ஞாயிறு, 18 மே, 2014

நகரத்தார் - 3


9 சிங்கப்பூர் `லயன் சித்தி விநாயகர்` கோயில் சிறப்பு
 
டாக்டர். சுப. திண்ணப்பன்.
 
 
சிங்கப்பூரில் இன்று நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் எனப்படும் நகரத்தார்களின் மேற்பார்வையில் உள்ள கோயில்கள் இரண்டு. ஒன்று தேங் ரோட்டில் உள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில். மற்றொன்று சைனா டவுன் கியோங் செய்க் சாலையில் இருக்கும் அருள்மிகு லயன் சித்தி விநாயகர் கோயில். முன்னையது 4 -4 -1859 இல் கட்டப்பட்டது. பின்னைய கோயிலின் சிறப்பினையும் பெருமையையும் ஈக்கட்டுரையில் காண்போம். 
 
வரலாற்றுச் சிறப்பு
 
      1925 இல் கட்டப்பெற்ற இக்கோயிலுக்கு நீண்டகால பாரம்பரியம் உள்ளது. இக்கோயில் மூர்த்தி பற்றியும் தோற்றம் பற்றியும் முத்து பழநியப்ப செட்டியார் தம் மலயாவின் தோற்றம்என்னும் புத்தகத்தில்(1938) எழுதியுள்ள செய்தியை முதலில் பார்ப்போம். சிதம்பரத்தில் சிவாநுபூதி பெற்ற திரு. பொன்னம்பல சுவாமிகளால் (இப்போது சிதம்பரத்தில் பொன்னம்பல சாமி மடம் ஒன்று உள்ளது. அது கோவிலூர் மட நிர்வாகத்திலுள்ளது. இம்மடம் இருக்கும் தெருவிற்குப் பெயர் பொன்னம்பல சாமி மடத் தெரு) இங்குள்ள சித்தி விநாயகர் உருவம் நிறுவப்பெற்றது. சுவாமிகள் இல்வாழ்க்கையில் இருந்தவர். பட்டாளத்தைச் சேர்ந்தவர்.  சிங்கப்பூருக்கு வந்த இந்தியப் பட்டாளத்தில் இவரும் ஒருவராக வந்தார். அப்போது ஒரு விநாயகரை வைத்து வணங்கினார். அவர் உத்தியோக மாறுதலில் இந்தியா செல்ல நேர்ந்தது.  விநாயகர் உருவத்தை எடுத்துச் செல்ல எண்ணவில்லை.  ஆகவே, தான் வழிபட்ட விநாயகரை நகரத்தார்களிடம் ஒப்படைத்துச் செல்ல விரும்பினார். சுவாமிகளின் வேண்டுகோளை மறுக்க இயலாத நிலையில் இந்தத் திருவுருவமுள்ள கோயிலை நகரத்தார்கள் ஏற்று இந்தக் கோயில் கட்டினார்கள்.
 
      இந்தக் கோயிலின் தோற்றத்தையும் வரலாற்றையும் பற்றித் திரு. ஆ. பழநியப்பன் சிங்கப்பூர் இந்துவில் (தொகுதி1 இதழ்5 1994 ஜனவரி- மார்ச்சு) ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவர் கருத்துக்கள் வருமாறு: ``இக்கோயில் மரத்தடிப் பிள்ளையாராகப் பொது மருத்துவமனையின் புதிய பிணக் கொட்டகைக்கு அருகில் தொடங்கப்பட்டது.  கோவிலை அடையச் சிப்பாய் லைனிலிருந்து ஒரு நடைபாதை உருவாக்கப்பட்டது. முதலாம் உலகப் போரின் இறுதியில் அத்தாப்புக் கூரையுடன் அமைந்திருந்த கோயிலில் விநாயகரின்  திருவுருவச் சிலையும் நாகரும் இடம்பெற்றிருந்தன. இக் கோயிலுக்கு வருகையளித்தோர் மருத்துவமனை ஊழியர்களும் அவுட்ராம் சாலையிலிருந்த சிறைச்சாலை ஊழியர்களுமாவர். அங்கு அன்றாட பூஜை செய்துவந்த தமிழர் சன்னியாசி தமிழகம் செல்லும்போது கோவிலை நகரத்தார்களிடம் ஒப்படைக்க அணுகினார். முதலில் நகரத்தார்கள் இந்து அறக்கட்டளை வாரியத்தை அணுகுமாறு சன்னியாசியிடம் கூறினர்.  இந்து அறக்கட்டளை ஆர்வம் காட்டாததாலும், சன்னியாசி விடாப்பிடியாக இருந்ததாலும் கோவிலை நகரத்தார்கள் ஏற்று அங்குப் பூசை நடத்த ஒரு பண்டாரத்தை நியமித்தனர்.
 
      1920களின் தொடக்க காலத்தில் மருத்துவமனை விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் தேவைப்பட்டதால் அரசாங்கம் இக்கோயில் நிலத்தை எடுத்துக்கொண்டு ஒரு சிறு தொகை கொடுத்தது. நகரத்தார்கள் இப்போதைய இடத்தில் நிலத்தை வாங்கிக் கோயிலைப் பெரும்பொருட் செலவில் கட்டி முடித்தனர்.
 
      கோவில் கட்டத் தொடங்கியதும் மருத்துவ மனை நிலத்தில் இருந்த கோவிலில் உள்ள விநாயகரின் திருவுருவம் சுதை வேலைப்பாடுடன் அமைந்ததாகவும், உருவம் சிதைந்தும் காணப்பட்டது. குறையுள்ள சிலையைக் கருவறையில் வைப்பது ஆகமத்திற்கு ஏற்புடையதல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆகவே முறையாகக் கருங்கல்லில் செய்த விநாயகர் சிலையை இந்தியாவிலிருந்து கொண்டு வர அவர்கள் ஏற்பாடு செய்தனர். இருப்பினும் குரோதன ஆண்டு  வைகாசித் திங்கள் 19ஆம் நாள் (1-6-1925)இல் நடைபெற்ற திருக்குட நீராட்டுக்கு முன்னர், ஆகமத்தில் கூறியதைப் போலப் பழைய சிலையைக் கடலில் இடக்கூடாது எனச் சிலர் கருத்துரைத்தனர்.  அவ்வாறு செய்தால் சன்னியாசிக்குக் கொடுத்த வாக்கை மீறுவதாக அமையும் என அவர்கள் கருதினர்.
 
      புதிய சிலையை மூலவராகப் பிரதிஷ்டை செய்யும் அதே வேளையில், அதற்கு முன்னால் கர்ப்பகிரகத்தில் பழைய சிலையை வைத்து வழிபடுவது என ஒரு சமரச முடிவு காணப்பட்டது. அதுகமட்டுமல்ல, கோவிலின் பழைய இடத்தில் இருந்த நாகமும் ``ராம நாமமும்`` கருவறைக்குள்ளேயே வைக்கப்பட்டன. முருகப்பெருமானைக் குறிக்கும் வகையில் ஒரு வேலும் அதனுடன் வைக்கப்பட்டது. சிப்பாய் லைன்சில் கோவில் அமைந்திருந்ததால் அதனை லைன் சித்தி விநாயகர் என்று அழைத்து வரலாயினர்.
 
      1824ஆம் ஆண்டு வாக்கில் சிங்கப்பூருக்கு வர்த்தகம் செய்ய வந்த நகரத்தார்கள் தங்கள் வட்டித் தொழிலை நகரத்தின் நடுநாயகமாக விளங்கிய மார்க்கெட் ஸ்திரிட்டில் நடத்தி வந்தார்கள். `கிட்டங்கிகள்`` என்னும் அந்தத் தொழில் மனைகளில் வட்டித் தொழிலை நடத்திய செட்டியார்களில் சிலர் தாயகத்திலிருந்து கொண்டு வந்த சுவாமிகளின் சிறு சிலைகளை வைத்து வழிபட்டு வருவது வழக்கமாக இருந்துவந்தது.. அதற்கேற்ப மார்க்கெட் ஸ்திரிட் 38ஆம் எண் கிட்டங்கியில் விநாயகர் சிலை ஒன்று வைத்து வழிபாடு செய்யப்பட்டுவந்தது. மார்க்கெட் தெரு கிட்டங்கிகளை அரசாங்கம் பற்றுமானம் செய்தபோது (1979-80) இந்தச் சிலை தேங் ரோடு 15ஆம் எண் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. அந்த வீடும் தெண்டாயுதபாணி கோயில் திருப்பணிக்காக எடுக்கப்பட்டபோது   அந்தச் சிலையை லயன் சித்தி விநாயகர் கோயிலில் கொண்டுவந்து வைப்பதென நகரத்தார்களால் முடிவுசெய்யப்பட்டது. அதற்கேற்ப அச்சிலை மூன்றாவது பிள்ளையாராகக்  கருவறையில் 1980ஆம் ஆண்டில் வைக்கப்பட்டது. 
 
      கோவிலில் கடைசியாக நடைபெற்ற இரு குடமுழுக்கு விழாக்கள் முறையே 1973ஆம் ஆண்டிலும், 1989-ஆம் ஆண்டிலும்  (10-11-1989)நடைபெற்றன.
 
பெயர்ச் சிறப்பு 
 
      லயன் சித்தி விநாயகர் என்னும் பெயரின் சிறப்பைப் பார்ப்போம். விநாயகர் என்னும் சொல்லுக்குத் தனக்கு மேல் தலைவர் இல்லாதவர் என்பது பொருள். சிறப்பான தலைவர் என்பதும் மற்றொரு பொருள்.  ``தனக்குவமை இல்லாதான்`` என்று திருவள்ளுவர் சொல்லும் கடவுட் பண்பினை விநாயகர் என்னும் சொல் விளக்குகிறது.
 
     ``விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
      விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
      விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
      கண்ணிற் பணிமின் கனிந்து``
 
என்று பதினோராம் திருமுறையில் கபிலர் பாடிய பாட்டும் இதனை வலியுறுத்தும்.
 
      சித்தி என்னும் சொல்லுக்குக் கைகூடுதல், வெற்றி, வீடுபேறு, அற்புத ஆற்றல் எனப் பல பொருள்உண்டு. இவற்றை எல்லாம் வழிபடும் அடியார்களுக்கு விநாயகப் பெருமான் வழங்குவதால் அவர் சித்தி விநாயகர் என அழைக்கப் படுகிறார்.
  
 ``பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
  வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
  கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
  வடிவினர் பயில்வலி வலமுறை இறையே``
 
என்று ஞானசம்பந்தப் பொருமான் விநாயகரின் தோற்றமே அடியார்களின் இடர் -துன்பம் போக்குவதையே நோக்கமாகக் கொண்டதுதான் என்று பாடுகிறார். எடுத்த காரியத்தினை இடையூறு நீக்கிக் கைகூடச் செய்யும் வல்லமை விநாயகருக்கு உண்டு. ``அத்தி முகனடி, நித்தம் நினைபவர், சித்தி திருவொடு முத்தி பெறுவரே`` என்பது ஆன்றோர் வாக்கு. இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் தருபவர் சித்தி விநாயகர் ஆவார்.
 
      லயன் என்பது  `line` என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் வரி வடிவமாகும். இந்தத் தமிழ் வரி வடிவத்தின் அடிப்படையில் மூன்று பொருளுரைக்கலாம். வரலாற்று அடிப்படையில் முதலில் இந்தக் கோயில் சிப்பாய் லைனில் (Sipay Line) இருந்து வந்ததால் `லயன்` என்னும் அடைமொழி வந்தது எனலாம். இந்தக் கோயில் விநாயகர் திருவுருவங்கள் மூன்று ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இருந்து அருள் புரிவதால் `லயன்` என்னும் அடைமொழி பொருந்தும் எனக் கொள்ளலாம். மேலும் லயன் என்பது சிங்கம் (lion) எனப் பொருள் தந்த நிலையில் சிங்கப்பூரில் சிறப்புற வீற்றிருக்கும் விநாயகர் எனப் பொருள்  கொள்ளவும் இடமுண்டு.  
 
இடச் சிறப்பு
 
      சிங்கப்பூரில் சைனா டவுன் என்பது மிகப் பழமையான நகர்ப் பகுதியாகும். 1822 நகரமைப்புத் திட்டத்திலேயே இப்பெயர் உள்ளது. இவ்வட்டாரம் முக்கோணம் வடிவம் உடையது. தெலுக்ஆயர் வீதி ஒருபக்கம், சிங்கப்பூர் ஆறு ஒரு பக்கம், அன்சன் சர்க்கஸ்- ஊட்ரம் சாலை மற்றொரு பக்கம்.  முக்கோண வடிவமைப்புச் சைனா டவுனில் மூன்று விநாயகர் திருவுருவக் கோயில் இருப்பது ஒரு சிறப்புத்தானே!  சீனர்கள் தம் கிளை மொழியான ஹொக்கியானில் பெருநகரம் எனப் பொருள்படும் (Toa Por) என்னும் சொல்லால் சௌத் பிரிட்ஜ் சாலைப் பகுதியையும்,  இக்கோயில் இருக்கும் கிரேத்தா அயர் பகுதியைத் தண்ணீர் வண்டி எனப் பொருள்படும்  Gu Chia Chui எனவும் அழைத்தனர். இப்பொருள்படும் நிலையில் உள்ள மலாய் மொழிச் சொல்தான் கிரேத்தாஅயர் ரோடு என்னும் பெயரில் இடம் பெற்றுள்ளது. 1920க்கு முன் அன்செங் ஹில்லுக்கு அருகிலுள்ள ஒரு கிணற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் தண்ணீர் கொண்டுவந்து இப்பகுதிக்கு வழங்கப்பட்டது. இதன் நினைவாகவே இப்பெயர் வந்தது. இப்பகுதியில்தான் சிங்கப்பூர் ஆற்றோரப் பகுதியும் தஞ்சோங்பஹார் துறைமுகப் பகுதியும் உள்ளன. ஆற்றோரத்தில் இருந்து ஆற்றுப்படுத்தும் விநாயகராகவும், கடற்கரைப் பகுதியிலிருந்து  கலங்கரை விளக்காகவும் இருந்து பக்தர்களைக் காத்து நல்வழிப்படுத்தும் கோயிலாகவும் இது உள்ளது. சௌத்பிரிட்ஜ் ரோட்டில் சிங்கப்பூரின் மிகப் பழமையான மாரியம்மன் கோயில் ஒரு பக்கம் ; முன்பு தஞ்சோங் பஹார் தெரு முனையில் இருந்து இப்போது இடம் மாறிய மன்மத(ன்) காருண்யீஸ்வரன் கோயில்-சிவன் கோயிந் ஒரு பக்கம்- இதற்கு இடையில் இந்த விநாயகர் கோயில் இருந்ததும் ஒரு சிறப்புத்தான். மேலும் இந்த விநாயகர் கோயிலைச் சுற்றிச் சீனக் கோயில்களும், பள்ளிவாசல்களும், தேவாலயங்களும் இருப்பதும் சிங்கப்பூரின் பல் சமயச் சூழலையும் சமய நல்லிணக்கச் சிறப்பையும் எடுத்துக்காட்டும். கியோங் சியாக் ரோடு, கிரேத்தா ஆயர் ரோடு சந்திப்பில் இக்கோயில் அமைந்து சிந்திப்பவர் துயர்நீக்கும் சிறப்புடையதாக விளங்குகிறது. இக்கோயிலை எளிதில் அடைய இன்று பெருவிரைவுப்போக்குவரத்து( MRT), பேருந்து வசதிகளும் உள்ளன. நகரத்தார்கள் முதலில் தம் தொழில் நடத்தித் தங்கியிருந்த மார்க்கெட் ஸ்திரிட்டுக்கு அருகிலும் இருக்கிறது.
 
 
மூர்த்திச் சிறப்பு
 
      இக்கோயிலில் இன்று விநாயகர் திருவுருவம் மூன்று, முருகப்பெருமான் திருக்கை வேல் ஒன்று, நாகர் ஒன்று, இராமர் நாமம் ஒன்று ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. மேலும் விநாயகர் திருமுன்னர் பெருச்சாளி உருவமும் பலிபீடமும் உள்ளன. அனுமன் கற்சிலை ஒன்று (சிறியது) பிரதிஷ்டை செய்யப் பெறாது இராமநாமம் அருகில் உள்ளது.  விநாயகர் திருவுருவம் மூன்றில் பெரியதாகவும் சுவற்றோரமாகவும் இருக்கும் கல் திருமேனி நகரத்தார்கள் இக்கோயில் எழுப்பிய காலத்தில் ஏற்படுத்திய ஒன்றாகும். அடுத்து இருக்கும் விநாயகர் உருவம் தான் பழைய கோயிலில் இருந்து வந்த உருவமாகும். இதனை அடுத்து இருக்கும் விநாயகர் உருவம்தான் மார்க்கெட் ஸ்திரிட்   38ஆம் எண் கிட்டங்கியில் இருந்து கொண்டு வந்து வைக்கப்பட்டதாகும். இப்போது இந்தக் கோயிலில்  வழிபடுவோர் மூன்று விநாயகப் பெருமானை ஒரே நேரத்தில் வழிபடும் பெரும் பேற்றினைப் பெறமுடியும். அறம், பொருள்,இன்பம் ஆகிய மூன்றினையும் சங்கத் தமிழ்  மூன்றினையும் (இயல், இசை, நாடகம்) தரும் வகையில் இம்மூர்த்தங்கள் உள்ளன என்று சொல்லலாம்.
 
      நகரத்தார்கள் இந்தக் கோயிலை ஏற்படுத்தும் போது முருகப்பெருமான் திருக்கைவேல் ஒன்றும் செம்பு உலோகத்தில் செய்து வைத்து வழிபடத் தொடங்கினர். ``செட்டி கப்பலுக்குச் செந்தூரான் துணை`` என்பதற்கேற்ப நகரத்தார்கள் திரைகடலோடித் திரவியம் தேடுவதற்காகத் தாங்கள் சென்ற இடமெல்லாம் தண்டாயுதபாணி கோயிலை எழுப்பி வேல் வழிபாடு செய்து வந்தனர். வேல் என்பது வெற்றியின் அடையாளம். ஞானத்தின் அறிகுறி. ஆழ்ந்து அகன்று நுட்மாக விளங்கும் அறிவின் அடையாளச் சின்னம்.
 
``வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கை வேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மாவும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை``
 
என வேலின் பெருமையை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் போற்றிப் பாடுகிறார். இந்தக் கோயிலில் உள்ள வேல்தான் தைப்பூசத்தில் வெள்ளி ரதத்தில் தண்டாயுதபாணி கோயிலுக்குச் சென்று தைப்பூச நாளன்று ஆயிரக்கணக்கான பாற்குட நீராட்டுக்குரியதாக விளங்கும் சிறப்புடையதாகும்.  தைப்பூசத்திற்கு முதல் நாளிரவு வெள்ளி ரதத்தில் முருகப்பெருமான் திருவுருவத்துடன் பிள்ளையார் கோயில் பண்டாரம் இந்த வேலைத் தாங்கி வரும் காட்சி ஓர் அற்புதக் காட்சியாகவே அமையும். இந்த வேலுக்குச் சிறப்பு நாட்களில் வெள்ளி முகத்துடன் கூடிய அலங்காரமும் செய்யப்பட்டு முருகனாகவே காட்சி அளிக்கும் மாட்சியும் போற்றத் தக்கதாகும்.
 
      பிள்ளையாருக்கு அருகில் நாகர் திருவுருவம் வைப்பது தமிழகத்தில் மரத்தடிக் கோயில்களில் இருக்கும் ஒரு மரபாகும்.  இது ஆதியில் அச்சத்தின் காரணமாகத் தோன்றிய வழிபாட்டு முறையாயினும் பின்னர் நாகதோஷம் கழிக்க உதவும் ஒன்றாகக்கருதப்பட்டு வந்தது.  நாதர் முடிமேல் இருக்கும் நாகப்பாம்பு யோக நிலையில் குண்டலினி சக்தியை எழுப்பியதையும் குறிக்கும். நாகரின் நடுவே சிவலிங்கம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. எனவே நாகரின் நடுவே சிவபெருமானை- நாகலிங்கத்தையே வழிபாடு செய்கிறோம்.
 
இராம நாமம் இராமரின் திருவடியைக் குறிக்கும் அடையாளமாகும்.  வேலும் நாகமும் கல்லால் அமைந்த திருவுருவங்கள்.  இவை கோயில் தொடக்க கால முதல் இருந்து வந்தனவாகவே கருதப்படுகின்றன.  வைணவ சமயத்தினரின் அடையாளச்சின்னம் நாமம். இதனைச் சமஸ்கிருதத்தில் புண்டரம் என்றும் தமிழில் திருமண் காப்பு என்றும் கூறுவர். புண்டரம் என்பதற்குக் கூட்டமாகப் பெருமாளின் திருநாமத்தைக் கூறுவது என்பது பொருள். ``வராகப்பெருமானின் திருமேனியிலிருந்து உண்டான வெண்மண்ணினால் மேல்நோக்கி இடம்பெறுவது நாமம். நடுவில் பிராட்டிக்கு(தாயாருக்கு) உகந்ததான மஞ்சளாலான சிவந்த திருச்சூர்ணம் ஒளிமிக்கதாக இடவேண்டும். வெண்மண்ணாலான பகுதியில் பகவான் எழுந்தருளி இருப்பதாகவும் ஐதீகம். தென்கலையைச் சேர்ந்தவர்கள் திரு அனந்தாழ்வான் எழுந்தருளியிருப்பது போன்று திருமண்காப்பின் கீழ் பாதபீடம் இடுவார்கள்``.என்று ஒரு வைணவப்பெரியார் நாமத்திற்கு விளக்கம் தருகிறார். நாமத்தின் வெண்பகுதி இராமனின் திருவடிகளையும் சிவப்புப்பகுதி சீதையையும் குறிப்பதாக இங்கே உள்ள திருநாமத்தைக் கருதவேண்டும். ``நடையின் நின்றுயர் நாயகனாகியஇராமபிரானின் இரு திருவடிகளைச் சரணாகதி அடைதலே இராமாயணத்தின் இலக்காகும் என்பதைக் கம்பர் தம் காவியத்தின் முதல் பாடலிலேயே, 
 
 
 
`உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
 நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே``
 
என்று பாடுகிறார். அதனையே இக்கோயிலுள்ள இராமநாமம் நமக்கு உணர்த்துகிறது எனலாம். இறைவனடி சேர்தலே இந்து சமயம் உரைக்கும் ஆன்ம இலட்சியம்`` ஆகும்.  மேலும் இராமநாமம் என்பது இராமனது திருப்பெயரின் பெருமையை உணர்த்துவதாகவும் கொள்ளலாம். இதன் பெருமையை வாலி,
 
``மும்மைசால் உலகுக்கு எல்லாம்மூல மந்திரத்தை முற்றும் 
 தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை,தானே
 இம்மையே எழுமைநோய்க்கும் மருந்தினை, இராமன் என்னும்
 செம்மைசேர் நாமம்தனைக் கண்களில் தெரியக்கண்டான்.`` 
 
என்று கம்பர் பாடுகிறார். மேலும் இராம பக்தனாகிய அனுமன் இராம நாமத்தைத் தன் நெற்றியில் அணிந்திருந்ததாகவும், அது நெய்ச்சுடர் விளக்கினைப் போல் காட்சி அளித்ததாகவும் கம்பர் சுந்தரகாண்டத்தில் சம்புமாலி வதைப் படலத்தில் குறிப்பிடுகிறார். இராமநாம வழிபாடு என்பது பகவான், பாகவதன் வழிபாடு இரண்டினையும் ஒரு சேரத் தருவது ஆகும். இந்தக் கோயில் சைவம் சார்ந்ததாக இருப்பினும் வைணவத்தைப் புறக்கணிக்கவில்லை என்பதும் நோக்கத்தக்கது. நகரத்தார்கள் வழிவழிச் சைவர்களாக இருப்பினும் திருமாலை வழிபடுவதும், திருமால் பெயர்களை மக்கட்கு இடுவதும், பெருமாள் கோயில் கட்டுவதும் அவர்களிடம் உள்ள பழக்கங்களே ஆகும்.
 
      பெருச்சாளி உருவம் கஜமுகாசுரனை விநாயகர் வதம் செய்து தம் வாகனமாக ஆக்கிக் கொண்டார் என்பதைக் காட்டுவதாகும். இது ஆணவமலத்தை அழித்துப் பேரருள் சுரந்ததன் அடையாளமாகும். பலிபீடம் என்பது நமது யான் எனதுஎன்னும் செருக்கினை விநாயகர் திருமுன் பலிகொடுத்துப் பக்தி செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தும் ஒன்றாகும்.
 
 
கட்டடச் சிறப்பு
 
      முதலில் இராணுவத்தில் பணிபுரிந்த சிப்பாய் ஒருவரால் எழுப்பப்பெற்ற கோயில்- சிப்பாய்களால் வழிபடப்பட்ட கோயில்(முன்பு வரலாற்றுச் சிறப்பில் கூறப்பட்டபடி) பின்பு நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் 1920 களை ஒட்டி கியோங் சியாக் ரோட்டில் (கிரேத்தா அயர் ரோட்டில்) இடம் வாங்கிக் கட்டப்பட்டது. நான்கு மதில் கொண்ட திருச்சுற்றுச் சுவர், அதனை ஒட்டி ஒரு வெளிப் புறகாரம், நடுப்பகுதியில் கோயில் கட்டடம், கருவறை, முகமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்பில் கோயில் இருந்தது. கோயில் கருவறைக்குரிய விமானம், நான்கு மதில் மூலைகளிலும் இடபத்துடன் கூடிய வருணபூதம், மூன்றடுக்கு இராஜகோபுரம், கருவறைக்கு எதிரே உள்ள கோபுரவாயில் என்ற அமைப்பில் கோயில் இருந்தது. கருவறைக்கு முன் பளிங்குக் கல்லால் அமைந்த துவாரபாலகர் இருவர், கருவறைச் சுவர்களில் நின்ற கோல விநாயகர் திருவுருவங்கள் உள்ளன.  உட்புறகாரமும் உள்ளது. பிறகு 1973 ஆம் ஆண்டிலும், 1989 ஆம் ஆண்டிலும் திருப்பணிகள் செய்யப்பட்டுக் குடமுழுக்குகள் நடைபெற்றன.  இத்திருப்பணிகள் எல்லாம் தமிழகத்தில் இருந்து வந்த சிறந்த ஸ்தபதிகளால் செய்யப்பட்டன. இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புதுப்பிப்புப் பணியின் போது  பிற மதத்தினர் ஒருவர் கோயிலின் கட்டிடச் சிறப்பினைக் குறிப்பிட்டு, இதன் பழமையைப் பாதுகாக்க ஆங்கில நாளேட்டிற்குக் கடிதம் எழுதி இருந்தாரென்றால் இந்தக் கட்டடச் சிறப்பினைச் சொல்லவும் வேண்டுமோ?
 
      இந்த ஆண்டு(2007) கோவிலுக்கு அண்மையிலிருந்த சந்தினையும் சேர்த்துக் கோவில் வளாகத்தைப் பெரிதாக்கி, கோவிலுக்கு ஐந்து நிலை இராஜகோபுரம் எழுப்பியும், பணியாளர் தங்குதல், பல நோக்கு நிகழ்ச்சிக மூன்றடுக்குக் கட்டடம் கட்டியும், கோயிலையும் இக்கட்டடத்தையும் இணைக்கும் கண்ணாடிக் கூரை எழுப்பியும் செய்யும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றைப் பெரும் பொருட்.செலவில் நகரத்தார்கள் செய்துள்ளனர் என்பதையும் குறிப்பிட வேண்டும். இப்பணிகளைச் செய்ய முதலில் தமிழகத்தின் தலை சிறந்த ஸ்தபதியாகிய கணபதி ஸ்தபதியைக் கொண்டு திட்டம் தீட்டப்பட்டது. பின்பு இவற்றைச் செயலாக்க அவரது சீடரும் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா முதலிய நாடுகளில் சிறப்புறப் பல கோயில்களைக் கட்டியவருமான நாகராஜ ஸ்தபதி மேற்பார்வையில் 15 பேர் வரவழைக்கப்பட்டனர்.  சிங்கப்பூரில் சிறந்த கட்டடப் பொறியாளர்கள் கட்டட வேலைகளை மேற்பார்வை செய்து கட்டினார்கள். இத்தகைய சிறப்புகளுடன் இன்று புதுப்பொலிவுடன் இக்கோயில் திகழ்கிறது.
 
சிற்பச் சிறப்பு
 
      சிறிய கோயிலாக இருந்தாலும் சிற்பங்கள் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளன. இராஜகோபுரம் இப்போது ஐந்துநிலை அடுக்குக் கொண்டதாகும்.  40 அடி உயரத்தில் பெரிய நுழைவாயிலுடன் உள்ளது. இராஜகோபுரத்தை ஸ்தூல லிங்கம் என்று கூறுவார்கள். இராஜகோபுரத்தின் மேல் ஏழு ஸ்தூபிகள் உள்ளன.  இதில் உள்ள ஐந்து நிலைகளும்- அடுக்குகள் மெய், வாய், கண் ,மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளையும் குறிக்கும். ஐம்பொறிகளாலும் இறைவழிபாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த அமைப்புள்ளது. திருநாவுக்கரசர் பெருமான், ``தலையே நீ வணங்காய்`` என்னும் பதிகத்தில் இக்கருத்துப் பற்றிப் பேசுகிறார். கோபுரத்தின் கிழக்குப் பகுதியில் விநாயகர் திருவுருவங்களும், மேற்குப் பகுதியில் விஷ்ணு தொடர்பான உருவங்களும், தெற்குப் பகுதியில் தெட்சிணாமூர்த்தி முதலிய சிவன் தொடர்பான திருவுருவங்களும் வடக்குப் பகுதியில் முருகன் தொடர்பான உருவங்களும் வண்ணம் தீட்டப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
``உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே``
 
என்னும் திருமந்திரம் கூறும் கோயில் தத்துவம் இங்கு கருதத்தக்கது.
 
      மேலும் கோயிலுள்ளே இருக்கும் 16 தூண்களில் 16 கணபதி திருவுருவங்கள் வண்ணக் கோலத்துடன் வைக்கப்பட்டுள்ளன. திறந்தவெளி அமைப்பிலுள்ள கோயில் கட்டடத்தைத் தாங்கி நிற்கும்  இத்தூண்களிலுள்ள 16 கணபதிகளும் வழிபடும் பக்தர்களுக்கு 16 பேறுகளையும் தருவர் எனக் கருதலாம்.  1. பாலகணபதி .2.தருண கணபதி 3. பக்தகணபதி 4. வீரகணபதி 5. சக்திகணபதி, 6.துவிஜ கணபதி 7. சித்தி கணபதி 8. உச்சிஷ்ட கணபதி 9. விக்னகணபதி 10. க்ஷிப்ரகணபதி 11. ஹேரம்ப கணபதி 12. லக்ஷ்மிகணபதி 13. மஹாகணபதி 14. விஜய கணபதி 15. நிருத்த கணபதி 16. ஊர்த்துவ கணபதி என்பவை இந்த 16 கணபதி உருவங்கள் கோயிலைச்சுற்றுப் புறகாரம் வருவார் கண்களில் இவை புலப்படும்.
 
      ``கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
      கணபதி என்றிடக் காலனும் கைதொழும்  
      கணபதி என்றிடக்  கருமம் ஆதலால்
      கணபதி என்றிடக்  கருமம் இல்லையே``
 
கணபதி பெயரை உச்சரித்த வண்ணம் திருச்சுற்று வலம் வருதல் நலம் பயக்கும்.
 
பூசைச் சிறப்பு
 
      இந்தக் கோயிலில் காலையில் 7.30 மணிக்குக் காலசந்தி பூசையும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூசையும், மாலை 5.30 மணிக்கு சாயரக்ஷை பூசையும் நடைபெறும். இந்த மூன்று காலமும் அபிடேகம், அலங்காரம் உண்டு. இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படும். இந்தக் கோயிலுக்குப் பண்டாரம் பூசை செய்கிறார். சகஸ்ரநாம அருச்சனை, கணபதிஹோமம் முதலியவற்றைச் செய்ய இரண்டு சிவாச்சாரியார்களும் உள்ளனர். வெள்ளிக்கிழமை, சதுர்த்தி முதலிய சிறப்பு வழிபாட்டு நாட்களில் வெள்ளி அங்கி சாத்தப்படுகிறது. சந்தனக்காப்பு அலங்காரமும் செய்யப்படுகிறது. கணபதிஹோமம் -விநாயகர் வேள்வியும் நடைபெறுகிறது. பிரசாதம் போடுவதற்கு ஓர் அய்யரும் உண்டு. நாதஸ்வரம், தவில் வாசிக்க இரண்டு மேளகாரர்கள் உள்ளனர். இவர்கள் தமிழகத்திலிருந்து வந்தவர்கள். தமிழ் அருச்சனையும் செய்யப்படுகிறது.
 
விழாச் சிறப்பு 
 
      ஆவணி மாதத்தில் வரும் விநாயக சதுர்த்தியே இந்தக் கோயிலில் பெருவிழாவாக உள்ளது. அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். உற்சவ மூர்த்தி என ஒன்று இங்கு இல்லாததால் மூல மூர்த்திக்கே எல்லாச் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படும். அன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி அன்று நாள் முழுதும் சிறப்புப் பூசைகள் இடம்பெறும். வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல், சிங்கப்பூர் தேசியநாள் முதலிய நாட்களிலும் சிறப்பு வழிபாடு உண்டு.  மார்கழி மாதத்தில் திருப்பள்ளி எழுச்சி பூசை நாள்தோறும் காலை 5.30 மணிக்கு நடைபெறும். திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி உண்டு.
 
தைப்பூசத்தின் போது தைப்பூசத்திற்கு முதல்நாள் தேங்ரோடு கோயிலில் இருந்து ரதத்தில் முருகப்பெருமான் காலையில் புறப்பட்டு இங்கு வந்து சேர்வார். மாலை வரை இங்கிருந்து வழிபாடுகள் நடத்தப்பட்ட பின்னர் இந்தக் கோயிலில் உள்ள வேலை இந்தக் கோயில் பண்டாரம் தாங்கி எடுத்துவர இரதத்தில் தேங்ரோடு கோயிலுக்கு நகரத்தார் காவடிகள், பக்தர்கள் புடைசூழ  நகர் வலமாக வந்து சேர்வார். நகரத்தார்கள் காவடிகள் கட்டி இங்கே வைத்துக் காவடிப் பூசை செய்து இரதத்துடன் காவடி எடுத்துச் செல்வார்கள். இது இந்தக் கோயிலில் நடைபெறும் ஒரு முக்கியமான விழா நிகழ்ச்சியாகும்.
 
இலக்கியச் சிறப்பு
 
      சிங்கப்பூர் பிரபந்தத் திரட்டு என்னும் தலைப்பில் வன்றொண்டர் அவர்களின் மாணாக்கருள் ஒருவராகிய காரைக்குடி ராம. கு. மெ. மெய்யப்ப செட்டியாரால் இயற்றப்பெற்று நாச்சியாபுரம் பெரிய கருப்பஞ்செட்டியார்  குமாரர் முத்தையா செட்டியார் கேட்டுக் கொண்டபடி  சென்னை மதராஸ் ரிப்பன் அச்சு இயந்திர சாலையில் அச்சிடப்பெற்று விகாரி வருடம் மார்கழி மாதம் (1898)வெளியிட்ட நூலொன்று உள்ளது. அந்நூலில் அடங்கியுள்ள பிரபந்தங்களில் ஒன்று `சிங்கப்பூர் சித்தி விநாயகர் நவமணிமாலை`. இதில் ஒன்பது பாடல்கள் உள்ளன.  ஒன்பது பாடல்களும் ``சிங்கையம்பதியில் சிறந்தினிது அரசு வீற்றிருக்கும்,  சித்தர்கள் இதயப் புத்தவர் அகலாச் சித்தி விநாயக மணியே`` என்னும் ஈற்றடிகளைக் கொண்டு விளங்குகின்றன. இருப்பினும்  தெண்டாயுதபாணி கோயில் சிவன் சன்னதியில் வலப்புறம்  உள்ள சித்திவிநாயகரைப் பற்றியதே ஆகும். 
 
      அண்மையில் நகரத்தார் இளைய கவிஞர்கள் அழகுசுந்தரம், சக்திகுமார் போன்றவர்கள் இவ்விநாயகர் மீது கவிதைகள் இயற்றியுள்ளனர்.  சிங்கப்பூரின் மூத்த கவிஞர் வெண்பாச் சிற்பி இக்குவனம் இந்த விநாயகர் மீது பாடிய இரதபந்தமும், சிங்கப்பூரின் புகழ்பெற்ற கவிஞர் பாத்தென்றல் முருகனடியான் பாடிய லயன்சித்தி விநாயகர் திருப்பள்ளி எழுச்சிப்பாடலும் புலவர் சோம. இராமசாமி இயற்றிய விநாயகர் மும்மணி மாலையும் பாத்தூரல் முத்துமாணிக்கம் இயற்றிய சித்தி விநாயகர் கீர்த்தனையும், இராம. வயிரவன், சித. அருணாசலம் ஆகியோர் இயற்றிய கவிதைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.
 
வழிபாட்டுச் சிறப்பு
       
இறைவனை மனத்தால் நினைத்து, வாயால் அவன் புகழ்பாடி, உடலால் அவனுக்குரிய பணிசெய்வதே வழிபாடகும்.  இத்தகைய வழிபாட்டினைச் செய்யும் போது இறைவன் ``வேண்டுவார் வேண்டுவதையே ஈவான் கண்டாய்````வேண்ட முழுதும் தருவோய்`` என்னும் திருமுறை வாக்கிற்கு இணங்க எல்லாம் தருகிறான். இந்த லயன் சித்தி விநாயகப் பெருமானும் வழிபடும் அடியார்களுக்குத் ``திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும் கருணை பூக்கவும்`` செய்கிறான். அவ்வையார் கூற்றுப்படி
 
      ``வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் . .மாமலராள்
       நோக்குண்டாம் .மேனி நுடங்காது- பூக்கொண்டு
       துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
      . தப்பாமல் சார்வார் தமக்கு``
 
மேலும் ``திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும்:செஞ்சொல்
       பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்:
       ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
       காதலால் கூப்புவர்தம் கை.``
 
என்னும் கபிலர் வாக்கிற்கேற்ப வேண்டுவார்க்கு வேண்டும் வரங்களைத் தந்தருளும் விநாயகராக இவர் விளங்குகிறார். எனவே வேலைக்குச் செல்லும் அன்பர்கள் நாள்தோறும் அல்லது திங்கட்கிழமை தோறும்இக்கோயிலில் வந்து வழிபாடு செய்கின்றனர். வாரந்தோறும் வருவதை வழக்கமாகக் கொண்டோர் பலர் உள்ளனர். பக்தர்கள் பலர் 108 சுற்று(புறகாரம்) வழிபாடியற்றி வேண்டும் வரங்களைப் பெற்றுள்ளனர். இவ்வாறே 16, 51, 108 என்று சிதறுகாய் உடைப்போரும்  பலர் உள்ளனர். மாதந்தோறும் கூட்டாகச் சேர்ந்து கணபதி ஹோமம் செய்தலும், அன்னதானம் வழங்கலும் சந்தனக்காப்பு வழிபாடு செய்தலும் வரவர அதிகமாகவே நடைபெற்று வருகின்றன. அன்பர்கள் பலர் இவ்விநாயகப் பெருமான்அருளால் வழக்குகளில் வெற்றிபெற்றது பற்றியும் வணிகம், தொழில், வேலை ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டது பற்றியும் குடும்ப வாழ்வு வளம் பல உடையதாய் விளங்கியது பற்றியும் சொல்லக் கேட்டிருக்கிறேன். என் அனுபவத்திலும் கண்டிருக்கிறேன். சீனர்கள் பலர் வந்து வழிபாடு செய்து பலன் பெற்று வருவதையும் பார்த்திருக்கிறேன். வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் இக்கோயிலில் காலை மாலை இருவேளையும் மிகுதியாக இருக்கும்.
 
நகரத்தார் போற்றும் சிறப்பு
 
நகரத்தார்கள் பொதுவாக விநாயகரை வணங்காமல் எந்த நற்காரியமும் செய்யமாட்டார்கள். பிள்ளையார் சுழி போடாமல் எதனையும் எழுத மாட்டார்கள்.பிள்ளையார்பட்டி என்னும் கோயில் பிரிவு என ஒன்றே நகரத்தார் கோயில் பிரிவுகளில் உள்ளது. சிங்கப்பூரிலுள்ள நாட்டுக்கோட்டை செட்டியார்கள் லயன் சித்தி விநாயகரிடம் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருப்பது அவர்களின் கணக்குப் புத்தகங்களில் முதல் வரியைப் பார்த்தாலே தெரியும். லயன்சித்தி விநாயகர் வரவு என்று தான் கணக்கு ஆரம்பமாகும். புதிய தொழில்கள் தொடங்கும் போதும், சிறப்பு நாட்களில் கணக்கு எழுதும் போதும் இறைவன் பெயரால் கணக்கில் வரவு வைப்பது செட்டியார்களின் தொன்று தொட்டு வரும் மரபாகும். சிங்கப்பூரிலுள்ள நகரத்தார்கள் லயன் சித்தி விநாயகர் பெயரால் வரவு வைத்த பிறகுதான் அவரவர் வழிபடும் தெய்வங்களின் பெயரால் வரவு வைப்பார்கள்.
 
மேலும் வெளிநாட்டுக்குப் போகும் போதும், திரும்ப வரும்போதும் முதலில் லயன் சித்தி விநாயகரை வழிபட்ட பின்னரே மற்ற பணிகளை மேற்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். சிங்கப்பூர் நகரத்தார் மன்றம் தொடங்கிய! பின்னர் (1980) சில ஆண்டுகள் நகரத்தார்களுக்கே உரிய பிள்ளையார் நோன்பு விழா இக்கோயிலில் தான் நடைபெற்று வந்தது. மேலும் சில ஆண்டுகள் வார வழிபாடும் ஞாயிறு தோறும் நடைபெற்றது.
தெண்டாயுதபாணி கோயிலில் நடக்கும் எந்தச் சிறப்பு நிகழ்ச்சியும்  முதலில் லயன் சித்தி விநாயகர் கோயில் வழிபாட்டிற்குப் பின்னரே நடக்கும்.  வருடப்பிறப்பு, திருக்கார்த்திகை, பொங்கல், தீபாவளி முதலிய நாட்களில் முதல்வழிபாடு லயன் சித்தி விநாயகருக்குத் தான்.
 
இந்தத் திருப்பணிக்கும் குடமுழுக்கு விழாவுக்கும் நகரத்தார்கள் பலர் மனமுவந்து நன்கொடைகள் தாராளமாகக் கொடுத்துள்ளனர்.
 
 
பிற கோயில் தொடர்புச் சிறப்பு
 
சௌத்பிரிட்ஜ் ரோட்டிலுள்ள மாரியம்மன் கோயில்தான் சிங்கப்பூரில் மிகப் பழமையான கோயில் இக்கோயிலில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தீமிதித் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அப்போது தீ மிதிக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதிக்கும் முதல் நாள் இரவு இந்தக் கோயிலில் வந்து விநாயகரை வழிபட்டு விரதம் நன்கு இடையூறின்றி நிறைவேறப் பிரார்த்திப்பார்கள்.  மேலும் தீ மிதியை ஒட்டி மாரியம்மன் கோயிலிலிருந்து புறப்படும் திரௌபதி அம்மன் வெள்ளி ரதம் முதலில் இந்த விநாயகர் கோயிலுக்கு வந்து சிறப்புச் செய்யப்படுவது சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. சிராங்கூன் ரோட்டிலுள்ள வடபத்திர காளியம்மன் கோயிலிலுள்ள இராமர் இராம நவமி அன்று இரதத்தில் இந்தக் கோயிலுக்கு வருவது சென்ற  இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறது.
 
 
நிர்வாகச் சிறப்பு
 
      கோயில் திருப்பணி, அறக்கட்டளை , நிர்வாகம் ஆகியவற்றுக்குப் பேர் போன நகரத்தார்களின் மேற்பார்வையில் இக்கோயில் சென்ற பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இப்போது  ROS 183/2003 REL என்ற எண்ணில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட செட்டியார் கோயில் குழுமம்’  `Chettiars’ Temple Society` என்னும் அமைப்பின் மேற்பார்வையில் இக்கோயில் இயங்கி வருகிறது. இக்கோயிலுக்கெனத் தனி அலுவலகம் கோயிலில் உள்ளது. இக்குழுமம் தேங்ரோடு தெண்டாயுதபாணி கோயிலையும் இந்த லயன் சித்தி விநாயகர் கோயிலையும் நிர்வாகம் செய்து வருகிறது.
 
முடிவுரை
 
      மேற்கண்ட பல சிறப்புகளைக் கொண்ட இந்த லயன் சித்தி விநாயகர் கோயில் திருப்பணிகளின் நிமித்தம் 27.8. 2007 அன்று பாலாலயம் (இளங்கோயில்) செய்யப்பட்டது. இக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெரு விழா(கும்பாபிஷேகம்) பிள்ளையார்பட்டி விகாச ரத்னா டாக்டர் பிச்சைக் குருக்கள் அவர்கள் தலைமையில் ஆறுகால யாகசாலை பூசைகளுடன் திருமுறையும் திருமறையும் முழங்க சர்வஜித் ஆண்டு கார்த்திகைத் திங்கள் 30 ஆம் நாள்(16-12-2007) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.  தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகமும் நடைபெற உள்ளது. டாக்டர் பிச்சைக் குருக்கள் சிவாச்சாரியார்களைப் பயிற்றுவிக்கும் கல்லூரி நிறுவுனரும்  முதல்வரும் ஆவார். மேலும் பிள்ளையார்பட்டி தான் தமிழகத்தில் தொன்மையான விநாயகர் தலமாகும்.
 
  ``வேழ முகத்து விநாயகனைத் தொழ
   வாழ்வு மிகுத்து வரும்.
 
 தஞ்சம் என்றுனைச் சார்ந்தனன் எந்தை நீ
     தானும் இந்தச் செகத்தவர் போலவே
 வஞ்சம் எண்ணி இருந்திடில், என் செய்வேன்
    வஞ்சம் அற்ற மனத்துறை அண்ணலே
 பஞ்சபாதகம் தீர்த்தனை என்று நின்
   பாதபங்கயம் பற்றினென்: பாவியேன்:
 விஞ்ச நல்லருள் வேட்டித் தருதியோ
   விளங்கு சித்தி விநாயக வள்ளலே.`` - இராமலிங்க சுவாமிகள்   அருட்பா.
                
 
 
 
சிவமயம்
 
 சிங்கப்பூர் ஸ்ரி லயன் சித்தி விநாயகர் கோயில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களால் இவ்விடத்தில் கட்டப்பட்டு முதல் கும்பாபிஷேகம் குரோதன ஆண்டு வைகாசி மாதம் 19ஆம் நாள் (1-6-1925) நடத்தப்பட்டது. பின்னர் கும்பாபிஷேகங்கள் இராட்சத ஆண்டு ஐப்பசி மாதம் 23ஆம் நாள் (14-11-1975) அன்றும்,
சுக்கில ஆண்டு ஐப்பசி மாதம் 25ஆம் நாள் (10-11-1989) அன்றும்
நடைபெற்றன. ஐந்து அடுக்கு ராஜ கோபுரத் திருப்பணி செய்யப்பட்டு
சர்வஜித் ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆம் நாள் (16-12-2007) அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 
 
 SINGAPORE SRI LAYAN SITHI VINAYAGAR TEMPLE WAS BUILT BY NATTUKOOTTAI CHETTIARS HERE AND THE FIRST COSECRATION CEREMONY WAS HELD ON 1ST JUNE 1925. SUBSEQUENT CONSECRATION CEREMONIES WERE HELD ON 14TH NOVEMBER 1975 AND 10TH NOVEMBER 1989. RECONSTRUCTED WITH 5 STOREY RAJAGOPURAM AND CONSECRATED ON 16TH DECEMBER 2007.
 
 
 
 
 
10 ‘Upadhesa Pudumai’
 
In the Nagarathar culture, it shows from the 'Upadhesam Keyttal' (‘Hearing Spiritual Instructions ’ - in other words – ‘Observe mystic words’) that, they have given primary importance to religious prayers. Among Nagarathars, it has been an important practice for each and every male and female to ‘Hear Upadhesam’. Even now, hearing Upadhesam prior to 60th anniversary has been a customary practice. But in ancient times, Nagarathars has been observant in hearing upadhesam even from their young ages.
 
In Kaviripoompatinam Pattinathar festival, the celebration had the order of events as , first day Pattinathar birth and raising, second day hearing upadhesam and third day marriage. This shows that even before marriage it has been our practice to hear upadhesam.
 
CAMAYAM(Religion),  VISHESHAM (Special), NIROOVAANAM ( enlightenment), ACHARYA ABISHEGAM are the four STAGES of Initiation of a disciple into the mysteries of the Saiva religion, wherein, Upadhesam is the first stage of Religious vow (CAMAYAM). Guru teaches this ‘Thiruvainthelutthu moola manthram’ ( upadhesam ) to the disciple, from then, should follow the rituals every morning and evening and apply ‘Thiruneeru’  ( holy ash ). The sanctum for male is being run in ‘Paatharakkudy’ and for females is in ‘Thulaavur’.
 
Hearing Upadhesam has been celebrated as a festival and family functions in the nagarathar community. It has been celebrated as a family function as ‘Upadhesa Pudumai’ with the agnates committing their presence by contributing money.  In every nagarathar town, they invited a Guru and with auspicious music, fireworks and procession, the whole town hear upadhesam and celebrated this as a festival. In ‘Dhanavaisya Oozhiliyan’ weekly magazine, 30.06.1922 and 7.7.1922 editions described the ‘Upadhesam Keyttal’ festival celebrated in Karaikudi.  In Devakottai town Sivan temple, there is a big memorial hall in the name of ‘ Maha Mantra Upadhesa Kottagai’. This was said to be built to hear Upadhesam by inviting ‘Paatharakkudi Swamigal’ ( A Guru from Paatharakudi town ) here.
 
 
There is a note seen in the book ‘Nagaratharum Upadhesamum’ saying that for those nagarathars leaving to Burma after hearing upadhesam in the Upadhesam Keyttal festival arranged in their town, the Keezhapoongudi Nagarathars acquired a court stay order to stop the ship for two days from leaving to Burma.
 
For those nagarathar going abroad, there is a custom of writing in their pay agreement
( CampaLac ciiTTu) as (‘ Upadhesa mutthi vaithaal mudhalaali selavil vandhu pogirathu’ ) the employer supposed spend the to and fro expenses of travelling for upadhesam keyttal.
 
 Compiled by Dr SP. Thinnappan from the Nagaraththaar Encyclopedia
 
 
 
11 திருக்காளத்தியும் நகரத்தாரும்
சுப. திண்ணப்பன்
 
     இந்தியாவில்  ஆந்திர  மாநிலத்தில்  திருப்பதிக்கு  அடுத்து  விளங்கும்
திருக்காளத்தி  என்னும்  தலம்  ஸ்ரீகாளத்தி, சீகாளத்தி என்றும் வழங்கப்படும்.
சீ = சிலந்திப்பூச்சி, காளம் = பாம்பு, அத்தி = யானை இம்மூன்றும்  வழிபட்டதால் சீகாளத்தி என்னும் பெயர் பெற்றது. தென் கயிலாசம் என்று இதனைச் சிறப்பித்துச் சொல்வார்கள்.அன்பின் வடிவமாகத் திகழ்ந்த கண்ணப்ப நாயனார் சிவபெருமானை வழிபட்டு ஆறுநாளில் முக்தி அடைந்த இடம் இது. கோயிலுக்கு  அருகில்  கண்ணப்பர் மலை உள்ளது. அம்மலையில் கண்ணப்பர்
சிலை உள்ளது. பஞ்ச பூதத் தலங்களில் வாயு(காற்று) தலம் இது. கோயில் கருவறையில் இறைவன் திருமுன்னர் உள்ள திருவிளக்குகளில் ஒன்று எப்போதும் காற்றால் மோதப்பெற்றாற் போல அசைந்துகொண்டெ இருக்கும். மேற்கு நோக்கிய சன்னதி இங்கு உள்ளது. இறைவன் பெயர் காளத்திநாதர். இறைவி பெயர் ஞானப்பூங்கோதை. சம்பந்தர், நாவுக்கரசர். சந்தரர் மூவரும் இத்  தலத்தைப்  பாடி  வழிபட்டுத்  தேவாரப்பாடல்களை    இயற்றியுள்ளனர்
நக்கீரரும் இத் தலத்தை வழிபட்டுப்¢ பாடல்களை இயற்றியுள்ளார்.இந்திரன், இராமன், முசுகுந்தன் ஆகியோரும் வழிபட்டதாகக் கூறுவர்.
 
     இந்தக்  கோயிலுக்குப்  பெரும்  பொருட்  செலவில் திருப்பணி செய்து
வாகனங்கள்,அணிகலன்கள் பலவற்றை வழங்கியவர் தேவகோட்டை மெ.அரு.நா இராமநாதன் செட்டியார் (பெரிய மைனர் வீடு). இவர் சிவ பூசை செய்தவர். ஒரு மகா சிவராத்திரி நாளன்று ஒரு காலப் பூசையின் போது தம் மனைவியாருடன் திருக்காளத்தியில் இறைவியைத் தெரிசனம் செய்யும்போது அம்மனின் திருமாங்கால்யம் (தாலி¢) பெருகிக் கீழே விழுந்ததைக் கண்டார். உடனே சிறிதும் சிந்திக்காமல் தம் மனைவியின் கழுத்திலிருந்த திருமாங்கால்யத்தை வாங்கி அம்மனுக்குச் சாத்தச்செய்தார். பிறகு அன்று இரவே சிவ பூசை செய்யும்போது இறைவன் இணையடி சேர்ந்தார். இவரது சிலை கோயிலுக்கு அருகில் உள்ள  பொன்முகலி ஆற்றின் கரைப் படித்துறை வாயிலில் உள்ளது. இவரது மரபினர் ஒருவர்  இக்கோயில் அறங்காவலர் குழுவில் இடம்பெறுகிறார். மேலும் நகரத்தார்கள் இந்தக் கோயிலுக்குள் செல்ல நுழைவுச் சீட்டுக் கட்டணம் இல்லை என்று கூறுவார்கள். மெலும் இக்கோயிலைச் சுற்றி உள்ள நகர்ப் பகுதியில் நகர விடுதிகளும் உள்ளன. நகரத்தார்களின் பசுமடம்,வேதபாடசாலை முதலியனவும் உள்ளன. மேலும் நகரத்தார்களின் பெயர்களில் காளத்திநாதன். திருக்காளத்தி, ஞானாம்பாள், ஞானம், கோதை, கண்ணப்பன், கண்ணம்மை முதலிய பெயர்கள் இத்தலத்துடன் தொடர்புடையவை. கண்ணப்பர் தம் கண்ணை இறைவனுக்குக் கொடுப்பதற்கு முன்னர் வழங்கிய திண்ணப்பன் என்னும் பெயரையும், திண்ணன் என்னும் பெயரையும் தேவகோட்டை நகரத்தார்களிடையே காணலாம். திண்ணன் செட்டி ஊரணி என்று ஓர் ஊரணியும் அங்கு உண்டு.
 
மேற்கொண்டு இத்தலம் பற்றித் தகவல் அறியக் கீழ்க்கண்ட
இணையத் தளங்களைக் காண்க.
http://www.geocities.com/gurunathanuk/Srikalahasti.htm
http://www.andhraupdate.com/srikalahasthi.htm
http://www.primetimeprism.com/interviews/ramarao.html
 
  
   

 
 
 12   .அனைத்துலக நகரத்தார் மாநாடு 2007,    கோலாலம்பூர்
கலந்துரையாடல்
தலைப்பு
நகரத்தார் பண்பாடு, மரபு, நன்னெறிக் கூறுகள்:
இவை என்றும் நிலைத்திருக்குமா?
Nagarathar’s culture, tradition and values -
Is it heading towards extinction?
தலைமையுரை
பேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பன், சிங்கப்பூர்
 
பண்பாடு, நாகரிகம், கலாசாரம் ஆகிய சொற்கள்  culture என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாகத் தமிழில் வழங்குகின்றன. பண்பாடு என்னும் சொல்லை ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார்தான் 1937இல் முதன்முதலாகத் தமிழில்
வழங்கியதாகப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை குறிப்பிடுகிறார். பண்பாடு என்னும் பொருளில் பழந்தமிழ் இலக்கியங்களில் கையாளப்பெற்ற சொல் பண்புஎன்பதாகும். அதற்குக் குணம், விதம், இயல்பு, முறை என்பதே பொருளாகும். திருவள்ளுவர் பண்புடைமை என்னும் 100வது அதிகாரத்தில் அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்குஎன்று விளக்கம் தருகிறார். பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்என்று சங்க இலக்கிய நூலாகிய கலித்தொகை( நெய்தற்கலி 16) அதாவது  உலக நடைமுறையை அறிந்து நடத்தல் என்று வரையறை கூறுகிறது.. பண்படு என்னும் வினையடிச் சொல்லின் விளைவே பண்பாடு ஆகும். கடினமான நிலத்தைப் பயிடுவதற்காகப் பண்படுத்துகிறோம். அதுபோல உள்ளத்தை, உரையை, உடலை நல்வாழ்விற்காகப் பண்படுத்துவதுதான்-  செம்மைப்படுத்துவதுதான் பண்பாடு.இத்தகைய செம்மை சான்ற பண்புடையவர்கள் இருப்பதால் தான் உலகம் அழியாமல் இன்னும் இருக்கின்றது என்பது பழந்தமிழ்ச் சான்றோர்களின் நம்பிக்கை, “பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” (996) என்பது குறள்.
 
நாகரிகம் என்னும் சொல் நகர் என்னும் சொல்லடிப்படையில் தோன்றியது. இதுவும் உயர்ந்த மக்கள்( civilized people) ஒழுக்கத்தை உணர்த்தப் பயன்பட்டது என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்களாகிய நற்றிணை, திருக்குறள் வாயிலாக அறிகிறோம். முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்” (நற்றிணை 355) “பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்” ( குறள் 580) என்பன சான்றுகள். ஆனால் இன்று நாம் நாகரிகம் என்னும் சொல்லை civilization என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாக வழங்குகிறோம். கிராமப் புறத்துக்கு எதிரான நகரத்தோடு தொடர்புடைய ஆடம்பரப் பழக்கங்களையும், உணவு, உடை, உறையுள் போன்றவற்றிலுள்ள புதுமைத் தன்மைகளையும் குறிக்க இச்சொல் பயன்படுகிறது.
 
கலாசாரம் என்னும் சொல் கலை என்னும் தமிழ்ச் சொல்லும் ஆசாரம் என்னும் சமஸ்கிருதச் சொல்லும் கலந்த இணைப்பால் உருவான ஒன்று. கலை என்பது ஆங்கிலத்தில் art என்பதைக் குறிக்கும். ஆசாரம் என்பது நன்னெறிப் பண்புகளை அதாவது ஆங்கிலத்திலுள்ள  values என்பதை உணர்த்தும். இதனை
ஆசாரக்கோவை என்னும் நீதிநூல் கூறும் நன்றி அறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியொடு ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை நல்லினத்தாரொடு நட்டல் இவை எட்டும் சொல்லிய ஆசாரவித்துஎன்னும் செய்யுள்வழி அறிகிறோம். கலாசாரம் என்பது கலைசார்ந்த ஒழுக்கம் ஆகும். கலை இல்லாத ஒழுக்கம் சுவை இல்லாத உணவு போன்றது. ஒழுக்கம் இல்லாத கலை சத்தில்லாத உணவைப் போன்றது.
கலையும் ஒழுக்கமும் வாழ்வில் கலந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வந்ததுதான் நகரத்தார் வரலாற்றை உணர்த்தும் சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காப்பியம்.
 
மரபு என்னும் சொல்லை ஆங்கிலத்திலுள்ள tradition என்னும் சொல்லுக்கு ஈடாகத் தமிழில் வழங்கலாம். இச்சொல்லுக்கு முறைமை, சான்றோர் சொல்வழக்கு முறை, பழைமை, வமிசம், பாரம்பரியம், இயல்பு, இலக்கணம் ,நல்லொழுக்கம், பெருமை, மேம்பாடு, நியாயம், வழிபாடு, பருவம் எனப் பதிநான்கு பொருளைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி கூறுகிறது. தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வரும் முறைமையே மரபு எனக் கூறலாம்.
 
மேற்கண்ட சொற்பொருளுக்கேற்ற கூறுகள் அனைத்தும் நம் இனத்தைக் குறிக்கும் நகரத்தார் என்னும் சொல்லிலேயே அடங்கியுள்ளதைக் காண்போம். நகரத்தார் என்னும் சொல் நகர், நகரம் என்னும் சொற்களின் அடிப்படையில் தோன்றிய ஒன்றாகும். நகர் என்னும் சொல்லுக்குச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி 1. நகரம்(town,city), 2. மாளிகை(house, abode, mansion), 3.கோயில்(temple,sacred shrine), 4. அரண்மனை(palace), 5. சடங்குசெய்யும் இடம்(dais for performing ceremonies),  6. விசேடங்கள் நிகழும் மண்டபம், (A furnished hall or place, decorated for ceremonial functions), 7. மனைவி (wife) என்னும் ஏழு பொருளைத் தருகிறது. நகரம் என்னும் சொல்லுக்கும் 1. பேரூர்(city,town, capital, metropolis), 2. அரண்மனை(palace), 3. கோயில்(temple), 4. வாழிடம்(Residing place) என்னும் நான்கு பொருள் தருகிறது. இவற்றின் வழி நகரத்தார் என்னும் சொல் உணர்த்தும் சிறப்பினைப் பார்ப்போம்.
 
  1. நகர் என்னும் சொல் நகரம் பேரூர் என்பதை உணர்த்தும் என்பதற்குச் சான்று நெடுநகர் வினைபுனை நல்லில்என்னும் புறநானூற்றுச் செய்யுள் 23இல் உள்ள ஓர் அடியாகும். இது பழங்காலத்தில் பூம்புகாராகிய காவிரிப்பூம்பட்டினத்தையே குறிக்கும் என்பதைப் பத்துப் பாட்டிலுள்ள பட்டினப்பாலை என்னும் நூலும், சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய காப்பியங்களும் நன்கு உணர்த்தும். நாகநீள் நகரொடு நாக நாடதனொடு போகநீள் புகழ்மன்னும் புகார் நகரது தன்னில்” (மங்கலவாழ்த்துப்பாடல் 21-22) கோவலன் கண்ணகி வாழ்ந்ததாக இளங்கோவடிகள் அறிமுகப்படுத்துகிறார். சுவர்க்கலோகம், நாகலோகத்தோடு ஒத்த புகழும் போகமும் கொண்ட புகார் நகரம் என்பது இதன் பொருளாகும். எனவே நகரத்தார் என்னும் சொல்லில்  காவிரிப்பூம்பட்டினத்தை ஊராகக் கொண்டு வாழ்ந்தவர்கள்  என்னும் வரலாற்றுச் சிறப்பினை உணர முடிகிறது.
     
  2. நகர் என்னும் சொல் மாளிகை என்பதை உணர்த்தும் என்பதற்குச் சான்று பாழி அன்ன கடியுடை வியநகர்  என்னும் அகநானூற்றுச் செய்யுள் 15இல் உள்ள ஓர்  அடியாகும். நகரத்தார்கள் புகார் நகரில் இருந்தபோதே ஏழடுக்கு மாளிகை வீடு கட்டி வாழ்ந்தனர் என்பதைச் சிலப்பதிகாரத்தில் மனையறம்படுத்த காதையில் வரும் நெடுநிலை மாடத்து இடை நிலத்து” (13)கோவலனும் கண்ணகியும் இருந்து இன்பம் துய்த்தனர் என்னும் செய்தியால் அறியலாம். நாட்டுக் கோட்டைச் செட்டியார்/நகரத்தார் என்னும் தொடர் கோட்டையனைய வீடு அவர்களின் ஓர் அடையாளச் சின்னம் என்பதைக் காட்டும். காசி போன்ற புண்ணியத் தலங்களில் உள்ள நகரச் சத்திரம், நகர விடுதிகளெல்லாம் அளவால் பெரியனவே.
     
  1. நகர் என்னும் சொல் கோயில் என்பதை உணர்த்தும் என்பதற்குச்
     சான்று முக்கட் செல்வர் நகர்என்னும் புறநானூற்றுச் செய்யுள் 
    6இல்   உள்ள ஓர் அடியாகும்.புகார் நகரிலிருந்து பாண்டிய நாட்டில் குடியேறிய காலத்திலிருந்து நகரத்தார்கள் கோயில்வழிக் குடிகளாயினர். ஒன்பது நகரக் கோயில்களே நாட்டுக் கோட்டைச் செட்டியார்களை ஏனைய செட்டியார்களிலிருந்து வேறுபடுத்தும் கூறாக விளங்குகின்றன. நகரம் என்பதும் கோயிலைக் குறிக்கும் சொல் என்பதை மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும்என்னும் சிலப்பதிகாரத் தொடர் காட்டும்.
     
     
     
     
    4. நகர் என்னும் சொல் அரண்மனை என்பதை உணர்த்தும் என்பதற்குச் சிலப்பதிகாரத்தில் நிதி துஞ்சு வியநகர்” (27:200) என்னும் தொடர் சான்றாகும். நகரத்தார் வீடுகளெல்லாம் செல்வம் கொழிக்கும் அரண்மனைகள் போலக் காட்சி அளிப்பனவே. ஏனெனில் அவர்கள் மன்னர் பின்னோராக விளங்கியவர்கள். மகுட தனவைசியர். தனவைசியர் என்னும் பெயர்களும் அவர்களின் செல்வச்சிறப்பை உணர்த்துவனவே.
     
    5. நகர் என்னும் சொல் சடங்குசெய்யும் இடம் என்பதை   உணர்த்தும் என்பதற்கு தூநகர் இழைத்துஎன்னும் சீவகசிந்தாமணித் தொடர் (2633) சான்றாகும். நகரத்தார்கள் திருமணச் சடங்கு செய்யும் இடத்தை மனை என்றும் .மனைபோடுதல் ஒரு சடங்கு என்றும்  இன்றும் வழங்குகிறார்கள்.
     
    6. நகர் என்னும் சொல் விசேடங்கள் நிகழும் மண்டபம்,  என்பதை   உணர்த்தும் என்பதற்கு அணிநகர் முன்னினானேஎன்னும் சீவகசிந்தாமணித் தொடர் (701) சான்றாகும். நகரத்தார்கள் திருமணம், சாந்தி போன்ற விசேடங்கள் செய்யும்போது தங்கள் வீட்டு முற்றங்களை மண்டபம் போலக் கொட்டகையால் அலங்கரிப்பதும், வீடுகளில் முன்மண்டபம்- ஹால்- வைத்துக் கட்டுவதும் வழக்கமாகவே உள்ளன.
     
    7 நகர் என்னும் சொல் மனைவி  என்பதை   உணர்த்தும் என்பதற்கு வருவிருந்தோம்பித் தன்னகர் விழையக்கூடிஎன்னும் கலித்தொகைத் தொடர்(8) சான்றாகும். நகரத்தார் இல்லங்களில் வீட்டு ஆச்சிக்குரிய மிகுதியான செல்வாக்கு சொல்லித்தெரியவேண்டியதில்லை.
     
    மேலும் பிற்காலச் சோழர் கால வரலாற்றில் ( கி.பி. 846-1279) நகரம் என்பது வணிகக் குழுவினரையோ வணிக செய்யும் ஊர்களையோ குறித்துள்ளது. திரை கடலோடியும் திரவியம் தேடும் நகரத்தார் குலத்தொழிலே வணிகம் தானே . தனவணிகர் என்பதும் அவர்களின் பெயர்களில் ஒன்று.
     
    இதுகாறும் கூறிய செய்திகளிலிருந்து நகரத்தார் என்னும் சொல் எவ்வளவு பொருளாழமுடையது என்பதையும், நம் வரலாறு, பண்பாடு, மரபு, நன்னெறிப் பண்புகள் ஆகிய அடையாளங்களை உணர்த்தும் ஒன்று என்பதையும் அறிந்துகொள்ளலாம். இந்த அடையாளங்கள், புலம்பெயர்ந்துறைதல், உலகமயமாதல், மகளிர் முன்னேற்றம்,, தகவல் தொழில்நுட்பம், உயர்கல்வி முதலியவற்றால் என்றும் அழியாமல் நிலைத்து நிற்குமா?என ஆராய்வோம்..
    நன்றி
     
    துணை நூல்; Tamil Lexicon Vol IV University of Madras, 1982
     
     
     
     
    அனைத்துலக நகரத்தார் மாநாடு
    கோலாலம்பூர்
     
    கலந்துரையாடல்
    தலைப்பு
    நகரத்தார் பண்பாடு, மரபு, நன்னெறிக் கூறுகள்:
    இவை என்றும் நிலைத்திருக்குமா?
    Nagarathar’s culture, tradition and values -
    Is it heading towards extinction?
    தலைமையுரை
    பேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பன், சிங்கப்பூர்    (1)
     
     
     
     
    Culture = பண்பாடு, நாகரிகம், கலாசாரம்
    பண்பாடு = பண்படுத்துதல்
    நாகரிகம் = நகர் தொடர்பான ஒன்று CIVILZATION
    கலாசாரம் = கலை + ஆசாரம் Art + Values     (2)
      
    Tradition = மரபு
    தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வரும் முறைமையே நடைமுறைப் பழக்க வழக்கங்களே     (3)
     
    நகரத்தார் என்னும் சொல் நகர், நகரம் என்னும் சொற்களின் அடிப்படையில் தோன்றிய ஒன்றாகும்.
                  (4)
     
     
     
    நகர்
     
     1. நகரம்(town,city),     
    2. மாளிகை(house, abode, mansion), 3.கோயில்(temple,sacred shrine),
    4. அரண்மனை(palace),
    5. சடங்குசெய்யும் இடம்(dais for performing ceremonies), 
    6. விசேடங்கள் நிகழும் மண்டபம், (A furnished hall or place, decorated for ceremonial functions),
    7. மனைவி (wife)     (5)
     
     நகரம்
     
    1. பேரூர்(city,town, capital, metropolis),
     2. அரண்மனை(palace), 3. கோயில்(temple),
     4. வாழிடம்(Residing place)  (6)
     
     
    நகரத்தார் சிறப்பு
     
    1 புகார் நகரில் வாழ்ந்தவர்கள்
    2 மாளிகை கட்டி வாழ்ந்தவர்கள்
    3 கோயில்வழிக்குடியினர்
    4 அரண்மனை வாழ்வினர்
    5 மனைபோடும் மாண்பினர்
    6 மண்டப (Hall) வீட்டினர்
    7. மனைவியை மதிப்போர்
    8. வணிகக் குழுவினர்     (7)
    புலம்பெயர்ந்துறைதல்
     உலகமயமாதல்
     மகளிர் முன்னேற்றம்
     தகவல் தொழில்நுட்பம்
     உயர்கல்வி     (8)
    நன்றி
     ......முற்றும்......

Dr S.P. Thinnappan