வெள்ளி, 2 மே, 2014

சமயம் - சைவம் - 5


அப்பர் அறிவுரை

                அப்பர் என்று அழைக்கப் பெறும் திருநாவுக்கரசர் சைவ சமயக்குரவர்நால்வருள் காலத்தால் மூத்தவர்.ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சமண சமயச் செல்வாக்கினின்று சைவத்தைக் காப்பாற்றிய சான்றோர்.   மக்களை மட்டுமின்றிப் பல்லவப் பேரரசன் மகேந்திரவன்மனையும் மதம்மாறச் செய்த மாண்புடையவர்.  திருவாமூரில் அலகில் கலைத்துறை தழைக்கவும் அருந்தவத்தோர் நெறி வாழவும் உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர்போல் புகழனார் , மாதினியார் என்ற இருவருக்கும் இவர் மகனாய்த் தோன்றினார்.  இவர் இயற் பெயர் மருணீக்கியார்.  இளமையில்தம் பெற்றோரை இழந்து குடும்பத்தில் ஏற்பட்ட துன்பங்களைக் கண்டு நில்லாத உலகியல்பு  உணர்நது நிலையா வாழ்க்கை அல்லேன்என்று அறத் துறந்து  சமண சமயத்தில் சார்ந்து நின்றார். அச்சமண நெறியிலுள்ள நூல்களை எல்லாம் கற்றுத் துறைபோன அறிஞராய் விளங்கினார்.

                பின்னர் இவர் தமக்கையார் தூண்டுதவ விளக்கனையார்வேண்டுகோளுக்கு இணங்க இறைவன் இவருக்குச் சூலை நோய் கொடுத்துச் சைவத்திற்கு மீளுமாறு செய்தான்.  கூற்றாயினவாறு விலக்ககிலீர்’’என்று பதிகம் பாடத் தொடங்கினார்.  அதுகேட்டு இன்புற்ற இறைவன் நாவுக்கரசு என்றுலகு ஏழினும் நின் நாமம் நயப்புற மன்னுக’’ என்று பணித்தருளினான்.  அன்று முதல் நாவுக்கரசர் நாள் தோறும் இறைவனையே இடையறாது எண்ணும் தியான உணர்வும் , ஈடின்றி எழும் திருவாசகமும் ,கையில் திகழும் உழவாரமும் கொண்டு மன மொழி மெய்யினால் சைவப்பணி செய்யத் தலைப்பட்டார்.  தூய வெண்ணீறு பூசிய பொன்மேனி, கழுத்திலே தாழ்வடம், நாயகனாகிய இறைவனையே எண்ணும் நல்ல சிந்தை, நைந்துருகிப் பாய்வது போல் அன்புநீர பொழிகின்ற அருட்கண்கள், பதிகம்பாடும் பவளவாய், கையிலே உழவாரம்’’ இதுதான் சேக்கிழார் காட்டும் நாவுக்கரசரின் நல்லுருவம்.  சேக்கிழார் திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறி வாழ வருஞானத்தால் முனிவர் வாகீசர்’’ என அறிமுகம் செய்து அவர் பெருமையை ஒருநாவுக்குரை செய்ய ஒண்ணாமை உணராதேன்’’ என்று தன்னடக்கம் கூறி நாவுக்கரசர் வரலாற்றைப் பாடத் தொடங்குகிறார்.

                நாவுக்கரசர் பாடிய தமிழ்ப்பாடல்கள் தான் முதன்முதலில் தேவாரம் என்று வழங்கப்பெற்றன.சைவத் திருமுறைகளில் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளாகதிருநாவுக்கரசர் பாடல்களைத் தொகுத்துள்ளனர். இணைகொள் ஏழேழு நூறிரும் பனுவல்கள் ஈன்றவன் திருநாவினுக்கரையன் என்று சுந்தரர் பாடினாலும் இன்று நமக்கு அப்பர் பாடிய பாடல்களாக 312 பதிகங்கள்தாம் கிடைத்துள்ளன. தன் எண்பது ஆண்டு வாழ்வில் தலங்கள்தோறும் சென்று இவர் பாடிய பாட்ல்களில் காணக்கிடைக்கும் சிறப்புச் செய்திகள் பல. தன்னை அடிமையாகவும் தன்னை ஆட்கொண்ட இறைவனைத் தலைவனாகவும் கொண்டு என்கடன் பணிசெய்து கிடப்பதே தன் கடன்அடியேனையும் தாங்குதல் என்று கூறும் குறிக்கோள் இவர் பாடல்களில் அடிப்படை நாதமாய் அமைந்துள்ளது. தொண்டலால் உயிர்க்கு ஊதியமில்லை என்று பல இடங்களில் தொண்டின்பெருமையை விளக்கி  நிற்கும் பெற்றயையும் காணலாம். தம் வாழ்நாளில் பெரும்பகுதியைப் புறச்சமய நெறியில் நின்று போக்கிய புன்மையை எண்ணி எண்ணி ஏங்கிய நிலையையும் இறைவன் தன்னைத் திருத்திய பெருங்கருணைத் திறத்தையும் நினைந்துவருந்தி நிற்கும் உருக்கமிக்க பாடல்களையும்நாம்பார்க்க முடியும். எனவேதான் அவர் பதிகந்தோறும்பிழை செய்த இராவணனை உய்வித்த பேரருள்  குற்றமுடையஎன்னையும் கோது நீக்கி ஆட்கொண்டது” என்ற குறிப்பைப் பேசுகிறார். சம்ப்ந்தர், சுந்தரர் இருவர் பதிகங்களிலும் காணப்பெறாத திரு நேரிசை, திருக்குறுந்தொகை,திருவிருத்தம், திருத்தாண்டகம் என்ற யாப்புவிகற்பங்களும் இவர் தேவாரத்தில் அமைந்துள்ளன. தாண்டவேந்து என்றல்லவவா இவரைத் தமிழ்கூறும்நல்லுலகம் இவரைப் போற்றுகிறது.  இத்தகைய பல சிறப்புகளைக் கொண்ட நாவுக்கரசர் பாடல்களில் அவர்தம் அனுபவ முதிர்ச்சியின் விளைவாக வந்த அறிவுரைப் பகுதிகளும் உண்டு. அவர் உலக மக்களுக்கு மட்டுமன்றி தன் உள்ளத்தையும் உடல் உறுப்புக்களையும் நோக்கிக் கூறும் அறிவுரைகள் சிலவற்றையும் இங்கே பார்ப்போம்.

திருஅங்கமாலை -

                வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் ‘‘ இறைவன் தந்துள்ளான் என்பது அப்பர் கருத்தாகும்.  எனவேதான் திருஅங்கமாலை  என்ற பதிகத்தில் ஒவ்வோர் உறுப்புகளையும் விளித்து இறைபணி செய்யுமாறு ஏவுகிறார். “உயிர் கொண்டு போம் பொழுது குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு உற்றாராருளரோ’’ என்று கருதித் திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை உள்ளத்தினுள்ளே தேடிக் கண்டு கொண்டார்’’ நாவுக்கரசர். ‘‘தலையே நீதலைவனை வணங்காய்என்றும் கண்காள் கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னைக் காண்மிகள் என்றும், ‘செவிகாள் சிவனவன் திறம் கேண்மின்கள்என்றும், ‘மூக்கே முக்கணனை முரல்என்றும், ‘வாயே, அவன் புகழை வாழ்த்துஎன்று ஐம்பொறிகளும் ஆண்டவனை வாழ்த்துமாறு ஆணையிடுகிறார்.  ஆளுடைய அரசர் , நெஞ்சை நோக்கி நினைக்குமாறு கட்டளையிட்டு விட்டு உடம்பின் பயன் உடம்பினுள் உறையும் ஆண்டவன் பணி செய்வதுதான் என்று உரைப்பது போல ஆக்கையாற் பயனென்? அரன் கோயில்வலம்வந்து பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இவ் - ஆக்கையாற் பயனென்?’’ என்று கேட்கிறார்.

நெஞ்சே நீ வா

உடலுறுப்புகளை இயக்குவன உள்ளத்தில்  எழுகின்ற எண்ணங்களே என்பது அனைவரும் அறிந்த உணமை. நெஞ்சில் எழுகின்ற நினைவு நேர்மையுடய்தாக இருந்தால் அஞ்சு பொறிகளும்  அதன் வழிப்படும். செயலுக்கு அடிப்படை எண்ணம். என்னம் எழுவது நெஞ்சில்.. எனவே நெஞ்சை நோக்கி நன்னிலைப்படுத்துபவன் போல்நெஞ்சே நீ நிமிர்மின் செஞ்சடை நிமல்னை நினை என்று கூறுகிறார். அந்த நினைப்பு அச்சத்தின் காரணமாக வந்தாலும் சரி, அன்பு காரணமாக வந்தாலும் சரி, நினைவு வரவேண்டும் என்று சொல்கிறார்.பேசப் பொருளலாப் பிறவிதன்னைப் பெரிதென்ரு உன்  சிறுமனத்தால் வேண்டி ஈண்டு  வாசக் குழல் மடவார் போகமென்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே என்று பிறவிக் கடலில் வீழ்ந்து துன்புறும் பேதை நெஞ்சை விளித்து பண்டு செய்த பழவினையின் பயன்  கண்டுங் கண்டுங் களித்தி காண் நெஞ்சமே என்று இரங்கி, தந்தை யார் தாய் ஆர் உடன்பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாந்தாம் ஆரே வந்தவாறெங்ஙனே போமாறேதோ மாயமாம் இதற்கேதும் மகிழவேண்டாம் என்று அறிவுரை கூறுவதுடன் தினைத்தனையோர் பொறையிலா உயிர் போங் கூட்டை பொருளென்று மிக உன்னி மதியால் இந்தஅனைத்துலகும் ஆளலாம் என்று பேசும் ஆங்காரமே தவிர் நெஞ்சே என்று ஆணையிடுகிறார். அதே சமயத்தில் மண் பாதலம் புக்கு மால் கடல் மூடி மற்றேழுலகும் விண்பால் திசைகெட்டு ணிரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே என்று அஞ்சாதிருக்குமாறு வேண்டிஉய்தி பெறுவதற்குரிய வழியையும் உரைக்கிறார்.புண்ணியமும் நன்னெறியுமாவதெல்லாம் இறைவனைப் போற்றுவது தான் என்பதே அவர்காட்டும் வழி. அதனால் பாசத்தைப் பற்றறுக்கலாம். என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம். நன்று நாடொறும் நம்வினை போயிறும். பற்றிநின்ற பாவங்கள் மாற்ற வேண்டில்,பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில், சொல்லுகேன் கேள் நெஞ்சே, அஞ்சா வண்ணம் உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும், உன்னையல்லால் ஒரு தெய்வம் உள்கேன்’’ என்றும், “அரற்றிப் பிழைத்ததெல்லாம் பொறுத்தருள் செய் பெரியோய்’’ என்றும், பிஞ்ஞகனே மைஞ்ஞவிலும் கண்டா’’ என்றும், அழைத்தலறி  அடியேன் உன் அகங்கனியாய் என்று இறைவனடி வீழ்தல் வேண்டும் என்கிறார்.  இதனால் இளைத்த நாளெல்லையையும் கடக்கலாம். “நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே , நீவா, நித்தலும எம்பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு. மெழுக்குமிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச் சங்கரா சயசய போற்றி என்றும் அலைபுனல் சேர் செஞ்சடை எம் ஆதி என்றும் , ஆரூரா என்றும் அலரா நில்லே ‘‘ என்று தொண்டு வழிபாட்டு முறையையும் தன் தூய நெஞ்சுக்கு அறிவுரை கூறுமுகமாகப் பேசுகிறார். “சித்தம் ஒடுக்கிச் சிவாயநம என்றிருக்கினல்லால் அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே’’ என்று மன ஒருமையுடன் ஐந்தெழுத்தோதி ஆண்டவன் அருள் பெறுமாறு தன் நெஞ்சை ஆற்றுப் படுத்தும் தன்மையையும் நாம் காண்கிறோம்.

மனிதர்காள் வம்மின்

நாவுக்கரசர் போன்ற நம் சமயத்தலைவர்கள் தங்களை மட்டும் எண்ணி வாழ்கின்ற இயல்பினர் அல்லர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தாங்கள் பெற்ற இறையருள் இனபத்தை ஏனைய மக்களும் பெற வேண்டும் , பெற்றுப் பேரின்பம் நுகர வேண்டும் என்ற அருள் உள்ளம் கொண்ட பெருந்தகையாளர்கள்.ஆளும் நாயகன் இருக்கை கண்டல்லால் மாளுமிவ்வுடல் கொண்டு ஒருபோதும் மீளேன் என்று உறுதியுடன் கயிலை நோக்கித் தம் தள்ளா வயதில் தவழ்ந்து சென்று கொண்டிருந்த நாவுக்கரசருக்கு இறைவன் கைலைக் காட்சியைத் திருவையாற்றில் காட்டி அருளினான்.கணடறியாதன கண்டேன் அவர் திருப்பாதம் கண்டேன் என்று பாடி மகிழ்ந்தார் அவர். அத்துடனன்றி பொருளே தேடி ..களிதா மனத்தால் வாழ்வீர்! ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமருலகம்  ஆளலாமே என்று உலகத்தவரை நோக்கி ஐயாறந் அடித்தலம் காணும் வழியையும் கூறுகிறார். உலகத்தீர்.ஈசன் என்பார்க்கெல்லாம் அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே என்று அருள் பெறும் வழியையும் கூறுகிறார். மலையே வந்து வீழினும் மனிதர்காள் நிலையில் நின்று கலங்கப் பெறிதிரேல் என்று ஆறுதல் கூறி மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன், கனி தந்தால் கனி உண்னவும் வல்லீரே. புனிதன் பொறகழல் ஈசன் எனும் கனி, இனிது சாலவும் ஏசற்றவர்க்கே என்று திருவருட் கனியைத் தருகின்றார் திருநாவுக்கரசர். அவன்அருள் பெற்ற பின்னர் அல்லல் என்செயும் அருவினை என்செயும் தொல்லை வல்வினைத் தொந்தம்  என்செயும் என்று கேட்கிறார். இறைவன் கனியினும் கட்டி பட்ட கரும்பினும் தனிமுடி கவித்தாளும் அரசினும்பனி மலர்க்குழல் பாவை நல்லாரினும் இனியன் ஆதலால் இடர்தன்னைக் கழிக்க வேண்டில் இறைவனை ஏத்துமினோ இறைவனை நாளும் ஏத்த இடர் போயகலும் எனவே                ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லைஎன்ற அவர் நமக்கு அறிவுரை தருகின்றார்.  இதனால் துன்பமினறித் துயரின்றி என்றும் இன்பம் பெறலாம்.  மறுமையைக் கழிக்க வேண்டில் பெற்றதோர் உபாயம் தன்னால் பிரானையே பிதற்றுமின்கள்’’ என்று கூறுவதால் பிறவிப் பிணியும் தீரப் பெறலாம்.

                இவ்வாறு செய்யின் வேம்பினைப் பேசி விடக்கி ஓம்பி வினைபெருக்கித்   தூம்பினைத் தூர்த்து ஆங்கு   ஒர் சுற்றம் துணையென்று கருதி ஐம்பொறி வழிச் சென்று வண்ணப்பிணி   பிணி மாய     யாக்கை வாழ்வில் ஈடுபட்டுப் பொருளையே பெரிதாகக் கருதிச் சிற்றின்ப வாழ்வில் பொழுது போக்கும்  மானிடரை நோக்கிப் பல இடங்களில் நாவுக்கரசர் இரங்குகின்றார். “கெடுவது இம்மனிதர் வாழ்க்கை, காண்தொறும் கேதுகின்றேன், மிறைபடும் இவ்வுடல் வாழ்வை மெய்யென்று எண்ணி வினையிலே கிடந்தழுந்தி வியவேல்’’, ‘கட்டராய் நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா, முன்னெஞ்சமின்றி மூர்க்கராய்ச்சாகின்றார், ஐயனை அறியார் சிலர் ஆதர்கள் பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே’’ என்று இரங்குவதுடன், “தாயினும் நல்ல சங்கரனுக்கன்பர்  ஆய  உள்ளத் தமுதருந்தப் பெறார்’’ “ஆளாகார், ஆளானாரை அடைந்துய்யார், மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார், தோளாத அணியோ தொழும்பர் செவி, வாளாமாய்ந்து மண்ணாகிக் கழிவரே’’ என்று வருந்தவும் செய்கின்றார்.  எனவே நடலை வாழ்வு கொண்டென் செய்தீர், நாணிலீர் சுடலை சேர்வது சொற் பிராமணமேஎன்று கூறிக்கையினொடு கால்கட்டியுமரெலாம் ஐயன் வீடினன் (இறந்தனன்) என்பதன் முன்னம் நீர் ...... மையுலாவிய கண்டனை வாழ்த்துமே என்று தெருட்டுகின்றார்.ன்புதான்இன்றியமையாது வேண்டப் படுவது.  அஃதற்ற வழிபாடு ‘‘ஓடும் நீரை ஓட்டைக் குடத்தில் எடுத்து மூடிவைத்த மூர்க்கத்தனத்துடன் ஒத்தது’’ என்று ஓரிடத்தில் கூறுகிறார்.  எனவே அன்புமிக்கு அகங் குழைந்து மெய்யரும்பி உள்ளத்தால் ஒன்றி நின்று ஆண்டவனை வழிபடவேண்டும்.  அவ்வாறு நெக்கு நெக்கு  நினைப்பவர் நெஞ்சுளே ஆண்டவன் புக்கு நிற்பான்.  அவ்வாறு அன்றிக் கங்கையாடிலென் காவிரியாடிலென் , கொங்கு தண் குமரித்துறை யாடிலென்? ஓங்குமா கடல்ஓத நீராடிலென்? நன்று நோற்கிலென்? பட்டினியாகிலென்? குன்றமேறி இருந்தவம் செய்யிலென்? பட்டராகிலென்? சாத்திரம் கேட்கிலென்? இட்டும் அட்டியும் ஈதொழில் பூணிலென்? நீதி நூல்பல நித்தம் பயிற்றிலென் ?’’ என்று வினாக்களை அடுக்கடுக்காக் கேட்கிறார் அப்பர். “குறிகளும் அடையாளமும் கோயிலும்  நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஒதிலும் வழிபாட்டில் மனம் ஒன்று படாவிடில் பயனில்லை ‘‘என்று கூறுகிறார்.  அதே சமயத்தில் சாத்திரம் பல பேசம் சழக்கர்காள் ,கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர் பாத்திரம் சிவமென்று பணிதிரேல் , மாத்திரைக்குள் அருளும் மாற் பேறரே’’ என்று உறுதியுடன் இடித்துரைக்கும் இயல்பையும் அவரிடம் பார்க்கிறோம்.

                எனவே நாம் அப்பர் கூறும் அறிவுரை வழி நின்று நெஞ்சத்தில் அன்பு நிறையப் பூக்கள் கொண்டு, இறைவன் பொன்னடி போற்றித் தொண்டராகித் தொழுது பணிந்து வழுவிலா வாழ்க்கை வாழ முயல்வோமாக.

               

(தமிழ்நேசன்  மே.6. 1972)

Thinnappan, SP.  Appar Arivurai (Advice of Appar).

                                    Tamil Nesan, Malaysia, (1972), 16-18 (Tamil).
















பயனுள்ள தொகுப்பு நூல்

                                                திருமுறை வழிபாடு

                இறைவழிபாடு என்பது கடவுளை மனத்தால் எண்ணி (பாவனை செய்து கொண்டு) வாயால் அவன் புகழ்மொழிகளைப் பாடி(மந்த்pரம் கூறி), உடலால் அவனுக்குரிய பணிகளைச்  (கிரியைகளைச்) செய்வதாகும்.  எண்ணத்திற்கும் செயலுக்கும் இடைப்பட்டது மொழி. மேலும் இவை இரண்டையும் இணைப்பதும் மொழியே.  இம்மொழி செம்மையாக இருக்க வேண்டுவது.  வழிபாட்டிற்கு இன்றியமையாத ஒன்று.  இந்த மொழி , “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழியாக’’ (தொல்காப்பியம்) இருக்குமானால் வழிபாடு பல்வகையாலும் சிறப்புற வழியுண்டு.  நம் பைந்தமிழ்த் திருமுறை பன்னிரண்டும் இத்தகைய மறை மொழிகளன்றோ?  இத்தகைய திருமுறைப் பாடல்களைக் கொண்டு இறைவனை வழிபாடு செய்வதுதான் திருமுறை வழிபாடு’’ ஆகும்.

                வழிபாட்டுக்கு மலர் கட்டாயம் வேண்டும். அந்த மலர் நாள்தோறும் செடியில் பூக்கும் நன்மலராக மடடும் இருந்தால் போதாது.  மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்துதிசெயும் நாயன்மார் தூய சொன்மலராகவும் , அடியார் உள்ளத் தடாகத்தில் பூத்த பொன்மலராகவும் (திருமுறையாகவும்) இருக்க வேண்டும் என்று கருதி நண்பர் எஸ்ஸாரெம்’’ “திருமுறை வழிபாடு’’ என்னும் பெயரில் ஓர் அழகிய நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.  இந்த உட்கருத்தை இந்நூலின் முகப்பட்டை வண்ண ஓவியம் அழகுற விளக்குகின்றது.  ஒரு பக்கம் சிவலிங்க வடிவம், எதிரே இன்னொரு பக்கம் பன்னிருதிருமுறை ஆசிரியர்கள் திருவுருவப் படம்.  நெறியும் குறியும் நேர் எதிரே இருக்கக் காண்கிறோம்.  காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய், நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாகத் (பெரிய புராணம்  (3648) திகழ்வதுதானே சிவலிங்கம். சிவனை அடையம் நெறியை வழியைக் காட்டியவர்கள் தாமே திருமுறை ஆசிரியர்கள்.  சிவ வழிபாட்டினை இம்மண்ணுலகில் முதன் முதலாகத தொடங்கி வைத்த பெருமை உலகன்னையாகிய உமையம்மையாரையே சாரும் என்பதை வலியுறுத்த அட்டைப் படத்தில் சிவலிங்கத் திருவுருவத்துக் கீழே ,                                               

                                                எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பம்

                                                 உண்மை யாவது பூசனை  எனஉரைத் தருள

                                                 அண்ண லார்தமை அர்ச்சனை புரியஆ  தரித்தாள்

                                                 பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்து’’

என்னும் பெரியபுராணப் பாடலைக் கொடுத்திருப்பது பாராட்டிற்குரிய ஒன்றாகும். 


                பூவினால் செய்யப்படும் பூசை (பூ - செய்) ஆகிய இறை வழிபாடு, அகவழிபாடு  புறவழிபாடு என இரண்டு வகைப்படும்.  நெஞ்சத்தில் செய்யப் படுவது அகவழிபாடு,  இல்லத்திலோ கோயிலிலோ செய்யப் படுவது புறவழிபாடு.  இல்லங்களில் அகப் பூசையாக இறைவனை வழிபடுபடுவதற்கெனப் பன்னிரு திருமுறைகளிலிருந்து தொகுக்கப் பெற்றது எனத் தொகுப்பாசிரியர் தம் தொகுப்பின் நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந் நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள புலவர் மணி, சித்தாந்த வித்தகர் முரு.பழ.இரத்தினம் செட்டியார் அவர்கள் அகவழிபாட்டிற்கு மட்டுமின்றி, அர்ச்சனைககும் புறவழிபாட்டிற்கும் இந்நூல் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது எனப் போற்றிப் பாராட்டியிருக்கிறார்.  மேலும் அவர் இம்முறையைத் திருக்கோயில்களில் பின்பற்றினால் அது சிறந்ததிருமுறை வழிபாடாக அமைந்துவிடும். திருமுறை சிறப்புற்றோங்க இதனைவிடச் சிறந்த முறை வேறில்லை’’ என்று கூறுகிறார்.  திருக்கோயில்களில் இதனைப் பின்பற்றும் நாள் எந்நாளோ அந்நாள்தான் சைவப் பெருமக்களுக்குத் திருநாள். தமிழர்களுக்குப் பெருநாள்.

                இத்தகைய பின்னணிப் புலங்களுடன் நூலுக்குள் நுழைகிறோம்.  நுழைவாயிலில் கோரட்டுமலை விநாயகப் பெருமான் வண்ணத் திருவுருவத்தில்  காட்சி தருகிறார்.  கைகூப்பி வணங்குகிறோம்.  ஏன்? என்னும் வினாவிற்கு விடையாக வழிபாட்டின் முதற் பாட்டாக காப்புப் பாடலாக,

                                                திருவாக்கும் செய்கருமம் கைக்கூட்டும் செஞ்சொற்

                                                 பெருவாக்கும் பீடும்பெருக்கும் - உருவாக்கும்

                                                 ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

                                                 காதலால்  கூப்புவர்தம் கை. ‘‘

என்னும் பாடல் திகழ்கிறது. பிறகு இறைவன் திருவருவத்தை உள்ளத்தில் எழுந்தருளச் செய்து கொள்கிறோம்.  என்னுள் எழு பரஞ்சோதி உள்ளவா காண வந்துருள்வாய்(2) என்னும் திருவாசக வரியைப் பாடிக் கேட்கும் போது இறைவன் தானே வந்து நம் உள்ளத்தினுள் புகுவான் அல்லவா?  பிறகு திருவிளக்கு ஏற்றி வழிபாடு தொடங்கி, இறுதியாகப் பிரார்த்தனை செய்து பிழை  பொறுக்க வேண்டி வாழ்த்தி நிறிகறோம்.  எல்லாம் திருநெறிய தமிழால் செய்கிறோம் என்பதை நினைக்கும் போது உள்ளம் தித்திக்கிறது.  உள்ளம் பெருகிறது.  என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,  தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’’ என்று திருமூலர் பாடிய அனுபவத்தில் திளைக்க முடிகிறது.  தமிழால் முடியுமா என்று கேட்பாhர் தலை தாழ்கின்றது.

                இந்நூல் காப்பு, திருப்பள்ளி எழுச்சி,,ஓமம் , அபிஷேகம், அலங்காரம், வழிபாடு, வழிபாடு நிறைவு என்னம் ஏழு பிரிவகளைக் கொண்டு எழுமை நோய் தீ{ர்க்கும்  எழில் மருந்தாக விளங்குகிறது.  இந்நூலின் பாடல் எண்ணிக்கை 82.  இதனைக் கூட்டி எண் அமைப்பு நோக்கில் எண்ணிப் பார்த்தால் ஒன்று என்பது தோன்றும், கடவுள் ஒருவரே என்று கருதி ஒன்றாவதுதானே வழிபாடு.  ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை’’ என்பது அப்பர் அருள் வாக்கு. அன்றோ.              இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது தொகுப்பாசிரியரின் திருமுறைத் தமிழ்ப் பற்றும்,ஆழ்ந்து அகன்ற திருமுறை ஞானமும் இருகரம் கூப்பி நிற்க இறையருள் இவ்வாறு செய்துள்ளது என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

                                இந்நூலை ஆழ்ந்து படிக்கும்போது , நம்நாயன்மார் கலத்திருந்த வழிபாட்டுச் சடங்கு முறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்கிறோம்.  தூய தழிழ்த் தொடர்கள் சிலவற்றையும் அறிந்து கொள்கிறோம். அபிஷேகம் என்பதற்கு ஆட்டு என்ற சொல்லையே திருமுறையாசிரியர்கள் கையாண்டுள்ளனர்.  குட தீபத்தை அறுகு’(53) என்றும், கண்ணாடியைப் படிமக்கலம் 955) என்றும் கூறுகின்ற வழக்குகளைக் காண்கிறோம்.  தைலமாடுதலை  நறுநெய்யாட்டு(17) என்று கூறுதலும் பன்னீர் ஆட்டினைப் பனிநீர் ஆட்டாகக் காண்பதும் (32) நீள நினைந்து போற்றுதற்குரியது.


                இந்ந}லில் 108 போற்றிகளை உற்று நோக்கும் போது இறைவனுக்குரிய பொதுப் பண்புகள் அடங்கிய தொடர்களே இலங்கக் காண்கிறோம். எனவே கடவுளின் எல்லாத் திருமேனிகளுக்கும் உரிய வகையில் இந்தத் தமிழ் அரச்சனையை நாம் பயன்படுத்த முடியும்.  தமிழில் அர்ச்சனை செய்ய விழைவார்ககு இது பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

                திருவாசகத்தையே சிவபூசைக்குரிய  சிவலிங்கமாகக் கொண்டு வழிபட்டவர்களும் உண்டு.  அந்த வகையில் இந்த நூல் திருமுறையை வழிபடும் நூலாகவும் திகழ்கிறது. இன்னும் சொல்லப் போனால் திருமுறை வழிபாடு ‘‘ என்னும் இந்நூல் தலைப்பு திருமுறை வழி(நீ)பாடு ‘‘ என்று நமக்கு ஆணையிடுகிறது.  பாடும் பணியே பணியாய் அருள்வாய்’’ என்றுதானே அருணகிரியார் முருகனைக் கேட்கிறார். “அர்ச்சனை பாட்டேயாகும், சொற்றமிழ் பாடுக’’ என்று சுந்தரரிடம் ஆணையிட்டவர்.  தூமறை பாடும் வாயாராகிய சிவபெருமான் அல்லவா?

                எனவே அன்பர்கள் இந்த நூலை வாங்கி இல்லத்திலும், உள்ளத்திலும் இறை வழிபாட்டிடங்களிலும் திருமுறை வழிப் பாடல்களைத் தினமும் பாடித் திருமுறை வழி இறைவனை வழிபாடு செய்தல் வேண்டும்.  திருமுறை(யை) வழிபாடு செய்யுங்கள்,’’ அது தீந்தமிழ் வழிபாடாய் அமைத்து ஆண்டவனுக்குத் தேனாய் , அமுதமாய்த தித்திக்கும், எத்திக்கும் தமிழ் மணம் பரப்பும்.

(தமிழ் நேசன் கோலாலம்பூர் 14-4-1991 பக் 7)



 

தமிழில் அருச்சனை தமிழருக்கு  உகந்தது.

                தமிழ் மக்கள் தமிழ் அருச்சனை செய்வதில் ஆர்வமும் அக்கறையும்  கொள்ள வேண்டும். தங்கள் பகுதியிலுள்ள கோயில் நிருவாகத்தினரிடம்  கூறித் தமிழ் அருச்சனை செய்யுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். கோயில் நிருவாகத்தினரும் இதனை ஏற்று ஆவன செய்ய வேண்டும்.  இது சிறந்த தமிழ்த் தொண்டாக அமையும்.  பொது மக்களும் கோயில்களுக்குச் சென்று தமிழ் அருச்சனை செய்யுமாறு கேட்க வேண்டும்.  தமிழ் அருச்சனை வாங்குமிடத்திலும் தமிழில் அருச்சனை செய்யப்படும் என்பதை எழுதி வைக்க வேண்டும்.  அருச்சனைச் சீட்டு விற்பவர்களும் இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

                 குருக்கள்மார்களும் பண்டாரங்களும் தமிழ் அருச்சனை என்பது வழிபாட்டின் ஒரு கூறு இப்பகுதியே என எண்ணி இதில் ஈடுபாடு கொண்டு செய்ய வேண்டும்.  இதனால் அவர்கள் வேலை போக வழி இல்லை என்பன உறுதியாகக் கூறலாம்.  அவசரமாக இருந்தாலோ கூட்டமாக இருந்தாலோ விழாக் காலங்களிலோ முதல் 10  போற்றிகளும், அடுத்த 8 போற்றிகளுமாக 18 போற்றிகளாக மட்டும் சொல்லி அருச்சனை செய்யலாம்.  108  போற்றிகளைக் காலை மாலைப் பூசையின்போது மட்டும் ஒரு முறை சொன்னால் போதும் என்று வைத்துக் கொள்ளலாம்.  எனவே குருக்கள்மாரும் பண்டாரங்களும் இந்தத் திருப்பணிக்குத் தமிழ்ப் பணிக்கு முன்வந்து நல்வழி காட்டுவார்களென்று நம்புகிறோம்.  குருக்கள்மார்கள் அல்லது பண்டாரங்கள் அருச்சனை செய்யும் போது தங்கள் உள்ளத்திற்குள் அமைதியாகப் போற்றி அருச்சனை தமிழில் சொல்லி வழிபடலாம்.

                சிங்கப்பூரில் தமிழ் அருச்சனை டேங்க் ரோடு அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலிலும் சௌத் பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோயிலிலும் செய்யப் படுகின்றது. டெப்போ ரோடு உருத்திரக்காளியம்மன் கோயிலிலும் செய்கிறார்கள். மலேசியாவில் கோலாலம்பூர்  கோர்ட்டுமலை விநாயகர் கோயில், மாரியம்மன் கோயில், பத்துமலை முருகன் கோயில் ஆகியவற்றிலும் தமிழ் அருச்சனை நடைபெறுகின்றது.  இக்கோயில்களைப் பின்பற்றி இசையத் திருக்கோயில்களிலும் தமிழ் அருச்சனை நிகழ இறைவனை வேண்டுகிறோம். தமிழ்ப் பெருமக்களையும் கோயில் நிருவாகத்தினரையும்  ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

                இறைவழிபாடு என்பது இறைவன் திரு உருவத்தை மனத்தால் நினைத்து, வாயால் அவன் புகழ் பாடி, உடலால் அவனுக்குரிய பணிகளைச் செய்வதாகும்.  மனத்தால் நினைத்தற்கும் உடலால் செயலாற்றுவதற்கும் மொழி தேவையில்லை.  வாயால் துதிப்பதற்குத்தான் மொழி தேவைப் படுகிறது. வாயால் இறைவன் திருப்பெயர்களைச் சொல்வதும் அவன் புகழ்பாடும் தேவாரம், திருவாசகம் போன்ற பக்திப் பாடல்களைப் பாடுவதும் வாயினால் செய்யப்படும் வழிபாடாகும். இதற்கென்று கட்டாயம் ஒரு மொழி தேவை.

                இறைவன் திருநாமங்களையும், பெருமைகளையும் எம்மொழியிலும் கூறலாம். எம்மொழியில் கூறினாலும் இறைவன் உணர்ந்து கொள்வான்.  அவன் எல்லையற்ற அறிவுடையவன்.  ஆனால் வழிபடுவோர்களாகிய நம் அறிவிற்கு ஓர் எல்லை உண்டு.  நாம் எம்மொழியினையும்  புரிந்து கொள்ள இயலாது. நமக்கெனக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள ஒரு சில மொழிகள் உள்ளன.  நாம் இளமையிலிருந்து பழகிய சிந்தனைகளை, உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் மொழியே தாய்மொழி அல்லது முதல் மொழி ஆகும் இறைவழிபாடு என்பது உணர்வடன் ஒன்றிய ஒன்று.  எனவே அது தாய்மொழியில் இருப்பது தான் நல்லது.  அப்போது தான் நம் உள்ளத்தை இறைவன் பால் ஒன்றிடச் செய்ய முடியும். நமக்குத் தெரியாத புரியாத மொழியில் வழிபாடு செய்யும்போது நம் மனம் இறைவனிடத்து  ஒன்றுபட  ஈடுபட இயலாது.  எனவே இறை வழிபாடு செய்வோர் அவரவர் தாய் மொழியில் செய்வது தான் சிறந்த பயன் நல்கும்.

                நம் தாய்மொழி தமிழ். தமிழில் வழிபாடு செய்வது நம்மைப் பொறுத்த வரையில் எவ்வகையில் தவறாகும்.  தமிழ்க் கிறித்துவர்களும் தமழ் இஸ்லாமியர்களும் தங்கள் வழிபாடுகளையும் சடங்குகளையும் தமிழில் செய்கிறார்கள். தமிழ் அறிந்த இர்நதுக்கள் தமிழில் செய்தால் என்ன?  

                நம் தாய்மொழியாகிய தமிழ் வேறு எந்த மொழிக்கும் தாழ்ந்ததன்று.  தமிழைப் பக்தி மொழி என்று பாராட்டுகிறார் தனிநாயக அடிகளார்.  தமிழைத் தெய்வீக மொழி ( திரு - நெறிய தமிழ்) என்று போற்றுகிறார் ஞானசம்பந்தர்.  யாமறிந்த மொழிகளிலேயே  தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று கூறுகிறார் பாரதியார். உலக மொழிகளில்உயர்தனிச் செம்மொழியாக விளங்கிய தன்மை உடையது தமிழ் என்று சொல்கிறார் பரிதிமால் கலைஞர் எனப்படும் வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார்.  பண்ணிடைத் தமிழொப்பாய்’’ என்று இறைவனைத் தமிழாகவே அழைக்கிறார் சுந்தரர்.  இந்நிலையில் வழிபாட்டுக்குரிய மொழியாகும் தகுதி தமிழுக்கு இல்லை என எப்படி மறுக்க  முடியும்?

                அருச்சனை என்பது வழிபாட்டின் ஒரு கூறு ஆகும்.  இறைவனின் திருப்பெயர்களை 108 முறை அல்லது 1008 முறை கூறிப் போற்றி இறைவன் திருவடியில் மலர் இட்டு வழிபடுவது தான் -அருச்சனை. இந்தத் திருப் பெயர்களை நமக்குப் புரியும் வண்ணம் தமிழில் சொல்வதுநம் நெஞ்சத்தை நெகிழ்விக்க உதவும்.  இவ்வாறு தமிழில் போற்றி கூறுவது நீண்ட நெடுங்காலமாகத் தமிழர்களிடையே இருந்து வரும் இயல்பு என்பது திருநாவுக்கரசர் தேவார அடிகளால் அறிய முடியும்.  பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத வர்க்கு ஆக்கையால் பெற்ற பயன் என்ன?’ என்று கேட்கிறார் நாவுக்கரசர்.  நிலைபெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே நீ இங்கேவா, நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு அலகிட்டு மெழுக்கிட்டுத் தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி சங்கரா சய சய போற்றி என்று அலரா நில்லா’’ என்று அவர் நமக்கு அறிவுறுத்துகிறார். 

                மேலும் தமிழர்கள் ஒவ்வொருவரும் சிவபெருமானுக்குத் தமிழில் போற்றி சொல்லி அருச்சனை செய்ய உதவும் வகையில் திருநாவுக்கரசர் போற்றித் திருத்தொண்டகம் ஐந்து பதிகங்கள் தம் தேவாரத்தில் பாடிக் கொடுத்திருக்கிறார்.  மாணிக்க வாசகப் பெருமான் தம் திருவாசகத்தில் போற்றித் திரு அகவல் ‘‘  என்ற பகுதியைப் பாடியுள்ளார்.

                மற்ற பகுதிகளிலும் இறைவன் திருவடியையம் திருப் பெயராகிய நமச்சிவாய மந்திரத்தினையும் போற்றிப் பாடி இருக்கிறார்.  சுந்தரரைத் தடுத்தாட் கொண்ட போது வடமொழியில் வேதத்தை அருளிய சிவபெருமான் அவரிடம் அருச்சனைப் பாட்டே ஆகும் சொற்றமிழ் பாடுக’’ என்று சொன்னதாகச் சேக்கிழார் கூறுகிறார்.  எனவே தமிழில் அருச்சனை செய்வது தமிழர்க்கு உகந்ததே.

                தமிழில் அனைவரும் அருச்சனை செய்வதற்குரிய வகையில் போற்றி அருச்சனைப் புத்தகங்கள் வெளியாகியுள்ள்ன.  இவற்றுள் விநாயகர், முருகன், சிவபெருமான்,அம்மை ஆகியோர்க்குரிய தமிழ் அருச்சனைகள் உள்ளன.  இவற்றைப் படித்து வீட்டிலும் கோயிலிலும் வழிபாடு செய்யும் போது அருச்சனை செய்ய வேண்டும்.  இதனால் தமிழர்கள் தங்கள் வழிபாட்டில் மனத்தை ஈடுபடுத்த முடியும்.  . அதே நேரத்தில் தமிழ் மொழியையும் ஒருவகையில் வாழ வைக்க முடியும். உண்மையான வழிபாடும் உங்கள் மொழியும் உயர்ந்திட உங்களால் இயன்றதை இன்றே செய்யுங்கள்.

Thinnappan, SP.  Tamil Aruchchanai (Worship in Tamil)

                                    Tamil Murasu, Singapore (1994) pp8 (Tamil)














பள்ளியறை  சொல்லும் பாடம்.

                சிவாகம அடிப்படையில் எழுப்பப்படும் திருக்கோயில்களில் பள்ளியறை என்று ஒரு பகுதி - ஒர் இடம் இருக்கும். பள்ளியறை என்பது சிவனும் சக்தியும் துயில் கொள்ளுகின்ற படுக்கை அறையாகும். பள்ளி என்னும் சொல்லைப் படுக்கை என்னும் பொருளில் திருவள்ளுவரும் கழா அக்கால் பள்ளியுள்  வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் ‘‘)குறள் -840) என்னும் குறளில் கையாளுகிறார்.  பள்ளியறை மெத்தென அமையும் படுக்கை - தலையணையுடன் கூடிய கட்டில் அல்லது ஊஞ்சல் கொண்டதாக இருக்கும்.  சுற்றுச் சுவர்களில் கண்ணாடி பதித்த நிலையிலும் சில இடங்களில் இருக்கும்.  அங்கு உமை அம்மையின் உருவச்சிலை இருக்கும்.  ஒவ்வொரு நாளும் இரவில் நிறைவாக நடைபெறும் அர்த்தசாமப் பூசையின் முடிவில் கருவறையிலுள்ள சாமி சன்னதியிலிருந்து திருவடி அமைப்பிலுள்ள உருவத்தை அல்லது சாமியின் உருவம் தாங்கிய வடிவத்தை எடுத்து வந்து பள்ளியறையில் அம்மையுடன் வைத்துப் பால் அல்லது பாயாசம் வைத்துப் படைத்து வழிபாடு நடத்தி ஊஞ்சலை ஆட்டிப் பள்ளியறைக் கதவைப் பூட்டிச் செல்வர். பிறகு மறுநாள் காலையில் பூசை தொடங்குதற்கு முன் முதல்நாள் இரவு கொண்டுவந்த திருவுருவத்தைப் பள்ளியறையிலிருந்து திரும்பவம் கருவறைக்குப் பால் படைத்து வழிபாடு நிகழ்த்திய பின் எடுத்துச் சென்று வைப்பார்கள்.  அதன் பின்னர்தான் மற்ற எல்லாப் பூசைகளும் நடக்கும்.  கருவறைக்கும் பள்ளியறைக்கும் எடுத்துச் செல்லச் சில கோயில்களில் சிறு பல்லக்கைப் பயன் படுத்துதலும் உண்டு.  வைணவக் கோயில்களிலும் பெருமானை இரவில் துயிலுறச் செய்தலும் காலையில் துயில் எழுப்பதலும் உண்டு. இத்தகைய பள்ளியறை வழிபாடு சொல்லும் பாடம் என்ன என்பதைப் பார்ப்போம்.

தோற்றம் -

                தமிழில் இன்று கிடைக்கும் நூல்களில் காலத்தால் பழமையானது தொல்காப்பியம்.  அது ஓர் இலக்கண நூல். கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.  இந்நூலில் பொருளதிகாரத்தின் புறத்திணையியலில் அரசனைப் புகழ்ந்து பாடுகின்ற துறைகளில் கண்படைநிலை, துயிலெடை நிலை என இரண்டு துறை பற்றிய செய்திகள் உள்ளன.  கண்படை கண்ணிய கண்படை நிலையும்’’(1036.5) என்னும் தொல்காப்பியத் தொடர்  அரசனது உறக்கத்திற்காகப் பாடுகின்ற நிலை எனப் பொருள்படும். இது பின்னாளில் ஒருவகைச் சிற்றிலக்கியமாக வளர்ந்து விட்டது.  அதாவது அரசனும் அரசனைப் போல்வாரும் அவையில் நெடுநேரம் தங்குகையால் மருத்துவர் அமைச்சர் முதலியோர் அவர்க்குக் கண்துயில் கோடலைக்  கருதிக் கூறும் இலக்கிய வகையாகும்.  இதுபோலவே துயிலெடைநிலை என்பது அரசரை உறக்கத்திலிருந்து எழுப்புதற்குரிய துறையாகும். “தாவின் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏந்திய துயிலெடை நிலை’’ (1037) பாசறைக்கண் துயிலும் அரசனைப் பாடகர்கள் அவர் புகழ் கூறித் துயில் எழுப்புதல் கூறும் துறையாகும். இதுவே பிற்காலத்தில் திருப்பள்ளி எழுச்சி எனும் ஒருவகை இலக்கியமாக ஆயிற்று.  எனவே அரசனைத் துயிலுறச் செய்யும் கண்படை நிலையும், துயில் எழுப்பும் துயிலெடை நிலையும் பின்னாளில் இறைவனை இரவில் பள்ளியறைக்கு அனுப்புதற்கும் அதிகாலையில் அவனைப் பள்ளியறையிலிருந்து எழுப்புதற்கும் உரிய தோற்று நிலைக் களன்களாகக் கருதலாம்.  அரசனுக்குரிய  மரபுகள் பல ஆண்டவனுக்குப் பின்னாளில் மாற்றப் பட்டதைத் தமிழக வரலாறு உணர்வார் நன்கு அறிவர்.  மன்னர் பின்னோராகிய கோவலன் கண்ணகி திருமணம் முடிந்த பின் அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை (கண்ணகியை) மங்கல நல் அமளி ஏற்றினார்’’(1-64) என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில்  கூறுகிறார்.  இந்தநல் அமளி ஏற்றுதலே பின்பு பள்ளியறை ஆயிற்று.

இல்லற வாழ்வின் ஏற்றம் -

                தமிழர்கள் இல்லற வாழ்விற்கு இன்றியமையாத இடம் கொடுத்தனர்.  அறத்தான் வருவதே இன்பம்’’ எனக் கூறிய வள்ளுவர் அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’’ என்று கூறி அறத்தாற்றின்  இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன்’’ என்று கேட்கிறார்.  இல்லறத்திலிருந்து இன்பம் துய்த்து நன்மக்களைப் பெற்று வாழ்ந்து பின்பு துறவறம் மேற்கொள்ளுவதையே வாழ்வியலாகக் கண்டவர்கள் தமிழர்கள். 

                                                காமம் சான்ற கடைக்கோட் காலை

                                                 ஏமம் சான்ற  மக்களோடு துவன்றி

                                                 அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

                                                 சிறந்தது பயிற்றல்  இறந்ததன்  பயனே’’

என்னும் தொல்காப்பியய நூற்பா இதனை உணர்த்தும்.  சமணர்களும் பௌத்தர்களும் துறவறத்தை வலியுறுத்திய காலத்தில் தோன்றிய திருஞான சம்பந்தப் பெருமான்,

                                                மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

                                                 எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறையிலை

                                                 கண்ணில் நல்லஃதுறும்  கழுமல வளநகர்ப்

                                                 பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே’’

என்று பாடினார். எனவே பள்ளியறையில் சிவனும் உமையும் சேர்ந்திருப்பது நாம் மண்ணில் நல்ல வண்ணம் திருமணஞ்  செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகவே அதாவது இல்லற வாழ்வின் பெருமையை இவ்வுலகுக்கு உணர்த்துவதற்காகவே என்று கூறலாம்.

அன்பும் அருளும் -

                இல்லற வாழ்விற்கு இன்றியமையாத பண்பு அன்பு.  இது குடும்பத்தினர், உறவினர், உற்றார், ஊரார் முதலிய தொடர்புடையாரிடத்துச் செலுத்தும் பாச உணர்வு.  இது படிப்படியாக மன்னுயிரனைத்தும் தன்னுயிராகக் கருதும் அருளாகப் பரிணமிக்க வேண்டும். அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை அன்றோ?  எனவே இதுவே நம் வாழ்வின் இலட்சியம்.  பள்ளியறையில் இருக்கும் சிவமே அன்பின் வடிவம் அல்லவா? ‘அன்பே சிவம்என்பது தானே திருமூலர் வாக்கு.  அங்குள்ள சக்தி அருளின் வடிவம் அன்றோ? “அருளது சக்தியாகும் அரன் தனக்கு’’ என்பது சிவஞான சித்தியார்.  ஆகவே பள்ளியறையில் இருக்கும் சிவனும் உமையும் அன்பின் வடிவமாகவும் அருளின் வடிவமாகவும் அமைந்து காட்சி அளிக்கின்றனர்.


மங்கலமும் மனைமாட்சியும்

                மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட்பேறு’’ என்னும் திருக்குறளுக்குப் பரிமேலழகர், “மனையாளது நற்குண நற்செய்கைகளை ஒருவர்க்கு நன்மை என்று அறிந்தோர் சொல்வர், குழந்தைப் பேற்றை அவற்றிற்கு நல்ல அணிகலன் என்பர்’’ என உரை எழுதுகிறார்.  சிவம் என்ற சொல்லுக்கே நன்மை, மங்கலம் எனத் தமிழ் அகராதி பொருள் கூறும். மனைமாட்சிக்கு எடுத்துக் காட்டாக இருப்ப்வர் மங்கையர்க்கு அரசியாகிய உமை அம்மை அல்லவா?  எனவே பள்ளியறையில் இருக்கும் சிவனும் உமையும் முறையே மங்கலமும் மனைமாட்சியும் என்று கூறலாம்.

அம்மையும் அப்பனும் -

                சிவபெருமான் தாயுமிலி, தந்தையும் இல்லாதவன், ஆனால் உலகத்து உயிர்களனைத்துக்கும் தாயாகவும் தந்தையாகவும் இருப்பவன்.  எனவேதான் திருநாவுக்கரசர் அம்மை நீ அப்பன் நீ’’ எனவும் , மாணிக்கவாசகர் அம்மையே அப்பா’’எனவும் அழைக்கின்றனர்.  சிவபெருமானின் ஒரு கூறே சக்தி.  பள்ளியறையில் இருக்கும் உமையும் சிவனும் அம்மையும் அப்பனுமாக அதாவது சிவபெருமான் அம்மையப்பனாகக் காட்சி அளிக்கும் பாங்கினை உணர்த்துவதாகக் கொள்ளலாம்.  பெறுமவற்றுள் யாமறிவதில்லை’’ எனத் திருவள்ளுவரே போற்றும் மக்கட் பேற்றின் மாண்பினைக் கூறுவதாகவும்  கொள்ள இடமுண்டு.  அம்மையப்பரின் இயல்பைத் திருக்களிற்றுப்படியார் என்னும் சைவ சாத்திர நூல்,

                                                அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக

                                                 அம்மையப்பர் அப்பரிசே  வந்து அளிப்பர் -அம்மையப்பர்

                                                 எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்

                                                 அல்லார்போல் நிற்பர் அவர்’’

என்று சொல்கிறது.


ஆணும் பெண்ணும் -

                கடவுள் ஆண் அல்லன் , பெண்ணும் அல்லன், அலியும் அல்லன் ‘‘ என்பது திருவாசகம். கடவுள் ஒருவரே சக்திமான் சக்தி என இரு கூறாயினர்.  சூரியனும் ஒளியும் போல, மலரும் மணமும் போல, சிவனும் சக்தியும் இருப்பர்.  பெண்ணாகிய பெருமான்’’ என்றார் திருஞானசம்பந்தர்.  பெண்ணாகி ஆணாய்’’ என்றார் மாணிக்கவாசகர். இன்பங் குறைந்த - நிறைந்த துன்பமுடைய உயிர்களாகிய நாம் ஆண் பெண் ஆம் இரண்டு உருவம் எடுத்திருத்தலால் நம்மைக் காக்கக் கடவுளும் ஆண் பெண் ஆம் உருவம் இரண்டு கொண்டனர் என்பர் ஞானியார் சுவாமிகள்.  ஆணும் பெண்ணுமாக உயிர்களிடையே கோலம் கொண்ட காட்சியினைக் கயிலைக்காட்சியாகத் திருவையாற்றில் கண்டார் நாவுக்கரசர்.                                   

                                                மாதர்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும்பாடி                                      போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர்பின் புகுவேன்                                                 யாதும் சுவடுபடாமல் ஐயாறடை கின்றபோது                                                                                     காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்                                                          கண்டேனவர் திருப்பாதம்  கண்டறியாதன கண்டேன்.’’

இத்தகைய காட்சியைத் தானே பள்ளியறையில் காண்கிறோம்.

திருமண மக்கள் -

                இல்லறத்தின் முதற்படி திருமணம்.  அதனை மங்கலம் என்பது தமிழ் மரபு.  சிலப்பதிகாரத்தில் வரும் முதல் காதை மங்கல வாழ்த்துப் பாடல் என்பதறிக.  இந்து சமயத்தில் தான் கடவுளர்க்குக் கல்யாண உற்சவம் நடத்துகிறோம்.  ஏன்? உயிர்களாகிய நாம் திருமணம் செய்து கொண்டு சுத்த போகத்தைத் துய்த்துப் போகத்தின் தன்மை இத்தன்மைத்து என்று உணர்ந்து, மும்மலத்தினின்று நீங்கி முழு இன்பத்தையும் பெறுவதற்காகவே கடவுளும் ஆணும் பெண்ணுமாகி மணம் செய்து கொண்டனன் என்பது ஞானியார் அடிகள் தரும் விடை.  அதாவது நாம் இவ்வுலகில் திருமணம் செய்துகொண்டு இன்பம் துய்க்கவே கடவுளும் கல்யாணம் செய்து கொள்ளுகிறார் இதனையும் பள்ளியறை நமக்கு உணர்த்துகிறது.

                                                விதிவழி வழாது வேள்வி வினையெலாம் நிரம்ப இங்ஙன்

                                                 அதிர்கடல் உலகம் தேற ஆற்றினான்  மறைகள்  ஆர்ப்பக்

                                                 கதிர்மணி நகையார் வாழ்த்தக் காமனைக்  காய்ந்த  நம்பி

                                                 முற்ற மங்கலநாண் சாத்தி முழுதுலகீன்றாள் செங்கை

                                                 பற்றினன் பற்றிலார்க்கே வீடருளும் பரம யோகி’’

என்னும் திருவிளையாடல் புராணத் தொடர்களை நோக்குக.  கடவுளர் திருமணம் காமத்தினால் விளைவதன்று.  பற்றினால் ஏற்படுவது அன்று என்பதைக் காமனைக் காய்ந்த நம்பி, பரம யோகி எனும் தொடர்கள் வலியுறுத்தும்.

                                                மலையரையன் பொற்பாவை வாள் நுதலாள் பெண்திருவை

                                                 உலகறியத் தீவேட்டான்  என்னுமது என்னேடி?

                                                 உலகறியத் தீவேளாது ஒழந்தனனேல் உலகனைத்தும்

                                                 கலைநவின்ற பொருளெல்லாம் கலங்கிடும்காண் சாழலோ’’

என்னும் திருவாசகப் பாடலும் இறைவன் திருமண நோக்கத்தை உணர்த்தும்.

நித்தமணாளன் --

                இறைவனை நித்த மணாளன்என்று திருவாசகம் கூறும்.  சக்தியம் சிவனும் சேர்வது திருமணம்.  அவன் நித்ய மணாளன், கல்யாண சுந்தரன்.  அவளோ நித்யகல்யாணி. சக்தியும் சிவனும் கூடவில்லையானால் படைப்பேது? இன்பமேது?அவர்க்கு என்றும் திருமணம். என்றும் பேரின்பம், மானைக் காட்டி மானைப் பிடிப்பது போலச் சிற்றின்பத்தின் வழி பேரின்பம் என்னும் சிந்தனையை உணர்த்துவது பள்ளியறைக் காட்சி.

                                கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள’’ என்கிறான் திருவள்ளுவர் கண்ட தலைவன். இதனைக் கடவுளிடம் பேரின்பக் காட்சியாக் கண்ட நாவுக்கரசர்,

                                                 மாசில் வீணையும் மாலை மதியமும்

                                                 வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

                                                 மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

                                                 ஈசன் எந்தை இணையடி நீழலே’’

என்று பாடுகிறார்.

இணைந்திருந்த இன்பக் காட்சி -

                சோம சுந்தரனாகச் சிவனும் மீனாட்சி அம்மையாக உமையும் இணைந்து மணக்கோலத்தில் இருந்த காட்சியைப் படம்பிடிக்கும் பரஞ்சோதியார் பாடலைப் பள்ளியறை நம் கண்முன்னே காட்டும்.

                                                பண்ணும் இன்னிசையும் நீரும் தண்மையும் பாலும்  பாலின்

                                                 கண்ணும் இன்சுவையும் பூவும் நாற்றமும் மணியும் அங்கேழ்

                                                 வண்ணமும் வேறு வேறு வடிவு கொண்டிருந்தால் ஒத்தது

                                                 அண்ணலும் உலகம் என்ற அம்மையும் இருந்ததம்மா’’

இறைவனும் இறைவியும் எப்போது பிரியாதிருப்பர். பின்னமிலான் எனத் திருவருட்பயன் பேசும். காதலிருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம் அல்லவா?

படைப்பின் இரகசியம் -

                சிவபெருமான் நிட்டை இருந்த காலத்தில் படைப்பு இல்லை.  பின்னர் உமாதேவியுடன் கூடியே உலகைப் படைத்தான். படைத்தல் தொழிலே ஐந்தொழிலின் முதற்படி. படைத்தல் பள்ளியறையில் தானே தொடங்குகிறது.  கட்டிலின் விளைவு தானே தொட்டில். படைத்தல் தொழிலுக்கு முதற்காரணம் மாயை.  துணைக்காரணம் சக்தி, நிமித்த காரணம் சிவன்.  சக்தி துணைக்காரணம் ஆதலால் பெண்பாலாகக் கருதி உலக மாதா என்கிறோம்.

                                                தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்

                                                 பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி

                                                 பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்

                                                 விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ’’

பள்ளியறை இல்லாவிட்டால்  உலகம் எங்கே? என்று கேட்கிறது திருவாசகம். பெருமான் பெண்பால் உகந்ததே பள்ளியறைக் காட்சி.  இது இறைவன் ஆன்மாக்களின் மீது கொண்ட பெருங் கருணையின் விளைவு அல்லவா?

                சிவன் சக்தி ஆகிய இரண்டும் சிருஷ்டிக்கு அவசியமானவை.  உலர்ந்து போன களிமண்ணை வைத்துக் கொண்டு எந்தக் குயவனாலும் சட்டி பண்ண முடியாது.  தண்ணீர் அதற்கு அவசியம் வேண்டும்.  அது போலச் சக்தியுடைய உதவி இல்லாமல் சிவனால் மட்டும் சிருஷ்டித் தொழில் நடைபெறாது என்பார் பகவான் இராமகிருஷ்ணர்.

 

உள்ளமே பள்ளியறை ஊஞ்சல் -

                பள்ளியறையிலுள்ள ஊஞ்சலைத் திருப்பொன்னூசல்  என்ற பகுதியில் மாணிக்கவாசகர்,

                                                நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர் நாதன்

                                                 மஞ்சுதோய் மாடமணி உத்தரகோச மங்கை

                                                 அஞ்சொலாள் தன்னொடுங் கூடி அடியவர்கள்

                                                 நெஞ்சுளே நின்று அமுதம் ஊறிக் கருணைசெய்து

                                                 துஞ்சல் பிறப்பு அறுப்பான் தூய புகழ்பாடிப்

                                                 புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ’’

எனும் பாடலில் அடியவர் உள்ளமாகக் காட்டுகிறார்.  அவன் அம்மையுடன் சேர்ந்து ஆடும்போது அங்கே பேரின்பம் ஊற்றெடுக்கிறது. பிறப்பற்ற நிலை ஏற்படுகிறது என்கிறார்.  திருப்பொன்னூசல் என்ற பகுதியின் பொருள் அருட்சக்தி என்பர்.  அதாவது அருளுடன் கூடுதல் என்பதாகும்.  அருளுடன் கூடியதும் இறைவனது ஐந்தொழிலால் ஆன்மாக்கள் மாசு நீஙகித் தூய்மை அடைகின்றன.           

இயக்க சக்தி -

                சிவம் இயங்கா நிலை. சக்தியுடன் கூடிய நிலையே இயக்க நிலை.  சிவமாகிய பரம்பொருள் சக்தியடன் சேராவிடில் உலகில் ஒன்றும் நடைபெறாது.  சிவமெனும் பொருளும் ஆதி சத்தியொடு சேரின் எத்தொழிலும் வல்லதாம், இவள் பிரிந்திடின் இயங்குதற்கும் அரிது அரிது எனா மறை இரைக்கும்’’ என்பது ஆன்றோர் வாக்கு. எனவே பள்ளியறை உலக இயக்த்தை உணர்த்துவதாகும்.

உடனாகி உதவும் கருணை -

                கடவுள் கொள்ளும் உருவத் திருமேனிகள் போக வடிவம், கோர வடிவம், யோக வடிவம் என மூவகைப் படும்.  உயிர்கள் உலக இன்பங்களை அனுபவிக்கப் போக வடிவமும், உயிர்களின் வினை கழியக் கோர வடிவமும், உயிர்கள் முத்தி பெற யோக வடிவமும் கடவுள் கொள்கிறார்.


                                               

                  யோகியாயிருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார்

                                                 யோகியா யோகமுத்தி உதவுதல் அதுவும் ஓரார்

                                                 வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்டல் ஓரார்

                                                 ஊகிய மூடரெல்லாம் உம்பரின் ஒருவன் என்பார்’’

பள்ளியறையில் அம்மையோடு கூடியிருக்கும் வடிவமே போக வடிவமாகும்.  இடப்பாகம் மாதராளோடு இயைந்து உயிர்க்கு இன்பமென்று அடைபரனாம்’’ என்றமையால் உயிர்க்குப் போகத்தைப் புரிய இறைவன் அம்மையோடு கூடிப் போக வடிவம் கொண்டான். உயிர்களாகிய நாம் போகம் அனுபவிப்பதற்காக இறைவன் போகி ஆகிறான். “தொண்டனேன் புணருமாறு புணரே’’, “தொண்டனேன் விரும்புமாறு விரும்பே’’,”தொண்டனேன் நினையுமாறு நினையே’’ எனத் திருவிசைப்பாத் தொடர்கள் இதனை விளக்கும்.  தத்துவம் இதனை ஆன்மாக்களுடன் உடனிருந்து கூட்டுவிக்கும் உபகாரம் என்று உரைக்கும்.

ஒடுக்கம்  - இளைப்பாற்றல் -

                பள்ளியறை என்பது இறைவனின் ஐந்தொழிலில் ஒடுக்கத்தை உணர்த்தும் என்பர்.  படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவையே ஐந்தொழில் எனப்படும். இவை இறைவனின் அருட் செயல்களாகும்.  இவற்றுள் அழித்தலே ஒடுக்கம்.  இதனை இளைப்பாற்றல் என்பர்.  தனு, கரண, புவன, போகங்களை (உடம்பு, கருவி, உலகம், துய்ப்பு) ஆன்மாக்களின் வினை கழியப் படைத்த இறைவன் பின் இவற்றை, ஒடுக்கி அதாவது அடக்கிக் கொள்ளும் நிலையே அழித்தல் ஆகும்.  எங்கே ஒடுக்கம் உண்டோ அங்கே தான் தோற்றம் (படைப்பு) உண்டு.  இதனைச் சிவஞானபோத முதல் சூத்திரம்,

                                                அவன் அவள் அது எனும் அவை மூவினமையின்

                                                 தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்

                                                 அந்தம் ஆதி என்மனார் புலவர்.’’

என்று கூறும்.

ஆன்ம நாயகன் -

                உயிரெலாம் கன்னிப் பெண்கள் என்றும், இறைவன் இந்த உயிர்களுக்கெல்லாம் நாயகன் என்றும், உயிர்கள் இறைவனை இறுதியில் சேர்ந்து இன்புற வேண்டும். பக்குவப்பட்ட உயிர்களை இறைவன் ஏற்றுக கொண்டு அருள்புரிவான் என்றும் திருமுறைகளில வரும் அகப்பாடல்கள் வழி அறிகிறோம்.  இதனையும் பள்ளியறை உணர்ததுகிறது எனலாம். 

                                                கொம்பரில்லாக் கொடிபோல் அலமந்தனன்  கோமளமே

                                                 வெம்புகின்றேன் விடுதி கண்டாய் ‘‘  - திருவாசகம்



திருவடி தெரிசனம் -

                பள்ளியறைக்குத் திருவடியைப் பல்லக்கில் இரவில் எடுத்துச் செல்லும் போதும் காலையில் திரும்பக் கருவறைக்குக் கொண்டு வரும் போதும் தெரிசனம்  செய்யும் பேறு பெரும் பேறாகும்.  இறைவனின் திருவருள் நிலையே அவன் திருவடிகள். திருவள்ளுவரும் தம் கடவுள் வாழ்த்தில் ஏழு இடங்களில் இறைவனின் திருவடிகளைக் குறிப்பிடுகிறார்.  துன்பம் போக்கவும் பிறவிப் பெருங்கடல் கடக்கவும் அவை உதவம்.  அவையே முதலும் முடிவுமாகும் என்பதை ,”ஆதியும் அந்தமும் ஆவன ஐயாறன் அடித்தலமே’’ என்னும் நாவுக்கரசரின் வாக்கால் உணரலாம்.  அவர் ஐயாற்றில் திருப்பாதம் கண்டவர் அல்லவா? அவர்,

                                                சிந்திப்பரியன, சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன்

                                                 முந்திப்  பொழிவன, முத்தி கொடுப்பன, மொய்த்து இருண்டு

                                                 பந்தித்து நின்ற பழவினைகள் தீர்ப்பன, பாம்பு சுற்றி

                                                 அந்திப் பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே’’

என்று திருவடிப் பெருமையைக் கூறுகிறார். 

                இறைவனின் திருவடிகளே ஐந்தொழில்களையும் செய்வதாகத் திருவெம்பாவையின் கடைசிப் பாடல் கூறும்.  அவன் சக்தியே திருவடிகள் என்பர். எல்லா உயிர்க்கும் உண்மையான  இன்ப அனுபவமாக இருப்பன திருவடிகளே.  உலகியல்  இன்பத்திலிருந்து நம்மை விடுவித்து மாறாத இறையியல் இன்பத்தைத் தமக்குத் தந்ததாக மாணிக்கவாசகர் கூறும் அச்சோப் பதிகப் பாடல்.

                                பொய்யெலாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே

                                 மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்

                                 தையலிடங் கொண்ட பிரான் தன்கழலே சேரும்வண்ணம்

                                 ஐயன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே’’

சிவத்தின் நடுவே சக்தி -

                பள்ளியறைக் காட்சி சிவத்தின் நடுவே சக்தி இருப்பதையும் , சிவனும் சக்தியும் அடியார் நடுவில் இருப்பதையும் காட்டுவதற்காக மாணிக்கவாசகர் கூறும் திருவாசகப் பாடலை இக்கட்டுரையின் வாழ்த்தாகக் கூறி முடிப்போம்.

                                                உடையாள் உன்றன் நடுவிருக்கும், உடையாள் நடுவுள் நீ இருத்தி

                                                 அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதனால், அடியேன் உன்

                                     அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்து எம்

                                                 முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்நின்றே’’     

                சிவத்தினின்று சிவசக்தி தோன்றுவதால் சிவத்தின் நடுவில் சக்தி உள்ளது என்பார்கள்.  ஆற்றலுடையவன் சிவன்.  ஆற்றல் சக்தி, சிவ தத்துவத்திலிருந்து சக்தி பிறந்து, அதிலிருந்து சதாசிவம் பிறத்தலால் சிவத்தின் இடையே சக்தி என்பதாயிற்று. உலகத்திற்கு ஆதாரமாகவும், உலகத்தில் எப்புறத்திலும் சக்தி இருப்பதுபோல் சக்திக்கு ஆதாரமாகவும் சக்திக்கு எப்புறமும் சிவன் இருப்பதால் சிவத்தின் நடுவே சக்தி என்பதாயிற்று ‘‘ என்று விளக்கம் தருகிறார் சைவப் பெரியார் கா. இராமநாதனார்.

                சிவன் சக்தியுடன் கலந்து அச்சக்தியின் உள்ளே போய் நெருப்பும் சூடும் போல நீக்கமற நிற்கிறான்.  சிவனும் சக்தியும் மாணிக்கவாசகர் போன்ற அடியார் நெஞ்சத் தாமரையில் வீற்றிருப்பர்.  எனவே அடியார்களோடு என்றும் இணங்கி இருக்க ஆண்டவனை வேண்டுவோமாக.

                                                செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா

                                                 அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ

                                                 மால் அற நேயமும் மலிந்தவர் வேடமும்

                                                 ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே’’

                                                                                                                                (சிவஞானபோதம், சூத்திரம் -12)

(மலாக்கா திலகவதி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா மலர்)

Thinnappan, ‘PaLLIyaRai Vazipaadu’ in Sri Subramaniyar

                 Thuropathai Amman Alayam  Maha Kumbabishega Malar,

                 Melaka, pp105-111,  2005

Thinnappan, ‘PaLLIyaRai Vazipaadu’ in 10th World Saiva Conferece   Sydney,   Australia 2006,     Saiva Manram, Sydney,pp 2-48- 54,  27-29 January 2006

Thinnappan, ‘PaLLIyaRai collum paadam’ in Glden Jubilee Souvenir,

                      Kuala Lumpur,  Malaysia Arlneri Thirukkoottam, pp255-61, 2005.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக