சிங்கையின் சீர்தனைப் பேசு?
(வரதராசன் . அ கி)
(”நந்த வனத்திலோர் ஆண்டி”- மெட்டு)
சிங்கையின் சீர்தன்னைப் பேசு. - உறும்
செம்மைக்கு மேலும்நீ சேர்த்திடு தேசு. பங்க மளிசெய்கை கூசு; - இந்தப்
பண்பினில் நீங்கிடும் பாழளி மாசு. (1)
சிங்கைக்கு நிகரேதும் இல்லை; கொண்ட
சிறப்புக் குமில்லை செப்பிட எல்லை.
இங்கிதம் கூட்டும்நற் சொல்லை – மட்டும்
இயம்புவர் மக்கள் இவர்க்கது முல்லை. (2)
அறநெறிப் பாதையில் செல்லு. - என்றும்
அதுதனில் ஓங்கி அனைத்திலும் வெல்லு.
மறநெறி கண்டிடின் கொல்லு. – உன்னை
மன்பதை மெச்சிடும் மாண்பினில் நில்லு. (3)
நெஞ்சத்தில் நீக்கிடு கள்ளம். - நின்று
நிலைத்திடக் காண்பாய் களிப்பெனும் வெள்ளம்.
வஞ்ச மிலாதநல் லுள்ளம். – இந்த
வழிதனை நீங்கினால் வாழ்வுறும் பள்ளம் (4).
எழிலுறும் சிங்கையாம் கூடு – அதில்
இணைந்துறைச் சிட்டுகள் யாமெனப் பாடு.
அழிவிலா அன்பினைத் தேடு. – கிட்டும் அமைதியில் உண்பாய் அமிழ்தெனும் பீடு. (5)
திறமையைத் துணையெனக் கொண்டு, வெற்றித்
தேனினை மாந்திட நீயாகு வண்டு.
மறவனாம் உன்செயல் கண்டு – இந்த
மாநிலம் உன்பணி மெச்சுதல் உண்டு. (6)
இன்ப நிலையெனும் ஊற்று – அதை
இதயமாய் ஆக்கும் இலக்கினை ஏற்று, அன்பு நெறிதன்னைப் போற்று. – அதை
அடைவதில் சற்றுமே போகாய்நீ தோற்று. (7)
கையூட்டு பேர்கொண்ட பூதம். - அது
கண்பட மாய்த்திடல் கற்றறி வேதம்.
மெய்யுறக் கொல்;இனப் பேதம் - இந்த
மேன்மையை நீங்கிடின் உற்றிடும் சேதம். (8)
ஒற்றுமை தன்னையே நாடி, நித்தம்
உவந்து களிப்போம் உணர்வுடன் கூடி.
எற்றைக்கும் இச்செம்மை பாடி, நல்ல
இனிமையில் வாழ்வோம் இணைந்துற வாடி. (9)
வரிந்துநீ கட்டிடு கச்சை. - என்றும் வாடாமல் சிங்கையில் வைத்திடு பச்சை.
அறிந்துநீ கற்றிடு விச்சை. – இந்த
அவனியில் உச்சம் அதில்வைப்பாய் இச்சை . (10)
உலகினில் நாடொரு புள்ளி. - இதை
உயர்த்திட நீயெழு நாளெலாம் துள்ளி.
விலகியே நீநில்லாய் தள்ளி - இன வேற்றுமை கண்டிடின் வைத்திடு கொள்ளி. (11)
ஒற்றுமை இன்மையே நஞ்சு. – மக்கள்
ஒன்றி உறைவதை ஓம்பிநீ கொஞ்சு.
குற்றம் புரிந்திட அஞ்சு. – கொண்ட
கொள்கையில் ஓங்கிக் குளிர்ந்திடு நெஞ்சு. (12)
பன்னுவேன் பாவிற்றேன் ஊற்றி. – ஒன்றிப்
பழகிடும் மக்களின் பான்மையைச் சாற்றி.
உன்னத அன்பினைப் போற்றி - என்றும்
உவப்பினில் நிற்பாய் உலப்பினை மாற்றி. (13)
நாட்டிற்குக் கண்டிடேன் ஈடு- அதன்
நலமெண்ணி நித்தமும் நீபடு பாடு.
வாட்டம் அகற்றப்பல் மாடு – அவை வரும்வழி தன்னை வகுத்துநீ தேடு. (14)
திண்ணமாய் நீஓட்டு தீங்கு. – சிங்கைத்
தேயத்தைத் தோளில் திடமுடன் தாங்கு.
வண்ணமே நாமுறும் பாங்கு – அந்த வழிதனில் சென்றுநீ வாழ்வினில் ஓங்கு. (15)
நின்றிடும் நம்பீடு வீங்கி- அந்த
நிலைமைக்குக் காரணம் நித்திலச் சாங்கி.
மன்றெலாம் நற்பெயர் வாங்கி – புகழ்
மண்டிடச் செய்தல் மறந்திடோம் தூங்கி. (16)
நாட்டிற்கு வாய்த்தார்நல் தந்தை. – எங்கள் நலமதை என்றென்றும் வைத்தார்தம் சிந்தை.
போட்டித் திறன்மிகு சந்தை – அதில்
புகுந்துநாம் செய்தோம் புதுப்புது விந்தை. (17)
இனச்சண்டை பேய்தன்னை வென்றோம். – என்றும்
ஏற்றமளி பாதை எனக்கண்டு சென்றோம்.
மனத்திடம் போற்றியே நின்றோம். – செம்மை
மாய்த்திடும் தீங்கதை மண்படக் கொன்றோம். (18)
”உச்சம் அடையநீ முந்து. – நல்ல
உழைப்புடன் ஆர்வம் உளமுறத் தந்து. இச்சையுடன் ஓடி வந்து. – புவி
ஏத்திடும் உன்னை” - இயற்றினேன் சிந்து. (19)
தேனினை நாடிடும் தும்பி – என்ற
தெளிவினால் சொன்னேன் தேர்ந்துனை நம்பி.
வானினை எட்டுநீ எம்பி. – நல்ல
வாழ்விற்கு சொன்னேன் வழிபல தம்பி. (20)
சிரசினைச் சுற்றியோர் வட்டம்- ஒளி
சேர்த்திட முன்னோர்கள் தீட்டினர் திட்டம்.
அரசினர் ஆக்கினார் சட்டம். – நல்ல
அமைதியின் பூங்கா அடைந்தோமப் பட்டம். (21)
இதயத்தில் மாறாத ஏக்கம். – சற்றும்
இடைவெளி இன்றி இருக்கட்டும் தாக்கம்.
முதலிடம் காண்பதே நோக்கம். – அந்த முயற்சியில் ஒன்றித் துறந்திடு தூக்கம். (22)
நேர்மையே நாம்விடும் மூச்சு. – இந்த நிலையினில் தாழ்ந்தால் நிம்மதி போச்சு.
கூர்மதி யாலெழும் பேச்சு – கொண்ட
கொள்கையால் மேன்மை குவிந்திட லாச்சு. (23)
தன்னலம் தன்னைநீ வீட்டு - இந்தத் தரணிக் குதவிட உன்கரம் நீட்டு.
மன்னும் கருணையே காட்டு - வரும்
மமதைக்கு முற்றாக வைத்திடு வேட்டு. (24)
நலமளி சொல்லையே பன்னு. – சிங்கை
நாடுறும் மேன்மையை நாடொறும் உன்னு.
திலகமாய் நீயென்றும் மின்னு. – உறும்
தீமையை மாய்த்திட நீவலை பின்னு. (25)
உள்ளத்தில் வைத்திடு தேடல். – மிக்க
உவப்புடன் செய்வாய் உயர்வினை நாடல்.
கள்ள மிலாவிளை யாடல். – தன்னில்
களித்திடல் உன்னிக் கழறினேன் பாடல். (26)
தொண்டுகள் நாட்டிற்குச் செய்வாய் – முற்றும் தூய்மையை நீயதில் துல்லியம் பெய்வாய்.
உண்டிட ஓர்கனி கொய்வாய். – அந்த
உன்னத வெற்றியால் இப்புவி உய்வாய். (27)