வெள்ளி, 2 மே, 2014

சமயம் - சைவம் - 1


SPT aricles 8 Saivam

திருமுறை தந்த விநாயகர்.

திருமுறை என்னும் தொடர் தெய்வத்தன்மை வாய்ந்த நூல்களைக் குறிக்கும் .  சைவ சமயத்தவர்க்கு வேதம் போல விளங்குவன திருமுறைகளே ஆகும்.  திருஞான சம்பந்தர் , திருநாவுக்கரசர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களும், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகப் பாடல்களும் திருக்கோவையாரும் சேந்தனார் முதலிய ஒன்பது பேர் பாடிய திரு இசைப்பா, திருப்பல்லாண்டுப் பாடல்களும், திருமூலர் இயற்றிய திருமந்திரமும், திருவாலவாயுடையார் முதல் நம்பி ஆண்டார் நம்பி ஈறாகப் பாடிய பாடல்களும் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணமும் திருமுறைகளாகத் தொகுக்கப்பெற்றன.  இவற்றைத் தொகுத்துத் தந்தவர் நம்பி ஆண்டார் நம்பி என்பர். திருமுறைகள் பகுப்பால் பன்னிரண்டு.  இயற்றியவர் எண்ணிக்கை இருபத்தேழு. இத்திருமுறைகள் சிவ பெருமானை முழுமுதற் பொருளாகக் கொண்டு பாடப் பெற்றவை.  இத்திருமுறை ஆசிரியர்கள் அனைவரும் இறைவனின் திருவருளைப் பெற வழி காட்டியவர்கள்.  அத்தகைய வழிகாட்டிய அருமறைகளே திருமுறைகள்.  இவை தமிழில் பக்தி இலக்கியம் தழைக்க வழிவகுத்தன.  இத்தகைய திருமுறைகளுக்கும் விநாயகப் பெருமானுக்கும் இருக்கும் தொடர்பினைத் திருமுறை தந்த விநாயகர் என்னும் தலைப்பில் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.

   திருமுறை தந்த விநாயகர் என்னும் தலைப்பினை இரண்டு வகையாக நோக்கலாம்.   திருமுறைகளைத் தந்த விநாயகர் என்பது ஒரு வகை நோக்கு.  திருமுறைகள் தந்த விநாயகர் என்பது மற்றொரு வகை நோக்கு.  முதல் நோக்கில் திருமுறைகள் வெளிப்பட -உலகுக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த விநாயகரைப் பற்றி விளக்கப்படும். இரண்டாம் நோக்கில் திருமுறைகள் காட்டும்-விவரிக்கும் விநாயகரைப் பற்றிய செய்திகள்  இடம்பெறும்.

  திருமுறைகள் எழுதப்பெற்ற ஏட்டுச் சுவடிகள் எவ்வாறு கிடைத்தன? அவை எவ்வாறு தொகுக்கப்பெற்றன? என்பதைத்  திருமுறை கண்ட புராணம் என்னும் நூல் தெளிவாக விளக்குகின்றது.  அதனை இயற்றியவர் உமாபதி சிவாசாரியார் எனக் கூறுவது மரபு. இதன் வழி விநாயகர் திருமுறைகளை வெளிக்கொணர்வதற்கு எவ்வாறு காரணமாக இருந்தார் என்பதைக் காண்போம்.   சோழப் பேரரசன் இராசராசன் ஒரு நாள் திருவாரூர் தியாகேசரை வணங்கிக் கொண்டிருந்தபோது சைவ அன்பர் சிலர் தேவாரப் பதிகம் ஒன்றைப் பாடக்கேட்டுக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி நின்றான்.  அந்நாள் முதலாகத் தேவாரப் பாடல்களைத் தேடித் தொகுக்க வேண்டும் என்னும் முயற்சியில் ஈடுபட்டான் .  அப்போது திருநாரையூரில்  உள்ள பொல்லாப் பிள்ளையார் என்னும் விநாயகப் பெருமானுக்குப் பூசை செய்யும் மரபில் தோன்றிய நம்பியாண்டார் நம்பி என்னும் சிறுவனைப் பற்றிக் கேள்விப்பட்டான்.  அச்சிறுவன் தன் தந்தையார் வெளியூர் சென்றிருந்தபோது விநாயகருக்குப் பூசை செய்தான்.  அப்போது அவன் வைத்த அமுதினை (நிவேத்யத்தை) பொல்லாப் பிள்ளையாராகிய விநாயகப்பெருமான் உண்ணாதிருக்கக் கண்டு வருந்தித் தன் தலையைக் கல்லில் மோதப்போனான். உடனே பொல்லாப் பிள்ளையார் தோன்றித் தடுத்து அமுது உண்டார்.   அவர் அருளாளல் வேதம் முதல் பல கலைகளைக் கற்றறிந்தான்.   இந்த அதிசயத்தை அறிந்த சோழப் பெரரசன் இராசராசன் தானும் அளவிலாத பொருள்களையும் அங்கு கொண்டுசென்றான், அவற்றையும் பொல்லாப்பிள்ளையார் அமுது செய்து அருளினார்.  இந்த அதிசயத்தைப் பார்த்த அரசன் விநாயகரிடம் மூவர் தேவாரப் பாடல்கள் இருக்கும் இடம் கேட்டறிந்து சொல்ல வேண்டும் என நம்பியிடம் வேண்டினான்.    அதற்கேற்ப நம்பியும் பொல்லாப்பிள்ளையாரை வேண்டி வழிபட்டார்.  

    நம்பியின் வழிபாட்டுக்கு இரங்கிய பொல்லாப் பிள்ளையார் தேவாரத் திருமுறைப்பாடல்கள் உள்ள ஏட்டுச் சுவடிகள் சிதம்பரத்தில் நடராசப்பெருமான் திருக்கொயிலில் ஒர் அறையில் கைகள் அடையாளமிட்டு வைக்கப்பட்டுள்ளதாக நம்பிக்குக் கூறி அருளினார்.  மேலும் அவற்றை இயற்றிய அன்பர் பெருமைகளை எடுத்து உரைத்தார்.  பிறகு நம்பி இவற்றை அரசனுக்கு எடுத்துக் கூற முற்பட்டார்.  சிவபெருமான் அருளிச் செய்த மந்திரங்களே திருமுறைகள்.  இப்பாடல்களை ஞான சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் வாயிலாகத் தேவாரமாக இறைவன் வெளிப்படுத்தினான் என்றும் இவை ஆயிரக் கணக்கான பாடல்கள் என்றும் நம்பி அரசனுக்குக் கூறினார்.   பிறகு அரசன் இத்தகைய செய்திகளை நம்பிக்கு அருளிச் செய்த பொல்லாப் பிள்ளையாரின் பெருங்கருணைத் திறத்தைக் கண்டு வியந்து நின்றான்.  பிறகு தில்லைக்கு-சிதம்பரத்துக்குச் சென்று அந்தணர்களிடம் முறையிட்டுத் திருமுறைகள் இருந்த அறையைத் திறந்து பார்த்தான். அங்கே ஏடுகளைக் கரையான் அரித்திருக்கக் கண்டு கவலையுற்றான்.  எஞ்சிய பாடல்களைக் கொண்ட ஏட்டுச் சுவடிகளை நம்பியிடம் கொடுத்து அவற்றைப் பகுத்து முறையாகத் தொகுக்கச் சொன்னான் .  அதற்கெற்ப நம்பியும் ‘‘தோடுடைய செவியன்’’ முதல் தொடங்கிக் ‘‘கல்லூர்ப் பெருமணம்’’ என முடியும் பாடல்கள் வரையுள்ள ஞானசம்பந்தர் பாடல்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், ‘‘கூற்றாயினவாறுஎனத் தொடங்கி ‘‘ஒருமானைத்தரிக்கும்’’ என முடியும் திருநாவுக்கரசர் பாடல்களை அடுத்த மூன்று திருமுறைகளாகவும்  சுந்தரர் பாடிய பாடல்களை ஏழாம் திருமுறையாகவும் தொகுத்தருளினார்.  இவ்வாறே பின்னர் திருவாசகம், திருக்கோவையார் எட்டாம் திருமுறையாகவும் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறையாகவும், திருமந்திரம் பத்தாம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார் முதல் நம்பி ஆண்டார் நம்பி முடியப் பதினொருவரின் பாடல்கள் பதினோராம் திருமுறையாகவும், சேக்கிழாரின் பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறையாகவும் தொகுக்கப் பெற்றன.   எனவே திருமுறை கண்ட புராணம் கூறும் வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால் திருமுறைகளை உலகிற்குத் தந்தவர் -அதாவது தில்லையில் பூட்டி வைக்கப்பெற்ற திருமுறைச் சுவடிகளைக் காட்டி உலகிற்கு வெளிப்படுத்தியவர் பொல்லாப்பிள்ளையார் ஆகிய விநாயகப் பெருமானே என்னும் கருத்துத் தெரியவரும். இன்னும் சிதம்பரம் நடராசப்பெருமான் கோயிலில் மேற்குவாசற் படிக்கட்டுக்கு எதிரில் ‘‘திருமுறை காட்டிய விநாயகர்’’ திருவுருவச்சிலை இருப்பதைப் பார்க்கலாம்.

        இனித் திருமுறைகள் விளக்கும் விநாயகப் பெருமானின் சிறப்புகளைப் பார்ப்போம்.  முதல் ஏழு திருமுறைகளாகிய  தேவாரத்தில் விநாயகப் பெருமானுக்குரிய இடம் யாது என்பதை முதலில் காணலாம். தேவாரம் இயற்றிய ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் சிவ பெருமானைத் தவிர வேறு தெய்வத்தை வணங்கும் இயல்பினர் அல்லர்.  எனவே சிவபெருமானோடு தொடர்பு படுத்தியே விநாயகரைப் பற்றி அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஞானசம்பந்தர் பின்வரும் தேவாரப் பாடலில் விநாயகப்பெருமானின் தோற்றத்தைப் பற்றிக் கூறுகின்றார்.

பிடியதன் உருஉமைகொள , மிகு கரியது

வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்

கடிகணபதி வர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில் வலி வலம் உறை இறையே

இப்பாடலில் உமை அம்மையார் பெண் யானை வடிவம் கொள்ளவும் , சிவபெருமான்; ஆண் யானை வடிவம் கொண்டு தன்னை வணங்கும் அடியவர்களின் துன்பத்தைப் போக்க விநாயகப்பெருமானைத் தோற்றுவித்தவர் என்னும் கருத்தை ஞானசம்பந்தர் கூறுகிறார்.   விநாயகப் பெருமானை இங்கு கணபதி என அழைப்பதால் அவர் தேவகணம், பூதகணம், மனிதகணம் முதலிய எல்லாக் கூட்டத்தினருக்கும் பதி -அதாவது தலைவர் என்னும் செய்தியும் தெரிகிறது.   இதே கருத்தை’’நீள் கோதைத் தெரியிழை பிடியதுவாய். . . புகர்முக இறையைப் பெற்றிட்டே’’ என்று கூறி வலியுறுத்துகிறார்.  மேலும் இப்பாடலில் விநாயகரைச் சிவபெருமான் தோற்றுவித்ததன் நோக்கமே உலகிலுள்ளோர் துயரத்தையும் பிறவி நோயையும் போக்குவதுதான் என்று கூறுகிறார்.

‘‘புகர்முக இறையைப் பெற்றிட்டே’’ மற்று இப்பார் பெருத்துமிக்க துக்கமும் பேரா நோய்தாம் மேயாமைப் பிரிவு செய்தவன்’’ என்னும் இப்பாடல் அடி இதனைக் காட்டும் புகர்முக இறை என்னும் தொடர் யானை முகத்தோன் விநாயகன் என்பதைக் கூறும் ‘‘கரியின்  மாமுகம் உடைய கணபதி’’ என்னும் ஒரு பாடலில் சம்பந்தர் குறிப்படுகிறார். ‘‘ஒற்றைச் சேர் கொம்புடையான்’’ ‘‘முற்றத் கொம்புடையான்’’ ‘‘மருப்புருவன்’’ என்றெல்லாம் விநாயகப் பெருமானின் தந்தம் பேசப்படுகிறது.  அவரின் முக்கண் தடக்கை பற்றிய குறிப்புகளும் உள்ளன.  சிவபெருமானைக் ‘‘கணபதி தாதை’’ என்றும் மூ:ன்று பாடல்களில் சம்பந்தர் குறிப்பிடுகின்றார். எனவே ஞானசம்பந்தர் தேவாரத்தில் விநாயகர் தோற்றம், இடர் களையும் இயல்பு, வேழமுகம், முக்கண் தடக்கை கொண்ட உருவம் ஆகியவை இடம் பெற்றிருக்கக் காணலாம்.  தமிழ் இலக்கியத்தில் ஞானசம்பந்தர் தேவாரத்தில் தான் விநாயகரைப் பற்றிய குறிப்பு முதல் முதலாக வருகிறது என்பதை மையமாகக் கொண்டு ஞானசம்பந்தர் காலமாகி கி. பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் தமிழ் நாட்டில் விநாயகர் வழிபாடு தோன்றியதாக அறிஞர் கருதுவர்.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் விநாயகர்’’ஆனை முகன்’’ ‘‘கடமா முகத்தினான்’’ ‘‘கணபதி’’ ‘‘வாரணன்’’ ‘‘விக்கின விநாயகன்’’ ‘‘விநாயகன்’’ வேழமுகத்தவன்’’ என்னும் திருப்பெயர்களால் குறிக்கப் பெறுகிறார். கடமா என்பதும் யானையைக் குறிக்கும்.  இடர் கடி கணபதி என்பதையே இவர் விக்கின விநாயகன் என்று கூறுகிறார்.  வாரணம் என்பதும் யானையைக் குறிக்கும் சொல்லே .  விநாயகன் என்னும் திருப்பெயர் சிறப்புமிக்க தலைவன்- தன் ஒப்பார் இல்லாத தலைவன் என்பதை உணர்த்தும்.  இச்சொல்லைத் தமிழ் இலக்கியத்தில் முதல் முதல் கையாண்டவர் நாவுக்கரசரே மேலும் திருவாய்மூரில் சிவபெருமான் காட்சி தந்தபோது ‘‘விநாயகனும் தோன்றக் கண்டேன்’’ என்று நாவுக்கரசர் விநாயகர் திருக்காட்சியை முதன் முதல் கண்டு நமக்குக் காட்டியவரும் நாவுக்கரசரே என்று கூறலாம். ‘‘விநாயகனும் போற்றிசைப்ப’’ என்று இன்னொரு பாடலிலும் இதனை வலியுறுத்துகிறார்.  அவர் மேலும், ‘‘ஆனை முகற்கு அப்பன்’’ என்றும் தண்டகடமா முகத்தினாற்குத் தாதை காண்’’ என்றும் சிவபெருமானை அவர் அழைக்கிறார்.  ‘‘கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும் ‘‘என்னும் பாடல் அடியின் வாயிலாகச் சிவபெருமான் விநாயகனைப் படைத்துக் கயாசுரனை அழித்த வரலாற்றை நாவுக்கரசர் கூறுகிறார்.   இது ஒரு புதுச்செய்தி கயாசுரனை விநாயகப் பெருமான் அழித்த கதை தோன்ற இந்த அடிகளே காரணமாக அமைந்தன போலும்.  இன்னொரு செய்தியும் இது கூறுகிறார்.  ‘‘பலபல காமத்தராகிப் பதைத்து எழுவார் மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறு’’ என்னும் அடிகளின் வாயிலாக விநாயகப் பெருமான் பக்தர்கள் ஆசைகளை அகற்றித் தெளிவு தரும் ஞானப் பண்பினர், விருப்பங்களை நிறைவேற்றும் ஆற்றலுடையவர் என்பதை அறிய முடிகிறது.

சுந்தரர் தேவாரத்தில் கணபதியைப் பற்றிய குறிப்பு இரண்டு பாடல்களில் இடம்பெறுகிறது.‘‘எண்ணிலியுண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான்’, ‘‘கணபதியேல் வயிறு உதாரி’’ என்று கணபதியின் தொந்தி வயிற்றினைக்கூறிச்  சிவ பெருமானுக்கு அழமை செய்யமாட்டென் என்று தம் நண்பரிடம் (சிவனிடம்) எள்ளி நகையாடுகிறார் சுந்தரர் எல்லை கடந்தஎண்ணுக்கு அடங்காத (infinity ) –பொருள்களை உள்ளடக்கியவர் விநாயர் என்பதை அவர் பெருவயிறுகாட்டுகிறது.  இதனைத் தானே சுந்தரர் தமக்குச் சொல்லாமல் சொல்கிறார்.

எட்டாம் திருமுறையாகிய மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார் ஆகியவற்றில் விநாயகர் பற்றிய குறிப்பு இல்லை.

ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவற்றிலும் விநாயகர் பற்றி செய்திகள் மிகுதியாக இல்லை.  திருமாளிகைத் தேவர் பாடிய திருவிசைப்பா ஒன்றில் சிவபெருமானைக் ‘‘குமர விநாயக சனக (அதாவது முருகனையும் விநாயகனையும் தோற்றுவித்தவனே! ) என்று அழைக்கும் தொடர் ஒன்று இடம் பெறுகிறது.  இவ்வாறே சேந்தனார் பாடிய திருவிடைக்கழித் திருவிசைபாவில் முருகனைக் கணபதி பின் இளங்கிளையே ‘‘ என்று (விநாயகர் தம்பி முருகன் என்று) அழைப்பதைப் பார்க்கிறோம்.

பத்தாம் திருமுறையாகிய திருமூலரின் திருமந்திரம்

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை  போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

என்னும் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது.  ஐந்து திருக்கைகளை உடையவர், ஆனை முகத்தை உடையவர், சிவபெருமான் மைந்தர், ஞானத்தின் கொழுந்தாக விளங்குபவர் விநாயகர் என்னும் செய்தியை இப்பாடல்  உணர்த்துகிறது.  இத்தகையவரை என் மனத்தில் வைத்து  வணங்குகிறேன் என்று இப்பாடல் கூறுகிறது.  எனவே இதனைத் தியானத்திற்குரிய பாடல் எனச் சொல்லலாம்.  இந்து மத்தில் எந்தக் காரியத்திற்கும்- சடங்குக்கும் முதலில் கூறப்படும் ‘‘சுக்லாம் பரதம்’’ என்னும் வடமொழிப் ப்பாடலுக்குகேற்ற தமிழ்;ப்பாடலாக இதனைக் கூறலாம் இப்பாடல் திருமந்திரத்தில் இடைச்செருகல் எனக் கருதுவாரும் உளளனர்.

பதினோராம் திருமுறையில் தான் விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனியாக நூல்கள் இடம்பெற்றுள்ளன. இத்திருமுறையில் இடம்பெற்ற கபிலதேவ நாயனார் இயற்றிய மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை  என்னும் நூலும் அதிரா அடிகள் இயற்றிய  மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை என்னும் நூலும் , நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை என்னும் நூலும்; , விநாயகப் பெருமானையே முழுமுதற்பொருளாகக் கொண்டு போற்றுகின்றன.  விநாயகர் மூத்த பிள்ளையார், மூத்த நாயனார் என அiழைக்கப்பெறுவதை இந்நூல் தலைப்புகள் எடுத்துக் கூறுகின்றன.

கபிலதேவ நாயனார் இயற்றிய நூலில்தான் ‘‘திருவாக்கும் செய்கருமம்  கைகூட்டும்’’ ‘‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்’’ ஆகிய புகழ்;மிக்க பாடல்கள் இடம் பெற்றுள்ளன.  இவர் விநாயகருக்குத் தனியே நூல் ஒன்று இயற்றி இருந்தாலும் சிவபெருமானுடன் சார்த்தியே விநாயகரைப் பேசுகிறார்.  சிவபெருமானைப் பற்றி இத்திருமுறையில் இவர் இரண்டு நூல்கள் இயற்றியுள்ளார்.   இந்த இரட்டை மணிமாலையில் வெண்பா பத்தும், கட்டளைக் கலித்துறை பாடல்கள் பத்தும் ஆக இருபது பாடல்கள் உள்ளன. சிவபெருமான் விநாயகரைப் படைத்தான் என்றும், விநாயகர் வெவ்வினையை அறுத்து, ஆசையையும் அறுப்பவர் என்றும், விநாயகரை வணங்கியவர்கள் திருமகள் அருள் பெற்றுச் செல்வராய்த் திகழ்வர் என்றும் கபிலதேவ நாயனார்  கூறுகிறார்  தேவர் வணங்கும் விநாயகர் அப்பம், இடிஅவல், எள்ளுருண்டை, வாழை, பலா, மா ஆகிய முக்கனிகள் விரும்பும் பெரு வயிறன் என்று இந்நூலில் பேசப்படுகிறார்.   யானை முகத்தான், சிவன் சேய், மால்மருகன், உமையாள் காதற் புதல்வன், ஒரு கோட்டன், இரு செவியன், முக்கண்ணன், செம்மேனியன், என்றெல்லாம் விநாயகர் இங்கே விவரிக்கப்படுகிறார்.  விநாயகன், கணபதி என்னும் பெயர்களும் இடம் பெறுகின்றன.  பெரும்பாலான பாடல்களில் சிவபெருமானின் புதல்வன் என்னும் செய்தியே உள்ளது.

அதிரா அடிகள் இயற்றிய மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவையில் அகவல், வெண்பா. கட்டளைக் கலித்துதறை யாப்பில் அமைந்த முப்பது பாடல்கள் விநாயகரைப் பற்றிப் பேசுகின்றன. இப்போது 23 பாடல்களே இந்நூலில் உள்ளன.  எஞ்சிய ஏழு பாடல்கள் கிடைக்க வில்லை.  ‘‘சேவடி யுகளம் அல்லது யாவையும் இலம் இனி இருநில்த்திடையே’’ என்றும் ‘‘எந்தை அல்லது மற்று யாவுள, சிந்தை செய்யும் தேவதை நமக்கே’’ என்றும் வரும் இவர் பாடல் அடிகள் இவர் விநாயகரிடம் கொண்டிருந்த பக்தியை விளக்குகின்றன  கணபதி, போதகம், வேழக்கன்று, துளைக் கடவுள், கும்பக் குழவி என்ற சொற்களால் விநாயகரை இவர் அழைக்கிறார்.  கணபதியின் விசுவரூபம் -பேருரு-அடிமுதல் முடிவரை ஒரு பாடலில் அழகாகப் புனையப்படுகிறது(பா. 22) மேலும் கணபதி அரக்கரை வென்றமை, வியாசர் கூறிய பாரதக் கதையை மேரு மலையில் விநாயகர் எழுதிய வரலாறு, சிவபெருமான் திரிபுரம் எரித்தபோது விநாயகர் உதவியது, மாங்கனி பெற முருகன் உலகை வலம் வந்தமை ஆகிய புராணச் செய்திகளைக் கபிலதேவ நாயனார் கூறுவதை இந்நூலில் காண முடிகிறது.  மேலும்  உமையம்மை ஈன்ற சேயாகிய விநாயகர் நிலம் , மேருமலை,  வானம் எல்லாம் நடுங்கச் சப்பாணி (கை) கொட்டிய செய்தி பற்றியும் (2) ஏழுமலைகள், திக்கு யானைகள் பேர்ந்தாடச் செங்கீரை ஆடிய (மழலை பேசிய ) செய்தி பற்றியும் இந்நூல் கூறுகின்றது.  முருகன் உலகை வலம் வரத் தந்தையாகிய சிவனை வலம் வந்து மாங்கனி பெற்ற விநாயகர் வரலாற்றை முதல்முதலில் அதிரா அடிகளே கூறுகின்றார். இந்நூலில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் வருமாறு

மொழியின் மறைமுதலே முந்நயனத்து  ஏறே

கழிய வரு பொருளே கண்ணே-தெழிய

கலாலயனே எங்கள் கணபதியே நின்னை

அலாது ஐயனே சூழாது என் அன்பு

நம்பியாண்டார் நம்பி அருளிய திருநாரையூர் விநாயகர் திரு இரட்டை மணிமாலையில் வெண்பா. கட்டளைக் கலித்துறை யாப்பில ; அமைந்த 20 பாடல்கள் உள்ளன. இவை அந்தாதி முறையில் அமைந்துள்ளன.  ஒவ்வொரு பாடலிலும் நாரையூர் என்னும் சொல்லாட்சி வருகிறது.  ஏனைய பாடல ;களில் கணபதி, ஐங்கரத்தான், சிவக்களிறு , ஒரு கொம்பன், கரிவதனன். முக்கண் அரசு , அத்திமருப்பினன் என்று விநாயகர் அழைக்கப்படுகிறார்.  மேலும் அடுமருப்பினன், பெருச்சாளி ஊர்தி உடையவன், செந்தீ வண்ணன், கையில் மாங்கனி, கொம்பு அண்டம் , பாசம் , மழு உடையவன் என்று விநாயகர் இயல்புகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.  மேலு ம் உமையவள்(உமை) தான் பெற்ற யானை என்றும், நாரையூர் மன்னும் சிவன் மகன் என்றும், குமரற்கு முன்னவன் என்றும் நம்பி விநாயகரைப் பற்றிக் கூறுகிறார்.  தந்தையை வணங்கி மாங்கனியைப் பெற்றுக் கொண்டவர் விநாயகர் என்னும் கதைச் செய்தி இரண்டு பாடல்களில் வரக்காணலாம் (3, 8) மேலும் விநாயகர் தம் கொம்பொன்றையே படையாகக் கொண்டு கயாமுகாசுரனை(யானை முக அசுரனைக் கொன்ற கதையும் ஒரு பாடலில் வருகிறது’’ என்னை நினைந்து அடிமை கொண்டு என் இடர் கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான்’’ நாரையூர் விநாயகப் பெருமான் என்று இந்நூலை  நம்பி தொடங்குகிறார்.

இம்மூன்று  நூல்களைத் தவிரப் பதினோராம் திருமுறையில் சேராமான் பெருமாள் நாயனார் இயற்றிய திருக்கைலாய ஞான உலாவில் வேழ முகத்து  விநாயகனை  உள்ளுறுத்து மங்கையர் சூழ இறைவன் உலா வந்த செய்தி வருகிறது.  பட்டினத்தாரின் திருவிடை மருதூ}ர் மும்மணிக் கோவை என்ற நூலில் பவள மால்வரை போல்பவன், பணைக்கையோன் தாழ்ந்த செவி உடையவன் விநாயகர் என்னும் செய்தி இடம் பெறுகிறது.  பக்தர்கள் குறைகளைத் தம் தாழ்ந்த காதுகளால் கேட்டு, அவர்கள் கேட்பனவற்றைத் தம் பெரிய கைகளால் வாரி வழங்குபவர் அல்லவா விநாயகர்? இவை தவிரப் பதினோராம் திருமுறையில் விநாயகர் பற்றிய குறிப்பு வேறு இடங்களில் இல்லை.

பன்னிரண்டாம் திருமுறையாகிய சேக்கிழாரின் பெரிய புராணத்தில் விநாயகர் பற்றிய செய்திகள் மிகுதியாக இல்லை.  பாயிரத்தில் வாழ்த்துப்பாடல்களில் ஒன்றாக வரும் பாடல் கீழே தரப்பட்டுள்ளது.



எடுக்கும் மாக்கதை இன் தமிழ்ச் செய்யுளாய்

நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திடத்

தடக்கை ஐந்து உடைத் தாழ்செவி நீள்முடிக்

கடக்களிற்றை கருத்துள் இருத்துவாம்

இப்பாடலில் பெரியபுராணம் இன் தமிழ்க்காப்பியமாய் இலங்கிடத் தமக்கு அருள் புரியுமாறு விநாயகரைச் சேக்கிழார் வேண்டுகிறார்.  ஐந்து பெரிய கைகள் தாழ்ந்த காதுகள், நீண்ட முடி, ஆண்யானை  வடிவம் உடையவர் விநாயகர் என்று இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.  பிறகு சிறுத்தொண்ட நாயனார் புராணத்தில் திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டர் வழிபட்ட திருக்கோயிலின் பெயர் கணபதீச்சுரம் என்னும் ஒரு செய்தியை மட்டுமே சேக்கிழார் கூறுகிறார்.  இங்கு கணபதி வழிபட்ட கோயில் என்னும் கருத்து ஒன்றே வெளிப்படுகிறது.  இவை தவிரப் பெரிய புராணத்தில் பிற செய்;திகள் விநாயகர் பற்றிக் காண இயலவில்லை.  எடுத்த காரியம் இனிது நிறைவேற உதவுபவர் விநாயகர் தானே.  சிறுத்தொண்டராகிய பரஞ்சோதியார் நரசிம்மவர்ம பல்ல வனின் (கி. பி. ஆறாம் நூற்றாண்டு ) படைத் தலைவராக இருந்து வாதாபியை வென்று அங்கிருந்து விநாயகர் திருவுருவச் சிலையைத் தமிழ் நாட்டிற்குக் கொண்டு வந்த திருச்செங்காட்டங் குடியில் பிரதிஷ்டை செய்தார் என்றும் அறிஞர் எண்ணுவர்.

   விநாயகப் பெருமானே திருமுறைகள் இருக்கும் இடத்தைக் காட்டி உலகிற்குத் தந்தவர் என்பதைப் பற்றியும், திருமுறைகள் காட்டும் விநாயகரின் தோற்றம், உருவம் பெயர், பெருமை , புராணக் கதைக் குறிப்பு ஆகியவை பற்றியும் இக்கட்டுரை வாயிலாக அறிந்துகொண்டோம் எனவே தமிழ் வேதமாகிய திருமுறைகள் தரணியில் பரவ  வேராகவும் விழுதாகவும் இருந்த விநாயகப் பெருமானை வணங்கி வழிபடுவோமாக.


                         

39   Thinnappan, 'Lord Ganesa in ThirumuRai ( Devotional Literature)', in Ganapathy Kalanjiyam,  Singapore, Sri Senpaga Vinayagar Temple 2003, 31-32 (English) 107-110 (Tamil) February 2003










கட்டுரை எண். 18

                  திருமுறைகளில் முருகன்

ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றால் , பிரெஞ்சு தூதி; மொழி என்றால், இத்தாலியம் காதலின் மொழி என்றால், ஜெர்மனியம் தத்துவத்தின் மொழி என்றால்,  இலத்தீன் சட்டத்தின் மொழி என்றால், தமிழ் பக்தியின் மொழி என்று பாராட்டினார் தனிநாயக அடிகளார்.   இவ்வாறு தமிழைப் பக்தியின் மொழியாக்கிய பெருமை சிவனடியார்களாகிய நாயன்மார்களையும் திருமால் அடியார்களாகிய ஆழ்வார்களையுமே சாரும்.  முழுமுதற்பொருளாகிய சிவபெருமானை உள்ளத்தால் நினைத்து வாயால் துதித்து உடலால் திருத்தொண்டு செய்து உண்மையாக வழிபட்ட நாயன்மார்கள் பாடிய பாடல்களை நம் முன்னோர்கள் திருமுறைகளாகத் தொகுத்தனர்.   திருமுறை என்னும் சொல்லுக்குக் கேடும் ஆக்கமும் இல்லாத இறைவன் திருவருட் செல்வத்தைவாரி வழங்கும் நூல்கள் எனப் பொருள் உரைக்கலாம்.  இன்று நமக்குக் கிடைக்கும் சைவத் திருமுறைகள் பன்னிரண்டாகும்.  இப்பன்னிரண்டு திருமுறைகளைத் திருஞான சம்பந்தமும் , அடு;த்தமூன்று திருமுறைகளைத் திருநாவுக்கரசரும், இயற்றினர்: ஏழாம் திருமுறையைப் பாடியவர் நம்பியாரூரர் எனப்படும் சுந்தரர், இந்த ஏழு திருமுறைகளையும் இன்று பொதுவாகத் தேவாரம் என அழைப்பர் : எட்டாம் திருமுறையாகிய திருவாசகம் , திருக்கோவையார் என்னும் நூல்களை இயற்றியவர் மாணிக்கவாசகர்: ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருப்பல்லாண்டு என வழங்கப்பெறும் : இதனை ஒன்பது அருளாளர்கள் இயற்றியுள்ளனர்: பத்தாம் திருமுறை திருமந்திரம்: இதன் ஆசிரியர் திருமூலர் : பதினோராம் திருமுறையைப் பாடியவர்கள் திருவாலவாயுடையார் முதல் நம்பி ஆண்டார் நம்பி ஈறாகப் பலர் பாடியுள்ளனர். பன்னிரண்டாம் திருமுறை திருத்தொண்டர் புராணமாகும்: இதனை இயற்றியவர் சேக்கிழார்.  ‘‘முதிவளர் சடைமுடி மன்றுளாரை முன் துதி செயும் நாயன்மார்களின் தூய சொல்மலராகிய’’ திருமுறைப்பாடல்களில் பழந்தமிழ்க் கடவுளாகிய முருகன் பெறும் இடத்தை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

திருமுறைப்பாடல்களில் முருகனைப் பற்றிய குறிப்புக்கள் ஏறத்தாழ எழுபத்தைந்து இடங்களில் உள்ளன.  இவை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரப்பாடல்களிலும், மாணிக்கவாசகரின் திருவாசகம் திருக்கோவையாரிலும், திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர் ஆகியோரின் திருவிசைப்பாப் பாடல்களிலும், திருமூலரின் திருமந்திரத்திலும், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரர், கபிலர், இளம்பெருமான் அடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகிய பெருமக்களின் பதினோரம் திருமுறைப் பாடல்களிலும் சேக்கிழாரின் பெரியபுராணத்திலும் இடம் பெற்றுள்ளன.

இவற்றுள் நக்கீரனாரின் திருமுருகாற்றுப்படையும் (பதினோராம் திருமுறை) செந்தனாரின் திருவிடைக்கழி முருகன் மீது பாடிய திருவிசைப் பாடல் பதிகமும் (ஒன்பதாம் திருமுறை) முருகனையே தலைவனாகக் கொண்டு பாடப் பெற்றவை .  திருமுருகாற்றுப்படை என்பது முருகணிடத்து அருள் பெற்ற ஒருவன் அருள் பெறாதவனை நோக்கி அவனிடம் சென்று அருள்பெற வழிகாட்டுவதைக் கருவாகக் கொண்டு பாடிய பாடலாகும்.  யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் உயர்ந்த நோக்கில் எழுந்த ஒன்றாகும்.  சங்கத் தமிழ் இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டின் முதற்பாடலாகத் திகழும் பெருமையும் இப்பாடலுக்கு உண்டு.  இது சங்கத் தமிழ்ப் பிரிவில் புறம் என்னும் வகையைச் சார்ந்த ஒன்று .  முருகனின் ஆறுபடை வீட்டிற்குரிய அடிப்படை இந்தப் பாடலில் தான் உள்ளது.

    சேந்தனாரின் திருவிசைப்பா பாடல் பதிகம் காதலைப் பாடும் அகம் என்னும் பிரிவில் அமைந்த ஒன்று.  திருவிடைக்கழி என்னும் ஊரில் கோயில் கொண்டடெழுந்தருளி இருக்கும் முருகப்பெருமான் மீது தன் உள்ளத்தைப் பறிகொடுத்துக் காதல் கொண்ட ஒரு பெண்ணின் துயரத்தைக் கண்ட அவள் தாயர் வருந்திக் கூறுவதாக அமைந்த பதினொருபாடல்களைக் கொண்டு விளங்குகிறது.     இதற்குரிய இசைப்பண், பஞ்சமம் என வகுத்துள்ளனர்.  சங்கப் புலவர்கள் பாடிய மானிடக் காதலை நாயன்மார்கள் தெய்வக் காதலாக மாற்றிப் பாடத் தொடங்கினர். அந்த வரிசையில் அமைந்தது இந்தப் பதிகம்.  நால்வர் பாடல்களில் மணிவாசகரின் திருவாசகத்தில் ஓரிரு குறிப்புக்களே முருகனைப் பற்றி உள்ளன.  மூவர் தேவாரத்தில் பல இடங்களில் முருகனைப் பற்றிய செய்திகள் வருகின்றன.  இவர்கள் சிவபெருமானையே முழுமுதற்பொருளாகக் கொண்டு பாடுபவர்கள்.  நனவிலும் கனவிலும் அவனையே கடவுளாகக் கருதுபவர்கள். இந்நிலையே நக்கீரர் , சேந்தனார் இருவரைத் தவிர ஏனைய புலவர்களின் பாடல்களிலும் இருக்கின்றது.  ஆனால் நக்கீரரும் சேந்தனாரும் முருகனையே தலைவனாகக் கொண்டு பாடல்கள் இயற்றிய பான்மையர் ஆவர்.

சொல்லும் பொருளும்

முருகன் என்னும் சொல் முருகு என்னும் அடிச்சொல்லுடன் அன் என்னும் ஆண்பால் விகுதி சேர்ந்து உருவான ஒரு நற்றமிழ்ச் சொல்லாகும். இச் சொல் தனித்து முருகன் எனவும், மாமுருகன், முருகவேள் என அடை சேர்க்கப்பெற்றும் திருமுறைப்பாடல்களில் வருகின்றது.  முருகு என்னும் சொல்லுக்கு மணம், இளமை, அழகு இறைமை எனப் பொருள் உண்டு எனச் சுட்டிக்காட்டி முருகன் அல்லது அழகு என்னும் ஒரு நூலை விரிவாக யாத்துள்ளார் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார். இப்பொருளை உணர்த்தும் அடிப்படைச் சான்று திருமுருகாற்றுப்படையில் இடம்பெறுகின்றது. ‘‘மணங் கமழ் தெய்வத்து இளநலம் காட்டி’’ (வரி 290) என்னும் வரியில் மணம், தெய்வத்தன்மை, இளமை அழகு ஆகியவற்றை முருகன் காட்டி அருள் புரிகிறான் என்னும் குறிப்பு வருகின்றது.  அழியா அழகு , மாறாமணம் , என்றுமுள்ள இளமை, இனிய இறைமைத் தன்மை ஆகிய இவற்றை உடையவனே முருகன் என்னும் கருத்தை உணர்த்துவதில் முந்திநிற்கிறது முருகாற்றுப்படை. பரவையார் என்னும் பெண்ணின் நல்லார், திருவாரூர்க்  கோயிலில் முதன்முதலாக சுந்தரரைக் கண்டபோது,’ முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ பெருகொளியால்’’ என உள்ளத்தில் எண்ணியதாகச் சேக்கிழார் பெரியபுராணத்தில் பாடுகின்றார்.  இளமை, அழகு , மணம், இறைமை, இத்துடன் திருவருட்பிரகாசம் என்னும் குறையாத நிறைவாகத் தோன்றும் ஒளி என்னும் பொருளையும் முருகனுக்குச் சேர்க்கிறார் சேக்கிழார்.  அறியாமையை , ஆணவ இருளை அகற்றுவது திருவருள் ஒளியன்றோ?

குறிஞ்சிக் கடவுள்

தமிழில் இன்று கிடைத்துள்ள நூல்களில் தொன்மையானது தொல்காப்பியம்.  இந்நூலில் ‘‘சேயோன் மேய மைவரை உலகம்’’ என மலைப்பகுதியுடைய குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் சுட்டப்பெறுகிறான்.  சேயோன் என்பது முருகனுக்குரிய பெயர்.  இது சேய் என்னும் அடிச்சொல்லுடன் ஓன் என்னும் ஆண்பால் விகுதி சேர உருவான ஒரு சொல்லாகும். சேய் என்பதைச் செம்மையுடன் தொடர்புபடுத்திக் கூறுவர் முன்னாளையச் சான்றோர் .  முருகப்பெருமான் செம்மை நிறமுடையவன்.  ஆதலினால் செவ்வேள் என்று அழைக்கப் பெற்ற செய்தியைப் பழந்தமிழ் இலக்கியங்களின்  வாயிலாக அறியமுடிகின்றது. ஆனால் சேய் என்பதற்குக் குழவி  என்னும்  பொருள் உண்டல்லவா? இந்தப் பொருளுடன் இணைத்துச் சிவனாரின் சேய் -புதல்வன் என்னும் கருத்து வலுப்பெற்று வழங்கிய சூழ்நிலையே திருமுறைகளில் மிகுதியான ஆட்சிபெற்றுள்ளது. சேய் என்பது முருகன் என்னும் பொருளில் சம்பந்தரின் தேவாரப் பாடல்களில் இடம்பெற்றுள்ளது.  இளஞ்சேய் எனச் சேந்தனாரின் திருவிசைப்பாப் பாடலிலும் முருகன் அழைக்கப்பெறுகிறான்.

  மலையுறை மக்களுக்கெல்லாம் தெய்வமாக விளங்கியவன் முருகன்.  அவன் குன்றுதோறும் ஆடல் புரிபவன் என்பதை முருகாற்றுப்படை முழங்குகிறது.  பெரிய புராணத்திலும் கண்ணப்ப நாயனார் புராணத்திலும் காளத்தி வேடர்கள் எவ்வாறு  முருகனை வழிபட்டு வணங்குகிறார்கள் என்னும் செய்தி இடம்பெற்றுள்ளது.  மணிவாசகரின் திருக்கோவையாரிலும் தலைவனிடம் மனம் பறிகொடுத்த தலைவியின் உடல்மாற்றத்தைப் போக்க விரும்பும் தாயின் முருக வழிபாட்டுத் திறனை விளக்கும் வெறியாட்டு சில பாடல்களில் இடம்பெறுகின்றது.  திருஞானசம்பந்தர்’’கருகு குழல் மடவார் கடி  குறிஞ்சியது பாடி முருகன்னது பெருமைபகர் முதுகுன்று அடைவோமே’’ என்று குறிஞ்சியோடு இணைந்து முருகனைப் பாடுகிறார்.

தோற்றம்

முருகப்பெருமானின் தோற்றம் குறித்துத் திருமுறைகளில் காணக்கிடக்கும் கருத்துக்களைத் தொகுத்துக் காண்போம்.  திருமூலர் திருமந்திரத்தில்


எம்பெருமான் இறைவா முறையோ என்று

வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல

தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

(திருமந்திரம் -503)

என்று வரும் பாடல் தேவர் சிவபெருமானிடம் சென்று அசுரர்களின் ஆற்றலை கூறி அவர்களால் ஏற்படும் கொடுமைகளைக் கூறவே, சிவபெருமான் அறுமுகனாகிய முருகனை அழைத்துத் தேவர் பகை அழிக்கப் பணித்தனன் என்னும் கருத்தினைக் கூறுகின்றது.  முருகப்பெருமானுக்கு அறுமுகச் சிவன் என்று ஒரு பெயர் உண்டு.  சிவபெருமானுக்கு படைத்தல் , காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலைச் செய்வதற்குரிய முகங்கள் ஐந்து.  சிறப்புத் தொழில் நடத்த மெற்டிகாள்ளும் முகம் ஒன்று.  எனவே மொத்தம் ஆறுமுகம் கொண்டு அவன் தோன்றினான்.   ‘‘தற்பரன் தானே  என்னும் தொடரும் ஐம்முக அருளோனாகிய சிவனும் அறுமுகப் பொருமாளாகிய முருகனும் ஒருவரே என்னும் கருத்தை வலியுறுத்தும்.

திருஞானசம்பந்தப் பெருமான் தம் தேவாரத்தில் விநாயகரின் தோற்றத்தை விளம்பியிருக்கின்றார்.  அதைப் போலவே முருகனின் தொற்றம் பற்றியும் குறிப்பிடுகின்றார்   ‘‘இளங்குமரன் தன்னைப் பெற்று இமையவர் தம் பகையொழிவித்த இறைவன்’’(209.1)என்றும் சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள் தம் பகை கெடுத்தோன் ‘‘210.6) என்றும் ‘‘பகைகளையும் வகையில் அறுமுக இறையை மிக அருள’’ (325.8) என்னும் ஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்கள் தேவர்களின் பகை நீக்கம் செய்ய முருகனைச் சிவபெருமான் தோற்றுவித்து அருளிய செய்தியைக் கூறுகின்றன.  ‘‘பெற்றும் உகந்தும் கந்தனையே’’(371.1) என்னும் அவர்தம் தேவாரத்தொடரும் கந்தனைப் பயந்த கடவுள் சிவன் எனச் சொல்கிறது.

சுந்தரர் இக்கருத்துக்களைத் தொகுத்துப் ‘‘பொரும் பலமதுடைஅசுரன் தாருகனைப் பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன்’’(16.9) என்று கூறுகிறார்.  இந்த இடத்தில் பொருள் என்பது முருகனைக் குறிக்கினறது. ‘‘தாயே ஆறு சமய முதற்பரமும் தாமேவியவாறு தழைக்கின்றார்’’ என்பது சிவபெருமான் திருவந்தாதி.( 52) இங்கேயும் சிவனாரே முருகன் என்னும் செய்தி புலப்படுகின்றது.  சிவபெருமானிடமிருந்து தோன்றியவன் ஆதலின் முருகனைச் சிவனார் மைந்தன் எனச் செப்பினர்.

அரனார் மகன்

   முருகப் பெருமான் முழுமுதற்பொருளான சிவபெருமானின் புதல்வன், இளைய மைந்தன் எனத் திருமுறை பரக்கப்பேசுகின்றது.  நால்வர் பாடல்களும் சிவபெருமானை முருகன் தந்தை எனவும் கூறுவதுடன், முருகனை அரனாரின் அன்புப் புதல்வன் எனவும் அழைக்கின்றன.  ‘‘மாமுருகன் தந்தையார், குமரன் தந்தை , முருகவேட்குத் தந்தைகாண், சேந்தன் அப்பன், செட்டியப்பன்’’ என நால்வர் பாடல்கள் சிவபெருமானை முருகனின் தந்தையாக அழைக்கின்றன.  ‘‘இளங்குமரன் தன்னைப் பெற்று’’ எனச் சிவபெருமானைக் குறிப்பிடுகிறார் சம்பந்தர்.  மற்றவர்கள் பாடலிலும் இந்தக் குறிப்புக்கள் உண்டு.

‘‘குமரனையும் மகனாக உடையவர்போலும் ‘‘ சேந்தனை மகனாகக் கொண்டார்’’ முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி’’ என்பன அப்பர் வாக்கு.  ‘‘அங்கை வேலோன் குமரன் பிள்ளை என்பார் சுந்தரர்.

‘‘அரன்மதலை மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை ,பொன்மலை வில்லி தன் புதல்வன்;’’ என்பன சேந்தனார் பாடல் தொடர்களாக அமைந்துள்ளன.

மலைமகள் மதலை

முருகனின் தாய் உமையம்மையார் என்னும் குறிப்பையும் திருமுறைப்பாடல்கள் பேசுகின்றன.  ‘‘நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்’’ என்பது நாவுக்கரசர் கூற்று  ‘‘சேந்தன்தாய் மலைமங்கை ‘‘ என்பது சுந்தரர் வாக்கு.  ‘‘குமரனைப் பயந்த வார்த்தயங்கிய முலைமடமானை ‘‘ எனவும் சுந்தரர் உமையம்மையாரை அழைக்கின்றார்.

‘‘மலையரை பொற்பாவைதன் சிறுவன்’’ என முருகனைச் சுந்தரர் குறிப்பர்’’ கங்கைதன் சிறுவன்’’ எனவும் மலைமகள்  மதலை எனவும் சேந்தனார் கூறுவர்.


கணபதிக்குப்பின் இளங்கிளை

‘‘அறுமுகனோடு  ஆனைமுகற்கப்பனை ‘‘ என்பது நாவுக்கரசர் கூற்று.  இதனால் அறுமுகனும் ஆனைமுகனும் சகோதரர்கள் என்பது போதரும்.  ‘‘கணபதி பின்னிளங்கிளை என்பது சேந்தனார் வாக்கு.  இதனால் முருகன் விநாயகரின் தம்பி என்பதையும் உணரமுடிகிறது.

மால்மருகன்

முருகன் திருமாலுக்கு மருகன் என்னும் கருத்தைச் சேந்தனாரின் பாடல் வழி அறியமுடிகிறது.    ‘‘கார்நிறமால் திருமருகன் , மால் திருமருகன்’’ என்பன சேந்தனார் பாடலில் வரும் தொடர்களாகும்.

தேவர் தலைவன்

‘‘அமரர் கோமகன், தேவின் நற்றலைவன், மேலுலாந் தேவர்குல முழுதாளும் குமரவேள்’’ என்னும் சேந்தனார் பாடல் தொடர்களால் முருகன் தேவர்களின் தலைவனாகத் திகழும் திறம் தெரிகிறது.  ‘‘வகைமிகும் அசுரர் மாள வந்து உழிஞை வானமர் விளைத்த தாளாளன்’’ (சேந்தனார்) என்பதாலும் ‘‘பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள நிகரில் இமையோர் புகவுலகு தபுகர்’’ எனச் சம்பந்தர் வுறுவதாலும், தேவர் குறை  தீர்த்த தலைவன் எனவும்;, அறிய முடிகின்றது.  ‘‘அமர் சேனைக்கு நாயகன்’’ என்பர் அப்பார் சுந்தரர்.

வள்ளி மணளான்

‘‘முருகொடு புணர்ந்த வள்ளி போல’’ எனச் சங்க இலக்கியமாகிய நற்றிணையில் முருகனையும் இணைத்துச் சொல்கின்ற மரபு தொடங்குகின்றது.  ‘‘வள்ளி முலை தோய் குமரன்’’ (199.6) என்பது சம்பந்தர் வாக்கு.  ‘‘நஞ்செந்தின் மேய வள்ளி மணளன்’’ (236.4) ‘‘குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள்’’ (60.3) என்பன நாவுக்கரசர் கூற்றுக்கள்.  வள்ளி குறவர் மரபினைச் சார்ந்தவள்.  ‘‘குறவர் மங்கைதன் கேள்வன்(68.7) , குறவனார் தம்மகள் தம்மகனார் மணவாட்டி’’ (18.6) என்பன  சுந்தரர் கூறும் சொற்றொடர்கள் .  ‘‘குறத்தி திறத்திலும் இறைவன்(7.9) குமரவேள் வள்ளிதன் மணவாளன்(7.1) என்பன சேந்தனாரின் திருவிசைப்பாத் தொடர்கள் ‘‘குறவர் மங்கை கேள்வன்’’ என்பது நம்பியாண்டார் நம்பியின் திருநாரையூர் இரட்டை மணிமாலைத் தொடராகும்.

தெய்வயானையின் கணவன்

முருகப் பெருமான் வள்ளி மணாளன் என்னும் கருத்துத் திருமுறைகளில் பல இடங்களில் வருகின்றது.  இந்த அளவுக்குத் தெய்வானையின் கணவன் என்னும் செய்தி குறிப்பிடப் பெறவில்லை.  சேந்தனாரின் திருவிசைப்பாவில் ஓரிடத்தில் மட்டும் ‘‘குவளை மாமலர்க்கண் நங்கை யானைக்கும் குழகன் நல் அழகன்’’ (7.2) எனத் தெய்வயானை பற்றிய குறிப்பு வருகின்றது.

திருப்பெயர்கள்

 இறைவன் ஒரு நாமம் ஒருவரும் இல்லாதவன் எனினும் ஆயிரம்  திருநாமங்களைக் கொண்டவன். முருகப் பெருமானும் திருமுறைப்பாடல்களில் பலபெயர்களால் குறிப்பிடப் பெறுகிறான்.  ‘‘தொகை மிகுநாமத்தவன்  ‘‘ என்பார் சேந்தனார்.  (7.8) அவற்றுள் குமரன் என்னும் பெயர் அதிகமாக இடம்பெறுகிறது.   குமரன் , வேற்குமரன், இளங்குமரன், குமரவேள், செல்வக்குமரவேள் என்றெல்லாம் அமைந்திருக்கக் காண்கிறோம். குமரன் என்பதற்கு இளைஞன் , இளமைத்தன்மை உடையவன் என்பதே பொருளாகும .  இளங்காளை இளஞ்சேய் என்ற பெயர்களையும் சேந்தனார் தம் பாடல்களில் குறிப்பிடுகிறார்.

கந்தன், சேந்தன், அறுமுகன், வேள், வேலோன் , சுப்பிரமண்ணியன், செட்டி, சாமி, சுவாமி, சரவணத்தான் என்னும்  பெயர்கள் முருகன் பெயர்களாகத் திருமுறையில் இடம்பெற்றுள்ளன.

‘‘பன்னிரு நயனத்து அறுமுகத்து அமுது என்பார் சேந்தனார்.  ‘‘அறுமுக இறை, அறுமுகன் , ஆறுகொலாம் அவர்தம் மகனார் முகம்: பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை’’என்பன தேவாரத் தொடர்கள்.  ஐந்தொழிலுக்குரிய முகத்துடன் சிறப்புத் தொழிலுக்குரிய முகம் ஒன்றையும் இப்பெருமானுக்குச் சேர்க்க ஆறுமுகம் தோன்றுகிறது.  இந்நிலையில் அவன் அறுமுகச் சிவனாக முருகனாகத் தோன்றுகிறான்.  மேலும் ஆறு சமயமும் ஆறுமுகமாகத் தோன்றுகின்றன. என்னும் கருத்தைக் கபிலர் பாடல்  கூறுகின்றது.   ‘‘ஆறு சமய முதற்பரமும் தாமேவியவாறு தர்க்கின்றார்’’ என்பது அவர்தம் சிவபெருமான் திருவந்தாதி.

சுவாமி, சுப்பிரமண்ணியன், என்பன சேந்தனார் திருவிசைப்பாவில் மட்டுமே வருகின்றன.  ‘‘மயிலூரும சுப்பிரமண்ணியன்’’ என்று சேந்தனார்தான் முதன்முதலில் சுப்பிரமண்ணியன் என்னும் பெயரைத் தமிழிலக்கியத்தில் கையாளுகின்றார்.   சாமி என்பது சம்பந்தர் தேவாரத்தில் மட்டுமே வருகின்றது.  கடம்பன், கடம்பமர்காளை என்பன அப்பர் பாடல்களில் மட்டுமே வரும் தொடர்களாகும்.  செட்டி என முருகனைச் சுந்தரர் மட்டுமே அழைக்கின்றார்.

முருக நாயானர் என்பவர் முருகன் திருப்பெயர் தாங்கிய நாயன்மார் ஒருவர் ஆவார்.  இவர் திருப்புகலூரில் ஞானசம்பந்தர் காலத்து இறைவனுக்குரிய பூமாலைகள் கட்டிக்கொடுத்து வழிபட்டவர்

உறைவிடம்

திருமுருகாற்றுப்படை முருகனின் அறுபடை வீட்டைப் பற்றிப் பேசும் .  திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் , திருவாவினன்குடி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்சோலை என்பன அறுபடைவீடுகளாக விளங்குகின்றன.   இவை ஆறுபடை வீடுகளல்ல.  முருகனை அடியாரிடம் ஆற்றுப்படுத்தற்கு உரிய முருகன் உறைவிடங்களே என்பாரும் உண்டு.

சேந்தனார் தம் திருவிசைப்பாவில் திருவிடைக்கழி என்;னும் சோணாட்டுத் தலத்தில் உள்ள முருகனைத் தலைவனாகக் கொண்டு ஒரு பதிகம் பாடியுள்ளார்.  திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற முருகனாக அவர் காண்கிறார்.

சம்பந்தர் சேய்ஞலூர், பூம்புகார், முதுகுன்று (விருத்தாசலம்) ஆகிய மூன்றிடங்களையும் முருகத் தலங்களாகக் குறிப்பிடுகிறார்.  ‘‘முருகன்னது பெருமை பகர் முதுகுன்று (1.16.4) சேயடைந்த சேய்ஞலூர் (11.1.1) ‘‘பூம்புகாரில் மூசுவண்டறை முருகன் முப்போதும் செய்  ( 1.5.2-4) என்பன சம்பந்தர் தேவாரத் தொடர்களாகும்.

‘‘நம் செந்தின் மேய  வள்ளி மணாளன்’’ புள்ளிருக்கும் வேளுரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே’’ எனவும் திருநாவுக்கரசர் பாடுவதால் திருச்செந்தூர், வைத்தீஸ்வரன் கோயில் இரண்டும் முருகன் உறைவிடங்கள் என அறியலாம்.


ஊர்தியும் கொடியும்

முருகப் பெருமானின் ஊர்தியாக மயிலே திருமுறைகளில் மிகுதியாகக் குறிக்கப் பெற்றுள்ளது.  மயிலூர்தி முருகவேள் என்பன  மூவர் தேவாரத் தொடர்கள்.  யானையும முருகனுடைய ஊர்தி எனச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். சேந்தனாரின் திருவிசைப்பாப் பாடல் ‘‘கவளமா கரிமேல் கவரி சூழ் குடைக்கீழ்  கனக் குன்றென வரும் கள்வன்(7.2) ‘‘ முருகன் எனக் கூறுவதால் முருகனின் ஊர்தி யானை என்பதும் போதருகின்றது.

முருகப் பெருமானின் கொடி கோழிக்கொடியாகும்.  இதனைத் திருமுறைப்பாடலகளும் தெளிவுறுத்துகின்றன.  ‘‘கோழிக் கொடியோன்’’ என நாவுக்கரசர் தேவாரமும் ‘‘கோழிவெல் கொடியோன்’’ எனச் சேந்தனார் பாடலும் முருகனை அழைக்கின்றன.

வேலினை ஆயுதமாகக் கொண்டவன் என்பது வேலோன் என்னும் பெயரால்  விளங்கும்.  ‘‘வேலுலாந்தடக்கை  வேந்தன்’’ என்பது சேந்தனார் வாக்கு(7.1)


அருஞ்செயல்கள்

சூரனை வதைத்தது.

      சூரனை வதைப்பதற்காகவே முருகப்பெருமான் தோன்றினான் எனப் பார்த்தோம்.  ‘‘மாயச்சூர்  அன்றறுத்த மைந்தன்’’ (198.1) எனப் பாராட்டுகிறார் சம்பந்தர்.  ‘‘சமர சூரபன்மாவைத் தடிந்த வேற்குமரன்’’ (177.10) ‘‘விரிநீர்ப் பரவைச் சூரட்ட வேலன்’’ (101.5) என அப்பர் போற்றுகிறார்.  ‘‘கடற்சூர் தடிந்திட்ட சேந்தர்தாதை’’ (64.6) . ‘‘காதலாற் கடற்சூர் தடிந்திட்ட செட்டி (59.10) கருவரிமாக் கடலுட் காய்ந்தவன்’ (83.5) என்பன சுந்தரர் மொழிகள். சூரன் கடலில் மாமரமாக நின்ற நிலையில் பிளந்த செய்தி இங்குப் பேசப்படுகிறது.  ‘‘பொரும்பலமதுடை அசுரன் தாருகனைப்பொருது பொன்றுவித்த பொருள்’ (16.9) எனச் சுந்தரர் முருகனைப் போற்றும்போது தாருகாசுரனை வென்ற செய்தியையும் நாம் தெரிந்து கொள்ளமுடிகிறது. ‘‘தானமர் பொருது வானவர் சேனை மடியச் சூர்; மார்பினைத் தடிந்தோன்’’ (7. 4) என்பது சேந்தனாரின் திருவிசைப்பாப் பாடற்பகுதி.  ‘‘வேந்துக்க மாக்கடல் சூரன்முன்னாள் படவென்றிகொள் சேந்தன்’’ (சிவபெருமான் மும்மணிக்கோவை 18. 1) என்னும் பதினோராம் திருமுறைத் தொடரும் இதனை வலியுறுத்துகிறது.  ‘‘மாயச்சூர் அன்றறுத்த மைந்தன் ‘‘ எனச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார் ஞானசம்பந்தர்.  அமரர் சேனைக்கு நாயகனாகத் தேவ சேனாதிபதியாகத் தோன்றிய திறத்தைச் சுந்தரர் செந்தமிழ் சொல்கிறது.


2.     மலையைப் பிளந்த மாண்பு

     முருகப் பெருமான் கிரவுஞ்ச மலையைப் பிளந்த செய்தியைக் குன்றம் எறிந்த குமரவேள் எனக்கூறும் இறையனார் களவியல் உரை என்னும் பழந்ததமிழ் உரை நூல்.  இதனைப் பட்டினத்தடிகள் தம் திருவிடைமருதூர் மும்மணிக்கோவை என்னும் நூலில் ‘‘முலை துளைபடுத்த கொலைகெழு கூர்வேல் அமரர்த்தாங்கும் குமரன்’’ (16. 22-23) எனக் குறிப்பிடுகிறார்.  வேலின் வெற்றி இவ்வாறு பேசப்படுகிறது.  ‘‘கிரிதனைக் கண்ட ஆண்டகை’’ (7.6) என்பார் சேந்தனார்.

3.     உலகை வலம் வந்தது

முருகப் பெருமான் தன் தந்தையார் விருப்பதிற்கேற்ப உலகை வலம் வந்திட மூத்த பிள்ளையாராக இருக்கின்ற விநாயப் பெருமானே தன் தந்தையை வலம் வந்து கனியைப் பெற்ற கதையை அனைவரும் அறிவர்.  இக்கதையைப் பற்றிய குறிப்பு முதன் முதலாகப் பதினோராம் திருமுறையிலுள்ள மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை என்னும் நூலில் அதிராவடிகளால் சொல்லப்படுகிறது.’’ சுடர்ப்பிழம்பு தழைத்த அழல் தனி நெடுவேல் சேய் மூவுலகும் வலம் வர’’ (13.1,2) என்பது அப்பாடல்.  நம்பியாண்டார் நம்பியின் பாடலிலும் இதற்குரிய சான்று உள்ளது.


பிணிநீக்கும் பெருமான்

முருகப்பெருமானை வழிபடுவதால் பிணயாக்கை நீங்கிப்பேரின்பம் பெறலாம் என்று கூறுகிறார் திருநாவுக்கரசர் ‘‘கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினால், பணிகள்தாம் செய வல்லவர் யாவர்தம் பிணி செய் யாக்கையை நீக்குவர்-பேயரே’’ (210.24) என்னும் தேவாரத்  தொடர் பிணிசெய் யாக்கை நீக்கிப் பேரின்பம் தரும் முருகனின் பேரருளை புலப்படுத்தும் .  பிணிசெய் யாக்கை என்பதற்கு நோயுள்ள உடலை நீக்கி நோயற்ற வாழ்வை நல்குவான் என்பது ஒரு பொருள் .  பிணித்தலாகிய ஆணவத்தாற்  கட்டுண்ட பாசநிலையை நீக்கி வீடுபேறாகிய பேரின்பத்தை அளிப்பான் என்பது இன்னொரு பொருளாகும்.

பிள்ளைவரம் தரும் பெருவள்ளல்

அன்பின் திருவுருவாக விளங்கிய அடியார் கண்ணப்பர்.  ‘‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை’’ என்று திருவாசகம் கண்ணப்பரின் அன்பின் திறத்தைக் குறிப்பிடுகிறது.  இத்தகைய கண்ணப்பர் இம் மண்ணுலகில் திருவவதாரம் செய்வதற்குக் காரணமாக இருந்தது.  முருகப் பெருமான் திருவருள் என்பது சேக்கிழார் கருத்தாகும்.  கண்ணப்பரின் தந்தையார் வேடர் தலைவன் நாகனுக்கும், தாயார் தத்தை என்பாருக்கும் நெடுநாள் மகப்பேறு வாய்க்கவில்லை .  இவர்களுக்குப் புதல்வர்ப்பேறு வாய்ப்பது இனி மிக அரிது என்று எல்லாரும் கூறிவிட்டனர்.  இந்நிலையில் அவர்கள்  வேறுவழி அறியாது முருகவேள் முற்றம் சென்று நாளும் வழிபட்டுப் பராய்க்கடன்(வேண்டுதல்) நெறியில் நின்றனர்.  சேவல்கள், மயில்கள் முதலியனவற்றை அவன் கோயிலில் விட்டுக் குன்றக்குரவை ஆடல் செய்து பெருவிழா எடுக்கின்றனர். அதன் பின்னர் தத்தை கருவுற்றாள்.  கண்ணப்பர் தோன்றினார்.  இதனைப் பெரிய புராணத்தில் சேக்கிழார் ‘‘எயிலுடைப் புராங்கள் செற்ற எந்தையார் மைந்தரான மயிலுடைக் கொற்ற ஊர்தி வரையுரங் கிழித்த திண்மை அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே’’ தத்தைபால் கருப்பம் நீடியதாகக் கூறுகிறார். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் மைந்தன், மயிலை ஊர்தியாகக் கொண்டவன், மலையைப் பிளந்த வெற்றிவேல் கொண்ட தலைவன்-முருகன் -பிள்ளைவரம் தரும் பெருவள்ளலாக இருக்கும்  இயல்பினைச் சேக்கிழார் வாக்கு செப்புகிறது.

சிறுத்தொண்டர் கண்ட சிறப்பு

    அறுபத்து மூன்று நாயன்மார்களில்  சிறுத்தொண்டர் சிவபெருமானுக்குத் தன் ஊறிலாத தனிப்புதல்வன் தன்னை அரிந்து அங்கு அமுதாக ஊட்டியவர்.  வாளால் மகவறிந்து ஊட்டவல்லேன் அல்லேன் ‘‘ எனப் பட்டினத்தடிகள் இவரது பண்பினைப் பாராட்டுகிறார்.  இவர் தொண்டின் திறங்கண்ட சிவபெருமான் உமையம்மையாரோடும் சரவணத்துத் தனயராகிய முருகப் பெருமானுடனும் காட்சி கொடுத்ததாகச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.  இவர்க்கு மட்டும் முருகப்பெருமானுடனும் காட்சி கொடுக்கக் காரணம் என்ன? சிறுத்தொண்டரின் தொண்டு-பிள்ளைக் கறி சமைத்த பெருஞ்செயல்-அவர் ஒருவரால் மட்டும் நிறைவேறியதன்று.  அவர், அவர்மனைவி, சீராளனாகிய அவர் மகன் ஆகிய மூவர்க்கும் காட்சி கொடுக்கும் முகத்தான் மூவரும் கூடிய ஒருவராக அம்மையுடனும் முருகப் பெருமானுடனும்  கூடிய நிலையில் சிவனார் காட்சி கொடுத்தருளினார்.

  சோமாஸ்கந்த மூர்த்தம் சத் சித் ஆனந்தம் ஆகிய மூன்றையும் காட்டவல்லது.  சத் என்பது இறைவன்.  சித் என்பது சக்தி, உமை: ஆனந்தம் என்பது முருகன்.  எனவே பேரின்பவாழ்வாக முருகப் பெருமான் இருக்கும் பெற்றியை இஃது எடுத்தியம்புகிறது.

நாவுக்கரசர் காட்டும் நல்வழி

திருநாவுக்கரசர் திருத்தொண்டின் நெறிவாழத்தோன்றிய ஞானத் தவமுனிவர்  எண்பதாண்டுகள் வாழ்ந்து இறுதி வரை துறவியாகவே இருந்து சைவப்பணியாற்றிய பெருந்தகையார்.  இவர் இறைவனைத் திருவாய்மூரில் ஞானசம்பந்தப் பெருமான் காட்டக் கண்டகாட்சியில் ‘‘விநாயகனும் மெல்லியலும் தோன்றக் கண்டேன்’’  என்று விநாயகரைக் கண்ட காட்சியைக் குறிப்பிடுகிறார்.  இவ்வாறே திருப்பூவணத்தில் இறைவனைக் கண்ட காட்சியை வருணிக்கும்போது’’பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும்’’ என்று முருகப்பெருமான் ஆறுமுகமும் பன்னிரண்டு கையுமாகக் கோலம் காட்டியதைக் குறிப்பிடுகிறார்.



     தமிழில் தன்மைப் பன்மையாக யாம், நாம் என்னும் இருசொற்கள் உள்ளன.  யாம் என்பது முன்னின்றாரை உள்ளடக்காதநிலையிலும்:, நாம் என்பது முன்னின்றாரை உள்ளடக்கியநிலையிலும் நாம் பேசும்போது பயன்படுத்துகிறோம் நம்நாடு சிங்கப்பூர், நம்வீடு இது என்று சொல்லும்போது நாம் உணரும் உரிமைத் தன்மையை எளிதில் அறிய முடிகிறதல்லவா? அதுபோல நாவுக்கரசர் முருகப் பெருமானைச் சைவர்கள் அனைவருக்கும் உரிமையானவனாக்கி ‘‘ நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்’’ எனவும் நம் செந்தின் மேய வள்ளி மணளான்’’ என்னும் நாவுக்கரசரின் தொடர்கள் இந்த உரிமையைச் சுட்டிக்காட்டுகின்றன.

  நாவுக்கரசர் அனைவருக்கும் வாழ்க்கையில் குறிக்கோள் வேண்டும்என வலியுறுத்தியவர்.  ‘‘என்கடன் பணிசெய்து கிடப்பதே தன் கடன் அடியேனையும் தாங்குதல்’’ என்பது அவர் வாழ்க்கையிற் கொண்ட குறிக்கோளாகும்.   இந்தக் குறிக்கோளை  எடுத்துக்கூறும் பாடலில் முருகன் இடம்பெறுகிறான்.  ‘‘நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்’’ என்றுதான் இந்தப்பாடல் தொடங்குகிறது. இங்கே கடம்பன் என்பது கடம்பமரத்தின் கீழ் அமரும் முருகனைக் குறிப்பது.  இவனைப் பெற்ற உமையம்மையாரைப் பாகத்தில் கொண்ட சிவபெருமான் என்னும் கருத்துடைய வரி இஃதாகும்

‘‘கண்டறியாதன கண்டேன் அவர் திருப்பாதம் கண்டேன்’’ என்று கூறும் நாவுக்கரசர் இறைவனை ஐயாற்றில் கண்ணாற் கண்டார் .  கண்டதுடன் நாமும் காணத்தம் பாடல்களால் வழிகாட்டினார்.  அவ்வாறு வழிகாட்டிய பாடல் ஒன்று வருமாறு

உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளியாக

மடம்படும் உணர் நெய்யட்டி உயிரெனும்  திரிமயக்கி

இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்

கடம்பர் காளைதாதை அழவடி காணலாமே

உடம்பே வீடு: உள்ளமே அகல்: உணர்வு நெய்: உயிர்திரி: ஞானம் சுடர் இவ்வாறு விளக்கேற்றி இறைவனை ஒன்றி இருந்து நோக்கினால்   இறைவன் திருவடியைக் காணலாம் என்று இப்பாட:டு எடுத்தியம்புகிறது. இங்கே இறுதிவரியில் கடம்பர் காளை தாiதை கழலடி என்பதற்குக் கடம்ப மரத்தின் கீழ் வீற்றிருக்கும் முருகப்பெருமானின் தந்தையாகிய சிவபெருமானின் திருவடி காணலாம் எனப்பொருள் கொள்கிறோம்  திருவருள் பெற வழிகாட்டும் திருநாவுக்கரசரின் பாடலில ; முருகப்பெருமான் இடம்  பெற்றுள்ள சிறப்பை நாம் கண்ட போற்றுதல் வேண்டும்.

மேலும் இந்த வரிக்குக் கடம்பமர் காளையாகிய முருகன் கழலடி கணாலாம் என்றும், காளை தாதையாகிய சிவனாரின் கழலடி காணலாம் என்னும் பொருள் கூறுவாரும்உளர்.  அந்நிலையில் முருகப் பெருமான் திருவடி காண்பதற்கும் மேற்கண்ட வழியே உகந்தது என்றும் கொள்ளவேண்டும்.  முருகனும் சிவனும் ஒருவர் தாமே என்னும் கருத்தும் நாம் அறிந்துகொள்ளவேண்டும்.  ‘‘ஐயன்காண், குமரன்காண், ஆதிரையான்காண்’’ என்னும் அப்பரின் திருத்தாண்டகக் கருத்தும் குமரன் என்பதற்கு முருகன் எனப் பொருள்கொள்ளும் நிலையில் இதனை வலியுறுத்துகிறது.



முடிவுரை

சைவசமயச் சான்றோர்கள் பாடிய தெய்வத் திருமுறை வாயிலாக முருகன் என்னும் சொல்லும் பொருளும் அறிந்து, குறிஞ்சிக் கடவுளின் தோற்றத்தையும் புரிந்துகொண்டு, அவன் அரனார் மகனாக , மலைமகள் மதலையாக , கணபதியின் இளங்கிளையாக , மால்மருகனாக , தேவர் தலைவனாக , வள்ளிமணளனாக , தெய்வயானையின் கணவனாகத் திகழும் தன்மையைத் தெரிந்துகொண்டு, முருகனின் திருப்பெயர்களையும் உறைவிடங்களையும் கேட்டு, அவன் ஊர்தியையும் கொடியையும் தரிசித்துப்பின் அவன் அருஞ் செயலாற்றலைப் போற்றி பரவி, அவனைப் பிணிநீக்கும்  பெருமானாக , பிள்ளை வரம் தரும் வள்ளலாகக் கருதி நாடிச் சிறுத்தொண்டர் கண்டது போல நாவுக்கரசர் காட்டிய வழியில் நின்று நாமும் கண்டு, வழிபட்டு அவன் பேரருளைப் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வோமாக.

26       Thinnappan, SP. Thirumuraikalil Murugan (Murugan in Tamil Devotional songs of Saiva Nayanmars In: 35th Anniversary Souvenir Magazine, Thiruvarul Tavaneri Mandram, Kualalumpur (Malaysia) (1997) pp 25-31 (Tamil)








முருகன் -சொல்லும் பொருளும் வழிபாடும்

உலகத்தோடும் உயிர்களோடும் ஒன்றாகவும் வேறாகவும் உடனாகவும்  இருந்து இயக்குகின்ற முழு முதற்பொருளைப் பரம்பொருளைக் குறிக்கப் பைந்தமிழில் மூன்று  சொற்கள் உள்ளன.   இறைவன், கடவுள், இயவுள் என்பனவே அந்த மூன்று சொற்கள் ஆகும்.  இந்த மூன்று சொற்களும் பொருளாழம் உடைய சொற்கள்.  இவை முழுமுதற் பொருளின் தத்துவத்தை உணர்த்தும் ஆற்றலுடன் விளங்குகின்றன.  இறைவன் என்னும் சொல்லுக்கு எல்லாப் பொருள்களிலும் தங்கியிருப்பவன்-நீக்கமற நிறைந்திருப்பவன் என்பது பொருளாகும். இது ஒன்றாக இருக்கும் நிலையை உணர்த்துகிறது. கடவுள் என்னும சொல் கடந்து நிற்பவன் என்னும் சொல் வேறாக இருக்கும் நிலையை வெளிப்படுத்துகிறது இயவுள் என்பதோ.உள்ளத்திலிருந்து இயக்குபவன் என்னும் பொருளுடையது.  இது ஒன்றாக இருக்கும் நிலையை உரைக்கிறது.

இறைவனுக்கு ஒரு நாமம் (பெயர்) ஓர் உருவம் என ஒன்றில்லை .  ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தௌ;ளெணம் கொட்டாமோ’’ என்பது திருவாசகம்.  இறைவன் ஊரிலான் : பேரிலான்: குணமிலான்: குறியிலான்: வேண்டுதல் வேண்டாமை இல்லாதான்.’’  ஏதவன் ஊர் ஏதவன் பேர் யார் உற்றார் யார் அயலார்’’ எனக் கேட்கிறார் மணிவாசகர்.  இத்தகைய இறைவனுக்குரிய பெயர்களில் முருகன் என்பது ஒன்று.

முருகன் என்னும்; சொல் முருகு என்னும் சொல்லடிப்படையாகத் தோன்றியது.  முருகு உடையவன் முருகன்,  முருகு என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் அமைப்பினைப் பார்ப்போம் .  முருகு என்னும் சொல் மூன்று எழுத்துக்களால் உருவாகியிருக்கிறது.  இயல், இசை நாடகம் என்னும் முத்தமிழைப்போல இந்தச் சொல்லும் மூன்று எழுத்துகளால் அமைந்துள்ளது.   முருகு என்னும் மூன்று எழுத்துகளும் உ என்னும் உயிரொலியுடன் கூடிய ஒன்றாகவே உள்ளன .  உயிரொலி என்பது -உகர ஒலி இந்த மூன்று எழுத்துக்களுக்கும் அடிநாதமாக அமைந்துள்ளது. முதல் எழுத்து மு அதாவது ம் கூட்டல் உ மெல்லின மெய்யெழுத்துடன் உகரம் கூடி நிற்கிறது. இரண்டாவது எழுத்து ரு அதாவது ர் கூட்டல் உ இடையின மெய்யெழுத்துடன் உகர உயிர் ஏறி நிற்கின்றது.  இறுதியிலுள்ள எழுத்து கு. அதாவது க் கூட்டல் உ.  வல்லின மெய்யெழுத்துடன் உகர உயிர் ஒன்றாகியிருக்கிறது.  தமிழிலுள்ள மெய்யெழுத்துக்ள் 18 யும்  வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று வகைப்படுத்துவர். இந்;த மூன்று வகை எழுத்துகளையும் முருகு என்னும் சொல் கொண்டு விளங்குகிறது.   உயிர் எழுத்து 12 .  இதன் சார்பாக இந்தச் சொல்லில் உ என்பது உள்ளது.  தமிழுக்குரிய முதல் எழுத்து உயிரும் மெய்யும் தான் .   இவற்றைக்கொண்டு முருகு என்னும் சொல்லின் எழுத்து அமைப்பு இலங்குகிறது.  முத்தமிழுக்கும் முதலாக இருப்பவன் முருகன் என்பதை இந்தச் சொல்லின் எழுத்தமைப்பு எடுத்து இயம்புகிறது அல்லவா?

இனி இந்தச் சொல்லின் பொருளைக் காண்போம்.  முருகு என்னும் சொல்லுக்குத் தேன், மணம், இளமை, அழகு , இறைமைத் தன்மை எனப் பல பொருள் உண்டு.  தேன் என்னும் பொருளை வைத்து நோக்கும் போது இறைவன் தேனாக இனிக்கும் இயல்புடையவன் என்பதை நாம் உணர முடியும்.  தேன் இனிக்கும் சுவையுடையது.  இறைவனும் நினைக்குந்தொறும் காணுந்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்து எலும்பு உள்நெக ஆனந்தத் தேன் ஆக இருப்பவன் எனத் திருவாசகம் கூறும்.  இறைவனைத் தேனாகவே கண்டு சுவைக்கிறார்கள் நம் நாயன்மார்கள்.  தேன் மலத்தைக்கட்டும், மிகுதியாக உண்டால் மலத்தைக் கழிவிக்கும்.  அதுபோல இறைவன் உயிர்களின் மலத்தை ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை அகற்றும் இயல்பினன்.  தேன் உடலுக்கு உறுதி கூட்டும்.  உயிர்கள் உறுதிப்பொருள்களை அறம் பொருள் , இன்பம் , வீடு ஆகியவற்றை அடைய இறைவன் உதவுவான்.

முருகு என்னும் சொல்லுக்கு மணம் என்பது பொருள்.   இதனை வைத்து நோக்கும் போது இறைவன் மணம் மாறாத மணமுடையவனாக இருக்கிறான்.  கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என அவன் மணம் பற்றிக் கேட்கிறாள் ஆண்டாள்.  அவன் மணம் என்றும் மாறா நறுமணம்: இயற்கை அறிவு மணம்.

முருகு என்னும் சொல்லுக்கு இளமை என்னும் பொருளும் உண்டு.  இறைவனை ‘‘என்றும் இளையாய்’’ என்று அழைக்கிறார் நக்கீரர் .  இறைவனின் இளமைக் கோலம் என்றும் இளமையாகவே நின்று நிலவக்கூடியது.  எனவே தான் முருகனை பால சுப்ரமணியனாகக் காண்கிறோம்.

முருகு என்னும் சொல்லுக்கு அழகு என்னும் பொருள் உண்டு.  அழகு என்னும் அடிப்படையில் ஆண்டவனைக் காணும்போது அழகின் சிகரமாக அவன் காட்சியளிக்கின்றான்.  நம் அழகு அழியும் அழகு.  ஆண்டவனின் அழகோ அழியா அழகு. முருகனின் அழகை அவன் பகைவனான குரபன்மன் போர்க் களத்தில் கண்டு பாராட்டுவதைக் கேளுங்கள். அழகின் தெய்வமாகக் கருதப்படுபவன் மன்மதன் ,  ஆயிரம் கோடி மன்மதன் அழகு அனைத்தும் திரண்டு ஒன்றாகிச் சேர்ந்தாலும் முருகப்பெருமானின் முழுவடிக்கும் உவமை கூறமுடியுமா என்று அவன் பகைவன் சூரபத்மன் கேட்கிறான்.  இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கோவலனை அறிமுகப்படுத்தும்போது ‘‘‘மதி முக மடவார் தம் ஆயத்து கண்டேத்தும் செவ்வேள்’’ எனக் கூறிச் செல்கிறார் .  முருகனைப்போன்று பேரழகு உடையவன் கோவலன் என்பது இதனுடைய கருத்து.  சேக்கிழார் சுந்தரரைக் குறிப்பிடும்போது ‘‘முன்னே வந்து எதிர்தோன்றும் முருகனோ பெருகொளியால்’’ எனக் கூறுகிறார்.  சுந்தரர் அழகு முருகனின் ஒளிமிக்க அழகு போன்று தோன்றியதாம் . எனவே அழகின் எல்லை முருகன்

இறுதியாக இறைமைத் தன்மை என்னும் பொருளும் முருகன் என்னும் சொல்லுக்கு உண்டு.  எங்கும் நிறைந்திருக்கும் இயல்பும் , அனைத்து உயிர்களையும் கடந்து திற்கும் ஆற்றலும், எல்லாவற்றையும் இயக்கும் ஏற்றமும் இறைமைப் பண்புகளாகும்.  இப்பண்புடைய இயல்பும் இச்சொல்லுக்குப் பொருளாகிறது.

முருகன் என்னும் சொல்லின் அமைப்பு , பொருளாற்றல் பற்றிபார்த்தோம்.  இச்சொல்லை ஓதுவது நமக்குப் பேரின்பத்தை நல்குவதாகும். இதனால் விளையும் பயனை நக்கீரர்’’ அஞ்சு முகம் தோன்றின் ஆறு முகம் தோன்றும்: வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும்: நெஞ்சில் ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்.  ‘‘ எனக்குறிப்பிடுகிறார்.  முருகா என்று சொல்வது வேறு ஓதுவது வேறு.  ஓதுவது என்பது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க உரைப்பதாகும்.  நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து முருகா என்று உருகுவதுதான் உண்மையான வழிபாடாகும். இந்த வழிபாட்டுக்குரிய இடங்களாகக் கோயில்கள் இலங்குகின்றன.  கோயில்களிலிருக்கும் இறை உருவங்கள் விளங்குகின்றன.  இந்த இறை  உருவங்களில் இறை அருளை எழுந்தருளச் செய்வதுதான் குடமுழுக்கு விழாஅல்லது புனித நன்னீராட்டுப் பெருவிழா என அழைக்கப்படுகிறது.  புண்ணிய நதிகள், தீர்த்தங்களிலுள்ள நீரைக் குடங்களில் கொண்டு வந்து வைத்து ஆகம முறைப்படி யாக பூசை செய்து அவற்றில் இறை அருளை உருவேற்றி வேத மந்திரங்கள் திருமுறைகள் ஓதி வழிபாடு செய்து இறை உருவங்களுக்கு ஒரு நன்னாளில் அபிடேகம் செய்து இறை அருளை எழுந்தருளச்  செய்வதுதான் குடமுழுக்கு விழாவின் நோக்கமாகும். இக்குடமுழுக்கு விழா புதிய  கோயில்களை எழுப்பும்போதும் பழைய கோயில்களுக்கு பழுதுபார்த்துத் திருப்பணி செய்யும் போதும் செய்யப்படுகிறது.

பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வது மரபாகும்.   இவ்வாறு நம் கோயில்களில் எழுந்தருளியுள்ள இறை அருள் திருமேனிகளில் நம் மனத்தை ஒன்றச் செய்து இறைவன் திருப்பெயரை ஓதி வழிப்பட்ட நிலையில் உள்ளக் கோயிலில் இறைவன் குடிகொண்டிருப்பதை உணரமுடியும்.  அந்நிலையில் உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் வள்ளல் பிரானாருக்கு வாய் கோபுரவாசல் தௌ;ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கேஎன்னும் திருமூலர் கருத்தை நடைமுறையில் கண்டு பேரின்பம் பெறமுடியும்.

எனவே முருகன் என்னும் சொல்லின் அமைப்பையும் பொருளையும் உணர்ந்து ஓதி வழிபட்டு அவன் திருவருளைப் பெற்றுப்பேரின்பப் பெருவாழ்வு அடைவோமாக.

தமிழ்முரசு 23-11-1983 அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் திருக்குட நன்னீராட்ட பெரு விழா சிறப்புக்கட்டுரை



தமிழ்க்கடவுள் முருகன்

தமிழ் நூல்களில் காலத்தால் பழைய நூலாகிய தொல்காப்பியம் முருகனைச் சேயோன்- செம்மை நிறைந்தவன் என அழைக்கிறது.  மலைப் பகுதியாகிய குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாக அது குறிப்பிடுகின்றது.

சங்க இலக்கியமாகிய பத்துப்பாட்டில் முதல் பாட்டு திருமுருகாற்றுப்படை இதனை இயற்றியவர் நக்கீரர்.  இதுதான் முருகனைப் பற்றிய முதல் தமிழ் இலக்கிய நூல் முருகன் அருளைப்பெற்ற அடியார் ஒருவர் அவன் அருளைப்பெற விரும்பும் இன்னொரு அடியார்க்கு வழிகாட்டும் முறையில் இந்நூல் அமைந்துள்ளது.  முருகு என்னும் சொல்லுக்கு மாறாத மணம், அழியாத அழகு, என்றும் இருக்கும் இளமை, தெய்வத் தன்மை என்னும் நான்கு பொருளை இந்நூல் கூறுகின்றது.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திரு ஆவினங்குடி, திருவேரகம்(சுவாமி மலை) , குன்றுதொராடல் முதலிய இடங்களில் முருகன் இருப்பதாக இந்நூல் பேசுகிறது இந்நூல் தவிர  அகநானுறு, புறநானுறு , நற்றிணை பரிபாடல் முதலிய சங்க இலக்கியங்களிலும் முருகனைப் பற்றிய செய்திகள் உள்ளன.

நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றல் பெற்றவன் முருகன், வள்ளியை மணமுடித்த முருகன், தெய்வயானையைத் திருமணம் கொண்டவன் என்றும் அவை குறிப்பிடுகின்றன.  சூரனை வென்ற செய்தியும் இந்நூல் மூலம் அறிய முடிகிறது.  சிலப்பதிகாரத்திலும் முருகனைப் பற்றிய செய்திகள் உள்ளன  இடைக்கால இலக்கியங்களான சில திருமுறைகளிலும் முருகனைப்பற்றிய தகவல்கள் உள்ளன.   பிற்காலத்தில் அருணகிரிநாதர் முருகனைப்பற்றிப் பல்லாயிரக் கணக்கான பாடல்களைப் பாடி உள்ளார். 

குமரகுருபரர், வள்ளலாராகிய இராமலிங்க அடிகளார், பாரதியார் முதலிய பல பாவலர்கள் முருகனைப்பாடி உள்ளனர். அன்று முதல் இன்று வரை தமிழ்ப்புலவர்கள் பாடும் தலைமைத் தெய்வமாக முருகன் இருக்கின்றான்.

முருகன் வடிவமே தமிழ் மொழி அமைப்புடன் தொடர்புடையது.  முருகப்பெருமானுக்குத் தோள்கள் பன்னிரண்டு.  தமிழில் உள்ள உயிர் எழுத்துகள் பன்னிரண்டு.முருகப்பெருமான் முகங்கள் ஆறு. தமிழுள்ள மெய் எழுத்துகள் ஆறு, ஆறாகப்பகுக்கப்பட்டுள்ளன.

தமிழிலுள்ள ஆயுத எழுத்து ஒன்று.  அதுபோல முருகனின் ஆய்தமும் ஒன்று.  அதுதான் அவன் கைவேல். அந்த வேல் அறிவின் அடையாளம் என்று தமிழர்கள் கண்டனர்.  ஆழம், அகலம், நுட்பம், என்னும் மூன்று பண்புகளும் வேலுக்கு உண்டு அறிவுக்கும் உண்டு.

‘‘முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன் முருகன்’’ என்றும் ‘‘ செந்தில்வாழ் செந்தமிழ்ப் பெரியோன்’’ என்றும் ‘‘தண்டமிழ் மிகு நேய முருகா’’ என்றும் அருணகிரிநாதர் முருகனின் தமிழ் வேட்கையைக் கூறி மகிழ்கிறார்.


‘‘குமரகுருபரர் தமது முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழில் ‘‘சங்கத் தமிழின் தலைமைப் புலவன்’’ என்று முருகனை அழைக்கிறார்.   சிவபெருமானும் முருகனும் சங்கம் இருந்து தமிழினை ஆராய்ந்ததாக இறையனார் களவியல் உரை கூறும் .  சிவபெருமானுக்கு ஓம் எனும் மந்திரப்பொருளை முருகன் தமிழிலேயே உபதேசித்ததாகக் குமரகுருபரர் கூறுகிறார் .

தமிழ் நூல்களில் முருகனைப் பற்றிய நூல்களே மிகுதி.  தமிழிலக்கணம் கூறும் கற்பு நெறி, களவு நெறி என்ற இருவகை நெறிகளைத் தெய்வயானை, வள்ளி ஆகிய இரு பெண்களை மணந்ததன் மூலம் உலகுக்கு முருகன் உணர்த்தினான் என்பர்.

முருகன் என்பது அறிவு -ஞானத்தைக் குறிக்கும் வள்ளி என்பது இச்சை-விருப்பத்தைக் குறிக்கும் , தெய்வானை என்பது கிரியை -செயலைக்  குறிக்கும்.ஒரு காரியத்தைச் செய்ய அது பற்றிய விருப்பம் முதலில் வேண்டும். பிறகு அதனைப் பற்றிய அறிவு தேவை.  பிறகு செயலில் இறங்கி நிறைவேற்றும் ஆற்றல் வேண்டும்.இதனை விளக்கும் தத்துவமே முருகன் -வள்ளி-தெய்வானை என்பதை அறி;ந்து முருகனை  வணங்கி நிற்போம்.

*(சிங்கப்பூர் இந்து 14:1 ஜனவரி மார்ச்சு 2002 பக் 6-7)

.....தொடரும்.....
Dr S.P. Thinnappan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக