வியாழன், 1 மே, 2014

அணிந்துரை - 4


சி.கருணாகரசு

நீ வைத்த மருதாணி

10-4-12


மருதாணி என்பது மருதோன்றி என்பதன் மரூஉ வடிவமாகும். மரு என்பது மருந்து, மருத்துவம் முதலிய சொற்களுக்குரிய அடிச்சொல் ஆகும். தோன்றி என்பது தோற்றத்தைக் குறிக்கும். மருந்துதோன்றி மருதோன்றி ஆகி மருதாணி எனப் பேச்சி வழக்கில் மாறியது.


மருதாணிக்கும் கவிதைக்கும் ஒருசில தொடர்புகள் உண்டு. மருதாணி உடலுக்குக் குளிர்ச்சியை ஊட்டும்; கவிதை உள்ளத்துக்குக் குளிர்ச்சியை ஊட்டும். மருதாணி உடலுக்குச் செம்மை (சிவப்பு) நிறத்தைத் தரும்; கவிதையோ உள்ளத்துக்குச் செம்மைப் பண்பைத் தரும். மருதாணி உடலுக்கு வண்ணம் தரும் வளம் உள்ளது; கவிதை உள்ளத்துக்கு எண்ணம் தரும் ஏற்றம் உடையது. மருதாணி உடலுக்கு அழகு சேர்ப்பது; கவிதை உள்ளத்துக்கு உவகை அழகைச் சேர்ப்பது ஆகும். மருதாணிக்கு மருந்துக் குணமும் விருந்து (புதுமை) ப் பண்பும் உண்டு. அதுபோலக் கவிதைக்கும் அறநெறியாகிய மருந்துப் பண்பும் அழகியலாகிய விருந்து அளிக்கும் குணமும் உண்டு.


இத்தகைய சிறப்புடைய மருதாணி என்னும் பெயரை மையமாக் கொண்டுநீ வைத்த மருதாணிஎன்னும் தலைப்பிட்டுக் கவிஞர் சி.கருணாகரசு வெளியிடும் கவிதைத் தொகுப்பு நூலைப் படித்தேன் உருவத்தால் குறுகிய புதுக்கவிதைகள் பலவற்றையும் மரபுக் கவிதைகள் சிலவற்றையும் கொண்ட தொகுப்பாக இந்நூல் இயங்குகிறது. மதுவெண்பாக்களும் பெண்பாக்களும் இருக்க்க் கண்டு மகிழ்வுமிகக் கொண்டேன்.

மதுவெண்பாவுக்கு ஓர் எடுத்துக்காட்டு

பொருளைக் கரைக்கும் புகழைச் சிதைக்கும்

குருதியில் நச்சினைக் கூட்டும்உறுப்பில்

பதுங்கி உயிரைப் பறித்தே அழிக்கும்

மதுவைத் தவிர்த்தலே மாண்பு.

இயற்சீர் வெண்டலையாய் வந்த வெண்பாவான இது படிப்பவர்க்கு எளிமையும் இனிமையும் கூட்டக் காணலாம்.

இவ்வாறே இக்காலத்தில் இளையர்க்கு இன்னல் தரும் வெண்சுருட்டுப் பற்றியும்




புத்துணர்ச்சி என்று

புகைத்தால்

புற்று உணர்ச்சியாய் வந்து

புதைக்கும்!

ஆயிரம் கேடுகள்

அதற்குள் இருக்கு

அந்த அரக்கன்

அவசியமா உனக்கு? எனக்

கவிதைவழி வினா எழுப்புகிறார்.

மூடநம்பிக்கையின் மூலமாக விளங்கும் ஆரூடம் பற்றி

இது, நம்பிக்கையின்

அடர்த்தியை கெடுத்துவிடும்

இதை, நம்பியோர்

முயற்சிகள் படுத்துவிடும்

என்று கவிதைவழிச் சாடும் கவிஞரைக் காணமுடிகிறது. இதைப் போலவே சகுனத்தைச் சாதனைப் பாதையின் வேகத்தடை எனக் கூறிப் புதுச் சரித்திரம் படைத்திடச் சகுனத்தை உடை எனப் புகல்வதும் போற்றத் தக்கது.

புதுயுகத் தமிழர்கள்

புஞ்சையிலும் நஞ்சையிலும் உழன்றால் கூடப்

புத்தாக்கத் தொழில்நுற்பம் கற்றுக் கொள்வர்

என்பது இவரது எண்சீர் விருத்தப் பாட்டில் ஓர் அடி.

இளைய(ர்) தமிழ் என்னும் தலைப்பில்

இன்றையஇளையர் தமிழ்தான்

நாளைய இனிய தமிழ்!

நம் இளைய தமிழ்!!”

என்னும் கவிதை அடிகள் சிறப்பாக உள்ளன.

மொழிக்கும் விழிக்கும் இடையேயுள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை ஒப்பிட்டு

மொழிக்கும்

விழிக்கும்

வித்தியாசம் அதிகமில்லை என்று கூறி

இரண்டுமே

பேசும் இயல்புடையவை

இரண்டுமே

மைஎழுத

அழகு கூடும்.


மொழி

உலகிற்கு

உன்னைக் காட்டும்

விழி

உலகை

உனக்குக் காட்டும்.

என்று பேசுவது எழில் கூட்டுகிறது.

காலணியைக் கூடக் கருணாகரசு விட்டுவைக்கவில்லை.

காலணி, வைரம் பதித்த மகுடத்தை என் வாரறுந்த செருப்பெ மேல் எனக்கூறி அதற்குக் காரணம் மகுடம் சுமையாகிறது, செருப்பு சுமந்து நிற்கிறது என்று கூறுவதும் நன்றாக உள்ளது.

பாரினைக் காக்கும் பசுமை என்னும் தலைப்பில் இயற்கையைப் போற்றிச் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கச் சொல்லும் பாங்கும் சிறப்பாக உள்ளது. பொன்னாடைகள் எல்லாம் பொய்யாடைகளே எனக் கூறும் கவிஞர் கருணாகரசு பெண்பாக்கள் என்னும் பகுதியில் சீதை, திரெளபதை, குந்திதேவி, காந்தாரி, சூர்ப்பநகை, அகலிகை முதலிய இதிகாசப் பெண்களையும், கண்ணகி, மாதவி, மணிமேகலை என்னும் காப்பிய மகளிரையும், கிளியோபாட்ரா, டயானா ஆகிய மேனாட்டுப் பெண்களையும், இந்திரா காந்தி, சான்சிராணி, வேலுநாச்சியார்,கல்பனா சாவ்லா ஆகிய வீராங்கனைகளையும் ஒரு சில சொற்களில் சித்தரித்திருப்பது சிறப்பாக உள்ளது. சில எடுத்துக் காட்டுகள்:

மாதவி கணிகை குலத்தில் பிறந்த கண்ணகி, மணிமேகலை கணிகைக் குலமும் வணிகக் குலமும் கலந்து செய்த கடவுள் குலம். இந்திரா காந்தி வேலியால் விழுந்த வீரிய விருட்சம் ஆங்சாங் சுகி அம்மையார் உரிமைக்காக போராடும் உயிரியல் பர்மாதேக்கு சான்சிராணி வல்லினம் மிரண்ட மெல்லினம்


வளரும் நகத்தை வெட்ட மனமில்லை

நீ வைத்த மருதாணி

என்பதுதான் இந்நூலுக்குள்ள தலைப்புக் கவிதை.


இத்தகைய கவிதைகள் பலவற்றைக் கொண்ட இந்நூலை வெளியிட்டுள்ள கவிஞர் கருணாகரசு இதுபோன்ற நூல்கள் பலவற்றைத் தொடர்ந்து வெளியிட்டுத் தமிழன்னைக்கு அணிசேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறேன். தமிழ்கூறும் நல்லுலகம் இவர்க்கு இந்நூலை வாங்கி ஊக்கமும் ஆக்கமும் ஊட்டும் என நம்புகிறேன்.



வரதராசன் அ.கி.

அன்னையின் ஆணை

இலக்கினை இயம்புவது இலக்கியம். இலக்கு என்பது குறிக்கோளைக் குறிக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் , வாழ்க்கையில் முன்னேற ஒரு குறிக்கோள் இன்றியமையாத தேவையாகும். இதனை மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை

எவ்வினையோர்க்கும் இம்மையிற் நன்மை இயக்குதற்கு இன்பம் பயக்குமோர் இலக்கு வேண்டும். உயிர்க்கது தூண்டுகோல் போலாம். ஈண்டெப் பொருள்தான் இலக்கற்றிருப்பது ? .

என்று உடன்பாட்டு முகத்தானும்,

தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்,

பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதைமார்தம் மேலனாய்க் கழிந்த நாளும் , மெலிவோடு மூப்பு வந்து கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன். சேல் உலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சுரத்து உளானே.

என்று எதிர்மறை முகத்தானும் வலியுறுத்துகின்றனர். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் வரும் நாயன்மார்கள் அனைவரும் குறிக்கோள்களுக்காக வாழ்ந்து காட்டிய பெருமக்களாக விளங்குகிறார்கள். அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே என்று இலக்கணமும் இலக்கியத்திற்கு வேண்டிய இலக்கினை - குறிக்கோளைஇயம்புகின்றது. ”குறிக்கோள் இலாத வாழ்வு மணல்மேல் எழுந்த மனை ; ஆணி வேர் இல்லாத மரம்என்று பேசுகிறார் பேராசிரியர் மு. வரதராசனார்.

தமிழில் பல சிறந்த குறிக்கோள்களை மனித வாழ்வுக்குத் தரும் இலக்கியங்களுள் தலை சிறந்தது கம்ப ராமாயணம். எனவேதான், ” தமிழுக்குக் கதியாவார் இருவர் . என்பது கம்பனையும், திஎன்பது திருவள்ளுவரையும் குறிக்கும்என்று பேராசிரியர் செல்வ கேசவராய முதலியார் குறிப்பிடுகிறார். நடையில் நின்றுயர் நாயகனாகிய இராமனைத் தலைவனாகக் கொண்டு இலங்கும் கம்ப ராமாயணத்தின் தலைமைக் குறிக்கோள் அறம் வெல்லும் , பாவம் தோற்கும் என்பதாகும். காப்பியத்தில் இடம்பெறும் பாத்திரங்கள்கதை மாந்தர்கள்ஒவ்வொருவரும் இத்தலைமைக் குறிக்கோளின் கூறுகளை நிறைவேற்றும் இயல்புடையவர்களாக விளங்குகிறார்கள். இராமன்தந்தை சொல் மிக்க மந்திரமில்லைஎன்னும் கூற்றுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டுகிறான். காப்பியத் தலைவி சீதை கற்பினுக்கு அணிகலனாகக் காட்சியளிக்கிறாள். பரதன் உடன்பிறப்பின் உயர்வைப் புலப்படுத்துகின்றான். இலக்குவனோ தாய் சொல்லைத் தட்டாத தனயனாகத் திகழ்கிறான்.

இலக்குவனின் இந்த இயல்பை விரிவாக விளக்கிக் காட்டுவதே அ.கி.வரதராசன் எழுதிய அன்னையின் ஆணை என்னும் இக்கட்டுரைத் தொகுப்பு நூலாகும். இந்நூலில் இலக்குவன் தன் அன்னையின் ஆணையாகியதாய் சுமித்திரையின் கட்டளையாக வரும்

ஆகாததுஅன்றால் உனக்கு ; அவ்வனம்இவ்அயோத்தி; மா காதல் இராமன்நம்மன்னவன், வையம்ஈந்தும் போகாஉயிர்த்தாயர்நம்பூங்குழல்சீதை,-- என்றே ஏகாய் ; இனி இவ்வயின்நிற்றலும்ஏதம்என்றாள்


பின்னும்பகர்வாள்: “ மகனே! இவன்பின்செல்; தம்பி என்னும்படிஅன்று ; அடியாரினின்ஏவல்செய்தி; மன்னும்நகர்க்கேஇவன்வந்திடின்வா; அதுஅன்றேல் முன்னம்முடிஎன்றனள், ; வார்விழிசோரநின்றாள்.

இரு பாடல்களின் கருத்துக்களையும் இலக்குவன் தன் குறிக்கோளாக ( இலக்காக) ஏற்று, காப்பியம் முழுவதும் அதனை நிறைவேற்ற இயங்குவதை இந்நூல் விரிவாக விளக்குகிறது.

இந்த அன்னையின் ஆணையின் மேற்கண்ட வாசகங்களின் சிறப்பையும், ஆணை எழுந்த சூழலையும் நூலாசிரியர் மிகச்சிறப்பாக முதலில் விளக்கியுள்ளார். மேற்கூறிய பாடலில் இடம்பெறும் அந்த வனமே உனக்கு அயோத்திஇராமன் இருக்கும் இடமே அயோத்திஇராமன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமாயின் , நீ முன்னம் முடிஆகிய இரு கூற்றுகளுக்கும் காரணமானவை இராமனின் வார்த்தைகளே என்று ஆசிரியர் சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டத்தக்கது. “ சுமித்திரைஇவ்விரண்டு கருத்துக்களையும் இராமனிடமிருந்தேகடன் வாங்கி , இலக்குவனுக்குத் தான் இடும் அன்னையின் ஆணையின் வாசகங்களாகக் கையாள்கிறாள்.” என்பது நூலாசிரியரின் கூற்றாகும். இவ்வாறே இலக்குவன்காட்டிற்கு ஏகும் சூழலைக் கட்டுரை ஆசிரியர் விளக்கியுள்ள திறனும் மெச்சத் தகுந்தது.

இலக்குவன் தானும்காட்டிற்கு ஏக இராமனை இணங்க வைக்கத் தொடுத்த சொற்கணைகளை அழகாகப் பட்டியல் போட்டுக் காட்டும் இடத்தில் ஆசிரியரின் எழுத்தாற்றல் சிறப்பாக அமைந்துள்ளது. அடியாரின் ஏவல்செய்திஎன்ற அன்னையின் ஆணையைக் காட்டில் இராமன் வாழ்ந்த பதினான்கு ஆண்டுக் காலக் கட்டத்தில் இலக்குவன் எவ்வாறெல்லாம் நிறைவேற்றுகிறான் என்பதை இந்நூல் மிக விரிவாக விளக்குகிறது. இதோ அதன் சுருக்கம்.:

v இரவு நேரக் காவலாளியாக,

v கறுப்புப் பூனைப் படையாளாக,

v பாதுகாவலனாக,

v வீடு கட்டும் பணியாளனாக,

v ------‘’ --- “ ----- தச்சனாக,

v ------‘’ --- “ ----- கருமானாக,

v ------‘’ --- “ ----- கொத்தனாராக,

v ------‘’ --- “ ----- மேஸ்திரியாக,

v ------‘’ --- “ ----- சித்தாளாக),

v ------‘’ --- “ ----- உள் அலங்காரம் செய்பவனாக,

v ------‘’ --- “ ----- கட்டுமானப் பொறியாளனாக,

v ஓடம் கட்டும் தொழிலாளியாக,

v ஓடம் வலிக்கும் ஓடக்காரனாக,

v சமையற்காரனாக,

v தேவைப் படும் கட்டத்தில் அண்ணனுக்குப் போதனை செய்பவனாக,

v வழி காட்டியாக,

v அவனை இடித்துரைக்க வேண்டிய இடத்தில் அவ்விதம் இடித்துரைப்பவனாக,

v அவனை வழி நடத்துபவனாக

v அவனுக்காக வாதாடும் வக்கீலாக ,

v அவனுடைய உற்சாகச் சக்தியாக, ஊக்கப் பானமாக அவனுடையடானிக்ஆக,

v அண்ணன் துவண்டு போகும் சமயத்தில் அவனுடைய நம்பிக்கை நட்சத்திரமாக,

v அவனுக்கு ஒளி விளக்காக,

v அவனுடைய கட்டளைக்குக் காத்திராமல் பணியாற்ற வேண்டிய அவசர நிலையில் அந்த அவசர காலப் பணியாளனாக


என்றெல்லாம்இலக்குவன் விளங்கியதை இந்நூலில் உள்ள கட்டுரைகளின் வழி, ஏற்றசான்றுகளுடன் வாசகர்கள் படித்து மகிழலாம்.

கட்டுரைத்தலைப்புகள் இலக்குவனின் பல்வகை இயல்புகளை எடுத்துரைப்பதுடன், மோனை நயத்தோடும் கவிதை அழகோடும் காட்சியளிக்கின்றன. “ ஒப்பற்ற ஓடக்காரன்” ; ”சொற்றிறம் மிக்க சோதரன்” ; “ இடித்துரைக்கும் இலக்குவன்” ; ‘நம்பிக்கை நட்சத்திரம்” ; ”வாதாடும் வக்கீல்” ; ”துளங்கும் தூதுவன்” ; ”முன்னம்முடிந்தான்” - போன்றவைசில எடுத்துக்காட்டுகள்.

கம்பனின்கவிதை வரிகளே சில கட்டுரைகளுக்குத் தலைப்பாக அமைந்து நூலுக்குச் சிறப்புச் சேர்க்கின்றன. ” இமைப்பிலன் நயனத்தன்” ; ”என்று கற்றனை நீஇது போல?” , “தம்பிஉடையான் பகை அஞ்சான்” –என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

கட்டுரைஆசிரியரே இலக்குவனுக்காக வாதாடும் வக்கீலாக விளங்குவதை இந்நூலின் வழி உணர முடியும்.

வீண்சொற்கள் இன்றி விரித்துரைத்தல் , பொருளை ஐயத்திற்கு இடமின்றி விளங்க வைத்தல், படிப்பவர்களுக்க்ப் பொருட்சுவையால் இன்பமூட்டல், சொல்லாட்சி, இன்னோசை,தர்க்க ரீதியான வாதத்திறமை, ஆழ்ந்த கருத்துடைமை, முறையான வைப்பு அமைப்பு, ஏற்ற சான்றுடைமை, உயர்ந்தோர் வழக்கோடு மாறுபடாமை ஆகிய கட்டுரைக்ககுரிய அழகுக் கூறுகள் பலவும் இந்நூலின்கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் கம்ப ராமாயணத்தில் கொண்டுள்ளஆழ்ந்தகன்ற புலமை நூல் முழுதும் பளிச்சிடக் காண்கிறோம். கம்ப ராமாயணப் பாடல்களின் சொல் நயத்தையும், பொருள் ஆழத்தையும் ஆங்காங்கே கட்டுரை ஆசிரியர் எடுத்துரைக்கும் திறம் போற்றத் தக்க முறையில் அமைந்துள்ளது. நவில் தொறும் கம்பன் நூல் நயத்தை நன்கு புலப்படுத்தியுள்ளார்ஆசிரியர்.

இருப்பினும், சிலகட்டுரைகள்எல்லை மீறிய பக்க அளவு காரணமாகக் கூறியது கூறலுடன் விளங்குவதால் சற்றுச் சலிப்புத் தட்டும் வகையில் அமைந்துள்ளதை ஆசிரியர் தவிர்த்திருக்கலாம்.

இந்நூலில்உள்ள மிகுதியான கட்டுரைகள் சிங்கப்பூரில் கட்ந்த பதினெட்டு ஆண்டுகளாக இயங்கி வரும் இலக்கியவட்டம் என்ற அமைப்பில் ஆசிரியரால் உரைகளாக நிகழ்த்தப் பெற்றவை. அவ்வகையில் பலராலும் அவை பாரட்டப் பெற்றவை. அவருடைய உணர்ச்சிமயமான உரையைக் கேட்டு உவப்படைந்தவர்கள் பலர். அதேஉவப்பை நூல் வடிவில் இதைப் படிப்போர்களும் பெறுவார்கள் என்பதும் திண்ணம். அந்த உரைகளையும் உள்ளடக்கி இந்நூலைத் தொகுத்து வெளியிட்ட வரதராசனின் முயற்சியை மனமாரப் பாராட்டுகிறேன்.

இக்கட்டுரைத்தொகுப்பு வழி இலக்குவன் இலக்குடையவனாக விளங்குவதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும். இதனால் தான் என்னவோ கவிச்சக்ரவர்த்தி கம்பனும் லட்சுமணன் என்னும் மூலநூல் பெயரைப் பயன்படுத்தாமல் தன்னுடைய காப்பியம் முழுவதிலும்இலக்குவன் என்றே இவனைக் குறிப்பிடுகிறான் போலும் என்று எண்ணத் தோன்றுகிறது. இலக்குஉடையவன் தான்இலக்குவன் என்பதற்கு இந்நூல் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.


வரதராசன் அ.கி.

ஒப்பிலா மூவர்

. நவம்பர் 2011

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்

பெரிது பெரிது புவனம் பெரிது.

புவனமோ நான்முகன் படைப்பு.

நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்.

கரிய மாலோ அலைகடல் துயின்றோன்.

அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்.

கலசமோ புவியிற் சிறுமண்.

புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்.

அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்.

உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்.

இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்.

தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.


என்று பாடினார் ஔவையார்.

மாணிக்க வாசகர் இறைவனைக் காண விழைந்து,

        ஏதவன் ஊர்? ஏதவன் பேர் ? ஆர் உற்றார் ? ஆர் அயலார்

என விசாரித்துவிட்டு, இறுதியில், ” ஓத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன் “(இறைவன் தொண்டர் உள்ளத்தில் உறைகின்றான்) என்று உணர்கின்றார்.

இத்தகைய தொண்டர்கள் சிவபெருமானுக்கும், சிவனடியார்க்கும் பணி செய்யும் நிலையில் திருத்தொண்டர்கள் என அழைக்கப் பெற்றனர். இத்தகைய திருத்தொண்டர்களை வகைப்படுத்திச் சுந்தரர்திருத்தொண்டத் தொகைபாடினார். சிவபெருமானே, “தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்என அடியெடுத்துக் கொடுத்த பெருமை இதற்கு உண்டு. இத்தொகையை அடியொற்றிப் பின்வந்த நம்பியாண்டார் நம்பிதிருத்தொண்டர் திருவந்தாதிஇயற்றினார். இவை இரண்டையும் விரித்துச் சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் தந்தார். இவை முறையே தொகை, வகை, விரி நூல்களாகக் கருதப் பெறும். மேலும் இவை ஏழாம், பதினோராம் , பன்னிரண்டாம் திருமுறைகளாக வைத்துப் பேணப்படுகின்றன. இறைவன்உலகெலாம்என அடியெடுத்துக் கொடுத்த பெருமை பெரிய புராணத்திற்கும் உண்டு.

திருத்தொண்டர்களை நாயன்மார் என அழைப்பதும் உண்டு.

மதி வளர் சடை முடி மன்னுளாரைத் முன் துதி செய்யும் நாயன்மார்

என்று நாயன்மார்களுக்கு இலக்கணம் கூறுகிறார் சேக்கிழார். அதாவது சிவபெருமானை மனத்தால் நினைத்து (முன்) வாயினால் துதி செய்கின்ற (செய்) பெருமக்களே நாயன்மார்கள் ஆவர். இத்தகைய நாயன்மார்களாகிய தொண்டர்களின் பெருமையைப் பேசுவது என்பது கடல்நீரை நாய் குடிக்க முயலவதற்கு ஒப்பாகும் என்பது சேக்கிழார் வாக்கு.

தெரிவரின் பெருமை திருத்தொண்டர்களில் மூவரைத் தேர்ந்தெடுத்துப் பட்டினத்தார் ,

வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன் அல்லேன் மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன்நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லேன், ஆளாவது எப்படியோ காளத்தி அப்பருக்கே

என்று நெக்குருகிப் பாடுகிறார். இப்பாட்டில் கூறப்படும் சிறுத்தொண்டர் , திருநீலகண்டர், கண்ணப்பர் ஆகிய மூன்றுபேரின் வரலாற்றை வெண்பா வடிவில் குறுங்காவியமாகச் சேக்கிழார் அடிச்சுவட்டில் சென்று கவிஞர் வரதராசன் இயற்றி, தொடர்ச்சியாகச் சென்ற முன்று திருமுறை மாநாட்டு நிகழ்ச்சிகளில் , சுவை படப் படித்தும் நடித்தும் அரங்கேற்றினார். இப்போதுஒப்பிலா ஒரு மூவர்என்ற தலைப்பில் , அவ்வெண்பாக்கள் நூலாக திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரால் வெளியிடப்படுவது அறிந்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

இம் மூவர்க்குள்ள ஒப்பிலாத் தன்மை பற்றி ஒரு சிறிது பார்ப்போம்.

சிறுத்தொண்டர் திருஞான சம்பந்தர் காலத்தில் வாழ்ந்தவர். இவர் இயற்பெயர் பரஞ்சோதியார். திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரினர். பல்லவ வேந்தனுக்குப் படைத் தளபதியாகப் பணியாற்றியவர். வாதாபிப் போரில் வென்று, அங்கிருந்து விநாயகர் சிலையை எடுத்து வந்து, திருச்செங்காட்டங்குடியில் அவருக்குக் கோவில் எழுப்பி வழிபட்டவர். பைரவக் கோலத்தில் வந்த சிவபெருமானுக்குத் தம் ஒரே மகனைக் கறி சமைத்து அமுது படைத்தவர். இவர் பெருமையைத் திருஞான சம்பந்தர்,

"பொடிநுகரும் சிறுத்தொண்டருக்(கு) அருள் செய்யும் பொருட்டாகக் கடிநாகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே

என்று பாடுகிறார். இப்பாடல் முதல் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. மேலும் சம்பந்தர் திருச்செங்காட்டங்குடித் திருப்பதிகம் முழுவதிலும் இவரது பக்திச் சிறப்பினைப் பாடிப் பரவுகின்றார் என்றால், இவரது ஒப்பிலாத் தன்மை பற்றி வேறு எடுத்துக் காட்டும் வேண்டுமா என்ன?

கன்னவில் தோள் சிறுத்தொண்டன் கனபதீச்சர மேய ,இன்னமுதன் இணையடிக் கீழ் எனதல்லல் உரையீரே

என்ற வரிகள் இடம்பெறும் பதிகம் மூன்றாம் திருமுறையில் உள்ளது. சிறுத்தொண்டர் என்னும் பெயர் சிவனடியார்க்கு மிகவும் தாழ்ந்து பணிசெய்த காரணத்தால் அவர் பெற்ற பெயராகும்.” பணியுமாம் பெருமைஅன்றோ? .

ஞான சம்பந்தரின் தோத்திரம் மட்டுமன்றி, திருக்களிற்றுப் படியார் என்னும் சாத்திர நூலும் சிறுத்தொண்டர் சிறப்பைசெயலை - வன் தொண்டு எனப் பெயரிட்டு-

வரங்கள் தரும்செய்ய வைரவர்க்குத் தங்கள் கரங்களினால் அன்று கறியாக்க - இரங்காதே, கொல்வினையே செய்யும் கொடுவினையே ஆனவற்றை வல்வினையே என்றதுநாம் மற்று.

என்னும் வெண்பாவினால் பாராட்டுகின்றது. இவ்வாறு தோத்திரமும் சாத்திரமும் போற்றும் பெருமை சிறுத்தொண்டர்க்கு உண்டு.

பட்டினத்தார் பாடலில் இரண்டாவதாக இடம் பெறுபவர், மாதுசொன்னதீண்டுவீராயின் நம்மைத் திருநீலகண்டம் என்ற - சூளால் இளமையை, அயலறியாது துறந்து வாழ்ந்த திருநீலகண்ட நாயனார். இவருக்கு இருக்கும் ஒப்பிலாத் தன்மை, சிற்றின்பத் துறையில் எளியராய் இருந்த ஒருவர் இளமை இன்பத்தைத் துறந்ததும், அயலார் அதை அறியா வண்ணம் வாழ்ந்ததும், திருநீலகண்டத்தில் அளவில்லாப் பற்றுக் கொண்டதும் ஆகும். சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையில் , இறைவன் அடியெடுத்துக் கொடுத்த தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று பாடியவுடன் , அடுத்து முதலில் திருநீல கண்டத்துக் குயவனார்க்கும் அடியேன் என்ற அடி இடம் பெறுகிறது. தில்லைவாழ் அந்தணர்கள் தொகை அடியார்களில் ஒரு வகையினர். தனி அடியார்கள் பட்டியலில் முதலிடம் பெறும் தனிச்சிறப்பினைத் திருநீலகண்டர் பெற்றிருப்பதே அவர்க்குறிய ஒப்பிலாச் சிறப்பாகும். தெரிசிக்க முக்தி தரும் தில்லைக் கூத்தப் பெறுமானைத் தினமும் வணங்கும் பேறும் அவர்க்கு வாய்த்தத்தும் ஒரு பேறு ஆகும்.

பட்டினத்தார் பாடலில் அடுத்து இடம் பெறுபவர் அன்பிற் சிறந்த கண்ணப்பர். உறுப்புக்களில் சிறந்த கண்ணையே இறைவனுக்குக் கொடுத்து ஆறு நாட்களில் முக்தி பெற்றவர் அவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகப் பெருமான் என நால்வரும் பாராட்டிப் பாடிய பெருமை பெற்றவர் இருவர். ஒருவர் கண்ணப்பர். மற்றவர் சண்டேசன்.

கண்ணப்பர் பெருமையை ஞானசம்பந்தர் ,

வாய் கலசமாக வழிபாடு செயும் வேடன் மலராகு நயனம் காய் கணையினால் இடந்து ஈசனடி கூடும் காளத்தி மலையே ( 3.69.4)

என்றும், அப்பர் பெருமான்,

குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரம், துவர்பெருஞ் செருப்பால் நீக்கித் தூய வாய்க் கலசம் ஆட்ட, உவப்பெருங் குருதி சோர ஒரு கணை இடந்தாங்கு அப்பத் தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே. (4.65.8)

என்றும் பாடியுள்ளார்.

சுந்தரரோ திருத்தொண்டத் தொகையில் , ”கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்”, என்று கல்வி கற்காத கண்ணப்பரை அவர்தம் பக்தி ஒருமை கருதிக்கலை மலிந்தஎன்னும் அடைமொழி கொடுத்துப் பாடிப் பணிகின்றார்.

மாணிக்க வாசகர் தம் திருவாசகத்தில்,

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின், என்னப்பன் என்னொப்பில் என்னையுமாட் கொண்டருளி, வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணை

பற்றிப் பேசுகிறார்.

மேலும் பதினோராம் திருமுறையில் கண்னப்பர் புகழ் பாடும் இரண்டு நூல்கள் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பெயருடன் திகழ்கின்றன. இவற்றை நக்கீர தேவ நாயனார், கல்லாட தேவ நாயனார் ஆகிய இருவர் இயற்றி உள்ளனர். நக்கீர தேவ நாயனார் 167 அடிகள் கொண்ட ஆசிரியப் பாவாலும், கல்லாட தேவ நாயனார் 38 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவாலும் பாடி உள்ளனர். நக்கீர தேவநாயனார் பாடிய திரு மறத்தின் இறுதியில்,

தத்தையாம் தாய்தந்தை நாகனாம் தன்பிறப்புப் பொத்தப்பி நாட்டுடுப்பூர் வேடுவனாம் - தித்திக்கும் திண்ணப்ப னாம்சிறுபேர் செய்தவத்தால் காளத்திக் கண்ணப்ப னாய்நின்றான் காண்.

என்னும் வெண்பா இடம் பெற்றுள்ளது. இவ்வெண்பாவே கண்ணப்பர் வரலாற்றை மிகச் சுருக்கமாகத் தமிழிற் பாடிய முதல் வெண்பா எனத் தோன்றுகிறது.

அன்பின் திருவுருவமாகக் காட்சி அளிக்கும் கண்ணப்பரைத் திருக்களிற்றுப் படியாராகிய சாத்திர நூலும் வெண்பா யாப்பில் போற்றிப் பரவுவதை கீழே காண்க.

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை என்றமையால், கண்ணப்பன் ஒப்பதோர் அன்பதனைக்கண்ணப்பர் தாமறிதல் காளத்தி யார்அறிதல் அல்லதுமற்(று)யாமறியும் அன்பன்று அது. (52).

கண்ணப்பரின் ஒப்பிலாத் தன்மைக்குத் தோத்திரமும் சாத்திரமும் போற்றும் புகழே சான்று.

இனிப் பட்டினத்தார் பாடலில் சிறுத்தொண்டர், திருநீலகண்டர், கண்ணப்பர் எனவரும் வரிசை முறைக்கு ஞானியார் அடிகள் ஒரு காரணம் கூறுகிறார். சிறுத்தொண்டர் தொண்டு நிறைவேற அவர் மனைவி, மகன், தலைக்கறி சமைத்து வைத்த தாதி ஆகிய மூவர் அடங்கிய கூட்டணி தேவைப்பட்டது. திருநீலகண்டர் தொண்டு நிறைவேற அவர், அவர்தம் மனைவி ஆகிய இருவரின் கூடணி வேண்டியிருந்தத்து. இறுதியில் கண்ணப்பர் அன்புப் பணிக்கு அவர் ஒருவர் பக்தியே காரணமாயிற்று. இதுவே ஞானியார் அடிகள் கூற்றாகும்.

மேற்கண்ட சிறுத்தொண்டர், திருநீல கண்டர், கண்ணப்பர் ஆகிய மூன்று திருத்தொண்டர்களையும்ஒப்பிலா ஒரு மூவர்எனக் கருதி, அதையே தலைப்பாக்கி வெண்பாவில் தப்பிலாது பாடித் தந்த கவிஞர் வரதராசன் பாராட்டுக்குரியவர். அவர் வெண்பாக்கள் செப்பலோசை குன்றாத சிறப்புடையன. வகையுளி இன்றி வனப்புடன் திகழ்வன. .பொருள் நயமும் சொல் நயமும் பொதிந்துள்ளன. இவற்றை இவர் குரலில் கேட்டு இன்புற, கணினி ஒலிவட்டும் இந்நூலுடன் இணைத்துத் தரப் பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகின்றது. படித்தாலும் படிக்கப் பக்க நின்றவாறு கேட்டாலும் தித்திக்கும் பாங்கினை இவ் வெளியீடுகளின் வழி பெற இயலும். தரும் இன்பம் உவமையிலா இன்பம் அன்றோ?

இவ் வெளியீடுகள் 2012ஆம் ஆண்டின் திருமுறை மாநாட்டு வெளியீடாகச் சிங்கப்பூர் திருமுறை மாநாட்டின் வாயிலாக வர இருப்பதறிந்து மகிழ்கிறேன். இவற்றை அனைவரும் வாங்கிப் படித்தும் கேட்டும், “ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாராக.

முனைவர் இரத்தின வேங்கடேசனின்

நற்றமிழ் விருந்து என்னும் நூல் வெளியீட்டு விழாவின் தலைமை உரை

டாக்டர் சுப திண்ணப்பன் (12.11.2011)

இலக்கிய ஆர்வலர்களே !

வணக்கம் தவிர்க்க முடியாத காரணத்தால் முனைவர் இரத்தின வேங்கடேசனின் நற்றமிழ் விருந்து என்னும் நல்லதொரு நூலின் வெளியீட்டு விழாவில் நேரில் வந்து தலைமை ஏற்க இயலவில்லை. பொறுத்தருள வேண்டுகிறேன்.

நற்றமிழ் தரும் விருந்து க்கென்று சில சிறப்புகள் உள்ளன. முதலில் சொற்பொருள் சிறப்பினை நோக்குவோம். தமிழ்ப்பேரகராதி தரும் பொருள் அடிப்படையில் பார்ப்போம். விருந்து என்னும் சொல் பலபொருள் உணர்த்தும் ஒருசொல் ஆகும்.

1. Feast , banquest. விருந்தினரை வரவேற்று விருந்தோம்புதல்

“காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து” (குறள்: 1211)

என்னும் குறள் இப்பொருளைக் காட்டும்


2. Guest - விருந்தினையும் குறிக்கும்

“விருந்து கண்டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறம்: 266)

அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பு (நற்றிணை) என்னும் சங்க இலக்கியப் பாடல் அடிகளுள்

விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும்

என்னும் கம்பராமாயணப் பாடல் தொடரும் இக்கருத்தை எடுத்தியம்பும்.


3. New comer - புதியவர்

விருந்தாய் அடைகுறுவம் (புறப்பொருள் வெண்பா மாலை 3:12 ) என்பதைக் காட்டும்


4. Newness- புதுமை

விருந்து புனவயர என்னும் பரிபாடல் (6:40) தொடர் இதற்குச் சான்றாகும்.


5. Poetic composition in new style- நூலுக்கு உரிய எண்வகை வனப்பினுள் (அழகுகளில்) ஒன்று.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் வரும் செய்யுளியல் முதல் நூற்பா செய்யுள் உறுப்புகளைப் பேசுகிறது. அந் நூற்பாவில்

“அம்மை அழகு தொன்மை தோலே

விருந்தே இயைபே புலனே இழைபு எனாஅப்

பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ (தொல் 1259)

நூலுக்குறிய- இலக்கியத்துக்குரிய எட்டுவகை வனப்பினுள் ஒன்றாகப் புதுமை என்னும் பொருளில் விருந்து என்பதைக் கையாள்வதைப் பார்க்கிறோம்.


மேற்கண்ட சொற்பொருள்களில் விருந்து என்னும் சொல் விருந்து, விருந்தினர், விருந்தோம்புதல் என்னும் பொருளோடு- இலக்கியத்தோடு தொடர்பு படுத்திப் புதுமை – புதுவது புனைதல் என்னும் கருத்தினையும் புலப்படுத்தி நிற்பதாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியம் காட்டுவதுதான் தமிழின் தனிச்சிறப்பாகும் இலக்கியப் படைப்புகளில் புதியனவற்றைப் புனைதல் என்பது ஒர் இன்றியமையாத் தேவை என்பதைத் தொல்காப்பியர் சுட்டுகிறார்.

விருந்தே தானும் புதுவது புனைந்து யாப்பின் மேற்றே (தொல் 1495)


என்னும் தொல்காப்பிய நூற்பா இதனை உணர்த்தும். இலக்கியத்தின் உள்ளடக்கம், உருவம் உணர்த்தும் நெறி ஆகிய மூன்றிலும் முன்னோர் மொழியை – வழக்கைப் பொன்னேபோல் போற்றாமல் புதியவற்றைப் படைப்பதையே விருந்து என்று தொல்காப்பியர் கூறுகிறார். இலக்கியப் படைப்பின் புதிய சிந்தனை, புதிய போக்கு புதிய வரவுகளைப் புலப்படுத்துவதே விருந்தாகும். புதுவது புனைந்த என்னும் தொடருக்கு விளக்கம் தரும் தொல்காப்பிய முதல் உரையாசிரியரான இளம்பூரணர் ஒருவன் சொன்ன நிழல் வழியன்றித் தானே தோற்றுவித்தல்; விருந்தாவது முன்புள்ளார் சொன்ன நெறிபோய்ப் புதிதாகச் சொன்ன யாப்பின் மேலது எனக்கூறும் கூற்றும் நோக்கத்தக்கது.


எனவே விருந்து என ஒன்றின் காரணமாகவே ஒருமொழியின் இலக்கிய வளர்ச்சித் தோன்றுகிறது என்பதை இங்கே உணர்கிறோம். சொல்புதிது, பொருள் புதிது, சுவைபுதிது, சோதிமிக்க நவ கவிதை என்னும் பாரதியின் பாடல் வரியையும் பார்க்கும் போதுதான் அவரைப் புதுமைக்கவிஞன் எனப் போற்றுகிறோம். விருந்தே, புதுமை- புதுமைக்கு வழிவிடுவது அதாவது Innovation எனவும் அரைத்த மாவையே அரைக்காமல் ஏதாவது புதிதாகச் சொல்லுங்கள் எனவும் இக்காலத்தில் இலக்கிய ஆய்வாளர்கள் சொல்வதைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் கூறுகிறார் என அறியும்போது வியப்பு மேலிடுகிறது அல்லவா?


மேலும், இன்றைய நிலையில் விருந்து விருந்தினர் என்னும் போது உறவினர், நண்பர்களை வரவேற்று விருந்து உபசரிப்பதையே குறிக்கிற நிலையுள்ளது. உறவினர் வேறு விருந்தினர் வேறு என்பதைத் தமிழ்ச்சமுதாயம் வேறுபடுத்தியே பார்க்கிறது.



“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு

ஐம்புலத்தார் ஓம்பல் தலை” ( குறள் 41)

என்னும் குறள் வழி விருந்தினர் வேறு ஒக்கல்- உறவினர் வேறு என்பதை எளிதில் உணரலாம். எனவே விருந்தினர் என்போர் முன்பின் அறிமுகம் இல்லாத புதியவர்களாகவே இருத்தல் வேண்டும் எனவே, புதியவர்களை வரவேற்று உணவளித்து ஓம்புதலே விருந்தோம்புதலாகும்.


இந்த விருந்தோம்புதல் இல்லறத்தாரின் கட்டாயக் கடமையாகக் கருதுவது தமிழ்ப்பண்பாடாகும்.

“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு” (18 ) என்ற வள்ளுவர் விருந்தோம்புதல் என ஓர் அதிகாரத்தை வகுத்து வலியுறுத்துவதையும் நோக்கவேண்டும். விருந்தோம்புதல் அக்காலத்தில் ஒரு சமுதாயக் கட்டுப் பாடாக-கடமையாகப் போற்றப்பட்டது. காரணம் என்ன? இக்காலத்தில் இருப்பதுப் போல பழங்காலத்தில் எளிதான போக்குவரத்து வசதிகளோ ஓரூருக்குச் சென்றால் அங்கு உண்டு உறைவதற்கேற்ற விடுதிகள் கொண்ட வசதிகளோ தகவல் பறிமாற்ற வாய்ப்புகளோ இல்லை. போகும் வழிகளும் ஆபத்து நிறைந்தவை. இச்சூழலில் ஓர் ஊரில் உள்ளோர் மற்றோர் ஊருக்குச் செல்லும்போது வழியில்- இடையில் தங்குவதற்கேற்ற- உண்டு, உறைவதற் கேற்ற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல் கட்டாயத் தேவையாகிறது. எனவேதான் வீடுகளில் திண்ணை வசதிகளை ஏற்படுத்தி அவ்வூர்வழியே வரும் அறிமுகமில்லாத புதியவர்களை வரவேற்றுத் தங்குமிடமும் உணவும் அளித்ததை விருந்தோம்புதல் என அழைத்து இல்லறத்தாரின் இன்றியமையாக் கடைமை என்றாக்கினர். இவ்வகையில் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகவும் விருந்தோம்புதல் போற்றப்படுகிறது.


இத்தகைய நற்றமிழ் தரும் விருந்தின் சிறப்பினை விளக்கும் வகையில் முனைவர் இரத்தின வேங்கடேசன் தான் தமிழகத்தில் பல கருத்தரங்குகளில் படித்த எழுத்துரைகளைத் தொகுத்து ஒரு கட்டுரை நூலாக ‘நற்றமிழ் விருந்து’ என்னும் தலைப்பில் தந்துள்ளார். இந்நூலில் உள்ள கட்டுரைகள் உள்ளடக்கத்தால் காலத்தையும் இடத்தையும் கடந்து நிற்கின்றன.சங்ககால இல்க்கியம் முதல் இன்றைய இக்கால இலக்கியங்கள் வரையுள்ள நூல்கள் தொடர்பான கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. மேலும் தமிழகம் சிங்கை இரண்டு நாட்டு இலக்கியச் செய்திகளையும் கொண்டுள்ளன. புலவர் இலக்கியத்தை மட்டும் பேசாமல் பொதுமக்கள் இல்க்கியமாகிய நாட்டுப்புற இலக்கியம் பற்றிய தகவல்களும் தரும் வகையில் உள்ளன. பண்பாடு, நாகரீகம். கலாசாரம் விழுமியம் பற்றியச் செய்திகளை அறிய - தமிழ் இலக்கியம் தரும் தகவல்களை அறிய இந்நூல் நன்குதவும். தலைப்பின் வசம் விருந்து பற்றிய செய்திகள் நூலின் முதல், இடை, கடைப் பகுதிகளின் கட்டுரைகளில் இடம்பெற்றிருப்பது ஒரு சிறப்பாகும். கட்டுரைகள் எழுந்த – படித்த கால இடச்சூழல்களை நூலாசிரியர் அடிக்குறிப்பாகத் தந்திருந்தால் மிகச்சிறப்பாக இருந்திருக்கும். தமிழ் சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழியே தேசியமொழியன்று) என்பதையும் அது இப்போது இரண்டாம் மொழிநிலையில் பள்ளிகளில் கற்பிக்கப் படவில்லை. தாய்மொழிநிலையில் கற்பிக்கப்படுகிறது என்பதையும் ஆசிரியர் இன்னும் தெளிவுபடச் சுட்டிக் காட்டியிருக்கலாம். தைப்பூச விழா சிங்கையில் மட்டுமின்றிக் கோலாலம்பூர் பினாங்கு முதலிய இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுவதையும் நூலில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கலாம்.


‘நற்றமிழ் விருந்து, நூலாய்வுப் பற்றிப் பேச இன்னொருவர் இருப்பதால் அத்தலைப்பினை அவருக்கு விட்டுவிட விரும்புகிறேன்.


‘நற்றமிழ் விருந்து’ என்னும் இந்நூல் முனைவர் இரத்தின வேங்கடேசன் அவர்களின் இல்க்கியப் புலமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. இலக்கிய ஆர்வலர்களுக்கு ஓர் இனிய விருந்தாக இருக்கும் இயல்புடையது. இத்தகைய இலக்கியக் கட்டுரை நூல்களைப் படைக்கும் முயற்சியை முனைவர் இரத்தின வேங்கடேசன் தொடர்ந்து மேற்கொள்ள வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி


பேராசிரியர் சுப திண்ணப்பன் சிங்கப்பூர்



. . முனைவர் இரத்தின வேங்கடேசன்


புதுச்சேரியில் தமிழ்க் கவிதை வளர்ச்சி (1955-1995)”

3-12-2008


          புதுச்சேரி என்றதும் அரவிந்தர் தவக்குடில், அன்னை வழிபாடு, பிரெஞ்சு ஆய்வுக்கழகம், ஆரோவில், மணக்குள விநாயகர் கோயில், திட்டமிட்ட நகரமைப்பு, நல்ல கடற்கரை, ஜிப்மர் மருத்துவமனை, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த ஊர், புதுமைக் கவிஞர் பாரதியாருக்குப் புகலிடம் கொடுத்த ஊர், வாணிதாசன் வாழ்ந்த ஊர், ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு, கம்பன் கழகம் இப்படிப் பல நினைவுகள் வருவது இயல்பு. இத்தகைய ஏற்றம் மிக்க புதுச்சேரியில் தமிழ்க் கவிதை வளர்ச்சி (1955-1995)” என்னும் தலைப்பில் அமைந்த தம் முனைவர் பட்ட ஆய்வேட்டினை நூல் வடிவில் சில திருத்தங்களுடன் வெளியீடு செய்ய இருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.


          முனைவர் இரத்தின வேங்கடேசன் புதுவைப்பகுதியிலிருந்து சிங்கப்பூர் வந்து தமிழாசிரியராகப் பள்ளிகளில் பணியாற்றி வருகிறார். மேலும் சிங்கப்பூர் சிம் பல்கலைக் கழகத்தில் தமிழ் இளங்கலைப் பட்டப் படிப்பு வகுப்புகளில் பயில்வோருக்கு இலக்கணம், இலக்கியப் பாடங்களில் பயிற்றுவதிலும் பங்கேற்று வருகிறர். மேலும் கல்விப் பணியில் மட்டும் முடங்கிவிடாது சிங்கப்பூரில் அவ்வப்போது நடைபெறும் இலக்கிய விழாக்கள், கவியரங்கங்கள், கருத்தரங்குகள், பட்டிமன்றம் போன்றவற்றிலும் கலந்துகொண்டு பல்வேறுவகையில் தமிழ்ப் பணியாற்றி வருகிறார்.


          இவரது புதுச்சேரியில் தமிழ்க் கவிதை வளர்ச்சி (1955-1995)” என்னும் நூல் புதுச்சேரி ஓர் அறிமுகம் என்று தொடங்கி விடுதலை, திராவிடம், மொழி, சமயம் தொடர்பான இயக்கங்கள் தமிழ் இலக்கியத்தில்

ஏற்படுத்திய தாக்கத்தை விளக்கி, 15 ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு முடிய வாழ்ந்த புலவர்களின் இலக்கியப் பணியை எடுத்துக் கூறிப் புதுவை இலக்கிய அமைப்புகள், இலக்கிய இதழ்கள் பற்றிய செய்திகைளத் தொகுத்துத் தருகிறது.


விடுதலைக்குப் பின்னர் எழுந்த புதுவைக் கவிதைகளில் தனிநிலைக் கவிதைகள், மரபுக்கவிதைகள், சிற்றிலக்கியங்கள், காவியங்கள், குறுங்காவியங்கள், புதுக்கவிதைகள் எனப் பகுத்துப் பேசுவதுடன் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பணிகளையும் விளக்குகிறது. புகழ்பெற்ற புதுச்சேரிக் கவிஞர்களாகிய பாரதிதாசன், வாணிதாசன், ஆகியோரின் பல்வேறுவகைக் கவிதைப் பணிகளை இந்நூல் விவரிக்கிறது. ஆய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் தோன்றிய கவிதைகளின் பாடுபொருள்களாகிய மொழி, பெண்மை, சாதி ஒழிப்பு, கலப்புத் திருமணம், தொழிலாளர் நலம், இயற்கை முதலியவற்றையும் பற்றி ஆராய்கின்றது. மொத்தத்தில் புதுச்சேரி பற்றியும் புதுச்சேரிக் கவிதைகள் பற்றியும் அறிந்து கொள்ள உதவும் தகவல் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது.


பொதுவாக முனைவர் பட்ட ஆய்வேடுகள் பல பல்கலைக்கழக நூலகங்களில் வைக்கப்படுவது மரபாகும். அந்நிலையில் அவை ஆய்வாளர்களுக்கு மட்டுமே பயன்படும். அவை நூலாக வெளியிடப்படும்போது ஆய்வாளர்கள், பொதுமக்கள், இலக்கிய ஆர்வலர்கள் எல்லாரும் பயன்பெற முடியும். இதனை மனத்தில் கொண்டு முனைவர் இரத்தின வேங்கடேசன் தம் ஆய்வேட்டினை நூலாக வெளியிட்டதற்கு என் பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இன்னும் பல நல்ல நூல்களை எழுதித் தமிழ்த் தாய்க்குப் பணியாற்றுவார் என எதிர்பார்க்கிறேன்.



திருமதி செளந்தர நாயகி வயிரவன்

சிங்கப்பூர் ஒரு பார்வை



சிங்கபூர் இந்த உலக வரைபடத்தில் ஒரு சிறு புள்ளி, எனினும் நிலமகளின் திலகம் போலத் திகழ்வது. நாடாகவும் நகரமாகவும் கருதத் தக்க நற்பேறு உடையது. உறு பசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு, ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே வேந்து அமைவில்லாத நாடு என்னும் திருவள்ளுவர் கூறும் நாட்டிற்குரிய இலக்கணத்துக்கேற்ற பண்புடையது. அதாவது செல்வச் செழிப்பும், நல்ல நேர்மையான ஆட்சியும் சேர்ந்திருக்கும் சிறப்புடையது, நகரம் என்னும் நோக்கில் மேற்கத்திய நாகரிகமும், கிழக்கத்திய பண்பாடுக் கூறுகளும் இணைந்து இலங்கும் இயல்புடையது.


விழுவறா மூதூர் ன்று சங்க இலக்கியம் வருணிப்பதைப் போலப் பல்வேறு இனத்தவர், பல்வேறு சமயத்தினர் ஆண்டு தோறும் கொண்டாடும் விழாக்களால் அழகு பெற்று விளங்கும் ஆற்றலும் சிங்கப்பூருக்கு உண்டு. மேலும் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் ந‎‎ன்றே நினைமிண் நமனில்லை என்னும் திருமூலர் கூற்றுக்கேற்பச் சமய நல்லிணக்கமும் இன நல்லிணக்கமும் ஒரு சேரப் பெற்று விளங்கும் ஓங்கு புகழும் சிங்கப்பூருக்கு உள்ளது எதிலும் உன்னத்த்தையே இலக்காகக் கொண்டு உழைப்பால் உயர்ந்து உலகப் புகழ் பெற்றுத் திகழும் நாடு சிங்கப்பூர்.


தமிழை அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக ஏற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் தமிழை ஒலிக்கச் செய்ததுடன் தமிழ்க் கல்வி, இலக்கிய வளர்ச்சிக்குத் தன்னிகரற்ற உதவிகளைத் தந்து நிற்கும் நாடு சிங்கப்பூர். மண்ணில் மட்டுமி‎‎ன்றி விண்ணிலும்(சிங்கப்பூர் விமானம் வழி, தமிழை ஒலிக்கச் செய்த மாண்பும் சிங்கப்பூருக்கு உண்டு. ஆசியான் கூட்டமைப்பில் தமிழைக் கொண்டு நிறுத்தும் தன்மையும் சிங்கப்பூருக்கே இருக்கிறது. சிங்கப்பூர் நாணயத்தாளில்சிங்கப்பூரி எனத் தமிழில் எழுதப்பட்டிருப்பதையும் நாம் காண முடிகிறது. இப்போது சிங்கப்பூர் குடியரசின் அதிபர் மாண்புமிகு SR. நாதன் ஒரு தமிழர். அமைச்சர்களில் பலர் தமிழர் என்ற சிறப்பும் இப்போது சிங்கப்பூருக்கு இருக்கிறது.


தூய்மையும், தூங்காத் துறைமுகமும், இயற்கை எழிலும் கொண்டு பூந்தோட்டங்களால் பொலிவு பெற்று விளங்கும் பசுமை நகரமாகிய சிங்கப்பூரைப் பற்றித் திருமதி செளந்தர நாயகி வயிரவன் எழுதியசிங்கப்பூர் ஒரு பார்வை என்னும் நூலைப் படித்துப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இவர் தமிழகத்தில் பிறந்து. அங்கேயே ஆங்கிலக் கல்வியும் இதழியல் கல்வியும் பயின்றவர்; தகவல் மேலாண்மைத் துறையில் முத்கலைப் பட்டம் பெற்றவர்.


சிங்கப்பூர்த் தமிழ் வளர்ச்சிக்குவித்திட்ட தமிழவேள் கோ. சாரங்கபாணியின் வலக்கரமாக விளங்கிய நாச்சியாபுரம் அருள் நெறிச் செல்வர் சண்முகனாரின் பேரனும், சிங்கையில் புகழ் பெற்ற மருத்துவரான திரு வயிரவனின் மகனுமான வயிரவனை மணந்து சிங்கபூருக்கு வந்தார். அ‎‎ன்றிலிருந்து இன்றுவரை சிங்கப்பூரை நன்கு ஊன்றிப் பார்த்துள்ளார். அந்த ஆழமான பார்வையை இந்த நூலில் படம்பிடித்துக் காட்டியுள்ளார். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் செயற்குழு உறுப்பினராகவும், சமூக மன் நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்ட ஒருவராகவும், கலையார்வம் கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பலவற்றில் பங்குபெற்ற ஒருவராகவும், ஆய்வு நாட்டமிக்கவராகவும் நான் செளந்தரத்தை அறிவேன். மேலும் ஆங்கில மொழியில் அவர் நடத்திவரும் இணைய இதழ் ஒன்றின் வாயிலாக அவரி‎‎ன் எழுத்தாற்றலையும் இதழியல் திறமையும் நா‎‎ன் நன்கு அறிவேன். இவ்வாறு செளந்தரம் தாம் பெற்ற அனுபவங்களையும் பலரைப் பேட்டி கண்டு அவர்கள் கூறிய கருத்துக்களையும் இந்நூலில் தொகுத்து வைத்துள்ளார். பார்த்தலும் வைத்தலும் இணைந்து இந்தப் பார்வை நூல் அமைந்திருப்பது இந்நூலின் தனிச் சிறப்பாகும்.


சிங்கப்பூர் வரலாறு, சுற்றிப் பார்க்கும் இடங்கள், உண்டு சுவைப்பதற்கு உரிய இடங்கள்; கண்டு மகிழ்வதற்குரிய காட்சிகள், பொருள்கள் வாங்குவதற்கேற்ற கடைகள், வழிபாட்டுக்குரிய இடங்கள்; தமிழ் மொழி கலாசாரம் நிறுவனங்கள் முதலியவற்றைப் பற்றி அறிதற்குரிய தகவல் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது. இருதியில் சீனர்கள் தமிழர்கள் ஆகிய இரண்டு இனத்தாரிடையே காணப்படும் நம்பிக்கைகள், ஈடுபாடுகள் பற்றி இந்நூலசிரியர் விளக்கி இருப்பதும் இந்நூலின் இன்னொரு சிறப்பாகக் கூறலாம். இந்த நூல் திருமதி செளந்தர நாயகியின் முதல் நூல், எனினும் சிங்கப்பூரைப் பற்றிய பல செய்திகள் அடங்கிய கருவூலமாகத் திகழ்கிறது. இதனை எழுதி வெளியிடும் திருமதி செளந்த்ர நாயகிக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து நல்ல பல நூல்களை இவர் எழுதவேண்டுகிறேன். இந்நூலைத் தமிழ் அன்பர்கள் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.

சித்தாந்த ரத்தினம் திருமதி பாலசரஸ்வதி அம்மையார்.

தமிழர் சடங்குகள் ஒரு விளக்கம்



சடங்கு என்னும் சொல்லுக்குச் சென்னைப் பல்கலைக் கழக்த் தமிழ்ப் பேரகராதி சாஸ்திர விதி பற்றியும் வழக்கம் பற்றியும் அனுஷ்டிக்கும் கிரியை என்னும் பொருளைத் தருகிறது. கிரியைக்கு முன்னே பாவனையும் மந்திரமும் தேவைப் படுகின்றன. பாவ்னை என்பது மனத்தால் உருவகம் செய்துகொள்ளப்படுவதாகும். மந்திரம் என்பதற்குரிய வரையறையாக நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த ம்றைமொழிதானே மந்திரம் என்ப எனத் தொல்காப்பியர் கூறுகிறார். சொல்வார்க்குத் தீங்கு வராமல் காக்கும் சான்றோர் மொழிகளே மந்திரம் என்பர். கிரியை என்பது செயல் எனவே மனத்தால் இறையை நினைத்து உருவகம் செய்து அவன் புகழ பாடும் மந்திரத்தைக் கூறிச் செய்யும் செய்லகளையெ சடங்குகளாகின்றன. இவை காலத்துக்கும் சூழ்நிலைகளுக்கேற்பவும் விதிகளாகவும் வழிவழி மரபுகளாக்வும் மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் பெரும்பாலும் சமயச்சார்புடையனவாக உள்ளன. இந்தச் சமயச்சார்பு மக்களைச் சடங்குகளைத் தொடர்ந்து பின்பற்றத் தூண்டுகின்றன.

தமிழர்களுப் பிறப்பதற்கு முன்னும் பிறந்து வாழும் காலத்திலும் இறந்த பிறகும்சடங்குகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழ் நூல்களில்காலத்தால் தொன்மையதான தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியர் சடங்குகளைக் கரணம் என்று குறிப்பிடுவார். ‘பொய்யும் வழுவும் புகுந்த பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்று திருமணச்சடங்கு பற்றி அவர் கூறுகிறார். பிறப்பதற்கு முன் வளைகாப்பு என்னும் சடங்கும், பிறந்து வாழும் காலத்தில் பெயரிடுதல், சோறூட்டுதல்,கல்வி (ஏடு)துவக்குதல், முடி இறக்குதல்,திருமணம் முதலிய சடங்குகளும், இறந்த பிறகுஎரியூட்டுதல், எலும்பு கரைத்தல், கல்லெடுத்தல்,திதி (திவசம்)செய்தல் முதலிய சடங்குகளும் உள்ளன. இந்தச் சடங்குகள் தொடக்க காலத்தில் பொருட் சிறப்புடன் தொடங்கப் பெற்றன.காலம் செல்லச் செல்ல இவற்றின் பொருளை அறியாமல்-புரிந்து கொள்ளாமல் பெயருக்குச் சடங்கு என்னும் நிலையில் நாம் செய்யத்தொடங்கி விட்டோம். அதனால் இன்று பலசடங்குகளின் உட்பொருள் நமக்குப் புரியாமல் உள்ளது. இத்தகைய சடங்குகள் பற்றிய விளக்கததையும் உட்பொருளையும் தமிழர் சடங்குகள் ஒரு விளக்கம் என்னும் இந்நூல் வழி தந்துள்ளார் சித்தாந்த ரத்தினம் திருமதி பாலசரஸ்வதி அம்மையார்.

..... தொடரும் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக