வியாழன், 1 மே, 2014

அணிந்துரை - 1


SPT Aninturai


க. து. மு. இக்பால்

‘‘அன்னை’’

9-10-1984


     இலக்கியத் தாய் ஈன்றெடுத்த ஏற்றமிகு குழந்தையே கவிதை, தோற்றத்தால் தொன்மையானதே பாட்டு. ‘‘உள்ளத்து உள்ளது கவிதை, இன்ப உருவெடுப்பது கவிதை, தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை தெரிந்து உரைப்பது கவிதை’’. இதுதான் கவிமணி தேசிகவிநாயகர் காட்டும் கவிதை இலக்கணம் . உணர்ச்சி, கற்பனை, வடிவம் உணர்த்தும் உண்மை என்னும் நான்கும் கவிதைக் கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் கவின்மிகு தூண்கள். உள்ளத்தை இன்புறுத்துவதும் பண்படுத்துவதும் ஆற்றல் மிக்க கவிதை நமக்களிக்கும் அரும் பயன்கள், இத்தகைய கவிதைகளைக் கள்ளங் கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட இளஞ்சிறார்கள் பண்சுமந்த பாடல்களாகப் பாடிக் களிக்கும்போது கொள்ளை இன்பம் பெறுகின்றனர். எனவேதான் இளஞ்சிறார்களுக்கு ஏற்ற இத்தகைய பாடல்கள் குழந்தை இலக்கியத்தின் இன்றியமையாத கூறாகக் கருதப்படுகின்றன. இவற்றைக் குழந்தைப் பாடல்கள் என்பார்கள்.


     குழந்தைகளைப் பற்றிய பாடல்கள் பல பழந்தமிழ் இலக்கியத்தில் உண்டு. ஆனால் குழந்தைகள் படிப்பதற்குரிய பாடல்களை யாத்தவர் ஔவையார். ஆத்திசூடி, கொன்றை வேந்தன்,மூதுரை, நல்வழி முதலிய அவர்தம் பாடல்கள் அனைத்தும் அறக் கருத்துக்களையே மிகுதியாக உணர்த்துகின்றன. இந்நூற்றாண்டில் பாரதியார் குழந்தைப் பாடல் இலக்கியத்திற்குத் தம் பாப்பாப் பாடல்கள் மூலம் வழிகாட்டினார். அவர் வழிகாட்டிய ஒளி விளக்கில் நின்று கவிமணி குழந்தை உள்ளத்துடன் பல பாடல்களை இயற்றினார். பின் குழந்தைக் கவிஞர், அழ. வள்ளியப்பா இந்த இலக்கியத் துறையில் இன்று பீடு நடை போடுகின்றார்.


     இவர்கள் வரிசையில் சிங்கப்பூர் தமிழ்க் கவிஞர் க.து.மு. இக்பால் இளங் குழந்தைகள் பாடிப் பழகுவதற்கு ஏற்ற வகையில் தாம் இயற்றிய அழகுத் தமிழ்ப் பாடல்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை, ‘‘அன்னை’’ ன்னும் பெயரில் இப்போது வெளியிடுகிறார். நண்பர் இக்பால் சிங்கப்பூரில் உள்ள செந்தமிழ்க் கவிஞர்களில் சிறந்தவர். கற்பனை வளமும் கவி பாடும் உள்ளமும் கன்னித் தமிழ்ப் பற்றும் ஒருங்கே பெற்றவர். எளிய தமிழில் இனிய முறையில் தெளிவாகப் பாடும் இயல்பினர். இவர் சிங்கப்பூர்ச் சூழலை ஒட்டிக் குழந்தைகளுக்காகப் பாடிய பாடல்கள் பல சிங்கப்பூர் வானொலியில் ‘‘பாடிப் பழகுவோம்’’ என்னும் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாயின. அவற்றுள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இந்த ‘‘அன்னை’’ என்னும் தொகுப்பில் அளித்துள்ளார்.


     இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் இளங்குழந்தைகளுக்கு அறிமுகமான பல பொருட்களைப் பற்றியவை. ஊசி முதல் இயந்திர மனிதன் வரை, எறும்பு முதல் எழில் அருவி வரை பலவற்றை உள்ளடக்கியவை. எங்கும் நிறைந்தவனை என்னும் முதற் பாடல் இறை உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. சிங்கப்பூர் , நமது கொடி என்பன நாட்டுப்பற்றை ஊட்டுகின்றன. அன்னை, பாட்டி, தங்கை,பிள்ளைச் செல்வம் என்பன குடும்பப் பிணைப்பினை வளர்க்க உதவுகின்றன. எறும்பு, சேவல், கிளி, காகம், தேன்கூடு்,நானிலம், மின்னல், கடற்கரை, அருவி, வேர்கள்., இடி, மழை என்பன இயற்கை இன்பத்தில் ஈடுபடச் செய்கின்றன. கதை இலக்கணம் சொல்கிறது. கண்ணன் எறிந்த கல் அதற்கு இலக்கியம் ஆகிறது. எதிர்காலத்தில் குழந்தைகளை மருத்துவராகவும், விஞ்ஞானியாகவும் ஆகுமாறு தூண்டுவன சில. தொழிலாளியும் கூட்டுறவும் நாட்டு வளம் காட்ட வருகின்றன. காலணி, உடல்நலம் பேணச் சொல்கிறது. தலை என்னும் கவிதை எண்சாண் உடம்புக்கு தலை இன்றியமையாத உறுப்பாவது ஏன்?என்பதற்கு விடை தருகின்றது. வாழைப்பழமும் டுரியானும் மண்ணின் வளங்காட்டிப் பழச்சுவையை ஊட்டுகின்றன. படி, உச்சரிப்பு, கடிதம், கணிதம் பயில்வோம், தெரிந்து கொள் என்பன கல்வி தொடர்பானவை. அழகு தரும் இன்மொழி நினைவில் நிறுத்து, ஆசை என்பன ஒழுக்கம், ஊட்டுதற்கு என எழுந்தவை. முயற்சி வேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் நிலையில் அயற்சி நீக்கத் தூக்கமும் அளவுடன் தேவை என்னும் கனிவுக் கட்டளையம் இடம் பெறுகிறது. உருவம் பார்த்து என்னும் கவிதை உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்னும் வள்ளுவரின் கருத்தை நினைவுறுத்த வருகிறது. மணிப்பொறி காட்டிக் காகிதப் பூப்போல் வாழாமல்,காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என விடுக்கும் எச்சரிக்கையும் இங்கே உண்டு. இவர் பாடல்கள் ‘‘செவி நுகர் கனிகள்’’ எனக் கூறுகிறது. காது - சிந்தைக்கு விருந்து என்று செப்புகிறது நம் உள்ளம். இறுதியில் உள்ள கவலை வேண்டாம் என்னும் கவிதை இளம் குழந்தைகளை நோ்க்கி, ‘‘இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை’’ என்று நம்பிக்கை ஒளி நல்குகிறது. இவ்வாறு இளங் குழந்தைகளுக்குப் பழக்கமான பொருள்களைப் பாடி இன்புறுத்திப் பிஞ்சு உள்ளங்களில் பண்பாட்டை விதைக்கும் இவர் பாடற் பாங்கு பாராட்டுதற்குரியது.


     ‘‘எறும்பே நீ ஓர் அதிசயமே! இறைவன் அறிந்த அதிசயமே! இரவில் உறக்கம் கொள்வாயோ, என்னிடம் அதனைச் சொல்வாயோ?’’ என எறும்பை வினவுவதும், ‘‘விழுந்த பல்லைத் தேடியோ வீதி எல்லாம் நடக்கிறாய்? , இழந்த பருவம் தன்னையோ எங்கும் தேடி அலைகிறாய் ’’ எனப் பாட்டியைக் கேட்கும் வினாவும் இக்பாலின் கற்பனைக்கு எடுத்துக் காட்டுகளாக இலங்குகின்றன. ‘‘இருண்ட வான வீதியிலே எரியும் மத்தாப்பு! அது இடியடன் கலந்தே மேகத்தாய் சொரியும் மின்னல் பூ’’ இது இவர்தம் கவிதை வளத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. படி,காது என்னும் கவிதைகள் சொல் விளையாட்டைச் செப்புகின்றன. காலணி, ஊசி, இயந்திர மனிதர் என்பன புதுக் கண்ணோட்டப் போக்கிற்குச் சான்றுகள். அழகு தரும் தங்கை உவமைத் திறத்திற்குச் சான்றாக ஆடுகிறாள். இளஞ்சிறார்களுக்கு ஏற்ற எளிய தமிழ் நடை, அரிய கருத்துக்கள், புதிய சிந்தனைகள். சுருக்கமாகச் சொல்லப் போனால் இத் தொகுப்பில் உள்ள இக்பாலின் பாடல்கள் எளிமையில வாழைப்பழம்., சுவையில் டுரியன், தமிழ் மணத்தில் தங்கநிற மல்கோவா மாம்பழம், , கருத்தாழத்தில் கவின்மிகு பலாச்சுளை,


     இத்தகைய பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டதால் நண்பர் இக்பால் உண்மையில் நம் சிறார்களுக்கு ஓர் நற்றமிழ் அன்னையாக விளங்குகிறார். தமிழ்ப் பால் நினைந்தூட்டும் தாயாகிய கவிஞர் இக்பாலுக்கு என் பாராட்டுக்கள். இவர் தம் தமிழ்த்தொண்டு இன்னும் சிறக்க வாழ்த்துகிறேன். சிங்கப்பூர் தமிழ் சிறார்களும் செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியரும் இந்நூலை வாங்கிப் படித்து இன்புறுதல் வேண்டும். இதன்வழி இதயம் பண்படுதல் வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.



பரணன்

மழை

2-3-1984


தமிழ்க் கடலில் முகந்தெடுத்துக் கவிஞர் பரணன் என்னும் கருமேகம் பொழிந்த கவிதை மழையைக் கண்ணுற்றேன். மழையில் நனைந்தேன் மகிழ்ச்சி கொண்டேன். இம் மழை நீர் இளஞ்சிறார்களின் உள்ளமாகிய வயலிற் பாய்ந்தோடி அறிவுப்பயிரை வளர்க்கின்றது. அறநெறியாகிய பயனை நல்குகின்றது.இம் மழை நீரின் இயல்பை இங்கே சிறிது காண்போம்.


     முதலிலுள்ள தமிழ்மொழியுணர்வைத் தூண்டும், அடுத்து வரும் சிங்கைத்தாய்’ ‘சிங்கப்பூர் , நாட்டுக்கொடி , என்பன நாட்டுப்பற்றை அளிக்கும்.


அடுக்குவீடு , அறை,வானொலி , தொலைபேசி, விளக்கு,கடிகாரம், நாள்காட்டி என்பன வீட்டுப்பெருமை விளம்பும்.


குழந்தை,அம்மா, கைவீசல், கைதட்டல்,நல்ல தம்பி, கோமாளி என்பன குடும்பப் பாசம் கொடுக்கும்.


ஆசிரியர்,எண்கள், சீருடை, எழுதுகோல்,புத்தகம் என்பன பள்ளிக் கல்வி பயிற்றும்.


வானம்,சூரியன், கடல், காடு,கதிர், காலை பூக்கள், ஆலமரம், மாம்பழம், ஆகியவை இயற்கை இன்பத்தில் ஆழ்த்தும்.


சிட்டுக்குருவி , சின்னக்குருவி ,கோழி, பசு, எனது நாய் ஆகியவை உயிர்களிடத்தில்அன்பு செய்ய உரைக்கும்.


கப்பல்,படகு, மிதிவண்டி , போக்குவரத்துப் பாதைக் காட்டும்.


தமிழவேள்,வள்ளுவன், லிங்கன் என்பன சான்றோர் பெருமை சாற்றும்.


பூ, ஆத்திசூடி, வேலி. வெற்றிக் கோப்பைகள், வாழும் நெறி, வழி, ‘பணிவன்பு,மறவாதே , நிமிர்ந்த நன்னடை, நம்பிக்கை , பொய் சொல்லாதே , எண்ணம்,பாடம் தம்பிக்கு, என்பன அறநெறி போதிக்கும்.


பள்ளி இருபத்தைந்துபண்பாட்டு நெறியினைப் பழந்தமிழ்க் குறள் வழியிற் பகரும்.


இறுதியிலுள்ளது இவையனைத்தையும் , ‘எண்ணிச் செயல்படுகஎன வலியுறுத்தும்.


பேசும் மொழி, வாழும் நாடு, வசிக்கும் வீடு, இருக்கும் குடும்பம்,படிக்கும் பள்ளி, பார்க்கும் இயற்கை, பழகும் பறவை , விலங்குகள், செல்லும் ஊர்திகள்-இப்படி இளங்குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த பொருள்களைக் கருவாகக் கொண்டு கவிதை யாத்துள்ளார் கவிஞர் பரணன், இவற்றைப் பாடி இன்புறும் குழந்தை எதிர்காலத்தில் வள்ளுவர்போல் இலிங்கன்போல் வரவேண்டும் என்று கருதி இவர் அறநெறிகளையும் அரிய பண்பாட்டு வழிகளையும் கூறிச் சிந்தித்துச் செயல்படத் தூண்டுகிறார்.


கவிஞர் பரணன் காட்டுக்கு வேலி மரமாகும். கவிதைக்கு வேலி மரபாகும்’’ என்னும் கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர். சிங்கப்பூரில் செந்தமிழ்ப் பற்றுடன் சிறந்த கவிதைகளை யாக்கும் இயல்பினர்.இவரது பாடல்களைச் சிங்கப்பூர் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் செவியுற்றிருக்கிறேன். ‘தமிழ்முரசுஇதழில் படித்து இன்புற்றிருக்கிறேன். இவரது கவிதைகளில் கவிதைக்குரிய உணர்ச்சி , கற்பனை , வடிவம், உவமை நலன் சொல்லாட்சி முதலிய கூறுகள் களிநடம்புரியக் காணலாம்.


அன்பின் உருவே சிறுகுழந்தை , அழகின் நிழலே சிறு குழந்தை, இன்பக் கலையே சிறு குழந்தை, இனிப்பின் வடிவே சிறுகுழந்தை இது குழந்தைக்குக் கவிஞர் செப்பும் இலக்கணம்,உணர்ச்சியின் வேகத்திற்கு இவ்வரிகள் சான்றாக உள்ளன. ‘‘மதலை வாய்மொழி தேனாகும்,மாதுளை வண்ணம் இதழாகும். புதுமைத் தென்றல் உடலாகும். பூவும் விழியும் உறவாகும், இப்பகுதி கவிஞரின் உவமை நலத்துக்குக் எடுத்துக்காட்டாகும், ‘‘வையம் என்னும் வீடிதற்குக் கூரையானது,வாழுகின்ற யாவருக்கும் சொந்தமானது ’’ வானம் நல்ல கற்பனை . ‘‘சின்னஞ் சிறிய சிட்டு, சிறகு சீனப்பட்டு, ‘‘அலைகள் என்னும் தொட்டிலில் ஆடுதடா படகு, தண்ணீர்க்கலைகள் என்னும் கட்டிலில் காட்டுதடா உலகு’’சிறந்த சொல்லாட்சி.


‘‘அன்னை சொல்லும் அன்புமொழி, அப்பா கூறும் அறிவு மொழி, அண்ணன் பேசும் அழகு மொழி, அதுதான் எங்கள் தமிழ்மொழி’’என்னும் வரிகள் சிங்கப்பூர்த் தமிழ்க் குடும்பங்களில் என்றும் பேசும் மொழி இன்றமிழாக இருத்தல் வேண்டும். என்னும் கருத்தைச் சொல்லாமற் சொல்கின்றன. அன்பும் அறிவும் அழகும் தமிழ்மொழியின் அரிய பண்புகள் என்பதையும் எடுத்துக் கூறுகின்றன.



மழைஎன்னும் இந்நூலில் உள்ள பாடல்களைப் படித்துப் பைந்தமிழ்ச் சிறார்கள் பயன்பெறுவார்கள் என நம்புகிறேன். கவிஞர் பரணனின் கவிதைத் தொண்டு சிறக்க வாழ்த்துகிறேன்.



கவிஞர் இக்குவனம்

கவிதைக் கனிகள்

ஆகஸ்டு 1990 (8-2-1989)


மொழியின் கனியாய் விளங்குவது இலக்கியம் இலக்கியத்தின் கனியாய் இலங்குவது இன்சொற்கவிதை. எனவேதான் கவிச்சக்கரவர்த்தி கம்பன் கவிதையைச் ‘‘செவிநுகர் கனிகள்’’எனச் செப்புகிறான். கவிதை என்னும் கனி உணர்ச்சி என்னும் சாற்றினால் உருவாகின்றது. கற்பனை என்னும் சுவையுடன் திகழ்கின்றது. வடிவத்தால் வண்ணமும் வனப்பும் பெறுகின்றது. உண்பார்க்கு உவட்டாமல் இனிக்கும் தன்மை உடையது. என்றும் அழியாத கருத்துக்களாகிய பயனை நல்கும் இயல்பினைக் கொண்டது. இத்தகைய ‘‘கவிதைக்கனிகள்’’என்னும் ஒரு நூலை எனதருமை நண்பர் கவிஞர் இக்குவனம் அவர்கள் வெளியிட இருப்பது கண்டு களிபேருவகை எய்துகின்றேன்.


கவிஞர் இக்கவனம் அவர்களை நான் சென்ற இருபது ஆண்டுகளாக நன்கு அறிவேன். மலாயாப் பல்கலைக்கழகத்திற்கு நான் 1969ல் பணியாற்றிட வந்த நாள் முதல் இந்த நாள் வரை என் குடும்ப நண்பராய்த்திகழும் இக்குவனம் அவர்கள் தமிழகத்தில் தமிழாசிரியராகத் தம் தொழிலைத் தொடங்கியவர். சிங்கையில் தமிழ் முரசு, தமிழ் மலர் ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இடைக்காலத்தில் இலங்கையிலும் மலாயா நாட்டிலும் இன்றமிழ்ப் பணி ஆற்றியவர் இப்போது இவர் இப்படைப்பின் வழி ஒரு நூலாசிரியாராகவும் இலங்குகின்றார்.


கவிதையுலகில் வெண்பா என்பது யாப்பிலக்கணக் கட்டுப்பாடு மிக்க ஒன்று. ஆகவே வெண்பாவில் கவிதை இயற்றுவது என்பது ஒரு சிலர்க்கே கைவந்த கலையாக இருக்கின்றது. மலேசியா, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகில் ‘‘வெண்பாக் கவிஞர்’’ எனப் பெயர் பெற்ற. இக்குவனம் அவர்களின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இந்நூல் எதுகையும் மோனையும் வேண்டவே வேண்டாம் சீரும் கீரும் சுத்தச் சனியன்கள் . வெண்பாவும் கிண்பாவும விருத்தமும் கிருத்தமும் வேண்டாத தொல்லைகள்’’என்று கருதி ‘‘யாப்பிலக்கணம்’’ கவிஞர்க்கு ஒரு கைவிலங்கு. அதனை உடைத்தெறிய வேண்டும்’’என்னும் கொள்கையுடன் வீறிட்டெழுகின்ற கவிஞர்கள். புதுக்கவிதை என்னும் பெயரால் உரைவீச்சுக்களை உலவவிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், மரபுக்கவிதைகளியே இலக்கணக்கட்டுப்பாடு மிக்க வெண்பா யாப்பினால் இயற்றிய கவிதைகளை ஒரு நூலாகத் தொகுத்து வெளியிடும் இக்குவனம் அவர்களின் முயற்சி பாராட்டுதற்குரிய ஒன்றாகும்.


கவிஞர் இக்குவனம் அவர்கள் இந்தக் கவிதைக்கனிகளில் பலவற்றை இறைவனுக்கே படையல் ஆக ஆக்கித் தம் பக்தித் திறத்தை வெளிப்படுத்துகின்றார். எனவே இக்கவிதைகளில் முருகனும் காளியும் பாடுபொருள்களாக நம் கண்முன்னே நின்று களிநடம் புரிகின்றனர். முருகனிடத்தில் அன்புக் கனியைக் கொடுத்து அவன் திருவருட் கனியைப் பெற வேண்டுகிறார். கவிஞர். முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் முருகப்பெருமான் இக்குவனம் அவர்களின் தித்திக்கும் தீந்தமிழ்க்கனியை ஏற்று, அருளும் பொருளும் உடனளிப்பான் என்பது உறுதி. ‘‘மனிதர்காள்! இங்கே வம் , ஒன்று சொல்லுகேன், கனிதந்தால் கனி உண்ணவும் வல்லீரே , புனிதன் பொற்கழல் ஈசன் எனும் கனி இனிது சாலவும் ஏசற்றவர்கட்கேஎன்பது நாவுக்கரசர் வாக்கு. எனவே இந்த இன்றமிழ்க் கவிதைகளின் வாயிலாக ஈசன் எனும் கனியையும் சுவைக்கும் பேறு பெறுகிறோம்.


இருபதாம் நூற்றாண்டு இலக்கிய உலகிற்கு விடி வெள்ளியாக விளங்கிய பாரதி , தன் வாழ்க்கை வரலாற்றுப் பகுதிகளைப் ‘‘பாரதி அறுபத்தாறு’’என்னும் பகுதியில் பாடுகின்றான். இவனைப் பின்பற்றி இக்குவனம் தன் வரலாற்றினை வெண்பா யாப்பினால் இந்நூலில் தந்துள்ளார். ‘‘என்குறிப்பு ’’ உளப்புண்’’என்னும் இருபகுதிகளும் கவிஞரின் வாழ்க்கை வரலாற்றைப் பாடுபொருளாகக் கொண்டவை.


இத்தொகுப்பில் மலேசியா நாட்டின் மாண்பு குறித்து நலமார் கனிகொடுக்கும் நாடு’’ என்னும் ஒரு தலைப்பு உள்ளது. இப்பகுதியில் உள்ள

உண்ணத் திகட்டா உயர் ‘‘டொரியன்’’ மங்குஸ்தீன்’’

நண்ணுசுவை ரம்புத்தான்நற்கதலி வண்ணப்

பலாடுக்கு’ ‘‘பப்பாளி’’ அன்னாசிமற்றும்

நலமார் கனிகொடுக்கும் நாடு.


மண்ணைக் குடைந்திடிலோ வற்றா வளஞ்சுரந்து

கண்ணைக் கவரும் கனிவனமாம்-எண்ணரிய

எத்துணையோ ஈயச் சுரங்கங்கள் இந்நாட்ழல்

அத்துணையும் பொன்னென் றறி


என்னும் வெண்பாக்கள் இக்கவிஞர் கனிஎன்னும் சொல்லை இருபொருளிற் கையாளும் இயலபினை எடுத்துரைக்கின்றன. தமிழ்த் தாய்க்கு இவர்தம் கவிதைக்கனிகள்என்னும் இந்நூலும் இந்த இரு பொருளில் சுவையூட்டும் கனியாகவும் வளமூட்டும் கனி(வளம்)யாகவும் விளங்கும் என்று கூறலாம்.


பொருளியல் நோக்கில் கூட்டுறவு பற்றி விளக்கும் ஏழையா கூட்டுறவா என்னும் ஓர் அந்தாதியும் இத்தொகுப்பில் இடம் பெற்று உள்ளது. இத்தலைப்பு வெறும் ஓர் கவிதைத் தலைப்பாக மட்டுமின்றித் தமிழர்தம் சிந்தனையை நோக்கி விடுத்த வினாவாகவும் விளங்குகிறது.


முருகன் காளி என்னும் இறை பற்றியும், கவிஞன் என்னும் ஆன்மா பற்றியும், நாடும் பொருளுமாகிய உலகம் பற்றியும் கூறும் கவிதைக்கனிகள் என்னும் இந்நூல் இறை உயிர் தளை என்னும் முப்பொருள் உணர்த்தும் முத்தமிழ்க் கனியாகவும் இலங்குகிறது. வனந்தரும் கவிதைக்கனிகள் தமிழன்னைக்கு மட்டுமன்றி நமக்கும் வளந்தரும் கவிதைகளாக விளங்குகின்றன. இகவிதைக் கனிகளைத் தமிழுலகம் உண்டு சுவைத்து உறுபயன் பெறுவதற்கு உதவிய கவிஞர் இக்குவனம் அவர்கள் எல்லா நலமும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்து தமிழன்னைக்குத் தக்க தொண்டாற்றிடத் தண்டாயுதபாணியின் திருவருளை இந்தத் தைப்பூச நன்னாளில் வேண்டுகின்றேன்.


தி. துரைராஜீ

காதல் சந்தங்கள்,

மே, 1992


மனிதனுக்குரிய பசி இரண்டு. ஒன்று வயிற்றுப்பசி மற்றொன்று உணர்வுப்பசி. உணர்வுப்பசியின் உந்துதலே காதல். காதல் அடைதல் உலகத்தியற்கை. காதல் என்னும் மூன்றெழுத்தில் உலகத்துயிர்களின் மூச்சியிருக்கும். உலகக் கவிஞர்களின் பேச்சிருக்கும்.


காதலை அகம் என ஒரு பிரிவாக்கி இலக்கியத்தின் பாடுபொருளாகக் கண்டு, வரையறை செய்து மகிழ்ந்தது தமிழ் நெஞ்சம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த தொல்காப்பியனார் காதலுக்கு இலக்கணம் கண்டார். சங்க இலக்கியப் புலவர்கள், காதலுக்கு இலக்கியம் அளித்தனர். ‘‘மலரைவிட மென்மையானது காதல். சிலர்தான் அதன் செவ்வி உணர முடியும்’’ என்று பேசுகின்ற தெள்ளுதமிழ் வள்ளுவர் காதலின் சாறாக காமத்துப்பால் கண்டார். இடைக்காலத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் மானிடக் காதலைக் கடவுட் காதலாக மாற்றி இலக்கியம் இயற்றினர். திருத்தக்க தேவரும், கம்பரும் காதலுக்குக் காவியம் பாடினர். இக்காலக்கவிஞர்களோ இந்தக் காதலுக்கு எழிலோவியம் தீட்டினர்.


‘‘காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல்’’ என்று பாடிய பாரதிக் குயில்,


‘‘காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்

கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்

காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்

கானமுண்டாம், சிற்பமுதற் கலைகள் உண்டாம்.

ஆதலினால் காதல் செய்வீர். உலகத் தீரே!

அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்

காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்

கவலை போம். அதனாலே மரணம் பொய்யாம்’’


என்று காதலின் புகழைக் கன்னித் தமிழ்ச் சோலையில் கூவி மகிழ்கின்றது.


இக்காலக் கவிஞர் கவியரசு கண்ணதாசன் காதலில் அன்பினையும், இன்பத்தையும், ஆழ்ந்த தத்துவத்தையும் அனுபவ வாயிலாகக் கண்டு மகிழ்ந்தவர். மானிடக்காதலையும் கடவுட் காதலையும் பாடிக் களித்தவர். இலக்கியக் காதலைக் கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பாக மாற்றித் திரைப்படத்தில் தேனிசைக் கவிதையாக்கிப் பரப்பியவர்.


பழங்காலம் முதல் இன்றுவரை பலரும் பாடி மகிழும் காதலை இந்நூலாசிரியர்விலாசமில்லாத வாசமான அனுபவமாகக்கண்டு வடித்த படைப்பே இந்நூலாகும். காதலைப் பற்றிய தம் கருத்துக் குவியலை உணர்ச்சி ததும்பக் கண்ணதாசன் கவிதையோடு இணைத்தும்,பலவகைக் கற்பனைச் சூழலை உருவாக்கியும் இந்நூலாசிரியர் இங்கே தந்துள்ளார்.


இதனை இந்நூலாசிரியரே காதலைப் பிசைந்து கண்ணதாசனின் அடங்காத ஆசைகளையும் உறங்காத நினைவுகளையும் அதிலே ஊற்றித் தங்கக் கிண்ணத்தில் பாசத்தைப் பரிமாறுவதாகக் கூறுகிறார்.எளிய தமிழ் நடை,இனிய கவிதை ஓட்டம்,அழகிய கற்பனை, அமைதியான போக்கு, இடைஇடையே கண்ணதாசன்கவி இன்பம், தமிழ்ச் சொற்களின் இந்திர ஜாலம்ஆகியவை இந்த நூலின் தனித்தன்மைகளாகும்.இந்த நூலைப் படிக்கும்போது நூலாசிரியரின் தணியாத் தமிழ்க்காதலும், எழுத்தாற்றலும்,,கறபனைத் திறமும், கவிதை புனையும் பாங்கும், கண்ணதாசன் கவிதைகளைச் சுவைக்கும் திறனும் பளிச்சிடுவதைப் பலரும் உணரலாம்.இவர் காணும் காதல்தான் எத்தனை வகை.ஓர் எடுத்துக்காட்டு.


‘‘ஊமைக்காதல்-காயமாகிவிடுகிறது

உவமைக்காதல்-இலக்கியமாகி விடுகிறது

ஊடல்காதல்-சரசமாகிவிடுகிறது.

உண்மைக்காதல்-நிலைத்துவிடுகிறது.

ஊழல்காதல்-ஊசலாடிவிடுகிறது

தெய்வீகக் காதல்-பூஜைக்குரியது

ஒருதலைக்காதல்-ராகமாகிவிடுகிறது

இரட்டைஇலைக் காதல்-ரத்தாகிவிடுகிறது.

புதுமைக்காதல்-பூத்துக் குலுங்குகிறது.


இந்நூலாசிரியர் துரைராஜீ சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஓர் இளைஞர். தமிழ் மொழியின் மீது பற்றும், தமிழர் நலத்தில் அக்கறையும் கொண்டு துடிப்புமிக்க செயலாற்றும் திறன் மிக்கவர். இவரின் முதல் முயற்சியாகத் திகழும் காதல் சந்தங்கள்என்னும் இந்நூல் விரைவில் அச்சில் வெளிவர இருப்பது கண்டு மகிழ்கிறேன். இது போன்று இன்னும் பல இலக்கிய நூல்களைப் படைத்து தமிழன்னைக்கு காணிக்கையாக்கிப் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கின்றேன். அவருக்கு என் வாழ்த்தும்,பாராட்டும் உரியனவாகுக.


‘‘காதல் சந்தங்கள்

கவிதைத் தந்தங்கள்

அன்பின் பந்தங்கள்

படிக்க முந்துங்கள்


கண்ணதாசன்

வண்ணத்தமிழினை

எண்ணத்தில் குழைந்து

பண்ணமுது ஊட்டி

இலக்கிய முளையாக

இலங்கும் துரைராசன்

நலம் பல பெற்றுத்

துலங்குக தொடர்ந்தே!’’



......... தொடரும் .........
Dr S.P. Thinnappan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக