வெள்ளி, 2 மே, 2014

சமயம் - சைவம் - 9


நடராஜ தத்துவம்

.


உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியனாகிய இறைவன் - நிலவுலாவிய நீர்மலி வேணியனாகிய சிவபெருமான் - உயிர்கள் தத்தம் கருமேனி கழித்து உய்தி பெறுவதற்காக எடுத்த உருவத் திருமேனிகள் பல. அவற்றுள் அனைத்துலக அறிஞர் பெருமக்களுக்குச் சிந்தனை விருந்தாய், அடியார்களுக்கு நினைத்தொறும் காணுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன் சொரியும் அமுதமாய், அரிய தத்துவங்களின் தாயகமாய், அறுபத்து நான்கு கலைகளுக்கும் நாயகமாய் விளங்குவது நடராசத்திருவுருவமாகும். இத்திருவுருவம் சைவர்களுக்குக் கோயிலாக விளங்கும் சிதம்பரத்தில் சிறப்புடன் விளங்குவதை அனைவரும் அறிவர். தெரிசிக்க முத்தி தரும் சிதம்பரத்தில் நடமாடும் அம்பலக்கூத்தனைப் பாடாத அடியார் சைவ உலகில் உண்டா ? குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிகிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்'' பெற்ற நடராசப் பெருமனைக் காண்பதற்காகவே மனிதப் பிறவி வேண்டும் என்று மன்றாடுகிறார் நாவுக்கரசர். பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே'' என்பது அவர் கருத்து. ஞானசம்பந்தப் பெருமானோ செல்வர்வாழ் தில்லைச் சிற்றம்பல மேய செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே'' என்று செப்புகிறார். தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரியகலும் கரிய பாம்பும் பிடித்தாடிப் புலியூர்ச் சிற்றம்பலத் தெம் பெருமானைப் பெற்றாமன்றே'' என்று நடராசப் பெருமானை இறப்பினை நீக்கி என்றும் இன்பம் தழைக்க இருக்க உதவும் நண்பராகக் காண்கிறார் சுந்தரர். திருவாசகத்தின் உட்பொருள் என்ன ?'' என்று வினவிய தில்லை வாழ் அந்தணர்க்கு மணிவாசகனார் திருவாசகத்தின் உட்கிடை தில்லைக் கூத்தனே'' என்று விடையிறுத்த செய்தியைச் சைவ உலகம் நன்கறியும். நால்வர் பெருமக்களும் இவ்வாறு நயமுறப் போற்றி வழிபட்ட நடராசப் பெருமானின் திருவுருவத்தில் காணக் கிடக்கும் தத்துவங்களில் இன்றியமையாதனவற்றை எடுத்துத் தொகுத்து இயம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


நடராசப் பெருமான் திருவுருவம் பற்றிய செய்தி சங்க இலக்கியத்தில் கற்றறிந்தோர் ஏத்தும் கலித் தொகைக் கடவுள் வாழ்த்தில் முதலாவதாகக் குறிப்பிடப் பெறுகின்றது. சிலப்பதிகாரத்திலும் ஒரு சிறு குறிப்பு வருகிறது. பின்னே காரைக்கால் அம்மையார் பாடல்களிலும் நடராசப் பெருமான் பற்றிய செய்திகள் உள்ளன. திருமூலர் தம் திருமந்திரத்தில் ஒன்பதாம் தந்திரத்தில் திருக்கூத்துத் தரிசனம் என்னும் தலைப்பில் நாற்பத்து மூன்று பாடல்கள் வாயிலாக நடராசப் பெருமானின் திருவுருவத் தத்துவச் சிறப்பினைத் தெளிவாக விளக்குகின்றார். பின்னர் நாவுக்கரசர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரத்திலும் மாணிக்கவாசகர் திருவாசகத்திலும் நடராசப் பெருமானை நாவாரப் பாடுகின்றனர். மணிவாசகர் இயற்றிய திருககோவையாரின் மறுபெயர் திருச்சிற்றம்பலக் கோவையாரன்றோ ? திருக்கோவையாரின் நாயகன் நடரசாப் பெருமானே ஆவான். திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, ஆகிய ஒன்பதாம் திருமுறை தில்லை நடராசப் பெருமானை மையமாகக் கொண்டு எழுந்துள்ளது. பதினோராம் திருமுறையில் சேரமான் பெருமாள் நாயனார், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி முதலியோர் பாடலிலும் நடராசப் பெருமானைப் பற்றிய குறிப்பு உண்டு. 12ம் திருமுறை ஆகிய சேக்கிழாரின் பெரிய புராணத்திற்கு அடியெடுத்து முதல் வழங்கியவனே நடராசப் பெருமான் தானே. தோத்திர நூல்களை விடுத்துச் சாத்திர நூல்களைப் பார்த்தாலும் சிறப்பாக திருக்களிற்றுப்படியார், சிவஞான சித்தியார், உண்மை விளக்கம் முதலியவற்றில் நடராசப் பெருமானின் தத்துவம் சித்தாந்தச் செந்நெறியின் அடிப்படையில் விளக்கப்படுகின்றது. கந்தபுராணத்தில் தட்சகாண்டத்தில் நடராசப் பெருமான் நடனம் தோன்றிய வரலாறு பேசப்படுகின்றது. மேலும் உமாபதி சிவாச்சாரியாரின் கோயிற் புராணத்திலும் இவ்வரலாற்றுச் செய்தி விரித்துரைக்கப்படுகின்றது. அருணகிரியாரின் திருப்புகழிலும் நடராசர் பற்றிய குறிப்பு உண்டு. பின்னே தோன்றிய தாயுமானார், சிதம்பர ரகசியம், நடராசர் பற்றிய செய்திகளை எல்லாம் பாடுகிறார். குமரகுருபரரும் நடராசர் தத்துவத்தின் உண்மைகளை நவில்கிறார். வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் நடராசப் பெருமானை அருட்பெருஞ் சோதியாகக் கண்டு உத்தரஞான சிதம்பரம் அமைத்து அவர் ஆட்டத்தின் தத்துவத்தைத் திருவருட்பாவில் விளக்குகிறார். நடராசர் தத்துவம் பற்றிய செய்திகளைத் தாங்கி நிற்கும் வடமொழி நூல்களும் பலப்பல. அண்மைக் காலத்தில் நடராச தத்துவத்தின் சிறப்பினை அனைத்துலக நாடுகளும் அறியச் செய்த பெருமை ஆனந்த குமாரசாமி அவர்களுக்கே சாரும். சிவ நடனம் என்னும் தலைப்பில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலின் வாயிலாக நடராசத் தத்துவத்தின் நுட்பங்களை அறிந்து இந்தியத் தத்துவக் கலையின் ஏற்றத்தை எல்லா நாடுகளும் போற்றத் தொடங்கின.


நடராசர் என்னும் சொல்லுக்கு நடனம் (நாட்டியம்) ஆடுவதில் மன்னர் என்பது பொருளாகும். ஆட வல்லான், கூத்துகந்தான், அம்பலக்கூத்தன் மன்றுள்ஆடி என்றெல்லாம் அவனை அழைப்பார்கள். நடனங்களுக்கெல்லாம் நாயகன், தலைவன் நடராசன். நடனக்கலை என்பது கலைகளுக்குள்ளே சிறந்த கவின்கலை. நடனக் கலையில் இயல் உண்டு, இசை உண்டு, நாடகமாகிய நடிப்பு உண்டு. எனவே நடராசப் பெருமான் முத்தமிழ்க் கலைக்கும் முதல்வனாக விளங்குகிறான். இந்தியப் பண்பாட்டின் சின்னமாக இன்றும் விளங்குவது பரத நாட்டியம். பரதம் என்னும் சொல்லில் பாவம், ராகம், தாளம் ஆகிய மூன்று சொல்லின் முதலெழுத்துக்களின் கூட்டுக் கலப்பு இருப்பதைப் பார்க்கலாம். இம்மூன்றுக்கும் இறைவனாக இலங்குபவன் நடராசப் பெருமான். பரத சாஸ்திரத்தில் சிவபெருமான் ஒருவனுக்கே சிரங்குவித்து வணங்க வேண்டும் என்றும் ஏனோர்க்கு நெற்றிக்கு நேரே கரங்குவித்தல் மட்டுமே போதும் என்றும் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டியக் கலை உடலசைவு நிலை, கையமைப்பு, உடற்சுழற்சி முதலியவையெல்லாம் கூடியது. உடல் சடம், அது அசைய வேண்டுமானால் நரம்பு அசைய வேண்டும், நரம்பு அசைய மனம் அசைய வேண்டும், மனம் அசைய உணர்வு அவசியம். உணர்வோ உயிரின் தன்மை. உயிர் இறைவனுக்கு அடிமை. இறைவன் இசை வடிவினன். இறைவன் அசைகிறான். இசை இசைகிறது. இசைக்கு ஏற்ப ஜதியாகக் கால் அசைகிறது. முத்திரையுடன் கை அசைகிறது. நாதமும் நடிப்பும் சேர்ந்து நாட்டியம் அமைகிறது. எனவே உயிர்க்குள் உயிராக இருந்து இயக்கும் இயவுளாக இறைவன் இருப்பதை இது உணர்த்துகிறது. ''ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே''.


சிவபெருமான் எப்போது ஏன் நடனமாடினார் என்பது கோயிற் புராணத்திலும், கந்தபுராணத்திலும் பின்வருமாறு சொல்லப் பெற்றுள்ளது. தாருகா வனத்து முனிவரின் அகந்தையை அடக்கி ஆளும் பொருட்டுச் சிவபெருமான் தாம் பிட்சாடன வடிவம் கொண்டபோது சிவபெருமானைக் கொல்லும் பொருட்டுத் தாருகாவனத்து முனிவர்கள் யாகம் ஒன்று செய்தனர். அந்த வேள்வியிலிருந்து வெளிவந்த புலி, பாம்பு, தீ, துடி ஆகியவற்றைச் சிவன் முறையே உடையாகவும், அணியாகவும், கைப் பொருளாகவும் கொண்டார். இறுதியில் முயலகனை ஏவினார்கள். அவனைக் காலால் மிதித்து நடனம் செய்யத் தொடங்கினார். பின்னாளில் இந்நடனத்தைத் தில்லையில் காண விழைந்த பதஞ்சலி, வியாக்ர பாதர்க்காகச் சிவபெருமான் ஆடினான். சிலப்பதிகாரத்தில் காளியுடன் போட்டியிட்டு நடனமாடியதாகக் குறிப்பு வருகின்றது. தில்லைக்காளி எல்லைக்கப்பால் நடராசப் பெருமானிடம் தோற்றுச் சென்றதாகக் கூறுவர். தேன் புக்க தண்பனை சூழ் தில்லைச் சிற்றம்பலவன் தான் புக்கு நட்டம் பயிலும் அது ஏன், ஏடி'' என்னும் வினாவை எழுப்பித் திருவாசகம் தான் புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாம் காண்சாழலோ'' என்று விடை பகருகின்றது.


நடனம் நிகழும் இடம் சிதம்பரம். சித் என்றால் அறிவு, அம்பரம் என்றால் வெளி அல்லது ஆகாசம். அறிவு வெளியில் - ஞான ஆகாசத்தில் இந்நடனத்தைக் குறிக்கவே சிற்றம்பலம் என்றனர். எனவே தான் அருமறைச்சிரத்தின் மேலாம் சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலத்துள்'' என்றார் சேக்கிழார். எனவே இறைவன் மிக நுண்ணிய அறிவு வெளிக்குள் கலந்து நிற்கிறான் என்பதைச் சிதம்பரம் உணர்த்துகிறது.


ஏன் அவன் சிதம்பரத்தில் ஆடுகிறான் ? விராட புருடனுக்கு இருதயதானமாக இலங்குவது சிதம்பரம். எனவே சிதம்பரத்தில் அவன் ஆடுகிறான். அவன் ஆட்டம் நின்றால் உலக இயக்கம் இல்லை. உண்மையில் நம் உடலின் இருதயத்தில் உள்ள துடிப்பு அசைவே இந்த நடனத்தின் அறிகுறி. இதயத் துடிப்பு நின்றுவிட்டால் மனித இயக்கமும் இல்லை தானே ? எனவே இறைவனின் இந்த நடனம் உலக இயக்கத்துக்கும் உலகத்துயிர்களின் இயக்கத்துக்கும் உரிய உறுதுணை - அடிப்படை என்பதை நாம் மறக்கக் கூடாது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்னும் அசைப்புத் தத்துவத்தின் அடையாளம் தான் இந்த அற்புதக் கூத்து ஆகும். அவன் ஆட்டத்தால் உலகம் ஆடுகிறது. உலகத்துப் பொருள்கள், உயிர்கள் நடமாடுகின்றன வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட கீதங்கள் ஆட கிளர் அண்டம் ஏழ் ஆடப் பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட நாதம் கொண்டாடினான் ஞானக் கூத்தே'' என்று திருமந்திரம் சொல்லுகிறது.


அவன் நடனம் உலகம், உயிர்கள் ஆகியவற்றை மட்டும் தானா ஆட்டுகிறது. இல்லை, அண்டங்கள் அனைத்தும் ஆடச் செய்கிறது. கிளரண்டம் ஏழாட'' என்கிறார் திருமூலர். இதனை அண்டத்திருக் கூத்து என்பார்கள். வானவெளியில் சுழலும் கோள்கள், விண்மீன்கள் யாவும் ஓர் ஒழுங்கில் இயங்க - அசைய இறைவன் தான் இயங்கி - அசைத்து யாவற்றையும் ஒருங்கே இயக்குவிக்கிறான். அடிபேரின் பாதாளம் பேரும்;  அடிகள் முடிபேரின் மாமுகடு பேரும்; கடகம் மறித்தாடும் கை பேரின் வான் திசைகள் பேரும்; அறிந்தாடும் ஆற்றாது அரங்கு'' - என்பார் காரைக்கால் அம்மையார். விண்ணுக்கும் மேல் வியன் பாலக்கீழ் விரிநீர் உடுத்த மண்ணுக்கு நாப்பண் நயந்து தென்தில்லை நின்றோன்'' என்பது திருவாசகம்.


அண்டத்தில் மட்டுமா இறைவன் ஆடுகிறான். அவன் பிண்டத்திலும் அணுவுக்கு அணுவாய் இருந்து ஆடுகிறான். நமது உடம்பில் இருபத்தாறு எலும்புகளுக்கு இடையில் இதய கமலம் உள்ளது. அதன் நடுவே ஞானவெளி உள்ளது. அந்த ஞானவெளி மிகவும் சிறியது. அந்தத் தகராகாசத்தின் நடுவில் ஒரு ஞானவெளி இடையறாது அசைந்து கொண்டு இருக்கிறது. இதுதான் இறைவன் நடனம். இந்நடனத்தைச் சிவயோக நெறியில் உள்ளுக்குள் கண்டார் பிறவித் துன்பம் நீங்குவர். இந்தக் காட்சியைக் கண்டவர் பதஞ்சலி வியாக்ரபாதர். இதைப் புறத்தே காட்ட முயன்ற முயற்சி சிதம்பரத்தில் உள்ள நடனத் திருவுருவம் என்று விளக்கம் தருவர். எனவே இறைவன் உள்ளும் புறமும் உலகெங்கும் அண்டத்திலும் பிண்டத்திலும் நடனம் ஆடுகிறான். எனவே தான் திருமூலர் எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்'' என்கிறார். இதுவரை கூறிய கருத்துக்களையெல்லாம் தொகுத்து வள்ளலார் எளிய தமிழில் அம்பலத்திலாடுகின்றார் வெண்ணிலாவே - அவர் ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலாவே - அந்தரத்திலாடுகின்றார் வெண்ணிலாவே - அவர் ஆடும் வகை எப்படியோ வெண்ணிலாவே - அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலாவே - எங்கும் ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலாவே - அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலாவே - ஐயர் ஆட்டமென்று சொல்தென்ன வெண்ணிலாவே - அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலாவே - என்னை ஆட்டுகின்றார் சிதம்பரத்தே வெண்ணிலாவே'' என்கிறார்.


நடராசப் பெருமான் தில்லையில் நடனமிடும் சபை பொற்சபையாகும். பொற்சபையிலுள்ள பொன் ஒடுகள் 21600, மனிதன் நாள் தோறும் விடும் மூச்சு எண்ணிக்கையையும், 72000 ஆணிகள் மனித நரம்பினையும் உணர்த்தும். அடுத்துள்ள சித்சபையுடன் கூடிய நிலையில் சபையிலுள்ள கற்கள் மந்திர அட்சரங்கள் என்றும், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசன், சதாசிவன் ஆகியோரே நடனமிடுதற்குரிய பீடம் என்றும், ஐம்பூதம் அருவம் என்றும் நான்மறை, சாத்திரம், ஆகமம் அருவம் என்றும் நான்மறை, சாத்திரம், ஆகமம் ஆகியவை தூண்கள் என்றும், பஞ்சாட்சரப்படி 96 தத்துவங்கள் என்றும் கூறுவர்.


இறைவன் நமக்காக ஐந்தொழில் செய்கிறார். உலகத்தைப் படைக்கிறார், அவற்றைக் காப்பாற்றுகிறார், அழிக்கிறார், இளைப்பாற்றுகிறார், அருள் செய்கிறார். இந்தப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலும் நடராசப் பெருமானின் அற்புதக் கூத்தில் அமைந்துள்ளதாகச் சித்தாந்த நூல்கள் கூறுகின்றன. நடராசப் பெருமானின் வலக்கையிலுள்ள துடி - உடுக்கை, டமருகம் ஒலியை உண்டாக்கும்; அதுவே நாதத்தைக் காட்டுகிறது. நாதமே உலகப் படைப்பிற்கு அடிப்படை. எனவே   இந்த உடுக்கை படைப்புத் தொழிலைக் குறிக்கிறது. மற்றொரு வலக்கை பயப்படாதே''  என்னும் குறிப்பினைத் தாங்கிய அபய கரம் ஆகும். இந்த அமைந்த திருக்கை காத்தல் தொழிலைக் காட்டும். தூக்கிய இடக்கையிலுள்ள நெருப்பு உலகை அழிக்கும் கருத்தை உணர்த்தும். முயலகன் மீது ஊன்றிய திருவடி மறைத்தல் தொழிலையும், எடுத்த திருப்பாதம் - தூக்கிய திருவடி - அருளல் ஆகிய தொழிலையும் உணர்த்துகின்றன. இக்குறிப்பினை முதன் முதல் உலகுக்கு எடுத்துக் காட்டிய பெருமை திருமூலரையே சாரும். அரன்துடி தோற்றம்; அமைத்தல் திதியாம்; அரன் அங்கிதன்னில் அறையிற் சங்காரம்; அரன் உற்றணைப்பில் அமரும் திரோதாயி; அரனடி என்னும் அனுக்கிரகம்மே'' என்பது திருமந்திரம் (2753). இதனை உண்மை விளக்கம் என்னும் சித்தாந்த சாத்திரம் வெண்பா நடையில் தோற்றம் துடியதனில்; தோயுந் திதி அமைப்பில்; சாற்றிடும் அங்கியிலே சங்காரம்; ஊற்றமாய் ஊன்று மார்ப்பதத்தே உற்றதிரோ தம்முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு'' என்கிறது.


சைவப் பெருமக்களுக்கு மந்திரமாகவும் பிறவிப் பிணிதீர்க்கும் மருந்தாகவும் திகழ்வது ஐந்தெழுத்து. நாதன் நாமமாகவும் பாசத்தை வெல்லும் படைக்கலமாகவும் விளங்குவது நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்தெழுத்தின் வடிவமாக நடராசப் பெருமானின் உருவத்தைக் காட்டுவர். நற்றவத்தோர் தாம் காண நாதாந்தத்து அஞ்செழுத்தால் உற்று உருவாய் நின்றாடல்'' என்பர் உண்மை விளக்க ஆசிரியர். இந்த ஐந்தெழுத்தினை நமசிவாய எனவும் சிவாயநம எனவும் இருவகையாகக் காட்டுவர். சிவாயநம எனச் சொல்லும் முறையில் இடையில் - நடுவில் உள்ள யகரமாகிய ஆன்மாவிடத்திலே ஆன்மாவின் பிறப்பறுதற்காக ஐந்தெழுத்தினைத் திருமேனியாகக் கொண்டு அம்பலத்தில் ஆடுகிறான் அவன். நமசிவாய என்னும் போது அதிலுள்ள ந என்பது கூத்தப் பெருமானின் திருவடியிலும், ம என்பது அவனது உந்தியிலும், சி என்பது அவன் தோள்களிலும், வ என்பது திருமுகத்திலும்,  ய என்பது அவன் திருமுடியிலும் உள்ளன என்று உண்மை விளக்கம் உரைக்கிறது. சிவாயநம என்று சொல்லும் முறையில் நோக்கினால் சி என்பது உடுக்கை இருக்கும் திருக்கையிலும், வ என்பது வீசும் திருக்கையிலும், ய என்பது உயிர்களுக்குத் தஞ்சம் அளிக்கும் அபயகரத்திலும், ந என்பது நெருப்பேந்திய திருக்கையிலும், ம என்பது முயலகனை மிதித்து நிற்கும் திருவடியிலும் இருப்பதாக அந்நூல் எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறு அஞ்செழுத்தை நெஞ்சழுத்தும் போது நமக்கு எப்போதும் ஆடல்வல்லானின் அற்புதக் கூத்து கண்முன்னே தோன்ற வேண்டும்.


ஓம் என்னும் பிரணவம் மந்திரங்களுக்கெல்லாம் அடிப்படையானது; வேதத்திற்கு வித்தாக இருப்பது. நடராசப் பெருமானின் நடனத்திருக் கோலத்தினைச் சுற்றி நிற்கும் திருவாசியே இந்த ஓங்காரம் ஆகும். அந்த ஓங்காரத்தினின்றும் நீங்காது நிற்கும் திருவைந்தெழுத்தே நிறைசுடராக விளங்கும் பெருமானின் திருவுருவாகும். இதனைத் தன்முனைப்பற்றவர்களே அறிவர். அறிந்த பின் பிறப்பற்றுப் பேரின்பம் அடைவர். திருமூலரும் பஞ்சாக்கரம் பற்றிய விளக்கங்களை அடுத்துத் திருக்கூத்துப் பற்றிப் பேசுவதன் நுட்பமும் இதைத் தான் விளக்குகிறது. ஐந்தெழுத்து அடையும் வழி; அடையும் குறி ஆடல் வல்லான். அவனருளாலே அவன்றாள் வணங்குவது என்பது போல இரண்டும் ஒன்றாக நின்றநிலை உண்டு; இதுவே நடராச வடிவம்.


ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை நீக்கிய நிலையில் தான் ஆன்மா வீடு பேறு பெற முடியும். இவற்றுள் கட்டுப்பட்ட நிலையில் ஆன்மா விடுதலை அடைய வழி இல்லை. எனவே இவற்றிலிருந்து ஆன்மாவை நீங்கச் செய்து வீடுபேறளித்துப் பேரின்பத்துக்குள் ஆழ்த்துகிறான் இறைவன். அதுவே சைவசித்தாந்தம் காட்டும் ஆன்ம இலட்சியம். இதனையும் நடராசப் பெருமான் திருவுருவம் நவில்கிறது. நடராசப் பெருமான் உடுக்கை ஏந்திய கையினால் மாயையை நீக்கித், தீ ஏந்திய கையினால் கன்மமலத்தைச் சுட்டெரித்து, முயலகன் மீது ஊன்றிய திருவடியினால் ஆணவமலத்தின் ஆற்றலை ஒடுக்கி, தூக்கிய திருவடியினால் ஆன்மாக்கள் பிறவிப் பெருங்கடலிலிருந்து நீங்க அருள்புரிந்து, திருவடியைக் காட்டி நிற்கும் திருக்கரத்தினால் ஆன்மாவை ஆனந்த வெள்ளத்தில் அழுத்தித் திளைக்கச் செய்து அருள் புரிகிறான். ஏன் இவ்வாறு செய்கிறான் ? ஆன்மாக்களிடம் கொண்ட பெருங்கருணையால் தான். இது தான் எந்தையார் பரதம்'' என உண்மை விளக்க ஆசிரியர் உரைப்பர். மும்மலமும் தன்முனைப்பும் அற்ற முனிவர்களுக்கே இத்திருக்கூத்தின் மெய்ம்மை நன்கு விளங்கும். அவர்கள் இறைவன் அருளும் பேரின்பத்தில் திளைக்குமாறு இத்திருக்கூத்து நிகழும்.


உரையுணர்வுக்கு எட்டாத ஒருவன் ஐந்தெழுத்தினால் கருணையே கொண்டு பராசக்தியே திருஅம்பல இடமாகக் கொண்டு அவ்வருட்சக்தி காணுமாறு ஆடுகின்றான்; நடராசப் பெருமானின் திருக்கூத்து நிகழும் போது அவன் முகம் சற்று திரும்பி அருகிலுள்ள அம்மையை நோக்கி இருக்கும். ஏன்? குமரகுருபரர் காரணம் கூறுகின்றார். நடராசப் பெருமானின் ஐந்தொழில் கூத்தின் அற்புதத் தத்துவத்தைக் கூறியபின் அவர் இத்தொழிலைந்தும் நின்மெய்த் தொழிலாகப் பாலுண்குழவி பசுங்குடர் பொறாதென, நோயுண் மருந்து தாயுண்டாங்கு, மன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்ப வைய மீன் றளித்த தெய்வக் கற்பின் அருள்சூற் கொண்ட ஐயரித்தடங்கட் டிருமாண் சாயற் றிருந்திழை காணச், சிற்சபை பொலியத் திருநடம் புரியும் அற்புதக் கூத்து'' என்று காரணத்தை விளக்குகிறார். நோயுண்ட குழந்தைக்குத் தாய் மருந்துண்டு காப்பது போல நமக்காக அம்மை அந்த நடனத்தின் வேக ஆற்றலைத் தாங்கிக் கொண்டு நம்மிடம் அன்பு செலுத்தும் வகையில் மாற்றிக் கொடுக்கிறாள்.


நடராசப் பெருமானின் பரந்த திருமுகமண்டலம் இறைவனின் தலைமைத் தன்மை, தண்ணளித்திறன், அழியா அழகு ஆகியவற்றை உணர்த்துகிறது; பனித்த சடை ஞானமாகும்; சடையிலுள்ள கங்கை அவனது பேராற்றலையும், வேகம் கெடுத்தாளும் வித்தகத்தினையும் காட்டும் அடையாளம்; பிறைச் சந்திரன் தன்னைச் சரணடைந்தார் தாழ்வு நீக்கித் தாங்கும் தன்மையைக் குறிக்கிறது; குனித்த புருவமோ தன்பாற் குறையிரக்கும் அடியார்களின் வேண்டுகோளைத் கூர்ந்து கேட்கும் கருணைத் திறமாகும்; குமிண் சிரிப்பு அடியார்க்கு வாழ்வளிப்பதைக் காட்டும். பவளமேனி - தீ வண்ணம் - அடியார் மாசுகளைக் சுட்டெரிக்கும் ஆற்றலைக் காட்டும். பால் வெண்ணீறு அழிவிலாத் தன்மைக்கும் தூய இயல்பினுக்கும் அறிகுறி. முயலகன் ஆணவ மலத்தின் அடையாளம். ஆணவமலம் என்றும் அழிவதில்லை. அது போலவே முயலகனும் இறைவன் திருவடிக்கீழ் விளங்குகிறான். இறைவனுக்குப் படி நிலையாய் அமைந்து உதவுவது போல முயலகன் காணப்படுகிறான். அதுபோல ஆணவமலமும் உயிர்களின் இறையின்ப நுகர்ச்சிக்கு ஓராற்றால் காரணமாகிறது. மாயாதே தன் சக்தி மாய்ந்து'' முத்தி நிலையில் உயிர்களின் பால் ஆணவமலம் அடங்கிக் கிடப்பது போல முயலகனும் இறைவனின் திருவடிக் கீழ் மாயாதே தன் சக்தி மாய்ந்து கிடக்கிறான்.

எல்லாத் திருக்கோயில்களிலும் நடராசப் பெருமான் திருவுருவம் தெற்கு நோக்கியே வைக்கப்பட்டிருக்கும். ஏன்? தெற்குத் திசை எமனுக்குரிய திசை. இறைவன் தன்னை வழிபடும் அடியார்க்குத் தெற்கே இருந்து வரும் எமபயம் நீக்கிடவே தெற்கு நோக்கி ஆடுகிறான் என்பர்.


மூலாதாரம் தொடங்கி ஆறாதாரங்களும், இடை, பிங்கலை, சுழுமுனை ஆகிய நாடிகளும் நடுவே நிலைபெறும் மேருதண்டமும் யோகம் பயிலும் நிலையில் உடலுக்கு எவ்வளவு முக்கியமோ, சமாதி நிலை பெற்று சீவன் சிவமாவதற்கு எவ்வளவு அந்த அமைப்பு அடிப்படையோ, அதுபோல் உலகுக்குத் தில்லை அமைந்துள்ளது என்கிறார் திருமூலர். இந்த யோக நுட்பத்தின் தத்துவத்தினை இவர் நன்கு விளக்குகிறார். யோகத்தின் மேல் எல்லையான நிராதார யோகம் என்பதை திருக்களிற்றுப்படியார் குறிப்பிடுகிறது. மேலும் யோகியர் இந்த யோகத்தின் விளைவால் தில்லைப் பெருமானின் திருவடிச் சிலம்போசை கேட்பர் என்றும் அது கூறுகிறது. சேரமான் பெருமாள் நாயனார் இந்தச் சிலம்போசை கேட்டதாகச் சேக்கிழார் பெரிய புராணம் செப்புகிறது.


நடராசப் பெருமானின் நடனத்தில் அறிவியல் நுட்பமும் உள்ளது. அணுக்கள் எல்லாம் ஏக தாளத்தில் ஆடிக் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்ட விஞ்ஞானிகள் அதற்கு உரிய காரணம் என்ன என்பதைக் காண முடியாது கலங்கினர். நடராசப் பெருமானின் நடனக் காட்சியைக் கண்ட பின் அவர்கள் அணுக்கள் இயங்க அண்டங்கள் இயங்குகின்றன. அண்டங்கள் இயங்க ஆண்டவனும் நடன மூர்த்தியாக இருக்க வேண்டும்'' என்ற முடிவுக்கு வந்தனர். ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞான மேதை நடராச வடிவத்தைக் கண்ட பின்னர் உலக அமைப்புஇயக்கம் பற்றிய என் கருத்துக்கள் அனைத்தும் நடராச வடிவத்தில் நளினமாகவும் தெளிவாகவும் விளக்கப் பெற்றுள்ளன'' என்று குறிப்பிடுகிறார்.


ஆனந்த குமாரசாமியும் நடராச வடிவத்தின் தத்துவத்தை மூன்று கூறுகளாகக் கொண்டு விளக்குகிறார். திருவாசியினை அடையாளமாகக் கொண்டு அண்டங்கள் அனைத்தும் இயங்கக் காரணமாக இருக்கும் லயத்துடன் கூடிய நடனமாகக் காண்பது ஒரு கூறாகும். இரண்டாவது கூறு இந்த நடனத்தின் நோக்கத்தைக் கூறுகிறது. எண்ணற்ற ஆன்மாக்களைப் பிறவி நோயிலிருந்து விடுவிப்பதே இதன் நோக்கம் என்பதாகும். மூன்றாவது இந்நடனம் நிகழுமிடமாகிய சிதம்பரம் என்பது அண்டத்தின் நடுவிடமாக இருந்தாலும் அது உண்மையில் பிண்டத்தின் நடுவிடமாகிய இதயக் கமலமே என்பதாகும். கலை, தத்துவம், அறிவியல், கடவுள் தன்மை ஆகியவற்றின் கூட்டுக் கலப்பாகக் கண்ட வடிவமே நடராச பெருமானின் வடிவம் என்பது அவரின் கோட்பாடாகும்.


இவ்வாறு எண்ணற்ற தத்துவங்களின் இருப்பிடமாய்த் திகழ்வது நடராச வடிவமாகும். இந்த நடராச வடிவம் சிற்பக் கலையின் அற்புதமாகவும் அமைந்துள்ளது. இதனைக் கண்ட சைவர்களின் மதி நுட்பம் தான் என்னே ! எனவே தான் இந்துவாழ் சடையான் ஆடும் எல்லையில் தனிப்பெருங் கூத்து'' என்றும் சேக்கிழார் பெருமான் கூறுகிறார். திருக்களிற்றுப்படியார் இன்று இச்சமயத்தின் அல்லது மற்றேழையுடன் ஒன்று சொலி மன்றத்து நின்றவரார்?'' என்ற கேள்வியைக் கேட்கிறது. நடராஜ வடிவம் சைவத்திற்கே உரிய தனிச் சிறப்பு; சைவம் உலகுக்கு வழங்கிய கொடைகளில் சாலச் சிறந்த ஒன்றுமாகும் !



     கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி

     அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்

     சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று

     பொற்புற நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி


- சுபம் -
















இரதம் உணர்த்தும் தத்துவம்

சுப. திண்ணப்பன்

தேசிய கல்விக் கழகம், சிங்கப்பூர்


திருக்கோயில்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள இறைத் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின் மேல் எழுந்தருளச் செய்து கோயில் பிரகாரங்களிலும் வீதிகளிலும் நடத்தும் விழாவுக்குத் திருவிழா என்று பெயர். சமஸ்கிருதத்தில் இதனை உத்சவம் என்று கூறுவர். உயிர்களாகிய நமக்காக இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்கிறான். இவற்றை விளக்குவது தான் திருவிழாவாகும். திருவிழாக்களில் கோயிலில் உள்ளிருக்கும் இறைவன் கோயிலுக்கு வெளியே வந்து கோயிலுக்கு வரவியலாதவர்களுக்கும் காட்சி அளித்து அருள் கொடுக்கும் பெருங்கருணைத் திறத்தையும் நாம் உணர்ந்து கொள்கிறோம். இத்தகைய திருவிழாக்களில் ஒன்று இரதத்தில் இறைத் திருவுருவம் எழுந்தருளி வருதலாகும்.


முன்பு ஒரு காலத்தில் தாரகாட்சன், வித்யுந்மாலி, கமலாட்சன் என்னும் மூன்று அசுரர்கள் சிவபூசை செய்து பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைப் பெற்றனர். பின்பு செருக்கடைந்து அக்கோட்டைகளுடன் பறந்து சென்று தேவர்களுக்கும் மக்களுக்கும் தொல்லையும் துன்பங்களும் விளைத்தனர். தேவர்கள் தொல்லை தாங்க முடியாது இறைவன் - சிவபெருமானிடம் - சென்று முறையிட்டனர். அந்த அசுரர்களின் இறுமாப்பை அடக்குவதற்காகச் சிவபெருமான் இரதம் ஏறினான். அதாவது பூமியையே - நிலத்தையே - ஆண்டவன் இரதமாகக் கொண்டான். இந்தப் பூமியாகிய தேரில் நான்கு வேதங்களும் நான்கு வெள்ளைக் குதிரைகளாகப் பூட்டப்பட்டன. இங்கு பூமியாகிய தேரில் நான்கு வேதங்களும் நான்கு வெள்ளைக் குதிரைகளாகப் பூட்டப்பட்டன. இங்கு வேதம் என்பது அறிவைக் குறிக்கும். இந்த இரதத்தைச் செலுத்துகின்ற சாரதி பிரமா எனப்படும் நான்முகன். இவனின் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையைக் குறிக்கும். இவன் வாயிலாக நில உலகெங்கும் அறிவு பரவுதல் வேண்டும். பூமியாகிய இரதத்தை வேதமாகிய குதிரைகளைப் பூட்டி ஒழுங்காக நடத்துபவன் பிரமா. இந்த இரதத்திற்குச் சக்கரங்களாக இருப்பவர் சூரியனும் சந்திரனும் ஆவர். நிலவுலகத்திற்கு ஒளியூட்டி இயக்குபவர்கள் இவர்கள் இருவர் தாமே. உயிர்களுக்கு வெம்மை தருபவன் சூரியன், தண்மை தருபவன் சந்திரன், வெம்மையும் தண்மையும் உயிரினை இயக்கும் இயல்பின அல்லவா ?


இரதத்தில் எழுந்தருளிவரும் இறைவன் கையில் ஒரு வில் உண்டு. மேரு மலையே இந்த வில்லாகும். இந்த வில்லுக்கு அம்பாக உள்ளவர் விஷ்ணு. அதன் நுனி அக்கினிதேவன் எதிரிகளை அக்கினி எரிக்கும் அல்லவா ? வில்லுக்கு நாணாக விளங்கியது வாசுகி எனும் பாம்பு. இந்த இரதத்தின் இறகுகளாக உள்ளவன் வாயு (காற்று). இறைவன் இத்தகைய போர்க் கோலத்துடன் திரிபுரங்களாகிய மூன்று அசுரர் கோட்டைகளையும் அம்பு எய்தித் தாக்கத் தொடங்கும் போது இரதத்தின் உறுப்புகளாக வந்தவர்கள் எல்லாரும் தம்மால் தான் இறைவன் திரிபுரம் அழிக்கப் போகிறான் என எண்ணத் தலைபட்டனர். இந்த நிலையினை உணர்ந்த இறைவன் இவர்களை எண்ணிச் சிரித்தான். இச்சிரிப்பின் ஆற்றலால் திரிபுரம் தீப்பட்டது. மேற்கூறிய மூன்று அசுரர்களும் அழிந்தனர். தேவர்கள் துன்பம் நீங்கி இன்பம் பெற்றனர். இங்கு கூறப்பட்ட மூன்று அசுரர்கள் என்பவர்கள் (கோட்டைகள் என்பன) உயிர்களாகிய நமக்கிருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பன. இம்மலங்களை இறைவனின் திருவருட்சக்தி நிலவுலகமாகிய தேரில் எழுந்து வந்து எரித்தொழித்துப் பேரின்பத்தைத் தருவதையே இரதத்தில் இறை எழுந்தருளும் காட்சி நமக்கு உணர்த்துகிறது. முப்புரமாவது மும்மலகாரியம் என்பது திருமந்திரம், இரதத் திருவிழா தொடர்பாக இன்னொரு கதையும் உண்டு.


பகாக்ஷன் பொருட்டுச் சிவபெருமான் வேதங்கள் நான்கும் தேராகவும் உபநிடதங்கள் குதிரைகளாகவும், உமையவள் சாரதியாகவும், ஓம் என்னும் பிரணவன் சவுக்காகவும், காலச் சக்கரம் வில்லாகவும், மகாமாயை நாணாகவும் அமையப் பாசுபதாஸ்திரம் கொண்டு அந்த அசுரனது வலிமையை அடக்கியதாகவும் அந்தக் கதை கூறும்.


இரதத்திருவிழா யோகத்துடன் தொடர்புடைய ஒன்றாகவும் கருதப்படும். இரதத்தின் அமைப்பு அண்டத்தையும் பிண்டத்தையும் குறிக்கும். நம் உடலே இரதம், இந்த இரதத்தினை உள்ளிருந்து இயக்குபவன் இறைவன். தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி அசைவற்ற மனத்தை உந்தி, குண்டலியிலிருந்து நாபிக்கும் அதிலிருந்து கழுத்திற்கும், பின் வாய்க்கும், ஏற்ற லயப்படுத்தி முறையே இரதக் குதிரையாம் மூக்கிற்கும் பின் புருவமத்திக்கும் ஏற்றி லயப்பட்டுச் சும்மா இருந்தபடியே இருக்கும் பேரின்ப நிலையையே யோகநிலையில் இரதத்திருவிழா குறிப்பதாகக் கொள்வர்.


ஐந்தொழில் நிலையில் இறைவனின் அழித்தல் தொழிலைக் குறிப்பது தான் இரதத் திருவிழா. அழித்தல் என்பது ஆண்டவன் இவ்வுலகில் பிறந்து பிறந்து துன்பப்படும் உயிர்களைச் சற்று இளைப்பாற்றும் பொருட்டுத் தன்னகத்தே இழுத்து ஒடுக்கி வைத்துக் கொள்ளும் அருள்நிலையைக் குறிப்பதாகும். மேலும் யான், எனது என்னும் செருக்கினையும் இருவினைகளையும், உலகப் பற்றினையும் அழித்து நமக்குப் பேரின்பத்தையும் ஞானத்தையும் வீடுபேற்றையும் அளித்தலையே இரதத்தில் இறைவன் எழுந்தருளும் நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.



















நவராத்திரிக் கலைவிழா

சிறப்பு விருந்தினர் பேராசிரியர் சுப.திண்ணப்பன் உரை.

`சைவத்தையும் தமிழையும் இருகண்களாகக் கருதி இடையராது நற்பணியாற்றும் செண்பக விநாயகர் ஆலய சைவசமயப் பள்ளியின் நவராத்திரிக் கலைவிழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைத்த மேலாண்மைக் குழுவினர்க்கும், பள்ளியின் முதல்வர் தொண்டின் திருவுருவம் சிவசுப்பிரமணியம் அய்யா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுட் பணியுடன் கல்விப்பணி, தமிழ்ப் பணி, சமயப்பணி, சமூகப்பணி, நாட்டுப் பணி முதலிய பலவகையிலும் சிறப்பாகச் செயலாற்றி முன் மாதிரிக் கோயிலாகத் திகழும் இக்கோயில் நிர்வாகத்தினருக்கு என் பாராட்டுக்கள்.

வளரும் பயிர்களான குழந்தைகளுக்குச் சமய அறிவையும் தமிழையும் ஊட்டுவதற்காக ஞாயிறு தோறும் பேருந்துகள் வைத்து சிங்கப்பூரின் பல வட்டாரங்களிலிருந்தும் குழந்தைகளை அழைத்து வருவது போற்றத்தக்கது. இளையர்களுக்குச் சைவசித்தாந்த வகுப்பு நடத்துவதும் நல்ல பணியாகும்.

நவராத்திரிக் கலைவிழா! நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள் என்று பொருள். முதல் மூன்று இரவுகள் உடலுக்கு உரமூட்ட உதவும் - வீரத்தைத் தரும் சக்தியைஉமையம்மையாராகிய மலைமகளை வணங்குகிறோம். இரண்டாம் மூன்றாம் இரவுகள் செல்வத்தைத் தரும் இலக்குமியாகிய அலைமகளை வழிபடுகிறோம். அடுத்த மூன்று இரவுகள் கல்வியை வழங்கும் சரஸ்வதியாகிய கலைமகளை வணங்குகிறோம். இந்த மூவரின் அருளைப் பெற சைவத் திருமுறை ஆசிரியரான ஞானசம்மந்தப் பெருமான் ஒரு வழியைக் கூறுகிறார். திருவீதிமிழலை என்னும் ஊரிலுள்ள சிவபெருமானைப் பாடிய சீர்காழித் தலைவராகிய தமிழ்விரகர் ஞானசம்பந்தரின் பாடல்களை மனமகிழ்ச்சியுடன் பாடிப் பயில்கின்றவர்எழில்மிக்க மலர்மகள், கலைமகள், செயமகள், புகழ்மகள் ஆகிய நால்வர் அருள்பெற்று இந்த உலகில் இனிது வாழ்வார்கள் என்று  கூறுகிறார்.  இப்பாடலில் புகழ்மகள் அருளும் கூடுதலாகக்கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது. எனவே சைவ வேதமாகிய திருமுறைகளைப் பயில்வதன் பயனை உணர்ந்து சைவப்பெருமக்கள் திருமுறைப் பாடல்களைப்பாடி இறை அருள்பெற வேண்டுகிறேன்.

கலைவிழா! உள்ளதை உள்ளபடி உரைப்பது அறிவியல், உள்ளதை உணர்ந்தபடி உரைப்பது கலை. கலைஞன் தன் அனுபவத்தைக்  கற்பனை நயம் தோன்ற அழகுணர்ச்சியுடன் கல்லாலோ, மண்ணாலோ, வண்ணத்தாலோ, சொல்லாலோ வடித்துக் கலைவடிவம் தருகிறான். கல்லால் வடித்தால் அது சிற்பக்கலை, மண்ணால் வடித்தால் அது பொம்மை, வண்ணத்தால் அமைத்தால் அது ஓவியம், சொல்லால் செய்தால் அது பாடல்-இலக்கியம். இத்தகையக் கலையைக் கடவுளுடன் இணைத்துப் பார்த்தவர்கள் இந்தியர்கள். இந்திய நாட்டுக்கலையின் தனித்தன்மை இதுவாகும். மேல்நாட்டுக் கலையில் இந்த இயல்பு இல்லை.

கி.பி 6,7,8ஆம் நூற்றாண்டுகளில் சமணர்கள், கலை காமத்தை விளைவிக்கும் என்று சொல்லிக் கலையை வெறுத்து ஒதுக்கிய கால கட்டத்தில் நம் திருமுறை ஆசிரியர்கள் கடவுளைக் கலையின் வடிவமாகப்  கண்டு போற்றினார்கள். ‘கலையவன், மறையவன்என்று ஞானசம்பந்தரும், இயல், இசை, நாடகமாகிய முத்தமிழும் ஆனான் கண்டாய்என்று சுந்தரரும் சிவபொருமானைப் பாடியுள்ளனர். எல்லாக் கலைகளும் ஒன்றாக இணைந்தகலை பரதநாட்டியக்கலை. பரதநாட்டிய தெய்வமாக நடராசப் பெருமானைத் தமிழர்கள் சிற்பமாகக் கண்டனர். கலை, அறிவியல், தத்துவம் என மூன்றும் கலந்த கடவுள்சிலை நாடகவடிவம் என்று உலகிற்குக் காட்டிய பெருமை இலங்கைத் தமிழராகிய ஆனந்தகுமாரசாமி அவர்களையே சாரும். Dance of Siva என்னும் அவரது ஆங்கில நூலே நாடக வடிவத்தின் சிறப்பை உலகறியச் செய்தது. அந்த வடிவத்தை மேடையில்  அமைத்து நால்வர் பெருமக்களையும் அடியில் அமரச்செய்து இந்தக் கலைவிழா நிகழ்ச்சிகளைச் சிறுவர்களைக்கொண்டு மிகச் சிறப்பாக நடத்தியது பாராட்டத் தக்கதாகும்.

குமரகுருபர் பாடிய சகலகலாவள்ளிமாலைப் பாடல்களைப் பாடி நிகழ்ச்சி தொடங்கியது நல்லது. மேலும் சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் காலம், இடம் கடந்த நிலையிலும், சமூக மாற்றத்தைச் சித்திரிக்கும் வகையிலும் அமைந்திருந்தன. எனவே, இதில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கும், இவர்களுக்குப் பயிற்சி கொடுத்த ஆசிரியர் பெருமக்களும், ஆதரவு நல்கிய பொற்றோர்களுக்கும் என் பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.



சிலப்பதிகாரத்தில் சிவகிருஷ்ணர்

பேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பன்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம்

சிம் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்.


சிலப்பதிகாரம் செந்தமிழில் தோன்றிய முதல் காப்பியம்.  இளங்கோவடிகளால் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப் பெற்ற நூல்.  ஐம்பெருங்காப்பியங்களில் முதலாவதாக வைத்துப் போற்றப்படும் சிறப்புடையது.  பூம்புகாரில் தோன்றிய கோவலன், கண்ணகி வாழ்க்கை வரலாற்றைப் பாடுபொருளாகக் கொண்டது.  அறத்தின் வலிமை, ஊழின் ஆற்றல், கற்பின் பெருமை ஆகியவற்றை வலியுறுத்துவதே இந்நூலின் நோக்கமாகும்.  குடிமக்கள் காப்பியம், தமிழ்நாட்டின் தேசிய காப்பியம், வரலாற்றுக் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், பெண்ணின் பெருமை பேசும் காப்பியம், சமயப் பொறையைக் கூறும் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படும் இந்நூலைப் பாரதியார் "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்னும் மணியாரம் படைத்த தமிழ்நாடு" என்று பாராட்டிப் பாடுகிறார்.  இந்நூலில் இடம்பெறும் சிவகிருஷ்ணரைப் பற்றிச் சிறிது விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


பெரியோனும் நெடியோனும்


சிவன்/சிவம் என்பது தமிழர் கண்ட இருபெருஞ் சமய நெறிகளில் ஒன்றாகிய சைவ சமயம் போற்றும் முழுமுதற் கடவுளின் பெயர்.  "சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்" என்று சைவ அடியார் திருநாவுக்கரசர் இதனைக் கூறுவார்.  கிருஷ்ணர் என்பதோ தமிழரின் மற்றொரு சமய நெறியாகிய வைஷ்ணவ சமயம் போற்றும் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகும்.  சிலப்பதிகாரம், பூம்புகார் நகரக் கோயில்களை இந்திரவிழாக் கொண்டாடும் சூழ்நிலையில் பட்டியலிடுகிறது.  அப்போது

            "பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்

            வால்வளை மேனி வாலியோன் கோயிலும்

            நீலமேனி நெடியோன் கோயிலும்

            மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்" (இந்திரவிழா 169-17)

எனக் கூறுகிறது.  இங்கு பிறவா யாக்கைப் பெரியோன் என்பது உயிரியல்பாகிய, பிறப்பு இறப்பு இல்லாத சிவனை - தாய் வயிற்றிற் பிறவாத உடலை உடைய சிவனைக் குறிப்பிடுகிறது.  இது சைவநெறி கூறும் சிவனின் சிறப்புத் தன்மையை - அதாவது "தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன்" என்று திருவாசகம் கூறும் கூற்றை - பிறவா இறவாத் தன்மையைப் புலப்படுத்துகிறது.  அறுமுகச் செவ்வேள் கோயில் முருகன் கோயில்.  அடுத்து வால்வளை மேனி வாலியோன் என்பது வெண்சங்கு போன்ற நிறத்தை உடைய பலதேவன் கோயிலைக் குறிக்கிறது.  பலதேவன் என்பவர் கிருஷ்ணனின் தமையனான பலராமன்.  இதுவும் திருமால் அவதாரங்களில் ஒன்று.  அடுத்து வரும் "நீலமேனி நெடியோன் கோயில்" என்பது நீலமணி போலும் நிறத்தையுடைய நெடியமால் கோயில் என்பதைக் குறிக்கும்.  எனினும் இங்கு பலராமன் கோயிலை அடுத்துக் குறிப்பிடுவதால் இந்தக் கோயிலைக் கிருஷ்ணன் / கண்ணன் கோயில் எனவும் கருதலாம்.  எனவே சிலப்பதிகார காலத்தில் பலராமன், கண்ணன் போன்ற அவதார மூர்த்திகளுக்கும் கோயில்கள் இருந்ததை அறிய முடிகிறது.  மேலும் திருமால், அறம் தாழ்ந்து மறம் ஓங்கி நிற்கும்போது அவ்வப்போது அறம் தழைக்க அவதாரம் எடுக்கும் எளிவந்த இயல்பினையும் இது காட்டுகிறது எனக் கூறலாம்.


ஆடலில்


இந்திரவிழாவின் இறுதியில் கோவலன் காதற்கிழத்தியாகிய மாதவி என்னும் நாட்டிய நங்கை ஆடிய பதினோராடல்களில் சிவபெருமான் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம் ஆகிய இரண்டும், கிருஷ்ணன் ஆடிய ஓராடலும் சிலப்பதிகாரத்தில் கடலாடுகாதையில் குறிக்கப்பெற்றுள்ளன.  இந்த ஆடல்களை ஆடுமுன் மாதவி மாயோன் பாணியாகிய திருமால் பாடல் ஒன்றினைப் பாடியதாகவும் கூறப்படுகிறது.  சிவபெருமான் ஆடிய ஆடல் குறிப்பு இதோ!

            "பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்

            திரிபுரம் எரியத் தேவர் வேண்ட

            எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப

            இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடல்" (கடலாடு காதை 39-43).

பைரவி ஆடிய சுடுகாட்டில் திரிபுரமாகிய மூன்று கோட்டைகளை எரித்திடுமாறு தேவர்கள் சிவபெருமானை வேண்ட, வடவைப் பெருந்தீயாகிய அம்பு அவன் கட்டளையை நிறைவேற்ற, உமை அம்மை ஒருபக்கமாக நிற்க, தேவர் யாவரிலும் உயர்ந்த சிவபெருமான் ஆடிய கொடுமை மிகு நடனமே கொடுகொட்டியாகும்.  இங்கு மூன்று கோட்டை என்பது உயிர் (ஆன்மா), வீடு பெறத் தடையாக உள்ள ஆணவம், கன்மம், மாயை என்பனவற்றைக் குறிப்பிடுவதாகத் திருமூலர் கூறுவார்.  சிவபெருமான் திரிபுரம் எரித்த கதையே சிவபெருமான் தேர் ஊர்வலமாகும்.  சிவபெருமான் தேரில் வரும்போது நான்கு வேதங்களாகிய குதிரைகளை ஓட்டும் ஓட்டுநராகப் பிரமன் - நான்முகன் காணும்படி சிவபெருமான் ஆடிய ஆடலே பாண்டரங்கமாகும்.  இதனைச் சிலப்பதிகாரம்

            "தேர்முன் நின்ற திசைமுகன் காணப்

            பாரதி ஆடிய வியன் பாண்டரங்கம்" (கடலாடு காதை 44-45)

எனக் குறிப்பிடுகிறது.  பாரதி என்பது பாரதி வடிவாய - சக்தி வடிவாய சிவனைக் குறிப்பிடுகிறது.


கிருஷ்ணன் ஆடிய கூத்து அல்லியம் என்பது.  இதனைக்

            "கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக

            அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்

            அல்லியத் தொகுதியும்"           (கடலாடு காதை 47-49).

எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது.  தன் மாமனாகிய கம்சனின் வஞ்சகத்தை வெல்வதற்காக மை நிறத்தானாகிய கண்ணன் ஆடிய ஆடலே அல்லியம் ஆகும்.  கிருஷ்ணாவதார நோக்கமே கம்சனைக் கொல்வதுதானே! எனவே இந்தக் கூத்து கிருஷ்ணன் கம்சன் செய்த பல சூழ்ச்சிகளைப் பற்றிய ஒன்றாக அமைந்திருக்கும்.  எனவே சிலப்பதிகாரம் கிருஷ்ணனின் வெற்றிகளைப் பற்றிப் பேசும் ஆடலைப் போற்றிய மக்கள் இருந்ததைக் கூறுகிறது அல்லவா?


மந்திரத்தில்


மதுரைக்குச் செல்லும் கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரையும் சந்திக்கும் மாங்காட்டு மறையோன் என்பவன் திருவரங்கத்தில் திருமால் கிடந்த வண்ணத்தையும், திருப்பதியில் நின்ற வண்ணத்தையும் பாரட்டிப் பேசும் பேச்சினையும் சிலப்பதிகாரத்தில் கேட்க முடிகிறது.  அவனே சிவபெருமானின் சூலத்தைப் "பிறைமுடிக்கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலம்" எனக் கூறுவதாகச் சிலப்பதிகாரம் செப்புதலையும் அறிய முடிகிறது.  பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமானை இங்கே காண முடிகிறது.  மேலும் அவன் பேச்சில் "அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்" எனச் சைவ சமயத்தினர் போற்றும் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம் பற்றிய செய்தியும், வைணவ சமயத்தினர் போற்றும் நாராயணாய நம என்னும் எட்டெழுத்து மந்திரம் பற்றிய செய்தியும் இடம் பெறக் காணலாம். 


கொற்றவை வடிவில்


கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் செல்லும் காட்டு வழியில் வேடர்கள் பாடிய வேட்டுவ வரிப்பாடலில் கொற்றவையைத் தொழுது பாடும்போது சிவன் பற்றிய குறிப்புகள் சில சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன.  கொற்றவையைக் "கண்ணுதல் பாகம் ஆளுடையாள்" (சிவபெருமானின் இடப்பாகத்தினள்) என்றும், "திருமாற்கிளையோள்" (திருமாலின் தங்கை) என்றும், சங்கு சக்கரம் திருமால் ஆயுதம் எனவும், கங்கையை முடிமேல் அணிந்த சிவன் என்றும் குறிப்புகள் உள்ளன.


கோயிலில்


மதுரை வந்தடைந்த கோவலன் காலைப் பொழுதில் நெற்றிக்கண் கொண்ட சிவபெருமான் கோயிலையும், கருடச் சேவலைக் கொடியாகக் கொண்ட திருமால் கோயிலையும், கலப்பைப் படை ஏந்திய பலதேவன் கோயிலையும், முருகன் கோயிலையும் கண்டு சென்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.


கோவலன் கண்ணகி கோலத்தில்


கோவலன் மாதரி என்னும் இடைக்குல மடந்தையின் அடைக்கலமாகக் கண்ணகியுடன் இருந்தபோது கண்ணகி சமைத்த உணவைக் கோவலன் உண்ணும் காட்சியைக் கண்ட மாதரியும் அவள் மகள் ஐயை என்பவளும் அவர்களை முறையே அதாவது கோவலனைக் கண்ணனாகவும் கண்ணகியை நப்பின்னையாகவும் கண்டதாக இளங்கோ பாடும்போது கிருஷ்ண நப்பின்னையைப் பார்க்க முடிகிறது.

            "ஆயர்பாடியின் அசோதை பெற்றெடுத்த

            பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ

            நல்லமுது உண்ணும் நம்பி ஈங்கும்

            பல்வளைத் தோளியும் பண்டு நம்குலத்துத்

            தொழுனையாற்றினுள் தூமணி வண்ணனை

            விழுமம் தீர்த்த விளக்குக் கொல்லென

            ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி"   (கொலைக்களக் காதை 46 - 52).

ஆயர்களாகிய இடையர்களின் சேரியில் அசோதை என்பாள் பெற்றெடுத்த காயாம்பூ மலர் போன்ற நிறத்தை உடைய கிருஷ்ணன் (கண்ணன்) போன்று கோவலன் காட்சி அளிக்கிறான்.  கண்ணகியோ கிருஷ்ணாவதாரத்தில் காளிந்தியாற்றில் துயரம் நீக்கிய நப்பின்னையைப் போலக் காட்சி அளிக்கிறாள்.  இங்கு கிருஷ்ணன் பற்றிய குறிப்பு நன்கு சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பெறுவதைக் காணலாம்.


ஆய்ச்சியர் குரவையில்


கோவலன் கொலையுண்டதால் விளைந்த தீநிமித்தங்களைக் கண்ட ஆய்ச்சியர் திருமாலை வேண்டிக் குரவைக் கூத்து ஆடுகின்றனர்.  இப்பகுதியில் கிருஷ்ணனைப் பற்றிய பல செய்திகள் (சிலப்பதிகாரத்தில்) இடம் பெற்றுள்ளன.  ஆய்ச்சியர் குரவை என்பது ஆயர்பாடியில் எருமன்றத்தில் கிருஷ்ணன் தன் தமையன் பலராமனுடன் விளையாடிய பாலசரித நாடகம் ஆகும்.             

"கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்" என வஞ்சத்தால் வந்து நின்ற பசுவின் கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு வஞ்சக விளவின் பழத்தை உதிர்த்த கண்ணனின் செயல் இங்கு பேசப்படுகிறது.  குருந்த மரத்தை ஒடித்த கண்ணனின் பெருஞ்செயலும் இங்கு பேசப் படுகிறது. 

            "இறுமென் சாயல் நுடங்க நுடங்கி

            அறுவை ஒளித்தான் வடிவு என்கோயாம்

            அறுவை ஒளித்தான் அயர அயரும்

            நறுமென் சாயல் முகம் என்கோயாம்"

என்று வரும் பாடலில் கோபிகாஸ்திரிகளின் - கன்னியரின் ஆடையை மறைத்து விளையாடிய கண்ணனின் அழகைப் பாடி மகிழும் பெண்களைப் பார்க்க முடிகிறது.

பின்னர் வரும் இரண்டு பாடல்களில் "சூரியனைச் சக்கரத்தால் மறைத்த கடல் நிறத்தவனாகிய கண்ணன் - மயில் கழுத்து போன்ற நிறத்தனாகிய கண்ணன் - தன் அன்ணனாகிய பலதேவனோடும், காதலியாகிய நப்பின்னையோடும் காட்சி அளிப்பதையும், அங்கு நாரதர் வீணை இசைப்பதையும் அசோதை தொழுதேத்துவதையும் குறிப்பிடக் காண்கிறோம்.  பின்னர் மூவேந்தரையும் வாழ்த்திப் பாடும் பாடலில் பாண்டியனைப் பற்றிப் பேசும் பகுதியில் "செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்து ஒசித்தான் என்பரால்" எனப்படுகிறது.  இங்கு வளமிக்க துவாரகை நகரில் பசுக்கூட்டத்தை மேய்த்துக் குருந்த மரத்தை முறித்த கிருஷ்ணனைப் பார்க்க முடிகிறது.


அடுத்து வரும் மூன்று பாடல்களிலும் (முன்னிலைத் துதியாக உல்ளன) கிருஷ்ணாவதாரக் குறிப்புகள் உள்ளன.

            வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்

            கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே

            கலக்கியகை யசோதையார் கடைகயிற்றால் கட்டுண்கை

            மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

           

            அறுபொருள் இவனென்றே அமரர்களும் தொழுதேத்த

            உறுபசிஒன்றின்றியே உலகடைய உண்டனையே

            உண்டவாய் களவினால் உறிவெண்ணெய் உண்டவாய்

            வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே


            திரண்டமரர் தொழுதேத்த திருமால் நின் செங்கமல

            இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே

            நடந்த அடி பஞ்சவர்க்கு தூதாக நடந்த அடி

            மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே     (ஆய்ச்சியர் குரவை).

முதற்பாடலில் மந்தரமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பினை கயிற்றாகவும், கொண்டு பாற்கடலின் நடுவிடத்தைக் கலக்கியவன் கடல் நிறத்தவனாகிய கண்ணன் என்றும், அவன் கை அசோதையார் கயிற்றால் கட்டுண்ட கை என்றும், தாமரை மலர் போலும் உந்தியை உடையவன் கண்ணன் என்றும் கூறப்படும் செய்திகள் கண்ணனின் அருமையையும் பெருமையையும் ஒருங்கே உணர்த்துகின்றன.


இரண்டாவது பாடலில் வளமிக்க துளசி மாலையணிந்த கண்ணனை விளித்து அறுவகைச் சமயத்தாலும் அறுதியிட்டுத் துணிந்த பொருள் கண்ணனே என்று தேவர்கள் போற்றுவதாகக் கூறி, பசி ஒன்றுமில்லாத சூழலில் ஏழுலகையும் கண்ணன் உண்டதாகவும் பேசி, அவ்வாறு உண்டவாய் உறியிலுள்ள வெண்ணெய் திருடி உண்ட வாயன்றோ என்று வியக்கும் நிலையைக் காண்கிறோம்.


மூன்றாம் பாடலில் திருமால் வாமனாவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தி கொடுத்த மூவுலகையும் இரண்டு அடிகளால் அளந்த திருவடிகள் மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்காகத் துரியோதனனிடம் தூது சென்றபோது நடந்த திருவடிகள் அல்லவா? எனக் கூறுகிறது.

இம்மூன்று பாடல்களிலும், கண்ணனின் கை, வாய், அடி ஆகியன செய்த அருமையான செயல்களின் பெருமையும் அதே நேரத்தில் கிருஷ்ணாவதாரத்தில் அவற்றின் எளிவந்த நிலையும் (சௌலப்பியம்) பேசப்படக் காணலாம்.


ஆய்ச்சியர் குரவையின் இறுதிப்பகுதியாகிய படர்க்கைப் பரவலில் அதாவது சேய்மை நிலையில் வைத்துப் போற்றும் பாடலின் இறுதிப்பாடலில் கிருஷ்ணாவதாரத்தை இளங்கோவடிகள் மிக உயர்ந்த நிலையில் போற்றுகின்றார்.  அப்பாடல் வருமாறு:

            மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

            கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்

            படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது

            நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே

            நாரயணா என்னா நாவென்ன நாவே

"அறியாமை மிக்க உள்ளம் கொண்ட கம்சனின் வஞ்சகச் செயல்களை வென்றவன் கண்ணன்; நான்கு திசைகளும் போற்றவும் வேதங்கள் முழங்கி வழிபடவும் பாண்டவர்களுக்காகத் துரியோதனன் முதலிய நூறு பேரிடம் தூது சென்றவன் கண்ணன்; இவனைப் போற்றிப் பாடாத நாக்கு பயனற்ற நாக்காகும்.  நாராயணா என்று கூறாத நாக்கு என்ன நாக்கு?" என்று இப்பாடல் கேட்கிறது.  இங்கே கண்ணனின் மறச்செயல் கம்சனை வென்றது.  அறச்செயல் பாரதத்தில் தூது சென்றது.  இவ்விரண்டையும் போற்றிப் புகழும் வண்ணம் "நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?" என்று இளங்கோவடிகள் முடித்திருக்கும் திறன் நீள நினைந்து போற்றுதற்குரிய ஒன்றாகும்.  திருவாய்மொழியில் நம்மாழ்வார்

            "கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்!

            எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே!"

என்று கூறுவதையும் இங்கு ஒப்பு நோக்கி மகிழலாம்.


குன்றக் குரவையில்


கொலயுண்ட கோவலன் திருச்செங்கோடு என்னும் குன்றத்தில் தேவனாய் மீண்டும் வந்து அங்கு நின்ற கண்ணகியை விமானத்தில் ஏற்றிச் சென்ற காட்சியைக் கண்ட குன்றக்குறவர்கள் குரவை பாடி முருகனை வழிபடுகின்றனர்.  அப்போது முருகனை ஆலமரத்தில் அமர்ந்த சிவபெருமான் மகன் என்றும் கயிலை மலைவாழ் கடவுள் ஆகிய சிவபெருமான் என்றும் கூறுகின்றனர்.  இங்கே சிவபெருமான் "ஆலமர்செல்வன்" என்றும் "கயிலை நன்மலை இறை" என்றும் புகழப்படுகிறான்.  முன்னது தட்சிணாமூர்த்திக் கோலம் பற்றியது.


சமரச நோக்கில்


இறுதியாகக் கண்ணகிக்கு கல்லெடுக்க இமயம் நோக்கிச் செல்லும் சேரன் செங்குட்டுவன் தமிழரைப் பழித்த கனகவிசயர் மீது படைகொண்டு புறப்படுகிறான்.  அப்போது திருவனந்தபுரமாகிய ஆடகமாடத்தில் பள்ளிகொண்ட திருமாலின் பிரசாதம் (மலர்மாலை முதலியன) கொணர்ந்து சேரன் செங்குட்டுவன் முன் சிலர் நிற்கின்றனர்.  கங்கையைச் சடையில் அணிந்த செஞ்சடைக் கடவுளாகிய சிவபெருமானின் சேவடிப்பிரசாதத்தைச் செங்குட்டுவன் தன் தலையில் வைத்திருந்ததால் திருமாலின் மாலையை வாங்கித் தன் மார்பில் தாங்கிக் கொண்டான்.  இவ்வாறு இளங்கோவடிகள் கால்கோட்காதையில் குறிப்பிடுகிறார்.  சிவபெருமானின் மாலை சேரன் செங்குட்டுவன் தலையிலும், திருமாலின் மாலை அவன் மார்பிலும் அணியப்பட்ட காட்சி நாம் கடைப்பிடிக்க வேண்டிய சைவ வைணவ சமரச நோக்கினைப் புலப்படுத்துகிறது அல்லவா?  தலையில் மூளை இருந்து அறிவாட்சி செய்கிறது.  மார்பில் இதயம் இருந்து உணர்வாட்சி செலுத்துகிறது.  மூளையும் இதயமும் போன்றவை அன்றோ சைவமும் வைணவமும்!


முடிவுரை

இவ்வாறு சிலப்பதிகாரம் சிவனையும் கிருஷ்ணனாகிய கண்ணனையும் தனித்தும் இணைத்தும் பேசும் செய்திகளை இக்கட்டுரையில் கண்டோம்.  சிவன் பிறவாயாக்கைப் பெரியோன். எனவே கடவுளின் அருமை - அனைத்தும் கடந்த நிலை உணர்த்தப்படுகிறது.  கிருஷ்ணன் திருமாலின் அவதார நிலை.  எல்லார்க்கும் இறங்கி வந்து எளிவந்த நிலை.  உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவனாக இருக்கும் இறைவன் பக்தர்களுக்காகத் தூது செல்வதும் திருவிளையாடல்கள் புரிவதும் அவனது எளிமையைக் காட்டுகின்றன.  அருமையில் எளிமையும் எளிமையில் அருமையும் கொண்டதே சிவகிருஷ்ணர் வழிபாடு என்பதைச் சிலப்பதிகாரம் நமக்கு உணர்த்தும் செய்தியாகக் கொல்ளலாம்..


1 கருத்து: