திங்கள், 16 ஜூன், 2014

சமயம் - விழிக்குத் துணை


விழிக்குத் துணை

 

பேராசிரியர் டாக்டர் சுப.  திண்ணப்பன், சிங்கப்பூர்.

 

விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மைகுன்றா

மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்; முன்புசெய்த

பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி

வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே (கந்தரலங்காரம் 70).

 

விழி, கண் என்பன ஒரு பொருளுணர்த்தும் இரு சொற்கள்.  நெற்றிக் கண் கொண்ட சிவபெருமானை 'நுதல்விழி நாட்டத்து இறையோன்' என நூல்கள் கூறும்.  பின் வரும் நீதி வெண்பாவும்,

 

"கண் இரண்டே யாவர்க்கும்; கற்றோர்க்கு மூன்று விழி

எண்ணும் விழி ஏழு ஆகும், ஈவோர்க்கு - நண்ணும்

ந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு

ந்தம் விழி என்று அறி"

 

அதனை வலியுறுத்தும்.

 

"பொதுவாக மனிதருக்குக் கண் என்பன இரண்டே; கற்றவர்க்கோ அறிவுக்கண் ஒன்றுடன் மூன்றாகும்.  கொடை கொடுப்போர்க்கு 'நகக்கண்' ஐந்துடன் ஏழாகும்.  அருள் ஞானம் பெற்றோர்க்கு எல்லாப் பொருளும் எவ்விடமும் கண்களாகும்."  இதுவே மேற்கண்ட பாடலின் கருத்தாகும்.  இதில் ஞானம் என்பது ஒளி மயமானது.  ஞான சக்தியே வேல்.  அதுவே முருகன்.  அவன் திருவடிகளே விழிக்குத் துணை.  இதனை விளக்க முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளில் நடு நாயகமாக விளங்குவது கண் ஆகும்.  வண்ணத்தையும் வடிவத்தையும் கண்டறியும் ஆற்றல் கண்ணுக்கு உண்டு.  முருகனின் தாமரை புரையும் காமறு சேவடியையும், பவழத் தன்ன மேனியையும் காணும் பாக்கியம் கண்ணுக்குத் தானே உண்டு.  வேதான் அருணகிரியார்,

 

மாலோன் மருகனை, மன்றாடி மைந்தனை, வானவர்க்கு

மேலான தேவனை, மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்

சேலார் வயல் பொழில் செங்கோடனைச் சென்று கண்டு தொழ

நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே.  (-அலங்: பா 70).

 

என்னும் கந்தரலங்காரப் பாடலில் வருந்திக் கூறுகிறார்.

 

கந்த புராணத்தில் சூரன் முருகனைக் கண்டு

 

ஆயிரம் கோடி காமர் அழகெலாம் திரண்டு ஒன்றாகி

மேயின எனினும் செவ்வேள் விமலமாம் சரணம் தன்னில்

 தூய நல் எழிலுக்கு ஆற்றாது என்றிடின், இனைய தொல்லோன்

மாயிரு வழவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்?”

 

என்று வியந்து நிற்கிறான் என்றால் பகைவனும் பாராட்டும் முருகப் பெருமானின் பாத அழகைக் காணக் கண்கோடி வேண்டுமல்லவா? இத்தகைய பாதம் விழிக்குத் துணையாகும் போது விளையும் பயன்களை எண்ணித்தான் பார்க்க முடியுமா?

 

விழி பேசினால் மொழிக்கு வேலை இல்லை.  இதனைத்தான் திருவள்ளுவர்,

 

"கண்ணொடு கண்ணிணை நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள்

என்ன பயனும் இல" (திருக்குறள் 1100),

 

என்று கூறுகிறார்

.  விழிக்குத் துணையாகும் முருகன் திருவடிகளைக் கண்டவர் விண்டிர்; விண்டவர் கண்டிலர் என்னும் வாக்கு இதனால்தான் எழுந்தது என எண்ணத் தோன்றுகிறது.

 

எண்ணத்தை எடுத்துரைக்கும் ஆற்றலும் கண்ணுக்கு இருக்கிறது.  எனவேதான் திருவள்ளுவர்,

 

"பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் ... " (திருக்குறள் 709),

 

என்றும்,

 

"நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் ... கண் அல்லது இல்லை பிற" (திருக்குறள் 710),

 

என்றும் கூறுகிறார்.  விழிக்குத் துணையாக வேலவனின் திருவடிகள் இருக்கும்போது நம் எண்ணங்களும் நல் எண்ணங்களாக அமையும் அன்றோ?

 

கண்ணின் பெருமையை விளக்கும் வகையில் 'குறிப்பறிதல்' என்னும் பெயரில் பொருட்பாலில் ஓரதிகாரமும், காமத்துப்பாலில் ஓரதிகாரமும் வைத்துத் திருவள்ளுவர் குறுகத் தரிக்கும் குறளில் குறிப்பிடுகிறார்.  விழிக்குத் துணையாய் முருகன் திருவடிகள் நாம் இவ்வுலகில் குறிப்பறிந்து வாழ வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

 

முகக் கண்ணைப் பாராட்டும் திருவள்ளுவரே,

 

 

"கண்ணுடைர் என்போர் கற்றோர்; முகத்திரண்டு

புண்ணுடையவர் கல்லாதவர்" (திருக்குறள் 393),

 

என்றும்,

 

"பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண் என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்" (திருக்குறள் 144),

 

என்றும் உண்மைக் கண் எது என்பதையும் எடுத்துரைக்கிறார்.

 

ஞானக்கண் (கல்விக் கண்), இரக்கக் கண் (அன்புக் கண்) இவை இரண்டும் முகக் கண்ணினும் சிறந்தவை என்பதே திருவள்ளுவர் கருத்தாகும்.  கல்விக் கண் பெற்றவர்களே,

 

"கற்றதனால் ஆய பயன் வாலறிவன் நற்றாள் தொழுவதே" (திருக்குறள் 2), என உணர்வர்.  விழிக்குத் துணையாகும் நிலையில் முருகப் பெருமான் நமக்கு அறிவும் ஞானமும் நல்குவான் என்று நாம் நம்பலாம்.

 

"ஞானம் என்பதே ஈசன் பால் அன்பே என்றனர் ஞான முண்டார்"

 

என்பது சேக்கிழார் வாக்கு.  வே விழிக்குத் துணையாகும் வேலனின் திருவடி - கருணையே வடிவமான அவன் கழல்கள் - நமக்கு அறிவையும் அன்பையும் நல்கி நல்வாழ்க்கை வாழ வைக்கும்.

 

விழிக்கு இறைவன் துணையாக இருக்கும்போது நமக்கு என்ன என்ன கிடைக்கும் என அபிராமிபட்டர் பட்டியல் இடுகிறார்:

 

"தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா

 மனம் தரும்;தெய்வ வடிவும் தரும்; நெஞ்சில் வஞ்சம் இல்லா

 இனம் தரும்;நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே".

 

அபிராமி மைந்தனாகிய முருகப்பெருமான் திருவடிகளும் நமக்கு - நம் விழிக்குத் துணையாக இருந்து இவை எல்லாம் தந்து நல்வழி காட்டி நிற்கும்.

 

"முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்"

 

என்பார் திருமூலர்.  அகத்தில் கண்கொண்டு பார்க்கும்போது தன் உயிருக்கு உயிராய் உள் நின்று உலவும் முருகப்பெருமான் அருளார் அமுதத்தை வாரி வழங்குவான்.  அக விழிக்குத் துணையாகும் அவன் திருவடி இன்பம் தரும் இன்பம் பேரின்பமே!

 

 

 

"கண்ணே, கண்ணின் கருமணியே, மணியாடு பாவாய்" என்று கடவுளை அழைத்துக் 'காவாய்' என்று வேண்டுகிறார் நாவுக்கரசர்.  கடவுள்தான் நமக்குக் கண்ணாக இருந்து நமக்குப் பலவற்றைக் காட்டுவிக்கின்றான்.  எனவேதான் அருணகிரியார் விழிக்குத் துணை பாதங்கள் என்று விளம்புகிறார்.

 

கண்ணின் பயனே கடவுளைக் காண்பதுதான் என்பதை இளங்கோ அடிகளும் சிலப்பதிகாரத்தில்,

 

கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே

கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே"

 

என்று கூறுவர்.  முருகப் பெருமான் திருவடியைக் காண்பதே பெரும்பேறு எனக் கருதவேண்டும்.

 

"திருவும் மெய்ப் பொருளும் செல்வமும் எனக்கு உன்

சீருடைக் கழல்கள் என்று எண்ணி

ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும்

ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்"

 

என்று சுந்தரர் பாடுவதற்கேற்ப முருகப்பெருமானின் திருமென் மலர்ப் பாதங்கள் நம் விழிக்குத் துணையாகும்போது நாமும் சுந்தரர்போல் உறைப்பனாய்த் திரியலாம்.

 

காணும் ஆற்றல் கண்ணுக்கு இருந்தாலும் இருளில் உள்ள பொருளைக் கண்ணால் காண முடியாது.  காண்பதற்கு வேறு ஓர் ஒளி வேண்டும்.  சூரியன், சந்திரன், தீ மூன்றுமே அந்த ஒளியைத் தருவன.  சூரியன் பகலில் ஒளி தருகிறான்.  சந்திரன் இருட்டில் ஒளி தருகிறான்.  இரண்டும் இல்லாத நிலையில் தீ ஒளி தருகிறது.  இவை மூன்றையும் தன் கண்களாகக் கொண்டுள்ள இறைவன் - முருகன் - விழிக்குத் துணையாக இருந்து உதவுகின்றான் என்பதே உண்மையாகும்.

 

கண்ணால்தான் பொருள்களைக் காண்பதாக நாம் கருதுகிறோம்.  கண் என்பதோ சதைத் திரளால் ஆன சடப் பொருள்.  சடப்பொருளுக்குக் கண்டறியும் ஆற்றல் இல்லை.  கண்ணைக் கருவியாகக் கொண்டு உள்ளே இருக்கும் உயிரே அனைத்தையும் அறிகிறது.  கண் காண்பதற்கு வேறு ஓர் ஒளி தேவைப்படுவதுபோல உயிருக்கும் இறைவனது திருவருள் என்னும் அறிவு தேவைப்படுகிறது.  அந்நிலையில்தான் உயிர் எதையும் அறியவும் உணரவும் முடியும்.  உயிரின் அறிவில் கலந்து உயிர் காணும் பொருளை அதற்கு இறைவன் காட்டுவதால் இது அவன் உயிருக்குக் காட்டும் உபகாரம் என்று சித்தாந்த நூல்கள் கூறும்.  கண்ணோடு ஓளி கலப்பது போல உயிரோடு இறைவன் கலந்து நிற்கும் நிலையை ஒன்றாய் இருத்தல் என்றும் அவை விளக்கும்.  முழு இருளில் நாம் தேடும் பொருள் மீது ஒளிபட்டால்தான் நாம் காணமுடியும்.  அப்போது கண்ணோடு கலந்த ஒளியும் உடன்சென்று பொருளைக் காண்கிறது.  இதைப் போலவே உயிர் ஒரு பொருளைக் காணும்போது இறைவன் திருவருளும் உடன் சென்று உயிர் காணும் பொருளைத் தானும் காண்கிறது.  இதுவே இறைவனின் காணும் உபகாரம் என்று சைவ சித்தாந்த நூல்கள் சாற்றும்.  இவ்வாறு கடவுளின் காட்டும் உதவியும் காணும் உதவியும் இல்லாமல் உயிர் தானே அறிய முடியாது.  முடியுமானால் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும்.  ஆணவம் தடையாக இருந்து உயிர் மெல்ல மெல்ல அறிய வழி வகுக்கிறது.  இந்தத் தடையை அகற்றவே இறைவனின் காணும் உபகாரமும் காட்டும் உபகாரமும் உதவுகின்றன.  இந்த வகையில்தான் இறைவனின் திருவருளாகிய திருவடிகள் - முருகப் பெருமானின் திருமென்மலர்ப் பாதங்கள் - நமக்கு விழித்துணையாக இருந்து உதவுகின்றன. 

 

"அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்

இவன் இறைவன் என எழுதிக் காட்டொணாதே"

 

என்பது நாவுக்கரசர் வாக்காகும்.  "காண்பார் ஆர் அவர் காட்டாக்காலை" என்பதும் அவர் கேட்கும் கேள்வியாகும்.

 

விழிக்குத் துணையாகும் பாதத்தை விளக்க அருணகிரியார் மூன்று அடைமொழிகளைப் பயன்படுத்தியுள்ளார்.  அவை திரு, மென், மலர் என்பன.  திருமென் மலர்ப் பாதம் என்னும் தொடரில் மலர் என்பது பொதுவாய்ப் பூவினைக் குறித்தாலும், சிறப்பாகத் தாமரையையே குறிக்கும்.  'பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை' அல்லவா? அருணகிரியார் முருகன் திருவடியை 'புண்டரீகம்' (42), அம்புயம் (42), காவிக் கமலக் கழல் (92) என்றும் கந்தரலங்காரத்தில் குறிப்பிடுகிறார்.  மேலும் 'புண்டரீகத்தினும் செக்கச் சிவந்த கழல்' (31) என்றும், தாமரையைவிடச் கிவந்த திருவடி என்று அவர் விளக்கம் தருவதையும் காணலாம்.  மென்மைக்கு மலரை எடுத்துக்காட்டுவது மரபு என்பதற்கு 'மலரினும் மெல்லிது காமம்' என்னும் திருக்குறள் (1289) சான்றாகும்.

 

திரு என்பது தெய்வத் தன்மை, அழகு, அருட்செல்வம் முதலிய பல பொருள்கள் உண்டு.  அத்தனையும் திருவடிக்கு அடையாக அமையப் பொருத்தமுடையன.  "சென்றடையாத திருவுடையவன்" இவனல்லவா?

 

உடலைவிட்டு உயிர் பிரியும்போது, "துணை இரு தாளன்றி வேறில்லையே" (44) என்றும் கூறிப் "பெறுதற்கரிய பிறவியைப் பெற்று நின் சிற்றடியைக் குறுகப் பணிந்து பெறக் கற்றிலேனே" (68) என்று ஏங்குகிறார்.  "அவன் கால்பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே" (40) என்று அவர் கூறுவதால், தலைவிதியையும் மாற்றும் தன்மை முருகன் திருவடிக்கு உண்டு என அறிகிறோம்.  அதுதானே விழித்துணை.  பிறவாப் பெருங்கடலைத் தாண்டி வீடுபேறு தரும் பெற்றியது அவன் திருவடி என்பதைப்,

 

"பொக்கக் குடிலிற் புகுதாவகை புண்டரீகத்தினும்

செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் ... காவலனே" (31)

 

என்னும் அடிகளால் உணர்கிறோம்.  திருமூலர்,

 

"திருவடியே சிவமாவது தேரில்

திருவடியே சிவலோகம் சிந்தித்தில்

திருவடியே செல்கதியது செப்பில்

திருவடியே தஞ்சமும் தெளிவார்க்கே" (138)

 

என்று கூறும் திருமந்திரமும் இறைவன் திருவடிப் பெருமையைப் பேசுகிறது.

 

"தொண்டர் கண்டு அண்டி மொண்டு உண்டு இருக்கும் சுத்த ஞானம் எனும்

தண்டையம் புண்டரீகம் தருவாய் ... " (92)

 

என்று அருணகிரியார் முருகனிடம் வேண்டும் பாடல் அடிகள் "அடியார்களாகிய வண்டுகள் பார்த்து நெருங்கி முகந்து பருகி இருக்கிற பரிசுத்த மெய்ஞ் ஞானமாகிய தேனை உடைய (தண்டை அணிந்த) தாமரை திருவடி" என அழகாக விளக்கம் தருகின்றது.  அவர் ஞானமே திருவடி என்பதை "ஞானபாத பத்மம்" எனத் திருப்புகழிலும் பேசுவார்.  இத்தகைய திருவடி எங்கே உள்ளது என்பதைப் பின்வரும் கந்தரலங்காரம் பேசுகிறது.

 

"தாவடி ஓட்டும் மயிலிலும், தேவர் தலையிலும்,

என் பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ ... சிற்றடி" (15).

 

வாகனமாகிய மயில்மீதும், வணங்கும் தேவர் தலைமீதும், அருணகிரியாரின் அரிய தமிழ்ப் பாட்டுகள் தாங்கிய ஏட்டின் மீதும் இருக்கும் திருவடி என்பதே இதன் கருத்து.

 

பறக்கும் மயிலைப் பிடிக்க நம்மால் முடியாது, தேவரைத் தீண்ட இயலாது; ஆனால் அருணகிரியாரின் பாடலைப் படிக்க நம்மால் முடியும்.  எனவே படித்து, முருகன் காலைப் பிடிப்போம்; இறுதிவரை 'திருவடி' உடனிருந்து நமக்கு உறுதி பயக்கும்.  எனவே,

 

"விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்களே"

 

என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

*-*-*

..... முற்றும் ....

Dr S.P. Thinnappan

சமயம் - பிராட்டியின் பேரருள்


பிராட்டியின் பேரருள்

             பிரான் என்னும் சொல்லுக்குத் தலைவன் என்று பொருள். வம்பறா வரிவண்டு மணம் நாற மலரும் மதுமலர் நற்கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்’, நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் என்னும் சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகைத் தொடர்களில் வரும் எம்பிரான் , நம்பிரான் என்பன எம் தலைவன். நம் தலைவன் என்னும் பொருளைத் தலைவன் என்னும் பொருளைத் தரும். அருவாகி, உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான் (4163) என்னும் பெரிய புராணத் தொடரில் உருவாய் அருவாய் இருக்கும் ஒப்பிலாத் தலைவனாகிய இறைவனைப் பிரான் என்னும் தொடர் குறிக்கிறது. இவ்வாறே தம்பிரான் என்பது சிவபெருமானைக் குறிக்கும் தொடராகவும் திருமுறைகளில் கையாளப்படுகிறது. தம்பிரான் தோழர் என்று சுந்தரரைக் குறிக்கிறோம். தம்பிரானைத் தனனுள்ளம் தழீஇயவன், நம்பி ஆரூரன் நடம் தொழும் தன்மையான் என்று உபமன்னிய முனி தம் சீடர்களிடம் கூறியதாகச் சேக்கிழார் சுட்டுவதையும் காணலாம்.

       பிரான் என்னும் ஆண்பாற் சொல்லுக்கு ஏற்ற பெண்பாற் சொல்லே பிராட்டி என்பதாகும். பிராட்டி என்பது தலைவியைப் பொதுவாகக் குறித்தாலும் சிறப்பாகச் சைவத் திருமுறைகளில் உமையம்மையாரைக் குறிக்கக் கணலாம். எம்பிரான் , நம்பிரான் தம்பிரான் என்னும் சொற்றொடர்களைப் போலவே எம்பிராட்டி, நம்பிராட்டி, தம்பிராட்டி என்னும் தொடர்களும் அமையும். வைணவப் பாடல்களில், உரைநூல்களில் பிராட்டியார் என்பது திருமாலின் துணைவியராகிய திருமகளைத்- தாயாரைக் குறிக்கும். பிராட்டி என்பது உமையம்மையைச் சுட்டினாலும் திருமகளைச் சுட்டினாலும் இறைவனருளை –சக்தியை-  எடுத்து இயம்புவதாகும்.

அருளின் திருவுருவமாகிய உமையம்மையின் பேரருளைத் திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமான் போற்றிப் பாடுகிறார். அதனைச் சிறிது காண்போம்.  திருவாசகத்தின் வரும் திருவெம்பாவை மார்கழி மாதத்தில் பாடப்பெறும் ஒரு பகுதி. கன்னிப்பெண்கள்  அதிகாலையில் எழுந்து மற்ற தோழிமார்களையும் எழுப்பிக்கொண்டு நீர்நிலைக்குச் சென்று நீராடி இறைவனைத் தொழுது நாடு செழிக்க மழை பெய்யவும், வீடு செழிக்க நல்ல கணவனைப் பெறவும் வேண்டுவதையே உட்பொருளாகக்கொண்டது திருவெம்பாவை. இதன் தத்துவப்பொருள் சக்தியை வியந்தது என்று கூறுவர். இப்பகுதியில் மாணிக்கவாசகர் பிராட்டியின் பேரருளைப் பற்றிக் கூறுகிறார். கன்னிப்பெண்கள் நீராடும் மடு (நீர்நிலை) அவர்களுக்கு உமையம்மையைப் போலவும் காட்சி அளித்ததாம். பாடலைப் பாருங்கள்.

பைங்குவளைக் கார்மலரால், செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தால், பின்னும் அரவத்தால்,

தங்கண் மலங்கழுவுவார் வந்து சார்தலினால்,

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்து

பொங்கும் மடுவிற் புகப் பாய்ந்து பாய்ந்து நம் 

சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாய்ந்து பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்

பிராட்டியாராகிய உமையம்மையின் கண்களைப் போல இம்மடுவும் பசுமை தங்கிய குவளையாகிய கரியமலர் பூத்து விளங்குகிறது. இப்பொய்கையிலுள்ள தாமரைமலர்கள் அவள் திருமுகத்தை ஒத்து விளங்குகின்றன. குருகினங்கள் அவன் வளையல்களை நினைவூட்டுகின்றன. பாம்புகள் அவள் அணிகலன்களாகக் காட்சி அளிக்கின்றன. பொய்கையில் வந்து பலர்குளித்து அழுக்கை அகற்றிக்கொள்ளும் செயல் உமையிடத்து வரும் பக்தர்கள் தம் ஆணவம் கன்மம் மாயை ஆகிய அழுக்குகளை நீக்கிக் கொள்வதை நினைவூட்டுகினறது. பொதுவாகப் பொய்கையே மடுவே தண்மையான நீரினைக்கொண்டது. எம்பிராட்டியின் இன்னருளும் தண்மையானது. பொய்கை நீர் புறத்தே இருக்கும் வெம்மையைப் போக்க வல்லது. அம்மையின் தண்ணருளோ பிறவித் துன்பத்தால் வரும் வெம்மையை நீக்க வல்லது. அம்மையே அருள்வடிவினள் தானே!  அருளது சக்கியாகும் அரன் தனக்கு என்றுதானே நம் சாத்திரங்கள் நவில்கின்றன.

 மேலும் இப்பாட்டில் குவளைமலர்களை  அம்மையின் அருளொழுகும் கண்களுக்கு ஒப்பிடுகிறார் மாணிக்கவாசகர். அம்மையின் அருளை நினைத்தவுடன் அடியவர்களுக்கு முதலில் அவளது கண்கள் தாம் நினைவுக்கு வரும். கண்கள் அடிப்படையில் தான் அம்மைக்கு எத்தனை பேர்கள்? காமாட்சி மீனாட்சி விசாலாட்சி கமலாட்சி ஆகிய பெயர்கள் முறையே காமக்கண்ணி கயற்கண்ணி, அகல்நெடுங்கண்ணி, தாமரைக்கண்ணி என்னும் பொருளுடையன அல்லவா? ஏன்? கண்ணின் பெருங் கருணைத்திறத்தை அபிராமி பட்டர்.

தனந்தரும், கல்விதரும், ஒருநாளும்  தளர்வறியா

மனந்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமிலா

இனந்தரும்  நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

என்று பாடுகிறார். அம்மையின் அருட் கண்ணுக்குத்தான் எத்துணை பேராற்றல்! எனவேதான் முதலில் அம்மையின் அருட்கண்ணையும் குவளை மலரையும் இணைத்துப் பேசுகிறார் மணிவாசகர்.

அடுத்து அம்மையின் அருள்வடியும் முகத்தைத் தாமரைக்கு ஒப்பிடுகிறார் மாணிக்கவாசகர். பூக்களில் சிறந்த பூ தாமரைப்பூ அது தண்மையில் வேரூன்றித் தழைப்பது. அதுபோலத் தெய்வங்களில் சிறந்த அம்மை, அருள்வெள்ளத்தில் எப்போதும் குடிகொண்டிருப்பவள்.

பொய்கையை அம்மையோடு ஒப்பிட்டு பேசிய மாணிக்கவாசகப்பெருமான் இன்னொரு பாட்டில் பொய்கைக்கு நீர்சுரக்கும் மழைமேகத்தை நினைக்கும்போதும் அம்மையின் அருளை எண்ணிப்பார்க்கிறார். பாடலைப்பாருங்கள்

முன்னிக் கடலைச்சுருக்கி எழுந்துடையான்

என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்  

மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலை குலவி நம்தம்மை ஆளுடையான்

தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப்பொழியாய் மழையேவோர் எம்பாவாய்

   இந்தப்பாட்டில் கன்னிப்பெண்கள் மழைபெய்ய வேண்டி நிற்கிறார்கள். கடல்நீர், கதிரவன் வெப்பத்தால் மேகம் ஆகின்றது. பிறகு கார்மேகம் ஆகி மின்னுகிறது. பிறகு இடி இடிக்கிறது, மழை பொழிகிறது. இவையனைத்தையும் அடியார்க்கு அம்மையை நினைவூட்டுகின்றன. அவள் கருப்பு நிறத்தைக் கார்மேகம் காட்டுகிறது. மின்னல் அவள் இடையை நினைவூட்டுகிறது. அவள் காற்சிலம்பொலியை இடி எடுத்துரைக்கிறது. மழைக்காலத்தில் தோன்றும் வானவில்லும் அவளது கரும் புருவத்தைக் காட்சிக்குக் கொணர்கிறது. அவள் இறைவனுடன் இணைந்து பொழியும் அருளைப்போல மழைபொழிய வேண்டுகிறார். மழை என்பதும் கடவுள் அருளின் மறுவடிவம்தானே. எனவேதான் வள்ளுவர் கடவுள் வாழ்த்துக்கூறிய பின்னர் வான்சிறப்புக் கூறி மழையை வாழ்த்துகிறார்.

மேலும் இப்பாட்டில் உமையம்மையை உடையாள் எம்மையாளுடையாள், எம்பிராட்டி, நந்தம்மை ஆளுடையான் அவள் என ஐ முறையாகப் பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஐந்து வகையாக இறைவி குறிக்கப்படுவது அவள் ஐந்து சக்திகளாக உயிர்களுக்குக் கருணை வழங்கிப் பேரின்பத்தைக் கூட்டுதற்பொருட்டே என்பர். உலகின் நலம் கருதி மழை பொழிகிறது. அதுபோல உயிர்நலம் தழைக்க அம்மையின் அருள் தேவைப்படுகிறது. அவள்அருளை வேண்டிவழிபட்டு நிற்போம்.

அருளே உலகெல்லாம் ஆள்விப்பது ஈசன்

அருளே பிறப்பறுப்ப தானால்-- அருளாலே

மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்

எப்பொருள் ஆவ தெனக்கு காரைக்கால் அம்மையார்.

...... முற்றும் .....
Dr S.P. Thinnappan

சமயம் - சிலப்பதிகாரத்தில் சிவகிருஷ்ணர்


சிலப்பதிகாரத்தில் சிவகிருஷ்ணர்

பேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பன்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம்

சிம் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்.

 

சிலப்பதிகாரம் செந்தமிழில் தோன்றிய முதல் காப்பியம்.  இளங்கோவடிகளால் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப் பெற்ற நூல்.  ஐம்பெருங்காப்பியங்களில் முதலாவதாக வைத்துப் போற்றப்படும் சிறப்புடையது.  பூம்புகாரில் தோன்றிய கோவலன், கண்ணகி வாழ்க்கை வரலாற்றைப் பாடுபொருளாகக் கொண்டது.  அறத்தின் வலிமை, ஊழின் ஆற்றல், கற்பின் பெருமை ஆகியவற்றை வலியுறுத்துவதே இந்நூலின் நோக்கமாகும்.  குடிமக்கள் காப்பியம், தமிழ்நாட்டின் தேசிய காப்பியம், வரலாற்றுக் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், பெண்ணின் பெருமை பேசும் காப்பியம், சமயப் பொறையைக் கூறும் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படும் இந்நூலைப் பாரதியார் "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்னும் மணியாரம் படைத்த தமிழ்நாடு" என்று பாராட்டிப் பாடுகிறார்.  இந்நூலில் இடம்பெறும் சிவகிருஷ்ணரைப் பற்றிச் சிறிது விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

பெரியோனும் நெடியோனும்

 

சிவன்/சிவம் என்பது தமிழர் கண்ட இருபெருஞ் சமய நெறிகளில் ஒன்றாகிய சைவ சமயம் போற்றும் முழுமுதற் கடவுளின் பெயர்.  "சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்" என்று சைவ அடியார் திருநாவுக்கரசர் இதனைக் கூறுவார்.  கிருஷ்ணர் என்பதோ தமிழரின் மற்றொரு சமய நெறியாகிய வைஷ்ணவ சமயம் போற்றும் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகும்.  சிலப்பதிகாரம், பூம்புகார் நகரக் கோயில்களை இந்திரவிழாக் கொண்டாடும் சூழ்நிலையில் பட்டியலிடுகிறது.  அப்போது

      "பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்

      வால்வளை மேனி வாலியோன் கோயிலும்

      நீலமேனி நெடியோன் கோயிலும்

      மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்" (இந்திரவிழா 169-17)

எனக் கூறுகிறது.  இங்கு பிறவா யாக்கைப் பெரியோன் என்பது உயிரியல்பாகிய, பிறப்பு இறப்பு இல்லாத சிவனை - தாய் வயிற்றிற் பிறவாத உடலை உடைய சிவனைக் குறிப்பிடுகிறது.  இது சைவநெறி கூறும் சிவனின் சிறப்புத் தன்மையை - அதாவது "தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன்" என்று திருவாசகம் கூறும் கூற்றை - பிறவா இறவாத் தன்மையைப் புலப்படுத்துகிறது.  அறுமுகச் செவ்வேள் கோயில் முருகன் கோயில்.  அடுத்து வால்வளை மேனி வாலியோன் என்பது வெண்சங்கு போன்ற நிறத்தை உடைய பலதேவன் கோயிலைக் குறிக்கிறது.  பலதேவன் என்பவர் கிருஷ்ணனின் தமையனான பலராமன்.  இதுவும் திருமால் அவதாரங்களில் ஒன்று.  அடுத்து வரும் "நீலமேனி நெடியோன் கோயில்" என்பது நீலமணி போலும் நிறத்தையுடைய நெடியமால் கோயில் என்பதைக் குறிக்கும்.  எனினும் இங்கு பலராமன் கோயிலை அடுத்துக் குறிப்பிடுவதால் இந்தக் கோயிலைக் கிருஷ்ணன் / கண்ணன் கோயில் எனவும் கருதலாம்.  எனவே சிலப்பதிகார காலத்தில் பலராமன், கண்ணன் போன்ற அவதார மூர்த்திகளுக்கும் கோயில்கள் இருந்ததை அறிய முடிகிறது.  மேலும் திருமால், அறம் தாழ்ந்து மறம் ஓங்கி நிற்கும்போது அவ்வப்போது அறம் தழைக்க அவதாரம் எடுக்கும் எளிவந்த இயல்பினையும் இது காட்டுகிறது எனக் கூறலாம்.

 

ஆடலில்

 

இந்திரவிழாவின் இறுதியில் கோவலன் காதற்கிழத்தியாகிய மாதவி என்னும் நாட்டிய நங்கை ஆடிய பதினோராடல்களில் சிவபெருமான் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம் ஆகிய இரண்டும், கிருஷ்ணன் ஆடிய ஓராடலும் சிலப்பதிகாரத்தில் கடலாடுகாதையில் குறிக்கப்பெற்றுள்ளன.  இந்த ஆடல்களை ஆடுமுன் மாதவி மாயோன் பாணியாகிய திருமால் பாடல் ஒன்றினைப் பாடியதாகவும் கூறப்படுகிறது.  சிவபெருமான் ஆடிய ஆடல் குறிப்பு இதோ!

      "பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்

      திரிபுரம் எரியத் தேவர் வேண்ட

      எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப

      இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடல்" (கடலாடு காதை 39-43).

பைரவி ஆடிய சுடுகாட்டில் திரிபுரமாகிய மூன்று கோட்டைகளை எரித்திடுமாறு தேவர்கள் சிவபெருமானை வேண்ட, வடவைப் பெருந்தீயாகிய அம்பு அவன் கட்டளையை நிறைவேற்ற, உமை அம்மை ஒருபக்கமாக நிற்க, தேவர் யாவரிலும் உயர்ந்த சிவபெருமான் ஆடிய கொடுமை மிகு நடனமே கொடுகொட்டியாகும்.  இங்கு மூன்று கோட்டை என்பது உயிர் (ஆன்மா), வீடு பெறத் தடையாக உள்ள ஆணவம், கன்மம், மாயை என்பனவற்றைக் குறிப்பிடுவதாகத் திருமூலர் கூறுவார்.  சிவபெருமான் திரிபுரம் எரித்த கதையே சிவபெருமான் தேர் ஊர்வலமாகும்.  சிவபெருமான் தேரில் வரும்போது நான்கு வேதங்களாகிய குதிரைகளை ஓட்டும் ஓட்டுநராகப் பிரமன் - நான்முகன் காணும்படி சிவபெருமான் ஆடிய ஆடலே பாண்டரங்கமாகும்.  இதனைச் சிலப்பதிகாரம்

      "தேர்முன் நின்ற திசைமுகன் காணப்

      பாரதி ஆடிய வியன் பாண்டரங்கம்" (கடலாடு காதை 44-45)

எனக் குறிப்பிடுகிறது.  பாரதி என்பது பாரதி வடிவாய - சக்தி வடிவாய சிவனைக் குறிப்பிடுகிறது.

 

கிருஷ்ணன் ஆடிய கூத்து அல்லியம் என்பது.  இதனைக்

      "கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக

      அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்

      அல்லியத் தொகுதியும்"     (கடலாடு காதை 47-49).

எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது.  தன் மாமனாகிய கம்சனின் வஞ்சகத்தை வெல்வதற்காக மை நிறத்தானாகிய கண்ணன் ஆடிய ஆடலே அல்லியம் ஆகும்.  கிருஷ்ணாவதார நோக்கமே கம்சனைக் கொல்வதுதானே! எனவே இந்தக் கூத்து கிருஷ்ணன் கம்சன் செய்த பல சூழ்ச்சிகளைப் பற்றிய ஒன்றாக அமைந்திருக்கும்.  எனவே சிலப்பதிகாரம் கிருஷ்ணனின் வெற்றிகளைப் பற்றிப் பேசும் ஆடலைப் போற்றிய மக்கள் இருந்ததைக் கூறுகிறது அல்லவா?

 

மந்திரத்தில்

 

மதுரைக்குச் செல்லும் கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரையும் சந்திக்கும் மாங்காட்டு மறையோன் என்பவன் திருவரங்கத்தில் திருமால் கிடந்த வண்ணத்தையும், திருப்பதியில் நின்ற வண்ணத்தையும் பாரட்டிப் பேசும் பேச்சினையும் சிலப்பதிகாரத்தில் கேட்க முடிகிறது.  அவனே சிவபெருமானின் சூலத்தைப் "பிறைமுடிக்கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலம்" எனக் கூறுவதாகச் சிலப்பதிகாரம் செப்புதலையும் அறிய முடிகிறது.  பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமானை இங்கே காண முடிகிறது.  மேலும் அவன் பேச்சில் "அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்" எனச் சைவ சமயத்தினர் போற்றும் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம் பற்றிய செய்தியும், வைணவ சமயத்தினர் போற்றும் நாராயணாய நம என்னும் எட்டெழுத்து மந்திரம் பற்றிய செய்தியும் இடம் பெறக் காணலாம். 

 

கொற்றவை வடிவில்

 

கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் செல்லும் காட்டு வழியில் வேடர்கள் பாடிய வேட்டுவ வரிப்பாடலில் கொற்றவையைத் தொழுது பாடும்போது சிவன் பற்றிய குறிப்புகள் சில சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன.  கொற்றவையைக் "கண்ணுதல் பாகம் ஆளுடையாள்" (சிவபெருமானின் இடப்பாகத்தினள்) என்றும், "திருமாற்கிளையோள்" (திருமாலின் தங்கை) என்றும், சங்கு சக்கரம் திருமால் ஆயுதம் எனவும், கங்கையை முடிமேல் அணிந்த சிவன் என்றும் குறிப்புகள் உள்ளன.

 

கோயிலில்

 

மதுரை வந்தடைந்த கோவலன் காலைப் பொழுதில் நெற்றிக்கண் கொண்ட சிவபெருமான் கோயிலையும், கருடச் சேவலைக் கொடியாகக் கொண்ட திருமால் கோயிலையும், கலப்பைப் படை ஏந்திய பலதேவன் கோயிலையும், முருகன் கோயிலையும் கண்டு சென்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

 

கோவலன் கண்ணகி கோலத்தில்

 

கோவலன் மாதரி என்னும் இடைக்குல மடந்தையின் அடைக்கலமாகக் கண்ணகியுடன் இருந்தபோது கண்ணகி சமைத்த உணவைக் கோவலன் உண்ணும் காட்சியைக் கண்ட மாதரியும் அவள் மகள் ஐயை என்பவளும் அவர்களை முறையே அதாவது கோவலனைக் கண்ணனாகவும் கண்ணகியை நப்பின்னையாகவும் கண்டதாக இளங்கோ பாடும்போது கிருஷ்ண நப்பின்னையைப் பார்க்க முடிகிறது.

      "ஆயர்பாடியின் அசோதை பெற்றெடுத்த

      பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ

      நல்லமுது உண்ணும் நம்பி ஈங்கும்

      பல்வளைத் தோளியும் பண்டு நம்குலத்துத்

      தொழுனையாற்றினுள் தூமணி வண்ணனை

      விழுமம் தீர்த்த விளக்குக் கொல்லென

      ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி"      (கொலைக்களக் காதை 46 - 52).

ஆயர்களாகிய இடையர்களின் சேரியில் அசோதை என்பாள் பெற்றெடுத்த காயாம்பூ மலர் போன்ற நிறத்தை உடைய கிருஷ்ணன் (கண்ணன்) போன்று கோவலன் காட்சி அளிக்கிறான்.  கண்ணகியோ கிருஷ்ணாவதாரத்தில் காளிந்தியாற்றில் துயரம் நீக்கிய நப்பின்னையைப் போலக் காட்சி அளிக்கிறாள்.  இங்கு கிருஷ்ணன் பற்றிய குறிப்பு நன்கு சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பெறுவதைக் காணலாம்.

 

ஆய்ச்சியர் குரவையில்

 

கோவலன் கொலையுண்டதால் விளைந்த தீநிமித்தங்களைக் கண்ட ஆய்ச்சியர் திருமாலை வேண்டிக் குரவைக் கூத்து ஆடுகின்றனர்.  இப்பகுதியில் கிருஷ்ணனைப் பற்றிய பல செய்திகள் (சிலப்பதிகாரத்தில்) இடம் பெற்றுள்ளன.  ஆய்ச்சியர் குரவை என்பது ஆயர்பாடியில் எருமன்றத்தில் கிருஷ்ணன் தன் தமையன் பலராமனுடன் விளையாடிய பாலசரித நாடகம் ஆகும். 

"கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்" என வஞ்சத்தால் வந்து நின்ற பசுவின் கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு வஞ்சக விளவின் பழத்தை உதிர்த்த கண்ணனின் செயல் இங்கு பேசப்படுகிறது.  குருந்த மரத்தை ஒடித்த கண்ணனின் பெருஞ்செயலும் இங்கு பேசப் படுகிறது. 

      "இறுமென் சாயல் நுடங்க நுடங்கி

      அறுவை ஒளித்தான் வடிவு என்கோயாம்

      அறுவை ஒளித்தான் அயர அயரும்

      நறுமென் சாயல் முகம் என்கோயாம்"

என்று வரும் பாடலில் கோபிகாஸ்திரிகளின் - கன்னியரின் ஆடையை மறைத்து விளையாடிய கண்ணனின் அழகைப் பாடி மகிழும் பெண்களைப் பார்க்க முடிகிறது.

பின்னர் வரும் இரண்டு பாடல்களில் "சூரியனைச் சக்கரத்தால் மறைத்த கடல் நிறத்தவனாகிய கண்ணன் - மயில் கழுத்து போன்ற நிறத்தனாகிய கண்ணன் - தன் அன்ணனாகிய பலதேவனோடும், காதலியாகிய நப்பின்னையோடும் காட்சி அளிப்பதையும், அங்கு நாரதர் வீணை இசைப்பதையும் அசோதை தொழுதேத்துவதையும் குறிப்பிடக் காண்கிறோம்.  பின்னர் மூவேந்தரையும் வாழ்த்திப் பாடும் பாடலில் பாண்டியனைப் பற்றிப் பேசும் பகுதியில் "செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்து ஒசித்தான் என்பரால்" எனப்படுகிறது.  இங்கு வளமிக்க துவாரகை நகரில் பசுக்கூட்டத்தை மேய்த்துக் குருந்த மரத்தை முறித்த கிருஷ்ணனைப் பார்க்க முடிகிறது.

 

அடுத்து வரும் மூன்று பாடல்களிலும் (முன்னிலைத் துதியாக உல்ளன) கிருஷ்ணாவதாரக் குறிப்புகள் உள்ளன.

      வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்

      கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே

      கலக்கியகை யசோதையார் கடைகயிற்றால் கட்டுண்கை

      மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

     

      அறுபொருள் இவனென்றே அமரர்களும் தொழுதேத்த

      உறுபசிஒன்றின்றியே உலகடைய உண்டனையே

      உண்டவாய் களவினால் உறிவெண்ணெய் உண்டவாய்

      வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

 

      திரண்டமரர் தொழுதேத்த திருமால் நின் செங்கமல

      இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே

      நடந்த அடி பஞ்சவர்க்கு தூதாக நடந்த அடி

      மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே (ஆய்ச்சியர் குரவை).

முதற்பாடலில் மந்தரமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பினை கயிற்றாகவும், கொண்டு பாற்கடலின் நடுவிடத்தைக் கலக்கியவன் கடல் நிறத்தவனாகிய கண்ணன் என்றும், அவன் கை அசோதையார் கயிற்றால் கட்டுண்ட கை என்றும், தாமரை மலர் போலும் உந்தியை உடையவன் கண்ணன் என்றும் கூறப்படும் செய்திகள் கண்ணனின் அருமையையும் பெருமையையும் ஒருங்கே உணர்த்துகின்றன.

 

இரண்டாவது பாடலில் வளமிக்க துளசி மாலையணிந்த கண்ணனை விளித்து அறுவகைச் சமயத்தாலும் அறுதியிட்டுத் துணிந்த பொருள் கண்ணனே என்று தேவர்கள் போற்றுவதாகக் கூறி, பசி ஒன்றுமில்லாத சூழலில் ஏழுலகையும் கண்ணன் உண்டதாகவும் பேசி, அவ்வாறு உண்டவாய் உறியிலுள்ள வெண்ணெய் திருடி உண்ட வாயன்றோ என்று வியக்கும் நிலையைக் காண்கிறோம்.

 

மூன்றாம் பாடலில் திருமால் வாமனாவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தி கொடுத்த மூவுலகையும் இரண்டு அடிகளால் அளந்த திருவடிகள் மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்காகத் துரியோதனனிடம் தூது சென்றபோது நடந்த திருவடிகள் அல்லவா? எனக் கூறுகிறது.

இம்மூன்று பாடல்களிலும், கண்ணனின் கை, வாய், அடி ஆகியன செய்த அருமையான செயல்களின் பெருமையும் அதே நேரத்தில் கிருஷ்ணாவதாரத்தில் அவற்றின் எளிவந்த நிலையும் (சௌலப்பியம்) பேசப்படக் காணலாம்.

 

ஆய்ச்சியர் குரவையின் இறுதிப்பகுதியாகிய படர்க்கைப் பரவலில் அதாவது சேய்மை நிலையில் வைத்துப் போற்றும் பாடலின் இறுதிப்பாடலில் கிருஷ்ணாவதாரத்தை இளங்கோவடிகள் மிக உயர்ந்த நிலையில் போற்றுகின்றார்.  அப்பாடல் வருமாறு:

      மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

      கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்

      படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது

      நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே

      நாரயணா என்னா நாவென்ன நாவே

"அறியாமை மிக்க உள்ளம் கொண்ட கம்சனின் வஞ்சகச் செயல்களை வென்றவன் கண்ணன்; நான்கு திசைகளும் போற்றவும் வேதங்கள் முழங்கி வழிபடவும் பாண்டவர்களுக்காகத் துரியோதனன் முதலிய நூறு பேரிடம் தூது சென்றவன் கண்ணன்; இவனைப் போற்றிப் பாடாத நாக்கு பயனற்ற நாக்காகும்.  நாராயணா என்று கூறாத நாக்கு என்ன நாக்கு?" என்று இப்பாடல் கேட்கிறது.  இங்கே கண்ணனின் மறச்செயல் கம்சனை வென்றது.  அறச்செயல் பாரதத்தில் தூது சென்றது.  இவ்விரண்டையும் போற்றிப் புகழும் வண்ணம் "நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?" என்று இளங்கோவடிகள் முடித்திருக்கும் திறன் நீள நினைந்து போற்றுதற்குரிய ஒன்றாகும்.  திருவாய்மொழியில் நம்மாழ்வார்

      "கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்!

      எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே!"

என்று கூறுவதையும் இங்கு ஒப்பு நோக்கி மகிழலாம்.

 

குன்றக் குரவையில்

 

கொலயுண்ட கோவலன் திருச்செங்கோடு என்னும் குன்றத்தில் தேவனாய் மீண்டும் வந்து அங்கு நின்ற கண்ணகியை விமானத்தில் ஏற்றிச் சென்ற காட்சியைக் கண்ட குன்றக்குறவர்கள் குரவை பாடி முருகனை வழிபடுகின்றனர்.  அப்போது முருகனை ஆலமரத்தில் அமர்ந்த சிவபெருமான் மகன் என்றும் கயிலை மலைவாழ் கடவுள் ஆகிய சிவபெருமான் என்றும் கூறுகின்றனர்.  இங்கே சிவபெருமான் "ஆலமர்செல்வன்" என்றும் "கயிலை நன்மலை இறை" என்றும் புகழப்படுகிறான்.  முன்னது தட்சிணாமூர்த்திக் கோலம் பற்றியது.

 

சமரச நோக்கில்

 

இறுதியாகக் கண்ணகிக்கு கல்லெடுக்க இமயம் நோக்கிச் செல்லும் சேரன் செங்குட்டுவன் தமிழரைப் பழித்த கனகவிசயர் மீது படைகொண்டு புறப்படுகிறான்.  அப்போது திருவனந்தபுரமாகிய ஆடகமாடத்தில் பள்ளிகொண்ட திருமாலின் பிரசாதம் (மலர்மாலை முதலியன) கொணர்ந்து சேரன் செங்குட்டுவன் முன் சிலர் நிற்கின்றனர்.  கங்கையைச் சடையில் அணிந்த செஞ்சடைக் கடவுளாகிய சிவபெருமானின் சேவடிப்பிரசாதத்தைச் செங்குட்டுவன் தன் தலையில் வைத்திருந்ததால் திருமாலின் மாலையை வாங்கித் தன் மார்பில் தாங்கிக் கொண்டான்.  இவ்வாறு இளங்கோவடிகள் கால்கோட்காதையில் குறிப்பிடுகிறார்.  சிவபெருமானின் மாலை சேரன் செங்குட்டுவன் தலையிலும், திருமாலின் மாலை அவன் மார்பிலும் அணியப்பட்ட காட்சி நாம் கடைப்பிடிக்க வேண்டிய சைவ வைணவ சமரச நோக்கினைப் புலப்படுத்துகிறது அல்லவா?  தலையில் மூளை இருந்து அறிவாட்சி செய்கிறது.  மார்பில் இதயம் இருந்து உணர்வாட்சி செலுத்துகிறது.  மூளையும் இதயமும் போன்றவை அன்றோ சைவமும் வைணவமும்!

 

முடிவுரை

இவ்வாறு சிலப்பதிகாரம் சிவனையும் கிருஷ்ணனாகிய கண்ணனையும் தனித்தும் இணைத்தும் பேசும் செய்திகளை இக்கட்டுரையில் கண்டோம்.  சிவன் பிறவாயாக்கைப் பெரியோன். எனவே கடவுளின் அருமை - அனைத்தும் கடந்த நிலை உணர்த்தப்படுகிறது.  கிருஷ்ணன் திருமாலின் அவதார நிலை.  எல்லார்க்கும் இறங்கி வந்து எளிவந்த நிலை.  உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவனாக இருக்கும் இறைவன் பக்தர்களுக்காகத் தூது செல்வதும் திருவிளையாடல்கள் புரிவதும் அவனது எளிமையைக் காட்டுகின்றன.  அருமையில் எளிமையும் எளிமையில் அருமையும் கொண்டதே சிவகிருஷ்ணர் வழிபாடு என்பதைச் சிலப்பதிகாரம் நமக்கு உணர்த்தும் செய்தியாகக் கொல்ளலாம்..

 
...... முற்றும் ......
Dr S.P.Thinnappan