திங்கள், 16 ஜூன், 2014

சமயம் - பிராட்டியின் பேரருள்


பிராட்டியின் பேரருள்

             பிரான் என்னும் சொல்லுக்குத் தலைவன் என்று பொருள். வம்பறா வரிவண்டு மணம் நாற மலரும் மதுமலர் நற்கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்’, நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் என்னும் சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகைத் தொடர்களில் வரும் எம்பிரான் , நம்பிரான் என்பன எம் தலைவன். நம் தலைவன் என்னும் பொருளைத் தலைவன் என்னும் பொருளைத் தரும். அருவாகி, உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான் (4163) என்னும் பெரிய புராணத் தொடரில் உருவாய் அருவாய் இருக்கும் ஒப்பிலாத் தலைவனாகிய இறைவனைப் பிரான் என்னும் தொடர் குறிக்கிறது. இவ்வாறே தம்பிரான் என்பது சிவபெருமானைக் குறிக்கும் தொடராகவும் திருமுறைகளில் கையாளப்படுகிறது. தம்பிரான் தோழர் என்று சுந்தரரைக் குறிக்கிறோம். தம்பிரானைத் தனனுள்ளம் தழீஇயவன், நம்பி ஆரூரன் நடம் தொழும் தன்மையான் என்று உபமன்னிய முனி தம் சீடர்களிடம் கூறியதாகச் சேக்கிழார் சுட்டுவதையும் காணலாம்.

       பிரான் என்னும் ஆண்பாற் சொல்லுக்கு ஏற்ற பெண்பாற் சொல்லே பிராட்டி என்பதாகும். பிராட்டி என்பது தலைவியைப் பொதுவாகக் குறித்தாலும் சிறப்பாகச் சைவத் திருமுறைகளில் உமையம்மையாரைக் குறிக்கக் கணலாம். எம்பிரான் , நம்பிரான் தம்பிரான் என்னும் சொற்றொடர்களைப் போலவே எம்பிராட்டி, நம்பிராட்டி, தம்பிராட்டி என்னும் தொடர்களும் அமையும். வைணவப் பாடல்களில், உரைநூல்களில் பிராட்டியார் என்பது திருமாலின் துணைவியராகிய திருமகளைத்- தாயாரைக் குறிக்கும். பிராட்டி என்பது உமையம்மையைச் சுட்டினாலும் திருமகளைச் சுட்டினாலும் இறைவனருளை –சக்தியை-  எடுத்து இயம்புவதாகும்.

அருளின் திருவுருவமாகிய உமையம்மையின் பேரருளைத் திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமான் போற்றிப் பாடுகிறார். அதனைச் சிறிது காண்போம்.  திருவாசகத்தின் வரும் திருவெம்பாவை மார்கழி மாதத்தில் பாடப்பெறும் ஒரு பகுதி. கன்னிப்பெண்கள்  அதிகாலையில் எழுந்து மற்ற தோழிமார்களையும் எழுப்பிக்கொண்டு நீர்நிலைக்குச் சென்று நீராடி இறைவனைத் தொழுது நாடு செழிக்க மழை பெய்யவும், வீடு செழிக்க நல்ல கணவனைப் பெறவும் வேண்டுவதையே உட்பொருளாகக்கொண்டது திருவெம்பாவை. இதன் தத்துவப்பொருள் சக்தியை வியந்தது என்று கூறுவர். இப்பகுதியில் மாணிக்கவாசகர் பிராட்டியின் பேரருளைப் பற்றிக் கூறுகிறார். கன்னிப்பெண்கள் நீராடும் மடு (நீர்நிலை) அவர்களுக்கு உமையம்மையைப் போலவும் காட்சி அளித்ததாம். பாடலைப் பாருங்கள்.

பைங்குவளைக் கார்மலரால், செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தால், பின்னும் அரவத்தால்,

தங்கண் மலங்கழுவுவார் வந்து சார்தலினால்,

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்து

பொங்கும் மடுவிற் புகப் பாய்ந்து பாய்ந்து நம் 

சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாய்ந்து பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்

பிராட்டியாராகிய உமையம்மையின் கண்களைப் போல இம்மடுவும் பசுமை தங்கிய குவளையாகிய கரியமலர் பூத்து விளங்குகிறது. இப்பொய்கையிலுள்ள தாமரைமலர்கள் அவள் திருமுகத்தை ஒத்து விளங்குகின்றன. குருகினங்கள் அவன் வளையல்களை நினைவூட்டுகின்றன. பாம்புகள் அவள் அணிகலன்களாகக் காட்சி அளிக்கின்றன. பொய்கையில் வந்து பலர்குளித்து அழுக்கை அகற்றிக்கொள்ளும் செயல் உமையிடத்து வரும் பக்தர்கள் தம் ஆணவம் கன்மம் மாயை ஆகிய அழுக்குகளை நீக்கிக் கொள்வதை நினைவூட்டுகினறது. பொதுவாகப் பொய்கையே மடுவே தண்மையான நீரினைக்கொண்டது. எம்பிராட்டியின் இன்னருளும் தண்மையானது. பொய்கை நீர் புறத்தே இருக்கும் வெம்மையைப் போக்க வல்லது. அம்மையின் தண்ணருளோ பிறவித் துன்பத்தால் வரும் வெம்மையை நீக்க வல்லது. அம்மையே அருள்வடிவினள் தானே!  அருளது சக்கியாகும் அரன் தனக்கு என்றுதானே நம் சாத்திரங்கள் நவில்கின்றன.

 மேலும் இப்பாட்டில் குவளைமலர்களை  அம்மையின் அருளொழுகும் கண்களுக்கு ஒப்பிடுகிறார் மாணிக்கவாசகர். அம்மையின் அருளை நினைத்தவுடன் அடியவர்களுக்கு முதலில் அவளது கண்கள் தாம் நினைவுக்கு வரும். கண்கள் அடிப்படையில் தான் அம்மைக்கு எத்தனை பேர்கள்? காமாட்சி மீனாட்சி விசாலாட்சி கமலாட்சி ஆகிய பெயர்கள் முறையே காமக்கண்ணி கயற்கண்ணி, அகல்நெடுங்கண்ணி, தாமரைக்கண்ணி என்னும் பொருளுடையன அல்லவா? ஏன்? கண்ணின் பெருங் கருணைத்திறத்தை அபிராமி பட்டர்.

தனந்தரும், கல்விதரும், ஒருநாளும்  தளர்வறியா

மனந்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமிலா

இனந்தரும்  நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

என்று பாடுகிறார். அம்மையின் அருட் கண்ணுக்குத்தான் எத்துணை பேராற்றல்! எனவேதான் முதலில் அம்மையின் அருட்கண்ணையும் குவளை மலரையும் இணைத்துப் பேசுகிறார் மணிவாசகர்.

அடுத்து அம்மையின் அருள்வடியும் முகத்தைத் தாமரைக்கு ஒப்பிடுகிறார் மாணிக்கவாசகர். பூக்களில் சிறந்த பூ தாமரைப்பூ அது தண்மையில் வேரூன்றித் தழைப்பது. அதுபோலத் தெய்வங்களில் சிறந்த அம்மை, அருள்வெள்ளத்தில் எப்போதும் குடிகொண்டிருப்பவள்.

பொய்கையை அம்மையோடு ஒப்பிட்டு பேசிய மாணிக்கவாசகப்பெருமான் இன்னொரு பாட்டில் பொய்கைக்கு நீர்சுரக்கும் மழைமேகத்தை நினைக்கும்போதும் அம்மையின் அருளை எண்ணிப்பார்க்கிறார். பாடலைப்பாருங்கள்

முன்னிக் கடலைச்சுருக்கி எழுந்துடையான்

என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்  

மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலை குலவி நம்தம்மை ஆளுடையான்

தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப்பொழியாய் மழையேவோர் எம்பாவாய்

   இந்தப்பாட்டில் கன்னிப்பெண்கள் மழைபெய்ய வேண்டி நிற்கிறார்கள். கடல்நீர், கதிரவன் வெப்பத்தால் மேகம் ஆகின்றது. பிறகு கார்மேகம் ஆகி மின்னுகிறது. பிறகு இடி இடிக்கிறது, மழை பொழிகிறது. இவையனைத்தையும் அடியார்க்கு அம்மையை நினைவூட்டுகின்றன. அவள் கருப்பு நிறத்தைக் கார்மேகம் காட்டுகிறது. மின்னல் அவள் இடையை நினைவூட்டுகிறது. அவள் காற்சிலம்பொலியை இடி எடுத்துரைக்கிறது. மழைக்காலத்தில் தோன்றும் வானவில்லும் அவளது கரும் புருவத்தைக் காட்சிக்குக் கொணர்கிறது. அவள் இறைவனுடன் இணைந்து பொழியும் அருளைப்போல மழைபொழிய வேண்டுகிறார். மழை என்பதும் கடவுள் அருளின் மறுவடிவம்தானே. எனவேதான் வள்ளுவர் கடவுள் வாழ்த்துக்கூறிய பின்னர் வான்சிறப்புக் கூறி மழையை வாழ்த்துகிறார்.

மேலும் இப்பாட்டில் உமையம்மையை உடையாள் எம்மையாளுடையாள், எம்பிராட்டி, நந்தம்மை ஆளுடையான் அவள் என ஐ முறையாகப் பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஐந்து வகையாக இறைவி குறிக்கப்படுவது அவள் ஐந்து சக்திகளாக உயிர்களுக்குக் கருணை வழங்கிப் பேரின்பத்தைக் கூட்டுதற்பொருட்டே என்பர். உலகின் நலம் கருதி மழை பொழிகிறது. அதுபோல உயிர்நலம் தழைக்க அம்மையின் அருள் தேவைப்படுகிறது. அவள்அருளை வேண்டிவழிபட்டு நிற்போம்.

அருளே உலகெல்லாம் ஆள்விப்பது ஈசன்

அருளே பிறப்பறுப்ப தானால்-- அருளாலே

மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்

எப்பொருள் ஆவ தெனக்கு காரைக்கால் அம்மையார்.

...... முற்றும் .....
Dr S.P. Thinnappan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக