாசத்தை நீக்கிக் கடவுளைச் சார்ந்து நிற்பதே முத்தி எனப்படுகின்றது.  உயிர்கள் பாசத்தையோ கடவுளையோ சார்ந்துதான் நிற்கும். 

                முப்பொருள்களில் மூன்றாவது பொருள் பாசம் எனப்படும் தளை ஆகும்.  இறைவனை நாடவிடாது உயிர்களைத் தடுக்கும் விலங்குகள் - தடையே தளைகள்  தளைகளை ஆணவம், கன்மம், மாயை என மூன்றாகப் பகுப்பர்.  ஆணவம் என்பது உயிர்களுக்கு யான், எனது என்னும் செருக்கினை ஊட்டுவது. கன்மம் என்பது உயிர்கள் செய்யும் நல்வினை , தீவினைகளைக் குறிப்பது.  இறைவன் திருவருளால் இரு வினைகளைப் போக்கலாம் என்பது சைவநெறி. மாயை என்பது எல்லாப் பொருள்களும் தோன்றுவதற்கும் ஒடுங்குவதற்கும் காரணமாக இருப்பது.  உலகம், ஐம்பொறிகள், உடல், முதலியன மாயையின் விளைவே.

                உயிர்கள் பாசத்திலிருந்து நீங்கி இறைவனை அடைவதற்கு அடிப்படையாக இருப்பது வழிபாடு.  இந்த வழிபாடு இறை வழிபாடு, அடியார் வழிபாடு என இருவகைப் படும்.  இந்த வழிபாட்டினைச் செய்ய நான்கு நெறிகள் உண்டு.  உடலாற் செய்யும் சரியை, (நாவுக்கரசர் காட்டியது), இஷ்ட மூர்த்தத்தைத் தேர்ந்தெடுத்துச் செய்யும் பூசை நெறியாகிய கிரியை ( ஞானசம்பந்தர் உணரத்தியது).  உள்ளத்தால் செய்யும் தியானம் எனப்படும் யோகம் (சுந்தரர் காட்டியது).  அற்pவினால் பேரன்பு செலுத்தும் ஞானம் (மாணிக்க வாசகர் காட்டியது) ஆகிய நான்கு நெறிகளின் வழிநின்று  உயிர்கள் பக்குவம் எய்திய பிறகு இறைவனாகிய சிவபெருமான் குருவடிவாக வந்து, திருவள் தந்து, முத்தியைக் கொடுப்பான்.  இதனையே உயிர்களின் இலட்சியம் என்று சைவ சமயம் உணர்த்துகிறது.

                வழிபாட்டில் உயிர் நாடியாக இருப்பது அன்பு.  அன்பு ஒன்றினால் தான் ஆண்டவனை அடைய முடியும்.  அன்பே சிவம் .  உடலாக இருப்பது ஐந்தெழுத்து ஆகிய நமசிவாய மந்திரம்.  இது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்க்கு நன்னெறி தரும்.  திருநீறும் உருத்திராட்சமும் சைவ சமயச் சின்னங்களாகும்.  மந்திரமாக இருக்கும் மாண்பு திருநீறுக்கு உண்டு.  உருத்திராட்சம் சிவபெருமானின் பெருங்கருணைக்கு அடையாளச் சின்னம்.  உயிரும் உடலும் இணைந்து, சின்னங்களை அணிந்து, சிவன் பணி செய்து சிவனருள் பெற வழிகாட்டும் செந்நெறியே சைவ சமயம் ஆகும்.                                     

( சிங்கப்பூர் இந்து )

22    Thinnappan, SP. Cankarar kanda Shanmatham-Saivam

(Sankara’s philosophy of Six Systems- Saivism) Singapore Hindu, Singapore (1998) Vol 9:1 pp22-23 (2 pages) (Tamil)

                                               

சங்கரர்  கண்ட சண்மதம்  - 

6  வைணவம். – திருமால் வழிபாடு

                சங்கரர் கண்ட சண்மதங்களுள் சைவ சமயத்தைப் போல் பழமையும் பரப்பும் மிக்க சமயம் வைணவ சமயம்.  வைணவம் என்பது விஷ்ணு எனப்படும் திருமாலை முழுமுதற் கடவுளாகக் கருதி வழிபாடு செய்யும் சமயமாகும்.  விஷ்ணு என்னும் சொல்லுக்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்பது பொருள்.  இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் அல்லவா?

                திருமால் வழிபாட்டினைப் பற்றிய குறிப்புகள் தமிழில் இன்று கிடைக்கும் நூல்களில் காலத்தால் முந்தியதாகிய தொல்காப்பியத்திலும், எட்டுத்தொகை பத்துப் பாட்டு என்னும்  சங்க இலக்கியங்களிலும், திருக்குறள் சிலப்பதிகாரம் முதலிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.  சமஸ்கிருத  வேதம், உபநிடதங்களிலும் உள்ளன.  மாயோன் மேய காடுறை உலகம் என்று தொல்காப்பியம் காட்டுப் பகுதியாகிய முல்லை நிலத்திற்கு உரிய தெய்வமாகத் திருமாலைக் குறிப்பிடுகின்றது.  இது வைணவ சமயத்தின் பழமையை வலியுறுத்தும்.

                திருமால் வழிபாடு தென்னிந்தியாவில் மட்டுமன்றி வட இந்தியாவிலும் உள்ளது.  திருமால் அவதாரங்களாகிய இராமர், கிருஷ்ணர், பரசுராமர்,பலராமர் தொடர்பான நிகழ்ச்சிகள் பல வட இந்தியப் பகுதிகளில் நடந்தவை.  இராமாயண,பாரதக் கதைகளின் செல்வாக்கு தென் கிழக்காசிய நாடுகளிலும் பரவியுள்ளது.  இன்று இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாப் பகுதிகளிலும் திருமால் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.  இச்செய்திகள் வைணவத்தின் பரப்பளவு மிகுதியை உணர்த்தும்.

                வைணவ சமயத்தை விளக்கும் அடிப்படை நூல்களாகச் சமஸ்கிருதத்தில்  வேதம், உபநிடதம், பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் முதலியவை உள்ளன.  தமிழில் பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடிய அருளிச்செயல் எனப்படும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும், ஆசாரியார்கள் வகுத்தருளிய தத்துவக் கோட்பாட்டு விளக்க நூல்களும் உள்ளன. ஆழ்வார்கள் என்பவர்கள் திருமாலின் வடிவழகிலும், பண்பழகிலும் ஈடுபட்டு ஆழ்ந்த பக்தி செலுத்தியவர்கள்.  இவர்கள் கி.பி. 6,7,8 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள்.  பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார் , திருமழிசையாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், குலசேகராழ்வார்,, நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் ஆகிய பன்னிரண்டு ஆழ்வார்களும் திருமாலையும் திருமால் அடியார்களையும் பற்றிப் பாடிய நாலாயிரம் பாடல்களின் தொகுப்பே நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமாகும்.  இது வேதத்தின் சாரமாகக் கருதப் படுகிறது.  ஆசாரியார்கள் எனப்படுவோர் ஆழ்வார்களைப் போற்றி அவர்கள் பாடல்களுக்கு விளக்கம் தந்தவர்கள்.  ஆசாரியார்களில் சிறந்தவர் இராமானுஜர். இவர் விசிஷ்டாத்துவிதம் என்னும் வைணவ தத்துவக் கோட்பாட்டினை வகுத்தார்.

                விசிஷ்டாத்துவிதம் என்பது தத்துவம், இதம், புருஷார்த்தம் என மூவகைப் படும்.  தத்வம் எனபதோ இறைவன், உயிர், உடல் என்ற மூன்றைப் பற்றியது.  இங்கு இறைவன் என்பது திருமாலையே குறிக்கும்.  அவன் திருமகளை (மகாலெட்சுமியை) மார்பில் வைத்திருப்பவன். மறத்தை அழித்து அறத்தைக் காப்பாற்ற - கொடியவரைத் தொலைத்து நல்லோரை வாழ்விக்க அவ்வப்பொது அவதாரங்கள் எடுப்பான்.  திருக்கோயில்களில் நாம் வழிபடப் பலப்பல வடிவங்களில் காட்சி அளிப்பான்.  இத்திருக் கோயில்களில் திருவரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கமும், திருவேங்கடம் எனப்படும் திருப்பதியும் மிகச் சிறந்தவை.  திருவரங்கத்தில் திருமால் கிடந்த கோலத்திலும், திருப்பதியில் நின்ற கோலத்திலும் காட்சி அளிக்கிறார்.  வைணவர்களுக்குக் கோயில் எனப்படுவது திருவரங்கமே. உயிர் என்பது ஆன்மாக்களைக் குறிக்கும்.  இவை மூப்பு, இறப்பு அற்றவை. இறைவனது ஆணைக்குட் பட்டவை.  உடல் என்பதோ உலகத்தாரைக் குறிக்கும்.  இது காலம், இயற்கை முதலியவற்றையும் உள்ளடக்கியது. 

       இதம் என்பது உயிர் இறைவனை அடைவதற்குரிய நெறிகளாகிய பக்திக்கும், பிரபக்திக்கும் (அடைக்கலநெறி) ஆதாரமான மூவகை மந்திரங்களைச் சுட்டும்.  ஓம் நமோ நாராயண என்னும் எட்டெழுத்து மந்திரம், இருதலை மாணிக்கம் என்னும் சரணாகதி மந்திரம், பகவத் கீதையின் இறுதியிலுள்ள சரம சுலோக மந்திரம் ஆகிய மூன்று மந்திரங்களில் முன்னையது பெரிய திருமந்திரம் எனப்படும்.  இது குலம் தரும், செல்வம் தந்திடும், அடியார்  படு துயராயின எல்லாம் நிலந்தரம் செய்யும், நீள் விசும்பு அருளும், அருளொடு பெரு நிலம் அளிக்கும், வலம் தரும், மற்றும் தந்திடும், பெற்ற தாயினும் ஆயின செய்யும் பேராற்றல் உடையது.  சரணாகதி மந்திரம் பிராட்டியாராகிய திருமகளுக்குத் திருமால் அருளியது.  இது வழி, அடையும் பொருள் இரண்டையும் விளக்குவது. சரம சுலோகம் என்பது கண்ணன் பக்தர்ககுத் தன்னைச் சரணடையும்படி கூறிய மந்திரம்.  இதுவே பிரபத்தி நெறி.  இதற்கு அடிப்படை பக்தி நெறியே.  இம்மூன்று மந்திரங்களும் வைணவ சமயத்திற்கு உயிர்நாடியாய் விளங்குபவை.

                புருஷார்த்தம் என்பது ஆன்மா அடைய வேண்டிய இறுதி இலட்சியம்.  ஆன்மா முதலில் பக்தி நெறியில் நின்று, பிரபத்தி வழிசார்ந்து, இறைவனுக்குத் தொண்டு செய்து பரமபதத்தில், இறை அனுபவத்தில், திளைத்து நிற்பதே இறுதி இலட்சியம் என்று வைணவம் கூறுகிறது.

                நாராயணன் எனப்படும் திருமாலே முழுமுதற் பொருளெனக் கருதி அவனுடைய மூவகை மந்திரங்களையும் மொழிந்து வழிபட்டுப் பக்தி மார்க்கத்தில்  ஈடுபட்டுச் சரணாகதி  அடைந்து நின்றால் திருமாலுக்குப் பரமபதத்தில் தொண்டு செய்யும் பெரும் பேற்றினை அடையலாம் என்பதே வைணவம் உணர்த்தும் தத்துவ நெறியாகும்.  இத்தகைய பெரும் பேற்றினை அடைந்ததோடு மட்டுமன்றி அடையும் நெறியையும் வழியையும் காட்டிச் சென்ற பெருமக்கள் தான் ஆழ்வார்கள்.  அவர்கள் வழி நின்று, திருமாலுக்கும் திருமால் அடியார்களுக்கும் (பகவானுக்கும் பாகவதர்களுக்கும்) திருத் தொண்டு செய்யும் பெரும் பேற்றினை அடைய முயல்வோமாக.   

 Thinnappan, SP. Cankarar kanda Shanmatham-Vainavam

(Sankara’s philosophy of Six Systems- Vaishnavism) Singapore Hindu, Singapore (1998) Vol 9:3 pp6-7 (2 pages) (Tamil (சிங்கப்பூர் இந்து,        ஜூலை-செப்டம்பர்1998 பக்6-7)


சங்கரர் கண்ட சண்மதம்

7   சாக்தம்— சக்தி வழிபாடு

                சங்கரர் கண்ட சண்மதங்களில் ஒன்றாகிய சாக்தமதம் என்பது சக்தியை வழிபடும் நெறியாகும்.  இவ்வழிபாட்டினை மேற்கொண்டவர்கள் சாக்தர் எனப்படுவர்.  சங்கரர் கண்ட சைவம், வைணவம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் ஆகிய ஐந்து நெறிகளும் முறையே சிவன், திருமால், விநாயகர், முருகன், சூரியன் ஆகிய ஆண் கடவுளரை வழிபடுகின்றன.  ஆனால் சாக்தம் மட்டுமே கடவுளைப் பெண் வடிவில் வழிபடும் நெறியாக உள்ளது.  ஆண்டவன் ஆணல்லன், பெண்ணல்லன், அலியுமல்லன்.  எனினும் அவனை ஆணாகக் காண்பதே பெரும்பான்மை வழக்கு.  அப்படி இருக்கச் சாக்த நெறி மட்டுமே கடவுளைப் பெண்ணாகக் கண்டு பெண்மையைப் பெருமைப் படுத்தி நிற்கிறது.  பெண்மையைத் தாயாக அம்மமையாகக் கருதி வழிபடும் பெரு நெறியே சாக்த நெறி.  அன்பின் வடிவம் இவ்வுலகில் தாய் அல்லவா?

                சக்தி என்னும் சொல்லுக்கு ஆற்றல், திறன், இயக்கம் என்பது பொருள். உலகிலுள்ள யாவற்றையம் இயற்றும் ஆற்றலே சக்தி.  அவளே பரம்பொருள், அவளே எல்லாம் எனக் கருதி வழிபடுவதே சாக்தம்.  மூலப் பரம்பொருளின் நாட்டம் - இந்த மூன்று புவியும் உனது ஆட்டம் என்று சாக்த நெறிக் கோட்பாட்டைப் பாடுகிறார் பாரதியார்.  சக்தியை அழகின் ஆற்றலாகக் கண்டு ஆதி சங்கரர் சௌந்தர்யலகரி என்னும் தோத்திர நூலை வடமொழியில் இயற்றி வழிபட்டார்.

                இயக்கமற்ற இறைநிலை சிவன் எனவும் இயக்கமுடைய இறைநிலை சக்தி எனவும் கருதப் படுகின்றன.  அந்நிலையில் சக்தி வழிபாடாகிய சாக்தம் சைவ மதச் சார்புடையதாக அமைகிறது.  இங்கு சக்தி சிவபெருமானின் மனைவியாகிய உமையம்மை ஆகிறாள். சிவனும் சக்தியும் சூரியனும் ஒளியும் போலவும் சொல்லும் பொருளும் போலவும் பிரிக்க முடியாத நெருக்கமுடையவர்கள்.  சக்தியைத் திருமாலின் தங்கை எனவும் விநாயகர், முருகன் ஆகியோரின் தாய்  எனவும் கருதும் மரபும் உள்ளது.

                சக்தி வழிபாடு சிவ வழிபாட்டினைப் போலவே பழைமையான ஒன்று.  சிந்துவெளி நாகரிகத்திற்கு முன்னரே இவ்வழிபாடு இந்தியாவில் தோன்றியிருக்க வேண்டும் என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.  இவ்வழிபாடு தாய் தெய்வ வழிபாடு என்னும் பெயரில் உலக நாகரிகங்கள் பலவற்றிலும் உள்ளது.  மகாபாரதத்தில் கிருஷ்ணன் அறிவுரைப்படி அர்ச்சுனன் பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காகத் துர்க்காதேவியை - சக்தியை வழிபட்டதாகக் கூறப்படுகிறது.  சங்க காலத் தமிழகத்தில் இருந்த கொற்றவை வழிபாடு என்பது கொற்றமாகிய வெற்றியைக் கொடுக்கும் அவ்வை அம்மையாகிய தாய்த்தெய்வ வழிபாடே என்பது பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் கூற்று.  இச்சான்றுகள் சாக்த நெறியின் பழமையை உணர்த்தும்.

                சக்தி வழிபாடு இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காஷ்மீர் முதல்   கன்னியாகுமரி வரையில் ஏதேனும் ஒரு வடிவவில் உள்ளது.  வங்காளம், அசாம், கேரளம் ஆகிய பகுதிகளில் மட்டும் இவ்வழிபாடு இன்று மேலோங்கி நிற்கிறது .  எனினும் இந்தியா முழுதும் உள்ள 64 சக்தி பீடங்கள் எனப்படும் தலங்களின் எண்ணிக்கையும் இவற்றைத் தவிர்த்து எண்ணடங்காத சக்தி வழிபாட்டுத் தலங்களும் சாக்த நெறியின் விரிந்த எல்லையைக் காட்டும்.  ( இவ்வழிபாட்டுத் தலங்களிலுள்ள சக்தியின் உருவங்களைச் சிங்கப்பூர் ஈசூன் பகுதியிலுள்ள மகா மாரியம்மன் கோயில் கூரை மேற்பரப்பில் காணலாம்.)

                சக்தியின் பெருமைகளையும் அற்புத ஆற்றல்களையம் தேவி பாகவதம், மார்கண்டேய புராணத்தில் உள்ள தேவி மகாத்மியம், சவுந்தரிய லகரி முதலிய் சமஸ்கிருத நூல்களும், திருமந்திரம், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், பாரதியார் பாடல்கள் முதலிய தமிழ் நூல்களும் விளக்குகின்றன.  வட மொழி ஆகமங்களிலுள்ள மந்திரப் பகுதிகளும் தாந்தரீக வழிபாடுகளும் சக்தி நெறியின் தத்துவக் கோட்பாடுகளைக் கூறுகின்றன.

                சங்கரர் இயற்றிய சவுந்தரிய லகரியில் சக்தியே எல்லாக் கடவுளர்க்கும் முதன்மையானவளாகக் கருதப் பெறுகிறாள்.  சக்தி சத்துவ குணத்தை அடையும் போது காப்பாற்றுபவளாகவும், இராசத குணத்தை அடையும் போது படைப்பவளாகவும், தாமத குணத்தை அடையும் போது அழிப்பவளாகவும், போற்றப் படுகிறாள்.  அவளே அறிதல், விரும்புதல், செய்தல் என்ற நிலையில் ஞான, இச்சா, கிரியா சக்திகளாகச் சொல்லப் பெறுகிறாள். 

                புராணக் கதைகளிலும் ஓரே சக்தி பல்வேறு வடிவங்களில் பெயர் சூட்டப்படுதலைக் காணுகிறோம். மகிடன் என்னும் எருமைத்தலை அசுரனை அழித்தவன் மகிஷாசுரமர்த்தனி, சண்டன், முண்டன் ஆகிய இரு அசுரர்களை அழித்தவள் சாமுண்டி.  சும்பன் நிசும்பன் ஆகிய இரு அசுரர்களை அழித்தவள் கௌசிகி.  பிரளய காலத்தில் பிரபஞ்சத்தை ஒடுக்கியவள் காளி.  மாகாளி எனச் சக்திக்குப் பல்வேறு வடிவங்கள் அமைவதைப் புராணங்கள் கூறும்.

                தந்திரங்களாகிய ஆகமங்களில் கூறப்பட்டுள்ள மந்திரங்கள், சடங்குகள் ஆகியவற்றைச் சாக்த வழிபாடு பின்பற்றுவதால் அது தாந்திரீக வழிபாடு எனவும் அழைக்கப் பெறும்.  தத்துவம், மந்திரம் ஆகியவற்றை உரைக்கும் பகுதியே தந்திரம். தத்துவம் பிரபஞ்சக் கோட்பாடுகளையும், மந்திரம் ஒலி அதிர்வுகளின் விளைவுகளையும் விளக்கும்.

                சிவன் - சக்தி இணைப்பால் பிரபஞ்சம்உற்பத்தியாகிறது எனச் சாக்த தத்துவம் பேசுகிறது.  இவ்வகையில் இது பெண்மைத் தத்துவத்திற்கே முதன்மையும் சிறப்பும் தருகிறது.  பிரபஞ்ச உற்பத்தியின் போது சிவம் தனித் தன்மையை இழந்து சக்தி மயமாகி விடுகிறது என்ற அடிப்படையில் பிரபஞ்சத்தையே திரிபுரசுந்தரி என்னும் சக்தி வடிவமாகவே கருதுவது சாக்தநெறி.

                ஒவ்வொரு சாக்தரும் திரிபுர சுந்தரியாக - பெண்ணாக மாறுவதே சாக்த நெறியின் குறிக்கோள். சர்வம் சக்தி மயம், மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய் என்றே எண்ணுவர் சாக்தர்.

                மந்திரங்களை இரவும் பகலும் ஒரு மனத்தோடு ஒருமுகப் படுத்தி இலட்சக் கணக்கில் ஓதி ஹோமம் , ஜபம், தர்ப்பணம், பலி முதலிய சடங்குகளைச் செய்தால் இயற்கை ஆற்றலின் அதிபதிகளாகிய கடவுளரை இவ்வுலகிற்கு வரவழைத்துத் தங்கள் ஆணைக்கேற்பச் செயல் படுத்த முடியும் என்று சாக்தர்கள் நம்புகின்றனர்.  மந்திரங்கள் குரு தீட்சை மூலமே கேட்டுணரப்படும்.  மந்திரங்களின் உருவேறத் திருவேறும் அல்லவா? மது, மாமிசம், மீன் முதலியனவும் தாந்திரீக வழிபாட்டில் உண்டு.  இவற்றின் உட்பொருளை உணராது புறநிலையில் பொருள் காண்பது தவறு.  எடுத்துக் காட்டாக மது என்பது புறநிலையில கள்ளைக் குறிக்கும்.  இது யோக நிலையில் மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தி எழுந்து சிவத்தோடு கலக்கும்போது உள் நாக்கில் ஊறும் தேனைக் குறிக்கும்.  இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் உட்பொருள் உண்டு. 

                                யந்திரங்களை அமைத்து வழிபடுவது தாந்தரீக வழிபாட்டின் ஒரு கூறு.  யந்திரங்கள் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளும் முக்கோணங்களாலும் அல்லது நேர்கோடுகளாலும் அமைந்திருக்கும்.  உள்ளே தெய்வங்களுக்குரிய மந்திர எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும். கோணங்களும் அவற்றைச் சுற்றித் தாமரை இதழ்களும் கொண்ட யந்திரம் சக்கரம் எனப்படும். சக்தி வழிபாட்டில் இடம்பெறும் யந்திரங்களில் ஸ்ரீசக்கரம் முதன்மையானது. இது பிரபஞ்சத்தின் குறியீடாகவும் குண்டலினி சக்தி இயக்கத்தின் குறியீடாகவும் கருதப்படுகிறது. யந்திர வழிபாட்டினால் செல்வம் பல பெறலாம் என்பது நம்பிக்கை.

      சாக்த நெறியில் தன்னைத் தானுணர்தலே முக்தி  என்னும் பேரின்ப வீட்டின் திறவுகோல். இதனை ஞானத்தின் வழி அடையலாம். மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியைப் பிராணாயாமம் போன்ற யோகப் பயிற்சிகளாலும் யந்திர தந்திர மந்திர வழிபாட்டினாலும் விழித்தெழச் செய்ய வேண்டும். இதுவே ஞானம் பெற வழி.

      நம் சிங்கையிலுள்ள மாரியம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் வழிபாடுகள் ஒரு வகையில் சக்தி வழிபாட்டின் கூறுகளே ஆகும்.                                                           

( சிங்கப்பூர் இந்து,9:4 அக்டோபர்.டிசம்பர்1998 பக்கம் 32-33 )

Thinnappan, SP. Cankarar kanda Shanmatham-Saktham

(Sankara’s philosophy of Six Systems-Worship of Sakthi) Singapore Hindu, Singapore (1998) Vol 9:4 pp32-33 (2 pages) (Tamil)


........ முற்றும் .....
Dr. S.P. Thinnappan



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக