புதன், 11 ஜனவரி, 2017

உத்தமர் இலீகுவான்யூ பெருங்காப்பியம்

                  புலவர் பொன்னையன்
             உத்தமர் இலீகுவான்யூ பெருங்காப்பியம்
                    அக்டோபர் 2016

      9, ஆகஸ்ட் 2016, சிங்கப்பூர்க் குடியரசின் 51ஆவது தேசிய நாள், முதல் நாளும் அன்றும் புலவர் அ.பொன்னையன் இயற்றிய 'உத்தமர் இலீ குவான் இயூ' என்னும் வரலாற்றுப் பாவியத்தை பெருங்காப்பியத்தை- இடையறாது படித்து முடித்தேன். சிங்கப்பூரைச் செழிப்புடைய நகரமாக ஆக்கிய சிற்பி லீ குவான் யூ அவர்களின் நினைவாக இரண்டு நாள்களும் இருந்தது எனக்கு மனநிறைவை அளித்தது.
                சிங்கப்பூரை ஆங்கில ஆட்சியிலிருந்து அகற்றிச் சுதந்திர நாடாக ஆக்கிய முன்னோடிகளில் ஒருவர் லீ குவான் யூ. பிறகு 1965 இல் சிங்கப்பூரைக் குடியரசு நாடாக மாற்றித் தம் ஆற்றலாலும் அறிவாலும் தொலைநோக்குப் பார்வையாலும் முதல் பிரதமராகப் பணீயாற்றிச் செல்வச் செழிப்புமிக்க நாடாக உருவாக்கிய பெருமைக்கு உரியவர். சீனர், மலாயர், இந்தியர் மற்றும் ஏனையோர் என நான்கு இன மக்களுக்கும் உரிய நாடு சிங்கப்பூர் என அறைகூவி நான்கு இன மக்களையும் ஒரு நிகராக நடமாடச் செய்தவர். அனைத்துலக உறவுக்கும் அறிவியல் அறிவுக்கும் வணிக மேம்பாட்டுக்கும் ஆங்கிலம் என்றும், அறநெறி, பண்பாடு, அடிவேர் அறிதல், கலாசாரம், கலைகள் ஆகியவற்றிற்குத் தாய்மொழி என்றும் இருமொழிக் கொள்கையை வகுத்துத் தந்த பெருமகனார் லீ. ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகளையும் அதிகாரத்துவ மொழிகளாக்கி அழகு பார்த்தவர் அவர். இதனால் நம் தாய்மொழியாம் தமிழ் மண்ணிலும் விண்ணிலும் ஒலிக்க வழி வகுத்தவர். மூன்றாம் தர நாடாக இருந்த சிங்கப்பூரை முதல் தர நாடாக மாற்றிய மூலவர் லீ. தூங்காமை, கல்வி, துணிவு மிக்கவராய் வாழ்வில் தூயவராய் இருந்தவர் லீ. உலக அறிஞர்கள் பலர் புகழத்தக்க மதிநுட்பம் உடையவர். "கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு" (குறள் 631) என்னும் இலக்கணத்திற்கேற்ப அமைந்து, வன்கண் (மனம்தளராமை), குடிமக்களைக் காத்தல், கற்றல், அறிதல், ஆள்வினை ஆகிய பண்புகளுடன் திகழ்ந்து 31 ஆண்டுகள் தலைமை அமைச்சராய் இருந்து தன்னிகரில்லா வழிகாட்டிய ஒளி விளக்காக ஒளிர்ந்தவர். சிங்கப்பூரின் மேம்பாட்டினையே சிந்தினையாகக் கொண்டு தம் வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்து காட்டியவர் லீ குவான் யூ. "உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்” (294) என்பதற்கேற்ப அவர் மறைந்த பொழுது சிங்கப்பூர் மக்கள் மட்டுமன்றி உலகத் தலைவர்கள் பலரும் வருந்தி நின்றனர், பொழியும் மழையையும் பாராது வழி அனுப்பிக் கண்ணீர் வடித்தனர் இத்தகைய ஒருவரின்- தன்னேரில்லாத் தலைவரின்- வரலாற்றைக் கூறும் பெரும்காப்பியம் தான் புலவர் பொன்னையன் எழுதிய ' உத்தமர் இலீகுவான் இயூ' என்னும் இந்தப் பாவியம். பெருங்காப்பியத்திற்கு உரிய இலக்கணமே. தன்னேரில்லாத தலைவனைக் கொண்டு இருப்பதுதானே.
    பெருங்காப்பியம் என்பது அறம்பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள் பயக்கும் நடைநெறி கொண்டதாக இருக்க வேண்டும் என்று பேசும் தண்டியலங்காரம். சிங்கப்பூரில் அறநெறி ஒழுக்கங்களை மக்கள் கடைப்பிடிக்குமாறு செய்ததோடு, தாமும் அவ்வழி நின்று, மக்களின் பொருளாதாரம் வளம் பெருக ஆவன அனைத்தையும் செய்து, துன்பம் துடைத்து மக்கள் அனைவரும் இன்பமுடன்  வாழ வழி செய்யும் திட்டங்களை வகுத்துச் செயலாக்கிய பெருந்தகை லீயின் வரலாற்றில் அறம் பொருள் இன்பம் அமைந்துள்ளதை இக்காப்பியம் நன்கு படம் பிடித்துக்காட்டுகிறது. மேலும் இவ்வுலக வாழ்வை நீத்து வீடுபேறு (மோட்சம்) பெறும் செய்தியை நாம் அறியோம் எனினும் சிங்கப்பூர் மக்கள் அனைவரும் வசிப்பதறகேற்ற அடுக்குமாடி வீடுகள், அழகிய இல்லங்கள் பெறுவதற்கு வீடமைப்பு வளர்ச்சி வாரியம் என ஒன்றை அமைத்து உலகமே வியக்கும் வகையில் உன்னத முறையில் உருவாக்கிக் கொடுத்த பெருந்தகை லீ வரலாற்றில் வீடு இடம் பெறாமல் இருக்க இயலுமா என்ன? அதனையும் நூலாசிரியர் பேசியுள்ளார்.         
    நூலாசிரியர் பொன்னையன் வள்ளலார் இராமலிங்க அடிகளாரிடம் அளவுகடந்த பக்தி செலுத்துபவர். அவரையே தெய்வமாக வணங்கும் பெற்றியர். எனவே அவர் அருளை வேண்டி நூலைத் தொடங்குகிறார்.
அந்தப் பாட்டு வருமாறு.:         
     “ அருள் அளித்தே அனைத்துலகும் ஆளுகின்ற அரசே!
         ஆதரித்தே அனைவருக்கும் அருங்கல்வி வேலை
     பொருள் அளித்தே அடுக்ககங்கள் புகுந்திருக்க வழங்கி
          பொருந்தியற்கை மெய்யறிவின் இன்பமதும் உலகில்
      உருளவைத்தே இந்திரன்போல் வாழ்ந்திருந்து மக்கள்
           உளம்வாழும் உத்தமாய் இலீகுவான்யூ வாழ்வைத்
       தெருள் அளிக்கும் பாவியமாய்த் தேர்ந்தறிந்து பாடச்
           செந்தமிழை உளமிருத்தித் தெரிந்தருள்க எனக்கே”
இப்பாடலின் விரிவுரைதான் இந்தப் பெருங்காப்பியம் எனச் சுருக்கமாக உரைக்கலாம் நூலின் முடிவிலும் "வள்ளற்பெருமான் திருவாய் மலர்ந்திருக்கும் வண்ணம் செய்தவர்" என்னும் தலைப்பிட்டுத் திருவருட்பாவிலிருந்து 10 பாடல்களைச் சான்றுகாட்டி லீயின் செயல்களை - சாதனைகளை விளக்கி இருப்பது அருமையிலும் அருமை. முதலும் முடிவும் மட்டுமின்றி நூலின் இடையிடையே உள்ள பகுதிகளிலும் வள்ளற் பெருமானின் சொல்லாட்சி, பொருளாட்சி, கருத்தாட்சி நிலவுவதையும் படிப்போர் கண்டு மகிழலாம். வாழ்த்து, வணக்கம், வருபொருள் உரைத்தல் ஆகிய மூன்றையும் ஒன்றாக இந்நூலின் முதற்பாடலே காட்டி இருப்பதும் போற்றத்தக்கது.
      அவையடக்கப் பாடலில் வானினை வில்லாய் வளைத்திடப் புகுதல், மணலினைக் கயிறாகத் திரித்தல், கூனை நிமிர்த்தல், கொம்புத்தேன் உண்டிட முடவன் ஆசைப்படல் ஆகிய உவமைகளைக் கூறி லீயின் பேராற்றலைப் பேசும் முயற்சியை விளக்க முயல்கிறார் ஆசிரியர். இந்தூலுக்கு "உத்தமர் இலீ குவன் இயூ" எனப் பெயரிட்டதற்குரிய காரணத்தையும் இங்கே குறிப்பிடுகிறார் சிங்கையைச் செழிப்புறு நாடக்கிய செயற்கரும் செயல் செய்தவர் லீ என்பதாலும், சொல்லும் செயலும் பலர்க்கும் பயன்பாடுமாறு வாழ்ந்து காட்டியதாலும், உழைப்பின் உயர்வை உலகுக்கு உணர்த்தியதாலும் இந்நூலுக்கு உத்தமர் இலீ குவான் இயூ எனப் பெயரிட்டதாக விளக்குகிறார் ஆசிரியர்."உத்தமனாய் இரு" என்று இளங்குழந்தைகளுக்கு உரைத்தார் ஒளவையார், (ஆத்திசூடி) நற்குணங்களின் உறைவிடமாக இருப்பது தான் உத்தமர்க்குரிய இலக்கணம். இவ்வாறு இருந்தவர் லீ. மேலும் 'ஒருமையுடன் நினதடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்' என வள்ளற்பெருமான் முருகனை வேண்டுகின்றார். உத்தமர் ஒருமையுடன் இறையடி நினைப்பார்கள். அதுபோல லீ குவான் யூவும் தம் வாழ்நாள் முழுதும் எப்போதும் சிங்கையின் வாழ்வையே, நலத்தையே ஒருமையுடன் நினைத்து வாழ்ந்தவர். எனவே அவரை உத்தமர் என அழைப்பதும் பொருத்தம் தானே!
      நாட்டு வளம் கூறும் பகுதியில் சிங்கப்பூர்ப் பெயர்ச் சிறப்பை விளக்க நரசிம்ம அவதாரம் பேசும் கதையைக் கூறி(தொன்மம்), நிலவளத்தில், ஐந்திணை இயல்பை வருணித்து, மொழிவளம் பேசும் பகுதியில் தமிழ்வளம் கூறும் தன்மையும் பாராட்டத்தக்கது. கற்பனை நயமிக்க வருணனையோடு கூடிய கவிதைகள் இங்கே உள்ளன.
      லீ குவான் யூவின் பிறப்பு முதல் இறப்பு வரை (1923-2015) உள்ள நிகழ்ச்சிகளை ஆறு காண்டங்களாகப் பகுத்து ஒவ்வொரு காண்டத்திலும் காதைகள் என்னும் உட்பிரிவுகளைக் கொண்டு நூலாசிரியர் லீ வாழ்க்கை வரலாற்றை விளக்க முற்படுகிறார் ஆசிரியர். இப்பகுப்பு முறையைச் செந்தமிழ்க் காப்பியமாம் சிலப்பதிகார அமைப்பைப் பின்பற்றிச் செய்துள்ளார். முதல் காண்டம் கதிரெழு காண்டம். இப்பகுதியில் கருவுரு காதை முதல் கதிர்தோன்று காதை வரையில் எட்டுக் காதைகள் உள்ளன. இங்கே லீ கருவுருப்பெற்றது தொடங்கி வாழ்த்துப் பெற்றதும், தாலாட்டுப் பாடல் கேட்டதும், பல விளையாட்டுகள் விளையாடியதும், இயற்கை இன்பம் துய்த்ததும் பேசப்படுகின்றன. சீனக்குழந்தை லீ செந்தமிழ்க் குழந்தையாய் மாறித் தாலாட்டுக் கேட்பதும், சடுகுடு, மணல் வீடு கட்டி விளையாடுவதும் செய்வதை இப்பகுதியில் பார்க்க முடிகிறது.
“கீச்கீச் சென்று கிளிவந்து பேசும்
காச்மூச் சென்று குருவிகள் இரையும்
இச்இச் என்றுஒலி எழுப்பிடும் பல்லி
குச்குச் சென்றே அவற்றின் குரல்கள்
தங்கக் குழந்தையைத் தாம் வாழ்த்தினவோ
மங்கலமாகவே மதித்துப் போற்றினர்
என்னும் அடிகளில் கவிநயம், இரட்டைக்கிளவி அமைந்த சொல்நயம் மிளிரக்  காணலாம்.
      இரண்டாம் காண்டம் கலைபயில் காண்டம். இப்பகுதியில் 12 காதைகள் உள்ளன. லீ, பள்ளிக் கல்வி தொடங்கிப் பல்கலைக் கழகக் கல்வி வரை பயின்ற செய்திகள் இடம்பெற்றுள்ளன. இலண்டனில் பயில்கையில் குவாக் குவான் சூவைக் காதலித்து உளங்கலந்து களவுமணம் செய்துகொண்ட செய்திகளும் சிறப்பாகக் கவிதையாக்கம் பெற்றுள்ளன. நன்மணம் புணர்தலும் பெருங் காப்பியத்திற்குச் சுவைகூட்டும் கூறுகளில் ஒன்றல்லவா? 1942 சப்பானியர் ஆட்சியின்போது லீ மயிர் இழையில் உயிர்தப்பிய செய்தியும் உள்ளது. கல்வியில் லீ காட்டிய ஆர்வம், உழைபபு, முயற்சி நுட்பம் தேர்தல் முதலியவற்றையும் ஆங்கிலமொழியில் லீ பெற்ற பேச்சாற்றல், எழுத்தாற்றல் திறன்பற்றியும் ஆசிரியர் பேசியுள்ளார்.
      மூன்றாம் காண்டம் அரசியல் காண்டம் லீ இலண்டனில் கல்விமுடித்து சிங்கை வந்து இல்லறம் இனிது நடத்தி, நன்மக்களைப் பெற்று, மக்கள் செயல்கட்சி கண்டு, தேர்தலில் வென்று, ஆட்சி நடத்தி, விடுதலை கண்ட செய்திகள் 16 காதைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
      நான்காவது காண்டம் அருஞ்செயற் காண்டம் அருஞ்செயல் செயத காண்டம். இது 18 காதைகள் கொண்டுள்ளது. லீ சிங்கை நாட்டிற்கும் செயத அரிய பணிகள் - கட்டமைப்பு உருவாக்கம், அயலவர் தொழில் செய்ய அழைத்தது, தமிழன்னை அரியணை ஏறச் செய்தது, சமய, இன, மொழி நல்லிணக்கம், பெண்கள் சமத்துவம், வேலை வாய்ப்புப் பெருக்கம், தூய்மைப் பணி, துறைமுகப் பெருக்கம், சாங்கி விமான நிலையம் உருவாக்கம், பல்வேறு அடுக்கு வீடுகள் அமைப்பு, கடலைத் தூர்த்து நாட்டுருவாக்கம் முதலியன கவிதைகளாகக் காட்சி அளித்து  லீயின் மாட்சி பேசுகின்றன.
      ஐந்தாவது காண்டம் ஒய்வுகொள் காண்டம். இங்கு 17 காதைகள் உள்ளன. 31 ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றி மன நிறைவு பெற்றுத் தமக்குப் பின்வந்தவர்களுக்குத் தம் பதவியை அளித்து அவர்களுக்கு தக்க ஆலோசனை வழங்கியதோடு உலக நாடுகள் பலவற்றிற்குச் சென்று தம் அறிவு அனுபவம் ஆற்றல் ஆகியவற்றையும் பகிர்ந்து கொண்ட திறன்கள் இப்பகுதில் இடம் பெற்றுள்ளன. இறுதியில் துணைவியார் நோயுற்ற நிலையும் கூறப்படுகிறது.
      உலகில் உள்ள  அரசியல்வாதிகள் பலர் தாம் வகித்த பிரதமர் பதவியைப் பிறர்க்கு விட்டுக்கொடுக்கவே தயங்கும் நிலையே இயல்பாக உள்ளது. இச்சூழலில் எவ்வித வற்புறுத்தல் இல்லாதபோதும் நாட்டு நலன் கருதி லீ தாம் வகித்த பிரதமர் பதவியிலிருந்து விலகித் தமக்குக் கீழ்ப் பணீயாற்றியவர்களைப் பிரதமராக்கினார். அதனோடு மட்டுமா? தேசிய நாள் போன்ற பொதுநிகழ்ச்சிகளில் அவர்கள் தமக்குக் கீழ்ப் பணீயாற்றியவர்கள் எனக் கருதாது அவர்களுக்கு  எழுந்துநின்று மரியாதை செலுத்துவதும் லீயின் பண்பாக இருந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
      ஆறாவது காண்டம் விடைபெறு காண்டம் 18 காதைகளில் லீ குவான் இயூவின் துணைவியார் மறைந்த செய்தி தொடங்கி, லீ நோய்வாய்ப்பட்டு 23-3-2015 இறந்த செய்தியை இடையில் கூறி, அவர்க்குச் சிங்கை மக்கள் இறுதி மரியாதை செய்து கண்ணீர்ஞ்சலி செலுத்தி வழி அனுப்பியதை அவலச் சுவை ததும்ப இறுதியில் கூறி வாழ்த்துரையுடன் ஆசிரியர் இக்காப்பியத்தை நிறைவு செய்துள்ளார். இதுவே இக்காப்பியத்தின் உள்ளடக்கம்.
      காப்பியத்தின் உருவம் பற்றிக் காண்போம் ஆறு காண்டங்கள் 88 காதைகள் கொண்ட பெருங்காப்பியம் கிட்டத்தட்ட ஆயிரம் பாடல்கள் கொண்ட ஒன்று. ஆயிரம் பாடல்களும் மரபுக் கவிதை அமைப்பில் உள்ளன. யாப்பருங்கலக் காரிகையில் இடம்பெற்ற ஆசிரியம், வெண்பா, கலிப்பா, ஆகிய பாடல் வகைகளும், அவற்றின் இனங்கள் ஆகிய தாழிசை, துறை, விருத்த வகைகளும் இக்காவியக் கவிதையில் இடம் பெற்றிருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க இயலாது புலவர் பொன்னையன் அவர்களின் யாப்பிலக்கணப் புலமைக்கும் கவிதை இயற்றும் ஆற்றலுக்கும் இந்நூல் இனியதோர் எடுத்துக்காட்டாக இலங்குகிறது. மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தப் பாடல்கள்- செய்யுள்கள்- அனைத்தும் அந்தாதித்தொடையில் அமைந்திருப்பது எனக்கு வியப்பினுள் வியப்பாகக் காட்சி அளித்தது. மரபுக்கவிதை இயற்றுவோர் அருகி வரும் இக்காலத்தில் இத்தகைய பலவகை யாப்புச் செய்யுட்களை அந்தாதி அமைப்பில் தந்துள்ள பொன்னையனின் ஆற்றலைப் போற்றாமல் இருக்க யாராலும் இயலாது.
     உணர்த்தும் முறை பற்றிச் சிறிது காண்போம் உள்ளடக்கமோ அண்மையில் வாழ்ந்து மறைந்த ஓர் ஒப்பற்ற தலைவரின் வரலாறு. அனைவரும் அறிந்த ஒன்று. எனவே உண்மைக்கு மாறான கற்பனைகளையோ புனை கதைகளையோ சேர்ப்பது என்பது இயலாத ஒன்று. உள்ளதை உள்ளவாறே உரைக்க வேண்டும். அதே சமயததில் காப்பியத்திற்குரிய சுவைக் கூறுகளான கற்பனை, உணர்ச்சி, வருணனை, உவமை, உருவகம், ஒன்பான் சுவை, தொன்மம், ஒசைநயம், அணிநலம், சொல்லாட்சி முதலியவற்றையும் சேர்த்துக் கூறவேண்டிய இடர்ப்பாடும் கவிஞருக்கு ஏற்படுவது இயல்பு. இந்த வகையில் இந்நூலாசிரியர்   உண்மைச்செய்திகளைச் சுவை குன்றாமல் கவிநயம் ததும்ப இக்காப்பியத்தை இயற்றியுள்ளார் என உறுதியாக உரைக்கலாம் இந்தக் காப்பிய உத்திகள் ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டுகள் கொடுத்தால் இந்த அணிந்துரை பலமடங்காக விரிந்து நிற்கும் எனக்கருதிப் படிப்போர் பார்வைக்கு விட்டுள்ளேன்.
    இந்நூலின் பின் இணைப்பாக லீ குவான் யூவின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் உரைநடை வடிவத்தில் கொடுத்திருப்பது காப்பியக்கருத்தினை நன்குணர வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை. வள்ளற்பெருமான் பாடல்களுடன் லீயின் சாதனைகளைப் பொருத்திக் காட்டியிருக்கும் பகுதி நூலாசிரியர் ஆய்வுத் திறத்திற்குச் சான்றாகும் ஏறக்குறைய 63 ஆண்டுகள் இணைந்து நிறை வாழ்வு வாழ்ந்த இல்லறத் தம்பதியினர் ஏற்றம் பற்றிய செய்தியும் பின் இணைப்பில் உள்ளது நன்று.  எனினும் கூறியது கூறல் பல பகுதிகளில் இடம்பெற்றிருப்பதைக் என்னால் கூறாமல் இருக்க இயலவில்லை
   புலவர் பொன்னையன் புலவர் பட்டத்துடன் எம்,ஏ., பி.எட். பட்டங்கள் பெற்றுத் தமிழகத்தில் பள்ளித் தமிழாசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றியவர், சிறுவர்க்கேற்ற பாடல்கள், வரலாறு, புதினம் நூல்கள் வெளியிட்டவர். அருளரசர் என்னும் காப்பியம் இயற்றியவர். நல்ல தமிழ்ப் புலமை வாய்க்கப் பெற்றவர். 2008 ஆம் ஆண்டு முதல் சிங்கையிலுள்ள தம் மகள் அருள்மதி இலெனின் இல்லத்திற்கு வந்து தங்கிச் செல்பவர். சிங்கையில் இருக்கும்போதெல்லாம் கவிமாலை, கவிச்சோலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவிதைகள் படைத்துப் பரிசுகள் பல பெற்றவர். அக்காலத்தே தான் லீ குவான் யூவின் பண்பாலும் பணியாலும் ஈர்க்கப்பட்டவர், அதன் விளைவே இப்பாவியம்
     இலக்கிய வகையில் இமயம் போன்றது காப்பியம். காப்பியத்தில் அந்தாதி அமைப்பு கவிதை மலர்களை இணைத்துத் தொடுக்கும் மாலையாக உள்ளது. சிங்கைக்குச் சிறப்புக் சேர்த்த தந்தை லீகுவான்யூ அவர்களைத் தமிழ் இமயத்தில் ஏற்றிக் காப்பிய மாலையை அவருக்கும் அணிவித்துள்ள புலவர் பொன்னையன் அவர்களைப் போற்றிப் பாராட்டுகிறேன். சிங்கைக் குடியரசு பொன்விழாக் கண்ட இக்காலக்கட்டத்தில் எழுந்துள்ள இக்காவியத்தைப் பொன்போலப் பொதிந்து பாராட்டித் தமிழுலகம் போற்றும் என நம்புகிறேன். சிங்கைப் தமிழ் இலக்கிய உலகில் இக்காப்பியம் என்றும் நின்று பொன்றாப் புகழ் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
சிங்கப்பூர்                                        சுப. திண்ணப்பன்
16-09-2016
    


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக