வெள்ளி, 2 மே, 2014

பண்பாடு - 3



இந்து சமயமும் உலக இணைப்பும்


         


அறிவியல் வளர்ச்சியாலும் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்தாலும் இன்று உலகம் காலத்தையும்  இடத்தையும் கடந்து நெருக்கமும் பிணைப்பும் பெற்றுத் திகழ்கிறது. இந் நிலையில் உலகத்தை ஒரு குடும்பம் போல் அன்பும் பண்பும் உடைய ஒன்றாக ஒருங்கிணைப்பதில் இந்து சமயத்திற்குரிய பங்கினை நினைத்துப் பார்ப்போம்.


      உலகம் என்பது பௌதிக நிலையில் பார்த்தால் நிலம், நீர் , தீ ,காற்று , ஆகாயம் ஆகியவற்றின் ஒருங்கு இணைப்புதான். மேலும் சூரியன் , சந்திரன் ஆகிய இரண்டும் ஒளி தர  உயிர்கள் வாழ்கின்ற இடமாகவும் உலகம் திகழ்கிறது இவை அனைத்திலும் கடவுள் இருக்கிறார் என்று இந்து சமயம் நம்புகிறது. இறைவனை அட்ட மூர்த்தி’= எட்டு உருத்தாங்கியார்- என்று இந்து சமயம் பேசுகிறது.


      உலகில் எத்தனை சமயங்கள் இருந்தாலும் அந்தச் சமயங்களுக்குள் எல்லாம் ஊடுருவி இருக்கும் இறைவன் ஒருவனே என்பதில் இந்து சமயம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது. ஏக மேவ அத்வைதம் பிரமம்” “இரண்டற்ற ஒன்றே இறைவன்” என்பது வேத வாக்கு.  ஒன்றே குலம் ஒருவனே தேவன் “ என்பது திருமூலரின் திருமந்திரம் எனவே உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒரே குலம் ; இறைவன் ஒருவனே என்ற உயர்ந்த கொள்கையால் உலகை அரவணைக்கிறது இந்து சமயம்.  “வேறுபடு சமயங்கள் எல்லாம் உன் விளையாட்டு அல்லால் மாறுபடும் பொருள் ஒன்றில்லை " என்பது தாயுமானவர் வாக்கு. எல்லாச் சமயங்களும் கடவுள் என்னும் கடலில் கலக்க உதவும் ஆறுகளே என்ற கருத்து இந்து சமயத்தில் உண்டு. எனவே தான் பகவான் இராமகிருஷ்ணர் ஒவ்வொரு சமயத்தவரும் அந்தந்தச் சமயத்தின் அடிப்படை நெறிகளை உண்மையாகப் பின்பற்றினால் இறைவனை அடையமுடியும் என்று கூறினார்.


 “அன்பே சிவம்” என்ற கோட்பாட்டினை இந்து சமயத்தில் காண்கிறோம். இறைவனையும் அன்பையும் ஒன்றாகவே கண்டவர்கள் இந்து சமயத்தினர். அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்.” என்று திருமந்திரம் பேசுகிறது. எனவே அன்பினால் அனைத்து உயிர்களையும் உறவாக அணைத்துக்கொள்வதையே இந்து சமயம் ஆதரிக்கிறது.


      அன்பின் வடிவம் அன்னை அல்லவா? இறையைச் சக்தியாக- தாயாகக் கொண்டாடி வழிபடுவது இந்து சமயம். இவ்வாறு நோக்கும் போது உலகத்து மாந்தர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாகின்றனர். எனவே தான் விவேகானந்தர் சிகாகோ  பிரச்சாரத்தில் கூட்டத்தினரை நோக்கிச் “ சகோதர சகோதரிகளே  என்று அழைத்து இரண்டு சொற்களில் இந்து சமயத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துரைத்தார். எனவே உலக மக்கள் அனைவரும் உடன் பிறந்த உறவினராக வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்துசமயம்.


      “இலங்கும் உயிர் உடல் அனைத்தும் ஈசன் திருக்கோவில் “ எனவே உயிர்களுக்கு உதவினால் அது இறைவனுக்கு போய்ச் சேரும். கோயிலில் இருக்கும் இறைவனைப் “ படமாடும் கோயில் ” என்றும் இறைவன் வாழும் உயிகளை நடமாடும் கோயில் என்றும் கூறிச் சமுதாயத் தொண்டு செய்வதையும் இந்து சமயம் வலியுறுத்துகிறது. உலகிலுள்ளோர் எந்த நாட்டினரைச் சார்ந்தவராயினும், எம் மதத்தைச் சார்ந்தவராயினும், எந்த இனத்தைச் சார்ந்தவராயினும் எல்லோருக்கும் வேற்றுமை பாராட்டாமல் தொண்டு செய்யவேண்டும் என்பதையும் இந்து சமயம் கூறுகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்“ என்பது குறள்.


      இந்து சமய ஆலயங்களில் ஒவ்வொரு  நாளும்  நடைபெறுகின்ற வழிபாட்டின் போது இறுதியில் பூசைசெய்பவர்கள் உலக உயிர்கள் குறைவிலாது நலமாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவது வழக்கம்” லோக சமஸ்த சுகினோ பவந்து “ “சர்வேயஜனாக சுகினே பவந்து “ என்னும்  சமஸ்கிருத மந்திரங்களின் பொருள்.இதுவே. மழை வளம் பெருகி அறங்கள் ஓங்கிக் குறைவிலாது உயிர்கள் வாழவேண்டும் என்று தமிழிலும் வாழ்த்துவதும் உண்டு.


எனவே போரும் பூசலும் , தீவிரவாதமும் சமயப்போராட்டமும் அச்சுறுத்தி உலக உறவைப் பாதிக்கும் போக்கில் உலவிக்கொண்டிருக்கும் இன்றைய உலகினை இணைக்க இந்து சமயம் காட்டி நிற்கும் போதனைகளை நாம் வாழ்க்கையில் கடைப்பிடித்து உலகினை அமைதிப் பாதையில் செலுத்தி  உறவாக வாழ முயல்வோமாக. (சிங்கப்பூர் இந்து


 


தமிழில் இலட்சார்ச்சனை


[டாக்டர் சுப. திண்ணப்பன்]


 


இந்து சமய வழிபாட்டில் ஒரு கூறாகத் திகழும் அருச்சனை என்பது,கடவுளின் திருப்பெயர்களைக்  கூறிக்கடவுளின் திருவடிகளில் மலர் தூவி வழிபடுவதாகும்.”பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இந்த உடம்பினால் என்ன பயன்” என்று திருனாவுக்கரசர் நம்மைக் கேட்கிறார்.


 


வழிபாட்டிற்காக மேற்கொள்ளும் அருச்சனை உயிர்களின் உணர்வைத் தொட்டு வளர்க்கக் கூடிய தாய்மொழியில் இருத்தல் அவசியம். எனவே, தமிழில் அருச்சனை செய்தல் மனிதரிடத்தில் ஆன்மீக உணர்வை வளர்க்கும்.அதனால் மானிட சாதியின் தரம் உயரும். ஞான அனுபவங்கள் எளிதில் கிடைக்கும்.என்று கூறுகிறார் குன்றக்குடி அடிகளார்.


கடவுளின் திருப்பெயர்கள் 108 அல்லது 1008 கூறி மனமுருகி நின்று மலர்துவி வழிபடும் வரிசையில் நூறாயிரம் முறை கூறி(ஓர் இலட்சம் தடவை) வழிபடுவது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது.கடவுளின் திருப்பெயர்கள் மந்திரங்களாகக் கருதப் பெறுவதால் அவற்றைப் பலமுறை கூறி வழிபடுவதால் இம்மைப் பயனும்,மறுமைப் பயனும், எளிதில் கிடைக்க வழி உண்டு என்று நம் நாயன்மார்களும்,ஆழ்வார்களும் பாடி உள்ளனர்.


“அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகமும் தோன்றும்,


வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்--நெஞ்சில்


ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்


முருகா என்று ஓதுவார் முன்” என்று நக்கீரரும்,


மொழிக்குத்துணை முருகா எனும் நாமங்கள்” என்று அருணகிரியாரும்


முருகன் திருப்பெயரை ஓதுவதால் வரும் நன்மையைக் கூறுகின்றனர். ”கண்ணன் என்னும் பெயரைச் சொல்லச் சொல்லக் கல்லும் முள்ளும் பூவாய் மாறும்  மெல்ல மெல்ல” என்று கண்ணதாசனும் கண்ணனின் திருப்பெயராற்றலைப் பற்றிப் பாடியுள்ளார்.


      இத்தகைய அருச்சனையை நம் தாய் மொழியாகிய தமிழ்வழி செய்வதால்,வழிபடும் நமக்கு எளிதில் வழிபாட்டின் உண்மைப் பொருள் விளங்க வழிபிறக்கும். ஏனைய சமயத்தினர் எல்லோரும் அவரவர் தாய்மொழியில் வழிபாடுகளையும் சடங்குகளையும் செய்யும்போது, நாம் மட்டும் அருச்சனையைத் தமிழில் ஏன் செய்யக்கூடாது என எண்ணிப் பார்க்கவேண்டும்.


      நம் சிங்கைக் குடியரசில் டேங் ரோடு அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலிலும், டெப்போசாலை அருள்மிகு ருத்திரகாளியம்மன் கோவிலிலும்  சௌத் பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் ஆலயத்திலும், சிராங்கூன் சாலையிலுள்ள வீரமாகாளியம்மன் கோயிலிலும், ஜாலான் காயுமுனீஸ்வரர் ஆலயத்திலும்,தமிழ் அருச்சனை பல ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகின்றது.


      இக்கோயில்களுக்கு செல்லும் அன்பர்கள் அங்குள்ள அர்ச்சகர்களிடம் தமிழில் அருச்சனை செய்துகொடுக்குமாறு கேட்க வேண்டும் மறுத்தால்,நிருவாகத்திற்குத் தெரிவிக்கவேண்டும்.


அர்ச்சகர்கள் செய்யத்தயாராக இருக்கிறார்கள் நாம்தான் கேட்பதில்லை.


நாம் சிங்கையிலுள்ள ஏனைய கோயில்களின் நிருவாகத்தினரும் தமிழ் அருச்சனையை விரைவில் தொடங்கவேண்டும்.


தமிழ் நம் நாட்டின் அதிகாரத்துவ மொழியல்லவா?பிறகு ஏன் தயக்கம்?


தமிழ் அருச்சனை வழிபாட்டில் டெப்போசாலை ருத்திரகாளியம்மன் கோயிலார் நம் சிங்கைக் குடியரசில் ஒரு முன்னோடிச் சாதனையை நிகழ்த்த இருக்கின்றனர். 23-02-1997 ஞாயிற்றுக்கிழமை அன்று அருள்மிகு ருத்திரகாளியம்மனுக்குத் தமிழில் இல்ட்சார்ச்சனை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடக்கமுதல் இறுதிவரை தமிழ் வழிபாடாகவே அமையும்.


      லலிதா சகஸ்ரநாமம் என்னும் நூலிலுள்ள அம்பிகையின் 1008 திருப்பெயர்களையும் அழகு தமிழாக்கி 100க்கும் மேற்பட்ட இறையன்பர்கள் ஒருசேர ஒன்றியிருந்து ஓதி,போற்றி, போற்றி எனக் கூறிக் குங்கும வழிபாடு செய்வதாக இந்நிகழ்ச்சி அமையும்.


      அருச்சனையில் கலந்துகொள்ளும் அன்பர்களுக்குத் தமிழ் அருச்சனை நூல் கொடுக்கப்படுவதோடு,அம்பிகையின் அருட்பிரசாதமும் வழங்கப்படும்.எனவே அன்பர்கள் திரளாக வந்து தமிழருக்கான அருச்சனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்லாதரவு தரவேண்டும்.வழிபாடு முடிந்ததும் அன்னதானம் வழங்கப்படும்.


 


அன்பு என்னும் அமுதம் அமைத்து அன்னையை


இன்பத் தமிழில் ஏத்தி வழிபடுவோம்


ஆயிரம் பேர் கூறி அழகு தமிழால் போற்றி


தாயினைப் பணிந்து நிற்பபோம் தலை தாழ்த்தியே


உருத்திர காளியின் பேரை உயர் தமிழால் ஒரு


நூறாயிரம் முறை ஓதி வணங்குவோம் உவந்தே


 


காதணி விழா


உட்பொருளும் சிறப்பும்


(டாக்டர் சுப. திண்ணப்பன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம்)


இந்துக்களுக்குப் பிறப்பதற்கு முன்னும் பிறந்து வாழும் காலத்திலும் இறந்த பிறகும் சடங்குகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழ் நூல்களில் காலத்தால் தொன்மையதான தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியர் சடங்குகளைக் கரணம் என்று குறிப்பிடுவார். பிறப்பதற்கு முன் வளைகாப்பு என்னும் சடங்கும், பிறந்து வாழும் காலத்தில் பெயரிடுதல், சோறூட்டுதல், கல்வி (ஏடு) துவக்குதல், முடி இறக்குதல், திருமணம் முதலிய சடங்குகளும், இறந்த பிறகு எரியூட்டுதல், எலும்பு கரைத்தல், கல்லெடுத்தல், திதி (திவசம்) செய்தல் முதலிய சடங்குகளும் உள்ளன. இந்தச் சடங்குகள் தொடக்க காலத்தில் பொருட் சிறப்புடன் தொடங்கப் பெற்றன. காலம் செல்லச் செல்ல இவற்றின் பொருளை அறியாமல்-புரிந்து கொள்ளாமல் பெயருக்குச் சடங்கு என்னும் நிலையில் நாம் செய்யத் தொடங்கி விட்டோம். அதனால் இன்று பல சடங்குகளின் உட்பொருள் நமக்குப் புரியாமல் உள்ளது. இத்தகைய சடங்குகளில் ஒன்று காதணி விழா.


காதணி விழா என்னும் சடங்கு காது குத்துதல் என்றும் அழைக்கப்படும். “கேசவ நம்பி உன்னைக் காதுகுத்தி'' என்று பெரியாழ்வார் தம் பாடலில் இதனைக் குறிப்பிடுகிறார். வடமொழியான சமஸ்கிருதத்தில் கர்ணபூஷணம் கர்ணவேதா என்று கூறுப் பெறும். கர்ணம் என்பது காது; பூஷணம் என்பது அணி; வேதா என்பது வேதம், மறை அல்லது அறிவு. காது என்பது ஐம்பொறிகளில் ஒன்று. மெய், வாய், கண், மூக்கு, செவி (காது) என்னும் ஐந்து உறுப்புகளும் முறையே தொடுதல், சுவையறிதல், பார்த்தல், முகர்தல், கேட்டல் ஆகிய செயல்களைச் செய்ய உதவுகின்ற உறுப்புகள். இவற்றின் வாயிலாகத்தான் மனிதன் தன் அறிவைப் பெருக்கிச் சிந்தனையை வளர்த்துக் கொள்கிறான். எனவே தான் வள்ளுவர் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு'' என்று கூறுகிறார்.


காது அல்லது செவி கேட்டுணரும் திறனைப் பெற உதவும். ஓர் உறுப்பு இத்திறனைக் கேள்வி என்றும் செவிச் செல்வம் என்றும் கூறுவர். பனையோலையில் எழுதி வந்த காலத்திலும் சரி, கணினி வழியாகச் செய்திகளை விரைவில் பரிமாறிக் கொள்ளும் இக்காலத்திலும் சரி செவிச் செல்வத்தின் இன்றியமையாமை குறையவில்லை. நம் கல்வித்திட்டமே செவித்திறனைப் பொறுத்தல்லவா - ஆசிரியர் சொல்வதைக் காதினால் கேட்டுக் கற்பதனைப் பொறுத்தல்லவா - இருக்கிறது.


மொழி என்பது கருத்துகளை ஒலிவழியாக உணர்த்த உதவும் ஒரு கருவி. இதனை உணர்ந்து கொள்ளப் பயன்படுவது காது தானே. எனவே தான் தமிழ் மறை தந்த திருவள்ளுவர் கேள்வி என்னும் அதிகாரத்தைக் கல்வி, கல்லாமை என்னும் அதிகாரங்களை அடுத்து வைத்துள்ளார். “செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம், அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை'' என்று சிறப்பித்துக் கூறுகிறார். பாமரரும் படித்தவரும் அறிவு பெற உதவுகின்ற ஓர் அரிய கருவி காது அல்லது செவி ஆகும். மொழி கற்பதற்கு முன் குழந்தைகள் முதலில் கேட்டுணரும் திறனைத் தான் பெறுகின்றனர்.


இத்தகைய சிறப்புடைய காதுக்கு அணி சூட்டுவதற்குரிய ஒரு விழா தான் காதணி விழா ஆகும். இவ்விழாவின் உட்பொருளைப் புறநிலை, அகநிலை என இரு நிலைகளில் காண முற்படுவோம். புறநிலையில் பார்க்கும் போது காதுக்கு அணி - ஆபரணம் - அணிவதற்குரிய துளையிடுவதை இந்த விழா மையமாகக் கொண்டு விளங்குகிறது. ஆண்களுக்கு உரிய காதணி குழை என்றும், பெண்களுக்குரிய காதணி தோடு என்றும் அழைக்கப் பெறும் தன்மையைத் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இந்தத் துளை சிறிதாகவும் இருக்கும். மிகப் பெரிய அளவில் இருப்பதைத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வாழும் மூத்த மகளிரிடையே காணலாம். இவர்கள் ஓலை எனப்படும் அணியை அணிந்தனர். ஓலை உலோகத்தால் செய்யப்பட்ட நிலையில் காதின் துளை பெரிதாகித் தொங்குகின்ற நிலையும் உண்டு. குழந்தைகளுக்குக் காது குத்தும் சடங்கினைச் செய்பவர் தங்க நகைகள் செய்யும் பத்தர் எனப்படும் ஆசாரி ஆவார். குழந்தைகளைத் தாய்வழி மரபினர் தம் மடியில் வைத்துக் காது குத்துவது வழக்கம். காது குத்துவது என்பது தோடு, குழை, முதலிய காதணிகளை அணிவதற்குத் தான் என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த அணிகள் தங்கத்தினால் செய்யப்பட்டவை. இவை அழகூட்டும் தன்மையன. மேலும் தங்கத்தை - பொன்னை ஒரு மங்கலப் பொருளாக - திருமகளாகவே கருதுவது தமிழர் மரபு. காதணி அணிவதால் மங்கலப் பொருளைத் தாங்கி நிற்பதாகக் கருதலாம். மேலும் தங்கம் போன்ற உலோகங்களின் வழியாகத் தண்ணீர் வந்து நம் உடலில் படும் போது இது நம் உடல் நலத்துக்கு உகந்தது என்று சிலர் எண்ணுகிறார்கள். காது குத்துவதால் ஹிரணியா, ஹைடிரோசல் முதலிய நோய்கள் வாரா என்று வடமொழிச் சுலோகம் ஒன்று கூறுவதாகச் சொல்கிறார்கள். அதனை மருத்துவ உலகம் தான் ஆராய்ந்து உண்மை காண முடியும். அகுபங்சர் என்னும் மருத்துவச் சிகிச்சையுடனும் சிலர் தொடர்பு படுத்திக் கூறுகிறார்கள்.


இனிக் காதணி விழாவின் உட்பொருளை அகநிலையில் பார்ப்போம். “கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம்'' என்பது வள்ளுவம். அதுபோலக் காதிற்கு அணிகலன் என்ன ? “எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்'' “கற்றிலனாயினும் கேட்க'' என்னும் திருக்குறள் வரிகளை நோக்கும் போது நல்லவற்றைச் சான்றோரின் கருத்துக்களைக் கேட்பது தான் காதுக்குரிய உண்மையான அணி என்று உணர முடிகிறது. இத்தகைய நற்கருத்துக்களே நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகளாக அமையும். வழுக்கி விழும்போது ஊன்றுகோலாக உதவும்.  இத்தகைய கேள்விச் செல்வமாகிய கருவியால் தான் நம் காதுகள் துளைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் புறநிலையில் செய்திகளைக் கேட்க உதவினாலும் அவை பயனற்றவை என்று வள்ளுவர் கூறுகிறார். “கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி'' என்று குறள் கூறுகிறது.


சமயக் கண்ணோட்டத்தில் காணும் போது இறைவனின் திருப்புகழை- பெருமையைக் கேட்பது தான் செவியின் பயன் என்று ஆன்றோர்கள் கருதினர். “சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே'' என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகிறார். திருநாவுக்கரசர் திருஅங்கமாலை என்னும் தம் தேவாரப் பகுதியில் செவிகாள் கேண்மின்களோ சிவன் எம்இறை செம்பவள எரிபோல் மேனிப்பிரான்திறம் எப்போதும் செவிகாள் கேண்மின்களோ'' என்று கூறுகிறார். “இறைவனுக்கு ஆளாகார்; ஆளானாரை அடைந்து உய்யார் மீளா ஆட்செய்து மெய்மையுள் நிற்கிலார், தோளாத சுரையோ தொழும்பர் செவி வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே'' என்று அவர் கழிவிரக்கம் கொள்கிறார்.


இந்துசமய அடிப்படையில் இறைவன் திருவருளைப் பெற உதவுவது இறை வழிபாடு. இவ்வழிபாட்டிற்குப் பாவனை, மந்திரம், கிரியை என்பன தேவை. பாவனை, கிரியை என்பதற்கு இடையே இருப்பது மந்திரம். மந்திரம் என்பதற்குப் பொருள், கூறுவார்க்கு இடையூறு வராமல் காப்பது என்பதாகும். “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப'' என்று தொல்காப்பியம் மந்திரம் என்பதற்கு விளக்கம் கூறுகிறது. மந்திரங்களுள் அடிப்படையானதாகவும் தலைமையானதாகவும் திகழ்வது ஓங்காரம் எனப்படும் ஓம் என்பதாகும். இம்மந்திரத்தைத் தாரக மந்திரம், பிரணவ மந்திரம் என்று கூறுவார்கள். தாரகம் என்பது தாண்டச் செய்வது என்று பொருள்படும். பிறவிக் கடலைத் தாண்டுவதற்கு உதவுவது ஓம் எனப்படும் மந்திரம். எனவே அது தாரக மந்திரம் ஆயிற்று. பிரணவம் என்னும் சொல்லிலுள்ள பிர-விசேடமானது-நவம்-புதுமை எனப் பொருள்படும். சொல்லிச் சொல்லி அனுபவிக்க அனுபவிக்க விசேடமான உண்மைகளை


 உணர்த்துவது பிரணவம். என்றும் வாடாமல் காலத்தால் எப்போதும் புதுமையாக இருக்கும் ஆன்மதத்துவம் தான் பிரணவம். எல்லா மந்திரங்களுக்கும் இது (ஓம்) மூலமந்திரமாகத் திகழ்கிறது.


 ஓம் என்ற ஒலிக்குப் புனிதமாக்கும் தன்மை உண்டு. ஓம் என்பது பரம்பொருளைக் குறிக்கும்.”உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற, மெய்யா விமலா விடைப் பாகா வேதங்கள், ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனேஎன்பது  திருவாசகம்


ஓங்காரத்திலிருந்து தான் எல்லாம் தோன்றுகின்றன. ஓங்காரத்திலேயே மறுபடியும் ஒடுங்குகின்றன. ஈசன் தங்கியிருக்கும் பீடமாகவும் மற்றையோர் தோன்றுமிடமாகவும் வேதங்களுக்கு முதலாவதாகவும் காசியில் இறப்பவர்க்கு இறைவன் ஓதும் மந்திரமாகவும் இருப்பது ஓம்.


ஓம் என்பது நாத தத்துவம் நாதவிந்து கலாதி நமோநம வேத மந்தர சொரூப நமோ நமஎன்று அருணகிரியார் முருகனைப் பாடுகிறார். “தூமறைக் கெல்லாம் ஆதியும் அந்தமும் சொல்லும் ஓமெனப்படும் ஓரெழுத்து'' என்று கந்தபுராணத்தில் கச்சியப்பர் கூறுகிறார்.


ஓம் என்பது அ, , ம் என மூன்று ஒலிகளால் உருவான ஒன்று. இவை கடவுளின் முத்தொழில்களாகிய படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைக் குறிக்கும். மேலும் இவை காற்று, தீ, சூரியன், பிரமன், விஷ்ணு, உருத்திரன்; பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்; இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகியவற்றையும் உணர்த்தும்.


நமசிவாய மந்திரத்தின் உட்பொருளும் ஓம் என்பதில் அடங்கும் ஓங்காரமாம் ஐந்தெழுத்தால் புவனத்தை உண்டு பண்ணிப் பாங்காய் நடத்தும் பரம்பொருளே'' என்பார் தாயுமானார்.


ஓம் என்னும் மந்திரத்தின் உட்பொருளை அறியாத காரணத்திற்காகப் பிரமனை முருகப்பெருமான் தண்டித்தான் என்று கந்தபுராணம் கூறும். இந்த மந்திரத்தின் உட்பொருளைத் தேவரில் சிறந்த சிவபெருமானுக்கும், முனிவரில் சிறந்த அகத்தியருக்கும், மனிதரில் சிறந்த அருணகிரியாருக்கும் முருகன் உபதேசித்ததாகக் கூறுவர். பரம் பொருளையடைய விதிக்கப்படும் உபாசனைகளில் பிரணவ உபாசனை மிகவும் முக்கியமானது.


இத்தகைய சிறப்புடைய ஓங்காரத்தின் வடிவமாகக் காது திகழ்கிறது. இந்தக் காதில் துளையிடுவது, குத்துவது, ம் என்னும் புள்ளியினை ஏற்படுத்துவதைக் குறிக்கும். எனவே, ஓம் எனும் மந்திரத்தை ஆச்சாரியன் வாயிலாகச் சிறுவயதிலேயே குழந்தையாக இருக்கும் போதே உபதேசம் செய்வதை இவ்விழா நினைவு படுத்துகிறது. இந்தக் குரு உபதேசம் பின்னர் நிகழும் வேத உபதேசம், வித்யா உபதேசம் ஆகியவற்றுக்கெல்லாம் அடிப்படையாகும். மனிதனைப் புனிதப் படுத்த இந்த ஓம் உபதேசம் உறுதுணையாகிறது. அதனால் தான் இறந்த பச்சிளங் குழந்தைக்கும் கூடக் காது குத்திப் புதைக்கும் வழக்கம் தோன்றியது.


ஓ என்னும் காது வடிவில் ம் என்னும் புள்ளி குத்தப் பெறுவதால் இயக்கம் - புனிதத்தன்மை கிடைக்கிறது என்பதை உணர்த்தவே இந்தக் காது குத்தல் இந்து சமயத்தவரிடையே உள்ளது என்பதை உணர வேண்டும்.கடவுளைக் கண்ட அருளாளர் வாக்காக கருதத்தகும் திருமுறை - தோடுடைய செவியன் எனத் தொடங்குகிறது. த் என்பது தமிழின் முதல் எழுத்து. ஓ என்பது ஓங்கார வடிவம் மறை முதலாகிய ஓங்காரத்தைத் திருநெறிய தமிழில் சொல்லித் தொடங்குகிறார் ஞானசம்பந்தர். இதனால் தான் உலகத்தார்க்கு உரை - (உபதேசம்) சிறப்ப இவ்வாறு கூறினார் என்று சேக்கிழார் கூறுகிறார்.


காதணி விழாக் காணும் கன்னிப் பெண்களே! நீவீர்


மாதொரு பாகர் அருளால் மாண்புகள் பெற்று வாழ்க


 


Ear piercing ceremony and its Significance


(Dr SP Thinnappan, NUS, Singapore)


Every Hindu ritual/ big or small has significance. The meanings of the ritual are not always obvious. In the course of time – and time in this context means thousands of years – many of the rituals have strayed for from their original forms. How ever, great Hindu sages have told us time and again that what is important is our inner relation with God and not the outward signs of that relationship.


The Panchanitya Karmas – five constant or minimal duties – are the treasures of all Hindus, constituting an amalgam of the ethical counsel of the Vedas, Agamas and other Hindu scriptures to guide one’s conduct through life. Samskara ‘Sacraments’ are special ceremonies which mark our passages in life and sanctify these cycles of experience. They include the rites of birth, first feeding, learning, marriage, death, monastic vows for monks and more.


Ear piercing ceremony is one of the Samskaras or Sacraments. Ear piercing ceremony is conducted during the early age of childhood. The conductor of this ceremony is always goldsmith.


Ear is one of the sense organs. It is useful for hearing or listening. Listening is considered one of the basic language skills through which our knowledge or education or learning is developed. Let me explain the significance of this ceremony from the point of view of two aspects viz external and internal. External aspect deals with the physical aspect while internal aspect deals with the mental and spiritual aspects. From the external point of view ear piercing is conducted for wearing ear rings and the other ear ornaments. Ear ornaments are usually made up of gold. According to Hindus, the Gold is considered as one of the auspicious things in the world. Further the water comes through this gold ornaments during the bath is believed to give good health for the human body. Ear piercing is also helpful to prevent the men from hydrosol and Haryana according to one Sanskrit sloga. But it should be proved by medical world. It is also connected with acupuncture.


Let us see the internal aspect. The true ornament of the ear is to listen the words and advice of the great person, sages and saints. According to Thiruvalluvar, a Tamil Saint “Wealth of wealth is wealth acquired by ear attent; wealth mid all wealth supremely excellent’ like staff in hand of him in slipping ground who strays, are words from mouth of those who walk in righteous ways. This is from ethical point of view. If we look this from the religious point of view, the true function or use of the human ears is to hear or listen the praise of God; otherwise the ears are considered as useless ones. Further Om. the pranava mantra is considered one of the basic mantras in the Hindu Religion. This will help the soul to get the grace or bliss of God. The Pranava Aum denotes Nada, the primal sound or soundless sound from which creation issues forth. The Pranava Aum is associated with Lord Ganesh. It consists of three sounds a, u, m representing Creation, Protection and Destruction of the world. The human ear has the shape of Tamil letter O. The piercing indicates the dot, sound m. The pranava mantra om is spiritually communicated to the ears of child even during the childhood days by the achariya ‘goldsmith’. This act will be very helpful for the child in order to attain education, worldly wealth and spiritual desires. Further it makes the person as a holy person.  

.... முற்றும் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக