வெள்ளி, 2 மே, 2014

சமயம் - சைவம் - 8



1. திருமந்திரம்

துறவு


‘‘துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக் கொண்டற்று’’


என்று திருவள்ளுவர் துறவிகளின் சிறப்பைப் பாராட்டுகிறார்.  உலகத்தில் இறந்தவர்களை எண்ணிக் கணக்கிட முடியுமா? முடியாதன்றோ! அதுபோலத் துறவிகளின் அளவில்லாத ஆற்றலைப் பேசமுடியாது என்று அணுவைத் துளைத்து ஏழ்கடலைக் குறுகத் தறித்த குறளில் அடக்கிய மேதை கூறுகிறார்.  காரணம் என்ன? திருமூலர் தம் திருமந்திரத்தின் ஆறாம் தந்திரத்தில் நான்காவது பகுதியாக வரும் துறவுப் பகுதியில் பத்து செய்யுள்களால் விடைதருகின்றார்.


துறவு என்பது என்ன? பற்றுகளிலிருந்து விடுபடுதல் என்று பனுவங்கள் பகரும்.  ஆனால் திருமூலரோ அன்பினால் இறைவனைப் பற்றி, இயல்பான முறையில் பாசங்களிலிருந்து - பற்றுகளிலிருந்து நீங்குதல் தான் துறவு என்கிறார்.  அதாவது பாசநீக்கம் ஒரு நெறி. குறி இறைவனை அடைவது தான்.  இந்தக் குறியை அடையவும் பாசநீக்கமாகிய நெறியில் செல்லவும் அவன் அருள்தான் துணை நிற்கும்.  அவனருளே கண்ணாகக் கொண்டு காணின் அல்லாது அவனைக் காணமுடியாது.  பற்று விடுவதற்கு நாம் ஒருவனை முன்மாதிரியாகக் கொண்டு அவன் வழிகாட்டிட நாம் செல்ல வேண்டும்.  அவனோ பற்றுள்ளவனாக இருந்தால் பயனில்லை. அவனும் பற்றற்ற துறவியாக இருக்கவேண்டும் இல்லாவிடில் குருடன் குருடனுக்கு வழிகாட்டியாக அமையும் குருட்டாட்டமாகத் துறவு அமையும்



.  எனவே பற்றற்றானாகிய பரம்பொருளைப் பற்றுகளினின்று நீங்கிப் பிறவாமையாகிய பேரின்பப்பேற்றை முத்தியைப் பெறவேண்டும் .  எனவே இறைவன் துறவு நிலையில் நிற்பதையும் இதற்கு மாறாக ஆன்மாக்கள் இருப்பதையும் கூறித் துறவு நிலை மேற்கொண்டு  ஆன்மாக்கள் பேரின்பத்தை அடைவது எப்படி என்பதையும் திருமூலர் இப்பகுதியில் விளக்குகிறார்.


இறைஇயல்பு (துறவன்)

பிறவான் இறவான் பெம்மான் முருகன் என்னும் அருணகிரியார் கூற்றுப்படி இறைவன் பிறவா யாக்கைப் பெரியோன் ஆவான்.  ‘‘துறக்கும் தவம் கொண்ட சோதிப்பிரான்’’ இயல்பாகவே இன்பதுன்பங்களினின்று நீங்கி ஆதியும் அந்தமுமில்லாத ஒளிப்பிழம்பாக இருப்பவன்.  அமரர் (தேவர்களின்) பிரான் (தலைவன்)(1614)சுடரொளி (1815) அறவாழி. பிறப்பிலி, உறவு, பகை, யாரும் இல்லாதவன், சுடுகாட்டைத் தங்குமிடமாகக் கொண்டவன்,  பிச்சை எடுத்து உண்பவன் துறவன்(1616)‘‘ கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை, தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன் காணேடி‘‘ ‘‘ஏதவன் பேர் யார் உற்றார் யாரயலார்’’ என்னும் திருவாசக அடிகளை ஒப்புநோக்குக. ஆடல்வல்லான்.  விடையூர்தி  உடையவன். அண்ணல்(1818) வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். கூற்றுவன் நாள் துறந்தார்க்கு (மார்க்கண்டேயர் போன்றோர்க்கு) நண்பன், ஆசையற்றவன் .  துறந்தார்க்கு வழிமுதல்(வழிகாட்டி). ஆதிப்பிரான். இவன் என்று சுட்டியறியும் எளிமை உடையவன் அல்ல. (1622) . இவ்வாறு துறவிகளுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக விளங்கும் இறைவனைக் காட்டுகிறார் திருமூலர்.



ஆன்மா இயல்பு

   ஆன்மாவோ பிறந்தும் இறந்தும் உழலும் பேதைமை கொண்டது.  அறியாமை வயப்பட்டது.  அதனால் தக்கன எவை, தகாதன எவை என்று அறியும் இயல்பற்றது. பாசங்களுக்கு ஆட்பட்டது. பந்தங்களால் பிணைக்கப்பட்டது.  ஐம்பொறிகளின் வழிநின்று காமம், வெகுளி , மயக்கம் ஆகியவற்றால் அல்லல் உறுவது.  வினைவழி செல்வது.  ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றால் கட்டுண்டிருந்தாலும் சிவனருள் இருக்குமானால் பேரின்பம் பெறும் தகுதியும் கொண்டது.



துறவன் துணையாய் நிற்றல்

நினைப்பவர் மனம் கோயிலாக கொண்டவன் இறைவன்.  எனவே அவனை மறவாத நெஞ்சினராய் நாடோறும் ஏத்தித் துதிப்பார்களாகிய  துறவிகளுக்கு இறைவன் தன் இருப்பிடத்தைக் காட்டுவான்.  அவனைக் காண அவன் அருள் வேண்டும். இத்தகைய அருள்சேர்க்கையைச் சத்திநிபாதம் என்பர் சான்றோர். அப்போது சுடரொளியாகத் துறவிகளுக்குத் தோன்றிக் காட்சி அளிப்பான்.  ‘‘விறகில் தீயினன் பாலிற்படுநெய் போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான், உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே’’ என்னும் அப்பர் வாக்கும், ஞானசம்பந்தப் பெருமான் தம் திருமண நாளன்று சோதியிற் கலந்த வரலாறும் இதற்குச் சான்றாகும். துறந்தவர் தம்மைப் பிறவி அறுத்திடும் பித்தன் இறைவன்.  ‘‘பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீத்தார் இறைவனடி சேராதார்’’ என்பது குறளல்லவா? எனவே பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது தான் அறிவாகும்.  இப்பேதைமையிலிருந்து ஆன்மாக்கள் நீங்குவதற்காகவே  இறைவன் அவை கடைபிடித்து ஒழுக வேண்டிய வழி முறைகளையும் (நெறிகளையும்) படைத்துள்ளான்.  கூடவே ஓதுக்கித் தள்ளவேண்டிய நெருஞ்சில் முள் போன்றவற்றையும் படைத்துள்ளான். வழி தவறி நடந்தால் நெருஞ்சில் முள் குத்தும். இறைவன் வகுத்த வழியில் சென்றால் நெருஞ்சி முள்  துன்பம் இராது. எனவே இறைவன் வகுத்த வழியில் செல்லுதலே ஆன்மாக்கள் உய்யும் நெறியாகும்.  (1615) ‘‘பொறிவாயில் ஐந்தவித்தான்  பொய்தீர் ஒழுக்க  நெறி நின்றார் நீடுவாழ்வார்.’’ என்று திருவள்ளுவரும்  இதனை வலியுறுத்துகிறார்.  ஐம்பொறிகளை அடக்கிய வென்ற துறவியாகிய இறைவன் வகுத்த வழியில் நின்றால் பிறவாப் பெருநெறி அடையலாம் என்பது தானே இதன் பொருள்.  அதனால் அறத்தால் வரும் நன்மையையும் அறனல்லாத  மறத்தால் வரும் கேட்டையும் உணர்ந்து ஆன்மா ஐம்பொறிகளால் வரும் ஆசைக்கு ஆட்படாது இறைவன் திருவடி கூடும் தவம் மேற்கொள்ளவேண்டும்.  (1618)  மேலும் ஆன்மா காம வயப்படாதிருக்க வேண்டும் . இதனை

உழவன் உழவுழ வானம் வழங்க

உழவன் உழவினிற் பூத்த குவளை

உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்றிட்டு

உழவன் அதனை உழவொழிந்தானே

என்னும் செய்யுள் வழி ஓர் உருவகத்தால் திருமூலர் விளக்குகிறார்.   உழவன் நெல் விளைவிக்க நிலத்தை நன்கு உழுகின்றான்.  வானம் மழை வழங்குகிறது அவன்வயலில் குவளைப்பூக்கள் மலர்கின்றன.  இவற்றைப் பார்த்து இக்குவளை மலர்கள் தன் மனைவியின் கண்களை ஒத்துள்ளன எனக்கருதி அந்நினைப்பின் வாயிலாகக் காமநோய் மேற்கொண்டு வியந்து நிற்க உழவுத்தொழில் நின்று போயிற்று.  பேரின்ப பெறுவதற்குச் செய்யப்படும் முயற்சியே தவமே உழவு என உருவகம் பெற்றுள்ளது.  இதற்கு இறைவனின் அருள் மழையாய் இருந்து உதவும். நெல் விளைவித்தலே பேரின்பம் பெறுதல் . உழவன் மலரைப் பற்றி மனைவி கண்ணொடு ஒப்பிட்டு நோக்கி உவந்ததே தவமுயற்சிக்குத் தடையாய்  உள்ள பெண் இன்பம் .  மேனகை வயப்பட்டவிசுவாமித்திரர் தவமுயற்சி இதற்குச் சான்றாகும்.  ‘‘மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை விதைத்துப் பொய்மையாம் களையை வாங்கிப் பொறை எனும் நீரைப் (பாய்ச்சிச்) செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையுமன்றே’’ என்று திருநாவுக்கரசர் கூறும்  நெறி இதற்கு மாறானது. இதனையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.


     அறியாமையாகிய மயக்கம் அற்றார்க்கு-அஞ்ஞானம் நீங்கியவர்க்கு இறைவன் தன் நெற்றிக் கண்ணால் ஞான ஒளியைக் காட்டுவான்.  இச்சைகளைத் தரும் மண்ணுலக ஆசையைத் துறந்தவர்க்கு அவன் திருவடிகாட்டுவான்(1620)


நாகம் ஒன்று படம் ஐந்து நாலது

போகமும் உட்புற்றில் பொருந்தி நிறைந்தது

ஆகம் இரண்டும் படம் விரிந்து ஆட்டு ஒழிந்து

ஏகப்படம் செய்து உடம்பு இடம் ஆமே(1621)


என்னும் செய்யுளில் திருமூலர் நாகப்படம் ஒடுங்க நாதன் அருள் துலங்கும் எனக்காட்டுகிறார்.  இங்கு நாகம் பாம்பு உயிரைக் குறித்தது என்றும் குண்டலினி சக்தியை குறித்தது என்றும் கூறுவர் .  படம் ஐந்து என்பது மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்பொறிகளைக் குறிக்கும்   நாலது போகம்-மனம், சித்தி, புத்தி, அகங்காரம் என்னும் நான்கு உட்கருவிகளை உணர்த்தும் . உட்புற்றில் என்பது உள்ளுக்குள். ஆகம் என்பது உடம்பு- ஆக இரண்டு என்பது நுண்உடல், பரு உடல் ஆகிய இரண்டினை உணர்த்தும்.  இந்த இரண்டு உடலும் படம் விரித்து ஆட்டொழிந்து என்பது இவை தம் இச்சைப்படி தலைவிரித்து ஆடுவதை விட்டு நீங்குதலாகும். ஏகப்படம் எடுத்து என்பது ஒருமுகமாக ஒன்றித் தவநிலையில் இருத்தலைக் குறிக்கும். இந்த நிலையில் உடம்பை இடமாகக் கொண்டு வாழ்வதே துறவு ஆகும்.  உயிர் வெளிநாட்டத்தை விட்டொழிந்து அகநாட்டம் கொள்வதே துறவு எனப்படும்.  குண்டலினி சத்தி ஆற்றல் ஒழிந்து சிற்சத்தியோடு பொருந்தி ஊர்த்துவ முகமான போது சிதாகாயக் கூறு விளங்குவதில் இரு உடல்  போய் ஓருடலாய் அமையும் நிலை ஏற்படும் என்பார் வரதராசனார்.


     சுட்டி உணரமுடியாத சிவபெருமான் அவனைப் பணியும் துறவிகளின் மனப்பக்குவத்திற்கேற்ப அந்த அந்தச் சீவன்களோடு ஒன்றி இருப்பான். அவன் ஆன்மாக்களிடம் வந்து அருள்புரியும் வகையை நம்மால் அறிந்து கொள்ளமுடியாது இலயம், போகம், அதிகாரம் என்ற முத்திறத்தாலும் வேண்டுவார் வேண்டும் வண்ணம் இறைவன் ஆட்கொள்வான் ஆன்மாக்களின் பக்குவ நிலை அறிந்து ஆட்கொள்ளும் விதத்தை நாம் அறியமுடியாது(1622)


பத்தாவது செய்யுளில் துறவின் இறுதி நிலையைத் திருமூலர் கூறுகிறார்.    இந்த உடலாகிய வீட்டுக்கு ஒன்பது வாயில்களை மூக்குத்துளை இரண்டு, செவித்துளை இரண்டு, கண்இரண்டு,  வாய் ஒன்று, மலவாய், கருவாய் ஆக ஒன்பது வாயில்களை  இறைவன் வைத்துள்ளான்.  இவை வழி திறந்தன.  ஆம்பல் கொடிபோல விளங்கும் மூலாதாரத்தின் குண்டலினி சக்தி இட வல மூக்கு வழியாக மாறிமாறி இயங்கிப் பின் பிராணயாமப் பயிற்சியால் நடுநாடி வழியாகச் சுழுமுனை மேலேறிச் செல்ல, தலைஉச்சியில் உடலாகிய கப்பலைச் செலுத்தும் மீகாமனாக விளங்கும் பரம்பொருள் அங்கே சிதாகாசததில் செந்தாமரை மலர்வது போல வெளிப்படும். குண்டலினி சத்தி உச்சித்தலையை அடையும்போது உலக இன்பங்கள் வேம்பு போலக் கசக்கும்.  (1623 கரும்பு கசப்பதாகவும் வேம்பு இனிப்பதாகவும் இந்நிலையில் ஞானிகள் உணர்வர்.  பட்டினத்தார் வாழ்வு இதற்கோர் சான்றாகும்.


இவ்வாறு துறவு பத்துச் செய்யுட்களால் திருமூலரால் உணர்த்தப்பெறுகிறது.  பத்து என்பது பற்று என்பதன் பேச்சுவழக்கு என்பதைப் ‘‘பத்து  உடையீர் ஈசன் பழ அடியீர்’’ என்பது பெயராகவும் வினையாகவும் அமைந்த ஒருசொல்.  பற்று (பாசம்) நீக்குதற்கு இறைவனைப் பற்றுக என்னும் உட்கருத்தை வலியுறுத்துவது போல இப்பகுதியில் பத்துச் செய்யுள்கள் உள்ளன.  பற்று விடுவதற்கு இறைவனைப் பற்றி நிற்பதும் ‘‘பற்றிநின்று பரமன் அருள் பெறுவதும் தாம்  துறவு என விளக்குகிறார் திருமூலர் எனலாம்.  இறை பக்தியே இனிய துறவாகும்.

  


 துணை நின்ற நூல்கள்

1. திருமூலர் திருமந்திரம்-மூலமும் விளக்க உரையும் ஞா-மாணிக்கவாசகன்

2. திருமந்திர விரிவுரை தொகுதி 2 –ஜி. வரதராஜன்


திருமந்திர ஆய்வடங்கல் புதுகோட்டை திலகவதியார் ஆதீன வெளியீடு

















2. திருமந்திரம்


ஞாதுரு ஞான ஞேயம்


திருமந்திரம் தோத்திரமும், சாததிரமும் கலந்து தமிழில் தோன்றிய முதல் நூல், விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் இணைந்து விளங்கும் நூல்.  இந்திய நாட்டின் தெற்கையும், வடக்கையும் இணைக்கும் நூல் .  உடல் , உயிர், உள்ளம் என்னும் மூன்றின் நலம் மேம்பட வழிவகுக்கும் நூல் ‘‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே ’’ என்று கூறிப் படைப்பின் இரகசியத்தை உணர்ந்த பரம ஞானியான திருமூலரால் இயற்றப்பட்ட நூல். இந்நூலின் ஆறாம் தந்திரத்தில் இடம் பெற்ற மூன்றாவது பகுதியாக இடம் பெற்ற ஞாதுரு, ஞான ஞேயம் என்பது பற்றி விளக்குவதே இக்கட்டுரை நோக்கமாகும்.


திருமந்திரத்துக்கும் மூன்றுக்கும் தொடர்பு மிகுதி. ஆன்மாவுக்குரிய நிலைகளை மூவகையாகவும், கேவலாதி நிலைகளை மும்மூன்றாகவும், ஆன்மாக்களையே மூவகையாகவும் மலங்களை  முன்றாகவும், மாயையே மூன்றாகவும் குணத்தை முன்றாகவும், பதத்தை மூன்றாகவும், பதிபசுபாசம் எனப்பொருளை மூன்றாகவும் , குற்றத்தை முக்குற்றமாகவும், புரம் மூன்றாகவும், துரிய நிலையை மூன்றாகவும், முத்தியை மூன்றாகவும், சொரூப நிலையை மூன்றாகவும், கரணங்களை மூன்றாகவும், பகுத்துக்காணும் பண்பினைத் திருமந்திரத்தில் காணலாம் . இதற்கேற்ப ஞாதுரு ஞான ஞேயம் என்னும் இத்தலைப்புத் தொடரும் மூன்று பொருள்களைப்பற்றிப் பேசுகிறது. ஆறாம் தந்திரத்தின் மூன்றாம் பகுதியாகவும் அமைந்துள்ளது.  இப்பகுதியில் 9 செய்யுகள் (1603-13) உள்ளன.


ஞாதுரு என்பது காண்பானையும், ஞானம் என்பது காணும் அறிவையும், ஞேயம் என்பது காணப்படும் பொருளையும் பொதுவாகக் குறிக்கும். இங்குத் தத்துவ நோக்கில் காண்பவன் ஆன்மாகவும், காண்பது சிவ ஞானமாகவும் காணப்படும் பொருள் சிவமாகவும் கருதப்படும். ஆன்மா சிவஞானத்தால் சிவனைக் காணுகின்ற நிலையை இப்பகுதி உணர்த்துகிறது.  இதற்குச் சிவகுரு தரிசனத்தால் - அதாவது உள்ளத்தில் உறையும் சிவனைக் குருவாகக் காண்பதால் சிரசின் மேல் திருவடிப் பேறு பெற்ற நிலையில் ஆன்மா பக்குவம் பெறவேண்டும் என்பதனை இப்பகுதிக்கு முன்னேயுள்ள சிவகுருதரிசனம், திருவடிப்பேறு என்னும் பகுதிகள் உணர்த்தும்.


ஆன்மா சிவானந்தமாகிய சிவனுடன் ஒன்றி நிற்கும்போது அதனை அநாதியே பற்றியுள்ள ஆணவமலம் அதனைப் பற்றியுள்ள அறிவை மறைக்காது.  அதாவது ஆணவ மலம் அந்நிலையில் அதாவது முத்தி நிலையில் ஆற்றல் ஒடுங்கி நிற்கும்.  அப்போது பேரின்பமாகிய அமுத நிலையைப் பெறலாம்.  சைவ சித்தாந்தம் கூறும் முத்திநிலையை முதற் செய்யுள் சாற்றுகிறது.  இறைவன்-சிவன் ஆனந்தமாகவும் அமுதாகவும் இருப்பவன்.  ‘‘அத்தன் , ஆனந்தன் , அமுதன், என்று அள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் ’’ என்பது திருவெம்பாவைத் தொடர்.  அவன் ஆன்மாவுக்கு முத்தி நிலையில் அளிக்கும் ஆனந்தம் பேரானந்தம் என்றும் பெயர் பெறும்.  ஏனெனில் அது , என்றும் நிலைத்து இருப்பது . அதனைத் திருமூலர் நீங்காச் சிவானந்தம் எனக் குறிப்பிடுகிறார்.  அமுதம் என்பது சாவாமைக்கு காரணமாக இருப்பது அதாவது பிறவாமையைத் தருவது.  இதனைத் தானே காரைக்கால் அம்மையார்  இறைவனிடம் வேண்டுகின்றார்.  இத்தகைய முத்தி நிலையில் ஆன்மா இறைவனை விட்டு நீங்காத நிலை பெறுவதால் நீங்காச் சிவனாந்தம் எனத் திருமூலர் கூறுகிறார்.   சாயுக்சிய முத்தி எனச் சித்தாந்த சாத்திரம் கூறும் நிலையை முதற் செய்யுள் கூறுகிறது.


‘‘நீங்காச் சிவனாந்த ஞேயத்தே நின்றிடப்

பாங்கான பாசம் படரா. படரினும்

ஆங்காரம் நீங்கி அதனிலை நிற்க (2)

நீங்கா அமுத நிலைபெற லாமே’’(1605)


இது இப்பகுதிக்குப் பாயிரம் போல முன்னுரையாக அமைகின்றது. இறைவனுடன் இரண்டறக் கலக்கும் ஆன்மா பெறும் பேரின்ப நிலையை பிறாவத நிலை எய்தும் தன்மையைத் திருமூலர் முதலில் விளக்குகின்றார். அந்நிலையிலும் ‘‘ஆணவமலம் ஆங்காரம் நீங்கி அதனிலை நிற்கவே’’ என்பதால் பதிபசுபாசம் அநாதி என்ற கூற்றையும் மெய்ப்பிக்கின்றார்.  இதனைத்தான்


முத்திதனில் மூன்றும் முதலும் மொழியக் கேள்

சுத்த அனுபோகத்தைத் துய்த்தல் அணு- மெத்தவே

இன்பம் கொடுத்தல் இறை. இத்தை விளைவித்தல்(மலம்

அன்புடன் கண்டுகொள் அப்பா


என்று உண்மை விளக்கம் உரைக்கிறது.


ஞேயம் என்பது நேயம், அதாவது நேசம் அன்பு ‘‘நேயமே நெய்யும் பாலா’’ என்பது அப்பர் வாக்கு அன்புதானே சிவம்.  ‘‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்.  அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார், அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் , அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே’’(270) எனவே ஞேயம் என்பது சிவத்தைக் குறிக்கிறது. எனவே ஆன்மா தான் அறிவதற்குரிய பொருள் சிவமே என அறிந்து அதன்வழி நின்றால் ஞானமாகிய ஈசனிடத்து வைக்கும் பேரன்பில் திளைத்து நிற்கும் . சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் பெற முடியும் ’’ ஞானம் என்பது ஈசன்பால் பேரன்பே என்றனர் ஞான முண்டார்’’ என்பது சேக்கிழார் வாக்கு வீடு பேறு என்பது என்ன? பிறவியிலிருந்து விடுதலை பெற்று இறைவனுடன் இணைவதே வீடு எனப்படும்.  ‘‘ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்(1606) ’’ என்கிறார் திருமூலர் வீடுபேறு பெறும் நிலையில் தாயாகிச் சக்தி உதவும் நிலை- உணர்த்தும் நிலையையும் திருமூலர் கூறுகிறார். ஞேயத்தின் ஞேயம்- அன்பின் அன்பு எனச் சக்தியைச் சுட்டுகிறார். தாயின் உதவியால்  தாதையைக் கூடுகின்ற நிலை இதுவே ஆகும்.


‘‘வீடுபேறு என்னும் முத்தி நிலையைப்பெறுவது எப்படி?‘‘ யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்என்று விடை கூறுகிறார் வள்ளுவர்.  இந்தச் செருக்கை அறுப்பதற்குரிய வழியாகப் பற்றுக பற்றற்றான் தாளை ’’ என்றும் அவர் கூறுகிறார்.  பற்றற்றான்  தாளைப் பற்றுவது எப்படி?  திருமூலர் விடை தருகிறார். தான் வேறு , சிவன்வேறு என்று இரண்டு பொருள்களாக எண்ணுகின்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு இரண்டும் ஒன்றனுள் ஒன்று எனக் கருதி உள்ளத்தில் உள்ள இறைவன் திருவடியில் தான் என்னும் பூவைச் சாத்தி வழிபட்டால் அவனுடன் இரண்டறக் கலத்தலாகிய வீடுபேறு பெறலாம் என்பது அவர் வாக்கு . பூவினால் செய்யப்படுவது தானே பூசெய்-பூசை என்பார். தம் பெயரை நன்னெறி முருகன் என மாற்றிக் கொண்ட வங்காள மொழிப்பேரறிஞர் சுனித்குமார் சாட்டர்ஜி .  இங்கே உண்மையில் பூ என்பது என்ன?  பூ என்பது நான் எனும் ஆணவ உணர்வே-அது இறுதி வரை அழியாத ஒன்று அன்றோ? பூ என்பது ஆணவத்தின் நான் என்பதன் அறிகுறி அடையாளம் என்பது திருமூலர் கருத்து.  ‘‘புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு’’ என்றும் திருமூலர் கூறுகிறார் அல்லவா?


‘‘நான்’’ நீங்க நாம் என்ன செய்யவேண்டும் ?  சரியை , திரியை , யோகம், ஞானம் ஆகியவற்றால் வழிபாடு செய்யவேண்டும் . மூர்த்தி , தலம், தீர்த்தம் முறையாகத் தொழுத நிலையில் வார்த்தை சொலச் சற்குருவாகக் சிவன் வந்து வாய்ப்பான்.  அவன் பாசஞானம், பசு ஞானம் , பதிஞானம் ஆகியவற்றை நமக்கு உணர்த்துவான் , இவற்றை 1608,1609,1610ஆகிய செய்யுள்கள் சுட்டுகின்றன.  வைச்சன ஆறாகும் மாற்றி’ ‘அச்சம் கொடுத்து’(1608) ‘என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே’’(1609) ‘‘நாதாந்த போதமும் காட்டினன் நந்தியே (1610) ஆகிய சொற்றொடர்கள் சான்றாகும்.


‘‘முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட

அத்தன் எனக்கருளியவாறு ஆர்பெறுவாய் அச்சோவே’’


என்பது திருவாசகம். அருளிய தன்மை என்ன என்பதைத் திருமூலர் விவரிக்கிறார்.  கீழே காண்க.

 


காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்

கோணாத போகமும் கூடாத கூட்டமும்

காணாத நாணமும் நாதாந்த போதமும்

காணாய் எனவந்து காட்டினன் நந்தியே(1610)


காணாத கண் என்பது கண்ணால் காணமுடியாத காட்சியை அதாவது ஞானக் கண் கொண்டு-அவனருளே கண்ணாகக் கொண்டு காணும் காட்சியைக் குறிக்கும்.  கேளாத கேள்வி என்பது செவிப் பொறியால் கேளாத கேள்வியைக் குறிக்கும்.  அதாவது இவை இரண்டும் சுட்டியறியும்  அறிவின்றி ஒரு சேராக்கண்டும் கேட்டும் இருத்தலைக் குறிப்பதாகக் கூறுகிறார். ஜி. வரதராசனார் கோணாத போகம் கூடிப் பிரியாத சேர்க்கையையும் நாணாத நாணம் நாணமிலாத பற்றையும் உணர்த்தும் நாதாந்தத்தில் விளங்கும் அறிவும் காணாய் எனக் காட்டுகிறான் சிவன்.  ‘‘காண்பார் யார் அவன் காட்டாக்காலே” என்பது அப்பர் வாக்கு. அவன் அருளாலே அவன் தாள் வணங்க வேண்டும் .  அப்போது தான் அவன் ‘‘காட்டாதன எல்லாம் காட்டிக் கேளாதான எல்லாம் கேட்பித்துத் தாட்டாமரை காட்டுவான்’’ என்பது மணிவாசகர் துணிவு.


மோனம் என்பது ஞான வரம்பு என்பார் ஔவையார் ஞானத்தின் சிவமாக மோன நிலையை மனம் சும்மா இருக்கும் சுக நிலையை மௌனமாகப் பேசா அனுபூதி பெறும் நிலையை அவர் குறிக்கக் காரணம் என்ன? விடைதருகிறார் திருமூலர் கீழே காண்க


மோனம் கைவந்தோர்க்கு முத்தியும் கைகூடும்

மோனம் கைவந்தோர்க்குச் சித்தியும் கைகூடும்

மோனம் கைவந்து ஊமையாம் மொழி முற்றும் காண்

மோனம் கைவந்து ஐங்கருமமும் முன்னுமே(1611)


இங்கு ‘‘மோனம் கைவந்து ஐங்கருமமும் முன்னுமே’’ என்னும் தொடர் உணர்த்தும் கருத்து அதாவது மோனநிலை உற்று முத்தி நிலையில் நிற்கும் ஆன்மாவுக்குப் படைத்தல்,காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலாற்றலும் வாய்க்கும் என்பது அருட்பிரகாச வள்ளலாராகிய இராமலிங்கர்க்கு உடன்பட்ட ஒன்றாகும்.  சைவசித்தாந்திகள் இதனை ஏற்கமாட்டார்கள்.  


பிறந்து இறக்காமலிருப்பார் யார்? அதாவது மரணமிலாப் பெருவாழ்வு பெறுவார் யார்? காண்பவன், காட்சி, காணும் பொருள் ஆகிய மூன்றும் முடிந்து ஒன்றாக அமையும் நிலையில் அதாவது சமாதி நிலையில் இடகலை பிங்கலை , சுழுமுனை வழியாகச் செல்லும் பிராணனை (மூச்சினை)க் கால்மாத்திரை அளவாக மாற்றிச் சிவானந்த ஒளியாகிய குரு திருவடியில் செலுத்திப் பந்தபாசங்களை விட்டவரே பிறந்து இறவாத நிலை பெறுவார்(1612) , காண்பவன் , காட்சி, காணும் பொருள் , அதாவது ஆன்மா, காணும் அறிவு,சிவம் ஆகிய மூன்றும் ஒன்றாகத் தென்பட அமைய அருள் பாலிப்பவள் சத்தி.  இவளது அருட்குறிப்பை அறிபவனே பரம ஞானி ஆவான்.  இவனே ஒலிக்கின்ற நடனம் புரியும் அன்பு வடிவமான சிவத்துடன் கலந்து தன் நிலைகெட்ட தன்மையன்.ஆவான்.  இவனே பரமுத்தி அடைந்தவன் ஆவான்(1613)


இவ்வாறு ஞாதுறு (ஆன்மா) ஞானத்தைக் கொண்டு ஞேயத்தை அடையும் நிலையையும், ஞாதுறு(காண்பான்) ஞானம் (காட்சி) ஞேயம்(காணும் பொருள் ) மூன்று ஒன்றாகும் நிலையையும், ஆன்மா சிவமாகும் நிலையையும் (ஆன்மாவைகச் சிவமாக்கி இறைவன் ஆண்ட நிலையையும், அதனால் விளையும் விளைவையும், ஞாதுறு ஞான ஞேயம் என்னும் இப்பகுதி எடுத்து விளக்குகிறது. சைவ சித்தாந்தத் தத்துவம் ஆன்ம நேய ஒருமைப்பாடாக வளர்ந்து  மலரும் நிலையை எடுத்துக் காட்டும் இயல்பையும் இங்கே உணரமுடிகிறது. 



திருமந்திர ஆய்வடங்கல் புதுகோட்டை திலகவதியார் ஆதீன வெளியீடு












கற்பகமும் காமாட்சியும்


இறைவன் ஆணல்லன் , பெண் அல்லன் , அலியும் அல்லன் , இருப்பினும் ஆணாகி, பெண்ணாகி , அலியுமாகி நிற்கும் இயல்புடையவன். அவன் ஒரு நாமம். ஒருருவம் ஒன்றும் இல்லாதவன் எனினும் அவனுக்கு ஆயிரம் திருநாமம் கூறி அடியவர் வழிபடுவர். இறைவனை அம்மையாகவும் , அப்பனாகவும் கருதி வழிபடும் நெறி சைவநெறியாகும்.

“அம்மையே அப்பா ஒப்பிலா மணியே” என்று திருவாசகமும் “ஈன்றாளுமாய் எந்தையுமாய்”  என்று தேவாரமும் பாடும் இயல்பினைக் காண முடிகின்றது. அம்மையப்பனை ஒன்றாகக் காணும் திருவுருவமே அர்த்தநாரீசுவர வடிவமாகும். இறைவனை அப்பனாக நோக்கும் போது சிவன் என்றும் அம்மையாக நோக்கும் போது சக்தி என்றும் அழைக்கிறோம். சிவனின்றிச் சக்தி இல்லை, சக்தியின்றிச் சிவனில்லை.

சிவன் அன்பு வடிவினன்; “ அன்பே சிவம்” என்பது திருமந்திரம். சக்தி அருள் வடிவினள். ” அருளது சக்தியாகும்”  என்பது சிவஞான சித்தியார். சிவனையும் நம் அடியார்கள் கற்பகமாகவும் , காமாட்சியாகவும்  கண்டு இன்புற்றிருக்கிறார்கள்,.சக்தியையும் அவ்வாறு கண்டு அடிபணிந்துள்ளார்கள்.

     கற்பகம் என்பது தேவலோகத்திலுள்ள ஒரு மரம் என்றும், அது எட்டுக்கிளைகளையுடையது என்றும் கூறுவர். கற்பகம் தேவர்கள் பாற்கடல் கடைந்த காலத்துத் தோன்றியதாகக் கருதுவர். இதில் படரும் கொடி காமவல்லி எனப்படும். கற்பக மரத்தின் நிழலிருந்து கேட்டது உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே விரும்பியதைத் தரும் வலிமையுள்ள தருவே கற்பகம். பிள்ளையார்பட்டி விநாயகரைக் கற்பக விநாயகர் என்று கூறுகின்றனர். காரணம் அவர் கற்பகம் போல வேண்டுவார்  வேண்டுவதைத் தரும் இயல்பினர்.

     காமாட்சி என்னும் சொல்லுக்கு விரும்பத் தகுந்த கண்ணுடையவள் என்று பெயர்.காமக்கணி என்னும் பெயர்கொண்ட ஒரு சங்கப் புலவரை நாம் காண்கிறோம்.மதுரைக் காமக்கணிப் பசலையார் என்னும் சங்கப் பெண்பாற்புலவர் நற்றிணையில் ஒரு பாடலும் அகநானூற்றில் ஒரு பாடலும் பாடியுள்ளார். காமக்கண்ணி என்பது காமாட்சி என்னும் வடமொழித் சொல்லின் தமிழாக்கமாகும். இது மீனாட்சி என்பதற்கு அங்கயற்கண்ணி எனத் தமிழாக்கம் செய்ததை ஒத்ததாகும்.

     சிவபெருமானை நம் திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில்

திருவே என் செல்வமே தேனே வானோர்

     செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற் சோதி மிக்க

உருவேஎன் உறவேஎன் ஊனே ஊனின்

     உள்ளமே உள் ளத்தினுள்ளே நின்ற

கருவேஎன் கற்பகமே கண்ணே கண்ணிற்

     கருமணியே மணியாடு பாவாய் காவாய்

அருவாய வல்வினை நோய் அடையா வண்ணம்

     ஆவடுதண் துறையுறையும் அமரர் ஏறே” என்று பாடுகிறார்.

இப்பாடலில் “கற்பகமே கண்ணே” என்னும் இரு சொற்களும் இணைந்து நின்று சிவபெருமானை அடியார் அழைக்கும் தொடர்களாக அமைந்துள்ளன. ஆம் சிவன் கற்பகம் தானே “ வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ” என்று மாணிக்கவாசகர் நாம் விரும்பும் பொருள்களைத் தருபவன் என்று கூறுகிறார் அல்லவா? இறைவன் கண்ணாகவும் இருக்கும் இயல்பினன். நமக்குக் கண்ணிருந்தாலும், நம் கண் எதிரே காணும் பொருள் இருந்தாலும் கதிரவனின் ஒளியோ, விளக்கொளியோ , திங்கள் ஒளியோ இல்லாமலிருந்தால் பொருளை நாம் காண முடியுமோ? முடியாதல்லவா? இந்த மூன்று ஒளியும் தானே சிவபெருமானின் முக்கண்கள்! எனவே இறைவன் தானே உலகத்துக்கு –உயிர்களுக்கெல்லாம் கண்ணாக இருக்கின்றான். மேலும் உயிர்களுக்கு உள்ளிருந்து இயக்கிப் பொருள்களைக் காணூமாறும் இறைவன் தான் செய்கிறான்.அதனோடு மட்டுமின்றி நாம் காணும் பொருள்களில் அவன் மறைந்து நின்று அப்பொருள்களை அவற்றிற்குரிய இயல்புடன் இருக்குமாறு செய்து நம் கண்களுக்கு நன்கு புலப்படவும் வைக்கின்றான். இதனை “ காணும் உபகாரம் ” என்று சைவ சித்தாந்தம் கூறும். “காண்பார் யார் கண்ணுதலே நீ காட்டாக்காலே” என்று சான்றோர் கூறுவர். கற்பகமே கண்ணே என விளித்து அப்பர் பெருமான் என்ன வேண்டுகிறார். நோய் அடையாதவாறு காக்குமாறு வேண்டுகிறார்.  உள்ளத்தைப் பிணிக்கும் உடல் நோயையும், உயிரைப் பிணிக்கும் வினைநோயையும் விலக்குமாறு வேண்டுகிறார் அவர்.

     சக்தியாகிய உமையம்மையைச் சென்னை மயிலாப்பூரில் கற்பகமாகவும், காஞ்சிபுரத்தில் சிவனிடம் காதல் கொண்ட கண்களைப் பெற்ற காமாட்சியாகவும் கண்டு நாம் வழிபடுகிறோம். மயிலையில் கோயில் கொண்டெழுந்தருளிய சக்தியின் பெயர் கற்பகாம்பாள் அல்லவா விரும்புவனவற்றைத் தருமியல்பினதாகிய  கற்பகத்தின் தன்மையை இறைவியின் கண்களுக்கு ஏற்றி அபிராமி பட்டர் “ தனம் தரும் ; கல்வி தரும்;ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வவடிவும்தரும்; நல்லன எல்லாம் தரும் ; அன்பர் என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே” என்று அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகிய அபிராமியைப் பாடுகிறார். மேலும் அபிராமியின் அருளைப் பெற்றவர் தங்குவர் கற்பகத்தாருவின் நிழலில்” என்று கூறிக் கற்பகத்தின் நிழலில் நின்று விரும்பியதைப் பெறமுடியும் என்றும் கூறுகிறார்.” தாயார் இன்றி மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை” என்னும் அபிராமி பட்டர் வாக்கால் அம்மையின் அருளால் பிறவி நீக்கமும் பெற்றுப் பேரின்பம் அடையலாம் என்பதையும் உணர்கிறோம்.

    

     காஞ்சி மாநகரில் உமையம்மை சிவபெருமானிடம் ஆகமத்தின் பொருளைக் கேட்டு மகிழ்ந்து, ஆகமத்தின் படி இறைவன் விரும்புவது அருச்சனை என்பதை உணர்ந்து,இறைவனை அருச்சனை செய்ய வேண்டினாள்.அவனும் காஞ்சிபுரத்தில் மாமரத்தில் தோன்றி அவள் அருச்சனையை ஏற்று அருளினான். பிறகு மனையறம் பெருக்கும் கருணையினால், நண்ணு மன்னுயிர் யாவையும் பல்கக் காஞ்சி காமகோட்டத்தில் முப்பத்திரண்டறங்களும் செய்யத் தொடங்கினாள்.இவ்வாறு காஞ்சியில் காமாட்சி முப்பத்திரண்டறங்களும் செய்யும் மாண்பினைச் சேக்கிழார் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் விளக்குகிறார். காமாட்சிதான் முதன் முதலில் சிவபெருமானுக்கு அருச்சனை தொடங்கி வைத்தாள். இதனைச் சேக்கிழார்

 எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்

 உண்மையாவது பூசனை என உரைத்தருள 

 அண்ணலார்தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்

 பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக்கொழுந்து என்று பாடுகிறார். எனவே காமாட்சி நமக்கு காட்டிய வழி அருச்சனை வழிபாடு. இந்த “ அருச்சனையும் பாட்டேயாகும் சொற்றமிழ் பாடுக” என்று இறைவன் சுந்தரருக்குப் பணித்ததாகச் சேக்கிழார் கூறுகிறார். எனவே இறைவனைத் தமிழால் – தமிழ்ப்பாட்டால் அருச்சனை செய்வதே உண்மை வழிபாடாகும்.

     மேலும் காமாட்சி இவ்வுலகில் நாம் முப்பத்திரண்டு அறஞ்செய்யவேண்டும் என்பதை நமக்குணர்த்த அவள் அறஞ் செய்கிறாள்

இரு நாழி நெல் அளித்தானாம். இதனை வைத்து உழவுத்தொழில் செய்து  அதன் வழி அவள் அறஞ்செய்தாளாம். ஆதரவற்றவர்க்குப்  உணவு , உடை, உறையுள் நல்குதல், தண்ணீர்ப்பந்தல் , மடம் , பூங்கா முதலியன அமைத்தல், பள்ளி ,  மருத்துவமனை அமைத்தல் முதலியவற்றை அறங்களாகக் கருதுகிறோம்.]

எனவே இறைவனையும், இறைவியையும் – சிவனையும், சக்தியையும்=,கற்பகமாகவும், காமாட்சியாகவும் கண்டு கற்பகக் காமாட்சி எனக் கருதி வழிபட்டு இம்மைப் பயனும் மறுமைப் பயனும் பெற்று இன்புறுவோமாக


பிராட்டியின் பேரருள்

     பிரான் என்னும் சொல்லுக்குத் தலைவன் என்று பொருள்.வம்பறா   வரிவண்டு மனம் நாற மலரும் மதுமலர் நற்கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் , நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் என்னும் சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகைத் தொடர்களில் வரும் எம்பிரான், நம்பிரான் என்பன எம் தலைவன், நம் தலைவன் என்னும் பொருளைத்தரும்அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான்(4163) என்னும் பெரிய புராணத் தொடரில் உருவாய் அருவாய் இருக்கும் ஒப்பிலாத் தலைவனாகிய இறைவனைப் பிரான் என்னும் தொடர் குறிக்கிறது. இவ்வாறே தம்பிரான் என்பது சிவபெருமானைக்குறிக்கும் தொடராகவும் திருமுறைகளில் கையாளப்படுகிறது. தம்பிரான் தோழர் என்று சுந்தரரைக் குறிக்கிறோம். தம்பிரானைத் தன்னுள்ளம் தழீஇயவன், நம்பி ஆருரன் நாம் தொழும் தன்மையான் என்று உபமன்னிய முனி தம் சீடர்களிடம் கூறியதாகக் சேக்கிழார் சுட்டுவதையும் காணலாம்.

     பிரான் என்னும் ஆண்பாற் சொல்லுக்கு ஏற்ற பெண்பாற் சொல்லே பிராட்டி என்பதாகும். பிராட்டி என்பது தலைவியைப்  பொதுவாகக் குறித்தாலும் சிறப்பாகச் சைவத் திருமுறைகளில் உமையம்மையாரைக் குறிக்கக் காணலாம். எம்பிரான் , நம்பிரான் , தம்பிரான் என்னும் சொற்றொடர்களைப் போலவே எம்பிராட்டி , நம்பிராட்டி , தம்பிராட்டி என்னும் தொடர்களும் அமையும்  வைணவப் பாடல்களில் உரை நூல்களில் பிராட்டியார் என்பது திருமாலின் துணைவியாராகிய திருமகளை தாயாரைக் குறிக்கும் பிராட்டி என்பது உமையம்மையைச் சுட்டினாலும் இறைவனருளை சக்தியை எடுத்து இயம்புவதாகும்.

     அருளின் திருவுருவமாகிய உமையம்மையின் பேரருளைத் திருவாசகத்தில், மாணிக்கவாசகப் பெருமான் போற்றிப் பாடுகிறார். அதனைச் சிறிது காண்போம்.

     திருவாசகத்தில் வரும் திருவெம்பாவை மார்கழி மாதத்தில் பாடப் பெறும் ஒரு பகுதி . கன்னிப் பெண்கள் அதி காலையில் எழுந்து மற்ற தோழிமார்களையும் எழுப்பிக்கொண்டு நீர் நிலைக்குச் சென்று நீராடி இறைவனைத் தொழுது நாடு செழிக்க மழை பெய்யவும் , வீடு செழிக்க நல்ல கணவனைப் பெறவும் வேண்டுவதையே உட்பொருளாகக்  கொண்டது திருவெம்பாவை. இதன் தத்துவப்பொருள் சக்தியை வியந்தது என்று கூறுவர். இப்பகுதியில் மாணிக்கவாசகர் பிராட்டியின் பேரருளைப் பற்றிக் கூறுகிறார். கன்னிப் பெண்கள் நீராடும் மடு(நீர் நிலை) அவர்களுக்கு உமையம்மையைப் போலவும் சிவபெருமானைப் போலவும் காட்சி அளித்ததாம். பாடலைப் பாருங்கள்.

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் ,

அங்கங் குருகினத்தால் , பின்னும் அரவத்தால்,

தங்கண் மலங்கழுவுவார் வந்து சார்தலினால்,

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்து

பொங்கும் மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்

சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்து பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்


பிராட்டியாராகிய உமையம்மையின் கண்களைப் போல இம்மடுவும் பசுமை தங்கிய குவளையாகிய கரிய மலர் பூத்து  விளங்குகிறது.

இப்பொய்கையிலுள்ள தாமரை மலர்கள் அவள் திருமுகத்தை ஒத்து விளங்குகின்றன. குருகினங்கள் அவன் வளையல்களை நினைவூட்டுகின்றன. பாம்புகள் அவள் அணிகலன்களாகக் காட்சி அளிக்கின்றன. பொய்கையில் வந்து பலர் குளித்து அழுக்கை அகற்றிக் கொள்ளும் செயல் உமையம்மையிடத்து வரும் பக்தர்கள் தம் ஆணவம் கன்மம்,மாயை, ஆகிய அழுக்குகளை நீக்கிக் கொள்வதை நினைவூட்டுகின்றது. பொதுவாகப் பொய்கையே மடுவே தண்மையான நீரினைக் கொண்டது. எம்பிராட்டியின் இன்னருளும் தண்மையானது..

பொய்கை நீர் புறத்தே இருக்கும்  வெம்மையைப் போக்கவல்லது. அம்மையின் தண்ணருளோ பிறவித்துன்பத்தால் வரும் வெம்மையை நீக்க வல்லது.அம்மையே அருள் வடிவினள் தானே! அருளது சக்தியாகும் அரன் தனக்கு என்றுதானே நம் சாத்திரங்கள் நவில்கின்றன.

மேலும் இப்பாட்டில் குவளை மலர்களை அம்மையின் அருளொழுகும் கண்களுக்கு ஒப்பிடுறார் மாணிக்கவாசகர். அம்மையின் அருளை நினைத்தவுடன் அடியார்களுக்கு முதலில் அவளது கண்கள் தாம் நினைவுக்கு வரும் கண்கள் அடிப்படையில் தான் அம்மைக்கு எத்தனை பேர்கள்? காமாட்சி,மீனாட்சி,விசாலாட்சி,கமலாட்சி ஆகிய பெயர்கள் முறையே காமக்கண்ணி, கயற்கண்ணி, அகல்நெடுங்கண்ணி, தாமரைக்கண்ணி என்னும் பெயருடையன அல்லவா? ஏன் ? கண்ணின் பெருங்கருணைத் திறத்தை அபிராமிபட்டர்

தனந்தரும் கல்விதரும், ஒருநாளும் , தளர்வறியா

மனந்தரும்; தெய்வவடிவும் தரும்; நெஞ்சில் வஞ்சமிலா  

இனந்தரும்; நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவருக்கே

கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

என்று பாடுகிறார். அம்மையின் அருட்கண்களுக்குத்தான் எத்துனை பேராற்றல்! எனவேதான் முதலில் அம்மையின் அருட் கண்ணையும் குவளை மலரையும் இணைத்துப் பேசுகிறார் மாணிக்கவாசகர்.

     அடுத்து அம்மையின் அருள் வடியும் முகத்தைத் தாமரைக்கு ஒப்பிடுகிறார் மாணிக்கவாசகர். பூக்களில் சிறந்த பூ தாமரைப் பூ; அது தண்மையில் வேரூன்றித் தழைப்பது . அது போலத் தெய்வங்களில் சிறந்த அம்மை, அருள் வெள்ளத்தில் எப்போதும் குடிகொண்டிருப்பவள்.

     பொய்கையை அம்மையோடு ஒப்பிட்டுப் பேசிய மாணிக்கவாசகப்பெருமான் இன்னொரு பாட்டில் பொய்கைக்கு நீர் சுரக்கும் மழை மேகத்தை நினைக்கும் போதும் அம்மையின் அருளை எண்ணிப் பார்க்கிறார். பாடலைப் பாருங்கள்

முன்னிக் கடலைக் சுருக்கி எழுந்துடையாள்

என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்

மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

பொன்னஞ் சிலம்பித் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலைகுலவி நம் தம்மை ஆளுடையாள்

தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

இந்தப் பாட்டில் கன்னிப் பெண்கள் மழைபெய்ய வேண்டி நிற்கிறார்கள்.

கடல்  நீர் கதிரவன் வெப்பத்தால் மேகம்ஆகின்றது. பிறகு கார்மேகம் ஆகி மின்னுகின்றது . பிறகு இடி இடிக்கிறது மழை பொழிகிறது. இவையனைத்தும் அடியார்க்கு அம்மையை நினைவூட்டுகின்றன . அவள் கருப்பு நிறத்தை கார்மேகம் காட்டுகிறது. மின்னல் அவள் இடையை நினைவூட்டுகிறது. அவள் காற் சிலம்பொலியை இடி எடுத்துரைக்கிறது. மழைக் காலத்தில் தோன்றும் வானவில்லும்  அவளது கரும்புருவத்தைக் காட்சிக்குக் கொணர்கிறது..அவள் இறைவனுடன் இணைந்து பொழியும் அருளைப் போல மழை பொழிய வேண்டுகிறார்.. மழை என்பதும் கடவுள் அருளின் மறு வடிவம்தானே.. எனவேதான் வள்ளுவர் கடவுள் வாழ்த்து கூறிய பின்னர்  வான் சிறப்புக் கூறி மழையை வாழ்த்துகிறார்.

     மேலும் இப்பாட்டில் உமையம்மையை உடையாள், , எம்மையாளுடையாள்,, எம்பிராட்டி, , நந்தம்மை ஆளுடையாள், . அவள் என ஐ முறையாகப் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். ஐந்து வகையாக இறைவி குறிக்கப்படுவது அவள் ஐந்து சக்திகளாக அமைந்து உயிர்களுக்குக் கருணை வழங்கிப் பேரின்பத்தைக் காட்டுதற் பொருட்டே என்பர். உலகின் நலம் கருதி மழை பொழிகிறது. அது போல உயிர்நலம் தழைக்க் அம்மையின் அருள்தேவைப்படுகிறது.அவள் அருளை வேண்டி  வழிபட்டு நிற்போம்.

அருளே உலகெல்லாம் ஆள்விப்பது ; ஈசன்

அருளே பிறப்பறுப்ப தானால் அருளாலே

மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்

எப்பொருளும் ஆவ தெனக்கு.

காரைக்கால் அம்மையார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக