திங்கள், 16 ஜூன், 2014

சமயம் - ஆறுமுகச் செவ்வேள்


ஆறுமுகச் செவ்வேள்

சுப. திண்ணப்பன்

துணைப்பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

 

பழந்தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு முகங்கள் ஆறு. ஆதலினால், அவன் அறுமுகன் எனவும், ஆறுமுகச் செவ்வேள் எனவும் அழைக்கப்பட்டான். அவன் ஆறுமுகம் உணர்த்தும் சில கருத்துக்களை இங்கே சிந்திப்போம்.

 

அறுவர் பயந்த ஆறமர் செல்வன்- என்பது திருமுருகாற்றுப்படை. கார்த்திகைப்பெண்கள் அறுவரும் சரவணப்பொய்கையில் இருந்த ஆறு குழந்தைகளையும் வளர்த்தனர். உமையம்மையார் இந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாய்ச் சேர்த்தார். ‘‘கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர் புனைந்து மெய்யாறும் ஒன்றாக மேவுவித்து’’ என்பது கந்தர் கலிவெண்பா. எனவே அறுவர் பயந்த காரணத்தால் அறுமுகனானான்.

ஆல்கெழு கடவுட் புதல்வ- என்பது நக்கீரர் வாக்கு. ஆலமர் செல்வனாக இருக்கும் சிவவெருமானின் அருமை மகன் திருமுருகன் ஆவான். சிவபெருமானுக்கு ஈசானம் (மேல்) , தற்புருடம்(கிழக்கு) , அகோரம் (தெற்கு), சத்தியோசாதம் (மேற்கு) , வாமம்(வடக்கு)  என்ற ஐந்து முகங்கள் உண்டு. அத்துடன் அதோ முகம்(கீழ்) சேர்த்து அவன்  மகனாகிய முருகனுக்கு முகங்கள் ஆறாயின. மறைகளின் முடிவால் , வாக்கால், மனத்தினால் அளக்கொணாமல், நிறைவுடன் யாண்டுமாகி நின்றிடும் நிமலமூர்த்தி  , அறுமுக உருவாய்த்தோன்றி அருளொடு சரவணத்தில், வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந்தருளினானே’’ என்று பாடுவர் பெரியோர் . . . ‘‘ஐந்து முகத்தோடு அதோமுகமும் தந்து திருமுகங்கள் ஆறாகி’’ என்பது ஆன்றோர் வாக்கு.

 

ஆறுசமயக் கடவுள்- இந்து மதத்திலுள்ள காணபத்தியம், கௌமரம், சௌரம், வைணவம், சாக்தேயம், சைவம் என்ற வைதீக சமயம் ஆறினுக்கும் தலைவன் முருகன் என்பதை அவன் ஆறுமுகங்கள் காட்டும். ‘‘ஆறு சமயமும் தன்முகமானம் என்றறியும் அன்ப வீறு சிந்தைக் கிடை வீற்றிருக்கும் குகன் ‘‘என்பர் பெரியோர் , அறு சமய சாத்திரப் பொருளோனே ’’ என்பது அருணகிரியார் வாக்கு.

அறுகுணக்கடல்- முற்றறிவு, வரம்பில் இன்பம், இயற்கை அறிவு, தன்வயமுடைமை, குறைவிலாற்றல், வரம்பிலாற்றல். இந்த ஆறுகுணமும் ஆறுமுகம் என்றும் ஏனைய அருட்குணங்கள் மற்ற உறுப்புக்கள் என்றும் கூறுவர். ‘‘அமலற்குள்ள மூவிரு குணனும் சேய்க்கு முகங்களாய் வந்ததென்ன ’’ என்று கந்தபுராணம் கூறும்.

 

சிவசக்தி சொரூபம்- சிவபெருமான் பார்வதியிடம்என் சொரூபத்தையும் உனது சொரூபத்தையும் நம் குமரன் ஏற்பானாக என்றார். எனவே சிவனுக்குரிய ஐந்து முகங்களுடன் சக்தியின் முகமும் சேர ஆறுமுகம் உருவாயிற்று. அரனாரின் கண்களிலிருந்து ஆறுபொறிகள் ஆகாசத்தில் வெளிப்பட அவற்றை வாயுவும் அக்கினியும் தாங்கிச்சென்று கங்கையில் விட கங்கை சரவணப்பொய்கையில் இட்டது என்பதால் ஐம்பொறிகள் தோற்றத்தில் தொடர்புறுகின்றன. அத்துடன் ஆண்டவன் அருளும் (சக்தி) சேர ஆறுமுகம் ஆயிற்று.

ஆறுபடைவீடு-  முருகப்பெருமானுக்கு உகந்த படைவீடுகள் ஆறு. திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருவாவின்குடி, குன்றுதோறாடல், திருவேரங்கம், திருத்தணி, என்ற ஆறுபடை வீட்டின் அடையாளங்களாகவும் ஆறுமுகங்கள் திகழ்கின்றன.

 

 

 

ஆறெழுத்து-சிவபெருமான் ‘‘நமசிவாய’’ என்ற ஐந்தெழுத்து மந்திரப்பொருளாக இருப்பது போல் முருகப்பெருமான் ‘‘நமகுமாராய ’’ என்ற ஆறெழுத்து மந்திரப் பொருளாக இருக்கின்றான் . அதனைக் காட்டவும் ஆறுமுகங்கள் அமைகின்றன. 

அறுதொழில்- படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களுக்குரிய கடவுளாகவும் இருந்து அதற்கப்பாற்பட்ட நிலையிலும் ஒருவனாக முருகப்பெருமான் இருக்கிறான் என்பதையும் அவன் அறுமுகம் உணர்த்துகிறது.

ஆறுஎலக்ட்ரான்- உயிருள்ள பொருள் யாவற்றிலும் ஆறு எலக்ட்ரானுக்குக் குறையாமல் இருக்கிறது. குறைந்தால் உயிரில்லை என்பர் அறிவியலார். எனவே அந்த அணு ஆற்றலையும் முருகப்பெருமான் முகமாறும் உணர்த்தும்.

மூவிரு முகத்தின் முறைமை     - நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் திருச்செந்தூர் இறைவனைப்பாடும்போது அறுமுக அழகைக் கூறுகிறார். மா இருள்ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒரு முகம், ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகிக் காதலின் உவந்து வரம்கொடுத்தன்றே , ஒருமுகம் மந்திரவிதியின் மரபுவழி வழா அ அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே. ஒருமுகம் எஞ்சிய பொருட்களை ஏம உறநாடித் திங்கள் போலத் திசை விளக்கும்மே ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே. ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்று’’ என்பது திருமுருகாற்றுப்படை., உலக இருளைநீக்கி ஒளிகொடுக்கவும், அடியார்க்கு வரந்தரவும், அந்தணர் யாகம் காக்கவும், அனைவர்க்கும். அறிவொளி தரவும், பகைவரை விலக்கவும், வள்ளிக்கு இன்பம் தரவும் அவன் ஆறுமுகங்கள் அமைந்துள்ளன என்கிறார் நக்கீரர்.

 

 

அறுமுகப்பணி- பகைவரைக் கொல்லும் முகம் ஒன்று . உயிர்களுக்கு வினையைப் போக்கி இன்பம் தரும் முகம் ஒன்று, வேத ஆகமங்களை அருளும் முகம் ஒன்று. மனைவியர் இருவருக்கும் அருளும் முகம் ஒன்று. அடியார்க்கு வரம் அளிக்கும் முகம் ஒன்று என்று குமரகுருபரர் கந்தர் கலிவெண்பாவில் அவன் அறுமுகப் பணியைக் கூறுகிறார்.

 

ஆறுமுகமான பொருள்-  ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்று. ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்று , கூறுமடியார்கள் , வினைதீர்த்தமுகம்  ஒன்று. குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்று, மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்று, வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று, என்று ஆறுமுகமான பொருளை இன்னொருபாட்டில் விளக்கினார் அருணகிரியார்.

 

ஆறு ஆதாரங்கட்கு நாயகன்- யோக நெறியில் கூறப்பெறும் உடம்பிலுள்ள ஆறு ஆதாரங்களாகிய மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாசதம், விசுத்தி, ஆக்ஞை, என்ற இடங்களுக்குரிய இறைவன் என்பதையும் ஆறுமுகங்கள் கூறுகின்றன.

ஆறு அத்துவாக்களுக்கும் தலைவன்- ஆன்மாக்கள் விடுதலை பெறவும், வினையடையவும், அமையும் அறுவகை நெறிகளை ஆறு அத்துவாக்கள் எனச் சைவநூல்கள் கூறும். அவை மந்திராத்துவா, பதாத்துவா, வர்னாத்துவா, புவனத்துவா, தத்துவாத்துவா, கலாத்துவா, என்ற ஆறு ஆகும். இவற்றிற்கு நாயகன் முருகன் . அவன் ஆறுமுகம் என்பதை மொழியும், ‘அத்துவா எல்லாம் அடங்கச் சோதித்தபடிஎன்பது தாயுமானார் வாக்கு.

 

 

ஆறுபொருள்- முருகு என்ற சொல் தெய்வத்தன்மை , அழகு, இளமை, இனிமை, மகிழ்ச்சி, மணம் என்னும் ஆறு , தன்மைகளையும் உடையது. முருகு கள் இளமை நாற்றம், முருகவேள் விழா வனப்பாம் என்று பிங்கல திகண்டு கூறுகிறது. இந்த ஆறு பொருள்களையும் அறிவிக்க ஆறுமுகம் அமைந்தது. 

அகப்பகை ஆறும்- மனித மனத்தைப் பாழாக்கும் உட்பகை காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற ஆறு குணங்களாம். அவற்றை நீக்கினால்தான் உள்ளத்தூய்மை ஏற்படும். ஆண்டவன் உறைவதற்கேற்ற இடமாகும். எனவே அந்த ஆறு பகைகளையும் கடிய அவன் ஆறுமுகமும் உதவும்.

ஆறுநிலை- அருவமும் உருவும் ஆகி அநாதியாய் பலவாய் ஒன்றாய்ப் பரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகக் கருணை கூர்முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திருமுருகன் வந்தாங்குதித்தனன் உலகம் உய்யஎன்று கந்தபுராணம் முருகப்பெருமானின் திரு அவதாரச் சிறப்பை மொழிகின்றது. அருவமாகி, உருவமாகி, அநாதியாகி, பலவாகி ஒன்றாகி பரமமாகி என்ற ஆறு நிலைகளையும் ஆறுமுகம் உணர்த்துகின்றது.

     அன்பர்களே ! நாம் முருகனிடம் வேண்டுவது ஆறுதலை, எனவே அவனுக்கு ஆறுதலை, நமக்கு அஞ்சு முகந்தோன்றில் ஆறுமுகம் தோன்றும். எனவே நாம் ஆறுமுகம் வாழ்க அவனை வாழ்த்தி வணங்குவோமாக!

நெற்குப்பை நகரத்தார் அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குட நீராட்டு விழா மலர் நெற்குப்பை (14-9-1978)



...... முற்றும்.....

Dr S.P. Thinnappan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக