திங்கள், 16 ஜூன், 2014

சமயம் - விழிக்குத் துணை


விழிக்குத் துணை

 

பேராசிரியர் டாக்டர் சுப.  திண்ணப்பன், சிங்கப்பூர்.

 

விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மைகுன்றா

மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்; முன்புசெய்த

பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி

வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே (கந்தரலங்காரம் 70).

 

விழி, கண் என்பன ஒரு பொருளுணர்த்தும் இரு சொற்கள்.  நெற்றிக் கண் கொண்ட சிவபெருமானை 'நுதல்விழி நாட்டத்து இறையோன்' என நூல்கள் கூறும்.  பின் வரும் நீதி வெண்பாவும்,

 

"கண் இரண்டே யாவர்க்கும்; கற்றோர்க்கு மூன்று விழி

எண்ணும் விழி ஏழு ஆகும், ஈவோர்க்கு - நண்ணும்

ந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு

ந்தம் விழி என்று அறி"

 

அதனை வலியுறுத்தும்.

 

"பொதுவாக மனிதருக்குக் கண் என்பன இரண்டே; கற்றவர்க்கோ அறிவுக்கண் ஒன்றுடன் மூன்றாகும்.  கொடை கொடுப்போர்க்கு 'நகக்கண்' ஐந்துடன் ஏழாகும்.  அருள் ஞானம் பெற்றோர்க்கு எல்லாப் பொருளும் எவ்விடமும் கண்களாகும்."  இதுவே மேற்கண்ட பாடலின் கருத்தாகும்.  இதில் ஞானம் என்பது ஒளி மயமானது.  ஞான சக்தியே வேல்.  அதுவே முருகன்.  அவன் திருவடிகளே விழிக்குத் துணை.  இதனை விளக்க முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளில் நடு நாயகமாக விளங்குவது கண் ஆகும்.  வண்ணத்தையும் வடிவத்தையும் கண்டறியும் ஆற்றல் கண்ணுக்கு உண்டு.  முருகனின் தாமரை புரையும் காமறு சேவடியையும், பவழத் தன்ன மேனியையும் காணும் பாக்கியம் கண்ணுக்குத் தானே உண்டு.  வேதான் அருணகிரியார்,

 

மாலோன் மருகனை, மன்றாடி மைந்தனை, வானவர்க்கு

மேலான தேவனை, மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்

சேலார் வயல் பொழில் செங்கோடனைச் சென்று கண்டு தொழ

நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே.  (-அலங்: பா 70).

 

என்னும் கந்தரலங்காரப் பாடலில் வருந்திக் கூறுகிறார்.

 

கந்த புராணத்தில் சூரன் முருகனைக் கண்டு

 

ஆயிரம் கோடி காமர் அழகெலாம் திரண்டு ஒன்றாகி

மேயின எனினும் செவ்வேள் விமலமாம் சரணம் தன்னில்

 தூய நல் எழிலுக்கு ஆற்றாது என்றிடின், இனைய தொல்லோன்

மாயிரு வழவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்?”

 

என்று வியந்து நிற்கிறான் என்றால் பகைவனும் பாராட்டும் முருகப் பெருமானின் பாத அழகைக் காணக் கண்கோடி வேண்டுமல்லவா? இத்தகைய பாதம் விழிக்குத் துணையாகும் போது விளையும் பயன்களை எண்ணித்தான் பார்க்க முடியுமா?

 

விழி பேசினால் மொழிக்கு வேலை இல்லை.  இதனைத்தான் திருவள்ளுவர்,

 

"கண்ணொடு கண்ணிணை நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள்

என்ன பயனும் இல" (திருக்குறள் 1100),

 

என்று கூறுகிறார்

.  விழிக்குத் துணையாகும் முருகன் திருவடிகளைக் கண்டவர் விண்டிர்; விண்டவர் கண்டிலர் என்னும் வாக்கு இதனால்தான் எழுந்தது என எண்ணத் தோன்றுகிறது.

 

எண்ணத்தை எடுத்துரைக்கும் ஆற்றலும் கண்ணுக்கு இருக்கிறது.  எனவேதான் திருவள்ளுவர்,

 

"பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் ... " (திருக்குறள் 709),

 

என்றும்,

 

"நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் ... கண் அல்லது இல்லை பிற" (திருக்குறள் 710),

 

என்றும் கூறுகிறார்.  விழிக்குத் துணையாக வேலவனின் திருவடிகள் இருக்கும்போது நம் எண்ணங்களும் நல் எண்ணங்களாக அமையும் அன்றோ?

 

கண்ணின் பெருமையை விளக்கும் வகையில் 'குறிப்பறிதல்' என்னும் பெயரில் பொருட்பாலில் ஓரதிகாரமும், காமத்துப்பாலில் ஓரதிகாரமும் வைத்துத் திருவள்ளுவர் குறுகத் தரிக்கும் குறளில் குறிப்பிடுகிறார்.  விழிக்குத் துணையாய் முருகன் திருவடிகள் நாம் இவ்வுலகில் குறிப்பறிந்து வாழ வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

 

முகக் கண்ணைப் பாராட்டும் திருவள்ளுவரே,

 

 

"கண்ணுடைர் என்போர் கற்றோர்; முகத்திரண்டு

புண்ணுடையவர் கல்லாதவர்" (திருக்குறள் 393),

 

என்றும்,

 

"பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண் என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்" (திருக்குறள் 144),

 

என்றும் உண்மைக் கண் எது என்பதையும் எடுத்துரைக்கிறார்.

 

ஞானக்கண் (கல்விக் கண்), இரக்கக் கண் (அன்புக் கண்) இவை இரண்டும் முகக் கண்ணினும் சிறந்தவை என்பதே திருவள்ளுவர் கருத்தாகும்.  கல்விக் கண் பெற்றவர்களே,

 

"கற்றதனால் ஆய பயன் வாலறிவன் நற்றாள் தொழுவதே" (திருக்குறள் 2), என உணர்வர்.  விழிக்குத் துணையாகும் நிலையில் முருகப் பெருமான் நமக்கு அறிவும் ஞானமும் நல்குவான் என்று நாம் நம்பலாம்.

 

"ஞானம் என்பதே ஈசன் பால் அன்பே என்றனர் ஞான முண்டார்"

 

என்பது சேக்கிழார் வாக்கு.  வே விழிக்குத் துணையாகும் வேலனின் திருவடி - கருணையே வடிவமான அவன் கழல்கள் - நமக்கு அறிவையும் அன்பையும் நல்கி நல்வாழ்க்கை வாழ வைக்கும்.

 

விழிக்கு இறைவன் துணையாக இருக்கும்போது நமக்கு என்ன என்ன கிடைக்கும் என அபிராமிபட்டர் பட்டியல் இடுகிறார்:

 

"தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா

 மனம் தரும்;தெய்வ வடிவும் தரும்; நெஞ்சில் வஞ்சம் இல்லா

 இனம் தரும்;நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே".

 

அபிராமி மைந்தனாகிய முருகப்பெருமான் திருவடிகளும் நமக்கு - நம் விழிக்குத் துணையாக இருந்து இவை எல்லாம் தந்து நல்வழி காட்டி நிற்கும்.

 

"முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்"

 

என்பார் திருமூலர்.  அகத்தில் கண்கொண்டு பார்க்கும்போது தன் உயிருக்கு உயிராய் உள் நின்று உலவும் முருகப்பெருமான் அருளார் அமுதத்தை வாரி வழங்குவான்.  அக விழிக்குத் துணையாகும் அவன் திருவடி இன்பம் தரும் இன்பம் பேரின்பமே!

 

 

 

"கண்ணே, கண்ணின் கருமணியே, மணியாடு பாவாய்" என்று கடவுளை அழைத்துக் 'காவாய்' என்று வேண்டுகிறார் நாவுக்கரசர்.  கடவுள்தான் நமக்குக் கண்ணாக இருந்து நமக்குப் பலவற்றைக் காட்டுவிக்கின்றான்.  எனவேதான் அருணகிரியார் விழிக்குத் துணை பாதங்கள் என்று விளம்புகிறார்.

 

கண்ணின் பயனே கடவுளைக் காண்பதுதான் என்பதை இளங்கோ அடிகளும் சிலப்பதிகாரத்தில்,

 

கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே

கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே"

 

என்று கூறுவர்.  முருகப் பெருமான் திருவடியைக் காண்பதே பெரும்பேறு எனக் கருதவேண்டும்.

 

"திருவும் மெய்ப் பொருளும் செல்வமும் எனக்கு உன்

சீருடைக் கழல்கள் என்று எண்ணி

ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும்

ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்"

 

என்று சுந்தரர் பாடுவதற்கேற்ப முருகப்பெருமானின் திருமென் மலர்ப் பாதங்கள் நம் விழிக்குத் துணையாகும்போது நாமும் சுந்தரர்போல் உறைப்பனாய்த் திரியலாம்.

 

காணும் ஆற்றல் கண்ணுக்கு இருந்தாலும் இருளில் உள்ள பொருளைக் கண்ணால் காண முடியாது.  காண்பதற்கு வேறு ஓர் ஒளி வேண்டும்.  சூரியன், சந்திரன், தீ மூன்றுமே அந்த ஒளியைத் தருவன.  சூரியன் பகலில் ஒளி தருகிறான்.  சந்திரன் இருட்டில் ஒளி தருகிறான்.  இரண்டும் இல்லாத நிலையில் தீ ஒளி தருகிறது.  இவை மூன்றையும் தன் கண்களாகக் கொண்டுள்ள இறைவன் - முருகன் - விழிக்குத் துணையாக இருந்து உதவுகின்றான் என்பதே உண்மையாகும்.

 

கண்ணால்தான் பொருள்களைக் காண்பதாக நாம் கருதுகிறோம்.  கண் என்பதோ சதைத் திரளால் ஆன சடப் பொருள்.  சடப்பொருளுக்குக் கண்டறியும் ஆற்றல் இல்லை.  கண்ணைக் கருவியாகக் கொண்டு உள்ளே இருக்கும் உயிரே அனைத்தையும் அறிகிறது.  கண் காண்பதற்கு வேறு ஓர் ஒளி தேவைப்படுவதுபோல உயிருக்கும் இறைவனது திருவருள் என்னும் அறிவு தேவைப்படுகிறது.  அந்நிலையில்தான் உயிர் எதையும் அறியவும் உணரவும் முடியும்.  உயிரின் அறிவில் கலந்து உயிர் காணும் பொருளை அதற்கு இறைவன் காட்டுவதால் இது அவன் உயிருக்குக் காட்டும் உபகாரம் என்று சித்தாந்த நூல்கள் கூறும்.  கண்ணோடு ஓளி கலப்பது போல உயிரோடு இறைவன் கலந்து நிற்கும் நிலையை ஒன்றாய் இருத்தல் என்றும் அவை விளக்கும்.  முழு இருளில் நாம் தேடும் பொருள் மீது ஒளிபட்டால்தான் நாம் காணமுடியும்.  அப்போது கண்ணோடு கலந்த ஒளியும் உடன்சென்று பொருளைக் காண்கிறது.  இதைப் போலவே உயிர் ஒரு பொருளைக் காணும்போது இறைவன் திருவருளும் உடன் சென்று உயிர் காணும் பொருளைத் தானும் காண்கிறது.  இதுவே இறைவனின் காணும் உபகாரம் என்று சைவ சித்தாந்த நூல்கள் சாற்றும்.  இவ்வாறு கடவுளின் காட்டும் உதவியும் காணும் உதவியும் இல்லாமல் உயிர் தானே அறிய முடியாது.  முடியுமானால் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும்.  ஆணவம் தடையாக இருந்து உயிர் மெல்ல மெல்ல அறிய வழி வகுக்கிறது.  இந்தத் தடையை அகற்றவே இறைவனின் காணும் உபகாரமும் காட்டும் உபகாரமும் உதவுகின்றன.  இந்த வகையில்தான் இறைவனின் திருவருளாகிய திருவடிகள் - முருகப் பெருமானின் திருமென்மலர்ப் பாதங்கள் - நமக்கு விழித்துணையாக இருந்து உதவுகின்றன. 

 

"அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்

இவன் இறைவன் என எழுதிக் காட்டொணாதே"

 

என்பது நாவுக்கரசர் வாக்காகும்.  "காண்பார் ஆர் அவர் காட்டாக்காலை" என்பதும் அவர் கேட்கும் கேள்வியாகும்.

 

விழிக்குத் துணையாகும் பாதத்தை விளக்க அருணகிரியார் மூன்று அடைமொழிகளைப் பயன்படுத்தியுள்ளார்.  அவை திரு, மென், மலர் என்பன.  திருமென் மலர்ப் பாதம் என்னும் தொடரில் மலர் என்பது பொதுவாய்ப் பூவினைக் குறித்தாலும், சிறப்பாகத் தாமரையையே குறிக்கும்.  'பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை' அல்லவா? அருணகிரியார் முருகன் திருவடியை 'புண்டரீகம்' (42), அம்புயம் (42), காவிக் கமலக் கழல் (92) என்றும் கந்தரலங்காரத்தில் குறிப்பிடுகிறார்.  மேலும் 'புண்டரீகத்தினும் செக்கச் சிவந்த கழல்' (31) என்றும், தாமரையைவிடச் கிவந்த திருவடி என்று அவர் விளக்கம் தருவதையும் காணலாம்.  மென்மைக்கு மலரை எடுத்துக்காட்டுவது மரபு என்பதற்கு 'மலரினும் மெல்லிது காமம்' என்னும் திருக்குறள் (1289) சான்றாகும்.

 

திரு என்பது தெய்வத் தன்மை, அழகு, அருட்செல்வம் முதலிய பல பொருள்கள் உண்டு.  அத்தனையும் திருவடிக்கு அடையாக அமையப் பொருத்தமுடையன.  "சென்றடையாத திருவுடையவன்" இவனல்லவா?

 

உடலைவிட்டு உயிர் பிரியும்போது, "துணை இரு தாளன்றி வேறில்லையே" (44) என்றும் கூறிப் "பெறுதற்கரிய பிறவியைப் பெற்று நின் சிற்றடியைக் குறுகப் பணிந்து பெறக் கற்றிலேனே" (68) என்று ஏங்குகிறார்.  "அவன் கால்பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே" (40) என்று அவர் கூறுவதால், தலைவிதியையும் மாற்றும் தன்மை முருகன் திருவடிக்கு உண்டு என அறிகிறோம்.  அதுதானே விழித்துணை.  பிறவாப் பெருங்கடலைத் தாண்டி வீடுபேறு தரும் பெற்றியது அவன் திருவடி என்பதைப்,

 

"பொக்கக் குடிலிற் புகுதாவகை புண்டரீகத்தினும்

செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் ... காவலனே" (31)

 

என்னும் அடிகளால் உணர்கிறோம்.  திருமூலர்,

 

"திருவடியே சிவமாவது தேரில்

திருவடியே சிவலோகம் சிந்தித்தில்

திருவடியே செல்கதியது செப்பில்

திருவடியே தஞ்சமும் தெளிவார்க்கே" (138)

 

என்று கூறும் திருமந்திரமும் இறைவன் திருவடிப் பெருமையைப் பேசுகிறது.

 

"தொண்டர் கண்டு அண்டி மொண்டு உண்டு இருக்கும் சுத்த ஞானம் எனும்

தண்டையம் புண்டரீகம் தருவாய் ... " (92)

 

என்று அருணகிரியார் முருகனிடம் வேண்டும் பாடல் அடிகள் "அடியார்களாகிய வண்டுகள் பார்த்து நெருங்கி முகந்து பருகி இருக்கிற பரிசுத்த மெய்ஞ் ஞானமாகிய தேனை உடைய (தண்டை அணிந்த) தாமரை திருவடி" என அழகாக விளக்கம் தருகின்றது.  அவர் ஞானமே திருவடி என்பதை "ஞானபாத பத்மம்" எனத் திருப்புகழிலும் பேசுவார்.  இத்தகைய திருவடி எங்கே உள்ளது என்பதைப் பின்வரும் கந்தரலங்காரம் பேசுகிறது.

 

"தாவடி ஓட்டும் மயிலிலும், தேவர் தலையிலும்,

என் பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ ... சிற்றடி" (15).

 

வாகனமாகிய மயில்மீதும், வணங்கும் தேவர் தலைமீதும், அருணகிரியாரின் அரிய தமிழ்ப் பாட்டுகள் தாங்கிய ஏட்டின் மீதும் இருக்கும் திருவடி என்பதே இதன் கருத்து.

 

பறக்கும் மயிலைப் பிடிக்க நம்மால் முடியாது, தேவரைத் தீண்ட இயலாது; ஆனால் அருணகிரியாரின் பாடலைப் படிக்க நம்மால் முடியும்.  எனவே படித்து, முருகன் காலைப் பிடிப்போம்; இறுதிவரை 'திருவடி' உடனிருந்து நமக்கு உறுதி பயக்கும்.  எனவே,

 

"விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்களே"

 

என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

*-*-*

..... முற்றும் ....

Dr S.P. Thinnappan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக