வெள்ளி, 2 மே, 2014

சமயம் - சைவம் - 3

 
தைப்பூசத்  திருவிழா

                தைமாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் ஒன்றாகக் கூடும் நாள் தைப்பூச நன்னாளாகும். இந்நன்னாளில்தான் தைப்பூச விழாக் கொண்டாடப் பெறுகிறது.  இப்பூச விழா தமிழகத்தில் மட்டுமின்றித் தமிழர்கள் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனேசியா முதலிய இடங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகிறது.  இவ்விழாவின் ஏற்றம் பற்றி ஈண்டுச் சிறிது சிந்திப்போம்.

குருவருள் -

                தேவர்களின் குருவாக விளங்கும் வியாழ பகவானாகிய பிரகஸ்பதி அறிவின் தேவதை என்று இந்துக்கள் நம்புவதால் பூச நட்சத்திரத்தை வணங்கினால் பிரகஸ்பதியின் அருள் கிடைக்கும் என்பர்.  தேவர்க்கு மட்டுமின்றி மூவர்க்கும் யாவர்க்கும் மூலமுதற் குருவாக - வாலறிவன் சொரூபமாக விளங்குபவன் முருகப் பெருமான்.  எனவேதான் குருவாய் வருவாய் அருள்வாய் குகனேஎன்றழைக்கிறார் அருணகிரியார். ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகும் திருவேரகப் பதியாகிய சுவாமி மலையில் முருகப் பெருமான் குருவாய் இருந்து பிரணவப் பொருளைச் சிவபெருமானுக்கு உரைத்த செய்தியும் சிந்திக்கத் தக்க ஒன்று.  அங்கு வியாழக்கிழமை அவனுக்கு உகந்த நாளாகக் கருதப் படுவதையும் காண்க.  எனவே முருகப் பெருமானைத் தைப்பூச நன்னாளில் வழிபடுவதால் குருவருள் பெறலாம்.  அதன்வழி இறைவன் திருவருள் அடையலாம்.

அறிவும் ஆற்றலும் -

                முருகப் பெருமான் சூரபன்மனாகிய அரக்கனை அழிப்பதற்குத் தம் தாயாகிய சத்தியிடமிருந்து வேல் பெற்ற நாள் தைப்பூச நன்னாள் என்பர். இது புராணக் கதையாக இருப்பினும் இதனூடே ஒரு தத்துவம் புதைந்து கிடக்கிறது.  இங்கே அரக்கன் என்பது ஆணவத்தை - அறியாமையை உணர்த்துகின்றது. ஆணவம் என்பதை யான் எனது என்னும் செருக்கு என்று சுருக்கமாகக் கூறலாம். ஆணவம் என்னும் அரக்கனை அழிக்க அறிவும் ஆற்றலும் தேவை.  இங்கே வேல் என்பது அறிவை - ஞானத்தைக் குறிக்கிறது.  வேல் என்பது நுனியில் கூர்மையாவது, இலை போன்று அகன்றது, பாயும் போது ஆழமாகச் செல்வது, கூர்மை, அகலம், ஆழம் ஆகிய மூன்று பண்புகளும் அறிவுக்கும் உண்டு.  ஆழ்ந்தகன்ற நுண்ணிய அறிவுதான் - ஞானம் தான் - ஆணவத்தை வெல்ல  உதவும் ஆயுதம் ஆகும்.  அந்த ஆயுதமும் ஆற்றல் பெற்றதாக அமைய வேண்டும்.  அந்த ஆற்றல்தான இங்கே சக்தி . மன உறுதியே சக்தி, வீரமே சக்தி.  எனவே சக்தியிடமிருந்து வேல் வாங்கிச் சூரபன்மனை அழித்தல் என்பது மனஉறுதியுடன் அறிவென்னும் - ஞானமென்னும் - ஆயுதத்தால்  ஆணவம் என்னும் அரக்கனை அழித்தல் என்பதைக் குறிக்கும்.  ஆணவம் அழியும்போது வீடுபேறாகிய பேரின்பம் கிட்டும்.  இந்தத் தத்துவத்தைத் தான் தைப்பூசத் திருவிih நமக்கு நினைவூட்டுகின்றது.  இந்த நினைப்புடன் தைப்பூசம் கொண்டாடப் பெறுதல் வேண்டும்.  வீரவேல், தாரைவேல், விண்ணோர் சிறை மீட்ட தீரவேல், செவ்வேல், திருக்கைவேல், வாரி குவித்த வேல், கொற்றவேல், சூர்மார்பும் குன்றும் துளைத்த வேல் என்று திருமுருகாற்றுப் படை வேலின் பெருமையை விளம்பும்.  இந்த நினைவைத் திருப்பூசவிழா  நமக்குத் தர வேண்டும்.

எழுஞாயிறு -

                தேவர்களுக்கு ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் ஈறாக இராக்காலம் என்றும், தைமாதம் முதல் ஆனி மாதம் ஈறாகப் பகற்காலம் என்றும் தை மாதம் ஒளியைத் தரக்கூடிய எழு ஞாயிறு தோன்றும் உதய காலம் என்றும் ஆன்றோர் கூறுவர்.  மார்கழி மாதத்தில் திருப்பள்ளி எழுச்சி நடைபெறுவதும் காண்க.  முருகப் பெருமான் விண்ணோர்க்கு மட்டுமின்றி மண்ணோர்க்கும் விடிஞாயிறு எனத் திகழ்பவன்.  உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு, பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டா அங்கு ஓஅற இமைக்கும் சேண்விளங் கவிரொளிஎன்று நக்கீரர் அவனை எழு ஞாயிறாகக் கண்டு இன்புறுகிறார். முருகப் பெருமானுக்கு இவ்வகையிலும் தைப்பூச நன்னாள் உகந்ததாகிறது.

அன்பே சிவம்_

                தைப்பூசம் சிவபெருமானுக்குரிய நாளாகவும் அமைகிறது. தைந்நீராடல் என்ற நோன்பு பற்றிச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தைப்பூச நன்னாளில் புண்ணிய நதிகளில் நீராடினால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இந்துக்களிடம் நிலவுகிறது. தஞ்சை மாவட்டத்தில் திருவிடை மருதூரில் தைப்பூச விழாவன்று கோயிலிலுள்ள சித்த தீர்த்தத்தில் முழுகுவதும். வில்வ மரத்தைச் சுற்றி வருவதும்  சுவாமி தெரிசனம் செய்வதும் பாவங்களைப் போக்கும் என்பர். பூசம் புகுந்தாடிப் பொலிந்து அழகாய ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோஎன்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதியில் தைப்பூச நாளன்று தீர்த்தமாடுவதும் நலம் தரும் என்று நம்புகின்றனர்.  இங்கே சிவம் என்பது அன்பையே குறிக்கும்.  அன்பே சிவம் என்பார் திருமூலர்.  எனவே அன்பு என்னும் பொய்கையில் நாம் அனைவரும் மூழ்கி நீராட வேண்டும். அவ்வாறு நீராடினால் சிவத்தின் திருவருள் நமக்குக் கிடைக்கும் என்பதைத் தைப்பூசவிழா நமக்கு நினைவுறுத்துகின்றது.  அன்பரால் அன்றித் தேவரும் மூவரும் அறிய ஒண்ணாச் சோதியான்என்பது திருவாசகம். எனவே அன்பு வழிபாடு ஒன்றே ஆண்டவனின் திருவடி அடைய ஏற்ற வழியாகும் என்பதையும் இவ்விழா நமக்குணர்ததுகிறது.

நடராசர் -

                தில்லைவாழ் அந்தணர்க்கும், மனுமகன் இரணியவர்மனுக்கும், பதஞ்சலி, வியாக்ரபாதர்க்கும், தில்லை நடராசப் பெருமான் தன் எல்லையில தனிப்பெரும் பேரின்பக் கூத்தாகிய திருநடனக் காட்சியைக் காட்டிய நாளும் தைப்பூச நன்னாளே ஆகும். தில்லையில் அத்திருவிழா இன்றும் கொண்டாடப் படுகிறது. தமிழர்கள் உலகுக்கு வழங்கிய சிற்ப நன்கொடைகளில் மிகச் சிறந்தது நடராச வடிவமே ஆகும். நடராச வடிவத்தில் பொதிந்து கிடக்கும் தத்துவ நுட்பங்கள் பலப்பல.  இதனை ஆனந்தகுமாரசுவாமி என்னும் அறிஞர் ஆக்கிய நூல் ஒன்றில் விளக்கி உலகுக்கு நடராச வடிவத்தின் உயர்வை உணர்த்தினார்.  நடராசப் பெருமானின் கையிலுள்ள உடுக்கை படைத்தல் தொழிலையும், அபயகரம் காத்தல் தொழிலையும், கையிலுள்ள தீ அழித்தல் தொழிலையும், ஊன்றிய திருவடி மறைத்தல் தொழிலையும், தூக்கிய திருவடி அருளல் தொழிலையும் குறிக்கும் என்பர்.  எனவே ஜந்தொழில் நுட்பம் உணர்த்தும் ஆனந்தத் தாண்டவ வடிவம் தோன்றிய நாளைத் தைப்பூசம் நமக்கு நினைவூட்டுகிறது.

ஞானசம்பந்தர் போற்றும் விழா -

                திருமுறைகள் என்பது சைவர்களுக்குரிய தமிழ் மறையாகும்.  இந்த மறையின் தொடக்கம் தோடுடைய செவியன் என்னும் திருப்பாடலாகும்.  இப்பாடலைப் பாடியவர் திருஞானசம்பந்தர்.  இறைவன் திருவருளைத் தம் மூன்றாம் ஆண்டில்  எய்தியவர்.  இத்தகைய ஞானசம்பந்தப் பெருமான் மயிலாப்பூரில் பூம்பாவையை எழுப்பப் பாடிய பதிகத்தில் மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக், கைப்பூச நீற்றால் கபாலீச்சுரம் அமர்ந்தான், நெய்ப் பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும், தைப்பூசம் காணாது போதியோ பூம்பாவாய்என்று தைப்பூச விழாவைச் சிறப்பித்துப் பாடுகின்றார்.

சேந்தனார் இறைவனடி சேர்ந்த நாள்-

                சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் முருகப் பெருமானைத் தலைவனாகக் கொண்டு பாடப் பெற்ற பாடல்கள் நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படைடயும், சேந்தனார் பாடிய திருவிடைக்கழி பற்றிய திருவிசைப் பாவும் ஆகும்.  முன்னது பதினோராம் திருமுறையிலும், பின்னது ஒன்பதாம் திருமுறையிலும் உள்ளன.  பட்டினத்தடிகளின் கணக்கராக விளங்கியவர் சேந்தனார். தில்லைப் பெருமானிடத்து எல்லையில்லா அன்புடையவர். தில்லைத் திருவிழாவில் ஓடாது தடைப்பட்டு நின்ற தேரினைத் திருபபல்லாண்டு பாடி ஓடும்படி செய்தார்.  பின்னர்த் திருவிடைக்கழி என்னும் தலத்தை அடைந்து அங்கு குரா நிழற்கீழ் அமர்ந்த முருகப் பெருமான் மீது திருவிசைப்பா பாடியுள்ளார்.  இத்தகைய அடியார் இறைவனடி சேர்ந்த நாளும் தைப்பூச நன்னாளே ஆகும். எனவே தைப்பூச நன்னாள் திருவிடைக்கழியில் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது.

இராமலிங்கர் சோதி தரிசனம் காட்டிய நாள் -

                வடலூர் வள்ளல் பெருமான் தனிப்பெருங் கருணையாளனாகிய இறைவனுக்கு அருட் பெருஞ்சோதி வழிபாட்டைத் தொடங்கி வைத்ததும் தைப்பூச நன்னாளில்தான்.  எனவேதான் அந்நன்நாளில் வடலூரில் பலமுறை சோதி தரிசனம் காட்டப் படுகின்றது.  முருகப் பெருமான சோதி வடிவமாக விளங்குகின்றான் என்பதை, “அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய், பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக் கருணைகூர் முகங்களாறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டெ, ஒரு திருமுருகன் வந்தாங் குதித்தனன் உலகம் உய்யஎன்று கந்தபுராணம் பேசுகின்றது. அன்பே தகழியாக, ஆர்வமே நெய்யாக, என்புருகு சிந்தை இடுதிரியாக,நன்புருகி, ஞானச்சுடர் விளக்கேற்றி வழிபாடு செய்வதையும் தைப்பூச விழா தமிழர்க்கு நினைவூட்டுகிறது.


ஞானியார் சுவாமிகள் பரிபூரணம் அடைந்த நாள் _

                சைவ வானில் ஒரு தனி ஞாயிறாகவும், தமிழுக்கு ஓர் தண்மதியாகவும் விளங்கிய ஞானியார் சுவாமிகள் ஒரு சிறந்த முருக பக்தர். அவர்கள் பரிபூரணமடைந்த நாளும் தைப்பூச நன்னாளே (1942) ஆகும்.

                தமிழர்கள் கண்ட பக்தி என்னும் நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு.  ஒருபக்கம் ஆண்டவன் வழிபாட்டினையும் மற்றொரு பக்கம் அடியார் வழிபாட்டினையும் குறிக்கும். இத்தகைய இரண்டு வழிபாட்டினையும் ஒருங்கே உணர்த்தும் ஆற்றல் தைப்பூச விழாவிற்கு உண்டு.

                இவ்வாறு பல்லாற்றானும் சிறப்புடைய தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை - பழநி ஆண்டவனை வழிபட்டு அவன் அடியார்களையும் அவனாகவே கண்டு வணங்கி, அவர்களுக்கு அமுது படைத்து, மகேஸ்வர பூசை செய்து வணங்குவது மண்ணனிற் பிறந்தார் பெறும் பெரும் பயனாகும்.  தமிழர்கள் முயற்சியினால் தைப்பூச நன்னாள் சிங்கப்பூர், கோலாலம்பூர் , பினாங்கு, இரங்கூன், செய்கோன் முதலிய கடல் கடந்த நகரங்களிலும் பெருவிழாவாகக் கொண்டாடப் படுகின்றது.  இவ்வாறு இந்தியாவிலும் ஏனைய இடங்களிலும் தைப்பூச நன்னாளில் அண்ணலார் , அடியார் அமுது செய்வித்து விழாக்கண்ட தமிழர் குலம் தழைக்க முருகப் பெருமான் திருவருளை வணங்குகின்றேன்.       

23           Thinnappan, SP.  Thaippusam (Thaippusam Festival in

                                    various perspectives)  In: Sri Thandayuthapani Temple Singapore Maha Kumbabishegam Souvenir Magazine, Sri Thandayuthapani Temple, Singapore (1996) pp 53-57 (Tamil)











சைவத்தில் உலகம்

                சைவ நெறியின் சால்பினை விளக்கும் தமிழ் நூல்களில் உலகம் பற்றி வரும் ஒரு சில கருத்துகளைச் சுட்டிக் காட்டுவதே இச்சிறு கட்டுரையின் நோக்கம்.

                நிலம், நீர் தீ வளி விசும்பு ஐந்தும்  கலந்த மயக்கம் உலகம் என வரையறை கூறியது தமிழ் முதல் நூலாகிய தொல்காப்பியம்.  உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்குஎன்று சங்கப் புலவர் பெருமகனார் நக்கீரர் சைவ முதல் நூலாகிய திருமுருகாற்றுப் படையைத் தொடங்குகிறார். பத்துப்பாட்டின் முதற்பாட்டு திருமுருகாற்றுப்படை.  சைவ முதல் நூலாகத் திகழும் சால்பும் அதற்குண்டு.  அவருக்கு நீலக்கடலில் காலைச் செங்கதிர் தோன்றும் காட்சி நீலமா மயிலின் மீது செவ்வேளாகிய முருகப் பெருமானின் தோற்றக் காட்சியை நினைவு படுத்துகிறது.

                உலகைக் காட்டியே கடவுள் உண்மையை - அம்மை அப்பன் ஆற்றலை நிலைநாட்டுகிறது திருக்குறள்.  அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு’’ என்பது திருக்குறள்.  இக்குறளில் எழுத்தெல்லாம் அகரம் முதலாகக் கொண்டிலங்குகின்றன.  அதுபோல உலகம் ஆதிபகவனை முதலாகக் கொண்டு திகழ்கிறது என்னும் கருத்து அமைந்துள்ளது.  அகரமுதலானை’’ என்னும் திருமுறைத் தொடர் இக்கருத்தைவலியுறுத்தும்.  என்பது எழுத்தால் அகரம், எண்ணல் எட்டினையும் (தமிழில் எண் எட்டு என்பது வடிவம் தாங்கியது) குறிக்க வல்லது. “எட்டினோடு இரண்டறியாத என்னைப் பட்டி மண்டபம்  பாங்கறிந்து ஏற்றினை) என்னும்’’ திருவாசகத் தொடரில் எட்டு என்பது எனக் கொண்டு அது சிவனைக் குறிப்பதாகவும் கொள்வர்.  எட்டு என்பது எண் குணத்தானாகிய முழுமுதற் பொருளையும்  குறிப்பதாகவும் கொள்ளலாம்.

                திருமுறைத் தலைவர் ஞானசம்பந்தப் பெருமானின் அவதார நோக்கமே ,”தாவில் சராதம்எல்லாம் சிவம் பெருக்குவது’’ தான் என்பார் சேக்கிழார். (1929)  ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே’’ என்று திருஞானசம்பந்தர் தம்தேவாரத்தில் மதுரைப் பதியின் உறையும் மகேசனை வேண்டுகிறார்.  திருஞானசம்பந்தர் இறைவன் அளித்த முத்துச் சிவிகையில் அஞ்செழுத்து ஓதி உலகெலாம் உய்ய ஏறினார்’’ என்றுதானே சேக்கிழார் பாடுகிறார். (1119)

                                தமிழ் மொழித் தலைவராகிய திருநாவுக்கரசர் பெருமான் அவதாரத்தைப் பாடும் போதும் சேக்கிழார், “அலகில் கலைத்துறை தழைப்ப அருந்தவத்தோர் நெறிவாழ உலகில் வரும் இருள்நீக்கி ஒளி விளங்கு கதிர் போல மலரும் மருணீக்கியார் வந்தவதாரம் செய்தார்’’(1288) என்று கூறுகிறரர்.  உலகின் மயக்கம் நீக்கியவர் தானே நாவுக்கரசர்.

                சுந்தரர் அவதாரம் பற்றிப் பாடும் போது சேக்கிழார் , “உலகம் உய்யத் திரு அவதாரம் செய்வதாக’’த்தான் கூறுகிறார். (149)”உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும் அலகில் சீர் நம்பி ஆரூரர் பாடியது’’ அன்றோ திருத்தொண்டத் தொகை(50) அங்கு வரும் அடியார்கள் அனைவரும் , “ஒருமையில் உலகை வெல்வார்’’(342) எனச் சிவபெருமானால் பாராட்டைப் பெற்றவர்கள். தென்னாடுடைய சிவனே போற்றி என்று கூறிச் சிவனை எந்நாட்டவர்ககும் பொதுமையாக்குகிறார் மாணிக்கவாசகப் பெருமான்.  தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வவையகம்’’ என்று திருமூலர் தாம் பெற்ற சிவனருட் செல்வத்தினை உலகிற்கு வாரி வழங்கிச் சென்றார்.

                திருத்தொண்டர் பெருமை பேசும் பெரிய புராணத்திறகு நடராசப் பெருமான், “உலகெலாம்’’ என அடியெடுத்துக் கொடுத்தருளினார்.  அந்நூல் உலகெலாம் எனத் தொடங்கி உலகெலாம் என முழங்குகின்றதன்றோ.  மேலும் 14 இடங்களில்  இச்சொலைலைக் கையாண்டு சேக்கிழார் பெருமான் மேல்உலகம் 7 கீழ் உலகம் 7  ஆகிய 14 உலகிலும் சிவனடியார் சிறப்பைப் பெருக்க விழைகிறார்.

                திருத்தொண்டத் தொகையில் வரும் 9 தொகை அடியார்களில் ஒருவராகிய அப்பாலும் அடிச்சார்ந்தார் பற்றிய விளக்கத்தில் சேக்கிழார் சிவனடியார் திருக்கூட்டத்தைக் காலம் இடம் கடந்த ஒன்றாகக் காட்ட முயல்கிறார். பின்னே வந்த தாயுமானார் சேரவாரும் செகத்தீரே’’ என்று உலக மக்களை நோக்கிச் சைவ நெறியில்  சேர அழைப்பு விடுக்கின்றார்.  இராமலிங்கர் உலகெலாம் என்பதற்குப் பேருரை அளித்த பெரியார்.  தோத்திர நூல்களில் மட்டுமா உலகம் முதன்மை பெறுகிறது .  சாத்திர நூல்களிலும் உலகம் .இடம் பெறுகின்றது.

                                சைவசித்தாந்தச் செந்நெறிக்கு முதனூலாகத் திகழும் சிவஞான போதத்தின் முதல் சூத்திரம் அவன் அவள் அது எனச் சுட்டிக் காட்டப்படும் அவ்வுலகம்  சுட்டிக் காட்ட முடியாத இறைவனையே முதலாகக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.  திருக்களிற்றுப்படியார் என்னும் சாத்திர நூல் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக’’ என்று தொடங்குகிறது.  சிவஞான சித்தியாரும் தொடக்கத்தில் அகிலம் ஈன்ற மாதினை ஒருபாகத்து அடக்கியவர் சிவபெருமான் (2) எனச் செப்புகிறது.  இருபா இருபஃது என்னும் நூல்,

                                                 கண்ணகன் ஞாலத்துக் கதிரவன்தான் என

                                                 வெண்ணெய்த்  தோன்றிய மெய்கண்ட தேவா’’(2)

என விளிக்கிறது.  ஏனைய சாத்திர நூல்களும் இவ்வாறு உலகு பற்றிப் பல இடங்களில் பரக்கப் பேசுகின்றன.

                தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே ‘‘ என்று இறைவனைப் போற்றுகிறார் நாவுக்கரசர்.  தோத்திரமும் சாத்திரமும் காட்டும் உலகைப் போற்றுவோம், உயிரினுள் உடனாகவும், ஒன்றாகவும், வேறாகவும் இலங்கும் சிவனை வழிபடுவோம், சிறப்பெய்துவோம்.

சைவ உலகம்               லண்டன் மெய்கண்டார் ஆதீனச் செய்திமலர் வெளியீடு 1                                                                                       

                    

தமிழ் இலக்கியம் தரும் மாரியம்மன்

                                மாரியம்மன் என்னும் சொற்றொடர் மாரி அம்மன் என்னும் இருசொற்களின் இணைப்பால் உருவான ஒன்றாகும்.  மாரி என்னும் சொல்லுக்கு மழை என்பது பொருள்.  அம்மன் என்னும் சொல் அம்மையை - சக்தியை- இறைவியைக் குறிக்கும்.  எனவே மாரிஅம்மன் என்பது மழையைத் தரவல்ல சக்தியாகிய இறைவியை உணர்த்தும் தொடர்.  மழைக்குரிய கடவுளை மாரிஅம்மன் என்று அழைத்தனர் நம் முன்னோர். மழையாகிய சக்தி - கடவுள் என்றும் பொருள் கூறலாம். நிலம், நீர், தீ, வளி (காற்று), விசும்பு (ஆகாயம்), ஐந்தும் சேர்ந்தது தான் உலகம். நிலத்தை நிலமகள் (பூமாதேவி) என்றும், தீயை அக்கினி தேவன் என்றும், காற்றை வருணன் என்றும் அழைத்துத் தெய்வங்களாக்கி வணங்கியதைப் போல நீர் தரும் மழையை மாரி என்று தெய்வத் திருவுருவம் கொடுத்து வணங்கினர். கல்வி தருபவளைக் கலைமகள் (சரஸ்வதி) என அழைக்கிறோம்.  திருவை (செல்வத்தை)த் தருபவளைத் திருமகள் அல்லது அலைமகள் (லெட்சுமி) என அழைக்கிறோம். மலையில் தோன்றிய உமையம்மையை மலைமகள் என அழைக்கிறோம்.  இவ்வாறே போர்மகள் , புகழ் மகள், சீர்மகள் என்றெல்லாம் பெண்ணாக உருவகிக்கிறோம்.  இப்படியே மழை தரும் மாரியம்மனை மழைமகள் என்று கூறுவதில் தவறு ஒன்றுமில்லை.  வெப்பமாகிய வெம்மையைத் தவிர்த்துத் தட்பமாகிய குளிர்ச்சியைத் தரவல்லவளாகத் தானே மாரியம்மனை நாம் கருதுகிறோம்.  இத்தகைய மழைமகளாகிய மாரியம்மனை மழைக்குரியதாய் நம் தமிழ் இலக்கியம் எவ்வாறு சித்திரிக்கிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

சங்க இலக்கியம் காட்டும் மாரி -

                சங்க .இலக்கியம் தமிழின் தங்க இலக்கியம், காலத்தாற் பழமை வாய்ந்தது. அகம், புறம் என்னும் இருபொருள் பற்றிப் பேசுவது.  அகம் என்பதுகாதல் பற்றியும், புறம் என்பது காதலல்லாத போர், கொடை, சமூகம் முதலியவை பற்றியும் விளக்கும். புறத்தைப் பற்றிய நூல் புறநானூறு.  இந்நூலில் கடையெழு வள்ளல்களில் சிறந்து விளங்கிய பாரியைப் பற்றிக் கபிலர் என்னும் புலவர் ஒரு பாடல் பாடியுள்ளார்.  பாரி ஒரு குறுநில மன்னன்.  கபிலர் தான் சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்களைப் பாடிய புலவர்.. படர்வதற்கு வழிஇல்லாது தவித்த முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி. “இவனின் வள்ளல் தன்மையைப் பற்றிப் புகழ்ந்து பாரி பாரி என்று பலபடப் பாராட்டிய வண்ணம் புலவர்கள் இருக்கின்றனரே அவன் ஒருவன் மட்டும் தான் உலகைக் காப்பாற்ற இருக்கின்றானா? இல்லையே. மாரி என்று கூறப்படும் மழையும் தானே உலகைக் காப்பற்றுகிறது.  அதனைப் புலவர்கள் புகழ மறந்து விட்டார்களா? என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார் கபிலர். கவிதை இதோ -

                                பாரிபாரி என்று பல ஏத்தி

                                 ஒருவற் புகழ்வர்  செந்நாப் புலவர்

                                 பாரி ஒருவனும் அல்லன்

                                 மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே

எனவே உலகைக் காப்பாற்றும் சக்தி மழைக்கு இருக்கிறது.  அதுபோல உலகைக் காப்பாற்றும் அன்னையே மாரியம்மன் என்பதை இதன் வாயிலாக உணரமுடிகிறது.

                அகப்பொருளாகிய காதலைப் பற்றிக் கூறும் சங்க இலக்கியங்களில் ஒன்று குறுந்தொகை. இதனை நல்ல குறுந்தொகை ‘‘ என்று பாராட்டிப் பேசுவர் அறிஞர்.  அந்நூலில் காதலின் பெருமையை விளக்கும் ஒரு பாடலில் மழை வருகிறது.

                                யாயும் ஞாயும் யாராகியரோ?

                                 எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

                                 யானும் நீயும் எவ்வழி அறிதும்

                                 செம்புலப் பெயல் நீர் போல

                                 அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’’

என்னும் பாடலில் காதலன் காதலியைப் பார்த்து முன்பின் எவ்வித அறிமுகமோ உறவோ இல்லாத அவர்களிடையே காதல் மலர்ந்ததைக் கூறும்போது செம்மண்ணில் விழுந்த மழைநீர் போல நெஞ்சக் கலப்பு நிகழ்ந்ததைச் சுட்டிக் காட்டுகிறான்.  செம்மண் நிலம் கடினமானது.  அதில் மேல் விழும் மழை நீர் அதன் கடினத் தன்மையைப் போக்கி நெகிழ வைக்கிறது.  குழைய வைக்கிறது. பிறகுதான் அம்மண் பயிர் செய்ய ஏற்ற பண்புடையதாக மாறும்.  அதுபோல மாரியம்மனும் தன்னை வழிபடும் பக்தர்களின் நெஞ்சக் கனகல்லை நெகிழ்ந்துருகச் செய்பவள் ஆவாள். நம் மனத்திலுள்ள கடினத் தன்மையைத் தன் கருணை மழையால் உருக்கும் ஆற்றல் மாரியம்மனுக்கு உண்டு. கல்லைப் பிசைந்து கனியாக்கும் ஆற்றல் கடவுளாற்றல் அல்லவா?

குறள் கூறும் மாரி -

                திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் தமிழ்த் தாயின் திலகம் எனத் திகழ்வது.  திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்பது முதல் அதிகாரம். அதனை அடுத்து வருவது வான் சிறப்பு என்னும் அதிகாரம்.  இந்த அதிகாரத்திலுள்ள பத்துக் குறள்களும் மழையின் மாண்பினைக் கூறுகின்றன. வான் என்பது மழை, சிறப்பு என்பது பெருமை.  கடவுளை வாழ்த்திய பின்னர் கடவுளுக்கு அடுத்த நிலையில் மழையின் சிறப்பபைப் பேசுகிறார் திருவள்ளுவர் என்றால் அவர் மழைக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம் நன்கு புலப்படுகிறது.  உலகமும் உலகத்திற்கு உறுதியாகிய அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் இயங்க வேண்டுமானால் மழை வேண்டும்.  எனவே உலகம் நீரின்றி அமையாது என்று கூறுகிறது வள்ளுவம். மழை உலகத்து உயிர்களின்  பசியைப் போக்கும் உணவை விளைவிப்பதற்கு உறுதுணையாக இருப்பதுடன் அவற்றின் நீர் வேட்கையை நீக்கும் உணவாகவும் இருக்கும் சிறப்புடையது அல்லவா? மழை இல்லாவிடில் உலகெங்கும் பசிப்பிணி தாண்டவமாடி உயிர்களைத் துன்புறுத்தும் . உழவர்கள் தொழில் செய்ய முடியாது. பசும்புல் கூட வளம் குன்றிவிடும்.  கோயில்களில் பூசை, திருவிழா நடக்க இயலாது. தானம் , தவம் ஆகிய செயல்களுக்கும் இடமில்லை.  மழை பெய்யாமலோ அதிகமாகப் பெய்தோ கெடுக்கும் ஆற்றலுடையது.  அதே சமயத்தில் கெட்டொழிந்தவனைத் திரும்ப எடுத்து நிறுத்தி வாழவைக்கும் வல்லமையும் மழைக்குண்டு.  எனவே மழையைச் சாவாமைக்குக் காரணமாக இருக்கும் அமிழ்தம் என்றே உணர வேண்டும்.  இவை மழையின் பெருமையை விளக்க வந்த திருவள்ளுவரின் கருத்துகள்.  இக்கருத்துகள் அனைத்தும் மாரி அம்மனுக்கும் ஒப்புடையனவே.  அவளின்றி ஓர் அணுவும் அசையாது. அவள் அருள் இல்லாவிடில் உலகத்தில் புல், பூண்டு கூடத் தழைக்காது போகும்.  அவளே பக்திக்குரிய குறியாகவும் , நெறியாகவும் (  means and end ) இருக்கும் பண்பினள்.  அவளருளாலே தான் அவளை வணங்க வேண்டும்.  நல்லவர்களை வாழவைக்கவும் அல்லவர்களை அழிக்கவும் வல்லவள் மாரி அம்மன்.  அவள் சக்தி.  ஆதலால் எல்லாத் தொழிலுக்கும் இயக்கமாக , ஆற்றலாக  இருந்து இயக்குபவள்.  அள்ள அள்ளக் குறையாத அருட் சுரங்கம் - கடல் அவள். குறைவிலா நிறைவாகவும் கோதிலா அமுதாகவும் அவள் திகழ்பவள். நினைத்தொறும் கூறுந்தொறும் பேசுந்தொறும் அனைத்தெலும்பு உள்ள நெக ஆனந்தத் தேன் சொரியும் இனிமைச் சுரங்கம் அவள்.  இம்மைப் பயனும் , மறுமைப் பயனும், சிற்றின்பமும், ஆனந்தத்தையம் அளிப்பவள் அவள்.  மழைக்குள்ள பண்புகள் அனைத்தையம் மாரி அம்மனுக்கும் பொருத்திப் பார்க்க வள்ளுவரின் வான்சிறப்பு அதிகாரம் வழிவகுக்கிறது.

                உலகத்திற்குப் பயன்பட வாழ்தலைத் திருவள்ளுவர் ஒப்பரவறிதல் என்னும் அதிகாரத்தில் விளக்குகிறார்.  அந்த அதிகாரத்தின் முதற் குறள் -

                                கைம்மாறு வேண்டா  கடப்பாடு  மாரிமாட்டு

                                 என்னாற்றுங் கொல்லோ உலகு “ (41)

என்பது, உலகத்துக்கு நீருதவி செய்யும் மழைக்கு உலகம் என்ன கைம்மாறு செய்ய முடியும் என்று வள்ளுவர் இக்குறளில் ஒரு வினா எழுப்புகிறார்.  கைம்மாறு கருதாத மழை போல மாரி அம்மனும் தம் அன்பர்களுக்குக் கைம்மாறு கருதாது - பயன் கருதாது பல்லாற்றாலும் உதவி செய்கிறாள்.  அவளுக்கு அன்பர்கள் எவ்வகையில் நன்றி செலுத்த முடியும், “மாரியை நோக்கிக் கைமாறு இயற்றுமோ வையம்என்று கம்பரும், “வான் செய்யும்  நன்றிக்கு வையகத்ததோர் செய்யும் கைம்மாறு உண்டோ?” என்று பரஞ்சோதியாரும் வள்ளுவர் வழி நின்று இத்தகைய வினாக்கள் எழுப்பிக் கைம்மாறு கருதாது உதவி நிற்கும் மழையின் பெருங்குணத்தைப் பாராட்டி நிற்கின்றார்கள்.            

சிலம்பு செப்பும் மாரி -

                நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதியாரால் பாராட்டப்படும் சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதற் பெருங்காப்பியம்.  கற்பிற் சிறந்த கண்ணகியின் கதையைக் கவிதை வடிவில் கூறும் நூல். இதனை இயற்றிய இளங்கோவடிகள் தம் நூலின் தொடக்கத்திலேயே மழையை வணங்கிப் போற்றுவதைக் காணமுடிகிறது.

                                                மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

                                                 வீங்குநீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு

                                                 ஓங்கிப் பரந்து ஒழுகலான்

அச்சத்தைத் தருகின்ற கடல் சூழ்ந்த உலகத்திற்குச் சோழ அரசனின் அருள் போல - இரக்கமிக்க கருணை போல வளம் தந்து பெய்வதால் பெரிய மழையைப் போற்றுவோம்என்பது இந்த அடிகளின் கருத்து.  இங்கு மழையைப் போற்றி வழிபடும் மரபையும் அதற்குரிய காரணமாகத் தண் கருணைத் தன்மையையும் காண முடிகிறது.  அதுபோல மாரியம்மனும் வழிபடுவதற்குரிய தெய்வமாகவும் தண்கருணைமிக்க தன்மை உடையவளாகவும் இருப்பதை நாம் உணரலாம்.


                மழைவளம் சுரக்க இந்திரனுக்கு விழா எடுத்து வழிபடும் மரபினைச் சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய நூல்கள் பேசினாலும் பத்தினிப் பெண்டிர் இருந்த நாட்டில் வானம் பொய்யாது பெய்யும் என்னும்  நம்பிக்கை அக்காலத்து இருந்ததையும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.  தெய்வந் தொழாது கணவனைத் தொழுது வாழும் கற்புடைப் பெண்கள் பெய் என மழை பெய்யும் என்று திருவள்ளுவரும் குறிப்பிடுகிறார் அல்லவா? கற்பிற் சிறந்த கண்ணகியைக் கடவுளாக்கி இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி வஞ்சி மாநகரில் கோயில் எழுப்பி முதன் முதலில் வழிபாடு செய்தான் ரேசன் செங்குட்டுவன்.  இவ்வழிபாட்டு விழாவுக்கு வந்த ஆரிய மன்னரும் இலங்கைக் கயவாகுவும் குடகுக் கொங்கரும் மாளுவ வேந்தரும் தத்தம் நாடுகளில் கண்ணகி வழிபாட்டினைத் தொடங்கி வைத்தனர்.  மழைதரும் மாண்பு மிக்க ஆற்றல் கொண்ட கண்ணகி வழிபாடு பிற்காலத்தில் மாரியம்மன் வழிபாடாக மாறியது என்று சிலம்புச் செல்வர் ,பொ. சிவஞானம் அவர்கள் ஆய்வு செய்துள்ளார்கள்.

மணிமேகலை தரும் மாரி -

                சிலப்பதிகாரத்துடன் ஒருசேர மதிக்கப் பெறும் மற்றொரு காப்பியம் மணிமேகலை.  மாதவி மகளாகிய மணிமேகலையின் துறவு நிலையைப் பேசும் நூல் இது.  இதனை இயற்றியவர் சாத்தனார்.  அவர் மழைதரும் கற்புப் பற்றிப் பேசும் திருக்குறளை அப்படியே மேற்கோள் காட்டி அதனைப் பொருள் பொதிந்த உரை எனப் போற்றுகின்றார்.

                                தெய்வம் தொழாஅள் கொழுநற்  தொழுதெழுவாள்

                                 பெய்யெனப்  பெய்யும்  மழை என்ற அப்

                                  பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் “ (சிறைசெய் காதை)

என்று வள்ளுவரைப் பொய் கூறாத புலவன் என அவர் பாராட்டி நிற்பதையும் அறிய முடிகிறது.  மகளிர் கற்பு மழையைத் தர வல்லது என்னும் கருத்தை உடன்பட்டு நிற்கும் நிலை சாத்தனார்க்கு உண்டு என்பதை நாம் உணரமுடிகின்றது.

                மணிமேகலையின் பெயருக்கும் பெருந்துறவுக்கும் காரணமாக விளங்கிய மணிமேகலா தெய்வம் மணிமேகலை மீது காதல் கொண்ட உதயகுமாரன் என்னும் இளவரசனிடம்,

                                                                                                                மன்னவன்  மகனே

                                                கோல்நிலை திரிந்திடின்  கோள்நிலை  திரியும்

                                                கோள்நிலை  திரிந்திடின்  மாரி வறங்கூரும்

                                                மாரி வறங்கூரின் மன்னுயிர் இல்லை

என்று அறிவுரை கூறுகிறது.  அரசன் செங்கோல்  ஆட்சி இல்லாவிடில் வானத்திலுள்ள கிரகங்கள் நிலைமாறும்.  அவை நிலை மாறினால் மழை பெய்யாமல் போகும்.  அவ்வாறு போனால் உலகில் நிலைபெற்ற உயிர்கள் இலலாது போகும்என்பது இவ்வறிவுரையின் கருத்து,  எனவே மாரி இல்லாவிடில் மன்னுயிர் இல்லை.  மாரியம்மன் இல்லாவிடில் உலகத்தில்  உயிர்களின் வாழ்வேது? வாழ்விழந்து வாடும் என்பதை நாம் இங்கு உணர்கிறோம்.  இக்கருத்தினைச் சீவகசிந்தாமணி என்னும் காப்பியத்திலும் காணலாம்.  அரசன் ஆட்சி சரியில்லா விடில் நீணிலம் மாரியின்றி விளைவு குறையும்” (1.255) எனச் சீவக சிந்தாமணி கூறுகிறது.

பக்தி இலக்கியங்கள் பகரும் மாரி -

                பக்தி இலக்கியங்கள் தமிழின் தனித் தன்மைக்குத் தக்க சான்றாகத் திகழ்கின்றன.  இவற்றிலுறள்ள பண்சுமந்த பாடல்களை இயற்றியவர்கள் சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் ஆவர்.  சைவ நாயன்மார்கள் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கருதிப் பாடியவை திருமுறைகள், வைணவ ஆழ்வார்கள் திருமாலை முழுமுதற் பொருளாகக் கருதிப் பாடியவை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.  இவற்றில் மாரியம்மன் - மழைக்குரியதாய் எப்படி வருகிறாள் எனக் காண்போம்.

திருவாசகம் செப்பும் சிவ மாரி -

                சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக இருப்பது மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம்.  இந்நூலிலுள்ள பக்திப்பாடல்கள் படிப்போர் மனத்தை உருக்கும் பண்பின.  திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது பழமொழி. இந்நூலில் மழை சக்தியாகவும் சிவனாகவும் பேசப்படுகிறது திருவாசகத்தில் திருவெம்பாவை என்பது ஒரு பகுதி.  இதில் இருபது பாடல்கள் உள்ளன. மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து (ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு) கூட்டமாகச் சென்று பொய்கையில் நீராடிப் பாவை நோன்பு நோற்றுச் சிவபெருமானைத் தங்களுக்கு நல்ல கணவன்மார் கிடைக்க வேண்டும் என்றும் நாட்டில் மழை பொழிய வேண்டும் என்றும் வேண்டி வழிபடுவதே திருவெம்பாவையின் திரண்ட கருத்தாகும். இப்பகுதியின் உட்கருத்து சக்தியை வியந்தது என்று உரைப்பர்.  அதாவது சக்தி என்பது இறைவனின் அருளைக் குறிக்கிறது.  அருளது சக்தியாகும் அரன் தனக்குஎன்று சைவ சித்தாந்த சாத்திர நூலாகிய சிவஞான சித்தியார் கூறுகிறது. மழையை உமையம்மையாகச் சக்தியாகக் கூறும்  மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல் -

                                முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்

                                 என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்

                                 மின்னிப் பொலிந்து எம்பிராடடி திருவடிமேல்

                                 பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்

                                 என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடயாள்

                                 தன்னிற் பிரிவிலா எங்கோமான அன்பர்க்கு

                                 முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

                                 என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

மழையே, முன்னுள்ள இக்கடல் நீரினை உட்கொண்டு வானின் மேல் எழுந்து, சக்தியின் கருமை நிறம் போலக் கருத்து அவள் சிற்றிடை போல மின்னி, அவள் திருவடியிலுள்ள சிலம்பு போல இடி முழக்கமிட்டு, அவள் புருவம் போல வானவில்லிட்டுச் சிவனுக்கு முன்னர் வந்து சக்தி நமக்குச் சுரக்கும் இனிய திருவருளே போல நீரைச் சொரிவாயாகஎன்பதே இப்பாட்டின் கருத்து.  இப்பாட்டில் மழையின் ஒவ்வொரு நிலையும் உமையம்மையின் நிறம், அணி, அருள் முதலியவற்றுக்கு உவமைகளாக உரைக்கப் படுகின்றன.  இங்கு மழை - மாரி- உமையம்மையாகச் சிவசக்தியாகக் காட்சி அளிக்கும் சிறப்பைக் காண முடிகிறது.

                திருவாசகத்தில் திருவண்டப் பகுதி என்று ஒரு பிரிவு உள்ளது.  இதில் அண்டமாக விரிந்து நிற்கும் சிவபெருமானின் சிறப்பைப் பேசுகிறார் மாணிக்கவாசகர். இதில் சிவபெருமானை மழையாகக் கண்டு மகிழ்கிறார்.  சிவபெருமானை அவர் அண்டத்து அரும் பெறல் மேகன் வாழ்க என்று வாழ்த்துகிறார்.  அந்த மேகம் பரமானந்தப் பெருங்கடலில் தோன்றித் திருப்பெருந்துறை என்னும் மலைமீது ஏறி மின்னொளி வீசி மெய், வாய், கண். மூக்கு. செவி என்னும் ஐம்பொறி உணர்வுகளாகிய பாம்புகள் அஞ்சி ஓடி இடி முழக்கி, கொடிய பிறவித் துன்பமாகிய வெயில் மறையக் கருணை மழை பொழியும் மேகம் ஆகக் காண்கிறார்.  அவர் இந்த மேகம் பொழிந்த மழையால் தொண்டர்களாகிய உழவர்கள் வழிபாடு என்னும் வயலில் அன்பு என்னும் விதைகளை விதைத்துப் பக்திப் பயிர் விளைவிக்கின்றார்கள்.  இவ்வாறு மழை - மாரி - சிவனாக - குவளைக் கண்ணிக் கூறனாக - அர்த்தநாரீசுவர வடிவம் ஆகிய உமையொரு பாகனாக இருக்கும் இயல்பை உணர்கிறோம்.

ஆண்டாள் பாடிய மாரி -

                ஆழ்வார்களில் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்கொடி ஆண்டாள்.  சூடிக்கொடுத்த சுடரக்கொடி. திருவரங்க நாதனையே காதலித்து மணந்து கொண்ட காரிகை.  அவள் பாடிய திருப்பாவையில் ஆழிமழைக் கண்ணாஎன்று ஒரு பாடல் தொடங்குகிறது.  கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் நீராடுவதற்கு ஏற்ற வகையில் மேகம் கடலில் புகுந்து திருமாலின் கரிய நிறம் போலக் கறுத்து திருமாலின் கையிலுள்ள சக்கரம் போல் மின்னி, அவன் கையிலுள்ள சங்கு போல ஓசை எழுப்பி, அவன் விடும் அம்புச்சரம் போல உலகம் வாழ மழை பெய்ய வேண்டும் என்று அப்பாடலில் திருமாலிடம் ஆண்டாள் வேண்டுகிறாள்.  இங்கு மழை - மாரி - கண்ணனாக - திருமாலாக மாறி நிற்கும் விந்தையைக் காண்கிறோம்.  மாரி மலை முழைஞ்சில் (குகையில்) மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் எனவும் திருப்பாவைப் பாடல் ஒன்றில் மழையை மாரியாகக் கூறும் செய்தியைக் காண்கிறோம்.

கம்பனில் மாரி-

                கவிச் சக்கரவர்த்தி கம்பன் எழுதிய இராமாயணத்தில் காவிய நாயகனாகிய இராமன் மழைக்குன்றம்  அனையான்என்று அழைக்கப் படுகிறான். மேலும் இராமன் வெயில் ஒளியில் செல்லும் அழகை அவன் நிற அழகைக் கம்பன்,

                                               


                  மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ

                                                 ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்

என்று வருணிக்கிறான். மழைமுகிலோ -  கார்மேகமோ - என்று இராமனைக் கண்டு வியப்படைகின்றான். இங்கே மழை - மாரி -கருணை மேகமாகிய இராமனாகக் காட்சி அளிக்கும் பண்பைக் காண்கிறோம்.

தத்துவ நூல் தரும் மாரி -

                மாரி அம்மை என்னும் போது மழையும் தாயும் நினைவுக்கு வரும்.  மழை என்பது அருளைக் குறிக்கும்.  தாய் என்பது அன்பின் அடையாளம். அருள் சேய், அன்பு அதன் தாய், அன்பு இல்லையாயின் அருள் இல்லை.  அன்பே சிவம் அருளே சக்தி, “அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்.  அன்பே சிவமாவது அறிந்த பின்,அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரேஎன்று திருமூலர் தம் திருமந்திரத்தில் கூறுகிறார்.  சைவ சித்தாந்தசாத்திர நூல்களில் அருளது சக்தியாகும் அரன் தனக்குஎன்று அறை கூவுகின்றது சிவஞான்சித்தியார்.

ஒளவை பாடிய மாரி -

                ஒளவையார் தம் கொன்றை வேந்தனில் மாரியல்லது காரியமில்லைஎன்று கூறி மாரி - மழையின் ஆற்றலைப் புலப்படுத்துகிறார்.  மாரியம்மன் இல்லாது மக்கள் எந்தக் காரியமும் செய்யும் சக்தி பெற முடியாது என்பதை இத்தொடர் விளக்குகிறது அல்லவா?

பாரதி பாடிய முத்துமாரி -

                இருபதாம் நூற்றாண்டுப் பெருங்கவிஞர் பாரதி தான் முதன் முதலில் முத்துமாரியை, “உலகத்து நாயகியே - எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரியம்மாஎன அழைத்து அவள் பாதத்தில் சரணம் புகுகின்றார்.  துணி வெளுக்க மண்ணுண்டு, எங்கள் மனம் வெளுக்க வழி இல்லையேஎன்று கூறிப் பிணிகளுக்கு மாற்று உண்டு, அறியாமைக்கு மாற்று இல்லை. அரக்கர் பலர் எங்கள் மனத்தில் புகுந்து விட்டனர். பல கற்றும் கேட்டும் பயன் ஒன்றும் இல்லை, நிலை எங்கும் காணவில்லை, எனவே உன்னிடம் அடைக்கலம் புகுந்தோம்என வேண்டி நிற்கிறார் பாரதி.  இங்கு அணிகளுக்கு, அழகுக்கு, ஓர் எல்லையாய் இருக்கும் அழகுத் தெய்வமாகியய மாரியம்மை பற்றியும் அவள் வழிபாடு பற்றியும் நேரடியாகக் காணமுடிகிறது.  மனம் தூய்மை பெறவேண்டி நிற்கும் மாண்பினையும் பார்க்கிறோம்.  மனத் தூய்மை தானே அறம். பாரதியின் பாட்டில் தெய்வப் பக்தியடன் தேசபக்தியையும் தேடிப் பார்க்க முடிகிறது. 

 பாரதிதாசன் பாராட்டும் மாரி -

                தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.  அமுதம் என்றால் மழையே என்று ஆய்ந்து தெளிந்து அமிழ்து எது என்னும் வினாவிற்கு விடை அளிக்கின்றார் அவர். எனவே மழை - மாரி - அமிழ்தாக - தமிழாகப் புரட்சிக் கவிஞர் கவிதையில் பொலிந்து நிற்கிறது.  மாரி அம்மை தமிழாக மாறும் காட்சியை இங்கே காண்கிறோம்.  கனகசுப்புரத்தினம்  பாரதிதாசனாக மாறியதற்குக் காரணமாக இருந்த பாட்டே எங்கெங்கு காணினும் சக்தியடா அவள் எழுகடல் வண்ணமடாஎன்னும் சக்தியைப் பற்றிய பாட்டுத்தானே.

கவியரசு கண்ணதாசன் காட்டும் மாரி -

                கவியரசர் கண்ணதாசன் ஆதிசங்கரர் பாடிய கனகதாரா தோத்திரத்தை அழகாகப் பொன்மாரிஎன்று தமிழில்  கவிதைகளாக ஆக்கியுள்ளார்.  அவரும் மாரியம்மன் பற்றிய திரைப் பாடல்கள் பாடியுள்ளார்.  மழை கூட ஒருநாளில் தேனாகலாம்என்று மழையைத் தேனாகக் காணும் காட்சியைக் கண்ணதாசனிடம் காண முடிகிறது.  மாரி அம்மை நினைக்கும் போது கூறும்போதும்  இனிக்கும் தேன் அம்மை அல்லவா.


வைரமுத்து வழங்கும் மாரி -

                வைரமுத்து மழையைப் பற்றி ஒரு புதுக் கவிதையில் மழை மழை மழை, மண்ணின் அதிசயம் மழை, பூமியை வானம் புணரும் கலை மழை, சமுத்திரம் எழுதும் சமத்துவம் மழை, மழை பாடும் பள்ளி எழுச்சியில் ஒவ்வோர் இலையிலும் உயிர் சோம்பல் முறிக்கிறதுஎன்று கூறி மழையொடு வாழாத வாழ்வென்ன வாழ்வா? என்ற கேட்கிறார்.  மழையை மாரி அம்மனாகக் கண்டு பாருங்கள். இக்கவிதையின் கருத்தாழம் புரியும்.

முடிவரை -

                தமிழ் இலக்கியத்தில் மாரி அம்மன் உலகைக் காப்பாற்றும் தாயாக, நெஞ்சக் கல்லை நெகிழ்ந்துருகச் செய்யும்  நீராக - உயிரினங்களை வாழவைக்கும் ஒப்பில்லா மழையாக - கைம்மாறு கருதாத கன்னியாக - கருணை மழை பொழியும் காரிகையாக - உமையம்மையாக -சிவனாக - கண்ணனாக - இராமனாக - திருமாலாக - அன்புத் தாய் பெற்ற அருள் சேயாக - காரியம் ஆற்றும் சக்தியாக - மனத்தூய்மை செய்யும் மருந்தாக - தமிழாக - இயக்கும் சக்தியாக - பொன்மாரி பொழியும் திருவாக - விண்ணையும் மண்ணiயும் இணைக்கும் விரிசக்தியாக விளங்குவதை இக்கட்டுரை விளக்குகிறது அல்லவா.

(ஈசூன் மகாமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா மலர்)                                                                                   ------------------


Thinnappan, SP.  Tamil Ilakkiyathil Mariamman (The

                                    Goddess Mari Amman in Tamil Literature) In: Sree Maha Mariamman Temple Maha Kumbabishegam Souvenir Magazine Ed: Mrs Kunavathy Nallathamby, Sri Maha Mariamman Temple Yishun, Singapore (1997) pp 67-74 (Tamil)


......தொடரும்.....


Dr S.P. Thinnappan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக